வாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.

ஆங்கிலத்தில் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஒரு பதிவும் தொடங்கியிருக்கிறேன். http://booksmoviesastronomy.blogspot.com. Books Movies Astronomy என்று பெயர் வைத்திருக்கிறேனே தவிர கிடைக்கிற எல்லாவற்றையும் பற்றி எழுதலாம் என்று தான் நினைத்திருக்கிறேன்! இரண்டு காரணங்கள். ஒன்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணம். மற்றொன்று தமிழ் தவிர பிற மொழி பேசுவோரையும் மொக்க போடலாம் என்கிற நல்லெண்ணம் தான். அவ்வப்போது அங்கேயும் வாருங்கள். 🙂

*

Spectrum ஊழல் தொடர்பான செய்திகளைக் கவனித்துக்கொண்டுதான் இருப்பீர்கள். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..ச்சே..சாரி..இந்திய வரலாற்றிலே மிகப்பெரிய ஊழல் என்று சொல்கிறார்கள். 60,000 கோடி என்கிறார்கள் ஒரு லட்சம் கோடி என்கிறார்கள்; எவ்வளவு கோடி என்பது ஆள்பவர்களுத்தான் வெளிச்சம். நித்யானந்தா வீடியோவை அத்தனை முறை ஒளிபரப்பு செய்தவர்கள் கிடைத்திருக்கும் இந்த ஆடியோ க்ளிப்பை எத்தனை முறை ஒளிபரப்பினார்கள்? பாரீஸில் எனக்கு இந்தியத் தொலைக்காட்சிகள் குறிப்பாக தமிழக தொலைக்காட்சிகள் கிடைப்பதில்லை.
*

 இங்கே ஐரோப்பாவில் க்ரீஸ் திவாலாகப் போகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது திவாலாகமல் இருக்கவேண்டும் என்றால் தோராயமாக தேவைப்படும் தொகை 120 பில்லியன் டாலர். யூரோப்பியன் யூனியனும் IMF உம் சேர்ந்து அதைக் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. பணம் கொடுப்பதற்குப் பல கண்டிஷன்கள் போட்டிருக்கிறார்கள். அப்புறம் பணம் கொடுப்பவன் சும்மா கொடுப்பானா? அறிவுரைகளும் கூடவே சில கண்டிஷன்களும் வரும் தானே. எனக்குத் தெரிந்த சில கண்டிஷன்கள்: அரசு வேலை பார்ப்பவர்கள் இப்பொழுது இன்னும் பணிரெண்டு வருடங்கள் அதிகமாக வேலை பார்க்கவேண்டும். இப்பொழுது அவர்கள் ரிட்டையர் ஆகும் வயது 55 என்று வைத்துக்கொள்ளுங்கள் இனி அவர்கள் 67 வயதில் தான் ரிட்டையர் ஆக முடியும். பணிரெண்டு வருட கூடுதல் உழைப்பு!

இன்று கார்டியனில் நான் படித்தது மற்றும் என் நண்பர் கொடுத்த தகவல்கள்.கிரீஸ் நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். யார் மீது கோபம்? அரசியல்வாதிகள் மீது. பத்திரிக்கையாளர்கள் மீது. தொழிலதிபர்கள் மீது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரையில் அவர்கள் யார் மீது கோபப்படலாம் என்றால்? நியாயமாக அவர்கள் மீதேதான். முப்பது வருட ஊழலை யார் சரிக்கட்ட முடியும்? சில மாதங்களில் அது எப்படி சரியாகும்? ஊழலுக்கு யார் பொறுப்பேற்பது?

க்ரீஸில் இன்று வரை நடந்துவந்தது ஒரு இரும்புத்திரை அரசாங்கம். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. அந்த இரும்புத்திரையை உருவாக்கி அந்த திரை விலகிவிடாமல் போற்றிப் பாதுகாத்துவந்தவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சர்வென்ட்ஸ் என்கிற அரசு ஊழியர்கள். குறிப்பாக உயர்பதவியில் இருந்த அரசு ஊழியர்கள். இந்த இரும்புத்திரை அவர்கள் செய்யும் ஊழல்களை எளிதாக மறைக்க உதவியது. பிரச்சனை என்னவென்றால் க்ரீஸின் மக்கள் தங்களுக்கு எல்லாம் கிடைக்கிற வரை நமக்கேன் வம்பு என்று இருந்தது தான். மேலும் கிரீஸில் நான்கில் ஒரு பங்கு அரசு ஊழியர்களாம். எனவே நமக்கு நிரந்தர அரசு வேலை இருக்கிற வரை என்ன கவலை? மாதம் முடிந்தால் சம்பளம் கிடைக்கிறதா? அதுவும் பதினான்கு மாத சம்பளமாம். பிறகென்ன? யார் ஊழல் செய்தால் நமக்கென்ன?

அரசியல்வாதிகள் மக்கள் கண்டுகொள்ளாததால் அவர்கள் போக்குக்கு வேலைசெய்துகொண்டிருந்தார்கள். புதிது புதிதாக வேலைகளை உருவாக்கினார்கள். கடன் வாங்கிக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் செய்வதை ஆய்வு செய்யவும் மதிப்பீடு செய்யவும் யாரும் இல்லை. அவர்களைக் கண்காணிக்க யாரும் இல்லை.

இந்த அரசியல் முறை வேறென்னத்துக்கு வழிவகுக்கும்? கண்காணிப்பில்லாத துறை ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். அதுதான் நடந்தது. புதிதாக உருவான தொழிலதிபர்கள் அரசு கான்ட்ராக்ட்களை எளிதாக எடுத்தார்கள். கனிசமாக அரசிடம் பணம் வசூலித்தார்கள். கொள்ளை லாபம் பார்த்தார்கள். அப்படி கொள்ளை லாபம் பார்ப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க அரசியல் வாதிகளுக்கு பணம் கொடுத்தார்கள். இந்த ஊழல் அவ்வப்போது கொஞ்சம் கசிந்தது. ஊழல் கசியாமல் இருக்கவே இருக்காது. யாருக்கும் தெரியாமல் ஊழல் செய்யமுடியுமா என்ன? அப்படியென்றால் நம்ம பணத்தை நாம ஊழல் செஞ்சா மட்டுமே முடியும். செய்தி கசிந்தது. மக்கள் சில மந்திரிகளின் மிக ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற மீடியாவும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான். மீடியாவும் கண்டுகொள்ளவில்லை; நீதித்துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊழல் நடப்பது தெரிகிறது. மீடியாவில் துப்பறியும் துறை கண்டிப்பாக இருக்கும். ஏன் கண்டுகொள்ளவில்லை?

இப்படி முப்பது வருடங்களாக நடந்த ஊழலை எப்படித் திருத்துவது? ஜனாதிபதி முதல் சராசரிக் குடிமகன் வரை எல்லோரும் எல்லார் மீதும் கோபமாக இருக்கிறார்கள். ஹீரோவாக இருக்கவேண்டும், மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஜனாதிபதியை எல்லோரும் தேடுகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இப்பொழுது எதை எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதெல்லாம் 1980இல் இப்பொழுதிருக்கிற நம்ம ஹீரோ ஜனாதிபதியின் அப்பா ஏற்படுத்திய மாற்றங்களாம்.

வாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது.

*

தீவிர‌வாதிக‌ள் உருவாக்கிய‌ முற்றிலும் புதிய‌ வேலை வாய்ப்புக‌ள்

நேற்றோ அத‌ற்கு முன் தின‌மோ அதிகாலையில் எழுந்து மிகுந்த‌ ப‌சியுட‌ன் செரிய‌ல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நியுயார்க் ந‌க‌ர‌ குண்டு வெடிப்பு பீதி ச‌ம்ப‌ந்த‌மான‌ செய்தி சிஎன்என் இல் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருந்த‌து. இது தொட‌ர்பான‌ ந‌ப‌ரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தாயிற்று. இன்னும் பெய‌ர் தெரிய‌வில்லை. அல்ல‌து நீதிப‌தி அறிவிக்கிறவ‌ரை சொல்ல‌க்கூடாது என்று நினைத்திருக்கிறார்க‌ள். நீதிப‌தி அறிவிப்பு செய்ய‌ இன்னும் ப‌த்து நிமிட‌ம் இருக்கிற‌து. அப்பொழுது தான் தீவிர‌வாத‌ம் உருவாக்கியிருக்கிற‌ வேலைவாய்ப்புக‌ளைப் ப‌ற்றித் தெரிந்து கொண்டேன்.

இர‌ண்டு ந‌ப‌ர்க‌ள் பேசினார்க‌ள். ஒருவ‌ரின் வேலையின் பெய‌ர் Terror Expert ம‌ற்றொருவ‌ரின் வேலை யின் பெய‌ர் Terrorism Analyst.

தீவிர‌வாத‌ ஆய்வாள‌ர்(?!) ச‌ரி Terror Expert?! எப்ப‌டித் த‌ன்னை அறிமுக‌ம் செய்து கொள்வார்?

இன்னும் கொஞ்ச‌ கால‌த்தில் வானிலை ஆய்வாள‌ர் தின‌மும் வானிலை ஆராய்ச்சி செய்து செய்தியில் இன்ன‌ இன்ன‌ இட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய‌க்கூடும் க‌டும் புய‌ல் வீச‌க்கூடும் என்று சொல்வ‌து போல‌, பின்னாடி ஒரு உல‌க‌வ‌ரைப‌ட‌த்தை வைத்துக்கொண்டு, தீவிர‌வாத‌த்தையும் ஆராய்ந்து இந்த‌ இட‌ங்க‌ளில் மித‌மான‌ குண்டு வெடிப்பு இருக்கும்; உயிராப‌த்து ஏதும் இருக்காது. இந்த‌ இட‌த்தில் க‌டுமையான‌ குண்டுவெடிப்பு இருக்கும்; உயிர் ப‌லி இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து என்று சொன்னாலும் சொல்வார்க‌ள்.

வானிலையைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக‌ குடை எடுத்து வ‌ருவ‌து போல‌ தீவிர‌வாத‌நிலையைத் தெரிந்து கொண்டு என்ன‌ செய்வ‌து? குடை உத‌வாதே?

இன்ஸ்யூர‌ன்ஸ் வாங்கிக்கொண்டு போக‌லாம். குண்டு வெடிக்கிற‌து என்று போகிற‌ இட‌த்துக்குப் போகாம‌ல் இருக்க‌ முடியுமா என்ன‌?

மும்பை மேரி ஜான் என்கிற‌ ஹிந்திப்ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? மும்பையில் ர‌யிலில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்புக‌ளுக்குப் பிற‌கு அத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ரின் வாழ்க்கையை அழ‌காக‌ அல‌சுகிற‌து இந்த‌ப் ப‌ட‌ம்.

மாத‌வ‌ன் ம‌யிரிழையில் த‌ப்பியிருப்பார் ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் ஒரு கையை இழ‌ந்து விடுவார். ர‌யில் குண்டு வெடிப்புக்கு முன் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு வ‌ந்தும் ம‌றுத்துவிடுகிற‌ மாத‌வ‌ன் குண்டு வெடிப்புக்குப் பின் பேசாம‌ல் அமெரிக்கா போய்விட‌லாம் என்று நினைக்கிறார். இங்கு ர‌யிலில் ஏற‌வே ப‌ய‌ப்ப‌டுகிறார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரிட‌ம் இதைச் சொல்ல‌கிறார். எந்த‌ நாட்டில் தான் தீவிர‌வாத‌ம் இல்லை? பாதுகாப்பான‌ தேச‌ம் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ அமெரிக்காவின் இர‌ட்டைக் கோபுர‌த்தைத் தீவிர‌வாதிக‌ள் த‌க‌ர்த்து எறிய‌வில்லையா?

க‌டைசியில் அந்த‌ ந‌ண்ப‌ர் சொல்லுவார்: ந‌ம் பிள்ளைக‌ளுக்கு தீவிர‌வாத‌ம் ப‌ழ‌கிவிடும். எப்ப‌டி பூக‌ம்ப‌த்தினோடும் புய‌ல்க‌ளோடும் சூறாவ‌ளிக‌ளோடும் சுனாமிக‌ளோடும் வாழ‌ப்ப‌ழ‌கிக்கொண்டோமோ அதே போல‌ ந‌ம் பிள்ளைக‌ள் தீவிர‌வாத‌த்தோடு வாழப் ப‌ழ‌கிக்கொள்வார்க‌ள்.

ரொம்ப‌வும் வ‌ருத்த‌மாக‌ இருக்கிற‌து.

ச‌ன்டீவியின் அத்துமீற‌ல்

ஆறு வ‌ருட‌ங்க‌ளுக்கு (ஃபெப்ர‌வ‌ரி 1 2004 அன்று) முன் ஜான‌ட் ஜாக்ச‌னும் ஜ‌ஸ்டின் டிம்ப‌ர்லேக்கும் சூப்ப‌ர் ப‌வுல் ஃபுட்பால் போட்டியில் ந‌ட‌ன‌மாடிக்கொண்டிருந்த‌ பொழுது ஜான‌ட்டின் ஒரு ப‌க்க மார்பு துணியை உண‌ர்ச்சி வேக‌த்தில் தெரியாம‌ல் கிழித்து விட்டார் டிம்ப‌‌ர்லேக். (தெரிந்தே செய்தார்; அவ‌ருடைய‌ பாட‌லில் இது போன்ற‌தொரு வ‌ரி வ‌ருகிற‌து “Hurry up ’cause you’re taking too long… better have you naked by the end of this song”  என்று வாதிடுப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் )

 இந்த‌ வ‌ர‌லாற்று அம்ச‌ம் பொருந்திய‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து வெறும் அரை செக‌ன்ட் ம‌ட்டுமே. இந்த‌ super bowl நிக‌ழ்ச்சியை நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்பிக்கொண்டிருந்த‌ சிபிஎஸ் தொலைக்காட்சி சேன‌ல் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தையும் ஒளிப‌ர‌ப்பிவிட்ட‌து.

மீடியாக்க‌ளை க‌ண்காணிக்கும் ‍பிடிசி இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஒளிப‌ர‌ப்பான‌தைக் க‌ண்டித்து இன்டீச‌ன்சி க‌ம்ப்ளெய‌ன்ட் (idenceny complaint) வ‌ழ‌க்கை பெட‌ர‌ல் கோர்ட்டில் (FCC)  தாக்க‌ல் செய்த‌து. இந்த‌ நிக‌ழ்ச்சி ஒளிப‌ர‌ப்பான‌தைத் தொட‌ர்ந்து 540,000 புகார்க‌ள் அமெரிக்க‌ ம‌க்க‌ளால் தாக்க‌ல் செய்யப்ப‌ட்ட‌து. க‌ன‌டாவில் ம‌க்க‌ள் புகார் செய்த‌ன‌ர்.
வ‌ழ‌க்கை விசாரித்த‌ ஃபெட‌ரல் கோர்ட் இதை ஒளிப‌ர‌ப்பிய‌ சிபிஎஸ் க்கு 550000 டாலர் அப‌ராத‌ம் விதித்த‌து. இந்த‌ வ‌ழ‌க்கு இன்றும் நிலுலையில் இருக்கிற‌து என்ப‌து வேறு விச‌ய‌ம்.

நேர‌டி ஒளிப‌ர‌ப்பில் (திட்ட‌மிடாம‌ல்) ந‌ட‌ந்த‌ த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சிக்கே அமெரிக்க ம‌க்க‌ள் 540,000 புகார்க‌ளை ப‌திவு செய்த‌ன‌ர். 550,000 டாலர் அபராத‌ம் விதிக்க‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் ச‌ன் டீவி ஒளிப‌ர‌ப்பிய‌ நித்தியான‌ந்தர் ர‌ஞ்சிதா ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காட்சிக‌ள் அப்ப‌ட்ட‌மான‌ அத்துமீற‌ல். திட்ட‌மிட்ட‌ செய‌ல். Explicit sexual content. ப்ரைம் டைம் செய்தி நேர‌த்தில் ஒரு வீட்டில் எல்லோரும் அம‌ர்ந்து செய்தி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது எப்ப‌டி இவ்வாறான‌ செக்ஸ் ப‌ட‌த்தை ஒளிப‌ர‌ப்பினார்க‌ள்? ஒளி ஒலி ப‌ர‌ப்பிய‌து குற்ற‌மில்லையா?

முத‌லில் ச‌ன்டீவியின் மேல் தானே வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌வேண்டும்? குஷ்புவின் மீதும் ஜெய‌ராமின் மீதும் நித்தியான‌ந்த‌ர் மீதும் வ‌ன்முறைக‌ளை க‌ட்ட‌விழ்த்து விடும் ம‌க்க‌ள் முத‌லில் த‌ங்க‌ள‌து வ‌ர‌வெற்ப‌றையில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று பார்க்க‌வேண்டும்.

நித்தியான‌ந்த‌ர் செய்த‌து குற்றமா இல்லையா என்ப‌து அவ‌ரை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கை சார்ந்த‌து;அது அவ‌ர்க‌ளை ம‌ட்டுமே பாதிக்கும்; ஆனால் ச‌ன்டீவி செய்த‌து எல்லோரையும் பாதிக்கும் ஒரு அப்ப‌ட்ட‌மான‌ அத்துமீற‌ல்.
 
Do we have parental television council or media watch dog group here? மீடியாக்க‌ளை க‌ண்காணிக்கும் குழு இந்தியாவில் இருக்கிற‌தா இல்லையா? ஏனென்றால் ந‌ம‌து குழ‌ந்தைக‌ளும் டீவி பார்க்கிறார்க‌ள்.

எறும்பின் சாப‌ம் ம‌ற்றும் பாம்பு செய்த‌ பூஜை

கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் பிபிசி நாலெட்ஜ் சான‌லில் ஒரு டாக்குமென்ட‌ரி பார்த்தேன். தென் அமெரிக்காவில் ம‌லை சூழ்ந்த‌; எளிதில் யாரும் சென்றுவிட‌முடியாத‌ தூர‌த்தில் ஒரு இன‌ ம‌க்க‌ள் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். ஐரோப்பாவிலிருந்து இரு ந‌ப‌ர்க‌ள் ஏற‌முடியாத‌ ம‌லைக‌ளையும் க‌ட‌க்க‌முடியாத‌ க‌டின‌மான‌ பாதைக‌ளையும் க‌ட‌ந்து வெகு நாட்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்து அந்த‌ ம‌லை உச்சியை அடைகின்ற‌ன‌ர். அங்கு த‌ங்கியிருந்து அந்த‌ ம‌க்க‌ளுட‌ன் ப‌ழகுகின்ற‌ன‌ர். ப‌ய‌ண‌ம் செய்த‌ அந்த‌ இரு ஐரோப்பிய‌ர்க‌ளுள் ஒருவ‌ர் தாவ‌ர‌விய‌ல் நிபுண‌ர்.

அந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ருள் ப‌ல‌ர் இன்ன‌மும் ந‌க‌ர‌ங்க‌ளைப் பார்க்காத‌வ‌ர்க‌ள்; அந்த‌ காட்டைவிட்டு வெளி வ‌ராத‌வ‌ர்க‌ள். ஆங்கில‌ ம‌ருத்துவ‌ம் ம‌ற்றும் ஆங்கில‌ ம‌ருந்துக‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. நோய்க‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. ந‌ம‌க்கு தெரியாவிடில் நோய்க‌ளே இல்லை என்ப‌தாகிவிடுமா? அவ‌ர்க‌ளுக்கும் நோய்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனால் அவ‌ர்க‌ளுக்கு நோய்களின் பெய‌ர்க‌ளும் அவ‌ற்றின் பாதிப்புக‌ளும் தெரிய‌வில்லை. அங்கிருக்கும் ம‌க்க‌ளில் சில‌ருக்கு கான்ச‌ர் இருந்தும்; அவ‌ர்க‌ளுக்கு அது தெரியாது.

ப‌ல‌ நோய்க‌ளால் ம‌க்க‌ள் மாண்டாலும் அது ஏதோ சாப‌த்தால் தான் ந‌ட‌க்கிற‌து என்று ந‌ம்பிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ருத்துவ‌ம் மூலிகை ம‌ருத்துவ‌ம் ம‌ட்டுமே. தாவ‌ர‌விய‌லார் அவ‌ர்க‌ள‌து மூலிகை ம‌ருத்துவ‌ம் ப‌ற்றி விசாரிக்க‌; அவ‌ர்க‌ள் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு இலையையும் அவ‌ர் அறிந்திருக்கிறார்; ஆனால் அந்த‌ இலைக‌ளுக்கு அவ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌ச் சொல்லும் ம‌ருத்துவ‌குண‌ம் ஏதும் இல்லை என்று இவ‌ர் சொன்னாலும் அவ‌ர்க‌ள் ந‌ம்ப‌வில்லை.

அங்கிருக்கும் நான்கு மாத‌ குழந்தை ஒன்றுக்கு க‌ழுத்தில் ஒரு வ‌கையான‌ வீக்க‌ம் இருக்கிற‌து. அது ஒரு கிரிக்கெட் பால் அள‌வுக்கு பெரிதாக‌வும் இருக்கிற‌து; கெட்டியாக‌வும் இருக்கிற‌து. இது ஒரு வ‌கையான‌ நோய்; இந்த‌க் குழ‌ந்தையை குண‌ப்ப‌டுத்த‌ ந‌க‌ர‌த்துக்கு கூட்டி சென்று ம‌ருத்துவ‌ம் பார்க்க‌வேண்டும் என்றும் இந்த‌க் குழ‌ந்தையை ந‌க‌ர‌த்துக்கு அழைத்துச் செல்ல‌ என‌க்கு அனும‌தி தாருங்க‌ள் என்று அவ‌ர் கேட்கிறார். அத‌ற்கு அவ‌ர்க‌ள் ம‌றுத்துவிடுகின்ற‌ன‌ர்.

மேலும் இது ஒரு நோய் இல்லை என்றும் இந்த‌ மாதிரியான‌ வீக்க‌ம் ஒரு வ‌கையான‌ எறும்புக‌ளின் சாப‌த்தால் வ‌ருகிற‌து என்றும் அவ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். இத‌ற்குப் ப‌ரிகார‌மாக‌ எறும்புக‌ளை நோக்கி பிரார்த்த‌னை செய்து ஒரு வ‌கையான‌ இலையை அரைத்து சாறு எடுத்து வீக்க‌த்தின் மீது கொஞ்ச‌ கால‌ம் விட்டுக்கொண்டிருந்தால் ச‌ரியாகிவிடும் என்றும் சொல்கின்ற‌ன‌ர். ந‌ம‌து தாவ‌ர‌விய‌லாரின் பேச்சை யாரும் கேட்கிற‌மாதிரி தெரிய‌வில்லை.

தாவ‌ர‌விய‌லாரும் அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அந்த‌ இலையைத் தேடி க‌ண்டுபிடிக்கிறார். இலையைக் க‌ண்டுபிடித்த‌ நொடியில் அந்த‌ இலைக்கு ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லையென்ப‌தை அறிகிறார். இதை நிரூபிக்க‌ அந்த‌ இலைக‌ளை சாறு எடுத்து அந்த‌க் குழ‌ந்தையின் க‌ழுத்திலிருக்கும் வீக்க‌த்தில் விடுகிறார். கொஞ்ச‌ நேர‌த்தில் வீக்க‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ற்றிப்போகிற‌து.

தாவ‌ர‌விய‌லாருக்குத் தெரியும் அந்த‌ இலையில் ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லை என்ப‌து; என‌வே வீக்க‌ம் குறைந்தது ஒரு த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சியே என்ப‌தையும் அறிகிறார். வீக்க‌ம் ப‌ல‌ நாளாக‌ இருந்திருக்கிற‌து; ஏதோ ஒரு கார‌ண‌த்துக்காக‌ பின் கொஞ்ச‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு வ‌ற்றிப்போகிற‌து. இலைக்கும் வீக்க‌ம் குறைந்த‌துக்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.

ஆனால் இந்த‌ த‌ற்செய‌ல் ச‌ம்ப‌வ‌த்தால் அங்கிருக்கும் ம‌க்க‌ளுக்கு மூலிகை ம‌ருத்துவ‌ம் மேல், மேலும் தீவிர‌மான‌ ந‌ம்பிக்கை உருவாகிற‌து. இதைத் தொட‌ர்ந்து இன்னும் ப‌ல நோய்க‌ளை இதே போன்ற‌தொரு மூலிகை ம‌ருத்துவ‌ம் குண‌ப்ப‌டுத்தும் என்று அவ‌ர்க‌ள் உறுதியாக‌ ந‌ம்புவ‌த‌ற்கு இது போன்ற‌ த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சிக‌ள் உத‌வுகின்ற‌ன‌.

*

கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் என‌க்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார். என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ என்னுட‌ன் சேர்ந்து இன்னும் ப‌ல‌ருக்கும் அந்த‌ மெயில் அனுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌து. அது சூரிய‌கிர‌க‌ண‌த்தின் பொழுது பூக்க‌ளைக் கொண்டு சிவ‌னுக்கு பூஜை செய்த‌ பாம்பைப் ப‌ற்றிய‌து. அதாரம் இருக்கிற‌து. பட‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. சாம்பிளுக்கு அவ‌ர் அனுப்பிய‌ ஒரு ப‌ட‌ம் இங்கே:

அவ‌ரைச் ச‌ந்தித்த‌ பொழுது ஏன் இவ்வாறான‌ மெயில்க‌ளை எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; என‌க்கு வ‌ந்த‌து உங்க‌ளுக்கு ஃபார்வேர்ட் செய்தேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். பிற‌கு ஏன் இதையெல்லாம் ந‌ம்புகிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; கொஞ்சநேர‌ம் ம‌ழுப்பிய‌வ‌ர் பிற‌கு ச‌ட்டென்று, உன‌க்கு ந‌ம்பிக்கை இல்லையென்றால் அது உன்னுட‌ன் என்று கோப‌மாக‌ச் சொன்னார்.

*

ச‌ரி தான்; அதையே நானும் திரும்ப‌க் கேப்பேன்ல‌?

குரல்வலைப் பக்கங்கள்

(புதிய பெயர், bureaucracy, பரிணாமவளர்ச்சித் தத்துவம், Intelligent Creator, உலகம் தட்டை, ஆன்மா, முன்பிறவிப் பாவங்கள்)

இது எப்பொழுதும் நான் எழுதும் படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி வகையறா பதிவு தான். பொதுப்படையான பெயர் ஒன்று வைத்திருக்கிறேன்.Just rebranding.புதிய பெயர். மைக்ரோசாப்ட் windows vistaவை rebrand செய்து windows 7 என்று பெயர் மாற்றி, அமோக விற்பனை செய்யவில்லையா? சிங்கப்பூர்க்காரர்கள் க்யூவில் நிறகத் தயங்காதவர்கள். ஐ·போன் 3GS வந்தபொழுது 50 டாலர் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுப் பிறகும் மணிக்கணக்காக க்யூவில் நின்று வாங்கிய மக்களை எனக்குத் தெரியும். அதேபோல windows 7 வந்தபொழுதும் இங்கே மக்கள் க்யூவில் நின்று (உட்கார்ந்து; ரெஸ்ட் எடுத்து) வாங்கியதை டீவியில் பெரிதாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஹாரிப்பாட்டர் வந்தாலும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க; windows 7ஐயும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க. நம்ம ஊர்ல அரசியல் மீட்டிங்குக்கு காசும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது போல இங்க டாலர்ஸ¤ம் நூடுல்ஸ¤ம் கொடுத்து க்யூவில நிக்க சொல்றாய்ங்களோ?

***

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் எம்பசிக்குச் சென்றிருந்தேன்; எதற்கு என்று ஞாபகமில்லை. க்யூ நம்பர் எடுத்துவிட்டு பொழுது போகாமல் அங்கிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய பேர் கேட்கும் கேள்வி பாரம் எங்கிருக்கிறது என்பது தான். அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. டென்சன். ஏன் டென்சன்? Afterall நீங்கள் உங்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக உட்கார்ந்திருக்கும் அலுவலர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். சிரிக்காதீர்கள்.

அப்படி நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தைக் கவனித்தேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் தனது க்யூ நம்பர் வந்தவுடன் வேகமாக எழுந்து நடந்து வந்தார். அவரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அங்கே கண்ணாடிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அலுவலரிடம் தான் ரெடியாக வைத்திருந்த அந்த பேப்பர்களைக் கொடுத்தார். வாங்கிய அந்தப் பெண் அதே வேகத்தோடு அந்தப் பேப்பர்களைத் தூக்கிப்போட்டார். தூக்கிப்போட்டார். ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. பதற்றத்துடன் அந்த ஆள் அந்தப் பேப்பர்களை எடுத்து பேப்பர் க்ளிப்பை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்தார்.

***

இந்தியன் எம்பசியில் அன்று என் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ¤க்குச் செல்ல டாக்ஸி பிடித்தேன்.கொஞ்ச நேரம் கழித்து டாக்ஸி ஓட்டுனர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: உள்ளே இருக்கும் அலுவலர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? பிறகு ஏன் அவர்கள் உங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. டாக்ஸி டிரைவர் ஒரு சைனீஸ். நீங்கள் எதற்கு அங்கே போயிருந்தீர்கள் என்றேன். இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது அதற்காக விசாவுக்காச் சென்றிருந்தேன் என்றார். அடிக்கடி இந்தியா போய் வருவாராம்.

பிறகு இந்தியாவைப் பற்றி அவரே பெசத்துடங்கினார். இந்தியாவில கல்வி நல்லாயிருக்கு என்றார். பிரிட்டிஷ்காரர்களின் பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்றார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் மூன்று விசயங்களைக் கொடுத்திருக்கிறது என்றார். என்ன என்று கேட்டேன்: கல்வி, ரயில்வே நெட்வொர்க் மற்றும் அதிகாரத்துவம் (bureaucracy).

***
ரொம்ப நாட்களுக்கு முன் இந்தியாவில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். தோழியின் கணவரின் அப்பா ஒரு ஜட்ஜ். கிண்டி ரேஸ் கோர்ஸில் அவர்களது ரிஷப்சன் நடந்தது. அவ்வளவு பெரிய பணக்கார கும்பலில் நானும் எனது நண்பனும் கேட்ப்பாரற்று நின்று கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி இன்று வரையிலும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்கிறது.

அங்கே இரண்டு ஜீவராசிகளும் இன்ன பிற ஜீவராசிகளும் இருந்தன. அதில் ஒரு ஜீவராசி நிமிர்ந்த நன் நடை கொண்டிருந்தார். மற்றொரு ஜீவராசி கேள்விக்குறி போல வளைந்து நின்று கொண்டிருந்தது. இவர்களைத் தவிர மற்ற சிலரும் கேள்விக்குறி போல இல்லையென்றாலும் அதற்கு இணையாக குணிய முயற்சி செய்துகொண்டிருந்தனர். அந்த கும்பல் எங்களைக் கடக்கும் பொழுது, நாங்க பாட்டுக்கு செவனேன்னு மரத்து அடியில நின்னுட்டு இருக்கோம், ஒரு அல்லக்கை என்னைப் பார்த்து தள்ளு தள்ளுன்னுச்சு. ஏய் இருப்பா என்ன விசயம்னு கேக்கும் போது தான் தெரிந்தது அந்த நிமிர்ந்த நன்னடை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாம்; அப்ப அந்தக் கேள்விக்குறி யாருன்னு கேட்டப்போ அவர் ஏதோ பெரிய லாயரோ என்னவோ என்று சொன்னது அந்த அல்லக்கை. இதற்குப்பெயர் தான் அதிகாரத்துவம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.

அவரது வீட்டிலும் எல்லோரும் அவரிடம் கேள்விக்குறி போல வளைந்து கொண்டு வாழ்வார்களோ?ஐயோ பாவம்.

***

இதே போலத்தான் சாமியார்களும் அவர்கள் முன்னால் (சாஷ்டாங்கமாக) விழுந்து வணங்கும் சில மக்களும்.

***

டிசம்பர் 20 2005இல் ஜான் ஜோன்ஸ் II என்கிற Harrisburg, Pennsylvaniaவைச் சேர்ந்த ஜட்ஜ், Kitz-miller et al vs Dover Area School District et al என்கிற வழக்கில் மிக முக்கியமானதொரு தீர்ப்பைச் சொன்னார். வழக்கு எதைப்பற்றியது என்றால்: அமெரிக்க மாணவர்கள் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எப்படி படிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றியது.

வழக்கு என்ன;முழு வழக்கைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதன் சாராம்சம் இங்கே:

டாரிவினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் இன்னும் முழுமையாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. அது வெறும் தத்துவம் தான் அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை (பொய்!). Intelligent design என்பது டார்வீனியத் தத்துவத்துக்கு நேர்மாறானது. அது என்னவென்றால் மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் என்பது. மனிதனை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் உருவாக்கினார் என்பதை விளக்கும் Of Pandas and People என்கிற புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் படி அறிவுறுத்துகிறோம். எல்லாத் தத்துவங்களையும் திறந்த அறிவோடு எதிற்கொள்வதைப் போல இதையும் மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதை அறிவியல் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துக்கு முன் வாசித்துக்காட்டவேண்டும் என்று டோவர் ஹை ஸ்கூல் ஒரு சட்டம் பிறப்பித்தது. ஒன்பது ஸ்கூல் போர்ட் மெம்பர்களில் இரண்டு பேர் ரிசைன் செய்து விட்டனர். பல ஆசிரியர்கள் இதை வாசிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். வழக்கு செப்டம்பர் 26 2005 அன்று ஆரம்பித்தது.

க்ரிஸ்த்மஸ¤க்கு ஐந்து நாளைக்கு முன்னர் நீதிமதி அந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில். பரிணாம வளர்ச்சியை நம்பாமல் ஒரு intelligent designer (கடவுள்) தான் மக்களை உருவாக்கினார் என்று நம்புபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இந்த உலகத்தில். ஏதோ ஒன்றை நம்புவதற்கு எங்கோ ஒரு கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிய டாக்குமென்டரியை இங்கே பார்க்கலாம்.

இன்னும் உலகம் தட்டை தான் என்று நம்பும் கும்பல் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். World is flat என்றொரு புத்தகத்தை Thomas L Friedman எழுதினாரே; அதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையிலே உலகம் உருண்டையாக இல்லை தட்டையாகத் தான் இருக்கிறது என்று சத்தியமடித்துச் சொல்கிறார்கள். World is weird.

உங்கள் நம்பிக்கை உங்களோடு; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா வீட்டில் உட்காராமல், அறிவியலின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறீர்கள்?

காமெடியன் Dave Allenஇன் இந்த வீடியோவைப் பாருங்கள். கண்டிப்பாகப் பாருங்கள். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

***

இது போன்ற ஒரு விசயத்தை விஜய் டீவியில் “நடந்தது என்ன”வில் பார்த்தேன். ஏதோ ஒரு சாமியாரைப் பற்றி நம்ம நீயா நானா கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சாமியார் நூற்றியிருபது வயது வரை மனிதன் வாழ்வது எப்படி என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதோட நில்லாமல் ஆன்மா மறுபிறவி என்று ஏகத்துக்கும் உளறினார். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் சாவைச் சந்திக்கும் பொழுது நம்மை சித்ரவதை செய்யும் என்றார். அவரைச் சந்திக்க சென்றவர்: அப்ப பிறந்த உடனே இறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்; அவர்கள் தான் பாவமே செய்யவில்லையே என்றார். அதற்கு முன்பிறவியில் செய்த பாவங்கள் இருக்கிறது இல்ல? என்றார். புல்ஷிட்.

இது போன்ற சாமியார்களின் அசட்டுத்தனமான பேட்டிகளை விஜய் டீவி ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது.

***

ஸோ சீரியஸ் டுடே!? இணையத்தில் எங்கோ படித்தது.
உலகம் flatன்னு எப்படி நம்பறீங்க? அதான் ப்ளாட் ப்ளாட்டா ப்ளாட்டு போட்டு விக்கறோம்ல!

***

சென்னையில் நடக்கும் உடல் பாகமாற்று மோசடி : நேஷனல் ஜியோகர·பி

நான் ஏற்கனவே வாடகைத்தாய் outsourcing பற்றி எழுதியிருந்தேன். இன்று நேஷனல் ஜியோகர·பியில் Inside என்றொரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்; மேலை நாட்டு மக்களின் தேவைகளுக்காக வளர்ந்துவரும் நாடுகளின் மக்கள் ஒரு சொற்ப தொகையை வாங்கிக்கொண்டு தங்களது உடல் பாகங்களை விற்பது தொடர்பான ஒரு டாக்குமென்டரி. கிட்னி விற்பது (கடத்துவது) தொடர்பாக ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பல சினிமாக்கள் தமிழில் வந்துவிட்டன. பல (நம்பர் ஒன் புலனாய்வு) பத்திரிக்கைகள் இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல்துளக்கி இருக்கின்றன. விவேக் கூட காமெடி பண்ணியிருக்கிறார். ஆனால் இப்பொழுதும் சென்னையில் இது போன்ற மோசடிகள் நடக்கின்றன என்று நேசனல் ஜியோகரபியில் பார்த்தபொழுது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பாகங்கள் மாற்றிப் பொருத்தப்படுவது சென்னையில் மிகப்பெரிய பிஸினஸ். ஒரு கிட்னி மாற்றிப்பொருத்துவதற்கு அமெரிக்கர்கள் (அல்லது பணக்காரர்கள்) நாற்பதாயிரம் டாலர் வரை கொடுக்கிறார்களாம். சுனாமிக்குப் பிறகு வாழ்விழந்த நிறைய பேரி கிட்னியை தானமாக கொடுத்திருக்கிறார்களாம். NGயின் நிருபர் ஒருவர் (வெளிநாட்டவர்) தமிழர் ஒருவரின் துணையுடன் அவர்களை சந்தித்தார். ஒவ்வொருவரும் வயிற்றில் மிகப்பெரிய கீரலைக் காட்டுகின்றனர். ஒவ்வொருவரும். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று நிருபர் சொல்கிறார். அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் யாரும் வாயைத்திறக்க முன்வரவில்லை.

கடைசியாக் ஒருவர் பேட்டிக்கு சம்மதித்து ஒரு தனியான இடத்திற்கு நிருபரை அழைத்துச்சென்று தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தைக் கூறுகிறார். பக்கத்துவீட்டுக்கு அடிக்கடி நிறைய பேர் வந்து போவதை அறிந்த அவர் என்னவென்று விசாரிக்க அங்கே ஆரம்பித்தது அவருக்கு சோதனை. பக்கத்துவீட்டுப் பெண் அவர்கள் கிட்னி விற்கிறார்கள் என்றும் ஒன்றரை லட்சம் வரை கிடைக்கும் என்றும் ஆசை காட்ட இவரும் தனக்கிருக்கும் கஷ்டங்களை நினைத்து தனது கிட்னியை விற்கமுடிவு செய்திருக்கிறார். ஒரு புரோக்கரின் துணையுடன் விற்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏகப்பட்ட டெஸ்ட்களுக்குப் பிறகு மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் இந்த பாகம் மாற்றுதல் நடந்தேறியிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தொகை வெறும் எழுநூறு டாலர்கள். நாற்பதாயிரம் எங்கிருக்கிறது எழுநூறு எங்கிருக்கிறது?

நியாயம் கேட்டதற்கு அவர் மிரட்டப்பட்டிருக்கிறார். கொலை மிரட்டலும் வந்திருக்கிறது. NGயின் ரிப்போர்ட்டர் அந்த புரோக்கரைத் தேடிப்பிடித்து அவரிடம் செல்கிறது. அவர் டீக்கடை வைத்திருக்கிறார். அவரது மனைவியோ யாரோ போயிடுங்க போயிடுங்க என்று சொல்கிறார். புரோக்கர் பேச விருப்பம் தெரிவிக்கவில்லை. பிறகு என்ன நடந்ததோ அவரே பேச வருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. மூன்று வருடம் கழித்து ஏன் அவர் இதைப் பெரிது படுத்தவேண்டும்? என்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு டீன் ஏஜில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்பையனின் கால்கள் வீங்கிக்கொண்டிருக்கிறது. கிட்னி ·பெயிலியர். அம்மா ஏற்கனவே சொற்ப பணத்துக்கு கிட்னியை விற்றுவிட்டாள். மகனுக்குக் கொடுக்க அம்மாவிடம் கிட்னி இல்லை. விதி என்று சொல்லமாட்டேன்.

இந்த பாகமாற்று முறைக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறதாம். டாக்டர்கள், புரோக்கர்கள், டிராவல் ஏஜென்டுகள், பணம் மாற்றும் கள்ள மார்கெட்டுகள், அதிகாரிகள். வெளிநாட்டவருக்கு பாகங்கள் மாற்றிப்பொருத்துவதை சட்டம் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது தனி டிபேட்டாக இருக்கட்டும், அதற்கு முன் ஏனப்பா பாவம் கிட்னி விக்க வர்றவங்ககிட்ட கூட மோசடிபன்றவங்களக் கூட கண்டுக்கமாட்டீங்களா?

NG புலனாய்வு செய்ததை நமது நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு விரல் நாயகனையும் குரல் நாயகியைப் பற்றியும் துப்புதுலக்கவே நேரமில்லை.பாவம் விட்டுவிடுங்கள்.

இந்த பாகமாற்று க்ரைம் சைனாவையும் விடவில்லை ஏன் நியுயார்க்கைக் கூட விடவில்லை. சைனாவில் கைதிகளிடமிருந்து பாகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. நியுயார்க் இன்னும் மோசம். பிணப்பெட்டியில் அடக்கம் பண்ணப்பட்ட பிணங்களில் இருந்து எழும்புகள் மற்றும் பல பாகங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. யாருடைய அனுமதியும் இல்லாமல்.

மோசடி வெளிச்சத்துக்கு வரும் வரை; நியுயார்க் முழுவதும் நான்கு இடுகாடுகள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தனவாம்.

வறுமையில் வாடும் மக்களை பணமுதலைகள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துவது என்று தான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் மோசடிக்கு பெரிதும் உதவும் புரோக்கர்களும் என்று தான் பிடிபடுவார்களோ தெரியவில்லை. சுனாமி போன்ற பெரிடர்கள் தாக்கும்பொழுது வழுவிழந்த மக்களைக் குறிவைத்து பண முதலைகளும் புரோக்கர்களும் பல காய்கள் நகர்த்துவார்கள். இவர்களுக்கு செக் வைப்பது யார்? இதைத் தடுக்க என்ன செய்யலாம்?

சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சி பெட்டி ,சினிமாவில் மெஸேஜ் மேலும் சில.

(ஈரம், உன்னைப் போல் ஒருவன், தேக்கடி சம்பவம், எ வெடனஸ்டே, ப்ராகாஷ்ராஜ், காஞ்சிவரம், சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சிப் பெட்டி)

ஈரம் படம் பார்த்தேன். அரத பழசான கதை. புரியாத புதிர் ரீமேக். ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் கொஞ்சம் புதுமை. அவ்வளவே. எப்போத்தான் முன்னும் பின்னும் ஓடுற ப்ளாஷ்பேக் உத்திய விடப் போறாங்களோ தெரியல. புதுசா யோசிங்கப்பா.

*
உன்னைப்போல் ஒருவன் பார்க்கவில்லை. எ வெட்னஸ்டே பாத்திருக்கிறேன். நஷ்ருதின் ஷா போல எளிமையாக கண்டிப்பாக கமலால் பண்ணமுடியாது என்று நான் நினைத்திருந்தேன். அதே போலவே எங்கோ யாரோ எழுதியிருந்தார்கள்: “அமெரிக்க ஆங்கிலம் பேசுவது சற்று நெருடலாக இருக்கிறது” என்று. சொன்னேன்ல கமலால் சாமான்யனாக நடிக்க இயலாது. உலக நாயகனுக்கு சாமான்யனாக நடிப்பதில் என்ன கஷ்டம் என்று தெரியவில்லை.

*
எ வெட்னஸ்டே படம் முன்பு பார்த்தபொழுதே எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நஷ்ருதின் ஷா அழகாக நடித்திருந்தார். யதார்த்தமாக இருந்தார். ஆனால் கதையில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. மறுபடியும் ஷங்கர் ·பார்முலா தான். என் நண்பர் “உன்னைப்போல ஒருவன்” படம் பார்த்துவிட்டு நீங்க பார்த்துட்டீங்களா? கண்டிப்பாக பாருங்கள். நல்ல மெசேஜ் என்றார். வாட் மெஸேஜ்? யாருக்கு? சி க்ளாஸ¤க்காம். நீங்க எந்த க்ளாஸ் சார் என்றேன். திருதிருவென்று முழித்தார். சரி என்ன மெஸேஜ் அதயாவது சொல்லுங்க என்றேன். இவன் கிட்ட வாயக்கொடுத்தது தப்போன்னு நினைச்சிருப்பார். பிறகு நிதானமாக, பாம் வெக்கிற தீவிரவாதிகளுக்கு நாம பாம் வெச்சிட்டா எல்லாம் சரியாயிடும்ன்னு சொன்னார். சனிபெயர்ச்சி கூடவான்னு கேட்டேன்? மறுபடியும் திருதிருன்னு முழித்தார்.

*
சரி அதான் படத்தில் மெஸேஜ் சொன்னாங்கல்ல? பார்த்தீங்கல்ல? அப்புறம் அத ·பாலோ பண்ணாம விடிஞ்செந்திருச்சதும் பொட்டிதட்ட வந்துட்டீங்க? ஏன்னா இயல்பு வாழ்க்கையில இது முடியாதுன்னு தான? இயல்பு வாழ்க்கையில முடியாத ஒன்ன படமா எடுத்தா அது எப்படி மெஸேஜ் சொல்றதா கணக்கிலவரும்?

அப்படியே மெஸேஜ் கொடுக்கிற படம் வந்தாலும், அதால என்ன லாபம்? உக்காந்து கொஞம் யோசிங்க ப்ளீஸ். சுமார் எத்தன வருஷமா சினிமா எடுக்கறாங்க? அதுல எத்தன ஹீரோக்கள் அடிமைகளைப் பற்றியும், மக்களாட்சி பற்றியும், ஜனநாயகம் பத்தியும் மெஸேஜ் சொல்றாங்க. அட ஷங்கர் மட்டுமே ஏழெட்டு படம் எடுத்திருப்பார். என்ன மாறியிருக்கு இங்க?

இன்னும் படகு தேக்கடியில கவிழத்தான செய்யுது. நான் இதுவரை தேக்கடிக்குப் போனதில்ல. ஆனா ஆழமான ஏரின்னு தெரியும். அப்படியிருக்க போட்ல பயனம் செய்றவங்களுக்கு லை·ப் ஜாக்கெட் கொடுக்கனும்னு தெரியாதா? இப்போ தெரியும். ஆனா நாமளே நாளைக்கு தேக்கடிக்கு போனோம்னா லை·ப் ஜாக்கெட் கேப்போமான்னு கூட தெரியாது. கொடுத்தாலும் வாங்கி மாட்டிப்போமான்னும் தெரியாது. ஏன்னா நாம மெஸேஜ உள்வாங்கிக்கிற லட்சனம் அப்படி.

இன்னும் சத்துணவு அறையில தீப்பிடித்து பல மொட்டுக்கள் கருகின் நிகழ்வு எத்தனை பேர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? அது சம்பந்தமாக போடப்பட்ட அரசு ஆனைகள் எத்தனை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது?

இதக்கூட விடுங்கப்பா. எத்தனை பேர் ஹெல்மெட் போட்டுட்டு வண்டியோட்டுறோம்? நம்மளோட பர்சனல் சே·ப்டியில இருக்கிற அக்கறை அவ்வளவுதான்.

*

இத்தனை படத்துல வர்ற மெஸேஜ் நமக்கு பத்தாதுன்னு சனி பகவான் என்ன மெஸேஜ் சொல்றாருன்னு வேற பாக்கவேண்டியிருக்கு. கஷ்டம் தான். படத்தில நல்ல மெஸேஜ் இருக்குன்னு யாராவது சொன்னா பத்திக்கிட்டு தான் வருது.

*

காஞ்சிவரம் பார்த்தேன். விஜய் டீவில கொஞ்ச நாளைக்கு முன்ன பார்த்தேன். ப்ரகாஷ்ராஜ் தேசிய விருது வாங்குவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல. ஏனோ எனக்கு அந்தப்படத்தில வர்ற காரெக்டர் தெரியல. படம் முழுதும் எனக்கு ப்ரகாஷ்ராஜ் தான் தெரிஞ்சார். வாழ்த்துக்கள் ப்ரகாஷ்ராஜ்.

தேசியவிருது வாங்கினப்போ மட்டும் ஞாபகம் வெச்சிருப்பாங்க அப்புறம் மறந்திருவாங்கன்னு பேட்டியில சொல்லியிருந்தாரு, என்னோட அவுட்லுக் கேலன்டரில வருஷம் முழுக்க ரிமைன்டர் “Please remember Prakashraj” அப்படின்னு போட்டுவெச்சிருக்கேன். நீங்களும் ஒரு remainder போட்டுவெச்சுக்கங்க. அதான் நிறைய ப்ரீ கூட இருக்கே.

உங்க பேனர்ல இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (தேசிய விருதுக்கும் இந்த கோரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

*

மேலும் இரண்டு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதுவருகிறேன்
http://readnshared.com
http://chillicode.wordpress.com

நேரம் கிடைத்தால் படியுங்கள். A poor guy’s chronicle with IRCTC.CO.IN என்கிற பதிவை படிக்க சிபாரிசு செய்கிறேன்.

*

உரையாடல் போட்டிக்கு நான் எழுதிய சிறுகதை ஒன்று இன்னும் முடிக்கப்படமால் அப்படியே இருக்கிறது. யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்கிற எனது போபால் துயரசம்பவம் பற்றிய தொடரையும் முடித்துவிட எண்ணியிருக்கிறேன். நீங்க படிச்சாலும் படிக்காம போனாலும் முடிக்கிறது எனது கடமையில்லியா?
*
ரொம்ப நாளுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் அனுப்பிய போட்டோ கீழே:

தமிழக அரசு 14″ வண்ணத் தொலைக்காட்சி என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. அதானால் என்ன என்று கேட்பவர்களுக்கு: இந்த படம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் தனது செல்·போனில் படம்பிடித்தது.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க
வந்த
இலவச தொலைக் காட்சி
பெட்டியின் பெட்டிக்கு
இலவசமாக வழங்கப்பட்டதா
விமான டிக்கெட்?

ஷாப்பிங் மால்கள் தோறும்
பெரிய பெரிய
எல்சிடி பெட்டிகளின்
பெட்டிகளைப் பார்த்ததும்
கழிவிறக்கம் தொற்றிக்கொள்ள
தானகவே குப்பைக்கு வந்தது
நம் இலவச பெட்டியின்
பெட்டி!

நீங்களும் உங்களுக்கு தோன்றும் வரிகளை கவிதை என்று நினைத்துக்கொண்டு இங்கே பின்னூட்டம் அளிக்கலாம்.

*

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்து முன்னூரு வருஷம் ஆச்சுன்னாலும், போனவாரமோ எப்பவோ பக்கத்துல உக்காந்திட்டிருக்கிற சில மக்கள் இந்தியாதான் இப்போ நம்பர் ஒன்னுன்னு பெருமை பிடிபடாம பேசிட்டிருந்தாங்க. இன்னிக்கு The Tabla வில ஹர்ஷா போக்லே எழுதிய இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. I liked the title “Floored”. இது தானாப்பா உங்க டக்கு?
*

மூன்று தேநீர் கோப்பைகள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அது குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிராமப்புற மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது.

நான் சில அரசு பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். வகுப்பில் ப்ளாக் போர்டு, டேபிள், சாக்பீஸ் போன்ற விசயங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாத்தியார் இல்லாமல் இருக்கலாமா? அதை விட கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? நிறைய அரசு பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன. நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. பல நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் வகுப்புக்கு வந்துவிட்டு மாணவர்களை அவர்களாகவே பாடம் படித்துக்கொள்ளச்சொல்லிவிட்டு தூங்கும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் குக்கிராமங்களில் தான் இது போல நடக்கின்றன என்று நினைக்கிறேன். மொத்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர் தான் இருப்பார். மிஞ்சிப்போனால் இருவர் அல்லது மூவர். மூவர் இருந்தாலும், பெரும்பாலும் மூவரும் வருவதில்லை. சொல்லிவைத்துக்கொண்டு லீவு போட்டு விடுகிறார்கள். அல்லது பெர்மிசன் என்கிற பெயரில் மதியம் கிளம்பிவிடுகிறார்கள். டிஇஓ திடீர் விசிட் அடித்தால் மட்டும் அவர் என்ன செய்யப்போகிறார்? வேலை பார்க்கும் நமக்கு மனசாட்சி வேண்டும். சம்பளம் வாங்குகிறோமா இல்லையா?

ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பெரும் துரோகம். அந்த ஏழை அறியா மாணவர்களுக்கு நீங்களும் பாடம் சொல்லிக்கொடுக்கவில்லையென்றால் யார் தான் சொல்லிக்கொடுப்பார்கள்? இங்கே பணிரெண்டாம் வகுப்புக்கு கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மாத்ஸ் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அதெல்லாம் அடுத்த லெவல். இதுவும் தவறு தான் என்றாலும் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படியோ படித்துக்கொள்ளத் தெரியும். அவர்களுக்கு புரிந்துகொள்கிற வயது. ஆனால் பச்சிளம் குழந்தைகள்? They need a good start.

சம்பளம் போதவில்லையா? I dont think so.

இப்படி இருக்கும் பொழுது செய்யும் வேலையில் மட்டும் ஏன் தொய்வு? ஆசிரியராக இருந்துகொண்டு நீங்கள் என்னென்ன செய்யலாம்? எப்படி எப்படி பாடம் எடுக்கலாம்?

1. கொஞ்சம் செலவு செய்ய மனமிருந்தால் போதும் அட்டகாசமாய் சார்ட்கள் வாங்கி வெட்டி ஒட்டி பாடம் எடுக்கலாம்.
2. கதைகள் படித்து அழகாய் குழந்தைகளுக்கு சொல்லலாம்.
3. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு பொது அறிவு கற்றுக்கொடுக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் கற்க வேண்டும். விஜய் டீவியில் நீயா நானாவில் ஒரு முறை ஆசிரியர்கள் பற்றிய நிகழ்ச்சியில் “சந்திராயன் வெற்றியா தோல்வியா?” என்கிற கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குக் கூட விடை தெரியாமல் இருந்தது கொஞ்சம் வருத்தப்படவேண்டிய விசயம்.
4. ஆங்கிலம் நீங்கள் படித்துகொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.
5. சுத்தம் கற்றுக்கொடுக்கலாம்.
6. ஒழுக்கம் கற்றுக்கொடுக்கலாம்.
7. ரைம்ஸ் கற்றுக்கொடுக்கலாம். எத்தனையோ வீசிடிகள் மற்றும் டீவிடிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உங்கள் டீவிடி ப்ளேயரை எடுத்துக்கொண்டு (வீட்டில் டீவிடி ப்ளேயர் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்!) ஊரில் இருக்கும் பொது டீவியில் அந்த வீசிடிகளை போட்டுக் காட்டலாம்.
8. புதிதாக விளையாட்டு கற்றுக்கொடுக்கலாம். புட் பால் வாங்கிக்கொடுங்கள். கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுங்கள். பாட்மிட்டன் ராக்கெட் வாங்கிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் குடிக்கும் காம்ப்ளானுக்கு இலவசமாக கிடைக்கும் டென்னிஸ் பந்துகளையாவது அட்லீஸ்ட் கொடுங்கள்.
9. டீம் ஸ்பிரிட் கற்றுக்கொடுக்கலாம். உங்களுக்கு தெரிந்திருந்தால்.
10. இலக்கியம் கற்றுக்கொடுக்கலாம்.
11. தேடலை கற்றுக்கொடுக்கலாம். உங்கள் ஹேர்பின், ஹேண்ட்பேக், கண்ணாடி, செருப்பு பொன்றவற்றை தேடச்சொல்கிறீர்களே அதைப் பற்றி நான் சொல்லவில்லை, அறிவுத் தேடல் பற்றி சொல்கிறேன். Teach them how to acquire knowledge.
12. உங்கள் பிள்ளைகளை ஒரு நாள் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுக்கச்சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ளச்சொல்லுங்கள்.

நான் சொன்னவை மிக மிக குறைவு. குறைந்த செலவில் நீங்களே அரசை எதிர்பார்க்காமல் இன்னும் நிறைய செய்யமுடியும்.முயற்சி செய்யுங்கள். Find a role model and be a role model.

The Three Cups of Tea கிடைத்தால் படியுங்கள்.

ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

By M K Bhadrakumar
அசலைப் படிக்க.

முன்னொரு காலத்தில் நாம் பிரபாகரனை உருவாக்கினோம். சிறுவனாக இருந்த அவரை எங்கிருந்தோ நாம் தேர்ந்தெடுத்தோம். அவரிடத்தில் நம்மைக் கவர்ந்த விசயம் – அவருக்கு அரசியல் தெரியாது என்பது. அவர் பயந்தசுபாவமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்டவராகவும் ராணுவ ஆட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். அவருடைய இத்தகைய குணாதிசயங்கள் அப்பொழுது நம் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

அது என்னவென்றால் இலங்கையில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த ஜெயவர்தனேயின் அரசை அவமானப்படுத்துதல். அதன்மூலமாக இந்தியப்பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியாவை மதிக்காமல் நடந்தால் என்னென்ன ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்கிற பாடத்தை இலங்கைக்கு கற்றுக்கொடுப்பது. ஜெயவர்தனே மேலை நாடுகளின் மேல் அதீத கவர்ச்சி கொண்டவராக இருந்தார் மேலும் அவர் ஆக்ஸ்·போர்டில் வரலாறு படித்தபோது மன்றோ டாக்டரின் என்கிற ஒன்றை படிக்காதது போலவே இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறார். மேலும் இஸ்ரேலியர்களுடனும் அமெரிக்கர்களுடனுமான அவரது இணக்கமான போக்கு நமக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது நமது கொள்ளைப்புரத்திலே நடந்துகொண்டிருப்பது நமக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.

எனவே நாம் பிரபாகரனை ஊக்கப்படுத்தினோம் ஜெயவர்தனேயின் போலிக் கவுரவத்தில் துளைபோடுவதற்கு நாம் அவரைப் பயன்படுத்தினோம். டெக்கானின் சீக்கியத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே போல.

காலம் சென்றது. கொலும்பு அரசின் மேற்கத்தியப்போக்கின் மேல் நமக்கு வேறொரு இணக்கமான பார்வை உருவாகியிருந்த பொழுது, பிரபாகரனின் தேவை முடிவடைந்துவிட்டதாகவே நாம் கருதினோம். மேலும் ஜெயவர்தனேயை அடியோடு வெறுத்த நமது அகந்தை கொண்ட தலைவர் இப்பொழுது ஆட்சியில் இல்லை. புதிதாக வந்திருக்கும் மென்மையான தலைவர் முந்தையவரின் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை.

மாறிவிட்டிருந்த நமது கொள்கைகளுக்கு இணங்கவேண்டும் என்று பிரபாகரனின் கைகளை நாம் முறுக்கினோம். ஆனால் அதற்குள்ளாக பிரபாகரன் ஒரு முழுமையான ஆண்மகனாக வளர்ச்சி அடைந்துவிட்டிருந்ததை நாம் மறந்துவிட்டிருந்தோம்.

நமது அச்சுறுத்தல்களையும் நமது நிர்பந்தங்களையும் அவர் எதிர்த்தார்.நாம் மேலும் அவரை நிர்பந்தித்து அடிபணியவைக்க நாம் முனைந்த பொழுது அவர் நம்மை திருப்பி அடித்தார். அவர் கொலைகாரர்களை அனுப்பி நம் பாசத்துக்குறிய தலைவரைக் கொன்றார். அதன் பிறகு அவர் நமது ஜென்ம விரோதியாக மாறிப்போனார்.

ஆனாலும் நாம் அவரை ஏதும் செய்யமுடியவில்லை. அவர் மிகுந்த வலுவடைந்துவிட்டிருந்தார். அவரது மக்களிடையே ஒரு முடிசூடா மன்னராக மாறிப்போனார். நாம் பொறுத்திருந்தோம். பொறுமையாக காத்திருந்தோம். நாம் தான் எருமை போல பொறுமை உள்ளவர்கள் ஆயிற்றே. நம்முடைய வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. நம்மைப் போல பொறுமைசாலிகளாக இருக்க யாரால் முடியும் சொல்லுங்கள்? நமது அண்டவெளிகளில் பரவியிருக்கும் மதம் நமக்கு பொறுமையையும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாம் நமது நேரத்திற்காக காத்திருந்தோம்.

அப்புறம் அந்த நாளும் வந்தது. நாம் நமது வேலையை முடித்துக்கொள்ள பிரபாகரனின் எதிரிகளோடு கூட்டு வைத்துக்கொண்டோம். திட்டம் போட்டோம். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம். அவர்களுக்கு கொல்வதற்கான பயிற்சிகளை முறையாக அளித்தோம். நமது உளவுநுட்பங்களை உபயோகித்து அவர்களை சரியாக வழிநடத்தினோம். பிரபாகரன் தப்பிப்பதற்கு உண்டான வழிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடைத்தோம். அதற்கப்புறம் பிரபாகரனின் கழுத்தில் கயிறு இறுகும் வரை பொறுமையாக காத்திருந்தோம்.

இன்று அவர் இல்லை. நம்பினால் நம்புங்கள் அவருடைய சாவில் நமக்கு எந்த பங்கும் இல்லை. அவர் எங்கு எப்பொழுது இறந்தார் என்பது இனி மர்மத்தில் சூழப்பட்ட புதிராகவே இருக்கும். நமக்கு தெரிந்தவற்றை நாம் வெளியிடுவோமா என்ன?

நமக்குத் தெரிந்ததெல்லாம் பிரபாகரனின் இறப்பு செய்தி உலகத்தின் காதுகளுக்கு எட்டி அது முழித்துக்கொண்டபொழுது இந்தியாவின் தெற்குப்பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் மே 13 அன்று தேர்தல் முடிந்துவிட்டிருந்தது என்பது மட்டுமே. இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னவாகியிருக்கும்? ஜனநாயகம் விசித்திரமானது.

சிங்கள மக்கள் இந்தியாவின் நண்பர்கள். நமது முதல்தர மக்களும் அவர்களது முதல்தர மக்களும் ஒரே மொழிகளைப் பேசுபவர்கள். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாக வரும். இருவரும் கோல்· நன்றாக விளையாடுவார்கள். இருவருக்கும் சில்லென்ற பியர் ரொம்பவும் பிடிக்கும். எனவே நாம் அவர்களை இந்தநேரத்தில் வாழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நமது கைகளில் ரத்தம் இருப்பது உண்மைதான். அது ஒரு சபிக்கப்பட்ட சங்கடம். ஆனால் நமது கைகளில் ரத்தம் இருப்பது நமது வரலாற்றில் முதல்முறை அல்லவே.

எங்கள் வார்த்தைகளை நம்புங்கள். நீண்டகாலம் நீடிக்கக்கூடிய தீங்குகள் ஏதும் நடந்துவிடாது. ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

-M K Bhadrakumar
(Ambassador M K Bhadrakumar was a career diplomat in the Indian Foreign Service. His assignments included the Soviet Union, South Korea, Sri Lanka, Germany, Afghanistan, Pakistan, Uzbekistan, Kuwait and Turkey
Thanks: Asia Times Online )

அசலைப் படிக்க.

பாத்துகங்கப்பா நானும் பொலிடிக்கல் அனலிஸ்ட் தான்!

முன்னமே சொல்லிருக்கன்ல என்கூட ஒரு தெலுங்குக்காரர் ஒர்க் பண்றாருன்னு, இன்னக்கி அவரு கூட உக்காந்து சாப்பிட்டேன். விளைவு பல அரசியல்:தெலுங்கு சட்டமன்ற நிலவரங்களை தெரிந்து கொண்டு என் ஜெலரல் நாலட்ஜை வளர்த்துக்கொள்ள உதவியாக இருந்தது. அவரும் மற்றொரு தெலுங்குக்காரரும் சாப்பிடும்பொழுதெல்லாம் அரசியல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்றும் சாப்பிடும்பொழுது சிரஞ்சீவி, தெலுங்குதேசம் போன்ற பெயர்கள் கூட்டுபொறியல்களாக ருசிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, தெரியாத்தனமா சிரஞ்சீவி எப்படி? என்கிற ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டேன். அவ்வளவுதான். என்னால் முடிந்த அளவுக்கு (ஞாபகம் இருக்கிற அளவுக்கு) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

சிரிஞ்சீவிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. ஆனா அவர் தான் ஆட்சியில் யார் அமர்வார் என்பதை முடிவுசெய்வார். (எங்கபாத்தாலும் கிங் மேக்கரா இருக்காய்ங்கப்பா. எல்லாரும் கிங்மேக்கர் ஆயிட்டா அப்புறம் யார் கிங் ஆகுறது?) விஜயசாந்தி விஜயசாந்தின்னு ஒரு லேடி சூப்பர்ஸ்டார் இருந்தாங்களே அவங்களோட கட்சி என்ன ஆச்சு? ஓ இருக்காங்க. அவங்க ரோஜா எல்லாரும் தெலுங்கு தேசம் கட்சியில சேர்ந்திட்டாங்க. என்னது விஜயசாந்தி கட்சியை கலைச்சிட்டாங்களா? (என்னை அரசியல் ஞானசூன்யம் போல நண்பர் பாக்கறார். நண்பர் ஒரு முறை தினமலர் படித்துக்கொண்டிருந்தைப் பார்த்ததாக ஆங்காங்கே வதந்தி நிலவி வருகிறது. அவர் தமிழ் நன்றாகப் பேசுவார். கிட்டத்தட்ட நம்ப தசாவதாரம் சிபிஐ கமல் போல! ஒரு நாள் தெரியாத்தனமா நான் அவரிடம்: உங்களுக்கு தமிழ் வாசிக்கத்தெரியுமான்னு கேட்டுத் தொலைச்சிட்டேன். என்னை விசித்திரமாக பார்த்த அவர், தமிழ் என்ன இசை வாத்தியமா வாசிக்கிறதுக்கு, படிக்கத்தெரியுமான்னு கேளுங்கய்யான்னார்.) ஆமா. கலைச்சிட்டாங்க. அப்புறம் அவங்களோட தனித்தெலுங்கானாங்கற கொள்கை என்னவாச்சு? சிரிக்கறார். பிறகு மீண்டும் ரோஜாவைப் பற்றிய செய்திகள். ரோஜா ரசிகராக இருந்திருக்க வேண்டும். இப்போ ரோஜா நம்ப கம்ப்யூட்டர் தாத்தா சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்துகொண்டு சிரஞ்சீவியை கண்டபடிக்கு பேசுகிறார்கள். சிரஞ்சீவி ஒரு நடிகர். நடிகர்கள் எல்லாம் நடிகைகளை கேவலமாக நடத்துவார்கள் என்று ஒட்டுமொத்த நடிகர்களையும் குறைகூறுவதோடு சிரஞ்சீவியையும் வாரியிருக்கிறார் தெரியுமா? ரோஜா அரசியல் பிரச்சாரம் செய்யும் பொழுது சில இடங்களில் மக்கள் ஆடச்சொல்வார்களாம். (நம்பாளுகளுக்குத்தான் தெரியுமே: இதுதான்டா சந்தர்ப்பம். இப்ப என்னகேட்டாலும் செய்வாய்ங்கன்னு நல்லா ராகிங் செஞ்சிருக்காய்ங்க போல.) ரோஜாவும் ஏதோ மக்கள் கலா ஆர்வத்தில் தான் நடனமாடச்சொல்கிறார்கள் என்று எப்பொழுதும்போல மக்களை புரிந்துகொள்ளாமல் நடனமாடியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை பிரச்சார பீரங்கி பதவியிலிருந்து இறக்கி, நடனசிகாமனி ஆக்கியிருக்கிறார்கள் தெலுங்கு மக்கள். (நக்கல் பிடிச்சவைங்கப்பா) ஆனா நடிகைகளின் கேள்விக்கு பதிலாக சிரஞ்சீவி: இப்போத்தான் தெரியுதா நான் (ஹீரோ) ரொம்ப கெட்டவன்னு? போன வருஷம் என்னோட ப்ளட் பாங்க் மற்றும் ஹாஸ்பிட்டல்ல நடந்த விழாவுக்கு வந்து என்னைப் பாராட்டி இவர்தான் வர வேண்டும் என்று பேசியது நினைவில்லையா என்று கேட்டிருக்கிறார் (அது போன வருஷம் இது இந்த வருஷம்ப்பா. ஆமா ஏன் சிரஞ்சீவி ரோஜா விஜயசாந்தியெல்லாம் பிடிச்சு போடல. பேமெண்ட் அதிகமாகியிருக்குமோ?) ஆனாலு ஒரு கட்சியின் தலைவர் பதவியிலிருந்துகொண்டு நடிகைகளைப் போல பேசமுடியாதல்லவா, அதனால் தனது மகளிர் அணியினரை வைத்து பேசவைத்திருக்கிறார் (இல்லை அவர்களே சிரஞ்சீவியின் மீது கொண்ட அன்பினால் பேசியிருக்கிறார்கள். ஆஹா இப்பத்தான்யா புரியுது ஏன் இவங்க எல்லா மகளிர் அணி வெச்சுக்கிறாங்கன்னு.) (இப்படியாக நடிகர் நடிகைகளிடையே அரசியில் அரைகுறை ஆடையோடு நடுத்தெருவில் நடனமாடிக்கொண்டிருக்கிறது.)

நீங்க சிரஞ்சீவி ரசிகரா? கேள்வியை எதிர்பாக்காத அந்த நபர், சுதாரித்து, தன் டிபன்பாக்ஸில் மீதமிருந்த தயிர் சாதத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து டபக் டபக் என்று வாயில் போட்டுக்கொள்கிறார். அருகிலிருந்த பாவக்கா பொறியலையும் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். பிறகு: அரேயார் (யாரது அரே?) வேறு என்ன சாய்ஸ் இருக்கிறது. ஒன்னு பாலகிருஷ்ணா. இல்லீன்னா சிரஞ்சீவி. பாலகிருஷ்ணாக்கு சிரஞ்சீவி எவ்வளவோ மேல். ஆமா. அது என்னவோ வாஸ்தவம் தான். யூடியூபில பாலய்யான்னு தேடுங்க போதும். அவ்ளோ க்ளிப்ஸ். எல்லாம் பாலய்யாவோட ஒரிஜினல் திங்கிங் அன்ட் கிரியேட்டிவிட்டி. ஒரு காட்சியிலெல்லாம் ரயில் பெட்டியை வெறும் கையை வைத்தே நகர்ந்து போக வைப்பார். இத்தனைக்கு கைக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே ரொம்ப தூரம் இருக்கும். நீங்க நம்பலைல? எனக்கு தெரியும். வேணுமினா நீங்களே செர்ச் பண்ணி பாத்துக்கங்க.

அப்புறம் தெலுங்குதேசம். இன்னும் எலெக்ஷன் முடிவடையவில்லை சந்திரபாபு நாயுடுக்கு இப்பொழுதே தான் ஜெயித்து முதல் மந்திரியாகிவிட்டதாக நினைப்பு. மக்களிடம் படிவங்கள் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து தருமாறு நச்சரிக்கறாராம். என்ன படிவங்கள்ன்னு நான் கேட்டாத்தான் நண்பர் சொல்வாரா? அவரே சொல்ல ஆரம்பித்தார். சந்திரபாபு அறிவித்திருக்கிற திட்டத்தைப் பார்த்தால், பேசாம இந்தியா போயிட்டு (ஆந்தரா) வீட்ல இருந்துட்டு தூங்கி தூங்கி எந்திருச்சா போதும். வேலைக்கே போகவேண்டாம். அப்படி என்ன திட்டம்? ஏழை மக்களுக்கு இலவச வீடு. இலவசமாக கரண்டு. இலவசமாக கலர் டீவி (ஒருத்தர ஒருத்தர் பாத்து படிச்சுக்கிறதுதான். இதுலயாச்சும் தமிழ்நாடு முன்னோடியா இருக்கம்னு ஒரு பெருமை!) இருபது கிலோவோ நாற்பது கிலோவோ அரிசி. மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம். உங்கள் கண்கள் சரியாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றன. யெஸ். மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் இலவசம். அப்புறம் எதற்கு வேலைக்கு போகவேண்டும்? (தமிழ்நாட்டில் வீடுதோறும் இலவசமாக் மாதத்துக்கு பத்து திருட்டு டீவிடிக்கள் கொடுப்பதாகவும் அந்தந்த கட்சி சேனல்களில் மக்கள் பங்குபெரும் இன்னும் பல நடனநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் வாக்குறுதிகள் அளித்திருப்பதாக கேள்வி!) ஆஹா இந்த திட்டம் நல்லாயிருக்கே. யாராவது நம்ப அரசு பொங்கலுக்கு வழங்கிய பம்ப்பர் பரிசை ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்துங்கப்பா. அதுசரி, யார் ஏழை யார் பணக்காரர் என்பதை யார் முடிவு செய்வது? எப்படி முடிவு செய்வார்கள்? என்னை விசித்திரமாக பார்த்த அவர்: வேறயார் அரசியல்வாதிகள் தான் முடிவு செய்வார்கள். ரேஷன் கார்டை வைத்துத்தான். எல்லோரிடமும் வெள்ளை அல்லது பிங்க் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பார்கள். வெள்ளை ரேஷன் கார்டு ஏழை மக்களுக்காம். (நம் ஊரில் பிங்க் ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் எல்லோருரிடமும் வெள்ளை ரேஷன் கார்டும் இருப்பது விந்தையிலும் விந்தை) இந்த வெள்ளை ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை மக்கள் கண்டுபிடிக்கப்படுவார்களாம். மொத்தம் ஒரு கோடியே என்பது லட்சம் ஏழை மக்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு இவ்வளவு இலவசங்களை அள்ளிக்கொடுக்க முப்பதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். (பின்னர் அவரே திருத்திக்கொள்கிறார்: முப்பதாயிரம் கோடி கோடி ரூபாய்) எனது கணிதமூளை இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் ஷட்டவுன் ஆகிவிடுவது வழக்கம். இன்றும் அவ்வாறே செய்தது. காங்கிரஸ்காரர்கள் இத்தனையையும் எப்படி செய்யப்போகிறார் என்பதை சொல்லவேண்டும் என்று கேட்கிறார்களாம் (ஐ! ஆச தோச. நீங்க காப்பிஅடிக்கவா? தவிரவும், எங்களுக்கே இன்னும் புரியாமல் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி விளக்கமுடியும்?)

பாலகிருஷ்ணா. த ஒன் மேன் ஆர்மி. த பாலய்யா. த பால்ட்ரிக்ஸ் (லைக் மேட்ரிக்ஸ்) அவரும் சந்திரபாபு நாயுடுவும் பிரதர் இன் லாவாம். இப்பொழுது பாலய்யாவின் மகளை சந்திரபாபுநாயுடுவின் மகன் கல்யாணம் செய்திருக்கிறாராம். (குட்!) அதனால், பாலய்யா காட் நோ சாய்ஸ். எனக்கு The White Tigerஇல் அரவிந்த அடிகா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது:

My cousin-sister Reena got hitched off to a boy in the next village. Because we were the girl’s family, we were screwed. We had to give the boy a new bicycle, and cash, and a silver bracelet, and arrange for a big wedding—which we did. Mr. Premier, you probably know how we Indians enjoy our weddings—I gather that these days people come from other countries to get married Indian-style. Oh, we could have taught those foreigners a thing or two, I tell you! Film songs blasting out from a black tape recorder, and drinking and dancing all night! I got smashed, and so did Kishan, and so did everyone in the family, and for all I know, they probably poured hooch into the water buffalo’s trough.

பாலய்யாவும் பெண்ண பெத்தவர் தான? பிரச்சாரம் பண்ணுன்னா பண்ணத்தான வேணும்?! பாலய்யாவிடம் மீடியா ஒரு முறை காங்கிரஸை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொல்லியிருக்கிறார்: என் பவர் தெரியாம என்னோட மோதறாங்க. நான் ஒரு முறை முறைத்தேன் என்றால் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் (அடங்கப்பா!) இதை மீடியாக்காரர்கள் காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டிருக்கிறார்கள்: அவர்கள் அவர் ஒரு சூப்பர்மேன். அவர் நினைத்தால் என்னவேண்டும் என்றாலும் செய்வார். ப்ளீஸ் எங்கள மாட்டிவிட்டுடாதீங்கன்னு நக்கல் அடித்திருக்கிறார்கள்.

பாலய்யா போகிற இடமெல்லாம், தொடையில தட்டி தட்டி பிரச்சாரம் செய்கிறாராம். (தொடயில் தட்றது அவரோட ஸ்டைல் அப்படீன்னு அவரே நினைச்சுக்கறார்!) போகிற இடத்தில் எல்லாம் மக்கள் அவரை அதே ஸ்டைல் பண்ணச்சொல்லி கேட்கிறார்களாம். நம்மை ஓட்டுகிறார்கள் என்று புரியாமல் இதுவும் மாங்குமாங்கென்று ஸ்டைல் பண்ணி காட்டியிருக்கிறது. (எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது: நான் காலேஜ் படிக்கும் பொழுது மெக்கானிக்கல் வாத்தியார் இருந்தார். அவரோட ஒவ்வொரு க்ளாஸ்லையும் மாரல் ஸ்டோரி சொல்லுவார். செம மொக்கையா இருக்கும். கிட்டத்தட்ட இந்த பதிவு போலன்னு வெச்சுக்கங்களேன். ஆனா கேர்ள்ஸ் எல்லாம் ரொம்ப ரசிக்கிற மாதிரி ஆக்ட்கொடுக்குங்க. அவர் க்ளாஸ¤க்கு வந்ததுதான் தாமதம். கேர்ள்ஸ் சார் மாரல் ஸ்டோரி சார். மாரல் ஸ்டோரி சார்ன்னு கேக்க ஆரம்பிச்சிடுங்க. அவருக்கு முகத்தில் பெருமையைப் பாக்கனுமே. அப்பப்பா தாங்காது. மனுஷனுக்கு பொண்ணுங்க எல்லாம் நம்மள ஓட்டுதுகன்னு கடைசிவரைக்கும் தெரியாது!)

பாலய்யா இப்படி தொடையில் கைய வெச்சு தட்டி தட்டி ஸ்டைல் பண்ணி பண்ணி, காங்கிரஸோட சின்னம் (ஐந்து விரல்கள்) பாலய்யாவின் தொடையில் பதிந்தேபோய்விட்டதாம். இந்த ரகசியத்தை எப்படியோ மர்மமான முறையில் துப்புதுலக்கி தெரிந்துகொண்ட காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் சின்னத்தை தனது தொடையிலே பதித்துவைத்துக்கொண்டிருக்கும் தெலுங்குதேச கட்சிக்காரரான பாலய்யாவே உண்மையில் காங்கிரஸ்காரர் தான் என்று அவரை வைத்தே எதிர் பிரச்சாரம் செய்கிறார்களாம். (இது எப்படி இருக்கு!)