தயிர்வடைகள்

தயிர்வடை சாப்பிடுபவர்கள் Traditional, பக்கார்டி சாப்பிடுபவர்கள் Organic என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே என் மீது கோபம் கோபமாக வருகிறது. என்ன ஜென்மம் நான்? ஆதாலால் குடி மக்களே உங்களுக்கு இந்த அரிய உண்மையை சுட்டிக் காட்டியதற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்லத்தேவையில்லை, திரு. “ஆர்கானிக் எழுத்தாளர்” சாரு நிவேதிதாவிற்கு நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.

விசயத்துக்கு வருவோம். கோணல் பக்கங்களின் மூன்றாவது தொகுதியில் “உண்மையான பெரியார்” என்ற கட்டுரை (கட்டுரைகள் எழுதுபவர்கள் மன்னிக்கவும், அப்படித்தான் அந்த புத்தகத்தில் இருக்கிறது. மேலும் இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய நாஞ்சில் நாடன் இந்த மாதிரி இலக்கியத்திற்கு(?!) இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்கிறார்!) யில் இவ்வாறு சொல்கிறார், சாரு நிவேதிதா:

காந்தியை, மகாத்மா என்று சமூகம் சொன்னால் நாமும் கிளிப்பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லுதல். மாறாக அவர் மகாத்மாவாக வாழ்வதற்கு மற்றவர்கள் என்ன விலை கொடுக்க வேண்டியதிருந்தது என்பது பற்றி கேள்வியே கேட்காமல் இருத்தல்.

காந்தி இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்யப்பட்ட செருப்பை மட்டுமே அணிவது என்று முடிவெடுத்த பின்னர், இயற்கையாக இறந்த மாட்டைத்தேடி இரு குழுக்கள் நாடெங்கும் அலைந்தது திரிந்து கண்டுபிடித்து, அவருக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தார்களாம். இவ்வகையில் காந்தி அணிந்த செருப்பின் விலை அந்தக் காலகட்டத்தில் சாதாரண செருப்பை விட ஐம்பது மடங்கு கூட இருந்ததாம்.

அதனால் அவரை மகாத்மா என்று சொல்வதற்கு கேள்விகள் கேட்கவேண்டுமாம்.

காந்தி, கண்டிப்பாக எங்கிருந்தாலும் இறந்த மாட்டைக் கண்டுபிடித்து எனக்கு செருப்பு வாங்கிவாருங்கள் என்று அடம் பிடித்தாரா? அவர் இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்த செருப்பை மட்டுமே அணிவேன் என்று முடிவெடுத்த பின்னர், அவரது தொண்டர்கள், அவர் வேண்டாம் எனினும், அவருக்காக தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வாங்கி வந்திருக்கலாம். இவ்வாறு தொண்டர்கள் வாங்கி வராமல் இருந்திருந்தால் கூட, காந்திக்கு இது ஒன்றும் மேட்டரே அல்ல, அவர் செருப்பு அணிவதையே விட்டிருப்பார். கோட்சூட் அணிந்து செல்வத்தில் திளைத்திருந்த போது, கந்தல் ஆடை அணிந்த மக்களைப் பார்த்ததும் அனைத்தையும் தூக்கி எறிந்த அவருக்கு செருப்பு அணியாமல் நடப்பதா பெரிய விசயம்? இதைக்கூட விட்டுத்தள்ளுங்கள். எக்காலத்திலும் உண்மையே பேசுவது என்பது எவ்வளவு பெரிய சமாச்சாரம்? அதை செய்யக்கூடிய அளவுக்கு மனதைரியமும், self-control லும் இருந்தவருக்கு சாதாரண செருப்பு அணியாமல் இருப்பதா பெரிய வேலை? மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாற்பத்தியெட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவருக்கு செருப்பு அணியாமல் இருப்பதா கஷ்டம்?

எங்கே, இவர்களை ஒரு நாள் – ஒரே ஒரு நாள்- உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சரி. கிடக்கட்டும். அவரை மகாத்மா என்று அழைப்பதில் யாருக்கு என்ன கெடுதல் வந்து விட்டது? எவ்வளவு நல்ல பழக்கங்களை வைத்திருந்திருக்கிறார். அதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு : அவருடைய பாத்ரூம்மை அவரே கழுவுவது. இது என்ன பெரிய விசயம், என்கிறீர்களா? எனது நண்பர்கள் சிலரே கூட தாங்கள் உபயோகித்த பாத்ரூம்மை தாங்களே கழுவி விட மாட்டார்கள். சாதாரண மனிதர்களும் நேரம் இல்லை என்றும் ( நேரம் இல்லையா? பாத்ரூம் போவதற்கு நேரம் இருக்கும் போது, கழுவிவிட நேரம் இருக்காதா என்ன? அதெல்லாம் இல்லை, சோம்பேறித்தனம் தான் காரணம் ), இன்னும் வேறு காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நாட்டின் தலைவர், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் ஏறும் போது இங்கிலாந்து நீதிபதியே கூட எழுந்து நிற்கும் அளவுக்கு மரியதைக்குரியவர், ஏன் பாத்ரூம் கிளீன் பண்ண வேண்டும்? அவரை மகாத்மா என்று அழைப்பதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது? யார், எங்கே குறைந்து போகிறார்கள்?

அவ்வாறு சொல்லும் இலக்கியவாதிகளை, சாரு நிவேதிதா : தயிர்வடை இலக்கியவாதிகள் என்று சொல்லுகிறார்.

1875 இல் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒயின், கூபாவின் பக்கார்டி, பாங்க்காக் கேலிக்கை விடுதிகள், ஜப்பானியப் பெண்கள் அருகிலிருந்து ஊற்றிக்கொடுக்க, தரையிலமர்ந்து ஸாக்கே என்ற மது வகையை அருந்துவது, கேப்ரே பார்கள், “ரா” வாக மட்டுமே அடிக்க வேண்டும் என்ற மிக நல்ல ரூல்ஸைக்கொண்டுள்ள Geronimous என்ற பார், அதில் தொடர்ச்சியாக பதினேழு ஷாட்கள் அடித்து பதக்கம் வாங்கியதைப் பற்றியல்லாம் எழுதுவது எந்த வகை இலக்கியம்? இவர்கள் தான் organic இலக்கியவாதிகளா? (organic wines பற்றி சொல்லியிருப்பாரோ என்று கூட சில நிமிடம் யோசித்தேன். )

கேட்டால், ethics வேறு ஒழுக்கம் வேறு என்கிறார். எடுத்துக்காட்டாக அவரது ப்ராண்ஸ் தேசத்து நண்பரின் ஆப்ரிக்க மனைவி கன்னத்தில் முத்தமிட்டு வறவேற்ற சம்பவத்தைக்கூறி அது அங்கே பழக்கம் ஆனால் இங்கே அப்படி செய்யமுடியாது என்கிறார். அப்படியானால் உங்கள் கட்டுரைகளை ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது தானே?

மேலும் ஆதாரத்திற்கு: அண்டார்டிக்காவில், அண்டாகாகஜம் என்ற மிகப்புகழ் பெற்ற இலக்கியவாதி -அண்டாகாகஜம் என்ற இலக்கியவாதி பனிகுகைக்குள்ளிருந்து அவருடைய அன்னை டபாகாகுஜமுக்கு யாருக்கும் புரியாத புருஷ்கியா மொழியில் எழுதிய கடிதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும் – SubSnow Stupidity என்ற தொகுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்லி தப்பிப்பது பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

நாம் நமது நாட்டினர் மகாத்மா என்று சொன்னதை கேள்வி கேட்க்காமல் ஏற்றுக்கொண்டு தயிர் வடை இலைக்கியவாதி ஆகிவிட்டோம், ஆனால் ரனஜித் சொன்னதை அப்படியே நம்பினால் – என்னது? ஆதாரம் இருக்கிறதா? காந்தி மகாத்மா என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இல்லையா என்ன? -அந்த இலக்கியவாதிகளுக்கு என்ன பெயர்?