தீவிர‌வாதிக‌ள் உருவாக்கிய‌ முற்றிலும் புதிய‌ வேலை வாய்ப்புக‌ள்

நேற்றோ அத‌ற்கு முன் தின‌மோ அதிகாலையில் எழுந்து மிகுந்த‌ ப‌சியுட‌ன் செரிய‌ல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நியுயார்க் ந‌க‌ர‌ குண்டு வெடிப்பு பீதி ச‌ம்ப‌ந்த‌மான‌ செய்தி சிஎன்என் இல் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருந்த‌து. இது தொட‌ர்பான‌ ந‌ப‌ரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தாயிற்று. இன்னும் பெய‌ர் தெரிய‌வில்லை. அல்ல‌து நீதிப‌தி அறிவிக்கிறவ‌ரை சொல்ல‌க்கூடாது என்று நினைத்திருக்கிறார்க‌ள். நீதிப‌தி அறிவிப்பு செய்ய‌ இன்னும் ப‌த்து நிமிட‌ம் இருக்கிற‌து. அப்பொழுது தான் தீவிர‌வாத‌ம் உருவாக்கியிருக்கிற‌ வேலைவாய்ப்புக‌ளைப் ப‌ற்றித் தெரிந்து கொண்டேன்.

இர‌ண்டு ந‌ப‌ர்க‌ள் பேசினார்க‌ள். ஒருவ‌ரின் வேலையின் பெய‌ர் Terror Expert ம‌ற்றொருவ‌ரின் வேலை யின் பெய‌ர் Terrorism Analyst.

தீவிர‌வாத‌ ஆய்வாள‌ர்(?!) ச‌ரி Terror Expert?! எப்ப‌டித் த‌ன்னை அறிமுக‌ம் செய்து கொள்வார்?

இன்னும் கொஞ்ச‌ கால‌த்தில் வானிலை ஆய்வாள‌ர் தின‌மும் வானிலை ஆராய்ச்சி செய்து செய்தியில் இன்ன‌ இன்ன‌ இட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய‌க்கூடும் க‌டும் புய‌ல் வீச‌க்கூடும் என்று சொல்வ‌து போல‌, பின்னாடி ஒரு உல‌க‌வ‌ரைப‌ட‌த்தை வைத்துக்கொண்டு, தீவிர‌வாத‌த்தையும் ஆராய்ந்து இந்த‌ இட‌ங்க‌ளில் மித‌மான‌ குண்டு வெடிப்பு இருக்கும்; உயிராப‌த்து ஏதும் இருக்காது. இந்த‌ இட‌த்தில் க‌டுமையான‌ குண்டுவெடிப்பு இருக்கும்; உயிர் ப‌லி இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து என்று சொன்னாலும் சொல்வார்க‌ள்.

வானிலையைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக‌ குடை எடுத்து வ‌ருவ‌து போல‌ தீவிர‌வாத‌நிலையைத் தெரிந்து கொண்டு என்ன‌ செய்வ‌து? குடை உத‌வாதே?

இன்ஸ்யூர‌ன்ஸ் வாங்கிக்கொண்டு போக‌லாம். குண்டு வெடிக்கிற‌து என்று போகிற‌ இட‌த்துக்குப் போகாம‌ல் இருக்க‌ முடியுமா என்ன‌?

மும்பை மேரி ஜான் என்கிற‌ ஹிந்திப்ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? மும்பையில் ர‌யிலில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்புக‌ளுக்குப் பிற‌கு அத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ரின் வாழ்க்கையை அழ‌காக‌ அல‌சுகிற‌து இந்த‌ப் ப‌ட‌ம்.

மாத‌வ‌ன் ம‌யிரிழையில் த‌ப்பியிருப்பார் ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் ஒரு கையை இழ‌ந்து விடுவார். ர‌யில் குண்டு வெடிப்புக்கு முன் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு வ‌ந்தும் ம‌றுத்துவிடுகிற‌ மாத‌வ‌ன் குண்டு வெடிப்புக்குப் பின் பேசாம‌ல் அமெரிக்கா போய்விட‌லாம் என்று நினைக்கிறார். இங்கு ர‌யிலில் ஏற‌வே ப‌ய‌ப்ப‌டுகிறார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரிட‌ம் இதைச் சொல்ல‌கிறார். எந்த‌ நாட்டில் தான் தீவிர‌வாத‌ம் இல்லை? பாதுகாப்பான‌ தேச‌ம் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ அமெரிக்காவின் இர‌ட்டைக் கோபுர‌த்தைத் தீவிர‌வாதிக‌ள் த‌க‌ர்த்து எறிய‌வில்லையா?

க‌டைசியில் அந்த‌ ந‌ண்ப‌ர் சொல்லுவார்: ந‌ம் பிள்ளைக‌ளுக்கு தீவிர‌வாத‌ம் ப‌ழ‌கிவிடும். எப்ப‌டி பூக‌ம்ப‌த்தினோடும் புய‌ல்க‌ளோடும் சூறாவ‌ளிக‌ளோடும் சுனாமிக‌ளோடும் வாழ‌ப்ப‌ழ‌கிக்கொண்டோமோ அதே போல‌ ந‌ம் பிள்ளைக‌ள் தீவிர‌வாத‌த்தோடு வாழப் ப‌ழ‌கிக்கொள்வார்க‌ள்.

ரொம்ப‌வும் வ‌ருத்த‌மாக‌ இருக்கிற‌து.

பாத்ததும் படித்ததும்

(அரவிந்த அடிகா, விகாஷ் ஸவரூப், ஸ்லம்டாக், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் படங்கள்)

அரவிந்த் அடிகா வைட் டைகருக்கு அப்புறம் Between The Assasinations என்றொரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பாப்புலரில் இன்று பார்த்தேன். தொகுப்பு பாப்புலராகிவிட்டதா என்று தெரியவில்லை. தற்பொழுது படிப்பதற்கு நிறைய இருப்பதால் இப்போதைக்கு வாங்கவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். சல்மான்ருஷ்டிக்கு பிறகு இந்திய ஆங்கில எழுத்து மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கிரண் தேசாய், அருந்ததி ராய், விக்ரம் செத், அரவிந்த் அடிகா, அமிதவ் கோஷ் போல நிறைய பேர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர். புக்கர் பரிசை வரிசையாக தட்டிச்செல்கிறார்கள். இந்த வரிசையில் மேலும் ஒருவர்: ஸ்லம் டாக் மில்லியனரை எழுதிய விகாஷ் ஸ்வரூப். இன்று கூட சிங்கப்பூரிலிருந்த வெளிவரும் இந்திய வாரப்பத்திரிக்கையான Tablaவில் கூட இவர்களைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. பிரிட்டிஷ் எப்படி வளைச்சு வளைச்சு அட்டாக் பண்ணி காலணிய ஆதிக்கம் பண்ணாங்களோ அதே போல இந்தியர்கள் சகட்டுமேனிக்கு எல்லாத் துறைகளிலும் புகுந்து வெளுத்துக் கட்டுறாங்க. அதுவும் எழுத்துத் துறையில் முக்கிய இடம் பிடிப்பது என்பது மிக நன்று.

தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் Three Cups Of Teaக்கு அப்புறம் Tagging என்றொரு புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன். Fiction படிப்பதை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன், Michio Kaku எழுதிய புத்தகங்களின் மேல் ஒரு கண் இருக்கிறது. மேலும் அயன் ரான்ட்-இன் Atlas Shrugged படிக்கவேண்டும் என்றும் நினைத்திருக்க்றேன். பார்ப்போம்.

*

என் அண்ணன் நெடுங்குருதி ஒரு வழியாக படித்துமுடித்து விட்டேன் என்று சொன்னார். நெடுங்குருதி பற்றி ஒரு நெடும் பதிவு தான் போடவேண்டும்,. சிங்கப்பூருக்கு வந்த பொழுது இங்கே நூலகத்தில் மெம்பராக சேர்ந்த பொழுது முதன் முதலாக இரண்டு புத்தங்கள் எடுத்தேன். Code To Zero மற்றும் நெடுங்குருதி. கடைசி அறுபது எழுபது பக்கங்கள் கொஞ்சம் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டால் நெடுங்குருதி தமிழில் ஒரு மிக முக்கியமான நாவல். ராமகிருஷ்ணனின் அழுங்காத அலட்டல் இல்லாத எழுத்து நடை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய சிந்தனையும் உவமைகளும் மிகவும் புதிதாக இருந்தது. ராமகிருஷ்ணன் மிக நுனுக்கமான பார்வை கொண்டவர். வெயிலையும் எறுப்புகளையும் அவர் பின் தொடர்ந்து செல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நெடுங்குருதியில் வரும் அந்த சிறு பையன் கண்டிப்பாக அவராகத்தான் இருக்கவேண்டும். அனுபவிக்காத ஒருத்தரால் எழுதப்பட்ட நாவல் இல்லை இது. அந்த நாவலின் நான் வாங்கிய மறுபதிப்பில் ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதியிருப்பார் அது கூட அவ்வளவு அழகாக இருக்கும். மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும்.

ஆனால் அவரது யாமம் படித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்? ஏன் ராமகிருஷ்ணன் இது போன்றதொரு நாவல் எழுதினார் என்று நான் நிறைய நாட்கள் எனக்குள்ளும் என் நண்பர் ராஜாராமிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ராமகிருஷ்ணனை சிங்கப்பூரில் சந்தித்தபொழுது அந்தக் கேள்வியை நான் கேட்டேவிட்டேன். நீங்கள் இந்த நாவல் எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்று. சிரித்த ராமகிருஷ்ணன் சொன்ன பதில் எனக்கு ஞாபகம் இல்லை. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு கண்டிப்பாக எட்டு மாதங்கள் இருக்கும். யாமம் படித்து ஒரு வருடம் இருக்கும். கண்டிப்பாக மீண்டும் யாமம் படிக்கும் எண்ணமில்லை. adultryஐ ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எழுதினால் எனக்கு பிடிப்பதில்லை. பாலகுமாரன் எனக்கு பிடிக்காமல் போனதற்கு அது தான் காரணம்.

*

ஸ்லம்டாக் மில்லியனர் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் பார்த்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் பிறகு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஹாலிவுட்ல இருந்து வந்து படம் எடுத்தாலும் பாலிவுட் படத்துக்கு கண்டிப்பா லவ் இருக்கனும்ங்கற விதியை கடைப்பிடித்திருக்கிறார் டேனி போயல். நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. சேரியில் வளர்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இங்கிலீஷ் பேச வருகிறது. அது தான் மிக முக்கியமான கேள்வி. ஆஸ்கார் வாங்கியிருக்கிறதில்லியா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள கோனார் நோட்ஸைப் புரட்டிப்பார்ப்பது போல விகாஸ் ஸ்வருப்பின் ஒரிஜினல் நாவலை (Q&A) எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்?

நான் நாவல் படிக்கவில்லை. படிக்கவும் விருப்பம் இல்லை. நாவல் படித்துவிட்டு படம் பார்க்கலாம். நன்றாக இருக்கும். ஹாரி பாட்டர் ஒரு உதாரணம். படித்து அனுபவித்த சாகச காட்சிகளை நேரில் படமாகப் பார்ப்பது என்பது தனி ஆனந்தம் தான். ஆனால் படம் பார்த்து விட்டு நாவல் படிக்க முடியுமா? இந்தமாதிரி விடை தெரியா கேள்விகள் இருக்கிற படங்களுக்கு நாவல் படித்து முழுவதும் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Telluride Film Festivalஇன் போது டேனி போயலிடம் “நீங்கள் எப்பொழுதும் எடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு ஏன் இந்தியாவை சப்ஜக்ட்டாகக் கொண்ட படத்தை இயக்குகிறீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதில் சொன்னாராம்: “எனக்கு இந்தியாவைப் பற்றி ஏதும் தெரியாது, நான் இந்தியாவுக்கு போனதே இல்லை. அதானால் இதை ஒரு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டேன்” என்றாராம். இதேபோல “எனக்கு நீயுயார்க் நகர கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை தெரியாது, நான் நியூயார்க்குக்குப் போனதேயில்லை, அதனால் தெரிந்துகொள்வதற்காக நான் படத்தை இயக்குகிறேன்” என்று சொன்னால் என்ன நடக்கும் என்கிற கேள்வியைக் கேட்டிருந்தார் சல்மான்ருஷ்டி. கிழிச்சிருக்கமாட்டாய்ங்க.

சரி. படத்துக்கும் நாவலுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறதென்று பார்ப்போம். படத்தின் ஹீரோ ஜமால் மாலிக் படத்தில் காட்டுவதைப் போன்ற கலவரத்தால் அனாதையாக்கப்பட்டவர் அல்ல. பிறந்த உடன் கைவிடப்பட்டு ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் எட்டு வயது வரை டெல்லியில் வளர்க்கப்பட்டவர். பாதிரியாரும் கதோலிக்க சர்ச்சும் டெல்லியும் படத்தில் வரவேயில்லை. ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் வளர்க்கப்பட்டதால் தான் ஜமால் ஆங்கிலம் பேசுகிறான். ஜமால் சரி, கோனார் நோட்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டாயிற்று மற்றவர்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள்? கதோலிக்க சர்ச் வரவில்லை சரி, இந்து முஸ்லீம் கலவரம் ஏன் படத்தில் திணிக்கப்பட்டது? வளர்த்த பாதிரியார் பிறகு மற்றொரு பாதிரியாரால் கொலை செய்யப்படுகிறார். இதுவும் படத்தில் வரவில்லை. மேலும் பல வித்தியாசங்களுக்கு இங்கே பார்க்கவும்.

இந்தப் படத்துக்கு ஆஸ்கார் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா? இதற்கு முன்னர் ஆஸ்கார் வாங்கிய No Country For Old Men, Crash போன்ற படங்களுக்கு பக்கத்திலாவது இது வரமுடியுமா? கண்டிப்பாக கிடையாது. தாரே ஜமீன் பர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு பகுதியைக் கூட இது ஏற்படுத்தவில்லை. ரஹ்மான் அப்படி என்ன படத்துக்கு இசையமைத்துவிட்டார்? ஜெய் ஹோ பாடல் ரஹ்மானின் தரத்துக்கு மிக மிக சாதாரணம் தான். படத்தில் ஜெய் ஹோ என்று கடைசியில் பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் வேறு. அது சாதாரண டான்ஸை விட மிகவும் கேவலமாக இருந்தது. அப்படி இருக்க ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது படத்தில்?

படத்தில் ஒன்றும் இல்லை. படத்துக்கு வெளியே நாம் இருக்கிறோம். இந்தியர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் No country for old men படம் ஆஸ்கார் வாங்கியது என்று எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? அதை எத்தனை பேர் லைவ்வாக Oscar Show பார்த்திருப்பார்கள்? What was the viewership rating? இந்திய மொழி படம் ஒன்று ஆஸ்காருக்குள் நுழைந்தஉடன் எத்தனை பேர் ஆஸ்கார் ஷோவைப் பார்த்திருப்பார்கள்? Thats the trick. ஆசியாவிலும் ஆஸ்கார் மிகவும் பிரபலமடைந்துவிடும். This film was at the right time. Thats it.

இனி வருடம் தோறும் ஒரு ஆசிய மொழி படத்துக்கு எதோ ஒரு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான் சொல்வதை நம்பவில்லையென்றால் இதைப் பாருங்கள்:
போனவருடம் எப்படி இருந்தது?
இந்த வருடம் எப்படி இருந்தது? 13% viewership கூடியிருக்கிறது.

கமல் படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து மூன்னூறு மணி நேரம் மேக்கப் போடாமல் அழகாக இயல்பாக மனதை தொடுகிற சப்ஜெக்ட்டோடு நடித்தார் என்றால் சீக்கிரமே ஆஸ்கார் நாயகன் ஆகிற வாய்ப்பிருக்கிறது. ஜெய் ஹோ.

*

Gran Torino பார்த்தேன். எனக்கு ஏதோ ரஜினி படம் பார்த்ததைப் போல இருந்தது. கறுப்பர்களிடம் வெறும் விரல்களைக் காட்டி மிரட்டும் போது ஆகட்டும், அவருடைய புல் தரையில் சண்டைப் போடும் சீன குண்டர்களைப் பார்த்து துப்பாக்கியைக் காட்டி “If you ever step in to my lawn..” என்று கர்ஜிக்கும் பொழுதாகட்டும், Client Eastwood is still a lion. க்ளைமாக்ஸ் தான் ஒட்டவில்லை. வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.

மற்றொரு படம் The Lost (2009). மற்றொரு மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கதை. நம்ப விடாது கருப்பு தொடர் மாதிரி. I doubted the end. But I didnt doubt. Mummy : The Tomb of the dragon empire. கன்றாவி. விஜயகாந்த் எவ்வளவோ தேவலாம். Fraserக்கு வயசாகி விட்டது.

அபியும் நானும். ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். மற்றபடி நெஞ்சைத் தொடும் விதமாக ஏதும் இல்லையென்றே எனக்குத் தோன்றியது. பிச்சக்காரரைப் பார்த்த உடன் ப்ரகாஷ்ராஜ் டக்கென்று ஐஸ்வர்யாவிடம் “உன்னொட சொந்தக்காரரா?”ன்னு கேக்குற இடம் நச். மற்றபடி த்ரிஷா தனது லவ்வருடன் சேர்ந்து நடப்பதைப் பார்க்கும் போது ப்ரகாஷ்ராஜ் கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது நமக்கு கடுப்பு தான் வருகிறது. என் அனுமதி இல்லாமல் பாய் ·ப்ரண்ட் வெச்சிருக்கியேன்னு கோபப்படுறது ஒரு ரகம். ஒத்துக்கொள்ளலாம். இதெல்லாம் கொஞ்சம் டூமச் தான். ஆனால் மகள் மீது possesiveஆக இருக்கும் அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். I know what I am doing டயலாக் ·பேஷனாகியிருக்குமே?

சொல்லமறந்துவிட்டேன், ஒரு அற்புதமான படம் பார்த்தேன், பெயர்: அருந்ததி. அப்பப்பா என்ன படம். என்ன நடிப்பு. என்ன வேகம். சான்சே இல்ல. இது போன்ற ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. ஹைலி எமோஷனல் மூவி. மூன்று மணி நேரம் நம்மை இழுத்துப் பிடித்து உட்காரவெச்சிருந்தார் டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா. அம்மன் படம் பாத்தப்பவே நான் அவரது ரசிகன். இப்போ பரம் விசிரி ஆகிவிட்டேன். அனுஷ்கா அருமையான செலக்ஷன். எப்படி ரம்யாகிருஷ்ணனை கரெக்ட்டாக அம்மனுக்கு பிடிச்சாரோ அதே போல. மண்டையில் தேங்காய் உடைத்து உயிர் தியாகம் செய்யும் போதாகட்டும், இந்த ஜென்மத்தில் முன் ஜென்மத்தில் தானே வரைந்த படத்தில் இருக்கும் செய்தியை decode செய்யும் பொழுதாகட்டும், சயாஜி ஷிண்டே தூக்கியெறியும் வாளை பிடிப்பதாகட்டும் தூள். வாளை லாவகமாக பிடிக்கும் பொழுது இன்னொரு பாட்ஷா போல இருந்தது.

*

சன் டீவி குங்குமம் தொல்லை தாங்கமுடியல. ஒரு அட்டு படத்தை எடுத்துற வேண்டியது. அப்புறம் படத்தில் நடிச்சவங்கள ஊர் ஊரா கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவெச்சு அமர்க்களம் பண்ணவிடுறது. பாக்க வந்த மக்கள கை ஆட்ட வெச்சு படம் பிடிக்கிறது. குங்குமத்தில் ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுத வேண்டியது. அப்படித்தான் நான் ஒரு படத்துக்கு ஏமாந்தேன். படிக்காதவன். பொதுவா நான் குங்குமம் விமர்சனம் எல்லாம் படிக்கிறதில்ல. ஆனா விதி வலியது இல்லியா, அன்னிக்கின்னு பார்த்து என் கண்ணில பட்டுத் தொலைஞ்சது. அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு ஒரே அலம்பல். எனக்கு இவிங்க படம்ங்கிறது தெரியாது. தெரிஞ்சிருந்தா தப்பிச்சிருப்பேன். தனுஷ் நடிச்ச முந்தைய படங்கள் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருந்துச்சா, அதானால் நல்லா இருக்கும் போலருக்குன்னு நாலு டாலர் கொடுத்து வாடகைக்கு எடுத்துவந்தேன். தனுஷ் சார் சந்தானம் கருணாஸ் இந்த படத்துல இல்லியா சார்? மயில்சாமி, சன் டீவில வர்ற காமெடியன்கள்ன்னு ஒரே அப்பா வயசு ப்ரண்ட்ஸ் உங்களுக்கு! சகிக்கல. நானும் படத்தில இப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும் அப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும்னு உக்காந்து உக்காந்து ஏமாந்துட்டேன். விவேக் காமெடியும் சகிக்கல. எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம படத்த ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுதமுடியுதோ தெரியல.

விகடனும் இதுக்கு விதிவிலக்கல்ல. SMS படத்துக்கு மார்க் மழை பொழிந்திருந்ததைப் பார்த்தேன். அவ்ளோ நல்லாவாயிருக்கு படம்? நான் பாக்கல.

*

நான் கடவுள் நான் பார்க்கவேயில்லை. பார்க்கவேண்டும் என்றும் தோன்றவும் இல்லை. ஜெமோவின் ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன். அது ஏற்படுத்திய பாதிப்பு குறையவே நீண்ட நாட்கள் ஆனது. படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை.

*

வாரணம் ஆயிரம் இப்போத்தான் பார்த்தேன். சூர்யா அழகாக இருக்கிறார். இப்ப அவர் தான் மீடியாக்களுக்கு சுல்த்தான் போல? விஜன் அவார்ட்ஸ்ல பார்த்தீங்களா? சூர்யா ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை? பாவம் விஜய் இருக்காறா இல்லியாங்கிற அளவுக்கு உக்காந்திருந்தார். யாரும் கண்டுக்கிடல. இப்ப வருகிற படங்கள கவனிச்சீங்களா? சூரியாவின் உடைகளுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை. அயனையும் ஆறுவையும் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

அயன் மற்றொரு படம். நன்றாக இருந்தது. சண்டை பாட்டு காதல் காமெடி சென்ட்டிமெண்ட் என்று கலந்து அடித்து விளையாடியிருந்தார் இயக்குனர் KV ஆனந்த். ஜெகன் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அவரை விஜய் டீவியில இப்ப பாக்க முடியிறதில்லையே? அந்த ஆப்பிரிக்க சண்டைக்காட்சி சேசிங் அற்புதம். ஆனால் குவாண்டம் ஆ·ப் சோலேஸை நினைப்படுத்தியது. இதே போல ஒரு சண்டைக் காட்சி The Bourne Ultimatumவிலும் உண்டு. ஞாபகம் இருக்கிறதா? ஹனி ஹனி பாடல் என்னுடைய ·பேவரிட்டாக ரொம்ப நாள் இருந்தது. இப்பொழுது “காற்றுக்குள்ளே” பாடல் சர்வம் படத்திலிருந்து தான் என்னுடைய ·பேவரிட்.

அடுத்து சர்வம். விஷ்ணுவர்த்தன் அடுத்த மணிரத்னம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு நாளும் மணி இது போன்ற ஒரு படம் கொடுக்கமாட்டார். படம்மாய்யா இது? சும்மா காமிரா மட்டு அழகாக இருந்தால் போதுமா? Trailer பாத்து ஏமாந்தேன்யா. அவ்ளோ அழகா இருந்தது Trailer. நல்ல கதையும் கூட. ஆர்யா த்ரிஷா யுவன் நீரவ்ஷாவை வைத்துக்கொண்டு இதற்குமேலும் வீணடிக்க முடியாது. படத்தில் சொல்கிறார் போல மனதில் நிற்கிறார் போல ஒரு காட்சி கூட இல்லை. சர்வ நாசம்.

யாவரும் நலம் நல்ல முயற்சி. அழகாக நேர்த்தியாக எடுத்திருந்தார்கள். முடிவு கச்சிதம். ஆனால் எனக்கு Amityville Horror படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை.

*

BABEL

Sean Penn நடித்த 21 Grams என்ற அருமையான படத்தை இயக்கிய மெக்சிக்கோவில் பிறந்த Alejandro González Iñárritu என்பவர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். BABEL இந்த வருடத்தைய ஆஸ்காருக்கு ஏழு நாமினேஷன்களைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் – ஆனால் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமான – நடக்கும் சம்பவங்கள் காட்டப்படுகின்றன. அதில் வரும் கதாப்பாத்திரங்கள் தீவிரமாக அலசப்படுகின்றன. சம்பவங்கள் Butterfly Effect என்று சொல்ல முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று தான்.

முதலில் மொரோக்கோவின் ஒரு மூலையில், ஆடுகள் மேய்த்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. ஹசன் என்பவர், அப்துல்லா என்ற அந்த குடும்பத்தின் தலைவருக்கு துப்பாக்கி ஒன்றை விற்கிறார். அப்துல்லா தனது இரண்டு மகன்களிடம் அந்த துப்பாக்கியைக் கொடுக்கிறார். ஓநாய்களிடமிருந்து ஆட்டு மந்தையைக் காப்பாற்ற இந்த துப்பாக்கியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறுகிறார். ஹசன் அந்த துப்பாக்கி மூன்று கி.மீ வரை சுடும் தன்மை கொண்டது என்கிறார்.

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டாக சுடுகிறார்கள். அவர்களுக்கு இந்த துப்பாக்கி உண்மையிலே மூன்று கி.மீ சுடுமா என்ற சந்தேகம் எழுகிறது. அவர்கள் நின்று கொண்டிருக்கும் மலைமேலிருந்து கீழே ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வாகனங்களைக் குறிபார்க்கிறார்கள். முதலில் ஒரு வேன் வருகிறது. மூத்தவன் சுடுகிறான். ஒன்றும் நடக்கவில்லை. இளையவன், “உனக்கு சுடத்தெரியவில்லை என்னிடம் தா” என்று வாங்கி அங்கே வந்து கொண்டிருந்த ஒரு டூரிஸ்ட் பஸ்ஸைச் சுடுகிறான். முதலில் ஏதும் நடக்காதது போல சென்று கொண்டிருந்த பஸ் சட்டென்று நிற்கிறது.


அமெரிக்காவிலிருக்கும் ஒரு தம்பதியினர் -Richard, Susan -மொரோக்கோவுக்கு சிதைந்து கொண்டிருக்கும் தங்களது திருமண வாழ்க்கையை சீர் படுத்த டூர் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு மகன். ஒரு மகள். மகனையும் மகளையும் அமேரிக்காவிலிருக்கும் தங்களது வீட்டிலே நானியிடன் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் சிறய வாக்குவாதம் நிகழ்கிறது. ஒருவரை மற்றொருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த சூசன் குண்டடி படுகிறார். இரத்தம் வழிந்தோடுகிறது. அப்துல்லாவின் இளைய மகன் சுட்ட குண்டு சூசனைத் தாக்கியிருக்கிறது.

பக்கத்தில் ஏதும் ஆஸ்பத்திரி இல்லாமல் அருகிலிருக்கும் ஒரு கிராமத்துக்கு அவளை அழைத்துச் செல்கின்றனர்.பஸ்ஸில் உடன் பயனித்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் -அன்வர் – ரிச்சர்டுக்கு உதவியாக இருக்கிறார். போதுமான மருத்துவ வசதி இல்லாததால் குண்டடி பட்ட சூசனுக்கு மயக்க மருந்து இல்லாமலே தையல் போடப்படுகிறது. டூரிஸ்ட் பஸ்ஸில் உடன் பயனித்த அமேரிக்கர்கள் சூடு தாங்காமல் தாங்கள் திரும்ப வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். ரிச்சர்ட் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காமல் டூரிஸ்ட் பஸ் இவர்களை அந்த வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்திலே விட்டுச் செல்கின்றனர். ரிச்சர்ட் தனது எம்பசிக்குப் போன் செய்து போக்குவரத்து வசதி செய்து தரும் படி கேட்கிறான்.
இந்த சம்பவம் பரபரப்பு அடைகிறது. சுடப்பட்டவர் அமெரிக்கர் என்பதால் அமெரிக்கா தீவிரவாத வெறிச்செயல் என்று முத்திரை குத்துகிறது. இது தீவிரவாதம் இல்லை என்பதை நிரூபிக்க மொரோக்கோ அரசு தீவிர நடவடிக்கையில் இறங்குகிறது. மலையில் கண்டெடுத்த தோட்டாக்களை வைத்து என்ன துப்பாக்கி ரகம் என்பதைக் கண்டுபிடித்த போலீஸ் ஹசனை வலைத்துப் பிடிக்கிறது. ஹசன் தான் ஏற்கனவே அப்துல்லாவுக்கு விற்று விற்றதாகக் கூறுகிறான்.

போலீஸ் அப்துல்லாவைத் தேடிக்கொண்டு வரும்போது எதேச்சையாக அப்துல்லாவின் மகன்களை வழியில் பார்த்து அப்துல்லாவின் வீட்டுக்கு வழி கேட்கிறது. நிலமையை உணர்ந்து கொண்ட இரு சிறுவர்களும் – பெரியவன் முழித்து கொண்டிருக்க – சமயோஜிதமாக சிந்தித்து வழி மாற்றிக் கூறுகின்றனர். இந்த சீனில் சின்னப்பையன் செம கூல்.
ஜப்பானில் வாய் பேசவும் முடியாத, கேட்கவும் இயலாத ஒரு பெண்ணின் கதை வருகிறது. அவளது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இந்த மன உளைச்சலுடன், அவளுக்கு தன்னை மற்ற பையன்கள் கண்டுகொள்வதில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. அது obssession ஆக மாறுகிறது. விளைவு, அவள் public seduction இல் இறங்குகிறாள். உள்ளாடை ஏதுமின்றி மிகச்சிறய ஸ்கர்ட் மட்டும் போட்டுக்கொள்வது, டென்டிஸ்டிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பது என்று தொடங்கி கடைசியில் தனது அப்பாவை துப்பாக்கி சம்பந்தமாக விசாரிக்க வந்த டிடெக்டிவ் ஒருவரிடமே தன்னைக்கொடுக்கிறாள். டிடெக்டிவ் முதலில் மறுத்தாலும் பிறகு அவளின் அழுகையையும், நிலையும் நினைத்து சம்மதிக்கிறார். புறப்படும் பொழுது அவள் அவரிடம் ஒரு லெட்டர் கொடுக்கிறாள். அதை பிறகு வெளியே சென்றபிறகு படிக்குமாறு கூறுகிறாள்.

டிடெக்டிவிடம் அவள் தனது தாய் பால்கனியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள் என்கிறாள். அதைத் தான் பார்த்ததாகவும் சொல்கிறாள். அவளின் அப்பா ஒரு வேட்டைப்பிரியர். அவர் மொரோக்கோ சென்றிருந்த பொழுது ஹசனுக்கு – அவருக்கு guide ஆக இருந்திருக்கிறார்- பரிசாக துப்பாக்கியை வழங்கியிருக்கிறார்.

டிடெக்டிவ் கீழே வரும்பொழுது ஊமைப்பெண்ணின் அப்பாவும் வந்து விடுகிறார். அவரிடம் ஹசனுக்கு அவர் தான் துப்பாக்கியைக்கொடுத்தாரா என்று கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டு, அவரது மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு தனது வருத்தத்தை தெரிவிக்கிறார். ஆனால் அந்த ஊமைப்பெண்ணின் அப்பா அதிர்ச்சியடைந்து தன்னுடைய மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை , அவள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்கிறார்.

குழம்பிய டிடெக்டிவ் இரவு உணவின் போது அந்த ஊமைப்பெண் கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று இறுதி வரைக்கூறப்படவில்லை.

ரிச்சர்ட் மற்றும் சூசனின் மகன் மற்றும் மகளைப் பற்றிய கதை வருகிறது. மகனையும் மகளையும் கவனித்துக்கொள்ளும் நானி மெக்சிக்கோவைச் சேர்ந்தவர். அவரது மகனுக்கு அன்று திருமணம். கண்டிப்பாகச் சென்றே தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கும் நானி குழந்தைகளை என்ன செய்வதென்று யாரிடத்தில் விட்டுச் செல்வது என்று தெரியாமல் தன்னுடனே அழைத்துச்செல்கிறார். அவரது உறவினர் ஒருவரின் -கேயில்- காரில் இவர்கள் மெக்சிகோ செல்கின்றனர்.

அமெரிக்க சிறுவன் மெக்சிக்கோவை வினோதமாகப் பார்க்கிறான். கேயில் அநாசாயமாக கோழியின் கழுத்தைத் திருகிக் கொல்வது நம்மையே வெலவெலக்கச் செய்யும் போது இதையெல்லாம் பார்த்திறாத அமேரிக்கச் சிறுவன் என்ன செய்வான். பேந்த பேந்த முழிக்கிறான்.

திருமணம் முடிந்து குடி போதையிலிருக்கு கேயில் கார் ஓட்ட நானியிம் சிறுவனும் சிறுமியும் மீண்டும் அமேரிக்காவை நோக்கி பயனிக்கின்றனர். செக்போஸ்டில் அமேரிக்க போலிஸ் இவர்களைப் பிடித்து நிறுத்துகிறது. கேயலை போதை டெஸ்டிற்கு அழைக்கிறது. நிலைமையை உணர்ந்த கேயல் வேகமாக காரை ஸ்டார்ட் செய்து தப்பிக்கிறான். நீண்ட தூரம் சென்றபின்னர் ஒரு காட்டு வழிப்பாதையில் நானியையும் சிறுவனையும் சிறுமியையும் இறக்கிவிட்டுவிட்டு அவன் சென்றுவிடுகிறான். இரவில் என்ன செய்வது என்று தெரியாமல் சிறுவனும் சிறுமியும் அழுகிறார்கள். நானி செய்வதறியாமல் திகைக்கிறார். அழுகிறார். தவறு செய்துவிட்டதை உணர்கிறார்.

அமேரிக்க போலீஸ் பெற்றோர்களின் சம்மதம் இன்றி பிள்ளைகளை வேறு நாட்டிற்கு அழைத்து சென்றதை கண்டித்து நானியை மெக்சிக்கோவிற்கே திருப்பி அனுப்புகிறது. நானி கதறுகிறார். தனக்கு மெக்சிகோவில் ஒன்றும் இல்லையென்றும் அமேரிக்காவிலே பதினைந்து வருடம் வாழ்ந்து விட்டேன் தயது செய்து என்னை வெளியே அனுப்பாதீர்கள் என்று கெஞ்சுகிறார். பலனில்லை.

சூசனை ஹெலிகாப்பட்டர் வைத்து அமெரிக்க எம்பசி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுவருகிறது. உதவியாக இருந்த அன்வருக்கு ரிச்சர்ட் பணம் கொடுக்கிறார், அன்வர் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். கஷ்டகாலத்தில் மிகவும் அன்புடன் இருந்த சூசனும் ரிச்சர்டும் தங்ளது பிணைப்புகளை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

அந்த கிராமத்தில், தைத்த பிறகு வழி தெரியாமல் இருக்க சூசனுக்கு அந்த வீட்டிலிருக்கும் கிழவி புகைக்க கஞ்சா கொடுக்கிறாள். அவள் புகைத்து மயக்கமாவதைப் பார்த்து ரிச்சர்ட் அழுவது மிகவும் நெகிழ்ச்சியான சீன். எழுந்திருக்க முடியாமலிருக்கும் சூசன் சிறுநீர் கழிக்க ரிச்சர்ட் உதவுவதும் நெகிழ்ச்சி. Brad Pitt நடிப்பில் மின்னுகிறார். புதிய தோற்றமும் கச்சிதமாகப் பொருந்துகிறது. நானியாக நடித்தவரின் நடிப்பும் மிக இயல்பு. நடு காட்டில் சதுப்பு நிலத்தில் தனித்து விடப்பட்ட பொழுதும், குழந்தைகளை எப்படியாவது எந்த பிரச்சனையுமில்லாமல் அமெரிக்க சென்று சேர்த்துவிட வேண்டும் என்று துடிப்பதிலும் மிளிர்கிறார்.

அந்த ஜப்பானியப் பெண் சற்று மனநிலை சறியில்லாதவள் என்பது எங்களது எண்ணம். மேலும் அவள அந்த டிடெக்டிவிற்கு கொடுத்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தாள் என்பது கடைசி வரை அவிழ்க்கப்படாத முடிச்சு. என்ன எழுதியிருப்பாள்?

ரீரெக்கார்டிங் – Gustavo Santaolalla-அருமையிலும் அருமை. அமைதியான அருவி. கடைசியில் பெயர்கள் போடப்படும் பொழுது வரும் மியூசிக் மிகவும் நன்றாக இருந்தது. நான் மற்றும் இன்னும் வெகு சிலர் மட்டுமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். Cleaners வந்த பின்னும் நான் உட்கார்ந்திருந்தேன்

அகெடெமி அவார்டுக்கான ஏழு நாமினேசன்கள்:

Nominated: Best Motion Picture of the Year (Alejandro González Iñárritu, Jon Kilik and Steve Golin)

Nominated: Best Achievement in Directing (Alejandro González Iñárritu)

Nominated: Best Performance by an Actress in a Supporting Role (Adriana Barraza)

Nominated: Best Performance by an Actress in a Supporting Role (Rinko Kikuchi)

Nominated: Best Writing, Screenplay Written Directly for the Screen (Guillermo Arriaga)

Nominated: Best Achievement in Editing (Douglas Crise, Stephen Mirrione)

Nominated: Best Achievement in Music Written for Motion Pictures, Original Score (Gustavo Santaolalla)

Inside Man

ருத்ரா திரைப்படம் பார்த்திருந்தவர்களுக்கு, இந்தப் படம் அவ்வளவு ஷாக் கொடுக்காது. ருத்ரா திரைப்படத்தில் பேங்கைக் கொள்ளையடிக்க பபூன் வேஷம் போட்டு உள்ளே நுழைவார். அங்கிருக்கும் மக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு அது வேணும் இது வேணும் என்று கேட்ப்பார். பிறகு தான் ஒரு பிணைக்கைதியைப் போலவே பயந்து பயந்து வெளியே வருவார். நம்மூர் போலீசும் அவரை கண்டுகொள்ளாது. பாக்கியராஜ் தப்பித்துவிடுவார்.

கிட்டத்தட்ட அந்த விஷயம் தான். நம்மூர்க்காரர்கள் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதை இரண்டரை மணி நேரப் படத்தில் பத்து நிமிடக் காட்சியாக எடுத்தனர். ஆனால் ஹாலிவுட் மக்கள் இதையே முழு படமாக எடுத்திருக்கின்றனர். கொஞ்சம் சுவராஸ்யமாக.

Dalton Russel (Clive Owen) மற்றும் அவரது டீம் மொத்தம் நான்கு பேர். பெயின்ட் அடிக்கும் வேலை செய்பவர்களாக ஒரு பேங்க்கிற்குள் நுழைகின்றனர். infra red கதிர் வீச்சைக் கொண்டு செக்யூரிட்டி கேமிராக்களை shutdown செய்கின்றனர். அங்கிருக்கும் மக்களை பினைக்கைதிகளாகப் பிடிக்கின்றனர். எல்லோரையும் தங்களது டிரஸைக் கலையச் செய்து இவர்கள் கொண்டுவந்திருக்கும் uniform ஐ போடச்சொல்கின்றனர். இப்பொழுது பேங்கிற்குள் இருக்கும் எல்லோருக்கும் – கொள்ளையடிக்க வந்தவர்களையும் சேர்த்து – ஒரே டிரஸ், ஒரே முகமூடி. யார் பிணைக்கைதிகள் யார் கொள்ளையர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எல்லோரையும் முகமூடி அணிந்திருக்கச் செய்கின்றனர். முகமூடியை கழட்டினால் அடி உதை தான். இதற்கு பயந்து கொண்டே எல்லோரும் முகமூடியைக் கழட்டுவதில்லை.

keith frazier (Denzel Washington) துப்பறிவாளர். அவருடைய அசிஸ்டெண்ட் chiwetel. இருவரும் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர். ருசலுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அவன் ஒரு ஜெட் மற்றும் ஒரு பஸ்ஸ¤ம் கேட்கிறான்.

Russel ஒரு சாதாரணத் திருடன் இல்லை. அவனது இலக்கு பணம் மட்டும் இல்லை. இந்த குறிப்பிட்ட வங்கியைக் கொள்ளையடிக்க அவன் திட்டமிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த வங்கியின் சேர்மன் மற்றும் நிறுவனருமான Arthur Case இன் உண்மை சொருபத்தைக் காட்டுவதே Russel இன் முதன்மை இலக்கு.

Arthur Case இரண்டாம் உலகப்போரில் நாசிக்களிடம் யூதர்களைக் காட்டிக்கொடுத்து அதில் வந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார். மேலும் அவரிடம் ஒரு மோதிரம் இருக்கிறது. அதுவும் அவருடன் வேலை செய்த ஒரு யுதனின் திருமண மோதிரம். He is a war criminal.

இந்த உண்மையை மறைக்க Arthur Case அவரது பேங்க்கிலே லாக்கர் என் 392 இல் நிறைய வைரங்களையும் அந்த மோதிரத்தையும் சில documents களையும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார். அவரது பேங்க் ரெக்கார்ட்ஸில் இந்த லாக்கருக்கான எந்த குறிப்பும் இல்லை.

எனவே Russel இன் கண்களுக்கு தெரியாமல் – ஆனால் Russel க்கு அந்த வைரங்களைப் பற்றியும், மோதிரம் பற்றியும், Nazi Documents பற்றியும் தெரியும் என்பது Arthur Case க்கு தெரியாது – அந்த பொருளைப் பாதுகாப்பாக வெளியே எடுத்து வர whites (Jodie Foster)ஐ அணுகுகிறார். அவர் போடும் கண்டிஷன் : ஒன்று அந்த லாக்கர் மறைக்கப்படவேண்டும் இல்லையேல் அழிக்கப்படவேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் வெளிஉலகத்துக்குத் தெரியக்கூடாது.

whites உள்ளே சென்று Russelஇடம் பேசும் போது அவன் ஏற்கனவே எடுத்து வைத்திருப்பது தெரிகிறது. மேலும் அவன் பத்திரமாக வெளியே கொண்டு வருகிறேன் எனக்கு பணம் கொடுத்து விடுங்கள் என்கிறான். ஆனால் உண்மையில் அவன் கொடுக்கப்போவது இல்லை. அவனது இலட்சியமே இந்த விசயம் – Arthur Case ஒரு துரோகி என்பது – வெளி உலகத்திற்கு தெரியவேண்டும் என்பது தானே. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை , Russel க்கு எப்படி யாருக்கும் தெரியாத Arthur Case ரகசியம் தெரிந்தது?

frazier அவன் கேட்ட ஜெட் மற்றும் பஸ் ஒன்றும் கொடுக்க ஒத்துக்கொள்கிறான் ஆனால் அதற்கு முன் தான் பிணைக்கைதிகள் அனைவரும் உயிரோடு தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்கிறான். Russel இதற்கு சம்மதித்து frazier ஐ அழைத்து பிணைக்கைதிகளைக் காட்டுகிறான். frazier சிறிது அவசரப்பட்டு Russel இன் முகமூடியைக் கழட்டப் பார்க்கிறான். முடியவில்லை. இந்த சண்டையில் frazier தோற்கிறான். ஆனால் Russel, frazier ஐ கொல்லாமல் விட்டு விடுகிறான். போகும் போது frazier தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவளுக்கு ரிங் வாங்க பணமில்லாமல் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறான். அதற்கு Russel : do you love each other? then money is not a problem என்கிறான். Frazer, russel இடம் இவ்வளவு தன்னம்பிக்கையாக இருக்கிறாயே எப்படி நீ எங்களிடமிருந்து தப்பிக்கப்போகிறாய் என்கிறான். அதற்கு Russel இதோ இந்த பேங்கின் வாசல் வழியே தான் நடந்து செல்வேன் என்கிறான்.

போலீஸ் உள்ளே சென்று விட தீர்மானிக்கிறது. போலீஸ் உள்ளே செல்லும் முன்னர் உள்ளே குண்டு வெடிக்கிறது. பிணைக் கைதிகள் மற்றும் russel இன் டீம் வெளியே வருகிறார்கள். போலீஸ் அனைவரையும் பிடித்து வைத்து விசாரனை செய்கிறது. Frazier அனைவரையும் விசாரனை செய்கிறார். No clues. யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் mask போட்டிருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை என்கின்றனர்.

நிறைய நாட்கள் கழித்து Frazier பேங்க்கின் ரெக்கார்ட்ஸ் பார்த்துக்கொண்டிருக்கும் போது லாக்கர் 392 பற்றிய தகவல்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து, அந்த லாக்கரைத் திறக்க judge இடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருகிறான்.

அப்பொழுது தான் Russel பேங்க்கிற்குள்ளே தான் setup செய்த ரகசிய அறையிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறான். தனது டீம் மெம்பர்ஸை பத்திரமாக வெளியே அனுப்பிவிட்டு Russel மட்டும் உள்ளேயே (Inside Man) இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறான். உணவுக்கு முன்பே பிணைக்கைதிகளை காட்டி வாங்கிய pizza இருக்கிறது. நிலமை சீராகும் வரை ஸ்டோர் ரூம் போல தோற்றம் அளிக்கும் இடத்தில் rack க்கிற்கு பின்னே ஒரு சிறு அறை அமைத்து -இவர்கள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருக்கும் போது செய்தது- அதனுள்ளே இருந்திருக்கிறான். Master Plan.

வெளியே வரும் பொழுது Frazier மீது இடித்து விடுகிறான்.

Frazier பேங்கிற்குள் நுழைந்து லாக்கர் 392 திறந்து பார்க்கிறான். உள்ளே மோதிரம் இருக்கிறது. அதை வைத்து சேர்மேனை – Arthur Case – war crimes case போடுகிறான்.

வீட்டிற்கு வந்து தனது ஜாக்கெட்டைக் கழட்டும் போது பையில் ஒரு வைரம் இருப்பதைப் பார்க்கிறான். அப்பொழுது தான் பேங்கில் யாரோ தன் மீது மோதியது ஞாபகம் வருகிறது மேலும் Russel சொன்ன : நான் இந்த பேங்க்கின் வாசல் வழியே தான் நடந்து வெளியேறுவேன் என்கிற டயலாக்கும் if you love each other then money money is not a matter என்கிற டயலாக்கும் ஞாபகம் வருகிறது.

Frazier சிரித்துக்கொள்கிறான்.

எல்லாம் சரி படத்தில் எழுத்துப்போடும் போது தில் சே படத்தின் “ச்சைய ச்சைய ச்சைய்யா ச்சைய்யா” பாடல் ஏன் போட்டார்கள் என்று தான் தெரியவில்லை.

மேலும் படத்தில் ஒரு சீக்கியர் வருகிறார். அவர் கொள்ளையடிக்கப்படுகின்ற மேங்க்கில் வேலை செய்பவர். கொள்ளையர்கள் அந்த சீக்கியரை வெளியே விட்டுவிடும் போது, வெளியே நிற்கும் NYPD அவரை பிடித்து கீழே தள்ளி- அவர் நான் பேங்க்கில் வேலை செய்பவன் என்று சொல்வதையும் பொருட்படுத்தாமல் – அவரது டர்பனை அவிழ்க்கச் சொல்கிறது. மேலும் அவரது மீசை தாடியைப் பார்த்து – wooo..Arab..- என்கிறது. சீக்கியவர் நான் Arab இல்லை சீக்கியவன் என் டர்பனைத் தாருங்கள் அது மதம் சம்பந்தப்பட்டது. நான் டர்பன் இல்லாமல் நான் இருக்கக்கூடாது என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்.

பின்னர் விசாரனைக்கு அவரை அழைத்து பேசும் போது – உள்ளே இருக்கும் கொள்ளையர்களைப் பற்றி செய்திகள் தெரிந்து கொள்வதற்கு- அந்த சீக்கியவர் சொல்கிறார் : why cant I go anywhere without getting harrassed?

ஏனென்றால் அது நம் நாடு இல்லை.

எனினும் படத்தில் அவரது கேள்விக்கு பதில் இல்லை.

இரத்த வைரம்

இரத்தவைரம், போர்வைரம், சர்ச்சைக்குரிய வைரம் – blood diamond. போர் (புரட்சி) பிரதேசங்களில் இருக்கும் சுரங்கங்களில் எடுக்கப்படும் வைரங்கள் அங்கே நடைபெறும் போருக்கு பண உதவி பெறுவதற்கோ அல்லது ஆயுத உதவி பெறுவதற்கோ வெளிநாட்டினருக்கு இரகசியமான முறையில் தவறான வழியில் விற்கப்படுகின்றன. இவ்வாறான வைரங்கள் பிளட் டைமன்ட் என்றழைக்கப்படுகின்றன. இவ்வாறான சர்ச்சைக்குரிய வைரங்களை நாம் வாங்கும்போது, நம்மையும் அறியாமல் உலகத்தில் எங்கோ, எந்த மூலையிலோ போரையோ, புரட்சியையோ, அதரிக்கிறோம் என்பது உண்மை. நாம் வாங்கிய வைரத்தில் விலையில் அங்கே குடும்பங்கள் பிரிக்கப்படுகின்றன. குழந்தைகள் துப்பாக்கிகளைப் பிடிக்கின்றன. படுகொலைகள் நடக்கின்றன. ஒரு சந்ததியே அழிந்து கொண்டிருக்கிறது.

லியார்னோடோ டீ கேப்ரியோ மற்றும் ஜெனிபர் கனோலி நடித்து தற்போது வெளிவந்திருக்கும் பிளட் டைமண்ட் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது. சியாரா லியோனில் 1990 இல் நடந்த புரட்சியில் தொடங்குகிறது படம். Revolutionary United Front (RUF), அங்கே ஆண்டு கொண்டிருக்கும் அரசை தூக்கியெறிய போர் செய்கிறது. போருக்கு பணம், ஆயுதம் பெற பிளட் டைமன்டை உபயோகிக்கிறது.

ஆரமத்தில் சாலமனின் குடும்பம் பிரிகிறது. மீன் தொழில் செய்யும் சாலமனுக்கு தன் மகனை படிக்கவைத்து மிகப்பெரிய டாக்டராக்க வேண்டும் என்ற ஆசை. கனவு இருக்கிறது. RUF கையில் கிடைத்தவர்களை சுரங்கத்தில் வேலை செய்ய பிடித்துக்கொண்டு செல்கிறது. சாலமன் குடும்பத்தைப் பிரிகிறான். ஆற்றுப் படுகையில் மணலோடு மணலாக சேர்ந்திருக்கும் வைரங்களைத் தனித்தனியே பிரித்து எடுக்கவேண்டும். அது தான் வேலை. வைரம் கிடைத்தால் அங்கே காத்துக்கொண்டிருக்கும் சிறுவனின் கையில் கொடுக்க வேண்டும் அவன் ஓடிச் சென்று அங்கே அமர்ந்திருக்கும் தளபதியிடம் கொடுப்பான். வைரத்தை ஒழித்துவைக்க முயன்றால் கும்பிபோஜனம் தான். சாலமன் மிகப் பெரிய பிங்க் கலரில் இருக்கும் வைரம் ஒன்றைப் பார்க்கின்றான். காலுக்கடியில் மறைத்து வைத்துக்கொண்டு பாத்ரூம் செல்வதாக கூறி தனியாக வந்து குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் போது தளபதி வந்து விடுகிறான். வைரத்தைக்கொடுக்கச் சொல்லி அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போது இராணுவம் வந்து விடுகிறது. தளபதி குண்டடி படுகிறான். சாலமன் வைரத்தை வேறு இடத்தில் ஒழித்து வைக்கிறான். இராணுவம் எல்லோரையும் பிடித்துக்கொண்டு போகிறது.

ஜெயிலில் டீகேப்ரியோ (ஆர்ச்சர்) வைரக்கடத்தலில் பிடிபட்டு இருக்கிறான். குண்டடிபட்ட தளபதி ஜெயிலில் எல்லோர் முன்னிலையிலும் சாலமனைப் பார்த்து உன்னிடம் தானே வைரம் இருக்கிறது. எங்கே ஒழித்து வைத்திருக்கிறாய் என்று கேட்கிறான். சாலமன் இல்லை என்று சாதித்து எங்கே வைத்திருக்கிறேன் காட்டு என்று ஆடை முழுவதையும் அவிழ்த்துக்காட்டுகிறான். ஆர்ச்சர் சாலமனிடம் வைரம் இருக்கவேண்டும் என்று திடமாக நம்புகிறான்.

ஆர்ச்சர் ஜெயிலை விட்டு வெளியேறி தனக்கிருக்கும் கான்ட்டாக்ட்ஸ் மூலம் சாலமனை வெளியேகொண்டுவருகிறார். ஜெனிபர் கனோலி (மேடி) பத்திரிக்கை ஆசிரியர். மேடி, ஆர்ச்சரிடம் எப்படி வைரங்களை விற்பாய், யாருக்கு கொடுப்பாய், யாருக்கெல்லாம் இதில் பங்கிருக்கிறது என்ற விபரங்களை கேட்டபடி இருக்கிறார். ஆர்ச்சர் ஏதோ கதைகளைக்கூற, மேடி தனக்கு ஆதரங்கள் வேண்டும், பேங்க் அக்கவுண்ட்ஸ் வேண்டும் என்கிறார்.

மேடிக்கு ஆதாரங்கள் வேண்டும். ஆர்ச்சருக்கு வைரம் வேண்டும். சாலமனுக்கு குடும்பம் வேண்டும். முக்கியமாக டாக்டராகப்போகும் (இன்னும் பள்ளி சென்று கொண்டிருக்கும்) மகன் வேண்டும்.

சாலமனின் மகன் அவனது (எஞ்சிய) குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுகிறான். குண்டடிபட்ட தளபதி அவனை அழைத்து அவனிடம் துப்பாக்கியை குடுத்து, சுடுவதற்கு பழகிக்கொடுக்கிறான். ஏராளமான சிறுவர் ஆர்மியுடன் அந்த சிறுவன் சேர்க்கப்படுகிறான். அவனுக்கு கஞ்சா போன்ற பழக்கங்களைக் கத்துக்கொடுக்கிறான். சிறுவன் படிப்பையே மறக்கிறான். யாரைப்பார்த்தாலும் சுட்டுக்கொல்கிறான்.

ஆர்ச்சர் சாலமனிடம் அவனது குடும்பத்தை கண்டுபிடித்து கொடுப்பதாகவும் அதற்கு கைமாறாக தனக்கு வைரம் இருக்கும் இடத்தைக் காட்ட சொல்கிறான். மேடியிடம் வைர வியாபாரத்தின் தலைகளையும், அவர்களது பேங்க் அக்கவுன்ட் நம்பர்களையும் ஆதாரத்துடன் கொடுக்கிறான். மேலும் அவர்களது வைரங்களை வாங்கும் மிகப்பெரிய இங்கிலாந்து வைரக்கம்பெனியின் பெயரையும் கொடுக்கிறான்.

தவறான பிளட் டைமன்ட்கள் கடத்தப்பட்டு – மலைகளில் உயிருள்ள செம்மறியாடுகளின் தோல்களில் வைரங்கள் பதுக்கப்பட்டு கடத்தப்படுகின்றன – இந்தியாவில் பாம்பேயில் சுத்தீகரிக்கப்பட்டு நல்லவைரங்களோடு சேர்க்கப்படுகின்றன. பின்னர் இங்கிலாந்தின் வைரக்கம்பெனியின் சுரங்க அறைகளில் பதுக்கப்படுகின்றன. பதுக்கப்படுவதன் மூலம் வைரப்பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டு, விலை குறையவே குறைவதில்லை.

ஆர்ச்சர் மேடியின் உதவியுடன் சாலமனின் குடும்பத்தைக்கண்டுபிடிக்கிறான். எங்கோ கேம்பில் இருக்கிறார்கள். குடும்பத்தைப்பார்த்து சந்தோஷப்பட்ட சால்மன் மகனைக்காணாமல் வேதனை அடைகிறான். போர் ஓயும் வரை குடும்பத்தை கொடுப்பதில்லை என்று இராணுவம் திட்டவட்டமாக கூறிவிடுகிறது.

இவர்கள் திரும்பும் வழியில் வேறொரு காட்டுவாசி(அல்லது புரட்சி) கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர். மேடி சமயோஜிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கச்சொல்லி தப்பிப்பது அழகு. அந்த கும்பல் இவர்களை தங்கள் தலைவரிடம் அழைத்துச் செல்கிறது. அங்கே தலைவர் reformation செய்துகொண்டிருக்கிறார். அதாவது போரில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, அவர்களை அரவணைத்துச் செல்கிறார். சாலமன் தன் மகனை ஆவலோடு தேடுகிறான். இல்லை.

அவர்களை எல்லைக்கப்பால் கொண்டுபோய் விட தலைவர் மறுநாள் காரில் கூட்டிச்செல்கிறார். எதிரே சிறுவர் கூட்டம் ஒன்று துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு இவர்களை வழிமறித்துக்கொண்டு நிற்கிறது. ஆர்ச்சர் துப்பாக்கி எடுக்கவும் தலைவர் இல்லை இல்லை துப்பாக்கி வேண்டாம் இவர்கள் சிறுவர்கள் என்கிறார். அவர்களிடம் அன்பாக பேசுகிறார். சாலமன் சிறுவர்களின் பால்வடியும் முகங்களை பாசமாகப் பார்க்கிறான். தனது மகனை நினைத்துக்கொள்கிறான். பேசிக்கொண்டிருந்த சிறுவர்கள் சடசடவென்று திடீரென சுட ஆரம்பிக்கின்றனர். தலைவர் சுடப்படுகிறார். ஆர்ச்சர் சட்டென் வண்டியைக்கிளப்பி தப்பிக்கிறான்.

ஆர்ச்சரும் சாலமனும் வைரத்தைத்தேடி பயணம் புறப்படுகின்றனர். வழியில் சாலமன் போர் படைகளையும் அதில் இருக்கும் தன் மகனையும் பார்க்கிறான். தன்னையும் அறியாமல் கத்திவிடுகிறான். புரட்சிப்படை பார்த்துவிட ஓடி மயரிலையில் உயிர் தப்பிக்கின்றனர். மறுநாள் ஆர்ச்சர் இவ்வாறு இன்னொரு முறை செய்தால் நானே உன்னை கொன்றுவிடுவேன் என்கிறான்.

மறுநாள் சாலமன் ஆர்ச்சர் சொன்ன பாதையில் செல்லாமல் நேற்று இரவு புரட்சிப்படை சென்ற பாதையில் செல்கிறான். ஆர்ச்சர் எத்துனை சமாதனப்படுத்தியும் கேட்காமல் அவன் செல்கிறான். போரில் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றை அவர்கள் கடந்து செல்கையில் ஒரு பெரியவர் சாலமனை அனுகி, டீ கேப்ரியோவைக் காட்டி – வெள்ளைக்காரன் என்று நினைத்துக்கொண்டு – சொல்கிறார், “இங்கே, இந்த கிராமத்திலே எண்ணெய் வளமும், வைரங்களும் இல்லை என்று சொல்லு. இல்லையென்றால் இந்த இடத்தையே சுடுகாடு ஆக்கி விடுவார்கள்”

அங்கே மகன் இல்லை. சில நாட்கள் பயணத்திற்குப்பின் சாலமன் வைரத்தை தான் ஒழித்து வைத்த இடத்தை அடைகிறான். அங்கு வழக்கம்போல வைரம் தோண்டப்படுகிறது. இரவு சாலமன் தன் மகனை அங்கு பார்க்கிறான். மகனோ சாலமனை அடையாளம் தெரியாமல் குழம்புகிறான். கத்துகிறான். வர மறுக்கிறான்.

பின்னால் சாலமன் வைரத்தை எடுத்தபிறகு நடக்கும் சண்டையில் சாலமனின் மகனின் கையில் துப்பாக்கி கிடைக்கிறது. அவன் தன் தந்தையையே குறிவைக்கிறான். சாலமன் தன் மகனிடம் உன் தந்தை தான் நான். உனக்கு அன்பான அம்மா இருக்கிறார். அழகான தங்கை இருக்கிறாள். நீ படித்து டாக்டராகப்போகிறாய். நான் உன் அப்பா என்று அழுதுகொண்டே அந்த சிறுவனுக்கு புரியவைக்கிறார்.

இந்த இடம் தான் படத்தின் கரு. அமைதியான அழகான கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களை இந்த ப்ளட் டைமன்ட்ஸ் எப்படி சிதைக்கிறது பாருங்கள். ப்ளட் டைமன்ட்ஸ் இல்லையென்றால், அவர்களால் கடத்த இயலவில்லை என்றால், எங்கிருந்து ஆயுதம் வாங்குவது? எங்கிருந்து போரைத் தொடர்வது? தொடர்ந்து போர் செய்வதால் இலட்சியங்கள் நிறைவடையலாம். ஆனால் இலட்சியங்கள் யாருக்காக? சில தனிப்பட்ட நபர்களின் இலட்சியங்களுக்காக மொத்த மக்களின் இலட்சியங்களை அழிக்கலாமா?

வைரங்கள் வாங்கும் போது கவனம் தேவை. ப்ளட்டைமன்ட்களை தடுப்பதற்காக கிம்பர்லி ப்ராஸஸ் ஏற்படுத்தப்பட்டது. இப்பொழுது 99 விழுக்காடு வைரங்கள் நல்ல வைரங்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மீதமிருக்கும் ஒரு விழுக்காடும் மிக அதிகமே.

எனவே நம்மால் முடிந்த வரை வைரங்கள் வாங்கும் போது அவை ப்ளட்டைமன்டாக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சிலரது கனவுகளைக் காப்பாற்றலாம்.

ஏற்கனவே ஆஸ்கார் தவறவிட்ட டிகேப்ரியோ இந்த முறை வாங்குவாரா?

த நைட் லிசனர்

இந்த பதிவை எழுதத்தொடங்கும் முன் எனக்கு த நைட் லிசனர் என்பதை –தமிழார்வ மிகுதியால்; இராகவனின் சொல் ஒரு சொல் பதிவுகளைப் படித்ததால் கூட இருக்கலாம் – தமிழில் மொழி பெயர்த்தாலென்ன என்கிற விபரீத எண்ணம் தோன்றியது. இரவில் கவனிப்பவன் என்றால் வேறுவிதமான அர்த்தம் –மன்னிக்கவும்– தோன்றுவதாக அடியேனுக்கு படுகிறது. இரவு கவனிப்பாளன். சில தமிழகராதியில் – நீ ஏன் இப்படி அகராதித்தனம் பண்ணுகிறாய் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்காமலில்லை – தேடியதில் “லிசனர்” என்பதற்கு உற்று கேட்கிறவர் என்கிற அர்த்தம் கிடைத்தது. மொத்தமாய் : இரவில் உற்றுக்கேட்பவர் – என்னை முரைத்தால் நான் என்ன செய்ய முடியும்; அப்படித்தானே அர்த்தம் வருகிறது!– நான் ஆட்டைக்கு வரலப்பா.

ராபின் வில்லியம்ஸ் படங்கள் எனக்கு பிடிக்கும். அவரது படங்கள் முன்பெல்லாம் நகைச்சுவையாக இருந்தது. இப்பொழுது மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. ஒன் அவர் போட்டோ, த பைனல் கட், இன்சோம்னியா. இப்பொழுது த நைட் லிசனர். நகைச்சுவை என்றால் புகுந்து விளையாடும் ராபின் வில்லியம்ஸ், சீரியஸ் ரோல் என்றால் மிகவும் சோகமாகி விடுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஆஸ்கார் விழாவில், ராபின் வில்லியம்ஸ் அனைவரையும் மேடையில் கலாய்த்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

கேப்ரியல் நூன் (ராபின் வில்லியம்ஸ்) ஒரு ரேடியோ ஷோ நடத்துபவர். அவரது நிகழ்ச்சி இரவு 11:00 மணியிலிருந்து – 12:00 மணி வரைக்கும் இடம்பெறும். இரவில் கதை சொல்வார் கேப்ரியல். ஒரு நாள் அவரது நண்பர் கேப்ரியலிடம் ஒரு மனுஸ்க்ரிப்ட் கொடுக்கிறார். அது ஒரு கதை. பீட் என்கிற பதினான்கு வயது சிறுவன் எழுதிய கதை. அவன் தனது பெற்றோர்களால் உடலாலும் மனதாலும் துன்புறுத்தப்பட்டு அவர்களிடமிருந்து தப்பித்த எய்ட்ஸ் நோயாளி. பிறகு ஒரு தெரபிஸ்ட் (டோனி) அவனைத் தத்தெடுக்கிறாள். இப்பொழுது அந்த சிறுவனுக்கு அவளே பாதுகாவலர். அவள் பொறுப்பில் இருக்கும் பொழுதுதான் அந்த சிறுவன் இந்த கதையை எழுதியிருக்கிறான்.

கேப்ரியல் கதையை படித்து முடிக்கிறார். அவருக்கு பதினான்கு வயது சிறுவன் இதை எழுதினானா என்று நினைக்கிற பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. அவன் இவ்வாறு எழுத நேர்ந்ததை – அவன் பட்ட துன்பங்களை- நினைக்கும் போது பாவமாகவும் இருக்கிறது. புத்தகத்தை வெளியிட விரும்புகிறார் கேப்ரியல். தன்னுடைய நண்பரிடம் அவனது போன் நம்பர் வாங்கி அவனை தொடர்பு கொள்கிறார்.

கேப்ரியலுக்கும் அந்த சிறுவனுக்கும் நட்பு மலர்கிறது. கேப்ரியல் அந்த சிறுவனுக்கு தந்தை ஸ்தானத்தில் ஒருவர் தேவைப்படுகிறார் என்பதை அறிந்து அவனிடம் மேலும் அன்பு செலுத்துகிறார்.

ஒரு நாள் பீட்டிற்கு உடம்பிற்கு முடியாமல் போகிறது. அவனை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்கிறாள் டோனி. போனின் இந்த விசயத்தை கேள்விப்பட்ட கேப்ரியல் மிகுந்த சோகம் அடைகிறார். அந்த சிறுவனை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்கும் பொழுது, ஏன் இப்படி கேப்ரியல் மிகுந்த வருத்தமாக இருக்கிறார் என்று நினைத்து கேப்ரியலின் நண்பர்கள் வருத்தமடைகின்றனர். மேலும் அந்த சிறுவன் உண்மையிலே இருக்கிறானா என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கேப்ரியலின் நண்பர் ஒருவர், கேப்ரியல், டோனி மற்றும் பீட் தொலைபேசியில் (ஸ்பீக்கர் போனில்) பேசும் போது கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் கேப்ரியலிடம் : பீட் மற்றும் டோனியின் குரல் ஒரே மாதிரி இருக்கிறது என்றும் கொழுத்திப்போடுகிறார். கேப்ரியலிடம் அந்த சிறுவனின் படம் (போட்டோ) ஒன்று இருக்கிறது. தொலைபேசி எண் இருக்கிறது. வீட்டு அட்ரஸ் இருக்கிறது.

பீட்டிற்கு உடம்பு சரியாகின்றது. கேப்ரியலை கிரிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைக்கிறாள் டோனி. கேப்ரியலும் அவர் நண்பரும் இணையத்திலும் மற்ற ரெக்கார்டிலும் பீட் பற்றி தேடுகின்றனர். பீட் டின் அடையாளமே கிடைக்கவில்லை. (அத்திப்பட்டியைப் போல!) கேப்ரியலுக்கு சந்தேகம் வருகிறது. டோனியின் தொலைபேசி எண் வேலை செய்யவில்லை.

கேப்ரியல் அந்த அட்ரஸை தேடிச் செல்கிறார். (விமானப்பயணம் மற்றும் பனி கொட்டும் வழியில் கார் பயணம்). நீண்ட பயணத்திற்குப்பின் அவர் தேடிவந்த முகவரி ஒரு ரீட்டையில் ஷாப். அங்கு வீடே இல்லை.

அந்த ஊரிலே லாட்ஜ் எடுத்துத் தங்குகிறார். தற்செயலாக ஹோட்டலில் இருந்து பார்க்கும் பொழுது பீட் அடிக்கடி சொல்லும் லைட்டால் செய்யப்பட்ட நட்சத்திரம் தெரிகிறது. இரவென்றும் பார்க்காமல் அங்கே செல்கிறார். அது ஒரு வாட்டர் டேங்கின் வெளிப்புறத்தில் பிரகாசமான் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட ஸ்டார் வடிவ விளக்கு. அங்கே உள்ள வீட்டிற்கு அவர் செல்ல முற்படுகிற பொழுது அந்த வீட்டிலிருந்து நாய் குரைக்கிறது. கேப்ரியல் பயந்து ஓடி விடுகிறார்.

மறுநாள் காபி ஷாப்பில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, தடித்த கண்ணாடியால் (அந்த பக்கம் உட்கார்ந்திருப்பவரின் உருவம் மட்டுமே மிக மங்கலாகத் தெரியும்) மறைக்கப்பட்டு அந்த பக்கம் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. அது பரிச்சயமான குரலாக இருக்கிறது. அந்த பெண்ணும் இவரைப் பார்ப்பது சற்று மங்கலாகத் தெரிகிறது. அந்த பெண் புறப்படும் வரை காத்திருந்து, அவளைப் பின் தொடர்கிறார். அவள் பார்வை இழந்தவள். கூடவே ஒரு நாயிருக்கிறது. அவள் நேற்று பார்த்த நட்சத்திரத்திற்கு எதிரான வீட்டிற்கே போகிறாள். இவள் தானா டோனி என்கிற சந்தேகத்தில் வீட்டிற்கு வெளியேயே மறைவாக நின்று கொண்டிருக்கும் கேப்ரியலை, வாசலில் நின்று திரும்பி, ‘ஒரு ஹலோ சொல்லமாட்டியா கேப்ரியல்” என்கிறாள் டோனி.

கேப்ரியல் வீட்டில் தேடிப்பார்க்கிறார். பீட் இல்லை. அவனது படுக்கை மட்டுமே வெறுமையாக இருக்கிறது. கேப்ரியல் பீட் எங்கே என்று கேட்கவும், டோனி அவனுக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போய் விட்டது என்றும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறான் என்றும் சொல்கிறாள். கேப்ரியல் நாளை சென்று பீட்டை பார்க்கலாமா என்று கேட்க, சரி போகலாம் என்கிறாள் டோனி. டோனி தானும் கேப்ரியலின் ரசிகை என்றும், ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொள்ளலாமா என்றும் கேட்கிறாள்.

கேப்ரியல் மறுபடி மறுபடி பீட்டைப் பற்றி விசாரிக்க, டோனி, உங்களுக்கு சந்தேகமா? புத்தகம் வெளியிடுவதில் பிரச்சனையா என்று கேட்கிறாள். கேப்ரியல் ஆமாம் எனவும், மிகுந்த ஆத்திரம் கொண்டவளாக உன்னை நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல மாட்டேன் என்றும் இனி மேல் இங்கு வரத்தேவையில்லை என்றும் சொல்கிறாள். கதவை மூடிவிடுகிறாள்.

கேப்ரியல் அந்த ஊருக்கு அருகிலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று பீட்டைத்தேடுகிறார். அங்கிருக்கும் மற்ற அனைத்து மருத்தவமனைக்கும் சென்று தேடுகிறார் எங்கும் பீட் இல்லை.

மறுநாள் கேப்ரியல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு டோனியின் வீட்டிற்குள் நுழைகிறார். எங்கும் பீட் இல்லை. அவர் தேடிக்கொண்டிருக்கும் பொழுது போலீஸ் வந்துவிடுகிறது. போலிஸில் அனைத்து விசயங்களையும் விவரித்து, வெளியே வரும் பொழுது, டோனி நின்று கொண்டிருக்கிறாள். பீட் நேற்றிரவு இறந்து விட்டான் என்று சொல்கிறாள். கேப்ரியல் நம்ப மறுக்கிறார். பொய் சொல்கிறாய் என்கிறாள். அவள் ரோட்டில் உட்கார்ந்து இல்லை இல்லை என்று கத்துகிறாள். ஒரு ட்ரக் வருகிறது. கேப்ரியல் அவளை எழுந்து வருமாறு சொல்ல, அவள் கைதூக்கி விடச்சொல்கிறாள். கேப்ரியல் கைதூக்கிவிட முயற்சிக்கும் போது, டோனி கேப்ரியலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு கொலை செய்ய முயற்சிக்கிறாள்.


கேப்ரியல் திரும்பி வந்து விட்ட பொழுதும் டோனி விடாமல் போனில் அழைத்துக்கொண்டேயிருக்கிறாள். ஒரு நாள் தான் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு கடைசி ஒருமுறை வரச்சொல்லுகிறாள். கேப்ரியல் லாட்ஜுக்கு செல்கிறார். படியேறி அவள் ரூமை நோக்கி செல்லும் போது, டோனி ரூமிலிருந்து வெளிப்படுவதைப் பார்த்து ஒளிந்து கொள்கிறார். டோனி படியிரங்கும் முன், கேப்ரியலை நன்றாக உற்றுப்பார்த்து (கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறாள்) செல்கிறாள்.

கேப்ரியல் ரூமுக்கு உள்ளே நுழைந்து ஒரு வீடியோ கேசட் இருப்பதைப் பார்க்கிறார். அதில் பீட் படுத்திருக்கும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. போன் அழைக்கிறது. பீட் பேசுகிறான். தான் டோனிக்காக ஏர்போர்டில் காத்துக்கொண்டிருப்பதாகவும், உங்களிடமிருந்து என்னைக்காப்பாற்றவே டோனி தான் இறந்துவிட்டதாக சொன்னாள் என்றும் சொல்கிறான்.

சில நாட்களுக்கு பிறகு டோனி ஒரு ப்ளாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு நன்றாக கண் தெரிகிறது. ப்ளாட்டை சுற்றிக்காட்ட வந்த ஏஜென்ட் கேட்கிறாள், “How exactly did your son lost his legs?”

சேர்க்கப்பட்டது:
நான் புரிந்துகொண்டது:

டோனி கேப்ரியலின் தீவிர ரசிகை. கேப்ரியலின் அன்பையும், இரக்கத்தையும் கவனிப்பையும் பெற அவள் பீட் என்கிற சிறுவனை கற்பனை செய்து கொள்கிறாள். அவ்வாறே போனில் பேசுகிறாள். இரண்டு குரல்களில். கேப்ரியல் நேரடியாக தேடிக்கொண்டு வந்தவுடன், பீட் ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று பொய் சொல்கிறாள். கேப்ரியல் ஆஸ்பத்திரியில் தேடியலைந்த பீட் அங்கு இல்லை என்று கேள்வி எழுப்பிய போது, பீட் இறந்துவிட்டான் என்கிறாள். அவளுடைய முயற்சி கேப்ரியலிடம் செல்லுபடியாகாததால், வேறு இடத்திற்கு ஜாகையை மாற்றி, தன் மகனுக்கு கால் போய்விட்டதாகவும், அவனை ஆஸ்பத்திரியில் வைத்திருப்பதாகவும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாள்.
இது உண்மைச் சம்பவம் என்றும் அந்த பீட் என்ற சிறுவனின் ஐடன்டிட்டி இன்று வரை நிரூபிக்கப் படவில்லையென்றும் படம் முடிந்தவுடம் போடுகிறார்கள். இருந்தால் அவனுக்கு 28 வயது இருக்குமாம். பீட்டு அப்பீட்டாயிட்டியேபா!

ஸ்டே

ஓசியாக கிடைக்கிறதே என்று கண்ட படத்தையும் வாங்கிப்பார்த்தால் இப்படித்தான் ஆகும். போன சனிக்கிழமை ஸ்டே “stay” என்ற படத்தின் டி.வி.டி கிடைத்தது. IMDB யில் ரேட்டிங் பார்த்ததில் 6.8 என்றிருந்தது. அப்பொழுதே உசாராகியிருந்தால் இந்த பதிவை நீங்கள் படிக்கும் அவசியமேற்பட்டிருக்காது. பொதுவாக imdb யில் ஐந்து மதிப்பெண்களுக்கு மேல் குடுத்திருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அந்த படத்தைப் பார்க்கலாம். ஏழு, எட்டு, ஒன்பது என்றால், உஷார் : புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. அவர்களே, என்ன இது புரியமாட்டேன் என்கிறது; பேசாமல் நல்ல மார்க்கை கொடுத்துத்தொலைப்போம்; நமக்கேன் வீணவம்பு என்று மார்க்களிக்கிறார்கள் என நினைக்கிறேன். Twelve Monkeys போல. சத்தியமாக எனக்கு Twelve Monkeys படம் புரியவில்லை. ஒரு நண்பன் -அவன் நிறைய ஆங்கில சினிமா பார்ப்பவன்; என் பதிவுகளை படிப்பவர்களுக்கு; குறட்டை கோவிந்தன், வேட்டையராஜா, சம்மன சாமியார் – என்னிடம் “அப்படியா புரியவில்லையா?? கொடு பார்ப்போம்” என்றான். நானும் அவனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் Twelve Monkeys – டூ மன்கீஸ் சீயிங் டுவல்வ் மன்கீஸ் : என்று கவிதை எழுதுபவர்கள்; பரவாயில்லை பிழைத்துப்போங்கள்! -பார்ப்பதற்கு உட்கார்ந்தோம்.

அவன் சோபாவில் உட்கார்ந்திருந்தான். நான் கீழே உட்கார்ந்திருந்தேன். நான் இந்த முறையாவது புரிகிறதா பார்க்கலாம் என்று படத்தில் மூழ்கிவிட்டேன். ஒரு இடத்தில் எனக்கு இந்தமுறையும் புரியாமல் போகவே: என்னடா இது என்று அவனைத் திரும்பிப்பார்க்க; அவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். குட். படத்தில் கடைசியில் ட்விஸ்ட், சஸ்பென்ஸ் என்று இருப்பதெல்லாம் ஓகே தான். ஆனால் கடைசியில் இருக்கும் ட்விஸ்டை பார்ப்பதற்கு; படத்தின் கடைசி வரைப் பார்க்கவேண்டுமே-தூக்கம் அல்லது குறட்டை வராமல்!

12 monkeys போல இல்லையென்றாலும், “ஸ்டே” கொஞ்சம் நல்லாவே இருந்தது. எடுத்த விதமும், கதை சொல்லப்பட்ட விதமும், நவோமி வாட்ஸ¤ம் (த ரிங், கிங் காங்) அழகு!

முதலில் ஒரு கார் ஆக்ஸிடென்ட் ஆவது காட்டப்படுகிறது. வித்தியாசமாக. அதாவது, உள்ளே உட்கார்ந்து ட்ரைவ் செய்பவரின் கண் பார்வைக்கு எப்படித்தெரியுமோ, அப்படி. பிறகு ஒரு மனிதன் கவிழ்ந்து எரிந்து கொண்டிருக்கும் காருக்கு அருகே உட்கார்ந்திருக்கிறான். அந்த காரில் பயணித்தவனாக இருக்கவேண்டும். சும்மாவே உட்கார்ந்திருக்கிறான். பிறகு எழுந்து சென்று விடுகிறான்.

ஒரு சைக்யாட்ரிஸ்ட் இருக்கிறார். அவருக்கு கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற காதலி இருக்கிறாள். ஒரு நாள் பென் (ஆக்ஸிடென்ட் ஆன காரில் இருந்தவர்) சைக்யாட்ரிஸ்டை பார்க்க வருகிறார். சைக்யாட்ரிஸ்ட் அவரிடம் கேள்விகள் சில கேட்க, அவர் பதில் அளிக்க மறுக்கிறார். பிறகு இன்றைக்கு கடும்புயல் வரும் என்று சொல்கிறார். வானம் மிகத்தெளிவாக இருக்கிறது. பிறகு தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக சொல்கிறார். சைக்யாட்ரிஸ்ட் ஏன் தற்கொலை செய்துகொள்கிறாய்? எப்பொழுது செய்துகொள்ளப்போகிறாய் என்று கேட்கிறார். ஏன் என்பதற்கு பதிலலிக்காமல் அடுத்த சனிக்கிழமை செய்துகொள்ளப்போகிறேன் என்று பென் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அவன் சொன்னமாதிரியே அன்றைக்கு கடும் புயல் வருகிறது.

வீட்டில் சென்று காதலியிடம் பென்னைப்பற்றி சொல்கிறார் சைக்யாட்ரிஸ்ட். காதலி மீண்டும் தற்கொலைக்கு முயற்சிசெய்வாளோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. மீண்டும் பென் தன்னைப்பார்க்க வரமாட்டான் என்று தன் காதலியிடம் சொல்ல, காதலி, இல்லை பென் கண்டிப்பாக வருவான் என்கிறாள்.

சைக்யாட்ரிஸ்ட்டும், ஒரு கண் தெரியாத நபரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சைக்யாட்ரிஸ்ட் கண் தெரியாத நபரிடம் ஒரு வெட்டிங் ரிங்கை எடுத்து காண்பிக்கிறார். கண் தெரியாத நபர் அதை தொட்டுப்பார்த்து விட்டு, சைக்யாட்ரிஸ்டின் காதலி இப்பொழுது எப்படி இருக்கிறாள் என்றும் வேகமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார். அப்போது பென் அங்கே வருகிறான். கண் தெரியாத நபரைப்பார்த்ததும், பென், அவர் தனது தந்தை என்றும், அவர் நீண்ட நாட்களுக்கு முன் இறந்து விட்டார் என்றும் சொல்கிறான்.

சனிக்கிழமை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பென்னுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் அதீனா. அதீனா ஒரு ஹோட்டலில் வெய்ட்ரஸாக இருக்கிறாள். ஒரு நாள் சைக்யாட்ரிஸ்ட் கையில் வெட்டிங்ரிங் இருப்பதைப் பார்த்து, பென், அது தான் தன் காதலிக்கு வாங்கின வெட்டிங் ரிங் என்று சொல்கிறான். சைக்யாட்ரிஸ்ட் இல்லை அது தன்னுடையது என்றும் அவர் பென்னிடமிருந்து திருடவில்லையென்றும் கூறுகிறார். பென் நம்பிக்கையில்லாமல் அவரைப் பார்த்தபடியே இருக்கிறான். அப்பொழுது ஒரு பலூன் வைத்திருக்கும் சிறுவனும் , சிறுவனின் அம்மாவும் அவனைக்கடந்து செல்கின்றனர். அந்த பையன்: அம்மா, (பென்னைப் பார்த்து) இவன் சாகப்போகிறானா? என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள். (அதானே எதற்கு சம்பந்தாசம்பந்தமில்லாமல் திடகாத்திரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு நபரைப் பார்த்து ஒரு சிறுவன் ஏன் இப்படி கேட்கவேண்டும் என்ற கேள்வி எனக்கும் எழாமலில்லை!)

அடுத்த சில நாட்கள் பென்னைக் காணவில்லை. சைக்யாட்ரிஸ்ட் அவனைத்தேடிக்கொண்டு அவன் வீட்டு அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து அங்கே செல்கிறார். அங்கே பென்னின் அம்மா இருக்கிறார். அவர் சைக்யாட்ரிஸ்டைப் பார்த்ததும் அன்புடன்: வா மகனே என்று அழைக்கிறார். சைக்யாட்ரிஸ்டும் உண்மையை அறிந்துகொள்வதற்காக மகனாகவே (பென்னாகவே) காட்டிக்கொள்கிறார். அங்கே ஒரு நாய் இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே பென்னின் அம்மாவின் நெற்றியில் இரத்தம் ஒழுக ஆரம்பிக்கிறது. சைக்யாட்ரிஸ்ட் அவரிடம் ஏன் இரத்தம் ஒழுகுகிறது என்றும் ஹாஸ்பிட்டலுக்கு செல்லலாம் என்றும் அழைக்கிறார். அதற்கு அவள் வேண்டாம் உனக்கு சாப்பாடு தயாரிக்கிறேன் என்று சொல்லி சமையலரைக்கு போகிறாள். சைக்யாட்ரிஸ்ட் நிர்பந்திக்கவே, நாய் சைக்யாட்ரிஸ்டை கடித்துவிடுகிறது.

சைக்யாட்ரிஸ்ட் கையில் கட்டுப்போடப்பட்டு உட்கார்ந்திருக்கிறார். போலீஸ் வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார். சைக்யாட்ரிஸ்ட் தான் பென்னின் வீட்டிற்கு சென்றதாகவும். அங்கே அவளுக்கு இரத்தம் ஒழுகிக்கொண்டிருப்பதாகவும். உடனடியாக காப்பாற்றவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் போலீஸோ தான் பென்னின் அம்மாவின் பள்ளித்தோழன் என்றும் பென்னின் அம்மாவின் இறுதிச்சடங்கிற்கு தான் சென்றிருந்ததாகவும் சொல்கிறார். (என்ன தலை சுற்றுகிறதா? சும்மா கதை கேட்பதற்கே இப்படியென்றால். சனிக்கிழமை இரவு 12 மணிக்கு படம்பார்த்த எங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருந்திருக்கும்?)

கையில் கட்டுடன் வீட்டிற்கு செல்கிறார் சைக்யாட்ரிஸ்ட். அவருடைய காதலி அவர் கதவைத்திறக்கும் முன்னர் கதவைத்திறந்து விடுகிறாள். இந்த காட்சி நிறைய முறை “ரிப்பீட்டு” ஆகிறது. அவர் கதவைத் திறக்கிறார், காதலி எங்கே இரவெல்லாம் சென்றிருந்தீர்கள் என்கிறாள். திறக்கிறார். எங்கே இரவெல்லாம் சென்றிடுந்தீர்கள். றக்கிறார். இரவெல்லாம் சென்றிருந்தீர்கள். க்கிறார். சென்றிருந்தீர்கள். அதை தொடர்ந்து சைக்யாட்ரிஸ்ட் படுக்கைக்கு வந்து படுக்கும் வரை காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன. ஒரே வசனம் ரிப்பீட் செய்யப்படுகிறது.

மறுநாள் காலை சைக்யாட்ரிஸ்ட் எழுந்திருக்கும் முன் காதலி கிளம்பி வெளியே சென்றுவிடுகிறாள். சைக்யாட்ரிஸ்ட்டும் வீட்டிற்கு வெளியே வரும்பொழுது அங்கே பென் உட்கார்ந்திருக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. சைக்யாட்ரிஸ்ட் பென்னிடம் : நீ உன் அம்மா இறந்துவிட்டார் என்றாய் ஆனால் நான் அவளைப் பார்த்தேன். தலையில் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. உன் நாயைக்கூடப் பார்த்தேன் அது என்னைக் கடித்துவிட்டது- என்கிறார். அதற்கு அவன் மறுத்துவிட்டு, அதெப்படி சாத்தியம் என் அம்மாவை நான் தானே சுட்டுக்கொன்றேன் என்கிறான். நான் சிறுவனாக இருக்கும் போதே எங்களுடைய நாய் இறந்துவிட்டது நான் தான் புதைத்தேன் என்றும் சொல்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வர, இருவருக்கும் ஒரே வாக்கியங்களை ஒரே சமயத்தில் பேசிக்கொள்கின்றனர். பிறகு பென் போகிறான். சைக்யாட்ரிஸ்ட் அவனைத்தடுக்க, அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சென்றுவிடுகிறான்.

சைக்யாட்ரிஸ்ட் பென்னின் காதலி ரெஸ்டாரென்டில் தான் வேலை செய்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவளைத்தேடி ஒவ்வொரு ரெஸ்டாரென்டாக ஏறி இறங்குகிறான். எந்த ரெஸ்டாரண்டிலும் அவள் இல்லை. கடைசி ரெஸ்டாரென்டில் சைக்யாட்ரிஸ்ட் பென்னின் காதலியை (அதினா) பற்றி விசாரித்து விட்டு அவள் இல்லை என்றவுடன் சோர்வாக உட்கார்ந்து டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு வெய்ட்ரஸ் சைக்யாட்ரிஸ்ட்டிம் வந்து, அதினாவை ஏன் தேடுகிறீர்கள் என்கிறாள்.

ஒருவழியாக அதீனாவை தேடிக்கண்டுபிடித்துவிடுகிறார் சைக்யாட்ரிஸ்ட். அங்கே அவள் நாடக ரிகர்சலில் இருக்கிறாள். நாடகம் முடிந்ததும் சைக்யாட்ரிஸ்ட் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பென் பற்றி விசாரிக்கிறார். அவள் அவரை சுழல் படிகள் கொண்ட பாதாளத்திற்கு அழைத்துச் செல்கிறாள். (சுழல் படிகள் சுழலுகிறதோ இல்லையோ நம் தலை சுழல்கிறது) படிகளில் வேகமாக இறங்கிக்கொண்டிருந்த சைக்யாட்ரிஸ்ட் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார் (விழட்டும் நன்றாக வேண்டும்). காதலிக்காக வாங்கி வைத்திருந்த ரிங் (பென் தன்னுடையது என்று சொன்னது) கீழே விழுந்து விடுகிறது. தடவி தடவி ரிங்கை எடுக்கிறார். அதீனாவை காணவில்லை. மீண்டும் படிகளில் ஏறி மேலே வருகிறார். அங்கே முன் பார்த்த அதே காட்சி அதே வசனத்துடன் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. (அட போங்கப்பா!)

பென் ஒரு புத்தக கடைக்கு அடிக்கடி போவான் என்கிறாள் அத்தீனா. பென்னை தான் காதலிக்கவில்லை என்றும் கூறுகிறாள். சைக்யாட்ரிஸ்ட் பென்னைத்தேடிக்கொண்டு அந்த புத்தகக் கடைக்கு போகிறார். புத்தகக் கடைகாரருக்கு பென்னை ஞாபகம் இருக்கிறது. மேலும் அவர், பென் தான் படிக்கும் புத்தகங்களுக்கு பணம் கொடுக்க முடியாததால் ஒரு படம் வரைந்து கொடுத்திருக்கிறான் என்கிறார். அந்த அழகிய படத்தை சுவற்றில் மாட்டி வைத்திருக்கிறார். படத்தில் பிரபல் எழுத்தாளர் (அல்லது ஓவியர். எனக்கு மறந்துவிட்டது!) இருக்கிறார். அப்பொழுது தான் சைக்யாட்ரிஸ்ட்டுக்கு நினைவுக்கு வருகிறது, அவருடைய காதலியும் அந்த படத்திலிருப்பவரின் ரசிகை என்று.

தன் காதலிக்கு போன் செய்து அந்த படத்திலிருப்பவரைப்பற்றி கேட்கிறார் சைக்யாட்ரிஸ்ட். அவள் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறாள். விபரமாக : அவர் ஒரு சனிக்கிழமை தனது இருபத்தி ஒன்றாவது பிறந்தநாளின் இரவில் ஒரு பாலத்தில் (அந்த பிரிட்ஜ் அவர்கள் வசிக்கும் நகரத்திலே இருக்கிறது) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்கிறாள்.

பென்னுக்கும் அது இருபத்தியொன்றாவது பிறந்த நாளே. சைக்யாட்ரிஸ்ட் அந்த பாலத்தை நோக்கி ஓடுகிறார். சைக்யாட்ரிஸ்ட்டின் காதலியும் பாலத்திற்கு வருகிறார். அங்கே பென் அவர்கள் முன்னாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறான்.

கார் விபத்து நடக்கிறது. டயர் வெடித்து கார் நிலை குப்புற விழுகிறது. கார் ஓட்டிக்கொண்டுவந்த பென் நிலை குப்புற விழுகிறான். தலையில் பலமாக அடிபடுகிறது. காரில் இருந்த பென்னின் அப்பா, அம்மா மற்றும் காதலி அந்த இடத்திலே உயிரை விடுகிறார்கள். பென்னிற்கு மட்டுமே கொஞ்சம் உயிர் இருக்கிறது.

பென்னிற்கு பின்னால் கார் ஒட்டிக்கொண்டுவந்த சைக்யாட்ரிஸ்ட் (அவர் சைக்யாட்ரிஸ்ட் அல்ல. ஒரு சாதாரண மருத்துவர்) விபத்தை பார்த்து, பதறியடித்துக்கொண்டு காப்பாற்ற வருகிறார். பென்னுக்கு தைரியம் சொல்கிறார். பென் அரை மயக்கத்தில் அவரைப்பார்க்கிறான்.

இன்னொரு காரில் அந்தப்பக்கம் வந்த சைக்யாட்ரிஸ்ட்டின் காதலி (சைக்யாட்ரிஸ்ட்டின் காதலியே அல்ல. அவள் வேறு யாரோ! ) யும் பென்னை காப்பாற்ற முயற்சி செய்கிறாள். பென் அரைமயக்கத்தில் இருவரையும் பார்க்கிறான்.

படத்தில் போலிசாக வந்தவர், அந்த கூட்டத்தில் இருக்கிறார். படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் (பலூன் வைத்திருக்கும் பையனும்,அம்மாவும் கூட்டத்தில் இருக்கிறார்கள். அந்த பையன்: அம்மா, இவன் சாகப்போகிறானா? என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள்)
எல்லாம் – அதீனா இருக்கும் ரெஸ்டாரன்டை சொன்ன மற்றொரு வெயிட்ரஸ்- கூட்டத்திலே இருக்கின்றனர்.

ஆம்புலன்ஸ் வந்து பென்னை தூக்கிக்கொண்டு செல்கின்றனர். அவன் இன்னும் சாகவில்லை. (அவனை ஆம்புலன்ஸில் தூக்கி வைக்கும்போது அவன் பார்வையில் தெரியும் கட்டிங்கள் சாட்சி). பிறகு அவனுக்கு உதவிய இருவரும் (டாக்டர் மற்றும் இன்னொரு பெண்) காபி சாப்பிட செல்கின்றனர்.

நான் புரிந்துகொண்டது :

எல்லாம் மாயை. illusion. கார் ஆக்ஸிடன்டில் அடிபட்டு சாகப் பிழைக்க கிடக்கும் பென்னின் ஆழ் மனது, தான் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளையும், நினைத்து வைத்திருந்த கற்பனைகளையும் ஒன்றாக சேர்த்து, அதற்கு, நிஜ வாழ்க்கையில் தற்பொழுது உதவிக்கொண்டிருக்கும் டாக்டரையும், உடன் இருக்கும் ஒரு பெண்ணையும், ஹீரோ, ஹீரோயினாக வைத்து ஒரு குழப்பமான நிகழ்ச்சி பின்னலை ஏற்படுத்திக்கொள்கிறது. அதே மனது, டாக்டரை தானாகவும் சில இடங்களில் -சைக்யாட்ரிஸ்ட், பென்னின் அம்மாவைப் பார்க்கப்போகும் போது, பென்னின் அம்மா சைக்யாட்ரிஸ்ட்டை பென்னாக நினைத்து பேசுவது, பென்னும் சைக்யாட்ரிஸ்ட்டும் பேசிக்கொள்ளும் போது இருவரும் ஒரே வாக்கியங்களை பயன்படுத்துவது – எண்ணிக்கொள்வது தான் விசித்திரம்.

மாயா மாயா எல்லாம் மாயா. சாயா சாயா எல்லாம் சாயா. வேறு வகைகளில் படத்தைப் புரிந்தவர்கள், ப்ளீஸ் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க!

சே குவேரா

இரண்டு வருடங்களுக்கு முன், என் அண்ணன், சே குவேரா : வாழ்வும் மரணமும் என்ற ஜோர்ஜ் ஜி காஸ்நாடா, எழுதிய புத்தகத்தை வாங்கி வைக்குமாறு என்னைப் பணித்தார். அப்பொழுது, சென்னையில் நடந்து கொண்டிருந்த புத்தக கண்காட்சியில், அந்தப் புத்தகத்தை தேடி அலைந்து, கிடைக்காமல், இல்லை என்று என் அண்ணனிடம் சொல்லிவிட்டேன். அப்புறம், இரண்டு வருடங்கள், நான் சிங்கப்பூர் நூலகத்தின் குறிப்பு பகுதியில் (reference section) இந்த புத்தகத்தைப் பார்க்கும் வரையில், நான் சே குவேராவை மறந்தே போயிருந்தேன்.

நான் புத்தக அலமாரியிலிருந்து அந்த புத்தகத்தை எடுத்து வந்து, மேஜைமேல் வைத்து, முன்னுரையைப் படிக்கும் வரை, சத்தியமாக எனக்கு சே குவேரா, யாரென்று தெரியாது.

முன்னுரையைப் படித்து முடித்த எனக்கு, சற்று வியப்பாகவும், ஆச்சரியமாகவும் கூட இருந்தது, நல்ல வருமானம் தரக்கூடிய டாக்டர் தொழிலை விட்டு விட்டு, புரட்சியென்று யாராவது சுற்றித் திரிவார்களா என்ன? சமகாலத்தில், புரட்சி என்ற ஒரு சொல், அருங்காட்சியகத்தில் மட்டுமே காணக்கிடைக்கின்ற ஒன்றாக ஆகிவிட்ட காரணத்தால் கூட, நான் இவ்வாறு நினைத்திருக்கலாம்.

சே குவேரா, பற்றி, அறிந்தவர்கள், இந்த ‘பாரா’வை புறக்கணிக்கவும். இது ஒரு எளிய அறிமுகம். சே குவேரா, அர்ஜெண்டினாவில் பிறந்து, மருத்துவக் கல்லூரியில் பயின்று, மாணவனாக இருக்கும் பொழுதே, சரித்திரப் புகழ் பெற்ற, லத்தீன் அமெரிக்கா முழுவதும் தன் மோட்டார் சைக்கிளில் கடக்கும், பயணத்தை செய்தார். அந்தப் பயணத்தின் பொழுது தான் தனது மக்களின் வறுமையை கண்கூடாகக் கண்டார். அவர் ஒரு புரட்சியாளனாக மாறுவதற்கான விதையும் அப்பொழுதே தூவப்பட்டது. பிற்காலத்தில் அவர் கெரில்லா (கொரில்லா என்று சொல்லக்கூடாது என்று மதன் சொன்னது ஞாபகம் இருக்கிறது!) (Guerilla) ,படைத் தளபதியாக இருந்தார். கியூபாவின் விடுதலைக்கு காரணமாகவும் இருந்தார். கெரில்லா யுத்தத்தைப் பற்றி அவர் பல நூல்கள் எழுதியுள்ளார். இறுதியில் பொலிவியாவில், அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.

அதற்கப்புறம் நான் சிங்கப்பூரில் இந்தப் புத்தகத்தை தேடி அலைந்து விட்டேன். இந்தியா சென்றிருக்கும் என் நண்பரிடம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறேன். வாங்கி வருகிறாரா பார்ப்போம்.

இந்த சமையத்தில் தான், மோட்டார் சைக்கிள் டைரீஸ், என்ற படத்தின் குறுந்தகடு (CD) எனக்கு கிடைத்தது.இது ஒரு லத்தீன் அமெரிக்க திரைப்படம். ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருந்தது. இதுவே எனது முதல் வேற்று மொழித் திரைப்படம். வேற்று மொழித்திரைப்படங்கள் பார்ப்பதில் ஒரு அசௌகரியம் இருக்கிறது. வசனங்களைக் கவனிக்க சப் டைட்டிலைப் பார்த்தால், நடிகர்களின் முக பாவனைகளை கவணிக்க முடியாமல் போகிறது. முகபாவங்களை கவனித்தால் வசனங்களை பின்பற்ற (follow) செய்ய முடிவதில்லை.
இந்த திரைப்படத்தைப் பற்றி முன்பே நான் அறிந்திருக்கிறேன். நல்ல படம் என்பது மட்டுமே எனக்கு தெரியும். சிடியின் பின்புறம் பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி, இது சே குவேராவின் இளமைக் காலத்தை, அவரது சரித்திரப் புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள் பயணத்தை பற்றிய படம். பயோகிராபி (Biographical).

படம், சேகுவேரா தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்குவதிலிருந்து, ஆரம்பிக்கிறது. சே குவேரா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டவர். அதுவும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆஸ்துமா நோய்வாய்ப் பட்டவர், கெரில்லா யுத்தங்களை செய்ய முடிந்தது, என்பது மிகவும் வியப்பான, கவணிக்கப் பட வேண்டிய ஒன்று.

தனது காதலி, அவளுக்கு அமெரிக்காவில், நீச்சல் உடை வாங்கிவர, தன்னிடம் கொடுத்த, 20 டாலர் பணத்தை தன் நண்பனிடமிருந்து பாதுகாத்து, தனக்கு மிகவும் தேவைப்பட்டபொழுதும் அதை உபயோகிக்காது, பிறகு, ஒரு கல்லுடைக்கும், சாப்பாட்டிற்கு வழியில்லாத, தம்பதியினரிடம் கொடுப்பது அவரது நேர்மையையும், கனிவையும், சமூகப் பொருப்புணர்வையும் காட்டுகிறது.

படத்தின் ஒரு வசனம். எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட : உன் ஒவ்வொரு மூச்சிலும், நீ போரிடு. சாவை நரகத்திற்கு போகச்சொல்.

படம் முடிந்தும், படத்தின் காட்சிகளும், சே குவேராவின் பிம்பமும், ஒரு நாய்க்குட்டியைப் போல நம்மைச் சுற்றி சுற்றி வருகின்றன. படத்தின் சிந்தனைகள், ஒரு அலையைப் போல, மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டேயிருக்கிறது.

மிக நீண்ட நாட்களுக்கு பின் புரட்சி என்ற வார்த்தையை நான் மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

புத்தகத்தை எப்படியும் இந்த வருடத்திற்குள் படித்துவிடுவேன்.