Hubble telescope image : Galaxy M83

சில மாதங்களுக்கு முன்னர் ஹப்பிள் டெலஸ்கோப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டபொழுதிலிருந்து புதிய galaxyயின் படங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தோம். காத்திருப்பு வீண் போகவில்லை இதோ நமக்கு மிகவும் பக்கமாக இருக்கும் M83 என்னும் கேலக்ஸியின் வளைவின் வெளிப்புறத்தின் புதிய படம்! எங்கெங்கு காணினும் கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் (Star clusters) உருவாகிக்கொண்டுள்ளன.


15MB அளவுள்ள படம் வேண்டுமென்றால் இங்கே பாருங்கள்.

நமது மில்க்கி வே (பால்வெளி) கேலக்ஸியிலிருந்து M83 என்னும் கேலக்சி பதினைந்து மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. அண்டத்தின் அளவுகோளில் 15 ஒளி ஆண்டு என்பது மிகவும் சிறியது; இது தான் நமக்கு அண்டை வீடு. நமது சூரியன் அழியும் தருவாயில், இதற்கு இன்னும் பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்றாலும், நாம் நமது சூரிய மண்டலத்தை விட்டு வேறு சூரியன் இருக்கும் இடம் தேடி சென்று தான் ஆக வேண்டும். அப்பொழுது நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ற சூரியனை (நட்சத்திரத்தை) கண்டுபிடித்துத்தானாக வேண்டும். அந்த நட்சத்திரம் இந்த M83 யில் கூட இருக்கலாம்!

M83 நமக்கு மிகவும் அருகில் இருப்பதால் துள்ளியமான படங்கள் நமக்குக் கிடைக்கின்றன. M83யின் வளைக்கரம் (spiral arm) இந்தப்படத்தில் துல்லியமாகத் தெரிகிறது. எங்கு பார்த்தாலும் நட்சத்திரக்கூட்டங்கள். அவை சின்னச் சின்ன குழந்தை நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டேயுள்ளன. இதில் கிட்டத்தட்ட அறுபது சூப்பர்நோவாவின் மிச்சங்கள் இருக்கின்றனவாம். சூப்பர் நோவா என்பது வெடித்து சிதறிவிட்ட நட்சத்திரங்களின் வாயுக்கழிவுகள். அவை விரிவடைந்து கொண்டேயிருக்கும். ஹப்பிள் டெலஸ்கோப் upgrade செய்வதற்கு முன்னர் நமக்கு தெரிந்த சூப்பர் நோவாவின் எண்ணிக்கையை விட இது ஐந்து மடங்கு அதிகம்.

இந்தப்படத்தில் இருக்கும் நிறங்களும் நிறைய சொல்கின்றன. இதிலிருக்கும் நிறங்கள் உண்மையானவை அல்ல. சிவப்பு சிவப்பாகத்தான் தெரிகிறது. பச்சை பச்சையாகத்தான் தெரிகிறது. நீலம் நீலமாகத்தான் தெரிகிறது. ஆனால் இதில் இன்னொரு வகையான சிவப்பு தென்படுகிறது. அது ஹைட்ரஜன் வாயுவிலிருந்து வெளிவருகிறது. அதே போல ராமர்-பச்சை (இதுக்கு தமிழ்ல வேறு பெயர் இருக்கிறதா?) நிறம் ஆக்ஸிஜனிலிருந்து வெளிவருகிறது. இந்த நிறம் பொதுவாக நட்சத்திரங்கள் உருவாகும் வாயுமண்டலத்திலிருந்தும் நட்சத்திரங்கள் தங்கள் பாரம் தாங்காமல் சிதைந்து வெடித்து சிதறியபின் விரிவடையும் வாயுமண்டலத்திலும் தென்படும். இந்த நிறம் தான் இந்தப் படத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆக்ஸிஜன் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் நாம் சுவாசிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறிய அளவில் இருக்கிறதாம்.

இன்னும் நன்றாக உற்றுப்பார்த்தீர்கள் என்றால் சோப்பு நுரையைப் போல வெளிப்புறத்தில் அதிக வெளிச்சமாக இருக்கும் சிவப்பு வாயுக்களைப் பார்ப்பீர்கள். இங்கு தான் நட்சத்திரங்கள் அதிக அளவில் உருவாகிக்கொண்டுள்ளன. நான் குறியிட்டுள்ள (in red) அந்த நுரையைப் பார்த்தீர்களா? அங்கு தான் வகை தொகையில்லாமல் மிகவும் அருகே அருகே நட்சத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. அவை ஒன்றொன்றும் நமது சூரியனைவிட அளவிலும் ஒளியிலும் மிக மிகப் பெரியவை.

படம் முழுவதும் ஒருவிதமான இருள் சூழ்ந்திருக்கிறதல்லவா அது நட்சத்திரங்கள் உருவாகும் பொழுதும் அழியும் பொழுதும் உருவாகும் ஒரு வகையான அணுக்குடும்பம் (கார்பன் அதிகம் இருக்கும்). இது தான் நமது விஞ்ஞானிகளுக்கு பெரிய தலைவலி! இது பல நுணுக்கமான விசயங்களை மறைத்து விடுகிறதாம். எனக்கென்னவோ அது தான் படத்துக்கு ஒரு விதமான அழகைக் கொடுக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் வலப்பக்கம் ஒரு பெரிய ஒளி வட்டம்(in green) இருக்கிறதே பார்த்தீர்களா? அது ராமனுடையதோஅல்லது லட்சுமணனுடையதோ அல்ல. அது தான் இந்த கேலக்ஸியின் மையம் (nucleus).

விஞ்ஞானிகள் இந்தப் படத்தை ஆராய்ச்சி செய்து இன்னும் பல தகவல்களைக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். Hubble is back, but this time with a bang!

***

ஆறு விண்வெளி வீரர்களைச் சுமந்து கொண்டு இன்று 19:28 GMT யின் பொழுது அட்லாண்டிஸ் விண் வெளிக்கப்பல் புறப்படத்தயாராக இருக்கிறது. டிவிட்டரில் நிறைய பேர் இதை பற்றி updates கொடுக்கப்போகிறார்கள்.  #nasatweetup என்று தேடுங்கள்!

***