யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 9 (முடிந்தது)

3 டிசம்பர் 2005

இந்த தேதி நம்மில், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தவிற வேறு எதையாவது நினைவு படுத்துகிறதா?

ஆனால் மிகவும் முக்கியமான நாள் இது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர் சிறு குழந்தைகள் – சிறுவர்களும் சிறுமிகளும் – மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட ஒரு வாயுவால் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு இந்த சிறுமிகளும் சிறுவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வழந்திருப்பார்கள். பிறக்கப்போகும் இந்த குழந்தைகள் குறைகளோடு பிறப்பார்களா? விஷவாயுவின் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்துகொண்டு பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்குமா? இது வரை மறுக்கப்பட்ட இந்த விசயத்தை புள்ளிவிபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவருமா?

போப்பால் பேரிடர் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதா?மார்ச் 21 2001 அன்று கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அந்தத் தீ அருகில் இருந்த 32 குடிசைகளை சிதைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் மிளகாய் எறிந்து கருகும் வாடையை சுவாசித்ததாகச் சொன்னார்கள். அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எறிந்துகொண்டிருந்த தீ அவர்களை முச்சுத்திணறடித்தது அவர்கள் சுவாசிக்க இயலாமல் தொண்டை அடைக்க டிசம்பர் 3 1984 ஐ நினைவுகூர்ந்தனர். வரலாறு திரும்பியது.

பிப்ரவரி 2001இல் டவ் கெமிக்கல்ஸ் (DOW) என்கிற மிசிக்கனைச் சேர்ந்த நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி உலகின் இரண்டாவது பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக மாறியது. ஆனால் டவ் போப்பாலில் நடந்து முடிந்த துயரச்சம்பவத்துக்கு எந்த அளவிலும் பொறுப்பேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. கொடுக்கப்பட்ட 470 மில்லியன் டாலர் தான் இறுதியான இழப்பீட்டுத் தொகை, UCC அதைக் கொடுத்துவிட்டது எனவே அது சம்பந்தமான எந்த இழப்பீடும் இனி நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டவ்வின் முக்கியமான மேலாளார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் மனித நேயத்துக்காக மட்டுமே சில விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம், இதைக் கொண்டு நாங்கள் இழப்பீடு தருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்”.

ஆனால் இதே நிறுவனம் டெக்ஸாஸில் இருக்கும் UC நிறுவனத்தை வாங்கி ஒருவருடத்துக்குள் அப்பொழுது UCயின் மேல் தொடரப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டமானது. டவ் டெக்ஸாஸில் இருந்த UCஐ வாங்குவதற்கு முன்னர் இந்த வழக்கு சம்பந்தமாக ஏதும் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை அதனால் தான் நாங்கள் வாங்கியவுடன் நடந்துகொண்டிருந்த வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தோம், ஆனால் போப்பாலில் நடந்தது வேறுமாதிரி. அங்கு ஏற்கனவே நாங்கள் வாங்குவதற்கு முன்னரே ஒரு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாயிற்று என்று நிஜத்தை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டது.

அதேசமயத்தில் 23 மே 2002 இல், இந்திய அரசின் சார்பாக, சிபிஐ போப்பாலின் நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தது:வாரன் ஆன்டர்சன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றங்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே அது. பத்துவருட கடுங்காவல் தண்டனைக்கு உரியதான கொலைக்குற்றத்திலிருந்து கீழிறக்கி இரண்டு வருட தண்டனை மட்டுமே கொடுக்கக்கூடிய குற்றங்களை மட்டுமே சுமத்தவேண்டும் என்கிற கோரிக்கை அது.

29 ஆகஸ்ட் 2002 அன்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. ஆன்டர்சனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகிவிட்ட அவர் இதுவரையில் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.எனவே தண்டனையைக் குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை முட்டாள்த்தனமானது என்றது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிதிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட்டது.

இந்தத் துயரசம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆனபொழுது எல்லோருடைய மனநிலையும் கொண்டாட்டத்துக்கு மாறியிருந்தது. மார்ச் 2004 அன்று அமெரிக்க ·பெடரல் கோர்ட் UCCயை பாதிப்படைந்த இடத்தை சர்வதேசத் தரத்தில் சுத்தாமாக்க முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் இந்தமாதிரியான வேலை செய்வதற்கு தங்களிடம் பணமோ தொழில்நுட்பவசதியோ இல்லையென்று சொல்லிவிட்டது. ·பெடர்ல் நீதிமன்றம், ஒரு அந்நிய நாட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறான சுத்தப்படுத்தும் காரியம் செய்வதை இந்தியா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் துயரசம்பவத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்திய அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டது.

இதுவொரு முக்கியமான முடிவு. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு “மூன்றாம் உலகத்தை” சேர்ந்த நாட்டில் தான் செய்து விட்ட தவறுக்கு பரிகாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது இதுவே முதல்முறை. 1989 இல் கொடுத்த இழப்பீட்டுத் தொகைக்குப் பிறகு நடந்துமுடிந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற UCCயின் வாதம் இனி ஒருபோதும் செல்லாது.

19 ஜீலை 2004 அன்று மேலுமொரு வெற்றி கிடைத்தது.இந்திய உச்சநீதி மன்றம் மீதமிருக்கும் இழப்பீட்டுத்தொகையான 1500 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட 5,66,876 மக்களும் பிரித்துக்கொடுக்குமாறு வழியுறுத்தியது. நீதிக்காக இருபது வருடங்கள் காத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று என்பது நம்மில் பலருக்குத் தோன்றலாம், ஆனால் பாதிப்படைந்த மக்களுக்கு இது பல சோதனைகளுக்குப் பிறகு போராடிய அவர்களது மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

Wall Street Journalஇல் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் பல மேலாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்லப்பட்டது. முதன்முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வளர்ந்துவரும் மூன்றாம் உலகத்தில் தான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறது என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அன்று, UCCயின் பங்குகள் இரண்டு டாலர்கள் உயர்ந்தது. நிறுவனத்தின் சொத்து அப்படியே இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சராசரியாக பாதிப்படைந்த ஒரு நபர் வெறும் 500 டாலர்கள் மட்டுமே பெற்றதை நினைத்து அவர்கள் யாரும் வறுத்தப்படவில்லை. இந்த 500 டாலர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச்செலவுக்குக் கூட போதாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

லாப நோக்கோடு அலையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு காலத்தில் உலகையே அடிமையாக்கிவிடும் என்கிற அபாயகரமான உண்மையை நம்மில் பலரும் வசதியாக மறந்துவிடுகிறோம். நிறுவனத்தின் வெற்றிக்கு முன்பு மனிதநேயம் பொருட்டேயல்ல என்கிற படு பயங்கர தத்துவத்தை நாம் தீனி போட்டு வளர்த்துவருகிறோம்.

பூச்சிக்கொள்ளி மருந்துகளால் கேன்சர் வரும். எனவே அவை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சுதந்திரமாக அது விற்கப்படுகிறது. டர்ஸ்பன் (Dursban) என்கிற பூச்சிக்கொள்ளி மருந்து குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்திருந்தும் DOW நிறுவனம் அதை கவலைப்படாமல் சுதந்திரமாக விற்றுவருகிறது. டூபான்ட் (DuPont) நிறுவனம் ஓசோன் படலத்தை சிதைத்து தோல் கேன்சரை உருவாக்கும் chloroflurocorbans என்கிற ரசாயனத்தை உருவாக்கத்தான் செய்கிறது. பாலூட்டும் அன்னை தன் குழந்தைக்கு டையாக்ஸினை அவளறியாமலே புகட்டிக்கொண்டிருக்கிறாள். நம் உடலை நாமே கடுப்படுத்தவியலாத ஒரு புதிய வன்முறையை நாம் உருவாக்கிவிட்டோம்.

“ரசாயன தொழிலில் ஒரு ஹிரோஷிமா” வான போப்பால் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டு ஒரு தன்னார்வ புரட்சி இயக்கமாக வளர்ந்து போராட்ட குணத்தையும் எதிர்ப்பு சக்தியையும் தன்னுள் அடக்கி வருடங்கள் பல கடந்த பின்னும் அந்த இயக்கம் இன்னும் அதே மூர்க்கத்துடன் இயங்கி வருகிறது.

போப்பால் தன் பெண்களை அவர்களது சிறையிலிருந்து மீட்டுக்கொண்டுவர ஒரு காரணியாக இருந்தது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் கூடி போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு அணியை அவர்கள் உலகம் முழுவதிலும் உருவாக்கிவிட்டிருந்தனர். அவர்கள் தங்களது குரல்கள் சத்தமாகவும் சுத்தமாகவும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினர். அதையே செய்தும் காட்டினர்.

சுற்றுப்புற சூழ்நிலைக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படும் Goldman Environment பரிசு, பாதிப்படைந்த மக்களின் நீதிக்கு போராடியதற்காக, ரஷிடா பி (Rashida Bi) மற்றும் சம்பா தேவி சுக்லா(Champa Devi Shukla) ஆகிய இரு பெண்களுக்கும் ஏப்ரல் 2004 இல் கொடுக்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் இந்த இரு பெண்களும் கீழ் வருமாறு பேசினர்:
டவ் நிறுவனம் தான் இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அந்த துயரசம்பவத்துக்கு பொறுபேர்க்க வேண்டும் என்கிற தீர்ப்பு வந்த அந்த நாள் உலகம் முழுவதும் இருக்கும் சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த நாளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனத்தை தயாரிக்கும் எந்த நிறுவனமும் மனிதநேயத்துக்கு முன் லாப நோக்கத்தை முன்வைப்பதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். நாங்கள் அடிபனிந்து போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தின் வாழ்வாதாரத்தையும் உயிரின் ஆதாரத்தையும் அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதன்மூலம் நாங்கள் இருட்டை வென்றிடுவோம்.

குரல்கள்:
போப்பாலில் நடந்த துயரசம்பவத்துக்கு ஈடாக போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை மட்டுமே ஒப்பிடமுடியும். இந்த சம்பவம் நடந்த அன்று போப்பால் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வெளியாகிய 45 டன் MICஇல் போஸ்ஜீன்(phosgene) சிறிதளவு கலந்திருக்கிறது. போஸ்ஜீன் முதலாம் உலகயுத்தத்திலும், இரண்டாம உலக யுத்தத்திலும் மேலும் ஈரான் – ஈராக் யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனத்தின் தன்மையையும் அது கனிசனமான அளவு சுற்றுப்புறத்தில் கலந்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், இதனுடைய விளைவுகள் இன்னும் பல காலத்துக்கு தொடர்ந்துகொண்டிருக்கும். திட்டவட்டமான ஒரு இழப்பின் மதிப்பீட்டுக்கு வர இயலாது என்பது உண்மை.
18 டிசம்பர் 1984 அன்று டெல்லி அறிவியல் கழகம் பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு அறிக்கை.

டிசம்பர் 3

இறந்துவிட்டவர்களை நினைவு கூர்வதோடு மட்டுமில்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நீதிக்காகவும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனுக்காவும் போராட வேண்டும் என்கிற உறுதியை இந்த நாளில் நாம் எடுக்கவேண்டும்.

**
(முடிந்தது)
மூலம்: BHOPAL GAS TRAGEDY- THE WORST INDUSTRIAL DISASTER IN HUMAN HISTORY By SUROOPA MUKHERJEE.

யார் முழித்திருக்க போகிறார்கள் – 6

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மே 12 1986

மே 12 1986 அன்று யூனியன் கார்பைடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீதிபதி ஜான் F கீனன் (John F Keenan), வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். ஆனால், வழக்கை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க முடியாது என்ற அவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, வழக்கை இந்தியாவுக்கு மாற்றுமாறு தீர்ப்பு வழங்கினார். மேலோட்டமாக பார்க்கும் போது, நீதிமன்றம் இந்தியாவிற்கு சாதமாக பாரபட்சமாக நடந்து கொண்டது போல் தெரியும். பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு சரியான நீதி வாங்கித்தர இந்தியாவுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமையும் என்றும் நீதிபதி கூறினார். இது ஒருவகையில் UCCக்கு சாதகமே. வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் வாழ்க்கைத்தரம் தாழ்ந்திருப்பதால், இந்திய நீதிமன்றம் வழங்கும் பாதிப்பிற்கான இழப்பிடு -அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது- மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

நீதிபதி கீனனின் தீர்ப்பு இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், தாமே ஒரு இழப்பீட்டு தொகைக்கு, பேச்சுவார்த்தையின் மூலம் வந்தடைவதற்கு இந்த தீர்ப்பு அடித்தளமாக அமைந்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம்: UCCயின் அமெரிக்க அலுவலகத்தின் மேல் குற்றம் சுமத்தி நிரூபிப்பது மிகவும் கடினம். நடந்த பேரிழப்புக்கு UCIL தான் காரணம் ஏனென்றால் UCIL, முற்றிலும் இந்தியர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்றார்கள். UCILஇன் மொத்த தொழிலாளர்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காட்டினருக்கே அமெரிக்காவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், UCCக்கு UCILஇன் மீது முழுக்கட்டுப்பாடு இருந்தாலும், அது இந்தியாவின் சட்டதிட்டத்துக் கட்டுப்பட்டதே என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனவே பேச்சுவார்த்தையே மிக வேகமான ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற ஒரு பிம்பம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே சுமூகமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு நீதிமன்றம் போராடியிருக்கிறது என்று நீதிபதி கூறினார். ஆனால், என்ன ஆனாலும், UCC, 350 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை என்பதை அவர் கூறவில்லை. அது என்ன 350 மில்லியன் டாலர் கணக்கு, வேறொன்றுமில்லை, அது UCCக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் தொகை. ஒரு செட்டில்மெண்ட் தொகை மட்டும் தானா என்ற கோஷம் யாராலும் எங்கும் எழுப்பப்படவேயில்லை. நீதி என்ற வார்த்தை சிறிது சிறிதாக பின்னுக்கு தள்ளப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே, இந்த போப்பால் வழக்கில், ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் இன்னொரு நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை எப்படி கணக்கிடமுடியும், என்ற ஆட்சேபத்திற்குறிய வாதம் இருந்துவந்தது. இந்தியா ஒரு ஏழை நாடாக இருப்பதால், இங்கு வாழ்க்கைத் தரம்; சொத்து; வளம்; உடல்நலம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விசயங்கள்; கண்டிப்பாக மிகுந்த வேறுபாட்டுடன் -அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது- இருக்கும். “இந்த வேறுபாடுகளையெல்லாம் மீறி நாம் நமது வாழ்க்கைத்தரம் மற்றும் நமக்கிருக்கும் கொள்கைகளை அவர்கள் மீது திணிக்கவேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி.

ஆனால் இந்த வேறுபாடுகளை மனதில் கொண்டுதான் UCC போப்பாலில் பாதுகாப்பு வியூகத்தை கவனக்குறைவாக தரம் குறைந்ததாக அமைத்ததா? ஆனால் இவ்வாறான கேள்வி எழும் என்பதை நீதிபதி நன்கு உணர்ந்திருந்தவர் போல ,”இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை இந்தியா உணர்ந்திருந்தும் இது கொடுக்கும் வருவாய் அவர்களுக்கு தேவையானதாக இருந்த பட்சத்திலே அவர்கள் இந்த தொழிற்சாலையை நிறுவ ஒப்புக்கொண்டார்கள்” என்றார். அவர் சொன்னதற்கான அர்த்தம் என்னவென்றால்: “வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஒரு வல்லரசின் ஆபத்தான் தொழில்நுட்பத்தை அரவணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் பட்சத்தில், அந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் இழப்பிற்கும் இந்தியாவே பொறுப்பு ஆகும்

இந்த தீர்ப்பின் அதிர்ச்சியான் விசயம் என்னவென்றால், தீர்ப்பு UCCயின் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஆதராவாக இருந்தது என்பதே. ஆனால் உலக நாடுகளின் துணையுடன் உலகநாடுகளுக்கு எல்லாம் ஏற்படவிருக்கும் ஒரு பொதுப்பிரச்சனையை மனதில் கொண்டு இந்தியா முன் வைத்த வாதம் கண்டுகொள்ளப்படவில்லை. நீதிபதி இந்த பிரச்சனையை ஒரு தனிப்பட்ட கம்பெனியின் பிரச்சனையாக மட்டுமே அனுகினார். இது மொத்த மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொதுபிரச்சனையாக அவர் அறிய தவறினார்.

தீடிரென்று, இழப்பின் தீவிரமும் எண்ணிக்கையும், மிக அதிகமாக இருந்த பொழுதிலும், போப்பால் பிரச்சனை ஒரு உள்ளூர் பிரச்சனையாக மாறிப்போனது. இனிமேல் அந்த கம்பெனியாச்சு மக்களாச்சு என்றே எல்லோரும் நினைத்தனர். உலகின் மிகப் பயங்கரமான ஒரு பேரிடர், உலகமக்களையெல்லம் பாதிக்கக்கூடிய பின்விளைவுகளைக் கொண்ட பேரிடர், உலகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள், பல்லாயிரம் மக்களை பலிவாங்கியும், இன்னும் பல்லாயிரம் மக்களை பாதித்திருக்கும் இந்தப் பேரிடர், அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகத்தின் முன் தனது முக்கியத்துவத்தை இழந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அமெரிக்க நீதிபதியின் பார்வையில், வர்த்தகம் மனித உரிமையை வென்றுவிட்டது.

ஏழைக்கு மனித உரிமையாவது? மண்ணாங்கட்டியாவது?!

ஹமிதியா (Hamidia) மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சத்பதி (Dr.A.Satpathy, forensic expert) கையில் பிடித்திருக்கும் இந்த பெரிய புகைப்படம், இன்னும் அடையாளம் காணப்படாத மற்றும் யாராலும் சொந்தம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத மக்களின் புகைப்படங்களைக் காட்டுகிறது. டாக்டர் சத்பதி விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பிரேதங்களைப் பரிசோதனை செய்திருக்கிறார். அவர் பாதிக்கப்பட்டவர்கள் 27 விதமான வேறு வேறு விஷ இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கண்டறிந்தார். அவர்கள் விஷத்தன்மை மிகுந்த நச்சு வாயுக்களால் -அவற்றை சுவாசித்ததால் – தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் இவ்வளவு இரசாயனப் பொருட்கள் எப்படி வந்தன என்பதனை விளக்குவதற்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

செப்டம்பர் 5 1986

செப்டம்பர் 5 1986 அன்று இந்தியா நியூயார்க் நகரிலிருந்து வழக்கை போப்பால் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டது.

வழக்கம்போல, UCC, தனது சட்ட தந்திரங்களால், நீதிமன்றத்தை “மறுப்பு” கணைகளால் தாக்கியவன்னம் இருந்தது. ஒரு பூச்சிக்கொல்லி தொழிற்சாலை நிறுவுவதன் மூலம் ஏற்படவிருக்கும் ஆபத்தை தாங்கள் எந்தக் காலத்திலும் மாநில ஆரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ மறைத்ததில்லை என்று UCC சத்தியம் செய்யாத குறையாக சொன்னது. மேலும் MIC அப்படியொன்றும் மிகப்பயங்கரமானது அல்ல என்றும் கூறியது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடத்தில் தொழிற்சாலை நிறுவியதை மறுத்தது. நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) விதிக்கப்பட்ட பன்நாட்டு ஒருங்கிணைப்பு விதிகளை மீறியதை மறுத்தது. விசவாயு கசிந்ததை மறுத்தது. அது ஒரு தொழிலாளியிம் நாசவேலை என்று தடாலடியாக பல்டி அடித்தது.

கடைசியாக, அவர்களில் இருப்பையே அவர்கள் நிராகரித்தார்கள்!! இந்திய வழக்கறிஞர்கள் UCCஐப் பற்றிக்குறிப்பிடும் போது,”மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்” என்று கூறியிருந்தார்கள். இதைப் பயன்படுத்திய UCC அப்படியாருமே இல்லை என்றது. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதற்கு வேறுவேறு அர்த்தங்கள் கற்பித்து வழக்கை திசைதிருப்புவது வழக்கறிஞர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இது சிலேடையின் உச்சக்கட்டம். UCC கண்ணுக்குப்புலப்படாத ஒரு அமெரிக்க வர்த்தகம். அவர்கள் மற்ற நாடுகளில் இருக்கும் சில பெரிய நிறுவனங்களில் சில பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். அவ்வாறான வேற்று நாட்டு நிறுவனங்களில் ஒன்று தான் UCIL என்று கூத்தடித்தனர்.

போப்பால் தொழிற்சாலையில் தினமும் நடக்கும் விசயங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை காட்டிக்கொள்ள விரும்பியது UCC. அப்படியிருக்க நேர்ந்த இந்த பேரிடருக்கு எப்படி UCC பொறுப்பாகமுடியும் என்று பாவமாக கேட்டது UCC. ஆனால் எவ்வளவு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாலும் உண்மை அதுவல்ல. UCILஇன் எந்த ஒரு பாலிசியும், செலவுதிட்டமும், செலவும், நிறுவனத்தின் எந்த ஒரு அறிக்கையும், டான்பரியில் (Danbury) இருக்கும் UCCயின் தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினமான வேலை.

(தொடரும்)

thanks : swaroopa mukarjee

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 3

டிசம்பர் 4, 1984

UCIL இன் மானேஜேர் ஜே.முகுந்த் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஐந்து பேர் டிசம்பர் மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது, CBI விசாரணையை ஆரம்பித்தது.

அதேசமயத்தில், அமேரிக்காவில், டிசம்பர் மூன்றாம் தேதி பின்னிரவில், டான்பரியில், கனெக்டிக்கட்டில் இருக்கும் Union Carbide Corporation (UCC) தலைமை அலுவலகத்தில், ஒரு டெலக்ஸ் பிரின்டர் சட்டென்று உயிர்பெற்றது. போப்பால் பிரிவில் ஒரு வால்வ் பழுதடைந்து விட்டது என்றும் உயிர்பலி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்ற மிகச்சுருக்கமான தகவலைக்கொண்டிருந்தது அது. பின்னர் செய்தி பெரிய அளவில் கசிய ஆரம்பிக்க அந்த ராட்சத தொழிற்சாலை அதிர்ச்சியில் உரைந்தது.

“போப்பாலில் நடந்து மிகவும் எதிர்பாறாத ஒன்று. இதுக்கு முன்னர் இது போல் எதுவும் நடந்ததில்லை. மேலும் உலகத்திலே பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்களிடம் தான் சிறப்பாக இருக்கிறது” என்பது தான் முதன் முதலில் UCC வெளியிட்ட அறிக்கை. UCC பீதியில் உரைந்திருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை. அமெரிக்காவை இந்தச் செய்தி சென்றடைந்த சில மணி நேரத்திலே, MIC தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் விர்ஜீனியாவில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைகள் நிறுத்தப்பட்டன.

செவ்வாய்கிழமை காலை 4:30 மணியளவில் சில முக்கியமான உயர்மட்ட அதிகாரிகள், இழந்த UCC யின் கவுரவத்தை சீர் படுத்த மிகப் பெரிய அளவிலான பிரச்சாரத்தைத் துவக்கியிருந்தனர். போப்பாலில் பலியானவர்களுக்காக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்கு UCC யின் அனைத்து அலுவலகத்திலும் கொடி அரைக்கம்பத்திலே பறந்தது.

UCC பலரின் நிர்பந்தத்திற்குப் பிறகு “இவ்வளவு பெரிய அளவிலான சேதம் விளையக்கூடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை” என்று ஒத்துக்கொண்டது. ஆனால் போப்பாலில் என்ன தவறு நடந்தது என்பதைக் கூற மறுத்தது. உயர் மட்ட அதிகாரிகளிலிருந்து, டாக்டர்ஸ், மானேஜர்ஸ், பொறியாளர்கள் என அனைவருமே வாய் திறக்கவில்லை. அதே சமயத்தில், UCC, அமேரிக்காவில் இது போல நடக்க வாய்பில்லை என்று தொடர்ந்து உறுதியளித்துக்கொண்டிருந்தது, விர்ஜினியாவில் மிக அதி நவீன பாதுகாப்பு விசயங்கள் இருக்கிறது பயப்படத்தேவையில்லை என்றது.

உலகநாடுகள் கடுமையாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டன. Breziero, France இல் இருந்த, UCC க்கு சொந்தமான, MIC ஐ வைத்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது. மக்கள் அதை மீண்டும் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரேசில் MIC சேமிப்பைத் தடைசெய்தது. Livingston, Scotland, UCC கொடுத்திருந்த, புதிய தொழிற்சாலை தொடங்கும் திட்டம் ஒன்றை நிராகரித்தது.

அடுத்த மூன்று நாட்களில் UCC பங்குகளின் விலை வால்மார்ட்டில் சடசடவென சரிய ஆரம்பித்தது. இதனால் UCC க்கு ஏற்பட்ட நஷ்டம் ஏறக்குறைய முன்னூறு மில்லியன் டாலர். ஆனாலும் UCC தான் திவாலாகி விட்டதாக ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியிலும் எந்தவித பதட்டத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. “எங்களுக்கு இருக்கும் இன்சூரன்ஸ் மற்றும் பிற வருமானங்கள் நன்றாகவே இருக்கின்றன. எங்களது தற்போதைய நிதி நிலவரம் சுபிட்சமாகவே இருக்கிறது” என்றே கூறினார்கள். உலகம் இதை நம்பியது. உடனே பங்கு சந்தையில், UCC யின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

டிசம்பர் 7, 1984

அப்பொழுது வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) தான் UCC யின் சேர்மேனாக இருந்தார். அவர் டிசம்பர் 7, வெள்ளியன்று இந்த சம்பவத்தை விசாரனை செய்ய போப்பால் வந்தடைந்தார். “எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாகச் செய்வோம்” என்று அவர் அமெரிக்கா புறப்படும் முன்னர் உறுதியளித்தார்.

அவருக்கு டெல்லியில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது, போப்பாலுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச்ச்செல்லப்பட்டார். அவர் போப்பாலை வந்தடைந்ததும் போலீஸ் அவரை கைது செய்தது. UCC யின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், நடந்து முடிந்த துயர சம்பவத்துக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கருதப்பட்டது.

UCIL இன் கெஸ்ட் கவுஸ்சில், அவர் ஆறு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்து, இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அவர் டெல்லிக்கு மீண்டும் ரகசியமாக அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து யூனியன் கார்பைடுக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் அவரை பத்திரமாக அவரது சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றது. அதற்கப்புறம் அவர் நீதிமன்றத்திற்கு வரவேயில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று நமது நீதிமன்றம் அறிவித்தது.

டிசம்பர் 10, 1984

அமெரிக்காவுக்கு திரும்பியவுடன் வாரன் ஆன்டர்சன், டிசம்பர் பத்தாம் தேதி ஒரு பத்திரிக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். “இந்தியாவில் உயிரிழந்தவர்களுக்கு சரியான தொகை இழப்பீடாக வழங்கப்படும். இதனால் கம்பெனியின் நிதி நிலவரம் எந்த விதத்திலும் மோசம் அடையாது” என்றார். அவர் இரண்டு விசயங்களை திரும்பத் திரும்ப சொன்னார். ஒன்று: இந்த துயர சம்பவத்தால் கம்பெனி எந்த விதத்திலும் பாதிப்படையாது. இரண்டு: இந்தியாவில் நடந்த – சந்தேகமில்லாமல் உலகத்திலே நடந்த மிக மோசமான – விபத்துக்கு கம்பெனி எந்த வகையிலும் பொறுப்பல்ல.

1945 ஆம் ஆண்டு ஒரு சாதரண சேல்ஸ் மேனாக வேலையில் சேர்ந்த வாரன் ஆன்டர்சன் 1982 இல் அந்த கம்பெனியின் CEO வாக வள்ர்ச்சியடைந்திருந்தார். ஒரு
சேர்மேனாக அவர், கம்பெனியின் செல்வாக்கை உறுதியாக மற்றும் வெற்றிகரமாகவே நிலைநாட்டினார்.

மற்ற தொழிற்சாலைகள் போலவே UCC யும் உற்பத்தியை மனதில் கொண்டே இயங்கிவந்தது. அவர்களது தயாரிப்பை, அவர்கள் தங்களது கணக்கு புத்தகத்தின் எண்ணற்ற படங்களாக, கிராப்பாகத்தான் கண்டார்கள். இந்த தொழிலில் உயிர் பலி இருக்கும் பட்சத்தில், லாபக்கணக்கிலிருந்து சில எண்களை மட்டுமே கழிப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை.

டிசம்பர் 12, 1984

மறுபுறம், போப்பால் அரசுக்கு பிரச்சனைகள் மேலும் மேலும் குவிந்தவாறு இருந்தது. மக்களின் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது. யாரைத்தான் நம்புவது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கையற்ற குழப்பான ஒரு இருண்ட வாழ்க்கையை அவர்கள் மௌனமாக கழித்துக்கொண்டிருந்தனர்.UCC யின் இன்னொரு டாங்க்கிலிருந்த -E611- பதினைந்து டன் MIC எப்படி அழிப்பது -அல்லது நீர்த்தப்படுத்துவது- என்பதே மாநில அரசின் தற்போதைய தலையாய வேலையாக இருந்தது. டிசம்பர் 12 அன்று, ஆபரேசன் பெயித் (operation faith) என்ற திட்டம் முதலமைச்சர் அர்ஜுன் சிங்கால் அறிவிக்கப்பட்டது. இது உண்மையைச் சொல்லப்போனால், டாங்கிலிருந்த MIC ஐ அழிப்பதற்காவே -or rather neutralize- ஏற்படுத்தப்பட்டது. டிசம்பர் 16 அன்று செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆபரேசன் பெயித் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையூட்டுவதற்கு முயற்சித்தது. பள்ளி கல்லூரிகள் டிசம்பர் 23 வரை திறக்கப்படவில்லை. இந்த MIC ஐ நீர்த்தப்படுத்து செயலைப் பற்றி மிகப்பெரிய அளவில் ரேடியோ மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. மக்களின் நம்பிக்கையைத் திரும்பப்பெற தொழிற்சாலைக்கு அருகிலிருந்த மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு முகாம்கள் அமைக்கும் பணி கவனமாக செய்யப்பட்டது.

ஏற்கனவே மனதளவில் பாதி இறந்திருந்த போப்பால் மக்கள் யாரிடமும் நம்பிக்கை வைக்க தயாராக இல்லை. துன்பத்தை நேரில் கண்டு அனுபவித்த மக்கள் ரேடியோ சொல்வதையா கெட்க்கப்போகிறார்கள். அவர்கள் எங்கெங்கோ ஓடினார்கள். பஸ் கூரையிலும், ரயில் கூரையிலும், ஏன் ரயில் பெட்டிகளை இணைக்கும் சங்கிலிகளில் கூட அவர்கள் பயணம் செய்தனர். ஆஸ்பத்திரிகளிலிருந்து நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படாமலேயே மாயமாய் மறைந்தனர். மக்கள், தங்கள் வாழ்க்கை முழுதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை, வங்கிகளிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறினர். பெட்ரோல் பம்புகளின் நீண்ட வரிசைகளில் அவர்கள் தவமாய் காத்துக் கிடந்தனர். நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உலகத்தின் பல திசைகளிலிருந்து வந்திருந்த மக்கள் ஒரேயடியாக போப்பாலைக் காலி செய்தனர். சிலர் தங்களது சொந்தங்களை ஏதும் எழுதப்படாத சமாதிகளில் விட்டுச்சென்றனர்.

UCC க்கு அருகில் வாழ்ந்தவர்களுக்காக பதினோறு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஏழையிலும் ஏழைகளே -நகரத்தை விட்டு வெளியேற இயலாதவர்களே- இந்த முகாம்களில் தங்கினர். ஆபரேசன் பெய்த்தைப் பற்றிய விளம்பர போர்டுகள், காலியான வீதிகளில், பேய்களைப்போல காவல் காத்துக்கொண்டு, கொடிய தனிமையில் சோகத்தோடு நின்றுகொண்டிருந்தன.

ஆபரேசன் பெயித் பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட யாருமற்ற தனிமையிலே தான் நடந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகள் பணியாளர்களை நகரத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க அவர்கள்து விடுமுறைகளை ரத்து செய்தன. ஆனால் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தப்பியோடும் மக்கள் அதிகாரிகளின் சம்மதத்திற்காக காத்துக்கிடக்கவில்லை. அன்று மட்டும் எழுபதினாயிரம் மக்கள் நகரத்தைக் காலி செய்தனர் என்று அரசு அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது.

(தொடரும்)

 

நன்றி: Suroopa Mukherjee

Translated from Suroopa Mukherjee’s BHOPAL GAS TRAGEDY : The Worst Industrial Disaster in Human History.