செவ்வாய் கிர‌க‌த்தில் ம‌ண்ச‌ரிவு

HiRIS கொடுத்துள்ள‌ செவ்வாய் கிர‌க‌த்தின் இந்த‌ ப‌ட‌த்தில் மூன்று ம‌ண் ச‌ரிவுக‌ள் தெரிகின்றன‌. அட்ட‌காச‌மான‌ ப‌ட‌ம்.

இட‌துப‌க்க‌ம் உறைந்து போன‌ கார்ம‌ன் டை ஆக்சைடு த‌ரையை மூடியிருப்ப‌தைக் காண்கிறோம். சிவ‌ப்புக் நிற‌த்தில் செங்க‌ல் செங்க‌லாக‌த் தெரிவ‌து ஒரு உய‌ர‌மான‌ ம‌லையின் செங்குத்தான‌ ஒரு ப‌குதி. நாமும் கீழ்நோக்கி செங்குத்தாக‌ப் பார்ப்ப‌தால் இந்த‌ ம‌லையின் உய‌ர‌ம் ம‌க‌வும் குறைவாக‌த் தெரிகிற‌து. ஏமாந்துவிடாதீர்க‌ள் உண்மையில் இந்த‌ ம‌லையின் உய‌ர‌ம் 700 மீட்ட‌ர். வ‌ல‌து ப‌க்க‌த்தில் சாம்ப‌ல் நிற‌த்தில் த‌ரை தெரிகிற‌து. அவை ப‌சால்டிக் பாறையின் ம‌ண் துக‌ள்க‌ள். இந்த‌ப் ப‌ட‌த்த‌, செவ்வாய் என்று சொல்லாம‌ல், யாரிட‌மாவ‌து காட்டினால் (முக்கிய‌மாக‌ பூமியின் வ‌ட‌க்கு ப‌குதியில் வாழ்ப‌வ‌ர்க‌ளிட‌ம்; அவ‌ர்க‌ள் தானே ப‌னிப்பொழிவுக‌ளையும் ப‌னிக்க‌ட்டிக‌ளையும் ச‌ர்வ‌சாதார‌ண‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ள்; நாம் அபிராமி மாலுக்குத்தான் போக‌ணும்) இது பூமி என்றே தான் சொல்லுவார்க‌ள்!

மேலும் அப்பொழுதுதான் நிக‌ழ்ந்துவிட்டிருக்கிற‌ ம‌ண் ச‌ரிவினால் ஏற்ப‌ட்ட‌ புகை மூட்ட‌த்தையும் நாம் காண‌லாம். புகை மூட்ட‌த்தின் நிழ‌லும் தெரிகிற‌து. நிழ‌லின் மூல‌ம் சூரிய‌னின் கோண‌த்தையும் அறிந்துகொள்ள‌லாம். இத‌ன் மூல‌ம் புகையின் உய‌ர‌த்தைக் க‌ண‌க்கிட‌லாம்.

செவ்வாய் கிர‌க‌த்தின் வ‌ட‌க்குப் ப‌குதியில் இது நிக‌ழ்ந்திருக்கிற‌து. த‌ற்போது செவ்வாயின் இந்த‌ப் ப‌குதியில் வ‌ச‌ந்த‌கால‌ம். கெட்டியாகிவிட்ட‌ ம‌ண‌ல் பாறைக‌ளின் இடையே குளிர் கால‌த்தில் புகுந்து உறைந்து போன‌ கார்ப‌ன் டை ஆக்சைடு வ‌ச‌ந்த‌ கால‌த்தில் சூரிய‌ வெப்ப‌த்தால் உருகிவிடுகிற‌து. இத‌னால் ம‌ண் பாறைக‌ள் கீழே விழும்பொழுது இது போன்ற‌ ச‌ரிவுக‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌வாம்.இந்த‌ வ‌ருட‌த்தில் மேலும் சில‌ ப‌ககுதிக‌ளில் இது போன்ற‌ ம‌ண் ச‌ரிவுக‌ள் நிக‌ழ்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்திருக்கின்ற‌ன‌ர்.அற்புத‌ம்.

செவ்வாய் கிர‌க‌த்தின் ம‌ற்ற‌ எந்த‌ப் ப‌ட‌த்தினிலும் இல்லாத‌ ஒரு விச‌ய‌ம் இந்த‌ப் ப‌ட‌த்தை சிற‌ப்பான‌தாக்குகிற‌து. உறைந்த‌ கார்ப‌ன் டை ஆக்சைடு ப‌டிந்த‌ த‌ரை, மலையின் செங்குத்தான‌ ப‌குதி; மீண்டும் ம‌ண‌ல் நிறைந்த‌ பாறைக‌ள் ம‌ண் ச‌ரிந்து விழுந்த‌தால் ஏற்ப‌ட்ட‌ புகை; இவைய‌னைத்தும் ஒரு சேர‌ மிக‌வும் தெளிவாக‌ இருக்கிற‌து.

ம்ம் செவ்வாயில் நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌!

PS: இவ்வ‌ள‌வு ப‌னிக்க‌ட்டி இருந்தா செவ்வாய்(க்கு ஜ‌ல‌)தோஷ‌ம் ஏன் பிடிக்காது? இத‌த்தான் ந‌ம்மாளுக‌ சாட்டிலைட் உத‌வி இல்லாம‌லே அந்த‌க் கால‌த்திலே சொல்லிருக்காங்க‌ப்பா!

ப‌ராக் ஒபாமா: செவ்வாய் கிர‌க‌த்துக்கு ம‌னித‌னை அனுப்பிவைப்போம்

2025க்குள் நில‌வைத் தாண்டி மேலும் செல்ல‌ விண்க‌ல‌ம் க‌ண்டுபிடித்துவிடுவோம் என்று ப‌ராக் ஒபாமா கூறியுள்ளார். ப‌ல‌ ப‌ட்ஜெட் க‌ட்டிங்குகளுக்கு அப்புற‌ம் இது நாசா விஞ்ஞானிக‌ளின் வ‌யிற்றில் பாலை வார்க்கும் ஒரு செய்தியாகும். பூமிக்குப் ப‌க்க‌த்தில் நில‌வை விட‌ தொலைவில் இருக்கும் விண்க‌ல்லுக்கு முத‌லில் ம‌னித‌னை அனுப்புவ‌தும் பிற‌கு செவ்வாயைச் சுற்றி வ‌ர‌ ம‌ட்டும் அனுப்புவ‌தும் பிற‌கு செவ்வாயில் ம‌னித‌ன் இற‌ங்குவ‌த‌ற்கு விண்க‌ல‌ம் அனுப்ப‌வும் திட்ட‌ம் இருப்ப‌தை ஒபாமா இன்று அறிவித்திருக்கிறார். விரைவில் செவ்வாயில் ம‌னித‌ன் த‌ரையிற‌ங்கி ப‌ல‌ ஆராய்ச்சிக‌ள் செய்வ‌தை பார்க்க‌முடியும் என்று நினைக்கிறேன். கென்ன‌டி 1961 இல் இன்னும் ப‌த்து வ‌ருட‌ங்க‌ளில் ம‌னித‌னை நில‌வுக்கு அனுப்புவோம் என்று சொன்ன‌தையும் 1969இல் ம‌னித‌ன் நில‌வுல் கால‌டி எடுத்துவைத்த‌தும் நினைவிருக்க‌லாம்.

இன்னும் எத்த‌னை கால‌த்துக்குத் தான் ராக்கெட்டிலே ப‌ய‌ண‌ம் செய்துகொண்டிருப்ப‌து? 2025க்குள் வார்ம்ஹோல் க‌ண்டுபிடித்து ட‌க்குன்னு மார்ஸுக்கோ வேறு தூர‌மான‌ கிர‌க‌ங்க‌ளுக்கோ அல்ல‌து தொலைவில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌த்துக்கோ சென்றுவிட‌வேண்டுமெ. வார்ம்ஹோல் என்ப‌து அண்ட்த்தில் இருக்கும் ஒரு குறுக்குப்பாதை. ஒரு இட‌த்தில் இருந்து வெகு வெகு தூர்த்தில் இருக்கும் ம‌ற்றொரு இட‌த்திற்கு எளிதாக‌ செல்ல‌ உத‌வும் ஒரு பால‌ம்.

வார்ம் ஹோல் இன்னும் ஆதார‌ப்பூர்வ‌மாக‌க் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட‌வில்லை. ஆனால் ஜென‌ர‌ல் ரிலேட்டிவிட்டியின் ப‌டி வார்ம் ஹோல் என்ப‌து சாத்திய‌மே. கார்ல் சாக‌ன் எழுதிய‌ கான்ட்டாக்ட் நாவ‌ல் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? அல்ல‌து ஜோடி ஃபாஸ்ட‌ர் ந‌டித்த‌ கான்ட்டாக்ட் ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? அதில் வார்ம்ஹோல் ப‌ய‌ன் ப‌டுத்தித்தான் ந‌ம் சூரிய‌ குடும்ப‌த்திலிருந்து லைரா ந‌ட்ச‌த்திர‌க்குடும்ப‌த்தில் இருக்கும் வேகா என‌ப்ப‌டும் ந‌ட்ச‌த்திர‌த்துக்கு போவார் ஜொடி ஃபாஸ்ட‌ர்.

இன்னும் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ வேண்டுமாயின் இர‌ண்டு ப‌ரிமான‌த்தில் அண்ட‌த்தை மேலும் கீழுமாக‌ வ‌ளைந்து இருக்கும் ஒரு துணிபோல‌ நினைத்துக்கொள்ளுங்க‌ள்; மேலிருக்கும் துணியின் மேலேயே ப‌ய‌ண‌ம் செய்து கீழிருக்கும் துணியை அடைவ‌த‌ற்குப் ப‌திலாக‌, மேலிருக்கும் துணியில் ஒரு துளையை ஏற்ப‌டுத்தி கீழிருக்கும் துணிக்கு ட‌க்கென்று செல்ல‌முடியும‌ல்ல‌வா? அந்த‌ துளையும் துளை ஏற்ப‌டுத்திக்கொடுக்கும் பாதையும் தான் வார்ம்ஹோல். எப்ப‌டி ஒரு புழு மாம்ப‌ழ‌த்தைத் துளைத்து ம‌ற்றொரு புற‌ம் வ‌ருகிற‌தோ அது போல‌!
 

மேலே இருப்ப‌து லோர‌ன்ட்சிய‌ன் வார்ம்ஹோல் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நாம் பார்த்த‌ ஒரு வ‌கையான‌ பால‌ம். இன்னும் யாரும் க‌ண்டுபிடிக்க‌வில்லை என்ப‌தை நினைவில் கொள‌க. க‌ண்டுபிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு நோப‌ல் ப‌ரிசு நிச்ச‌ய‌ம்!

Earth close to Mars and Moon : NASA chat room

செவ்வாய் கிர‌க‌த்தை அருகில் காண்ப‌த‌ற்கு இன்று ந‌ல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம். உப‌யோகித்துக்கொள்ளுங்க‌ள். செவ்வாய் ம‌ட்டும‌ல்ல‌; நில‌வு கூட‌ அருகில் தெரியும். இந்த‌ வ‌ருட‌த்தின் மிக‌ப்பெரிய‌ நிலா இன்று தான் தெரியும்.

இத‌ற்கு முன் 2003 இல் செவ்வாய் கிர‌க‌ம் ந‌மக்கு இன்னும் மிக‌ அருகில் இருந்திருக்கிற‌து. 2003 இல் நம‌க்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த‌ தூர‌ம் வெரும் 56 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தான். இது க‌ட‌ந்த 60,000 வ‌ருட‌ங்க‌ளில் இதுவே ந‌ம‌க்கும் செவ்வாய்க்குமான‌ மிக‌ குறைந்த‌ தூர‌ம்.
இப்பொழுது ஜ‌ன‌வ‌ரி 2010 இல் செவ்வாய் பூமியிலிருந்து 99 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தூர‌த்தில் இருக்கும்.

பூமி சூரியனைச் சுற்றி வ‌ர‌ ஒரு ஆண்டு ஆகிற‌து; ஆனால் செவ்வாய் சூரிய‌னைச் சுற்றி வ‌ர‌ இர‌ண்டு ஆண்டுக‌ள் ஆகிற‌து. என‌வே ஒவ்வொரு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும்.

இது தொட‌ர்பான‌ கேள்விக‌ள் உங்க‌ளுக்கு இருந்தால் நாசாவின் இந்த‌ இணைய‌ ப‌க்க‌த்துக்கு வாருங்க‌ள். அவ‌ர்க‌ள் ஒரு சாட் ரூம் ஏற்பாடு செய்திருக்கிறார்க‌ள்.

சிங்க‌ப்பூரில் ச‌யின்ஸ் சென்ட‌ர் ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மை இர‌வு 7:50 இல் இருந்து இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரை இல‌வ‌ச‌மாக‌ டெல‌ஸ்கோப் மூல‌ம் அன்று தெரியும் ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளையும் கிர‌க‌ங்க‌ளையும் பார்க்க‌லாம். நான் சாட்ட‌ர்ன் (Saturn) பார்த்திருக்கிறேன். இன்று ச‌யின்ஸ் சென்ட‌ர் போவ‌தாக‌ ப்ளான் இருக்கிற‌து.

Also read: செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!

செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!

இருட்டின‌ பிற‌கு நீங்க‌ள் வெளியே (ஷாப்பிங் மால்க‌ளுக்குள் இல்லாமல்) திரிந்துகொண்டிருந்தீர்க‌ள் என்றால் கிழ‌க்குப்ப‌க்க‌ம் கொஞ்ச‌ம் சிவ‌ப்பு நிற‌த்தில் பிர‌காச‌மான‌ ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் தெரிவ‌தைக் க‌ண்டிருக்க‌க்கூடும். ஆனால் அது ந‌ட்ச‌த்திர‌ம் அல்ல‌; அது ஒரு கிர‌க‌ம். சிவ‌ப்பு என்று சொன்ன‌வுட‌ன் நிறைய‌ பேர்க‌ளுக்கு அந்த‌ கிர‌க‌த்தின் பெய‌ர் என்ன‌வென்று தெரிந்திருக்கும்: செவ்வாய். பூமியும் செவ்வாயும் சூரிய‌னைச் சுற்றிக்கொண்டிருப்ப‌தால் ஒவ்வொரு ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். இன்னும் தெளிவாக‌ சொல்ல‌ப்போனால் உள் சுற்றில் வேக‌மாக‌ ப‌ய‌ணிக்கும் கார் ஒன்று வெளிச்சுற்றில் மெதுவாக‌ப் ப‌ய‌ணிக்கும் காரை எப்ப‌டிக் க‌ட‌ந்து செல்லுமோ அதே போல‌ உள்சுற்றில் இருக்கும் பூமி வெளிச்சுற்றில் இருக்கும் செவ்வாயைக் க‌ட‌க்கும்.

பூமி செவ்வாயைக் க‌ட‌க்கும் பொழுது செவ்வாய் சூரிய‌ன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும். என‌வே சூரிய‌ன் உதிக்கும் பொழுது ம‌றையும்; சூரிய‌ன் ம‌றையும் பொழுது உதிக்கும். இந்த‌ ச‌மய‌த்தில் ந‌ம‌க்கு இர‌ண்டு சாத‌க‌மான‌ விச‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌: செவ்வாய் பூமிக்கு வெகு அருகில் இருக்கும் அதனால் டெலஸ்கோப்க‌ளில் மிக‌ப்பெரிதாக‌த் தெரியும்; இர‌வு முழுவ‌தும் தெரிவ‌தால் ந‌ம‌து சௌக‌ரிய‌த்துக்கு செவ்வாயை டெல‌ஸ்கோப் மூல‌ம் பார்த்துக்கொண்டே இருக்க‌லாம். (என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ரிட‌ம் டெல‌ஸ்கோப் இருக்கிற‌து. அதிக‌ ச‌க்தி வாய்ந்த‌ டெல‌ஸ்கோப் இல்லை என்றாலும் ஓர‌ள்வு பார்க்க‌லாம். இங்கே ச‌யின்ஸ் சென்ட‌ரில் டெல‌ஸ்கோப் க‌டை ஒன்று இருக்கிற‌து. எப்பொழுது போனாலும் அந்த‌க் க‌டையில் க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ரைத் த‌விர‌ யாருமே இருக்க‌மாட்டார்க‌ள். க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ர் மிக‌வும் வ‌ய‌தான‌வ‌ர். விசாரித்த‌தில் அவ‌ருக்கு டெல‌ஸ்கோப் ப‌ற்றி எங்க‌ளுக்குத் தெரிந்த‌ அள‌வே தெரிந்திருந்த‌து!)

இது போல‌ பூமியும் செவ்வாயும் அருகே அருகே இருப்ப‌து இன்னும் கொஞ்ச‌ நாட்க‌ளில் ந‌ட‌க்க‌ப்போகிற‌து: ஜ‌ன‌வ‌ரி 29 2010.

அத‌னால் தான் “Beauty with out borders” என்னும் த‌ள‌ம் Hello Red Planet என்று ஒரு புரோகிராம் ஆர‌ம்பித்திருக்கிற‌து. இத‌ன் நோக்க‌ம் எல்லோரையும் டீவி ம‌ற்றும் ஷாப்பிங் மால்க‌ளில் இருந்து வெளியேற்றி செவ்வாயை காண‌ வைப்ப‌து. டெல‌ஸ்கோப்பில் பார்ப்ப‌தால் செவ்வாய் மிக‌ மிக‌ப் பெரிதாக‌ தெரியும் என்று யாரும் நினைத்து ஏமாந்து விடாதீர்க‌ள்; ஆனால் செவ்வாயில் இருக்கும் ப‌னிப்பாறைக‌ளைக் காண‌முடியும் என்று சொல்கிறார்க‌ள். இங்கு ச‌யின்ஸ் சென்ட‌ர் வெள்ளிக்கிழ‌மை திற‌ந்திருக்கும்; எல்லாருக்கும் இல‌வ‌ச‌ அனும‌தி. நானும் ம‌னைவியும் குழ‌ந்தையும் போக‌லாம் என்று நினைத்திருக்கிறேன்.

நீங்க‌ள் டெல‌ஸ்கோப் உப‌யோகித்துப் பார்த்தீர்க‌ள் என்றால் நீங்க‌ள் க‌ண்ட‌ காட்சியை குழுவுக்கு தெரிய‌ப‌டுத்தினால் அவ‌ர்க‌ள் உலக‌ம் முழுவ‌திலும் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டுவார்க‌ள். ம‌ற்ற‌ எல்லோரும் போல‌த்தான் நீங்க‌ளும் செவ்வாயைப் பார்த்தீர்க‌ள் என்ப‌தையும் நீங்க‌ள் உறுதிப்ப‌டுதிக்கொள்ள‌ முடியும்.

இந்த‌ முறை இந்தியா வ‌ந்திருந்த‌பொழுது இந்த‌ காவ‌லூரில் இருக்கும் observatoryக்குப் போக‌வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடிய‌வில்லை. இங்கு தான் ஆசியாவிலே மிக‌ப் பெரிய‌ டெல‌ஸ்கோப் இருக்கிற‌தாம்! காவ‌லூருக்குப் ப‌க்க‌த்தில் இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளே த‌வ‌றாம‌ல் செவ்வாய் கிர‌க‌த்தைப் பார்த்து என‌க்குத் தெரிவியுங்க‌ள் ப்ளீஸ்.

சென்னையில் ச‌யின்ஸ் சென்ட‌ர் இருக்கிற‌தா என்று தெரிய‌வில்லை; அல்ல‌து உள்ளூர் அமெச்சூர் அஸ்ட்ரோன‌ம‌ர் குழு ஏதும் இருக்கிற‌தா என்றும் என‌க்குத் தெரிய‌வில்லை. அப்ப‌டி இருந்தால் என‌க்குத் தெரிவியுங்க‌ள். மேலும் சென்னை அல்லாத உங்க‌ள் ஊரில் இப்ப‌டி ஏதும் குழு இருந்தாலும் தெரிவியுங்க‌ள்.

கூகிள் செய்த‌தில் இந்த‌ குழு ஒன்று சென்னையில் இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.

Name: TANASTRO (Tamilnadu astronomy association)
Address: C/o, B.M.Birla planetaium, Gamdhi Mandapam road.Chennai
Contact: President .Proff.P.Devados
Phone: 24416751
Email: Tanastro@yahoo.com
URL: Website
Members: 90