குரல்வலைப் பக்கங்கள்

(உலகக்கோப்பை கிரிக்கெட், ஓலைச்சிலுவை, பழசிராஜா, நடுநிசி நாய்கள், யாரும் ஜெஸிக்காவைக் கொலைசெய்யவில்லை.)

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி 350 வருஷம் ஆச்சுன்னு சொன்னேன் என் நண்பரிடம்; அவர் சிரித்தார். உண்மைதான். ஒரு ஓவர் இல்லை இல்லை ஒரு பால் கூடப் பார்த்து நிறைய வருடங்கள் ஆச்சு. நான்கு வருடங்கள். போன உலகக்கோப்பை நினைவிருக்கிறதா? அதில் இந்தியா பங்களாதேஷ் போட்டி நினைவிருக்கிறதா. சூடு சொறனை இருக்கிற கிரிக்கெட் ரசிகன் எவனும் அந்த மேட்சை மறக்கமாட்டான். அப்புறம் இந்தியா இலங்கை மேட்ச் ஞாபகம் இருக்கிறதா?

விடிய விடிய காலை நான்கு மணி (சிங்கப்பூர் நேரம்) வரை மேட்ச் பார்த்தோம். அப்பொழுது நான் பேச்சுலர். சச்சின், ராகுல், கங்கூலி என்கிற நட்சத்திரங்கள் நிறைந்த டீம். என்ன ஆயிற்று? முதல் சுற்றிலேயே வெளியேறினோம். தோல்வி. அதுவும் யாரிடம் கத்துக்குட்டி பங்களாதேஷிடம். பிறகு இலங்கையிடம். அந்த மேட்ச் இன்று வரை எனக்கு நினைவிருக்கிறது. டிராவிட் அவுட் ஆன கனம் என் கிரிக்கெட் பார்க்கும் ஆசையை குழிதோண்டிப் புதைத்தது. மறுநாள் எங்கள் தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. தற்கொலை செய்து கொண்டது. அது தான் நான் பார்த்த கடைசி மேட்ச்.

கங்கூலியும், சச்சினும், டிராவிட்டும் அன்றோடு ரிட்டையர்ட் ஆகிவிட்டார்கள். வெற்றி தோல்விகள் சகஜம் தான். ஆனால் எப்படித் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். யாரிடம் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். கிரிக்கெட் பார்க்கவில்லையென்றாலும், செய்திகள் அவ்வப்போது கண்ணில் படும். இந்த முறை உலகக்கோப்பைக்கு முன் சேவாக் “இந்த முறை பங்களாதேஷைப் பழி வாங்குவோம்” என்று சொல்லியிருந்தார். எனக்கு குபீர் சிரிப்பு வந்தது. சட்டென்று எனக்கு தோன்றிய வசனம் “இந்த உலகம் இன்னுமாடா உங்கள நம்பிக்கிருக்கு” என்பது தான். இந்த வேர்ல்ட் கப் நாம் வாங்கலாம் என்று ஒரு சிலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். வாங்கலாம். அதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைக்கலாம். ஆனால் என் அளவில் போன உலகக்கோப்பையில் பங்களாதேஷிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிய அன்றே இந்திய கிரிக்கெட் டீம் கலைக்கப்பட்டாயிற்று. போங்கப்பா போங்கப்பா போய் பிள்ளைகளப் படிக்கப்போடுங்கப்பா.

மா.சிவக்குமார் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்து இந்த உலகக்கோப்பையைப் புறக்கணியுங்கள் என்று சொல்கிறார். நான் எப்பொழுதோ புறக்கணிக்கத் தொடங்கியாச்சு.

***

ஜெயமோகன் எழுதிய ஓலைச்சிலுவை படித்தீர்களா? சிறுகதை படிக்கும் பழக்கமுள்ளவர்கள் கண்டிப்பாக படியுங்கள். இதுபோன்ற ஒரு கதையை சமீபத்தில் நான் படித்ததில்லை. கதை தோறும் பல தருனங்களில் நெகிழ்வாக உணர்ந்தேன்.

உலகப்போரில்; ப்ரான்ஸின் ஒரு போர் முனையில் அடிபட்ட ராணுவவீரர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார் சாமர்வெல். ராணுவ வீரர்கள் பலருக்கு கைகால்கள் சிதைந்து போயிருக்கிறது. குருதி வழிந்தோடி ஒரு கால்வாய் போலவே ஆகிவிட்டிருக்கிறது. அடிபட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காவிடில் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர்கள் இறந்து விடும் அபாயம் இருக்கிறது. சாமர்வெல் வெறி பிடித்தார் போல சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். நீண்ட நேர உழைக்குப் பின்; கலைத்து அங்கிருந்த கட்டிலில் படுக்கிறார். அங்கு பக்கத்தில் இருந்த கட்டிலில் கால்கள் சிதைந்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்த ஒரு ராணுவ வீரன் தன்னைக் கூர்ந்து பார்ப்பது கண்டு துடுக்குற்று எழுகிறார். பரவாயில்லை ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள் என்று சைகையில் சொல்கிறான் அந்த ராணுவவீரன்.

விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான ஒரு குறிப்பு:
During the Battle of the Somme in 1916 he was one of four surgeons working in a tent, while hundreds of wounded men lay dying on stretchers outside. On short breaks from surgery, he spoke with some of the dying men, and noted that not one asked to be treated ahead of the others.

எத்தகைய மனிதன் சாமர்வெல்?
1. எவரஸ்ட்டை இரண்டு முறை ஏறுவதற்கு கடும் முயற்சி செய்திருக்கிறார்.
2. மணிக்கனக்காக பேட்மிட்டன் விளையாடுபவர்.
3. இசையில் தேர்ந்தவர்
4. அறுவை சிகிச்சை நிபுணர்
5. தன் நாட்டு மக்கள் அல்லாத வேறொரு நாட்டின் மக்கள் மேல் அதீத அன்பு கொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பனித்தவர்.
6. தீவிர இறை நம்பிக்கை கொண்டவர்.

இது கதையாக இருந்தாலும்; பல உண்மைச் சம்பவங்களை வைத்துப் பிண்ணப்பட்டிருக்கிறது. இந்த கதையின் நாயகனான சாமர்வெல்லைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியாவைப் பாருங்கள்.

வேறொரு நண்பர், அவ்ளோ நல்லாருக்கா? கதையில கடைசியா ட்விஸ்ட் இருக்கா? என்றார். இல்ல, அதனால படிக்க உக்காரும் முன் ஒரு பாக்கெட் ட்விஸ்ட் வாங்கி வைத்துக்கொண்டு உக்காருங்கன்னு சொன்னேன். கஷ்டம்.

***

பழசிராஜா பார்த்தேன். கேரள வர்மா பழசிராஜா. வரலாற்றுத் திரைப்படங்களை இப்பொழுது எடுக்கும் பொழுது எப்படி ஒரு நாடகத்தன்மை தெரிகிறதோ அதே போன்றதொரு நாடகத்தன்மை இதிலும் இருக்கிறது. அதிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம். மம்முட்டியின் குரல் ஒரு பக்கம் கெட்கிறது. வாய் ஒருபக்கம் அசைகிறது. இதில சரத்குமார் வேற. சும்மா நெஞ்ச நிமித்திக்கிட்டு வர்றார். அவ்வளவுதான். சுமன் கூட ஒரு ·பைட். இதுக்குத்தான் என்னைய படத்தில வெச்சிருக்காங்கன்னு சொல்றார். கிட்டத்தட்ட. 🙂 ஒரு படமாக எடுக்கக்கூடிய அளவிற்கு பழசிராஜாவின் வாழ்க்கையில் சம்பவங்கள் இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

***

அப்புறம் த மோஸ்ட் வாண்டட் மூவி பார்த்தேன். அதாங்க: நடுநிசி நாய்கள். தியேட்டர்க்குள்ள இருந்து டிவிட்டினேன். தெரியாம படத்துக்கு வந்துட்டன்டா. இனிமே இந்தப் பக்கவே வர மாட்டேன்டான்னு. கொடுமை.

எனக்கு படத்தின் சப்ஜெக்டில் பிரச்சனை ஒன்றும் இல்லை. எடுக்கட்டும். ஆனா ஒரு த்ரில்லர் இப்படியாப்பா இருக்கும்? ஹாலிவுட் படங்கள் எல்லாம் பார்க்கறீங்க தான? அட்லீஸ்ட் கொரியன் படங்கள் கூட பார்த்ததில்லையா? பின்ன ஏன் இப்படி? லக்ஷ்மியம்மா லக்ஷ்மியம்மான்னு. இதுல மல்டிபிள் பர்சனாலிட்டி கதை வேற.

உங்களுக்கெல்லாம் திரில்லர் எதுக்கு? ஹீரோ சைக்கோ. சோ வாட்? அவர் எப்படி சைக்கோ ஆனார்ன்னு ஹிஸ்டரி ஆப் த இனிஸிடென்ட் ஜியோகரபி ஆப் த ப்ரசிடென்ட் சொல்லி முடிக்கறதுக்குள்ள படமே ஒரு முடிவுக்கு வந்திடுது. எதுக்குய்யா சைக்கோவ சைக்கோவாவே விட்றவேண்டியதுதான? எதுக்கு காரணத்தை தேடிக்கிட்டே அலையறீங்க? ஹீரோ ஒரு சைக்கோ. அவனோட வேலை சாம்பர குடிச்சு கத்திரிக்காய கடிக்கறதுதான்னு விட்றவேண்டியதுதான? அவன் எதுக்காக சாம்பார விடாம குடிக்கிறான்? அவனுக்கு எப்படி கத்தரிக்காய் பிடிச்சுப்போனதுன்னு ஏன் எங்களப் படுத்தறீங்க? செவன்னு ஒரு படம் வந்துச்சு பாத்திருக்கீங்களா சார். பாத்திருப்பீங்க. காக்க காக்கவில டப்பாக்குள்ள மண்டைய வெச்சு பார்சல் பண்றத வேற எங்கருந்து பிடிச்சீங்க? அப்பவே நினைச்சிருக்கீங்க நாமளும் வாழ்க்கையில ஒரு சைக்கொ த்ரில்லர் எடுக்கனும்னு. எடுத்துட்டீங்க. சரி. இந்தப் படம் ரிலீஸ் ஆகும் போதா என் மனைவி ஊருக்குப் போகனும். அதனாலத்தான தியேட்டரில போய் உக்காந்தேன். இல்லன்ன போயிருந்திருக்க முடியுமா?! மிஸ் யூ டா ச்செல்லு. 😉

எங்கோ எப்பொழுதோ நடந்த ஒன்றை பெரிதுபடுத்தி எழுதினாத்தான் கதை. சினிமா. சிறுத்தையில கார்த்தி எப்படி போலிஸா சும்மா புகுந்து விளையாடறார். அப்படியா இருக்கு நம்ம ஊர்ல போலிஸ¤? சாமர்வெல் எவரஸ்ட் ஏறும் போது, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பனிச்சறிவு ஏற்பட்டு கூடவந்தவர்கள் அடித்துச்செல்லப்பட, அவர் மட்டும் உயிர் பிழைக்கிறார். அவரும் செத்துவிட துணிகையில், அவர் தலைக்கு மேலே பனிச்சறுக்கு ஏற்பட்டு பனி ஏசுவின், ஆசீர்வதிக்கும் ஒரு கை போல உறைகிறது. சாமர்வெல் எவரஸ்டை ஏறின உண்மைச் சம்பவத்தை வைத்துக்கொண்டும் கற்பனையைத் தட்டிவிட்டால் கிடைப்பது இது தான். இது தான் கதை. குழந்தைக்கு யானை வானத்தில் பறந்தால் தான் கதை.

எப்பொழுதும் எங்கேயும் நடப்பது போல அப்பா பையனுக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தாருன்னு சொன்னா என்ன ஆகும்? ஒரு பய திரும்பிப்பாக்கமாட்டான். ஊருக்குள்ள ரவுடின்னு ·பார்ம் ஆயாச்சு; அப்புறம்? இந்த மாதிரி ஒரு நாலும் படம் எடுத்தாத்தானே நாலு பேர் பேசுவாங்க .

சின்னப்பிள்ளைகள் பாப்பாங்க?! சின்னப்பிள்ளைங்க எதுக்குப் பாக்கறாங்க? அதான் சர்டிபிகேட் இருக்கே. பின்ன எப்படி சின்னப்பிள்ளைங்க தியேட்டருக்குள்ள போவாங்க? (திருட்டு) டீவிடி? தாட்ஸ் நாட் டைரக்டர்ஸ் பிராப்ளம்.

சிகப்பு ரோஜாக்கள் முப்பது வருடங்களுக்கு முன் வந்தது. சிவக்குமார் பென்சில்ல மீசை வரைஞ்சிட்டு நடுச்சிட்டிருந்த சமையம். செக்ஸ் காட்லையா? அதுவும் பெண்ணே வலிய வந்து செக்ஸ் கேட்பது போல காட்டவில்லையா? மகன் (வளர்ப்பு மகனாக இருந்த போதிலும்) செக்ஸ் வைத்துக்கொளவதை அப்பா படம் பிடித்து ரசிப்பது போலக் காட்டவில்லையா?

கௌதம் மேனனின் எந்த படங்களும் எனக்கு அவ்வளவாகப் பிடித்ததில்லை. காக்க காக்க தவிர. வேட்டையாடு விளையாடுவின் முதல் 20 நிமிடங்கள் தவிர.

ஆறுதலுக்கு சிகப்பு ரோஜாக்களில் இருந்து அட்டகாசமான இந்தக் காட்சியைப் பாருங்கள்.

தமிழில் நல்ல த்ரில்லருக்கு இன்னும் எத்தனை நாள் காத்திருக்கனுமோ தெரியல.

***

No one killed jessica (யாரும் ஜெஸிக்காவைக் கொலை செய்யவில்லை) என்கிற ஹிந்திப் படம் பார்த்தேன். துப்பறியும் பத்திரிக்கையாளர்கள். மீடியாக்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாம்.

ஜெஸிக்கா வளர்ந்துவரும் மாடல். அதிநவீன பார்களில் காக்டெயில் மேக்கர். ஒரு நாள் பாரில் நள்ளிரவைத் தாண்டியபின்னர் டிரிங்க்ஸ் தீர்ந்து விடுகிறது. மூன்று நபர்கள் ஜெஸிக்காவிடம் வந்து டிரிங்க்ஸ் கேட்கின்றனர். ஜெஸிக்கா இல்லை என்று சொல்ல, அவர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். ஜெஸிக்கா அதான் இல்லையே பின்ன எங்க இருந்து கொடுக்கிறதுன்னு கேட்டுக்கொண்டிருக்கிற போதே அவன் சட்டென்று ஜெஸிக்காவைச் சுட்டுவிடுகிறான். கொஞ்ச நேரத்தில் ஜெஸிக்கா இறந்து விடுகிறாள். சுட்டவன் மந்திரியின் மகன். மந்திரி பண பலம் செல்வாக்கை வைத்து சாட்சிகளை விலைக்கு வாங்குகிறார். ஜெஸிக்காவின் அக்கா போறாடுகிறார். முன்னூறு நபர்கள் இருந்த அந்த பாரில் இரண்டு மூன்று பேரே சாட்சி சொல்கின்றனர். முக்கிய சாட்சி ஜெஸிக்காவின் நண்பன் (குடும்பத்தின் நண்பனும் கூட) கடைசி நேரத்தில் நான் வாக்குமூலமே கொடுக்கவில்லை. எனக்கு ஹிந்தியே தெரியாது என்று ஜகா வாங்கிவிடுகிறான். ஜெஸிக்காவைக் கொன்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இது வரை படம் அட்டகாசம். அருமையான மேக்கிங். வித்யா பாலன் கன கச்சிதமாக செய்திருக்கிறார். இது போல தமிழில் படங்கள் எப்பொழுது வரும்?!

இதற்கப்புறம் ஒரு மீடியா மேடம் இந்த வழக்கில் அக்கறை கொண்டு எப்படி உண்மையை வெளிக்கொணர்கிறார் என்பதே கதை.

சிடி கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

***

குரல்வலைப் பக்கங்கள்

(புதிய பெயர், bureaucracy, பரிணாமவளர்ச்சித் தத்துவம், Intelligent Creator, உலகம் தட்டை, ஆன்மா, முன்பிறவிப் பாவங்கள்)

இது எப்பொழுதும் நான் எழுதும் படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி வகையறா பதிவு தான். பொதுப்படையான பெயர் ஒன்று வைத்திருக்கிறேன்.Just rebranding.புதிய பெயர். மைக்ரோசாப்ட் windows vistaவை rebrand செய்து windows 7 என்று பெயர் மாற்றி, அமோக விற்பனை செய்யவில்லையா? சிங்கப்பூர்க்காரர்கள் க்யூவில் நிறகத் தயங்காதவர்கள். ஐ·போன் 3GS வந்தபொழுது 50 டாலர் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுப் பிறகும் மணிக்கணக்காக க்யூவில் நின்று வாங்கிய மக்களை எனக்குத் தெரியும். அதேபோல windows 7 வந்தபொழுதும் இங்கே மக்கள் க்யூவில் நின்று (உட்கார்ந்து; ரெஸ்ட் எடுத்து) வாங்கியதை டீவியில் பெரிதாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஹாரிப்பாட்டர் வந்தாலும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க; windows 7ஐயும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க. நம்ம ஊர்ல அரசியல் மீட்டிங்குக்கு காசும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது போல இங்க டாலர்ஸ¤ம் நூடுல்ஸ¤ம் கொடுத்து க்யூவில நிக்க சொல்றாய்ங்களோ?

***

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் எம்பசிக்குச் சென்றிருந்தேன்; எதற்கு என்று ஞாபகமில்லை. க்யூ நம்பர் எடுத்துவிட்டு பொழுது போகாமல் அங்கிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய பேர் கேட்கும் கேள்வி பாரம் எங்கிருக்கிறது என்பது தான். அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. டென்சன். ஏன் டென்சன்? Afterall நீங்கள் உங்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக உட்கார்ந்திருக்கும் அலுவலர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். சிரிக்காதீர்கள்.

அப்படி நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தைக் கவனித்தேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் தனது க்யூ நம்பர் வந்தவுடன் வேகமாக எழுந்து நடந்து வந்தார். அவரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அங்கே கண்ணாடிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அலுவலரிடம் தான் ரெடியாக வைத்திருந்த அந்த பேப்பர்களைக் கொடுத்தார். வாங்கிய அந்தப் பெண் அதே வேகத்தோடு அந்தப் பேப்பர்களைத் தூக்கிப்போட்டார். தூக்கிப்போட்டார். ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. பதற்றத்துடன் அந்த ஆள் அந்தப் பேப்பர்களை எடுத்து பேப்பர் க்ளிப்பை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்தார்.

***

இந்தியன் எம்பசியில் அன்று என் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ¤க்குச் செல்ல டாக்ஸி பிடித்தேன்.கொஞ்ச நேரம் கழித்து டாக்ஸி ஓட்டுனர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: உள்ளே இருக்கும் அலுவலர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? பிறகு ஏன் அவர்கள் உங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. டாக்ஸி டிரைவர் ஒரு சைனீஸ். நீங்கள் எதற்கு அங்கே போயிருந்தீர்கள் என்றேன். இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது அதற்காக விசாவுக்காச் சென்றிருந்தேன் என்றார். அடிக்கடி இந்தியா போய் வருவாராம்.

பிறகு இந்தியாவைப் பற்றி அவரே பெசத்துடங்கினார். இந்தியாவில கல்வி நல்லாயிருக்கு என்றார். பிரிட்டிஷ்காரர்களின் பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்றார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் மூன்று விசயங்களைக் கொடுத்திருக்கிறது என்றார். என்ன என்று கேட்டேன்: கல்வி, ரயில்வே நெட்வொர்க் மற்றும் அதிகாரத்துவம் (bureaucracy).

***
ரொம்ப நாட்களுக்கு முன் இந்தியாவில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். தோழியின் கணவரின் அப்பா ஒரு ஜட்ஜ். கிண்டி ரேஸ் கோர்ஸில் அவர்களது ரிஷப்சன் நடந்தது. அவ்வளவு பெரிய பணக்கார கும்பலில் நானும் எனது நண்பனும் கேட்ப்பாரற்று நின்று கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி இன்று வரையிலும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்கிறது.

அங்கே இரண்டு ஜீவராசிகளும் இன்ன பிற ஜீவராசிகளும் இருந்தன. அதில் ஒரு ஜீவராசி நிமிர்ந்த நன் நடை கொண்டிருந்தார். மற்றொரு ஜீவராசி கேள்விக்குறி போல வளைந்து நின்று கொண்டிருந்தது. இவர்களைத் தவிர மற்ற சிலரும் கேள்விக்குறி போல இல்லையென்றாலும் அதற்கு இணையாக குணிய முயற்சி செய்துகொண்டிருந்தனர். அந்த கும்பல் எங்களைக் கடக்கும் பொழுது, நாங்க பாட்டுக்கு செவனேன்னு மரத்து அடியில நின்னுட்டு இருக்கோம், ஒரு அல்லக்கை என்னைப் பார்த்து தள்ளு தள்ளுன்னுச்சு. ஏய் இருப்பா என்ன விசயம்னு கேக்கும் போது தான் தெரிந்தது அந்த நிமிர்ந்த நன்னடை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாம்; அப்ப அந்தக் கேள்விக்குறி யாருன்னு கேட்டப்போ அவர் ஏதோ பெரிய லாயரோ என்னவோ என்று சொன்னது அந்த அல்லக்கை. இதற்குப்பெயர் தான் அதிகாரத்துவம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.

அவரது வீட்டிலும் எல்லோரும் அவரிடம் கேள்விக்குறி போல வளைந்து கொண்டு வாழ்வார்களோ?ஐயோ பாவம்.

***

இதே போலத்தான் சாமியார்களும் அவர்கள் முன்னால் (சாஷ்டாங்கமாக) விழுந்து வணங்கும் சில மக்களும்.

***

டிசம்பர் 20 2005இல் ஜான் ஜோன்ஸ் II என்கிற Harrisburg, Pennsylvaniaவைச் சேர்ந்த ஜட்ஜ், Kitz-miller et al vs Dover Area School District et al என்கிற வழக்கில் மிக முக்கியமானதொரு தீர்ப்பைச் சொன்னார். வழக்கு எதைப்பற்றியது என்றால்: அமெரிக்க மாணவர்கள் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எப்படி படிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றியது.

வழக்கு என்ன;முழு வழக்கைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதன் சாராம்சம் இங்கே:

டாரிவினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் இன்னும் முழுமையாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. அது வெறும் தத்துவம் தான் அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை (பொய்!). Intelligent design என்பது டார்வீனியத் தத்துவத்துக்கு நேர்மாறானது. அது என்னவென்றால் மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் என்பது. மனிதனை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் உருவாக்கினார் என்பதை விளக்கும் Of Pandas and People என்கிற புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் படி அறிவுறுத்துகிறோம். எல்லாத் தத்துவங்களையும் திறந்த அறிவோடு எதிற்கொள்வதைப் போல இதையும் மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதை அறிவியல் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துக்கு முன் வாசித்துக்காட்டவேண்டும் என்று டோவர் ஹை ஸ்கூல் ஒரு சட்டம் பிறப்பித்தது. ஒன்பது ஸ்கூல் போர்ட் மெம்பர்களில் இரண்டு பேர் ரிசைன் செய்து விட்டனர். பல ஆசிரியர்கள் இதை வாசிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். வழக்கு செப்டம்பர் 26 2005 அன்று ஆரம்பித்தது.

க்ரிஸ்த்மஸ¤க்கு ஐந்து நாளைக்கு முன்னர் நீதிமதி அந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில். பரிணாம வளர்ச்சியை நம்பாமல் ஒரு intelligent designer (கடவுள்) தான் மக்களை உருவாக்கினார் என்று நம்புபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இந்த உலகத்தில். ஏதோ ஒன்றை நம்புவதற்கு எங்கோ ஒரு கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிய டாக்குமென்டரியை இங்கே பார்க்கலாம்.

இன்னும் உலகம் தட்டை தான் என்று நம்பும் கும்பல் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். World is flat என்றொரு புத்தகத்தை Thomas L Friedman எழுதினாரே; அதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையிலே உலகம் உருண்டையாக இல்லை தட்டையாகத் தான் இருக்கிறது என்று சத்தியமடித்துச் சொல்கிறார்கள். World is weird.

உங்கள் நம்பிக்கை உங்களோடு; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா வீட்டில் உட்காராமல், அறிவியலின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறீர்கள்?

காமெடியன் Dave Allenஇன் இந்த வீடியோவைப் பாருங்கள். கண்டிப்பாகப் பாருங்கள். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

***

இது போன்ற ஒரு விசயத்தை விஜய் டீவியில் “நடந்தது என்ன”வில் பார்த்தேன். ஏதோ ஒரு சாமியாரைப் பற்றி நம்ம நீயா நானா கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சாமியார் நூற்றியிருபது வயது வரை மனிதன் வாழ்வது எப்படி என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதோட நில்லாமல் ஆன்மா மறுபிறவி என்று ஏகத்துக்கும் உளறினார். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் சாவைச் சந்திக்கும் பொழுது நம்மை சித்ரவதை செய்யும் என்றார். அவரைச் சந்திக்க சென்றவர்: அப்ப பிறந்த உடனே இறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்; அவர்கள் தான் பாவமே செய்யவில்லையே என்றார். அதற்கு முன்பிறவியில் செய்த பாவங்கள் இருக்கிறது இல்ல? என்றார். புல்ஷிட்.

இது போன்ற சாமியார்களின் அசட்டுத்தனமான பேட்டிகளை விஜய் டீவி ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது.

***

ஸோ சீரியஸ் டுடே!? இணையத்தில் எங்கோ படித்தது.
உலகம் flatன்னு எப்படி நம்பறீங்க? அதான் ப்ளாட் ப்ளாட்டா ப்ளாட்டு போட்டு விக்கறோம்ல!

***