தலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி

நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரராக இருந்தால் Our Planetஐ கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். அதில் ப்ளூ ஆல்கான் என்கிற பட்டாம்பூச்சியைப் பற்றிய ஒரு எபிசோட் வருகிறது. இதை எப்படி படம் பிடித்தார்கள் என்பதும் இணையத்தில் இருக்கிறது. அது நான் இங்கே சொல்லப்போகும் கதையைவிட சுவராஸ்யமானது. இணையத்தில் தேடிப்பாருங்கள்.

சரி பட்டாம்பூச்சிக்கு வருவோம். 

இந்த பட்டாம்பூச்சி வசீகரமானது. அழகானது. அளவில் பெரியதும் கூட. ஆனால் பயங்கர தந்திரமானது. நயவஞ்சகமானது. 

முட்டை போட்டுவிட்டால் மட்டும் போதுமா. மூட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவை (கம்பளிபூச்சியை) யார் பார்த்துக்கொள்வது? நேரத்திற்கு யார் உணவளித்து, சொந்தப்பிள்ளை போலப் பார்த்துக்கொள்வார்கள். பறவைகள் தங்கள் லார்வாவை கொத்தித் திண்ணாமல் எப்படி மறைத்துவைப்பது? ம்ம்.. இது என்னடா பட்டர்ஃப்ளைக்கு வந்த சோதனை, என்று நினைத்தது அந்த ப்ளூ பட்டர்ஃப்ளை. 

அந்த நீல வண்ண பட்டாம்பூச்சி, தான் தலையிலிருந்தல்லாவா வந்தோம், காலிலிருந்து வந்தவர்கள் தனக்கு சேவை செய்யவேண்டுமே என்கிற நம்பவே முடியாத அரிய வகை வேதத்தை எப்படியோ துப்புதுலக்கி தெரிந்துகொண்டுவிட்டது. பிறகு ஒரு திட்டம் தீட்டியது. கம்பளிப்பூச்சிக்கு வேலாவேலைக்கு உணவளித்து ராஜாவை விட (கவனிக்க, ராஜா போல அல்ல, ராஜாவைவிட) மேலாக கவனிக்க வைக்க வேண்டும். உணவு வேண்டும், பிச்சையாக அல்ல, அதிகாரமாக. பறவைகளிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும். உணவு. மரியாதை. பாதுகாப்பு. அப்பொழுது அந்த வழியாக தினமும் உழைக்கச் செல்லும் உழைக்கும் வர்க்கமான சிகப்பு எறும்புகள் அதன் கண்களில் பட்டது. கவனிக்க: சாதாரண எறும்பில்லை, சிகப்பு எறும்பு. 

எறும்புகள் உழைப்பதிலே கவனமாக இருப்பதால் அதற்கு அரசியலைத் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. அழகா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உண்மையை முழுசாக ஏற்றுக்கொண்டவர்கள் அந்த உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்தவர்கள். எதையாவது சும்மா சொன்னால் போதும், ஆதாரம் என்ன, இவன் எதற்கு இதைச் சொல்கிறான், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன, இவனுக்கு இதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று சிந்திக்காது. சட்டென்று நம்பிவிடும். ஏனெனில் பயம் ஜாஸ்தி. நாளைக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயத்திலே வாழ்வதால் ஆழ்ந்து சிந்திக்கும் திரனை முழுவதுமாக இழந்துவிட்ட அந்த உழைக்கும் வர்க்கத்தை எளிதாக ஏமாற்றிவிடலாம். திட்டம் ரெடி. 

அப்படி முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவான கம்பளிப்பூச்சி செடிகளின் இலைகளைத் தின்று கொழுத்தவுடன், இலைகளிலிருந்து பட்டு நூலின் வழியாக தேவதூதனைப் போல கீழே இறங்கும். சிகப்பு எறும்புகள் சாரை சாரையாக உழைக்கச்செல்லும் வழியில் தந்திரமாகப் படுத்துக்கொள்ளும். பிறகு தன் உடம்பிலிருந்து ஒரு வகையான இரசாயனத்தை வெளிப்படுத்தும். அந்த ரசாயனத்தின் மணம் சிகப்பு எறும்புகளின் குட்டிகளிடமிருந்து (லார்வா) வரும் மணத்தைப் போன்றே இருக்கும். எறும்பும் ஏமாந்து இதுவும் தன் குட்டிதான் என்று நினைத்து பட்டுப்பூச்சியின் லார்வாவைத் தனது எறும்பு புற்றுக்குள் பத்திரமாகத் தூக்கிச் சென்று விடும். 

இப்பொழுது பட்டுப்பூச்சியின் லார்வாவும், எறும்புகளின் லார்வாவும் ஒன்றாக எறும்புகளின் ப்ரூட் சாம்பர் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும். ப்ரூட் சாம்பர் என்பது எறும்புகள் தங்கள் லார்வாக்களுக்கு உணவளித்து வளர்த்து ஆளாக்கும் இடம். எறும்புகள் தங்களது லார்வாக்களுக்கும், பட்டுப்பூச்சியின் லார்வாக்களுக்கும் ஒரே மாதிரியாக உணவளித்து சூப்பரா பராமரிக்கும். ஆனால் இது பட்டுப்பூச்சிக்குப் போதவில்லை. போதாதல்லவா? நாம தலையிலிருந்தல்லவா வந்தோம்? நமக்கு சாமியைபோலல்லவா சிறப்பு அங்கீகாரமும் முதல் மரியாதையும் கிடைக்கவேண்டும்.!!எறும்புகளின் “ராணி எறும்பு” போல கம்பளிப்பூச்சி இப்பொழுது ஒலி எழுப்ப அரம்பிக்கும். அவ்வளவுதான் எறும்புகள் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு உணவளித்துப் பராமரிக்கும். எந்தளவிற்கென்றால் – தன் குட்டிகளுக்கு உணவில்லையென்றால் கூட எறும்புகள் பட்டுப்பூச்சியின் குட்டிகளுக்குத்தான் முதலில் உணவளிக்கும். இப்படி எறும்புகளின் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து கொண்டு எறும்புகளுக்கு பயம் ஏற்படுத்தி, நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக தின்று கொழுக்கும் அந்த நயவஞ்சக கம்பளிப்பூச்சி. 

இப்படி உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கித் தின்று கொழுத்த கம்பளிப்பூச்சி ஒரு நாள் அழகான பெரிய நீல நிற பட்டாம்பூச்சியாக உருமாறி எறும்புகளின் ராஜ்ஜியத்தை விட்டுப் பறந்து செல்லும். பிடிங்கித்தின்றால் ருசியாகத்தானே இருக்கும். பிடிங்கித் திண்பவன் கொழுத்துத்தானே கிடப்பான். பட்டாம்பூச்சி பறந்து சென்று விட, அது பறந்து செல்வதற்கு நாம் தான் காரணம் என்பதை அறியாத அடிமுட்டாள் எறும்புக்கூட்டம் வழக்கம் போல அடுத்த பட்டாம்பூச்சிக்கு உணவளிக்க உழைக்க ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ப்ளூ ஆல்கன் பட்டாம்பூச்சி முற்றிலுமாக இந்த எறும்புகளை நம்பியே இருக்கிறது. எறும்புகள் இல்லையென்றால் அதன் இனமே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இது அந்த எறும்புகளுக்கு ஒரு போவதும் தெரியப்போவது இல்லை. தெரிந்து கொள்ளவும் அவை விரும்பாததுதான் விந்தையிலும் விந்தை. 


பிகு: இந்த எபிசோட் யூடியூபில் கூட இருக்கிறது. https://www.youtube.com/watch?v=XmtXC_n6X6Q

பிபிகு: Our Planet முழுக்கவே சுவராஸ்யமாக இருக்கும். டேவிட் அட்டன்பரோ லயித்து நரெட் செய்யும் குரலுக்காகவே பார்க்கலாம். யானைகள் நீருக்காக தேடி அலைவதும், ஆழ்கடலின் உயிரினங்களும் ஆச்சரியமூட்டும் எபிசோட்கள்.

பிபிபிகு: சமூகநீதிக் காவலர் கட்டுமரத்தின் 96வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று வருகிறது.

பிபிபிபிகு: அவரை கட்டுமரம் என்றழைப்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. அவருக்கு இதனால் எந்த இகழ்ச்சியும் இல்லை. என்றென்றும் அவர் எங்கள் கட்டுமரம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s