ஓவியர் பாரதிராஜா – கதைசொல்லி சிவக்குமார் – அட்லாண்டிஸ் வீடியோ

நம்ம ஊரரசு இந்த வார விகடனுக்கு கொடுத்திருந்த பேட்டியில் “இயக்குனர் என்றால் பாரதிராஜா தான் நினைவுக்கு வருவார்” என்றார். (ஊரரசு பேட்டியவெல்லாம நீ படிக்கிறன்னு கேக்காதீங்க!). என்னைப் பொருத்தவரையிலும் இது தான் உண்மை. தமிழ் மொழியில் வேறு வேறு தளங்களில் படம் கொடுத்தவர் பாரதிராஜா மட்டுமே. சிவப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே, ஒரு கைதியின் டைரி, கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய ஆல் டைம் பேவரிட் படம் முதல் மரியாதை தான்.

அவரை ஒரு முறை லேன்ட் மார்க்கில் வைத்து பார்த்திருக்கிறேன். வழக்கம் போல் ஒரு டி சர்டும் ஜீன்சும் போட்டுக்கொண்டு புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். கை குழுக்கள்களுக்கு அப்பால் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம். திரும்பி வரும் பொழுது ஒரு மிகப் பெரிய இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தது போல இல்லை.

பாரதிராஜா ஒரு சிறந்த ஓவியர் என்பது எனக்கு இன்று தான் தெரிந்தது. அதுவும் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரை வரைந்திருக்கிறார். இதோ பாரதிராஜா வரைந்த எஸ்.ராமகிருஷ்ணனின் படம்.

(படம்: விகடன்)
*

நடிகர் சிவக்குமார் நன்றாகப் படம் வரைவார் என்று தெரியும் ஆனால் நன்றாக கதை அடிப்பார் என்று அண்மையில் தான் தெரியவந்தது. ஏதோ  ஒரு பெண்கள் கல்லூரியில் விழிகள் தெரிக்க அவர் மொக்கை போட்டுக்கொண்டிருந்ததை விஜய் டீவியில் பார்க்க நேர்ந்தது. அதில் முக்கியமாக என்னை கடுப்பேற்றிய விசயம்.ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் காண்டம்கள் கொத்து கொத்தாகக் கிடைத்தனவாம். இது என் எல்கேஜி காலத்திலிருந்து மிகவும் பிரபலமான கதை. வேதாளம் புளியமரத்தில் இருப்பதைப் போல.எந்த வேதாளம் எந்தப் புளியமரம் என்று கேட்டுப்பாருங்கள் ஒரு பயலுக்கும் தெரியாது.சிவக்குமாரிடம் எந்த கம்பெனி எந்த வருடம் என்று கேட்டுப்பாருங்கள்!

அப்புறம் பெண்பிள்ளைகளுக்கு அட்வைஸ் வேறு. நீங்கள் ஏன் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்கள். அது துரோகம் இல்லையா – என்பது போல பல பிதற்றலகள்.இவை யாவும் சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டரில் வேலை பார்க்கும் பெண்களை (அதன் மூலமாக ஆண்களை) நோக்கி வீசப்பட்ட கேள்விகள். என்னவோ அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகத்தான் வேலைக்கே செல்கிறார்கள் என்பதைப் போல.

என்னை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு அட்வைஸ் (பெண்களுக்கு):
படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைத்தவுடன் கூட வேலை பார்பவனையே (நல்லவனா என்று பார்த்து!) கல்யாணம் செய்துக்கனுமாம். இல்லீன்னா யாரோடவாவது அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வார்களாம்!

எப்பூடி!

இது (செக்ஸ் பிரச்சனை) என்னவோ சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டர் தொழில்களுக்குத் தான் இருக்கிறது என்பது போல கதைகள் பிண்ணப்படுகின்றன. அப்புறம் இவரைப் போன்ற ராமச்சந்திர மூர்த்திகள் அக்கதைகளைப் பரப்பிவிடுகின்றனர்.

அக்கதைகளைப் பரப்பும் முன் இன்னும் ஜாதகம் பார்த்து வரதட்சனை கொடுத்து கல்யானம் செய்துகொடுக்கும் இந்தச் சமூகத்தில் இம்மாதிரியான செக்ஸ் கதைகள் எத்தகைய விளைவுகளை இருபாலருக்கும் உண்டு பண்ணும் என்று ஸ்ரீல ஸ்ரீ ராமசந்திரமூர்த்திகள் யோசிப்பது நலம்.

*

ஜுலை 17 அன்று அமெச்சூர் வானாராய்ச்சியாளர் ஸ்காட், அட்லான்டிஸ் ஸ்பேஸ் ஷட்டிள், இன்டர்னேஷனல் ஸ்பேஸ் (ISS) ஸ்டேஷனில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதை வீடியோ எடுத்திருக்கிறார்.

ஐஎஸ்எஸின் மேலே தெரிகிற வெள்ளையான பொருள் தான் அட்லாண்டிஸ். சோலார் பேனல்களையும் நீங்கள் பார்க்கமுடியும்.

*

பூமியிலிருந்து தெரியும் பால்வெளி!

Greenwich Royal Observatory இந்த வருடத்தில் “சிறந்த வானியல் புகைப்படம்” போட்டியின் முடிவை வெளியிட்டிருக்கிறது. வெற்றி பெற்ற புகைப்படங்களை இங்கே காணலாம். மற்ற எல்லா புகைப்படங்களையும் இங்கே பார்க்கலாம்.

பூமியும் பிரபஞ்சமும் (Earth and Space) என்கிற தலைப்பில் வெற்றி பெற்ற புகைப்படம் கீழே:

மிகப்பழமையான மரத்தை ஒட்டினாற் போல கத்தையான ஒளிக்கீற்று தெரிகிறதல்லவா அதுதான் நம் பூமி இருக்கும் சூரியகுடும்பம் இருக்கும் பால்வெளி (Milkyway Galaxy). நம் பால்வெளி தட்டையான டிஸ்க் போன்றது; நட்சத்திரங்கள், வாயுக்கள் மற்றும் தூசியிலானது. ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் (9 லட்சம் ட்ரில்லியன் கிலோமீட்டர்)அகலம் கொண்டது. பால்வெளியின் நடுவிலிருந்து பால்வெளியின் கடைக்கோடி தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் நமது சூரியன் இருக்கிறது. (ஒரு ஓரத்தில்!) இந்தப் புகைப்படம் பால்வெளியின் உள் நோக்கிப் மையத்தைப் பார்க்கின்றது.ஒரு டிவிடி டிஸ்கின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு டிஸ்கின் மையத்தைப் பார்ப்பது போன்று.

மேலும் இந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த மரம் மிகவும் பழமையானது – செங்கிஸ் கான் படையெடுப்பின் பொழுது இந்த மரம் இங்கே நின்று கொண்டிருந்ததாம். செங்கிஸ் கான் பார்த்த மரத்தை நாமும் பார்க்கிறோம்! இதுவே ஆச்சரியமாக இருந்தால் – இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பல நட்சத்திரங்களின் ஒளி முப்பதாயிரம் வருடப் பழமையானது. நீங்கள் பார்க்கும் நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி முப்பதாயிரம் வருடத்திற்கு முன்னால் தனது பயணத்தை ஆரம்பித்தது.

உங்களுக்குத் தெரியுமா?
சூரியனின் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? எட்டு நிமிடங்கள். அதாவது நாளை மதியம் 12:00 மணிக்கு தகிக்கும் வெயிலில் நீங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது யாராவது சூரியனை தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டால் 12:08 க்குத்தான் சூரியன் அணைந்துவிட்டது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் 11:59 க்கு சூரியனிலிருந்து கிளம்பிய ஒளி பூமியை 12:07க்குத்தான் வந்தடையும். அதேபோல 12:00 மணிக்கு சரியாக சூரியன் அணைந்து விடும் முன்னர் கிளம்பிய ஒளி பூமியை 12:08க்குத்தான் வந்தடையும்.

நீங்கள் பார்க்கும் நட்சத்திரங்களின் ஒளி ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை!

புகைப்படங்களைக் கண்டு களியுங்கள்! Be inspired!

வெளிர் நீலப் புள்ளி

இந்தப் படத்தில் ஒரு வெளிர் நீலப் புள்ளி தெரிகிறதா? அது தான் பூமி. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள்!

·பெப்ரவரி 14 1990 அன்று வாயேஜர்-1 ப்ளூட்டோவைக் கடந்து சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி பரந்து விரிந்த அண்டத்தில் கிட்டத்தட்ட 60,000 கிமீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. கடைசியாக ஒரு முறை சூரியமண்டலத்தைப் பார்த்து விட சட்டென அது திரும்பியது. திரும்பிய வேகத்தில் பூமியை ஒரு புகைப்படம் எடுத்தது. அது தான் மிகப் பிரபலமான வெளிர் நீலப் புள்ளி எனப்படும் புகைப்படம். The Pale Blue Dot. இந்தப் புகைப்படத்தை எடுக்குமாறு நாசாவை வற்புறுத்தியவர் கார்ல் சாகன்.

இந்தப் படம் கிட்டத்தட்ட 6.1 பில்லியன் கிலோமீட்டர் தூரத்திலிருந்து எடுக்கப்படது. அண்டத்தின் பரப்பில் இது ஒரு சொற்ப தூரம் தான். இத்தனை குறைவான தூரத்திலிருந்து எடுக்கும் பொழுதே பூமி ஒரு புள்ளியாகத்தான் தெரிகிறது!

தனது புகழ்பெற்ற வீடியோவான காஸ்மோஸில் கார்ல் சாகன் பின்வறுமாறு சொல்கிறார்:

இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு இந்த சிறு தூசியின் மேல்ப் பெரிதாக ஈர்ப்பு ஏதும் ஏற்படப்போவதில்லை. ஆனால் நமக்கு? மீண்டும் ஒரு முறை அந்தப் புள்ளியைப் பாருங்கள். அந்தப் புள்ளி தான் இந்த பூமி. அந்தப் புள்ளியில்தான் நாம் வாழ்கிறோம். அந்தப் புள்ளி தான் நாம். இங்கே தான் – நீங்கள் அன்பு செலுத்தும் ஒவ்வொரு மனிதனும், உங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு மனிதனும், நீங்கள் இது நாள் வரை கேளிவிப்பட்டு தெரிந்து கொண்ட ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திருக்கிறான் – வாழ்ந்துகொண்டிருக்கிறான். நம்முடைய சுக துக்கங்கள், ஆயிரக்கணக்கான மதங்கள், நம் கொள்கைகள் கோட்பாடுகள் பொருளாதார சித்தாந்தங்கள்; ஹீரோக்கள், கோழைகள்; ஒவ்வொரு நாகரிகத்தை உருவாக்கியவரும், அந்த நாகரீகத்தை அழித்தவரும்; ஒவ்வொரு அரசனும், விவசாயியும், ஆண்டியும்; எல்லா இளஞ்சோடிகளும்; ஒவ்வொரு அப்பாவும் அம்மாவும்; ஒவ்வொரு குழந்தையும்; ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும், ஆய்வாளரும், ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியும்; அறநெறி போதித்த ஒவ்வொருவரும்; ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியும்; ஒவ்வொரு சூப்பர் ஸ்டாரும்; ஒவ்வொரு தலைவரும்; ஒவ்வொரு முனிவரும் – உங்களுக்கு இதுவரைத் தெரிந்த தெரியாத மனித குலத்தில் தோன்றிய எல்லோரும்; மற்ற உயிரினங்கள் எல்லாமும்; இந்த சிறு தூசியில் தான் இருந்திருக்கிறார்கள்.


பரந்து விரிந்த அண்டத்தில் பூமி ஒரு மிகச்சிறிய மேடை. ஒரு தூசி. இந்த தூசியின் ஒரு மிகச்சிறிய பகுதியில் கணநேர அதிகாரத்தை அடைவதற்காக சிந்தப்பட்ட ரத்த ஆறுகள் எத்தனை எத்தனை. இந்த தூசியின் ஒரு பகுதியின் மனிதன் அவனைப் போலவே தூசியின் அந்தப் பக்கத்திலிருக்கும் மனிதனிடம் காட்டிய குரூரங்கள் எத்தனை எத்தனை. இவர்களுக்குள் ஏற்பட்ட புரிதலின்மைகள் எத்தனை. இவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள எத்தனை முனைப்போடு இருக்கிறார்கள். இவர்களுக்குள் இருக்கும் வெறுப்புகள் எத்தனை.


ஊதிப் பெரிதாக்கப்பட்ட நமது நம்பிக்கைகள், நாமே உருவாக்கிய மதிப்பீடுகள்; நம்முடைய சுயமுக்கியத்துவம்; நமக்கு இந்த அண்டத்தில் எதோவொரு சலுகை இருக்கிறது போன்ற வாதங்களை எல்லாம் இந்த சிறிய புள்ளி கேள்விக்குறி ஆக்குகிறது. பரந்து விரிந்த இருண்ட அண்டத்தில் நாம் ஒரு சிறிய புள்ளி. நம்மிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேறு எங்கோ இருந்து உதவி வரும் என்கிற நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை.


இது வரை நமக்குத் தெரிந்த அண்டத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய காலத்துக்கு வேறு எங்கும் நாம் புலம்பெயர முடியாது. போகமுடியலாம். ஆனால் அங்கேயே வாழமுடியுமா என்றால் – இன்னும் நேரம் வரவில்லை. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நம்முடைய வாழ்க்கை இங்கேதான்.


வானவியல் நம்மை எளிமைப் படுத்தும் நற்பண்புகளை வளர்க்கும் ஒரு அனுபவம் என்று சொல்லுவார்கள். மனிதனின் முட்டாள் தனமான தற்பெருமைகளை உடைத்தெரிய இந்த சிறிய புள்ளியை விட வேறு ஏதும் தேவையிருக்காது. என்னைப் பொருத்தவரையில், நாம் நமக்கிடையே இருக்கும் வெறுப்புகளைக் களைந்துவிட்டு; அன்பைச் செலுத்தி; நமக்குத் தெரிந்த ஒரே இருப்பிடத்தை – இந்த வெளிர் நீலப்புள்ளியை – பாதுகாக்க வேண்டும் என்பதையே இந்தப் புகைப்படம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


– கார்ல் சாகன்

Pale blue dot – Video.

இந்தப் புகைப்படம் (இந்த விஞ்ஞானியும்) தான்; என்னை புரட்டிப்போட்டது. என் சிந்தனைகளை மாற்றியமைத்தது. நான் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து, இந்த புகைப்படத்தினாலும் கார்ல் சாகனாலும் தங்களது சிந்தனைகளை மாற்றிக் கொண்டவர்கள் பலர். தன்னை தன்னிடமிருந்து விடுவித்துக்கொண்டவர்கள் பலர்.

ஆனால் மாற்றம் அவ்வளவு எளிதல்ல – தொடர்ந்த வாசிப்பும்; திறந்த மனமும்; நிறைய கேள்விகளுமே மாற்றத்தை உருவாக்கும்.

அண்ட‌ம் எவ்வ‌ளவு பெரிய‌து?

நான் எத்த‌னை முறை இந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்தாலும்; இந்த‌ப்ப‌ட‌ம் என்னை ஆச்ச‌ரிய‌த்திலும், விய‌ப்பிலும்; நான் எவ்வ‌ள‌வு சிறிய‌வ‌ன் என்ப‌தையும் உண‌ர்த்திக்கொண்டேயிருக்கும்.

இந்த‌ப் ப‌ட‌த்தில் நீங்க‌ள் பார்க்கும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு கேலெக்ஸி. த‌மிழில் ந‌ல்ல‌ சொல் தேடிப்பார்த்தேன் ந‌ட்ச‌த்திர‌க்குடும்ப‌ம் என்று தான் கிடைத்த‌து. பால்வெளி என்று சொல்வ‌து த‌வ‌று. ஏனென்றால் பால்வெளி என்ப‌து ந‌ம‌து ந‌ட்ச‌த்திர‌ம‌ண்ட‌ல‌த்தை ம‌ட்டுமே குறிக்கும் ஒரு பெய‌ர்ச்சொல். முத்து என்ப‌தைப் போல‌; மில்கி வே.

மில்கிவே கேல‌க்ஸி என்ப‌து எப்ப‌டி வ‌ந்த‌து என்று தெரியுமா? வானில் சில‌ நேர‌ங்க‌ளில் லைட் பொல்யூச‌ன் இல்லாத‌ இட‌ங்க‌ளில் பால் போன்ற‌ வெள்ளைக் கோடு தெரியும். அது நாம் குடியிருக்கும் ந‌ம‌து மில்கிவே கேல‌க்ஸி தான். கிரேக்க‌ர்க‌ள் த‌ங்க‌ள் க‌ட‌வுளான‌ ஹெராவின் மார்பிலிருந்து பீய்ச்சி அடித்த‌ பால் என்று ந‌ம்பினார்க‌ள். கேல‌க்ஸி என்ப‌த‌ற்கு கிரேக்க‌த்தில் பால் என்று பொருள்.

ச‌ரி இந்த‌ப் ப‌ட‌த்துக்கு வ‌ருவோம். ம‌றுப‌டியும் நான் சொல்ல‌வ‌ருகிற‌ க‌ண‌க்கு உங்க‌ளுக்கு புரிய‌வில்லை என்றால்; என்னுடைய‌ விய‌ப்பை நீங்க‌ள் புரிந்துகொள்ள‌வில்லை என்றால்; மீண்டும் சொல்கிறேன் ‍ நீங்க‌ள் இந்த‌ப் ப‌ட‌த்தில் பார்க்கும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு கேல‌க்ஸி.

ஒரு கேல‌க்ஸியில் சுமார் 250 பில்லிய‌ன் ந‌ட்ச‌த்திர‌ங்கள் (சூரிய‌ன்க‌ள்) இருக்கும் என்று க‌ண‌க்கிடுகிறார்க‌ள். மொத்த‌ம் தோராய‌மாக‌ நூறிலிருந்து இருநூறு பில்லிய‌ன் கேல‌க்ஸிக‌ள் இருக்கும் என்று க‌ணித்திருக்கிறார்க‌ள். நாம் பேசிக்கொண்டிருப்ப‌து பில்லிய‌ன் க‌ண‌க்கு என்ப‌தை ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள். ஒரு பில்லிய‌ன் = 1000000000!

ந‌ம்ம‌ ந‌ட்ச‌த்திர‌ம் (சூரிய‌ன்) ஒரு க‌டைசில‌ இருக்கிற‌ ஒரு கேல‌க்ஸில‌ ஒரு க‌டைசில‌ இருக்கிற‌ ஒரு மிக‌ச்சாத‌ர‌ண‌ ந‌ட்ச‌த்திர‌ம். அதை சுத்தி வ‌ர்ற‌ மிக‌ச் சிறிய‌ கிர‌க‌ம் நம்ம‌ பூமி. அந்த‌ பூமில‌ ஒரு சின்ன‌ இட‌த்தில‌ வ‌சிக்கிற‌ ஒரு துக‌ள் நான். அப்ப‌, நான் எவ்வ‌ள‌வு சிறிய‌வ‌ன்? அண்ட‌ம் எவ்வ‌ளவு பெரிய‌து?

சால்வ‌டார் டாலியின் இந்த‌ ஓவிய‌மும் இதைத்தான் சொல்கிற‌து.

பாரீஸில் இவ‌ர‌து ஓவிய‌க் க‌ண்காட்சி ஒன்று இருக்கிற‌து. பாரீஸ் போனால் க‌ண்டிப்பாக‌ப் போய்வாருங்க‌ள்.

நமக்கு பக்கத்தில் பூமி போல ஒரு கிரகம்

பூமியைப் போன்று மூன்று மடங்கு பெரிதான ஒரு கிரகம் நமக்கு அருகில் இருக்கும் சிறிய சிவப்பு (red dwarf) நட்சத்திரமான கில்லசி 581ஐ (Gilese 581) சுற்றி வந்து கொண்டிருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் இது ஒரு மிகபெரிய செய்தி. இந்த மாதிரி கிரகங்களை கண்டுபிடிப்பது மிக மிகக் கடினம். (ஏன் இதுநாள் வரை ஜோதிடர்களால் இது போன்றதொரு கிரகத்தைக் கணக்கிட்டு கண்டுபிடிக்க முடியவில்லை? அதானே, அவர்கள் இது வரையிலும் சூரியனையும் சந்திரனையும் கிரகங்கள் லிஸ்டில் வைத்திருப்பவர்கள் தானே?!)

மிகவும் ஆச்சரியம் அளிக்கும் செய்தி என்னவென்றால் நட்சத்திரத்திலிருந்து இந்த கிரகம் அமைந்திருக்கும் தொலைவு அதை கால்டிலாக் ஜோனில் வைக்கிறது. (Goldilock Zone) – அதாவது நட்சத்திர மண்டலத்தின் இந்தப் பகுதியில் தான் தண்ணீர் திரவமாக இருக்கும்!

1) Gilese 581 ஒரு சிறிய வெப்பம் குறைந்த நட்சத்திரம். நம்மிடமிருந்து (பூமியிலிருந்து) வெறும் 20 ஒளிஆண்டு தூரமே! (ஒரு ஒளி ஆண்டு என்பது பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு கொஞ்சம் குறைவான தூரம்!) இருபது ஒளிஆண்டு என்பது பிரபஞ்சத்தின் பரப்போடு ஒப்பிடும் பொழுது, மிக மிகக் குறைவான தூரம். (குறைவான தூரம் என்று சொன்னாலும், நாம் இருநூறு ட்ரிலியன் தூரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க!)

2) இந்த கிரகம் அந்த நட்சத்திர குடும்பத்திலிருக்கும் மற்ற ஆறு கிரகங்களில் ஒன்று. (இது வரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை தான் இது) எல்லா கிரகங்களின் சுற்றுப்பாதையும் தெளிவான வட்டவடிவமாய் இருப்பதால், இந்த நட்சத்திரக்குடும்பம் கொஞ்சம் நிலையாக இருக்கிறது. இந்த புதிய கிரகம் தன் நட்சத்திரத்தை ஒரு முறை சுற்றிவர 37 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. நட்சத்திரத்திலிருந்து இந்த புதிய கிரகம் அமைந்திருக்கும் தூரம், பூமி சூரியனிலிருந்து அமைந்திருக்கும் தொலைவில், 1/6 மடங்காகும். இது அந்த சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து நான்காவது கிரகம்.

3) சரி இந்த மாதிரி கிரகங்களை பூமியில் உட்கார்ந்து கொண்டு எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? டாப்லர் முறையைப் பயன்படுத்தி தான்! கிரகம் நட்சத்திரத்தை சுற்றி வரும் பொழுது நட்சத்திரத்தை கொஞ்சம் இழுக்கும், அப்படி இழுக்கும் பொழுது நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியின் அலைநீளத்தில் (wavelength) கொஞ்சம் மாற்றம் இருக்கும். கிரகத்தின் நிறை (mass), தன் நட்சத்திரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு, அதன் கோளப்பாதை போன்றவை இந்த அலைநீளத்தின் (wavelength) மாற்றத்தை தீர்மானிக்கும். இந்த அலைநீளத்தின் மாறுதல், கிரகத்தின் குணங்களை விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள உதவிபுரிகின்றது.

இவைதான் நமக்கு தெரிந்த விசயங்கள். நாம் வேறு எந்தெந்த விசயங்களில் உறுதியாக இருக்கிறோம்?

நீங்கள் நட்சத்திரத்துக்கு மிக அருகில் இருந்தால் தண்ணீர் திரவ வடிவில் இருக்காது; ஆவியாகிவிடும். நட்சத்திரத்திலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்தால் வேறு பிரச்சனை தண்ணீர் உறைந்து விடும். ஏனவே நட்சத்திரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தண்ணீர் திரவ வடிவமாக இருக்கும்! இது தான் நான் மேற் சொன்ன கால்டிலாக் ஜோன் (Goldilock zone). மேலும் இது கிரகத்தைப் பொருத்தும் அமையும். வீனஸில் தண்ணீர் திரவ வடிவில் இருந்திருக்கக்கூடும் ஆனால் அதன் மிக அடர்த்தியான வளிமண்டலம் க்ரீன் ஹவுஸ் எ·பகெட்டை ஏற்படுத்தி கிரகத்தை 460 டிகிரி செல்சியஸிற்கு சூடாக்கி விடுகிறது! மார்ஸ் (செவ்வாய்) கிரகத்தின் வளிமண்டலம் அடர்த்தியாக இருந்திருந்தால் தண்ணீர் அங்கு திரவ வடிவில் இருந்திருக்கும்! எனவே கால்டிலாக் ஜோனை மீறி கிரகத்தின் தன்மையும் தண்ணீரின் திரவத்தன்மையை தீர்மானிக்கிறது.

கில்லசி 581ஜி – அப்படித்தான் புதிய கிரகத்தை அழைக்கிறார்கள் – நட்சத்திரத்திலிருந்து சரியான தொலைவில் இருக்கிறது. பூமியைப் போன்று மூன்று மடங்கு பெரிதாக இருப்பதனால் இது கேஸ் ஜெயன்ட்டாக (Gas Giant) – ஆவியால் ஆன கிரகம் – இருக்க வாய்ப்பில்லை. ஆவியால் ஆன கிரகமா? புதுசா இருக்கே! ஆமாம். நம் நட்சத்திரக் குடும்பத்திலே நான்கு ஆவி கிரகங்கள் இருக்கின்றன அவை ஜூப்பிடர், சாட்டர்ன், நெப்டியுன் மற்றும் யுரேனஸ். (இந்த ஆவி சமாச்சாரம் ஜோதிடர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனிதன் செத்ததற்கு பிற்பாடு ஆவியாகி இந்த கிரகங்களுக்குத் தான் போகிறான். அங்கே உங்களை எண்ணைக் கொப்பரையில் போடாமல் இருக்கவேண்டுமென்றால் இவை ஒவ்வொன்றையும் முறையே சனி, திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களில் நானூற்றி நாற்பது முறை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி தென்கிழக்கே திரும்பி வழிபட வேண்டும் என்று தோஷ நிவர்த்தி சொன்னாலும் சொல்வார்கள். உஸ்..அப்பா முடியல!)

ஆனால் இதையெல்லாம் வைத்து, நாம் இந்த புதிய கிரகத்தில் வசிக்க முடியும் என்று சொல்லமுடியாது. பூமி போல இருக்குமா என்றும் சொல்லமுடியாது. இங்கே தண்ணீர் இருக்குமா என்பதும் நமக்குத் தெரியாது. எனவே அங்கே உயிரினங்கள் இருக்கிறது என்றும் எப்படி நாம் அங்கே குடியேறலாம் என்றும் மூச்சுவிடாமல் மீடியா பேசினால் நம்பிவிடாதீர்கள். 🙂

இருந்தாலும் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து சிலவற்றை யூகிக்க முடியும்.

இந்த கிரகம் தன் நட்சத்திரத்தை சுற்றி வர வெறும் 37 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்வதால் இது நட்சத்திரத்துக்கு வெகு அருகில் இருக்கிறது. ஆனால் அந்த நட்சத்திரம் நம் நட்சத்திரத்தை போன்றது அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல அது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரம் (red dwarf). (நட்சத்திரங்களின் வகைகளைப் பற்றி பிரிதொருமுறை பேசலாம்.) நட்சத்திரம் சிறிதாக இருப்பதால் இந்த கிரகம் நட்சத்திரத்துக்கு அருகில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் சூடாகாது.

நட்சத்திரத்துக்கு அருகில் இருந்தால் கண்டிப்பாக கிரகம் மிகுந்த வெப்பமாகி விடவேண்டும் என்பதில்லை ;). ஆனால் நட்சத்திரத்துக்கு அருகில் இருப்பதால் அந்த நட்சத்திரம் இந்த கிரத்தின் மீது பலமான ஒரு விசையை செலுத்தும். அந்த விசையின் பெயர்: டைடல் விசை. இந்த டைடல் விசை கிரகம் நட்சத்திரத்தை சுற்றி வரும் வேகத்தை மந்தப்படுத்தி இறுதியில் கிரகம் தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும், நட்சத்திரத்தை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒரே அளவில் இருக்கும். இது கிட்டத்தட்ட கண்டிப்பாக இந்த கிரகத்துக்கு நடந்திருக்கிறது – எனவே இந்த கிரகத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்துக்கு சமம். நிலா பூமிக்கு எப்பொழுதும் தன் ஒரே முகத்தை (பகுதியை) காட்டிக்கொண்டிருப்பதைப் போல இந்த கிரகமும் தன் நட்சத்திரத்துக்கு ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கும்.

இது இங்கே உயிரனங்கள் தோன்றுவதற்கு கொஞ்சம் தடையாக இருக்கும். நட்சத்திரத்தை பார்த்தே இருக்கும் கிரகத்தின் பகுதி மிகுந்த வெப்பமாகிவிடும். அதே நேரத்தில் கிரகத்தின் மற்ற பகுதி கடும் குளிராக இருக்கும். ஆனால் வளிமண்டலம் குளிர் பகுதியிலிருந்து குளிர் காற்றை வெப்பமிகுந்த மற்ற பகுதிக்கு அனுப்புவதன் மூலம் அந்தப் பகுதியின் வெவப்பம் குறைவதற்கு சாத்தியங்கள் இருந்தாலும், கிரகத்தில் வளிமண்டலம் இருக்கிறதா என்பது நமக்கு இப்பொழுது தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. நமது பால்வெளியில் மட்டும் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன. நமது பால்வெளியின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு பயணிப்பதற்கு 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும். நமக்கு வெகு அருகில் 20 ஒளி ஆண்டு தூரத்தில், பூமியைப் போன்ற தன்மை மிகுந்த ஒரு கிரகத்தை நாம் இப்பொழுது கண்டுபிடித்திருப்பது, பரந்து விரிந்த அண்டத்தில் (தோராயமாக 125 பில்லியன் விண்வெளி மண்டலங்கள் – galaxy) இது போன்று பல ஆயிரக்கனக்கான கிரகங்கள் கண்டிப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையை விஞ்ஞானிகளுக்கு அளித்திருக்கிறது.

ஒரு அண்டத்திலே (universe) இப்படி என்றால் பல அண்டங்கள்(multiverse) இருக்கக்கூடும் என்று வேறு சில விஞ்ஞானிகள் பட்டையை கிளப்புகிறார்கள்!

Earth close to Mars and Moon : NASA chat room

செவ்வாய் கிர‌க‌த்தை அருகில் காண்ப‌த‌ற்கு இன்று ந‌ல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம். உப‌யோகித்துக்கொள்ளுங்க‌ள். செவ்வாய் ம‌ட்டும‌ல்ல‌; நில‌வு கூட‌ அருகில் தெரியும். இந்த‌ வ‌ருட‌த்தின் மிக‌ப்பெரிய‌ நிலா இன்று தான் தெரியும்.

இத‌ற்கு முன் 2003 இல் செவ்வாய் கிர‌க‌ம் ந‌மக்கு இன்னும் மிக‌ அருகில் இருந்திருக்கிற‌து. 2003 இல் நம‌க்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த‌ தூர‌ம் வெரும் 56 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தான். இது க‌ட‌ந்த 60,000 வ‌ருட‌ங்க‌ளில் இதுவே ந‌ம‌க்கும் செவ்வாய்க்குமான‌ மிக‌ குறைந்த‌ தூர‌ம்.
இப்பொழுது ஜ‌ன‌வ‌ரி 2010 இல் செவ்வாய் பூமியிலிருந்து 99 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தூர‌த்தில் இருக்கும்.

பூமி சூரியனைச் சுற்றி வ‌ர‌ ஒரு ஆண்டு ஆகிற‌து; ஆனால் செவ்வாய் சூரிய‌னைச் சுற்றி வ‌ர‌ இர‌ண்டு ஆண்டுக‌ள் ஆகிற‌து. என‌வே ஒவ்வொரு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும்.

இது தொட‌ர்பான‌ கேள்விக‌ள் உங்க‌ளுக்கு இருந்தால் நாசாவின் இந்த‌ இணைய‌ ப‌க்க‌த்துக்கு வாருங்க‌ள். அவ‌ர்க‌ள் ஒரு சாட் ரூம் ஏற்பாடு செய்திருக்கிறார்க‌ள்.

சிங்க‌ப்பூரில் ச‌யின்ஸ் சென்ட‌ர் ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மை இர‌வு 7:50 இல் இருந்து இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரை இல‌வ‌ச‌மாக‌ டெல‌ஸ்கோப் மூல‌ம் அன்று தெரியும் ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளையும் கிர‌க‌ங்க‌ளையும் பார்க்க‌லாம். நான் சாட்ட‌ர்ன் (Saturn) பார்த்திருக்கிறேன். இன்று ச‌யின்ஸ் சென்ட‌ர் போவ‌தாக‌ ப்ளான் இருக்கிற‌து.

Also read: செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!

செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!

இருட்டின‌ பிற‌கு நீங்க‌ள் வெளியே (ஷாப்பிங் மால்க‌ளுக்குள் இல்லாமல்) திரிந்துகொண்டிருந்தீர்க‌ள் என்றால் கிழ‌க்குப்ப‌க்க‌ம் கொஞ்ச‌ம் சிவ‌ப்பு நிற‌த்தில் பிர‌காச‌மான‌ ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் தெரிவ‌தைக் க‌ண்டிருக்க‌க்கூடும். ஆனால் அது ந‌ட்ச‌த்திர‌ம் அல்ல‌; அது ஒரு கிர‌க‌ம். சிவ‌ப்பு என்று சொன்ன‌வுட‌ன் நிறைய‌ பேர்க‌ளுக்கு அந்த‌ கிர‌க‌த்தின் பெய‌ர் என்ன‌வென்று தெரிந்திருக்கும்: செவ்வாய். பூமியும் செவ்வாயும் சூரிய‌னைச் சுற்றிக்கொண்டிருப்ப‌தால் ஒவ்வொரு ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். இன்னும் தெளிவாக‌ சொல்ல‌ப்போனால் உள் சுற்றில் வேக‌மாக‌ ப‌ய‌ணிக்கும் கார் ஒன்று வெளிச்சுற்றில் மெதுவாக‌ப் ப‌ய‌ணிக்கும் காரை எப்ப‌டிக் க‌ட‌ந்து செல்லுமோ அதே போல‌ உள்சுற்றில் இருக்கும் பூமி வெளிச்சுற்றில் இருக்கும் செவ்வாயைக் க‌ட‌க்கும்.

பூமி செவ்வாயைக் க‌ட‌க்கும் பொழுது செவ்வாய் சூரிய‌ன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும். என‌வே சூரிய‌ன் உதிக்கும் பொழுது ம‌றையும்; சூரிய‌ன் ம‌றையும் பொழுது உதிக்கும். இந்த‌ ச‌மய‌த்தில் ந‌ம‌க்கு இர‌ண்டு சாத‌க‌மான‌ விச‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌: செவ்வாய் பூமிக்கு வெகு அருகில் இருக்கும் அதனால் டெலஸ்கோப்க‌ளில் மிக‌ப்பெரிதாக‌த் தெரியும்; இர‌வு முழுவ‌தும் தெரிவ‌தால் ந‌ம‌து சௌக‌ரிய‌த்துக்கு செவ்வாயை டெல‌ஸ்கோப் மூல‌ம் பார்த்துக்கொண்டே இருக்க‌லாம். (என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ரிட‌ம் டெல‌ஸ்கோப் இருக்கிற‌து. அதிக‌ ச‌க்தி வாய்ந்த‌ டெல‌ஸ்கோப் இல்லை என்றாலும் ஓர‌ள்வு பார்க்க‌லாம். இங்கே ச‌யின்ஸ் சென்ட‌ரில் டெல‌ஸ்கோப் க‌டை ஒன்று இருக்கிற‌து. எப்பொழுது போனாலும் அந்த‌க் க‌டையில் க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ரைத் த‌விர‌ யாருமே இருக்க‌மாட்டார்க‌ள். க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ர் மிக‌வும் வ‌ய‌தான‌வ‌ர். விசாரித்த‌தில் அவ‌ருக்கு டெல‌ஸ்கோப் ப‌ற்றி எங்க‌ளுக்குத் தெரிந்த‌ அள‌வே தெரிந்திருந்த‌து!)

இது போல‌ பூமியும் செவ்வாயும் அருகே அருகே இருப்ப‌து இன்னும் கொஞ்ச‌ நாட்க‌ளில் ந‌ட‌க்க‌ப்போகிற‌து: ஜ‌ன‌வ‌ரி 29 2010.

அத‌னால் தான் “Beauty with out borders” என்னும் த‌ள‌ம் Hello Red Planet என்று ஒரு புரோகிராம் ஆர‌ம்பித்திருக்கிற‌து. இத‌ன் நோக்க‌ம் எல்லோரையும் டீவி ம‌ற்றும் ஷாப்பிங் மால்க‌ளில் இருந்து வெளியேற்றி செவ்வாயை காண‌ வைப்ப‌து. டெல‌ஸ்கோப்பில் பார்ப்ப‌தால் செவ்வாய் மிக‌ மிக‌ப் பெரிதாக‌ தெரியும் என்று யாரும் நினைத்து ஏமாந்து விடாதீர்க‌ள்; ஆனால் செவ்வாயில் இருக்கும் ப‌னிப்பாறைக‌ளைக் காண‌முடியும் என்று சொல்கிறார்க‌ள். இங்கு ச‌யின்ஸ் சென்ட‌ர் வெள்ளிக்கிழ‌மை திற‌ந்திருக்கும்; எல்லாருக்கும் இல‌வ‌ச‌ அனும‌தி. நானும் ம‌னைவியும் குழ‌ந்தையும் போக‌லாம் என்று நினைத்திருக்கிறேன்.

நீங்க‌ள் டெல‌ஸ்கோப் உப‌யோகித்துப் பார்த்தீர்க‌ள் என்றால் நீங்க‌ள் க‌ண்ட‌ காட்சியை குழுவுக்கு தெரிய‌ப‌டுத்தினால் அவ‌ர்க‌ள் உலக‌ம் முழுவ‌திலும் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டுவார்க‌ள். ம‌ற்ற‌ எல்லோரும் போல‌த்தான் நீங்க‌ளும் செவ்வாயைப் பார்த்தீர்க‌ள் என்ப‌தையும் நீங்க‌ள் உறுதிப்ப‌டுதிக்கொள்ள‌ முடியும்.

இந்த‌ முறை இந்தியா வ‌ந்திருந்த‌பொழுது இந்த‌ காவ‌லூரில் இருக்கும் observatoryக்குப் போக‌வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடிய‌வில்லை. இங்கு தான் ஆசியாவிலே மிக‌ப் பெரிய‌ டெல‌ஸ்கோப் இருக்கிற‌தாம்! காவ‌லூருக்குப் ப‌க்க‌த்தில் இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளே த‌வ‌றாம‌ல் செவ்வாய் கிர‌க‌த்தைப் பார்த்து என‌க்குத் தெரிவியுங்க‌ள் ப்ளீஸ்.

சென்னையில் ச‌யின்ஸ் சென்ட‌ர் இருக்கிற‌தா என்று தெரிய‌வில்லை; அல்ல‌து உள்ளூர் அமெச்சூர் அஸ்ட்ரோன‌ம‌ர் குழு ஏதும் இருக்கிற‌தா என்றும் என‌க்குத் தெரிய‌வில்லை. அப்ப‌டி இருந்தால் என‌க்குத் தெரிவியுங்க‌ள். மேலும் சென்னை அல்லாத உங்க‌ள் ஊரில் இப்ப‌டி ஏதும் குழு இருந்தாலும் தெரிவியுங்க‌ள்.

கூகிள் செய்த‌தில் இந்த‌ குழு ஒன்று சென்னையில் இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.

Name: TANASTRO (Tamilnadu astronomy association)
Address: C/o, B.M.Birla planetaium, Gamdhi Mandapam road.Chennai
Contact: President .Proff.P.Devados
Phone: 24416751
Email: Tanastro@yahoo.com
URL: Website
Members: 90