CORONAVIRUS திட்டமிடப்பட்ட சதியா? பார்ட் #1

#CORONAVIRUS எப்படி பரவுகிறது என்று பல புரளிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் உண்மையா? #5Gtower கொரோனாவை பரப்புகிறதா? #BillGates பண்ண திட்டமிட்ட சதியா? எது உண்மை? பல பகுதிகளாகப் பார்ப்போம்.

தலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி

நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரராக இருந்தால் Our Planetஐ கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். அதில் ப்ளூ ஆல்கான் என்கிற பட்டாம்பூச்சியைப் பற்றிய ஒரு எபிசோட் வருகிறது. இதை எப்படி படம் பிடித்தார்கள் என்பதும் இணையத்தில் இருக்கிறது. அது நான் இங்கே சொல்லப்போகும் கதையைவிட சுவராஸ்யமானது. இணையத்தில் தேடிப்பாருங்கள்.

சரி பட்டாம்பூச்சிக்கு வருவோம். 

இந்த பட்டாம்பூச்சி வசீகரமானது. அழகானது. அளவில் பெரியதும் கூட. ஆனால் பயங்கர தந்திரமானது. நயவஞ்சகமானது. 

முட்டை போட்டுவிட்டால் மட்டும் போதுமா. மூட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவை (கம்பளிபூச்சியை) யார் பார்த்துக்கொள்வது? நேரத்திற்கு யார் உணவளித்து, சொந்தப்பிள்ளை போலப் பார்த்துக்கொள்வார்கள். பறவைகள் தங்கள் லார்வாவை கொத்தித் திண்ணாமல் எப்படி மறைத்துவைப்பது? ம்ம்.. இது என்னடா பட்டர்ஃப்ளைக்கு வந்த சோதனை, என்று நினைத்தது அந்த ப்ளூ பட்டர்ஃப்ளை. 

அந்த நீல வண்ண பட்டாம்பூச்சி, தான் தலையிலிருந்தல்லாவா வந்தோம், காலிலிருந்து வந்தவர்கள் தனக்கு சேவை செய்யவேண்டுமே என்கிற நம்பவே முடியாத அரிய வகை வேதத்தை எப்படியோ துப்புதுலக்கி தெரிந்துகொண்டுவிட்டது. பிறகு ஒரு திட்டம் தீட்டியது. கம்பளிப்பூச்சிக்கு வேலாவேலைக்கு உணவளித்து ராஜாவை விட (கவனிக்க, ராஜா போல அல்ல, ராஜாவைவிட) மேலாக கவனிக்க வைக்க வேண்டும். உணவு வேண்டும், பிச்சையாக அல்ல, அதிகாரமாக. பறவைகளிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும். உணவு. மரியாதை. பாதுகாப்பு. அப்பொழுது அந்த வழியாக தினமும் உழைக்கச் செல்லும் உழைக்கும் வர்க்கமான சிகப்பு எறும்புகள் அதன் கண்களில் பட்டது. கவனிக்க: சாதாரண எறும்பில்லை, சிகப்பு எறும்பு. 

எறும்புகள் உழைப்பதிலே கவனமாக இருப்பதால் அதற்கு அரசியலைத் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. அழகா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உண்மையை முழுசாக ஏற்றுக்கொண்டவர்கள் அந்த உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்தவர்கள். எதையாவது சும்மா சொன்னால் போதும், ஆதாரம் என்ன, இவன் எதற்கு இதைச் சொல்கிறான், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன, இவனுக்கு இதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று சிந்திக்காது. சட்டென்று நம்பிவிடும். ஏனெனில் பயம் ஜாஸ்தி. நாளைக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயத்திலே வாழ்வதால் ஆழ்ந்து சிந்திக்கும் திரனை முழுவதுமாக இழந்துவிட்ட அந்த உழைக்கும் வர்க்கத்தை எளிதாக ஏமாற்றிவிடலாம். திட்டம் ரெடி. 

அப்படி முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவான கம்பளிப்பூச்சி செடிகளின் இலைகளைத் தின்று கொழுத்தவுடன், இலைகளிலிருந்து பட்டு நூலின் வழியாக தேவதூதனைப் போல கீழே இறங்கும். சிகப்பு எறும்புகள் சாரை சாரையாக உழைக்கச்செல்லும் வழியில் தந்திரமாகப் படுத்துக்கொள்ளும். பிறகு தன் உடம்பிலிருந்து ஒரு வகையான இரசாயனத்தை வெளிப்படுத்தும். அந்த ரசாயனத்தின் மணம் சிகப்பு எறும்புகளின் குட்டிகளிடமிருந்து (லார்வா) வரும் மணத்தைப் போன்றே இருக்கும். எறும்பும் ஏமாந்து இதுவும் தன் குட்டிதான் என்று நினைத்து பட்டுப்பூச்சியின் லார்வாவைத் தனது எறும்பு புற்றுக்குள் பத்திரமாகத் தூக்கிச் சென்று விடும். 

இப்பொழுது பட்டுப்பூச்சியின் லார்வாவும், எறும்புகளின் லார்வாவும் ஒன்றாக எறும்புகளின் ப்ரூட் சாம்பர் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும். ப்ரூட் சாம்பர் என்பது எறும்புகள் தங்கள் லார்வாக்களுக்கு உணவளித்து வளர்த்து ஆளாக்கும் இடம். எறும்புகள் தங்களது லார்வாக்களுக்கும், பட்டுப்பூச்சியின் லார்வாக்களுக்கும் ஒரே மாதிரியாக உணவளித்து சூப்பரா பராமரிக்கும். ஆனால் இது பட்டுப்பூச்சிக்குப் போதவில்லை. போதாதல்லவா? நாம தலையிலிருந்தல்லவா வந்தோம்? நமக்கு சாமியைபோலல்லவா சிறப்பு அங்கீகாரமும் முதல் மரியாதையும் கிடைக்கவேண்டும்.!!எறும்புகளின் “ராணி எறும்பு” போல கம்பளிப்பூச்சி இப்பொழுது ஒலி எழுப்ப அரம்பிக்கும். அவ்வளவுதான் எறும்புகள் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு உணவளித்துப் பராமரிக்கும். எந்தளவிற்கென்றால் – தன் குட்டிகளுக்கு உணவில்லையென்றால் கூட எறும்புகள் பட்டுப்பூச்சியின் குட்டிகளுக்குத்தான் முதலில் உணவளிக்கும். இப்படி எறும்புகளின் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து கொண்டு எறும்புகளுக்கு பயம் ஏற்படுத்தி, நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக தின்று கொழுக்கும் அந்த நயவஞ்சக கம்பளிப்பூச்சி. 

இப்படி உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கித் தின்று கொழுத்த கம்பளிப்பூச்சி ஒரு நாள் அழகான பெரிய நீல நிற பட்டாம்பூச்சியாக உருமாறி எறும்புகளின் ராஜ்ஜியத்தை விட்டுப் பறந்து செல்லும். பிடிங்கித்தின்றால் ருசியாகத்தானே இருக்கும். பிடிங்கித் திண்பவன் கொழுத்துத்தானே கிடப்பான். பட்டாம்பூச்சி பறந்து சென்று விட, அது பறந்து செல்வதற்கு நாம் தான் காரணம் என்பதை அறியாத அடிமுட்டாள் எறும்புக்கூட்டம் வழக்கம் போல அடுத்த பட்டாம்பூச்சிக்கு உணவளிக்க உழைக்க ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ப்ளூ ஆல்கன் பட்டாம்பூச்சி முற்றிலுமாக இந்த எறும்புகளை நம்பியே இருக்கிறது. எறும்புகள் இல்லையென்றால் அதன் இனமே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இது அந்த எறும்புகளுக்கு ஒரு போவதும் தெரியப்போவது இல்லை. தெரிந்து கொள்ளவும் அவை விரும்பாததுதான் விந்தையிலும் விந்தை. 


பிகு: இந்த எபிசோட் யூடியூபில் கூட இருக்கிறது. https://www.youtube.com/watch?v=XmtXC_n6X6Q

பிபிகு: Our Planet முழுக்கவே சுவராஸ்யமாக இருக்கும். டேவிட் அட்டன்பரோ லயித்து நரெட் செய்யும் குரலுக்காகவே பார்க்கலாம். யானைகள் நீருக்காக தேடி அலைவதும், ஆழ்கடலின் உயிரினங்களும் ஆச்சரியமூட்டும் எபிசோட்கள்.

பிபிபிகு: சமூகநீதிக் காவலர் கட்டுமரத்தின் 96வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று வருகிறது.

பிபிபிபிகு: அவரை கட்டுமரம் என்றழைப்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. அவருக்கு இதனால் எந்த இகழ்ச்சியும் இல்லை. என்றென்றும் அவர் எங்கள் கட்டுமரம்.

வந்துட்டாருன்னா? வரமாட்டாருண்ணே. வந்துட்டாருன்னா?

 

தாத்தா ஏற்கனவே உக்காந்துட்டாரு.
எழுந்தாலும் அவரு வீட்லையே அவரு சமாளிக்கவேண்டிய பிரச்சனை நிறைய இருக்கு..
பாட்டிய உக்காரவெச்சாச்சு.
அடுத்து யாரு?
பாட்டிக்கு அப்புறம் அவுங்க வீட்டில யாருமே இல்லீண்ணே..
டேய் ஐஸ்ப்ரூட் மண்டையா.. பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அப்புறம் இந்த எலிஸ்நாட்ல யாருடா இருக்கா?
வாட்டர்டேங்க் இருக்காருல்ல?
அவரா? அவரு காமெடி பீசு தம்பி. போன தடவ நம்மகூடவே சேர்ந்துகிட்டாரு.. அவர போயி பெரிசுபண்ணிக்கிட்டு..
மாரத்தான் மன்னர்?
ஹா ஹா ஹா.. சிரிப்பு வருது தம்பி..
உட்கட்டர்?
டேய் முள்ளங்கி மண்டையா.. காமெடி பண்றதுக்கு அளவில்லையா?
அப்புறம்.
அப்புறம் நாம தாண்ணே
நாமதானா?
ஆமாண்ணே. நாமும் நம்ம டமஸ்கிருதாவும்தாண்ணே
எப்பூடி பள்ளிகூடத்துல நம்ப டமஸ்கிருதாவ நொழச்சோம் பாத்தியா?
செம செம செமண்ணே..
டமஸ்கிருதா வாரம்.. டமஸ்கிருதா மாதம்.. ஏன் டமஸ்கிருதா நொடி கொடி கூட வெப்போம்… நாடு நம்பதுடா..
ஆமாண்ணே.. நாடு நம்பது..
டேய்..அவரு இருக்காருல்ல? மறந்துட்டியா?
அவரா? இருபது வருஷம் ஆச்சு.. இனிமே அவரு வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன?
வந்துட்டாருன்னா?
வரமாட்டாருண்ணே
வந்துட்டாருன்னா?
அண்ணே.. பயமாருக்குண்ணே..
அவருக்குப்பின்னாடியும் நம்ப ஆட்கள்தானடா இருக்காங்க?
ஆமாண்ணே.. இருந்தாலும் அவரு நம்ப வழிக்கு வரமாட்டாருண்ணே..
ஐயைய்யோ இப்ப என்னடா பண்றது?
அவரு வந்தாருன்னா.. அவருதாண்ணே.. அடுத்து..
அவரையும் காமெடி பீஸாக்கிருவோம்..
எப்படிண்ணே..
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க வருவீங்களா மாட்டீங்களா அப்புடீன்னு கேப்போம்..
(சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க இனிமே என்ன பண்ணப்போறீங்க.. என்ன பண்ணப்போறீங்க – எக்கோ அடிக்குது)
அண்ணே அவரு வந்தா என்ன வராட்டினா நமக்கு என்ன?
டேய்.. தயிர்சாத மண்டையா.. வந்துட்டாருன்னா எலிஸ் கெட்டியா பிடிச்சிகிடுவாய்ங்கடா.. அப்புறம் நாம என்ன பண்றது? பயமாருக்குல்ல..
ஆமாண்ணே..
கேப்போம்.. நெருக்கி பிடிப்போம்.. சட்டுன்னு ‘இல்ல வரமாட்டேன்னுட்டாருன்னா’. நமக்கு நல்லது தான?
பொதுஜனம் கேக்குற கேள்விக்கெல்லாம் அவரு கண்டிப்பா பதில் சொல்லனுமா என்ன? அது அவரு பெர்சனல் இல்லியா? தவிர அவருக்கே ப்ளான் இல்லாம இருக்கலாம் இல்லியா? அவர சொல்லு சொல்லுன்னு கேக்கறது கொஞ்சம் ஒவரா இல்ல?
டேய் சுட்ட அப்பள பண்டையா.. என்னடா பேசுற.. நீ யாரு கட்சி?
இளமையில உண்ணாமலை படத்த உண்ணாம ஒம்பது வாட்டி பாத்திருக்கேண்ணே..
பாரு.. அதுக்கு.. கொள்கை வேற உண்மை வேற..
இல்லண்ணே.. நீங்க சாப்ட்வேர் எஞ்சினியருன்னு வெச்சுக்கோங்க.. உங்கிட்டவந்து நீங்க இந்த கம்பெனில எத்தன நாள் இருப்பீங்க? அடுத்து இன்ஃபோசிஸ் போவீங்களான்னு பக்கத்துல உக்காந்திட்டிருக்கறவன் நச்சரிச்சிக்கிட்டே இருக்கான்னு வெச்சுக்கோங்க.. உங்களுக்கு கடுப்பாகுமா ஆகாதா? தவிர அந்த கேள்விக்கு நீங்க ஏன் பதில் சொல்லனும்?
டேய் தயிர்வட மண்டையா.. என்னடா நியாயமெல்லாம் பேசுற? நாமெல்லாம் அப்படிபட்ட ஆட்களா?
சொல்லுங்கண்ணே..
டேய் தப்புதான்.. கேக்கக்கூடாதுதான்.. ஆனா வயித்தகலக்குதுல்ல.. வரமாட்டாருன்னு தெரிஞ்சிட்டா அடுத்த வேலைய பாக்கலாம்ல.. வருவாருன்னா அவர எப்படி காமெடி பீஸாக்குறதுன்னு பாப்போம்.. அதனால ப்ரஷர் பண்ணுவோம்..
ப்ரஷர் பண்ணா? அவரு சொல்லனுமா?
டேய்.. வெங்காயம்-இல்லாத மண்டையா.. மீடியா நம்ம கிட்ட இருக்குடா..
சோ?
இந்த மக்கள் என்னைக்குடா சொந்தமா சிந்திச்சிருக்காய்ங்க?
ஹலோ.. இந்த எலெக்ஷன் ரிசல்ட் மறந்துபோச்சா? சுனாமி எல்லைக்குள்ளேயே வரல..
அது வேற.. நாளாகும்டா.. ஆனா லஞ்ச ஒழிப்புன்னு நம்ப தம்பிகுஜாரே ஆரம்பிச்சப்போ எல்லாரும் எப்படி நாம சொன்னதையே சொல்லிட்டிருந்தானுங்க? அது சாத்தியமா? இதுல இருக்குற ஓட்டை என்னன்னு யோசிச்சானுங்களா? மந்திரிச்சுவிட்டமாதிரி மெழுகுவர்த்திய தூக்கிட்டு திரியல?
ஆமா..
அத விடு.. இப்ப எல்லோரும் கூட்டணும் வகுக்கனும்னு வெளக்கமாத்த தூக்கிட்டு அலையல? இதெல்லாம் சரிப்படாதுன்னு பிறந்த குழந்தைக்குகூட தெரியும்.. ஆனா யோசிச்சானுங்களா..
ம்ம்..
அது மாதிரிதான்.. நாம ஆரம்பிச்சிவெப்போம்.. கேப்போம்.. எல்லாரும் நம்பகூட சேர்ந்துகிடுவாங்க.. யாரும் யோசிக்கமாட்டானுங்க.. அந்தாள் எதுக்கு பதில் சொல்லனும்.. வர்றதும் வராததும் அவர் விருப்பமில்ல.. அப்படின்னு யோசிக்கமாட்டானுவ..
ம்ம்..
காமெடி பண்ணுவோம்.. அவர பிடிக்காதவங்க கிட்ட அவர பத்தி பேட்டி எடுப்போம்.. அவரு வரலாமா கூடாதான்னு கேப்போம்.. அத கொட்ட எழுத்தில போட்டு நம்பாளுங்க பத்திரிக்கையையும் விப்போம்..
ம்ம்..
எல்லாரும் நெருக்கியடிச்சு கேக்கும்போது.. அவரு பதில் சொல்லித்தானே ஆகனும்.. வரமாட்டேன் ஆளவிடுங்கடான்னு சொல்லித்தானே ஆகனும்..
வர்ரேன்னு சொல்லிட்டாருன்னா?
ஹா ஹா ஹா அப்படியெல்லாம் சொல்லமாட்டாரு..
சொல்லிட்டாருன்னா?
வயித்தகலக்காதடா தம்பி..
வர்ரேன்னுதான் சொல்லுவாரு..
வரட்டும்..அப்ப அவரு கூட சேர்ந்துக்குவோம்.. அதிகாரத்தில ஒட்டிக்கிட்டு நாம அதிகாரமைய்யமா ஆயிடுவோம்.. இது நமக்கு சொல்லியா தரணும்.. ரெண்டாயிரம் வருஷமா நாம செய்யிறதுதான..
ஹா ஹா ஹா ஹா..
ஹா ஹா ஹா ஹா..

*

சுஜாதாமேனியாக்கள்

இந்த சுஜாதாமேனியாக்களின் தொல்லை தாங்கமுடியலப்பா. அவர மாதிரி வருமா. அவர ரீப்லேஸ் பண்ண முடியாது. சேர் எப்பவும் காலியாத்தான் இருக்கும். பொது புத்தி. மிடில.sujatha

இது, தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் ரஜினியெல்லாம் ஒரு ஆளான்னு கேக்குறமாதிரி. தீவிர ரஜினி ரசிகர்கள் விஜயை மதிக்காத மாதிரி. இந்த ஜெனரேஷன் விஜய் ரசிகர்கள்கிட்ட பேசீனீங்கன்னா தெரியும் அவர்கள் ரஜினியை எந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள், விஜயை எந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள் என்று. ஜெயகாந்தனைப் படித்து சிலாகித்தவர்கள் எஸ்ராவைக் கண்டுகொள்வதில்லை. எஸ்ராவைப் படித்த என்னால் ஜெயகாந்தனைப் படிக்க இயலவில்லை.

Carl_Sagan_Planetary_Society

கார்ல் சாகனும் சுஜாதாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஒரே மாதிரியான பீல்டில் இருந்தவர்கள். கார்ல் சாகன் அமெரிக்காவில் செய்ததை சுஜாதா 10% கூட இங்கே செய்யவில்லை என்பதே உண்மை. காஸ்மோஸ் போன்ற ஒரு புத்தகத்தை சுஜாதா எழுதியிருந்தால் – அதுவே அவர் தமிழ் சமூகத்துக்கு ஆற்றிய மிகப்பெரிய தொண்டாக இருந்திருக்கக்கூடும்.

கார்ல் சாகன் ஒரு ஜெனரேஷனை தட்டி எழுப்பினார். இன்றைக்கு இருக்கும் பல அமெரிக்க விஞ்ஞானிகள் கார்ல சாகனை ரோல் மாடலாகக் கொண்டவர்கள். அதுபோல, சுஜாதா தமிழ் இளைஞர்களுக்கு அறிவியலைக் கொண்டுசேர்த்திருக்கவேண்டும். சுஜாதா ஒரு செலிபிரிட்டி. பாப்புலர் ஃபிகர். நட்சத்திரம். தமிழின் எழுத்தாளர்களில் முதல் ராக் ஸ்டார். அப்படியிருந்தும், ஏன் பாப்புலர் சயின்ஸ் புத்தகங்களை அவர் எழுதவில்லை என்று புரியவில்லை.

விஞ்ஞானத்தை கதைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டவர். மைக்கேல் க்ரிக்டனைப் போல. ஸ்டீஃபன் கிங் போல. அவ்வளவே. மைக்கேல் கிரிக்டனைப் போல கூட சுஜாதா முழுவதுமாக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. அவர் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர். அவரது பல கதைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எப்படி கமலஹாசனுக்கு ப்ரா பத்தி பேசாமல் படம் எடுக்கத்தெரியாதோ, அதே போல சுஜாதாவுக்கு பெண்களின் மாரைப் பற்றிப் பேசாமல் கதை எழுதத்தெரியாது. பாலகுமாரன் நாவல்களை முதன்முறையாகப் படிக்க ஆரம்பிக்கும்பொழுது ஒரு சிலிர்ப்பு ஏற்படும். பூசுமஞ்சளில் மஞ்சள் தொழிலை அலசி ஆராயிந்திருப்பார். எப்படி முடிகிறது என்று தோன்றும். ஆனால் அவரது பிற நாவல்களை தொடர்ந்து படிக்கும் போது கிட்டத்தட்ட ஐந்து நாவல்களுக்குள்ளேயே ஒரு பேட்டர்ன் தெரிந்துவிடும். பிறகு அயர்ச்சி தான் மிஞ்சும். அதேதான் சுஜாதாவுக்கும். அவரது “ஆ” நாவல் எல்லாம் உண்மையிலே மிடில. தம்பி ஜோடா குடுங்கிற ரேஞ்சில தான் இருந்தது.

சிறுகதை என்றாலே டிவிஸ்ட் வேண்டும். ட்விஸ்ட் இல்லாவிட்டால் அது சிறுகதையே இல்லை என்கிற அளவுக்கு நம்மைத் தள்ளியவர் சுஜாதா., ஒரு பக்கக் கதை, ஒரு வரிக் கதை, ஒரு சொல் கதை, ஒரு எழுத்துக்கதை என்று சிறுகதையின் ஃபார்மெட்டை டைல்யூட் செய்தவர் சுஜாதா. சுஜாதா கதைகளைப் படித்துவிட்டு, கிராவின் சிறுகதைகளைப் படிக்கும் பொழுது என்னடா இது ஒரு மண்ணையும் காணோம்னு நினைத்தேன். அது திருப்பாச்சி பார்த்துவிட்டு இரண்டாம் உலகம் பார்ப்பதைப் போல. டென்ஷனாகாதீங்க. சும்மா ஒரு ஃப்ளோல வந்துருச்சு. ஓக்கே. ரீடேக். திருப்பாச்சியைப் பார்த்து விட்டு மூன்றாம் பிறை பார்ப்பது போல. முல்லும் மலரும் பார்ப்பது போல.

சுஜாதா ஒரு நல்ல ஜனரஞ்சகமான எழுத்தாளர். கமலஹாசன் ஒரு நல்ல நடிகர். இருவரும் ஒரு மசாலாவை அறிவாளித்தனமாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்கிற வித்தை அறிந்தவர்கள். அதை தெளிவாக இருவரும் செய்தனர். கமலஹாசன் இன்னும் செய்து கொண்டிருப்பது வேதனை. மற்றபடி இருவரும் மிகுந்த தேடல் கொண்டவர்கள். ஆனால் இருவரும் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சுஜாதா பாப்புலர் சயின்ஸ் புத்தகங்கள் எழுதாது – ஒரு மிகப்பெரிய குறை. கமலஹாசன் இன்னும் விஸ்வரூபம் போன்ற மரணமொக்கைகள் கொடுப்பதை என்னவென்று சொல்வது.

வழிகள் இருந்தும் இண்ட்ரஸ்ட் இல்லாதவர்களை ஒன்றும் சொல்லமுடியாது. ரஜினியைப் போல. கெஜ்ரிவால் என்கிற இன்கம்டேக்ஸ் ஆபிசர் செய்கிறார் என்றால் ரஜினியால் செய்யமுடியாதா? இண்ட்ரஸ்ட் இல்லை அவ்வளவே. எது ஈசியோ அத செஞ்சிட்டுப் போவோம்.

எழுத்தாளர்கள் வருவார்கள் போவார்கள். தலைவர்களைப் போல. நடிகர்களைப் போல. பிஸினஸ்மேன்கள் போல. ரிக்‌ஷா இழுப்பவர்கள் போல. அவர்களுக்கு நாற்காலிகள் இருந்திருக்கும். அவர்கள் போனபிறகு அந்த நாற்காலிகள் காலியாக இருப்பதில்லை. அவர்களே அந்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்கள். இல்லையென்றால் அந்த நாற்காலியே இருக்காது. வேறொருவர் வந்து அந்த நாற்காலியில் உட்கார முடியாது. வேறு ஒரு நாற்காலி பக்கத்திலே போட்டு அமர்ந்துகொள்ளலாம். அவ்வளவே.

நீயா நானா – வருடாந்திர பலன்கள்

நீயா நானா பார்த்த பாதிப்பு.

நீயாநானா ஒரு மொக்கங்கறது என் தாழ்மையான கருத்து. அதுல எடுத்துவைக்கப்படும் தலைப்புகளும் பொதுமக்களின் கருத்துக்களும் மிகவும் மொன்னை. மிடில் க்ளாஸுக்கு பொதுவா ஷார்ப்பா பேசத்தெரியாது. பேச வராது. பேசவும் பிடிக்காது. அரே யார்.. தேட் ஆல்சா குட் திஸ் ஆல்சோ குட் என்கிற யதார்த்தம் தான் இருக்கும். தப்பித்தவறி ஒன்னுரெண்டு தத்துபித்துன்னு ஏதாச்சும் சொல்லுச்சுன்னாலும், அத உடச்சு யாராச்சும் சொன்னா, அதுக்கு பிறகு என்ன பேசறதுன்னே அதுங்களுக்கு தெரியாது. அப்படியே அதுங்க பேசுச்சுன்னாலும், நீயாநானால, “கனம்கோட்டார்” மடக்கி நிமித்திவிட்டுடுவார். அடடே வட போச்சேன்னு, பிடுங்கப்பட்ட மைக்கப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கும்கள். நானூறு வருஷம் ஒலியும் ஒளியும் பாத்துவளர்ந்த குமரிக்கண்ட மூத்தகுடிகளுக்கு, நீயா நானா ஏன் பிடித்தது என்று பல்லுவெளக்கி துப்பத் தேவயில்லை.

நான் பாக்கறதில்லை – ஆனா அவார்டு எல்லாம் கொடுத்தப்பிறகு, என்னதான்யா செய்றாய்ங்கன்னு பாக்க ரெக்கார்ட் பண்ணிவெச்சேன். ஊத்தாப்பம் வர லேட்டான கேப்பில ரீப்ளே பண்ணதால வந்த வெண.

இந்த நீயா நானாவிலே ஏதோ ஒரு ராசிக்கு சொத்து தகராறு தீரும் என்று ஒரு விஞ்ஞானி சொன்னவுடன், நின்றுகொண்டிருந்த அந்த அப்பாவி குறுஞ்சிரிப்பு சிரித்தார். உடனே மற்ற விஞ்ஞானிகளும் அதே பாடலை ராகம் மாற்றாமல் பாடினர். கனம்கோட்டாரும் நெறைய விஞ்ஞானிகள் இதயே சொல்றாங்கன்னு, ஏத்திவிட, வழிந்த அந்த அப்பாவி, தனக்கு சொத்துப்பிரச்சனை இருக்கிறது, அதுவும் முடிஞ்சிரும்னு, அசட்டு சிரிப்புடன் சொன்னார்.

சிம்பிள். நீங்கள் இப்படி முகப்புத்தகத்தில் தவம் கிடப்பது போல, அவர்கள் உங்கள் முகப்புத்தகத்தின் ஒவ்வொரு தசையின் அசைவையும் படிக்கிறார்கள். கதை ரெடி செய்கிறார்கள். சமீபத்திய ஆன் டிமாண்ட் பிரிண்டிங் மாதிரி. அப்பப்ப சுடச்சுட வடை சுடுகிறார்கள். மாவு? ஆல்டைம் ரெடி. சேம் ப்ளட்.

பி கேர்ஃபுள். நான் என்ன சொன்னேன்.

தெரியாமத்தான் கேக்கறேன் – தமிழ்நாட்ல சொத்துப்பிரச்சனை இல்லாமல் யாராவது இருக்கிறார்களா என்ன?

சீரியசா கேக்கறேன் – இன்னுமா இந்த உலகம் இவிங்கள நம்பிக்கிருக்கு?

ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய பொய். பொய்யைத் தவிர வேறில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன் நான் எழுதிய பதிவு.

ஓவியர் பாரதிராஜா – கதைசொல்லி சிவக்குமார் – அட்லாண்டிஸ் வீடியோ

நம்ம ஊரரசு இந்த வார விகடனுக்கு கொடுத்திருந்த பேட்டியில் “இயக்குனர் என்றால் பாரதிராஜா தான் நினைவுக்கு வருவார்” என்றார். (ஊரரசு பேட்டியவெல்லாம நீ படிக்கிறன்னு கேக்காதீங்க!). என்னைப் பொருத்தவரையிலும் இது தான் உண்மை. தமிழ் மொழியில் வேறு வேறு தளங்களில் படம் கொடுத்தவர் பாரதிராஜா மட்டுமே. சிவப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே, ஒரு கைதியின் டைரி, கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய ஆல் டைம் பேவரிட் படம் முதல் மரியாதை தான்.

அவரை ஒரு முறை லேன்ட் மார்க்கில் வைத்து பார்த்திருக்கிறேன். வழக்கம் போல் ஒரு டி சர்டும் ஜீன்சும் போட்டுக்கொண்டு புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். கை குழுக்கள்களுக்கு அப்பால் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம். திரும்பி வரும் பொழுது ஒரு மிகப் பெரிய இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தது போல இல்லை.

பாரதிராஜா ஒரு சிறந்த ஓவியர் என்பது எனக்கு இன்று தான் தெரிந்தது. அதுவும் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரை வரைந்திருக்கிறார். இதோ பாரதிராஜா வரைந்த எஸ்.ராமகிருஷ்ணனின் படம்.

(படம்: விகடன்)
*

நடிகர் சிவக்குமார் நன்றாகப் படம் வரைவார் என்று தெரியும் ஆனால் நன்றாக கதை அடிப்பார் என்று அண்மையில் தான் தெரியவந்தது. ஏதோ  ஒரு பெண்கள் கல்லூரியில் விழிகள் தெரிக்க அவர் மொக்கை போட்டுக்கொண்டிருந்ததை விஜய் டீவியில் பார்க்க நேர்ந்தது. அதில் முக்கியமாக என்னை கடுப்பேற்றிய விசயம்.ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் காண்டம்கள் கொத்து கொத்தாகக் கிடைத்தனவாம். இது என் எல்கேஜி காலத்திலிருந்து மிகவும் பிரபலமான கதை. வேதாளம் புளியமரத்தில் இருப்பதைப் போல.எந்த வேதாளம் எந்தப் புளியமரம் என்று கேட்டுப்பாருங்கள் ஒரு பயலுக்கும் தெரியாது.சிவக்குமாரிடம் எந்த கம்பெனி எந்த வருடம் என்று கேட்டுப்பாருங்கள்!

அப்புறம் பெண்பிள்ளைகளுக்கு அட்வைஸ் வேறு. நீங்கள் ஏன் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்கள். அது துரோகம் இல்லையா – என்பது போல பல பிதற்றலகள்.இவை யாவும் சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டரில் வேலை பார்க்கும் பெண்களை (அதன் மூலமாக ஆண்களை) நோக்கி வீசப்பட்ட கேள்விகள். என்னவோ அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகத்தான் வேலைக்கே செல்கிறார்கள் என்பதைப் போல.

என்னை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு அட்வைஸ் (பெண்களுக்கு):
படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைத்தவுடன் கூட வேலை பார்பவனையே (நல்லவனா என்று பார்த்து!) கல்யாணம் செய்துக்கனுமாம். இல்லீன்னா யாரோடவாவது அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வார்களாம்!

எப்பூடி!

இது (செக்ஸ் பிரச்சனை) என்னவோ சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டர் தொழில்களுக்குத் தான் இருக்கிறது என்பது போல கதைகள் பிண்ணப்படுகின்றன. அப்புறம் இவரைப் போன்ற ராமச்சந்திர மூர்த்திகள் அக்கதைகளைப் பரப்பிவிடுகின்றனர்.

அக்கதைகளைப் பரப்பும் முன் இன்னும் ஜாதகம் பார்த்து வரதட்சனை கொடுத்து கல்யானம் செய்துகொடுக்கும் இந்தச் சமூகத்தில் இம்மாதிரியான செக்ஸ் கதைகள் எத்தகைய விளைவுகளை இருபாலருக்கும் உண்டு பண்ணும் என்று ஸ்ரீல ஸ்ரீ ராமசந்திரமூர்த்திகள் யோசிப்பது நலம்.

*

ஜுலை 17 அன்று அமெச்சூர் வானாராய்ச்சியாளர் ஸ்காட், அட்லான்டிஸ் ஸ்பேஸ் ஷட்டிள், இன்டர்னேஷனல் ஸ்பேஸ் (ISS) ஸ்டேஷனில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதை வீடியோ எடுத்திருக்கிறார்.

ஐஎஸ்எஸின் மேலே தெரிகிற வெள்ளையான பொருள் தான் அட்லாண்டிஸ். சோலார் பேனல்களையும் நீங்கள் பார்க்கமுடியும்.

*

மும்பை குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பு நடந்து சில நிமிடங்களிலே எனக்கு தெரிந்துவிட்டது. iPhoneக்கும் NDTV appக்கும் நன்றி. தெரிந்தவுடன் என் மனதில் தோன்றியது ஒரு கெட்டவார்த்தை. உறக்கவே சொல்லிவிட்டேன். என் மனைவி சொன்னார்: அவன அப்படி திட்றதனால என்ன நடக்கப்போகுது?
ஒரு மும்பை ப்ளாக்கர் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்:

Bombs are something we have to live with now. Obviously, like other nasty things we have to live with, such as murder and robbery, it’s important to minimise the number of incidents. We haven’t had any attacks for two years and a half, which I think is good going. I’ll happily take one attack every two years that kills about twenty of us, and accept the risk of being one of those twenty next time round.

இது மிகவும் வேதனையான விசயம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்றதொரு குண்டுவெடிப்பை ஏற்றுக்கொள்வதாகவும்; அப்படி குண்டுவெடிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரும் பொழுது உயிரிழக்கும் அந்த இருபது பேரில் ஒருவராக இருக்கக்கூடும் ஆபத்தை சந்திக்கத் தயாராக இருப்பதாக சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்? வேறு வழி? கொலைகள் நடக்கிறது. கொள்ளை நடக்கிறது. கொலையும் கொள்ளையும் நடக்காமலே இருந்தால் நல்லது தான். ஆனால் முடியுமா? அவ்வளது பாதுகாப்பை வழங்க முடியுமா? இவ்வளவு சிறிய சிங்கப்பூரிலே கொலைகள் நடப்பதைத் தடுக்கமுடியவில்லை.
எப்படி இவற்றுடன் வாழப்பழகிக்கொண்டோமோ அப்படி குண்டுவெடிப்புகளுடனும் வாழப்பழகிக்கொள்வோம். அவர் குண்டுவெடிப்பு நடந்த இட்த்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் தான் இருந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் அப்படி இருந்திருக்கக் கூடும். அப்படி இருந்திருந்தால், இப்படித்தான் யோசிக்கத்தோன்றும். குண்டு வெடிக்காத இடத்தில் இருக்க ஆசையாகத்தான் இருக்கும். அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்ன? ஆனானப்பட்ட அமெரிக்காவிலே – CIA, FBI, ABC என சகட்டுமேனிக்கு உலகமெங்கும் உளவுத்துறை வைத்திருக்கும் அமெரிக்காவிலே – டிவின் டவரை இடித்து தரைமட்டமாக்கினார்கள். எங்கு ஓடுவது?
அமெரிக்காவில் சமீபத்தில் நடக்கவிருந்த குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அது பற்றிய செய்தியொன்றை அப்பொழுது பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது தீவிரவாதிகள் உருவாக்கிய புதிய வேலைவாய்ப்புகள். அப்பொழுது இரண்டு புதிய வேலைகள் என் கண்ணில் பட்டன. Terror Expert மற்றும் Terrorism Analyst. இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.படிக்க: தீவிரவாதிகள் உருவாக்கிய முற்றிலும் புதிய வேலைவாய்ப்புகள்.

நான் மேலே குறிப்பிட்ட மும்பைப் பதிவர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது: ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இருபதாயிரம்!
இன்னும் ஒருவரும் பிடிபடாத நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக பொதுஜனம் கொடுத்த டிப் ஒன்றை கண்டுகொள்ளாமல் விட்டதற்காக ஒரு காண்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தீவிர‌வாதிக‌ள் உருவாக்கிய‌ முற்றிலும் புதிய‌ வேலை வாய்ப்புக‌ள்

நேற்றோ அத‌ற்கு முன் தின‌மோ அதிகாலையில் எழுந்து மிகுந்த‌ ப‌சியுட‌ன் செரிய‌ல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நியுயார்க் ந‌க‌ர‌ குண்டு வெடிப்பு பீதி ச‌ம்ப‌ந்த‌மான‌ செய்தி சிஎன்என் இல் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருந்த‌து. இது தொட‌ர்பான‌ ந‌ப‌ரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தாயிற்று. இன்னும் பெய‌ர் தெரிய‌வில்லை. அல்ல‌து நீதிப‌தி அறிவிக்கிறவ‌ரை சொல்ல‌க்கூடாது என்று நினைத்திருக்கிறார்க‌ள். நீதிப‌தி அறிவிப்பு செய்ய‌ இன்னும் ப‌த்து நிமிட‌ம் இருக்கிற‌து. அப்பொழுது தான் தீவிர‌வாத‌ம் உருவாக்கியிருக்கிற‌ வேலைவாய்ப்புக‌ளைப் ப‌ற்றித் தெரிந்து கொண்டேன்.

இர‌ண்டு ந‌ப‌ர்க‌ள் பேசினார்க‌ள். ஒருவ‌ரின் வேலையின் பெய‌ர் Terror Expert ம‌ற்றொருவ‌ரின் வேலை யின் பெய‌ர் Terrorism Analyst.

தீவிர‌வாத‌ ஆய்வாள‌ர்(?!) ச‌ரி Terror Expert?! எப்ப‌டித் த‌ன்னை அறிமுக‌ம் செய்து கொள்வார்?

இன்னும் கொஞ்ச‌ கால‌த்தில் வானிலை ஆய்வாள‌ர் தின‌மும் வானிலை ஆராய்ச்சி செய்து செய்தியில் இன்ன‌ இன்ன‌ இட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய‌க்கூடும் க‌டும் புய‌ல் வீச‌க்கூடும் என்று சொல்வ‌து போல‌, பின்னாடி ஒரு உல‌க‌வ‌ரைப‌ட‌த்தை வைத்துக்கொண்டு, தீவிர‌வாத‌த்தையும் ஆராய்ந்து இந்த‌ இட‌ங்க‌ளில் மித‌மான‌ குண்டு வெடிப்பு இருக்கும்; உயிராப‌த்து ஏதும் இருக்காது. இந்த‌ இட‌த்தில் க‌டுமையான‌ குண்டுவெடிப்பு இருக்கும்; உயிர் ப‌லி இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து என்று சொன்னாலும் சொல்வார்க‌ள்.

வானிலையைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக‌ குடை எடுத்து வ‌ருவ‌து போல‌ தீவிர‌வாத‌நிலையைத் தெரிந்து கொண்டு என்ன‌ செய்வ‌து? குடை உத‌வாதே?

இன்ஸ்யூர‌ன்ஸ் வாங்கிக்கொண்டு போக‌லாம். குண்டு வெடிக்கிற‌து என்று போகிற‌ இட‌த்துக்குப் போகாம‌ல் இருக்க‌ முடியுமா என்ன‌?

மும்பை மேரி ஜான் என்கிற‌ ஹிந்திப்ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? மும்பையில் ர‌யிலில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்புக‌ளுக்குப் பிற‌கு அத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ரின் வாழ்க்கையை அழ‌காக‌ அல‌சுகிற‌து இந்த‌ப் ப‌ட‌ம்.

மாத‌வ‌ன் ம‌யிரிழையில் த‌ப்பியிருப்பார் ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் ஒரு கையை இழ‌ந்து விடுவார். ர‌யில் குண்டு வெடிப்புக்கு முன் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு வ‌ந்தும் ம‌றுத்துவிடுகிற‌ மாத‌வ‌ன் குண்டு வெடிப்புக்குப் பின் பேசாம‌ல் அமெரிக்கா போய்விட‌லாம் என்று நினைக்கிறார். இங்கு ர‌யிலில் ஏற‌வே ப‌ய‌ப்ப‌டுகிறார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரிட‌ம் இதைச் சொல்ல‌கிறார். எந்த‌ நாட்டில் தான் தீவிர‌வாத‌ம் இல்லை? பாதுகாப்பான‌ தேச‌ம் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ அமெரிக்காவின் இர‌ட்டைக் கோபுர‌த்தைத் தீவிர‌வாதிக‌ள் த‌க‌ர்த்து எறிய‌வில்லையா?

க‌டைசியில் அந்த‌ ந‌ண்ப‌ர் சொல்லுவார்: ந‌ம் பிள்ளைக‌ளுக்கு தீவிர‌வாத‌ம் ப‌ழ‌கிவிடும். எப்ப‌டி பூக‌ம்ப‌த்தினோடும் புய‌ல்க‌ளோடும் சூறாவ‌ளிக‌ளோடும் சுனாமிக‌ளோடும் வாழ‌ப்ப‌ழ‌கிக்கொண்டோமோ அதே போல‌ ந‌ம் பிள்ளைக‌ள் தீவிர‌வாத‌த்தோடு வாழப் ப‌ழ‌கிக்கொள்வார்க‌ள்.

ரொம்ப‌வும் வ‌ருத்த‌மாக‌ இருக்கிற‌து.

எறும்பின் சாப‌ம் ம‌ற்றும் பாம்பு செய்த‌ பூஜை

கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் பிபிசி நாலெட்ஜ் சான‌லில் ஒரு டாக்குமென்ட‌ரி பார்த்தேன். தென் அமெரிக்காவில் ம‌லை சூழ்ந்த‌; எளிதில் யாரும் சென்றுவிட‌முடியாத‌ தூர‌த்தில் ஒரு இன‌ ம‌க்க‌ள் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். ஐரோப்பாவிலிருந்து இரு ந‌ப‌ர்க‌ள் ஏற‌முடியாத‌ ம‌லைக‌ளையும் க‌ட‌க்க‌முடியாத‌ க‌டின‌மான‌ பாதைக‌ளையும் க‌ட‌ந்து வெகு நாட்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்து அந்த‌ ம‌லை உச்சியை அடைகின்ற‌ன‌ர். அங்கு த‌ங்கியிருந்து அந்த‌ ம‌க்க‌ளுட‌ன் ப‌ழகுகின்ற‌ன‌ர். ப‌ய‌ண‌ம் செய்த‌ அந்த‌ இரு ஐரோப்பிய‌ர்க‌ளுள் ஒருவ‌ர் தாவ‌ர‌விய‌ல் நிபுண‌ர்.

அந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ருள் ப‌ல‌ர் இன்ன‌மும் ந‌க‌ர‌ங்க‌ளைப் பார்க்காத‌வ‌ர்க‌ள்; அந்த‌ காட்டைவிட்டு வெளி வ‌ராத‌வ‌ர்க‌ள். ஆங்கில‌ ம‌ருத்துவ‌ம் ம‌ற்றும் ஆங்கில‌ ம‌ருந்துக‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. நோய்க‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. ந‌ம‌க்கு தெரியாவிடில் நோய்க‌ளே இல்லை என்ப‌தாகிவிடுமா? அவ‌ர்க‌ளுக்கும் நோய்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனால் அவ‌ர்க‌ளுக்கு நோய்களின் பெய‌ர்க‌ளும் அவ‌ற்றின் பாதிப்புக‌ளும் தெரிய‌வில்லை. அங்கிருக்கும் ம‌க்க‌ளில் சில‌ருக்கு கான்ச‌ர் இருந்தும்; அவ‌ர்க‌ளுக்கு அது தெரியாது.

ப‌ல‌ நோய்க‌ளால் ம‌க்க‌ள் மாண்டாலும் அது ஏதோ சாப‌த்தால் தான் ந‌ட‌க்கிற‌து என்று ந‌ம்பிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ருத்துவ‌ம் மூலிகை ம‌ருத்துவ‌ம் ம‌ட்டுமே. தாவ‌ர‌விய‌லார் அவ‌ர்க‌ள‌து மூலிகை ம‌ருத்துவ‌ம் ப‌ற்றி விசாரிக்க‌; அவ‌ர்க‌ள் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு இலையையும் அவ‌ர் அறிந்திருக்கிறார்; ஆனால் அந்த‌ இலைக‌ளுக்கு அவ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌ச் சொல்லும் ம‌ருத்துவ‌குண‌ம் ஏதும் இல்லை என்று இவ‌ர் சொன்னாலும் அவ‌ர்க‌ள் ந‌ம்ப‌வில்லை.

அங்கிருக்கும் நான்கு மாத‌ குழந்தை ஒன்றுக்கு க‌ழுத்தில் ஒரு வ‌கையான‌ வீக்க‌ம் இருக்கிற‌து. அது ஒரு கிரிக்கெட் பால் அள‌வுக்கு பெரிதாக‌வும் இருக்கிற‌து; கெட்டியாக‌வும் இருக்கிற‌து. இது ஒரு வ‌கையான‌ நோய்; இந்த‌க் குழ‌ந்தையை குண‌ப்ப‌டுத்த‌ ந‌க‌ர‌த்துக்கு கூட்டி சென்று ம‌ருத்துவ‌ம் பார்க்க‌வேண்டும் என்றும் இந்த‌க் குழ‌ந்தையை ந‌க‌ர‌த்துக்கு அழைத்துச் செல்ல‌ என‌க்கு அனும‌தி தாருங்க‌ள் என்று அவ‌ர் கேட்கிறார். அத‌ற்கு அவ‌ர்க‌ள் ம‌றுத்துவிடுகின்ற‌ன‌ர்.

மேலும் இது ஒரு நோய் இல்லை என்றும் இந்த‌ மாதிரியான‌ வீக்க‌ம் ஒரு வ‌கையான‌ எறும்புக‌ளின் சாப‌த்தால் வ‌ருகிற‌து என்றும் அவ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். இத‌ற்குப் ப‌ரிகார‌மாக‌ எறும்புக‌ளை நோக்கி பிரார்த்த‌னை செய்து ஒரு வ‌கையான‌ இலையை அரைத்து சாறு எடுத்து வீக்க‌த்தின் மீது கொஞ்ச‌ கால‌ம் விட்டுக்கொண்டிருந்தால் ச‌ரியாகிவிடும் என்றும் சொல்கின்ற‌ன‌ர். ந‌ம‌து தாவ‌ர‌விய‌லாரின் பேச்சை யாரும் கேட்கிற‌மாதிரி தெரிய‌வில்லை.

தாவ‌ர‌விய‌லாரும் அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அந்த‌ இலையைத் தேடி க‌ண்டுபிடிக்கிறார். இலையைக் க‌ண்டுபிடித்த‌ நொடியில் அந்த‌ இலைக்கு ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லையென்ப‌தை அறிகிறார். இதை நிரூபிக்க‌ அந்த‌ இலைக‌ளை சாறு எடுத்து அந்த‌க் குழ‌ந்தையின் க‌ழுத்திலிருக்கும் வீக்க‌த்தில் விடுகிறார். கொஞ்ச‌ நேர‌த்தில் வீக்க‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ற்றிப்போகிற‌து.

தாவ‌ர‌விய‌லாருக்குத் தெரியும் அந்த‌ இலையில் ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லை என்ப‌து; என‌வே வீக்க‌ம் குறைந்தது ஒரு த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சியே என்ப‌தையும் அறிகிறார். வீக்க‌ம் ப‌ல‌ நாளாக‌ இருந்திருக்கிற‌து; ஏதோ ஒரு கார‌ண‌த்துக்காக‌ பின் கொஞ்ச‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு வ‌ற்றிப்போகிற‌து. இலைக்கும் வீக்க‌ம் குறைந்த‌துக்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.

ஆனால் இந்த‌ த‌ற்செய‌ல் ச‌ம்ப‌வ‌த்தால் அங்கிருக்கும் ம‌க்க‌ளுக்கு மூலிகை ம‌ருத்துவ‌ம் மேல், மேலும் தீவிர‌மான‌ ந‌ம்பிக்கை உருவாகிற‌து. இதைத் தொட‌ர்ந்து இன்னும் ப‌ல நோய்க‌ளை இதே போன்ற‌தொரு மூலிகை ம‌ருத்துவ‌ம் குண‌ப்ப‌டுத்தும் என்று அவ‌ர்க‌ள் உறுதியாக‌ ந‌ம்புவ‌த‌ற்கு இது போன்ற‌ த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சிக‌ள் உத‌வுகின்ற‌ன‌.

*

கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் என‌க்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார். என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ என்னுட‌ன் சேர்ந்து இன்னும் ப‌ல‌ருக்கும் அந்த‌ மெயில் அனுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌து. அது சூரிய‌கிர‌க‌ண‌த்தின் பொழுது பூக்க‌ளைக் கொண்டு சிவ‌னுக்கு பூஜை செய்த‌ பாம்பைப் ப‌ற்றிய‌து. அதாரம் இருக்கிற‌து. பட‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. சாம்பிளுக்கு அவ‌ர் அனுப்பிய‌ ஒரு ப‌ட‌ம் இங்கே:

அவ‌ரைச் ச‌ந்தித்த‌ பொழுது ஏன் இவ்வாறான‌ மெயில்க‌ளை எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; என‌க்கு வ‌ந்த‌து உங்க‌ளுக்கு ஃபார்வேர்ட் செய்தேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். பிற‌கு ஏன் இதையெல்லாம் ந‌ம்புகிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; கொஞ்சநேர‌ம் ம‌ழுப்பிய‌வ‌ர் பிற‌கு ச‌ட்டென்று, உன‌க்கு ந‌ம்பிக்கை இல்லையென்றால் அது உன்னுட‌ன் என்று கோப‌மாக‌ச் சொன்னார்.

*

ச‌ரி தான்; அதையே நானும் திரும்ப‌க் கேப்பேன்ல‌?

சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சி பெட்டி ,சினிமாவில் மெஸேஜ் மேலும் சில.

(ஈரம், உன்னைப் போல் ஒருவன், தேக்கடி சம்பவம், எ வெடனஸ்டே, ப்ராகாஷ்ராஜ், காஞ்சிவரம், சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சிப் பெட்டி)

ஈரம் படம் பார்த்தேன். அரத பழசான கதை. புரியாத புதிர் ரீமேக். ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் கொஞ்சம் புதுமை. அவ்வளவே. எப்போத்தான் முன்னும் பின்னும் ஓடுற ப்ளாஷ்பேக் உத்திய விடப் போறாங்களோ தெரியல. புதுசா யோசிங்கப்பா.

*
உன்னைப்போல் ஒருவன் பார்க்கவில்லை. எ வெட்னஸ்டே பாத்திருக்கிறேன். நஷ்ருதின் ஷா போல எளிமையாக கண்டிப்பாக கமலால் பண்ணமுடியாது என்று நான் நினைத்திருந்தேன். அதே போலவே எங்கோ யாரோ எழுதியிருந்தார்கள்: “அமெரிக்க ஆங்கிலம் பேசுவது சற்று நெருடலாக இருக்கிறது” என்று. சொன்னேன்ல கமலால் சாமான்யனாக நடிக்க இயலாது. உலக நாயகனுக்கு சாமான்யனாக நடிப்பதில் என்ன கஷ்டம் என்று தெரியவில்லை.

*
எ வெட்னஸ்டே படம் முன்பு பார்த்தபொழுதே எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நஷ்ருதின் ஷா அழகாக நடித்திருந்தார். யதார்த்தமாக இருந்தார். ஆனால் கதையில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. மறுபடியும் ஷங்கர் ·பார்முலா தான். என் நண்பர் “உன்னைப்போல ஒருவன்” படம் பார்த்துவிட்டு நீங்க பார்த்துட்டீங்களா? கண்டிப்பாக பாருங்கள். நல்ல மெசேஜ் என்றார். வாட் மெஸேஜ்? யாருக்கு? சி க்ளாஸ¤க்காம். நீங்க எந்த க்ளாஸ் சார் என்றேன். திருதிருவென்று முழித்தார். சரி என்ன மெஸேஜ் அதயாவது சொல்லுங்க என்றேன். இவன் கிட்ட வாயக்கொடுத்தது தப்போன்னு நினைச்சிருப்பார். பிறகு நிதானமாக, பாம் வெக்கிற தீவிரவாதிகளுக்கு நாம பாம் வெச்சிட்டா எல்லாம் சரியாயிடும்ன்னு சொன்னார். சனிபெயர்ச்சி கூடவான்னு கேட்டேன்? மறுபடியும் திருதிருன்னு முழித்தார்.

*
சரி அதான் படத்தில் மெஸேஜ் சொன்னாங்கல்ல? பார்த்தீங்கல்ல? அப்புறம் அத ·பாலோ பண்ணாம விடிஞ்செந்திருச்சதும் பொட்டிதட்ட வந்துட்டீங்க? ஏன்னா இயல்பு வாழ்க்கையில இது முடியாதுன்னு தான? இயல்பு வாழ்க்கையில முடியாத ஒன்ன படமா எடுத்தா அது எப்படி மெஸேஜ் சொல்றதா கணக்கிலவரும்?

அப்படியே மெஸேஜ் கொடுக்கிற படம் வந்தாலும், அதால என்ன லாபம்? உக்காந்து கொஞம் யோசிங்க ப்ளீஸ். சுமார் எத்தன வருஷமா சினிமா எடுக்கறாங்க? அதுல எத்தன ஹீரோக்கள் அடிமைகளைப் பற்றியும், மக்களாட்சி பற்றியும், ஜனநாயகம் பத்தியும் மெஸேஜ் சொல்றாங்க. அட ஷங்கர் மட்டுமே ஏழெட்டு படம் எடுத்திருப்பார். என்ன மாறியிருக்கு இங்க?

இன்னும் படகு தேக்கடியில கவிழத்தான செய்யுது. நான் இதுவரை தேக்கடிக்குப் போனதில்ல. ஆனா ஆழமான ஏரின்னு தெரியும். அப்படியிருக்க போட்ல பயனம் செய்றவங்களுக்கு லை·ப் ஜாக்கெட் கொடுக்கனும்னு தெரியாதா? இப்போ தெரியும். ஆனா நாமளே நாளைக்கு தேக்கடிக்கு போனோம்னா லை·ப் ஜாக்கெட் கேப்போமான்னு கூட தெரியாது. கொடுத்தாலும் வாங்கி மாட்டிப்போமான்னும் தெரியாது. ஏன்னா நாம மெஸேஜ உள்வாங்கிக்கிற லட்சனம் அப்படி.

இன்னும் சத்துணவு அறையில தீப்பிடித்து பல மொட்டுக்கள் கருகின் நிகழ்வு எத்தனை பேர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? அது சம்பந்தமாக போடப்பட்ட அரசு ஆனைகள் எத்தனை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது?

இதக்கூட விடுங்கப்பா. எத்தனை பேர் ஹெல்மெட் போட்டுட்டு வண்டியோட்டுறோம்? நம்மளோட பர்சனல் சே·ப்டியில இருக்கிற அக்கறை அவ்வளவுதான்.

*

இத்தனை படத்துல வர்ற மெஸேஜ் நமக்கு பத்தாதுன்னு சனி பகவான் என்ன மெஸேஜ் சொல்றாருன்னு வேற பாக்கவேண்டியிருக்கு. கஷ்டம் தான். படத்தில நல்ல மெஸேஜ் இருக்குன்னு யாராவது சொன்னா பத்திக்கிட்டு தான் வருது.

*

காஞ்சிவரம் பார்த்தேன். விஜய் டீவில கொஞ்ச நாளைக்கு முன்ன பார்த்தேன். ப்ரகாஷ்ராஜ் தேசிய விருது வாங்குவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல. ஏனோ எனக்கு அந்தப்படத்தில வர்ற காரெக்டர் தெரியல. படம் முழுதும் எனக்கு ப்ரகாஷ்ராஜ் தான் தெரிஞ்சார். வாழ்த்துக்கள் ப்ரகாஷ்ராஜ்.

தேசியவிருது வாங்கினப்போ மட்டும் ஞாபகம் வெச்சிருப்பாங்க அப்புறம் மறந்திருவாங்கன்னு பேட்டியில சொல்லியிருந்தாரு, என்னோட அவுட்லுக் கேலன்டரில வருஷம் முழுக்க ரிமைன்டர் “Please remember Prakashraj” அப்படின்னு போட்டுவெச்சிருக்கேன். நீங்களும் ஒரு remainder போட்டுவெச்சுக்கங்க. அதான் நிறைய ப்ரீ கூட இருக்கே.

உங்க பேனர்ல இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (தேசிய விருதுக்கும் இந்த கோரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

*

மேலும் இரண்டு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதுவருகிறேன்
http://readnshared.com
http://chillicode.wordpress.com

நேரம் கிடைத்தால் படியுங்கள். A poor guy’s chronicle with IRCTC.CO.IN என்கிற பதிவை படிக்க சிபாரிசு செய்கிறேன்.

*

உரையாடல் போட்டிக்கு நான் எழுதிய சிறுகதை ஒன்று இன்னும் முடிக்கப்படமால் அப்படியே இருக்கிறது. யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்கிற எனது போபால் துயரசம்பவம் பற்றிய தொடரையும் முடித்துவிட எண்ணியிருக்கிறேன். நீங்க படிச்சாலும் படிக்காம போனாலும் முடிக்கிறது எனது கடமையில்லியா?
*
ரொம்ப நாளுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் அனுப்பிய போட்டோ கீழே:

தமிழக அரசு 14″ வண்ணத் தொலைக்காட்சி என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. அதானால் என்ன என்று கேட்பவர்களுக்கு: இந்த படம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் தனது செல்·போனில் படம்பிடித்தது.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க
வந்த
இலவச தொலைக் காட்சி
பெட்டியின் பெட்டிக்கு
இலவசமாக வழங்கப்பட்டதா
விமான டிக்கெட்?

ஷாப்பிங் மால்கள் தோறும்
பெரிய பெரிய
எல்சிடி பெட்டிகளின்
பெட்டிகளைப் பார்த்ததும்
கழிவிறக்கம் தொற்றிக்கொள்ள
தானகவே குப்பைக்கு வந்தது
நம் இலவச பெட்டியின்
பெட்டி!

நீங்களும் உங்களுக்கு தோன்றும் வரிகளை கவிதை என்று நினைத்துக்கொண்டு இங்கே பின்னூட்டம் அளிக்கலாம்.

*

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்து முன்னூரு வருஷம் ஆச்சுன்னாலும், போனவாரமோ எப்பவோ பக்கத்துல உக்காந்திட்டிருக்கிற சில மக்கள் இந்தியாதான் இப்போ நம்பர் ஒன்னுன்னு பெருமை பிடிபடாம பேசிட்டிருந்தாங்க. இன்னிக்கு The Tabla வில ஹர்ஷா போக்லே எழுதிய இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. I liked the title “Floored”. இது தானாப்பா உங்க டக்கு?
*