ரோடெங்கும் நயாகராக்கள்

எண்ணம் எனது : ஆகாசம் பதிவை படித்தேன். அதன் தொடர்ச்சியாக!!

(ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் கவிதைதானே? பார்த்திபன் கூட ஒரு படத்திலே சொல்லுவார். )

ரோடெங்கும் நயாகராக்கள்:

பெய்யென பெய்யுமா
மழை?
திறந்திடு என்றால்
திறக்குமா அணை?

மழை பொய்க்கும்
ஆச்சரியமில்லை.
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு பெய்யும்
மழை
நல்லார் : மரம்?

சென்னை முழுதும்
நல்லார்கள் – சில
நாட்களுக்கு மட்டும்!
நல்லார் பலர் உளரேல்
வேண்டாமெனினும்
வற்றாமல் தேங்கும்
மழை

மழையின் வீடுகளை
ஆக்கிரமித்தோம்.
நம் வீடுகளை
மழை ஆக்கிரமித்தது.
இலாபமில்லை
இருவருக்கும்!

ஏரி தெருக்கள்
எருமை கார்கள்
முதலை மனிதர்கள்

ரோடெங்கும் நயாகராக்கள்!

மழை. தெருவிலே கிடக்கிறது.
அதற்கு அப்பார்ட்மெண்ட்
பழக்கமில்லை.
லிப்ட் ஏறத்தெரியாது.

**

த்ராயிருப்பில்
வருடந்தோரும்
வெள்ளம்.
தே. கள்ளுப்பட்டியில்
வருடந்தோரும்
வரட்சி.

நீர் சேகரிப்பா?
கலர் டீவியா?
ஏரியில் ‘செல்வி’
தெரியுமா?
எட்டிப்பார். தெரியும்.

நதி நீர் இணைப்பு?
(உண்ணாவிரதமா?
இந்தமுறையும்
கூட்டம் வருமா?)
கனவு இன்·பினிடி.
1 கோடி / 0.

மின்சாரம் தருகிறோம்.
அனு சக்தி தயாரிக்கிறோம்.
விளைவுகள் எங்களுக்கு.
பயன் எல்லோருக்கும்.
மந்திரிகளும் தருகிறோம்.
கண்ணீரும் தருகிறோம்
பண்டமாற்று முறையில்
தண்ணீர் தாருங்கள்.

**

ஞ்சி நிற்பது
கூல் சட்டிகளும்
விவசாயிகளின்
கண்ணீரும் தான்.
கண்ணீர் சேமிப்புத்திட்டம்
ஒன்றை அறிவியுங்கள்.
சேமிக்காதவர்களுக்கு
அபராதம் நிச்சயம்.
சேமித்தவர்களுக்கு?
கண்ணீரில்
பயிர் விளையுமா?
நெல் உப்புகரிக்குமா?

கையேந்துகிறார்கள்.
கண்ணீர் சிந்துகிறார்கள்.
போராட்டம் நடத்துகிறார்கள்.
உண்ணாவிரதம் ஷ்பெசல்.
நேரடி ஒளிபரப்பு.
விவசாயிகளின் துயரம்?
யாருக்குவேணும்.
ப்ரைம்டைமில் இடமில்லை.
(பிறகு கோழி வெடக்கோழி
எப்போ போடுவதாம்?)

**

ணை திறக்குமா?
தன்னலம் அனைவருக்கும்
பொது.

நாம்
குழாயடி சண்டைகளை
நிறுத்தியிருக்கிறோமா?

**

செம்மறியாடுகள் கத்திக்கொண்டிருக்கவில்லை.

சல்மான் ருஷ்டியின் த க்ரௌண்ட் பினீத் ஹெர் ·பீட் என்ற நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் பொழுது மிகவும் ரசிக்கத்தக்க வாக்கியங்களை படிக்க நேர்ந்தது. அதை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்ற விபரீத எண்ணம் தோன்றவே, நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள். ஆங்கில வெர்ஷன் இங்கே இருக்கிறது. சில வாக்கியங்களை நீக்கியதற்கு மன்னிக்கவும். சில அர்த்தங்களையும் மாற்றியிருக்கிறேன்.

சில வியாதிகள் பல பெரிய மனித சமுதாயங்களை சீரழிக்கின்றன, பின்னாளில் அத்தகைய வியாதிகள் முன்னெப்பொழுதும் இருந்திருக்கவில்லை என்பதை உணர்கிறோம். ஆண்களும் பெண்களும் தாம் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட நினைவுகளை திரும்பப்பெருகின்றனர். ஐயோ, இல்லை, அவர்கள் திரும்பப்பெறவில்லை. அவர்கள் தங்கள் பெற்றோர்களை மிகவும் அன்பு செலுத்துபவர்களாகவும், பெற்றோர்களே இவ்வுலகில் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள் என்றும் நினைத்துக்கொள்கின்றனர். மிகப்பெரிய அளவில் சமுதாய படுகொலைகள் நடைபெறுகின்றன. இல்லை நடைபெறவேயில்லை. அனு கழிவுகள் கண்டங்களின் பெறும் பகுதிகளை மாசுபடுத்துகின்றன. அசுத்தமாக்குகின்றன. சுற்றுச்சூழலைக்கெடுக்கின்றன. நாம் “பாதி-உயிர்” கோட்பாட்டை அறிந்துகொள்கிறோம். ஆனால் ஒரே நொடியில் சட்டென்று அனைத்து அசுத்தங்களும் மறைகின்றன. சுற்றுச்சூழல் முன்னெப்போதும் போல சுத்தமாகவே இருக்கிறது. இப்பொழுது செம்மறியாடுகள் கத்திக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் சந்தோஷமாக செம்மறியாட்டின் தொடைக்கறியை சப்புக்கொட்டி சாப்பிடுங்கள்.

பூலோக வரைபடங்கள் தவறாக இருக்கின்றன. எல்லைக்கோடுகள் பிரச்சனைக்குள்ளான தேசங்களில் ஒரு பாம்பைப் போல நெளிந்து கொண்டும், வளைந்து கொண்டும் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. பாதைகள், தாம் நேற்று வரை சென்றுகொண்டிருந்த இடங்களுக்கு இனி எப்போதும் செல்லப்போவதில்லை. ஒரு ஏரி திடீரென்று காணாமல் போகிறது. மலைகள் சிகரங்களாகின்றன. பிறகு மறுபடியும் குன்றுகளாகின்றன. மிகவும் புகழ்பெற்ற புத்தகங்கள் யாரும் எதிர்பாறாத முடிவுகளைப் அடைகின்றன. கருப்பு-வெள்ளை திரைப்படங்களிலிருந்து வானவில்லாய் வண்ணங்கள் வெடித்துச் சிதறுகின்றன. கலை என்பது ஒரு பித்தலாட்டமே. ஏமாற்றுவேலையே. அதி நவீன புறத்தோற்றமே உண்மை. திடம். செத்துப்போனவர்கள் தர்மசங்கடத்துக்குள்ளாக்குகிறார்கள். எவருமே செத்துப்போகவில்லை.

நீங்கள் ஒரு விளையாட்டு ரசிகர். ஆனால் நீங்கள் ஒவ்வொருமுறை விளையாட்டை பார்க்கும்பொழுதும், விதிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஐ! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. இல்லை உங்களுக்கு கிடைக்கவில்லை.அவள் ஜனாதிபதிக்கு பவுடர் அடித்துவிட்டாள். அவளுடைய கனவுகளில் அவள் பல மாயங்கள் செய்பவளாயிருந்தாள். நீங்கள் ஒரு காமக்கடவுள். நீங்கள் ஒரு காம அடிமை. அவள் சாகத்தான் வேண்டும். அவள் ஒரு மோசமான பெண். [சமாதனம் செய்ய முற்படாத உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறுபடும் ஒரு வித்தியாசமான பார்வையாகவும் இருக்கலாம்]. உங்களுக்கு கேன்சர் இல்லை. ஏப்ரல் ·பூல். ஆமாம். உங்களுக்கு கேன்சர் இருக்கிறது. நைஜிரியாவிலிருக்கும் அந்த நல்ல மனிதன் ஒரு கொலைகாரன். அல்ஜிரியாவிலிருக்கும் அந்த கொலைகாரன் ஒரு நல்ல மனிதன். அந்த பைத்தியகார கொலைகாரன் அமேரிக்காவின் மீது பற்றுள்ளவன். அந்த அமேரிக்க பைத்தியகாரன் கொலையின் மீது பற்றுள்ளவன். அங்கோரன் காடுகளில் செத்துக்கொண்டிருப்பது போல் பாட்டா? அல்லது வெறும் நோல் நாட்டா?

கீழே சொல்லபட்டிருப்பவையெல்லாம் உங்களுக்கு கேடுகளை விளைவிக்கக்கூடியவை: காமம், மிக உயரமான கட்டிடங்கள், சாக்லேட், உடற்பயிற்சியை புறக்கணித்தல்,சர்வாதிகாரம்,இனவெறி. இல்லை, எதிர்மாறாக இருக்கிறது. பிரம்மச்சரியம் மூளையை பாதிக்கும். மிக உயர்ந்த கட்டிடங்கள் நம்மை கடவுளுக்கு வெகு அருகில் கொண்டு செல்லும், ஒரு சாக்லேட் கட்டி ஒரு நாளைக்கு என்ற விகிதம், குழந்தைகளின் பாடம் படிக்கும் திறமையை முன்னேற்றுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி கொல்லும். சர்வாதிகாரம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எனவே உங்கள் கலாச்சார-கட்டுபட்டி விதிகளை, யோசனைகளை என் சாம்ராஜ்ஜியத்திற்கு உள்ளே கொண்டுவராததற்கு மிக்க நன்றி. போய்வாருங்கள். பிறகு, இனவெறி. நாம் இதைப்பற்றி ரொம்பவும் பிரசங்கம் செய்ய வேண்டாம். ஒரு கடுமையான ஜமுக்காளத்திற்கு அடியே மக்கி மறைந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் வெட்ட வெளியே அப்பட்டமாக இருப்பது தான் நல்லது
இல்லையா?. அந்த தீவிரவாதி ஒரு மிதவாதி. அந்த உலகளாவிய உரிமை கலாச்சாரத்தை சார்ந்திருக்கிறது. இந்த பெண் கலாச்சாரத்தை சார்ந்து சந்தோஷமாக இருக்கிறாள்.படங்கள் பொய் சொல்லாது. இந்த பிம்பம் பொய்யானது. போலியானது. பத்திரிக்கையை சுதந்திரமாக்குங்கள். மூக்கை நுழைக்கும் பத்திரிக்கையாளர்களை தடை செய்யுங்கள். நவீனம் செத்துவிட்டது. கௌவ்ரவம் மடிந்துவிட்டது. ஹையா, இவையெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நம்மை பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்த நட்சத்திரம் வளர்கிறது. இல்லை அவள் தேய்கிறாள். விழுகிறாள். நாம் ஒன்பது மணிக்கு சாப்பிட்டோம். நாம் எட்டு மணிக்கு சாப்பிட்டோம். நீங்கள் நேரத்திற்கு வந்தீர்கள். இல்லை. நீங்கள் தாமதாமாக வந்தீர்கள்.கிழக்கு தான் மேற்கு. உயர்வு தான் தாழ்வு. ஆம் தான் இல்லை. உள்ளே தான் வெளியே. உண்மைகளெல்லாம் பொய்கள். வெறுப்புதான் காதல். அன்பு. இரண்டும் இரண்டும் சேர்ந்து ஐந்தைக் கொடுக்கிறது. எல்லாம் நன்மைக்கே, இந்த மிக நல்லதாக இருக்ககூடிய உலகத்தில்.

இசை நம்மையும், நம் காதலையும் காப்பாற்றும்.

Translated from Salman Rushdie’s The Ground Beneath Her Feet.

ஆயிரம் கால் இலக்கியம் – 2

 

கோணங்கி பக்கங்கள் என்ற ஒரு தொடர் இப்பொழுது குமுதத்தில் வந்துகொண்டிருக்கிறது. நான் இப்பொழுதெல்லாம் குமுதம் காசு கொடுத்து வாங்குவதில்லை. வலையிலே படித்துவிடுகிறேன். மேலும் காசு கொடுத்து வாங்குவதற்கு அதில் ஏதேனும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை – நமீதாவின் படங்களைத்தவிர. ஆனாலும் என்னுடன் தங்கியிருக்கும் நண்பர் ஒருவர் அவ்வப்பொழுது குமுதம் வாங்கிவருவார். அப்பொழுது தான் சாருநிவேதிதாவின் இலக்கியத்தொண்டு பற்றி அறிந்துகொள்ள நேர்ந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்னால் சாருநிவேதிதா – கோணல் பக்கத்தில் – சென்னையில் எந்த எந்த பார்களில் – பைவ் ஸ்டார், திரி ஸ்டார் – உற்சாகபாணம் எவ்வளவு விலை என்பதை ஆராய்ச்சி செய்து தொகுத்து வழங்கியிருந்தார். (பி.ஹச்.டி செய்யப்போகிறார் என்றும் கேள்வி. டாக்டர் பட்டம் கூட கிடைக்கலாம்) யாரும் படிக்காமல் விட்டுவிடக்கூடும் – யாரும் இந்த அற்புத தகவலால் பயன் பெறாமல் போய்விடுவார்கள் – என்று நினைத்து , விலைப்பட்டியலை நன்றாக கட்டம் கட்டி இருந்தார்கள். அடுத்தவாரம் அவர் ரஜினிகாந்தோடு தண்ணியடித்த விசயத்தையும் – பல ஆண்டு காலம் ஆகியும் -மறக்காமல் சொல்லியிருந்தார். ரஜினியின் ஆரம்பகால தண்ணியடிக்கும் முறை நமக்கு இதன் மூலம் தெரியவந்தது பாக்கியமே. விலைமதிப்பில்லாத தகவல் அல்லவா இது. போனஸாக ரஜினி தற்பொழுது தண்ணயடிப்பதில்லை என்று தன் நண்பர் ஒருவர் – அவர் ரஜினிக்கும் நண்பர்- சொன்னதாக சொல்லியிருந்தார். அதற்கப்புறம் கோணங்கி பக்கங்களை படிக்கும் வாய்ப்பு -பாக்கியம்- எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை. ஆனால் நண்பர்கள் பலர், சாருநிவேதிதா, இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமானவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது ஒரு படைப்பையும் நான் படிக்காதது எனது துரதிர்ஷ்டமே.

இந்தவார குமுதத்தில் – சும்மா விளையாட்டுக்காக – எண்ணியதில் மொத்தம் 57 பெண்கள் – நடிகைகள் – படங்கள். பல செய்திகளில் – செய்தி? – நடிகைகளின் படங்கள், அங்கே இடம்பெற்றிருக்கும் செய்திக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை. பாய்ஸ் திரைப்படத்தில், விவேக் கேட்கும் கேள்வி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது : “பம்ப் செட் விளம்பரத்திற்கு ரம்பா தேவையா?’

இரண்டு குமிழிகள்
இணையும் தருணத்தில்
காணாமல் போகின்றன
இரண்டுமே..
மலர்கிறது ஒரு தாமரை

அதற்காக இவ்வாறான புரியாத கவிதைகளைத்தான் போடவேண்டும் என்றில்லை. சில பயனுள்ள தகவல்களையும் சொல்லலாம் : பரத் – ஜெனிலீயா காதலா? என்பதைப் போல.
(விசயம் தெரியாதவர்கள் சென்றவார விகடன் படிக்கவும்)

எனக்கு விகடன், குமுதத்தில் வரும் சிறு கதைகள் மிகவும் பிடிக்கும். அவை ஒரு வித்தியாசமான – நாம் எதிர்பார்க்காத – முடிவைக் கொண்டிருக்கும் காரணத்தால் கூட இருக்கலாம். சில சமையங்களில் கதை படிக்கும்பொழுதே – முடிவை யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். ஆனால் பல சமையங்களில் அந்த முடிவு நான் நினைத்திருந்த முடிவாக இருக்காது. வெகு நாட்கள் – கி. ராஜநாரயணனின் சிறுகதை தொகுப்பை – படிக்கும் வரையில் நான் சிறுகதைகள் என்றால் யாரும் எதிர்பாராத முடிவோடு தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இவ்வாற கதைகளில் – நான் படித்த – கதைகளில் எனக்கு நீண்ட நாட்களாக நினைவில் இருக்கும் ஒரு சிறுகதை : குமுதத்தில் வந்ததென்று நினைக்கிறேன். தலைப்பு ஞாபகமில்லை. எழுதியவரும் ஞாபகமில்லை.

பி.எஸ்.சி முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல், டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து, தம் அடித்து கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருக்கிறார் நமது ஹீரோ. அவ்வாறு ஒரு நாள், தம் அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பஸ்ஸில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். அவளால் ஈர்க்கப்பட்டு (இயற்கைதானே?) பஸ்ஸில் தொற்றிக்கொள்கிறார். அவள் இறங்கும்பொழுது அவளுடனே இறங்கி அவள் பின்னாலேயே செல்கிறார், வீட்டைக்கண்டுபிடிக்கிறார்(ன்). அப்புறம் கொஞ்ச நாட்கள் அவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கிறான். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத அந்த பெண், பிற்பாடு நம்ப ஹீரோவை லுக் விட ஆரம்பிக்கிறார்(ள்). அப்புறம் காதல் பற்றிக்கொள்கிறது. இருவரும் உருகி உருகி காதலிக்கின்றனர். அவளும் பி.எஸ்.சி படித்தவள்.

ஒரு நாள் திருச்சியில் இருவருக்கும் இண்டர்வியு வரவே இருவரும் பஸ்ஸில் திருச்சி பயணிக்கின்றனர். துவரங்குறிச்சி வரையிலும் தனித்தனியாக உட்கார்ந்திருந்து விட்டு, அதற்கப்புறம் சேர்ந்து உட்கார்ந்து கொள்கின்றனர். தமது திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் வருகின்றனர்.
இண்டர்வியூ முடிந்து, இருவரும் சினிமாவுக்குப் போகின்றனர். இண்டர்வியூவில் இருவரும் பாஸ் செய்திருக்கவில்லை. சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, தியேட்டரில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி வர, மக்கள் அனைவரும் பயந்தடித்துக்கொண்டு ஓடுகின்றனர். ஹீரோவும், ஹீரோயினும் கூட ஓட, ஹீரோயின் தடுமாறி கீழே விழுகிறாள், ஹீரோ தாங்கிப்பிடித்து விடுகிறார்(ஹீரோவாச்சே?).

மறுபடியும் திருச்சியிலிருந்து பஸ் பிடித்து, துவரங்குறிச்சி வரையிலும் ஒன்றாக அமர்ந்திருந்து, அ தற்கு பிறகு தனித்தனியாக அமர்ந்து சமர்த்தாக வீடு வந்து சேர்கின்றனர்.

ஹீரோ, இண்டர்வியூவில் பெயிலானதை நினைத்து (படம் முழுக்க பார்க்க இயலாததால்?) சோகத்துடன் தூங்கிவிடுகிறார்.

மறுநாள் காலை எழுகிறார். வீட்டிலிருக்கும் அண்ணன், அம்மா, அப்பா, தங்கை யாரும் தன்னுடன் பேச மறுப்பதை அறிகிறான். அம்மா கோபமாக வேறு இருக்கிறார். குழப்பத்துடன் அண்ணனைக் கேட்க, அவன் பதில் பேசாது, அன்றைய செய்தித்தாளை எடுத்துக்கொடுக்கிறான்.
ஹீரோ பேப்பரை பிரித்துப்பார்க்கிறான், அங்கே:

“திருச்சி தியேட்டரில் வெடிகுண்டு புரளி.
தடுக்கி விழுந்த காதலியை தாங்கிப்பிடித்த காதலன்”

என்று கொட்டையெழுத்தில் நம்ப ஹீரோ-ஹீரோயின் போட்டவோடு செய்தி வெளியாகியிருந்தது. அங்கே ஹீரோ ஹீரோயினை ஸ்டைலாக தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நாட்களுக்கு முன்னாள், சிங்கப்பூர் வந்திருந்த, ஜெயமோகன் அவர்களின் பேச்சை கேட்க – அல்லது சிறுகதை பட்டறைக்கு – போயிருந்தேன். அப்பொழுது சிறுகதையின் முக்கியமான ஒன்றாக அவர் குறிப்பிட்டது – சிறுகதையின் முடிவு. ஒரு சஸ்பென்ஸ். அவிழும் ஒரு முடிச்சு. பல சிறுகதைகளில் அதைப்பார்க்கலாம். ( சில படங்கள் கூட சிறுகதைகள் போன்ற ஒரு அதிபயங்கர முடிவோடு இருக்கும். அந்த முடிவுக்காகவே ஒவ்வொரு காட்சியும் காத்திருக்கும். அவ்வாறான ஒரு படம் : the sixth sense.)

இந்த வார விகடனில் கூட ஒரு நிமிடக் கதைகள் சில பிரசுரமாகியிருந்தன. அதில் ஒன்று:

“அம்மா! நல்லவர்னு இவ்ளோ நாளும் நம்பிக்கிட்டிருக்கியே உன் புருசன் அதுதான் என் அருமை அப்பா..அவரோட யோக்கியதை தெரியுமா உனக்கு?”

“என்னடி ஆர்த்தி சொல்ற?”

“அந்த அசிங்கத்தை ஏன் கேட்கிற? நேத்து நான் ஸ்கூல்ல இருந்து சீக்கிரமே வந்துட்டேன். போக்கிடமேயில்லாம பல வருசம் நம்ப வீட்லயே விழுந்து கிடக்கிறாளே நம்ப வீட்டு வேலைக்காரி கஸ்தூரி. அவளோடு நெருக்கமா..பெட்ரூம்ல உன் புருசன்..சே!”

“பதறாதே ஆர்த்தி. சுருக்கமா சொன்னா புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். இந்த வீட்ல வேலைக்காரியா வந்து சேர்ந்தது கஸ்தோரி இல்ல. நான் தான்”

நாலே நாலு வாக்கியம். ஒரு திருப்பம். ஒரு நிமிடம். ஒரு கதை. நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதை விட சுவையாக இருந்தது இந்த கார்ட்டூன்:

அப்புறம், கல்கியில் ஒருமுறை: நாடக தொனியில் ஒரு சிறுகதை பிரசுரமாகியிருந்தது. மிகுந்த நக்கலான – சுவையான, ஹாஸ்யமான – சிறுகதை அது. அதை பத்திரப்படுத்தி நீண்டகாலம் வைத்திருந்தேன். கதையின் பெயரும் எழுதியவரும் நினைவில் இல்லை.

அந்த சிறுகதையின் கரு இதுதான்:
நாம் வாழ்க்கையின் அனைத்து தருனங்களிலும் – அல்லது வாழ்க்கை முழுவதும் – ஏதோ ஒரு வரிசையில் -க்யூவில்- நின்று கொண்டிருக்கிறோம்.

செம நக்கல் பண்ணியிருந்தார் எழுதியவர். புரோமோசனுக்காக காத்திருக்கும் அலுவலர்களிடம், பாஸ்(boss) வந்து, ‘ம்..ம்.. எல்லோரும் எழுந்திருங்க. குதிங்க. யார் நன்றாக குதிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் புரோமசன்’ என்று கூறுவது உச்சகட்டம். மாட்டின் கண்ணில் எம்.ஜி.ஆர். தெரிகிறார் என்று க்யூ நிற்பதாகவும் ஏகத்துக்கும் கிண்டல் செய்திருப்பார்.

இந்தியாவில் எதற்கு க்யூவில் நின்றாலும் – பிள்ளையார் பால் குடிப்பதைப் பார்க்க க்யூவில் நின்றது எனக்கு நினைவிருக்கிறது – பஸ்ஸ¤க்கு க்யூவில் நிறக மாட்டோம். சென்னை பாஷையில் : ‘அச்சு புச்சு ஏறுடா’. சிங்கப்பூரில் பஸ்ஸ¤க்கு க்யூவில் நிற்க வேண்டியுள்ளது. இங்கே க்யூவிற்கா பஞ்சம். மதிய சாப்பாட்டிற்கும் க்யூவில் தான் நிற்க வேண்டும். நாம் வேண்டாமென்றாலும் சில அதி முக்கியமான – இன்னைக்கு சாம்பார் எடுக்கலாமா?பாவற்காய் எடுக்கலாமா? சிக்கன் எடுக்கலாமா? அதோ எந்த வகையிலும் சேராமல் இருக்கிறதே அந்த கூட்டு,அது என்ன? ம்..ம்…புடலங்காய் – வாக்குவாதங்களை கேட்க முடியும். பழக்கமாகிவிட்ட இந்த பழக்கம், இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மட்டும் – மிகவும் விசித்திரமாக இருக்கும். முதன் முதலில் சென்னை வந்து – என் அண்ணனுடன் – டி. நகர் சரவணபவனில் சாப்பிட சென்று, க்யூவில் நின்றது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

நான் பள்ளி படிக்கும் பொழுது – பதினோரம் வகுப்பு – தொண்டர் படை என்ற நாடகத்திற்கு இந்த -க்யூ- கருவைத்தான் எடுத்துக்கொண்டேன். என் நாடகத்தில் மக்கள் அனைவரும் ஒரே க்யூவில் நிற்பார்கள். ஆனால் வேறு வேறு காரணங்கள் சொல்லுவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை, அரசுக்கு (சரத்குமார் இல்லை. அரசாங்கம்!) உணர்த்த (ஏதோ, அரசுக்கு இந்த விசயம் தெரியாமலே இருந்ததுபோல!) இளைஞர்கள் நகரின் நடுவே நீண்ட க்யூவில் நிற்பார்கள். அரசின் அடக்குமுறையால் அது புரட்சியாக மாறும். இப்படியாக காமடிக்கரு : கம்யூனிஸ்ட் கதையாக ஆனது. அந்த நாடகத்தில் விகடனில் வந்த கார்டூன் ஒன்று தான் மைய கதாப்பாத்திரம். விகடனில் வந்த ஜோக் அது. ஒரு வயதானவர் என் மகனைப் பார்த்தீங்களா? என் மகனைப் பார்த்தீங்களா? என்று கண்ணில் படும் நபர்களிடமெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பார். பொறுமையிழந்த ஒருவர், யாருயா இந்த ஆளோட மகன் என்று கேட்பார். அதற்கு இன்னொருவர், சும்மா இருய்யா. அந்த ஆளோட மகன் தான் இந்த ஊரு எம்.எல்.ஏ. என்பார்.

பிறகு ஒரு கதை: ஹீரோவும், அவனது தங்கையும், அவன் அம்மாவும் ஒரு குடும்பம். ஹீரோவின் பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருக்கிறார். பாட்டியின் வீட்டிற்கு, ஒரு அழகான பெண் விடுமுறையில் வருகிறார்.ஹீரோவின் தங்கையும், அந்த பெண்ணும் சிநேகிதிகளாகின்றனர். ஹீரோவின் நண்பர் கூட்டம் அவனை அந்த பெண்ணுடன் இணைத்து கேலி பேசுகின்றது. நாளடைவில் ஹீரோ, அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். அந்த பெண் நாளை ஊருக்கு செல்கிறது. இன்று ஹீரோ, தன் தங்கை, அம்மா, பாட்டி, அந்த பெண்ணுடனும் கோவிலுக்கு செல்கிறான். கோயிலின் ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு தேரின் இருளில், ஹீரோ தன் காதலை சொல்கிறான். குடும்பத்தில் அனைவரும் வந்து விட பதிலேதும் சொல்லாமல் அந்த பெண் சென்றுவிடுகிறாள்.

வருடங்கள் ஓடுகின்றன. ஹீரோ டெல்லியில் (ஆம். அப்பொழுதெல்லாம் அமெரிக்கா இவ்வளவு பேமசாக இல்லை.) நல்ல வேலையில் இருக்கின்றான். தங்கைக்கும் திருமணமாகிவிடுகிறது. திருவிழாவிற்கு ஊருக்கு வருகிறான். அந்த பெண்ணும் வந்திருக்கிறாள் தன் கணவனுடன். மறுநாள் கோவிலில், தனிமையில், அதே தேரின் இருளில் இருவரும் எதிர்பாராமல் (எதிர்பார்த்து?) சந்தித்துக்கொள்கின்றனர். அவள் ஒரு கனம் இவனை வெறித்துவிட்டு, “உனக்காக எத்தனை நாள் காத்திருந்தேன். நீ ஏன் வரவில்லை” என்கிறாள்.

(தொடரும்)

தேன்கூடு-போட்டி : தொலைவு

(சிறுகதை)

பிப்ரவரி 2 2003
கோடாங்கிபுரம்


கருப்பாயிதாயி, தனது முதுமையைப் பற்றி பெரிதும் அலடிக்கொள்ளவில்லை. அந்த சுட்டெரிக்கும் சூரியனையும் கண்டுகொள்ளவில்லை. சூரியன் தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து, மேலும் சூடானான். கருப்பாயி 50 வயதை தாண்டியவள், என்றாலும் இடைவிடாத உழைப்பு அவளை மேலும் மேலும் வலுவாக்கிக்கொண்டேயிருக்கிறது. மேலக்கோணார்புரத்திலிருந்து, மலேசியாவிலிருக்கும் தன் மகன் செல்லையாவின் குரலைக் கேட்க, இந்த வேகாத வெயிலில் தன் அண்ணன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறாள். மேலக்கோணார்புரத்தில் போன் வசதி கிடையாது. மலேசியாவிலிருக்கும் செல்லையா தன் மாமாவின் வீட்டிற்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பேசுவான். கருப்பாயி வாழ்க்கையில் எதைத் தவறவிடுகிறாளோ இல்லையோ, முதல் ஞாயிற்றுக்கிழமையை தவறவிட்டதில்லை. செல்லையாவும் தான்.

படி ஏறியவுடன், கருப்பாயி தன் அண்ணனிடம் செல்லையா இன்னும் போன் செய்திருக்கவில்லை என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள். மதனியிடம் ஒரு டம்பளர் மோர் வாங்கிக் குடித்துவிட்டு, கருமை நிறத்தில் சாந்தசொரூபியாய் அமர்ந்திருக்கும் டெலிபோனையே வெறித்துக்கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் மதியம் 12:00 மணிக்கு ‘டான்’ – டிரிங் – என்று போன் செய்துவிடுவான் செல்லையா. இன்று மணி மூன்றைத்தாண்டிக்கொண்டிருந்தது. மதனி சாப்பிட அழைத்ததும், ஒப்புக்கு ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் வந்து டெலிபோன் அருகில் அமர்ந்துகொண்டாள்.

மணி ஆறாகியது. மாலை ஏழாகியது. பக்கத்து வீட்டு முனியனைக் கூப்பிடச்சொல்லி, கெஞ்சிய ‘காலை’த் தவிற வேறு ஒரு ‘காலும்’ வரவில்லை.

‘ஏதாவது வேலையா இருந்திருப்பான்மா, கவலைப்படாதே’ என்று தேற்றிய அண்ணனுக்கு செவிசாய்க்கவில்லை.

இரவு தங்கிவிட்டு, காலை செல்லலாம் என்று வற்புறுத்திய அண்ணிக்கு, தாரணி வீட்டில் தனியாக இருப்பாள் என்ற காரணத்தைக் காட்டி, வெற்று மனதோடும், கனத்த மவுனத்தோடும் மறுபடியும், மேலக்கோணார்புரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், சோர்வோடு.

மார்ச் 2 2003
கோடாங்கிபுரம்.

மாலை மணி ஆறாகியும் செல்லையாவிடமிருந்து போன் வரவில்லை.

மார்ச் 6 2003
மேலக்கோணார்புரம்.

யாரோ அழைக்கும் சப்தம் கேட்டு தாரணி வீட்டு வாசலுக்கு வந்தாள். ‘ஆத்தா இல்லையா?’ ‘இல்ல. என்ன விசயம்?’ ‘உங்க அண்ணன் செல்லையா மலேசியாவிலேருந்து கூப்பிட்டிருந்தானாம். நல்லா இருக்கானாம். அடுத்த மாசம் மொதோ ஞாயிற்றுக் கிழமை கூப்பிடறேன்னு சொன்னானாம். கோடாங்கிபுரத்திலிருந்து ராமையா சொல்லி அனுப்பிச்சாரு’ என்று சொல்லிவிட்டு விறுவிறு வென்று நடந்து சென்றார், வந்தவர்.

ஏப்ரல் 6 2003
கோடாங்கிபுரம்.

கருப்பாயி, போனையே வெறித்துக்கொண்டிருந்தாள். ‘அட இங்கன வந்து உக்காரு தாயி, அவன் போன் பண்ணுவான்’ கூப்பிட்ட அண்ணனையும் கண்டுகொள்ளவில்லை.
மணி அடித்தது.

‘யாரு செல்லையாவா?’
‘ஆமாப்பா, ஆத்தாதேன் பேசுறேன். நல்லாயிருக்கியா ராசா?’
‘நான் நல்லாயிருக்கேஞ்சாமி. நீ நல்லாயிருக்கியாய்யா?’
‘சாப்பிட்டியா ராசா?’
‘நல்லா சாப்பிடனும் தம்பி. என்னய்யா சாப்ட?’
‘நல்லா கோழி கீழிய வாங்கி திங்கப்படாது?’
‘ஆத்தா நல்லாயிருக்கேன் ராசா. தாரணியும் நல்லாயிருக்கு. அவதேன் நெடு நெடுன்னு வளர்ந்து நிக்கிறா’
‘அத பாத்துக்கிடலாம்யா. நீ கவலைப்படாத!’
‘குரல் ஏன்யா ஒரு மாதிரி கரகரன்னு இருக்கு. உடம்புகிடம்புக்கு சரியில்லையா?’
‘உடம்ப பார்த்துக்க ராசா! தொலவட்டுல இருக்குற பய! எங்களப்பத்தி கவலப்படாத’
‘ஏன்யா? தம்பியா?’
‘தம்பி நல்லாயிருக்கான்யா. காலு இப்ப பரவாயில்ல!’
‘ஏதோ ஆபரேசன் பண்ணனும்னு சொன்னாங்கல்ல’
சரிப்பா’
‘சரிப்பா. கொண்டு போய் காமிக்கறேன்’
‘எனக்கு அனுப்பறது இருக்கட்டும். நீ உன் செலவுக்கு வெச்சுக்கையா.’
‘சரிப்பா. இருபதினாயிரமா. சரி ராசா’
‘உடம்ப பாத்துக்க ராசா’
‘தம்பி கிட்ட சொல்றேன். சரிப்பா’
‘தாரணி நல்லாயிருக்காப்பா’
‘வெச்சிடுறேன். நல்லா சாப்பிடு ராசா’

ஆகஸ்ட் 3 2003
கோடாங்கிபுரம்.

….
‘மழைக்கு வீடெல்லாம் ஒழுகிப்போச்சுப்பா. ராத்திரியெல்லாம் நின்னுகிட்டேயிருந்தோம்’
‘அதுகிடக்கட்டும்யா. பாத்துகிடலாம்’
‘ரொம்ப செல்வாகுமேய்யா’
‘கூரையப்பிரிச்சிட்டு ஓடுமட்டும் போட்டுக்குவோம்யா. சொன்னா கேளு ராசா. இழுத்துப்போட்டுக்கிடாத’
‘சரிப்பா’
‘நீ உன் செலவுக்கும் கொஞ்சம் வெச்சுக்கப்பா’
‘சரி ராசா’

நவம்பர் 2 2003
கோடாங்கிபுரம்.

‘டாக்டர் இன்னும் கொஞ்ச நாள்ல கால் சரியாயிடும்னு சொல்லியிருக்காருய்யா. மருந்து தொடர்ந்து சாப்பிடச் சொல்லியிருக்காரு’
‘ம்ம்..கொஞ்சம் கொஞ்சம் நடக்குறானய்யா’
‘ஓடு போட்டாச்சுப்பா’
‘ஏன்யா குரல் ஒரு மாதிரி இருக்கு. முன்ன மாதிரி கலகலன்னு பேசமாட்டேங்கிறியே?’
‘ஊரு புடிக்கலைன்னா வந்திடு ராசா’
‘சொல்லுய்யா. ஏன்யா பேசாம இருக்க?’
‘வாங்குன கடனையெல்லாம் நான் அடைக்கிறேன்யா. நீ எதுக்கு ராசா கவலைப்படுற?’
‘தாரணி நல்லாயிருக்காப்பா. அடுத்த தடவ கூட்டியாறேன்’

டிசம்பர் 7 2003
கோடாங்கிபுரம்

‘அண்ணே. எப்படிண்ணே இருக்க?’
‘நல்லாயிருக்கண்ணே. தம்பி நல்லாயிருக்காண்ணே’
‘கொஞ்சம் நடக்குறாண்ணே’
‘சாப்பிட்டேண்ணே. நீ என்ன சாப்பிட்ட?’
‘நல்லா சாப்பிடுண்ணே’
‘அழலண்ணே’
‘இல்லண்ணே அழலண்ணே’ (அழுகிறாள்)

‘ஏ கழுத! ஏன் அழுகுற?’ கருப்பாயி போனை மகளிடமிருந்து வாங்குகிறாள்.

‘கோணாருக்கு கொடுத்தாச்சுப்பா.’
‘ஆமாய்யா. இன்னும் 30 பாக்கி இருக்கு’
‘அது வந்துகிட்டேதான் இருக்கு. மசமசன்னு வளர்ந்து நிக்கறாளே’
‘30,40 பவுன் கேக்காறாங்கய்யா.’
‘நமக்கு சரிப்பட்டு வராதுய்யா’
‘வேணாம்யா. அகலக்காலு வெக்கவேணாம்’
‘கவர்மெண்ட் மாப்பிள்ளைதான் பாக்கனுமா. வேற ஏதாவது பாப்பம்யா’
‘நீ எஞ்சாமி கஷ்டப்படுற?’
‘சரிய்யா. உன் இஷ்டம்’
‘தாரணி இங்க வா.அண்ணன் கூப்பிடறான் பாரு’

மே 2 2004
கோடாங்கிபுரம்.

‘அண்ணே நீ வாண்ணே. நீ வந்தாத்தேன் நான் கல்யாணம் பண்ணுவேன்’
‘போண்ணே’
‘அழலண்ணே’
‘அழலண்ணே’ (அழுகிறாள்)

கருப்பாயி போனை வாங்குகிறாள்.
‘ஜூன் 14 முகூர்த்தம் வச்சிருக்குய்யா’
‘அவளுக்கு சந்தோசம் தான். புடிச்சிருக்கு புடிச்சிருக்கு’
‘கவர்மெண்ட் மாப்பிள்ளை, கசக்குதா என்ன?’
‘ஏஞ்சாமி ரொம்ப வேலையோ? ஒரெட்டு வந்திட்டுபோயேன்’
‘ஏன்யா. ஆமாய்யா’
‘அதான் அனுப்பிச்சிருக்கல்லய்யா?’
‘சரிய்யா’
‘உடம்ப பார்த்துக்கராசா’
‘உடம்புக்கு முடியல்லையா? குரல் ஏன் கரகரன்னு இருக்கு?’

டிசம்பர் 5 2004
கோடாங்கிபுரம்.

‘முடிச்சாச்சுய்யா. எல்லா கடனும் முடிச்சாச்சு.’
‘பாயுக்கும் கொடுத்தாச்சு’
‘நீ தான்யா செஞ்சுகாட்டியிருக்க’
‘ஒரெட்டு வந்திட்டுப் போயேன்’
‘வேலை அதிகமா இருக்கா?’
‘வேலை வேலைன்னு உடம்பக்கெடுத்துக்காத’

ஜனவரி 2 2005
கோடாங்கிபுரம்.

மணி மாலை ஆறு ஆகியும் போன் வராமல், போனையே வெறித்துக்கொண்டிருக்கிறாள்.

பிப்ரவரி 6 2005
கோடாங்கிபுரம்

கருப்பாயி போனையே வெறித்துக்கொண்டிருக்கிறாள்.

***

சனவரி 5 2003
சன்பெங். கோலாலம்பூர்.

ராஜா அந்த ரூமின் கதவைத்திறந்தான். ரூம் லைட் போடப்படவில்லை. லைட்டரை உபயோகித்து சுவிட்சைப் போட்டான். அறை பிரகாசமாகிறது.
செல்லையா ஓரத்தில் சுருண்டு படுத்திருந்தான்.
‘டேய் செல்லையா. எழுந்திரு’
செல்லையா அழுது வீங்கிய கண்களோடு ராஜவை ஏறிட்டுப்பார்த்தான்.
‘இந்தாடா சாப்பிடு’ ராஜா ஒரு புரோட்டா பார்சலைக்கொடுத்தான். அவன் வாங்காததால் அதைக்கீழே வைத்துவிட்டு, அவனுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டான்.
‘சாப்பிடு டா. எதுக்கு வயித்த பட்டினி போடற?’
நிறைய வற்புறுத்தலுக்குபிறகு, செல்லையா பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். சிறிது நேரத்திலேயே அழ ஆரம்பித்தான்.
‘என் ஆத்தா சாப்புட்டுச்சா என்னான்னு தெரியல்லையே. ஊர்ல கடன உடன வாங்கி இங்க வந்தேன், கட்டட வேலைன்னு சொன்னாங்க. ஆனா டேபிள் கிளீன் பண்ணேன். இப்ப அதுவும் போச்சு. வேலையில்லாமா சம்பளமில்லாம கடனை எப்படி அடைப்பேன். கால் ஆனியிருக்கிற தம்பிக்கு எப்படி வைத்தியம் பார்ப்பேன். தங்கச்சிய எப்படி கரையேத்துவேன். ஆத்தா ஒத்தையில கஷ்டப்படுது ராஜா’
கண்களைத் துடைத்துக்கொண்டு புரோட்டாவையே வெறித்துக்கொண்டிருந்தான் செல்லையா.
‘ம்ம்.. கவலைப்படாதடா. செக்கியூரிட்டி வேலை ஒன்னு இருக்கு. எனக்கு தெரிஞ்ச இடம் தான். கொஞ்ச நாள் அங்க வேலை செய்யி. பிறகு பார்த்துக்கலாம். முதல்ல சாப்பிடு, எதுக்கும் கவலைப்படாத. இங்க வார எல்லார் பாடும் இபப்டித்தேன்’ ராஜா சொல்லிவிட்டு விட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த மங்கலான விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சனவரி 6 2003
சன்பெங். கோலாலம்பூர்.
சுனங்கா கோண்டோமினியம்
. மாலை மணி 6

செல்லையா தனக்கு கொஞ்சமும் பொருந்தாத செக்யூரிட்டி உடையை அணிந்து கொண்டு, கோண்டோவின் வாசலில் நின்றான். கோண்டோவின் முகப்பில் இருக்கும் அறையின் உள்ளேயிருந்த மற்ற இரு செக்யூரிட்டிகளும், வெளியே தலையை நீட்டி இவனை அழைத்தனர். அவர்கள் இவனுக்கு எதிர்மாறாய் நல்ல அகலமாக இருந்தனர். கண்கள் இரத்த சிவப்பாக இருந்தது. கைகளில் கருகருவென்று முடி அடரிந்திருந்தது.

விசாரிப்புகள் முடிந்தபிறகு ரவுண்ட்ஸ் போகச் சொன்னார்கள். செல்லையா கோண்டோவைச்சுற்றிலும் நடந்து, அதன் அமைப்பை உணர்ந்து கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தான். விதம் விதமான மலேசியத்தயாரிப்பு கார்கள். விதம் விதமான பைக்குகள். சினிமாவில் ஐரோப்பிய புல் வெளிகளில் விஜய், அசினைப் பின்னால் வைத்துக்கொண்டு ஓட்டி வருவதைப்போல. செல்லையா தொட்டுபார்த்துக்கொண்டான்.

கோண்டோவின் பின்புறம் கார்கிளீன் பண்ணும் செட் ஒன்று இருந்தது. ‘பாபா கிச்சுத்தா’ பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. நாலைந்து இந்திய இளைஞர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

கோண்டோவில் கார்கள் வந்தவன்னம் இருந்தன. கேட் திறந்து விடுவதே பெரிய வேலையாக இருந்தது. அவனும் மற்ற ஒரு செக்யூரிட்டி மட்டுமே இருந்தார்கள். இன்னொரு செக்யூரிட்டி செல்லையாவை சிகரெட் வாங்கிவர நாலாவது மாடியில் இருக்கும் கடைக்கு அனுப்பினார்.

மணி 12:00 இரவு.
கார் வரத்து குறைந்துவிட்டது. மற்றொரு செக்யூரிட்டியின் குரட்டை காதைப்பிளந்தது. பிளாக் லேபிள் ஒன்று காலியாக இருந்தது. ‘எங்கம்மா உங்கம்மா’ பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது. நேயர் விருப்பமாம். எந்த மடையன் இராத்திரி 12 மணிக்கு இந்த பாட்டைக்கேட்கிறானென்று தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டான். இண்டர்காம் ஒலித்தது. நாலாவது மாடியின் கடைப்பையன் அழைத்தான்.

லிப்டைவிட்டு வெளியேறி நாலவது மாடியில் நுழைந்ததுமே சத்தம் பயங்கரமாக கேட்டது. உடைந்த பாட்டில் துண்டுகள், இவன் கனத்த பூட்ஸ் காலில் மிதிபட்டு மேலும் சில்லாகியது. தரையெங்கும் பாட்டில் சிதிலங்கள். செல்லையா மெதுவாக நடந்து கடையின் அருகே சென்றான். அங்கு தடிதடியாக ஆறு பேர், போதையில் தாருமாறாக விளையாடிக்கொண்டிருந்தனர். கடையின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

முதலில் செல்லையாவை அவர்கள் சட்டைசெய்யவில்லை. செல்லையா எச்சரித்தான். அவர்கள் அடங்கவில்லை. ஒருவன் இவனை அடிக்க கை ஓங்கவும், செல்லையா போலிசுக்கு போகிறேன் என்று கடையின் உள்ளே சென்று போனைத்தேடி நம்பரை அழுத்தினான். சற்று நேரம் வெறித்துப் பார்த்த அவர்கள், ஒவ்வருவராக வெளியேறினர். ‘நீங்க மொதல்லையே போலிசுக்கு போக வேண்டியதுதான?’ என்று கடைக்காரரை கேட்டுவிட்டு, கீழே வந்தான், செல்லையா, முதல் நாள் வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தியோடு.

‘காதோடுதான் நான் பேசுவேன்’ பாடல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. மணி இரண்டு அடித்தது. தொப்பியை எடுத்து மாட்டிக்கோண்டு, லத்தியை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ¤க்கு தயாரானான்.

குளிர் அதிகமாக இருந்தது. நாளைக்கு ஜாக்கெட் கேட்டு வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆத்தா இந்நேரம் தூங்கியிருக்கும் என்று நினைத்துக்கொண்டான். கார்கள் அமைதியாக நின்றன. அந்த மணியிலும் ஒருவன் காரை கிளப்பும் ஓசை கேட்டது. கோண்டோவின் பின்புரம் வந்தான். கார் கிளீன் செட் அமைதியாக இருந்தது. அங்கு சற்று ஈரமாக இருந்தது. சில இரவுப்பறவைகளின் சத்தங்களைத் தவிர வேற எந்த சத்தமும் இல்லை. கார் செட்டுக்குப் பக்கத்தில் ஏதோ நிழல் தெரியவே, சற்று நின்று கவனித்தான். மறைவிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. நாலாவது மாடியில் பார்த்தது போலத் தோன்றவே, ‘ஏய்…நீ என்ன இங்க..’ என்று கேட்டு முடிப்பதற்குள், பின் மண்டையில் கனமாக தாக்கப்பட்டதை உணர்ந்தான். திரும்பிப் பார்க்க நினைத்தான் முடியவில்லை. நினைவு தப்பிக்கொண்டிருந்தது. கீழே விழுந்தான். ஆத்தாவின் முகம் வானமெங்மும் நிறைந்திருந்தது. ஒரு உருவம் ஸ்பேனர் பொன்ற தடியான ஒன்றை தன் முகத்துக்கு நேரே ஓங்குவது மங்கலாகத்தெரிந்தது. ‘ராஜா’ என்று சன்னமாக கூப்பிட்டான். பின் சுத்தம்.

***

மார்ச் 6 2003.
கோலாலம்பூர்.

ராஜா, தொலைபேசியில் எண்களை டயல் செய்து, காதுக்கு கொடுத்தான்,
‘கோடாங்கிபுரமா? மாமா நான் தான், செல்லையா பேசுறேன்.’

***

சேர்ப்பு: 21-08-2006

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் இங்கே சென்று வாக்களிக்கவும்.
http://www.thenkoodu.com/survey/2006-08/

யாரும் யாருடனும் இல்லை

நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக்கொள்கிறோம். ஒன்றாக அமர்ந்து உணவு உண்கிறோம். ஒன்றாக சிரிக்கிறோம். ஒன்றாக சிரிக்கிறோமா என்பது தெரியாது, ஆனால் குறைந்தபட்சம் வெளியுலகத்திற்காகவோ, நண்பர்களுக்காகவோ, குடும்பத்தினருக்காகவோ கடமைக்கேனும் சிரித்து வைக்கிறோம். உண்மையிலே மனம் விட்டு சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒன்றாக அழுகிறோமா?. சிரிப்பை நாம் பெரும்பாலான நேரங்களில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் துக்கத்தை நமக்குள் பூட்டி – ஒரு பூதத்தைப் போல – அடைத்துவைத்திருக்கிறோம். அசோகமித்திரன் சொன்னதைப் போல நாம் துக்கத்தை யாரிடமும் – யாரிடமும் – பங்கிட்டுக் கொள்ளை இயலாது. ஆனாலும் சில நேரங்களில் நாம் துக்கத்தை வெளிப்படுத்தவே செய்கிறோம், நம்மையுமறியாமல். அல்லது சுயஇரக்கத்தால், சில நேரங்களில் அறிந்தே. ஒன்றாக சினிமாவுக்கு செல்கிறோம். ஒன்றாக பீச்சில் உட்கார்ந்து கடல் அலையின் சத்தம் ஓயும் வரையில் அரட்டை அடிக்கிறோம். பிறகு மணலைத் துடைத்துக்கொண்டு எழுந்து வருகிறோம். மணல் கரையிலே விழுந்துகிடக்கிறது, அடுத்த நபரை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. உண்மையில் நமக்கும், உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் உடனான உறவு, அந்த மணலுக்கும் நமக்கும் இருக்கும் உறவு போன்றது தான் என்கிறார் உமாமகேஸ்வரி.


யாரும் யாருடனும் இல்லை என்ற நாவலை நான் தற்செயலாகத்தான் நூலகத்திலிருந்து எடுத்தேன். முதல் சில அத்தியாயங்கள் தொடர்ச்சியின்றி – முன் அத்தியாயங்களுடன் – சற்றும் சம்பந்தமில்லாமல் நகர்ந்தன. என் நண்பர் ஒருவர் நாவலை என்னிடமிருந்து வாங்கி ஏழு அத்தியாயங்கள் மட்டும் படித்துவிட்டு கொடுத்துவிட்டார். ஏனென்று கேட்டதிற்கு, பொறுமையில்லை என்றார். உண்மைதான், முதல் பதினைந்து அத்தியாயங்களை மட்டும் தாண்டி விட்டால் அப்புறம் தென்றலும், புயலும், மழையும், சுடு சூரியனும், குளிர் நிலவும், பனியும் மாறி மாறி தாக்குகின்றன. ஒரு புவிஈர்ப்பு விசை போல் ஓயாமல் நம்மை ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது நாவல், முடியும்வரை.

எச்சரிக்கை : கதை சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவங்களும் தான்.

போடியில் ஏலக்காய் தொழில் செய்யும் ஒரு பெரிய குடும்பத்தைப் பற்றியது கதை. அந்தப் பெரிய குடும்பத்திற்கு, பலசரக்கு, பாத்திரக்கடை, எஸ்டேட் போன்ற இன்ன பிற தொழில்களும் உண்டு. நான்கு மகன்கள், மற்றும் மூன்று பெண்கள் அந்த வீட்டின் வாரிசுகள். பெண்கள் அனைவரும் திருமணம் ஆகி சென்று விட, மற்ற மூன்று மகன்கள் தத்தம் மனைவியருடனும், கடைக்குட்டி திருமணம் ஆகாமலும், தாய் தந்தையருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கடைசி மகன் பெயர் குணா. அவன் பெயரில் குழந்தைகள் எல்லாம் மிகவும் பிரியமாகஇருக்கின்றனர். அவனை வளர்த்த அண்ணியரும் தான். வீட்டின் தந்தை தான் இந்த பெரிய தொழில் சாம்ராஜியத்தை உருவாக்கினார். அவருக்கு பேத்திகள் இருந்தும் பல பெண்களிடம் தொடர்புடையவராக இருக்கிறார். அவருடைய மனைவியும், மகன்களும், மருமகள்களும் இதை பற்றி தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர். மனைவி தனிமையில் புழுங்கிச் சாகிறார். ஒரு நாள் செத்தும் போகிறார்.

அந்த விட்டில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. பிரச்சனைகளை ஒரு குழந்தையின் – குழந்தைகளின் -பார்வையில் ஆசிரியர் கூறியிருப்பதுதான் சிறப்பு. த காட் ஆப் சுமால் திங்ஸ் படித்தவர்கள் இந்த கதையியல்பை முன்பே அறிந்திருக்கலாம். சொல்லப்போனால், குழந்தைகள் தான் கதையின் உயிர்நாடி. நம்மை கதையுடன் கட்டிப் போடுபவை. நாம் வேறு எங்கு சென்றாலும் நம்மை பிடித்து இழுத்து வருபவை. குழந்தைகளின் வேடிக்கைகளும் விளையாட்டுகளும் கேள்விகளும் என்றைக்கும் விநோதமானவை. ரசிக்கத்தகுந்தவை இல்லையா?. குழந்தைகளின் எண்ணிலடங்கா கேள்விகளும் புதிய சிந்தனைகளும் நாவல் தோறும் உலாவுகின்றன. ஆசிரியரைப் போலவே நமக்கும் பல இடங்களில் பதில் தெரியவில்லை.

குணா சித்தப்பா மீது குழந்தைகள் அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றனர். குணா சித்தப்பா குழந்தைகளுடன் ஒரு நாளும் விளையாடாமல் இருந்ததில்லை. அவர் வீட்டை விட்டு பழி சுமத்தப்பட்டு வெளியேறிய பின்னர், குழந்தைகள் சில நாட்கள் அவரை கானாமல் தேடிவிட்டு, பின் சுத்தமாக மறந்து போகின்றனர். யாரும் யாருடனும் இல்லை.

தாய் சாகும் வரை, தந்தை எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். தாய் இறந்தபிறகு, அவர் வீட்டிற்கே வருவதில்லை. தீபாவளி பொங்கல் தவிற. அதுவும் சம்பிரதாயமே. அவ்வளவு பேர் வீட்டில் இருந்தும், தனிமையில் சாகிறார், ஒரு தீபாவளியன்று. அவர் இறுதி காலங்களில் உருகி உருகி காதலித்த, மலையாள பெண் ஒருவர் அவர் இறந்தபிறகு அவர் முகத்தை கூட பார்க்கைஇயலாமல் அழுதுகொண்டே திரும்பிப்போகிறார். யாரும் யாருடனும் இல்லை.

சுப்பக்கா கால் இல்லாத பெண். பெரிய வீட்டில், அவர்களுடன் ஒட்டாமல் வாழ்ந்துவருகிறார். அந்த பெரிய வீட்டின் அம்மா சுப்பக்காவை அவளுடைய அம்மா இறந்தபிறகு தன் வீட்டிற்கு கூட்டிகொண்டு வந்துவிடுகிறார். சுப்பக்கா தன் ஊனத்தை மறைக்க, மறக்க வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாள். குழந்தைகளுக்கு தினமும் கதை சொல்கிறாள். குழந்தைகள் அவளை மிகவும் நேசிக்கின்றனர். அவள் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பிறகு, சில நாட்கள் குழந்தைகள அழுது கொண்டிருந்து விட்டு பின் சுத்தமாக மறந்துபோகின்றனர். அபூர்வ அபூர்வமான கதைகள் சொல்லும் மூட்டையாக பிள்ளைகளால் கருதப்பட்ட சுப்பக்கா, பனித்துளி போல் சட்டென அனைவரது கவனத்திலிருந்தும் மறைந்து போகிறார். அவரவற்கு அவரவர் வேலைகள். விளையாட்டுக்கள். பிரச்சனைகள். சண்டைகள். காதல்கள். யாரும் யாருடனும் இல்லை.

குணாவும் வினோவும் சிறுபிள்ளை முதல் ஒன்றாக விளையாடியவர்கள். இருவருக்கும் பரஸ்பரம் சொல்லத்தெரியாத காதல் ஒரு காற்றைப் போல மறைந்திருக்கிறது, இருவருக்குமிடையே. ஆனால் வினோதினி குணாவின் அண்ணணைக் கைப்பிடிக்கிறாள். அவன் ஒரு குடிகாரன். குணாவிற்கு இன்னமும் வினோவின் மேல் காதல் இருக்கிறது. இருவரும் இணைகின்றனர்.வினோதினி கருவைக் கலைத்துக்கொள்கிறாள். பிறகு இந்த விசயம் அனைவருக்கும் தெரியவரும் பொழுது வினோதினி குணாவின் மேல் பழி சுமத்துகிறாள், வேறுவழியில்லாமல். குணாவிடம் தனிமையில் அழுகிறாள். குணா வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அவன் போன சில தினங்கள் வினோ அவன் நினைப்பாகவே இருக்கிறாள். தற்கொலைக்கு முயல்கிறாள். காப்பாற்றப்படுகிறாள். வினோவின் கணவன் இறக்கிறான். பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த வினோ நாளடைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறாள். சொத்து பிரிக்கப்படும் பொழுது தனக்கும் பங்கு வேண்டும் என்று அடம் பண்ணுகிறாள். குணாவை முற்றும் மறந்து போகிறாள். அனைவரும் தான். யாரும் யாருடனும் இல்லை.

வாணி மூத்த பேத்தி. குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தவள், வயதுக்கு வந்ததும் படிப்பு தடைசெய்யப்படுகிறது. விளையாட்டு தடைசெய்யப்படுகிறது. ஏன் வீட்டை விட்டே வெளியே செல்லவே தடைசெய்யப் படுகிறது. பெட்டிக்குள் ஒளிவிடும் ஒரு நகையைப் போல வாழ்க்கை முழுவதும் பூட்டிவைக்கப்படுகிறாள். வினோவும் வாணியும் நெருக்கமாகிறார்கள். பிறகு ஒரு நாள் திடீரென்று அவளுக்கு திருமணம் நடக்கிறது. வாணி பெருங்குரலெடுத்து ஓவென்று அலறுகிறாள். அவளைத் தேற்ற யாருமில்லை. குழந்தைகள் காரணம் புரியாமல் விழிக்கின்றன. வினோவும் ஆறுதல் சொல்லத்தெரியாமல் திகைக்கிறாள். தான் நின்ற அதே இடத்தில், அதே சூழலில் வாணி நிற்பதாக நினைக்கிறாள். அவளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பிறகு வாணி திருமணம் முடித்து வீட்டை விட்டு சென்று விடுகிறாள். ஒன்றாக விளையாடிய குழந்தைகள், வாணியின் இழப்பை உணர்கின்றன. ஆனால் பெரிதும் அலடிக்கொள்ளவில்லை. வாணியின் தலைமையிடத்தை – விளையாட்டில்- அவளது அடுத்த சகோதரி பிடித்துக்கொள்கிறாள். அவர்களுக்கு விளையாட்டு வழக்கம்போல் நடக்கிறது; ஆலமரத்தடியிலும், குணா சித்தப்பாவின் ஆளில்லாத அறையிலும். யாரும் யாருடனும் இல்லை.

தந்தை இறந்த பிறகு சொத்து பிரிக்கப் படுக்கிறது. அவர் உயிரோடு இருக்கும் வரை முழுமையாக இருந்த சொத்து, அவர் சென்றதும் கொத்துக்கறியாக்கப்படுகிறது. அனைவரும் சொத்திற்கு சண்டையிடுகின்றனர். மகள்களும் தான். குழந்தைகள் திகிலோடு வேடிக்கைபார்க்கின்றனர். எப்பொழுது சண்டை ஓயுமென்று வீடு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. வீட்டிற்கு குறுக்கே சுவர் எழுப்பப் படுகிறது. ஒன்றாக பள்ளி சென்ற குழந்தைகள், பிரிந்து தனித் தனியாகச் செல்கின்றனர். குழந்தைகள் அழுகின்றனர். ஒன்றாகத்தான் செல்வோம் என்று அடம் பண்ணுகின்றனர். அடி வாங்குகின்றனர்.பின்னர் யாருக்கும் தெரியாமல் பள்ளியில் மட்டும் சந்தித்து பேசிக்கொள்கின்றனர். சின்ன அண்ணன் வீட்டிற்கு வெளியே இருக்கும் முல்லைக் கொடியை வெட்டி எறிகின்றான். கேட்டால், “இந்த முல்லைக்கொடி என் இடத்தில் வேர் வீட்டு, மாடியில் அண்ணனின் இடத்தில் பூ பூக்கின்றது.” என்கிறான் கடுங்கோபத்தோடு. யாரும் யாருடனும் இல்லை.

கதையை விட உமாமகேஸ்வரியின் வரிகளும் உவமைகளும் நன்றாக இருக்கின்றன. ஆனால் சில இடங்களில் உவமைகள் தேவையற்ற அலங்காரமான நகைகளாக உருப்பெற்று கூர்மையாக குத்துகின்றன. பலுவாக இருக்குகின்றன. குழந்தைகள் ச்சோ சுவீட். அதிலும் அனுவும், வாணியும் ரொம்ப அழகு. முதல் பத்து அத்தியாயங்களை நன்றாகச் செய்திருந்தால், இன்னும் அழகாக இருந்திருக்கும். நிதானமாக, இலக்கு இல்லாமல் பயனிக்கும் கதையை பொறுமையுடன் படிக்க இங்கு வெகு சிலருக்கே வாய்க்கிறது.

திருத்தம்: 17-08-2006
இந்த பதிவில் நான் கொடுத்திருக்கும் லின்க் (link) வேலை செய்யாததற்கு வருந்துகிறேன்.புத்தகத்தின் விபரங்கள் இங்கே:

Book Title : யாரும் யாருடனும் இல்லை ( YARUM YARUDANUM ILLAI )
Author : உமா மகேஸ்வரி (UMA MAGESHWARI)
Publisher : TAMILINI Price : Rs. 130/-

அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை உப்யோகித்து அந்த வலை பக்கத்திற்கு சென்ற பிறகு, YARUM YARUDANUM ILLAI என்ற வார்த்தையை தேடுங்கள்.

வேட்டையராஜா

வேட்டையராஜா, கால் நீட்டி களைப்புடன் படுத்துக்கிடந்தான். அவன் முகம் விட்டத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டேயிருந்தது. நான் அவன் பக்கத்தில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு, ஆனந்தவிகடன் படித்துக்கொண்டிருந்தேன். நீண்ட நேரம் அமைதியாக இருந்த வேட்டையராஜா, திடீரென்று கல கலவென்று சிரிக்க ஆரம்பித்தான். கைதட்டி மேலே தெரியும் மின்விளக்கைக் காட்டிக் காட்டி சிரித்தான். திடுக்கிட்டு திரும்பிய என்னிடம் விளக்கைக் காண்பித்து, மீண்டும் சிரித்தான். நான் மேலே தெரியும் விளக்கைப் பார்த்தேன், அது சதுரவடிவில், வெள்ளை நிரத்திலான ஷீல்டால் மறைக்கப்பட்டு விட்டத்தோடு ஒட்டிக்கொண்டு, அந்த இரவின் அமைதியோடு கலந்திருந்தது. அதில் சிரிப்பதற்கென்ன இருக்கிறது? இங்க வா, என்றான் வேட்டையராஜா, சிரித்துக் கொண்டே. அவனருகில் சென்று, அன்னாந்து விட்டத்தைப் பார்க்கும் பொழுது தான் தெரிந்தது, அங்கே இருந்தது, ஒரு மூட்டைப்பூச்சி.

மூட்டைப்பூச்சி முதலில் எங்கள் வீட்டில், நான் இருக்கும் ரூமிற்கு அருகில் இருக்கும் ரூமில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரூம் தான் மதர் ஷிப். இண்டிப்பெண்டன்ஸ் டே படத்தில் வரும் ஏலியன்ஸ் போல மூட்டைப்பூச்சி அந்த ரூமிலிருந்து தான் வந்துகொண்டேயிருந்தது. இருக்கிறது. முதலில் நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முஸ்தபாவில் சென்று மருந்து வாங்கிவந்து கண்ணில் கண்ட மூட்டைப்பூச்சிகளை மட்டுமே பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். பிறகு எங்கள் எதிற்வினையால் கலவரமடைந்த மூட்டைப்பூச்சி, வீடெங்கும் தென்பட ஆரம்பித்த பொழுதுதான் நாங்கள் திகிலானோம்.

வேட்டையராஜா, அவன் அருகில், ஒரு மீட்டர் சுற்றளவிற்கு மூட்டைபூச்சி எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுவான். அல்லது அவனுக்கு மூக்கு வேர்த்துவிடும். சிக்ஸ்த் சென்ஸ் (?!). மூட்டைப்பூச்சியைப் பார்த்தவுடன் ஒரு குதி குதித்து ஒரு நாட்டியமாடுவான் பாருங்கள், அட அடா, அவ்வளவு அழகாக இருக்கும். மூட்டைப்பூச்சி மருந்தைத் தேடிக்கண்டுபிடித்து (சில சமையங்களில் யார் ரூமில் இருக்கிறதென்று தெரியாது) வந்து, அந்த மூட்டைப்பூச்சியை அதகளம் செய்தால் தான் அவன் அடுத்த மூச்சுக்காற்றை விடுவது போல இருக்கும். மூட்டைப்பூச்சிகளை விரட்டி விரட்டிக் கொல்வதனாலேயே அவனுக்கு வேட்டையராஜா என்று பெயர் வந்தது. சில சமையங்களில் மூட்டையராஜா என்றும் அழைக்கப்படுவான். மூட்டைப்பூச்சியைப் பார்த்தவுடன் ஹெ… ஹே.. என்று ஒரு டான்ஸ் போடுவதால் நாட்டியராஜா, பாட்டையராஜா. இரும்புக்கரம் கொண்டு அவைகளை ஒருக்குவதால் சாட்டையராஜா. மூட்டைப்பூச்சிகளின் பாஷையில் ‘எம கிராதகன்’.

மூட்டைப்பூச்சியை சாதரணமாக நினைத்து விடாதீர்கள். மிகப் பெரிய நடிகன் (அல்லது நடிகை) அது. என்னது சிலை வைக்க வேண்டுமா? நக்கலா? நாங்களே மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மூட்டைப்பூச்சியின் மீது மருந்து தெளித்தவுடன் அது டப்பென்று அசையாமல் படுத்துக்கிடக்கும். அவ்வளவு தான் ஆள் அம்பேல் என்று நினைத்தோமேயானால், சில வினாடிகளில் எழுந்து ஓட ஆரம்பித்து விடும். கரடி-மனிதன் கதையிக் கேட்டிருக்குமோ?

மூட்டைப்பூச்சிக்கு கண் இருக்கிறதா இல்லையா என்று ஒருமுறை விவாதம் வந்தது. ஏன் என்றால்? ஒருமுறை ரூம் முழுவதும் நன்றாக பார்த்துவிட்டு, செக் செய்துவிட்டு – ரூமில் ஒரேயொரு பீரோவைத்தவிற ஒன்றுமில்லை, பீரோவும் காலியாக இருக்கிறது – கீழே வெறுந்தரையில் படுத்துக்கொண்டு அடுத்த மூட்டைப்பூச்சி மிஷன் பற்றி ஸ்ட்ராடஜிக் பிளான் செய்து கொண்டிருக்கையில்- வேட்டையராஜா படாரென்று எழுந்தான் – அவனுக்கு தான் சிக்ஸ்த் சென்ஸ் இருக்கிறதே – விளக்கைப்போட்டான் – அவனுக்கு அருகில் இரண்டு மூட்டைப்பூச்சிகள். விளக்கை அனைத்தவுடன் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. பிறகு விளக்கை அனைத்துவிட்டு கதவைப்பூட்டி வெளியே சென்று விட்டோம். அப்பொழுதும் வரவில்லை. நாங்கள் வந்து படுத்துவிட்டோமேயானால் வந்துவிடுகிறது. உடனே வேட்டையராஜா சொன்னான், நம்ப ஹீட்டை வைத்து கண்டுபிடிக்கிறதென்று நினைக்கிறேன். அப்படிக்கூட இருக்கலாம் என்று நாங்கள், அன்று இரவு முழுவதும், புல் ஏசி வைத்துக்கொண்டு தூங்கினோம். மறுநாள் என் துண்டில் ஒன்று இருந்தது.

பைகளுக்கும், புத்தகங்களிற்கும் நன்றாக மருந்தடித்து, பெஸ்ட் பஸ்டர்ஸ் சொன்னதைப் போன்று வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒரு மூட்டைபூச்சி எங்கிருந்தோ வந்தது. தகிக்கும் வெயில். எங்களால் பாதங்களை வைக்கமுடியவில்லை. ஆனால் மூட்டைபூச்சி நிழல் இருக்கும் திசையை நோக்கி வேகவேகமாக ஓடியது. நிழலுக்கு வந்தே விட்டது. எங்களுக்கு கொல்ல மனமில்லை. ஏனென்றால் அது வெயிலில் உயிரை விடுகிறதா என்று சோதிக்க வேண்டும். என் நண்பர், ஒரு இலையை எடுத்து, மூட்டைப்பூச்சியின் பாதையில் வைத்தார். மூட்டைபூச்சி இலையில் ஏறியவுடன் அதை பத்திரமாக வெயில் சென்று, சோதனைக்காக, விடவேண்டும் என்பது திட்டம். சோதனை ஓட்டம். மூட்டைப்பூச்சியும் இலையில் ஏறியது, அதை வெயிலில் விட கொண்டுசெல்லும் பொழுது, தவறி நிழலிலே கீழே விழுந்துவிட்டது. மீண்டும் அதன் பாதையில் இலையை வைத்தால், மூட்டைப்பூச்சி இலையில் ஏறவில்லை. எத்தனை முறை பாதையில் இலையை வைத்தாலும் அத்தனைமுறையும் அது இலையை சுற்றிக்கொண்டு சென்றதேயன்றி, இலைமேல் ஏறவில்லை. யார் சொன்னார்கள் நமக்குத்தான் ஆறறிவு என்று? பொறுமையிழந்த வேட்டையராஜா, சொட்டு மருந்திட்டு அதை கொன்றான். ஆமாம் சொட்டு மருந்துதான். ஸ்ப்ரே செய்தால், மருந்து பாட்டிலுக்குளிருந்து வரமாட்டேன் என்கிறது. அவசரத்திற்கு உதவவில்லை. மூடியைத்திறந்து, டியுபோடு சொட்டு சொட்டாக மூட்டைப்பூச்சியின் மீது விட்டால், சொட்டு மருந்தில்லாமல் வேறு என்னவாம்?

பிறகு செயற்குழு கூட்டி, ஒரு மனதாக பெஸ்ட் பஸ்டர்சை அழைத்து அவர்களுக்கு 500$ கொடுத்து, வீட்டை சுத்தமாக மருந்தடித்து, அனைவரது ஆடைகளையும் ஸ்டீம் வாஸிற்கு போட்டு விட்டு, நன்றாக கொதிநீரில், வீட்டை முழுவதும் வாஷ் செய்து, அது காய்ந்த பிறகு அக்கடா என்று விட்டத்தை பார்த்து படுத்துக்கொண்டிருந்த பொழுது, விட்டத்தில் ஒரு மூட்டைப்பூச்சி தெரிந்தால், யார் தான் சிரிக்க மாட்டார்கள். வேட்டையராஜா விடுவதாகயில்லை. மருந்தை, விட்டத்தில் அடிப்பதென்பது கஷ்டம் தானே? இங்கே சொட்டுமருந்துத்திட்டமும் வேலை செய்யாது, எப்படி மருந்து மேலே செல்லும்? ஜம்ப் செய்து ஜம்ப் செய்து ஸ்ப்ரே செய்துகொண்டிருந்தான். அது அருகிலிருக்கும் விளக்கிற்குள் போவதற்குள் அடித்தாகவேண்டுமே?

மூட்டைப்பூச்சி முஷன் 2 முடிந்திருக்கிறது. மிஷன் 3 இருக்கிறது.

மூட்டைப்பூச்சி மாதிரி தம்மாத்துண்டு இருந்திக்கிட்டு என்ன வேலை செய்யுறான் பாரு என்ற வசனங்களை நான் அவ்வப்போது கேட்டிருக்கிறேன். ஆனால், தம்மாத்துண்டு மூட்டைப்பூச்சி என்னென்ன வேலைகள் செய்யும் என்று, கட்டிலை இழந்து, பெட்டையிழந்து, ப்ளாங்கெட்டை ஸ்டீம் வாஷிற்கு போட்டுவிட்டு, வெறும் தரையில், துண்டைத் தலைக்கு வைத்துப் படுக்கும் பொழுதுதான் உணர்ந்தேன். உணர்ந்தோம்.

மழையும் கொலையும்

(சிறுகதை)

ருப்பட்டிக் காப்பியின் மனம், என் மூளையின்(?) அடி வரை சென்று, வடிந்து கொண்டிருந்த உற்சாகத்தை மீட்டெடுத்துக்கொண்டிருந்தது. அப்பத்தாவின் காப்பி மட்டும் ஏன் இத்தனை ருசியாக இருக்கிறது? இரைச்சல் மிகுந்த நகரத்தின் புழுதிகளில் புகுந்து எங்கு தேடினாலும், இதுபோன்றதொரு காப்பியைக் கண்டுபிடிக்கமுடியாது. கிராமங்கள் தான் எவ்வளவு அழகனாவை? அமைதியானவை? செமஸ்டர் விடுமுறை முடிந்து, கல்லூரி செல்லத் தொடங்கினாலும் இந்த கிராமத்தின் நினைவுகள், ஒரு நிழலைப் போல, சில மாதங்கள் பின் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு செமஸ்டரின் விடுமுறையிலும் தவறாமல் நான் என் அப்பத்தாவின் கிராமத்திற்கு வந்துவிடுவேன். நான் வந்து சில நாட்களில் அப்பாவும் அம்மாவும் வந்து விடுவார்கள். ஒருவாரம் இங்கே இருப்போம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய நபர்களைத் தெரிந்திருக்கும். எனக்கு ஒரு சில நண்பர்களே உண்டு. குறிப்பாக அன்பு. கருப்பட்டிக்காப்பியின் படிந்த துகள்கள், தொண்டையில் கமறலை உண்டுபண்ணியது.

நான் மெதுவாக எழுந்து வெளியில் வந்து நெட்டி முறித்தேன். கொட்டாவி ஒன்று போனஸாக வந்தது. குற்றாலத்துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, செறுப்பை அணிந்து கொண்டேன். நாயொன்று என்னைச் சுற்றி சுற்றி வந்து வாலாட்டியது. அன்பு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

‘வாப்பா, மாணிக்கம். எப்ப வந்த? அப்பா அம்மா நல்லாயிருக்காங்களா?’ அன்புவின் அம்மா கேப்பையை புடைத்துக்கொண்டிருந்தார். ‘வாங்கண்ணே, நல்லாயிருக்கீங்களா?’ அன்புவின் சகோதரி மீனா எழுந்துகொண்டாள். ‘ஏண்டி, அண்ணனுக்கு காப்பித்தண்ணி போடு. உக்காரு ராசா.’ மீனா பாயை விரித்தாள். பாய் நைய்ந்திருந்தது.நான் காப்பியை வேண்டாமென்று சொல்லவில்லை. ‘எல்லாம் நல்லாயிருக்காங்கம்மா. அப்பா அம்மா இரண்டு நாள் கழித்து வற்ராங்க’. ‘அடடே, மாணிக்கமா. பரிட்சை முடிஞ்சதா?’ என்று கேட்டுக்கொண்டே அன்பு வந்தான். ‘முடிஞ்சது அன்பு. நீ எப்படியிருக்க?’ என்றேன். அன்பு மெலிந்திருக்கிறான். தலையில் கட்டு போட்டிருக்கிறான். தலைக்கட்டை நான் கவனிப்பதைப் பார்த்ததும், ‘மாணிக்கம், உன் பிரண்டுக்கு புத்தி சொல்லிட்டுப் போ. எப்ப பார்த்தாலும் செவலை கூடவே மல்லுக்கு நிக்கறான். அவன் பவுசு என்ன, நம்ம நிலமை என்ன? நேத்து ரெண்டு பயலுகளும் கட்டி உருண்டிருக்கானுங்க. போனவரு போயிட்டாரு. இவனுங்க சண்டை போட்டு என்ன பண்ணப்போறானுங்க. இவனுக்கு மண்டை உடைஞ்சது தான் மிச்சம்’ அன்பு அம்மாவை முறைத்தான். ‘என்னடா?’ என்றேன். ‘அது ஒன்னுமில்லைடா. இந்தா காப்பியைக் குடி’ என்று மீனாவிடமிருந்து காப்பியை வாங்கிஎன்னிடம் கொடுத்தான். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘காட்ல கொஞ்சம் வேலையிருக்கு. நீ மலைக்கு போ. நான் ஒரு மணி நேரத்தில வந்துடறேன்.’ என்று அன்பு சொன்னான். நானும் அவனும் வெளியே வரும்பொழுது,’அன்பு, காட்டுக்கு போனமா வந்தமான்னு இருக்கனும். செவலை கூட மல்லுக்கு நிக்காத’ என்றார் அன்புவின் அம்மா. நானும் அதையே சொன்னேன். அவன் சிரித்துக்கொண்டான்.

நான் தெருவில் இறங்கி மலையை நோக்கி நடந்தேன். நாய்கள் தலையை நிமிர்த்தி, என்னை விசித்திரமாக பார்த்தன. பின் ஏனோ தலையை கீழே தாழ்த்தி கண்களை மூடிக்கொண்டன. காளியம்மன் கொவில் மந்தையைத்தாண்டி, ரோட்டைக்கடந்து, கம்மாக் கரையில் நின்று வயல்வெளிகளைப் பார்த்தேன். அதோ அந்த ஒற்றை ஆலமரத்தை சுற்றித்தான் எங்கள் வயல் இருக்கிறது. காற்று மிக இதமாக வீசிக்கொண்டிருந்தது. கம்மாத்தண்ணீரின் ஈரப்பதமும் சேர்ந்து, எனக்கு அயர்வைக் கொடுத்தது.

அன்புவின் அப்பாவை, செவலையின் அப்பாதான் கொன்றார். ஏதோ சொத்து விவகாரம். செவலையின் அப்பா இப்பொழுது ஜெயிலில் தான் இருக்கிறார். ஆறு வருடங்கள் ஆகிவிட்டன இது நடந்து. இன்னும் பகை மறைந்த பாடில்லை.அன்பு அமைதியாய் இருந்தாலும் செவலை அவனை விடுவதில்லை. அன்பு நிறையப் படிக்கவில்லை. இங்கு கிராமத்தில் இருந்த படியே வயல்வெளிகளைக் கவனித்துக் கொள்கிறான். கொஞ்சம் முன்கோபி.ஆனால் வயதை மீறின பொறுப்பாளி. செவலை முரடன்.

கம்மாவில் தண்ணீர் நிறைய இருக்கிறது. இந்த ஆண்டு விவசாயம் நல்லபடியாக நடக்கும். தண்ணீருக்கு பஞ்சம் இருக்காது. நீர்மட்டத்தை ஒட்டியபடியே வெளிர்சாம்பல் நிற பறவையொன்று பறந்து கொண்டிருந்தது. பெயர்தான் தெரியவில்லை. கம்மாவை விட்டு, ஒற்றையடிப்பாதையில் நடந்தேன். மாலை, வயல் வேலை முடிந்து சிலர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். என்னை ஆழமாகப் பார்த்தபடி என்னைக் கடந்து சென்றனர். நகரத்து மனிதர்கள் ஏனோ கிராமத்து மக்களிடம் ஒட்டுவதேயில்லை. ஒரு அன்னியத்தன்மை இருவருக்கிடையே, ஒரு காற்றைப் போல், எப்பொழுதுமே இருக்கிறது. மலை என்னை நோக்கி வருவது போல இருந்தது.

மலையின் அடிவாரத்திலிருக்கும் பிள்ளையார் கோவிலில் வந்தமர்ந்தேன். மலை பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல. மரங்கள் இல்லாத மொட்டை மலை. மலையின் உச்சியில் ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது. கோவிலுக்குப்பின்புறம் ஒரு பெரிய, மிகப் பெரிய ஆலமரம் இருக்கிறது.மலை ஏறும் பொழுது கவனமாக ஏறவேண்டும். சில இடங்களில் பாறை வழுக்குவதாக இருக்கும். பள்ளங்கள் கூட உண்டு. கேணிகளும் இருக்கின்றன. சில கேணிகளின் ஆழம் மலையின் அடிமட்டத்தையும் தாண்டி இருக்கும், என்று அப்பத்தா சொல்லியிருக்கிறார். கேணிகளில் அடர்ந்த பாசி படிந்த தண்ணீர் ஆழத்தை மறைத்தபடி மிக அமைதியாய் – கவணிக்கப்படாத தேர் போல – நிற்கும்.

அரச மரத்தின் இலைகள் ஒன்றோடொன்று உரசி புதிய ராகப்பரிமானம் செய்து கொண்டிருந்தன. பலவிதமான பெயரில்லாத பறவைகள் விசித்திரமான ஓசைகளை எழுப்பிக்கொண்டிருந்தன. பிள்ளையார் இவை அனைத்தையும் இரசித்தபடி, அனையாமல் சுடர்விட்டெரியும் ஒற்றை விளக்கையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மலையின் அடியில் இருக்கும் ஊரணியில் கால்களையும், முகத்தையும் கழுவிக்கொண்டேன். தாமரை மலர்கள் சூரியன் மறைந்து கொண்டிருப்பதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன.

பெருமாள் கோவில் மிக அமைதியாக இருந்தது. மலை ஏறிவந்த கலைப்பு, மூச்சாக என்னிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. கோவிலின் பின்புறம், நானும் அன்பும் எப்பொழுதும் வந்தமரும் ஆலமரத்தடிக்கு வந்தேன். காற்று, என் வருகையை அறிந்து சுத்தமாக கூட்டிவிட்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் அருகிலிருக்கும் இரண்டு கிராமங்கள் தெரியும். பச்சை வெல்வெட்டாய் வயல் படிந்திருக்கும். வெல்வெட்டு சீறாக காற்றில் அலைந்துகொண்டிருக்கும். இங்கே அடிக்கும் காற்றும், காற்றில் கலந்த அமைதியும், என்னுள் ஒரு தெளிந்த வெளியைத் தோற்றுவிக்கும். மனம் அதில் அமிழ்ந்து, அடங்கிவிடும். பின் காற்றே அந்த வெற்றிடத்தை நிறப்பும்.

குற்றாலத்துண்டை சுருமாடாக மடித்து, தலைக்கு வைத்து, படுத்துக்கொண்டு, ஆல மரத்தின் இலைகளையும், அங்கு வந்தமர்ந்திருக்கும் பறவைகளையும் எண்ணத் தொடங்கினேன். காற்று மிகக் குளிர்ச்சியாக இருந்தது.

கண் இமைகளில் குளிர்ந்த நீர் சொட்டு விழ, கண் விழித்தேன். இலைகள் தெரியவில்லை. இலைகளினூடே சில நட்சத்திரங்கள் தெரிந்தன. மற்றொரு துளி என் கன்ணத்தில் விழ, அடுத்தடுத்த துளிகள் சற்று பெரியதாயிருந்தன. எழுந்து உட்கார்ந்தேன். நல்ல இருட்டு. பெருமாள் கோவில் மேல் எப்பொழுதும் எரியும் ஒற்றை மின் விளக்கும் விடுமுறை எடுத்து விட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, கண் தெரியவில்லை. வேகவேகமாக நடந்து கோவிலின் முன்புறம் வந்தேன். காற்றில் அலைந்துகொண்டிருந்த ஒற்றை விளக்கில் பெருமாள் மிக மங்கலாகத் தெரிந்தார்.

மணி என்னவென்று தெரியவில்லை. மழை நன்றாக பிடித்து விடுவதற்குள், கீழே போய் விடவேண்டும். இந்த கும்மிருட்டில் எப்படி போவது. போய்த்தானாக வேண்டும். நடக்கத்தொடங்கிய சிறிது நேரத்தில் பலத்த இடி ஒன்று கிழிறங்கியது. என் இடது காலில் பெரிய கூர்மையான கல் ஒன்று இடித்தது. விரல்கள் நன்றாக எரிந்தன. தூரல் வலுத்துக்கொண்டேயிருந்தது. பாறை வழுக்கியது. பாதை சுத்தமாகத் தெரியவில்லை. மின்னல் ஒன்று கூர்மையாக இறங்கியது. கண்களை மூடிய நான், குழிக்குள் காலைவைத்து தலை குப்புற விழுந்தேன். குழியில் முட்கள் இருந்திருக்க வேண்டும். இரண்டு மூன்று முட்கள் குத்தியிருக்க வேண்டும்.மழை சடசடவென்று அடிக்க ஆரம்பித்தது. ஐயோ கடவுளே நான் எப்படி மலையைவிட்டு கீழிறங்கப்போகிறேன். மையிருட்டில் திண்டாடியபொழுது, சிறிது தூரத்தில் யாரோ ஒருவர், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையணிந்து வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவருக்கு பாதை நன்றாக பழகியிருக்க வேண்டும். ஐயா – அழைத்தேன். பதில் இல்லை. வேகமும் குறையவில்லை. அவரைப் பின் தொடர்ந்து நடந்தேன். வேகமாக. வழுக்கினாலும் பாதை மாறவில்லை. மறுபடியும் அவரை அழைத்தேன். பதில் இல்லை. நான் வேகத்தைக் கூட்டினேன். நான் எத்தனை வேகமாக நடந்தும் அவரைப் பிடிக்கமுடியவில்லை. எங்களுக்கிடையே இருக்கும் இடைவெளி குறையவேயில்லை, பெய்துகொண்டிருக்கும் மழையைப்போல. நான் தொப்பலாக நனைந்துவிட்டிருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் அடிவாரத்தைத் தொட்டுவிடலாம். அதோ அவர் இறங்கிவிட்டார். நானும் சிறிது நேரத்தில் இறங்கிவிட்டேன். அவரைக் காணவில்லை. சட்டென்று என் கண்களை மறைத்து, மறைந்துவிட்டார்ம் ஒரு மின்னலைப் போல. எங்கே போனார்? எங்கே போனாலும் என் கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே. பிள்ளையார் கோவிலில் இருக்கிறாரா? காற்றின் இரைச்சல் மனதிற்கு கிலி ஏற்படுத்தியது.

பிள்ளையார் கோவிலில் யாருமில்லை, வழக்கம் போல் பிள்ளையார் தனியாகவே அமர்ந்திருந்தார், காற்றில் அலையும் விளக்கின் துணையோடு. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்கே மறைந்திருப்பார் அந்த வெள்ளைச்சட்டைக்காரர்? அப்பொழுதுதான் கேட்டது அந்த சத்தம். மிகப் பயங்கரமான அலறல் சத்தம். இடியின் சத்தத்தை விட மிகப் பயங்கரமாயிருந்தது, அந்த அலறல்.

நான் திடுக்கிட்டு விழித்தேன். ஆல மரத்தின் இலைகள் மெதுவாக அசைந்து கொண்டிருந்தன. காற்று இதமாக இருந்தது. பெருமாள் கோவில் மின் விளக்கு மிக பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தேன். வாயில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டேன். மலையில் கண்ணுக்கெட்டியதூரம் வரை யாருமில்லை. மழையும் பெய்திருக்கவில்லை. வானம் பிரகாசமாயிருந்தது, நட்சத்திரங்களோடு. நிலவு முழுமையாய் இருந்தது. மறுபடியும் அந்த சத்தம் கேட்டது. மிக அழுத்தமாக. எனக்கு மிக அருகில். நான் என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். ‘என்னை விடுடா’ ஒரு பெண்ணின் அழுகை கலந்த அலறல் சத்தம் கேட்டது. நான் எழுந்தேன். கோவிலுக்கு முன்புறத்திலிருந்து மீனா ஓடிவந்தாள். பின்னாலேயே, செவலை அவளைத் துரத்திக்கொண்டுவந்தான். மீனாவின் மேலாடையைக் காணவில்லை. எனக்கு நிலமை விளங்கியது.

என்னைப் பார்த்ததும் மீனா, அழுதுகொண்டே என் பின்னால் ஒளிந்து கொண்டாள். ‘மீனா, நீ எங்கம்மா இந்நேரம் இங்க வந்த?’ என்றேன் செவலையை முறைத்தபடி. ‘அண்ணா, அன்பு அண்ணனை காட்ல பாம்பு கடிச்சிருச்சு. அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகப்போறாங்க. அம்மா உன்னை கூட்டியாரச்சொல்லுச்சு. இந்த செவலை..செவலை..என்னை..’ என்று அழ ஆரம்பித்தாள்.

‘செவலை, வேண்டாம். போயிடு.’ என்றேன். ‘நீ என்னடா, பண்ணுவ? அசலூர்க்காரன் நீ. அப்பத்தா ஊருக்கு வந்தமா, பெருமாள் மலை ஆலமரத்துக்கடியில படுத்துக்கிடந்தமான்னு இருந்திட்டு போயிடு. எங்க சண்டையில குறுக்க வராத’ என்று சொல்லிக்கொண்டே மீனாவின் கைகளைப் பற்ற முயன்றான்.

நான் என் பலங்கொண்ட மட்டும் அவனை ஒரே தள்ளாக தள்ளினேன். இதை எதிர்பாறாத செவலை நிலை தடுமாறி கீழே விழுந்தான். விழுந்தவன் விழுந்த வேகத்தில் எழுந்தான். இப்பொழுது அவன் கையில் கத்தி முளைத்திருந்தது.

‘செவலை, கத்தியைக்கீழே போடு’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, முழு வேகத்துடன் பாய்ந்து, அதே வேகத்தில் என் வயிற்றில் கத்தியை கனகச்சிதமாக செருகினான். குடலை கிழித்திருக்க வேண்டும். வழி உயிரை எடுத்தது. எடுக்கப்போகிறது. பிசுபிசுப்பாய் சூடான கருஞ்சிவப்பு இரத்தம் மிக மெதுவாக விடுதலை பெற்றது. கீழே சரிந்தேன். ‘அண்ணா அண்ணா’ மீனாவின் குரல் மிகச் சன்னமாக ஒலித்தது. பின் சுத்தமாய் அடங்கியது.

கண் இமைகளில் குளிர்ந்த நீர் சொட்டு விழ, கண் விழித்தேன். வாயில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டேன். எழுந்து உட்கார்ந்தேன். கும்மிருட்டு. மீனாவையும் காணவில்லை, செவலையையும் காணவில்லை. பெருமாள் கோவிலின் மேல் இருக்கும் மின் விளக்கு எரியவில்லை. மழைத்தூரல் அதிகமாகியது. மணி என்ன இருக்கும்? ஏன் இன்னும் அன்பு வரவில்லை? ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று சொன்னானே. இடியொன்று மிகப் பயங்கரமாயொலித்தது. மழை நன்றாகப் பிடித்துவிடுவதற்குள் கீழே போய்விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பாதை சரியாகத் தெரியவில்லை. கூர்மையான பெரிய கல் ஒன்று காலில் இடறியது.

**************