இன்சிடென்ட்ஸ்-9

(இதற்கு முந்தைய பகுதிகளை சைடு மெனுவில் பார்க்கவும்!)

(இன்சிடென்ட்ஸ்-6 இன் தொடர்ச்சி. )

ஸ்ஸில் ஏறக்குறைய மரண ஓலங்கள் தான். அந்த சத்தத்திலேயே மிகவும் சத்தமாக இருந்தது எங்களது ஹிஸ்டரி மேடத்தின் குரல் தான். ஜீஸஸ் ஜீஸஸ் என்கிற அவரது பிரார்த்தனை பஸ்ஸின் கம்பிகளில் பட்டு எதிரொலித்து மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மீதமிருந்த கொஞ்சம் இடைவெளியில் விழுந்தடித்துக்கொண்டு ஓடியது. முதலில் எங்களுக்கு – பின்னால் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த எங்களுக்கு – ஒன்றுமே புரியவில்லை. (எப்பதான்டா உனக்கு முதல்லயே புரிஞ்சிருக்கு, சொல்லு?)

ஏதோ மிகப்பெரிய கல்லில் தான் பஸ் மோதிவிட்டது என்று நாங்கள் நினைத்தோம். அப்புறம் பின் கண்ணாடியின் வழியாகப் பார்த்தபோது தான், எங்க பஸ் மோதியதால் உடைபட்டு பாதி மட்டுமே நின்று கொண்டிருந்த அந்த அரசு டவுன் பஸ் தெரிந்தது. “ஐயோ ஆக்ஸிடென்ட்டா” என்று நாங்கள் ஒரு சேர கத்துவதற்குள், பஸ்ஸிலிருந்து கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஒரு அமில வாசனை, தகரம் எரியும் வாசனை, மெசின்களின் வாசனை பஸ் முழுவதும் நிறைந்திருந்தது.

பஸ் நிலை தடுமாறி ரோட்டை விட்டு இறங்கப் பார்த்தது. ரோட்டுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் கரடு முரடான குழிகள். குழிகள் தோறும் முட்புதர்கள். குழிகள் மிகுந்த ஆழமாக இருந்ததைப் போன்று தோன்றியது. எங்களது டிரைவர், பஸ்ஸை கவிழ்த்துவிடாமல், எதிரே இருந்த அந்த பெரிய மரத்தில் மோதிவிடாமல், மிகுந்த சாமர்த்தியத்தோடு ஒருவழியாக நிறுத்திவிட்டார். ஆனால் பஸ் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு நிற்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.(கண்ணாடிய ஒழுங்கா போடு!) இல்லீன்னா என் ப்ரண்ட் கணேஷ் ஏன் கோணலா நிக்கனும்? பஸ் நின்று விட்ட பிறகு பெட்ரோல் லீக் ஆகி பஸ் வெடித்துவிடுமோ என்கிற பயம் என்னை சூழ்ந்து கொண்டது.(நீ படம் பாக்கறத கொஞ்சம் குறைக்கிறது பெட்டர்!) எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. (பயம் வந்துவிட்டது என்று சொன்னவுடன், வியர்க்க ஆரம்பித்து விட்டது என்கிற வாக்கியம் தானகவே வந்து தொற்றிக்கொள்கிறது. என்ன செய்ய!) பஸ் முழுவதும் கேர்ல்ஸ் வாய்ஸ் பல தெய்வங்களையும் அழைத்துக் கொண்டிருந்தது. (பாய்ஸ் எல்லாம் என்னப்பா செஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க? ஆமா ஆமா நீ எங்க அவிங்களப் பாத்திருக்கபோற?!) என் ப்ரண்ட் யாரை அழைத்துக்கொண்டிருக்கிறாள் என்று தேடினேன். (சொன்னனா?) எட்டி எட்டி பார்த்து, கடைசியில் அவளை ஸ்பாட் செய்த பொழுது, அவள் தன் சீட்டில் அமைதியாக உட்கார்ந்து, எங்கள் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள். (எங்கள் பக்கமா? என் பக்கம்னு தானா சொல்ல வந்த? ஒழுங்கா சொல்லிடு!) (பிற்பாடு என்னைத் தானே தேடிக்கொண்டிருந்தாய் என்று கேட்ட பொழுது திட்டவட்டமாக மறுத்து விட்டாள்)

கொஞ்சம் கூக்குரல்கள் எல்லாம் அடங்கிய பிறகு, வெளியேறுவது எப்படி என்கிற சிந்தனை வந்தது.(ஆமா பெரிய சிந்தனை சிற்பி இவரு!) ஸ்டூடண்ட்ஸ் யாருக்கும் அபாயமான பெரிய அடி ஒன்றும் இல்லை. முன்னால் உட்கார்ந்திருந்த +1 மாணவர்கள் சிலரின் மண்டை மட்டுமே உடைந்திருந்தது.(சந்தோஷமா இருந்திருப்பியே!) அந்த ரணகளத்தில் கூட என் ப்ரண்ட் செல்வக்குமார் கமெண்ட் அடித்தான் : இப்ப proove பண்ணிடலாம்டா அவிங்க மண்டையில களிமண் தான் இருக்குன்னு. டிரைவருக்கு பலத்த அடி. அவர் ஸ்டியரிங்கில் மாட்டிக்கொண்டார். (பிறகு நாங்க பஸ்ஸை விட்டு இறங்கி, டிரைவரை ஆம்புலனஸ் வந்து தூக்கி சென்றவுடன் தான், ஸ்டியரிங் ஒரு டிசைனா நெளிஞ்சிருந்ததைப் பார்த்தோம்.) டிரைவர் உட்கார்ந்திருந்த பகுதி ஏறக்குறைய முழுவதும் சிதைந்திருந்தது. மிஸ்ட் போன்ற ஒரு புகை கியர் பாக்ஸிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னர் வரை, நானும் சூரியாவும் உட்கார்ந்திருந்த அந்த கதவை, இப்பொழுது, தள்ளி திறக்க முயன்றோம். முடியவில்லை. கதவு மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கிறது. நிறைய பேர் கதவுக்கு அருகில் குழும, பஸ் மேலும் கவிழ்வது போன்ற பிரமை உண்டாகியது.(மன பிராந்தி!) என்ன செய்தாலும் கதவு திறக்கவில்லை. வெளியே எட்டிப்பார்த்தால், கருவேல முட் புதர் சரிவு.(எட்டிப்பாக்காத! ஏன் பாக்குற?) கதவில் ஏறி அந்தப்பக்கம் குதித்துவிடலாம் என்று நினைத்த போது, முட்கள் எங்களை கடுமையாக பயமுறுத்தின.

அதிகாலை என்பதால் அந்த இடத்தில் மக்கள் அதிகம் இல்லை. விபத்துக்கு காரணமான அந்த அரசுப் பேருந்திலும் அந்த அதிகாலையில் பெரிய மக்கள் கூட்டம் ஒன்றும் இருந்திருக்கவில்லை. அதனால் தான் உயிர் இழப்பு அதிகமாக இல்லை. ஆனால், கொஞ்ச தூரத்தில், தங்களது நிலங்களில் ஏதேதோ வேலைகள் செய்து கொண்டிருந்த சிலர், வித்தியாசமாக பார்க் செய்யப்பட்டிருக்கும் எங்கள் பஸ்ஸை நோக்கி, அதிவேகமாக ஓடி வர தொடங்கினர்.

எங்கள் பிரின்ஸியின் கண்ணாடி உடைந்திருந்தது. அந்த உடைந்த கண்ணாடியையும் போட்டுக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல், இங்கு அங்கும் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தார். எனக்கு பாவமாக இருந்தது. உடைந்த கன்ணாடியைப் போட்டுக்கொண்டு அவர் என்னதான் செய்வார்? நல்லவேளை, என் கண்ணாடி உடையவில்லை.(தப்பிச்சடி) நாங்கல்லாம் கருஞ்சிறுத்தைப்பு.

என் கண்ணாடி மட்டும் அன்று உடைந்து போயிருந்தால், நான் தைரியமாக கதவை தாண்டி, முட்புதர்களுக்குள் குதித்திருப்பேன். (கீழே என்ன கிடக்கிறது என்று தெரிந்தால் தானே பயம் வரும்!) சிலர் அந்தப்பக்கம் இருக்கும் ஜன்னல் கண்ணாடியின் வழி இறங்கிவிட முயற்சித்துக் கொண்டிருந்தனர். என் ப்ரண்ட் ஒருத்தன் ஜன்னல் கண்ணாடியின் வழியே தலையை விட்டு எப்படியாவது இறங்கிவிட வேண்டும் என்று முயற்சிசெய்து கொண்டிருந்தான். அது அவனுக்கே கொஞ்சம் ஓவர் தான். டிரைவரின் wind shieldஐயே உடைத்தால் கூட அவனுக்கு கொஞ்சம் டைட்டாகத்தான் இருக்கும், இதில இவரு ஜன்னல் கண்ணாடி வழியாக, அதுவும் push கண்ணாடி, பாதிதான் கேப் இருக்கும், இறங்கப்பார்த்தால், எங்களுக்கு சிரிப்பு வருமா வராதா? (திமிருடா)

அப்பொழுதுதான், மிகச்சத்தமாக ஹிஸ்டரி மேடத்தின் குரல் கேட்டது. ஹே பாய் கெட் டவுன் யூ இடியட் என்று கண்ணாடியின் வழியாக தலையை விட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு சவுண்ட் கொடுத்தார்.ஹிஸ்டரி மேடத்தின் மண்டை உடைந்திருந்தது. அந்தப் பெரிய முகத்தை, கணிசமான அளவு, இரத்தம் மூடியிருந்தது. எனக்கு சட்டென்று, இவர் எப்படி வெளியே குதிக்கப் போகிறார் என்ற விபரீத எண்ணம் தோன்றியது. சான்சே இல்லை.

இதற்குள் என் நண்பர்கள் சிலர் பின் சீட்டு கண்ணாடிகளை உடைக்க முயன்றனர். நாங்கள் கதவைத் திறக்க முயன்றோம். மண்ணில் மாட்டிக்கொண்டிருந்த கதவு, நாங்கள் விட்ட ஒவ்வொரு உதைக்கும், பதில் சொல்லாது உம்மென்றிருந்தது, என் நண்பன் சூரியாவைப் போல. கதவும் எங்களைப் போல பயந்துகொண்டிருந்திருக்க வேண்டும்.

கொஞ்ச நேரத்திற்குள், அக்கம் பக்கம் ஆட்கள் கூடிவிட்டனர். அந்த அதி காலையில், ஆட்டுக்கும் மாட்டுக்கும் புல் அறுக்க சென்ற மக்கள், சத்தத்தைக்கேட்டு அடித்துப்பிடித்து ஓடி வந்து, கருவேல முட்களை முடிந்த அளவிற்கு அகற்றி, எங்களை இறக்கி விட்டனர். சிலருக்கு முட்கள் வெகுவாக குத்தத்தான் செய்தது.(முள்ளுன்னா குத்தத்தான் செய்யும், பின்ன கொஞ்சவா செய்யும்?) எங்கள் மேடம்களை கீழிறக்குவது தான் கொஞ்சம் கஷ்டமாக போய்விட்டது.

முதலில் இறங்கிய நாங்கள் பஸ்ஸின் அந்தப்பக்கம் போய், பெட்டிகளை ஜன்னல் வழியாக, உள்ளிருக்கும் நண்பர்கள் கொடுக்க, வாங்கி கீழே அடுக்கி வைத்தோம். கொஞ்ச நேரத்தில் அனைவரும் இறங்கிவிட, டிரைவர் மட்டும் இறங்கமுடியாமல் அப்படியே இருந்தார். பிறகு ஆம்புலனஸ் அழைக்கப்பட்டு, அவர்கள் வந்து டிரைவரை ஸ்ட்ரச்சரில் தூக்கிக் கொண்டு சென்றனர். டிரைவர் பலத்த காயங்களுடன் பிழைத்துவிட்டார் என்று பிற்பாடு அறிந்துகொண்டோம்.

காலையில் நடு ரோட்டில் நாங்கள் எங்கு போவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தோம். பசி வேறு. பிறகு எங்கள் பிரின்ஸியின் உறவினர் ஒருவரின் உதவியால், ஒரு அரசு பேருந்தை வாடகைக்கு அமர்த்தி நேரடியாக கண்ணியாகுமரி வந்தடைந்தோம். உறவினர், போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. (நோ கமென்ட்ஸ்)

பாதி டூரில் வீட்டுக்கு திரும்பிச் சென்றால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்கிற காரணத்தாலோ என்னவோ டூரை கேன்சல் செய்யவில்லை. (ஆமா பெரிய ஊட்டி கான்வென்ட்ல படிச்சாரு) எப்படி பிரின்ஸி, அந்த காட்டுக்குள் (அதாவது பெரிய நகரம் ஏன் சின்ன கிராமம் கூட, ஏதும் அருகில் கிடையாது) தனி ஒரு பெண்ணாக இருந்து நிலைமையை சமாளித்தார் என்பது இன்றளவும் எனக்கு ஆச்சரியம் தான். யார் யாரை எப்படி தொடர்பு கொண்டார்? அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். 1994. (ம்ம்..பிடிஏ வெச்சு வயர்லெஸ் லான்ல பிலெகேட்சுக்கு மெயில் அனுப்பிச்சார்)

கண்ணியாகுமரி எங்கள் டூர் ப்ளானில் இருந்தது தான். ஆனால் நடந்த ஆக்ஸிடென்டால் அங்கு புக் செய்திருந்த ஹோட்டலுக்கு ஒரு நாள் முன்னரே சென்று விட்டோம். அந்த ஹோட்டல் ஹவுஸ்புல். பிறகு நான், சூரியா, தர்மர் அண்ணன் (எங்கள் ப்யூன்) ஒரு டீமாகவும், மணிகண்டன் மற்றும் வெகு சில +1 மாணவர்களும் மற்றொரு டீமாகவும் சென்று ஹோட்டல்களில் ரூம் தேடினோம். எந்த ஒரு ஹோட்டலிலும் அவ்வளவு ரூம்கள் காலியாக இருக்கவில்லை. பிறகு நாடார் மேன்சனில் ஒரு பெரிய ஹால் கிடைக்கவே, அதையே வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.

எங்க ப்ளான் படி, அன்று குற்றாலத்தில் குளித்திருக்க வேண்டியது. ஆனால் நாடார் மேன்சனின் இத்துப்போன பக்கெட் தண்ணீரில் குளிக்க வேண்டியதாகிற்று. இப்படியாக எனது முதல் குற்றால டூர் சிதைந்து போனது. அன்று சிதைந்த என் குற்றால பயணம், இன்று வரை நிறைவேறவேயில்லை.

அதற்கப்புறம், கண்ணியாகுமரியில் சுற்றிவிட்டு, முக்கூடலில் குளித்து விட்டு, வேறு பிரைவேட் பஸ் பிடித்துக்கொண்டு, மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் வந்தடைந்தோம். வருஷம்16 படம் ஷ¥ட்டிங் செய்யப்பட்ட பத்மநாபபுரம் பேலஸ் (அவ்ளோ வரலாற்று சிறப்புமிக்க அரண்மனைக்கு ஒரு திரைப்படத்தை வைத்து அடையாளம் சொல்வதா என்றால் என்ன சொல்வது? திருவிதாங்கூர் அரண்மனை என்று சொன்னால் நிறைய பேருக்கு ஏதும் தெரிந்திருக்காது என்பது உண்மை. ஆனால், வருஷம்16 அரண்மனை என்று சொல்வதால், ஓ அந்த அரண்மனையா என்று கேட்க வாய்ப்பிருக்கிறது இல்லியா?) வழியில் பார்த்தோம்.

எனக்கு இன்னும் அந்த பிரமிப்பு அப்படியே இருக்கிறது எனலாம். பிரமிப்பு இல்லை, கொஞ்சம் பயம் தான். ஏனென்றால் எங்களுடன் வந்த ஒரு guide உள்ளே தனியாக போய் மாட்டிக்கொண்டால் வெளியேறுவது கஷ்டம் என்று பயமுறுத்திவிட்டார். அரண்மனையும் அப்படித்தான் இருந்தது. ஹாவென்று. எனக்கு இன்னும் பளீரென்று ஞாபகம் இருப்பது, ராணியவர்கள் சபையைப் பார்க்க, உட்காரும் இடம். அந்த இடம் சுத்தமாக மறைக்கப்பட்டு இருக்கும். உள்ளே உட்கார்ந்திருக்கும் ராணி (அல்லது ராணிகள்!) சபையைப் பார்ப்பதற்கு சிறு சிறு துளைகள் மட்டுமே போடப்பட்டிருக்கும்.(எப்படி பாத்தீங்களா?)

ராணிய யாரும் சைட் அடிக்க முடியாது, ஆனா அவர் யாரை வேணும்னாலும் சைட் அடிக்கலாம், யாருக்கும் தெரியாமலே. நிறைய அறைகள் இருக்கின்றன, பூட்டப்பட்டு.

ராஜாக்களின் கம்பீரமும் அவர்களின் ரகசிய புலம்பல்களும் அந்த அறைகளுக்குள்ளேயே அடைந்துகிடக்கின்றன. அரண்மனை தோறும் ஒரு ஈர வாடை அடித்துக்கொண்டேயிருந்தது.


பிகு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

இன்சிடென்ட்ஸ்-8

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்! யாரும் பாக்கமாட்டிங்கன்னு எனக்கு தெரியும், ஆனா சொல்றது என் கடமை இல்லியா?)

இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது, ஒரு ஹாட்டான மதிய நேரத்தில், நல்லா மூக்குபிடிக்க வெறால் மீன் குழம்பை ஒரு கட்டுகட்டிவிட்டு, வெத்தலை பாக்கு போட்டுகொண்டே அனந்தசயனத்தில், மேலே “எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்களேன்டா, ப்ளீஸ்!” என்று கதறி அழுது கொண்டிருந்த ·பேனிலிருந்து கீழே மிக மெதுவாய், மிக மிக மெதுவாய், ஸ்டுபிட் ஹாட் ஏர் என்னை நோக்கி இறங்கிக்கொண்டிருந்த பொழுது, என் மருமகள் (அக்காவின் மகள்) ஒரு சூட்கேஸை தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு வந்து என் முன்னால் வைத்தாள், கிட்டத்தட்ட தடால் என்று கீழே போட்டாள். போட்டுவிட்டு, ஆச்சி முழிச்சுக்கப்போறாங்க,ஐயோ என்று வேகவேகமாக என் அருகில் உட்கார்ந்துகொண்டாள். ஆச்சி முழித்தார் என்றால், தூங்கச்சொல்லுவாரே என்ற பயம் அவளூக்கு. நான் சிறுவனாய் இருந்த பொழுது எனக்கிருந்த அதே பயம். மதியம் விளையாடாமல் தூங்க வேண்டுமே என்கிற பயம். (இப்போ தூக்கம் வராமல் இரவு ரெண்டு மணிக்கு கூட கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருப்பது வேறு விசயம்!! சித்தி என்ற படத்தில் தூக்கத்தைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு! அந்த பாடல் நிதர்சன உண்மை. அது ஏதோ பெண்ணைக் குறித்து பாடப்பட்டது போல தோன்றினாலும், ஆணுக்கும் கச்சிதமாக பொருந்தும். ஆணுக்கும் பெண்ணுக்கும் அதே அளவு கவலைகளும் மனச்சுமைகளும் உண்டு. வகைகள் மட்டுமே வேறு!).

கீழே விழுந்த சூட்கேஸில் இருந்து தூசி சிறிய புகையாக எழும்பிக்கொண்டிருந்தது. பக்கத்தில், தோட்டத்தைப் பார்த்திருந்த ஜன்னலில் இருந்து வழிந்துகொண்டிருந்த பளீர் வெயிலில், தூசி பெரும் புகையாக மாறிவிட்டது போல இருந்தது. பார்த்திருக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த பொழுது, ஜன்னல் பக்கத்தில் மட்டுமே தூசிகள் இருக்கின்றன என்று நினைத்து, அந்த ஒளிக்கீற்றில் மின்னும் தூசிகளை கைகளால் அந்தப்பக்கம் தள்ளிவிட முயற்சித்திருக்கிறேன்.ம்ம்ஹ¥ம். நான் தள்ளிவிட தள்ளிவிட, எங்கிருந்தோ தூசி வந்து அதே இடத்தில் ஒட்டிக்கொள்ளும், நாம் எவ்வளவு துரத்தினாலும் மீண்டும் அதேவேகத்தில் நம்மில் வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு சில நினைவுகளைப் போல.

அந்த சூட்கேஸில்தான் போட்டோக்கள் இருக்கின்றன. சூட்கேஸ் நிறைய போட்டோக்கள் இருக்கின்றன. விருந்தினர்கள் யாராவது தெரியாத்தனமாய் போட்டோக்கள் என்று கேட்டுவிட்டால் அவ்வளவுதான் தொலைந்தார்கள். போதுமடா சாமி என்று சொல்லும்வரை நாங்கள் எடுத்துகொடுத்து கொண்டேயிருப்போம். சன் டீவியின் சீரியல்கள் போல இது முடியவே முடியாதா என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருப்போம். வந்திருந்த உறவினர்கள் வீட்டுக்கு சென்றபின், வராத அவர்கள் வீட்டாரிடம், “நல்லாத்தான் இருக்காய்ங்க, ஆனா நீ போனீனா கண்டிப்பா போட்டோ பத்தி மட்டும் பேச்சு எடுத்திடாத. போட்டோ கேட்ட தொலஞ்சடிமாப்ள” என்று சொல்லுவார்களோ என்று சில சமயம் நான் சிரியஸாக யோசித்திருக்கிறேன். நமக்கு வேண்டுமென்றால் போட்டோக்கள் -ஒரு கட்டத்தில்- சலித்து விடும், ஆனால் இந்த வாண்டுகளுக்கு அதில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை. எத்தனை முறைதான் அதே போட்டோக்களை திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்குங்களோ தெரியவில்லை. “மாமா இங்க இருக்காங்க பாத்தியா? அம்மா குட்டிப்பிள்ளையா இருக்கும் போது எடுத்தது தெரியுமா? தாத்தா மீட்டிங்கில பேசறாங்க பார்” என்று பார்த்த போட்டோக்களையே மீண்டும் பார்த்து, அதே அளவு fresh ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருங்குங்கள். இன்றும் அதே சூட்கேஸை தூக்கிகொண்டு என் அருகில் கூட்டமாக உட்கார்ந்து கொண்டதுகள். எங்கள் வீட்டில் வாண்டுகள் அதிகம்.

எல்லா குட்டீஸ்களையும் ஒன்றாக அமைதியாக உட்காரவைக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் இருக்கின்றன, ஒன்று: கில்லி அல்லது சந்திரமுகி படத்தை டிவீடியில் போட்டுவிடுவது. இரண்டு: போட்டோ பார்க்கலாம் வாங்க என்று சொல்வது. இதில் ·பர்ஸ்ட் ஐடியா ஈசி. டிவீடிக்களைக் கிழிக்க முடியாது.

உட்காரவைக்கவில்லை என்றால் வரிசையாக இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கொண்டே இருக்குங்க. வீட்டுக்கு முன்னாடியும், பிறகு பின்னாடியும், பிறகு மீண்டும் முன்னாடியும், பிறகு மீண்டும் பின்னாடியும் ஓடி ஓடி, இரவு மொட்டை மாடியில் படுக்கும் வரைக்கும் அப்படி என்னதான் விளையாடுங்களோ தெரியவில்லை! ஒரு முறை நானும் மற்ற எல்லோரும் வீட்டின் வாசல் படிகள் உட்கார்ந்து ஒரு சாயங்காலம் கதை அடித்துக்கொண்டிருந்தோம், குட்டீஸ்கள் வரிசையாக மேலும் கீழும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்துச்சுங்க. என்னுடைய வக்கீல் அண்ணன் “எப்பவுமே லெவல் க்ராஸிங்கல உட்கார்ந்திருக்கறமாதிரியே இருக்குடா! ஒரு ட்ரெயின் க்ராஸ் பண்றமாதிரியே இருக்குல்ல!” என்று ஒரு கமெண்ட் அடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். உண்மைதான். என்ஜினை மட்டும் ஆப் செய்தால் போதும், ட்ரெயின் நின்றுவிடும் என்றார். இன்ஜின், அக்காவின் இரண்டாவது மகள்.

ஒவ்வொரு போட்டோ ஆல்பமாக பார்த்துகொண்டுவந்தோம். அக்காபெண்களின் பள்ளிக்கூட நண்பர்கள். அவர்கள் போட்ட சண்டைகள். பள்ளிக்கூடத்து நிகழ்ச்சிகள். ஆடிய டான்ஸ். பேசிய பேச்சுப்போட்டி என்று ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டுவந்தேன். என்னுடைய பள்ளிக்கூட போட்டோ ஆல்பம் வந்தது.

***

ஒருமுறை, என்னோட பள்ளிக்கூட ஆல்பத்தை பள்ளிக்கு எடுத்துச்சென்றிருந்தேன். ஆலபம் என்றால் அதில் என்னுடைய எல்லா வயது போட்டோக்களும் இருக்கும், எல் கே ஜி யிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை. நான் மூன்றாவது படித்துக்கொண்டிருந்த பொழுது – என்று நினைக்கிறேன் – குன்றக்குடி அடிகளாரிடம், திருமங்கலம் (மதுரை) இலக்கிய பேரவையில், மாலை வாங்கியதும் ஒரு போட்டோவில் இருக்கிறது. மாலை போட்டுக்கொண்டு, ஒரு சேரில், மாலையையே குனிந்து பார்த்துக்கொண்டு, ஒரு டார்க் ப்ளூ டீசர்ட்-டவுசரில், அமைதியாக என் தனி உலகத்தில், கற்பனையில், ஆழ்ந்திருப்பேன். அன்று என்ன யோசித்துக் கொண்டிருந்திருப்பேன்?

இலக்கிய பேரவையில் மாலை வாங்கிருக்கியா? அதுவும் மூன்றாவது படிக்கும் போதா? என்று என் இலக்கிய பெருமைகளை எண்ணி நீங்கள் வியந்து, வாவ் முத்து, யூ ஆர் ராக்கிங்! என்று சொல்வதற்கு முன்னர், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நான் கூட்டத்தில் எதுவுமே செய்யவில்லை. அப்பாவுடன் சும்மா சென்றிருந்தேன். அப்பா இலக்கிய பேச்சாளர். புலவர். பட்டிமன்றப்பேச்சாளர். கவிஞர். (இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்). என்னை மேடையில் பார்த்த குன்றக்குடி அடிகளார், எல்லோருக்கும் மாலை போடுவதையே வெறித்து வெறித்து பார்க்கிறானே -கண்டிப்பாக வெறித்துப் பார்த்திருப்பேன் – என்று பாவப்பட்டு அவருக்கு போட்ட மாலையைக் கழட்டி எனக்கு அணிவித்தார்.

இப்படியாக குன்றக்குடி அடிகளாரிடம் மாலை வாங்கிய பெருமை எனக்கிருக்கிறது. சும்மானாச்சுகாவது வாங்கிருக்கம்ல! பிற்பாடு பத்தாவது படிக்கும் பொழுது அவர் கையால், கேடையம் வாங்கியிருக்க வேண்டியது மிஸ் ஆகிப்போனது வேறு விசயம். இன்னோரு “இன்சிடென்டில்” அதை சொல்கிறேன்.

சரி மேட்டருக்கு வருகிறேன். என் போட்டோக்களை ஆர்வமாக என் பள்ளி ·ப்ரண்ட்ஸ் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, ஒரு
ப்ரண்ட் சொன்னாள்: “முத்து, நீ குழந்தையாக இருக்கறப்போ அழகாத்தான் இருந்திருக்க போல?

***

பள்ளிக்கூட நாட்களில் நான் நடித்த நாடகங்களில் – அல்லது பொதுவாக stageperformance- எனக்கு மிகவும் பிடித்தது, அல்லது இன்று வரை நான் மறக்காமல் இருப்பது: வேடன்-புறா கதையை, நான் மோனோஆக்ட்(MonoAct) செய்தது. அது வெறும் நாடகம் இல்லை. அது ஒரு பாட்டு-நாடகம். (பாட்டுமன்றம் போல!). என்னுடைய அப்பா அதை எழுதித்தந்திருந்தார். அந்த நாடகத்தில் வசனங்களே இல்லை. வெறும் பாடல்கள் தான். பாடல்கள் என்றால்? சினிமா மெட்டுக்களில் அமைந்த வசன-பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் சினிமா மெட்டுக்களில் எழுதியிருந்தார் என் அப்பா. அது எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ஹிட்.

அந்தப்பாடல்களில் இரண்டு பாடல்களை நான் இன்று வரை முனுமுனுப்பதுண்டு. வேடன்-புறா கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (அந்த கதையையும் சொல்லி -எழுதி- மேலும் மொக்க போட நான் விரும்பவில்லை!)

சீன்: வேடன் வலையை விரித்துவிட்டான். அதில் சில தாணியங்களையும் வைத்துவிட்டான் (as bait). புறாக்கூட்டங்கள் தாணியங்களைப் பார்த்ததும் அருகில் உட்கார்ந்துவிட்டன. ஆனால் தலைமைப்புறா “இவ்வளவு தாணியங்களை ஒரு சேர நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, இதில் ஏதோ சூது இருக்கிறது” என்கிறது. ஆனால் பெரிசுக சொல்றதை என்னிக்கு வெடலப்புள்ளைக கேட்டிருக்கு?

பெரிச எதிர்த்து ஒரு வெடலை பாடுது இப்படி:

அட குவிஞ்சிருக்கு இங்க நெல்லு,
உனக்கு வேண்டானா தள்ளி நில்லு!

இனி உங்க பேச்சு
கேக்க மாட்டோம் சூச்சு

வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க.

வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க!”

இதற்கு தளபதியில் வரும் “ராக்கம்மா கையத்தட்டு” பாடலின் மெட்டை உபயோகிக்க வேண்டும்.

“ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு
ஜாங்கு ஜாங்கு ஜக்கு ஜா”

” வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க.”

அப்புறம் வேறு ஒரு குருவி பாடும் பாட்டு:

பசிக்குது வயிறு
ருசிக்குது பயறு

(இப்பவும், எனக்கு பசிக்கும்போது இந்த வரிகள் தான் ஞாபகம் வருகின்றன! வாய் ஆட்டோமேட்டிக்கா முனுமுனுக்குது!)

என்னபாட்டு தெரியுதா? “அடிக்குது குளிரு”

இந்த மோனோ ஆக்ட்டைக் கேள்விப்பட்ட +2 மாணவர்கள் (மற்றும் மாணவியர்கள்!) – அவர்கள் அன்று போட்டியைப் பார்க்கவில்லை, ஏதோ பரிட்சையோ என்னவோ- ரொம்பவும் ஆர்வமாகி, என்னை அழைத்து தனியாக -பிர்த்தியேக ஷோ- அவர்களுக்காக மீண்டும் மோனோஆக்ட் செய்யச்சொன்னர்.

After the performance, தேவியும், தீபாவும் என் கண்ணத்தை கிள்ளி so sweet, well done! என்று சொன்னது, இன்னும் எனக்கு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. (இருக்கனும்ல! நான் அப்பொழுது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்!)

இன்னொரு முறை – வீட்டுக்கு போகும் போது கண்டிப்பாக தேடிப்பிடித்து – முழு பாடல்களையும் பதிவு செய்கிறேன்.

***

(தொடரும்)

இன்சிடென்ட்ஸ்-7

பார்த்த ஞாபகம் இல்லையோ?

சிங்கப்பூர். ரா·பிள்ஸ் பிளேஸ். ·பிட்னஸ் பர்ஸ்ட்.

வாடா வாடா வாங்கிடா
வாய்ல பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சுப்போடா
புடவ வாங்கி கட்டிக்கோடா

என்று பாடிக்கொண்டே வியர்வை வழிய ட்ரெட்மில்லிலிருந்து இறங்கினேன். அவர் என்னைப் பார்ப்பதைப் போல உணர்ந்தேன். என்ன “அப்படி குர்ருன்னு பாக்குற” என்று வடிவேலு போல கேட்கவேண்டும் என்று நினைத்தேன். கேட்கவில்லை. அப்புறம் நாமாச்சு நம்ப ஐபாட் ஆச்சு நம்ப வொர்க் அவுட் ஆச்சுன்னு கொஞ்ச நேரம் இருந்துட்டு, சரி கிளம்பலாம்னு நினைக்கறப்போ, “ஹலோ” ன்னு ஒரு குரல். திரும்பிப்பாத்தா அதே நபர். நானும் ஹலோ என்று சொன்னேன். அவர் கொஞ்ச நேரம் தயங்கி பிறகு “நீங்க முத்து” தானே என்றார். ஆமா “நீங்க” என்றேன். “என்னைத்தெரியலையா. **** you man” என்று சொல்லி அப்போத்தான் டம்பிள்ஸ் அடிச்சிருந்த கையை மடக்கி ஒங்கி வயித்துல ஒரு குத்து விட்டார். ஹெஹே..நாங்களும் சிக்ஸ் பேக்ஸ் வர்றதுக்கு இப்பத்தான வொர்க் அவுட் முடிச்சோம்..அவர் விரல்கள் ஒன்னு ரெண்டு க்ராக் ஆயிருந்தாலும் ஆயிருக்கும்..சொல்லமுடியாது.”அடப்பாவி. இந்த குத்து குத்தறான். கெட்டவார்த்தையில வேறு திட்டறான். ரொம்ப தெரிஞ்சவனா இருப்பானோ” ன்னு நானும் என் மூளையில் கூகிள் செய்தும் அது MSN செர்ச் போல முற்றிலும் சம்பந்தமில்லாத ரிஸல்ட்களையே கொண்டுவந்து கொடுத்தது. ” இன்னும் தெரியலையா. ஐ வில் கில் யூ மேன்” என்று சொல்லி கழுத்தைப் பிடித்து “நான் தான் ப்ரகாஷ். மலேஷியா ப்ரகாஷ். ஏர் ஏசியா. கே எல் எக்ஸ்ப்ரஸ். சித்ரா” “ஓ எஸ். ஹவ் ஸ்டூப்பிட் ஆம் ஐ. நௌ ஐ ரிமெம்பர் யூ. ஓ மை ப்ரகாஷ். யூ லுக் சோ வெரி ****ing changed. யூ லுக் சோ டிபரென்ட்.” அப்புறம் கட்டிக்கொண்டோம்.

***

மலேஷியா. கோலாலம்பூர். கே.எல்.எக்ஸ்பிரஸ். டாசிக் செலாடான் ஸ்டேஷன்.

ன்று சனிக்கிழமை. த வெரி சேம் ஸ்டூபிட் சாட்டர்டே. நான் அந்த ஸ்டேஷனில் ட்ரெயினுக்காக காத்துக்கொண்டிருந்தேன். ஒரு தமிழ் குடும்பம் வந்தது. ஒரு தாத்தா (அல்லது தாத்தா போல தோற்றமளித்தவர்) ஒரு அம்மா அப்புறம் ஒரு பெண். நேச்சுரலி, நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு அலுவலர் அவர்களுக்கு புத்ரஜெயாவில் இறங்கி சைபர்ஜெயாவுக்கு செல்வது எப்படி என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த தாத்தாவும் விடாமல் கேள்விகேட்டுக்கொண்டேயிருந்தார். நான் புத்ரஜெயாவில் தான் இறங்கவேண்டும். சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்ஸ¤ம் அங்கு தான் வரும். எனவே நான் தாத்தாவிடம் சென்று நான் உங்களை சைபர்ஜெயாவுக்கு பஸ் ஏற்றி விடுகிறேன். எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இருந்தால் உங்களை பத்திரமாக இறக்கிவிட சொல்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றேன்.

அவருக்கு புத்ரஜெயாவில் வேலை கிடைத்திருக்கிறது என்றும் திங்கட்கிழமை வேலையில் சேரவேண்டும் என்றும் அதற்காகத்தான் இன்று சும்மா இடத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போகிறேன் என்றார். மேலும் ரயிலில் செல்லும் போது எக்கச்சக்கமாக கேள்விகள் (எனக்கு பதில் தெரியுதோ இல்லியோ) கேட்டுக்கொண்டே வந்தார் அந்த தாத்தா. அந்த அம்மாவும் பெண்ணும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எனக்கு எப்படா புத்ரஜெயா வரும் என்றாகிவிட்டது. பத்து நிமிஷம். எப்பவும் சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்தான் ரெடியாக நிற்கும். எங்கள் ஆபிஸ¤க்கு செல்லும் பஸ் கொஞ்சம் லேட்டாத்தான் வரும். எனவே வேகமாக அவரைக் கழட்டிவிட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அன்று சைபர்ஜெயாவுக்கு போகும் பஸ் ரொம்ப நேரமாக வரவில்லை. டைம். ரொம்ப நேரம் கழித்து வந்த பஸ் ஒன்றில் அவர்களை ஏற்றிவிட்டு நான் என் ஆபிஸ¤க்கு சென்றேன்.

***

புதன்கிழமை. புத்ரஜெயா கே.எல்.எக்ஸ்பிரஸ் ஸ்டேஷன்.

நான் வழக்கம்போல ட்ரெயினுக்கு வெயிட்டிங். சைபர்ஜெயா மக்கள் வந்தார்கள். கூடவே அந்த பெண். எந்த பெண்? அந்த தாத்தா வந்தாரே, அவரோடு வந்ததே அந்த பெண். அந்த பெண் என்னைப் பார்த்ததும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.(ஷீ மஸ்ட் பி சோ கிளவர் டு ரிமெம்பர் சச் எ ஸ்டூபிட் ·பேஸ்) ஆனால் சிரிக்கவில்லை டப்பென்று முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டாள். நான் அவளிடம் சென்று ஹாய் என்றேன். அவளும் ஹாய் என்றாள். பிறகு “நீங்க இங்க எங்க” என்றேன். அவள் கொஞ்ச நேரம் தயங்கிவிட்டு பிறகு “சாரிப்பா. அன்னிக்கு வந்தது என்னோட அப்பாதான். அவர் சொன்னமாதிரி அவருக்கு வேலை கிடைக்கல்ல, எனக்கு தான் வேலை கிடச்சது. நான் தான் திங்கட்கிழமை ஜாயின் பண்ணனும். அதுக்குதான் அவர் என்னக்கூட்டிட்டு இடத்த பாக்க வந்தார். அவர் ஏன் பொய் சொன்னார்னு தெரியல ஆனா சாரி” என்றாள். அவர் பொண்ணுக்குத்தான் வேலை கிடச்சிருக்குன்னு சொன்னா நூல் விட்ருவோம்னு நினைச்சிட்டாரோ? இல்லாட்டினா நூல் விடமாட்டோமா என்ன? “உங்க பேர்” “சித்ரா” “வாவ். நைஸ் நேம்”

அன்று ஆரம்பித்து எங்கள் நட்பு கே.எல்.எக்ஸ்பிரஸின் வேகத்தைவிட இன்னும் அதிவேகமாக சென்றது.

***

கே.எல். எக்ஸ்பிரஸ்.

க்ஸ்பிரஸ் அதிரடியாக சென்று கொண்டிருந்தது. ஐ லைக் திஸ் ட்ரெயின். ஒரு காரணம் இது நல்ல வேகம். இரண்டாவது இதன் அழகு. நல்ல spacious கூட. அன்று நான் கொஞ்சம் லேட்.

என்னருகில் வந்து அவர் உட்கார்ந்தார். ஹாய். ஹாய். ஐயாம் ப்ராகாஷ். ஓ. நைஸ் டு மீட் யூ. ஐயாம் முத்து. ஷேக் ஹேண்ட்ஸ். மௌனம். ஐயாம் வொர்க்கிங் அஸ் சம் டுபாகூர் மானேஜர் இன் ஏர் ஏசியா பசிபிக். ஓ தாட்ஸ் கிரேட். உங்களுக்கு சம்பளம் எப்படி பட்ஜெட் சம்பளமா இல்ல முழு சம்பளமா? அன்ட் பைதவே ஐயாம் வொர்க்கிங் அஸ் எ ஸ்டூபிட் புரோகிராமர் ·பார் ஹைடெக். ஐயாம் ·ப்ரம் கோயம்புத்தூர். ஐயாம் ·ப்ரம் மதுரை. ஓ மதுரையா நீங்க. பாத்தா அப்படித்தெரியல. (பின்ன எப்படித்தெரியுது பான் ஷாப்பில கல்லாக்கு பின்னாடி உக்காந்திருக்கிற ஷேட்டு மாதிரி தெரியுதா?)

நட்பு பற்றிக்கொண்டது. அவர் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார். கே. எல் -லில் ஏர் ஏசியா பசிபிக்ல ஏதோ மானேஜரா வேலை பாத்துக்கொண்டிருந்தார். அங்கு ஒரு மலேஷிய தமிழ் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, அங்கேயே செட்டிலாகி, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். அவருக்கு இருந்த ஓரிரு இந்திய தமிழ் நண்பர்களில் நானும் எனது நண்பர் சரவணனும் இருவர்.

ஒரு நாள் திடீரென்று அவரது மகனுக்கு பிறந்தநாள் அதனால் கண்டிப்பாக வரவேண்டும் என்றார். முதலில் பிகு பண்ணிவிட்டு பிறகு சரி என்று போவதற்கு ஒத்துக்கொண்டோம்.

***

கோலாலம்பூர். செராஸ். மாலை எட்டு மணி.

ப்ராகாஷ் மகனின் பிறந்தநாள் விழா. விழா என்று சொல்லமுடியாது ஜஸ்ட் எ கொண்டாட்டம். தெரிந்த நபர்கள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். நானும் சரவணனும் ஆஜர். கொண்டுபோயிருந்த கேக் மற்றும் கிப்ட்டைக் கொடுத்துவிட்டு உள்ளே நின்று கொண்டிருந்தோம். வந்திருந்த அனைவரும் மலேஷியாவில் குடியேறியிருந்த தமிழ் மக்கள். எங்களிடம் விடாமல் இந்தியாவைப்பற்றியும் தமிழகத்தைப் பற்றியும் நிறைய விசயங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களில் நிறைய பேர் இந்தியாவுக்கு சென்றதில்லை. ஆனால் தமிழகத்திற்கு ஒரு முறையாவது சென்றுவிடவேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் நிறைய இருக்கிறது.

அதோ அங்கிருக்கும் கும்பலில் அந்த தாத்தாவும் இருக்கிறார். என்னை ஏமாற்றிய தாத்தா. அப்புறம் அந்த அம்மா. இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என்று நினைக்கும் போதே “ஹாய் முத்து. வாட் எ சர்ப்ரைஸ். நீ என்ன இங்க” என்றொரு ஸ்வீட்டான குரல். சித்ரா. “சித்ரா நீ இங்க?” “இது என்னோட அக்கா வீடு. குழந்தை அக்காவோடது”

ப்ராகாஷ் வந்தார். சித்ராவையும் அவளுடைய பேமிலியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். தாத்தா ப்ராகாஷினின் மாமனார். தாத்தாவுக்கு என்னைப் பார்க்கவேமுடியவில்லை.

மறுமுறை இந்த வாழ்க்கையில் என்னை சந்திக்கவே போவதில்லை என்று நினைத்து அவர் அன்று அந்த பொய்யை சொல்லியிருக்கலாம். ஆனா உலகம் ரொம்ப -இப்ப ரொம்ம்ம்ம்ம்ம்ப- சின்னது.

***

நான் சிங்கப்பூர் வந்தது ப்ராகஷ¤க்கு தெரியாது. நான் புத்ரஜெயாவிலிருந்து ஐமோக்கா என்ற இங்கிலாந்து பேஸ்ட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது அவரிடமும் அவர் குடும்பத்திடமும் தொடர்பு விட்டுப்போய்விட்டது. நடுவில் நான் சிம் கார்ட் தொலைத்து வேறு வாங்கினேன்.

நீண்ட நாட்கள் கழித்து அவரை இங்கு ஜிம்மில் சந்திப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. திடீரென்று சந்தித்த பொழுது அவரை சட்டென நினைவுக்கு கொண்டுவரமுடியவில்லை. அவர் நிறைய மெலிந்திருந்தது காரணமாக இருக்கலாம். இல்லை எனது ஞாபக சக்தி மழுங்கிவிட்டது கூட காரணமாக இருக்கலாம்.

***

* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

(மற்ற இன்சிடென்ட்ஸ் பகுதிகள் தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)

இன்சிடென்ட்ஸ் – 6

து ஒரு குளிர்ந்த டிசம்பர் மாதத்து இரவு. தலையில் டைட்டாக அம்மா கட்டிவிட்டிருந்த மப்ளருக்குளிருந்து என் அண்ணனுக்கு நான் டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன். காலை மூன்று மணிக்கு முன் சக்கரத்தில் எழுமிச்சை நசுக்கி பஸ் புரப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு என சுற்றுலாவுக்கு வந்திருந்த மாணவ மாணவிகள் எல்லாம் குதூகலமாக இருந்தனர். நானும் தான். எனக்கு இது தான் முதல் தொலைதூர சுற்றுப்பயணம். அதுவும் முதல் முறையாக வீட்டை விட்டு ஐந்து நாட்கள் பிரிந்திருக்கப்போகிறேன்.கொஞ்சம் சந்தோஷமாகவும் ரொம்ப வருத்தமாகவும் இருந்தது.

என்னதான் சொல்லுங்கள்,அதிகாலை நேரப் பஸ் பயணம் போல சுகமான பயணம் வேறு இருக்கிறதா? மன்னிக்கவும், ஒரு கவிதை ஞாபகம் வருகிறது.

அதி காலை நேரம்
ஜன்னலோரப் பயணம்
தலைக்கோதிச் செல்லும் காற்றில்
உன் கைவிரல்கள்
சிலிர்த்தது காது மடல்

நான் மற்றும் எனது உயிர் நண்பன் சூரியமோகன் (தற்போது டொரொன்டோவில் MBA படித்துக்கொண்டிருக்கிறான்) மற்றும் பிற பணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் கடைசி இருக்கையில் உட்கார்ந்திருந்தோம். எனக்கு படிக்கட்டுக்கு பக்கத்திலிருக்கும் சீட். எனக்கு பக்கத்தில் சூர்யா. காற்று மிகவும் குளிராக இருந்தது. காது மடல்கள் ஜில்லிட்டிருந்தது. கண்ணாடியில்(நான் அப்போது கண்ணாடி அணிந்திருப்பேன். இப்போ லென்ஸ்) பனி மூட்டம். ச்சே. இனிமேல் கண்ணாடி வாங்கும் போது வைப்பர் வைத்து வாங்கச்சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.படிக்கட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சீட்டில் உட்கார்வதில் நன்மை என்னவென்றால்: காற்று அதிகமாக வீசும். தீமை? காற்று மிக அதிகமாக வீசும்.

ஏதோ சாமி பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு வீரா படப்பாடல்கள். கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட என்று எஸ்.பி.பி கொஞ்சிக்கொண்டிருந்தார். நான் கேர்ல்ஸ் ஏரியா பக்கம் அத்துமீறி நுழைந்து, சில நொறுக்குத்தீனிகள் கைப்பற்றிக்கொண்டு வந்தேன். முருகு, இதென்ன ரஜினி பாட்டு மாதிரியே இல்ல என்றாள். கொஞ்சம் டீசிங், கொஞ்சம் கத்தல், கொஞ்சம் பாடல், கொஞ்சம் சண்டை என்று ஆரம்ப உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து அனைவரும் சாந்தி நிலையை அடைந்துவிட்டிருந்தனர். என்ஜினின் ஓசையும், அவ்வப்போது க்ராஸ் செய்யும் பேருந்துகளின் வெளிச்சத்தையும், ஹிஸ்டரி மேடத்தின் குரட்டை ரீங்காரத்தையும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை.

கண்விழித்துப் பார்த்த போது சூர்யா படிக்கட்டு கதவில் உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் விடிந்திருந்தது. சுப்பிரமணியசுவாமி திரைப்படத்திலிருந்து பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவியரிடம் அசைவு தெரிந்தது. பிரின்ஸி நல்ல உறக்கத்திலிருந்தார். இதை உறுதி செய்தாயிற்று என்று சூர்யா கண் ஜாடை காட்டினான். நானும் சென்று அவனுடன் படிக்கட்டு கதவில் உட்கார்ந்து கொண்டேன். தென்காசிக்கு சிறிது தூரமே என்று மைல்கல் சொன்னது.

ஏதேதோ எங்களைத் தெரியாத கிராமங்கள் எங்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றன. சில கிராமங்களின் பெயர்கள் விசித்திரமாக இருந்தன. ஊர்களில் அந்த அதிகாலையிலும் விழித்து ஏதோ வேலையாக ரோட்டில் நடந்து கொண்டிருந்த மக்கள் எங்கள் டாட்டாவை வெறித்து பார்த்தபடியே மேலும் தங்கள் நடையை துரிதப்படுத்தினர். டாட்டா காட்டேன்டா சொட்டத்தலையா என்றான் சூர்யா. இது காதில் விழுந்ததாலோ என்னவோ சிலர் போனால் போகிறது என்று பதில் டாட்டா காட்டினர். இது அனைத்தையும் வைத்தகண் வாங்காமல் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் ஆயா. நான் கே.ஜி. படித்ததிலிருந்து அவர் தான் ஆயா. நல்ல பாசமானவர். ஆனால் மோசமானவர் (சாரிடா சிவா, உன் டயலாக்கை கடன் வாங்கிக்கிட்டேன்) கேஜியிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்தேன். நான் பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்கும் வரையிலும் என் பள்ளி என் மீது அதீத பாசம் வைத்திருந்ததாய் தான் உணர்ந்தேன். அதற்கப்புறம் இரண்டு ஆண்டுகள் கழித்து என் பள்ளிக்கு ஏதோ வேலையாக சென்றிருந்த போது, புது பிரின்ஸி இருந்தார், அவர் என்னைப்பார்த்து ஹ¥ ஆர் யு? என்று கேட்டபோது தான் காலம் எப்படிப்பட்ட கோட்டைகளையும் மண் மேடாக்கிவிடும் என்பதை நம்பத்தொடங்கினேன்.

“சாமின்னா சுப்பிரமணிய சாமிதான் நம்ம சாமிதான்..சாமி இங்க கட்டிக்கிட்ட மாமி தான் ரெண்டு மாமி தான்” பாடல் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது.நான் சூர்யமோகனிடம் ஏதோ கேட்க நினைத்து அவனை அழைத்தேன். ஆயா ஒழுங்கா ரெண்டு பேரும் சீட்ல உட்காருங்கடா என்றார். நாங்கள் முடியாது முடியாது என்று சொல்லிக்கொண்டே வந்தோம். சட்டென்று அவர் பிரின்சியை கூப்பிட்டுவிட்டார். பிரின்சி திரும்பி முறைத்து தன் பெரிய கண்களை உருட்டி கெட் டவுன் பாய்ஸ் என்று சொல்ல, நாங்கள் வேறு வழியின்றி சீட்டில் வந்து உட்கார்ந்தோம், ஆயாவை முறைத்துக்கொண்டே. பஸ் ஒரு ரைட் டர்ன் எடுத்தது.

அவ்வளவுதான். ஏதோ ஒரு கனமான பொருள் மீது பஸ் மோதியது போன்ற ஒரு சத்தம். ரோட்டில் பெரிய பாறை ஏதும் கிடந்ததா என்ன? ஒரே கூக்குரல்கள். முன்னால் அமர்ந்திருந்த ஹிஸ்டரி மேடம் ஜீஸஸ் ஓ ஜீஸஸ் என்று கத்துவதும், இன்னும் பிறர் ஐயோ அம்மா என்று அலறும் சத்தம் காதுகளில் விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. பஸ் குடிபோதையில் திளைத்துக்கொண்டிருக்கும் குடிமகன் போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது.நாங்கள் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால் முன்னால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கூச்சலும் குழப்பமும் கொடைக்கானலின் கடும் பனிமூட்டம் போல எங்களைச் சூழ்ந்திருந்தது. திடீரென்று பஸ் படிக்கட்டு இருந்த பக்கம் டபக்கென்று சாய்ந்தது. பிடிமானம் ஏது இல்லாமல் குழப்பத்திலும், பயத்திலும் நின்றிருந்த நான் பக்கத்திலிருந்த கம்பியில் மோதினேன். சக்கரம் ஏதோ சகதியில் அமிழ்ந்தது போல இருந்தது.
கூக்குரல்கள் மேலும் அதிகரித்தது. நாங்கள் எங்கள் வகுப்பு நண்பர்களைத் தேடினோம். அனைவரும் எழுந்து நின்றிருந்ததால் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அப்பொழுதுதான் பின்னால் திரும்பிப்பார்த்தோம். கொஞ்ச தூரத்தில் ஒரு சிட்டிபஸ் பாதிமட்டுமே நின்று கொண்டிருந்தது.

எங்கள் பஸ் ரைட் டர்ன் எடுத்தப்பொது அங்கு நேர் ரோடு ஒன்றும், உடனடியாக ஒரு லெப்ட் டர்ன் ஒன்றும் இருந்திருக்கிறது. லெப்ட் டர்னில் முக்கால் வாசி உள்ளேயும் கால் வாசி பாகம் நேர் ரோட்டிலுமாக காலை நேரத்து பாதி தூக்கத்தில் இருந்திருக்கிறது சிட்டிபஸ். காலை நேரமானதால் பஸ்ஸில் நிறைய கூட்டம் இல்லை. ஒரே ஒரு துரதிர்ஷ்டவசமான ஆள் தவிர.

பள்ளத்தில் இறங்கிய பஸ் அப்படியே நின்று கொண்டிருந்தது. அது ஒன்றும் பெரிய பள்ளம் இல்லை தான். ஆனால் மேலும் கீழிறங்கினால் பஸ் கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. ஹிஸ்டரி மேடம் முன்னால் எங்கள் மாணவ மாணவிகளுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்றார். ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும் சற்று அடி. டிரைவருக்கு பலத்த அடி. ஸ்டியரிங் வீலில் மாட்டிக்கொண்டார் அவர். டிரைவர் அன்று மிக அழகாக எங்களைக் காப்பாற்றியிருக்கிறார். பஸ்ஸில் மோதிய எங்கள் பஸ் நிதானம் இழந்து ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய புளியமரத்தை குறி வைத்து சென்றிருக்கிறது. இலாவகமாக டிரைவர் எங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

இப்பொதைக்கு ஒன்றும் பயமில்லை என்றதும் நாங்கள் தேடியது எங்கள் உயிர் நண்பர்களையும் நண்பிகளையும் 🙂 தான். அவர்கள் பத்திரமாக இருந்தனர், கண்கள் நிறைய பயத்தோடு. கதவைத்திறக்க முயற்சித்தோம். முடியவில்லை. மணலில் புதைந்திருக்கிறது.

பி.கு: பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

இன்சிடென்ட்ஸ் – 5

லாலிபாப்:

அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரைப்பரிட்சை லீவு. அரைப்பரிட்சை என்று சொல்ல முடியாது. அது முழுப் பரிட்சை தான். என்னென்றால் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் முழுவதையும் பாதி வருடத்திலே முடித்துவிட்டு, பிற்பகுதியில் – ஜனவரி முதல் ஏப்ரல் வரை – பத்தாம் வகுப்பு பாடங்கள் படிக்க திட்டம். லீவில் டூர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமங்கலத்தில் ஆரம்பித்து குற்றாலம் சென்றுவிட்டு அப்புறம் தென்காசி வழியாக நாகர்கோவில், கண்ணியாகுமரி சென்று, பின்னர் மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் செல்வதாக ப்ளான்.

எங்க ஸ்கூல்ல அப்பப்ப டூர் போவோம். அதாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக டூர் நிச்சயம். ஒரு நாள் டூர். பக்கத்துல எங்கனாச்சும் கூட்டிட்டு போவாங்க. மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் கோவில், பழமுதிற்சோலை, வைகை டேம், வெராகனூர் டேம் எல்லாம் போயிருக்கோம். முக்கால் வாசி தடவ வைகைடேம் தான் கிடைக்கும். அதனால என்னென்ன இடம் அங்க இருக்குங்கறது அத்துப்படி. ஆனா கடைசி முறை காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ போனோம். கொஞ்சம் மாற்றம் இருந்தது. ஆனா முதல் தடவ போன போது நடந்த சம்பவங்களும், கடைசி தடவ போனபோது நடந்த சம்பவங்களும் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.

முதல் முறை நான் வைகை டேம் போனபோது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போவே கேங்கிஸம் எங்க கிளாஸில இருந்தது. என்னுடைய கேங் ரொம்ப பெரியது. எதிரணியில் இருந்த சொர்ப்ப எண்ணிக்கையான ஐந்து நபர்களைத்தவிரவும், எப்பவுமே ஒரு குரூப் சமநிலையா இருக்கும்ல அவைங்களையும் விட்டுட்டு பாத்தா, அத்தன பேரும் நம்ப குரூப் தான்.

எங்க குரூப்பில் நானும், கவின் தீபக் (இப்பொழுது எம்.பி.ஏ முடித்துவிட்டு மிக பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்) லீடர்ஸ். கவினும் நானும் நல்ல நண்பர்கள். சேர்ந்து படித்த ஏழு வருடங்களும் பிரிந்ததேயில்லை. அப்புறம் அவன் பாய்ஸ் ஹையர்செகண்ட்ரி போயிட்டான். நான் எங்க ஸ்கூல்லயே இருந்திட்டேன். அப்புறம் எங்களுக்கு அடுத்தபடியாக பக்ருதீன் அலி அகமத், காளி ராஜேஸ் மற்றும் மணிகண்டன். இதில் காளி ராஜேஸ¤ம் மணிகண்டனும் இப்பொழுது திருமங்கலத்தில் பலசரக்கு கடை வைத்திருக்கிறார்கள். பக்ருதீன் பி.எஸ்.சி படித்துவிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறான்.

எதிரணியில் முக்கியஸ்தர்கள் மணிக்குமார் (இப்ப டாக்டர்), கணேஷ் (இவன் என்னுடன் காலேஜிலும் படித்தான். இப்ப பெரிய MNC ல வொர்க் பண்றான்) மற்றும் செண்பக குமார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மணிக்குமாரும், கணேசும் அமைதியானவர்கள். என்ன திட்டினாலும் பேசாம இருப்பாய்ங்க. “மேடம் கிட்ட சொல்லி கொடுத்திருவேன் பாய் (BOY)” அப்படீன்னு சொல்றத தவிர வேற ஒன்னும் சொல்லபாட்டாய்ங்க. அதுலயும் மணிக்குமாரும், கணேசும் எனக்கும் கவின் தீபக்கும் தான் படிப்பில் போட்டி இருக்கும். கவினும் நானும் மணிக்குமாரும் நண்பர்கள் தான். கணேஷ¤டன் தான் எப்பொழுதும் சண்டை நடக்கும். கணேசும் மணிக்குமாரும் நண்பர்கள் என்பதால் மணிக்குமார் கணேசுக்கு சப்போர்ட். அதனால் எங்களுடன் பேச மாட்டான். சென்பககுமார் அடியாள்.

செண்பககுமாருடன் நீங்க பேச முடியாது. சட்டுன்னு அடிச்சுபுடுவான். நிறைய தப்பு பண்ணி மாட்டிக்குவான். ஒன்னு நல்லா படிக்கணும் இல்லைன்னா எல்லாருக்கும் தெரியறமாதிரி தப்பு பண்ணக்கூடாது. இது ரெண்டும் அவன் பண்ண மாட்டான். மேடம் கிட்ட அவன் வாங்குற அடி கொஞ்சம். அதும் ஹிஸ்டரி மேடம் இருக்காங்களே, கைய திருப்பி வெச்சு, ஸ்கேல வெர்டிக்கலா வெச்சுக்கிட்டு போடுவாங்க பாருங்க அடி. நான் வாங்குனதேயில்ல. அடி வாங்குறவைங்கல பாத்தாலே போதுமே. ஆனா அது எதயும் பாத்து நம்பக் கூடாது. சில பேரு ஓவர் ஆக்டிங் கொடுப்பாய்ங்க. அது எனக்கு பிற்காலத்துல டியூசன் எடுக்கும் போது தான் தெரிஞ்சது. அவன செம்மரியாடுன்னு தான் கூப்புடுவோம். பேரு ஏன் அப்படி வந்ததுன்னு தெரியாது. ஆனா அவன் செம்மாறியாடு தான். சும்மா அவன் இங்கிட்டு அங்கிட்டு போகும் போது செம்மரியாடு மாதிரி கத்தி கடுப்பேத்துவாய்ங்க நம்ம ஆளுக. அவனுக்கு தான் கை கொஞ்சம் நீளமாச்சே. உடனே அடிக்க கை ஓங்குவான். அவ்வளவு தான் மேடம் என்ன செண்பக குமாரு அடிச்சுட்டான்னு ஆரம்பிச்சுடுவாய்ங்க. அன்னிக்கு அவன் மேடம்கிட்ட வாங்குற அடியெல்லாம் கொஞ்சம்.

மறுநாள் அவனோட அம்மாச்சி ஸ்கூலுக்கு வந்து தொரத்தி தொரத்தி கம்பு ஒன்னு வெச்சுக்கிட்டு அடிக்கும் பாருங்க. கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (அப்பங்க!) ஆனா அவனோட அம்மாச்சி ஸ்கூல இருக்குறவரைக்கும் தான் அழுகாச்சியெல்லாம். அவங்க அந்தப்பக்கம் போன உடனே அடி வாங்குனதயே மறந்துடுவான். அது வைரம் பாஞ்ச கட்டை.

ஒரு லாலிப்பாப்புக்காக சண்டை போட்டோம் நானும் மணிக்குமாரும். மணிக்குமார் மேல எனக்கு கொஞ்சம் கோபமாவேயிருக்கும். எனக்கு போட்டி அவன் தான். ஆனா எட்டாத தூரத்தில இருப்பான். பிடிக்கவே முடியாது. இப்ப இங்கிலீஸ்ல ஒரு போயம்(poem) இன்னக்கி நடத்துறாங்கன்னு வெச்சுக்குங்க, நடத்தி முடிச்ச அடுத்த நிமிசமே கடகடன்னும் சொல்லுவான் அந்த போயத்த. நமக்கு இருளடச்ச மாதிரி ஆயிடும். என்னடா நமக்கு இன்னும் வாசிக்கவே தெரியல அதுக்குள்ள இவன் கடகடன்னு ஒப்பிக்காரானேன்னு. வைகை டேமுக்கு டூர் போறதுன்னு முடிவாச்சு. டூர் போகும் போது ஸ்கூல் வேன்ல மணிக்குமாருக்கு ஒரு லாலிப்பாப் கொடுத்தேன்.

டேம்ல ஏதோ சண்டையில செண்பககுமாரா நொக்கி எடுத்துட்டாய்ங்க பக்ருவும் காளியும். இதனால மணிக்குமார் என்கூட பேச மாட்டேன்னுட்டான். எனக்கு கோபம் கோபமா வந்திடுச்சு. அப்படீன்னா என்கிட்ட வாங்குன லாலிப்பாப்ப கொடுடான்னு கேட்டேன். எப்படி கொடுப்பான். அததான் சாப்பிட்டுட்டானே. வைகை டேம்ல அந்த காலத்துல – நான் அஞ்சாவது படிக்கும் போது- கண்டிப்பா லாலிபாப் கிடைக்காது.

அன்னைக்கு சீசா விளையாடும் போது செண்பககுமார வலுகட்டாயமா கூப்பிட்டு அந்தப்பக்கம் உக்காரவெச்சாய்ங்க. அவனுக்காவது புத்தி வேணாம். நம்பல எதுக்குடா கூப்பிடுராய்ங்கன்னு? டக் ஆப் வார் மாதிரி இந்தப்பக்கம் நாங்க அந்தப்பக்கம் அவிங்க. நல்ல விளையாடிட்டு இருந்தப்ப, டக்குன்னு எங்க பக்கம் நாங்க இறங்கிட்டோம். மேல இருந்த அவிங்க டமால்ன்னு (சில பேரு சத்தம் கேட்டுச்சான்னு கேப்பீங்க, ஆமா கேட்டுச்சு) விழுந்தாய்ங்க. அதுல செண்பககுமாரு கால் உடஞ்சு இரத்தம் வந்திடுச்சு. டூர் பேக்கப்.

ஸ்கூலுக்கு வந்தப்பிறகு முதல் வேலையா மணிக்குமார் எனக்கு லாலிப்பாப் வாங்கிக்கொடுத்தான். அதற்கப்புறம் அவனுடன் நான் பேசவேயில்லை. அதெப்படி லாலிப்பாப்ப திரும்பக் குடுக்கலாம்? அவன் ஆறாவது வகுப்புக்கு வேற ஸ்கூல் போய்ட்டான்.

ரொம்ப நாளைக்கு அப்புறம், நான் பண்ணிரெண்டாவது பரிட்சை முடித்து, excel entrance coaching கிளாஸ் (இப்பத்தான் நுழைவுத்தேர்வு கிடையாதே, அவங்க பிசினெஸ் என்ன ஆகும்?) சேர்ந்தப்போ (அரசரடி, செவன்த் டே அட்வெண்டிஸ்ட்), என்னுடைய கிளாஸ்ல எனக்கு முன்னால இருந்த ரோவில் மணிக்குமார் உட்கார்ந்திருந்தான். சிரித்துக்கொண்டோம். அவன் சென்னையில் எம்.ஜி.ஆர் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ். படித்தான்.

கடைசியாக என்னுடைய BE மூன்றாவது வருடத்தில், கொடைக்கானலில் இருந்து வரும் வழியில் வைகை டேம் சென்றோம். ஸ்கூல் படிக்கும் போது நிறைய தடவை சென்றிருந்தாலும் ஒரு சுதந்திரம் இருக்காது. கூடவே மேடம் இருப்பாங்க. எங்க போனாலும் க்யூவில தான் போகனும். காலேஜில ஒரு சுதந்திரம் இருந்தது. டேம் மேலே ஏறினோம். படிகள் அழகாக இருந்தது. மேலே ஏறி அலை அடிக்கும் ஒரு சரிவில் கல்லின் மீது உட்கார்ந்து அந்த சின்ன அலைகளையே வெறித்துக்கொண்டிருந்தேன் ரொம்ப நேரம். என்னுடைய ப்ரண்டுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லாத நேரம். கொடைக்கானலிலே சண்டை வந்து விட்டது. ஈகோ. படிகளில் இறங்கிக்கொண்டிருந்தோம். என்னுடைய நண்பர் வட்டாரம் என்னுடன். அவளுடைய தோழிகள் அவளுடன், எனக்கு பின்னே. சட்டென மழை சடசடவென பிடித்துக்கொண்டது. எல்லோரும் பஸ்ஸை நோக்கி ஓடினர். நான் ஓடவில்லை. என் நண்பர் வட்டாரம் ஓடி விட்டது. அவள் ஓட வில்லை. அவளுடைய நண்பர் வட்டாரம் ஓடிவிட்டது. இருவரும் வழி நெடுக நனைந்து கொண்டே நடந்து வந்தோம், பஸ் ஏரும் வரை. ஈகோ சட்டென் கரைந்தது, செக்கச்செவப்பாய் தரையில் கரைந்து ஓடிக்கொண்டிருந்த மணலைப் போல.

எனக்கு இப்பவும் வைகை டேம்னா சட்டுன்னு நினைவுக்கு வருவது : அந்த twisted circular stairs. முதன் முதலாக சின்ன வயதில் பார்த்து மனதில் படிந்த அந்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கிறது.

காளி ராஜேஸ் (ஸ்கூல்) பாக்கத்தான் அடாவடியான ஆளு. ஆனா பயங்கர ரொமான்டிக் பேர்வழி. எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இருந்தது. அவ ரொம்ப அழகு. என்னுடைய பார்ட்னர் அவ. பார்ட்னர்னா அவகிட்டத்தான் ஒப்பிக்கனும், எழுதிக்காட்டனும். ஒரு நாள் இந்த காளி ராஜேஸ் என்ன பண்ணான் தெரியுமா? அவகிட்ட போய் லவ் லெட்டர் கொடுத்துட்டான்! என்ன கிளாஸ் படிச்சிட்டு இருந்தோம்னு நினைக்கிறீங்க? நாலு.

அந்தப்பொண்ணு அழ ஆரம்பிச்சுடுச்சு. அவங்க அப்பா கிரிமினல் லாயர் வேற. எங்களுக்கு செம கோபம் அது எப்படி அவன் கொடுக்கலாம்? அவன் மேல அவங்க அப்பா கேஸ் போட்டாலும் போடுவாருன்னு நாங்க சொன்னதுல பய பயந்துட்டான். ஒரு வாரம் கிளாஸ¤க்கே வரல.

கடைசியில கேரளா டூர் பத்தி ஒன்னுமே சொல்லலியே? அடுத்த இன்ஸ்டால்மென்ட் ப்ளீஸ். கை வலிக்குது, டைப் பண்ணி.

பின்குறிப்பு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

 

இன்சிடென்ட்ஸ் : 4

நல்ல மனுசனுக்கு ஒரு கடி :

தனால் கூட இருக்கலாம் இல்லையா? எதனால்? அதாவது வெகுஜன பொதுஜன மக்களே என்னவென்றால் : நான் நாய்க்கு பயந்ததனால் தான் நாய் என்னை அன்றைக்கு கடித்ததா? இல்லை நாய் கடித்ததனால் தான் எனக்கு நாயிடம் பயம் வந்ததா?

நான் என்ன : நாயே இன்னைக்கு நீ செத்தன்னு, சொல்லியா மிதிச்சேன். தெரியாமத்தான மிதிச்சோம். அதக்கூட பொறுத்துக்க முடியல அதால. டபார்ன்னு பாஞ்சு ஒரே கடி. ஹ¤ம். நல்லவேளை இந்த பேகி பேண்ட் போட்டதால தப்பிச்சேன். பின்ன, நாய் அந்த கடி கடிச்சதுக்கு ஆபரேசன்ல பண்ணனும். ஒரே கொத்தா புடிங்கிருக்கும்ல. தப்பிச்சுட்டோம்ல. ஆனா அந்தவாக்குல கடிச்சதுல பல்லு பட்ருச்சு. ரத்தம் வந்திருச்சு. பிடிச்சேன் ஒரே ஓட்டம். நாய் பக்கத்துல இருக்கம்போது ஓடக்கூடாதுன்னு சொல்லுவாய்ங்க. அவெய்ங்க கிடக்காய்ங்க. கடி யாரு வாங்கறது? நின்னு மொறச்சு பாத்தா விட்றுமா? அத பாத்தமாட்ல காலு கையெல்லாம் நடுக்கமெடுக்குதுல்ல. நாயும் விடல. என்ன தொரத்த ஆரம்பிச்சுருச்சு. என்னா திமிரு? அதான் லவக்குன்னு கடிச்சுருச்சுல்ல. அப்புறமும் என்ன வேணுமாம்? ஐயோ யாராவது காப்பாத்துங்க, நாயப்புடிங்கன்னு நான் கத்தறேன். எல்லோரும் ஒலியும் ஒளியும்ல அண்ணாத்த ஆடுறார் பாட்ல மூழ்கிக் கெடக்குறாய்ங்க. எவன் நம்மல கவனிக்குறான். இதுல ஒரு விசயம் என்னன்னா, இது ஒன்னோடயெடம் இது என்னோடயெடம்னு அடிச்சுக்கிறவய்ங்க, நம்பல தொரத்த ஆரம்பிச்சாமட்டும் ஒன்னு கூடியிறாய்ங்க. அங்க ஒரு நாயி இங்கொரு நாயின்னு கும்பலா தொறத்துதுக. மாப்பு மாட்னடா இன்னக்கின்னு.

எப்படியோ ஓடி தப்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் நான் ஊசி போட்டு, எங்க அண்ணன் அந்த நாய தொரத்தி தொரத்தி அடி வெளுத்துக்கட்டுனது வேற கத. அப்புறம் தான் பயம் அதிகமாச்சு. ஒரு நாய் இன்னொரு நாய்கிட்ட போட்டுக் கொடுத்துருக்குமோன்னு. இவிங்க தான்டா பாத்துவெச்சுக்க. வ….. மாட்னாய்ங்க போட்டுத் தாக்கிருன்னு அடிவாங்குனவைய்ங்க சொல்லியிருப்பாய்ங்களோன்னு ஒரு கவலை. அண்ணனுக்கு என்ன டப டபன்னும் மோட்டார் பைக்குல போவாரு. நாம அந்தப்பக்கட்டு போனாக்க சும்மா கிர்ருன்னு மொரைக்குதுக. எப்ப புடுங்கும்னு தெரியாது. சில சமயம் மதுரைக்குப் போயிட்டு நைட்டு லேட்டாகி நடந்து வந்தம்னாக்க வீடு போய்ச் சேர்ர வரைக்கும் உசிரப்புடிச்சுக்கிட்டு தான் நடக்கனும். சில எடத்துல தெரு லைட்டு இருக்காது. (சில இடத்துல மட்டுமான்னு நீங்க கேக்குறது என் காதுல விழத்தேன் செய்யுது!) அப்பத்தான் ரொம்ப உசாரா இருக்கனும். மறுபடியும், கன்ணு தெரியாம (நமக்கு சும்மாவே கண்ணு தெரியாது) அதே நாய குறுக்குல மிதிச்சோம்னு வச்சுக்குங்க. டேய் என்ன திமிருடா உனக்கு, என்னையே மிதிச்சுக்கிட்டுத் திரியரன்னு கோபத்துல எங்க கடிக்கும்னு தெரியாது. சில நாய்ங்க இருக்குதுங்க. அட இருட்டாக் கெடக்கே டார்ச் அடிப்பம்னு அடிச்சாக்க, அதுக்கும் கத்துவாய்ங்க. அப்புறம், நாயோட கண்ணும் நம்மோட கன்ணும் நேருக்கு நேரா பாத்துக்க கூடாதுன்னு நாய்பயம்போக்கியசச்சிதானந்தசுவாமிகள் சொல்லுவார். பாத்தா நாய்க்கு வெறி புடிச்சுக்குமாம். அட பாவிகளா, அதோட கண்ண எதுக்கு போய் நேருக்கு நேரா பாக்கனும். அதென்ன, உங்க கேர்ள் பிரண்டோட கண்ணா? அப்புறம் அதுக்கு கோபம் வருமா வராதா?

ஆனா நீங்க பாக்காட்டியும் இருட்டுல நாயோட கண்ணு சும்மா கலர்புல்லா ஜொலிக்கும். உங்கள அப்படியே ஈர்க்கும். அப்படித்தான் அன்னைக்கும் ஆச்சு. இது சென்னையில இருக்கறப்போ நடந்தது. (சென்னையிலுமான்னு கேட்டா? ஹே ஹே.. நாங்க பல ஏரியா போய் கடி வாங்குனவைங்கப்பு. அவ்ளோ கடி வாங்கினாலும் ஒரு சத்தம் கூட வராதுல.) அன்னைக்கு பாழாப்போன ஆபிஸில கொஞ்சம் ஓவர் வேலை. நாங்க கிண்டியில இருந்தோம். இந்த வண்டிக்காரன் சந்து இருக்குல அதுல இருந்தோம். என்னோட வேல பாக்குறவரு அவரோட வண்டியில தெரு முக்கு வரைக்கும் என்ன கொண்டாந்து விட்டாரு. தெருவுல ஒரு பய கிடையாது. நானும் பம்மி பம்மி நடந்துவாரேன். எங்க வீடு இருக்குற தெருவுக்குள்ள நுழஞ்சன்ல, ஒரு நாய் அங்க படுத்துக்கிட்டு தலய தூக்கி என்ன பாத்துச்சு. கண்ணு குங்கும கலர்ல மின்னுது. தெருவுல யாரும் இல்ல. தெரு வெளக்கும் எரியல. ஆனா நாயோட கண்ணு மட்டும் நல்லா பளிச்சுன்னு தெரியுது. நான் கிட்ட வர வர அது எந்திருச்சுருச்சு. அமைதியா என்ன பாத்தமானைக்கே நிக்குது. எனக்கு உள்ளுக்குள்ள ஒரு நடுக்கமெடுக்க ஆரம்பிச்சுருச்சு. கால் எவ்ளோ மெதுவா நடக்கமுடியுமோ அவ்ளோ மெதுவா நடக்குது. சும்மா நிக்கவும் யோசனையா இருக்கு. நின்னம்னாக்க நாய் உஷாராயிடும்ல. நாய்பயம்போக்கியசச்சிதானந்தசுவாமிகள் தோன்றினார்: மாப்ள, நாய பாத்தீனாக்கா கண்டுக்கிடாதமானிக்கு நீ பாட்டுக்கு நடந்துக்கேயிரு. அதுவும், ஊரு எம்.எல்.ஏ மாதிரி, உன்ன கண்டுக்கிடாது. மவனே நின்னு பாத்த, தொலஞ்சடிமாப்ள. எது வந்தாலும் வரட்டும்னு துணிஞ்சு நடந்தேன். குர்ருன்னுச்சு. நமக்கு உள்ளுக்குள்ள பயமாயிருந்தாலும் சமாளிச்சு நடந்திட்டேன். பின்னாடி மோப்பம் பிடிச்சுக்கிட்டே வந்துச்சு. கன்ணுக்கு முன்னால இருந்தாலும் நாய் இப்ப என்ன செய்யுதுன்னு தெரிஞ்சுக்கிடலாம். பின்னால வந்தாக்க அது என்ன செய்யுதுன்னே தெரியாதுல்ல. அப்ப ஒரு பயம் வரும் பாருங்க. உடம்பெல்லாம் புல்லரிக்கும். கால் தானகவே வெகம் பிடிக்கும். ஒரு வழியா விட்ருச்சு.

நடந்து எங்க வீட்டுக்கு பக்கத்துல வந்தேன். கீழே ஒரு நாய் தூங்கிட்டு இருந்துச்சு. அப்பாடான்னு இருந்துச்சு. எங்க வீடு அப்பார்ட்மெண்ட் மாதிரி. நாலு வீடு கீழயும் மேலயுமா இருக்கும். நாங்க மேல ரோட்டப் பாத்து இருக்குற வீட்ல குடியிருந்தோம். கீழ ஒரு கேட் இருந்துச்சு. என்னன்னாக்க, அந்த வீட்ல என்னமோ இந்திய பிரதமர் குடியிருக்கறதா தப்பா நெனச்ச வீட்டு ஓனரு, கீழ இருக்குற கேட்ட நைட்டு பத்துமணிக்கு கண்டிப்பா பூட்டிருவாரு. அங்க இருக்கறதென்னவோ வெட்டி பேச்சுலர்ஸ் தான். ஒரு பய பத்து மணிக்கு வீட்டுக்கு வரமாட்டான். அதனால சாவிய பையில வெச்சுருப்போம்.

கீழ கேட்டு பூட்டியிருந்துச்சு. எங்கிட்ட சாவி இல்ல. ஒரு நாய் ரோட்ல படுத்து தூங்குது.மேல டீவி ஓடுற சத்தமும். டுபாகூர் நவனீதனின் சத்தமும் தெளிவா கேக்குது. நான் கீழயிருந்து அவிங்களுக்கு கேக்குறமாதிரி மெதுவா கத்துனேன். ஏன்னா படுத்திருக்குற நாய முழிக்கவெச்சுட கூடாதுல்ல. சும்மா மெதுவா கத்தி பாத்தேன். அவிங்க வரல. சத்தம் போட்டு நாய முழிக்கவெக்கறதுக்கு பதிலா, சுவரெரி குதிச்சரலாம்னு நினைச்சேன்.

சுவரு கொஞ்சம் ஒசரம் ஜாஸ்தி. என்னவிட ஒசரம். கையில வெச்சிருந்த குமுதத்த சுவரு மேல வெச்சுட்டு, சுவத்தபுடிச்சு எம்பி, ம்ம்..இன்னும் நல்லா எம்பி, கஷ்டப்பட்டு மேல ஏறப்போகயில கை வழுக்கி தொப்புன்னு கீழ விழுந்தேன். விழுந்த சத்தத்துல நாய் எந்திருச்சுருச்சு. நான் மெதுவா எந்திருச்சு பவ்யமா ஒன்னும் தெரியாத மாதிரி நின்னேன். நாய் என்னயே கிர்ருன்னு பாத்துச்சு. எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு. என்னடா இப்படி எக்குத்தப்பா மாட்டிக்கிட்டமேன்னு.

நல்லா சத்தமா, நவனீதான்னு கத்துனேன். அப்பாடா ஒரு வழியா நவனீதனுக்கு காது கேட்ருச்சு. ஜன்னல தொறந்து வெளியே பாத்தான். என்னடா சாவியா? ன்னு கேட்டவன், உள்ள போயி வேகமா சாவிய எடுத்துட்டு வந்து, ஜன்னல வழியா தூக்கிப்போட்டான் படுபாவி. அந்த சாவி கரெக்டா போய் அந்த நாயோட காலுக்கு முன்னாடி விழுந்துச்சு.

இராமநாரயணன் படத்துல வர நாயாயிருந்தா அதுவே சமத்தா சாவிய எடுத்துட்டு வந்து நம்ம கையில் கொடுத்து, இன்னொரு கால்ல நமக்கு கை கூட கொடுக்கும். விட்டம்னாக்க அதுவே கேட்ட ஓபன் பண்ணி கொடுக்கும். சாவிய குனிஞ்சு எடுக்கமுடியுமா? நாய் என்ன நினைக்கும்? நம்மல அடிக்கறதுக்கு கல்ல எடுக்குறான்னு நெனைக்காது? நாய் என்னப்பாக்குது சாவியப்பாக்குது. நீ எடுடி பாத்துப்புடுவோம்னு நிக்கறமாதிரி எனக்கு தோணுது. நாம் எடுக்கவேயில்ல. எடுப்பனா? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனுசனுக்கு ஒரு கடி.

மறுபடியும் கத்துனேன். பழாப்போன சண்டாளா கீழ வந்து தொலையேன் டான்னு. நவனீதனும், சிவாவும் வந்தாய்ங்க. கதவதொறந்தாய்ங்க. என்னடா நிக்கற? சாவிய எங்கடான்னாய்ங்க. நான் கீழ காமிச்சேன். நவனீதன் அசால்ட்டா போய் சாவிய எடுத்துட்டு, பூட்டிட்டு வாடான்னு சொல்லிட்டு போய்ட்டான்.

கொஞ்ச நேரம் என்னை அந்த நாய் எகத்தாளமாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு, தன் இடத்தில் சென்று மறுபடியும் படுத்துக்கொண்டது.

(தொடரும்)

இன்ஸிடென்ட்ஸ் – 3

அந்த நாட்களை யாராலும் மறக்கமுடியுமா என்பது சந்தேகமே. அதுவும் கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள ஒருவரால் மறக்கமுடியுமா?. what a day it was! Follow-On வாங்கி மீண்டும் பேட் செய்து லக்ஷ்மனும் டிராவிட்டும் ஒரு நாள் முழுதும் விளையாடிய அந்த நாளை சத்தியமாக என்னால் மறக்க முடியாது. எனக்கு என்ஜினியரிங் பைனல் இயர். எங்கள் செட்டில் (பெரிய சேவிங் செட்டா? என்று கேட்டால் என்ன சொல்வது?) யாரும் வகுப்பிற்கு போகவில்லை. எல்லாரும் students amenities centre இல் உட்கார்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தோம். Test தான். ஆனால் என்ன ஒரு கம்பீரம், லக்ஷ்மணின் ஆட்டத்தில். ஒரே விளாசல் தான். அதுவும் யாரிடம்? வரிசையாக டெஸ்ட் மேட்ச்களை வென்று ரெக்கார்ட் வைத்திருக்கும், நிறைய தன்னம்பிக்கையும், அதைவிட நிறைய திமிரும், கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற எகத்தாளம் கொண்டு “வாடா வாடா வாடா உம் பணத்துக்கும் என் பணத்துக்கும் சோடி போட்டுபாப்பமா..சோடி” என்று அலையும் ஆஸ்திரேலியாவிடம்.

அடித்தார். அடித்தார். அடித்தார். அடித்துக்கொண்டேயிருந்தார் லக்ஷ்மணன். எதுவும் சாதாரண அடியில்லை. பொளேர் பொளேர் என்று ஆஸ்திரேலியாவின் நெற்றிப்பொட்டில் விழுந்த அடிகள். அன்றைய தேதியில் கில்கிரிஸ்டும், வாக்கும் (தோள்பட்டை காயமாக பந்து வீசக்கூடாது என்ற டாக்டரின் அறிவுரையின் பெயரால்), ஹைடனும் மட்டுமே பந்து வீசவில்லை என்று நினைக்கிறேன். மற்ற அனைவரையும் பந்து வீசச் செய்தும் ஒன்றும் பிரையோஜனம் இல்லை. சும்மா “கன்” மாதிரி நின்றார் லக்ஷ்மணன். கூட தாங்கிப்பிடிக்கும் தூணாக டிராவிட். இருவரது ஆட்டமுமே அமர்களம். நாற்பத்தியெட்டு four அடித்திருந்தார் லக்ஷ்மணன் அன்று மட்டும்.

அதற்கடுத்து வந்தார் ஹர்பஜன். அடுத்த நாள் எங்களுக்கு கம்ப்யூட்டர் லேப். வசதி தான் இல்லையா? ஆனால் பாழாய் போன இன்டர்னெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோ. screen refresh ஆவதற்கும் போதும் போதும் என்றாகி விடும். நேரம் ஆக ஆக ஒரே கம்ப்யூட்டரின் முன் அனைவரும் கூட ஆரம்பித்தோம். யோசித்துப் பாருங்கள் ஒரு கம்ப்யூட்டரின் முன் நாற்பது பேர். அங்கே ஆஸ்திரேலியா பேட் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு விக்கட் எடுக்கவேண்டும், எடுத்தால் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை தற்காலிகமாக அடக்கலாம். ஒவ்வொரு முறையும் திரை refresh ஆகி திரும்பவும் வரும் வரை இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறும். கண் கொட்டாமல் மவுனமாக திரையை வெறித்துக் கொண்டிருந்தோம். எங்கள் லேப் அவ்வளவு அமைதியாக இருந்து நான் பார்த்ததேயில்லை. சாரி, கேட்டதேயில்லை. திடீரென்று HOD வந்துவிட்டார். உள்ளே நுழைந்தவருக்கு ஷாக். எங்களுக்கும் தான். இவரை யார் இந்த நேரத்தில் வரச்சொன்னார்கள் என்று எங்களுக்கு எரிச்சல். நாங்கள் மவுனமாக அவரைப் பார்க்க. அவர் எங்களைப் பார்க்க. “என்னாச்சு மேட்ச்? அடுத்து விக்கட் ஏதும் விழுந்ததா?” என்றாரே பார்க்கலாம். பிறகு லேபாவது மண்ணாவது.

ஜெயித்துவிட்டோம். அந்த series ஜெயித்தோம். அப்படியொரு ஆடம்பரமான வெற்றி. காண்ஸ்டபிளை டெபுட்டி கமிஷ்னராக்கிய வெற்றி. அந்த போராடும் குணம், நீண்ட நாட்களாக நம் அணியில் காணக்கிடைக்காத போராட்டம். கங்கூலி இருக்கும் வரை போராட்டம் இருந்தது. ஒரு டீம் ஸ்பிரிட் இருந்தது. இப்பொழுது மறுபடியும் individual display. “you cant win anything with kids” என்று சொல்வார்கள், உண்மையோ என்னவோ! கங்கூலி, அணி என்ற ஒற்றை சொல்லைக் கொண்டுவந்தார். “அவர்” அணியை அவர் உருவாக்கினார். இளைஞர்களுக்கு துனை நின்றார். சேவாக் தொடர்ந்து perform செய்யாமல் இருந்த பொழுது, அவர் அணிக்கு வேண்டும், மற்றொரு முறை வாய்ப்பு தாருங்கள் என்றார். சேவாக் நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்று யாராலும் சொல்லமுடியாது. சேவாக் ஜெயித்துக்கொடுத்த ஆட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் போன உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் அவர் அடித்தாரே 80 ரன்கள், அதை விட சிறப்பான ஆட்டம் வேறு இல்லை. It is hard to concentrate when your legends are failing before your eyes. கங்கூலியிடம் ஒரு வெறி இருந்தது. இல்லையேல் இங்கிலாந்தில் சென்று ஜெயித்தபிறகு டீ சர்டைக் கழட்டி பதிலடி கொடுப்பாரா? ஸ்டீவ் வாக் ஒரு legend. இருந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன. அவர் சச்சினைப் பற்றி தவறாக (Ball tampering issue) சொன்னபொழுது, BCCI கூட பதிலறிக்கை தராமல், முக்கி முனகிக்கொண்டிருந்த போது, “shut up steve!” என்று சொன்னாரே. அந்த தைரியம் இப்பொழுது யாரிடமாவது இருக்கிறதா? ஆஸ்திரேலியா சென்று, ஸ்டீவின் கடைசி மேட்சில் இந்தியா ஜெயித்தே தீர வேண்டும் என்று இறுதி வரை போராடினார் கங்கூலி. ஒரு சென்சுரியும் அடித்தார். கட்டிச் மட்டும் உள்ளே வராமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கு அது மிகச்சிறந்த வெற்றியாக இருந்திருக்கும். (ஸ்டீவின் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.) கங்கூலியின் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி அவரின் captaincy யில் நன்றாகத் தெரியும்.

ஒரு முறை ஒரு பேட்டியில் இவ்வாறு சொன்னார்:
பேட்டியாளர்: நீங்கள் மைதானத்தில் சக ப்ளேயர்ஸை நிறைய திட்டுகிறீர்களாமே? இவ்வாறு திட்டுவதால் அவர்களது கவனம் குறையாதா?
கங்கூலி: ஒரு பந்து வீச்சாளர் நன்றாக பந்து வீச வில்லையென்றால், அவரை அப்பொழுதே கூப்பிட்டு கண்டிக்க வேண்டும், அதை விட்டு விட்டு மேட்ச் முடிந்து நாம் தோற்ற பிறகு, அந்த பவுலரை அழைத்து : நீங்கள் நாற்பத்தியேழாவது ஓவரில் மூன்றாவது பந்தை நன்றாக வீச வில்லையென்று சொல்வதில் என்ன பிரையோஜனம்.

நான் மேட்ச் பார்ப்பதை விட்டு ரொம்ப காலமாகிறது. ஒரு இரண்டு வருடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்பொழுது இந்தியா பாக்கிஸ்தான் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் boss உடன் அமர்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் கங்கூலி சரிவர விளையாடுவதில்லை என்று திட்டிக்கொண்டிருந்தார். மேட்சின் நடுவில் ODI Highest Run Takers லிஸ்ட் காட்டப்பட்டது. அதில் கங்கூலி இரண்டாவது இடம். (அப்பொழுது!) இதைப் பார்த்த என் boss க்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கங்கூலியா, இரண்டாவது இடத்திலா? என்று ஏதோ குளறுபடியால் தான் தவறாக லிஸ்ட் காட்டிவிட்டதாக நினைத்துக்கொண்டு எங்களிடம் கேட்டார். என்ன சொல்வது? இப்படி கங்குலிக்கு நாம் உரிய மரியாதையைக் குடுக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். Atleast he deserved a good farewell. இல்லையா? கங்கூலி டீமை விட்டு வெளியேறும் வரை அவரது ODI ஆவரேஜ் 43.

ரொம்ப நாட்களுக்கு முன் Hero to Zero என்றொரு மெயில் எனக்கு வந்திருந்தது.

Name Mat I NO Runs HS Ave SR 100 50 Ct St Team
SR Tendulkar 359 350 33 14009 186* 44.19 85.93 39 71 107 – IND
Inzamam-ul-Haq 352 327 49 11157 137* 40.13 74.48 10 82 103 -PAK/ASIA-XI
ST Jayasuriya 351 342 15 10481 189 32.05 89.10 19 59 105 -SL/ASIA-XI
SC Ganguly 279 270 21 10123 183 40.65 73.79 22 60 96 -IND/ASIA-XI
M Azharuddin 334 308 54 9378 153* 36.92 73.99 7 58 156 -IND
BC Lara 259 252 26 9359 169 41.41 79.46 19 57 109 -WI/ICC-XI
PA de Silva 308 296 30 9284 145 34.90 81.13 11 64 95 -SL
R Dravid 276 255 34 8861 153 40.09 70.22 11 65 164 14 -IND/ASIA-XI/ICC-XI
Saeed Anwar 247 244 19 8823 194 39.21 80.66 20 43 42 – PAK
RT Ponting 244 238 28 8806 145 41.93 78.54 18 51 100 -AUS/ICC-XI
DL Haynes 238 237 28 8648 152* 41.37 63.09 17 57 59 -WI

ODI HIGHEST INDIVIDUAL SCORES:
194 Saeed Anwar Pakistan v India at Chennai, Independence Cup,1996/97 [1209]
189* IVA Richards West Indies v England at Manchester, Texaco Trophy,1984 [264]
189 ST Jayasuriya Sri Lanka v India at Sharjah, Champions Trophy,2000/01 [1652]
188* G Kirsten South Africa v United Arab Emirates at Rawalpindi,World Cup, 1995/96 [1049]
186* SR Tendulkar India v New Zealand at Hyderabad, 2nd ODI, 1999/00[1523]
183* MS Dhoni India v Sri Lanka at Jaipur, 3rd ODI, 2005/06 [2290]
183 SC Ganguly India v Sri Lanka at Taunton, World Cup, 1999 [1463]
181 IVA Richards West Indies v Sri Lanka at Karachi, World Cup,1987/88 [457]
175* N Kapil Dev India v Zimbabwe at Tunbridge Wells, World Cup,1983 [216]

ODIs – 1000 Runs in a Calendar Year:
Year M I NO Runs HS Av 100s
SR Tendulkar (Ind) 1998 34 33 4 1894 143 65.31 9
SC Ganguly (Ind) 1999 41 41 3 1767 183 46.50 4
R Dravid (Ind) 1999 43 43 5 1761 153 46.34 6
SR Tendulkar (Ind) 1996 32 32 2 1611 137 53.70 6
Saeed Anwar (Pak) 1996 36 36 5 1595 115 51.45 3
SC Ganguly (Ind) 2000 32 32 4 1579 144 56.39 7
ME Waugh (Aus) 1999 36 36 3 1468 106 44.48 2
G Kirsten (SA) 2000 36 36 3 1467 115 44.45 2
G Kirsten (SA) 1996 29 29 4 1442 188* 57.68 6
Mohammad Yousuf (Pak) 2002 32 30 5 1362 141* 54.48 5
BC Lara WI 1993 30 30 3 1349 153 49.96 4
SC Ganguly (Ind) 1997 38 35 3 1338 113 41.81 1
SC Ganguly (Ind) 1998 36 35 3 1328 124 41.50 4

ODIs – Most Sixes in Career:
Name Mat I NO Runs HS Ave 100 SR 6s 6s/I Team
Shahid Afridi 217 208 9 4782 109 24.03 4 108.38 214 1.02 PAK
ST Jayasuriya 351 342 15 10481 189 32.05 19 89.10 199 0.58 SL
SC Ganguly 279 270 21 10123 183 40.65 22 73.79 168 0.62 IND
CL Cairns 215 193 25 4950 115 29.46 4 84.26 153 0.79 NZ
SR Tendulkar 359 350 33 14009 186* 44.19 39 85.93 148 0.42 IND
Inzamam-ul-Haq 352 327 49 11157 137* 40.13 10 74.48 136 0.41 PAK
ODIs – 100s in Most Consecutive Innings
2 SC Ganguly India 141* v South Africa Nairobi (Gym)2000/01
117 v New Zealand Nairobi (Gym)

ODIs – Fastest to 4000 Career Runs
Team I NO Runs HS Av
IVA Richards West Indies 88 15 4000 189* 54.79 1975 to 1984/85
CG Greenidge West Indies 96 10 4000 133* 46.51 1975 to 1988
BC Lara West Indies 100 9 4000 169 43.95 1990/91 to 1995/96
DM Jones Australia 102 21 4000 121 49.38 1983/84 to 1990/91
SC Ganguly India 105 9 4000 183 41.66 1991/92 to 1999

ODIs – Fastest to 5000 Career Runs
Team I NO Runs HS Av
IVA Richards West Indies 114 20 5000 189* 53.19 1975 to 1986/87
BC Lara West Indies 118 13 5000 169 47.61 1990/91 to 1997/98
CG Greenidge West Indies 121 13 5000 133* 46.29 1975 to 1990/91
SC Ganguly India 126 11 5000 183 43.47 1991/92 to 1999/00

ODIs – Fastest to 6000 Career Runs
Team I NO Runs HS Av
IVA Richards West Indies 141 22 6000 189* 50.42 1975 to 1988/89
SC Ganguly India 147 14 6000 183 45.11 1991/92 to 2000/01
BC Lara West Indies 155 16 6000 169 43.16 1990/91 to 1999/00
DM Jones Australia 157 26 6000 145 45.80 1983/84 to 1993/94
G Kirsten South Africa 160 16 6000 188* 41.66 1993/94 to 2001/02

ODIs – Fastest to 7000 Career Runs
Team I NO Runs HS Av
SC Ganguly India 174 15 7000 183 44.02 1991/92 to 2001/02
BC Lara West Indies 183 18 7000 169 42.42 1990/91 to 2000/01
DL Haynes West Indies 187 24 7000 152* 42.94 1977/78 to 1991/92
JH Kallis South Africa 188 36 7000 139 46.05 1995/96 to 2004
SR Tendulkar India 189 18 7000 143 40.93 1989/90 to 1998

ODIs – Fastest to 8000 Career Runs:
Team I NO Runs HS Av
SC Ganguly India 200 16 8000 183 43.47 1991/92 to 2002/03
SR Tendulkar India 210 22 8000 143 42.55 1989/90 to 1999
BC Lara West Indies 211 22 8000 169 42.32 1990/91 to 2002/03
Saeed Anwar Pakistan 218 18 8000 194 40.00 1988/89 to 2000/01
DL Haynes West Indies 219 29 8000 152* 42.10 1977/78 to 1992/93

ODIs – Fastest to 9000 Career Runs
Team I NO Runs HS Av
SC Ganguly India 228 20 9000 183 43.26 1991/92 to 2003/04
SR Tendulkar India 235 23 9000 186* 42.45 1989/90 to 1999/00
BC Lara West Indies 239 27 9000 169 42.45 1990/91 to 2004/05
Inzamam-ul-Haq Pakistan 273 39 9000 137* 38.46 1991/92 to 2003

ODIs – Fastest to 10000 Career Runs
Team I NO Runs HS Av
SR Tendulkar India 259 23 10000 186* 42.37 1989/90 to 2000/01
SC Ganguly India 263 21 10000 183 41.32 1991/92 to 2005
Inzamam-ul-Haq Pakistan 299 43 10000 137* 39.06 1991/92 to 2004
ST Jayasuriya Sri Lanka 328 16 10000 189 32.05 1989/90 to 2005

என்ன ரெக்கார்ட் பாருங்கள். இந்தியாவில் சச்சினுக்கு அடுத்தபடியான இடம் கங்கூலிக்கு கிடைத்திருக்க வேண்டியது! He desrve (atleast deserved) that. இருவரும் மாற்றி மாற்று செஞ்சுரி அடித்த காலங்கள் உண்டு. கங்குலி 11 செஞ்சுரியிலிருந்து 21 வந்தார். சச்சின் 21 செஞ்சுரியிலிருந்து 31 வந்தார். கங்கூலி போலாக்கின் மூன்றாவது ஓவரில் straight six அடித்த காலங்களும் உண்டு. ஐந்து ஆன் சைட் பீலடர்களுக்கு மத்தியில் – அதுவும் ஜான்டி ரோட்ஸ் இருக்கும் போது, யாரும் சிறிதளவு கூட இடத்தை விட்டு நகராமல் இருக்க – பளார் என்று இரண்டு four அடித்த காலமும் உண்டு. உலகக்கோப்பையில் செமி பைனலில் கென்யாவுடன் அவர் அடித்த செஞ்சுரியும் மறக்க முடியாது. இப்படி நிறைய சொல்லலாம்.

நடந்தது நடந்து போச்சு. கதம் கதம். இப்பொழுது மறுபடியும் டீமிற்குள் வந்திருக்கிறார். பெங்கால் டைகர் வந்தால் மட்டும் போதாது, கர்ஜிக்க வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

ஆனால் ஒன்று மட்டும் இப்பொழுது புரிகிறது. Legends are always legends. கொட்டமாவது? அடக்குவதாவது? ஆஸ்திரேலியாவைப் பாருங்கள். ஜெயிப்பது அவர்களுக்கு பழக்கமாகி பிறகு இப்பொழுது வழக்கமாகி விட்டது. And then, kids are always kids.

 

இன்சிடென்ட்ஸ் – 2

 

கனவுகள் சில சமயங்களில் பயங்கர ரியாலிஸ்டிக்காக இருப்பதை நினைத்து நான் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உதாரணமாக நான் +2 முடித்து, இன்ஜினியரிங் காலேஜ் முடித்து, இந்தியாவில் 2 வருடம் மாவரைத்து இட்லி சுட்டு, மலேசியாவில் இரண்டு வருடம் அதே மாவை அரைத்து தோசை சுட்டு, பிறகு சிங்கப்பூரில் அதே மாவை அரைத்து வடைசுட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பரிட்சையில் பெயிலாகி விட்டு, ஐயோ என்னடா இது பெயிலாகிவிட்டோமே இப்ப என்ன செய்றது என்று மிக தீவிரமாக வருத்தப்பட்டு கொண்டிருப்பது போன்று கனவுகள் வரும். சில சமயம் அது மிகவும் தத்ரூபமாக இருக்கும். அழுகை அழுகையாக வரும். கனவிலிருந்து விழித்த பிறகு, அப்பாடா நாம் பெயிலெல்லாம் ஆக வில்லை, நாளை சாப்பாட்டிற்கு ஒரு வேலை இருக்கிறது என்று உணரும் போது ஒரு நிம்மதி;சந்தோஷம் வரும் பாருங்கள், அடா..அடா. 12B போன்று, நடக்காத ஒன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்து கொள்வதற்கு கனவுகள் மிகவும் உதவியாக இருக்கின்றன, இல்லையா?

இன்னொரு மிகுந்த ஆச்சரியமான விசயம் கனவில் கிடைக்கும். நாம் ஒரு விசயத்தை பல நாட்கள் மறந்தே போயிருப்போம். ஏன் பல மாதங்கள் கூட ஆகியிருக்கலாம். ஆனால் அந்த விசயம் (உங்கள் பள்ளித் தோழியாகவோ, தோழனாகவோ கூட இருக்கலாம்!) ஒரு நாள் ஒரு மின்னலைப் போல திடீரென்று கனவில் தோன்றும். நாம் கனவிலிருந்து விழித்து பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்போம். இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நீண்ட நாட்கள் மறந்திருந்த விசயத்தை ஏன் மூளை புதுப்பிக்க நினைக்கிறது? நம் நினைவில் இல்லாத பல விசயங்களை மனம் அசை போட்டுக்கொண்டேயிருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது.

தூக்கம் மிக மிக புதிரானது. அது நம்மை சில மணி நேரங்கள் இந்த உலகத்தை விட்டே பிரித்து விடுகிறது. எழுந்தால் தான் நிச்சயம். பேசிக்கொண்டிருக்கும் போதே குறட்டை விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். எந்த இடத்தில் எப்பொழுது படுத்தாலும் தூங்கிவிடும் நபர்களும் இருக்கிறார்கள். சில நாட்கள் சும்மா ஒன்றும் விரிக்காமல் தலைக்கு கையை வைத்துக்கொண்டு தூங்கிவிடுகிறோம். சில நாட்கள் மெத்தை, ஏசி, கஜல் பாடல் என்று படுத்தாலும் இன்சோமேனியாக்காக இருக்கிறோம். பக்கத்தில் குறட்டை விடும் நண்பனையே பொறாமையாக பார்க்கிறோம்.

நான் மலேசியாவில் இருக்கும் பொழுது ஒரு நீண்ட நாள் முடிந்து மிகுந்த அலுப்புடன் வந்து படுத்து விட்டேன். பக்கத்து அறையில் ஒரு நண்பரும் அவர் மனைவியும் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென்று செல் போன் ஒலிக்கவே திட்டிக்கொண்டே எடுத்தேன். என் மேனேஜர் தான் கால் பண்ணியிருந்தார் (திட்டினது சரிதான் என்று நினைக்கிறீர்களா?). எடுத்த எடுப்பிலே அவர் என்ன முத்து எதுவும் ஆகலையே நல்லாயிருக்கேல்ல என்றார். எனக்கு கோபம் தலைக்கேறியது. யோவ். நட்ட நடு ராத்திரியில கால் பண்ணி இது என்னையா கேள்வி என்றேன் கோபமாக. அவர் அடடே உனக்கு விசயமே தெரியாதா, KL முழுதும் நில நடுக்கம், அது தான் கேட்டேன் என்றார். ஒன்றும் இல்லை நாம் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றேன். ஜாக்கிறதை. கவனமாக இரு என்றார். எனக்கு அதுக்கப்புறம் தூக்கம் கலைந்து விட்டது. எழுந்து டீவியை ஆன் செய்து பி.பி.சி யைப் பார்த்தேன். உண்மைதான். ப்ளாஷ் நியூஸில் கே.எல் லில் நிலநடுக்கம் என்று ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு சந்தேகம் வரவே, எழுந்து சட்டை அனிந்து கொண்டு லிப்ட் எடுத்து கீழே சென்ற பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன். கீழே, ரோட்டில் எங்கள் கோண்டோமினியத்தில் இருக்கும் என்பது ப்ரஸண்ட் மக்கள் சலசல என்று பேசிக்கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து சில நிமிடங்களில் அமெரிக்காவிலிருக்கும் என் அண்ணனிடமிருந்து கால். அப்புறம் அறையில் ஒன்றுமே தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்த அப்பாவி நண்பரை எழுப்பி விசயத்தை சொன்னேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். பேந்த பேந்த விழித்துக்கொண்டு இரண்டும் வந்ததுகள். உண்மையிலே பூகம்பம் வந்ததென்று வைத்துக்கொள்ளுங்கள், யார் எழுப்பி சொல்வார்கள்? அங்கே செல் போன் வேலை செய்யுமா?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான், பக்கத்தில் பிபாசாவே ஆடிக்கொண்டிருந்தாலும் கவலையே பட மாட்டான். வந்து படுத்தவுடன் தூங்கிவிடுவான். விளக்கு எரிந்தாலும், பாடல் சத்தமாக ஒலித்தாலும் (நான் வேண்டுமென்றே லேப்டாப்பில் பாடலை சத்தமாக ஒலிக்க செய்வேன்) கவலையே படமாட்டான். நன்றாக இழுத்துப்போர்த்திக்கொண்டு, சம்மனங்கால் போட்டுக்கொண்டு (?! எப்படி இவனால் முடிகிறது என்று நான் நிறைய நாட்கள் யோசித்ததுண்டு!) தூங்குவான். அதனால் அவன் சம்மன சாமியார் என்றும் அழைக்கப்படுகிறான். ஆனால் ஒன்றே ஒன்று. அவன் தூங்கிய பிறகு அவனை மிக மிக மெதுவாக அழைத்து தான் எழுப்ப வேண்டும். இல்லையேல் தடால் புடால் என்று அடித்து பிடித்து எழுந்து நம்மையே பயமுறுத்துவான். பிறகு உங்களுக்கு சாபம் தான்.

முதல்நாள் திருச்சி, மறுநாள் கோவில்பட்டி அடுத்த நாள் போடி என்று பிரயாணம் செய்து விட்டு எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருக்கும் ரூமில் கதவைப் பூட்டிக்கொண்டு படுத்துவிட்டேன். வெளியே மொட்டை மாடியில் என் குடும்பத்தினர் படுத்திருக்கின்றனர். தூங்கிய நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை கதவை தட தடவென்று அடித்து கதவைத்திறங்கள் கதவைத்திறங்கள் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் வெளியிலிருந்த என் அண்ணன் மிகவும் சத்தமாக டேய் நீ தான் தாழ் போட்டிருக்க நீதான் திறக்கனும் என்று சொன்னவுடன் தான் நான் நினைவு திரும்பி, அட ஆமால்ல (வடிவேலு போல சொல்லவும்), என்று நினைத்து கதவைத்திறந்து கொண்டு “பேக்கு” மாதிரி விழித்துக்கொண்டு வெளியே வந்தேன். என் நான்கு வயது அக்கா மகள் மாமா சாமிய கும்பிட்டு திருநீர் பூசிட்டு தண்ணீ குடிச்சிட்டு தூங்குங்கள் என்றது தான் மிக மிக கேவலம். நீண்ட நேரம் என் அண்ணன் ஏன்டா அப்படி கத்தின ஏன்டா அப்படி கத்துன என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். நான் பதிலே சொல்லவில்லை. தெரிந்தால் தானே சொல்வதற்கு! பக்கத்து வீட்டாருக்கெல்லாம் கேட்டிருக்கிறது. மறுநாள் மானம் போய்விட்டது.

(தொடரும்)

இன்சிடென்ட்ஸ் (1)

குறட்டை கோவிந்தன்

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு ஒரு நாளும் கனவில் திரிஷாவோ, சினேகாவோ அல்லது அட்லீஸ்ட் சரோஜாதேவியோ கூட வந்ததில்லை. ஏன் என்றும் சில நாள் நான் மிக சீரியஸாக யோசித்திருக்கிறேன். அதற்காக எனக்கு கனவே வராது என்பதும் உண்மையல்ல. நான் நிறைய கனவு காண்கிறவன். ஆனால் என் கனவுகள் எல்லாமே என்னை பயமுறுத்துபவை. திரில்லர் படங்கள் தோற்கும் போங்கள். சில நாட்கள் நான் யாரையாவது குத்தி கொலை செய்து விட்டு ஓடிக்கொண்டிருப்பேன். போலீஸ் என்னை துரத்திக்கொண்டிருக்கும். சில நாட்கள் ஏதேனும் மிருகங்கள் என்னைத் துரத்திக்கொண்டிருக்கும். சிங்கம், புலி முக்கியமாக நாய். நான் ஏன் நாயைக் கண்டால் பயப்படுகிறேன் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த நாயைக் கண்டு பயப்படும் கும்பலில் நான் மட்டும் தனியாக இல்லை என்பது என் நண்பன் நாங்கள் எப்பொழுதும் பயன் படுத்தும் பாதையை விட்டு வேறு பாதையை திடீரென்று உபயோகப்படுத்தியபோது தெரிந்து கொண்டேன். ஏன் என்று கேட்டதற்கு வழியிலிருக்கும் ஒரு வீட்டில் புதிதாக நாயொன்று வாங்கியிருக்கிறார்கள் என்றான். இத்தனைக்கும் அந்த நாயை கேட் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது என்று போனஸாக அறிவுரை வழங்கினான். சரிதான்.

முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் வரும். தெருவில் நடந்தால் வீட்டிற்குப்போகும் வரையில் ஒரு பாட்டு கூட மிஸ் ஆகாது. அனைத்து வீடுகளிலும் ஒலியும் ஒளியும் ஓடிக்கொண்டிருக்கும், கதவு வேறு திறந்திருக்கும், டீவி கரெக்டாக வாசலுக்கு நேரே இருக்கும். நாம் டீவி பார்த்துக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் ஜாலியாக நடக்கலாம். ஆனால் இதில் ஒரு டிஸ்அட்வாண்டேஜ் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? இப்படி நாம் பெராக்கு பார்த்துக் கொண்டே நடக்கும் போது வழியில் ஹாயாகப் படுத்துக்கிடக்கும் நாயை நறுக்கென்று மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. நாயும் கோபத்தில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் புது பேண்டையும், கொஞ்சம் சதையையும் லபக்கென்று கடித்துவிட வாய்ப்பிருகிறது. அப்படித்தான் நடந்தது அன்று. நாயைச் சொல்லி குற்றமில்லை புது பேண்ட் என்று நாய்க்கு எப்படித்தெரியும். அப்பொழுது தான் ஏன் இப்படி கதவைத்திறந்து போட்டுக்கொண்டு டீவி பார்க்கிறார்கள் என்று எரிச்சல் எரிச்சலாய் வரும். அதனால் தானே நாம் பெராக்கு பார்த்துக்கொண்டு நாயை மிதிக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. மதுரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சென்று தொப்புளை சுத்தி 6 ஊசி தான் போட்டுக்கொண்டேன். விடாக்கண்டன் டாக்டர் நான் ஊசி போட யோசித்தபோது பக்கத்து அறையைக்காட்டி – அந்த அறை பூட்டப்பட்டிருந்தது, கம்பி ஜன்னல் வைக்கப்பட்டிருந்தது – இந்த அறையில் தான் நாய் கடித்து ஊசி போடாமல் நாய் மாதிரியே ஆகிவிட்ட மனிதன் குரைத்துக் கொண்டு இருக்கிறான் என்றார். சத்தமில்லாமல் ஊசி போட்டுக்கொண்டேன். அந்த அறையைக்கடந்து வந்த போது திரும்பிப் பார்க்ககூட மனசு வரவில்லை.

அன்றைய இரவிலும் இப்படித்தான் நாயொன்று என்னை விடாமல் துரத்திக்கொண்டே வந்தது, கனவில் தான். பயங்கர உறுமல் சத்தம் வேறு. கர் புர் என்று. சன் டீவியில் முன்பு மர்மதேசம் தொடர் வந்த போது டைட்டிலில் ஒரு நாய் குரைக்குமே நினைவிருக்கிறதா? நாய் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. நல்ல கருப்பாக. திடகாத்திரமாக. கடித்தால் அரைக்கிலோவோ ஒருகிலோவோ நிச்சயம் லாஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. அடுத்த ஒரு சில மாதங்களுக்கு பிட்னஸ் கிளப் போகத்தேவையில்லை. ஒரு வழியாக தப்பித்து நினைவு லோகத்திற்கு வந்தேன். பக்கத்திலிருந்த பாட்டிலில் தண்ணீர் குடித்துக்கொண்டேன். அப்பொழுதும் கர் புர் என்ற சத்தம் கேட்டது. கனவிலே எழுந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கோமா? அவ்வளவு ரியாலிஸ்டிக்கான கனவா? எந்த மடையனாவது நாய் துரத்திக்கொண்டிருக்கும் போது, சாவகாசமாக தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பானா? கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். நினைவுதான். அப்புறம் கர் புர் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறதாம்? அப்பொழுதுதான் என் நண்பன் என் பக்கத்திலே உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

யாராக இருந்தாலும் “நீங்கள் குறட்டை விடுகிறீர்கள்” என்று சொன்னால் உடனே கோபம் தான் படுகிறார்கள். என் நண்பன் மட்டும் விதி விலக்கா என்ன? நான் ஒன்றும் குறட்டை விட மாட்டேனாக்கும் என்று மார்தட்டினான். ஆனால் நான் அவனைப்போல டுபாகூர் 1943 ஆம் வருசத்து செல்போன் வைத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டான். அங்கே தான் சிறு தவறு நடந்து விட்டது. என்னிடம் பிடிஏ இருக்கிறது. நைசாக அவன் தூங்கும் போது அவனுடைய மூக்கிற்கு மிக அருகில் – எனக்கு சந்தேகம் வேறு வந்துவிட்டது. சத்தம் மூக்கிலிருந்து வருகிறதா அல்லது வாயிலிருந்து வருகிறதா என்று. இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை – பிடிஏவை வைத்து சத்தத்தை ரெக்கார்ட் செய்து விட்டேன். “மாட்னடா நீயி” – பழம்பெரும் நடிகர் அசோகன் போல சொல்லவேண்டும் – என்று சொல்லிக்கொண்டேன். என்னுடைய இயர் போனில் அதை ரீப்ளே செய்து பார்த்ததில் டால்பி டிஜிட்டலும், டி ஹச் எக்ஸ¤ம் தொற்றது போங்கள். அவ்வளவு துள்ளியம். கேட்பவர்கள் டைனோசர் வருகிறதோ என்று கூட நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ஆதாரம் காட்டிய போது என்ன செய்ய முடியும். என்னடா பன்றது எனக்கு குறட்டை வருகிறதே, நான் என்ன செய்ய என்று பாவமாய் மூஞ்சியை வைத்துக்கொண்டான். இலவசமாக டிப்ஸ் சில சொன்னான். அதாவது அவன் தூங்கும் போது அவனுடைய பெட்டைப்பிடித்து இழுக்க வேண்டும். அப்படிச்செய்தால் குறட்டை நின்று விட வாய்ப்பிருக்கிறது என்றான்.

அன்றைய இரவு அந்த டெக்னிக்கை கையாண்டேன். பலன் இருந்தது. ஆனால் ஜஸ்ட் ஒன் மினிட் தான். மறுபடியும் உறுமல். நான் என்ன இரவு முழுதும் பெட்டை ஆட்டிக்கொண்டேவா இருக்க முடியும். ஒரே சீராக குறட்டை வரும் பட்சத்தில் பழக்கமாகிவிடும். ஆனால் வேறு வேறு பிட்ச்களில் விதம் விதமாக குறட்டை விட்டால் என்னதான் செய்யமுடியும்? சில சமயம் பூனை கத்துவதைப்போன்று சத்தம் வரும். சில சமயம் யானை பிளிறுவதைப் போல. ஐயோ யானைக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டோமே இப்ப எப்படித் தப்பிப்பது? என்று சீரியசாக நான் கனவில் திங்க் செய்திருக்கிறேன்.

ஒரு நாள் சத்தம் தாங்காமல் பெட்டை வேகமாக் நான் ஆட்டிவிட, முழித்துக்கொண்ட என் நண்பன் கோபம் வந்த விசுவாமித்திரனாக மாறி “உனக்கு என்னய விட பல மடங்கு சத்தமா குறட்டை விடுற பொண்டாட்டி தான்டா கிடைப்பா” என்று சாபம் வேறு கொடுத்தான். மறுநாள் அவன் நாக்கை தரோவாக செக் செய்து விட்டேன், கரி நாக்கு ஒன்றும் இல்லையாம். இருந்தாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

நான் இந்தியாவில் வேலை செய்த பொழுது என்னுடன் வேலை செய்த நண்பர் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்தது. நைட் வேலை செய்யவேண்டும் என்றால் தொலைந்தோம். கிடைக்கும் சில மணி நேரத்தை தூங்கலாம் என்று நினைத்தால், குறட்டை சுத்தமாக கெடுத்துவிடும். அவருக்கு டெக்னிக் வேறு. அவரைத் தொட்டால் குறட்டை நின்று விடும். ஆனால் சில நிமிடத்தில் மீண்டும் தொடரும். நீங்கள் கையை அவர் மேலேயே வைத்துக்கொள்ளலாமே என்று ஸ்மார்டாக சிந்தித்தால் அதெல்லாம் வேலைக்காகாது. தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நாம் எப்படித் தூங்குவது? கவலைப்படாதீர்கள் தட்டிக்கொடுத்துக்கொண்டே தூங்குவதற்கு பழகிக்கொண்டு விடலாம். சித்திரமே கைப்பழக்கம்.

அவர் சாப்பிட்டு விட்டு ஆபீஸ் வந்ததும் சில நேரங்களில் தூங்க ஆரம்பித்து விடுவார். நாம் தூங்கும் போது நமது மூளை விழித்தேயிருக்கிறது என்பதில் யாருக்கேனும் சிறு ஐய்யப்பாடு இருக்குமேயானால் நீங்கள் அவரைத் தான் முதலில் பார்க்க வேண்டும். ஹாயாக கம்ப்யூட்டரின் முன் சேரில் அமர்ந்து கொண்டு தலையை சேரில் சாய்த்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து கண்களை மூடித் தூங்கிக்கொண்டிருப்பார். பக்கத்தில் சென்று நின்றோமேயானால் உடனே மௌசைப்பிடித்திருக்கும் கை மட்டும் வேக வேகமாக அசையும். வேலை செய்கிறாராம்.

மதியம் ஆபிசில் தூங்குவதைக்கூட பொருத்துக்கொள்ளலாம். ஆனால் தூங்கி குறட்டை விடுவது டூ மச் இல்லையா? அதையும் அவர் செய்தார். அதுவும் எங்கள் பாஸ் உடன் இருக்கும் போது. என்ன தெனாவெட்டு? இப்பொழுது கெச்.சி.எல் லில் ஹாயாக குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறார். ஹெச்.சி.எல் கவர்மெண்ட் ஆபீஸ் போன்றது என்று என் நண்பர்கள் சொன்னபோது நான் நம்பவில்லை.