சிற்பிகளும் சிலைகளும்

நேற்று இரவு சன் டீவியில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பைரேட்ஸ் ஆப் த கரீபியன் பார்க்கப் போய் இந்த நிகழ்ச்சியை முதலில் இருந்து பார்க்க குடுத்துவைக்கவில்லை எனக்கு. பல நடிகர்களின் பொன்னான பேச்சுகளைக் கேட்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் தான். எத்தனை நடிகர்கள், அப்பப்பா. அனைவரையும் ஒரு சேரப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது. மேலும், வலைபதிவுகளில் பலர் சிவாஜி சிலையைப் பற்றி விவாதித்தும் வந்திருக்கின்றனர். வைக்கவேண்டும். வைக்கக்கூடாது. வைத்தால் பராவாயில்லை. வைத்து விட்டுத்தான் போகட்டுமே, நமது ஹாலிலா வைக்கிறார்கள். என்பதைப் போன்று பல விவாதங்கள். நம்மிடம் விவாதங்களுக்கு பஞ்சமா என்ன? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மனம் இருக்கிறதா இல்லையா என்று அரசனே விவாதத்தை தொடங்கிய நாடல்லவா இது. அதற்கு ஒரு நீதி வழங்க அல்லது ஒரு முடிவு ஏற்படுத்த உலககைக் காக்கும் கடவுளே இறங்கி வந்த விவாதம் அல்லவா இது. சும்மா சொல்லக்கூடாது. சிவாஜி கணேஷன் சார் நன்றாக நடித்திருப்பார். அல்லது சிம்மக்குரலில் கர்ஜித்திருப்பார். படமாகப் பார்க்காமலே சும்மா கதை வசனம் மட்டும் கேட்டாலே போதும் படம் கண்ணில் விரியும். அப்படி யார் நடித்தார்கள். நடிக்கிறார்கள். அல்லது நடிப்பார்கள். ஏன்னா கலையை ரசிப்பதற்கும் ஒரு மனது வேனும் பாருங்க. அது தமிழனுக்கு அதிகம் இருக்குதுங்கிறேன்.

சும்மாவா. எத்தனை நடிகர்களை முதல்வர் ஆக்கியிருக்கிறோம். ஆனா உண்மையிலே நமக்கு ரசிப்புத்தன்மை அதிகமுங்க. ரசிப்புத்தன்மைனுதானுங்க சொன்னேன். சகிப்புத்தன்மைன்னும் சொல்லலீங்க. எனக்கு சிவாஜி சாரை நிறைய புடிக்குமுங்க. அவரோட கடைசி காலத்து, ‘ஜாதீய முற்போக்கு’ படங்களை தவிர்த்துட்டா, பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள் தானுங்க. உத்தமபுத்திரன், மனோகரா, பராசக்தி, அந்த நாள், பாசமலர், பாவமன்னிப்பு, தெய்வமகன், புதியபறவை, முதல்மரியாதை, வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படீன்னு அடிக்கிகிட்டே போகலாம். உத்தமபுத்திரனின் இளவரசர் (இப்போ புலிகேசி, புலிகேசி!) போல இதுவரைக்கும் யாரும் ஸ்டைல் பண்ணதில்லை என்பது உண்மை. அதுவும், புதிய பறவையில ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலில் அப்படியே ஸ்டைலாக புகை விடுவாரே பார்க்கலாம். அமர்களமுங்க. நல்லவேளை ‘தமிழ் குடிதாங்கி’ அப்ப இல்லீங்க.ஆனா அப்பவெல்லாம் சுற்றுச் சூழல் இந்த அளவுக்கு மாசு படவில்லை பாருங்க. அதுவும், அப்ப இருந்த இளைஞர்கள் ரொம்ப நல்லவங்க பாருங்க. இப்பத்தான் நாம கெட்டு குட்டியசுவரா போயிட்டம். சினிமா பாத்து பாத்து கெட்டுப் போயிட்டம். அப்புறம் பாசமலரில் பல கெட்டப்புங்க. ஏழை வெகுளியாக, பின்னர் ஸ்டைலான பணக்காரனாக. என்ன வித்தியாசம் காட்டினார். அட அடா. நம்ப ரஜினி அங்க புடிச்சாருங்க. அப்புறம் அண்ணாமலை, படையப்பா சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க. நல்லவனுக்கு நல்லவனையும் சேத்துக்கோங்க. அட அது அப்பங்க. இப்ப தலைவரு, எல்லாருக்கும் நல்லவருங்க. ரொம்ம்ப நல்லவருங்க. வேற வழி?. எப்படி இருந்த அவரு இப்படி ஆகிட்டாரு.ஹ¤ம்.அப்புறம், தெய்வமகனுங்க. ‘டாட்’ ‘டாடி’ ன்னு ஒரு நிமிஷம் கூட நிக்காம, ஸ்டைலா, நகம் கடிச்சுக்கிட்டு ஒரு மேல்தட்டு பையனா நடிச்சிருப்பாரு பாருங்க. தூள் டக்கருங்க. அந்த படத்திலே, வயதான தந்தையாகவும், இளவயது முகத்தில் கறை படிந்த, இன்பீரியார்டி காம்ப்ளக்ஸ் இருக்கிற ஆளா நடிச்சிருபாருங்க. யாருங்க இப்ப அப்படிப் பண்ணுவா? மனசைத் தொட்டு சொல்லுங்க. வீரபாண்டிய கட்டபொம்மனுங்க. நம்ப யாராச்சும் வீர பாண்டிய கட்டபொம்மன பார்த்திருக்கோங்களா? ஆனா, பாடபுத்தகத்தில கூட சிவாஜிசாரு தானுங்க வீர பாண்டிய கட்டபொம்மனா, சும்மா அப்படியே, ஜோரா, கெத்தா, கம்பீரமா இருக்காரு பாருங்க. கட்டபொம்மன் இப்படித்தான் இருந்திருப்பாரோ? நமக்கு தெரியாததும் வசதிதானுங்க. என்ன சொல்றீங்க? இல்லீனா, யாராச்சும், கட்டபொம்மனுக்கு மீசை 7 செ.மீ தான், ஆனால் படத்தில் சிவாஜி 12 செ.மீ மீசை வெச்சிருக்காருன்னு கேஸ் போட்டாலும் போட்றுவாங்க. கேஸ¤க்கா பஞ்சம்? குஷ்பு மேல 27 கேஸ் போட்டம்ல. போட்டம்ல. என்ன நான் சொல்றது?

அட. அவரு தொழில அவரு நல்ல செஞ்சாரா இல்லியா? அதச் சொல்லுங்க. நாளைக்கு, நல்ல பல் குத்துன பல் டாக்டருக்கும், நல்ல இருதய ஆப்பரேசன் செஞ்ச ‘பைபாஸ்’ டாக்டருக்கும், நல்ல ஸ்பெஷல் டீயூசன் வெச்சு, சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கும், வாத்தியாரம்மாவுக்கும், நல்லா விழாம கட்டடம் கட்டின இஞ்சினீயருக்கும், நல்ல குப்பை அள்ளுன துப்புறவாளர்களுக்கும், எங்கையும் மோதாம பஸ், ‘இப்பிடிக்கா’ கவுத்தாத லாரி ஓட்டுனருக்கும், ஒழுங்கா சில்லரை மீதம் கொடுத்த கண்டக்டருக்கும், நல்ல விவசாயம் செஞ்ச அல்லது கடனை ஒழுங்கா கட்டின விவசாயிக்கும், கட்-காபி-பேஸ்ட் செய்யாத புரோகிரமருக்கும், excel sheet அ வெச்சுக்கிட்டு ஓபி அடிக்காத புராஜக்ட் மேனேஜருக்கும், சிலை வெச்சா முதல்வருக்கு புண்ணியமாப் போகுமுங்க.

ஆனா நாமெல்லாம் டீவியில் பேட்டி கொடுத்தா யாராவது பாப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? அதுவுமில்லாம, சிவாசி சார் முதல்வருக்கு நண்பருங்க.

சரி. நமக்கெதுக்குங்க, இதில முக்கியமா, நடிக-நடிகயைரை பேட்டி எடுக்கும் போது, மொதல்ல சினேகாவையும், அதுக்கப்புறம் உடனே நம்ப சிரிகாந்தும் (அதாங்க. கொழுந்தானாருங்க. அட அது பெரிய கொடுமைங்க) வந்தாருங்களே கவனிச்சீங்களா? என்ன நினைக்கிறீங்க?ம்…ம்….ம்… அட! நமக்கு எது முக்கியமோ அதத்தானே பாக்கனும். என்ன நான் சொல்றது?

என்ன சத்தம்?

(சிறுகதை)

“ப்யூரட்டை எடுத்துக்கொள்ளவும். அதில் 200 மில்லிலிட்டர் பொட்டாஷியம் பெர்மாங்கணேட் ஊற்றவும். பிப்பட்டை எடுத்து அதில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட்”
“ஏய்..ஏன் இப்படி கத்தற. மணி என்ன ஆகுது தெரியுமா?’ என்றேன். இருந்தாலும் எனக்கு மணி என்ன என்று தெரியாது. என்ன ஒரு 12:45 இருக்கும். நாளைக்கு என் அக்காவுக்கு பரிட்சை. அவள் படித்து கொண்டிருக்கிறாள். அதற்காக இப்படியா கத்த வேண்டும். எனக்கும் பரிட்சை தான். அதற்காக இப்படியா யாராவது இரவு 12:45 மணிக்கு கத்திக் கொண்டிருப்பார்கள். நான் தான் என் அக்காவுக்கு காவல். நானும் புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் படிப்பை விட தூக்கம் தான் வருகிறது. இதோ இப்பொழுது தூக்கம் கெட்டுவிட்டது. ‘டேய்! தூங்கறதா இருந்தா, அந்த ரூம்ல போய்த் தூங்கு. நான் இப்படித்தான் கத்துவேன்’ அப்பாடா இதுதான் சந்தர்ப்பம் என்று எழுந்து பக்கத்து ரூம் போய்விட்டேன்.

பரிட்சை ஹாலில் கொஸ்டீன் பேப்பரைப் பார்த்ததும் எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. பெரிய கேள்விகளில் ஒன்று கூட எனக்கு தெரியவில்லை. வியர்வை பெருக்கெடுத்தது. எத்தனை தெய்வங்களை வேண்டினேன்? ச்சே.. எல்லா தெய்வங்களும் இப்படி கை விட்டு விட்டனரே. கண்டிப்பாக பெயில் தான். மறுபடியும் பத்தாம் கிளாசா? அதுவும் அந்த ஒன்பதாப்பு நாராயணன் கூட படிக்கனுமா? ஐயோ.. அதை விட கேவலம்..அசிங்கம் ஒன்றும் இல்லை. அது மட்டும் நடக்கக் கூடாது. நாராயணனும் பெயில் ஆகி ஒன்பதாப்பிலே இருந்து விட்டால் நன்றாக இருக்கும். அது நடக்குமா? வேறு வழியில்லை பிட்டை எடுத்துவிட வேண்டியதுதான்.ம்ம்..இதெல்லாம் தெரிந்துகொண்டு தான் ஒரு புல் ஸ்கேல் பேப்பரை 24 ஆக மடித்து பிட் தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். சட்டைப் பையில் தான் இருக்கிறது. பஸ் பாஸில் செருகி வைத்திருக்கிறேன். திடுதிப்பென்று ஐந்து பேர் ஹாலுக்குள் நுழைந்தனர். ப்ளையிங் ஸ்குவாட். என்னடா இது சோதனை மேல் சோதனை. பெயிலானால் அடுத்த வருடம் எழுதிக்கொள்ளலாம். பிட்டைப் பிடித்தால் மூன்று வருடத்திற்கு எழுத முடியாதே. முன் இருக்கும் மாணவர்களை செக் செய்து கொண்டிருந்தார்கள். திருட்டுமுழி முழித்தவர்களின் சட்டைப் பைகளை துலாவி துலாவி சோதனைப் போட்டுக்கொண்டுவந்தனர். எனக்கு இயற்கையிலே திருட்டு முழிதான். ஐயையோ மறுபடியும் தெய்வங்களை வேண்டினேன். கடவுளே. முருகா. காப்பாத்து. அருகில் வந்த ப்ளையிங் ஸ்குவாட். எழுந்திருடா என்றார். குரல், ஆனால் இனிமையாக இருக்கிறதே. ‘டேய். எழுந்திருடா. எழுந்திருடா.’ யாரோ என்னை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். கண் முழித்துப் பார்த்தேன். என் அக்கா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு எழுப்பிக்கொண்டிருந்தாள். அப்பாடா…கனவு போலிருக்கிறது? விடிந்துவிட்டதா என்ன?. இல்லை. கும்மிருட்டு. எழுந்து உட்கார்ந்தேன். ‘என்ன?’ என்றேன் எரிச்சலுடன். ‘பயமா இருக்குடா’-அக்கா. ‘எதுக்கு’ – நான். குழந்தை அழும் சத்தம் கேட்குது. கவனிச்சியா?’ – அக்கா. ‘குழந்தைனா அழுகத்தான் செய்யும். போக்கா. போய் படு.’ எனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. அது என்ன கேள்வி? கனவில் கொஸ்டீன் பேப்பரில் பார்த்த கேள்விகளை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்தேன். ம்..ஹீம். ஒன்றும் நினைவில் இல்லை. அப்பொழுதுதான் அந்த சத்தம் கேட்டது. குழந்தை அழும் சத்தம். மிக அருகாமையில். எனக்கு தூக்கம் கலைந்து விட்டது. அட ஆமாம்! ஆனால் இங்கு பக்கத்து வீட்டில் கைக்குழந்தை யாரிடமும் கிடையாதே. ‘டேய். வெளியே போய் பாப்பமா?’ அக்கா கேட்டாள். கதவை திறந்தோம். காற்று வந்தது.(?) அக்கா முதலில் எட்டிப் பார்த்தாள். நான் பின்னாடியே சென்றேன். ம்..ஹ¤ம். யாரையும் காணோம். எதிர் வீட்டில் இருந்துதான் வந்தது. ஒருவேளை யாரேனும் விருந்தினர் வந்திருக்கக்கூடும். விருந்தினருக்கு குழந்தை இருக்கக்கூடும். நானும் அக்காவும் மறுபடியும் வீட்டிற்குள் வந்து தூங்கிவிட்டோம். மறுநாள் காலை தெருவெங்கும் இதே பேச்சு. எல்லோருக்கும் கேட்டிருக்கிறது குழந்தை அழும் சத்தம். மிகச் சத்தமாக அழுதிருக்கிறது போல. விசயம் என்னவென்றால், யார் வீட்டிலும் குழந்தை இல்லையென்பதே. எதிர் வீட்டிற்கும் விருந்தினர் யாரும் வரவில்லை.

நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.பரிட்சை சுமூகமாக முடிந்தது. கண்டிப்பாக பாஸ் செய்து விடுவேன். நாளைக்கு கணக்கு பரிட்சை. ‘தவளையின் இருதயம்..’ அக்கா படித்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நான் கணக்கு நோட்ஸைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘டேய், பாலு பார்த்தியா? நேத்து குழந்தை அழும் சத்தம் எல்லோருக்கும் கேட்டிருக்கிறது. ஆனால் சின்னக்குழந்தையே இல்லை. ஒருவேளை வேறு ஏதாவது…’ ‘அக்கா. பேசாம இருக்கியா. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது.’ அப்பொழுதுதான் கேட்டது. குழந்தை அழும் சத்தம். இந்த முறை மிகத் தெளிவாக. ‘டேய்.பார்த்தியா.மறுபடியும் கேட்குது.’ ‘அக்கா. நான் தூங்கப்போறேன். நீ படிச்சிட்டு வந்து படு!’ நான் அவசர அவசரமாக அப்பா பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டேன். மறுநாள் பலரது வீட்டில் எழுமிச்சை தொங்கிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலும் தான்.

நாளை எனக்கு வரலாறு. அக்காவுக்கு பரிட்சை முடிந்துவிட்டது. ஆனாலும் இந்திரா சௌந்திராஜன் கதையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ரொம்பத் தேவைதான். அதுவும் ராத்திரி நேரத்தில் இந்திராசௌந்தர்ராஜன் கதை. ரொம்பநேரம் படிக்கவேண்டாம் வேகமாகவே தூங்கிடுங்க என்று அம்மா சொல்லிவிட்டுப் போனார்கள். அக்கா தீவிரமாக கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல் புத்தகத்தை வைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன். அக்பர் கனவில் தோன்றவே, முழித்துக்கொண்டு புத்தகத்தைப் புரட்டினேன். அக்கா இப்பொழுதும் கதையைப் படித்துக்கொண்டிருந்தாள். ‘ச்..சே. பரிட்சை முடிஞ்சதுனா தூங்கவேண்டியதுதானே?’ எனக்கு பொறாமையாக இருந்தது. மறுபடியும் அந்த சத்தம். குழந்தை அழும் சத்தம். அக்கா நிமிர்ந்து பார்த்தாள். ‘பாலு டார்ச் எடுடா. போய் பார்ப்போம்’ ‘வேண்டாம்கா. நான் வரலை’ ”ஆம்பிளைப் பையன் தானடா நீ? நான் போறேன். நீ வரதுனா வா. வராட்டினா போ.’ அக்கா டார்ச் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வேறு வழியில்லை. இரத்த பாசம். பின்னாலையே சென்றேன். கதவைத் திறந்தோம். காற்று வரவில்லை. யாரும் இல்லை. கப் சிப். எங்கள் வீட்டுக் கொய்யா மரம் கூட குழந்தை அழும் சத்தத்தை இரசித்துக் கொண்டு அசையாமல் நின்று கொண்டிருந்தது. மிகத்தெளிவாகக் கேட்டது குழந்தை அழும் சத்தம். எதிர் வீட்டு தொழுவத்திலிருந்துதான் கேட்டது. ‘பாலு அங்க இருந்துதான் சத்தம் வருது. வா போகலாம்’ ‘என்னது! போறதா? நான் வரலை.’ என்னைக் கண்டுகொள்ளாமலே சென்றாள் அக்கா. நானும் சென்றேன். உள்ளே சென்று டார்ச் அடித்தாள். பட்டென்று கொட்டத்து விளக்கு எரிந்தது. எதிர் வீட்டுக் காரருக்கும் கேட்டிருக்கவேண்டும். அவரும் வந்து விட்டார். இப்பொழுது சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து சத்தம் எங்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்து கேட்டது. அக்கவும் நானும் எதிர்வீட்டுக்காரரும் எங்கள் தோட்டதிற்குள் நுழைந்தோம். எங்கள் தோட்டத்தில் குழந்தையா? எங்கள் தோட்டம் அடர்த்தியாக இருக்கும். மரங்கள் நிறைய. டார்ச் அடித்தது தான் தாமதம். படாரென்று சின்ன நாய் சைசில் ஒரு பூனை தாவிக்கொண்டு வெளியே ஓடியது. ‘ச்சே. வெறாகா?’ என்றார் எதிர்வீட்டுக்காரர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அக்காவுக்கும் புரிந்திருக்கவில்லை என்பது அவள் முழியிலிருந்து தெரிந்தது. எங்கள் வீட்டிலும் விளக்கு எரிந்தது. அப்பா வெளியே வந்தார். ‘அது ஒன்னும் இல்லை வாத்தியார் சார், வெறாகுதான் இப்படி கத்தியிருக்கு’ என்று சொல்லிவிட்டு எதிர்வீட்டுக்காரர் போய்விட்டார்.

நாங்களும் வந்து படுத்துக்கொண்டோம். அப்பாவிடம் கேட்டேன். ‘வெறாகுன்னா என்னாப்பா?’ ‘வெறாகுன்னா காட்டு பெண் பூனை. அது குட்டி போட்டால் இப்படித்தான் குழந்தை மாதிரி கத்தும். ஆனால் பொதுவா ஊருக்குள்ளே வராது. காட்டிலேதான் இருக்கும். என்னமோ தெரியல இப்ப ஊருக்குள்ளே வந்திருக்கு. நாளைக்கு பரிட்சை இருக்கில்ல பேசாம படு’ என்றார்.

எங்கள் வீடே ஊரின் ஒதுக்குப்புறத்தில் தான் இருக்கிறது. பஸ்ஸை விட்டு இறங்கி 20 நிமிடம் நடக்கவேண்டியிருக்கிறது. எஙகள் வீட்டைத் தாண்டியும் இன்னும் நிறைய வீடுகள் இருக்கின்றன. நாங்கள் காட்டிற்குள் வந்திருக்கோமா? அல்லது பூனை நாட்டிற்குள் வந்திருக்கிறதா? என்று விட்டத்தில் சுழலும் ப்பேனையே வெறித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன். நாளைக்காலை அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுபடியும் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நான் கண்களை மூடிக்கொண்டேன். குழந்தை அழுதுகொண்டேயிருந்தது. விடியும்வரை.

அமுதத்தை இட்டாள்

(சரித்திர சிறுகதை)
(நீண்ட நெடுங்காலத்திற்கு முன், திருக்கோவலூர் என்னும் ஊரில்)

‘அய்யனே, தாங்கள் எப்பொழுது வருவீர்கள்’ என்று கேட்டாள் அந்தச் சின்னஞ்சிறு சிறுமி. பத்து அல்லது பதினோறு வயது தான் இருக்கும் அந்தப் சிறுமிக்கு. குழந்தைத்தனம் மாறாத முகமும், இன்னமும் ஒரு மழலையின் குரலுமே கொண்டிருந்தாள் அவள். மழை மேகம் திரண்டு கொண்டிருந்த அந்த மாலைப் பொழுதில், காலையில் பக்கத்துக் காட்டில் திரட்டிய சுள்ளிகள், அடுப்பில் கணலாக இருக்க, மண்சட்டியை இறக்கி கீழே வைத்தாள். பின் சிறிதளவு நீரைக்கொட்டி அடுப்பை அனைத்தாள். அருகிலிருந்த மண் சட்டியில் கூழ் இருந்தது. ‘தெரியவில்லை தாயே! மழை நிற்பதற்குள் வந்துவிடுவேன். சோழ நாட்டில் மழைக்கு பஞ்சமேது? ம்..ம்.. வேடுவனும் உடன் வருகிறான்.’ என்று தன் மகளைப் பார்த்து கூறிக்கொண்டே, மரப் பலகையில் அமர்ந்து கொண்டான். அந்த பெண், மற்றொரு மண்சட்டியில் கூழை ஊற்றிவிட்டு, கீரைக்கறியை சுடசுட எடுத்து வைத்தாள். மழை சிறு துளிகளாக இறங்கிக் கொண்டிருந்தது. ஓலைக் கூரையில் பட்டுத் தெரித்தது. மழை ஓசை இசைப்பெருவெள்ளமென ஓங்கி ஒலித்தது. மண் வாசனை, கீரை வாசனையையும் விஞ்சிவிட்டிருந்தது. ஒரு திவலை குடித்த இடையன், கீரைக்கறியை எடுத்துக் கொண்டான். மண்வாசனையையும், கீரைக்கறியையும் ஒரே நேரத்தில் புலன்கள் ரசித்துக்கொண்டிருக்க, நா அதற்கு ‘சப் சப்’ என்று எதிர்வினை காட்டிக்கொண்டிருந்தது. ‘மகளே! உன் அன்னையின் கைப் பக்குவத்தையும் மிஞ்சிவிட்டாய் தாயே! உன் அன்னை இப்பொழுது இருந்திருந்தால், உன்னை மெச்சிப் புகழ்ந்து பாடியிருப்பாள்’ என்ற இடையன், சிறிது நேரம் கூரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அய்யனே. தாங்கள் தான் எனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கிறீர்களே! ஒரு குறை இல்லை தந்தையே!’ என்றாள் அந்த சிறுமி.

தன் கைத்தடியை எடுத்துக் கொண்டு இடையன் புறப்பட்டபொழுது, ‘அம்மா! ஆடுகளை நினைத்து நீ வருத்தம் கொள்ளாதே. மழையில் நீ நனைந்து, உன்னிடமிருக்கும் ஒரே ஆடையையும் நீ நனைத்துக் கொள்ளாதே. நீயும் கூழைக் குடித்துவிட்டு, அமர்ந்திரு. நான் விரைவில் திரும்பிவிடுவேன். இந்த விளைச்சலில் உனக்கு மாற்று ஆடை வாங்கிகொள்ளலாம்’ என்றான். ‘கவலையில்லை அய்யனே. காலம் வரும்பொழுது வாங்கிக்கொள்ளலாம். சென்று வாருங்கள் தந்தையே!’ இடையன், புண்ணகைத்துவிட்டு, வெளியே சென்றான்.

தன் தந்தையின் வழி தடங்களில், மழை தன்னை நிரப்பிக் கொள்வதையே, வெகு நேரம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த சிறிய பெண். தந்தை கூழ் குடித்த அந்த மண்சட்டியை மழை நீரிலே சுத்தம் செய்துவிட்டு, சாப்பிட மனமில்லாமல், மழையையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

மழை வலுத்திருந்தது. மழையின் பலத்த துளிகளில், ஒரு கிழவி, ஊண்று கோலைப் பற்றிக்கொண்டு, மழையைவிட வேகமாக, மழையைப் போல் தள்ளாடிக்கொண்டு வருவதைக் கவனித்தாள்.’வாரிக்கொடுக்கும் மழையே. நீ அவள் கிழவி என்பதை அறியாயோ? உன் கனிவுக் கரம் கொண்டு, அவளது கணிந்த உடலை, என் குடிசைக்கு வரும் வரையில் தழுவாமல் தான் இரேன்!’ என்று மழை தேவனை பணித்துக்கொண்டிருந்தாள்.

தள்ளாடிய வயதில், நெடுந்தூரம் பயணம் செய்த கிழவி, மழையரசனிடம் விடுபட்டு, அந்த சிறு குடிசையில் தஞ்சம் புகுந்தாள். அந்த சிறிய பெண், அந்த கிழவியை, ‘வாருங்கள்! வாருங்கள் மூதாட்டியே! மழை உங்களுக்காக நிற்காது. அப்படி நின்றால் மண் செழிக்காது! நன்றாக நனைந்திருக்கிறீர்களே. துவட்டிக்கொள்ளுங்கள்’ என்று கிழவி துவட்டிக்கொள்ள ஆடை தேடினாள். இடையன் தன் ஒற்றை துணியை சுற்றிக்கொண்டு சென்று விட, மாற்றுத் துணி தேடினாள். வேறு துணி இல்லை. கிழவி குளிரில் நடுங்குவதைக் கண்ட அந்த சிறுபெண், பாரியை விடவும் கொடையாளியானாள். மாற்றுத்துணி வேறில்லாத பொழுதும், தன் ஒற்றை துணியான, அந்த நீல நிற சிற்றாடையை அவிழ்த்துக் கொடுத்தாள். ‘தலை துவட்டிக்கொள்ளுங்கள், பாட்டி!’ என்று சொல்லிவிட்டு, உள்ளே ஓடினாள். உள்ளே என்றால் என்ன? ஒரு மூலைக்குத்தான்.

திடுக்கிட்டு விழித்த கிழவி, அச்சிறுபெண்ணின் இப்பெருஞ்செயல் கண்டு விக்கித்து நின்றாள். மானம் காக்க, மூலைக்கு ஓடிய அந்த சிறுமியை போற்றினாள். வார்த்தை சிக்காமள் துணுக்குற்றாள்.

அந்த சிறுமி மானம் காக்கவா ஓடினாள்? இல்லை. இல்லவே இல்லை. ஓடிய சிறுமி, ஒரு மண்சட்டியில் மீதமிருந்த கீரைக்கறியையும், கூழையும் எடுத்துக்கொண்டு வந்தாள். ‘பாட்டி, தாங்கள் மழையில் நனைந்து சோர்வாக இருப்பீர்கள். துவட்டிக்கொண்டு இந்த சூடான கீரைக்கறியை உண்ணுங்கள்’ என்றாள்

மிகுந்த பசியுடன் வந்த கிழவி, அந்த சிறுமியின் முகம் கூட பார்க்காமல், பரிமாறும் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

****

சோழ தேசத்தின் தலைநகர். ஒரு நள்ளிரவு. நல்ல நிலவு. ஒரு மண்டபத்திலே கூனிக் குறுகிய கிழவி காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். நகர சோதனைக்காக உருமாறி வந்த சோழ மன்னன் கிழவியைப் பார்க்கிறான். இவளைக் கண்டு யார் என்று அறிய ஆவல் கொண்டு ‘அம்மே நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?’ என்றான். கிழவியின் கூர்ந்த கண்கள் அவன் யார் என்று அறிந்து கொள்கின்றன.
கிழவியிடம் பேசிய மன்னன், அவள் புழமைகண்டு வியக்கிறான்.
கிழவியின் கவிப்புழமையில் மயங்கிய மன்னன், மேலும் கிழவியிடம் கதை கேட்க ஆவலாகிறான்.
கிழவி தன் முடிப்பை அவழ்த்து சிறிய குழந்தைகள் போட்டுக் கொள்ளக்கூடிய ஒரு நீலச்சிற்றாடையை எடுக்கிறாள். ‘அப்பனே இதைப் பார்த்தாயா?’ என்று மன்னனிடம் கெட்டுக் கொண்டே, பின் வருமாறு கூறாலானாள்,

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து – பொய்யாய்
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் செறிந்தகை யாள்

அந்த கிழவியை யாரென்று நான் சொல்லவும் வேண்டுமோ!

***

பிகு
புதுமைப்பித்தன் “கூழுக்குப் பாடி” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஔவையாரின் பாடலுக்கு என் பார்வையில் ஒரு திரைக்கதை

ஆயிரம் கால் இலக்கியம் : ஒரு ஆடு அசைபோடுகிறது (1)

1

என் தோழி ஒருவர் (பள்ளி, கல்லூரி முழுவதும் ஆங்கில வழி கல்வி பயின்றவர். பயின்று கொண்டிருப்பவர்), ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தான் தமிழ் நாவல்கள் (அல்லது தமிழ் இலக்கியம் சார்ந்த எதுவாயினும்), அதிகம் படிப்பதில்லை, ஏன் படிப்பதையே நிறுத்திவிட்டேன் என்றும் சொன்னார். காரணம் புரியாமல் ஏன் என்று விழித்த எனக்கு, பதிலேதும் கூறாமல், ‘என்னமோ பிடிப்பதில்லை. அதனால் படிப்பதில்லை’ என்றார்.

பிறகு அவரே, சிறிது நேரம் கழித்து, எனது விழிக்கு (அல்லது முழிக்கு) பதில் சொல்லும் விதமாக, காரணங்களை சொன்னார்.

அவர் வைத்த காரணங்களில், மிக முக்கியமான ஒன்று, தமிழில் பலதரப்பட்ட, பலவகையான தளங்கள், பின்புழம் (Background) இல்லையென்பதே. தளங்கள் என்றால், இன்னும் தெளிவாக எனக்கு புரியவைக்கும் பொருட்டு, Fiction, Science-Fiction, Fantasy, Historical-Fiction, Facts in Fiction, racing thriller (Like Prison escapes), horror,non-fiction, என்று வகைப்படுத்தினார். மேலும் தமிழில், எல்லோரும் ஒரே மாதிரி தான் எழுதுகிறார்கள், குறைந்தபட்சம் ஒரே மாதிரியான கதைக் கருவைத்தான் வைத்திருக்கிறார்கள் என்றார். புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டால், அனைத்து புத்தகமும் ஒரே ரகம் என்றார்.

lord of the rings, harry potter போல தமிழில் ஒரு fantasy இல்லாதது ஏன்? war of the worlds போன்ற science fiction னும், the seventh secret போன்ற சரித்திர புனைவு கதையோ, Da Vicni Code போன்ற Historical-fiction னும், the eleventh commandment, shantaram, code to zero போன்ற racing-thriller ரும், Jurassic Park, State Of Fear போன்ற நாவல்களும் தமிழில் ஏன் இல்லை என்பதே அவரது வாதம். பலதரப்பட்ட தளங்களுக்காக மட்டுமே அவர் இந்த நாவல்களை குறிப்பிட்டார். இதை விட நல்ல நாவல்கள் இருகின்றதென்பதே உண்மை.

பலதரப்பட்ட தளங்கள் இல்லை என்ற வாதத்தை ஒத்துக் கொள்ளலாம், ஆனால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. நாவல்களை நான் பொழுது போக்கிற்காக மட்டுமே படிக்கின்றவன் (கவனிக்க, இலக்கிய வளர்ச்சிக்காக அல்ல!), என்ற பொழுதிலும், எனக்கு கடந்த 10 வருடங்களாக (சில நேரங்களில்) பொழுது போகாமல் இருந்திருக்கிறது.

தவிர, இரு வேறு இலக்கிய தளங்களை ஒப்பிடுவதென்பதே தவறு. ஏனென்றால், அவர்களது (ஆங்கில) வாழ்க்கைத் தளம் வேறு, நமது வாழ்க்கைத் முறையே வேறு. அப்படியே எடுத்துக் கொண்டாலும், கிரேக்க மொழியில் இருக்கும், கற்பிதங்கள் (Myth)/ கதைகள் போன்றதொரு தன்மை ஆங்கிலத்தில் கூட இல்லை. ஆனால் அதற்கினையான, ஏன் அதற்கும் மேலும், கற்பிதங்களும்/கதைகளும் தமிழில் உண்டு. ஆங்கில இலக்கியத்தை மட்டும் (கிரேக்க/இலத்தின்/ரோமானிய இலக்கியங்களை தவிர்த்து) இயங்க சொன்னால், பல தளங்களை அங்கே பார்பதென்பது அரிதாகிவிடும். இலக்கியம் ஒன்ற ஒன்றே இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

இங்கே நான் இரு தளங்களை, நான் ஒப்பிட்டு பார்க்க நினைக்கவில்லை. ஏன், ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது. ஏனென்றால், இரண்டு விசயங்களை ஒப்பிட வேண்டுமென்றால், இரண்டு விசயங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு விசயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றொரு விசயம் தெரியாமல் (அல்லது அரை குறையாக தெரிந்தோ) வாதிடுவது அல்லது ஒப்பிடுவது என்பது, வீண் சச்சரவிற்கே வழிவகுக்கும். எனக்கு இரு விசயமும் முழுவதுமாக தெரியாது (அப்படி தெரிந்தவர்கள் யாரவது இருப்பார்களா என்பதும் சந்தேகமே!), என்பது என் பலவீனம். எனவே இதுவரை நான் படித்த சிறுகதைகள்/கதைகள்/கவிதைகள்/கட்டுரைகள்/நாவல்கள் போன்றவற்றைப் பற்றி மட்டுமே எழுதலாம் என்று நினைக்கிறேன். விமர்சனம் அல்ல. என் பார்வை, அல்லது நான் அறிந்து கொண்டது என்று வைத்துக் கொள்ளலாம். பார்வைகள் வேறுபடும் என்பது விதி.

என் இலக்கிய ஆர்வம் (அல்லது பொழுதைப் போக்குவது) என் அம்மாவிற்கு, நூலகத்திலிருந்து, ரமணிச்சந்திரனையும், சாண்டில்யனையும் எடுத்துவருவதிலிருந்து ஆரம்பித்தது. நான் சாண்டில்யன் அவ்வளவாக படித்ததில்லை (கடல் புறா மட்டுமே படித்திருக்கிறேன்) ஆனால் ரமணிச்சந்திரன் தான் நான் முதன் முதலாக படிக்க ஆரம்பித்தது. நான் படிக்க ஆரம்பித்த பொழுது (பாட புத்தகம் அல்லாத புத்தகங்கள்), குமுதம் ஒரு ஆபாசப் பத்திரிக்கையாகவே கருதப்பட்டது. இன்றளவும் அது அப்படியே இருக்கிறது. சமூகம் மட்டுமே முன்னேற்றம் கண்டுவிட்டது.

ஆனந்த விகடன், சினிமா செய்திகளுக்கே முன்னுரிமை தருகிறது என்றாலும், அதில் சில முக்கிய நல்ல விசயங்கள், அன்றிலிருந்து இருந்து வந்திருக்கின்றன. ஹாய் மதன் ஒரு எடுத்துக்காட்டு. இருந்தும், மதன் சில வேளைகளில் ‘சிம்ரன்/திரிஷா/சினேகா’ இவர்களில் யார் சிரிப்பழகி என்ற சமூக பொறுப்புள்ள சில கேள்விகளுக்கும் பதில் அளித்து மக்களின் தீர்க்க முடியாத சந்தேகங்களை தீர்த்து வைத்திருக்கிறார். நான் சில சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன், யார் இந்த மாதிரி கேள்விகளை, எழுதி அனுப்புகிறார்கள்? ஏன் அவர்களுக்கு இது போன்றொரு சந்தேகம் வந்ததென்று. ஆனாலும், மதன் ஒரு அளவிடமுடியாத “அறிவுக் களஞ்சியம்” என்பதை நான் சொல்லத்தேவையில்லை. நான் பார்த்து வியக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.

விகடனில் வரும் தொடர்கதைகள் மிகப் பிரபலம். தொடர்கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வாரா வாரம், இந்த வாரம் என்ன நடந்திருக்கும், என்ன நடக்கும் என்று ஆர்வத்தோடு படிக்கும் அழகே தனிதான். அதில் தான் விறுவிறுப்பு. ஒரு நாவலை எடுத்து ஒரே மூச்சில் படித்து வைப்பதைக் காட்டிலும் (நான் ஒரே மூச்சில் முதன் முறையாக படித்த நாவல் ‘காஸனோவா 99’ என்ற ‘என்டமூரிவீரெந்திரநாத்‘ கன்னடத்தில் எழுதி அதை ‘சுசீலா கனகதுர்கா’ தமிழில் மொழிபெயர்த்தது), வாரம் முழுவதும் காத்திருந்து, புதன் கிழமை வந்தவுடன் (விகடன் முன்பெல்லாம், எனக்கு தெரிந்த “முன்பு”, புதன்கிழமைதான் வரும்), வீட்டிற்கு வந்தவுடன், கதையைப் படிப்பதென்பது தனி சுகம் தான். இன்றும் தினத்தந்தியில் வரும் கண்ணித்தீவையே வீடாமல் படிப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, சிறுவர்மலரில், கார்ட்டூன் தொடர்களை (பெரும்பாலும் சரித்திர கதைகளே. கடைசிப்பக்கத்தில் பேய் பள்ளியை விடாமல் பல வாரங்கள் படித்துக்கொண்டு வந்தது நினைவிலிருக்கிறது) விரும்பி படித்திருக்கிறோம். விடுமுறை நாட்களில், அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் பேப்பர் வாங்க மாட்டார்கள், பக்கத்து வீட்டில் சென்று தான் “கடன்” வாங்க வேண்டும். அதுவும் உடனே கிடைக்காது. அதெப்படி கிடைக்கும், நமக்கா வாங்குகிறார்கள்? ஆனாலும், வெள்ளிக்கிழமை ஆகி விட்டால் மனது அங்கேயே இருக்கும், அந்த பக்கத்து வீட்டு ‘அவ்வா’ காலை 11 மணிக்குத்தான் தருவார்கள். அதுவரை பொறுத்திரு மனோகரா. அதிலும் பேப்பர் கடன் வாங்கும் பொழுது, சிறுவர்மலர் கூடவே வராது, தனியாக கேட்டுத்தான் வாங்கவேண்டும். ஜாக்கிரதை. சில சமயங்களில் அவ்வாவின் பேத்தி (எங்களை விட குறைந்த வயது தான்) கொடுக்க கூடாதென்று அடம் பன்னும். எங்களுக்கு கோபம் கோபமாக வரும். கொடுத்தால் தான் என்ன? கடித்தா தின்னப் போகிறோம்! ஆனாலும் பேத்தி அழகாகவே இருக்கும். ச்சோ ச்சுவீட்.

இப்பொழுது வரை, கடைசியாக வந்த கவியரசு வைரமுத்துவின்கருவாச்சி காவியம்” வரை நான் தொடர்கதைகளின் ரசிகன். கருவாச்சி காவியம், மிகச் சிறந்த கதை. கதை சாதரணக்கதையாக இருந்தாலும், வைரமுத்துவின் வைர வரிகள், சில சமயங்களில் முல்லென நெஞ்சில் தைக்கும், சில இடங்களில் ரோஜாவென தடவிச்செல்லும், சில சமயங்களில் வெங்காயமென (உதாரணத்திற்கு மன்னிக்கவும்) கண்களில் நீர் வரவழைக்கும். வாழ்க்கையை முழுவதுமாக அதன் வைராக்கியத்தோடு சொன்னார் வைரமுத்து. முன்பெல்லாம் ஹாய் மதனையே நான் விகடனில் முதலில் படிப்பேன், கருவாச்சி காவியம் வந்து கொண்டிருந்த பொழுது, அதுதான் முதலில். இப்பொழுது, ஓ பக்கங்கள்.

முன்பெல்லாம் தொடர்கதைகள் 2 அல்லது 3 இருக்கும், குமுதத்திலும் சரி, விகடனிலும் சரி. ஆனால் இப்பொழுது ஒன்று வருவதே அபூர்வமாகிவிட்டது. மக்கள் ஒரு வாரம் காத்திருத்தலை விரும்பவில்லையா என்ன? அப்படியெல்லாம் இல்லை, நாடகங்களை, இம்மி இம்மியாக வருடந்தோரும், ஏன் ஒரே நாடகத்தை வாழ்க்கை முழுவதும் கூட நாங்கள் பார்க்கிறபொழுது, தொடர்கதைகளை படிக்க மாட்டோமா என்ன? (நாடகங்களைப் பற்றி பிறிதொருமுறை பேசுவோம்)

இப்பொழுது, சில முக்கிய இலக்கியவாதிகள் (ஞாநி, ஜெயமோகன், அ.முத்துலிங்கம், எஸ்.ராமகிருஷ்னன், சாருநிவேதிதா(!!). சாருநிவேதிதாவின் இலக்கிய தொண்டு பின்னால் விவரிக்கப்படுகிறது) சில பொதுஜன/வெகுஜன/இலக்கிய இதழ்களில் தங்கள் பதிவுகளை (கிட்டத்தட்ட blogging தான்) நிகழ்த்தி வருகின்றனர். கவிஞர் வாலியின் ‘வாரந்தோரும் வாலி’ யும் பதிவுதான். வைரமுத்துவின் “கொஞ்சம் தேனீர் நிறைய வானம்” கூட ஒரு கவிதைப் பதிவே. வாரந்தோரும் blog. இந்த வகையாராக்களுக்கு, மதன் தான் முன்னோடி என்று நினைக்கிறேன். அல்லது சுஜாதாவாகவோகூட இருக்ககூடும். “வந்தார்கள் வென்றார்கள்” அல்லது “கற்றதும் பெற்றதும்” முன்னோடியாக இருக்கக்கூடும். கற்றதும் பெற்றதும் விகடனில் மறுபடியும் வரத்தொடங்கியிருக்கிறது சந்தோசம். சுஜாதாவின் பகுதியில் ‘எ.பி.க’ எனக்கு மிகவும் பிடிக்கும். கற்றதும் பெற்றதும் ஒரு perfect blogging.

எஸ்.ராமகிருஷ்னனின் முதலில் “துணையெழுத்து“, பின் “கதாவிலாசம்“, பின் இப்பொழுது “தேசாந்தரி” மிக நன்றாக இருந்தன. இருக்கின்றது. கதாவிலாசம் மிக மிக அருமையான ஒரு தொடர். பின் விகடன் பிரசுரத்தில் புத்தகமாக வெளிவந்தது. கிட்டத்தட்ட எல்லோர் வீட்டிலேயும் இருக்கவேண்டிய புத்தகம் அது என்று நினைக்கிறேன். கதைகளின் விலாசம் தான் அது. தலைப்பிற்கே பலமுறை அவரைப் பாராட்டலாம். பல எழுத்தாளர்களை (மௌனி, ஆ.மாதவன்), பல கதைகளை எனக்கு அறிமுகப் படுத்தியது கதாவிலாசம் தான். கதைகளை விடவும், கதைகளுக்கு முன், எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லும், அந்தக் கதைக்கான, பொருத்தமான ஒரு சம்பவம், மிக அழகாக இருக்கும். நெகிழ்ச்சியாகவும் இருக்கும். அதில் என் மனதில் நின்ற கதையும்,முன்னுரையும், புலிவேசம் என்ற கதையினுடையது. இப்பொழுது தேசாந்தரியில் கங்கை கொண்ட சோழபுரத்தை அழகாக விவரித்திருந்தார். “கோயிலில் நுழைந்தவுடன் காலத்தின் கண்ணுக்குத் தெரியாத பல கைகள் நம்மை வரவேற்பது போலிருந்தது” என்பது அவர் வடிக்கும் வார்த்தை சிற்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. வெயிலை ஏன் அவர் எப்பொழுதும் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியம். “வெயில் நீண்டுகொண்டே போனது” என்றோ அல்லது “வெயில் கால்களை பிடித்து அவனுள்ளே ஏறிக்கொண்டிருந்ததென்றோ” அவர் எப்பொழுதும் வெயிலை குறிப்பிடுவார். அவரது “நெடுங்குருதி“யிலும் (பெயரைப் போலவே மிக நீண்ட நாவல்) ஆங்காங்கே வெயிலைக் காணலாம். முஸ்தாபாவில் ‘கதாவிலாசம்’ புத்தகம் பார்த்தேன், 19$, அப்படியே வைத்துவிட்டேன். மதுரை செல்லும் பொழுது, இலக்கிய பண்னையில் வாங்கிக் கொள்ளாலம்.

பின் ஜெயமோகனின்வாழ்விலே ஒரு முறை” (குமுதத்தில் வந்ததென்று நினைக்கிறேன்), ஞானியின் “ஓ பக்கங்கள்” (நல்ல informative வாக இருக்கின்றது. சென்ற வாரம் வந்த வீட்டு மனை விற்பது தொடர்பான ஒன்று நன்றாக இருந்தது. இட ஒதுக்கீடு தொடர்பான அவரது புதிய வாதம் சிந்தித்தற்குரியது) சாருநிவேதிதாவின் “கோணல்” பக்கங்கள் (தலைப்பு பொருத்தம் தான்), ப்ரியா கல்யாணராமனின்கோயில்கள்” தொடர்பான தொடர் (தலைப்பு எனக்கு சரியாக ஞாபகம் இல்லை) போன்றவையும் நன்றாகவே இருந்தன. ப்ரியா கல்யாணராமன் “ஜாக்கிரதை வயது பதினாறு” என்ற தொடர்கதையை முடித்தவுடன் கோயில்கள் பற்றி எழுதினார் என்று நினைக்கிறேன். பாவவிமோசனம்?

“ஜாக்கிரதை வயது 16” ஹிட் தொடர் தான். இதை ஆதரித்தவர்கள் (மக்கள் தான்) ஏன் “பாய்ஸ்” திரைப்படத்தை ஆதரிக்கவில்லை என்பது எனக்கு இன்றளவும் புரியாத ஒன்றாக இருக்கிறது.

(தொடரும்)

சே குவேரா

இரண்டு வருடங்களுக்கு முன், என் அண்ணன், சே குவேரா : வாழ்வும் மரணமும் என்ற ஜோர்ஜ் ஜி காஸ்நாடா, எழுதிய புத்தகத்தை வாங்கி வைக்குமாறு என்னைப் பணித்தார். அப்பொழுது, சென்னையில் நடந்து கொண்டிருந்த புத்தக கண்காட்சியில், அந்தப் புத்தகத்தை தேடி அலைந்து, கிடைக்காமல், இல்லை என்று என் அண்ணனிடம் சொல்லிவிட்டேன். அப்புறம், இரண்டு வருடங்கள், நான் சிங்கப்பூர் நூலகத்தின் குறிப்பு பகுதியில் (reference section) இந்த புத்தகத்தைப் பார்க்கும் வரையில், நான் சே குவேராவை மறந்தே போயிருந்தேன்.

நான் புத்தக அலமாரியிலிருந்து அந்த புத்தகத்தை எடுத்து வந்து, மேஜைமேல் வைத்து, முன்னுரையைப் படிக்கும் வரை, சத்தியமாக எனக்கு சே குவேரா, யாரென்று தெரியாது.

முன்னுரையைப் படித்து முடித்த எனக்கு, சற்று வியப்பாகவும், ஆச்சரியமாகவும் கூட இருந்தது, நல்ல வருமானம் தரக்கூடிய டாக்டர் தொழிலை விட்டு விட்டு, புரட்சியென்று யாராவது சுற்றித் திரிவார்களா என்ன? சமகாலத்தில், புரட்சி என்ற ஒரு சொல், அருங்காட்சியகத்தில் மட்டுமே காணக்கிடைக்கின்ற ஒன்றாக ஆகிவிட்ட காரணத்தால் கூட, நான் இவ்வாறு நினைத்திருக்கலாம்.

சே குவேரா, பற்றி, அறிந்தவர்கள், இந்த ‘பாரா’வை புறக்கணிக்கவும். இது ஒரு எளிய அறிமுகம். சே குவேரா, அர்ஜெண்டினாவில் பிறந்து, மருத்துவக் கல்லூரியில் பயின்று, மாணவனாக இருக்கும் பொழுதே, சரித்திரப் புகழ் பெற்ற, லத்தீன் அமெரிக்கா முழுவதும் தன் மோட்டார் சைக்கிளில் கடக்கும், பயணத்தை செய்தார். அந்தப் பயணத்தின் பொழுது தான் தனது மக்களின் வறுமையை கண்கூடாகக் கண்டார். அவர் ஒரு புரட்சியாளனாக மாறுவதற்கான விதையும் அப்பொழுதே தூவப்பட்டது. பிற்காலத்தில் அவர் கெரில்லா (கொரில்லா என்று சொல்லக்கூடாது என்று மதன் சொன்னது ஞாபகம் இருக்கிறது!) (Guerilla) ,படைத் தளபதியாக இருந்தார். கியூபாவின் விடுதலைக்கு காரணமாகவும் இருந்தார். கெரில்லா யுத்தத்தைப் பற்றி அவர் பல நூல்கள் எழுதியுள்ளார். இறுதியில் பொலிவியாவில், அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.

அதற்கப்புறம் நான் சிங்கப்பூரில் இந்தப் புத்தகத்தை தேடி அலைந்து விட்டேன். இந்தியா சென்றிருக்கும் என் நண்பரிடம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறேன். வாங்கி வருகிறாரா பார்ப்போம்.

இந்த சமையத்தில் தான், மோட்டார் சைக்கிள் டைரீஸ், என்ற படத்தின் குறுந்தகடு (CD) எனக்கு கிடைத்தது.இது ஒரு லத்தீன் அமெரிக்க திரைப்படம். ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருந்தது. இதுவே எனது முதல் வேற்று மொழித் திரைப்படம். வேற்று மொழித்திரைப்படங்கள் பார்ப்பதில் ஒரு அசௌகரியம் இருக்கிறது. வசனங்களைக் கவனிக்க சப் டைட்டிலைப் பார்த்தால், நடிகர்களின் முக பாவனைகளை கவணிக்க முடியாமல் போகிறது. முகபாவங்களை கவனித்தால் வசனங்களை பின்பற்ற (follow) செய்ய முடிவதில்லை.
இந்த திரைப்படத்தைப் பற்றி முன்பே நான் அறிந்திருக்கிறேன். நல்ல படம் என்பது மட்டுமே எனக்கு தெரியும். சிடியின் பின்புறம் பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி, இது சே குவேராவின் இளமைக் காலத்தை, அவரது சரித்திரப் புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள் பயணத்தை பற்றிய படம். பயோகிராபி (Biographical).

படம், சேகுவேரா தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்குவதிலிருந்து, ஆரம்பிக்கிறது. சே குவேரா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டவர். அதுவும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆஸ்துமா நோய்வாய்ப் பட்டவர், கெரில்லா யுத்தங்களை செய்ய முடிந்தது, என்பது மிகவும் வியப்பான, கவணிக்கப் பட வேண்டிய ஒன்று.

தனது காதலி, அவளுக்கு அமெரிக்காவில், நீச்சல் உடை வாங்கிவர, தன்னிடம் கொடுத்த, 20 டாலர் பணத்தை தன் நண்பனிடமிருந்து பாதுகாத்து, தனக்கு மிகவும் தேவைப்பட்டபொழுதும் அதை உபயோகிக்காது, பிறகு, ஒரு கல்லுடைக்கும், சாப்பாட்டிற்கு வழியில்லாத, தம்பதியினரிடம் கொடுப்பது அவரது நேர்மையையும், கனிவையும், சமூகப் பொருப்புணர்வையும் காட்டுகிறது.

படத்தின் ஒரு வசனம். எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட : உன் ஒவ்வொரு மூச்சிலும், நீ போரிடு. சாவை நரகத்திற்கு போகச்சொல்.

படம் முடிந்தும், படத்தின் காட்சிகளும், சே குவேராவின் பிம்பமும், ஒரு நாய்க்குட்டியைப் போல நம்மைச் சுற்றி சுற்றி வருகின்றன. படத்தின் சிந்தனைகள், ஒரு அலையைப் போல, மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டேயிருக்கிறது.

மிக நீண்ட நாட்களுக்கு பின் புரட்சி என்ற வார்த்தையை நான் மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

புத்தகத்தை எப்படியும் இந்த வருடத்திற்குள் படித்துவிடுவேன்.

கவிதைகள் : குழந்தைகள்

கவிதைகளும் குழந்தைகளும் ஒன்று தானோ? குழந்தைகளை நாம் பல காரணங்களுக்காக ரசிக்கிறோம், ஆனால் அதே அளவு காரணங்களுக்காக வெறுக்கவும் செய்கிறோம். வெறுப்பதற்கு காரணங்கள் இருந்தும், நாம், முடிவில் குழந்தைகளை ரசிக்கவே செய்கிறோம்.
‘கவிதைகளைக் கண்டால் ஓடி விடு’ என்று என் மூளை என்னை எச்சரித்தாலும், மனம் கவிதையைக் கண்டவுடன் படிக்கவே சொல்கிறது. பிறகு சிக்கலில் ஆழ்த்துகிறது.
கவிதைகள் ஏன் இப்படி இருக்கின்றன? எத்தனை முறைப் படித்தாலும் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? கவிதைகளைப் படித்து புரிந்துகொள்ள, எங்காவது, பாடத்திட்டம் (Course) இருந்தால் சேர்ந்தாவது படித்துத் தொலைக்கலாம். ‘நாலு மூலை புத்தகம்’ என்றொரு கவிதையைப் படித்தேன். கடற்கறய் எழுதியிருக்கிறார். தீராநதியில் பிரசுரமாகியிருந்தது.

நாலு மூலை புத்தகம்

நாலு மூலைகள் இருக்கும் புத்தகத்தின்
ஐந்தாவது மூலையை ஞாபகத்தின் குறிப்பாக
மடித்திருந்தேன். சர்வ சங்கடங்களுக்கும்
பரிகாரம் சொல்லும் கிளியொன்று அதில்
எந்நேரமும் பறந்தவாறே இருக்கும்.
கிளி, பச்சை இறகில் ஒளிரும் எதிற்காலத்தை
ஒரு சிறு நெல்லில் ஒளித்து வைத்திருந்தவன்
புத்தகத்தின் 49ஆம் பக்கத்தைக் கிழித்து,
கொண்டுபோய் விட்டான்.
அதில்தான் எப்போதும் பறக்கும்
கிளியின் இன்னொரு சிறகிருக்கிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், நல்ல மதிய உணவிற்குப் பிறகு, தீராநதியில், ஆ
.முத்துலிங்கம் பக்கம் படித்துவிட்டு, இவரால் எப்படி அனைத்து இலக்கிய இதழ்களிலும் ஒரே நேரத்தில் எழுத முடிகிறது, என்று வியந்து கொண்டிருந்த பொழுது, இந்த கவிதை கண்ணில் பட்டது. ஒரு முறை/இரு முறை/…10 முறை. ஒன்றும் புரியவில்லை.

“நாலு மூலைகள் இருக்கும் புத்தகத்தின் ஐந்தாவது மூலையை” புத்தகத்திற்கு ஏது ஐந்தாவது மூலை? இது உவமையாக இருக்கும் பட்சத்தில், கவிஞர் எதை உவமைப் படுத்த முயல்கிறார், புரபொசர் ரவீந்தரன், புத்தகத்தின் மையப்பகுதி என்றார். என் நண்பன் அதை, நாம் புத்தகம் படிப்பதினால் கிடைக்கும் அறிவுக் களஞ்சியம் (repository) என்றான். அறிவுக் களஞ்சியம்! அதற்கப்புறம் “கிளியொன்று அதில் எந்நேரமும் பறந்தவாறே இருக்கும்” கிளியாவது புத்தகத்தில் பறப்பதாவது? கார்ட்டூன் கிளியாக இருக்குமோ? புத்தகம் காமிக் புத்தகமோ? அதற்கப்புறம் சுத்தம். பிளாக் ஹோல். “புத்தகத்தின் 49ஆம் பக்கத்தைக் கிழித்து, கொண்டுபோய் விட்டான்” அது என்ன 49 ஆம் பக்கம்?

விவாதம் முற்றுப் பெறவில்லை. அதாவது ஒரு முடிவு கிடைக்கவில்லை. கடைசியில், ரவீந்திரன், “புரிவது ஒரு பொருட்டல்ல” என்றார். “யாரை யார் புரிந்து கொண்டோம். என்னை நீ புரிந்து கொண்டாயா? இல்லை உன்னை நீ புரிந்து கொண்டாயா? முதலில் உன்னை நீ புரிந்து கொண்டாயா?” என்று சொன்னார்.

இவ்வாறு யாரேனும், விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர், பேசத் தொடங்கினால், விவாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பது விதி.

தீராநதியோ, கணையாழியோ, உயிர்மையோ, காலச்சுவடோ தாங்கள் வெளியிடும் கவிதைகளுக்கு ஒரு “கோனார் நோட்ஸ்” போட்டால், அதே இதழில் கடைசிப் பக்கங்களில், என்னைப் போன்று ஞான சூன்யங்களும், கவிதைகளைப் படித்து புரிந்துகொள்வோம்.

அதே இதழில், ‘சொந்தம் ஆனால் அந்நியம்’ என்ற, கோவாவைச் சேர்ந்த மீனா காகோட்கர், எழுதி, அதை தமிழில் திலகவதி மொழிபெயர்த்த சிறுகதை மிக அருமையாக இருந்தது.

பிகு:
யாருக்கேனும் மேலே குறிப்பிட்ட கவிதைக்கு விளக்கம் தெரியுமானால், கண்டிப்பாகச் சொல்லவும்.

டூப்ளிகேட்

கையில் வீட்டுச் சாவி இல்லாமல் நான் கடந்த ஒரு வாரமாக மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விட்டேன். அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டால், அடுத்த நண்பன் வரும் வரையில் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். சாயங்கால வாக்கிங் வரும் பொமரேனியன்களெல்லாம் என்னை விசித்திரமாகப் பார்த்துச் செல்லும். நான் மட்டும் தனியே வீட்டிலிருக்கையில், மதிய சாப்பாட்டிற்கு வெளியே சென்றவன், பர்கரை (Burger) உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் பொழுதுதான் யோசித்தேன், சாவியில்லாமல் எப்படி வீட்டினுல் செல்வது? நண்பர்களுக்கு கால் செய்து, (நல்ல வேளை செல்பேசியை எடுத்துக்கொண்டு வந்திருந்தேன். செல்பேசி இல்லையேல் எனக்கு சில் சமயங்களில் என் நம்பரே மறந்துவிடும்), அவர்கள் வரும் வரை கடையிலே உட்கார்ந்திருந்து மேலும் பல ஐட்டங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தேன்.

இன்று ஒரு முடிவாக, என் நண்பனிடம் சாவி வாங்கிக் கொண்டு, மாற்றுச் சாவி (டூப்ளிகேட்) போடுவதற்கு, கடையை விசாரித்து சென்றேன், மாற்றுச்சாவி போடும் வரை என்ன செய்வது, கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடலாமா, அல்லது இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். கடைக்காரன் கையில் சாவிக்கொத்தோடு என்னைப் பார்த்ததும், ‘ஹவ் மெனி?’ என்றான், நான் ‘ஒன்.ஒன்லி ஒன்’ என்றேன். வேகமாக வெளியே வந்தவன், நான் எவ்வளவு நேரமாகும் என்று கேட்பதற்குள், சாவியை வாங்கி, ஒரு மெஷினில் பொருத்தினான், அவனிடமிருந்த ‘fresh’ சாவி ஒன்றை எடுத்து, அதற்கு பக்கத்தில் பற்கள் நிறைந்த ஒரு வீல் (wheel) லில் பொருத்தினான், நான் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் 10 நொடிகளில், அவன் அருகிலிருந்த ஒருவனிடம் ‘சிங் மங் சங் பங்’ என்று பேசிக் கொண்டே, டூப்ளிகேட் சாவியை ரெடி செய்தான்.அதற்குள்ளாகவா? இவ்வளவு எளிதா? என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த நான், அப்பவும் நம்பவில்லை, இது எங்கே திறக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பரவாயில்லை, திறக்க முடிகிறது.

டெக்னாலஜி? அல்லது டூப்ளிகேட் செய்வது இவ்வளவு எளிதா?

நான் உஷிதமணி அல்ல

தமிழ் மொழிக்கு விக்கிப்பீடியா இருக்கிறது என்பது எனக்கு இன்று தான் தெரியவந்தது. டெக்னாலஜியில் மிகவும் பின் தங்கியிருக்கிறேன் என்பது தெரியவருக்கிறது. நன்றி:நற்கீரன். விக்கிப்பீடியாவின் வசதி/தனித்தன்மை என்னவென்றால், யார் வேண்டுமானாலும் ஒரு புதிய விசயத்தை (Topic) ஆரம்பிக்கலாம் என்பதும், பின் யார் வேண்டுமானாலும் அதை திருத்தி / மேலும் விசயங்களை சேர்க்க முடியும் என்பதே. இதில் பல நன்மைகளும்/சில தீமைகளும் இருக்கிறது. அது சரி, தீமையும்/நன்மையும் ஒரு சேர இல்லாமல் இருக்கும் விசயம் உலகத்தில் ஏதேனும் இருக்கிறதா என்ன?

தமிழில் விக்கிபீடியா இருக்கிறது என்று அறிந்தவுடன் நான் அதில் புதிதாக சேர்க்க நினைக்கும் வார்த்தை “தாமதம்”. சேர்த்ததும், அதில் ஏர்-இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே சேர்க்கவேண்டும் என்றுன் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விக்கிபீடியாவின் தீமை? நன்மை?

என் நண்பர்கள் அனைவரும் ஏர்-இந்தியாவையோ அல்லது இந்தியன் – ஏர்லைன்ஸையோ உபயோகிப்பவர்கள் தான். அவர்கள் சென்ற அனைத்து முறையும் விமானம் தாமதமாக கிளம்பியது என்பது எதிர்பாராத அல்லது எதிபார்த்த ஒன்றுதான். கோயின்சிடன்ஸ் அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல (unintentional) என்றே வைத்துக்கொள்வோம். திட்டமிட்டு செய்யமாட்டார்கள் என்பதே என் உறுதியான கருத்து அல்லது நம்பிக்கை. அதுசரி, நம்பிக்கை தானே வாழ்க்கை. நான் ஒரே ஒரு முறை மட்டுமே ஏர்-இந்தியாவில் சென்றிருக்கிறேன். அப்பொழுது 20 நிமிடங்கள் தாமதம். ஏன் இப்படி?

20 நிமிடங்கள் தாமதமாகச் செல்வதால், என்னுடைய 20 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாமல்(?!) போகும், என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை, ஆனால் பலருக்கு இந்த 20 பில்லியன் டாலரை விட 20 நிமிடங்கள் பெரியது. தாமதம் மிக மிக கொடிய விசயங்களில் ஒன்று. தாமதமாகச் செல்வதால், நாம் நமது நேரத்தை மட்டும் வீணடிப்பதில்லை, நம்மை சார்ந்தவர்களின் நேரத்தையும் அநியாயமாக வீண் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 200 * 20 நிமிடங்கள்?

சரி. பயணச்சீட்டு கொடுத்தபின், திடீரென்று விமானம் ஏன் ரத்து செய்யப் படுகிறது? பல காரணங்கள் இருக்கலாம். எப்பொழுதும் தாமதம் என்று அறிந்து யாரும் பயணம் செய்ய முன்வராததால், எதிர்பார்த்த கூட்டம் இல்லையென்று விமானத்தையே ரத்து செய்யலாம். செய்யுங்கள். விமானம் உங்களுடையது. வாழ்க்கை எங்களுடையது. விமானம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டுமா இல்லையா? அந்த அறிவிப்பு ஒவ்வொரு பயணியையும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டுமா இல்லையா?
சரி. என்னதான் நடந்தது?

ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் டிக்கெட் வாங்கிக் கொண்டு, விமானம் ஏறி, வேறு நாட்டுக்கு செல்கிறார். ரிட்டன் டிக்கெட்டும் சேர்த்துதான். பயணிக்கு வெளிநாட்டில் விசா ஒரு மாதத்திற்கு மட்டுமே. சரியாக விசா முடியும் நாளில் அவருக்கு ரிட்டன் டிக்கெட். ஆசை ஆசையாக, அயல்நாட்டில் உடன் தங்கியவர்களுக்கும், தாய்நாட்டில் பார்க்கப் போகும் சொந்தங்களுக்கும், பரிசுகள் கொடுத்து/வாங்கி கொண்டு விமான நிலையம் சென்றவருக்கு அதிர்ச்சி, விமானம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது. [இரு வாரங்களுக்கு முன்னரே ரத்து செய்தி வெளியாகியிருக்கிறது. ஏஜெண்ட் தெரிவிக்கவில்லை]. அவருக்கு விசா இன்றோடு முடிகிறது. நாளை தான் வேறு பிளைட். நாளை பிளைட்டுக்கு மாற்றித் தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்கள். நாளைக்கு சென்று விடலாம் தான். வேறு முக்கியமான் விசயங்கள் இல்லை தான். இமிகிரேஷனில் ‘வார்ன்’ மட்டுமே செய்வார்கள் தான். அதை போன் செய்து கேட்டாயிற்று தான். போனில் பேசிய இமிகிரேசன் பெண்மணி தன் பெயரை மட்டுமே கூறினாள் தான். ICயை சொல்லவில்லை தான். எல்லாம் நன்மைக்கே தான்.

ஆனால் நாளைவரை, அவர் ஒரு பிரச்சனையும் இல்லாமல், இந்தியாவில் காலடி எடுத்துவைக்கும்வரையில், அலைபாயும், ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும், அவர் மனதிற்கு யார் ஆறுதல் கூறுவது?

அவர் உலகநாடுகளில் பல இடங்களுக்கு சென்று வந்தவர். தனக்கு இவ்வாறு நேர்வது இதுதான் முதல் முறை என்றார்.

தவறு இருபக்கமும் இருக்கிறது. ஆனால் விழுக்காடு? அன்பர்களே உஷார்.

மற்றவர்கள் திருந்துவார்கள் என்று நினைப்பதைவிட நாம் திருந்துவது தான் உஷிதம் (நான் உஷிதமணி அல்ல!). பயணம் செய்யும் ஓரிரு நாட்களுக்கு முன், விமான நேரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

என்னுடைய கல்லூரிக் காலங்களிலிருந்தே நான் விகடனில் வரும் ‘அரசன்’ சம்பந்தப்பட்ட கார்டூன்களின் ரசிகன். அந்த கார்டூன்களில் சில சமயம் ‘சிம்பு’ என்ற பெயர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த கார்டூன்கள் ஒரு மனிதனின் கற்பனைத்திறனை (creativity) பறைசாற்றுபவை. மதனின் கார்டூனும் அவ்வாறே. ஆனால் நமக்கு தெரியாத அல்லது நாம் அனுபவிக்காத, அதுவும் நாம் புராதாண காலத்து அரச தமிழ் சினிமாவில் கண்டு ஆச்சரியப்பட்ட, வீர தீர பராக்கிரம மன்னர்களை, அரசர்களை நையாண்டி செய்வதை பார்க்கும் பொழுது எங்கிருந்தோ சிரிப்பு வந்து தொற்றிக்கொள்கிறது.

பட அறிவிப்பு வந்து, அதுவும் வடிவேலு தான் இம்சை அரசன் என்ற பொழுது, எனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. அன்றிலிருந்து நான் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். பல தடைகளை மீறி படம் திரையிடப்பட்டிருக்கிறது. குதிரை வதைத் தடுப்புச்சட்டம் நுழைந்தது, படத்தில் வரும் நகைச்சுவைகளையும் மிஞ்சி விட்டது. அரசர் காலத்து படங்களை எடுக்கும் பொழுது, அரசர் குதிரையில் வருவது போன்று காட்டவேண்டுமேயானால், நாம் PreKG/LKG/UKG, படிக்கும் பொழுது விளையாடப் பயன்படுத்திய மரக்குதிரைகளையா உபயோகிக்க முடியும்? குதிரைகளின் மீது இவர்களுக்கு இருக்கும் பாசத்தை சண்டை காட்சிகளில் உதை வாங்கி, சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழும் (உபையம்: சந்திரமுகி) துணைநடிகர்கள் மீது காட்டியிருக்கலாம். மனித வதை தடைச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?

படம், என் நண்பன் பாணியில் சொல்வதென்றால், ‘ரவுசு’ தான். படம் ஆரம்பித்தவுடன், திரையில் தோன்றும், கதாபாத்திரங்களை அம்புக்குறியிட்டு அறிமுகப்படுத்தும் பொழுது, அங்கே தூணில் ஒட்டிக் கொண்டிருக்கும் பல்லியை, ‘அரண்மனை பல்லி’ என்று வட்டமிட்டு காட்டும் பொழுது தொடங்குகிறது ‘ரவுசு’. அங்கிருந்து கடைசியில், ‘நம் மூதாயதயர்களான அலெக்சாண்டர், சாம்ராட் அசோகர்,BraveHeart Mel Gibson போன்று வீரமாக வாழ்வோம்’ என்று இம்சை அரசன் (வடிவேலு) கர்ஜிக்கும் வரை படம் நெடுக ரவுசு தான். அவர் மீசையே ரவுசு தான்.

‘சிம்புதேவன்’ அடிபடையில் தான் ஒரு கார்டூனிஸ்ட் என்பதை படத்தில் பல இடங்களில் நிரூபிக்கிறார். அந்தபுரத்தைக் காட்டும் பொழுது, ‘அந்தபுரம் 24 மணி நேர சேவை’ என்று முகப்பில் எழுதியிருப்பது, கோட்டை வாசலில்,’பழைய எண்:24 புதிய எண்:42 எதிர்கால எண்: 0.05′ என்று எழுதியிருப்பது போன்று சில உதாரணங்கள்.

வடிவேலு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை மறுபடியும் ஒரு முறை ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார். அவருக்கு ‘கைப்பிள்ளை’யிலிருந்து நான் தீவிர ரசிகன். என் நண்பர் கூட்டம் ‘வாலிப வயசு’ என்று கைப்பிள்ளை போன்று இன்றும் செய்து காட்டிவருகின்றனர். ‘ஆணியே புடுங்கவேனாம்’ என்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் வரும் வசனம் இன்றும் எங்கள் வட்டத்தில் புழக்கத்தில் உள்ளது. ஆனால் அவர் திரையில் தோன்றிய பொழுது நான் மட்டுமே கைதட்டிக் கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் கை தட்டக்கூடாதோ?

ஒரு வடிவேலே வயிற்றைப் புண்ணாக்கும் பொழுது படத்தில் இரண்டு வடிவேலுகள். கேட்கவா வேண்டும்? கரடி நகைச்சுவையும், அக்காகோலா,கப்சி, ஜாதிச் சண்டை மைதானம் போன்றவையும் நம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. படம் முடிந்து வந்தவுடன், மதியம் சாப்பிட்ட சாப்பாடு சரியில்லையோ என்று நினைக்குமளவு வயிற்று வலி.

அக்காகோலா,கப்சி போன்ற வெளிநாட்டு உற்சாகபாணங்களை ஆங்கிலேயர்கள் விற்க வரும்பொழுது, மங்குனி(அப்படியென்றால் என்ன?) அமைச்சர் உள்ளூர் தயாரிப்பு நசுக்கப்பட்டு விடாதா என்று கேட்கும் பொழுது, பெயர் மட்டும் தமிழில் வைத்துக்கொள்ளலாம், மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று இம்சை அரசன் கூறுவது சற்று யோசிக்கவைக்கிறது. வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, சிந்திக்கவும் விசயம் இருக்கிறது.

இந்த நல்ல முயற்சிக்கு வித்திட்ட ஷங்கருக்கு பாராட்டுகள்.

எனக்கு Lord Of The Rings பார்க்கும் பொழுதெல்லாம், நமது பொன்னியின் செல்வன் கதை, ஞாபகத்திற்கு வரும். ஏன் பொன்னியின் செல்வன் கதையை அதே பிரம்மாண்டத்துடன் திரைப்படமாக தயாரிக்க முடியாது என்ற எண்ணமும் உடன்வரும்.

சிறிது நாட்களுக்கு முன்பு தான் ‘சஞ்சய் லீலா பன்சாலியின்’ ‘தேவதாஸ்’ திரைப்படம் பார்த்தேன். எத்தனை அழகு? எத்தனை பிரம்மாண்டம்? என்னமோ தெரியவில்லை எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது பழைய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தான், அதை அப்படியே, மிகப் பிரம்மாண்டமாக, மறு தயாரிப்பு செய்யலாம்!

இம்சை அரசனின் வெற்றியால், இவை எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்.

Imsai Arasan 23am Pulikesi : Review

அசட்டு மனிதர்கள் – தேன்கூடு போட்டிக்கான சிறுகதை

(சிறுகதை)

ஊ…ஊ..ஊ…
நாய்கள் மிகப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன. நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தால் கூட பயம் இராது. ஊளையிட்டுக்கொண்டிருந்தால் மனதிற்கு கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. அதுவும் இந்த அர்த்த ராத்திரியில்.
மணி என்ன இருக்கும்? நான் வரும்போதே 12:00 இருக்குமே?

அப்பாடா, எப்படியோ இந்த முறை சிரமப்பட்டேனும் நெல் அவித்தாகிவிட்டது. இனி ஒரு மூன்று மாதத்திற்கு கவலை இருக்காது. என் குடும்பம் மிக சிறியது. என் கணவர் நான் மற்றும் என் மூன்று வயது குழந்தை.

என் கணவர் மிகவும் அன்பானவர். அவருக்கு ஏகப்பட்ட கடன் தொல்லைகள். அதனால் குடிக்க ஆரம்பித்தார். அவர் எப்பொழுது குடிக்க ஆரம்பித்தாரோ அப்பொழுதிலிருந்து என்னை அடிக்கவும் ஆரம்பித்தார். அவர் குடித்தால் என்ன? அடித்தால் என்ன? அவர் என் கணவர். அதுவும் அன்பான கணவர். என் மூன்று வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. எனது பக்கத்தில். கண்ணம்மா அந்தப் பக்கம் போகாதே! என்ன கிழே போய் குழ்ந்தைகளிடம் விளையாட வேண்டுமா? வேண்டாம் செல்லம். அதுகள் தான் உன்னைப் பார்த்தாலே கத்துகிண்றனவே? அப்புறம் பெரிய பிரச்சனையாகிவிடும். நாம் இந்த வீட்டில் இருக்க முடியாது. இங்கேயே விளையாடு கண்ணா. அம்மா சிறிது நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. எப்படி இந்த அண்டாவை மாடிக்கு தூக்கிக் கொண்டு வந்தேன்? அண்டா நிறைய அவித்த நெல். அதுவும் நன்றாக கொதித்த நீரில். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து காயப் போட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்.
சுத்தமான பளீர் வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கிறாள் என் மகள். நானும் கூடத்தான் வெள்ளை சேலை.இப்பொழுது புதிதாக வந்திருக்கும் மிஷெனில் துவைத்தது. முன்பெல்லாம் நான் தான் கைகளால் துவைப்பேன். இவர்கள் வந்த பின் சவுகரியமாக போய்விட்டது. வெள்ளை நிற கவுனில் தேவதை மாதிரி இருக்கிறாள் என் மகள். விளையாடட்டும். ஊ..ஊ…சே…இந்த நாய்கள் ஏன் இப்படிக் ஊளையிடுகின்றன? அவர் வந்துவிட்டால் இந்த நாய்களை விரட்டியடித்து விடுவார். வேகமாக முடித்துக் கொண்டு செல்ல வேண்டும். அவர் வந்து விடுவார். குறுக்கு வலிக்கிறது. இன்னும் குணிந்து நெல்லை நன்றாக பரப்பிவிடுகிறேன்.

கணவர் அடித்தாலும், என் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், நான் ரேஷன் கடையில் அரிசி வாங்கி வரும்பொழுது, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் என் கணவர். அவருக்கு பிடித்தமான என் சேலையை பேனில் கட்டி தற்கொலை செய்துகொண்டார். காற்று இதமாக வீசுகிறது. முடியப்படாத எனது கூந்தல் காற்றில் அலை பாய்கிறது. மல்லிகை மனம் வீசுகிறது. எங்கிருந்து வாசனை வருகிறது? நான் மல்லிகைப்பூ வைக்கவில்லையே. அன்றிலிருந்து எனக்கு என் மகள் தான் துணை. அவளுக்காகத்தான் நான் உயிர் வாழ்கிறேன். எங்கே எனது மகள்? காணவில்லையே? கீழே போய் விட்டாளா? ‘செல்லம் எங்கேடா போய்ட்ட? எழுந்தேன். சுற்றிப்பார்த்தேன். மொட்டை மாடியிலே காணவில்லை. ஐயோ..எங்கே போனாள்? அதோ அங்கே..என்ன அது? அண்டாவின் வெளியே இரண்டு சின்னக் கால்கள் வானத்தை நோக்கிப் பார்த்தன. ஐயோ என் மகள்! மகளே..ஓடுகிறேன். கத்துகிறேன். கதறுகிறேன். நாய்கள் ஊளையிடுவதை நிறுத்திவிட்டன.கொதிக்கும் நெல் குவியலில்..அண்டாவுக்குள்…ஆ…ஆ….எனது தொண்டை அடைக்கிறது. விம்முகிறேன். என்னால் முடிந்த வரையில் கதறுகிறேன். தரையில் முட்டி முட்டி சாய்கிறேன். என் செல்லம்.. எழுந்து ஓடுகிறேன். மொட்டை மாடியிலிருந்து குதிக்கிறேன். எதற்காக வாழ வேண்டும்? எனது தலை நச்சென்று தரையில் மோதுகிறது. மூளை சிதறுகிறது. இரத்தம் வழிந்தோடுகிறது.

இப்பொழுது நானும் எனது கணவரும் என் மூன்று வயது குழந்தையும் சந்தோசமாக வாழ்கிறோம். கடன் தொல்லை கிடையாது. அவர் குடிப்பதும் இல்லை என்னை அடிப்பதுமில்லை.மணி என்ன இருக்கும்? நான் வரும்பொழுதே 12:00 இருக்குமே. அப்பாடா, எப்படியோ இந்த முறை சிரமப்பட்டேனும் நெல் அவித்தாகிவிட்டது. இனி ஒரு மூன்று மாதத்திற்கு பிரச்சினை இருக்காது.நான் நெல்லை காயப்போட்டுக்கொண்டிருக்கிறேன். எனது மூன்று வயது மகள் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவர் வந்து விடுவார்.

எனது குழந்தையை அழைத்துக்கொண்டு மாடி படிகளில் இறங்கி கீழே வந்தேன். கீழே இரண்டு பையன்களும் ஒரு பெண்களும் இருந்தார்கள். பையன்கள் புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெண் மட்டும் படித்துக்கொண்டிருந்தாள். நாளைக்கு பரிட்சையாக இருக்கும். என் குழந்தை சிரித்தது. நன்றாக சிரித்தது. அந்த பெண் மிரண்டு போய் நிமிர்ந்து பார்த்தது. பிறகு தன்னால் ஆன மட்டும் ‘வீல்’ என்று கத்தியது. சத்தத்தில் பையன்களும் முழித்துக் கொண்டு அவர்களும் கத்தினார்கள்.
இவர்களுக்கு இதே வேளையாகப் போய்விட்டது. அசட்டு மனிதர்கள். நான் மறுபடியும் மொட்டை மாடிக்கே சென்று விட்டேன், என் குழந்தையோடு. நெல் காயப்போடவேண்டுமே. என் செல்லத்திடம் இனிமேல் இப்படி சிரிக்காதே என்று சொல்லிவைத்தேன்.

**