தமிழ்மணம் ஸ்டார் : தமிழ்மணத்துக்கு கொடுத்த CV!

என் நண்பர் ராஜாவிடம் (சாஹ்ரிதயன். spelling தெரியல ராஜா! தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க!) என்னைப்பற்றி எழுதித்தாருங்கள் என்று கேட்ட பொழுது கொஞ்சமும் சிரிக்காமல்; என்னைப்பற்றி எழுதிக்கொடுத்த அந்த உயர்ந்த உள்ளத்துக்கு நன்றிகள் பல!

“தேடுத‌ல் உடைய‌ வ‌ள‌ரும் எழுத்தாள‌ர் முத்து, க‌ணிப்பொறி துறையில் ப‌ணியாற்றிக் கொண்டு ப்ளாக் எழுதுத‌ல், சிறுக‌தை, குறு நாவ‌ல், க‌ட்டுரை என‌ த‌ன‌து த‌ள‌த்தை விரிவாக்கி வ‌ருகிறார். ஆங்கில‌ ம‌ற்றும் த‌மிழ் எழுத‌ல்க‌ளை (இல‌க்கிய‌ம்?!) விரும்பி ஸ்வாசித்து சிங்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். குடும்ப‌ம், ச‌மூக‌ம் என‌வும் அவ‌ரது ப‌ங்க‌ளிப்பு ப‌ர‌வுகிற‌து. ச‌மீப‌த்தில் தந்தையாகிருக்கிறார். ”
– Sahridayan

மேலும் இந்த ரணகளமெல்லாம் எங்கிருந்து ஆரம்பிச்சதுன்னு (History of the incident) பாக்கறதுக்கு இந்த பதிவைப் படிங்க!

Biodata!

பெயர்: முத்து MSV
ஊர்: திருப்பரங்குன்றம், மதுரை
தற்போது வசிப்பது: இது என்ன ஊர்; சிங்கப்பூர்!

படிப்பு: BE, MEPCO (பாஸ்!)
முந்தைய தொழில்: தட்டு பொட்டிதல் (ஹை! கண்டுபிடிங்க பாக்கலாம்!)
சமீபத்திய தொழில்: அதேதாம்ப்பா! கூட அப்பா வேலையும்!

பிடித்தது: வாசிப்பது, தூங்குவது, மேலும் தூங்குவது. மேலும் மேலும் தூங்குவது!
பிடிக்காதது: என் கலீக்ஸ¤ம் படிக்கறாங்க, சொல்ல முடியாது!

நீண்டகால எரிச்சல்: சரியாக ஆபீஸ் டயமுக்கு வருகிறவர்கள்!
சமீபத்திய எரிச்சல்: வீட்ல washing machine வேலை செய்யாதது!

நீண்டகால சாதனை: சிறுகதைகள் எழுதுவது (தூங்கி எழுந்து கண்ட கனவெல்லாம் எழுதறது சிறுகதையாய்யா! கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுய்யா!)
சமீபத்திய சாதனை: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பாராட்டு (இத ஒன்ன சொல்லிடறான்; எங்க போனாலும்!), தமிழ்மணத்தின் அழைப்பு! (இது வேறையா?!)

பிடித்த எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (ஐஸ்டா மச்சான்!)
பிடித்த பதிவர்: சுஜாதா, ஜெயமோகன் (சரிகட்டியாச்சு!)
படித்ததில் மிகவும் பிடித்த பதிவு: நிறைய இருக்கு! Like வெட்டிப்பயலின் மணமகள் கையேடு! ஆனா இப்பவும் நினைச்ச உடனே சிரிக்கக்கூடிய பதிவு! ப்ராகாஷ்-இன் (என் நைனாவும் சாருநிவேதிதாவும்)

நீண்டகால விருப்பம்: காந்தம் கதையை எழுதி முடிப்பது. ஏதேனும் வார புத்தகத்துக்கு தொடராக கொடுப்பது! (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!)
சமீபத்திய விருப்பம்: ஒரு புது கதை எழுதுவது. (ஐயையோ!) அதை publish செய்வது.

சமீபத்திய சர்ப்ரைஸ்: சாலமன் பாப்பையா அவர்களை விமானத்தில் சந்தித்தது! (போட்டோ எல்லாம் எடுக்கலைப்பா!)

நீண்டகால சர்ப்ரைஸ்: தமிழ் பதிவுலக நண்பர்கள்! (எப்படி இவ்ளோ fast-ஆ எல்லா விசயத்தையும் எழுதறாங்க! இன்று தமிழ்நாட்டு பாடப்புத்தகங்கள் வலையேற்றப்பட்டதை நான் அறிந்து கொண்டபொழுது, மா.சிவக்குமார் அவர்களது பதிவில் சர்வேசன் துணையோடு ஒரு ரணகளமே நடந்துவிட்டிருந்தது! Sema fast macchiஸ்!)

என்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்துக்கு நன்றி!

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு:

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,

நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் எனக்கு கிட்டத்தட்ட ஒரு விதமான உந்துசக்தி. எழுதுவதற்கு நீங்கள் எனக்கு குரு. உங்கள் கதாவிலாசத்தை படித்த பிறகே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் நிறைய கதைகளும் அனுபவங்களும் புதைந்து கிடக்கின்றன என்பதையும், அதை மிகச்சரியாக அந்த நினைவுகளை தட்டியெழுப்பி ரசிக்கும் படியாக எழுதலாம் என்பதையும் அறிந்துகொண்டேன். தமிழ் எழுத்துலகையும் தமிழ் வாசகர்களையும் ஒரு படி மேலே எடுத்துச்சென்றவர்களுள் நீங்களும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. உங்களது நெடுங்குருதி எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களுள் ஒன்று. என் நினைவில் மட்டுமல்ல தமிழ் எழுத்துலகில் அந்த நாவலுக்கு என்றென்றும் மிக முக்கியமான ஒரு இடம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர், தாவரங்களின் உரையாடல் என்கிற மிக நுட்பமான ஒரு சிறுகதையை படைத்த ஒரு இலக்கியவாதி, நான் மிகுந்த உயரத்தில் வைத்து மதிக்கும் ஒரு நபர், என் எழுத்துக்களை ரசித்து பாராட்டுவது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மேலும் எழுதவேண்டும் (பிற பதிவர்கள்: இனி ரொம்ப மொக்க போடுவான் போலிருக்கே!) என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. நாங்கள் (பதிவுலக நண்பர்கள்) தினமும் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்தபிறகு, சில வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு, கிடைக்கிற சில மணித்துளிகளில் டீவி பார்த்து, குமுதம் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளையும், தீராநதி போன்ற இலக்கிய பத்திரிக்கைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தினப்பத்திரிக்கைகளையும் பார்த்துவிட்டு, பிற பதிவுகளையும் பார்த்து, சினிமாவும் பார்த்து, மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்கு செல்லவேண்டும் என்பது நினைவில் இருந்தும், இரவு மூன்று மணி வரை கண் முழித்து எழுதும் பதிவுகளை, உங்களைப் போன்றவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்கள் தான், அர்த்தமுள்ளவைகளாக மாற்றுகின்றன. உங்கள் பாராட்டு எனக்கு மனநிறைவை அளிக்கிறது. நான் ரசிக்கும் படியாகத்தான் எழுதுகிறேன் என்பதை எனக்கு சுட்டிக்காட்டியது. நான் எழுதிய பல பதிவுகளை நான் உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு எடுத்து வாசித்து சீர் தூக்கி பார்த்தேன். Its like self-evaluation. Self Analysis. நன்றி. மிக்க நன்றி. மீண்டும் வருக. நிறைகளை மட்டுமில்லாது, குறைகளையும், முடிந்தால் உங்கள் பணிகளுக்கு மத்தியில் நேரம் இருந்தால், சுட்டிக்காட்டுங்கள்.

இப்பொழுது கூட திராநதியில் நீங்கள் எழுதிவரும் “சித்திரங்கள் விசித்திரங்கள்” பகுதியை படித்துக்கொண்டுதான் இருந்தேன். இவ்வாறான விசயங்களை (ஓவியங்களை பற்றி, அயல் சினிமா, துணையெழுத்து, தேசாந்தரி ) எழுதுவதற்கு என்னென்ன படிக்கிறீர்கள்? இவ்வாறான ஒரு எல்லைகள் விரிந்த ஒரு வாசிப்பு எப்படி சாத்தியமாகிறது? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன். தாங்கள் படித்த புத்தகங்களையும், புது விசயங்களையும் (like கற்றதும் பெற்றதும்) தமிழ் வாசகர்களுக்கு உங்களை போன்ற எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறன விசயங்களை நீங்கள் எப்படி தேடிப்பிடித்து படிக்கிறீர்கள் என்பதையும் எங்களுக்கு கற்றுத்தாருங்கள். Teach us how to fish!

நெகிழ்ச்சியுடன்,
MSV Muthu

படித்த முட்டாள்கள்

படித்த முட்டாள்களே, ப்ளீஸ் உங்கள் முட்டாள் தனத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.

True Known என்றொரு முட்டாள், ஏதோ ஒரு தேவையில்லாத விசயத்தை தொகுத்து மீண்டும் மீண்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது IP Addressஐ கண்டுபிடித்து cyber-crimeஇல் புகார் செய்வது அவ்வளவு ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. (புகார் செய்தால் ‘போப்பா போய் பிள்ளைகள படிக்கப்போடு’ என்று சொல்வார்கள் என்பது நிச்சயம்!) அது எனக்கு தேவையில்லாத வேலையும் கூட. அவர் தான் ஏதோ பொழுதுபோகாமல் அனுப்புகிறார் என்றால், அதற்கு பதிலாக ccயில் இருக்கிற எல்லாரும் “remove my mailid” என்று ccயில் இருக்கிற மற்ற எல்லோருக்கும் “reply all” போட்டால் என்ன அர்த்தம்? உங்கள் சம்மதத்தை கேட்டுக்கொண்டா எல்லாரும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் remove my id ன்னு சொன்னா உங்க ஈமெயில் ஐடியை நீக்கி விடவா போகிறார்கள்? Be sensible. ஏன் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் சகட்டுமானிக்கு spam அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்? சுத்த சின்னபிள்ள தனமால்ல இருக்கு. True Known அனுப்பறது ஒரு மெயில், இவிங்க பதிலுக்கு அனுப்புறது நாப்பதிரெண்டு மெயில். கஷ்டம்.

சிரிப்பு போலீஸ்!

எதற்கு இந்த வீண் சண்டை? யார் பெரியவர் யார் சிறியவர்? என்னுடைய மெயில் ஐடி எப்படி ஐயா உங்களுக்கு கிடைத்தது? ஒரு தேவையில்லாத மெயில் சிக்குன மெயில் அடிக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வந்துச்சா? யாருக்கு வேணும் உங்க சண்டை? True Known அப்படீங்கற True Unknown தான் இந்த மெயில அனுபிச்சது. சத்தியமாக எனக்கு அந்த anonymous mail வரும்வரை இதில் குறிப்பிட்டிருந்த எந்த சண்டையும் தெரியாது. வலைப்பூக்களில் நடக்கும் சண்டைகளை நான் கவனிப்பதே கிடையாது. அப்போ எனக்கு இந்த மெயில் அவசியமா? அவ்ளோ பெர்ர்ர்ரிய cc list. இதுல காமெடி என்னன்னா, வந்த மெயிலே spam, அதுக்கு நிறைய பேர் மறுமடியும் எல்லாருக்கும் cc போட்டு ‘remove myid’ன்னு சொன்னது. இது மட்டும் spam இல்லியா? உங்களையெல்லாம் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி தான் இருக்கு.

இப்படி வர்ற மெயிலால என் மெயில் பாக்ஸ் நிறைந்து விடும் என்பதற்காக நான் சொல்லவில்லை. ஒரு தேவையில்லாத செய்தியை ஏன் எல்லாருக்கும் அனுப்புகிறீர்கள்? இதே போல் புத்தாண்டு வாழ்த்து வந்தது சரமாக வந்தது. SPAMஆ இருந்தாலும் இத்தனை பேர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதை பார்க்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்களுக்கு எண்ணிக்கையில்லை. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் தேவையில்லாமல் வீண் பழி சுமத்துவது எதற்கு? ஏன் இந்த கொலைவெறி? ஒற்றுமையாக இருப்போம் தோழர்களே. கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் துவேஷம் வேண்டாமே. ப்ளீஸ்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமானதொரு விவாத கருத்துப் பறிமாற்ற மேடையாக மட்டுமே தமிழ் வலைப்பூவை வைத்திருப்போம்.

***

ஜெயமோகனின் (ஆளாளுக்கு ஜெயமோகனைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பான்னு நீங்க புலம்புறது என் காதுல விழுது!) கடிதத்தை மதி கந்தசாமியின் வலைப்பூவில் பார்த்தேன். ஜெயமோகன் அவரது கோபத்தை (அல்லது over-confidence!) கொக்கரிப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். அவர் வலைப்பக்கமய்யா அது. அவருக்கு என்ன தோணுதோ அத அவர் எழுதுவார். (கூடிய விரைவில் வலைப்பூக்களை கட்டுப்படுத்துவதற்கு கடினமான சட்டதிட்டங்களை கொண்டுவரலாம்.) ஆனா இதுவும் எங்க வலைப்பக்கமுல்ல? நாங்களும் எழுதுவம்ல. எழுதுவம்ல!

நான் மதிக்கு எழுதிய பின்னூட்டத்தின் சாரம் இங்கே::
ஜெயமோகனின் உலகம் தருக்கம் தத்துவம் மற்றும் ஆழமான ?! கேள்விகள் சார்ந்தது என்று அவரே உருவாக்கிக் கொண்டார். தத்துவமும் தர்க்கமும் கொக்கரிப்பில் முடிந்து சக மனிதர்களை மண்ணில் இட்டு மிதிக்கத்தான் செய்யும் என்றால் அந்த தத்துவமும் தர்க்கமும் எதற்கு? தத்துவமும் தர்க்கமும் வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்யவேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டால் “தான்” இருக்காது.

“நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை” என்று அவர் சொல்லியிருப்பது “தான்” என்பதில்லாமல் வேறு எதைக் காட்டுகிறது? அப்ப நீங்க சொல்லும் உங்க தத்துவமும் தர்க்கமும் யாருக்கு? உயிரோடு இருக்கும் பொழுதே தானே தனக்கு சிலை வைத்துக்கொண்டது போலத்தான் இவரது ஸ்டேட்மன்ட்டும் இருக்கிறது.

ஆனால் இதற்காக அவர் புத்தகத்தையெல்லாம் படிக்காமல் நான் இருக்கமாட்டேன். Reading is pleasure.

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பு போலீஸ் மாதிரிதான் இருக்கு” ன்னு சொல்லிட்டு உடு ஜூட்.

***

சுடர் : தனித்தீவு

சுடர் இளவஞ்சிகிட்ட இருந்து ரொம்ப பிரகாசமா என்கிட்ட வந்திருக்கு. அதை அணைச்சுடாம நிர்மல் கிட்ட கொடுத்திடனும்ங்கிறது தான் நேத்திலிருந்து எனக்கு ஒரே சிந்தனை. அதுவும் இளா வேற ஒரு தினுசா கேள்வி கேட்டிருக்கார். அஜீத்துக்கு கதை, ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மட்டுமே மனிதனின் குணாதிசயங்களை கண்டுகொள்ளலாம், அப்புறம் ஆறுதலுக்கு ஒரே ஒரு ஈசியான கேள்வி : நல்ல தமிழில் எழுதாதவர்களைப் (இளாவை ப் போலவாம்! இவர் நல்ல தமிழில் எழுத மாட்டாராம்! ஹம்.. நான் நல்ல தமிழில் எழுதுகிறேனாம். ஐயகோ!) படிக்கும் போது நான் என்ன நினைக்கிறேன் என்று நான்கு கேள்விகள்.

ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள்

கேள்விகளைப் படித்தவுடன் BE ஏழாவது செமஸ்டரில் LIC பரிட்சை question paper ஐ பார்த்து முழித்த முத்து, போல முழித்தேன். நாலு கேள்கிகளில் ஒரே ஒரு கேள்விக்கு தான் திட்டவட்டமாக answer தெரிகிறது. மத்த கேள்விகள் எல்லாம் abstract class போல, என்னவென்று தெரியும், எப்படியென்று தெரியாது! தீவுக்கு போவதா? தனியா ஒரு மாசமா? ஐந்து பொருட்கள் எடுத்துப் போக வேண்டுமா? பதில் தெரியாம சட்டுன்னு கூகிள் கிட்ட கேக்காலாமான்னு கூட யோசிச்சேன். என்ன பண்றது எதுக்கெடுத்தாலும் கூகிள்ட்ட கேட்டு கேட்டே பழக்கமாகிடுச்சு.

என்னுடைய கலீக் ஒருத்தர் சொன்னார் : உனக்கு, ஒரு செல் போன், நிறைய காபி , அப்புறம் லேப்டாப் இருந்தா போதாதா முத்து, ஒரு மாசம் ஓட்டிடுவேயில்ல என்றார். உண்மைதான். ஆனா செல்போனுக்கு பேட்டரி சார்ஜ் போயிடுச்சுன்னா எங்க போய் சார்ஜ் பண்றதாம்? என்னோட லேப்டாப் கூட இரண்டு மணி நேரத்துக்கு மேலே சார்ஜ் தங்காது என்றேன். அப்படீன்னா ஒன்னு செய் முத்து, பேசாம நிறைய பேட்டரி எடுத்துட்டு போயிடு என்றார். இளவஞ்சி ஒத்துக்குவாரான்னு தெரியலயே?

அப்புறம் ஒரு ப்ரண்ட் கிட்ட கேட்டப்போ, அவர் சட்டுன்னு, முத்து ஆர் யூ ஓகே. உடம்புக்கு ஒன்னும் இல்லியேன்னு என்னைய ஒரு விசித்திரமான லுக்விட்டுட்டே கேட்டார். பிறகு நான் நம்ப சுடரைப் பத்தி விளக்கி சொன்னவுடன், சீரியசாக யோசிக்க ஆரம்பித்தார். திடீர்னு, அங்கே சாப்பாடெல்லாம் கிடைக்குமா? என்றார். ம்ம்..நாயர் டீஸ்டால் கூட ஒன்னு இருக்காம்ன்னு சொன்னேன். அப்படியா என்றார் அப்பாவியாய். (அவரிடம் கேள்விகளுக்கு பஞ்சம் இருக்காது. கேள்விமேல கேள்வி கேட்டுகிட்டேயிருப்பார்.அதனாலேயே அவருக்கு கேள்வியின் நாயகன் என்றொரு பெயர் உண்டு) யோவ் உன்னைய தனியா தான இருக்க சொல்லியிருக்காய்ங்க இதுல சாப்பாடு கிடைக்குமா மசாலா டீ கிடைக்குமான்னு என்யா டுபாகூர் மாதிரி கேக்குறன்ன, பிறகு அமைதியாய் ரொம்ப நேரம் யோசிச்ச அவர், திடீர்னு :

கண்டிப்பா தீக்குச்சி எடுத்திட்டு போக மாட்டேன்னார். ஆதி காலம் மாதிரி அவரே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுப்பாராம். அப்புறம், கண்டிப்பா கம்பளி எடுத்துட்டு போவேன், எனக்கு குளிர் தாங்காது என்றார். நான் தண்ணி வேணாமான்னு கேட்டேன். தீவுல கடல் இருக்குமான்னு கேட்டார். (அடப்பாவி!) நான் சிரிக்காம கண்டிப்பா இருக்கும்னு சொன்னேன். அப்படீன்னா கடல் தண்ணிய குடிச்சுக்கவேண்டிது தானே என்றார்.நான் ஒன்னும் சொல்லல. பிறகு கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு : முக்கியமா கொசு வத்தி சுருள் எடுத்திட்டு போவேன்னார். என்னது கொசு வத்தி சுருளா? செம்பு ரொம்ப (சிக்கன்குனியாவால) அடிவாங்கியிருக்கும் போல! அவருக்கு நாலு பொருள் தான் தெரிஞ்சது. அஞ்சாவது? பராவாயில்ல நான் எடுத்துட்டு போகல்லன்னார்! எவ்ளோ சிக்கனம்!

அவர் சொன்ன இன்னொரு பொருள்: அந்த தீவில இருக்குற மரங்கள்ல இருக்கிற பழங்களைப் பறிச்சு சாப்பிடறதுக்கு ஒரு நீண்ட குச்சி (முனையில கொக்கியோடு!) எடுத்திட்டுப் போவாராம். நீங்களே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுக்கிறீங்களே, மரத்த உடச்சு நீங்களே கொக்கியும் செஞ்சுக்க வேண்டியது தானேன்னு சொன்னேன், அடஆமால்ல, அதானே! என்றார்.

என்னோட ப்ரண்ட் ஒருத்தி, நடு ராத்திரியில எழுப்பி, முத்து, நீ உன்னோட சோடபுட்டிய மறந்திடாம எடுத்திட்டு போயிடு, என்னா உனக்கு கண்ணு தெரியாதில்லன்னு சொன்னா. நான் தான் லென்ஸ் போட்டுக்குவேனே அப்படீன்னு சிரிச்சேன். அதுக்கு அவ, லென்ஸ்ன்னா, லென்ஸ் வெக்கிற கேஸ், கிளீனிங் liquid எடுத்திட்டு போகணும், அதுவே ரெண்டு பொருள் count ஆகிடுச்சு, சோடாபுட்டின்னா கணக்கில வராது, நீ பாட்டுக்கு போட்டுட்டு ஜாலியா போயிடலாம். அதுக்கப்புறமும், தீவில போய் நீ தனியாதான் இருக்கபோற, அங்க girls யாரும் இருக்கப்போறதில்ல, அதனால லென்ஸ் போட்டுட்டு நீ ஒன்னும் சீன் போட தேவையில்லன்னா. கரெக்ட் தான்!

cast away ன்னு ஒரு படம் பார்த்திருப்பீங்க, இளவஞ்சியோட கேள்வியப் படிச்சதும் எனக்கு அந்தப் படம் தான் ஞாபகம் வந்தது. அதிலும் Tom Hanks நீண்ட நாள் கடின முயற்சிக்குப் பிறகு தீ பற்றவைத்து விட்டு, கத்தி கூப்பாடு போட்டு டான்ஸ் ஆடுவது. ரொம்ப அழகாக செய்திருப்பார் அவர்.

நானே முயற்சி செஞ்சு தீ பற்றவைப்பதுக்குள் இளா வந்து, முத்து ஒரு மாசம் முடிஞ்சிடுச்சு, வாங்க போகலாம்ன்னு சொல்லிடுவார். அதனால நான் அவ்வளவெல்லாம் கஷ்டப்படப்போவதில்லை. ஒரு லைட்டர் : தேடிக்கண்டுபிடித்து இருக்கறதிலியே பெரிய லைட்டர் ஒன்னு கண்டிப்பாக எடுத்துப்பேன். அது வொர்க் ஆகலைன்னா? இல்ல, மழையில நனைஞ்சு struk ஆகிடுச்சுன்னா? அடபோங்கப்பா, நான் தீ கண்டுபிடிச்சுக்கறேன்.

முனையில் வளைந்த கூர்மையான ஒரு ஆயுதம். கண்டிப்பாக தேவைன்னு நினைக்கிறேன். ஏதாவது திறக்கனும்னா? (suppose இளநிர். நினைப்பு தான்டா உனக்கு. விட்டா, இளனிக்கு straw கேப்பபோல. இளா, தென்னை மரமெல்லாம் இருக்கா அங்க?) மேலும் தற்காப்புக்கு கூட பயன் படுத்திக்கலாம் இல்லியா? ஒரு சிங்கம் (தீவில ஏதுடா சிங்கம்? அதுவும், ஒரு உரையில ஒரு கத்தி தான் இருக்கும்கிறமாதிரி, ஒரு தீவில ஒரு சிங்கம் தான் இருக்கும்னு விஜய.டி.ஆர் கூட சொல்லியிருக்கார். அதனால நீ இருக்கறதால, இன்னொரு சிங்கம் அங்க இருக்க சான்ஸே இல்லடா முத்து! 🙂 ) கிங்கம் வந்தா அது கூட சண்டை போடுறதுக்கு உதவியா இருக்கும்ல. அப்புறம் சுராமீன் (!?) ஏதும் கரை ஒதுங்கிச்சுன்னா அதை கிழிக்கறதுக்கு உதவியா இருக்கும். சுராமீன் ஒதுங்கிச்சுன்னா ஒரு மாசதுக்கு கவலையே இல்ல. இளா அஞ்சு பொருள் restriction கொடுக்கலைன்னா, ஆச்சி மசாலாதூள் பாக்கெட் கூட எடுத்திட்டு போகலாம். 🙂

கவட்டை போன்ற ஒன்று. துப்பாக்கி வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா very simple, எனக்கு சுடத்தெரியாது. மேலும் துப்பாக்கியால் சுட்டு, கடல்ல கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருக்கும், Pirates (of the caribean) இன் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. வேலியில போற ஓணான எட்த்து வேட்டியில விட்டுக்கினு, அப்பால, வானா வானான்னா விட்டுடுமா? துப்பாக்கியைப் பயன் படுத்தினால் அங்கே இருக்கிற உயிரினங்கள் (wild) உசாராவதுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் கவட்டைய பயன் படுத்தி சில பறவைகளை – காட கவுதாரி கொக்கு -(கொஞ்சம் கஷ்டப்பட்டு தான்! சின்ன வயதில் பயன்படுத்தியிருக்கிறேன்) வீழ்த்தலாம். அப்புறம் சுட்டு சாப்பிடலாம். வாவ். intersting இல்ல? (interetinga? அங்க போனப்புறம் தெரியும்டி!)

நீண்ட ஸ்ட்ராங்கான கயிறு. சுனாமியோ, இல்ல global warming (இதுக்கு தான் ஓவரா இங்கிலீஸ் படம் பாக்காதன்னு சொல்றது!) ன்னாலயோ கடல் தண்ணீர் தீவுக்குள்ள வந்திடுச்சுன்னு வெச்சுக்குங்க ஒரு பெரிய மரத்தைப் பார்த்து அதுல கயிறு போட்டு ஏறி உச்சியில் உக்காந்துகிடலாம்ல. மேலும், இளா இந்த பதிவை படிச்சுட்டு, அடப் பாவி, இவ்ளோ மொக்க போடுற, உன்னல்லாம் அந்த தீவிலயே விட்டுட்டு வந்திடனும்டான்னு, அங்கேயே விட்டுட்டாருன்னு வெச்சுக்கோங்க, நான் மரம் வெட்டி (தற்செயலாக வந்த வார்த்தைதான்!) இந்த கயிற use பண்ணி படகு போல ஏதோ செஞ்சு தப்பிசுடலாம் பாருங்க. cast away ல Tom Hanks இப்படி தப்பிக்கிற போது அவர் மறுபடி மறுபடி அலைகளால் கரைக்கே இழுத்து வரப்படுகிற காட்சி மனதில் தோன்றி சற்று கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. இளா, ஒரு மாசம் கழிச்சு வந்து என்ன கூப்பிட்டுப்பீங்கள்ல?

என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்: நான் ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டு போயிடுவேன். சாம்பார் ரசம் (ரொம்ப முக்கியம்!) எல்லாம் சேர்த்து ஒரே பாக்கெட்டா எடுத்துப்பாராம். ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டுப் போனா அது கெட்டுப் போயிடாதா? புளிச்சாதம் கூட ஐந்து நாட்களுக்கு தான் வரும். (நாங்க கோவிலுக்கு போகும் போது எடுத்துட்டு போவோம். மூனாவது நாளே சாப்பிட முடியாது. அந்த smell வந்தாலே வயித்த புரட்டிட்டு வரும்) மேலும் தீவில் அதிகம் வேலை இருக்காது so hopefully அதிகம் பசி இருக்காது. பழங்கள் if lucky ஏதோ மீன், பறவை கிடைத்தால் போதும். சமாளிச்சுகிடலாம்.

என்னுடைய இன்னொரு நண்பரிடம் கேட்டதற்கு அவர் உடனே லேப்டாப் எடுத்துட்டு போவேன்னார். லேப்டாப் வெச்சு என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, ம்..ம்..பாட்டு கேப்பேன், படம் பாப்பேன் என்னமோ செய்வேன்னார். சார்ஜ் போயிடுச்சுன்னா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்ப, ஓ அப்படி ஒரு விசயம் இருக்கான்னு முழிச்சார். ஒன்று மட்டும் தெரிகிறது. நமது வாழ்க்கையில் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன.

அப்புறம் அவர் நிதானமாக யோசித்து சொன்ன ஐந்து பொருட்கள்: ஒரு பெரிய சாக்லேட் பாக்கெட் (எனர்ஜிக்கு), சீட்டு கட்டு (solitaire விளையாட. பொழுது போய்விடும்), கூர்மையான ஒரு ஆயுதம், கம்பளி (குளிருக்கு. மழை பெய்தா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, அட போடாங்கற மாதிரி பார்த்தார்!) , பேப்பர் பேனா (எழுதுவதற்கு. இப்பொழுது அவர் ஆங்கிலத்தில் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார். கேட்டு வாங்கி publish செய்கிறேன்!)

ஓகே சாய்ஸ் தான், இல்லயா?

தண்ணீருக்கு என்ன பண்ணுவது என்ற சீரியசான யோசனை எனக்கு வந்தது. கடல் தண்ணீரை குடிக்க முடியாதே. கேள்வியின் நாயகன் கடல் தண்ணீரை குடித்து சமாளித்து விடுவேன் என்றார். (அவர் wife கிட்ட சொல்லி சாப்பாட்ல உப்பு கம்மியா போடச் சொல்லனும். மனுசன் ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கிறேன்.) என்னால முடியாது. ரொம்ப உப்பா இருக்கும், அவர் தெரியாம சொல்லுறார். ஆனா எனக்கிருக்கிற ஒரே நம்பிக்கை, தீவில் கண்டிப்பாக back waters இருக்கும். அல்லது fresh water சுணை கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் இருக்கும். (Idea: Life Of Pie) எனவே அதை குடித்து சமாளித்துக்கொள்ளலாம். மேலும் மழை வந்தால் பிடித்து வைத்துக்கொள்ளலாம். ஆமாம், பிடித்து வைக்கப் பாத்திரம்? இதுக்கு தான் கேள்வியின் நாயகன் கொள்றதுக்கு பாத்திரம் எடுத்துப்போவேன் என்றார். (முதலில் “ல்” பிரச்சனையால், பாத்திரத்த வெச்சு கொல்லுவாரா? தலையில கவுத்திவிட்டு மூச்சு திணற வெச்சு கொல்லுவாரோ? புதுமையான டெக்னிக்கா இருக்கேன்னு நான் சீரியசா யோசிச்சேன்) ஆனால் பாத்திரம் எடுத்துப்போகும் அளவுக்கு இளா வாய்ப்பளிக்கவில்லை. ரொம்ப stingy அவர்.

so தண்ணீர் பிரச்சனை solved. டென்ட் அடிக்கும் அளவுக்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் ஷீட். அதை (மழை மற்றும் கடுமையான வெயிலில்) டென்ட்டாகவும் use பண்ணலாம், குளிருக்கு போர்வையாகவும் பயன்படுத்திக்கலாம்.

கவட்டைக்கு பதில் நான் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டு, சாக்லேட் பாக்கெட் அல்லது சீட்டு கட்டு எடுத்துட்டு போகலாம்.

ஆனால் நான் கண்டிப்பாக ஒரு மாதம் தனிமையில் – அதுவும் செல் போன் இல்லாம – இருக்க வாய்ப்பே இல்லை. கண்டிப்பா லூசாயிடுவேன். (இப்ப மட்டும் எப்படியிருக்கியாம்? ன்னு நீங்க கேக்குறது என் காதுல விழல!)

அஜீத்துக்கு கதை

இது ரொம்ப கஷ்டமான வேலை. எனக்கு மேஜிக் தெரியாது. என்ன முழிக்கிறீங்க? கதைதான எழுதச் சொன்னோம், இவன் என்ன மேஜிக் கீஜிக்குன்னு பீலா விடறான்னு பாக்குறீங்க தான?. அஜீத் படத்தில் (அல்லது சமீபத்திய தமிழ் ஹீரோக்கள் படங்களில் ) கதை என்பது பறம்பொருள் போல. இருக்கும் ஆனால் இருக்காது. தேடுங்க தேடுங்க தேடிட்டேயிருங்க.

ஆனாலும் நான் நம்ப “தலை”க்கு ஒரு கதை யோசிச்சு வெச்சிருக்கேன். அதுல அவர் மட்டும் தான் நடிக்க(?!) முடியும். வேற யாரும் பக்கத்துல கூட வரமுடியாது. அவருக்கே அவருக்கான கதை இது. புது இயக்குனர்களை – கதாசிரியர்களை- அவரைப் போல ஆதரிப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

படம் ஆரம்பிக்கிறது. ஒரு கழுதை சாந்தமாக நிற்கிறது. காமிரா top angle ல இருக்கு. காமிரா அப்படியே மெதுவா கீழே இறங்கி வருகிறது, அப்போது தான் தெரிகிறது அது உண்மையிலே கழுதை இல்லை, கழுதை வேசத்தில் இருக்கும் அஜித். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. திடீரென்று வெளிச்சம் அவர் மீது விழுகிறது. கேமிரா பல ஆங்கிளில் சுழல்கிறது. ரீரெக்கார்டிங் காதைப் பிளக்கிறது. (நான், உஷாராக கொண்டுபோயிருந்த பஞ்சை காதில் வைத்துக்கொண்டேன். ஐ, நான் தான் ஆழ்வார் பாத்திருக்கேனே!) கேமிரா focus-outoffocus ஆகிக் கொண்டேயிருக்கிறது. (நான் ஏற்கனவே சோடாபுட்டி, எனக்கு தலை சுற்றவே நான் பயத்தில் கண்களை கையைவைத்து இறுக்கமாக மூடிக்கொண்டேன்.) சட்டுன்னு அஜித் கண்களை திறக்கிறார். வித்தியாசாகரிடம் சொல்லி இந்த பிரேமில் matrix revolutions music க்கையும் கழுதை கத்தும் சத்தத்தையும் mix செஞ்சுறலாம். செமத்தியான introduction.

அஜித் அப்படியே slow motion இல் நடந்து வந்து கட்டிலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தனை உதைத்தே கொல்கிறார். நடு நடுவே கழுதை கத்திக்கொள்கிறது.

அடுத்த பிரேம். ஹீரோயின் introduction. அவர் IIM இல் படித்தவர். அஜித் தங்கியிருக்கும் flat க்கு பக்கத்தில் குடிவருகிறார். வந்த அன்றே பக்கத்து flatல் (அஜித் தங்கியிருக்கும் flat) கழுதை குதிரை கனைப்பது போன்ற சத்தம் கேட்டு மிரண்டு போகிறார். மறுநாள் அஜித்தைப் பார்க்கிறார். இவர் தான் இப்படி mimicry செய்தார் என்று யூகித்தவுடன் (atleast நான் ஒரு காரணமாவது சொல்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்) அவருக்கு உடனே காதல் வந்து விடுகிறது. உடனே டூயட். யாரும் எடுத்திறாத அன்டார்டிக்கா பனிசருக்குகளில் அஜித் மற்றும் IIM ஹீரோயின் கழுதைகளுடன் நடனமாடுகின்றனர். அவ்வளவு பனியிலும் நமது ஹீரோ full suit இல் இருக்க, ஹீரோயினும் அவர் LKG யில் போட்ட frock மட்டுமே கொடுக்கப்படும்.

அடுத்த பிரேம். அஜித் ஒட்டகத்தைப் போன்று வேடம் போட்டிருக்கிறார். இந்த முறை ஒரு புதுமையான டெக்னிக்கை கையாள்கிறார். ஒட்டகம், கட்டிலில் விட்டத்தைப் பார்த்து படுத்துக்கொண்டிருப்பவனின் முகத்துக்கு அருகே சென்று வாயைத் திறந்து மூச்சு விடுகிறது. அவன் அங்கேயே பரலோகம் செல்கிறான். மறுபடியும் தீம் மியூசிக் + கழுதை கத்தும் சத்தம்.

அடுத்த பிரேம். ஹீரோயின் அஜித் எங்கே வேலை செய்கிறார் என்று கண்டுபிடிக்க follow செய்கிறார். அவர் zoo வில் கிளீன் செய்யும் வேலை செய்வது தெரிகிறது. அவர் வேலை செய்யும் நேரம் போக ஒரு காலியான கூண்டிலேயே உட்கார்ந்திருப்பது தெரிகிறது. கூண்டுக்கு வெளியே. The Donkey – 1999-2007 என்று போட்டிருக்கிறது.

ஹீரோயின் அஜித்திடம் காதலைச் சொல்லுகிறார். அஜித் முதலில் பிகு பண்ணாலும் டூயட் மட்டும் பாடிக்கொண்டிருக்கிறார். பிறகு ஒரு நாள் ஹீரோயின் அஜீத்திடம் கழுதை போல கத்திக் காண்பிக்கச்சொல்ல அஜித் டென்சனாகிறார். உனக்கு தெர்யுமா. நான் தனியாளில்ல. நான் பேஸ்மாட்டேன். கத்துவேன். என்று காச்மூச்சென்று கத்துகிறார். பிறகு flashback சொல்கிறார். ஹீரோயின் (ரசிகர்களும்) நான் கேக்கவேயில்லையேன்னு சொல்றத அவர் கண்டுக்கல.

அஜித் zooவில் வேலை பார்க்கிறார். அங்கே சிறுத்தை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் இருக்கின்றன. அஜித்துக்கு கிளீன் செய்யும் வேலை. அந்த zoo வில் ஒரு கழுதை இருக்கிறது. அதுவும் பார்வைக்கு வைக்கப்பட்டது தான். வேலையெல்லாம் முடித்து விட்டு அஜித் அங்கு தான் வந்து உட்கார்ந்து கொள்வார். (கழுதை ஒன்றும் செய்யாது அது பாட்டுக்கு இருக்கும். மேலும் கழுதையை யாரும் பார்க்கவரமாட்டார்கள் -visitors- நன்றாக தூங்கலாம் என்பது எண்ணம்) கழுதை ஏதோ தன் மீதான பாசம் என்று நினைத்துக்கொள்கிறது. ஒரு நாள், கழுதை அஜீத்திடம் ஏன் என்னை உனக்கு பிடிக்கிறது என்று கேட்கிறது. அஜித் மற்றொரு flashback சொல்ல ஆரம்பிக்கிறார். கழுதை நான் கேட்கல கேட்கலன்னு கத்திக்கொண்டே கூண்டுக்குள்ளே அழுது புலம்புவதை அஜீத் கவனிக்கவில்லை.

அஜித்தின் அப்பா அந்த கிராமத்தில் துணி துவைத்துக் கொடுப்பவர். அவருக்கு ஒரு கழுதை இருக்கிறது. ஒரு நாள் கழுதைக்கு உடம்பு சரியில்லாமல் போக அஜித் மூட்டையைத் தூக்கிகொண்டு செல்கிறார். அப்போது தான் அவருக்கு கழுதைகளின் வலி புரிகிறது. கண்களில் நீர் வழிந்தோடுகிறது. கழுதைகளின் நலனுக்காக போராடுவேன் என்று அழுக்கு துணிகளின் முன்னால் சபதம் எடுத்துக்கொள்கிறார். க.மு.க என்று ஒரு கட்சியும் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். கமுக என்வென்று தெரியாத மக்களுக்கு : கழுதைகள் முன்னேற்றக் கழகம்.

கழுதை மொக்க தாங்க மாட்டாமல் அழுகிறது. அஜீத் எப்பவும் போல தன்னுடைய flashback கேட்டு அழுகிறது என்று நினைத்துக் கொள்கிறார்.

கழுதைக்கு கடுமையான நோயினால் பாதிக்கப்படுகிறது. டாக்டர்கள் கழுதை அதிர்ச்சியான ஜீரனிக்க முடியாத செய்தியைக் கேட்டதால் (should be ajith’s flashback) இப்படி ஆகிவிட்டதென்று சொல்கிறார்கள். மாட்டு டாக்டர் -அப்பரண்டீஸ்- ஒருவர் தவறான மருந்து கொடுத்துவிடுகிறார். கழுதை செத்துவிடுகிறது. ஆனாலும் அஜித்திடமிருந்து தப்பித்துவிட்ட சந்தோசம் அதில் கண்ணில் தெரிகிறது.

அஜித் கோபமாகிறார். கொந்தளிக்கிறார். (ஏன்னா, கழுதை செத்தபிறகு அந்த zoo வேற கழுதை வாங்கல, அந்த கூண்டுக்கு ஒரு காண்டாமிருகத்த கொண்டுவந்திடுச்சு. மக்கள் நிறைய பேரு வாரதால அஜித்தால நிம்மதியா தூங்கமுடியல)
கழுதையின் சாவுக்கு காரணமாயிருந்த அந்த அப்பரண்டீஸ் டாக்டர், அவரோட வந்த கம்பவுண்டர்ஸ் அப்படீன்னு எல்லாத்தையும் கழுதை family (கழுதை, குதிரை. ஒட்டகம், வரிக்குதிரை, ஒட்டசிவிங்கி. இதில் ஒட்டகசிவிங்கி மேக்கப் போடுவதற்கு அமேசான் காடுகளிலிருந்து ஆதி வாசிகளை கூப்பிட்டு வரலாம் என்ற யோசனை இருக்கிறது!) வேசம் போட்டு பழிவாங்குகிறார்.

பிறகு கமுக கட்சி ஆரம்பிக்கிறார். தேர்தலில் நின்று வெற்றியும் பெறுகிறார்.

(இவை அனைத்தும் ஒரே தீம் சாங்.

வெற்றிக் கொடி கட்டு
கழுத முதுகில துணி கட்டு” ன்னு ஏதாவது தத்து-பித்துன்னு வைரமுத்துவிடம் கேட்டு வாங்கிவிடலாம்.)

ஹீரோயின் என்ன ஆனார்? மூனு பாட்டுக்கு ஆடினாங்கல்ல அது போதும். ஒரு பாட்டுக்கு யாராவது லத்தீன பாடகரைக் கூப்பிட்டு “கழா கழா கழா நீ தானே கோவேரி கழா” ன்னு பாடச்சொல்லலாம்.
அகராதி: கழா – கழுதை செல்ல பெயர்.

யாராவது கால்ஷீட் வாங்கிக்கொடுங்கப்பா!

மனிதர்களின் உண்மையான குணாதிசயங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தான் உணர்ந்து கொள்ள முடியும்

உண்மை. முற்றிலும் உண்மை. என்னுடைய physics வாத்தியார் சொல்லுவார் : ஒரு மாணவனின் உண்மையான குணங்களை அறிய வேண்டுமென்றால் அவனை அவனது நெருங்கிய தோழர் வட்டாரத்தில் விட்டுப்பார்க்கவேண்டும் என்பார். மிகவும் அமைதியான மாணவன் கூட சந்தர்ப்பம் கிடைக்கும் போது குணங்களை மாற்றிக்கொள்கிறான். liberalize ஆகிறான். liberation : break all rules.

நான் பெரும்பாலும் நெகடிவ் சமாச்சாரங்களை மனதிலே வைத்து, அந்த நெருப்புக்கு நெய் ஊற்றுபவன் அல்ல (போதும்டா உன் புகழபுராணம்!) ஆனால் இளாவின் இந்த கேள்வி எனது மனதின் ஆழத்தில் புதைந்திருந்த ஒரு சம்பவத்தை மேலெழுப்பி விட்டது. நண்பர்களின் உண்மை குணங்களை நான் அறிந்து கொண்டது அப்போதுதான். உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை என்ற வரியை ஞாபகப்படுத்துவது. நாம் அனைவரும் தனித்தனியே தான். யாரும் யாரையும் சார்ந்தவர்கள் அல்ல. சந்தர்ப்பம் கிடைத்தால் உறவுகளை (நட்பையும்) முறித்துக்கொள்ள சிறிதும் சஞ்சலப்படாதவர்கள். எனினும் நான் அந்த சம்பவத்தை சொல்ல விரும்பவில்லை.

இன்னொரு சம்பவத்தை சொல்கிறேன். நான் கல்லூரி படிக்கும் போது எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சொல்லப்போனால் அவன் தான் கல்லூரியில் எனக்கு முதல் நண்பன். கல்லூரியை விட்டு வரும் வரையில் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள். முந்தாநாள் அவனது பிறந்த நாள். நான் வாழ்த்து கூட சொல்லவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை.

கல்லூரி காலங்களில் paper presentation என்றொரு நிகழ்வு பல வெளி கல்லூரிகளில் நடக்கும். அந்த விழாவிற்கு நாங்கள் apply பண்ணுவோம். எங்களிடம் virtual reality and education என்றொரு அருமையான article இருந்தது. எந்த கல்லூரி paper presentation க்கு அனுப்பினாலும் கண்டிப்பாக தேர்வாகிவிடும். அப்படியிருக்க, என்னுடைய நண்பன் (ராஜன்: பெயரை மாற்றியிருக்கிறேன்) திருச்சிக்கே அனுப்புமாறு சொல்லிக்கொண்டேயிருப்பான். இரு முறை நாங்கள் presentation க்கு திருச்சி சென்று வந்தோம். இதைப் பற்றி வேறு எண்ணங்கள் எனக்கு இருந்ததில்லை. நான் யோசிக்கவும் இல்லை.

அப்புறம் தான் தெரிந்தது அவனுக்கு திருச்சியில் ஒரு காதலி இருந்தாள். அவள் அவனுக்கு அத்தை பெண் தான். நம்மூரில் தான் யாருடனும் அனுசரித்துப் போவோம், இரத்த பந்தகள் சொந்தகளுடன் கண்டிப்பாக அனுசரித்துப் போக மாட்டோமே, வழக்கம் போல அவனுடைய வீட்டுக்கும் அவளுடைய வீட்டுக்கும் சண்டை. ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் கடல் போல கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. நான் அவளுக்கு அண்ணனானேன்.

இருவரும் திருச்சியில் எல்லா இடமும் சுற்றியிருக்கிறார்கள். முக்கியமாக they loved each other and infact he knows about his mother. அவனுடைய அம்மா அவனது காதலுக்கு கண்டிப்பாக ஓகே சொல்ல போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இவன் காலேஜ் முடித்தான். அவளும் காலேஜ் முடித்தாள். அவள் வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். அவள் இவனை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினாள். இவன் அவளை பொறுத்திருக்குமாறு கூறினான். அவள் எவ்வளவு காலம் பொறுத்திருப்பாள்? நம் நாட்டில் பெண்ணிற்கு என்ன உரிமை -பல சமயங்களில் ஆணுக்கே இருப்பதில்லை என்பது வேறு விசயம்- இருக்கிறது? அவள் இவனை வற்புறுத்த வற்புறுத்த இவன் மறுக்க ஆரம்பித்தான். அவள் போன் கால்களை அட்டென்ட் செய்யாமல் அவளை மனதளவில் சாகடித்தான். அவள் என்னைத் தொடர்பு கொண்டாள். அண்ணா, அவனிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றாள். நான் அவனிடம் கேட்டதற்கு அவன் சொன்ன பதில்: வீட்ல ஒத்துக்க மாட்டாங்கடா.

புல்ஷிட். வீட்ல ஒத்துக்காதது முன்னமே தெரியாதா? அவளோடு கை கோர்த்து நகர் வலம் வரும்போது இது தெரியாதா? காதலித்தாயா இல்லையா? காதலிக்கும் வரை காதலித்து விட்டு கடைசியில் நெருக்கடி வரும் போது, இனி வேறு வழியில்லை என்று வரும் போது, வீட்ல ஒத்துக்கமாட்டாங்கன்னு காரணம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

பெற்றோருக்காக தூக்கியெறியப்பட்ட காதல்கள் கணக்கிலடங்காமல் காற்றில் சுற்றித் திரிகின்றன. பெற்றோர் தூக்கியெறிந்த காதல்களும் அந்தரத்தில் மோட்சமற்று பிசாசாய் திரிகின்றன. பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட பெற்றோர்களின் மீதான காதல்களும் போவதற்கு வழி தெரியாமல் ஒரு செக்கு மாட்டைப் போல பிள்ளைகளையே சுற்றி சுற்றி வருகின்றன. ஏன் இத்தனை கஷ்டங்கள்? நமக்கு நாமே பூட்டிக்கொண்ட அர்த்தமற்ற தேவையில்லாத விலங்குகளை என்று அவிழ்த்தெரியப் போகிறோம்? எப்போது நமக்கு விடுதலை?

பெற்றோரின் மீது நாம் வைத்திருக்கும் பாசமும் மரியாதையையும் போன்று, நம்மிடம் பெற்றோருக்கு பாசமும் அன்பும் இருக்கிறதா இல்லையா? நாம் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் போது, அவர்கள் நமது உணர்வுகளை மதிக்கமாட்டார்களா என்ன? மதிக்கவில்லை என்றால் பிறகு அன்பென்ன பாசமென்ன? வரட்டு பிடிவாதம் தானே இருக்கிறது.

இதை தவறு என்றும் சரி என்றும் நான் சொல்லவில்லை. சொல்வதற்கு நான் யார்? ஆனால் மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி என்பது மட்டும் உண்மை.

பேச்சுத்தமிழில் எழுதும் பதிவர்களைப் பற்றி:

பொறாமை. பேச்சுதமிழில் எழுதுவது என்பது மிகவும் கஷ்டம். அனால் successfull ஆக எழுதினால் எளிதாக ரீச் ஆகும். முக்கியமாக நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும். ஆனால் நான் அருமையான தமிழில் பதிவிடுகிறேன் என்பது, வேறொன்றுமில்லை, கண்டிப்பாக உள்குத்து தான். எனக்கு சில சமயங்களில் பேச்சுத்தமிழில் எழுதியதைப் படிப்பது எரிச்சலாக இருக்கும். குறிப்பாக ஜெயமோகனின் காடு நாவல் மற்றும் அவரது சில சிறுகதைகள். நெல்லை தமிழில் கேரள வாடை அடித்து மம்முட்டி படம் பார்த்த அனுபவமே மேலிடுகிறது.

ஜெகத் எழுதிய நடை பற்றிய பதிவு நான் சமீபத்தில் ரசித்துப் படித்தேன். நன்றாக சிரித்தேன். கோணங்கி பற்றிய இதே போன்றதொரு விமர்சனத்தை சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்களிலும் படிக்க நேர்ந்தது. மேலும் பயங்கர ஹிட் ஆன வீராசாமி பற்றிய விமர்சனமும் வயிறு வலிக்க வைத்தது.

இனி நிர்மலுக்கான கேள்விகள்:

1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை?

2. புரியவே புரியாத கவிதைகளை கண்டிப்பாக எழுதித் தானாக வேண்டுமா? இப்பொழுது கதைகள் கூட புரியாத அளவுக்கு எழுதுகிறார்களே, இது தேவைதானா? மேலும் பெண்ணியம் என்ற பெயரிலும் எதார்த்தம் என்ற பெயரிலும் சொல்லவே நா கூசும் அளவுக்கான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவது அவசியம் தானா?

3. உண்மையைச் சொல்லுங்கள் திரிஷா அழகு தானே?

4. காவிரிப் பிரச்சனைக்கு என்னதான் வழி? நதிகளை நாட்டுடைமை ஆக்கலாமா?

5. உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினால் -of course you can act independently!- என்ன செய்வீர்கள்?

வாய்ப்பளித்த இளாவுக்கு நன்றிகள் பல!
Pass to நிர்மல்.

இளாவின் சுடர் :http://ilavanji.blogspot.com/2007/02/blog-post.html

நூறு

என்னோட நூறாவது பதிவுங்க இது. அதுக்கென்ன இப்ப? அப்படீன்னு கேட்டாக்க நான் என்ன சொல்றது? அது வந்து, நான் வலைப்பூ (blog க்கு அது தானே தமிழ்ல பேரு?) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.ஆரம்பிச்சது என்னவோ பிப்ரவரி 2005. ஆனா சீரியஸா பதிவு செய்ய ஆரம்பிச்சது மே 2006 ல இருந்துதான். முதல்ல படித்த கவிதைகள், செய்திகள் அப்புறம் நகைச்சுவைத் துணுக்குகள்ன்னு தான் கட்-காபி பேஸ்ட் செஞ்சுகிட்டிருந்தேன். திடீர்னு ஒரு நாள் விதிகள் அப்படீங்கற பதிவு போட்டேன். அது நான் சொந்தமா எழுதினது. மீரா ஜாஸ்மீன் பற்றிய பதிவு அது. அப்பவெல்லாம் என்னோட ரூம் மேட்கிட்ட தான் முதல்ல வாசிச்சு காமிப்பேன். அவனும் அரைத் தூக்கத்தில கேட்டுட்டு ஓகேடா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு அடுத்த நிமிசமே குரட்டை விட ஆரம்பிச்சுடுவான். அதுக்கப்புறம் சில நாளில் அவன் வேறு வீட்டுக்கு சென்று விட்டான். அவன் வீட்டைக்காலி செய்ததற்கு நான் எழுதிய பதிவுகளை, கதைகளை வாசித்துக்காட்டி அவனை கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்ற வதந்தி நிலவி வருகிறது. நம்பிவிடாதீர்கள். விதிகளை எதேச்சையாக திண்ணைக்கு அனுப்ப அவர்கள் பிரசுரம் செய்து விட்டார்கள். அது ஒரு தூண்டுகோல்.

நான் சென்னையிலிருக்கும் போதே ரெண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு குறு நாவல் போன்ற ஒன்றையும் எழுதியிருந்தேன். மேலும் பள்ளியில் படிக்கும் போது சில நாடகங்கள் எழுதி இயக்கியிருக்கிறேன். அதையெல்லாம் பிளாக்கில் போட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உங்களை விட்டால் வேறு யார் அதையெல்லாம் படிக்கப்போகிறார்கள்!?. தமிழில் டைப் செய்வது தான் சற்று சிரமான காரியமாக இருந்தது. நான் எழுதிய எல்லா கதைகளையும் ஒரு வழியாக அரங்கேற்றம் செய்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தமிழ்மணம் பற்றிய தகவல் கிடைத்தது. அப்புறம் தேன்கூடு.

என்னுடைய தோழி ஒருவர் தான் அப்போ என் பிளாக்குக்கு டெடிகேட்டட் ரீடர். இப்பவும் தான். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவ ப்ளாக்கு போய்விடுவார். நான் என்ன குப்பை பதிவு செஞ்சாலும் நல்லா இருக்குடான்னு சொல்ற ஒரே ஜீவன். Thanks காள்யா. இந்த நூறாவது பதிவை உனக்கு டெடிகெட் செய்யறேன்.

கொஞ்சம் சோர்வா, கண்டிப்பா பதிவு செஞ்சுதான் ஆகனுமான்னு இருக்கறப்போ தான் thepreciouss.blogspot- கிருத்திகாவின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு தெரிந்தவரையில் அவ்வளவு அருமையான ஆங்கிலத்தில், அவ்வளவு அழகான இந்திய ஆங்கில பதிவை நான் பார்த்ததில்லை. என்னோட inspiration அவர் தான். அவரிடமிருந்து தான் blog சம்பந்தமாக நிறைய கற்றுக்கொண்டேன். ஏனோ இப்பொழுது அவர் பதிவதில்லை. Harry Potter படிக்கும் ஆர்வம் எனக்கு அவரிடம் இருந்து தான் வந்தது. இப்பொழுது ஐந்தாவது புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். மிக விரைவில் Harry Potter பற்றிய ஒரு பதிவிட வேண்டும்.

அப்புறம் தேன்கூட்டின் சிறுகதைப் போட்டிகள். கதை எழுதுவதையே மறந்திருந்த பொழுது தான் தேகூட்டின் சிறுகதைப் போட்டி பற்றிய அறிமுகம் கிடைத்தது. உடனே என்னுடைய அசட்டு மனிதர்கள் கதையை அனுப்பினேன். பின்னூட்டங்கள் சில வந்தது. அதற்கப்புறம் தேன்கூட்டின் போட்டிக்காகவே கதைகள் எழுத ஆரம்பித்தேன். ஒரு விதமான encouragement அது. பரிசு கிடைக்குதா இல்லையா என்பது பெரிதல்ல. நான் இதுவரை முதல் பத்தில் கூட வந்ததில்லை என்பது வேறு விசயம். ஆனால் என்னாலும் கதை எழுத முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது தேன்கூடு. அப்படி நான் தேன்கூட்டுக்கு அனுப்பிய கதைகளில் எனக்கு பிடித்தமான கதை காடனேரி விளக்கு. ஏனோ நிறைய பேர் புரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். 😦

அப்புறம் யார் எழுதியது என்று மறந்துவிட்டது: train ல தொங்கிக்கிட்டே போற ஒருவருடைய கதை -தேன்கூடு பரிசு போட்டியில் வெளியானது- எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்தக்கதை பரிசு வாங்கியது என்று நினைக்கிறேன். நான் ரசித்த பதிவுகளும் கதைகளும் நிறையவே இருக்கின்றன. அதைப்பற்றியே ஒரு பதிவிட வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போ தேன்கூடு போட்டியை நிறுத்திவிட்டது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கதை எழுதுவதற்கு டாபிக் யார் கொடுப்பா?. தேன்கூடு போட்டிக்கு அனுப்பிய ஒரு கதையை – தொலைவு – ரெவ்யூ செய்து போஸ்டன் பாலா 3.5 outof 4 போட்டிருந்தார். அது கதை எழுதுவதற்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது. நிறைய நம்பிக்கை அளித்தது. Thanks Bala.

ஆயிரம் கால் இலக்கியம் என்ற தொடர் கிருத்திகாவுடன் debate செய்ததால் வந்த விளைவே. நான் எழுதிய current incidents பற்றிய பதிவுகளில் எனக்கு பிடித்தது: சிற்பிகளும் சிலைகளும் அப்புறம் கேட்பதற்கு உரிமையில்லை. சிற்பிகளும் சிலைகளும் என்ற பதிவு நான் எழுதிய உடன் எங்கள் வீட்டிலிருந்து தான் எனக்கு முதல் எதிர்ப்பு வந்தது. அரசியல் எழுதாதே என்று. எங்க அண்ணன் advice மேல advice. அதற்கு இணையாக என்னை திட்டி வந்த ஒரு பின்னூட்டம். அதை பிரசுரிக்க முடியவில்லை :). ஆனால் எனக்கு சந்தோசமே, பின்னூட்டமே இல்லாமல் இருந்த போது அட்லீஸ்ட் திட்டாவது கிடைக்கிறதே. ரொம்ப மோசமான வார்த்தைகளால் திட்டு கிடைத்தது ஆழ்வார் படம் பற்றிய விமர்சனப் பதிவின் போது தான். டாக்டர் ராமதாஸ் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாரம் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் தான் சினிமா பார்க்க அனுமதிப்போம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சும்மா ஜோக்குகாகத்தான் சொன்னார் என்று நினைத்திருந்தேன். ஆழ்வார் படத்தின் விமர்சனத்துக்கே கெட்டவார்த்தைகளால் திட்டும் மக்கள் இருக்கும் இந்நாட்டில் அவ்வாறான சட்டம் கொண்டுவந்தால் தேவலையோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

கவிதைகள் எனக்கு பிடிப்பதில்லை. காதல் கவிதைகளைத்தவிர. :)) அது மட்டும் தாங்க புரியுது. அப்படியிருந்தும் ஒரு சில நேரங்களில் சில விபரீத முயற்சிகள் செய்துபார்ப்பேன். அவ்வாறான ஒன்று – ஒன்றே ஒன்று – தான் ரோடெங்கும் நயாகராக்கள் பதிவு. கவிதைகள் எழுதி உங்களைப் படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன். 🙂

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புதுமைப்பித்தன் தான் இன்றைய தமிழ்இலக்கிய bloggerகளின் கருப்பொருள் மற்றும் உருப்பொருள். இவ்வர்கள் இல்லையென்றால் நிறைய பேருக்கு என்ன எழுதுவது என்றே தெரியாது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அ.இரா. வெங்கடாசலபதி தொகுத்தருளிய புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு எனக்கு நிறைய help செய்திருக்கிறது. புதுமைப்பித்தனின் கட்டுரையிலிருந்து சுட்ட கருத்து தான் நான் எழுதிய அமுதத்தை இட்டாள் என்ற சிறுகதை. என் பிறந்தநாள் அன்று பணிரென்டு மணிக்கு எழுதி முடித்தேன். கேக் வெட்டி கொண்டாடி விட்டு போஸ்ட் செய்தேன். நான் சென்னையிலிருக்கும் போது பாதி எழுதி முடிக்காமல் விட்ட கதை காந்தம். ஆனால் இப்பொழுது அது காணாமல் போய்விட்டது. மறுபடியும் முதலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு தொடர்கதையாகப் பதிவு செய்திருக்கிறேன். யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்ற போப்பால் டிராஜடி பற்றிய தொடரை எப்படியாவது இன்னும் சில வாரங்களில் முடித்துவிட முயற்சிக்கிறேன்.

ஜெயமோகனால் தான் மதி கந்தசாமியின் அறிமுகம் கிடைத்தது. ஒரு பின்னூட்டத்தில் மதியைப்பற்றி நிர்மல் குறிப்பிட்டிருந்தார். என்னைத் தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் encourage செய்துகொண்டிருப்பவர்கள். Thanks Nirmal and Mathy.

போஸ்டன் பாலா போன வருடத்தின் சிறந்த பதிவுகளில் ஒன்றாக குரல்வலையைத் தேர்வு செய்திருந்தார். எவ்வளவு பெரிய encouragement தெரியுமா அது? மதியும் கூட குரல்வலையைப் பற்றி சொல்லியிருந்தார். Thanks again Bala and Mathy.

அவ்வப்போது என் இடுகைகளை கில்லிக்கு கொடுக்கும் பிரகாஷ்க்கும் நன்றிகள். மேலும் என்னை பின்னூட்டங்களின் மூலம் encourage செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் encouragement வரும் பதிவுகளிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன். 🙂 மேலும் நான் நவம்பர் டிசம்பரில் அதிகம் பதிவு செய்யாமல் இருந்தபோது, என்னை வற்புறுத்தி பதிவு செய்ய வைத்த சிவாவுக்கும் நன்றிகள். (மொதல்ல அவனக்கண்டுபிடிச்சு உதைக்கனும்டா..ன்னு நீங்க யோசிக்கிறீங்கதான?)

மேலும் ஒரு பதிவு கூட விடாமல் அத்தனையையும் படித்து விட்டு கருத்து சொல்லும் எனது கலீக்ஸ் சரவணன், சுதா மற்றும் ராம்கிக்கும் நன்றிகள். எனது பழைய ரூம் மேட் அஸ்வினுக்கு -பாவம்ங்க அவன். எத்தனநாள் கண்ணுமுழித்து என் கதைகளைக் கேட்டிருப்பான்னு நினைக்கிறீங்க- ஸ்பெசல் நன்றிகள்

எண்ணற்ற எழுத்தாளர்கள் உருவாவதற்கு களம் அமைத்துக்கொடுத்திருக்கும் Blogger மற்றும் அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய பேருதவியாக இருக்கும் Aggregators: thamizmanam மற்றும் தேன்கூடுக்கு எனது நன்றிகள்.

நான் டைப் செய்ய உதவும் முரசு எடிட்டருக்கும் அதை யுனிகோடாக மாற்ற உதவும் சுரதாவுக்கும் நன்றிகள். எல்லாமே free of cost. Thanks to the technology.

Once Again, Thanks All.

 

ஓட்டுரிமை

தேன்கூடு போட்டிக்கு மூன்றாவது முறையாக நான் என் சிறுகதையை சமர்பித்திருக்கிறேன். முதல் இரண்டு முறையும் அறிமுக பிளாகரான எனக்கு நானே எதிர்பார்த்திராத அளவிற்கு வாக்குகள் கிடைத்தன. சந்தோஷம். இந்த முறை என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சில நண்பர்கள் – என் பதிவுகளை தவறாமல் வாசித்துவருபவர்கள் – என் சிறுகதைக்கு வாக்களிக்க முயற்சித்து, நான் தோல்வியைத் தழுவும் முன் அவர்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

21 ஆம் தேதி காலையிலே நான் என் அலுவலகத்திற்கு வந்தவுடன் வாக்களித்து விட்டேன். நான் வாக்களித்ததால், என்னைத் தொடர்ந்து வாக்களிக்க முயற்சித்த என் நண்பர்கள் அனைவருக்கும் இதே errror msg -ஐத் தான் பெற்றனர்.

>>Thank you for voting on this poll. The results will be announced shortly! (you already submitted an answer for this survey. If this not the case, please contact us.)

ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே server -க்கு கீழ் இருப்பதாலா? அப்படியென்றால் தேன்கூட்டில் userid, pwd எதற்கு? வெறும் server ip வைத்தே login செய்து கொள்ளலாமே. என்ன logic என்று எனக்கு விளங்கவில்லை.

சரி, அலுவலகத்தில் ஒரே செர்வருக்கு கீழ் இருப்பதால் வாக்களிக்க இயலவில்லை என்று என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று முயற்சித்திருக்கிறார், வீட்டிலும் இதே err msg தான். (இது என்ன கடவுளே, புரியாது கடவுளே!)

அவர் படைப்புகளை தேர்ந்தெடுக்கவேயில்லை. வாக்களிக்கவும் இல்லை. அவருக்கு எப்படி தேன்கூடு நன்றி சொல்கிறது?
>>Thank you for voting on this poll. தேன்கூடுக்கு ரொம்பத்தான் பவ்யம்.

ஒரே நபர் வேறு வேறு userid -க்களை create செய்து தன் கதைக்கு தானே பலமுறை வாக்களிப்பதை தடுப்பதே இதன் நோக்கம் என்பதை நான் அறியாமலில்லை, ஆனால் அதே சமயத்தில் வாக்களிக்க விரும்புபவர்களை – வாக்களிப்பதற்காகவே, userid create செய்தவர்களை – discourage செய்வதாகவே இருக்கிறது.

கள்ளவோட்டுகள் போடக்கூடாதுதான், ஓட்டே போடக்கூடாது என்றால் எப்படி?

சேர்க்கப்பட்டது:
தேன்கூடு நன்றி. இப்பொழுது என் நண்பர்களால் ஓட்டளிக்க முடிகிறது
.