கொஸ்டீன் கோயிந்து : ஆதார் லீக்ஸ்?

2014இல் ஆட்சியைப் பிடித்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் ஆட்சியை முன்னிறுத்தத் தொடங்கினார். சில மாதங்களுக்குள்ளாகவே இந்திய அரசாங்கம், எந்த எந்த அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு வருவதில்லை என்பதை அறிவதற்கு பயோமெட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. மோடி பத்துவருடங்கள் ஆட்சி புரிந்த குஜராத் மாநிலத்தில் பள்ளிக்கூடம் வராத மாணவர்களுக்கு சிகப்பு கோடிட பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தியது.

ஆதார், இந்தியாவின் மிகப் பெரிய பயோமெட்ரிக் அடையாள திட்டம், முதலில் தன்னார்வத் திட்டமாகத் தான் இருந்தது. அதாவது வேண்டுமென்றால் தானாகவே முன்வந்து ஆதாரை வாங்கிக்கொள்ளலாம் – இதை வைத்து பொது சேவைகளைச் சீர் செய்யவும், லஞ்சத்தைத் தவிர்க்கவும் திட்டம். ஆனால் நாளாக நாளாக ஆதார் பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் – மகப்பேறு மருத்துவமனைகளில் மகப்பேறின் போதும், பால்வாடியில் குழந்தைகளைச் சேர்க்கும் போதும், உங்கள் காலேஜ் டிகிரியை வாங்குவதற்கும், டெலிபோன் சேவை பெறுவதற்கும், வங்கியில் புது கணக்கு தொடங்குவதற்கும், ஏன் இறப்பு சான்றிதல் பெறுவதற்கும் – மிக முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது.

Aadhaar-ID-Program

தனது டிஜிட்டல் இந்தியா என்கிற கனவை ஓயாது பேசிய மோடி, ஹோலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல் வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பொதுவில் தோன்றி பொது மக்களை அதிசயிக்க வைத்த மோடி, டேட்டா (தகவல்) தான் உண்மையான சொத்து, யாரொருவர் அதை அடைகிறார்களோ, யாரொருவர் அதைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களின் கையே வருங்காலத்தில் ஓங்கியிருக்கும் என்று சொன்னார்.

வேண்டிய திறமைக்கும் (அல்லது விருப்பத்திற்கு) எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதை கடந்த இரண்டு வருடங்களில் நிறைய முறை பொதுமக்களின் பொதுவில் வைக்கக்கூடாத டேட்டாக்கள் (தகவல்கள்) லீக் ஆனதாக சர்சை எழுந்ததைப் பார்த்தால் புரியும்

2015இல் மோடி அவர்கள் அவருடைய லட்சனக்கான ஃபாலோயர்களுக்கு உடனுக்குடன் பிரதமரிடமிருந்து நேரிடையாக செய்தியையும் மெயிலையும் பெற ஆப் (ஆப்பு இல்லை, செயலி) ஒன்றை வெளியிட்டார். நடுவே யாரும் இல்லை. மீடியா இல்லை. அதிகாரிகள் இல்லை. ரெட் டேப் இல்லை. நீயும். நானும். பின்ன ஆப் மட்டும் தான் என்று சத்தியம் செய்யப்பட்டது. இந்த செயலி (ஆண்ட்ராய்ட்) 50 லட்சம் முறை தரவிரக்கம் செய்யப்பட்டது.

ஆனால் நமோ செயலி அந்த செயலியைப் பயன்படுத்துபவர்களைப் பற்றிய தகவல்களை அவர்களின் சம்மதமின்றி ஒரு அமெரிக்க கம்பெனியிடம் கொடுத்தது என்று ஒரு சர்ச்சை எழுந்தது. இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்த விசாரனையில் மோடி செயலியின் ஓட்டைகளை கண்டறிந்தது. அதன் பின் அடுத்த நாளே செயலியின் ப்ரைவசி பாலிஸி மாற்றப்பட்டது.

அதே நேரத்தில், ZDNet என்கிற தொழிநுட்ப நிறுவனம், இந்திய அரசாங்கத்தின் எல் பி ஜி நிறுவனமான இண்டேன் ஒரு வெப் பக்கத்தில், கோடிக்கனக்கான இந்தியர்களின் பெயர்கள், வங்கி கணக்குகள், ஆதார் எண்களைக் காட்டியது என்றும், அதைக் கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இருந்தால் கண்டுபிடித்து எடுத்து விட முடியும் என்று சொன்னது.

கரன் சைனி என்கிற நியூ டில்லியிலிருக்கும் ஒரு செக்யூரிட்டி ஆய்வாளர், ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான ஆதார் எண்களை ரேண்டமாக மென்பொருளுக்கு அனுப்பினார். அப்படி அனுப்பட்ட ஆதார் எண்கள் உண்மையான எண்களுடன் பொருந்திப் போனால், டடா, உண்மையான ஆதார் எண்ணின் உண்மையான தகவல்களை நீங்கள் பெறமுடியும் என்று நடு இரவில் கண்டறிந்தார்.

ஆதார் ப்ராஜெக்ட்டை நடத்தும் Unique Identification Authority of India, தங்களுடைய டேட்டா பேஸை யாரும் திருடவில்லை என்றும் கண்டுபிடித்த அந்த செக்யூரிட்டி ஆய்வாளரின் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றது.

கிராம வளர்ச்சி அமைச்சகம் கிட்டத்தட்ட பதினாறு மில்லியன் ஆதார் எண்களை அம்பலப்படுத்தியது.ஆந்திரப் பிரதேசத்தில் இருபது மில்லியன் கூலி வேலையாட்களின் ஆதார் எண்கள் ஆம்பலப்படுத்தப்பட்டன.

டேட்டா தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்கிற கேள்விக்கு அதிகாரிகள் எப்பொழுதுமே இல்லை என்று கோபத்துடனே கூறியிருக்கின்றனர், ஆனால் ஒரு பொழுதும் அதை விசாரணை செய்யச் சொன்னதில்லை. இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் செயல்படுத்தும் பொழுது பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சண்டையில கிழியாத சட்டை எங்கிருக்கு? ஆனால் அவ்வாறான பிரச்சனை அல்லது சர்ச்சை கிளம்பும் பொழுது அதை வெளிப்படைத்தன்மையோடு அனுகவேண்டும். லீக் ஆனாதா?

அரசாங்கம் குடிமக்களின் வாழ்க்கையை டிஜிட்டலைஸ் செய்வது வரவேற்கத்தக்க ஒன்று. அனால் அதே நேரத்தில் குடிமக்களின் தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், தவறு ஏற்படும் பொழுது விசாரனை செய்து விசாரனையின் முடிவை வெளிப்படையாக விளக்க வேண்டிய கடமையும் தங்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.