Power force wrist band and ராசிக்கல்

வெளிநாடுகளிலும் மககளிடம் மூடநம்பிக்கைகளைப் புகுத்தி ஏமாற்றுவேலைகள் செய்து பணம் பிடுங்குவது அதிகம் நடைபெறும். இப்பொழுது சுழன்று அடித்துக்கொண்டிருக்கிறது ஒரு சூராவளி. அது power force wrist band!

Power Force’s Innovative Products were developed to work with your body’s natural inner force. Within each Power Force powerband are ions that work with your body’s energy to give you confidence from within. Your inner force is limitless. Channel this force with Power Force powerband. Power Your Inner Force.

நீங்கள் இந்த ப்ளாஸ்டிக் பட்டையை கையில் அணிந்து கொண்டால் அதிலிருக்கும் ஐயான்கள் உங்கள் உடம்பிலிருக்கும் எனர்ஜியோடு சேர்ந்துகொண்டு உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்குமாம். உங்கள் உள் சக்தி அளப்பரியது…என்று ஏகத்துக்கும் அளந்து விட்டிருக்கிறது இதன் மார்க்கெட்டிங்க் கும்பல்.

பல பிரபலங்கள் இதை வாங்கி அணிந்திருக்கின்றார்கள். வாங்கியவர்களின் கணக்கு மில்லியனைத் தாண்டும் என்கிறார்கள். கஷ்டம்.

அவர்கள் சொல்லும் முக்கியமான விசயங்கள்:

We react with frequency because we are a frequency.

Your body’s energy field likes things that are good for it.

Why Holograms? We use holograms because they are composed of Mylar—a polyester film used for imprinting music, movies, pictures, and other data. Thus, it was a natural fit.

A primitive form of this technology was discovered when someone, somewhere along the line, picked up a rock and felt something that reacted positively with his body.

பிரச்சனை என்னவென்றால்: இந்த கைப்பட்டையில் கொலராடோ யுனிவர்சிட்டியின் முத்திரை இருக்கிறது!

இது ஒரு சுத்த நான்சென்ஸ் சமாச்சாரம். இதைத்தான் psuedo-science என்று சொல்லுவார்கள். அதாவது மூடநம்பிக்கைகளை அறிவியலைக் கொண்டு விளக்க முற்படுவது. ஜோதிடம் ஒரு முக்கியமான psuedo-science.

எங்கோ ஒரு நபர் ஒரு கல்லை எடுத்துக் கையில் வைத்த பொழுது ஏதோ ஒன்று அவரது உடம்பில் பாஸிடிவாக செயல்பட்டது என்று கூறுகிறார்கள். (இந்த ஏதோ ஒன்று தான் எப்பொழுதுமே பிரச்சனை!) அந்த நபர் எதை நம்பினார் என்பது பிரச்சனை இல்லை – அந்த பாறையின் அதிர்வுகள் நமது அதிர்வலைகளுடன் சேர்ந்து ஒத்திசை ஏற்படுத்தியது என்பது தான் காமடி.

நீங்கள் ஒரு கல்லை ஒத்திசைக்க (ressonate) வைக்கமுடியும் ஆனால் கல் தானே அதிர்வலைகளை உண்டாக்காது.

இந்த பட்டையில் இருப்பதைப் போன்ற ஹாலோகிராம்கள் எந்தவித அலைகளையும் எழுப்பவதில்லை; மேலும் நம் உடம்பும் எந்த வித அலைகளையும் எழுப்பவதில்லை. நம் உடம்பிற்கு frequency; energy field என்று ஏதும் கிடையாது. மேலும் உள் சக்தி என்கிற ஒன்று கிடையவே கிடையாது.

இயற்பியலின் விதிகளின் படி இந்த பட்டை நம்மை பாதிக்காது – உங்களுக்கு ப்ளாஸ்டிக்கினால் அலர்ஜி ஏற்பட்டால் ஒழிய!

மேலும் தகவல்களுக்கு

இது மனிதர்களிடம் மூட நம்பிக்கைகளைப் புகுத்துவது எவ்வளவு எளிது என்று காட்ட உதவும் இன்னொரு சம்பவம் – நம்மூரில் விற்கப்படும் ராசிக்கல் சாமாச்சாரம் போலவே!

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

எனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை.

ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான் இப்பொழுதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.(மீண்டும் படியுங்கள்: நேரம் வரவில்லை; நேரம் கிடைத்தது:) ). ஆண்டு தொடங்கியவுடன் வருட பலன்களையும் ஜாதகங்களையும் தோஷ நிவர்த்திகளையும் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

ஜோதிடம் பொய். சுத்தப் பொய். உங்களிடம் யாராவது ஜோதிடம் பற்றிச் சொல்கிறார்கள் என்றால் உங்களிடம் ஏதோ ஒன்றை விற்க முயற்சிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்களை ஏமாற்றுகிறார்கள்.

ஏன் பொய்? விளக்கமாகச் சொல்கிறேன்.

ஜோதிடம் என்பது என்ன?

ஜோதிடத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. கிரகநிலை ஜோதிடம்.ஜென்ம ராசி சக்கரத்தில் சந்திரனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள். சிலர் சூரியனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள்.சிலர் ஜோதிடம் கணிப்பதற்கு பிறந்த நேரம் மிக முக்கியம் என்கிறார்கள். சிலர் பிறந்த மாதம் முக்கியம் என்கிறார்கள்.இன்னும் பலப் பல வகை.இவர்கள் வைத்திருக்கும் வகைகள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மொத்தமாக மிஞ்சிவிடும் போல இருக்கிறது. மொத்தத்தில் ஜோதிடம் கணிக்கும் எல்லாரும் ஒரே ஒரு அனுமானத்தில் தான் வேலை செய்கிறார்கள், அது: அண்டத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது தான்.

இந்த சக்திக்கு பலர் பல அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறார்கள்.புவி ஈர்ப்பு சக்தி என்கிறார்கள். மின்காந்த சக்தி என்கிறார்கள். இன்னும் சிலர் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதை அளக்க முடியாது என்றும் விவரிக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசியில் பார்த்தீர்களேயானால் இந்த சக்திகள் எல்லாம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அவை நம் மீது செலுத்தும் சக்தியையுமே குறிக்கின்றன.

கிரகங்களின் சக்தி என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதை அளக்க முடியும்.தனிமனிதன் மீதிருக்கும் அதன் சக்தியை அளக்கமுடியவில்லை என்றாலும் ஒரு கும்பல்(!) மீதிருக்கும் சக்தியையாவது அளக்கமுடியவேண்டும் இல்லையா? இன்றிலிருந்து சரியாக இன்னும் பத்துவருடங்களுக்குப் பிறகு வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகச் சொல்லமுடியாது ஆனால் வெயிலடிக்கும் என்று தோராயமாகச் சொல்லமுடியும். ஆனால் இதையும் ஸ்டாட்டிஸ்டிக்ஸைப் பயன்படுத்தி சோதிக்கமுடியும். இந்த கணிப்பைக்கூடச் சரிபார்க்கமுடியும் இல்லியா?

முதலில் ஜோதிடர்கள் சொல்வது போல கிரகங்களும் நட்சத்திரங்களும் நம்மைப் பாதிக்குமா என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு அவர்கள் சொல்வது போல எந்த சக்தியும் இல்லை இருக்கவும் முடியாது என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு ஜோதிடர்கள் அந்த சக்தியை அளக்கமுடியும் என்று சொல்வது உண்மைதானா என்று பார்ப்போம்(ஒரு க்ளு தருகிறேன்: அவர்கள் சொல்வது பொய்!) அப்புறம் ஜோதிடம் எப்படி மக்களை தெளிவாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

கொஞ்ச நேரத்துக்கு சும்மானாச்சுக்கும் கிரகங்களின் ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம்மைப் பாதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்;அந்த சக்தி என்னவாக இருக்கமுடியும்?

மூளையைத் திறந்து வைத்துக்கொண்டு யோசிப்போம். நமக்கு இருக்கும் சாய்ஸ் ரொம்பவும் கம்மி.

கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிகமிகமிக குறைவு ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. அடிப்படை இயற்பியல்.

தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் அடிப்படையில் மொத்தம் நான்கு சக்திகளே இருக்கின்றன. அவை புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, பிறகு கடின சக்தி (strong force) மற்றும் சன்ன சக்தி(week force). இதில் கடைசி இரண்டு சக்திகள் அணு அளவில் மட்டுமே வேலைசெய்யும். அதுவும் இந்த கடினசக்தி என்பது தூரத்தைப்பொருத்து மாறுபடும். கொஞ்ச பில்லியன் மீட்டர்கள் வந்துவிட்டீர்கள் என்றால் இந்த சக்தி காணாமலே போய்விடும்.

நமக்கும் கிரகங்களுக்குமிடையேயான தூரம் பில்லியன் மீட்டர்ஸைத் அசாத்தியமாகத் தாண்டுவதால் கடைசி இரண்டு சக்திகளும் இங்கு செல்லாது செல்லாது.

எனவே நமக்கு இப்பொழுது புவி ஈர்ப்பு சக்தியும் மின்காந்த சக்தியும் மட்டுமே இருக்கின்றன.

புவி ஈர்ப்பு சக்தி மிகப்பெரிய அளவில் (சூரிய மண்டலம்) எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியும்.அடிப்படையில் புவி ஈர்ப்பு சக்தி இரண்டு விசயங்களைச் சார்ந்தது. ஒரு பொருளின் எடை மற்றும் அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது.பொருளின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் புவி ஈர்ப்பு விசை அதிகமாகும். அதேபோல நீங்கள் அந்த பொருளுக்கு பக்கத்தில் போகப் போக அதன் புவி ஈர்ப்பு விசை அதிகரிக்கும்.

சரி தான் ஆனால் இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் எண்களை உபயோகிப்போம்.ஜூப்பிடர் சந்திரனை விட 25,000 மடங்கு எடை அதிகம் கொண்டது. உண்மையில் இது ரொம்ப அதிகம். ஆனால் அதே சமையத்தில் ஜூப்பிடர் சந்திரனை விட 1500 மடங்கு அதிக தூரத்தில் இருக்கிறது. இப்பொழுது புவிஈர்ப்பு விசை யாருக்கு அதிகம் இருக்கும்? சந்திரனுக்குத் தான்; தூரம் அதிகமாக அதிகமாக புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைந்து விடும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சந்திரனுடன் ஒப்பிடப்பட்டது. சந்திரனின் சக்தி ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மற்ற கிரகங்களின் சக்தி எவ்வளவு இருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது கீழிருக்கும் அட்டவணை.

Planet Mass
(10^22 kg)
Distance
Gravity
(Moon=1)
Tides
(Moon=1)
Mercury 33 92 0.00008 0.0000003
Venus 490 42 0.006 0.00005
Mars 64 80 0.0002 0.000001
Jupiter 200,000 630 0.01 0.000006
Saturn 57,000 1280 0.0007 0.0000002
Uranus 8,700 2720 0.00002 0.000000003
Neptune 10,000 4354 0.00001 0.000000001
Pluto ~1 5764 0.0000000006 0.00000000000004
Moon 7.4 0.384 1.0 1.0

(Thanks: Phil Plait)

பார்த்தீர்களா? கிரகங்கள் நம்மீது செலுத்தும் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக குறைவு. புவி ஈர்ப்பு விசை தான் ஜோதிடர்களின் கணிப்புக்கு உதவியாக இருக்கிறது என்றால் சந்திரன் தானே எல்லா கிரகக்களை விடவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? இல்லையே!

இதையே பிடித்துக்கொண்டு சந்திரனுக்குத்தன் சக்தி இருக்கிறதே; அதை வைத்தும் நாங்கள் ஜோதிடம் கணிப்போம் என்று சொல்லாதீர்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனை ஒப்பிட்டுப்பார்ப்பதற்குத்தான். உண்மையில் சந்திரனின் சக்தியும் மிகவும் குறைவுதான்.

எனவே புவி ஈர்ப்பு விசை இல்லை. மின் காந்த சக்தியாக இருக்குமோ?ஒருவேளை அப்படி இருக்குமோ?

புவி ஈர்ப்பு விசை எடையையும் தூரத்தையும் பொருத்தது என்றால் மின் காந்த சக்தி மின் சக்தியையும் தூரத்தையும் பொருத்து மாறுபடும். பிரச்சனை என்னவென்றால் இந்த மிகப்பெரிய பொருள்களான கிரகங்களுக்கு மின் சக்தியே இல்லை என்பது தான்.மின் சக்தி எல்க்ட்ரான்களிடமிருந்தும் ப்ரோட்டான்களிடமிருந்தும் வருகிறது. எதிர் சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும்; எனவெ ஒன்று இல்லாமல் இன்னொன்றைப் பார்ப்பது என்பது முடியாத காரியம். எனவே கிரகங்கள் நியூட்ரல் சார்ஜ் கொண்டவை. அவைக்கு மின்சக்தியே கிடையாது.

சிற்சில காரணங்களால் சில கிரகங்களுக்கு காந்த சக்தி இருப்பதுண்டு. ஆனால் மீண்டும் இதுவும் தூரத்தைப் பொருத்து மாறும்.ஜூப்பிடரின் காந்த சக்தி மிக அதிகம். ஆனால் அது பூமியிலிருந்து மிகவும் தூரமாக இருக்கிறது. எனவே நம்மீது எந்தவித பாதிப்பையும் அதனால் உண்டுபண்ண முடியாது.மேலும் சூரிய குடும்பத்தில் சூரியனுக்குத்தான் அதிக காந்த சக்தி இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வெடிப்புகளால் மின் சக்தி கொண்ட அணுக்கள் மிக அதிகமாக வெளிப்படும் பொழுது அவை பூமியின் காந்த சக்தியை பாதிக்கக்கூடும்.1989இல் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

எப்படிப்பார்த்தாலும் மற்ற கிரகங்களின் காந்த சக்தி சூரியனின் காந்த சக்தியோடு ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவு. சூரியனுக்கல்லவா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் ஜோதிடத்தில் சூரியனை விட மற்ற கிரகங்களுக்கு தானே முக்கியத்துவம் அதிகம் இருக்கிறது?

மிஸ்டர் சூரியனார் இதில் ஏதோ சதி இருக்கிறது!

நமக்கு கொஞ்சமாவது பக்கத்தில் இருக்கும் கிரகங்களே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொழுது பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்? சுத்தம். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி 4.3 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

புவி ஈர்ப்பு விசை என்றால் சந்திரன் தான் எல்லா கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.மின்காந்த சக்தி என்றால் சூரியன் தான் மற்ற கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.

இரண்டுமே இல்லையே.

பிறகு எந்த சக்தி? நமக்கு மீதமிருக்கும் சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஜோதிடர்களின் நம்பிக்கை என்னவென்றால் இவை தவிர அறிவியலுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது தான். ஆனால் அந்த நம்பிக்கையும் பிரகாசமாக இல்லை.

எல்லா சக்திகளும் தூரத்தைப் பொருத்து மாறுபடும்.இது அடிப்படை அறிவியல். ஒரு பொருள் நமக்குத் தூரமாக இருக்கிறது என்றால் அது நமக்குப் பக்கத்தில் இருக்கும் பொருளைவிட மிகவும் கம்மியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் ஜோதிடர்கள் எல்லா கிரகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர். எனவே ப்ளூடோவும் வீனஸ¤ம் ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஜோதிடர்களின் கூற்றுப்படி கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கும் அவைகளின் தூரத்துக்கும் சம்பந்தமேயில்லை. அதே போல் கிரகங்களின் எடையும் ஒரு பொருட்டே இல்லை. இல்லையென்றால் ஜூப்பிடர் அல்லவா சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும். மெர்க்குரி எல்லாம் ஆட்டைக்கே வராது!

இது சரியாகப்படவில்லையே! விண்கற்கள்? விண்கற்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை.அவை மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சூரியனைச்சுற்றி வருகின்றன.இவற்றுள் பெரும்பாலனவை மற்ற கிரகங்களை விட பூமிக்குத்தான் மிக அருகில் இருக்கின்றன. எனவே அவைகளும் நம்மைப் பாதிக்கவேண்டுமே?பிரச்சனை என்னவென்றால் விண்கற்கள் நிறைய-மிக நிறைய இருக்கின்றன.100 மீட்டர் அகலமுள்ள விண்கற்கள் நம் சூரியகுடும்பத்தில் மட்டும் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு பில்லியன்.இவை மிக மிக அதிகம்.பல கிரகங்களுக்குச் சமம். ஜோதிடர்கள் இவைகளையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது?கன்ஸிடர் பண்ணுங்கப்பா.

வான் ஆராய்ச்சியாளர்கள் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் 150 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நிச்சயம் அவை ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. ஆனால் ஜோதிடர்களுக்குத்தான் தூரம் ஒரு பிரச்சனையில்லியே? எனவே இந்த கிரகங்களும் நம்மீது பாதிப்பை உண்டுபண்ணவேண்டும்.150 கிரகங்கள் என்பது இது வரை கண்டுபிடிக்கப்பட்டவை. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நம் பால்வெளியில் மட்டும் மொத்தம் பில்லியன் கிரகங்கள் இருக்கின்றன.கிரகங்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. அவைகளையும் ஏன் ஜோதிடர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடாது?

இப்படி யோசியுங்கள். கிரகம் தங்களது தாய் நட்சத்திரத்தை சுற்றி வரவேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் வைத்திருக்கும் டேட்டாவை வைத்து இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே என்று கணிக்கிறார்கள். பின் நாளில் அது உண்மையுமாகிறது. 50 வருடங்களுக்கு முன் வரை ஏன் ஒரு ஜோதிடர் கூட “அடடா இப்பத்தான் மைன்ட்ல ஸ்ட்ரைக் ஆச்சு..இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே” என்று கணிக்கவில்லை?ஏனென்றால் அவர்களால் முடியாது. அவர்கள் வைத்திருக்கும் டேட்டா ஒன்றுக்கும் ஆகாதது. அதற்கு அர்த்தமேயில்லை.

ஜோதிடர்களின் விதிப்படி (தூரமும் எடையும் பொருட்டே அல்ல) இந்த கண்டுபிடிக்கப்படாத பில்லியன் கிரகங்களின் பாதிப்பு எல்லாம் சேர்ந்தால் அது நமது சூரிய குடும்பத்தின் கிரகக்களின் பாதிப்புகளை சும்மா ஊதித்தள்ளிவிடவேண்டும். ஒரு அணுகுண்டு வெடிக்கும் பொழுது அது எப்படி ஊசி விழும் சத்தத்தை விழுங்கி விடுகிறதோ அது போல.

எனவே நாம் கீழ்க்கண்ட ஒரு முடிவுக்கு வரலாம்.
1. நமக்குத் தெரிந்த சக்தி இருக்கிறது;ஆனால் அது ஜோதிடத்துக்கு உதவாது.
2. நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது.அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத (ஆனால் உண்மையில் இருக்கின்ற) பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் (இப்பொழுது) ஜோதிடத்தில் இது இல்லை.

எனவே தெரிந்த சக்தியும் இல்லை தெரியாத சக்தியும் இல்லை.

பிறகு ஜோதிடம் என்பது என்ன? பொய்.ஏமாற்று வேலை.

(மேலும்)