இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

என்னுடைய கல்லூரிக் காலங்களிலிருந்தே நான் விகடனில் வரும் ‘அரசன்’ சம்பந்தப்பட்ட கார்டூன்களின் ரசிகன். அந்த கார்டூன்களில் சில சமயம் ‘சிம்பு’ என்ற பெயர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த கார்டூன்கள் ஒரு மனிதனின் கற்பனைத்திறனை (creativity) பறைசாற்றுபவை. மதனின் கார்டூனும் அவ்வாறே. ஆனால் நமக்கு தெரியாத அல்லது நாம் அனுபவிக்காத, அதுவும் நாம் புராதாண காலத்து அரச தமிழ் சினிமாவில் கண்டு ஆச்சரியப்பட்ட, வீர தீர பராக்கிரம மன்னர்களை, அரசர்களை நையாண்டி செய்வதை பார்க்கும் பொழுது எங்கிருந்தோ சிரிப்பு வந்து தொற்றிக்கொள்கிறது.

பட அறிவிப்பு வந்து, அதுவும் வடிவேலு தான் இம்சை அரசன் என்ற பொழுது, எனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. அன்றிலிருந்து நான் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். பல தடைகளை மீறி படம் திரையிடப்பட்டிருக்கிறது. குதிரை வதைத் தடுப்புச்சட்டம் நுழைந்தது, படத்தில் வரும் நகைச்சுவைகளையும் மிஞ்சி விட்டது. அரசர் காலத்து படங்களை எடுக்கும் பொழுது, அரசர் குதிரையில் வருவது போன்று காட்டவேண்டுமேயானால், நாம் PreKG/LKG/UKG, படிக்கும் பொழுது விளையாடப் பயன்படுத்திய மரக்குதிரைகளையா உபயோகிக்க முடியும்? குதிரைகளின் மீது இவர்களுக்கு இருக்கும் பாசத்தை சண்டை காட்சிகளில் உதை வாங்கி, சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழும் (உபையம்: சந்திரமுகி) துணைநடிகர்கள் மீது காட்டியிருக்கலாம். மனித வதை தடைச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?

படம், என் நண்பன் பாணியில் சொல்வதென்றால், ‘ரவுசு’ தான். படம் ஆரம்பித்தவுடன், திரையில் தோன்றும், கதாபாத்திரங்களை அம்புக்குறியிட்டு அறிமுகப்படுத்தும் பொழுது, அங்கே தூணில் ஒட்டிக் கொண்டிருக்கும் பல்லியை, ‘அரண்மனை பல்லி’ என்று வட்டமிட்டு காட்டும் பொழுது தொடங்குகிறது ‘ரவுசு’. அங்கிருந்து கடைசியில், ‘நம் மூதாயதயர்களான அலெக்சாண்டர், சாம்ராட் அசோகர்,BraveHeart Mel Gibson போன்று வீரமாக வாழ்வோம்’ என்று இம்சை அரசன் (வடிவேலு) கர்ஜிக்கும் வரை படம் நெடுக ரவுசு தான். அவர் மீசையே ரவுசு தான்.

‘சிம்புதேவன்’ அடிபடையில் தான் ஒரு கார்டூனிஸ்ட் என்பதை படத்தில் பல இடங்களில் நிரூபிக்கிறார். அந்தபுரத்தைக் காட்டும் பொழுது, ‘அந்தபுரம் 24 மணி நேர சேவை’ என்று முகப்பில் எழுதியிருப்பது, கோட்டை வாசலில்,’பழைய எண்:24 புதிய எண்:42 எதிர்கால எண்: 0.05′ என்று எழுதியிருப்பது போன்று சில உதாரணங்கள்.

வடிவேலு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை மறுபடியும் ஒரு முறை ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார். அவருக்கு ‘கைப்பிள்ளை’யிலிருந்து நான் தீவிர ரசிகன். என் நண்பர் கூட்டம் ‘வாலிப வயசு’ என்று கைப்பிள்ளை போன்று இன்றும் செய்து காட்டிவருகின்றனர். ‘ஆணியே புடுங்கவேனாம்’ என்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் வரும் வசனம் இன்றும் எங்கள் வட்டத்தில் புழக்கத்தில் உள்ளது. ஆனால் அவர் திரையில் தோன்றிய பொழுது நான் மட்டுமே கைதட்டிக் கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் கை தட்டக்கூடாதோ?

ஒரு வடிவேலே வயிற்றைப் புண்ணாக்கும் பொழுது படத்தில் இரண்டு வடிவேலுகள். கேட்கவா வேண்டும்? கரடி நகைச்சுவையும், அக்காகோலா,கப்சி, ஜாதிச் சண்டை மைதானம் போன்றவையும் நம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. படம் முடிந்து வந்தவுடன், மதியம் சாப்பிட்ட சாப்பாடு சரியில்லையோ என்று நினைக்குமளவு வயிற்று வலி.

அக்காகோலா,கப்சி போன்ற வெளிநாட்டு உற்சாகபாணங்களை ஆங்கிலேயர்கள் விற்க வரும்பொழுது, மங்குனி(அப்படியென்றால் என்ன?) அமைச்சர் உள்ளூர் தயாரிப்பு நசுக்கப்பட்டு விடாதா என்று கேட்கும் பொழுது, பெயர் மட்டும் தமிழில் வைத்துக்கொள்ளலாம், மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று இம்சை அரசன் கூறுவது சற்று யோசிக்கவைக்கிறது. வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, சிந்திக்கவும் விசயம் இருக்கிறது.

இந்த நல்ல முயற்சிக்கு வித்திட்ட ஷங்கருக்கு பாராட்டுகள்.

எனக்கு Lord Of The Rings பார்க்கும் பொழுதெல்லாம், நமது பொன்னியின் செல்வன் கதை, ஞாபகத்திற்கு வரும். ஏன் பொன்னியின் செல்வன் கதையை அதே பிரம்மாண்டத்துடன் திரைப்படமாக தயாரிக்க முடியாது என்ற எண்ணமும் உடன்வரும்.

சிறிது நாட்களுக்கு முன்பு தான் ‘சஞ்சய் லீலா பன்சாலியின்’ ‘தேவதாஸ்’ திரைப்படம் பார்த்தேன். எத்தனை அழகு? எத்தனை பிரம்மாண்டம்? என்னமோ தெரியவில்லை எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது பழைய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தான், அதை அப்படியே, மிகப் பிரம்மாண்டமாக, மறு தயாரிப்பு செய்யலாம்!

இம்சை அரசனின் வெற்றியால், இவை எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்.

Imsai Arasan 23am Pulikesi : Review

7 thoughts on “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

  1. இங்கே பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.படம் பார்க்க ஆவலாக உள்ளது.

    Like

  2. நன்றி. கண்டிப்பாகப் பாருங்கள். இப்பொழுது வரும் தாதாயிசப் குப்பைகளுக்கு மத்தியில் நல்ல தரமான நகைச்சுவைப் படம்.

    Like

  3. பதிவுக்கு நன்றி…படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள், எனக்கும் படம் பார்க்க ஆர்வமாக உள்ளது,அன்புடன்…சரவணன்.

    Like

  4. super :)))படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்….

    Like

  5. பொதுவாக தமிழ் படங்கள் மீது அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், இந்த படம் வித்தியாசமாக படுகின்றது. உங்கள் விமர்சனமும் ஆவலை தூண்டுகின்றது.

    Like

  6. உங்கள் நண்பன், Anonymous, நற்கீரன் : பதிவைப் படித்தமைக்கு நன்றி. படம் பாருங்கள். கண்டிப்பாக எதிர்வினை தாருங்கள்நெருப்பு: 30% தானா? நான் 95% காமெடிப் படம் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன். மன்னிக்கவும், எனக்கு ஹாஸ்ய உணர்வு அதிகமாகிவிட்டதென்று நினைக்கிறேன்.

    Like

Leave a comment