அஜித்துக்கு ஒரு (சீரியஸ்) கதை

சுடரில் நான் எழுதிய அஜீத்துக்கான கதையை(?!) படித்த நிறைய நபர்கள் என்னை திட்டியிருந்தனர். திட்டியவர்களில் என் அண்ணனும் ஒருவர். “முத்து நீ இப்படி செஞ்சிருக்கக் கூடாது. ஒழுங்கா ஒரு சீரியஸ் கதை எழுதியிருக்கவேணும்” என்றார். நான் என்ன பண்ணட்டும் நான் இன்னும் ஆழ்வார் effect லிருந்து மீண்டு வரவில்லை. தவிரவும் நான் கதாசிரியனும் அல்ல. ஏதோ சிறுகதை என்ற பெயரில் ஏதோ எழுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்:).

சரி கதைக்கு வருவோம். என்கிட்ட அஜீத்துக்கு(எல்லா ரசிகர்களும் அவர்களுடைய ஹீரோக்களுக்கு ஒரு கதை எப்போதுமே ரெடியாக வைத்திருக்கிறார்கள். எனக்கு ரஜினி ஜேம்ஸ்பாண்ட் -ofcourse தமிழில் தான் – கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக உண்டு!) ஒரு கதை இருக்குன்னு சொன்னார் என்னுடைய அண்ணன். சொல்றேன்னு சொல்ல ஆரம்பிச்சார்.

–பார்ட் 1-
அஜித் ஒரு மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்தவர். படித்தவர். ஏதோ ஒரு பேச்சிலர் டிகிரி (BSc Chemistry என்று வைத்துக்கொள்ளுங்களேன்!). வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்கிறார். வழக்கம் போல வேலை (அல்லது வேலைக்கான வேளை!) வரவில்லை. ஏதேதோ சின்ன சின்ன வேலைகள் கைக்கும் பத்தாமல் வாய்க்கும் பத்தாத சம்பளத்துடன் வேலை செய்கிறார். TNPSC பரிட்சை அல்லது ஏதோ ஒரு கவர்மெண்ட் வேலைக்கான பரிட்சை எழுதி தேர்ச்சிபெறுகிறார். அதிர்ஷ்டவசமாக ஏதும் பணம் கொடுக்காமல் அவருக்கு குமாஸ்தா (அல்லது கிளார்க்) வேலை கிடைத்துவிடுகிறது. வேறொரு ஊரில்.

மாதச் சம்பளம் பிடித்தம் போக கையில் 4500 ரூபாய். லஞ்சம் வாங்க மனமில்லை, வாய்ப்பும் இல்லை. என்ன சம்பளமாக இருந்தாலும் சந்தோஷமாக வேலையில் சேருகிறார். மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்கிறார். வாழ்க்கை உருண்டோடுகிறது.

–பார்ட் 1 end–

— பார்ட் 2–
ஒரு நாள் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருக்கும் போது எட்டாவது ஷீட்டில் ஷ்ரேயா தோன்றும் பம்ப்செட் விளம்பரத்துக்கு கீழே ஒரு பெட்டிச் செய்தியைப் பார்க்கிறார். அந்த செய்தி: பிரபல கலைக்கல்லூரி புரபொசர் : சயன்ஸ் சாமியாண்டி (பேரு பிடிக்கலைன்னா, வேற நல்ல பெயர் நீங்களே வெச்சுக்கங்கப்பா!) காணவில்லை! சாமியாண்டி அஜித்துக்கு பாடம் எடுத்தவர். என்ன பாடம் யூகியுங்கள்: chemistry. correct!

அஜீத் வீட்டுக்கு போன் செய்து அம்மாவிடம் விபரம் கேட்கிறார். அம்மா, ஆமாடா அவரக் காணல எங்க போனார்னு தெரியல்ல. அவங்க மனைவிக்கும் தெரியல. சண்டை கிண்டை ஏதும் கிடையாதாம். கடத்தலா இருக்குமோன்னு போலீஸ் சந்தேகப்படுது என்கிறார்.

அஜீத் அத்துடன் அந்த பிரச்சனையை மறந்து விட்டு தனது கிளார்க் வேலையை தொடருகிறார். மற்றொரு நாள் மற்றொரு கல்லூரியின் chemistry புரபொசர் கடத்தப்படுகிறார். அடுத்த சில நாட்களில் மற்றொரு புரபொசர். இப்படி பத்து புரபொசர்கள்.

கதையை இங்கே நிறுத்தி விட்டு, என் அண்ணன் அதுக்கப்புறம் யோசிக்கனும் என்றார். என்னத்த யோசிக்கறது. முடிச்சறவேண்டியது தான? அவர்களை கடத்தியது ஒரு தீவிரவாத கும்பல். அவர்கள் கடத்தப்பட்ட கெமிஸ்ட்ரி புரபொசர்களை வைத்து மிக அதி நவீனமான வெடிகுண்டு ஒன்றை தயாரிக்கிறார்கள். அஜீத் தீவிரவாத கும்பலைக் கண்டுபிடித்து அழித்து புரொபொசர்களை மீட்டுக்கொண்டு வருகிறார். (புரொபசர்கள் மீண்டும் கல்லூரிக்கு வந்து வழக்கத்தை விட அதிகமாக மொக்க போட ஆரம்பிக்கிறார்கள். மாணவர்கள் கொலை வெறியுடன் அஜித்தை தேடுவது இரண்டாம் பாகமாக எடுத்துக்கொள்ளலாம்)

ரமணா, இந்தியன், அந்தியன், பாட்சா போன்ற படங்களின் தாக்கம் நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பது மட்டும் புரிகிறது.

–பார்ட் 2 end–

–பார்ட் 2 வேற மாதிரி–
எனக்கு முதல் பாதி கதையுடன் சம்மதமே. ஆனால் என்னுடைய இரண்டாவது பார்ட் கொஞ்சம் வேறு மாதிரி. ஏற்கனவே பார்த்திருப்பது தான்.

இந்த நாட்டில் இப்பொழுது இரண்டு பகுதிகளாக இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு பகுதி தங்களது முப்பது வயதுக்குள் எப்படியாவது மூவாயிரம் ரூபாய் சம்பளத்தை எட்டிப்ப்டித்துவிடத் துடிப்பவர்கள். மற்றொரு பகுதி : தங்களது இருபத்தியைந்து வயதுக்கும் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தைப் பார்த்து விடுபவர்கள்.

–நன்றி: விகடன். (ஞாநி)

நமக்கு (சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள்) ஊரில் நிறைய நண்பர்கள் இருக்ககூடும். அந்த நண்பர்கள் நம்மைப்போல சாப்ட்வேர் படிக்காமல் ஏதேனும் BBA யேவோ அல்லது MBA யேவோ படித்துவிட்டு ஏதோ ஒரு வேலையில் மூவாயிரமோ, ஐந்தாயிரமோ வாங்கிக்கொண்டிருக்கக்கூடும். நாம் நாட்டை விட்டு வெளியேறி வந்து விட்டதால் அவர்களுடன் பழக வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்(கிட்டத்தட்ட மறந்தே போயிருப்போம். ஏனினும் ஊருக்கு போகும் போது அவர்களை கண்டிப்பாக சந்தித்திருப்போம். அப்பொழுது நாம் அவர்களிடம் நட்பு மாறி ஒரு அந்நியோன்மைத் தன்மை வந்திருப்பதைக் காண் முடியும். வாடா போடா என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் வாங்க போங்க என்று பேச ஆரம்பித்திருக்கலாம்)

இப்படி யோசித்துப்பாருங்கள்: ஒரு நண்பர் வட்டாரம் இருக்கிறது. அவர்கள் சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர்கள். ஒரு தெருவில் வசித்த நண்பர்கள். ஒன்றாக படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாக சைட்(?!) அடித்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் நன்றாக படித்து (அல்லது கொஞ்சம் காசு செலவழித்து என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்துவிடுகின்றனர்) இருவரைத் தவிர. இந்த இருவரும் BBA ஏதோ ஒரு கலைக்கலூரியில் படிக்கின்றனர். அவர்களுடைய என்ஜினியரிங் கல்லூரி நண்பர்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே சென்னையில் ஒரு பெரிய software company இல் place ஆகி விடுகின்றனர். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.

அதில் ஒருவர் அஜித். அஜித் மிகவும் கஷ்டப்பட்டு TNPSC பரிட்சை எழுதி ஏதோ ஒரு கவர்மெண்ட் வேலை வாங்கிவிடுகிறார். எனினும் சம்பளம் மூவாயிரம் ரூபாய் தான். உடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் சாப்ட்வேர் மக்கள். மாதம் முப்பதாயிரம் சம்பாதிப்பவர்கள்.

இந்த நண்பர் குழுவில் நடக்கும் மனப்போராட்டங்களே கதை. அந்த நண்பர் குழுவில் சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் தத்தளிக்கும் இளைஞராக அஜித். ஒரு நேரச் சாப்பாடு ஹோட்டலில் சாதாரணமாக ஐம்பது ரூபாய் இருக்கும் போது மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அஜித் எப்படி சமாளிப்பார்? ஒரு நேர treat க்கு ஐந்தாயிரம் ரூபாய் தாராளமாக செலவழிக்கும் கூட்டத்துடன் எப்படி ஒட்டுவார்? ஒரே வீதியில் இருந்து கொண்டு அவர்கள் காரில் போகும் போது, இவர் பழைய ஓட்டை சைக்கிளில் (அல்லது பெரும் கூட்டமாக இருக்கும் பல்லவன் பேருந்தில்) எப்படி போவார்?

இது வெறும் கரு மட்டுமே. கதை திரைக்கதை நன்றாக அமைக்கலாம். இதில் இல்லாத நகைச்சுவை இல்லை. சோகம் இல்லை. சந்தோஷம் இல்லை. அன்பு இல்லை. நிராகரிப்பு இல்லை. பொறாமை இல்லை. மனப்புழுக்கம் இல்லை. நட்பு இல்லை. காதல் இல்லை.

மேலும் சமுதாயத்தில் பின் தங்கிவிட்ட பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கையை அனைவரும் திரும்பிப்பார்க்க உதவும். ஒரு வறுமையின் நிறம் சிவப்பு போல. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இருந்தது வேறு பிரச்சனை. எல்லோருக்கும் வேலையில்லை. இப்பொழுது வேறு பிரச்சனை. economical gap.

அஜித் மிகச்சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.வாலியில் ஊமை அஜித் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போது, interviewer அவரை சிரிக்க சொல்லுவார், அப்பொழுது சிரிப்பாரே ஒரு சிரிப்பு, அந்த சிரிப்பில் ரசிகனானேன் நான். அதற்கப்புறம் நிறைய படங்கள்: முகவரி, அமர்களம் (ரகுவரனிடம் “நீ கடவுளா” என்று குடித்து விட்டு கேட்பது), வில்லன். இப்பொழுது வரலாறு: பெண் தன்மை கொண்ட கேரக்டரை இவ்வளவு சிறப்பாக யாரும் இது வரை செய்ததில்லை! அவரை விட்டால் இந்த மாதிரி சமூக பிரச்சனைகளை நடிக்க வேறு யார் இருக்கிறார்கள்(இவ்வாறான கதாப்பாத்திரம் தான் முகவரியில் செய்தார். எவ்வளவு அழகாக செய்திருந்தார்?)

எப்பொழுதுமே ஹீரோவாக (அடிதடி சண்டை போட்டுக்கொண்டு, பழிவாங்கிக்கொண்டு, தீவிரவாதிகளை துவம்சம் செய்துகொண்டு) தான் இருக்கவேண்டும் என்றில்லை. சில சமயங்களில் (வெகு சில சமயங்களில்) மக்களில் ஒருவராக இருப்பதில் தவறில்லையே? ஏன் கமலஹாசன் அவ்வப்போது வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்கள் செய்யவில்லையா? ஏன் அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவான ரஜினி ஆறிலிருந்து அறுபது வரை செய்யவில்லையா?