Gathering The Water

ராபர்ட் எட்ரிக் எழுதிய “கேதரிங் த வாட்டர்” என்ற புத்தகத்தைப் படித்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்த பொழுதும் அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் இருந்து கொண்டேயிருந்தது. போன வருடம் புக்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. பரிந்துரைப் பட்டியலைப் பார்த்தபொழுதிலிருந்து தண்ணீரை சேமித்தல் என்கிற வித்தியாசமான தலைப்பு என்னுள் ஒருவித ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருந்தது.

பைபிளின் ஆங்கிலம் போல இந்தப்புத்தகத்தின் ஆங்கிலம் இருக்கிறது என்றது ஒரு blurb. நான் பைபிள் படித்ததில்லை. ஆங்கிலம் எனக்கு வித்தியாசமாகவும் படவில்லை.

1847 இல் வட இங்கிலாந்தில் போர்ட் பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட ஒரு அணையினால் ஏற்படவிருக்கும் வெள்ளத்தால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை (வெள்ளத்தையும், மக்கள் வெளியேறுவதையும்) மேற்பார்வையிட “சார்லஸ் வெயிட்மேன்” என்பவர் அணை கட்டும் நிறுவனத்தால் நியமிக்கப்படுகிறார். அவருக்கு அந்த பகுதியிலே ஒரு பழையவீடு ஒதுக்கப்படுகிறது.

சார்லஸ் தன் மனைவி (fiancee) ஹெலனை சமீபத்தில் தான் இழந்திருக்கிறார். கொடுங்காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார்.

இந்த வேலையில் பெரிதும் நாட்டமில்லாமல் போர்ட் பள்ளத்தாக்கிற்கு வரும் சார்லஸ் அங்கு இன்னும் அனேக மக்கள் காலி செய்யாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

ஒரு நாள் மீன் போன்று விரல்கள் இணைந்த (webbed) காலையும் கையையும் கொண்ட ஒரு மனிதன் இவரது வீட்டுக்கு வெளியே நிற்கிறான். வீட்டுக்குள் வர மறுக்கிறான். மிகுந்த கோபமாக இருக்கிறான். இந்த இடம் வெள்ளத்தால் முழுதும் அழிந்தால் கூட நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்கிறான். தனது வீட்டை ரெயில்வே கம்பெணி மிகக்குறைந்த விலைக்கு எடுத்துக்கொண்டார்கள் என்றும், அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து நியாயம் கிடைக்கும் வரையில் போராடுவேன் என்றும் கூறுகிறான்.மனநிலை சரியில்லாதவன் போல இருக்கிறான்.

சார்லஸ் தன் வீட்டிற்கு முன்னால் இருக்கும் சிறு மலையில் இரு பெண்கள் தன்னைத் தொடர்ந்து கவனிப்பதைப் பார்த்து, கை அசைக்கிறார். அவர்கள் பதிலுக்கு கை அசைக்காமல் திரும்பி சென்றுவிடுகின்றனர்.

இவ்வாறாக, அவரது வருகை அங்கிருக்கும் மக்களுக்கு ஆர்வத்தைத்தூண்டுவதாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காமல் இருக்கிறது.

பிறகு ஒரு நாள், முன்பு மலையில் பார்த்த இரு பெண்களில் ஒருவர், அவராகவே வந்து சார்லஸிடம் தன்னை மேரி என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மேரிக்கு ஒரு மனநிலை சரியில்லாத தங்கை இருக்கிறார். அவர் பெயர் மார்த்தா. மார்த்தா இருபத்து ஏழு வருடங்களுக்கு முன் ஒரு காப்பகத்தில் இருந்தார். மேரி தனது லண்டன் வாழ்க்கை கசப்பாக போனபிறகு மார்த்தாவை காப்பகத்திலிருந்து அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டார். இரு சகோதிரிகளும் ஊர் மக்களிடமிருந்து விலகியே இருக்கின்றனர்.

இவ்வாறான தங்களது சொந்த சோகங்களால் மேரியும், சார்லஸ¤ம் ஈர்க்கப்படுகின்றனர்.சார்லஸ் தனது மனைவியின் நினைவுகளை மேரியிடம் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு முறை ஏரியைச் சுற்றி தனது மனைவியுடன் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பறவையை (வாத்து) ஒரு மீன் (spike) கவ்விப்பிடித்து திண்பதை சார்லஸ் பார்க்கிறார். அந்த சமயம் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவி ஹெலன் இந்த காட்சியைக் காணத்தவறுகிறார். ஹெலன் பார்க்கும்பொழுது ஏரியில் – சார்லஸ் காட்டிய இடத்தில் – சிறிய அலைகளே சுழல்கின்றன. சார்லஸ், பறவையை மீன் பிடித்தது என்று எத்தனையோ முறை சத்தியம் பண்ணாத குறையாக திரும்பத்திரும்ப சொல்லிப்பார்க்கிறார். எனினும் என்ன காரணத்தாலோ அவரது மனைவி அவரை நம்பவேயில்லை. தண்ணீரில் ஏதாவது கல் விழுந்திருக்கலாம் என்கிறார். ஏன் அவள் நம்பவில்லை என்று தனக்கு இன்னும் புரியவில்லை என்று மேரியிடம் கூறுகிறார் சார்லஸ். ஏன் ஹெலன் சார்லசை நம்பவில்லை என்று எனக்கும் புரியவில்லை என்று நான் உங்களிடம் கூறுகிறேன். எல்லா மனைவிகளும் கணவர்களை நம்பிவிடுவதில்லை. சிலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்!

மேரியும், தான் இந்த ஊரில் வாழ்ந்த சின்ன வயது நினைவுகளை சார்லஸிடம் பகிர்ந்து கொள்கிறார். ஒரு நடத்தைதவறிய மனைவியை அவளுடைய கணவன் கொன்று, அவளை பாலத்தின் அடியில் தெளிவற்று ஓடிக்கொண்டிருக்கும் ஓடையின் கற்களுக்கு கீழே புதைத்துவிட்டதாக, தான் சிறு வயது முதல் கேட்டுவந்த நம்பிக்கையை (அல்லது கதையை) சார்லஸிடம் பகிர்ந்துகொள்கிறார் மேரி.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றனர். மேரி, மார்த்தாவுக்கு போதுமான வசதிகள் காப்பகத்தில் கிடைக்கவில்லையென்றும், அதனால் தான் தன்னுடனே தங்குவதற்கு அழைத்துவந்துவிட்டதாகவும் சொல்கிறார். ஆனால், அணை கட்டுமான கம்பெனி, தான் நிறைய இழப்பீடு பெறுவதற்கே மார்த்தாவை அழைத்துவந்தாக நினைக்கிறது என்றும், தனது இழப்பீடு மார்த்தாவை மீண்டும் காப்பகத்தில் கொண்டு விடுவதைச் சார்ந்தே இருக்கிறது என்கிறார். தற்போது தனது வீட்டுக்கு இழப்பீடாக கட்டுமான கம்பெனி வழங்கிய தொகை எந்தவகையிலும் ஏற்புடையதாக இல்லை என்று கூறி கமிட்டியிடமிருந்து வந்த கடிதத்தை கிழித்தெரிகிறார்.

காலியான வீடுகளை சிதைக்க வந்திருப்பவர்கள் வெள்ளம் வருவதற்கு முன்பே வேலையை ஆரம்பிக்கின்றனர். சிலர் சமாதிகளைக் கூட தோண்டுகின்றனர்.

மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளைக் காலி செய்ய தொடங்குகின்றனர். ஒரு குடும்பம் தன் பொருட்களை முழுவதும் எரிப்பதைப் பார்க்கிறார் சார்லஸ். ஒரு நாள் தண்ணீரில் சுழல் ஏற்பட்டுவிட்டதென்று சார்லஸ் அழைக்கப்படுகிறார். பெரும் கூட்டம் அங்கே கூடியிருக்கிறது. அங்கிருந்த ஒரு பெண் தனது ஆடு அந்த இடத்தில் மூழ்கத்தெரிந்தது என்கிறார். சார்லஸ் தண்ணீருக்குள் இறங்கி பார்வையிட்டுத் திரும்புகிறார்.கூட்டம் கலைகிறது.

அம்மை நோய் பரவிக்கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது. நோயை விட வதந்தி வேகமாக பரவுகிறது. மறுபடியும் அந்த இணைந்த விரல்கள் மனிதன் வருகிறான். இம்முறை ஏனோ அவன் வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருக்கிறான். இப்பொழுதுதான் முதன் முறையாக சார்லசைப் பார்ப்பது போல பேசுகிறான். மேரி குடும்பத்துக்கு தான் மிகவும் அறிமுகமானவன் என்றும், மார்த்தாவைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறுகிறான். ஆனால் மேரி தன்னை மிகவும் வெறுக்கிறாள் என்கிறான்.

சார்லஸ் தான் தண்ணீர் அடர்ந்த சதுப்பு நிலத்தில் வழுக்கிவிடாமல் லாவகமாக நடப்பதை கனவில் காண்கிறான். உள்ளூர் மக்கள் அவனை கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர். சார்லஸ் சிரிக்கிறான்.

மேரி, மார்த்தாவை திரும்பவும் காப்பகத்திலே சென்று விட்டுவிடத் தீர்மானிக்கிறாள். சார்லஸிடம் இதைக்கூறுகிறாள். மேலும் அணைக்குப் பக்கத்திலே இருக்கும் ஒரு வீட்டில் குழந்தை ஒன்று இறந்துவிட்டது என்றும் கூறுகிறாள்.

சார்லஸ் காக்கை இறகுகள் தரையில் கிடப்பதைப்பார்த்து, அவற்றைச் சேமிக்கிறான். தனது மனைவி ஹெலன் காக்கை இறகுகளை சிறு நினைவு பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தியதை நினைத்துப்பார்க்கிறான். அவற்றை தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில், அந்த ஊர்க்காரன் ஒருவன் காக்கை இறகுகள் உனக்கு கெட்ட விசயங்களை (துர் அதிர்ஷ்டங்கள்) கொண்டுவரும் என்கிறான்.

மார்த்தாவைக் காப்பகத்தில் கொண்டு போய் விடும் நாளன்று சார்லஸ், மேரியை தேடி அவள் வீட்டுக்கு செல்கிறான். வீட்டுக்குப் போகாமல் வெளியிலே, வரும் வழியிலே நிற்கிறான். நேரம் பறந்து கொண்டிருந்தும் மேரி வரவில்லை. மார்த்தாவை கவனித்துக்கொள்ளும் பணிப்பெண் சார்லஸைப் பார்த்து என்ன இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்கிறாள். சார்லஸ் விசயத்தை சொன்னவுடன், மேரி நேற்றே மார்த்தாவை காப்பகத்தில் சென்று விட்டுவிட்டாளே என்கிறாள். மேலும் மேரி நேற்று இரவு வந்த பொழுது மிகவும் சோர்வாகவும், சோகமாகவும் இருந்ததாகக் கூறுகிறாள்.

இருவரும் மேரியின் வீட்டிற்கு செல்கின்றனர். வீடு திறந்து கிடக்கிறது. பொருட்கள் கலைந்து, சிதறிக் கிடக்கிறது. யாரும் இல்லை. சார்லஸ் அலைந்து திரிந்து தேடுகிறான். உள்ளூர்காரர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொள்கிறான். எவ்வளவு தேடியும், எங்கு தேடியும், மேரி கிடைக்கவில்லை.

கமிட்டி சார்லஸை சந்திக்க வருகிறது. கமிட்டியைப் பார்த்ததும் ஊர் மக்கள் கூடிவிடுகிறார்கள். கமிட்டி இன்னும் காலி செய்யாதவர்களுக்கு, இழப்பீடு அதிகரிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்று சார்லஸிடம் தனிமையில் சொல்கிறார்கள். மேலும் அவர்கள் தண்ணீரின் அளவு கனிசமாக அதிகரித்துவிட்டது என்றும் நீங்கள் ஏன் இங்கேயே இன்னும் இருக்கிறீர்கள், வேறு ப்ராஜெக்ட்டுக்கு மாறவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

மேரியின் உடல் அணைக்கு அருகே தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை மக்கள் காண்கிறார்கள். அவரது ஆடை பெரிதும் கிழிந்திருக்கிறது. சார்லஸ் அவரது உடலை, அணையின் ஆழத்திலிருந்து மீட்கும் கடினமான வேலையைச் செய்கிறார்.மேரி தான் ஆடை கிழிந்து உடல் தெரிய தண்ணீரில் மிதப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பாள் என்று நினைக்கிறார்.

புது வருடம் வரையில் அவர் அங்கேயே இருக்கிறார். அடிக்கடி மேரி அவரது கனவில் தோன்றி நீங்கள் தான் என் பாதுகாவலர் என்கிறார். பயத்துடனும் குழப்பத்துடனும் சார்லஸ் தனது கனவுகளைக் கழிக்கிறார்.

திரில்லோ, சஸ்பென்ஸோ, திருப்பங்களோ இல்லாத நாவல். ஆனால் அருமையான அமைதியான அழகான எழுத்து நடை. அலைகள் அதிகம் இல்லாத அமைதியான நீர்மட்டம், இந்த நாவல்.

Gathering the water : Robert Edric