பாத்ததும் படித்ததும்

(அரவிந்த அடிகா, விகாஷ் ஸவரூப், ஸ்லம்டாக், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் படங்கள்)

அரவிந்த் அடிகா வைட் டைகருக்கு அப்புறம் Between The Assasinations என்றொரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பாப்புலரில் இன்று பார்த்தேன். தொகுப்பு பாப்புலராகிவிட்டதா என்று தெரியவில்லை. தற்பொழுது படிப்பதற்கு நிறைய இருப்பதால் இப்போதைக்கு வாங்கவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். சல்மான்ருஷ்டிக்கு பிறகு இந்திய ஆங்கில எழுத்து மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கிரண் தேசாய், அருந்ததி ராய், விக்ரம் செத், அரவிந்த் அடிகா, அமிதவ் கோஷ் போல நிறைய பேர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர். புக்கர் பரிசை வரிசையாக தட்டிச்செல்கிறார்கள். இந்த வரிசையில் மேலும் ஒருவர்: ஸ்லம் டாக் மில்லியனரை எழுதிய விகாஷ் ஸ்வரூப். இன்று கூட சிங்கப்பூரிலிருந்த வெளிவரும் இந்திய வாரப்பத்திரிக்கையான Tablaவில் கூட இவர்களைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. பிரிட்டிஷ் எப்படி வளைச்சு வளைச்சு அட்டாக் பண்ணி காலணிய ஆதிக்கம் பண்ணாங்களோ அதே போல இந்தியர்கள் சகட்டுமேனிக்கு எல்லாத் துறைகளிலும் புகுந்து வெளுத்துக் கட்டுறாங்க. அதுவும் எழுத்துத் துறையில் முக்கிய இடம் பிடிப்பது என்பது மிக நன்று.

தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் Three Cups Of Teaக்கு அப்புறம் Tagging என்றொரு புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன். Fiction படிப்பதை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன், Michio Kaku எழுதிய புத்தகங்களின் மேல் ஒரு கண் இருக்கிறது. மேலும் அயன் ரான்ட்-இன் Atlas Shrugged படிக்கவேண்டும் என்றும் நினைத்திருக்க்றேன். பார்ப்போம்.

*

என் அண்ணன் நெடுங்குருதி ஒரு வழியாக படித்துமுடித்து விட்டேன் என்று சொன்னார். நெடுங்குருதி பற்றி ஒரு நெடும் பதிவு தான் போடவேண்டும்,. சிங்கப்பூருக்கு வந்த பொழுது இங்கே நூலகத்தில் மெம்பராக சேர்ந்த பொழுது முதன் முதலாக இரண்டு புத்தங்கள் எடுத்தேன். Code To Zero மற்றும் நெடுங்குருதி. கடைசி அறுபது எழுபது பக்கங்கள் கொஞ்சம் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டால் நெடுங்குருதி தமிழில் ஒரு மிக முக்கியமான நாவல். ராமகிருஷ்ணனின் அழுங்காத அலட்டல் இல்லாத எழுத்து நடை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய சிந்தனையும் உவமைகளும் மிகவும் புதிதாக இருந்தது. ராமகிருஷ்ணன் மிக நுனுக்கமான பார்வை கொண்டவர். வெயிலையும் எறுப்புகளையும் அவர் பின் தொடர்ந்து செல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நெடுங்குருதியில் வரும் அந்த சிறு பையன் கண்டிப்பாக அவராகத்தான் இருக்கவேண்டும். அனுபவிக்காத ஒருத்தரால் எழுதப்பட்ட நாவல் இல்லை இது. அந்த நாவலின் நான் வாங்கிய மறுபதிப்பில் ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதியிருப்பார் அது கூட அவ்வளவு அழகாக இருக்கும். மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும்.

ஆனால் அவரது யாமம் படித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்? ஏன் ராமகிருஷ்ணன் இது போன்றதொரு நாவல் எழுதினார் என்று நான் நிறைய நாட்கள் எனக்குள்ளும் என் நண்பர் ராஜாராமிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ராமகிருஷ்ணனை சிங்கப்பூரில் சந்தித்தபொழுது அந்தக் கேள்வியை நான் கேட்டேவிட்டேன். நீங்கள் இந்த நாவல் எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்று. சிரித்த ராமகிருஷ்ணன் சொன்ன பதில் எனக்கு ஞாபகம் இல்லை. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு கண்டிப்பாக எட்டு மாதங்கள் இருக்கும். யாமம் படித்து ஒரு வருடம் இருக்கும். கண்டிப்பாக மீண்டும் யாமம் படிக்கும் எண்ணமில்லை. adultryஐ ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எழுதினால் எனக்கு பிடிப்பதில்லை. பாலகுமாரன் எனக்கு பிடிக்காமல் போனதற்கு அது தான் காரணம்.

*

ஸ்லம்டாக் மில்லியனர் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் பார்த்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் பிறகு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஹாலிவுட்ல இருந்து வந்து படம் எடுத்தாலும் பாலிவுட் படத்துக்கு கண்டிப்பா லவ் இருக்கனும்ங்கற விதியை கடைப்பிடித்திருக்கிறார் டேனி போயல். நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. சேரியில் வளர்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இங்கிலீஷ் பேச வருகிறது. அது தான் மிக முக்கியமான கேள்வி. ஆஸ்கார் வாங்கியிருக்கிறதில்லியா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள கோனார் நோட்ஸைப் புரட்டிப்பார்ப்பது போல விகாஸ் ஸ்வருப்பின் ஒரிஜினல் நாவலை (Q&A) எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்?

நான் நாவல் படிக்கவில்லை. படிக்கவும் விருப்பம் இல்லை. நாவல் படித்துவிட்டு படம் பார்க்கலாம். நன்றாக இருக்கும். ஹாரி பாட்டர் ஒரு உதாரணம். படித்து அனுபவித்த சாகச காட்சிகளை நேரில் படமாகப் பார்ப்பது என்பது தனி ஆனந்தம் தான். ஆனால் படம் பார்த்து விட்டு நாவல் படிக்க முடியுமா? இந்தமாதிரி விடை தெரியா கேள்விகள் இருக்கிற படங்களுக்கு நாவல் படித்து முழுவதும் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Telluride Film Festivalஇன் போது டேனி போயலிடம் “நீங்கள் எப்பொழுதும் எடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு ஏன் இந்தியாவை சப்ஜக்ட்டாகக் கொண்ட படத்தை இயக்குகிறீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதில் சொன்னாராம்: “எனக்கு இந்தியாவைப் பற்றி ஏதும் தெரியாது, நான் இந்தியாவுக்கு போனதே இல்லை. அதானால் இதை ஒரு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டேன்” என்றாராம். இதேபோல “எனக்கு நீயுயார்க் நகர கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை தெரியாது, நான் நியூயார்க்குக்குப் போனதேயில்லை, அதனால் தெரிந்துகொள்வதற்காக நான் படத்தை இயக்குகிறேன்” என்று சொன்னால் என்ன நடக்கும் என்கிற கேள்வியைக் கேட்டிருந்தார் சல்மான்ருஷ்டி. கிழிச்சிருக்கமாட்டாய்ங்க.

சரி. படத்துக்கும் நாவலுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறதென்று பார்ப்போம். படத்தின் ஹீரோ ஜமால் மாலிக் படத்தில் காட்டுவதைப் போன்ற கலவரத்தால் அனாதையாக்கப்பட்டவர் அல்ல. பிறந்த உடன் கைவிடப்பட்டு ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் எட்டு வயது வரை டெல்லியில் வளர்க்கப்பட்டவர். பாதிரியாரும் கதோலிக்க சர்ச்சும் டெல்லியும் படத்தில் வரவேயில்லை. ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் வளர்க்கப்பட்டதால் தான் ஜமால் ஆங்கிலம் பேசுகிறான். ஜமால் சரி, கோனார் நோட்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டாயிற்று மற்றவர்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள்? கதோலிக்க சர்ச் வரவில்லை சரி, இந்து முஸ்லீம் கலவரம் ஏன் படத்தில் திணிக்கப்பட்டது? வளர்த்த பாதிரியார் பிறகு மற்றொரு பாதிரியாரால் கொலை செய்யப்படுகிறார். இதுவும் படத்தில் வரவில்லை. மேலும் பல வித்தியாசங்களுக்கு இங்கே பார்க்கவும்.

இந்தப் படத்துக்கு ஆஸ்கார் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா? இதற்கு முன்னர் ஆஸ்கார் வாங்கிய No Country For Old Men, Crash போன்ற படங்களுக்கு பக்கத்திலாவது இது வரமுடியுமா? கண்டிப்பாக கிடையாது. தாரே ஜமீன் பர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு பகுதியைக் கூட இது ஏற்படுத்தவில்லை. ரஹ்மான் அப்படி என்ன படத்துக்கு இசையமைத்துவிட்டார்? ஜெய் ஹோ பாடல் ரஹ்மானின் தரத்துக்கு மிக மிக சாதாரணம் தான். படத்தில் ஜெய் ஹோ என்று கடைசியில் பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் வேறு. அது சாதாரண டான்ஸை விட மிகவும் கேவலமாக இருந்தது. அப்படி இருக்க ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது படத்தில்?

படத்தில் ஒன்றும் இல்லை. படத்துக்கு வெளியே நாம் இருக்கிறோம். இந்தியர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் No country for old men படம் ஆஸ்கார் வாங்கியது என்று எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? அதை எத்தனை பேர் லைவ்வாக Oscar Show பார்த்திருப்பார்கள்? What was the viewership rating? இந்திய மொழி படம் ஒன்று ஆஸ்காருக்குள் நுழைந்தஉடன் எத்தனை பேர் ஆஸ்கார் ஷோவைப் பார்த்திருப்பார்கள்? Thats the trick. ஆசியாவிலும் ஆஸ்கார் மிகவும் பிரபலமடைந்துவிடும். This film was at the right time. Thats it.

இனி வருடம் தோறும் ஒரு ஆசிய மொழி படத்துக்கு எதோ ஒரு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான் சொல்வதை நம்பவில்லையென்றால் இதைப் பாருங்கள்:
போனவருடம் எப்படி இருந்தது?
இந்த வருடம் எப்படி இருந்தது? 13% viewership கூடியிருக்கிறது.

கமல் படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து மூன்னூறு மணி நேரம் மேக்கப் போடாமல் அழகாக இயல்பாக மனதை தொடுகிற சப்ஜெக்ட்டோடு நடித்தார் என்றால் சீக்கிரமே ஆஸ்கார் நாயகன் ஆகிற வாய்ப்பிருக்கிறது. ஜெய் ஹோ.

*

Gran Torino பார்த்தேன். எனக்கு ஏதோ ரஜினி படம் பார்த்ததைப் போல இருந்தது. கறுப்பர்களிடம் வெறும் விரல்களைக் காட்டி மிரட்டும் போது ஆகட்டும், அவருடைய புல் தரையில் சண்டைப் போடும் சீன குண்டர்களைப் பார்த்து துப்பாக்கியைக் காட்டி “If you ever step in to my lawn..” என்று கர்ஜிக்கும் பொழுதாகட்டும், Client Eastwood is still a lion. க்ளைமாக்ஸ் தான் ஒட்டவில்லை. வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.

மற்றொரு படம் The Lost (2009). மற்றொரு மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கதை. நம்ப விடாது கருப்பு தொடர் மாதிரி. I doubted the end. But I didnt doubt. Mummy : The Tomb of the dragon empire. கன்றாவி. விஜயகாந்த் எவ்வளவோ தேவலாம். Fraserக்கு வயசாகி விட்டது.

அபியும் நானும். ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். மற்றபடி நெஞ்சைத் தொடும் விதமாக ஏதும் இல்லையென்றே எனக்குத் தோன்றியது. பிச்சக்காரரைப் பார்த்த உடன் ப்ரகாஷ்ராஜ் டக்கென்று ஐஸ்வர்யாவிடம் “உன்னொட சொந்தக்காரரா?”ன்னு கேக்குற இடம் நச். மற்றபடி த்ரிஷா தனது லவ்வருடன் சேர்ந்து நடப்பதைப் பார்க்கும் போது ப்ரகாஷ்ராஜ் கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது நமக்கு கடுப்பு தான் வருகிறது. என் அனுமதி இல்லாமல் பாய் ·ப்ரண்ட் வெச்சிருக்கியேன்னு கோபப்படுறது ஒரு ரகம். ஒத்துக்கொள்ளலாம். இதெல்லாம் கொஞ்சம் டூமச் தான். ஆனால் மகள் மீது possesiveஆக இருக்கும் அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். I know what I am doing டயலாக் ·பேஷனாகியிருக்குமே?

சொல்லமறந்துவிட்டேன், ஒரு அற்புதமான படம் பார்த்தேன், பெயர்: அருந்ததி. அப்பப்பா என்ன படம். என்ன நடிப்பு. என்ன வேகம். சான்சே இல்ல. இது போன்ற ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. ஹைலி எமோஷனல் மூவி. மூன்று மணி நேரம் நம்மை இழுத்துப் பிடித்து உட்காரவெச்சிருந்தார் டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா. அம்மன் படம் பாத்தப்பவே நான் அவரது ரசிகன். இப்போ பரம் விசிரி ஆகிவிட்டேன். அனுஷ்கா அருமையான செலக்ஷன். எப்படி ரம்யாகிருஷ்ணனை கரெக்ட்டாக அம்மனுக்கு பிடிச்சாரோ அதே போல. மண்டையில் தேங்காய் உடைத்து உயிர் தியாகம் செய்யும் போதாகட்டும், இந்த ஜென்மத்தில் முன் ஜென்மத்தில் தானே வரைந்த படத்தில் இருக்கும் செய்தியை decode செய்யும் பொழுதாகட்டும், சயாஜி ஷிண்டே தூக்கியெறியும் வாளை பிடிப்பதாகட்டும் தூள். வாளை லாவகமாக பிடிக்கும் பொழுது இன்னொரு பாட்ஷா போல இருந்தது.

*

சன் டீவி குங்குமம் தொல்லை தாங்கமுடியல. ஒரு அட்டு படத்தை எடுத்துற வேண்டியது. அப்புறம் படத்தில் நடிச்சவங்கள ஊர் ஊரா கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவெச்சு அமர்க்களம் பண்ணவிடுறது. பாக்க வந்த மக்கள கை ஆட்ட வெச்சு படம் பிடிக்கிறது. குங்குமத்தில் ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுத வேண்டியது. அப்படித்தான் நான் ஒரு படத்துக்கு ஏமாந்தேன். படிக்காதவன். பொதுவா நான் குங்குமம் விமர்சனம் எல்லாம் படிக்கிறதில்ல. ஆனா விதி வலியது இல்லியா, அன்னிக்கின்னு பார்த்து என் கண்ணில பட்டுத் தொலைஞ்சது. அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு ஒரே அலம்பல். எனக்கு இவிங்க படம்ங்கிறது தெரியாது. தெரிஞ்சிருந்தா தப்பிச்சிருப்பேன். தனுஷ் நடிச்ச முந்தைய படங்கள் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருந்துச்சா, அதானால் நல்லா இருக்கும் போலருக்குன்னு நாலு டாலர் கொடுத்து வாடகைக்கு எடுத்துவந்தேன். தனுஷ் சார் சந்தானம் கருணாஸ் இந்த படத்துல இல்லியா சார்? மயில்சாமி, சன் டீவில வர்ற காமெடியன்கள்ன்னு ஒரே அப்பா வயசு ப்ரண்ட்ஸ் உங்களுக்கு! சகிக்கல. நானும் படத்தில இப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும் அப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும்னு உக்காந்து உக்காந்து ஏமாந்துட்டேன். விவேக் காமெடியும் சகிக்கல. எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம படத்த ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுதமுடியுதோ தெரியல.

விகடனும் இதுக்கு விதிவிலக்கல்ல. SMS படத்துக்கு மார்க் மழை பொழிந்திருந்ததைப் பார்த்தேன். அவ்ளோ நல்லாவாயிருக்கு படம்? நான் பாக்கல.

*

நான் கடவுள் நான் பார்க்கவேயில்லை. பார்க்கவேண்டும் என்றும் தோன்றவும் இல்லை. ஜெமோவின் ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன். அது ஏற்படுத்திய பாதிப்பு குறையவே நீண்ட நாட்கள் ஆனது. படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை.

*

வாரணம் ஆயிரம் இப்போத்தான் பார்த்தேன். சூர்யா அழகாக இருக்கிறார். இப்ப அவர் தான் மீடியாக்களுக்கு சுல்த்தான் போல? விஜன் அவார்ட்ஸ்ல பார்த்தீங்களா? சூர்யா ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை? பாவம் விஜய் இருக்காறா இல்லியாங்கிற அளவுக்கு உக்காந்திருந்தார். யாரும் கண்டுக்கிடல. இப்ப வருகிற படங்கள கவனிச்சீங்களா? சூரியாவின் உடைகளுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை. அயனையும் ஆறுவையும் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

அயன் மற்றொரு படம். நன்றாக இருந்தது. சண்டை பாட்டு காதல் காமெடி சென்ட்டிமெண்ட் என்று கலந்து அடித்து விளையாடியிருந்தார் இயக்குனர் KV ஆனந்த். ஜெகன் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அவரை விஜய் டீவியில இப்ப பாக்க முடியிறதில்லையே? அந்த ஆப்பிரிக்க சண்டைக்காட்சி சேசிங் அற்புதம். ஆனால் குவாண்டம் ஆ·ப் சோலேஸை நினைப்படுத்தியது. இதே போல ஒரு சண்டைக் காட்சி The Bourne Ultimatumவிலும் உண்டு. ஞாபகம் இருக்கிறதா? ஹனி ஹனி பாடல் என்னுடைய ·பேவரிட்டாக ரொம்ப நாள் இருந்தது. இப்பொழுது “காற்றுக்குள்ளே” பாடல் சர்வம் படத்திலிருந்து தான் என்னுடைய ·பேவரிட்.

அடுத்து சர்வம். விஷ்ணுவர்த்தன் அடுத்த மணிரத்னம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு நாளும் மணி இது போன்ற ஒரு படம் கொடுக்கமாட்டார். படம்மாய்யா இது? சும்மா காமிரா மட்டு அழகாக இருந்தால் போதுமா? Trailer பாத்து ஏமாந்தேன்யா. அவ்ளோ அழகா இருந்தது Trailer. நல்ல கதையும் கூட. ஆர்யா த்ரிஷா யுவன் நீரவ்ஷாவை வைத்துக்கொண்டு இதற்குமேலும் வீணடிக்க முடியாது. படத்தில் சொல்கிறார் போல மனதில் நிற்கிறார் போல ஒரு காட்சி கூட இல்லை. சர்வ நாசம்.

யாவரும் நலம் நல்ல முயற்சி. அழகாக நேர்த்தியாக எடுத்திருந்தார்கள். முடிவு கச்சிதம். ஆனால் எனக்கு Amityville Horror படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை.

*

மூன்று தேநீர் கோப்பைகள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அது குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிராமப்புற மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது.

நான் சில அரசு பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். வகுப்பில் ப்ளாக் போர்டு, டேபிள், சாக்பீஸ் போன்ற விசயங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாத்தியார் இல்லாமல் இருக்கலாமா? அதை விட கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? நிறைய அரசு பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன. நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. பல நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் வகுப்புக்கு வந்துவிட்டு மாணவர்களை அவர்களாகவே பாடம் படித்துக்கொள்ளச்சொல்லிவிட்டு தூங்கும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் குக்கிராமங்களில் தான் இது போல நடக்கின்றன என்று நினைக்கிறேன். மொத்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர் தான் இருப்பார். மிஞ்சிப்போனால் இருவர் அல்லது மூவர். மூவர் இருந்தாலும், பெரும்பாலும் மூவரும் வருவதில்லை. சொல்லிவைத்துக்கொண்டு லீவு போட்டு விடுகிறார்கள். அல்லது பெர்மிசன் என்கிற பெயரில் மதியம் கிளம்பிவிடுகிறார்கள். டிஇஓ திடீர் விசிட் அடித்தால் மட்டும் அவர் என்ன செய்யப்போகிறார்? வேலை பார்க்கும் நமக்கு மனசாட்சி வேண்டும். சம்பளம் வாங்குகிறோமா இல்லையா?

ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பெரும் துரோகம். அந்த ஏழை அறியா மாணவர்களுக்கு நீங்களும் பாடம் சொல்லிக்கொடுக்கவில்லையென்றால் யார் தான் சொல்லிக்கொடுப்பார்கள்? இங்கே பணிரெண்டாம் வகுப்புக்கு கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மாத்ஸ் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அதெல்லாம் அடுத்த லெவல். இதுவும் தவறு தான் என்றாலும் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படியோ படித்துக்கொள்ளத் தெரியும். அவர்களுக்கு புரிந்துகொள்கிற வயது. ஆனால் பச்சிளம் குழந்தைகள்? They need a good start.

சம்பளம் போதவில்லையா? I dont think so.

இப்படி இருக்கும் பொழுது செய்யும் வேலையில் மட்டும் ஏன் தொய்வு? ஆசிரியராக இருந்துகொண்டு நீங்கள் என்னென்ன செய்யலாம்? எப்படி எப்படி பாடம் எடுக்கலாம்?

1. கொஞ்சம் செலவு செய்ய மனமிருந்தால் போதும் அட்டகாசமாய் சார்ட்கள் வாங்கி வெட்டி ஒட்டி பாடம் எடுக்கலாம்.
2. கதைகள் படித்து அழகாய் குழந்தைகளுக்கு சொல்லலாம்.
3. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு பொது அறிவு கற்றுக்கொடுக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் கற்க வேண்டும். விஜய் டீவியில் நீயா நானாவில் ஒரு முறை ஆசிரியர்கள் பற்றிய நிகழ்ச்சியில் “சந்திராயன் வெற்றியா தோல்வியா?” என்கிற கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குக் கூட விடை தெரியாமல் இருந்தது கொஞ்சம் வருத்தப்படவேண்டிய விசயம்.
4. ஆங்கிலம் நீங்கள் படித்துகொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.
5. சுத்தம் கற்றுக்கொடுக்கலாம்.
6. ஒழுக்கம் கற்றுக்கொடுக்கலாம்.
7. ரைம்ஸ் கற்றுக்கொடுக்கலாம். எத்தனையோ வீசிடிகள் மற்றும் டீவிடிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உங்கள் டீவிடி ப்ளேயரை எடுத்துக்கொண்டு (வீட்டில் டீவிடி ப்ளேயர் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்!) ஊரில் இருக்கும் பொது டீவியில் அந்த வீசிடிகளை போட்டுக் காட்டலாம்.
8. புதிதாக விளையாட்டு கற்றுக்கொடுக்கலாம். புட் பால் வாங்கிக்கொடுங்கள். கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுங்கள். பாட்மிட்டன் ராக்கெட் வாங்கிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் குடிக்கும் காம்ப்ளானுக்கு இலவசமாக கிடைக்கும் டென்னிஸ் பந்துகளையாவது அட்லீஸ்ட் கொடுங்கள்.
9. டீம் ஸ்பிரிட் கற்றுக்கொடுக்கலாம். உங்களுக்கு தெரிந்திருந்தால்.
10. இலக்கியம் கற்றுக்கொடுக்கலாம்.
11. தேடலை கற்றுக்கொடுக்கலாம். உங்கள் ஹேர்பின், ஹேண்ட்பேக், கண்ணாடி, செருப்பு பொன்றவற்றை தேடச்சொல்கிறீர்களே அதைப் பற்றி நான் சொல்லவில்லை, அறிவுத் தேடல் பற்றி சொல்கிறேன். Teach them how to acquire knowledge.
12. உங்கள் பிள்ளைகளை ஒரு நாள் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுக்கச்சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ளச்சொல்லுங்கள்.

நான் சொன்னவை மிக மிக குறைவு. குறைந்த செலவில் நீங்களே அரசை எதிர்பார்க்காமல் இன்னும் நிறைய செய்யமுடியும்.முயற்சி செய்யுங்கள். Find a role model and be a role model.

The Three Cups of Tea கிடைத்தால் படியுங்கள்.

ப்ரான்ஸ் பயணம் – 3

எங்கள் பக்கத்தில் ஒரு ப்ரெஞ்ச் ஜோடி அமர்ந்திருந்தார்கள். கொஞ்சம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்ததும் நன்றாக பேசினார்கள். ஓ நீங்கள் பிஸினஸ் விசயமாகப் போகிறீர்களா? அதான பாத்தோம் இந்த குளிர்ல எதுக்கு இவங்க ப்ரான்ஸ¤க்கு டூர் வந்திருக்காங் அதுவும் சின்ன குழந்தையைத் தூக்கிக்கிட்டுன்னு நாங்க யோசிச்சிட்டிருந்தோம்னு சொன்னாங்க. நல்லா யோசிச்சீங்க போங்க! நாங்க போக வேண்டிய இடம் செயின் க்வென்ந்தான். (முதலில் என்னுடைய மேலாளர்(ப்ரெஞ்ச்காரர்) இந்த ஊரை சொன்னபோது எனக்கு செங்கோட்டை போல இருந்தது.) அவர்கள் செயின் க்வென்ந்தான் போகவேண்டும் என்றால் நீங்கள் டாக்ஸி பிடிக்கவேண்டும். ஆமா பிடிக்கனும். ட்ரெயினில் போவதற்கு ரொம்ப நேரம் ஆகும். ஆமா தெரியும். மேலும் இந்த அதிகாலையில் (எங்களுடைய ப்ளைட் அதிகாலை ஐந்தேமுக்கால் அளவில் தரையிரங்கும்) டாக்ஸி கிடைப்பது ரொம்பவும் கடினம். என்னது? உன்னை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவார்கள். அடப்பாவிகளா? சொல்லவேயில்ல! என்னுடைய சகா ஒருவர் ஏற்கனவே பாரீஸ¤க்குப் போயிருக்கிறார். அவர் ப்ரான்ஸிலிருக்கும் கறுப்பர்களைக் குறித்து ரொம்பவும் பயமுறுத்தியிருந்தார். ஜன்னலை உடைத்து ஹோட்டலுக்குள் வருவார்கள். துப்பாக்கியைக்காட்டி பணத்தைப் பிடுங்குவார்கள். கத்தியைக் காட்டி கண்ணை நோண்டுவார்கள் என்று அடுக்கடுக்காய் அவர்களை பற்றி புகழ்ந்து தள்ளியிருந்தார். அதிகாலை. ஏமாற்றிவிடுவார்கள். கறுப்பர்கள். இந்த மூன்று வார்த்தைகளும் சற்றுமுன் சாப்பிட்ட செட்டிநாட்டு கருவாட்டு குழம்பு வயிற்றைக்கலக்குவது போல கலக்க ஆரம்பித்திருந்தது. இன்று நீங்கள் போகவிருக்கும் இடத்தில் வெப்பநிலை என்னவென்று தெரியுமா? தெரியாது. 1 டிகிரி என்று புளியை மேலும் கரைத்தார். நீங்களே எங்களுக்கு டாக்ஸி பிடித்துக்கொடுங்களேன் என்று நான் கெஞ்சாத குறையாக கேட்க, அவர் ஆபத்பாந்தவனாய் உதவுகிறேன் ஆனால் மூன்று டாக்ஸிகளிடம் தான் கேட்ப்பேன் அதற்குபிறகு நீங்கள் எங்களுடன் ட்ரெயினில் தான் வரவேண்டும் என்று கன்டிஷனோடு வாக்குறுதியளித்துவிட்டு தூங்கிப்போனார். எனக்கு தூக்கம் வரவில்லை. என்னது ட்ரெயின்ல போறதா? இவ்வளவு லக்கேஜையும் தூக்கிக்கிட்டா? நேரம் பாலுமகேந்திராவின் வீடு படத்தையும் விட மிக மிக மெதுமாக ஓடிக்கொண்டிருந்தது.

ப்ளைட் அமைதியாகத் தரையிறங்கியது. நாங்கள் வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த பொழுது, நிறைய பேர் எங்களிடம் எங்கே போகிறீர்கள்? உங்களை பிக் அப் செய்ய யாராவது வருகிறார்களா? என்று அன்பின் மிகுதியால் கேட்டனர். ஒருவர் ஸ்ரீநிதியைப் பார்த்து வெளியே பயங்கர குளிராக இருக்கும் ஸ்வெட்டர் கேப் எல்லாம் போட்டுக்கோங்க என்று சொன்னார். பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு இங்கிலீஷ் லேடி (ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்கிறார்) அனுஷாவிடம் பாப்பாவைக்காட்டி, “She is a good child, and You are a very good mother. You were exceptionaly patient with your child today” என்று பல பாராட்டுக்களை அள்ளித் தெளித்துவிட்டுப் போனதில் அனுஷாவின் ப்ளைட் மீண்டும் டேக் ஆப் ஆகி வானத்துக்கு சென்று விட்டது. அது தரையிரங்க நீண்ட நேரம் ஆனது. நாங்கள் மூவரும் ஏதோ போருக்கு செல்லும் வீரர் (யாரு நீயா?), வீராங்கனை (நோ கமென்ட்ஸ்) மற்றும் குட்டிவீராங்கனை போல சில பல உடைகளை அணிந்துகொண்டு டயிங் என்று கிளம்பி நின்றோம். வெளியேறுகையில் Strollerஐ எங்கே என்று அங்கு ப்ளைட் வாசலில் கடமைக்கு அழகாக சிரித்து வழியனுப்பும் அந்த பொம்மையிடம் கேட்கையில் அது மற்ற பாக்கேஜ்களுடன் வந்துவிடும் என்று சிரிப்பு மாறாமல் அழகாக சொன்னது.

ப்ளைட்டையும் ஏர்போர்ட்டையும் கனெக்ட் செய்யும் நடைபாதையில் காலடி எடுத்துவைத்த அந்த நொடியில் கடுங்குளிர் என்றால் என்னவென்பதை நான் தெரிந்துகொண்டேன். ஊசிபோலக் குத்தும் என்பதை நான் படித்திருக்கிறேன். குத்துவதோடு நிறுத்தாமல் குத்திக்கிழிக்கவும் செய்யும். மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்படுத்துமளவுக்கு குளிர். மைனஸ் ஒன் டிகிரி செல்சியஸ். வேகமாக நடக்கவேண்டும் என்று விரும்பினாலும் சம்திங் புல்ஸ் யூ பேக். ஏர்போர்ட்டுக்குள்ளே நுழைந்ததும் கொஞ்சம் குளிர் பின்வாங்கிவிட்டதைப் போல இருந்தது.

கும்பலைப் பார்த்து மிரண்டு போய் நிற்கையில் அங்கிருந்த ஒரு ஆபிஸர் எங்களை பிஸிக்கலி சாலஞ்ச்ட் க்யூவுக்கு போகச்சொன்னார்கள். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்கையில், அப்பொழுது என் மனைவிக்கு ஏழு மாதம், இதே போல கும்பலைப் பார்த்து மிரண்டு போயிருக்கையில், அங்கிருந்த ஒரு ஆபிஸர், எங்களை இதே போன்றதொரு க்யூவிற்கு அனுப்பி வைத்தார். ஊனமுற்றோருக்கான வரிசை. வரிசையில் யாரும் இல்லை. அந்த வரிசைக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆபிஸர் ஒரு பெண்மணி. ஒரே ஒரு பயணி மட்டும் தான் இருந்தார், அவரையும் அந்தப் பெண்மணி செக் செய்து அனுப்பி விட்டார். நானும் என் மனைவியும் சென்று வரிசையில் நிற்கவும், “என்ன?” என்றார் அந்தப் பெண்மணி. “அந்த் ஆபிஸர் தான் அனுப்பிச்சார்” என்றேன். என் பையைப் பிரித்து என் டாக்குமென்ட்ஸை எடுக்கும் முன்னர், அத எடு இத எடுன்னும் ஏகத்துக்கும் ஒருமையில் என்னை அழைத்தார். நான் அமைதியாக எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தேன். என் டாக்குமென்ட்ஸை அவர் சரிபார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, அதே வரிசையில் ஒரு வயதான பெண்மணி ஒரு பையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்து நின்றார். இந்த ஆபிஸர் பெண்மணி அவரை முறைத்துப் பார்த்தார். அந்தப் பெண்மணி அசட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். “அந்த தே..மகனுக்கு வேற வேலையில்லையா?” என்றாரே பார்க்கலாம். வாவ். fantastic. what a hostility? அவர் திட்டியது அங்கிருந்து வயதானவர்களை, ஊனமுற்றோர்களை, மாசமாக இருக்கும் பெண்களை இந்த வரிசைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அந்த ஆபிஸரை. வரிசையில் கூட்டம் அதிகம் இல்லையேம்மா? ஒன்னு ரெண்டு பேர் தான வாராங்க? அவங்கள செக் பண்றதுதான உன் வேலை? அதுக்குத் தான சம்பளம் வாங்குற? பிறகு எதுக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தற? என்ன காரணத்தினாலோ நான் அன்று அமைதியாக வந்தேன். என்னால் என்ன செய்திருக்க முடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன பேசினாலும் பிரச்சனையை என் மீது எளிதாக அந்தப் பெண் திருப்பிவிடுவாள் என்பதையும் நான் அறிந்தேயிருந்தேன். சரியான சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் மாட்டுவாள். இந்த விதமான attitude பத்திதான் Aravind Adiga “The White Tiger”இல் எழுதியிருக்கிறார்.

அனால் பாரீஸிலிருந்த அந்த ஆபிஸர் எங்களை இந்த அளவிற்கு மட்டமாக நடத்தவில்லையென்றாலும் என் பாஸ்போர்ட்டை திருப்பி திருப்பிப் பார்த்தார். எங்கே போகிறீர்கள்? என்ன விசயம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார். என் கம்பெனியின் இன்விட்டேஷனை காண்பித்ததும் மறு பேச்சில்லாமல் சாப் அடித்துக்கொடுத்தார். ப்ரெஞ்சில் வாழ்த்துக்கள் சொன்னார்.

எனக்கு எப்படா ஹோட்டல் போவோம் என்றிருந்தது. அடித்துப்பிடித்து கீழே வந்து லக்கேஜ் இருக்கும் செக்சனுக்கு வந்து லக்கேஜ்ஜை கலெக்ட் செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறுகையில், அந்த ப்ரெஞ்சு ஜோடி எங்களுக்காக காத்திருந்தது. வாவ். குட். எங்களை டாக்ஸி ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரே ஒரு டாக்ஸியைப் பிடித்து எங்களை வழியனுப்பிவைத்தார். வெளியே டாக்ஸி பிடிக்கையில் என் ஹோட்டல் ரிசர்வேஷன் ஸ்லிப்பைக் காட்டி எங்கே போகவேண்டும் என்று சொல்லும் போது, குளிர் சின்ன சின்னதாக என் பின் கழுத்திலும் கன்னத்திலும் துளையிட ஆரம்பித்திருந்தது.

வேன் மெதுவாகச் செல்வது போல இருந்தது. அந்த் அதிகாலையில் ப்ரான்ஸ் மிக அழகாகவே இருந்தது. பெரிய பெரிய அகலமான சாலைகள். சப்வேஸ். நான் வழிநெடுகிலும் இருக்கும் போர்ட்களில் என்ன பெயர் போட்டிருக்கிறார்கள்; செங்க்குவெந்த்தானுக்கு சரியாக போகிறோமா என்று ஒரு வகையான திகிலுடன் கவனித்துக்கொண்டே வந்தேன். எந்த போர்டிலும் செங்க்குவெந்தான் என்கிற பெயர் வரவில்லை. நேரம் செல்லச்செல்ல பயம் அதிகரித்தது. சிறிது தூரத்தில் ரோட்டின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக் ஏதோ தெரிந்தது. அருகில் வர வரத்தான் தெரிந்தது, ஸ்னோ. வாவ். அங்கிருந்து ஆரம்பித்து செங்க்குவெந்தான் வருகிற வரையிலும் வழி நெடுகிலும் பனி தான். பட்டுப்போன மரங்கள். மரங்களின் கிளைகள் முழுவதும் அப்பிக்கொண்டிருக்கும் பனி. மணல் சரிவில் பனி. பாலத்தின் ஓரத்தில் பனி. நின்று கொண்டிருக்கும் கார்களின் மேலே பனி. நாங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக பனியைப் நேரடியாகப் பார்க்கிறோம். இந்த சிலிர்ப்பில் செங்குவெந்தான் வருகிறதா இல்லையா என்பதை நாங்கள் கவனிக்கத் தவறியிருந்த தருணத்தில் செங்க்குவெந்தான் வந்துவிட்டிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.

பார்த்து இறங்குங்கள். தரை முழுதும் பனி; வழுக்கும் என்று சொல்லிவிட்டு, சொன்னதோடு நில்லாமல், எனக்கு முன்னர் இறங்கி வந்து என் கதவுக்கு அருகில் நின்று கொண்டு நான் கவனமாக இறங்குகிறேனா என்று கவனித்த அந்த டிரைவர் வாழ்க. நான் முன்னால் சென்று ஹோட்டலின் ரிஷப்சனில் என் ரிசர்வேஷனை சரிபார்த்துக்கொண்டு மீண்டும் காருக்கு வந்தேன். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லக்கேஜை இறக்கு ஹோட்டலுக்கு முன்னால் வைத்துவிட்டு; என் மனைவியையும் குழந்தையையும் கவனமாக கீழிறக்கி உள்ளே அனுப்பிவிட்டு, அந்த ட்ரைவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டு வரும் பொழுது நிம்மதியாக இருந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சுன்னு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பனியை ரசித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் வருகையில் “ஏங்க strollerஅ ஏர்போர்ட்டிலே விட்டுட்டு வந்துட்டோம்ங்க” என்றார் என் மனைவி.