H&M இல் $4.3 பில்லியன் மதிப்புள்ள விற்காத துணிகள்

H&M இல் 4.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள உடைகள் விற்காமல் இருக்கின்றன. விமர்சகர்கள் ,H&M இன் ஆபரேஷன்ஸ் சரியாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இணையத்தில் ஃபேஷன் வர்த்தகம் மிக வேகமாக விற்கும். கடைகளில் விற்பனைக்குத் தகுந்தார்ப்போல வைத்திருக்கும் உடைகளை மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். இப்படியிருக்கும் பொழுது விற்காத சில அடுக்கு துணிகள் கூட பிரச்சனையே.

அப்படியென்றால் விற்காத டாலர் 4.3 பில்லியன் மதிப்புள்ள குவியல் குவியலான துணிகள் மற்றும் அணிகலன்கள்? இதுதான் விற்காத விலை போகாத சரக்குளை வைத்திருக்கும் ஸ்வீடிஷ் ஃபேஷன் நிறுவனமான H&M சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனை.

செவ்வாய்க்கிழமை வெளியான காலிறுதி ரிப்போர்ட்டில் இதை H&M கோடிட்டுக் காட்டியிருந்தது. கடுமையான போட்டியையும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நுகர்வோரின் தேவைகளுக்கேற்பவும் H&M ஈடுகொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

விற்காத துணிகளின் குவியல் போன வருடத்தின் கடைசிக் காலிறுதி ரிப்போர்ட்டில் எதிர்பார்க்காத அளவு விற்பனையில் வீழ்ச்சி என்று H&M குறிப்பிட்ட பொழுது வெளிச்சத்துக்கு வந்தது. ஸ்டாக்ஹோம்மின் மேற்கே ஒரே ஒரு பெண்கள் துணிக்கடையாக ஆரம்பித்து இப்பொழுது 4700 கடைகளாக அசுர வளர்ச்சியடைந்திருக்கும் H&Mக்கு இந்த இருபது வருடங்களில் இதுவே முதல் வீழ்ச்சி.

நுகர்வோர் கூட்டமாக இருக்கிற கடைகளை விடுத்து ஆன்லைன்னிலோ அல்லது விலைக் குறைந்த வேறு கடைகளுக்கோ சென்றது தான் பிரச்சனையா?

H&M தான் உலகத்தின் மிகப்பெரிய துணி உற்பத்தியாளர். நூறு மில்லியன் கணக்கில் ஆண்டு தோறும் துணி உற்பத்தி செய்கிறது. வாஸ்ட்டிரஸ் என்கிற ஊரில் – முதல் கடை ஆரம்பித்த ஊர் – இருக்கும் மின் ஆலை H&Mஇல் உற்பத்தியாகும் குறைபாடுள்ள விற்கமுடியாத துணிகளை வைத்து மின்சாரம் – ஒரு பகுதி – தயாரிக்கிறது என்றால் உற்பத்தியாகும் துணிக்குவியல்கள் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏன் விற்காத சரக்கின் அளவு அதிகமாக இருக்கிறது என்று கேட்டபொழுது H&Mஇன் சீஃப் எக்ஸிக்கியூட்டிவ் ஆஃபீசர் நாங்கள் புதிதாக 220 கடைகள் தொடங்கப் போவதாகவும் மேலும் ஆன் லைன் வர்த்தகத்தை விரிவு படுத்தப் போவதாகவும் தெரிவித்தார். நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் 62 சதவிகிதம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வீழ்ச்சி கண்டது. ஸ்டாக்ஹோல்ம் பங்குச் சந்தையில் 2005 இலிருந்து கீழிறங்காத அளவுக்கு விலை சரிந்தது.

ஆப்பிரிக்காவில் H&M, “காட்டிலிருக்கும் குரங்குகளில் அழகான குரங்கு” என்கிற வாசகம் பொதித்த ஹூடட் டீ சர்ட் அணிந்த கருப்பின சிறுவன் நடித்த விளம்பரத்தை ஒளிபரப்பியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. நெட்டிசன்கள் கழுவி ஊற்றவும் H&M தென் ஆப்பிரிக்காவில் கடைகளை மூட வேண்டியதாயிற்று. H&M சந்தித்துவரும் தொடர் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.

ஐரோப்பாவில் H&M மற்றும் இன்னபிற ஃபேஷன் நிறுவனங்கள் அமேசானின் வருகையை திகிலோடு எதிர்பார்த்து, அமேசானை எப்படி எதிர்கொள்வது என்று மண்டையைக் குடைந்து வருகின்றன.

2000 ஆம் ஆண்டிலிருந்தே ஃபேஷன் நிறுவனங்களுக்கு (ASOS,H&M மற்றும் ZARA வின் உரிமையாளர் Inditex) விற்பனை எகிறி அடித்தது. நடைமுறையிலிருக்கும் ஃபேஷனை வைத்து மிக விரைவாக துணி உற்பத்தி செய்து இந்நிறுவனங்கள் மிகுந்த லாபம் சொல்லியடித்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக மில்லினியல்ஸின் நுகர்வுமுறை ஆடம்பர, விலை உயர்ந்த ஆடைகளை நோக்கிச் சென்றதனாலேயும் சீன ஆடம்பர நுகர்வோர் மீண்டு வந்ததாலேயும் விலை குறைந்த ஃபேஷன் நிறுவனங்கள், விற்பனையில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டன.

ஸ்மார்ட் ஃபோன் உலகத்தில் விரல் நுனியில் அந்த அந்த நொடியில் மாறிக்கொண்டிருக்கும் ஃபேஷனை வாட்ஸாப்பில் நண்பர்கள் பகிர்ந்த மாத்திரத்தில் வாங்கத் துடிக்கும் உலகமாக சட்டென்று மாறிவிட்டது.

ASOS ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்கிறது, Inditex கூட ஆன்லைன் வர்த்தகத்தை விரிவாக்கிவிட்டது. ஆனால் H&M மட்டுமே தேங்கி விட்டது.

நீவ் கேப்பிடலின் நிறுவனர் ராகுல் ஷர்மா H&M “ஸ்லோமோஷன்” வீழ்ச்சியிலிருக்கிறது என்கிறார்.

ஆனால் H&M தங்களிடம் திட்டம் இருக்கிறது என்று சொல்லுகிறது. விற்காமல் கிடக்கும் துணிக்குவியலை விலையை மிகவும் குறைத்து விற்றுவிடுவோம் என்றும் ஆன் லைன் வர்த்தகம் இந்த ஆண்டு 25 சதவிகிதம் விரிவடையும் என்றும் கூறியிருக்கிறது.