லிட்டில் இன்டியாவிலிருந்து யூசூன் போவதற்கு 857 பஸ் எடுத்தால் கண்டிப்பாக முக்கால் மணி நேரம் ஆகும். எனக்கு இப்பொழுதெல்லாம் பஸ்ஸில் தூக்கம் வருவதில்லை. உடன் வரும் நண்பரும் செல் போனையே கட்டிக்கொண்டு அழுபவர். SMS அடித்தே ஓய்ந்த கைகள் அவரது கைகள். ஒரு முறை அவருடன் பீச்சுக்கு சென்றிருந்த பொழுது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான் என்ன செய்வதென்று தெரியாமல் கடலில் விடாது அடித்து கொண்டிருக்கும் அலைகளையும், வானத்தில் நிமிசத்துக்கு ஒரு முறை (அல்லது இரு முறை) தரை இறங்கிக்கொண்டிருக்கும் விமானங்களை எண்ணிக்கொண்டிருந்தேன், அவர் நான் அருகின் அமர்ந்திருப்பது தெரியாமல் ஹாயாக தனது ஆஸ்திரேலிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்து விட்டு சாரி முத்து என்று மட்டும் சொன்னார். எனவே இந்த முறை சற்று உஷாராக ஆனந்த விகடன், ரிப்போர்ட்டர் மற்றும் இந்தியா டுடே வாங்கிக்கொண்டேன். முக்கால் மணி நேரம் பொழுது போக வேண்டுமே.
நாங்கள் யூசினில் பருத்தி வீரன் படம் பார்க்கச் சென்றோம். முதலில் அமீருக்கு HatsOff. அவரது மௌனம் பேசியதே படமே அப்பொழுது வந்து கொண்டிருந்த குப்பைகளுக்கு (தமிழன், ஜெமினி) மத்தியில் ஒரு அழகான கவிதை. கடைசி டிவிஸ்ட் ஒரு surprise. ராம் பத்தி நான் சொல்லத்தேவையில்லை.
பருத்திவீரன் மற்ற இரண்டு படங்களையும் தூக்கி அல்லேக்காக சாப்பிட்டு விட்டது. எதார்த்தமான காட்சிகளால் படம் நம்மைக் கட்டிப்போடுகிறது. மதுரைத் தமிழ் வசனங்கள் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும், பாடல் பாடும் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகட்டும், பின்னனி இசை ஆகட்டும், நடிகர்கள் (பிரியாமணி, சரவணன் மற்றும் கார்த்தி) எல்லோரும், யுவனின் ரீரெக்கார்டிங் என்று அனைத்தும் மிகச்சரியாக அழகாக அமைந்திருக்கின்றன. well done. படத்தின் முதல் பாதி கெட்ட அலம்பல். மதுரைக்குசும்பு ஒவ்வொரு ப்ரேமிலும் இருக்கிறது.
நான் இன்றிரவு சாப்பிடவில்லை. படத்தின் பாதிப்பு என்னிடம் இன்னும் இருக்கிறது. தியேட்டரிலே அழுது விட்டேன் (மகாநதிக்கப்புறம் நான் தியேட்டரில் அழுத படம் இது). தியேட்டரை விட்டு வந்ததும் என்னை முத்தழகு என்று அழைத்த நண்பர் ஒருவர் செமத்தியாக என்னிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். எப்படி இவரால் இப்படி ஒரு படத்தைப்பார்த்து விட்டு வந்து காமெடி பண்ண முடிகிறது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை.
அந்த நண்பர் சொன்னார் : முத்து, திஸ் இஸ் ஜஸ்ட் எ சினிமா, சோ டேக் இட் ஈஸி. சினிமா தான். பிம்பம் தான். ஆனால் மனது கேட்கமாட்டேன் என்கிறதே. முத்தழகு (பிரியாமணி) “என்னைத் தூக்காதடா தூக்காதடா” என்று கதறும் போது -அதை நினைக்கும் இந்த நொடி கூட- நெஞ்சு வெடித்து விடுவது போல இருக்கிறதே. துக்கம் தொண்டையை அடைக்கிறதே. நான் நினைத்ததெல்லாம் ஒன்று தான் : படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவம் எங்காவது கண்டிப்பாக நடந்திருக்கும். அந்த பெண்ணும் அவரது காதலும் கண்டிப்பாக கதறியிருக்கும். அவரை நினைத்து தான் எனக்கு அழுகை வந்தது. அந்த சம்பவத்தை நினைத்து தான் மனது கிடந்து அடித்துக்கொள்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏன் இப்படி நடக்கிறது?
படத்தில் இப்படித்தான் முடிவு இருக்கப்போகிறது என்றூ யூகித்தவுடன் நான் என் நண்பனிடம் போய்விடலாமடா என்று கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் பொருடா என்றான். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அவன் எழுந்து போய்விட்டான். நான் கடைசி வரை படத்தைப் பார்த்து விட்டு தான் வந்தேன். வரும் வழியிலெங்கும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தும் ஏதும் பேசாமல் இருக்கவே, வீட்டிலிருந்த படம் பார்க்காத மற்றொரு நண்பர் ஏன் எல்லோரும் இப்படி இடி விழுந்தது போல உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கேட்ட பிறகு தான் நாங்கள் படத்தை பற்றி பேச்சு எழுந்தது. படத்தின் தாக்கம் அப்படி.
ஒரு பெண் சாகக்கிடக்கிறாள் என்று தெரிந்து எப்படி நான்கு நபர்களால் அவள் கற்பழிக்கப்படுகிறாள்? அவர்களின் மனிதாபிமானம் எங்கே போனது? அதிலும் ஒருவன் கற்பழிப்பதற்கு ஆய்த்தமாகிற பொழுது, மற்றொருவன் பக்கத்திலிருந்து நாய் போல பார்த்து, ஒரு தடவ என்று அவளை முத்தமிட்டு செல்ல எப்படி முடிகிறது? படம் தான் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா என்ன?
இந்த வார ரிப்போர்ட்டரில் கூட இது போன்ற ஒரு சம்பவம் காவல் நிலையத்திலே நடந்திருந்ததாக செய்தி வந்திருந்தது. கற்பழிக்கப்பட்டவர் பதினைந்து வயது பெண்ணிற்கு தாய். நம்மில் மனிதாபிமானம் வற்றிக்கொண்டே போகிறதா? மனசாட்சி என்ற ஒன்று இல்லாமலே போகிறதா? மிருகங்கள் தானா நாம்? அதிலும் படத்தில் அந்த பெண் கதறுகிறாள்: என்ன விட்டுங்கடா. எனக்கு நாளைக்கு கல்யாணம்டா என்கிறாள். எவ்வளவு தைரியமான பெண் அவள். அவளுக்கு தான் வீரன்(கார்த்தி) மீது எவ்வளவு காதல்? சிறு வயதிலிருந்து அவனைக்காதலித்து. அப்பாவை, அம்மாவை வெட்டிப்போட்டு விட துணிந்து, தற்கொலைக்கு முயன்று, வீரனிடமும் அப்பாவிடமும் அடிவாங்கி வீரனின் மனதில் நுழைந்து அவனது காதலை பெற்று அது நிறைவேறும் போது கற்பழிக்கப்பட்டு இறப்பது எவ்வளவு கொடூரம்? வீரனிடம்: “உன் பாவம் எல்லத்தையும் அவைங்க என் கிட்ட இறக்கி வெச்சுட்டு போயிட்டாய்ங்கடா” என்று சொல்லும் போதும் “டேய் என்ன காணாப்பொணமா ஆக்கிடுடா” என்று கதறும் போதும் இந்த உலகத்தில் வாழ்வதற்கான அர்த்தங்கள் மிகவும் குறைந்து போய்விட்டதைப்போன்றே தோன்றுகிறது. மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக வெளித்தோற்றத்திற்கு தோன்றலாம். ஆனால் இளவஞ்சி சொன்னதைப் போல ” மனிதர்களின் குணம் சூழ்நிலைகளுக்கு தகுந்தது போல மாறும்” என்பது உண்மை என்றே தோன்றுகிறது. மனிதனாக இருந்தவன் கண நேரத்தில் கொடுரமான மிருகம் ஆகிவிடுகிறான்.
அதனால் தான் சர்வசாதரணமாக படித்துக்கொண்டிருக்கும் பெண்களை பஸ்ஸ¤க்குள் வைத்து எறித்து விட துணிகிறோம். எவ்வளவு திமிர் இருந்தால் பஸ்ஸ¤க்குள் பெண்களை வைத்து எறித்திருப்பார்கள்? அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்ன? விகடனில் ஞானி சொல்லியிருக்கும் (ஆரசியல் சார்ந்த) கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சொல்லப்போனால் : விஜயகாந்த் சொன்னது போல அரபு நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் போல கொடுக்கவேண்டும்.
பருத்தி வீரன் படத்தில் வந்த லாரி டிரைவர்கள் என் கைகளில் கிடைத்தால் நான் வேறு மாதிரியான தண்டனை வழங்குவேன் (எனக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில்). அவர்களைக் கொல்லக் கூடாது. நந்தாவில் கொடுப்பதைப் போன்ற தண்டனை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். வாழ்நாள் பூராவும் அவர்கள் தாங்கள் செய்த கொடுரத்தை நினைத்துப் பார்த்து கொண்டேயிருக்கட்டும். அவர்கள் திருந்துவதற்கு சான்ஸ் தரக்கூடாதா என்று புல்ஷிட் மனித உரிமை மண்ணாங்கட்டி பேசுபவர்களுக்கு: அது தான் கொடுத்திருக்கிறோமே. உயிரை விட்டு வைத்திருக்கிறோமே. அவர்கள் வாழட்டும். செத்துக்கொண்டே வாழட்டும்.
சாரு நிவேதிதா சொல்வது போல் இங்கு தான் பள்ளிக்குழந்தைகளை ரேப் செய்த ஆசிரியர்கள் transfer மட்டும் பெற்றுக்கொண்டு தப்பித்துக்கொள்ளலாம். அடுத்த பள்ளிக்கூடத்தில் குழந்தைகளே இல்லையா என்ன? கேட்டால் : ஜனநாயகம். மண்ணாங்கட்டி.
இங்கு பத்திரிக்கைகள் செய்யும் கொடுமையும் டூ மச். ரிப்போர்ட்டரில் விபச்சார புரோக்கர் பிரசாத்தின் detailed பேட்டி வந்திருந்தது. அவர் ஏதோ corporate CEO ரேஞ்சுக்கு தனது தொழில் நுணுக்கங்களை சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களும் துருவி துருவி “உங்களை புதிதாக தொடர்பு கொள்பவர்கள் எப்படி தொடர்புகொள்ளலாம்” என்று மிக முக்கியமான கேள்விகளை கேட்டிருந்தார்கள். அவர் படு கேஸ¤வலாக கூலாக பதில் சொல்லிக்கொண்டுருந்தார். “என்னிடம் வராத நடிகைகளே இல்லை” என்ற தலைப்பு வேறு. (நான் ரிப்போர்ட்டரை வாங்கவில்லை என்னுடன் வந்த நண்பர் தான் வாங்கினார். நான் பிரசாத்தின் பேட்டியை படிக்கவில்லை. என் நண்பர் படித்து விட்டு அதிர்ச்சிக்குள்ளாகி என்னிடம் காட்டினார்.) கண்ணி கழியாத பெண்கள் எப்பொழுதும் என் கைவசம் இருப்பார்கள். VIPகள் கேட்டவுடன் நான் அனுப்பிவைத்து விடுவேன் என்கிறார். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. இதை இவ்வளவு detailed ஆக பத்திரிக்கை வெளியிட வேண்டுமா என்ன?
இன்னொரு புறம் தாலி சாமியார் (அவர் பெண்கள் போல தாலி, வளையல்கள், மிஞ்சி என்று போட்டுக்கொண்டிருக்கிறார்), சாக்கடை சாமியார் என்று ஏகத்துக்கும் சாமியார்கள். எத்தனை சாமியார்கள் கைது செய்யப்பட்டாலும், மக்கள் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்க காத்துக் கிடப்பதைப் பார்க்கும் போது கோபமே வருகிறது. பாவமாகவும் இருக்கிறது. மக்களை குறை சொல்லுவதா (கண்ணி கழியாத பெண்கள் கேட்கும் VIP. சாகப்பிழைக்க கிடக்கும் பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து ஒன்றன் பின் ஒருவராக ரேப் செய்வது. காக்கும் கடமையில் இருப்பவர்களே கற்பை சூரையாடுவது. பாவடை சாமியார் ஜட்டி சாமியார் என்று ஏதோ ஒரு சாமியாரிடம் ஆசி பெற காத்து ஏமாறுவது) அல்லது அரசியல் தலைவர்களை குறை சொல்லுவதா? முதலில் இவர்களுக்கு தலைவர்கள் தேவையா? உங்களையெல்லாம் தௌஸன்ட் பெரியார் வந்தாக்கூட திருத்த முடியாதுடா என்று சொல்வது தான் சரியோ?
மற்றபடி படம் மிக மிக அருமை. ஒவ்வொரு காட்சியும் அருமையாக கிராமத்தை அச்சு அசலாக நம்மிடையே கொண்டுவந்திருக்கிறார். ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்தது போன்றே ஒரு எண்ணம். எவ்வளவு விசயங்களை இந்த தலைமுறை குழந்தைகள் இழக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தில் சிறுமி முத்தழகு சிறுவன் வீரனிடம் “டேய் டேய் நான் உங்கூட சீட்டிடா (பழம்)” என்று சொல்வது அழகாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த ஜெனரேசன் குழந்தைகள் என்னவென்று கேட்ப்பார்கள். அப்பத்தாக்களை விட்டு, அம்மாச்சிகளை விட்டு, அம்மாவை, அப்பாவை, சித்திகளை விட்டு, அண்னன்களை அக்காக்களை விட்டு நாம் எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்? ஈமெயிலில் வந்த சாப்ட்வேர்மக்களைப் பற்றிய கவிதையின் ஒரு வரி ஞாபகம் வருகிறது : நம் ஒவ்வொருவரின் வீட்டு திண்ணையிலும் வாழப்படாமல் வாழ்க்கை மீந்து கிடக்கிறது.
ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைக்கலாம். முத்தழகுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்ணீர் துளிகள். நான் வேறு என்ன செய்ய முடியும்? ப்ளீஸ் அமீர் இது போல படங்கள் தொடர்ந்து எடுங்கள், ஆனால் க்ளைமாக்ஸ் இவ்வளவு சோகமாக வைக்காதீர்கள். எனது பணிவான வேண்டுகோள்.