ஓலா கேப்ஸ் அதன் போட்டியாளரான உபரை வாங்க இருப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. இந்த ஒப்பந்தத்தை முன்னின்று செய்வது இரு நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிற சாஃப்ட் பேங்க். சாஃப்ட் பேங்க் இரு நிறுவனத்திலும் முதலீடு செய்திருப்பதால் இருமுறை பணம் செலவழிக்க விரும்பவில்லை. ஓலா ஆஃபர் கொடுத்தால், உபரும் வேறு வழியில் ஆஃபர் கொடுக்க வேண்டும். இரு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்கள் வாரிக்கொடுத்தால் இரு நிறுவனங்களும் போட்டி போட்டிக்கொண்டு வாடிக்கையாளர்களை அள்ளிக்கொள்ளும்.
கடைசியில் லாபம் யாருக்கு? சாஃப்ட் பேங்குக்கு. ஆனால் ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர்கள் கிடைத்துவிட்ட பிறகு தினம் தினம் அவர்கள் இந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு இந்த நிறுவனங்களின் சேவை அவர்கள் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டைக் குறைத்து லாபத்தைக் கூட்ட வேண்டும். அப்பொழுதுதான் போட்ட காசை எடுக்க முடியும். என்ன இருந்தாலும் எப்படி செலவுசெய்தாலும் யார் செலவுசெய்தாலும் பணம் சாஃப்ட் பேங்கின் பணம் தான். அவர்களுக்கு ஓலாவும் உபரும் இணைவது மிகவும் முக்கியம் – போட்ட பணம் திரும்பக் கிடைக்க வேண்டும்.
மார்ச் 26இல் உபர் கிழக்காசியாவின் தனது பிஸினஸை சிங்கப்பூர்-மலேசியாவில் இருந்து செயல்படும் க்ராபிற்கு விற்றுவிட்டது. இணைந்த மொத்த பிஸினஸில் உபருக்கு 27.5% பங்கு கிடைக்கும். ஜப்பானின் பில்லியனரான மசாயோசியின் மகனின் சாஃப்ட் பேங்க், உபரில் செய்த தனது சமீபத்திய முதலீட்டின் மூலம், உபரில் முதன்மை முதலீட்டார் ஆனது. உபர் மற்றும் க்ராபின் இந்த ஒப்பந்தத்தில் சாஃப்ட் பேங்கே வின்னர்.