சென்னையில் நடக்கும் உடல் பாகமாற்று மோசடி : நேஷனல் ஜியோகர·பி

நான் ஏற்கனவே வாடகைத்தாய் outsourcing பற்றி எழுதியிருந்தேன். இன்று நேஷனல் ஜியோகர·பியில் Inside என்றொரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்; மேலை நாட்டு மக்களின் தேவைகளுக்காக வளர்ந்துவரும் நாடுகளின் மக்கள் ஒரு சொற்ப தொகையை வாங்கிக்கொண்டு தங்களது உடல் பாகங்களை விற்பது தொடர்பான ஒரு டாக்குமென்டரி. கிட்னி விற்பது (கடத்துவது) தொடர்பாக ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பல சினிமாக்கள் தமிழில் வந்துவிட்டன. பல (நம்பர் ஒன் புலனாய்வு) பத்திரிக்கைகள் இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல்துளக்கி இருக்கின்றன. விவேக் கூட காமெடி பண்ணியிருக்கிறார். ஆனால் இப்பொழுதும் சென்னையில் இது போன்ற மோசடிகள் நடக்கின்றன என்று நேசனல் ஜியோகரபியில் பார்த்தபொழுது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பாகங்கள் மாற்றிப் பொருத்தப்படுவது சென்னையில் மிகப்பெரிய பிஸினஸ். ஒரு கிட்னி மாற்றிப்பொருத்துவதற்கு அமெரிக்கர்கள் (அல்லது பணக்காரர்கள்) நாற்பதாயிரம் டாலர் வரை கொடுக்கிறார்களாம். சுனாமிக்குப் பிறகு வாழ்விழந்த நிறைய பேரி கிட்னியை தானமாக கொடுத்திருக்கிறார்களாம். NGயின் நிருபர் ஒருவர் (வெளிநாட்டவர்) தமிழர் ஒருவரின் துணையுடன் அவர்களை சந்தித்தார். ஒவ்வொருவரும் வயிற்றில் மிகப்பெரிய கீரலைக் காட்டுகின்றனர். ஒவ்வொருவரும். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று நிருபர் சொல்கிறார். அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் யாரும் வாயைத்திறக்க முன்வரவில்லை.

கடைசியாக் ஒருவர் பேட்டிக்கு சம்மதித்து ஒரு தனியான இடத்திற்கு நிருபரை அழைத்துச்சென்று தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தைக் கூறுகிறார். பக்கத்துவீட்டுக்கு அடிக்கடி நிறைய பேர் வந்து போவதை அறிந்த அவர் என்னவென்று விசாரிக்க அங்கே ஆரம்பித்தது அவருக்கு சோதனை. பக்கத்துவீட்டுப் பெண் அவர்கள் கிட்னி விற்கிறார்கள் என்றும் ஒன்றரை லட்சம் வரை கிடைக்கும் என்றும் ஆசை காட்ட இவரும் தனக்கிருக்கும் கஷ்டங்களை நினைத்து தனது கிட்னியை விற்கமுடிவு செய்திருக்கிறார். ஒரு புரோக்கரின் துணையுடன் விற்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏகப்பட்ட டெஸ்ட்களுக்குப் பிறகு மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் இந்த பாகம் மாற்றுதல் நடந்தேறியிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தொகை வெறும் எழுநூறு டாலர்கள். நாற்பதாயிரம் எங்கிருக்கிறது எழுநூறு எங்கிருக்கிறது?

நியாயம் கேட்டதற்கு அவர் மிரட்டப்பட்டிருக்கிறார். கொலை மிரட்டலும் வந்திருக்கிறது. NGயின் ரிப்போர்ட்டர் அந்த புரோக்கரைத் தேடிப்பிடித்து அவரிடம் செல்கிறது. அவர் டீக்கடை வைத்திருக்கிறார். அவரது மனைவியோ யாரோ போயிடுங்க போயிடுங்க என்று சொல்கிறார். புரோக்கர் பேச விருப்பம் தெரிவிக்கவில்லை. பிறகு என்ன நடந்ததோ அவரே பேச வருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. மூன்று வருடம் கழித்து ஏன் அவர் இதைப் பெரிது படுத்தவேண்டும்? என்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு டீன் ஏஜில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்பையனின் கால்கள் வீங்கிக்கொண்டிருக்கிறது. கிட்னி ·பெயிலியர். அம்மா ஏற்கனவே சொற்ப பணத்துக்கு கிட்னியை விற்றுவிட்டாள். மகனுக்குக் கொடுக்க அம்மாவிடம் கிட்னி இல்லை. விதி என்று சொல்லமாட்டேன்.

இந்த பாகமாற்று முறைக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறதாம். டாக்டர்கள், புரோக்கர்கள், டிராவல் ஏஜென்டுகள், பணம் மாற்றும் கள்ள மார்கெட்டுகள், அதிகாரிகள். வெளிநாட்டவருக்கு பாகங்கள் மாற்றிப்பொருத்துவதை சட்டம் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது தனி டிபேட்டாக இருக்கட்டும், அதற்கு முன் ஏனப்பா பாவம் கிட்னி விக்க வர்றவங்ககிட்ட கூட மோசடிபன்றவங்களக் கூட கண்டுக்கமாட்டீங்களா?

NG புலனாய்வு செய்ததை நமது நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு விரல் நாயகனையும் குரல் நாயகியைப் பற்றியும் துப்புதுலக்கவே நேரமில்லை.பாவம் விட்டுவிடுங்கள்.

இந்த பாகமாற்று க்ரைம் சைனாவையும் விடவில்லை ஏன் நியுயார்க்கைக் கூட விடவில்லை. சைனாவில் கைதிகளிடமிருந்து பாகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. நியுயார்க் இன்னும் மோசம். பிணப்பெட்டியில் அடக்கம் பண்ணப்பட்ட பிணங்களில் இருந்து எழும்புகள் மற்றும் பல பாகங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. யாருடைய அனுமதியும் இல்லாமல்.

மோசடி வெளிச்சத்துக்கு வரும் வரை; நியுயார்க் முழுவதும் நான்கு இடுகாடுகள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தனவாம்.

வறுமையில் வாடும் மக்களை பணமுதலைகள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துவது என்று தான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் மோசடிக்கு பெரிதும் உதவும் புரோக்கர்களும் என்று தான் பிடிபடுவார்களோ தெரியவில்லை. சுனாமி போன்ற பெரிடர்கள் தாக்கும்பொழுது வழுவிழந்த மக்களைக் குறிவைத்து பண முதலைகளும் புரோக்கர்களும் பல காய்கள் நகர்த்துவார்கள். இவர்களுக்கு செக் வைப்பது யார்? இதைத் தடுக்க என்ன செய்யலாம்?