Bhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்

போப்பால் பேரழிவைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால் அறிந்ததில்லை. அதைப் பற்றி படித்ததில்லை. படிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை. அது ஏதோ மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றே நினைத்திருந்தேன். ஒரு பேரழிவு எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசிக்கத்தெரியவில்லை. உண்மையில் பேரழிவுகள் உலகம்தோரும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால் பேரழிவுகளுக்குப் பிறகு ஒரு அரசு அந்த அழிவில் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி அந்த அழிவிலிருந்து வெளிக்கொணர்ந்தது என்பது மிக முக்கியம்.

ஸ்வரூப்பா முகர்ஜியின் புத்தகத்தை எதேச்சையாக சிங்கப்பூர் நூலகத்தில் பார்த்து அதை எடுத்து படிக்கும் வரை போப்பால் பேரழிவு என்னுள் பெரிய அதிர்வை உண்டுபண்ணும் என்று நான் நினைக்கவில்லை. அதைத் தமிழில் எழுதவேண்டும் என்கிற எண்ணமும் அதற்குப்பிறகுதான் தோன்றியது. மொழிபெயர்ப்பு எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் போப்பால் பேரழிவைப்பற்றி நானே எழுதும் அளவுக்கு கள ஆய்வு செய்ய எனக்கு நேரம் கிடையாது. அலுவலகம் முடித்து வந்த பிறகு கிடைக்கும் சொற்ப நேரத்தில் எழுதவேண்டும், மேலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை.

சில கதைகளின் கரு மனதில் தோன்றிவிடும். ஆனால் அது வளர்ந்து கதையாக மலர வெகு நாட்களாகும். சில சமயம் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் கதையாக வளர்ந்து விட்ட பின் அது மண்டைக்குள் தங்காது. அது வெளி வந்தே தீரவேண்டும். எனது வடமிழந்த தேர் சிறுகதை இவ்வகையைச் சேர்ந்தது. இந்தக்கதையின் கரு எனக்கு ஆறு வருடங்களுக்கு முன் தெரியும். நான் பாரீசுக்கு அலுவலகப் பணி நிமித்தமாக சென்றிருந்த பொழுது, அலுவலகத்திலிருந்து மாலை கடுங்குளிரில் நடந்து வந்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில் முழுக் கதையாக உருமாறியது. அதற்குப்பின் அதை என்னுள் வைத்திருக்க இயலவில்லை. கடும்பணிச்சுமைக்கு மத்தியிலும் பத்து நாட்கள் நிதமும் இரவு ஒருமணி நேரம் செலவழித்து கதையை எழுதிமுடித்தேன்.

அப்படி ஒரு நிலைக்கு போப்பால் பேரழிவைப் படித்தப் பிறகு நான் தள்ளப்பட்டேன். சரி வேறு வழியில்லை – மொழிபெயர்ப்பே சாலச்சிறந்தது என்கிற முடிவுக்கு வந்தேன். முதல் அத்தியாயம் எழுதியது 2006ல். கடைசி அத்தியாயம் எழுதியது 2009ல். மூன்று வருடங்கள் எழுதியிருக்கிறேன் – 🙂 என்னுடைய மிகச்சிறந்த எழுத்து இல்லை இது. ஆனால் போப்பால் பேரழிவைப்பற்றியும் அதற்குப்பின்னால் இருந்த வெளிநாட்டு கார்ப்பரேட் பண முதலைகளையும் அவர்களுக்கு பாதுகாப்பளித்த உள்ளூர் அரசியல்வாதிகளையும் பற்றிய சிறு தெளிவு இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு உண்டாக்கினால் அது போதும் எனக்கு.

இதன் மின் புத்தகம்:

https://dl.dropboxusercontent.com/u/91280476/Bhopal%20Gas%20Tragedy.pdf

 

முத்து. மே 18 2014.

 

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 9 (முடிந்தது)

3 டிசம்பர் 2005

இந்த தேதி நம்மில், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தவிற வேறு எதையாவது நினைவு படுத்துகிறதா?

ஆனால் மிகவும் முக்கியமான நாள் இது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர் சிறு குழந்தைகள் – சிறுவர்களும் சிறுமிகளும் – மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட ஒரு வாயுவால் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு இந்த சிறுமிகளும் சிறுவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வழந்திருப்பார்கள். பிறக்கப்போகும் இந்த குழந்தைகள் குறைகளோடு பிறப்பார்களா? விஷவாயுவின் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்துகொண்டு பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்குமா? இது வரை மறுக்கப்பட்ட இந்த விசயத்தை புள்ளிவிபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவருமா?

போப்பால் பேரிடர் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதா?மார்ச் 21 2001 அன்று கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அந்தத் தீ அருகில் இருந்த 32 குடிசைகளை சிதைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் மிளகாய் எறிந்து கருகும் வாடையை சுவாசித்ததாகச் சொன்னார்கள். அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எறிந்துகொண்டிருந்த தீ அவர்களை முச்சுத்திணறடித்தது அவர்கள் சுவாசிக்க இயலாமல் தொண்டை அடைக்க டிசம்பர் 3 1984 ஐ நினைவுகூர்ந்தனர். வரலாறு திரும்பியது.

பிப்ரவரி 2001இல் டவ் கெமிக்கல்ஸ் (DOW) என்கிற மிசிக்கனைச் சேர்ந்த நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி உலகின் இரண்டாவது பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக மாறியது. ஆனால் டவ் போப்பாலில் நடந்து முடிந்த துயரச்சம்பவத்துக்கு எந்த அளவிலும் பொறுப்பேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. கொடுக்கப்பட்ட 470 மில்லியன் டாலர் தான் இறுதியான இழப்பீட்டுத் தொகை, UCC அதைக் கொடுத்துவிட்டது எனவே அது சம்பந்தமான எந்த இழப்பீடும் இனி நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டவ்வின் முக்கியமான மேலாளார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் மனித நேயத்துக்காக மட்டுமே சில விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம், இதைக் கொண்டு நாங்கள் இழப்பீடு தருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்”.

ஆனால் இதே நிறுவனம் டெக்ஸாஸில் இருக்கும் UC நிறுவனத்தை வாங்கி ஒருவருடத்துக்குள் அப்பொழுது UCயின் மேல் தொடரப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டமானது. டவ் டெக்ஸாஸில் இருந்த UCஐ வாங்குவதற்கு முன்னர் இந்த வழக்கு சம்பந்தமாக ஏதும் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை அதனால் தான் நாங்கள் வாங்கியவுடன் நடந்துகொண்டிருந்த வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தோம், ஆனால் போப்பாலில் நடந்தது வேறுமாதிரி. அங்கு ஏற்கனவே நாங்கள் வாங்குவதற்கு முன்னரே ஒரு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாயிற்று என்று நிஜத்தை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டது.

அதேசமயத்தில் 23 மே 2002 இல், இந்திய அரசின் சார்பாக, சிபிஐ போப்பாலின் நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தது:வாரன் ஆன்டர்சன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றங்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே அது. பத்துவருட கடுங்காவல் தண்டனைக்கு உரியதான கொலைக்குற்றத்திலிருந்து கீழிறக்கி இரண்டு வருட தண்டனை மட்டுமே கொடுக்கக்கூடிய குற்றங்களை மட்டுமே சுமத்தவேண்டும் என்கிற கோரிக்கை அது.

29 ஆகஸ்ட் 2002 அன்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. ஆன்டர்சனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகிவிட்ட அவர் இதுவரையில் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.எனவே தண்டனையைக் குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை முட்டாள்த்தனமானது என்றது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிதிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட்டது.

இந்தத் துயரசம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆனபொழுது எல்லோருடைய மனநிலையும் கொண்டாட்டத்துக்கு மாறியிருந்தது. மார்ச் 2004 அன்று அமெரிக்க ·பெடரல் கோர்ட் UCCயை பாதிப்படைந்த இடத்தை சர்வதேசத் தரத்தில் சுத்தாமாக்க முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் இந்தமாதிரியான வேலை செய்வதற்கு தங்களிடம் பணமோ தொழில்நுட்பவசதியோ இல்லையென்று சொல்லிவிட்டது. ·பெடர்ல் நீதிமன்றம், ஒரு அந்நிய நாட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறான சுத்தப்படுத்தும் காரியம் செய்வதை இந்தியா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் துயரசம்பவத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்திய அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டது.

இதுவொரு முக்கியமான முடிவு. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு “மூன்றாம் உலகத்தை” சேர்ந்த நாட்டில் தான் செய்து விட்ட தவறுக்கு பரிகாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது இதுவே முதல்முறை. 1989 இல் கொடுத்த இழப்பீட்டுத் தொகைக்குப் பிறகு நடந்துமுடிந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற UCCயின் வாதம் இனி ஒருபோதும் செல்லாது.

19 ஜீலை 2004 அன்று மேலுமொரு வெற்றி கிடைத்தது.இந்திய உச்சநீதி மன்றம் மீதமிருக்கும் இழப்பீட்டுத்தொகையான 1500 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட 5,66,876 மக்களும் பிரித்துக்கொடுக்குமாறு வழியுறுத்தியது. நீதிக்காக இருபது வருடங்கள் காத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று என்பது நம்மில் பலருக்குத் தோன்றலாம், ஆனால் பாதிப்படைந்த மக்களுக்கு இது பல சோதனைகளுக்குப் பிறகு போராடிய அவர்களது மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

Wall Street Journalஇல் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் பல மேலாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்லப்பட்டது. முதன்முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வளர்ந்துவரும் மூன்றாம் உலகத்தில் தான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறது என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அன்று, UCCயின் பங்குகள் இரண்டு டாலர்கள் உயர்ந்தது. நிறுவனத்தின் சொத்து அப்படியே இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சராசரியாக பாதிப்படைந்த ஒரு நபர் வெறும் 500 டாலர்கள் மட்டுமே பெற்றதை நினைத்து அவர்கள் யாரும் வறுத்தப்படவில்லை. இந்த 500 டாலர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச்செலவுக்குக் கூட போதாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

லாப நோக்கோடு அலையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு காலத்தில் உலகையே அடிமையாக்கிவிடும் என்கிற அபாயகரமான உண்மையை நம்மில் பலரும் வசதியாக மறந்துவிடுகிறோம். நிறுவனத்தின் வெற்றிக்கு முன்பு மனிதநேயம் பொருட்டேயல்ல என்கிற படு பயங்கர தத்துவத்தை நாம் தீனி போட்டு வளர்த்துவருகிறோம்.

பூச்சிக்கொள்ளி மருந்துகளால் கேன்சர் வரும். எனவே அவை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சுதந்திரமாக அது விற்கப்படுகிறது. டர்ஸ்பன் (Dursban) என்கிற பூச்சிக்கொள்ளி மருந்து குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்திருந்தும் DOW நிறுவனம் அதை கவலைப்படாமல் சுதந்திரமாக விற்றுவருகிறது. டூபான்ட் (DuPont) நிறுவனம் ஓசோன் படலத்தை சிதைத்து தோல் கேன்சரை உருவாக்கும் chloroflurocorbans என்கிற ரசாயனத்தை உருவாக்கத்தான் செய்கிறது. பாலூட்டும் அன்னை தன் குழந்தைக்கு டையாக்ஸினை அவளறியாமலே புகட்டிக்கொண்டிருக்கிறாள். நம் உடலை நாமே கடுப்படுத்தவியலாத ஒரு புதிய வன்முறையை நாம் உருவாக்கிவிட்டோம்.

“ரசாயன தொழிலில் ஒரு ஹிரோஷிமா” வான போப்பால் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டு ஒரு தன்னார்வ புரட்சி இயக்கமாக வளர்ந்து போராட்ட குணத்தையும் எதிர்ப்பு சக்தியையும் தன்னுள் அடக்கி வருடங்கள் பல கடந்த பின்னும் அந்த இயக்கம் இன்னும் அதே மூர்க்கத்துடன் இயங்கி வருகிறது.

போப்பால் தன் பெண்களை அவர்களது சிறையிலிருந்து மீட்டுக்கொண்டுவர ஒரு காரணியாக இருந்தது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் கூடி போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு அணியை அவர்கள் உலகம் முழுவதிலும் உருவாக்கிவிட்டிருந்தனர். அவர்கள் தங்களது குரல்கள் சத்தமாகவும் சுத்தமாகவும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினர். அதையே செய்தும் காட்டினர்.

சுற்றுப்புற சூழ்நிலைக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படும் Goldman Environment பரிசு, பாதிப்படைந்த மக்களின் நீதிக்கு போராடியதற்காக, ரஷிடா பி (Rashida Bi) மற்றும் சம்பா தேவி சுக்லா(Champa Devi Shukla) ஆகிய இரு பெண்களுக்கும் ஏப்ரல் 2004 இல் கொடுக்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் இந்த இரு பெண்களும் கீழ் வருமாறு பேசினர்:
டவ் நிறுவனம் தான் இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அந்த துயரசம்பவத்துக்கு பொறுபேர்க்க வேண்டும் என்கிற தீர்ப்பு வந்த அந்த நாள் உலகம் முழுவதும் இருக்கும் சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த நாளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனத்தை தயாரிக்கும் எந்த நிறுவனமும் மனிதநேயத்துக்கு முன் லாப நோக்கத்தை முன்வைப்பதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். நாங்கள் அடிபனிந்து போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தின் வாழ்வாதாரத்தையும் உயிரின் ஆதாரத்தையும் அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதன்மூலம் நாங்கள் இருட்டை வென்றிடுவோம்.

குரல்கள்:
போப்பாலில் நடந்த துயரசம்பவத்துக்கு ஈடாக போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை மட்டுமே ஒப்பிடமுடியும். இந்த சம்பவம் நடந்த அன்று போப்பால் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வெளியாகிய 45 டன் MICஇல் போஸ்ஜீன்(phosgene) சிறிதளவு கலந்திருக்கிறது. போஸ்ஜீன் முதலாம் உலகயுத்தத்திலும், இரண்டாம உலக யுத்தத்திலும் மேலும் ஈரான் – ஈராக் யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனத்தின் தன்மையையும் அது கனிசனமான அளவு சுற்றுப்புறத்தில் கலந்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், இதனுடைய விளைவுகள் இன்னும் பல காலத்துக்கு தொடர்ந்துகொண்டிருக்கும். திட்டவட்டமான ஒரு இழப்பின் மதிப்பீட்டுக்கு வர இயலாது என்பது உண்மை.
18 டிசம்பர் 1984 அன்று டெல்லி அறிவியல் கழகம் பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு அறிக்கை.

டிசம்பர் 3

இறந்துவிட்டவர்களை நினைவு கூர்வதோடு மட்டுமில்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நீதிக்காகவும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனுக்காவும் போராட வேண்டும் என்கிற உறுதியை இந்த நாளில் நாம் எடுக்கவேண்டும்.

**
(முடிந்தது)
மூலம்: BHOPAL GAS TRAGEDY- THE WORST INDUSTRIAL DISASTER IN HUMAN HISTORY By SUROOPA MUKHERJEE.