டிங்கிரித்தலையன் (எ) செந்தில் (எ) பிரபு

(சிறுகதை)

பாலாஜி நகர். திபகு. மதுரை.

ட்ரிங்…ட்ரிங்..ட்ரிங்..
“ஹலோ”
“யாருங்க?”
“நான் ப்ப்ரபு பேசறேன்ம்மா..சுபத்ரா இருக்காங்களா?”
“நீங்க?”
“நான் கூடப்படிக்கிற க்ளாஸ்மேட்..’
“கொஞ்சம் பொறுப்பா..”

..
“ஹலோ”
“ஹலோ சுபி”
“யெஸ்…”
“நான் தான் பிரபு பேசறேன்”
“பிரபு? எந்த பிரபு?”
“என்ன சுபி என்னத்தெரியலையா?”
“ம்ம்ம்…”
“டென்த் டிவிஎஸ்ல உன்னோட க்ளாஸ்மேட்..”
“ஓ…அந்தப் பிரபுவா..எ..எப்படி இருக்கீங்க”
“நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்க?”
“ஓ நல்லயிருக்கேன்..இப்ப எந்த காலேஜ்..”
“அய்யனார் இன்ஜினியரிங் காலேஜ்..”

..
“இன்னும் அந்த ஸ்கூட்டி தான் வெச்சிருக்கியா?”
“ஸ்கூட்டியா?”
“ம்ம் அந்த பிங்க் கலர்”
“பிங்க் கலர் ஸ்கூட்டியா?”
“இப்ப இல்லியா?”
“இப்பவா? எப்பவுமே என்கிட்ட ஸ்கூட்டி கெடையாதே..”
டங் என்று தலையில் கொட்டு விழுகிறது. ஓவர் ஆக்ட் ஒடம்புக்காகாது..
“ஓகே ஓகே ஒருநாள் நீ ஓட்டிட்டு வந்த..அதான்..”
“ஓ ஓட்டிட்டுவந்தனா? என்னம்மா..இதோ வரேன்ம்மா..சரி பிரபு அப்புறம் பேசலாம்..”
“நான் உங்க வீட்டுக்குப் பக்கதில தான் இருக்கேன்.. எஸ் எஸ் ஐல தான் நானும் படிக்கிறேன்..உன் சிப்ட் தான்..மீட் பண்ணா பேசலாம்..ஓகே”
“ஓகே ஓகே..பை”

எனக்கு அப்பாடா என்றிருந்தது. இன்னோரு போன் லைன்னை காதில் வைத்துக்கொண்டிருந்த பிரபு (த ரியல் பிரபு) எழுந்து சிரிச்சுக்கிட்டே வந்தான். “இதெல்லாம் தேவையாடா..ஒழுங்கா பில்டப் கொடுக்காம… இப்படி எக்கச்செக்கமா மாட்டிக்கிட்டியே..” “சோ வாட்..தப்பிச்சிட்டோம்ல..அதுசரி..உனக்காத்தானடா பேசினேன்..” “ஆமா தேங்ஸ்டா..இனி நான் மேனேஜ் பண்ணிக்குவேன்..நமக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் அவ்வளவுதான்..” “தாங்க்ஸ் எல்லாம் எதுக்குடா..எனக்கு பொழுதுபோகலைன்னா இருக்கவே இருக்கா என்னோட புது ·போன் பிரண்ட்” “அடப்பாவி..அப்படியெல்லாம் செஞ்சிடாதடா..அவ உனக்கு தங்கச்சிடா”..

***

ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்
“ஹலோ”
“மோகன் இருக்கானா”
“டேய் டப்பாத்தலையா..சொல்லுடா மோகன் தான் பேசறேன்”
“டேய் நாளைக்கு காலைல எஸ் எஸ் ஐ பில்டிங் வரையாடா?”
“ஒய்?”
“அவளுக்கு க்ரீட்டிங்ஸ் கொடுக்கனும்டா”
“டேய் க்ரீட்டிங்ஸ் தானடா கொடுக்கப்போற? அதுக்கு நான் எதுக்குடா?”
“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் மாமா.. வாடா”
“சரி வந்து தொலையறேன். ஆனா காலைல எட்டு மணிக்கு ஒரு கால் பண்ணி ஞாபகப்படுத்திடு”
“சரிடா”

ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்
“ஹலோ..மோகன்”
“ஆமாடா டிங்கிரித்தலையா..கெளம்பிட்டேன்..”
“வரதுன்னா வாடா…இல்லீன்னா வேணாம்..நம்ம டாக்டரு வந்திருக்கான்..என்கூடதான் இருக்கான்..அவனக்கூட்டிட்டுப்போறேன்”
“என்னது மாத்ருபூதமா..அவன் எங்கடா வந்தான்..ஹாஸ்டல்ல அவுத்துவிட்டுட்டாங்களா?”
“டேய் இன்னிக்கு செகன்ட் சாட்டர்டே..”
“ஓ ஆமால்ல..கொடு அவன்கிட்ட..”
“டேய் மாமா”
“டேய் டாக்டர்மாமா..இங்க என்னடா பண்ற?”
“சும்மா மதுரைக்கு வந்தேன்..அப்படியே நம்ம டிங்கிரித்தலையனையும் பாத்துட்டுப்போகலாம்னு வந்தேன்..எங்கேயோ கூப்பிடறான்..”
“போயிட்டுவா..ஆனா உன் கக்கூஸ் வாய கப்புசிப்புன்னு மூடிட்டுவரனும் புரியுதா..”
“டேய் டுபுக்குமாமா..எல்லாம் எங்களுக்குத் தெரியும்..உன் வேலையப்பாரு..”
“சரிடா கோச்சுக்காத..சாயங்கலாமா வீட்டுக்கு வாடா..”
….
“டேய்”
“பிரபுவா?”
“ம்ம்..சரிடா..அப்படீன்னா நீ வரவேணாம்..நாளைக்கு நாங்க உங்க வீட்டுக்கு வாரோம்..”
“மாத்ருபூதத்தையும் கூட்டிட்டு வாடா”

***
அய்யனார் இன்ஜினியரிங் காலெஜ். இன்ஜினியரிங் மாத்தமாட்டிக்ஸ்.

கரடி தாடியைத் தடவிக்கொண்டே போர்ட்ல ஏதோ எழுதிப்போட்டுக்கொண்டிருந்தது. ஐ லவ் இன்ஜினியரிங் மேத்தமேட்டிக்ஸ். ஆனா இந்த ஆள் நடத்துறத கவனிச்சா சின்னப்பிள்ளைல படிச்ச வாய்ப்பாடு கூட மறந்துபோயிடும். பெட்டர் கவனிக்காம இருக்கிறதுதான்.

“டேய் டாக்டர்”
“என்னடா..”
“சனிக்கிழமை டிங்கிரித்தலையன் கூட்டிட்டுப்போனானா?”
“ம்ம்..காமிச்சான்..”
“காமிச்சானா? கார்ட் கொடுக்கலையா?”
“கொடுத்தான்..”
“ஆள் எப்படி..”
“சும்மா அம்சமா இருக்காடா..”
“ம்ம்..”
“வாயத்தொடடா..”
“பேசினாளா?”
“ம்ம்..அப்புறம்? பேசாமலா”
“உங்கூட?”
“ச்சீ ச்சீ இல்லடா..நான் ஜென்டில்மேன்..”
“அதான்..நல்லவேல நீ பேசல..இல்லன்னா உன் சங்காத்தமே வேணான்னு பிரபுகிட்ட சொல்லிருப்பா”

ய்யேய்..அஸ்வின்..அங்க என்ன பேச்சு..கெட் அப்..(அஸ்வின் மிக மிக மிக மிக மெதுவாக எழுந்திருக்கிறான்..)
வெளில போய்டு..கெட் அவுட் ஆ·ப் மை க்ளாஸ் (கரடி சொல்லிவிட்டு மீண்டும் போர்டுக்குத் திரும்பியது..)
அஸ்வின் ஏதும் நடக்காதது போல உட்கார்ந்து கொண்டான்..

***

அதே இடம். மற்றொரு நாள். வேறொரு க்ளாஸ்.

எனக்கு ஓஆர் புரிவதேயில்லை. பட் ராகவன் சார் எப்படியும் புரியவைத்துவிடுவார். நானும் நல்லாத்தான் கவனிக்கறேன்..ஒன்னுமே புரியவில்லை..”அன்பு..டேய் அன்பு..” “ம்ம்ம்ச்ச்சு..பேசாம இருடா..இப்போத்தான் ஆபீஸ்ல இருந்து வாரேன்..பிள்ளைய கூப்பிடப்போனும்” “வாட்..த..” “அவளும் ஆபீஸ்லருந்து வந்திடுவா..” “டேய்..அன்பு என்னடா ஆச்சு..பிள்ளைய கூப்பிடப்போறையா? உனக்கெப்படா கல்யாணம் ஆச்சு..” “அது ஆச்சு..இப்போ ஒரு பையன்..ஒரு பொண்ணு..பையன் பேரு ஆனந்த்..பொண்ணு பேரு..” “பொண்ணு பேரு?” “அது அவளோட ச்சாய்ஸ்..அவக்கிட்டயே கேட்டுக்கோ..” “என்னது? யாருடா அவ?” “இதே ரோவில் கடைசில ஜன்னலுக்குப் பக்கத்தில உட்கார்ந்திட்டு ஜன்னலுக்கு வெளியே இருக்கிற அந்த மரத்தில எத்தன இலை இருக்குன்னு என்னிட்டிருக்கா பாரு அவளே தான்..” “யாரு? வனிதாவா?” “ம்ம்ம்” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்புவா?

நான் மெதுவாக கீழே குணிந்து என் தலையை மட்டும் மிக மெதுவாக அந்தப்பக்கம் திருப்பினேன்..ஷிட்..சுபா என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள்..ஷிட்..ஷிட்..ஷீ க்காட் மீ..

சுபா வனிதாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவள்.

***

பாலாஜிநகர். திபகு.

“என்னடா சொல்ற டப்பாத்தலையா?”
“ஆமாடா. சொல்லிட்டேன்”
“என்ன சொன்னா?”
“ஒன்னும் சொல்லல”
“ஒன்னும் சொல்லலைன்னா?”
“ஒன்னும் சொல்லலடா”
“டென்ஷன் ஏத்தாதடா”
“டைம் கேட்டிருக்கா”
“எதுக்கு? பரிட்சைக்கா படிக்கப்போறா?”
“தெரியல..”
“நீ ஏண்டா டெஷனா இருக்க..கூல்”
பிரபு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அம்மா டீ கொடுத்தார்கள். ஐந்து நிமிடம் மிக மிக அமைதியாகக் கழிந்தது.
“சரிடா மோகன் நான் கிளம்பறேன்”
“ஏன்டா சோகமா இருக்க? லூஸ்ல விடு”
“எப்படிடா லூஸ்ல விடுறது..மூணு வருஷம் டா..”
“சரிடா விடு..நல்ல பதில் தான் சொல்லுவா”

“சரி உனக்கு யாரு இவ்ளோ தைரியம் கொடுத்தது? நீயே உன்ன ஏத்திவிட்டுக்கிட்டியா?”
“இல்ல..இது தான் சரின்னு பட்டது செஞ்சிட்டேன்”
“அப்பா அம்மா?”
“டேய்..நீ வேற..அவ என்னமோ ஓகே சொன்னமாதிரி..”
“ஓக்கே சொல்லிட்டான்னா…”
“பயமுறுத்தாதடா.”
“செறுப்பால அடிப்பேன்..பயமா இருக்கா?”
“சரி டா நான் கெளம்புறேன்..”

***

மறுநாள் ஒரு தகவலும் இல்லை. மறுநாளும் ஒரு தகவலும் இல்லை. அடுத்த நாள் காலேஜ்.

என்ன ஆச்சுன்னு சும்மா சைகல கேட்டேன். உதட்டைப்பிதுக்கினான்.
அப்படீன்னா நோவா?
அடேய்..வாயக்கழுவுடா..ஒன்னும் சொல்லல..
நீ கால் பண்ணியா?
பிட்ஸ் போயிட்டா?
ராஜஸ்தானுக்கா?
அப்புறம் பிட்ஸ் என்ன உங்க ஊரு புரோட்டா கடைக்குப்பக்கத்திலையா இருக்கு?
சோ?
என்ன சோ..தெரியல..பாப்போம்..

இதற்கிடையில்..அன்புவின் ஒரு தலைக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. அதிகாலை ஏழு மணிக்கு கம்ப்யூட்டர் லேபுவுக்கு வந்துவிடுகிறானாம். படிப்பையும் விட்டுக்கொடுக்காம இருக்கான் பாருன்னு சொன்னேன். அப்புறம் கெழவி சொல்லித்தான் தெரிஞ்சது.. லேபுக்காக வரலையாம் அவன்..காலைல ஏழு மணிக்கு காலேஜுக்குள்ள இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு அவ சாமி கும்பிட வருவாளாம்..அந்த சில நிமிட தரிசனத்துக்காக இவர் சிவகாசிலருந்து காலங்காத்தால எழுந்து குளிச்சு அவங்க அம்மாவையும் எழுப்பி..அவங்க ஏதோ பையன் லேபுக்கு போறான்னு சமைச்சுக்கொடுத்து..பஸ் பிடிச்சு..அப்புறம் ஒரு 15 நிமிடம் நடந்து…

ஒழுங்கா லேபுக்கு வந்து படிச்சிருந்தான்னா இந்நேரம் பில்கேட்சா ஆகிருப்பான்..

***

பாலாஜி நகர். திபகு.

ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..
மோகன்?
யெஸ்..
பிரபு..
என்னடா சொல்லுடா..நாளைக்கு கிரிக்கெட் மாட்சுக்கு வர்றையா?
யு நோ வாட்?
என்னடா?
ஓக்கே சொல்லிட்டா..
வாட்..
ஆமாடா..
பிட்ஸ் போயிருந்தா?
ஆமா..இப்போதான் கால் பண்ணா..
ஐ கெஸ் ஷீ மிஸ்ட் மீ..ஹெல் எ லாட்..
வாவ்..ட்ரீட் எப்போ? உன் கஞ்சப்பிசினாரித்தனத்த எல்லாம் விட்டுட்டு இதுக்காவது ட்ரீட் கொடுடா..அப்பா டாக்டருன்னு தான் பேரு..பையன் மகா கஞ்சன்..
அப்பா மாட்டு டாக்டர் தானடா..
சோ வாட்..உனக்கான மெடிக்கல் பில்லாவது கொறையுதுல?
சரிடா..நான் அப்புறம் பேசறேன்..

எனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. போர்வைக்குள் புகுந்துகொண்டேன்..மீண்டும் தூக்கம் என்னைத் தழுவிக்கொண்டது..

***

அன்று என் சித்தப்பா வீட்டிற்குப்போனேன். அவரிடம் அப்பா கொடுத்த புத்தகத்தைக்கொடுத்துவிட்டு அப்படியே பிரபுவின் வீட்டுக்கும் போகலாம் என்று நினைத்திருந்தேன். அப்பா நீண்ட நாட்களாக ஏதோ புத்தகம் கேட்டுக்கொண்டிருந்தாராம். அந்தப் புத்தகம் வந்துவிட்டது என்று சொல்லி உள்ளே வந்து எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார் சித்தப்பா. தன்னால் அதைத் தூக்கமுடியாது என்றும் சொன்னார். உள்ளே போய் பார்த்தபொழுதுதான் தெரிந்தது அது அந்த அறையில் பாதி அளவுக்கு தடிமனாக இருந்தது. இது என்ன புத்தகம் சித்தப்பா என்றேன் நான். இதுவா..இது தான் டெயில்மீகி எழுதிய காட்டெருமையானம். ஓ..எப்படித் தூக்கிப்படிப்பது? இவ்ளோ பெரிசா இருக்கு..ஆமா…அப்படியே கீழ வெச்சுதான் படிக்கனும்..மேலே ஏறிடக்கூடாது..சுத்தி சுத்தி வந்துதான் படிக்கனும்னு சொல்லிட்டு பலமாகச் சிரித்தார்..அப்புறம் என் நண்பர்களைக் கூட்டி வந்து எடுத்துச்செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த விசித்திரமான புத்தகத்தைப் பற்றி நினைத்தவாரே வெளியே வந்தேன்.

பிரபுவின் வீட்டினருகே வண்டியை நிறுத்தி..கதவைத் லேசாகத் தட்டினேன். கதவு தானாகத் திறந்து கொண்டது. உள்ளே…

பிரபுவைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அவனுடைய அம்மா தலைவிரி கோலமாய் அழுதுகொண்டிருக்கிறார். “என்னங்க வேண்டாங்கா..என்னங்க..வேண்டாங்க..” என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்..

அவனது அப்பா ஒரு மீட்டர் நீளத்துக்கு ஒரு ஊசி வைத்திருக்கிறார்..அண்டா போன்ற ஏதோ ஒரு பானையில் விட்டு அந்த பெரிய ஊசியில் மருந்தை ஏற்றிக்கொள்கிறார்..தூக்கமுடியாமல் தூக்கி கையில் செங்குத்தாகப் பிடித்து லேசாக அமுக்கிப்பார்க்கிறார்..எப்படியும் ஒரு லிட்டர் மருந்தாவது வெளியே வந்திருக்கும்..அதில் சில துளிகள் அழுதுகொண்டிருந்த பிரபுவின் அம்மாமேல் தெரித்தன…அவ்வளவு தான் அவர் மயங்கிச் சரிந்தார்..

பிரபுவின் அப்பா ஊசியைப் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்து பிரபுவை நோக்கி வந்தார்..பிரபுவின் முகத்தில் சலனமில்லை..அவள மறந்திடுவேன்னு சொல்லுடா..நெவர்..டாடி..அப்படீன்னா உனக்கு இந்த ஊசிதான்..என்று சொல்லி ஹா ஹா ஹா என்று சிரிக்கிறார்..

அங்கிள் நிறுத்துங்க உங்க அராஜகத்த..நான் உள்ளே பாய்கிறேன்..அவன் என்ன தப்பு செஞ்சான்..காதலிக்கிறது குத்தமா..மோகன்..இது எல்லாத்துக்கும் நீதான்..காரணமா..வா இங்க..உனக்குத்தான் முதல்ல ஊசி போடணும்..பரவாயில்ல போடுங்க என்கிறேன் நான். சட்டைய கொஞ்சம் எறக்கிவிடுப்பா..லெ·ப்ட் ஆர்மில ஏதும் சமீபத்தில ஊசி போட்டியா?இல்ல அங்கிள்..ஏன்னா இது டைனோசர்களுக்குப்போடற இன்ஜக்சன்..கொஞ்சம் வீக்கம் இருக்கும்..அறுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி தீடீர்னு அவை அழிய ஆரம்பிச்சப்போ நாங்க அவைகள பாதுகாத்து வெக்க இந்த இன்ஜக்சன் தான் போட்டோம்..அப்படியா..என்னது டைனோசருக்குப் போடற இன்ஜக்சனா…

மணி ஏழாச்சுடா….எழுந்திருடா..இந்தா டீ..

***

ஆறு மாதங்கள் கழித்து.

பாலாஜிநகர். திபகு.

She’s a good hearted woman in love with a good timing man
She loves him in spite of his ways she don’t understand

கடுமையான வெயில் வெளியே. ·பேனிலிருந்து வரும் காத்து மேலும் வெப்பத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. என் சிடிமேனில் ஜென்னிங்கஸ். இது மட்டுமே ஒரே ஆறுதல். ஜெ·ப்ரி ஆர்ச்சர் இருந்தால் கிரிக்கெட் இல்லாத கடுமையான மதியப்பொழுதையும் எளிதாகக் கடந்து விடலாம். ·பர்ஸ்ட் அமங் ஈக்குவள்ஸ்.எனக்கு மதியவேளைகளில் தூங்கப்பிடிக்காது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை மதியம். சாப்பிட்டப்பிறகு எல்லோரும்-டீவி முதற்கொண்டு- தூங்கிக்கொண்டிருக்கையில் ப்ளூஸ¤ம் அழகான ஒரு நாவலும் இனிமைதரக்கூடியது. தூங்கினால் மதியப்பொழுது சட்டென ஓடிவிடும். சாயங்காலம் வெறுமையே மிஞ்சும்.

With teardrops & laughter they pass through this world hand in hand
A good hearted woman, lovin’ a good timin’ man

நிழல் தென்படவே திரும்பிப்பார்த்தேன்..பிரபு. இயர்·போனை கழட்டி “வாடா..” என்றேன்.
பயல் நிறைய மாறியிருக்கிறான். முன்பெல்லாம் எப்பொழுதும் ஒரு கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டிருப்பான்..இப்ப என்னடான்னா ஜீன்ஸ் சர்ட்..ஜீன்ஸ் பேண்ட்..ம்ம்ம்ம்..கலக்குற பிரபு..

என்னடா புதுசா ஜீன்ச் சர்ட்?
ம்ம்ம்..அவ ப்ரசண்ட்..
ஒ..ஒ..ஓஓஓஓஓஓஓஓ…
கோயிலுக்குப் போயிருந்தோம்..
அடப்பாவி..நல்லாத்தானடா இருந்த?
பர்த்டே டா..
ஓ..வாவ்..ஏதும் கி·ப்ட் வாங்கிக்கொடுத்தியா?
டேய் நீயெல்லாம் ·ரண்டாடா? எனக்கு பர்த்டே டா..
அடப்பாவி..சரி…ஈவினிங் எங்க போகலாம்?
ம்ம்ம்..
மொறைக்காதடா..சரி போனாப்போவுது..ஹேப்பிபர்த்டே..
ம்ம்..
சட்டையெல்லாம் வாங்கிக்கொடுத்திருக்கா..ம்ம்ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்..

நீ என்னடா வாங்கிக்கொடுத்த..
ம்ம்..ஒன்னும் வாங்கிக்கொடுக்கல..
கஞ்சப்பிசினாரி..ஏதாவது வாங்கிக்கொடுக்கறது தான?
..
சீடிமேனை எடுத்து காதில் வைத்துக்கொண்டான்.

என்னடா..ஜெ·ப்ரி ஆர்ச்சர விட்டா உனக்கு பொழப்பே கெடையாதா?
அயன் ரான்ட் படிக்கிறயா?
ஐயோ ஆளவிடு சாமி..

ஒரே நிமிடத்தில் சீடிமேனைத் திறந்து ஜென்னிங்ஸை தூக்கி எறிந்து விட்டு..என் சீடி ரேக்கில் தேடி..ஷெரில் க்ரோவை எடுத்துப் போட்டான்..கண்களை மூடிப் படுத்தான்.. நான் ஜெ·ப்ரி ஆர்ச்சருக்குத் திரும்பினேன்..

***

அய்யனார் இன்ஜினியரிங் காலேஜ்.

டேய் பாப்பையா..
பாப்பையாவா? யாருடா அது? முன் பெஞ்சிலிருந்து மின்னல் கேட்டான்.
கெழவி மூடிட்டு வேலையப்பாருன்னு சைகை காமிச்சான்..மின்னல் பின்னால் திரும்பிய வேகத்தில் மீண்டும் முன்னால் திரும்பிக்கொண்டான்..
டேய் பாப்பையா..எத்தன் நாளைக்குத் தான்டா வனிதாவ இப்படியே பாத்திட்டிருப்ப..அவ கிட்ட போய் சொல்றதுதான?
ஒன்றும் பேசாமல் அன்பு உட்கார்ந்திருந்தான்.
கெழவி என்னைப்பார்த்தான்..டேய் மாமா நம்ம ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..
ஆமாடா..ஒருத்தன நிம்மதியா இருக்கவிடாதீங்க..
டேய் உனக்கு என்னடா ஆச்சு..நீ எவளுக்காவது நூல் விட்டிட்டிருக்கியா..
உனக்குத்தெரியாதா..ட்ரான்ஸ்மீட்டர் மண்டையன் இங்கிருந்து சிக்னல் விடறத பாத்ததில்லையா?
ப்ரதீப் கொஞ்சம் வாய மூடறையா?
ஆமாடா சிக்னல் விடறாய்ங்களாம்..நூல் விடறாய்ங்களாம்..மூஞ்சிகளப் பாரு..நம்ம டிங்கிரித்தலையன் மாதிரி இருக்கனும்டா..பாரு திருவிழால காணமப்போன செந்தில் மாதிரி இருந்திட்டு பிட்ஸ் பொண்ண பிடிச்சிருக்கான் பாத்தியா..ஒரே லெட்டர்ஸ்தான் போ..இங்கிருந்து அங்க..அங்கிருந்து இங்க..ம்ம்ம்..
டேய் டிங்கிரித்தலையனுக்கு செந்தில்ங்கற பேருகூட நல்லாருக்குடா..அவனும் செந்தில் மாதிரித்தான அண்ணே அண்ணேன்னு சொல்றான்..
டேய் மாண்டி (சைகை செய்கிறான்) (எழுதமுடியாது)..

(இப்பொழுதிலிருந்து டிங்கிரித்தலையனனான நம்ம பிரபு, செந்தில் ஆகிறார்)

***

அண்ணா பூங்கா. திருநகர். தீபாவளி.
க்ரிக்கெட் ஆட்டம்.

நான் கோட்டைச்சுவற்றின் மேல் உட்கார்ந்திருந்தேன். மணி பின் மதியம் 4 இருக்கும். பைப்பில் தண்ணி பிடிக்கச்சென்ற ப்ரசாத் வந்துவிட்டான்.

என்னடா மோகன்? அவுட்டா?
ம்ம்..
ஓ..ஹரிஷ் பவுலிங்கா?

(மேட்ச் பத்தி எழுதி இன்னும் மொக்க போட விரும்பல)

மேட்ச் முடிந்தது. கோட்டைச்சுவற்றின் மேல் உட்கார்ந்து டாப் ஆரம்பமாகியது. மணி ஆறு. கோயிலில் கூட்டம் வரத்தொடங்கியது.

அப்புறம் ஹரிஷ் மாப்ள..பிட்ஸ்ல பொண்ணுங்கல்லாம் எப்படி?
ம்ம்.. ***!@#@#$#$
ஓ அப்படியா..
அப்படியே!@#$#@%$%^5
ம்ம்ம்ம்…அப்படியா?
சாரதி வாய மூடுடா..கொசு உள்ள போய்டப்போவுது..
டேய் மாம்ஸ் உன் ஆளுடா..
ப்ரசாத் எழுந்து ஜீன்ஸ் பேண்ட்டைத் தட்டிவிட்டுக்கொண்டு மெதுவாக கோயிலை நோக்கி நடக்கிறான்..
டேய் ப்ரசாத் பாத்துடா..எம் எல் ஏவுக்கு தெரிஞ்சது கண்டம் தான்டி..
இவளுக எல்லாம் என்னடா..பிட்ஸ் வந்து பாக்கனுமே..
என்ன ஓட்டகம் மாதிரி இருக்குங்களா?
டேய் அய்யனார் காலெஜில படிக்கிற ஆயனார்..உனக்கு என்னடா தெரியும் பிட்ஸப்பத்தி?
பெரிய அமெரிக்காவுல படிக்கிற மாதிரி பிலிம் காட்டுற..ராஜஸ்தான்லதான படிக்கிற..
அது ராஜஸ்தான் இல்லடா..பாலைவனத்தில இருக்கிற நியுயார்க்..
அள்ளிவிடறான்..உங்க பிட்ஸ் பொண்ணு ஒன்னு அய்யனார் காலேஜ் ஆயனார் கைல தெரியுமா?
என்னது பிட்ஸ் பொண்ணா? யாருடா அது?
உங்க ஸ்கூல் தான் மச்சி..டீவிஎஸ்..
டிவிஎஸ்ஸா?
பேரு..
பேரு? பொறு..சுபத்ரா..
சுபத்ராவா? டீவிஎஸ்? எந்த வருஷம் முடிச்சா?
நம்ம செட் தான்டா..
நம்ம செட்டா? சான்ஸே இல்ல..எனக்குத் தெரியாம எப்படி?
ஆமா இவருதான் ராஜஸ்தான் காஸ்நோவா..எல்லா பொண்ணுங்களும் இவரு மடில வந்து விழுதுங்க..நிறுத்துடா..
டேய் டுபுக்கு..மதுரைலருந்து ராஜஸ்தான் போறோம்..மொத்தம் எத்தனை பேரு இருப்போம்…ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம எப்படி இருக்கும்?
ம்ம்ம்..
சரி என்ன மேஜர்..?
தெரியலையே..கேட்டுச்சொல்றேன்..
சரி..நானும் விசாரிக்கிறேன்..

கொசுத்தொல்ல ஜாஸ்தி ஆயிடுச்சு..கிளம்பலாமா? சூப்பு கடைக்குப்போலாம்..

***

பாலஜி நகர்.

When you’re down and troubled
and you need a helping hand..

கரோல் கிங்.நாளைக்கு எல் ஐ சி ப்ராக்ட்டிக்கல்ஸ். எனக்கு பிடிக்காத ஒரே லேப். எல் ஐ சி. ஐ ஹேட் ப்ரட் போர்ட்ஸ். தே ஆர் ஸ்டுபிட்.அரைமணிநேரம் கனெக்ஷன் கொடுத்துவிட்டு..கடைசில செக் பண்ணினா..ஒன்னும் நடக்காது..நோ பவர் அவுட்..ஏன்னா ப்ரட்போர்ட் வேலைசெய்யாததா இருக்கும்..

close your eyes and think of me
and soon I will be there
to brighten up even your darkest night.

டேய் எழுந்திருடா..தூங்கவா வந்த? பிரபுவுக்கு ஒரு உதை விட்டேன்..

Winter, spring, summer or fall,
all you got to do is call
and I’ll be there yeah yeah yeah
you’ve got a friend.

என்னடா ஆச்சு? ஏதும் பிரச்சனையா? நானும் வந்ததிலருந்து பார்த்திட்டிருக்கேன்..மூஞ்சியத்தொங்கப்போட்டிட்டு இருக்க?

you’ve got a friend, you’ve got a friend yeah,
ain’t it good to know you’ve got a friend
ain’t it good to know you’ve got a friend
Oh yeah yeah, you’ve got a friend.

அம்மா நேத்திக்கு அவ லெட்டரப்பாத்திட்டாங்க.
வாட்? அவங்ககிட்ட ஏன் காட்டின?
டேய்..பேண்ட் பாக்கெட்டில இருந்து எடுத்திட்டாங்க..
எனிவே என்னைக்கினாலும் பாக்கத்தான வேணும்..
..
..
என்ன சொன்னாங்க?
ஜஸ்ட் ப்ரண்டுன்னு சொல்லிருக்கேன்..
நம்பிட்டாங்களா?
ஆமா..இப்போதைக்கு..ஆனா அப்பாகிட்ட சொல்லிடுவாங்களோன்னு பயமாருக்கு..
என்னது நீ பயப்படறியா? திருட்டுமுழி முழிச்சுக்கிட்டு எல்லா திருட்டுத்தனமும் தெளிவா பண்ணுவியே..சும்மாவா உனக்கு செந்தில்னு பேரு வெச்சாய்ங்க..
டேய் நீயுமா..நானே சோகத்தில இருக்கேன்..
..

சரி வா கீழ போய் பசங்க இருந்தா ஒரு கேமப்போட்டுட்டு வரலாம்..ச்சியர் அப் மேன்..

You can’t talk to a man
When he don’t want to understand
No, no, no, no, no, no

***

அய்யனார் காலேஜ்.

டேய் மாமா..
என்னடா?
உன் கிட்ட வெர்ச்சுவல் ரியாலிடி பத்தின பேப்பர் இருக்குல?
ஆமா..
அத எந்த காலேஜ்ஜுக்கு போட்டாலும் செலக்ட் ஆகுதா?
100%..
சரி அப்படீன்னா கொடு..நான் பிட்ஸ¤க்குப் போடப்போறேன்..
வாட்? ரியலி?
யெஸ்..
நீயும் யாரும்?
ஆனந்த்..
ஓக்கே..வித் ப்ளஷர்..நாளைக்கு ப்ரிண்ட் அவுட் கொடுக்கறேன்..
சா·ப்ட் காப்பி கொடு..அப்படியே பிபிடியும் கொடு..
சரி..
செலெக்ட் ஆயிடும்லடா?
ஸ்யூர்..உன் ஆள நீ பாக்கலாம்..டோன்ட் ஒரி..

***

பாலாஜி நகர். திபகு.

ட்ரிங்..ட்ரிங்..
ஹலோ..யாரு?
டேய் அன்பு பேசறேன்டா
என்னடா பண்ற?
சுபா உன் ·போன் நம்பர் என்கிட்ட கேட்டுவாங்கினா..
வாட்?
யெஸ்..கால் பண்ணாளா?
ஸ்டுபிட் ·போனவைடா..
(அவன் வைப்பதற்குள் நான் வைத்துவிட்டேன்)

I feel the earth move under my feet
I feel the sky tumbling down
I feel my heart start to trembling

(போனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்)
(மணி ஒன்பது)
(எதுக்கு நமக்கு கால் பண்றா?)
..
ஒன்பதரை.
பக்கத்தில் கிடந்த ஹோம் ஜோர்னலை எடுத்துப்புரட்டினேன். வீடே அமைதியாக இருந்தது. ம்யூசிக் சிஸ்டம் தவிர. எல்லோரும் தூங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தனர்.

பத்து.
(கையிலே கார்ட்லெஸ்ஸை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போனேன்)

Doesn’t anybody stay in one place anymore?
It would be so fine to see your face at my door..

பத்தரை. நார்வேஜியன் வுட் படித்துக்கொண்டே..தூங்கியிருக்கிறேன்..

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
அடித்துப்பிடித்து எழுந்தேன்..
ஹலோ..
டேய்..
பாப்பையா?
ஆமாடா டுபுக்கு..கால் பண்ணாளா?
உன் மூஞ்சி..கிழிச்சா..
அப்படீன்னா கால் பண்ணலையா?
என்ன தெலுங்கிலையா சொன்னேன்?
பெறகு எதுக்கு நம்பர் வாங்கினா?
ம்ம்..வெலை ஏறும் போது விக்கிறதுக்கா இருக்கும்..
ஹாஹாஹா..
?!

***

அய்யனார் இன்ஜினியரிங் காலேஜ்.
காண்டீன்.
மிளகாய் பஜ்ஜி. முட்டை போண்டா. சூடான டீ சகிதம் டாப் ஆரம்பமாகியது.

ஆனந்த்..அவளப்பாத்தியா இல்லியா?
யாரடா?
டேய் நீங்க பிட்ஸ் பிலானிக்கு போனீங்களா இல்லியா?
ஓ…நம்ப டிங்கிரித்தலையனோட ஆள கேக்கறீங்களா?
ம்ம்..அதேதான்…
டேய் அவன் பேர காந்தி செத்தப்பவே செந்தில்னு மாத்தி கெஜட்ல கூட ரெஜிஸ்டர் பண்ணியாச்சு..
ஓகே…நம்ம செந்திலோட ஆள பாத்தியா பாக்கலையா?
பாத்தேன்..
பாத்தியா?
பேசுனியா?
இல்ல முகத்த திருப்பிக்கிட்டு வந்திட்டேன்..
க்ர்ர்..
பேசுனேன்டா..அவங்க ரெண்டு பேரும் சுத்திட்டிருந்ததால நான் பெருசா எதுவும் பேசிக்கல..என்ஜாய் பண்ணட்டும்னு விட்டுட்டேன்..
என்னது நம்ம ஜாயும் வந்திருந்தாளா?
இவெனொருத்தன் ஜாய் ஜாய்ன்னுட்டு..

***

ஏன்டா டுபுக்கு..
(என்னயத்தான் கூப்பிடறான் கெழவி)
என்னடா *!$#%
கோச்சுக்காதடா செல்லம்..
ம்ம்.அது..
சரி நம்ம செந்தில் ஏதேதோ சொல்றான்..
என்ன சொல்றான்..
இவிங்க பிட்ஸ் போயிருந்தப்போ..அமெரிக்கன் பை படம் போட்டாய்ங்களாம்..
இவிங்க சினிமா தியேட்டருக்குப் போனாய்ங்களா இல்ல பிட்ஸ் போனாய்ங்களா?
டேய் அது என்ன அய்யனார் காலேஜ்னு நெனச்சியா? அங்க வாரா வாரம் படம் போடுவாய்ங்களாம்..எல்லோரும் ஒன்னா உக்காந்து பாப்பாங்களாம்..
ம்ம் அதுக்கு?
அமெரிக்கன் பை பாத்திருக்கியாடா?
ஓ எஸ்..
அதுல சீன் வருமாமே?
ஓ..ஆமா…
படம் பாக்கும் போது..அந்தப் பொண்ணும் கூட உட்கார்ந்திருச்சாம்….

***

அய்யனார் காலேஜ். அஜைல் கைஸ் ஹாஸ்டல். லெ·ப்ட் விங். 14வது மாடி.
கொஞ்ச நாளைக்கு முன்ன..

செந்தில்: நான் தான் ஏற்கனவே அந்தப்படம் பாத்திருக்கேனே..
கெழவி: அமெரிக்கன் பை? எத்தனாவது பார்ட் மேன்?
அல்லக்கை கும்பல்: டேய் கெழவி..அதுவா முக்கியம்..மூடிட்டு கதயக் கேளுடா..
செந்தில்:எங்க உட்டேன்..ம்ம்ம்..அதனால அந்த சீன் வர்றதுக்கு முன்னாலயே எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு..பக்கத்தில இவ வேற உட்காந்திருக்காளா?
அ.கு: ஓ..ஓ..ஓ..ஓஓ
செந்தில்: எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல..
அ.கு: என்னது தெரியலையா? டேய்..எத்தன படம் பாத்திருக்க?
செந்தில்: டேய்..நானும் அவளும் லவ்வர்ஸ் டா..ச்சீ…ச்சீ..எனக்கு அப்படியெல்லாம் தோணவேயில்ல..
அ.கு: நம்பிட்டோம் நம்பிட்டோம்..

***

பிட்ஸ் பிலானி. ராஜஸ்தான்.
ஓபன் ஹவுஸ் தியேட்டர்.
இன்னும் கொஞ்ச நாளைக்கு முன்ன..
ஒரு மயக்கும் மாலைப்பொழுது..

அமெரிக்கன் பை திரையில் ஓடிக்கொண்டிருந்தது. சுபாவும் (ஷிட் மேன்..நாட் சுபா..)ஓகே..·ப்ரம் ·பர்ஸ்ட்..சுபத்ராவும் நம்ம செந்திலும் பக்கத்துப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.தமிழ் படம் பார்த்தே வளர்ந்திருந்த நம்ம செந்தில் ஒரு டிஸ்டண்ட் கீப்பப் பண்ணினான். ஆனாலும் அவளுடைய Cologneயின் மனமும் கேஷத்தின் மனமும் அவனை மொத்தமாகத் தாக்கின.

சுபத்ரா..
ம்ம்..
சுபத்ரா..
ம்ம்..
நான் நாளைக்கு கிளம்பிடுவேன்..
ம்ம்..ஆமா..
..
..
அப்பா அம்மா கிட்ட பேசிட்டியா..
இன்னும் இல்ல..
எப்போ பேசப்போற?

(ஒரு மின்னல் அவனது தலையை மட்டும் தாக்குகிறது..அவனுக்கு சட்டென்று ஞாபகம் வருகிறது..படத்தில் இன்னும் சிறிது நேரத்தில்..ஐயகோ ஒரு தமிழ் பெண் அதுவும் கல்யாணம் ஆகாத தமிழ்ப்பெண் இதப்பாக்கலாமா..ஐயோ..அவன் மனம் பதறுகிறது..துடிக்கிறது..)

சுபத்ரா..ம்ம்..அசைன்மெண்ட் முடிக்கனும்னு சொன்னேல..
பரவாயில்ல..அப்புறம் பாத்துக்கலாம்..
கெளம்பு..கெளம்பு…கெளம்புப்பா..
(நேரம் ஓடுகிறது)
பரவாயில்ல..
கெளம்புன்னு சொல்றேன்ல..
பரவாயில்..
இப்போ கெளம்புறியா இல்லியா?
(மயான அமைதி..தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்)
செந்திலின் திருட்டு முழி ரத்தச் சிவப்பாக மாறுகிறது..
பாட்ஷாவப்பாத்த பாட்ஷாவின் ஸ்டெப் தம்பி போல சுபத்ரா மிரண்டு போகிறாள்..

***

பேக் டு அய்யனார்..லெ·ப்ட் விங்..

அ.கு: அப்புறம் என்னடா ஆச்சு..?
செந்தில்: என்ன பண்ணுவா..பயந்து போயிட்டா..பேசாம எழுந்து போயிட்டா..
அ.கு: ச்சு..ச்சு..
செந்தில்: அப்புறம் சமாதானப்படுத்த வேண்டியதாப்போச்சு..

***

பேக் டு..

சோ?
என்னடா சோ? அவன் சொன்னது நம்புறமாதிரியா இருக்கு?
நம்பாத கெழவி. உன்ன யாரு நம்பச்சொன்னா?
அவன் ஏதோ பொய் சொல்றமாதிரி இருக்குடா..
மாஸ்டர் ஆம்லேட்..
டேய் அதில்லடா..படம் பாத்தாங்களாம்..சீன் வந்துச்சாம்..எழுந்து போகச்சொன்னாராம்..
ம்ம்..
இவனும் தானடா எழுந்து போயிருக்கனும்? அப்புறம் என்ன சொல்லி சமாதானப்படுத்துவான்..அசிங்கமான சீன் வந்துச்சு..நீ பாக்கக்கூடாது..ஆனா நான் பாக்கலாம்னா?
யு ஹேவ் எ பாயிண்ட்..

***

டிசம்பர் குளிர். திருநகர். ரெண்டாம் ஷோ படம் பாத்திட்டு பைக்ல வரும்போது திபகு பைபாஸ்ல வண்டிய நிறுத்திட்டு சுக்கு டீ சொன்னோம்.

ஹரிஷ்..நான் சொன்னத விசாரிச்சியா?
எதுடா மாப்ள?
சுபத்ரான்னு ஒரு பொண்ணு..பிட்ஸ்ல படிக்குதுன்னு..
ஓ..அதுவா..அப்படியெல்லாம் யாரும் கெடையாதுடா..
விசாரிச்சியா? இல்லியா?
விசாரிச்சேன் மாப்ள..ஆனா காலேஜ்ல வேற பேரு கொடுத்திருக்கலாம்..தெரியல..
ம்ம்..
ஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் மதுரையில இருந்து போகல..

சுக்கு காப்பியின் மணம் நாசியைத் துளைத்தது.

***

நான் காலேஜுக்கு லேட்.

டேய்..மண்டையா..
என்னடா?
மேட்டர் தெரியுமா?
என்ன?
டிங்கிரித்தலையன் GMATல எவ்வளவு மார்க்குன்னு?
எவ்வளவுடா செந்தில்?
790..
வாவ்..வொண்டர்·புல்..எப்படிடா?
கங்கிராஜுலேசன்ஸ்டா மாப்ள..
ட்ரீட் எப்போ?
சிரிக்காதடா..இதுக்காவது ட்ரீட் வைடா..

***

பாலாஜிநகர். இரவு மணி பத்து. பால் ஆறிக்கொண்டிருந்தது.
எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய காஸநோவா 99 படித்துக்கொண்டிருந்தேன். சீடிமேனில் மைல்ஸ் டேவிஸ்.

டிரிங்..டிரிங்..
ஹலோ..
ஹலோ..அன்பா?
ம்ம்..
என்னடா பண்ற?
சும்மா உட்கார்ந்திருந்தேன்..செமஸ்டர் லீவு முடிஞ்சிருச்சு..திங்கட்கிழமை மறுபடியும் காலேஜ்..கடைசி செமஸ்டர்..
ம்ம்..ஆமா..என்ன நியூஸா வாசிக்கிற? எனக்குத் தெரியாதா?
ம்ம்ம்..(பெருமூச்சு)
என்னடா?
ஒன்னுமில்லடா..
ம்ம்..சரி.
காலேஜ் வரவே விருப்பமில்லடா..
ஏண்டா? இப்போ என்ன ஆச்சுன்னு சொல்லப்போறியா இல்லயா?
கடைசியா..அவளுக்கு கால் பண்ணிட்டேன்..
வாட்? என்னடா சொல்ற? எப்போ?
நேத்து..நியூ இயர்க்கு விஷ் பண்றமாதிரி கால் பண்ணலாம்னு ரொம்ப நாளா ப்ளான் பண்ணியிருந்தேன்..
சொல்லவேயில்ல..
பிறகு எதுக்கு உன் கிட்ட ·போன் நம்பர் வாங்கித்தரச்சொன்னேன்..
ஐ டின்ட் டேக் யூ சீரியஸ்..
ம்ம்..அதான் பிரச்சனை..
என்ன சொன்னா?

என்னடா சொன்னா?

***

சிவகாசி. நேத்து..

அன்புவின் கைகள் நடுங்குகின்றன. கஷ்டப்பட்டு நம்பர்களை டயல் செய்கிறான்.இதயம் அதிவேகமாகத் துடித்தது. மன்னித்துவிடுங்கள்..நிலைமையின் தீவிரத்தை பிறகு எப்படித்தான் சொல்லுவது..மூளை மிக வேகமாகத் துடித்தது என்றால் யூ வில் நெவர் கெட் இட்..மூனரை வருஷம்..அவளையே பாத்திட்டு இருந்திட்டு..பசங்க ஓட்றதயெல்லாம் தாங்கிட்டு..கொஞ்சம் கொஞ்சமா தைரியம் வரவழைத்து அவளுடைய நம்பரைத் தேடிக்கண்டுபிடித்து..மீண்டும் தைரியத்தை திரட்டி..அவளுடைய வீட்டுக்கு போன் செய்வது என்றால் சும்மாவா? வீட்டில் வேறு யாரவது எடுத்தால் சிக்கல்..மீண்டும் கால் செய்ய வேண்டும்..சந்தேகம் வரும்..

உள்ளங்கை வேர்வையில் நனைந்தது. அவன் கையில் பிடித்திருந்த ரிசீவர் வழுக்கிக் கீழே விழுந்துவிடக்கூடும் என அவன் பயந்தான். ஒரு ரிங் அடிப்பது ஒரு யுகம் போல இருந்தது.

ரிங்..ரிங்..ரிங்..
க்ளிக்..
(இதயம் வெளியே வந்துவிடும் போல இருக்கிறது)
ஹலோ..
(இவன் மௌனமாக இருக்கிறான்)
ஹலோ..யாரு..
(மூச்சுகூட விடவில்லை)
அன்புவா?
(விக்கித்துப்போகிறான்)
ப்ளீஸ் ·போன வெச்சுடுங்க..dont call me ever again. ever.
க்ளிக்.
பீப்..பீப்..பீப்..பீப்…பீப்.

ரிசீவர் நழுவி கீழே விழுந்தது. பீப்..பீப்…பீப்..

***

இன்னைக்கு.

அவளுக்கு எப்படித் தெரிஞ்சது நீதான் கால் பண்ணேன்னு?
அமாடா..காலேஜ் பூராம் என்னையும் அவளையும் சேத்து வெச்சு ஓட்டுங்க..அப்புறம் அவளுக்குத் தெரியாதா?
ம்ம்..இருந்தாலும் எப்படிக்கண்டுபிடிச்சா?
ம்ம்ச்சு..
சரி சரி..வருத்தப்படாதடா..
(பதிலில்லை)
டேய் அன்பு..
(மௌனம்)
டேய்..
இருந்தா டிங்கிரித்தலையன் மாதிரி இருக்கனும்டா..(மூக்கு உறிஞ்சும் சத்தம்)
டேய்..அழறியா?
நோ.நெவர்.
டேய்..
க்ளிக்…

பீப்…பீப்…பீப்

என்னுடைய சீடிமேனில் மைல்ஸ் டேவிஸின் சோ வாட் ஓடிக்கொண்டிருந்தது..காஸ்நோவாவை மூடிவைத்தேன்.

***

காலேஜுக்கு லேட்.

கெழவி: மாமா நியூஸ் தெரியுமா?
என்னடா?
டிங்கிரித்தலையன் மாட்டிக்கிட்டாண்டா..
என்ன?
அவன் இல்லாத நேரத்தில பொட்டியத் தொறந்திட்டாய்ங்க..
தொறந்து?
எல்லா லெட்டர்ஸையும் எடுத்திட்டாய்ங்க..
வாட்?
ம்ம்..அவ எழுதினதாச் சொல்ற லெட்டர்ஸ் எல்லாத்தையும்..
வாட்? அவ எழுதினதாச் சொல்றதா? புரியல..
ஆமாடா..எல்லா லெட்டர்ஸ¤ம் மதுரைல தான் போஸ்ட் செஞ்சிருக்காங்க..பிட்ஸ்லருந்து ஒரு லெட்டர் கூட இல்ல..
வாட்?
ஆமா..கேட்டா அவ மதுரைக்கு வந்த போது போட்ட லெட்டர்ஸ்னு சொல்றான்..தேதி பாத்தா எல்லாமே செமஸ்டர் டைம்ல இருக்கு..பிட்ஸ்லருந்து வாரா வாரமா வருவாங்க?
சோ?
என்ன சோ? வர்றான்.. வர்றான்..அந்துட்டாருப்பா…

அ.கு1: கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள்
அ.கு2: பீதியக்கெளப்பிப் போனவன்
அ.கு1: பத்துப்பேர்கள் மத்தியில்
அ.கு2: படுகேவலமா உள்ளவன்
அ.கு1:அழுகுச்சட்டை போட்டாலும்
அ.கு2:அழுக்காய்த் தெரியும் ஆணழகன்
அ.கு1: பெண்ணின் பின்னால் சுற்றிசுற்றி
அ.கு2: பெண்ணைத் தலைதெரிக்க ஓடவைக்கும் பேரழகன் எவனோ
அ.கு1 & அ.கு2: அவனே டிங்கிரித்தலையன்..டிங்கிரித்தலையன்..

காதல் மன்னன் ஒன்றுமே பேசவில்லை. இடத்தில் சென்று அமர்ந்துகொண்டான்.

***

என்னடா சொல்ற?
ம்ம்..சத்தியமா மாப்ள.
நீ செண்டருக்குப் போனியா?
ஆமா சத்தியமா நான் செண்டருக்குப்போனேன்..சென்னையில எங்க வீட்டுக்குப்பக்கத்தில தான் இருக்கு..
நான் GMAT எழுதினவங்க லிஸ்ட் பாத்தேன் மாப்ள..இவன் பேரு இல்ல..
வை ஸ¤ட் ஹீ லை?
ஐ டோன்ட் நோ..ஆஸ்க் யுவர் ·ப்ரண்ட்..

***

பாலாஜிநகர். என் வீடு.

என்னடா வேணும் இவிங்களுக்கு?
..
நான் லவ் பண்ணா என்ன? லவ் பண்ணாட்டி போனா இவிங்களுக்கு என்ன?

GMAT எழுதினா என்ன? எழுதாட்டி என்ன?

இவங்க அப்பா எனக்கு ·பீஸ்கட்டப்போறாரா?

சொல்லுடா? நான் லவ் பண்ணா பண்ணலைன்றாய்ங்க..GMAT எழுதினா எழுதலைன்றாய்ங்க..
..
(சட்டைப் பையிலிருந்து ஒரு கம்ப்யூட்டரைஸ்ட் ஸ்லிப் ஒன்றை எடுத்து தூக்கிப்போட்டான்)
பாரு..GMAT மார்க்ஷீட்..மார்க் போட்டிருக்கா..செண்டர் பேரு போட்டிருக்கா..
ம்ம்..
சொல்லு உன் ·ப்ரண்ட்ஸ் கிட்டப்போய் சொல்லு..டூர் போறீங்கல்ல..அங்க சொல்லு..
உக்காருடா மாப்ள..
வேண்டாம்..நான் போறேன்..
உக்காருடா..அம்மா..டீ..
..
சோ நீ டூருக்கு வரலை?
எப்படிடா வரச்சொல்ற? நான் செய்றதெல்லாம் பொய்..நான் ஒரு சைக்கோன்னு சொல்ற இவிங்ககூடயா? நெவர்..நான் போறேன்…

***

ஸ்ரீகாந்த் உனக்கென்னடா கோபம் பிரபு மேல?
எனக்கென்ன கோபம்?
ஏன் அவன் GMAT எழுதலன்னு சொல்ற?
நான் சொல்லலடா..ரெக்கார்ட் சொல்லுது..ஐ சா த ரெக்கார்ட் மைசெல்·ப்..
அவன் அவனோட மார்க்ஷீட் காமிச்சான்..நீ சொல்ற செண்டர் தான் அது..எதையும் ஒழுங்காப் பாக்காம செய்யாம..சொல்லாதடா..
வெயிட்..
(உள்ளே சென்று எதோ ஒரு ·பைலைத் தூக்கிக்கொண்டு வருகிறான்.)
இதோ இது என்னோட மார்க்ஷீட்..நானும் அதே செண்டரில அவன் எழுதின அதே நாள் தான் எழுதினேன்..இது என்னோட மார்க் ஷீட்..இப்படியா இருந்தது..அவன் காமிச்சது..
நோ..டெ·பனிட்லி நாட்..
பின்ன?

***

டேய் மாத்ருபூதம்..உண்மையச்சொல்லு..
என்னடா?
அன்னிக்கு டிங்கிரித்தலையன் கூட மதுரைல எஸ் எஸ் ஐக்கு போனியா?
என்னைக்கு?
டேய்..
ஆமாட போனேன்..
அவன் கிரிட்டிங்ஸ் கார்ட் கொடுத்தானா?
சொல்லுடா..கொடுத்தானா?
இல்ல..கொடுக்கல..
வாட்? அன்னைக்கு கொடுத்தான்னு சொன்ன?
அப்படியா சொன்னேன்?
அவன் அன்னைக்குப் பேசினானா அவளோட?
இல்ல..
வாட்?
இல்லடா..தூரத்தில நின்னு அவதான்னு காமிச்சான் அவ்ளோதான்..
அவ்ளோதானா?
அவ்ளோதான்..
பின்ன எதுக்கு என்கிட்ட அப்படி சொன்ன?
அவன் தான் மோகன் கேட்டா க்ரீட்டிங்கஸ் கார்டு கொடுத்திட்டேன்னு சொல்லுன்னான்..
வாட்?
ஆனா அப்புறம் உங்கிட்ட உண்மையச் சொல்லனும்னு நினைச்சேன்.. அதுக்கப்புறம் மறந்தே போச்சுடா..

***

ஹலோ..
அன்பு?
மோகனா?
ம்ம்..ஆனந்த் நம்பருக்கு கான்·பரன்ஸ் போடுடா..
ரிங்..ரிங்..ரிங்..
ஹலோ..யாரு..
அன்பு டா..மோகனும் லைன்ல இருக்கான்..
வாட்? மோகனா? மோகன் எப்படிடா இருக்க?
ராஸ்கல்..வந்தேன் அடிச்சு பல்லகில்லஎல்லாம் உடைச்சுப்போடுவேன்..
என்னடா மாப்ள?
மோகன் என்னடா ஆச்சு?
யூ சட் த **** அப் அன்பு..
ஆனந்த்..கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு..
என்னடா.. கேளு..
பிட்ஸ் பிலானில டிங்கிரித்தலையனோட ஆள பாத்தியா பாக்கலையா?
பாத்தேன்னு சொன்னேனேடா..
எனக்கு எல்லாம் தெரியும்..மவனே பொய் சொன்ன கொன்னேபோட்டுடுவேன்..காலேஜுக்கு வரனுமில்ல?
இல்ல..
சொல்லுடா..
என்னைய என்னடா பண்ணச்சொல்ற? அவன் அப்படித்தான் சொல்லச்சொன்னான்..
வாட்?
ம்ம்..ரெண்டு நாள் தான் இருந்தோம்..அவள இவன் பாக்கவே போகல..
..
இன் ·பேக்ட்… பேப்பர் ப்ரசண்டேஷனுக்குக் கூட இவன் ரூமவிட்டு வெளில வரல..
ஷிட்..
நான் மட்டும்தான் ப்ரசண்ட் பண்ணினேன்..

அப்போதான்..அவளப்பாக்கப்போனதா என்கிட்ட சொன்னான்..
..
என்னையும் இன்ட்ரொடியூஸ் பண்ணிவைடான்னு சொன்னேன்..
..
பிஸியா இருக்கா அப்படி இப்படின்னு கடத்திட்டான்..
ஆனா திரும்பி வரும்போது நான் அவளப் பாத்ததா உங்ககிட்டச் சொல்லச்சொன்னான்..
பசங்க ஓட்டுவாங்கடான்னு கெஞ்சினான்..எனக்குப் பாவமாப்போச்சு..

***

ரெண்டு வருஷம் கழிச்சு.
சென்னை. கிண்டி. வண்டிக்காரன் தெரு.

ஹாஹாஹாஹாஹாஹா..
கடைசி வரைக்கும் அது புதிராவே போச்சுடா..இல்ல..
அவனும் அமெரிக்காவில எம்பிஏ படிக்கப்போயிட்டான்..
ஜிமேட் எழுதாம போகமுடியுமா?
முடியாது..வீணா இந்த ஜூகாந்த்தான் சந்தேகப்பட்டுட்டான்..
டேய்..அவன் காலேஜ் படிக்கும்போது எழுதி ·பெயில் டா..அப்புறம் காலேஜ் முடிச்சதுக்கப்புறம் திரும்பவும் எழுதினான்..
ஆமா..790 மார்க் எடுத்தவன் எதுக்கு ஒரு வருஷம் வெயிட் பண்ணனும்?
அதானே..
வரவர..காஸிப்ல கேர்ள்ஸ மிஞ்சிடுவிங்க போல..
இல்ல மச்சி..உண்மையத் தோண்ட வேண்டாமா?
காலேஜ் படிக்கும்போதே தோண்டறதுக்கு என்ன?
நம்ம டுபுக்கு மாமாதான தடை உத்தரவு போட்டான்..இதப்பத்தி பேச்சே எடுக்கக்கூடாதுன்னு..
ஆமாடா டிங்கிரித்தலையனும் சைக்கோ மாதிரி ஆகிட்டான்..
இந்தப்பேச்ச எடுத்தாலே கத்த ஆரம்பிச்சிட்டான்..செத்துப்போகப்போறதாக்கூட சொன்னான்..தெரியும்ல?
ம்ம்ம்..நெனச்சா காமெடியாத்தான் இருக்கு..
ஆனா எதுக்கு இந்த வீண் பந்தா? கேர்ள் ப்ரண்ட் இருக்கு மயிரு இருக்குன்னு..
டேய் கெழவி..உன் வேதாந்தத்த ஆரம்பிச்சிடாத..
பாப்பையா..உன் ஆளுக்கு கல்யாணம்..
டேய் மாண்டி..மூடிட்டு படுடா..

***

ஏழு வருடங்கள் கழித்து.
லாடிபன்ஸ். பாரீஸ்.

குளிர். கடுமையான குளிர். டவுன் ஜாக்கெட்டையும் மீறிக் குளிர் உடலில் பரவியது. நடையைத் துரிதப்படுத்தி நான் தங்கியிருந்த சிட்டாடைன்ஸ் ஓட்டலுக்குள் நுழைந்தேன். கதவை இழுக்க முயன்ற போது, ஒரு இந்திய ஜோடி கதவை உள்ளேயிருந்து திறக்க முயன்று கொண்டிருந்தது..நான் திறந்து வழிவிட்டேன்..அந்தப்பெண் என்னைப் பார்த்து தாங்க்ஸ் என்றது..நான் சிரித்துவைத்தேன்..உள்ளே நுழையப்போகும் போது..பின்னாலிருந்து ஒரு கை என் தோளில் விழுந்தது..

நீ..நீங்க..மோகன்…
ஆம்..ஆமா..அட..நீ டிங்கிரித்..
(ஷிட்..பக்கத்தில் அவன் மனைவி…யாகத்தான் இருக்க வேண்டும்..நிஜப் பேரு என்ன..செந்தில்..?இல்ல..ஷிட்மேன்..)
நான் பிரபு டா..
பிரபு..என்னடா..இங்க..
ஒரு பிஸினெஸ் விசயமா வந்தேன்…இன்னிக்கு நைட் நியுயார்க்கு ·ப்ளைட் எனக்கு..
ஓ..இன்னிக்கு நைட் கிளம்பறையா?
யெஸ்..தி இஸ் மை வை·ப்..சுபத்ரா..
சுபத்ரா..இது மோகன்..
ஓ இவர் தான் மோகனா? உங்களப்பத்தி நிறைய சொல்லிருக்காரு..
க்ளாட் டு மீட் யூ..சுபத்ரா..
(சிரிப்பு பரிமாறிக்கொண்டோம்)
(அவனும் சிரிக்கிறான்)
ஓ..க்ரேட்..நைஸ் டு மீட் யூ கைஸ்..என் கூட லஞ்ச் வாங்களேன்..
இல்லடா..இன்னிக்கு லாஸ்ட் நாள்ங்கறதனால க்ளையண்ட் எங்கள லஞ்சுக்கு கூப்பிட்டிருக்காங்க..நைட் ஏழுமணிக்கு ப்ளைட்ங்கறதனால..அப்படியே கெளம்பிடுவோம்..
ஓ..ஓ..
இன்னொரு டைம் மீட் பண்ணலாம்..
ஓ யெஸ்..ஸ¤யர்…
ஓகே டா..கேப் வெயிட் பண்ணுது..நாங்க கெளம்பறோம்..
பைடா..
பை..
வாரோம்ங்க..
ஓகேங்க..

இருவரும் டாக்ஸியை நோக்கி நடக்கிறார்கள்.

பைடா பிரபு.
பை சுபத்ரா..

பிரபு திரும்பிப் பார்த்துச் சிரித்தான். சுபத்ரா திரும்பிப்பார்க்கவேயில்லை. காதில் விழவில்லை போல.

***

Hindi Movie – Karthik calling Karthik

தமிழ்ல வேட்டைக்காரன் சுறா புறான்னு எதுனாச்சும் எடுத்துட்டுப்போறாங்க விடுங்க, ஹிந்தில கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீன்னு ஒரு படம் வந்திருக்கு பாருங்க. கண்டிப்பா பாருங்க.

பாடம் பாத்த கையோட இந்த பதிவு போடறேன். கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீங்கற டைட்டில் பார்த்த உடனே என்னைய மாதிரி கொஞ்சம் அறிவாளியா இருந்தீங்கன்னா சட்டுன்னு கண்டுபிடிச்சிருவீங்க என்ன கதைன்னு. அதேதான் கதை. ஆனால் படத்தில இன்னும் நிறைய இருக்கு. காமெடி காதல் சஸ்பென்ஸ் த்ரில் எல்லாம்.

படத்தை பாக்கணுங்கறவங்க இதுக்கு மேலே தயவுசெய்து படிக்காதீங்க.

கார்த்திக் ஒரு கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை செய்யறவர். சின்ன வயசில தன்னோட அண்ணன் இறந்ததுக்கு காரணம் தான் தான்னு நினைச்சுக்கறார். அதுக்கப்புறம் மனசுக்குள்ளேயே சுயவெறுப்பு வளர்கிறது. யாரோடும் சரிவர பேசுவதில்லை. சைக்கியாட்ரிஸ்ட் இடம் செல்கிறார். சைக்கியாட்ரிஸ்ட் இது உனது தவறு இல்லை என்று எடுத்துச்சொல்லியும் மீண்டும் அதே போல சுயவெறுப்பில் ஆழ்கிறார். சுயவெறுப்பு அவறுக்கு தன்னம்பிக்கையை மழுங்கச்செய்கிறது. ஐஐஎம்மில் படித்திருந்தாலும் வேலையில் அவரை எல்லோரும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். எம்டி இவரை தூசு போல நடத்துகிறார்.

நீண்ட நாட்களாக நான்கு வருடங்களாக உடன் வேலைசெய்யும் சொனாலியை ஒரு தலையாகக் காதலிக்கிறார். நிதமும் ஈமெயில் எழுதி சேமித்து வைத்துக்கொள்கிறார். சொனாலிக்கு அனுப்பவதில்லை. நீண்ட நாட்களாக உடன் வேலை செய்தும் சொனாலிக்கு கார்த்திக் யார் என்றே தெரியாது.

ஒரு நாள் எம்டி போனில் கார்த்திக்கைப் பிடி பிடி என்று பிடிக்க போனை தூக்கிப்போட்டு உடைத்து  விடுகிறார்.பிறகு மறுநாளே வேறு ஒரு புதிய போன் வாங்கிக்கொள்கிறார். அப்படியே கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு எம்டியிடம் கார்த்திக் பேசப்போக அது பெரிய பிரச்சனையாக முடிகிறது. வேலையை இழக்கிறார். ஆழ்ந்த சோகத்தில் மூழ்குகிறார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தூக்கமாத்திரையை விழுங்கப்போகும் போது டெலிபோன் அழைப்பு வருகிறது.

பேசுவது கார்த்திக்கேதான்.முதலில் கார்த்திக் பயந்துபோகிறார். டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் விசாரிக்கிறார். கார்த்திக்குக்கு ஏதும் கால்கள் வரவில்லையென்று அவர்கள் சொல்கிறார்கள். ஒருவழியாக போன் கார்த்திக் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிவிடுவதாக உறுதியளித்தப்பின் கார்த்திக் அவரிடம் பேசுகிறார்.

போன் கார்த்திக்கின் அறிவுரையின் பேரில் கார்த்திக் இழந்த தன் வேலையை மீட்கிறார். அதே அலுவலகத்தில் பெரிய பதவியில் அமர்கிறார். சொனாலியிடம் காதலை தைரியமாக சொல்கிறார். அவரும் ஒப்புக்கொள்கிறார். பெரிய புது வீட்டுக்குக் குடிபோகிறார். எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.

போனில் பேசும் கார்த்திக் கார்த்திக்கிடம் தான் தினமும் காலை ஐந்து மணிக்கு கால் செய்வதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார். ஆனால் கார்த்திக் மற்றொரு கார்த்திக்கைப் பற்றி சொனாலியிடம் சொல்லிவிடுகிறார். சொனாலி சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கச்சொல்கிறார்.

சைக்கியாட்ரிஸ்ட் கார்த்திக் சொல்வதை பொறுமையாகக் கேட்டு அப்படி நடக்க சாத்தியமில்லை உங்களுக்காக அதிகாலை ஐந்து மணிக்கு நான் வருகிறேன் கார்த்திக் கால் செய்கிறாரா பார்ப்போன் என்று நக்கலாகச் சொல்கிறார். மறுநாள் காலை ஐந்து மணிக்கு மிகச்சரியாக போன் அடிக்கிறது. முதலில் கார்த்திக்கின் நண்பர்களுல் யாரோ ஒருவர் தான் விளையாடுகிறார் என்று நினைக்கும் சைக்கியாட்ரிஸ்ட் பிறகு தான் உணர்ந்துகொள்கிறார் அது கார்த்திக் தான் என்று. சைக்கியாட்ரிஸ்ட் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

இதையெல்லாம் நம்ப மறுக்கும் சொனாலியும் மறுநாள் காலை ஐந்து மணிக்கு காத்திருக்கிறார். சரியாக ஐந்து மணிக்கு போன் வருகிறது. பயந்து போன சொனாலி போனை எடுக்கவே கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

போன் கார்த்திக்குக்கு கோபம் வந்துவிடுகிறது. அதெப்படி என் போனை நீ எடுக்காமல் போகலாம் என்று சொல்லி எப்படி உன்னை மேலே ஏற்றினேனோ அப்படி உன்னை கீழே இறக்குகிறேன் பார் என்று சொல்கிறார். அதே போல வேலையும் போகிறது. சொனாலியும் பிரிந்து போகிறார்.

கார்த்திக் பேங்கில்ப் சேமித்து வைத்திருந்த பதினைந்து லட்ச ரூபாயும் ஏதோ அனாதை இல்லத்துக்கு போன் கார்த்தி டெலிபேங்கிங்கில் மாற்றிவிடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போகிறார் கார்த்திக்.

பிறகு அவருக்கே தெரியாமல் இன்னொருவரை விட்டு டிக்கெட் எடுக்க சொல்லி கண்ணைக் கட்டிக்கொண்டு எங்கோ தூரதேசத்துக்கு சென்று விடுகிறார்.

சில மாதங்கள் கழித்து கார்த்திக் அந்த தூரதேசத்தில் ஒரு சின்ன கம்பெனியில் வேலையில் சேர்ந்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். போனே வைத்துக்கொள்வதில்லை. மானேஜரின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் போன் வாங்குகிறார்.ஐந்து மணிவரையிலும் முழித்திருக்கிறார். கால் வரவில்லை. கார்த்திக் கால் செய்யவில்லை.

சொனாலிக்கு எல்லாம் சரியாகிவிட்டதாக மெயில் அனுப்பி நாளைக்கு மும்பய் வருகிறேன் என்கிறார். பே செய்துவிட்டுத் தூங்கிவிடுகிறார். சரியாக காலை ஐந்து மணிக்கு மீண்டும் கார்த்திக் கால் செய்கிறார்.

என்னையா ஏமாத்தப்பாக்குற..எப்படி பிடிச்சேன் பார்..நீ சாகத்தான் போகிறாய்..செத்துவிட்டதாக நினைத்துகொள் என்று கொக்கறிக்கிறார்.

மீதியை வெள்ளித்திரையில் காண்க. அல்லது டிவிடி வாங்கி சின்னத்திரையில் காண்க. அல்லது விக்கிப்பீடியாவில் சென்று என்னதாண்டா நடக்குதுங்கறத தெரிஞ்சுக்கோங்க.

ஆனா நான் சொல்லமாட்டேன்.

This songs rocks.

*

ஏம்ப்பா கோடம்பாக்கத்து குசேலங்களா, நீங்க இங்கிலீசுப் படத்தயெல்லாம் பாத்து கிழிச்சு படமெடுத்து ஆஸ்கார் நாயகனா ஆனதெல்லாம் போதும் மொத ஹிந்திப்படத்தப் பாருங்க.

*
Karthik calling Karthik, hindi cinema,Deepika,Movies

வாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.

ஆங்கிலத்தில் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஒரு பதிவும் தொடங்கியிருக்கிறேன். http://booksmoviesastronomy.blogspot.com. Books Movies Astronomy என்று பெயர் வைத்திருக்கிறேனே தவிர கிடைக்கிற எல்லாவற்றையும் பற்றி எழுதலாம் என்று தான் நினைத்திருக்கிறேன்! இரண்டு காரணங்கள். ஒன்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணம். மற்றொன்று தமிழ் தவிர பிற மொழி பேசுவோரையும் மொக்க போடலாம் என்கிற நல்லெண்ணம் தான். அவ்வப்போது அங்கேயும் வாருங்கள். 🙂

*

Spectrum ஊழல் தொடர்பான செய்திகளைக் கவனித்துக்கொண்டுதான் இருப்பீர்கள். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..ச்சே..சாரி..இந்திய வரலாற்றிலே மிகப்பெரிய ஊழல் என்று சொல்கிறார்கள். 60,000 கோடி என்கிறார்கள் ஒரு லட்சம் கோடி என்கிறார்கள்; எவ்வளவு கோடி என்பது ஆள்பவர்களுத்தான் வெளிச்சம். நித்யானந்தா வீடியோவை அத்தனை முறை ஒளிபரப்பு செய்தவர்கள் கிடைத்திருக்கும் இந்த ஆடியோ க்ளிப்பை எத்தனை முறை ஒளிபரப்பினார்கள்? பாரீஸில் எனக்கு இந்தியத் தொலைக்காட்சிகள் குறிப்பாக தமிழக தொலைக்காட்சிகள் கிடைப்பதில்லை.
*

 இங்கே ஐரோப்பாவில் க்ரீஸ் திவாலாகப் போகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது திவாலாகமல் இருக்கவேண்டும் என்றால் தோராயமாக தேவைப்படும் தொகை 120 பில்லியன் டாலர். யூரோப்பியன் யூனியனும் IMF உம் சேர்ந்து அதைக் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. பணம் கொடுப்பதற்குப் பல கண்டிஷன்கள் போட்டிருக்கிறார்கள். அப்புறம் பணம் கொடுப்பவன் சும்மா கொடுப்பானா? அறிவுரைகளும் கூடவே சில கண்டிஷன்களும் வரும் தானே. எனக்குத் தெரிந்த சில கண்டிஷன்கள்: அரசு வேலை பார்ப்பவர்கள் இப்பொழுது இன்னும் பணிரெண்டு வருடங்கள் அதிகமாக வேலை பார்க்கவேண்டும். இப்பொழுது அவர்கள் ரிட்டையர் ஆகும் வயது 55 என்று வைத்துக்கொள்ளுங்கள் இனி அவர்கள் 67 வயதில் தான் ரிட்டையர் ஆக முடியும். பணிரெண்டு வருட கூடுதல் உழைப்பு!

இன்று கார்டியனில் நான் படித்தது மற்றும் என் நண்பர் கொடுத்த தகவல்கள்.கிரீஸ் நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். யார் மீது கோபம்? அரசியல்வாதிகள் மீது. பத்திரிக்கையாளர்கள் மீது. தொழிலதிபர்கள் மீது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரையில் அவர்கள் யார் மீது கோபப்படலாம் என்றால்? நியாயமாக அவர்கள் மீதேதான். முப்பது வருட ஊழலை யார் சரிக்கட்ட முடியும்? சில மாதங்களில் அது எப்படி சரியாகும்? ஊழலுக்கு யார் பொறுப்பேற்பது?

க்ரீஸில் இன்று வரை நடந்துவந்தது ஒரு இரும்புத்திரை அரசாங்கம். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. அந்த இரும்புத்திரையை உருவாக்கி அந்த திரை விலகிவிடாமல் போற்றிப் பாதுகாத்துவந்தவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சர்வென்ட்ஸ் என்கிற அரசு ஊழியர்கள். குறிப்பாக உயர்பதவியில் இருந்த அரசு ஊழியர்கள். இந்த இரும்புத்திரை அவர்கள் செய்யும் ஊழல்களை எளிதாக மறைக்க உதவியது. பிரச்சனை என்னவென்றால் க்ரீஸின் மக்கள் தங்களுக்கு எல்லாம் கிடைக்கிற வரை நமக்கேன் வம்பு என்று இருந்தது தான். மேலும் கிரீஸில் நான்கில் ஒரு பங்கு அரசு ஊழியர்களாம். எனவே நமக்கு நிரந்தர அரசு வேலை இருக்கிற வரை என்ன கவலை? மாதம் முடிந்தால் சம்பளம் கிடைக்கிறதா? அதுவும் பதினான்கு மாத சம்பளமாம். பிறகென்ன? யார் ஊழல் செய்தால் நமக்கென்ன?

அரசியல்வாதிகள் மக்கள் கண்டுகொள்ளாததால் அவர்கள் போக்குக்கு வேலைசெய்துகொண்டிருந்தார்கள். புதிது புதிதாக வேலைகளை உருவாக்கினார்கள். கடன் வாங்கிக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் செய்வதை ஆய்வு செய்யவும் மதிப்பீடு செய்யவும் யாரும் இல்லை. அவர்களைக் கண்காணிக்க யாரும் இல்லை.

இந்த அரசியல் முறை வேறென்னத்துக்கு வழிவகுக்கும்? கண்காணிப்பில்லாத துறை ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். அதுதான் நடந்தது. புதிதாக உருவான தொழிலதிபர்கள் அரசு கான்ட்ராக்ட்களை எளிதாக எடுத்தார்கள். கனிசமாக அரசிடம் பணம் வசூலித்தார்கள். கொள்ளை லாபம் பார்த்தார்கள். அப்படி கொள்ளை லாபம் பார்ப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க அரசியல் வாதிகளுக்கு பணம் கொடுத்தார்கள். இந்த ஊழல் அவ்வப்போது கொஞ்சம் கசிந்தது. ஊழல் கசியாமல் இருக்கவே இருக்காது. யாருக்கும் தெரியாமல் ஊழல் செய்யமுடியுமா என்ன? அப்படியென்றால் நம்ம பணத்தை நாம ஊழல் செஞ்சா மட்டுமே முடியும். செய்தி கசிந்தது. மக்கள் சில மந்திரிகளின் மிக ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற மீடியாவும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான். மீடியாவும் கண்டுகொள்ளவில்லை; நீதித்துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊழல் நடப்பது தெரிகிறது. மீடியாவில் துப்பறியும் துறை கண்டிப்பாக இருக்கும். ஏன் கண்டுகொள்ளவில்லை?

இப்படி முப்பது வருடங்களாக நடந்த ஊழலை எப்படித் திருத்துவது? ஜனாதிபதி முதல் சராசரிக் குடிமகன் வரை எல்லோரும் எல்லார் மீதும் கோபமாக இருக்கிறார்கள். ஹீரோவாக இருக்கவேண்டும், மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஜனாதிபதியை எல்லோரும் தேடுகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இப்பொழுது எதை எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதெல்லாம் 1980இல் இப்பொழுதிருக்கிற நம்ம ஹீரோ ஜனாதிபதியின் அப்பா ஏற்படுத்திய மாற்றங்களாம்.

வாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது.

*

தீவிர‌வாதிக‌ள் உருவாக்கிய‌ முற்றிலும் புதிய‌ வேலை வாய்ப்புக‌ள்

நேற்றோ அத‌ற்கு முன் தின‌மோ அதிகாலையில் எழுந்து மிகுந்த‌ ப‌சியுட‌ன் செரிய‌ல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நியுயார்க் ந‌க‌ர‌ குண்டு வெடிப்பு பீதி ச‌ம்ப‌ந்த‌மான‌ செய்தி சிஎன்என் இல் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருந்த‌து. இது தொட‌ர்பான‌ ந‌ப‌ரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தாயிற்று. இன்னும் பெய‌ர் தெரிய‌வில்லை. அல்ல‌து நீதிப‌தி அறிவிக்கிறவ‌ரை சொல்ல‌க்கூடாது என்று நினைத்திருக்கிறார்க‌ள். நீதிப‌தி அறிவிப்பு செய்ய‌ இன்னும் ப‌த்து நிமிட‌ம் இருக்கிற‌து. அப்பொழுது தான் தீவிர‌வாத‌ம் உருவாக்கியிருக்கிற‌ வேலைவாய்ப்புக‌ளைப் ப‌ற்றித் தெரிந்து கொண்டேன்.

இர‌ண்டு ந‌ப‌ர்க‌ள் பேசினார்க‌ள். ஒருவ‌ரின் வேலையின் பெய‌ர் Terror Expert ம‌ற்றொருவ‌ரின் வேலை யின் பெய‌ர் Terrorism Analyst.

தீவிர‌வாத‌ ஆய்வாள‌ர்(?!) ச‌ரி Terror Expert?! எப்ப‌டித் த‌ன்னை அறிமுக‌ம் செய்து கொள்வார்?

இன்னும் கொஞ்ச‌ கால‌த்தில் வானிலை ஆய்வாள‌ர் தின‌மும் வானிலை ஆராய்ச்சி செய்து செய்தியில் இன்ன‌ இன்ன‌ இட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய‌க்கூடும் க‌டும் புய‌ல் வீச‌க்கூடும் என்று சொல்வ‌து போல‌, பின்னாடி ஒரு உல‌க‌வ‌ரைப‌ட‌த்தை வைத்துக்கொண்டு, தீவிர‌வாத‌த்தையும் ஆராய்ந்து இந்த‌ இட‌ங்க‌ளில் மித‌மான‌ குண்டு வெடிப்பு இருக்கும்; உயிராப‌த்து ஏதும் இருக்காது. இந்த‌ இட‌த்தில் க‌டுமையான‌ குண்டுவெடிப்பு இருக்கும்; உயிர் ப‌லி இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து என்று சொன்னாலும் சொல்வார்க‌ள்.

வானிலையைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக‌ குடை எடுத்து வ‌ருவ‌து போல‌ தீவிர‌வாத‌நிலையைத் தெரிந்து கொண்டு என்ன‌ செய்வ‌து? குடை உத‌வாதே?

இன்ஸ்யூர‌ன்ஸ் வாங்கிக்கொண்டு போக‌லாம். குண்டு வெடிக்கிற‌து என்று போகிற‌ இட‌த்துக்குப் போகாம‌ல் இருக்க‌ முடியுமா என்ன‌?

மும்பை மேரி ஜான் என்கிற‌ ஹிந்திப்ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? மும்பையில் ர‌யிலில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்புக‌ளுக்குப் பிற‌கு அத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ரின் வாழ்க்கையை அழ‌காக‌ அல‌சுகிற‌து இந்த‌ப் ப‌ட‌ம்.

மாத‌வ‌ன் ம‌யிரிழையில் த‌ப்பியிருப்பார் ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் ஒரு கையை இழ‌ந்து விடுவார். ர‌யில் குண்டு வெடிப்புக்கு முன் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு வ‌ந்தும் ம‌றுத்துவிடுகிற‌ மாத‌வ‌ன் குண்டு வெடிப்புக்குப் பின் பேசாம‌ல் அமெரிக்கா போய்விட‌லாம் என்று நினைக்கிறார். இங்கு ர‌யிலில் ஏற‌வே ப‌ய‌ப்ப‌டுகிறார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரிட‌ம் இதைச் சொல்ல‌கிறார். எந்த‌ நாட்டில் தான் தீவிர‌வாத‌ம் இல்லை? பாதுகாப்பான‌ தேச‌ம் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ அமெரிக்காவின் இர‌ட்டைக் கோபுர‌த்தைத் தீவிர‌வாதிக‌ள் த‌க‌ர்த்து எறிய‌வில்லையா?

க‌டைசியில் அந்த‌ ந‌ண்ப‌ர் சொல்லுவார்: ந‌ம் பிள்ளைக‌ளுக்கு தீவிர‌வாத‌ம் ப‌ழ‌கிவிடும். எப்ப‌டி பூக‌ம்ப‌த்தினோடும் புய‌ல்க‌ளோடும் சூறாவ‌ளிக‌ளோடும் சுனாமிக‌ளோடும் வாழ‌ப்ப‌ழ‌கிக்கொண்டோமோ அதே போல‌ ந‌ம் பிள்ளைக‌ள் தீவிர‌வாத‌த்தோடு வாழப் ப‌ழ‌கிக்கொள்வார்க‌ள்.

ரொம்ப‌வும் வ‌ருத்த‌மாக‌ இருக்கிற‌து.