ப்ரான்ஸ் போயிட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. நிறைய மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன். இந்த முறை தொடர்ச்சியாக எழுதி முடித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
*
சோ ஸ்டோரலரை பாரீஸ் விமான நிலையத்திலே விட்டுவிட்டு வந்தாயிற்று. பாவம் அதுக்கு என்ன தெரியும்? என்ன செய்யும் என்றெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை, அது அது பாட்டுக்கு இருக்கும். யாரும் வந்து கலெக்ட் செய்யலன்னாலும் அது பாட்டுக்குத்தான் இருக்கும். யாரும் வேண்டுமென்றே அதை திருடிச்செல்லாதவரையிலும் அது அங்கு தான் இருக்கும். இந்த நாள் முடிவின் போதோ அல்லது அதற்கென்று அங்கிருக்கக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடியும் வரையிலும் அது அங்குதான் இருக்கும். அதற்குப்பிறகு அது எங்கு செல்லும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. என் மனைவிக்குத் தெரியவும் நியாயமில்லை. இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த மெர்க்கியூர் ஹோட்டலின் ரிஷப்ஷனிஸ்டுக்கும் தெரிந்திருக்கலாம். அவளிடம் விமானநிலைய சம்பவத்தை விவரித்தபிறகு நான் உனக்கு உதவுகிறேன் என்றாள்.
மீண்டும் விமானநிலையத்துக்கு செல்வதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். கிட்டத்தட்ட ஒரு வார மென்ட்டல் ஸ்ட்ரெஸ்ஸ¤க்குப் பிறகு அப்பாடா ஹோட்டலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோசப்படக்கூட இல்லையே என்பது தான் என் வருத்தம். எங்கள் அறை இரண்டாவது மாடி. லக்கேஜ்ஜை நானே மேலே ஏற்றி என் ரூமுக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு மனைவியையும் குழந்தையையும் ரூமில் செட் பண்ணிவிட்டு ஹீட்டர் போன்ற இத்தியாதிகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பார்த்துவிட்டு மீண்டும் கீழிறங்கி வந்து ரிஷப்ஷனிஸ்டும் நானும் விமானநிலையத்துக்கு தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பே கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் யாரும் இருக்க மாட்டார்களோ என்னவோ என்றாள் அவள்.
நாங்கள் தங்கியிருந்த Hotel Mercure
Saint Quentin க்கும் விமான நிலையத்துக்கு ரொம்ப தூரம். டாக்ஸியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். கிட்டத்தட்ட நூறு யூரோ ஆகும். மீண்டும் ஸ்ட்ரோலர் எடுக்க விமான நிலையத்துக்கு செல்லும் கணக்கை கம்பெனி ஏற்காது! என்பது யூரோ என்றால் நூற்றி அறுபது சிங்கப்பூர் டாலர். ஸ்ட்ரோலர் விலை இருநூறு டாலர் என்று பல கணக்குப் போட்டுப் பார்த்தேன். ட்ரெயின் செல்வதென்றால் பயமாக இருக்கிறது. கலைப்பாகவும் இருக்கிறது. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
இங்கே இருக்கும் பாரீஸ் RER மேப்பைப் பாருங்கள். இதனுடன் ஒப்பிடும் பொழுது சிங்கப்பூர் MRT ஒரு சின்ன துகள் போல இருக்கும். இதில் மஞ்சள் லைனைப் பின் தொடர்ந்தீர்கள் என்றால் அதில் கடைசி நிறுத்தமாக C7 இருக்கிறது பார்த்தீர்களா? அது தான் நாங்கள் தங்கியிருந்த Saint-Quentin-en-yvelines. அங்கிருந்து ஏர்போர்ட் செல்லவேண்டும் என்றால், அங்கிருந்து மஞ்சள் RER எடுத்து St-Michel-N-Dame (ப்ளூ RER சந்திக்கும் இடம்) வந்து அங்கிருந்து ப்ளூ RER எடுத்து Charles De Gaulle 2 போகவேண்டும். சும்மா மேப்பப் பாக்காம இத மட்டும் படிச்சீங்கன்னா புரியாது. மேப்ப பாத்திட்டு வாங்க. ம்ம் இப்பத் தெரியுதா எங்கிருந்து எங்க போகனும்னு? ஒரு மூளையில இருந்து மற்றொரு மூளைக்குப் போகணும்!
எங்கள் ஹோட்டல் அறையிலிருந்த ஜன்னல் வழியாக எடுத்த படம்.
அன்று மதியமே ஈ·பில் டவர் பார்க்கலாம் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பயண அயர்ச்சியிலும் குளிரிலும் எங்களால் தூங்க மட்டுமே முடிந்தது. மதியம் எழுந்து; என்ன சாப்பிடலாம் என்று யோசித்தோம். என்ன என்பதை விட எங்கே என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு கிடையாது. ரிஷப்ஷனிஸ்ட் கிட்ட கேட்டபொழுது கொஞ்ச தூரத்தில் மெக் டொனால்ட்ஸ் இருக்கிறது என்று வயிற்றில் பாலை வார்த்தாள்.
நானும் என் மனைவியும் குழந்தையும் சில பல ட்ரெஸ்களை அணிந்து கொண்டு ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கினோம். இறங்கியது தான் தாமதம் குளிர் காத்திருந்தது போல எங்களை வந்து சூழ்ந்து கொண்டது. அடுக்கடுக்காக உடைகளை அணிந்திருந்ததாலோ என்னவோ ஸ்ரீநிதியைத் தூக்குவது கொஞ்சம்கஷ்டமாக இருந்தது. வெளியே கிளம்பியது தான் தாமதம் ஸ்ரீதிதி அடுத்த இரண்டு நிமிஷத்தில் தூங்கிவிட்டாள்.
மெக்டொனால்ட்ஸை தேடிப் புறப்பட்ட எங்களுக்கு படு பயங்கர அதிர்ச்சி. ஊரே வெரிச்சோடிக்கிடக்கிறது. ஐ ஆம் லிஜென்ட் பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அது போலத்தான். கார்கள் எல்லாம் ஏதோ சிக்னலுக்கு காத்திருப்பதைப் போல வரிசையாக நிற்கின்றன. கார்களுக்குள் யாரும் இல்லை. ஷாப்பிங் மால்கள் எல்லாம் மூடியிருக்கின்றன. எஸ்கலேட்டர்ஸ் வொர்க் ஆகவில்லை. மணி மதியம் ஒன்று தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பர்கள். குளிர் வேறு. பயத்தில் என் மனைவியையும் குழந்தையையும் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டு விட்டு நான் மட்டும் மீண்டும் புறப்பட்டேன்.
Saint Quentin நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டுக்கு இடைப்பட்ட ஊர். Carefour இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் இருக்கிறது. ஒரு தியேட்டர் இருக்கிறது. நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. டவுன் சென்ட்டரில் சின்ன ஏரி போன்ற ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றிலும் நிறைய விதவிதமான் உணவுக்கடைகள் இருக்கின்றன. அங்கு தான் மெக்டொனால்ட்ஸ் இருக்கிறது.
ஒரு வழியாக மெக் டொனால்ட்ஸைக் கண்டுபிடித்து பர்கரும் பக்கத்திலிருந்த ஒரு பிட்சா கடையில் இரண்டு பிட்சாக்களும் வாங்கிக்கொண்டேன். கண்டிப்பாக இரவு உணவு வேறு எதுவும் கிடைக்கப்போவது இல்லை எனவே இதையே இரவுக்கும் வைத்துக்கொள்ளத் திட்டம். எதையும் ப்ளான் பண்ணாமப் பண்ணக்கூடாது.
அன்றைய பொழுது இனிதே கழிந்தது; ஹோட்டல் ரூமுக்குள்ளேயே. மறுநாள் நான் அலுவலகம் செல்ல வேண்டும். எனது அலுவலகத்தைத் தேடிக்கண்டுபிடிப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதிகாலை குளிர்; ஊர் பற்றிய பயம்; ஊர் மக்களைப் பற்றிய பயம் போன்ற காரணங்களால் இரண்டு முறை அதே இடத்தைச் சுற்றிவந்தும் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அது எங்களது தலைமை அலுவலகம். எனவே தனி கேம்ப்பஸ் உண்டு. கடைசியில் ஒரு இந்தியர் தமிழர் தான் வழி சொன்னார். அதற்கு முன்னர் ஒரு கருப்பர்,ஒரு வெள்ளையர், ஒரு வெள்ளை லேடி என்று முறையே எல்லோரிடமும் கேட்டுப்பார்த்தேன். அங்கு தான் நிற்கிறேன்; ஆனால் நான் தேடுகிற இடம் அங்கே தான் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.குளிரில் திங்க் ப்ராஸஸ் மிக மெதுவாக நடக்குமாம். நமது அண்டத்தின் கடைசி யுகத்தில்; நட்சத்திரங்கள் எல்லாம் தங்களது எரிபொருட்களை எரித்து முடித்து குறுகி அழிந்து போனப்பின் எங்கும் சூடு இருக்காதாம். குளிர் மட்டும் தான் இருக்கும். கடும் குளிர். நாமெல்லாம் (நம் இனமெல்லாம்) மெஷின்கள் போல ஏதோ ஒரு ஜந்துக்கள் ஆகி இருப்போம்; அப்பொழுது ஒரு யோசனையை யோசிக்க மில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். ரிலேடிவ்லி மில்லியன் ஆண்டுகள்.
கடைசியில் நமது இந்தியரின் துணையுடன் என் அலுவலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அலுவலகம் ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து கிடந்தது. நான் செல்லவேண்டிய இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து சென்றேன். எனக்காக என் கலீக் அங்கு காத்துக்கொண்டிருந்தார்.
மதிய சாப்பாட்டுக்கு டோக்கன் சிஸ்டம் போல ஒரு கார்ட் கொடுத்தனர். நிரந்தரப் பணியாளராக இருப்பதால் நான் அந்தக் கார்டை உபயோகிக்கலாம். கார்டை உபயோகிக்கும் பொழுது உணவுக்கான பணம் மிகவும் குறைவாக இருக்கும். மற்றவர்கள் பத்து யூரோ கொடுக்கும் பொழுது நீங்கள் வெறும் இரண்டு அல்லது மூன்று யூரோ கொடுத்தால் மட்டும் போதும். கிட்டத்தட்ட மெஸ் மாதிரி.
எனக்கு யூரோப்பியர்களிடம் (ப்ரான்ஸ் மக்களிடம்) மிகவும் பிடித்த ஒரு விசயம் அவர்களது உணவுப் பழக்கம். அவ்வளவு அழகாக சுத்தமாக மெதுவாக யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. என் மனைவி அடிக்கடி சொல்லுவாள்: “எங்க சார் சொல்லுவார்; நாம ரெண்டு மணி நேரம் சமைப்போம் அனா ஐந்து நிமிஷத்தில சாப்பிட்டு முடித்துவிடுவோம். ஆனால் மேலை நாட்டுக்காரர்கள் பத்து நிமிஷம் தான் சமைப்பார்கள் ஆனால் ரெண்டு மணி நேரம் சாப்பிடுவார்கள்” என்னவோ Anthony Bourdainக்கே அந்த சார் தான் சமைக்கக் கற்றுக் கொடுத்தது போல சொன்னாலும் அவர்கள் சாப்பிடும் முறை பற்றி அவர் சொன்னது உண்மைதான் என்று நான் அவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிட்ட பொழுது உணர்ந்தேன். ஐந்தடுக்கு உணவுப் பழக்கம் இல்லையென்றாலும் கண்டிப்பாக மூன்றடுக்கு உணவு முறையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். கேக், பை பழங்கள் யோகர்ட் என்று அனைத்தையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத்தான் மதிய உணவை முடிக்கின்றனர்.
ஒரு வாரம் வேலைப் பளுவிலே சென்றது. என் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு மதிய நேரங்களில் அருகில் இருந்த ஷாப்பிங் மால் மற்றும் கேர் ·போரை சுற்றி வந்தார். சில சமயம் சமைத்து சாப்பிட்டோம். குளிர் குளிர் குளிர் தவிர வேறொன்றும் இல்லை. என் வக்கில் அண்ணனின் நண்பர் ஒருவர் அங்கிருக்கிற ஒரு யுனிவெர்சிட்டியில் பிஸிக்ஸில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அவர் அந்த சனிக்கிழமை எங்கள் ஹோட்டலுக்கு வருவதாக ப்ளான்.
அதே வாரத்தில் ஒரு நாள் காலை மூன்று மணி இருக்கும்; என் மனைவி என்னை எழுப்பினார். இங்க வாங்க என்று என்னை அழைத்து ஜன்னல் பக்கம் காட்டினார். பனிப்பொழிவு. யாரோ மேல் மாடியிலிருந்து நுரையில் முட்டை விடுவது போல பனி எங்கிருந்தோ விழுந்து கொண்டிருந்தது. ஆறு கிளைகள் கொண்ட ஒரு ஸ்நோ ப்ளேக்ஸ் உருவானப் பிறகு அது வானத்திலிருந்து பூமியை வந்தடைந்து அதனுடைய உருவத்தை இழக்க எட்டு முதல் பத்து நிமிடங்கள் ஆகுமாம்.
ஸ்னோ நாவலில் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் ஸ்நோ ·ப்ளேக்ஸ் பற்றி அவ்வளவு அழகாக எழுதியிருப்பார். அவர் பார்வையில்:
Everyone has his own snowflake; individual existences might look identical from afar but to understand one’s own eternally mysterious uniqueness, one has only to plot the mysteries of his or her own snowflake
தத்துவம் போதும்; அறிவியல் ரீதியாகவும் Snow flakes ஆச்சரியமான ஒன்று தான்: It has a beautiful six fold symmetry. இந்த அழகு எதனால் என்றால்: ஒரு ஸ்நோ ப்ளேக்ஸை அறுபது டிகிரி திருப்பினால் அதனுடைய வடிவம் மாறாது. அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. வடிவம் அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. அப்படியே இருக்கும். 360டிகிரியில் அறுபது அறுபது டிகிரியாக திருப்பும் பொழுது (மொத்தம் ஆறு முறை) அதன் வடிவம் அதன் ஒரிஜினல் வடிவத்தோடு ஒத்துப்போகும். இது தான் rotational symmetry. எளிதாகப் புரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.
ஸ்ரீநிதி முழித்துவிட்டதால் எங்களால் பனிப்பொழிவை அதற்குமேல் ரசிக்க முடியவில்லை. மறு நாள் காலை வழக்கத்தை விடவும் அதிக நேரம் தூங்கிவிட்டோம். கிட்டத்தட்ட பத்துமணிக்குத் தான் நான் அலுவலகம் சென்றேன். லிப்டை விட்டு கீழிறங்கி ஹோட்டலை விட்டு வெளியேறிய எனக்கு இன்ப அதிர்ச்சி ரோடு முழுதும் பனியோ பனி. ஹய்யோ.
பல போட்டோக்கள் எடுத்தேன். முதன் முறையாக பனியை நேரில் பார்க்கிறேன். சந்தோஷமாக இருந்தது. ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டு படம் எடுத்துக்கொண்டேன்.
அதில் நான் கூப்பிட்ட ஒருத்தர் என் கலீக். அலுவகத்தில் என் பக்கத்து ரூமில் இருப்பவர். எனக்குத் தெரியாது. ஆனால் என்னை அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு பேக்கு சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கிறது என்று வதந்தி அதிவேகமாகப் பரவியிருந்திருக்கிறது. நான் அவரைக் கூப்பிட்டா போட்டோ எடுக்கச்சொல்வேன். அலுவலகத்தில் அன்று மதியமே வந்து எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டார். நமக்குத்தான் பனிப்பொழிவு ஆச்சரியம். ஆனால் அவர்களுக்கு அது சாதாரணம். உன் வாழ்க்கையில் இப்பொழுது தான் முதன் முதலில் பனிப்பொழிவைப் பார்க்கிறாயா என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். Anyway I dont really care.
ன்று மதியம் அனுஷாவையும் பாப்பாவையும் அழைத்து வந்து போட்டோ செஷன் முடித்துக்கொண்டோம். அனுஷாவுக்கு ஏக குஷி. போட்டோவில் பாருங்கள். என் கேப்பை பிடுங்கிக்கொண்டார். இங்கே சிங்கப்பூரில் winter timeஇல் கேப் வாங்கும்பொழுதே உனக்கு இதே போல வாங்கிக்கொள் என்றேன் வேண்டாம் எனக்கு மங்கோலியன் கேப் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டு பாரீஸ் வந்தப்பிறகு அது எனக்குப் பிடிக்கவில்லை உன் கேப் தான் நல்லாயிருக்கு கொடுன்னு பிடுங்கிக்கொண்டார்.
மூன்று பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்து அந்தப்பக்கம் வந்த ஒரு பெண்ணிடம் கேமராவைக் கொடுத்தேன். அவர் போட்டோ எடுத்துவிட்டு நன்றாக வந்திருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்றார். பார்ப்பதற்கு வாங்கினேன். கை நழுவி கீழே விழுந்தது. அவ்வளவு பனி மண்டிக்கிடக்கிறது. ஆனால் என் கேமரா விழுந்த இடத்தில் சரியாக ஒரு கல் இருந்திருக்கிறது. கேமரா உடைந்தது.
இதோ பாரீஸ் ட்ரிப் ஆசை ஆசையாக் வந்த முதல் வாரத்தில் கேமரா உடைந்துவிட்டது. இனி போட்டோ எப்படி எடுப்பது?