The Testament Of Gideon Mack and Making of ஹலோ அஸ்விக்குட்டி

என் நண்பர் ஒருவரிடம் “உங்களுக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டேன். என்னை ஒரு முறை ஆழமாக பார்த்த அவர், சட்டென “இல்லை” என்றார். “ஏன்?” என்றேன். அதற்கு அவர் “இது வரை நான் பேய்களைப் பார்த்ததில்லை. மற்றவர்கள் சொல்வார்களே அது போல உணர்ந்தது கூட இல்லை. சில கதைகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் பேய்களை எப்படி நம்புவது?” என்றார். “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?” என்றேன் தொடர்ந்து. அவர் சிரித்து விட்டார். “ம்ம்ம்..பேஷா இருக்கே!” என்றார். “இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்மறையான விஷயம் ஒன்று இருக்கிறதல்லவா? பகல் என்றால் இரவு. நல்லவன் நான், என்றால் கெட்டவன் நீங்கள்(!). அதே போல ஒரு நல்ல சக்திக்கு எதிராக ஒரு தீயசக்தி இருக்கவேண்டுமே. அப்படியென்றால், நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்றால், பேய்களையும் நம்பித்தானே ஆகவேண்டும்” என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்த அவர், “முத்து வாட் டு யூ வான்ட்?” என்றார். “உங்களுக்கு பேய்கள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா?” “எனக்கு பேய் படங்கள் பார்க்க ரொம்பவும் பிடிக்கும். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு நிறைய பயமாக இருக்கும். ஆனாலும் மறுமுறையும் பேய்ப்படங்கள் பார்ப்பேன். மறுமுறையும் பயப்படுவேன். கடவுள் எனக்கு மன ஆறுதலைத் தருகிறார். தன்னம்பிக்கையைத் தருகிறார். எனவே நான் அவரை நம்புகிறேன். பேய்கள் எனக்கு அச்சத்தைத் தருகின்றன. எனவே நான் அவைகளை நம்பவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். என் மனநிம்மதிக்கு கேடு விளைவிக்கும் ஒன்றை ஏன் நான் வலுக்கட்டாயமாக நம்பவேண்டும்?” என்றார்.

***

The Testament Of GideonMack” என்றொரு புத்தகம். போன வருடம் புக்கர் பரிசுக்கு (long list) நாமினேட் செய்யப்பட்டது இது. கதை, கிடியன் என்ற பாதிரியாரைப் (Minister Of A Church ministerக்கு தமிழில் வார்த்தை தெரியவில்லை, எனவே பாதிரியார் என்றே சொல்லுகிறேன்!) பற்றியது. நாவல் நம்பிக்கை சார்ந்த ஒன்று. மனிதனின் குணங்களை அலசுகிறது. சம்பவங்களைச் சொல்கிறது. பிற வாதங்களை முன் வைக்கிறது. நம்மை குழப்புகிறது. பிறகு தீர்வை நம்மிடம் விட்டுவிடுகிறது. (அட போங்கப்பா! நாவல் படிச்சப்புறம் ஒரு முடிவு கெடைக்கலேன்னா என்னா அர்த்தம்?ன்னு கேக்கறவங்களுக்கு கண்டிப்பா இந்த நாவல் சரிப்படாது)

மனிதர்களின் குணாதிசயங்கள் மிகவும் விந்தையானவை(ஆமா இவரு ரொம்ப கண்டாரு!). ஒரு விசயத்தை நாம் பிடித்துக்கொள்ள தொடங்கிவிட்டோமேயானால், நமது மனம் பிறர் என்ன சொன்னாலும் கண்டுகொள்வதில்லை. நமக்கு அது உண்மையாகப் படுகிறது. மனம் ஆராய மறுக்கிறது. (சிவாஜி படம் அவ்ளோ un-logical இருந்தப்பவும் கைத்தட்டி பேப்பரகிழிச்சு எறிஞ்சு கத்தினப்பவே எனக்கு தெரியும்டா!) கண்ணால் பார்ப்பது பொய் என்று சும்மாவா சொன்னார்கள்.

***

நாவல் ஒரு புத்தக வெளியீட்டாளரிடமிருந்த ஆரம்பிக்கிறது. அந்த புத்தக வெளியீட்டாளருக்கு ஒரு சுவாரஸ்யமான கையெழுத்து பிரதி கிடைக்கிறது. அந்த பக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு போல இருக்கிறது. அந்த மனிதன் தன் வரலாற்றை தானே சொல்கிறான். புத்தக வெளியீட்டாளரின் நண்பர் ஒரு பத்திரிக்கையாளர்(freelance). அவர் தான் இந்த கைஎழுத்து பிரதியை தனது நண்பரான புத்தக வெளியீட்டாளருக்கு கொடுக்கிறார். அவர் இந்த கைப்பிரதியை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வெளியீட்டாளரிடம் கோரிக்கை வைக்கிறார்.

நாவலில் அந்த கைப்பிரதி அப்படியே தரப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் பெயர் கிடியன். கிடியனே கதை சொல்கிறார். (self-narrative).

***

கிடியன் ஒரு பாதிரியார். மிகவும் கண்டிப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர். அவருடைய தந்தையுமே ஒரு பாதிரியார் தான். கிடியன் வளரும் போது அவருக்கு பாதிரியார் வேலை பிடிக்கவில்லை. ஏனென்றால் கிடியனுக்கு கடவுளின் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. ஆனால் வளர்ந்து வேலை தேடும் போது வேறு வழியில்லாமல் (அல்லது பிடித்தே!) பாதிரியார் ஆவதற்கு ஒத்துக்கொள்கிறார். கிடியனுக்கு வேலை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது வேறு குழப்பம்.

காலேஜில் படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் அவள் தன்னுடைய நண்பனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து, வேறு வழியில்லாமல் அவளுடைய தோழியை கிடியன் காதலிக்கிறார்(தலை சுத்துதா, மறுபடியும் ஒரு முறை இந்த வரியைப் படிங்க!). ஆனாலும் அவள் மீது காதல் குறையவேயில்லை. நண்பனும் இவர் காதலித்த பெண்ணும் மணமுடித்துக்கொள்கிறார்கள். இவரும், இவர் காதலித்த பெண்ணின் தோழியும் மணமுடிக்கின்றனர். இருவர் குடும்பமும் ஒரே ஊரில் வசிக்கிறது. (ரொம்ப சிக்கலான விசயத்தை எவ்ளோ சிம்பிளா விளக்கிருக்கான் முத்து. யு ஆர் க்ரேட் டா!)

கிடியனுக்கு காலையில் எழுந்து அல்லது வேலை முடித்து வந்து ஜாக்கிங் செய்வது வழக்கம்(என்ன மாதிரி ரொம்ப சுறுசுறுப்பு. Fitness-Freak!). ஜாக்கிங் பயிற்சியால் மாரத்தான் ஓட்டங்களுக்கும் இவர் செல்வார். அவ்வாறு மாரத்தான் ஓட்டங்களுக்கு செல்லும் போது ,ஸ்பான்ஸர்ஸ் கொடுக்கும் பணத்தை வைத்து நிறைய நல்ல விசயங்களை அந்த ஊருக்கு செய்து வருகிறார். மேலும் சில ரிசர்ச்சுக்கு பணம் வசூலித்துக் கொடுக்கிறார். கிடியனும் அவரது மனைவியும் வாழ்க்கையை ரசிக்கத்துவங்குகிறார்கள். ஒரு நாள் கிடியனின் மனைவி ஒரு விபத்தில் பலியாகிறார். வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கும் போது நேர்ந்த இந்த மிகப்பெரிய இழப்பை கிடியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இடிந்து போகிறார். ஆனால் வாழ்க்கை ஓட வேண்டுமே? நம் காலம் முடியும் வரையில் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நம் காலத்தை முடித்துக்கொள்ள நம்மால் முடிந்தாலும், நம்மால் முடியாது என்பது தானே உண்மை!

வாழ்க்கை அவருக்கு ஜாக்கிங்காக ஓடுகிறது. ஜாக்கிங் செல்வதை அவர் வெகுவாக நேசிக்கத்தொடங்குகிறார். அவர் ஜாக்கிங் செல்லும் பாதை நல்ல பச்சை பசுமையாக இருக்கும் (scotland! என்ன Scotlandன்னு ஒரு ஆச்சரியக்குறி? போயிருக்கியா அங்க?). சில இடங்களில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி போல இருக்கும். அவருடைய நண்பனின் வீடும் அந்த வழியிலே இருக்கிறது. ஒரு நாள் கிடியன் ஜாக்கிங் செல்லும் போது ஒரு கல்தூணைப் (ஸ்தூபி போன்ற ஒன்று!) பார்க்கிறார். அவ்வாறான கல்தூண்கள் அந்த ஊரிலே கொஞ்சம் தான் இருக்கின்றன. இம்மாதிரியான தூணை அவர் இந்த இடத்தில் இதற்கு முன்னர் (நேற்று கூட) பார்க்கவில்லை. இரவோடு இரவாகவும் இந்ததூணை யாராவது கொண்டுவந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அருகில் சென்று தொட்டுப்பார்க்கிறார். அவரால் நம்பமுடியவில்லை. ஜாக்கிங்கிலிருந்து திரும்பிய கிடியன் தன் நண்பனிடமும் நண்பனின் மனைவியிடமும் சொல்கிறார் அவர்கள் நம்புவதற்கு மறுக்கின்றனர். கடைசியில் நண்பனின் மனைவி மட்டும் ஒரு நாள் இருவரும் சென்று பார்ப்போம் என்று சொல்கிறாள். (ஆனால் கடைசி வரைக்கும் அவளோ வேறுயாரோ அந்த தூணைப் பார்க்கவில்லை!)

(கிடியனும் அவருடைய நண்பனின் மனைவியும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் உறவு கொள்கின்றனர். அவள் இது தான் முதலும் கடைசியும் என்று திட்டவட்டமாக சொல்லிவிடுகிறாள். அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவள் அது போல ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்பது போல் தான் இருக்கிறாள். கிடியனுக்கே இதில் சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த நிகழ்வு ஒரு கனவோ என்று நினைக்கத்தொடங்குகிறார். ஏனென்றால், அவர்கள் இருவரும் தனியே இருப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் பின்னர் கிடைத்தும், அவள் அந்த சம்பவத்தைப் பற்றி ஏதும் பேசியதும் இல்லை, அட்லீஸ்ட் ஒரு சமிக்ஞை கூட காட்டியதில்லை)

இவ்வாறான சூழ்நிலையில் ஒரு நாள் தன் தோழியின் நாய் ஒன்றைக் காப்பாற்ற முயன்று ஒரு ஆற்றுக்குள் விழுந்து விடுகிறார் கிடியன்(இதுக்கு தான் தோழிகள் முன்னாடி ஓவரா சீன் போடக்கூடதுன்றது!).அந்த ஆறு மிகவும் பெரியது ஆழமானது. அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த ஆறு பூமிக்கு அடியில் ஓடும். விழுந்த கிடியன் மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரை ஒதுங்குகிறார். மூன்று நாட்கள்! அவர் மூன்று நாட்கள் பூமிக்கு அடியில் இருந்திருக்கிறார் (மீன்கள் மட்டுமே உயிர்வாழக்கூடிய இடம்!), உணவில்லாமல். தலையிலும் காலிலும் பலத்த அடிகளுடன் இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக விரைவில் தேறுகிறார். மருத்துவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். மெடிக்கல் மிராக்கிள் என்கின்றனர். (ஏம்ப்பா தமிழ் படங்கள்ல இந்த டயலாக் வந்தா மட்டும் சிரிக்கறீங்க?)

கிடியன் பூமிக்கு அடியில் இருந்த போது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த(!) ஒரு மனிதன் தான் தன்னைக் காப்பாற்றி உணவளித்தான் என்கிறார். அந்த மனிதன் வேறு யாரும் இல்லை, அவன் தான் சாத்தான் என்று குண்டைத்தூக்கிப் போடுகிறார். யாவரும் நம்ப மறுக்கின்றனர். விழுந்ததில் புத்தி பிசகிவிட்டது என்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரைக்கும் கிடியான் நன்றாகவே, தெளிவான மனதுடனே இருப்பதாகப் படுகிறது. கிடியான் தான் சாத்தனை சந்தித்ததை திட்டவட்டமாக நம்புகிறார். சாத்தனுடன் நடந்த உரையாடல்கள் அவருக்கு சட்டென நினைவுக்கு வருகிறது. தன் நண்பனை அழைத்து அவன் முன்னாலே (கிட்டத்தட்ட வாக்குமூலம் போல்! வாக்குமூலத்தின் போது தான் போதையில் இருக்கவில்லை என்பதற்கு சாட்சி அந்த நண்பர்!) பதிந்து வைத்துக்கொள்கிறார். பிறகு அத்தனையையும் தன் கையாலே எழுதுகிறார்.

பிறகு தலைவறைவாகிறார். ஊரை விட்டு வெளியேறி ஒரு விடுதியில் தங்கிவிட்டு, கடைசியாக எழுதியதில் சில திருத்தங்களையும் செய்து விட்டு, கைப்பிரதியை விடுதியிலே விட்டுவிட்டு, அருகிலிருக்கும் ஒரு மலையில் சென்று இறந்து போகிறார். அவர் கைப்பட எழுதிய அவரது கதை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எடுக்கப்பட்டு பத்திரிக்கை நண்பரின் மூலம் அந்த புத்தக வெளியாட்டளரிடம் கிடைக்கிறது.

புத்தக வெளியீட்டாளர், இந்த கைப்பிரதியைக் கொடுத்த தன் நண்பனை (பத்திரிக்கையாளர்) கிடியன் வாழ்ந்த ஊருக்கு சென்று அங்கே அவருக்கு இருக்கும் ஒரே சொந்தமான அவரது நண்பனின் குடும்பத்தை சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்துவருமாறு சொல்கிறார்.

பத்திரிக்கையாளரைச் சந்திக்க முதலில் மறுக்கும் நண்பனின் குடும்பம் பிறகு பேசுவதற்கு ஒத்துக்கொள்கிறது. நண்பனின் மனைவி பேச சம்மதிக்கிறாள். பத்திரிக்கையாளரும் நண்பனின் மனைவியும், கிடியன் பார்த்ததாக சொன்ன அந்த ஸ்தூபி இருக்கும் இடத்திற்கு செல்கிறனர். அப்பொழுது அவள்: ஒரு நாள் இரவு கிடியன் இந்த வழி போவதைப் பார்த்து, தான் பின் தொடர்ந்ததாகச் சொல்கிறாள். “அங்கே அந்த தூண் இருந்ததாக சொல்லப்படுகிற இடத்துக்கு பக்கத்தில் கிடியன் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.(சாத்தான்!) அந்த ஆள் மறைவாக இருந்தார்” என்கிறாள். பத்திரிக்கையாளர் “அப்படியானால் நீங்கள் அந்த தூணைப் பார்த்தீர்களா?” என்கிறார். அதற்கு அவள், “தெரியவில்லை. பார்த்தது போலவும் இருக்கிறது. பார்க்காதது போலவும் இருக்கிறது” என்கிறாள்.

கடைசியாக பத்திரிக்கையாளர் தயங்கி தயங்கி கிடியனுக்கும் அவளுக்கு இருந்த அந்த உறவைப் பற்றி கேட்க்கிறார். அந்த உறவு உண்மையிலே நடந்ததா இல்லை கிடியானின் கற்பணையா? நடந்தது என்றால் ஏன் மீண்டும் ஒரு முறை நடக்கவில்லை? ஏன் அவள் அவ்வாறான ஒரு நிகழ்வை நடந்ததாக காட்டிக்கொள்ளவேயில்லை? என்று கேட்க்கிறார்.

அதிர்ந்து போன அவள், “ஒரு முறையா? அதற்கப்புறம் எத்தனை முறை நாங்கள் உறவு கொண்டுள்ளோம் தெரியுமா?” என்கிறாள்.

குழப்பத்துடன் பத்திரிக்கையாளர் திரும்புகிறார். நாமும் தான்.

இந்த இடம் தான் மிகவும் குழப்பான இடம். ஏன் கிடியான் அப்படி சொன்னார்? இதே போல கதாப்பாத்திரங்களையும் அவைகள் சொல்லும் விசயத்தையும் நம்மால் நம்பமுடியவில்லை. கிடியன் சாத்தானிடம் “ஊரில் ஏன் யாருக்குமே அந்த தூண் தென்படவில்லை” என்று கேட்க்கும் பொழுது, சாத்தான் “அது உனக்காகவே அங்கே வைக்கப்பட்டது” என்கிறது. சாத்தனை நம்ப முடியுமா? நண்பனின் மனைவி பார்த்தது போல இருந்ததாக சொல்கிறாளே?

கேள்விகள் கேள்விகள் கேள்விகள்!

நாவல் படிப்பதற்கு இதமாக, ஒரு சலமில்லாத ஆங்காரமில்லாத அலட்டல் இல்லாத நீரோடை போல இருந்தது. ஆங்காங்கே மெல்லிய சிரிப்பலைகளும் எழாமல் இல்லை. கண்டிப்பாக ஒரு முறை படிக்கலாம். முதல் ஐம்பது பக்கங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பிறகு smooth. (ம்ம்.. மார்க் பொட்டுட்டாருய்யா மார்க் ஆண்டனி!)

***

என்னுடைய ஹலோ அஸ்விக்குட்டி கதையைப் படித்த சிலர் ஏன் இப்படி ஒரேயடியாக tragedyயே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், ஏன் பேய்கதைகளையே கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்றும் கேட்டனர். என்னிடம் பதில் இல்லை. அவ்வாறான கதைகள் தான் என்னை எழுதவைக்கிறது. நான் கதைகளை பெரும்பாலும் எழுதுவதில்லை, கதைகள் தான் என்னை எழுதச் சொல்கின்றன. (நௌ, திஸ் இஸ் டூ டூ மச்!)

***

இந்த ஹலோ அஸ்விக்குட்டியில் சிவா தற்கொலை செய்துகொள்வதைப்போன்ற ஒரு சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகில். (இந்த தபா, ஊருக்கு போனபோது உன் மூஞ்ச அவன் கிட்ட காட்டினதான? அதான் தற்கொலை செஞ்சுகிட்டான்!)

சாதிவிட்டு சாதி காதலித்தான் ஒரு பையன். நாம் தான் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் ஆயிற்றே?! அதாவது காதலுக்கு மரியாதை படத்தை முன்னூறு தடவை டீவியில் குடும்பத்தோடு பார்த்து கண்ணீர் விடுவோம், ஆனால் வீட்டில் உண்மையிலே யாராவது தப்பித்தவறி காதலித்து தொலைத்தால், அந்த காதலுக்கு கண்டிப்பாக அவமரியாதை தான். (அடி பிரிச்சுமேஞ்சிருவோம்ல! உங்கள புரிஞ்சுக்கவே முடியலடான்னு விவேக் சும்மாவா சொன்னாரு!)

அவன் வீட்டில் இதற்கு சம்மதிக்கவில்லை. வீட்டின் சம்மதத்தை அவன் எதிர்பார்த்தான். வீட்டுக்குள் செல்லாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் மொட்டை மாடிப்படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். நான்கு நாட்கள். சாப்பிடவேயில்லை. எங்கும் போகவில்லை. அவனுடைய வீட்டிலும் கொஞ்சம் கூப்பிட்டுப்பார்த்தார்கள். ஏனோ சமாதான முயற்சியில் இறங்கவில்லை. அவன் தற்கொலை செய்து கொண்டான்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு ஒரு புதுமணத்தம்பதியினர் வருகின்றனர். மனைவி வெளியூரைச் சேர்ந்தவர். கணவனும் தான். ஒரு நாள் திடீரென அந்தப் பெண் (மனைவி!) இறந்து போன அந்தப் பையன் போல பேசத்தொடங்கியிருக்கிறாள்.நான் இங்கே தான் உட்கார்ந்திருந்தேன். இங்கே தான் மருந்துகுடித்தேன் என்று கனகச்சிதமாக சொல்கிறாள். இறந்தவனின் அம்மா வந்து கதறி அழுதிருக்கிறார்.

நான் பார்க்கவில்லை எனினும், இந்த சம்பவத்தை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் பார்த்திருக்கின்றனர். என்னுடைய அக்காவும். நானும் என் அக்காவும் வீட்டுக்கு வெளியே படிக்கட்டில் இரவு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அக்கா இந்தக் கதையை என்னிடம் சொன்னார். அவர் இந்தக் கதயைச் சொல்லிமுடிக்கும் போது (exactly that moment you know!), இறந்து போன அந்த பையனின் அம்மா எங்கள் வீட்டு வழியே நடந்து சென்றார். எங்களைப் பார்த்து சிரித்தார்.

மேலும் ரயில் தண்டவாளத்தில் செல் போன் உபயோகித்ததால் ரயில் வருவதைக்கவனிக்காமல் ஒரு பெண் இறந்து போனார் என்ற செய்தி ரொம்ப நாட்களுக்கு முன்னர் படித்திருந்தேன். இந்தச் செய்தி என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. என்னை ஆழமாக பாதித்தும் விட்டது.

இந்த இரு சம்பவங்களை வைத்து பின்னப்பட்டதுதான் ஹலோ அஸ்விக்குட்டி என்ற கதை. சிலருக்கு இது crap ஆக இருக்கலாம். ஆனால் எனக்கு எழுதும் போது, “நான் அஸ்வினி இல்லடா சிவா” என்று அந்த பெண் சொல்லும் போது, உண்மையிலே புல்லரித்து விட்டது. கொஞ்சம் பயமாகக் கூட போய்விட்டது.

அந்த இரண்டாவது பப் சீனை ரசித்து எழுதினேன்.(ம்ம்ம்க்க்கும். நாங்க ரசிக்கனும்ப்பா!) அதில் வரும் “உன்ன கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன்” என்ற வரிகள் என்னுடைய வரிகள் இல்லை, புதுப்பேட்டையில் வரும் “புல் பேசும் பூ பேசும்” பாடலில் வரும் வரிகள். (வேற எங்க எங்க இருந்து, எத எத சுட்ட, ஒழுங்கா சொல்லிடு!)

கதை கொஞ்சம் நீளமாக இருந்தாலும் பொறுமையாக வாசித்தவர்களுக்கும், வாசித்து பின்னூட்டம் அளித்தவர்களுக்கும் நன்றிகள். (அப்பாடா ஒருவழியா மொக்கய முடிச்சுட்டான்! சங்கத்த கலைங்கடா! ஆ..என்னாது ஒரு பக்கியவும் காணோம்!)

***

(ஆஹா… இன்னும் முடிக்கலையாடா நீ! கருத்து சொல்லப்போறியா?!)

பேய்களை நம்புவதா வேண்டாமா என்பது வேறு விசயம். ஒரு சுவாரஸ்யத்திற்காக நம்பலாம்!
ஆனால் “நம்பிக்கை தான் கடவுள். பயம் தான் பேய்” என்பது மட்டும் முற்றிலும் உண்மை.

***