BABEL

Sean Penn நடித்த 21 Grams என்ற அருமையான படத்தை இயக்கிய மெக்சிக்கோவில் பிறந்த Alejandro González Iñárritu என்பவர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். BABEL இந்த வருடத்தைய ஆஸ்காருக்கு ஏழு நாமினேஷன்களைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் – ஆனால் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமான – நடக்கும் சம்பவங்கள் காட்டப்படுகின்றன. அதில் வரும் கதாப்பாத்திரங்கள் தீவிரமாக அலசப்படுகின்றன. சம்பவங்கள் Butterfly Effect என்று சொல்ல முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று தான்.

முதலில் மொரோக்கோவின் ஒரு மூலையில், ஆடுகள் மேய்த்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. ஹசன் என்பவர், அப்துல்லா என்ற அந்த குடும்பத்தின் தலைவருக்கு துப்பாக்கி ஒன்றை விற்கிறார். அப்துல்லா தனது இரண்டு மகன்களிடம் அந்த துப்பாக்கியைக் கொடுக்கிறார். ஓநாய்களிடமிருந்து ஆட்டு மந்தையைக் காப்பாற்ற இந்த துப்பாக்கியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறுகிறார். ஹசன் அந்த துப்பாக்கி மூன்று கி.மீ வரை சுடும் தன்மை கொண்டது என்கிறார்.

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டாக சுடுகிறார்கள். அவர்களுக்கு இந்த துப்பாக்கி உண்மையிலே மூன்று கி.மீ சுடுமா என்ற சந்தேகம் எழுகிறது. அவர்கள் நின்று கொண்டிருக்கும் மலைமேலிருந்து கீழே ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வாகனங்களைக் குறிபார்க்கிறார்கள். முதலில் ஒரு வேன் வருகிறது. மூத்தவன் சுடுகிறான். ஒன்றும் நடக்கவில்லை. இளையவன், “உனக்கு சுடத்தெரியவில்லை என்னிடம் தா” என்று வாங்கி அங்கே வந்து கொண்டிருந்த ஒரு டூரிஸ்ட் பஸ்ஸைச் சுடுகிறான். முதலில் ஏதும் நடக்காதது போல சென்று கொண்டிருந்த பஸ் சட்டென்று நிற்கிறது.


அமெரிக்காவிலிருக்கும் ஒரு தம்பதியினர் -Richard, Susan -மொரோக்கோவுக்கு சிதைந்து கொண்டிருக்கும் தங்களது திருமண வாழ்க்கையை சீர் படுத்த டூர் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு மகன். ஒரு மகள். மகனையும் மகளையும் அமேரிக்காவிலிருக்கும் தங்களது வீட்டிலே நானியிடன் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் சிறய வாக்குவாதம் நிகழ்கிறது. ஒருவரை மற்றொருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த சூசன் குண்டடி படுகிறார். இரத்தம் வழிந்தோடுகிறது. அப்துல்லாவின் இளைய மகன் சுட்ட குண்டு சூசனைத் தாக்கியிருக்கிறது.

பக்கத்தில் ஏதும் ஆஸ்பத்திரி இல்லாமல் அருகிலிருக்கும் ஒரு கிராமத்துக்கு அவளை அழைத்துச் செல்கின்றனர்.பஸ்ஸில் உடன் பயனித்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் -அன்வர் – ரிச்சர்டுக்கு உதவியாக இருக்கிறார். போதுமான மருத்துவ வசதி இல்லாததால் குண்டடி பட்ட சூசனுக்கு மயக்க மருந்து இல்லாமலே தையல் போடப்படுகிறது. டூரிஸ்ட் பஸ்ஸில் உடன் பயனித்த அமேரிக்கர்கள் சூடு தாங்காமல் தாங்கள் திரும்ப வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். ரிச்சர்ட் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காமல் டூரிஸ்ட் பஸ் இவர்களை அந்த வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்திலே விட்டுச் செல்கின்றனர். ரிச்சர்ட் தனது எம்பசிக்குப் போன் செய்து போக்குவரத்து வசதி செய்து தரும் படி கேட்கிறான்.
இந்த சம்பவம் பரபரப்பு அடைகிறது. சுடப்பட்டவர் அமெரிக்கர் என்பதால் அமெரிக்கா தீவிரவாத வெறிச்செயல் என்று முத்திரை குத்துகிறது. இது தீவிரவாதம் இல்லை என்பதை நிரூபிக்க மொரோக்கோ அரசு தீவிர நடவடிக்கையில் இறங்குகிறது. மலையில் கண்டெடுத்த தோட்டாக்களை வைத்து என்ன துப்பாக்கி ரகம் என்பதைக் கண்டுபிடித்த போலீஸ் ஹசனை வலைத்துப் பிடிக்கிறது. ஹசன் தான் ஏற்கனவே அப்துல்லாவுக்கு விற்று விற்றதாகக் கூறுகிறான்.

போலீஸ் அப்துல்லாவைத் தேடிக்கொண்டு வரும்போது எதேச்சையாக அப்துல்லாவின் மகன்களை வழியில் பார்த்து அப்துல்லாவின் வீட்டுக்கு வழி கேட்கிறது. நிலமையை உணர்ந்து கொண்ட இரு சிறுவர்களும் – பெரியவன் முழித்து கொண்டிருக்க – சமயோஜிதமாக சிந்தித்து வழி மாற்றிக் கூறுகின்றனர். இந்த சீனில் சின்னப்பையன் செம கூல்.
ஜப்பானில் வாய் பேசவும் முடியாத, கேட்கவும் இயலாத ஒரு பெண்ணின் கதை வருகிறது. அவளது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இந்த மன உளைச்சலுடன், அவளுக்கு தன்னை மற்ற பையன்கள் கண்டுகொள்வதில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. அது obssession ஆக மாறுகிறது. விளைவு, அவள் public seduction இல் இறங்குகிறாள். உள்ளாடை ஏதுமின்றி மிகச்சிறய ஸ்கர்ட் மட்டும் போட்டுக்கொள்வது, டென்டிஸ்டிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பது என்று தொடங்கி கடைசியில் தனது அப்பாவை துப்பாக்கி சம்பந்தமாக விசாரிக்க வந்த டிடெக்டிவ் ஒருவரிடமே தன்னைக்கொடுக்கிறாள். டிடெக்டிவ் முதலில் மறுத்தாலும் பிறகு அவளின் அழுகையையும், நிலையும் நினைத்து சம்மதிக்கிறார். புறப்படும் பொழுது அவள் அவரிடம் ஒரு லெட்டர் கொடுக்கிறாள். அதை பிறகு வெளியே சென்றபிறகு படிக்குமாறு கூறுகிறாள்.

டிடெக்டிவிடம் அவள் தனது தாய் பால்கனியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள் என்கிறாள். அதைத் தான் பார்த்ததாகவும் சொல்கிறாள். அவளின் அப்பா ஒரு வேட்டைப்பிரியர். அவர் மொரோக்கோ சென்றிருந்த பொழுது ஹசனுக்கு – அவருக்கு guide ஆக இருந்திருக்கிறார்- பரிசாக துப்பாக்கியை வழங்கியிருக்கிறார்.

டிடெக்டிவ் கீழே வரும்பொழுது ஊமைப்பெண்ணின் அப்பாவும் வந்து விடுகிறார். அவரிடம் ஹசனுக்கு அவர் தான் துப்பாக்கியைக்கொடுத்தாரா என்று கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டு, அவரது மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு தனது வருத்தத்தை தெரிவிக்கிறார். ஆனால் அந்த ஊமைப்பெண்ணின் அப்பா அதிர்ச்சியடைந்து தன்னுடைய மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை , அவள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்கிறார்.

குழம்பிய டிடெக்டிவ் இரவு உணவின் போது அந்த ஊமைப்பெண் கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று இறுதி வரைக்கூறப்படவில்லை.

ரிச்சர்ட் மற்றும் சூசனின் மகன் மற்றும் மகளைப் பற்றிய கதை வருகிறது. மகனையும் மகளையும் கவனித்துக்கொள்ளும் நானி மெக்சிக்கோவைச் சேர்ந்தவர். அவரது மகனுக்கு அன்று திருமணம். கண்டிப்பாகச் சென்றே தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கும் நானி குழந்தைகளை என்ன செய்வதென்று யாரிடத்தில் விட்டுச் செல்வது என்று தெரியாமல் தன்னுடனே அழைத்துச்செல்கிறார். அவரது உறவினர் ஒருவரின் -கேயில்- காரில் இவர்கள் மெக்சிகோ செல்கின்றனர்.

அமெரிக்க சிறுவன் மெக்சிக்கோவை வினோதமாகப் பார்க்கிறான். கேயில் அநாசாயமாக கோழியின் கழுத்தைத் திருகிக் கொல்வது நம்மையே வெலவெலக்கச் செய்யும் போது இதையெல்லாம் பார்த்திறாத அமேரிக்கச் சிறுவன் என்ன செய்வான். பேந்த பேந்த முழிக்கிறான்.

திருமணம் முடிந்து குடி போதையிலிருக்கு கேயில் கார் ஓட்ட நானியிம் சிறுவனும் சிறுமியும் மீண்டும் அமேரிக்காவை நோக்கி பயனிக்கின்றனர். செக்போஸ்டில் அமேரிக்க போலிஸ் இவர்களைப் பிடித்து நிறுத்துகிறது. கேயலை போதை டெஸ்டிற்கு அழைக்கிறது. நிலைமையை உணர்ந்த கேயல் வேகமாக காரை ஸ்டார்ட் செய்து தப்பிக்கிறான். நீண்ட தூரம் சென்றபின்னர் ஒரு காட்டு வழிப்பாதையில் நானியையும் சிறுவனையும் சிறுமியையும் இறக்கிவிட்டுவிட்டு அவன் சென்றுவிடுகிறான். இரவில் என்ன செய்வது என்று தெரியாமல் சிறுவனும் சிறுமியும் அழுகிறார்கள். நானி செய்வதறியாமல் திகைக்கிறார். அழுகிறார். தவறு செய்துவிட்டதை உணர்கிறார்.

அமேரிக்க போலீஸ் பெற்றோர்களின் சம்மதம் இன்றி பிள்ளைகளை வேறு நாட்டிற்கு அழைத்து சென்றதை கண்டித்து நானியை மெக்சிக்கோவிற்கே திருப்பி அனுப்புகிறது. நானி கதறுகிறார். தனக்கு மெக்சிகோவில் ஒன்றும் இல்லையென்றும் அமேரிக்காவிலே பதினைந்து வருடம் வாழ்ந்து விட்டேன் தயது செய்து என்னை வெளியே அனுப்பாதீர்கள் என்று கெஞ்சுகிறார். பலனில்லை.

சூசனை ஹெலிகாப்பட்டர் வைத்து அமெரிக்க எம்பசி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுவருகிறது. உதவியாக இருந்த அன்வருக்கு ரிச்சர்ட் பணம் கொடுக்கிறார், அன்வர் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். கஷ்டகாலத்தில் மிகவும் அன்புடன் இருந்த சூசனும் ரிச்சர்டும் தங்ளது பிணைப்புகளை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

அந்த கிராமத்தில், தைத்த பிறகு வழி தெரியாமல் இருக்க சூசனுக்கு அந்த வீட்டிலிருக்கும் கிழவி புகைக்க கஞ்சா கொடுக்கிறாள். அவள் புகைத்து மயக்கமாவதைப் பார்த்து ரிச்சர்ட் அழுவது மிகவும் நெகிழ்ச்சியான சீன். எழுந்திருக்க முடியாமலிருக்கும் சூசன் சிறுநீர் கழிக்க ரிச்சர்ட் உதவுவதும் நெகிழ்ச்சி. Brad Pitt நடிப்பில் மின்னுகிறார். புதிய தோற்றமும் கச்சிதமாகப் பொருந்துகிறது. நானியாக நடித்தவரின் நடிப்பும் மிக இயல்பு. நடு காட்டில் சதுப்பு நிலத்தில் தனித்து விடப்பட்ட பொழுதும், குழந்தைகளை எப்படியாவது எந்த பிரச்சனையுமில்லாமல் அமெரிக்க சென்று சேர்த்துவிட வேண்டும் என்று துடிப்பதிலும் மிளிர்கிறார்.

அந்த ஜப்பானியப் பெண் சற்று மனநிலை சறியில்லாதவள் என்பது எங்களது எண்ணம். மேலும் அவள அந்த டிடெக்டிவிற்கு கொடுத்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தாள் என்பது கடைசி வரை அவிழ்க்கப்படாத முடிச்சு. என்ன எழுதியிருப்பாள்?

ரீரெக்கார்டிங் – Gustavo Santaolalla-அருமையிலும் அருமை. அமைதியான அருவி. கடைசியில் பெயர்கள் போடப்படும் பொழுது வரும் மியூசிக் மிகவும் நன்றாக இருந்தது. நான் மற்றும் இன்னும் வெகு சிலர் மட்டுமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். Cleaners வந்த பின்னும் நான் உட்கார்ந்திருந்தேன்

அகெடெமி அவார்டுக்கான ஏழு நாமினேசன்கள்:

Nominated: Best Motion Picture of the Year (Alejandro González Iñárritu, Jon Kilik and Steve Golin)

Nominated: Best Achievement in Directing (Alejandro González Iñárritu)

Nominated: Best Performance by an Actress in a Supporting Role (Adriana Barraza)

Nominated: Best Performance by an Actress in a Supporting Role (Rinko Kikuchi)

Nominated: Best Writing, Screenplay Written Directly for the Screen (Guillermo Arriaga)

Nominated: Best Achievement in Editing (Douglas Crise, Stephen Mirrione)

Nominated: Best Achievement in Music Written for Motion Pictures, Original Score (Gustavo Santaolalla)