குரல்வலைப் பக்கங்கள்

(புதிய பெயர், bureaucracy, பரிணாமவளர்ச்சித் தத்துவம், Intelligent Creator, உலகம் தட்டை, ஆன்மா, முன்பிறவிப் பாவங்கள்)

இது எப்பொழுதும் நான் எழுதும் படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி வகையறா பதிவு தான். பொதுப்படையான பெயர் ஒன்று வைத்திருக்கிறேன்.Just rebranding.புதிய பெயர். மைக்ரோசாப்ட் windows vistaவை rebrand செய்து windows 7 என்று பெயர் மாற்றி, அமோக விற்பனை செய்யவில்லையா? சிங்கப்பூர்க்காரர்கள் க்யூவில் நிறகத் தயங்காதவர்கள். ஐ·போன் 3GS வந்தபொழுது 50 டாலர் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுப் பிறகும் மணிக்கணக்காக க்யூவில் நின்று வாங்கிய மக்களை எனக்குத் தெரியும். அதேபோல windows 7 வந்தபொழுதும் இங்கே மக்கள் க்யூவில் நின்று (உட்கார்ந்து; ரெஸ்ட் எடுத்து) வாங்கியதை டீவியில் பெரிதாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஹாரிப்பாட்டர் வந்தாலும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க; windows 7ஐயும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க. நம்ம ஊர்ல அரசியல் மீட்டிங்குக்கு காசும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது போல இங்க டாலர்ஸ¤ம் நூடுல்ஸ¤ம் கொடுத்து க்யூவில நிக்க சொல்றாய்ங்களோ?

***

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் எம்பசிக்குச் சென்றிருந்தேன்; எதற்கு என்று ஞாபகமில்லை. க்யூ நம்பர் எடுத்துவிட்டு பொழுது போகாமல் அங்கிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய பேர் கேட்கும் கேள்வி பாரம் எங்கிருக்கிறது என்பது தான். அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. டென்சன். ஏன் டென்சன்? Afterall நீங்கள் உங்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக உட்கார்ந்திருக்கும் அலுவலர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். சிரிக்காதீர்கள்.

அப்படி நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தைக் கவனித்தேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் தனது க்யூ நம்பர் வந்தவுடன் வேகமாக எழுந்து நடந்து வந்தார். அவரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அங்கே கண்ணாடிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அலுவலரிடம் தான் ரெடியாக வைத்திருந்த அந்த பேப்பர்களைக் கொடுத்தார். வாங்கிய அந்தப் பெண் அதே வேகத்தோடு அந்தப் பேப்பர்களைத் தூக்கிப்போட்டார். தூக்கிப்போட்டார். ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. பதற்றத்துடன் அந்த ஆள் அந்தப் பேப்பர்களை எடுத்து பேப்பர் க்ளிப்பை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்தார்.

***

இந்தியன் எம்பசியில் அன்று என் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ¤க்குச் செல்ல டாக்ஸி பிடித்தேன்.கொஞ்ச நேரம் கழித்து டாக்ஸி ஓட்டுனர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: உள்ளே இருக்கும் அலுவலர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? பிறகு ஏன் அவர்கள் உங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. டாக்ஸி டிரைவர் ஒரு சைனீஸ். நீங்கள் எதற்கு அங்கே போயிருந்தீர்கள் என்றேன். இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது அதற்காக விசாவுக்காச் சென்றிருந்தேன் என்றார். அடிக்கடி இந்தியா போய் வருவாராம்.

பிறகு இந்தியாவைப் பற்றி அவரே பெசத்துடங்கினார். இந்தியாவில கல்வி நல்லாயிருக்கு என்றார். பிரிட்டிஷ்காரர்களின் பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்றார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் மூன்று விசயங்களைக் கொடுத்திருக்கிறது என்றார். என்ன என்று கேட்டேன்: கல்வி, ரயில்வே நெட்வொர்க் மற்றும் அதிகாரத்துவம் (bureaucracy).

***
ரொம்ப நாட்களுக்கு முன் இந்தியாவில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். தோழியின் கணவரின் அப்பா ஒரு ஜட்ஜ். கிண்டி ரேஸ் கோர்ஸில் அவர்களது ரிஷப்சன் நடந்தது. அவ்வளவு பெரிய பணக்கார கும்பலில் நானும் எனது நண்பனும் கேட்ப்பாரற்று நின்று கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி இன்று வரையிலும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்கிறது.

அங்கே இரண்டு ஜீவராசிகளும் இன்ன பிற ஜீவராசிகளும் இருந்தன. அதில் ஒரு ஜீவராசி நிமிர்ந்த நன் நடை கொண்டிருந்தார். மற்றொரு ஜீவராசி கேள்விக்குறி போல வளைந்து நின்று கொண்டிருந்தது. இவர்களைத் தவிர மற்ற சிலரும் கேள்விக்குறி போல இல்லையென்றாலும் அதற்கு இணையாக குணிய முயற்சி செய்துகொண்டிருந்தனர். அந்த கும்பல் எங்களைக் கடக்கும் பொழுது, நாங்க பாட்டுக்கு செவனேன்னு மரத்து அடியில நின்னுட்டு இருக்கோம், ஒரு அல்லக்கை என்னைப் பார்த்து தள்ளு தள்ளுன்னுச்சு. ஏய் இருப்பா என்ன விசயம்னு கேக்கும் போது தான் தெரிந்தது அந்த நிமிர்ந்த நன்னடை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாம்; அப்ப அந்தக் கேள்விக்குறி யாருன்னு கேட்டப்போ அவர் ஏதோ பெரிய லாயரோ என்னவோ என்று சொன்னது அந்த அல்லக்கை. இதற்குப்பெயர் தான் அதிகாரத்துவம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.

அவரது வீட்டிலும் எல்லோரும் அவரிடம் கேள்விக்குறி போல வளைந்து கொண்டு வாழ்வார்களோ?ஐயோ பாவம்.

***

இதே போலத்தான் சாமியார்களும் அவர்கள் முன்னால் (சாஷ்டாங்கமாக) விழுந்து வணங்கும் சில மக்களும்.

***

டிசம்பர் 20 2005இல் ஜான் ஜோன்ஸ் II என்கிற Harrisburg, Pennsylvaniaவைச் சேர்ந்த ஜட்ஜ், Kitz-miller et al vs Dover Area School District et al என்கிற வழக்கில் மிக முக்கியமானதொரு தீர்ப்பைச் சொன்னார். வழக்கு எதைப்பற்றியது என்றால்: அமெரிக்க மாணவர்கள் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எப்படி படிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றியது.

வழக்கு என்ன;முழு வழக்கைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதன் சாராம்சம் இங்கே:

டாரிவினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் இன்னும் முழுமையாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. அது வெறும் தத்துவம் தான் அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை (பொய்!). Intelligent design என்பது டார்வீனியத் தத்துவத்துக்கு நேர்மாறானது. அது என்னவென்றால் மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் என்பது. மனிதனை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் உருவாக்கினார் என்பதை விளக்கும் Of Pandas and People என்கிற புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் படி அறிவுறுத்துகிறோம். எல்லாத் தத்துவங்களையும் திறந்த அறிவோடு எதிற்கொள்வதைப் போல இதையும் மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதை அறிவியல் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துக்கு முன் வாசித்துக்காட்டவேண்டும் என்று டோவர் ஹை ஸ்கூல் ஒரு சட்டம் பிறப்பித்தது. ஒன்பது ஸ்கூல் போர்ட் மெம்பர்களில் இரண்டு பேர் ரிசைன் செய்து விட்டனர். பல ஆசிரியர்கள் இதை வாசிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். வழக்கு செப்டம்பர் 26 2005 அன்று ஆரம்பித்தது.

க்ரிஸ்த்மஸ¤க்கு ஐந்து நாளைக்கு முன்னர் நீதிமதி அந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில். பரிணாம வளர்ச்சியை நம்பாமல் ஒரு intelligent designer (கடவுள்) தான் மக்களை உருவாக்கினார் என்று நம்புபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இந்த உலகத்தில். ஏதோ ஒன்றை நம்புவதற்கு எங்கோ ஒரு கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிய டாக்குமென்டரியை இங்கே பார்க்கலாம்.

இன்னும் உலகம் தட்டை தான் என்று நம்பும் கும்பல் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். World is flat என்றொரு புத்தகத்தை Thomas L Friedman எழுதினாரே; அதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையிலே உலகம் உருண்டையாக இல்லை தட்டையாகத் தான் இருக்கிறது என்று சத்தியமடித்துச் சொல்கிறார்கள். World is weird.

உங்கள் நம்பிக்கை உங்களோடு; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா வீட்டில் உட்காராமல், அறிவியலின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறீர்கள்?

காமெடியன் Dave Allenஇன் இந்த வீடியோவைப் பாருங்கள். கண்டிப்பாகப் பாருங்கள். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

***

இது போன்ற ஒரு விசயத்தை விஜய் டீவியில் “நடந்தது என்ன”வில் பார்த்தேன். ஏதோ ஒரு சாமியாரைப் பற்றி நம்ம நீயா நானா கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சாமியார் நூற்றியிருபது வயது வரை மனிதன் வாழ்வது எப்படி என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதோட நில்லாமல் ஆன்மா மறுபிறவி என்று ஏகத்துக்கும் உளறினார். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் சாவைச் சந்திக்கும் பொழுது நம்மை சித்ரவதை செய்யும் என்றார். அவரைச் சந்திக்க சென்றவர்: அப்ப பிறந்த உடனே இறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்; அவர்கள் தான் பாவமே செய்யவில்லையே என்றார். அதற்கு முன்பிறவியில் செய்த பாவங்கள் இருக்கிறது இல்ல? என்றார். புல்ஷிட்.

இது போன்ற சாமியார்களின் அசட்டுத்தனமான பேட்டிகளை விஜய் டீவி ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது.

***

ஸோ சீரியஸ் டுடே!? இணையத்தில் எங்கோ படித்தது.
உலகம் flatன்னு எப்படி நம்பறீங்க? அதான் ப்ளாட் ப்ளாட்டா ப்ளாட்டு போட்டு விக்கறோம்ல!

***

ப்ரான்ஸ் பயணம்-4

ப்ரான்ஸ் போயிட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. நிறைய மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன். இந்த முறை தொடர்ச்சியாக எழுதி முடித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
*

சோ ஸ்டோரலரை பாரீஸ் விமான நிலையத்திலே விட்டுவிட்டு வந்தாயிற்று. பாவம் அதுக்கு என்ன தெரியும்? என்ன செய்யும் என்றெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை, அது அது பாட்டுக்கு இருக்கும். யாரும் வந்து கலெக்ட் செய்யலன்னாலும் அது பாட்டுக்குத்தான் இருக்கும். யாரும் வேண்டுமென்றே அதை திருடிச்செல்லாதவரையிலும் அது அங்கு தான் இருக்கும். இந்த நாள் முடிவின் போதோ அல்லது அதற்கென்று அங்கிருக்கக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடியும் வரையிலும் அது அங்குதான் இருக்கும். அதற்குப்பிறகு அது எங்கு செல்லும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. என் மனைவிக்குத் தெரியவும் நியாயமில்லை. இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த மெர்க்கியூர் ஹோட்டலின் ரிஷப்ஷனிஸ்டுக்கும் தெரிந்திருக்கலாம். அவளிடம் விமானநிலைய சம்பவத்தை விவரித்தபிறகு நான் உனக்கு உதவுகிறேன் என்றாள்.

மீண்டும் விமானநிலையத்துக்கு செல்வதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். கிட்டத்தட்ட ஒரு வார மென்ட்டல் ஸ்ட்ரெஸ்ஸ¤க்குப் பிறகு அப்பாடா ஹோட்டலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோசப்படக்கூட இல்லையே என்பது தான் என் வருத்தம். எங்கள் அறை இரண்டாவது மாடி. லக்கேஜ்ஜை நானே மேலே ஏற்றி என் ரூமுக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு மனைவியையும் குழந்தையையும் ரூமில் செட் பண்ணிவிட்டு ஹீட்டர் போன்ற இத்தியாதிகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பார்த்துவிட்டு மீண்டும் கீழிறங்கி வந்து ரிஷப்ஷனிஸ்டும் நானும் விமானநிலையத்துக்கு தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பே கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் யாரும் இருக்க மாட்டார்களோ என்னவோ என்றாள் அவள்.

நாங்கள் தங்கியிருந்த Hotel Mercure

Saint Quentin க்கும் விமான நிலையத்துக்கு ரொம்ப தூரம். டாக்ஸியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். கிட்டத்தட்ட நூறு யூரோ ஆகும். மீண்டும் ஸ்ட்ரோலர் எடுக்க விமான நிலையத்துக்கு செல்லும் கணக்கை கம்பெனி ஏற்காது! என்பது யூரோ என்றால் நூற்றி அறுபது சிங்கப்பூர் டாலர். ஸ்ட்ரோலர் விலை இருநூறு டாலர் என்று பல கணக்குப் போட்டுப் பார்த்தேன். ட்ரெயின் செல்வதென்றால் பயமாக இருக்கிறது. கலைப்பாகவும் இருக்கிறது. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இங்கே இருக்கும் பாரீஸ் RER மேப்பைப் பாருங்கள். இதனுடன் ஒப்பிடும் பொழுது சிங்கப்பூர் MRT ஒரு சின்ன துகள் போல இருக்கும். இதில் மஞ்சள் லைனைப் பின் தொடர்ந்தீர்கள் என்றால் அதில் கடைசி நிறுத்தமாக C7 இருக்கிறது பார்த்தீர்களா? அது தான் நாங்கள் தங்கியிருந்த Saint-Quentin-en-yvelines. அங்கிருந்து ஏர்போர்ட் செல்லவேண்டும் என்றால், அங்கிருந்து மஞ்சள் RER எடுத்து St-Michel-N-Dame (ப்ளூ RER சந்திக்கும் இடம்) வந்து அங்கிருந்து ப்ளூ RER எடுத்து Charles De Gaulle 2 போகவேண்டும். சும்மா மேப்பப் பாக்காம இத மட்டும் படிச்சீங்கன்னா புரியாது. மேப்ப பாத்திட்டு வாங்க. ம்ம் இப்பத் தெரியுதா எங்கிருந்து எங்க போகனும்னு? ஒரு மூளையில இருந்து மற்றொரு மூளைக்குப் போகணும்!

எங்கள் ஹோட்டல் அறையிலிருந்த ஜன்னல் வழியாக எடுத்த படம்.

அன்று மதியமே ஈ·பில் டவர் பார்க்கலாம் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பயண அயர்ச்சியிலும் குளிரிலும் எங்களால் தூங்க மட்டுமே முடிந்தது. மதியம் எழுந்து; என்ன சாப்பிடலாம் என்று யோசித்தோம். என்ன என்பதை விட எங்கே என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு கிடையாது. ரிஷப்ஷனிஸ்ட் கிட்ட கேட்டபொழுது கொஞ்ச தூரத்தில் மெக் டொனால்ட்ஸ் இருக்கிறது என்று வயிற்றில் பாலை வார்த்தாள்.

நானும் என் மனைவியும் குழந்தையும் சில பல ட்ரெஸ்களை அணிந்து கொண்டு ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கினோம். இறங்கியது தான் தாமதம் குளிர் காத்திருந்தது போல எங்களை வந்து சூழ்ந்து கொண்டது. அடுக்கடுக்காக உடைகளை அணிந்திருந்ததாலோ என்னவோ ஸ்ரீநிதியைத் தூக்குவது கொஞ்சம்கஷ்டமாக இருந்தது. வெளியே கிளம்பியது தான் தாமதம் ஸ்ரீதிதி அடுத்த இரண்டு நிமிஷத்தில் தூங்கிவிட்டாள்.

மெக்டொனால்ட்ஸை தேடிப் புறப்பட்ட எங்களுக்கு படு பயங்கர அதிர்ச்சி. ஊரே வெரிச்சோடிக்கிடக்கிறது. ஐ ஆம் லிஜென்ட் பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அது போலத்தான். கார்கள் எல்லாம் ஏதோ சிக்னலுக்கு காத்திருப்பதைப் போல வரிசையாக நிற்கின்றன. கார்களுக்குள் யாரும் இல்லை. ஷாப்பிங் மால்கள் எல்லாம் மூடியிருக்கின்றன. எஸ்கலேட்டர்ஸ் வொர்க் ஆகவில்லை. மணி மதியம் ஒன்று தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பர்கள். குளிர் வேறு. பயத்தில் என் மனைவியையும் குழந்தையையும் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டு விட்டு நான் மட்டும் மீண்டும் புறப்பட்டேன்.

Saint Quentin நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டுக்கு இடைப்பட்ட ஊர். Carefour இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் இருக்கிறது. ஒரு தியேட்டர் இருக்கிறது. நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. டவுன் சென்ட்டரில் சின்ன ஏரி போன்ற ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றிலும் நிறைய விதவிதமான் உணவுக்கடைகள் இருக்கின்றன. அங்கு தான் மெக்டொனால்ட்ஸ் இருக்கிறது.

ஒரு வழியாக மெக் டொனால்ட்ஸைக் கண்டுபிடித்து பர்கரும் பக்கத்திலிருந்த ஒரு பிட்சா கடையில் இரண்டு பிட்சாக்களும் வாங்கிக்கொண்டேன். கண்டிப்பாக இரவு உணவு வேறு எதுவும் கிடைக்கப்போவது இல்லை எனவே இதையே இரவுக்கும் வைத்துக்கொள்ளத் திட்டம். எதையும் ப்ளான் பண்ணாமப் பண்ணக்கூடாது.

அன்றைய பொழுது இனிதே கழிந்தது; ஹோட்டல் ரூமுக்குள்ளேயே. மறுநாள் நான் அலுவலகம் செல்ல வேண்டும். எனது அலுவலகத்தைத் தேடிக்கண்டுபிடிப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதிகாலை குளிர்; ஊர் பற்றிய பயம்; ஊர் மக்களைப் பற்றிய பயம் போன்ற காரணங்களால் இரண்டு முறை அதே இடத்தைச் சுற்றிவந்தும் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அது எங்களது தலைமை அலுவலகம். எனவே தனி கேம்ப்பஸ் உண்டு. கடைசியில் ஒரு இந்தியர் தமிழர் தான் வழி சொன்னார். அதற்கு முன்னர் ஒரு கருப்பர்,ஒரு வெள்ளையர், ஒரு வெள்ளை லேடி என்று முறையே எல்லோரிடமும் கேட்டுப்பார்த்தேன். அங்கு தான் நிற்கிறேன்; ஆனால் நான் தேடுகிற இடம் அங்கே தான் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.குளிரில் திங்க் ப்ராஸஸ் மிக மெதுவாக நடக்குமாம். நமது அண்டத்தின் கடைசி யுகத்தில்; நட்சத்திரங்கள் எல்லாம் தங்களது எரிபொருட்களை எரித்து முடித்து குறுகி அழிந்து போனப்பின் எங்கும் சூடு இருக்காதாம். குளிர் மட்டும் தான் இருக்கும். கடும் குளிர். நாமெல்லாம் (நம் இனமெல்லாம்) மெஷின்கள் போல ஏதோ ஒரு ஜந்துக்கள் ஆகி இருப்போம்; அப்பொழுது ஒரு யோசனையை யோசிக்க மில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். ரிலேடிவ்லி மில்லியன் ஆண்டுகள்.

கடைசியில் நமது இந்தியரின் துணையுடன் என் அலுவலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அலுவலகம் ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து கிடந்தது. நான் செல்லவேண்டிய இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து சென்றேன். எனக்காக என் கலீக் அங்கு காத்துக்கொண்டிருந்தார்.

மதிய சாப்பாட்டுக்கு டோக்கன் சிஸ்டம் போல ஒரு கார்ட் கொடுத்தனர். நிரந்தரப் பணியாளராக இருப்பதால் நான் அந்தக் கார்டை உபயோகிக்கலாம். கார்டை உபயோகிக்கும் பொழுது உணவுக்கான பணம் மிகவும் குறைவாக இருக்கும். மற்றவர்கள் பத்து யூரோ கொடுக்கும் பொழுது நீங்கள் வெறும் இரண்டு அல்லது மூன்று யூரோ கொடுத்தால் மட்டும் போதும். கிட்டத்தட்ட மெஸ் மாதிரி.

எனக்கு யூரோப்பியர்களிடம் (ப்ரான்ஸ் மக்களிடம்) மிகவும் பிடித்த ஒரு விசயம் அவர்களது உணவுப் பழக்கம். அவ்வளவு அழகாக சுத்தமாக மெதுவாக யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. என் மனைவி அடிக்கடி சொல்லுவாள்: “எங்க சார் சொல்லுவார்; நாம ரெண்டு மணி நேரம் சமைப்போம் அனா ஐந்து நிமிஷத்தில சாப்பிட்டு முடித்துவிடுவோம். ஆனால் மேலை நாட்டுக்காரர்கள் பத்து நிமிஷம் தான் சமைப்பார்கள் ஆனால் ரெண்டு மணி நேரம் சாப்பிடுவார்கள்” என்னவோ Anthony Bourdainக்கே அந்த சார் தான் சமைக்கக் கற்றுக் கொடுத்தது போல சொன்னாலும் அவர்கள் சாப்பிடும் முறை பற்றி அவர் சொன்னது உண்மைதான் என்று நான் அவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிட்ட பொழுது உணர்ந்தேன். ஐந்தடுக்கு உணவுப் பழக்கம் இல்லையென்றாலும் கண்டிப்பாக மூன்றடுக்கு உணவு முறையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். கேக், பை பழங்கள் யோகர்ட் என்று அனைத்தையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத்தான் மதிய உணவை முடிக்கின்றனர்.

ஒரு வாரம் வேலைப் பளுவிலே சென்றது. என் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு மதிய நேரங்களில் அருகில் இருந்த ஷாப்பிங் மால் மற்றும் கேர் ·போரை சுற்றி வந்தார். சில சமயம் சமைத்து சாப்பிட்டோம். குளிர் குளிர் குளிர் தவிர வேறொன்றும் இல்லை. என் வக்கில் அண்ணனின் நண்பர் ஒருவர் அங்கிருக்கிற ஒரு யுனிவெர்சிட்டியில் பிஸிக்ஸில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அவர் அந்த சனிக்கிழமை எங்கள் ஹோட்டலுக்கு வருவதாக ப்ளான்.

அதே வாரத்தில் ஒரு நாள் காலை மூன்று மணி இருக்கும்; என் மனைவி என்னை எழுப்பினார். இங்க வாங்க என்று என்னை அழைத்து ஜன்னல் பக்கம் காட்டினார். பனிப்பொழிவு. யாரோ மேல் மாடியிலிருந்து நுரையில் முட்டை விடுவது போல பனி எங்கிருந்தோ விழுந்து கொண்டிருந்தது. ஆறு கிளைகள் கொண்ட ஒரு ஸ்நோ ப்ளேக்ஸ் உருவானப் பிறகு அது வானத்திலிருந்து பூமியை வந்தடைந்து அதனுடைய உருவத்தை இழக்க எட்டு முதல் பத்து நிமிடங்கள் ஆகுமாம்.

ஸ்னோ நாவலில் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் ஸ்நோ ·ப்ளேக்ஸ் பற்றி அவ்வளவு அழகாக எழுதியிருப்பார். அவர் பார்வையில்:

Everyone has his own snowflake; individual existences might look identical from afar but to understand one’s own eternally mysterious uniqueness, one has only to plot the mysteries of his or her own snowflake

தத்துவம் போதும்; அறிவியல் ரீதியாகவும் Snow flakes ஆச்சரியமான ஒன்று தான்: It has a beautiful six fold symmetry. இந்த அழகு எதனால் என்றால்: ஒரு ஸ்நோ ப்ளேக்ஸை அறுபது டிகிரி திருப்பினால் அதனுடைய வடிவம் மாறாது. அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. வடிவம் அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. அப்படியே இருக்கும். 360டிகிரியில் அறுபது அறுபது டிகிரியாக திருப்பும் பொழுது (மொத்தம் ஆறு முறை) அதன் வடிவம் அதன் ஒரிஜினல் வடிவத்தோடு ஒத்துப்போகும். இது தான் rotational symmetry. எளிதாகப் புரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.

ஸ்ரீநிதி முழித்துவிட்டதால் எங்களால் பனிப்பொழிவை அதற்குமேல் ரசிக்க முடியவில்லை. மறு நாள் காலை வழக்கத்தை விடவும் அதிக நேரம் தூங்கிவிட்டோம். கிட்டத்தட்ட பத்துமணிக்குத் தான் நான் அலுவலகம் சென்றேன். லிப்டை விட்டு கீழிறங்கி ஹோட்டலை விட்டு வெளியேறிய எனக்கு இன்ப அதிர்ச்சி ரோடு முழுதும் பனியோ பனி. ஹய்யோ.

பல போட்டோக்கள் எடுத்தேன். முதன் முறையாக பனியை நேரில் பார்க்கிறேன். சந்தோஷமாக இருந்தது. ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டு படம் எடுத்துக்கொண்டேன்.

அதில் நான் கூப்பிட்ட ஒருத்தர் என் கலீக். அலுவகத்தில் என் பக்கத்து ரூமில் இருப்பவர். எனக்குத் தெரியாது. ஆனால் என்னை அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு பேக்கு சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கிறது என்று வதந்தி அதிவேகமாகப் பரவியிருந்திருக்கிறது. நான் அவரைக் கூப்பிட்டா போட்டோ எடுக்கச்சொல்வேன். அலுவலகத்தில் அன்று மதியமே வந்து எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டார். நமக்குத்தான் பனிப்பொழிவு ஆச்சரியம். ஆனால் அவர்களுக்கு அது சாதாரணம். உன் வாழ்க்கையில் இப்பொழுது தான் முதன் முதலில் பனிப்பொழிவைப் பார்க்கிறாயா என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். Anyway I dont really care.

ன்று மதியம் அனுஷாவையும் பாப்பாவையும் அழைத்து வந்து போட்டோ செஷன் முடித்துக்கொண்டோம். அனுஷாவுக்கு ஏக குஷி. போட்டோவில் பாருங்கள். என் கேப்பை பிடுங்கிக்கொண்டார். இங்கே சிங்கப்பூரில் winter timeஇல் கேப் வாங்கும்பொழுதே உனக்கு இதே போல வாங்கிக்கொள் என்றேன் வேண்டாம் எனக்கு மங்கோலியன் கேப் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டு பாரீஸ் வந்தப்பிறகு அது எனக்குப் பிடிக்கவில்லை உன் கேப் தான் நல்லாயிருக்கு கொடுன்னு பிடுங்கிக்கொண்டார்.

மூன்று பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்து அந்தப்பக்கம் வந்த ஒரு பெண்ணிடம் கேமராவைக் கொடுத்தேன். அவர் போட்டோ எடுத்துவிட்டு நன்றாக வந்திருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்றார். பார்ப்பதற்கு வாங்கினேன். கை நழுவி கீழே விழுந்தது. அவ்வளவு பனி மண்டிக்கிடக்கிறது. ஆனால் என் கேமரா விழுந்த இடத்தில் சரியாக ஒரு கல் இருந்திருக்கிறது. கேமரா உடைந்தது.

இதோ பாரீஸ் ட்ரிப் ஆசை ஆசையாக் வந்த முதல் வாரத்தில் கேமரா உடைந்துவிட்டது. இனி போட்டோ எப்படி எடுப்பது?

ப்ரான்ஸ் பயணம் – 3

எங்கள் பக்கத்தில் ஒரு ப்ரெஞ்ச் ஜோடி அமர்ந்திருந்தார்கள். கொஞ்சம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்ததும் நன்றாக பேசினார்கள். ஓ நீங்கள் பிஸினஸ் விசயமாகப் போகிறீர்களா? அதான பாத்தோம் இந்த குளிர்ல எதுக்கு இவங்க ப்ரான்ஸ¤க்கு டூர் வந்திருக்காங் அதுவும் சின்ன குழந்தையைத் தூக்கிக்கிட்டுன்னு நாங்க யோசிச்சிட்டிருந்தோம்னு சொன்னாங்க. நல்லா யோசிச்சீங்க போங்க! நாங்க போக வேண்டிய இடம் செயின் க்வென்ந்தான். (முதலில் என்னுடைய மேலாளர்(ப்ரெஞ்ச்காரர்) இந்த ஊரை சொன்னபோது எனக்கு செங்கோட்டை போல இருந்தது.) அவர்கள் செயின் க்வென்ந்தான் போகவேண்டும் என்றால் நீங்கள் டாக்ஸி பிடிக்கவேண்டும். ஆமா பிடிக்கனும். ட்ரெயினில் போவதற்கு ரொம்ப நேரம் ஆகும். ஆமா தெரியும். மேலும் இந்த அதிகாலையில் (எங்களுடைய ப்ளைட் அதிகாலை ஐந்தேமுக்கால் அளவில் தரையிரங்கும்) டாக்ஸி கிடைப்பது ரொம்பவும் கடினம். என்னது? உன்னை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவார்கள். அடப்பாவிகளா? சொல்லவேயில்ல! என்னுடைய சகா ஒருவர் ஏற்கனவே பாரீஸ¤க்குப் போயிருக்கிறார். அவர் ப்ரான்ஸிலிருக்கும் கறுப்பர்களைக் குறித்து ரொம்பவும் பயமுறுத்தியிருந்தார். ஜன்னலை உடைத்து ஹோட்டலுக்குள் வருவார்கள். துப்பாக்கியைக்காட்டி பணத்தைப் பிடுங்குவார்கள். கத்தியைக் காட்டி கண்ணை நோண்டுவார்கள் என்று அடுக்கடுக்காய் அவர்களை பற்றி புகழ்ந்து தள்ளியிருந்தார். அதிகாலை. ஏமாற்றிவிடுவார்கள். கறுப்பர்கள். இந்த மூன்று வார்த்தைகளும் சற்றுமுன் சாப்பிட்ட செட்டிநாட்டு கருவாட்டு குழம்பு வயிற்றைக்கலக்குவது போல கலக்க ஆரம்பித்திருந்தது. இன்று நீங்கள் போகவிருக்கும் இடத்தில் வெப்பநிலை என்னவென்று தெரியுமா? தெரியாது. 1 டிகிரி என்று புளியை மேலும் கரைத்தார். நீங்களே எங்களுக்கு டாக்ஸி பிடித்துக்கொடுங்களேன் என்று நான் கெஞ்சாத குறையாக கேட்க, அவர் ஆபத்பாந்தவனாய் உதவுகிறேன் ஆனால் மூன்று டாக்ஸிகளிடம் தான் கேட்ப்பேன் அதற்குபிறகு நீங்கள் எங்களுடன் ட்ரெயினில் தான் வரவேண்டும் என்று கன்டிஷனோடு வாக்குறுதியளித்துவிட்டு தூங்கிப்போனார். எனக்கு தூக்கம் வரவில்லை. என்னது ட்ரெயின்ல போறதா? இவ்வளவு லக்கேஜையும் தூக்கிக்கிட்டா? நேரம் பாலுமகேந்திராவின் வீடு படத்தையும் விட மிக மிக மெதுமாக ஓடிக்கொண்டிருந்தது.

ப்ளைட் அமைதியாகத் தரையிறங்கியது. நாங்கள் வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த பொழுது, நிறைய பேர் எங்களிடம் எங்கே போகிறீர்கள்? உங்களை பிக் அப் செய்ய யாராவது வருகிறார்களா? என்று அன்பின் மிகுதியால் கேட்டனர். ஒருவர் ஸ்ரீநிதியைப் பார்த்து வெளியே பயங்கர குளிராக இருக்கும் ஸ்வெட்டர் கேப் எல்லாம் போட்டுக்கோங்க என்று சொன்னார். பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு இங்கிலீஷ் லேடி (ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்கிறார்) அனுஷாவிடம் பாப்பாவைக்காட்டி, “She is a good child, and You are a very good mother. You were exceptionaly patient with your child today” என்று பல பாராட்டுக்களை அள்ளித் தெளித்துவிட்டுப் போனதில் அனுஷாவின் ப்ளைட் மீண்டும் டேக் ஆப் ஆகி வானத்துக்கு சென்று விட்டது. அது தரையிரங்க நீண்ட நேரம் ஆனது. நாங்கள் மூவரும் ஏதோ போருக்கு செல்லும் வீரர் (யாரு நீயா?), வீராங்கனை (நோ கமென்ட்ஸ்) மற்றும் குட்டிவீராங்கனை போல சில பல உடைகளை அணிந்துகொண்டு டயிங் என்று கிளம்பி நின்றோம். வெளியேறுகையில் Strollerஐ எங்கே என்று அங்கு ப்ளைட் வாசலில் கடமைக்கு அழகாக சிரித்து வழியனுப்பும் அந்த பொம்மையிடம் கேட்கையில் அது மற்ற பாக்கேஜ்களுடன் வந்துவிடும் என்று சிரிப்பு மாறாமல் அழகாக சொன்னது.

ப்ளைட்டையும் ஏர்போர்ட்டையும் கனெக்ட் செய்யும் நடைபாதையில் காலடி எடுத்துவைத்த அந்த நொடியில் கடுங்குளிர் என்றால் என்னவென்பதை நான் தெரிந்துகொண்டேன். ஊசிபோலக் குத்தும் என்பதை நான் படித்திருக்கிறேன். குத்துவதோடு நிறுத்தாமல் குத்திக்கிழிக்கவும் செய்யும். மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்படுத்துமளவுக்கு குளிர். மைனஸ் ஒன் டிகிரி செல்சியஸ். வேகமாக நடக்கவேண்டும் என்று விரும்பினாலும் சம்திங் புல்ஸ் யூ பேக். ஏர்போர்ட்டுக்குள்ளே நுழைந்ததும் கொஞ்சம் குளிர் பின்வாங்கிவிட்டதைப் போல இருந்தது.

கும்பலைப் பார்த்து மிரண்டு போய் நிற்கையில் அங்கிருந்த ஒரு ஆபிஸர் எங்களை பிஸிக்கலி சாலஞ்ச்ட் க்யூவுக்கு போகச்சொன்னார்கள். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்கையில், அப்பொழுது என் மனைவிக்கு ஏழு மாதம், இதே போல கும்பலைப் பார்த்து மிரண்டு போயிருக்கையில், அங்கிருந்த ஒரு ஆபிஸர், எங்களை இதே போன்றதொரு க்யூவிற்கு அனுப்பி வைத்தார். ஊனமுற்றோருக்கான வரிசை. வரிசையில் யாரும் இல்லை. அந்த வரிசைக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆபிஸர் ஒரு பெண்மணி. ஒரே ஒரு பயணி மட்டும் தான் இருந்தார், அவரையும் அந்தப் பெண்மணி செக் செய்து அனுப்பி விட்டார். நானும் என் மனைவியும் சென்று வரிசையில் நிற்கவும், “என்ன?” என்றார் அந்தப் பெண்மணி. “அந்த் ஆபிஸர் தான் அனுப்பிச்சார்” என்றேன். என் பையைப் பிரித்து என் டாக்குமென்ட்ஸை எடுக்கும் முன்னர், அத எடு இத எடுன்னும் ஏகத்துக்கும் ஒருமையில் என்னை அழைத்தார். நான் அமைதியாக எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தேன். என் டாக்குமென்ட்ஸை அவர் சரிபார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, அதே வரிசையில் ஒரு வயதான பெண்மணி ஒரு பையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்து நின்றார். இந்த ஆபிஸர் பெண்மணி அவரை முறைத்துப் பார்த்தார். அந்தப் பெண்மணி அசட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். “அந்த தே..மகனுக்கு வேற வேலையில்லையா?” என்றாரே பார்க்கலாம். வாவ். fantastic. what a hostility? அவர் திட்டியது அங்கிருந்து வயதானவர்களை, ஊனமுற்றோர்களை, மாசமாக இருக்கும் பெண்களை இந்த வரிசைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அந்த ஆபிஸரை. வரிசையில் கூட்டம் அதிகம் இல்லையேம்மா? ஒன்னு ரெண்டு பேர் தான வாராங்க? அவங்கள செக் பண்றதுதான உன் வேலை? அதுக்குத் தான சம்பளம் வாங்குற? பிறகு எதுக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தற? என்ன காரணத்தினாலோ நான் அன்று அமைதியாக வந்தேன். என்னால் என்ன செய்திருக்க முடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன பேசினாலும் பிரச்சனையை என் மீது எளிதாக அந்தப் பெண் திருப்பிவிடுவாள் என்பதையும் நான் அறிந்தேயிருந்தேன். சரியான சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் மாட்டுவாள். இந்த விதமான attitude பத்திதான் Aravind Adiga “The White Tiger”இல் எழுதியிருக்கிறார்.

அனால் பாரீஸிலிருந்த அந்த ஆபிஸர் எங்களை இந்த அளவிற்கு மட்டமாக நடத்தவில்லையென்றாலும் என் பாஸ்போர்ட்டை திருப்பி திருப்பிப் பார்த்தார். எங்கே போகிறீர்கள்? என்ன விசயம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார். என் கம்பெனியின் இன்விட்டேஷனை காண்பித்ததும் மறு பேச்சில்லாமல் சாப் அடித்துக்கொடுத்தார். ப்ரெஞ்சில் வாழ்த்துக்கள் சொன்னார்.

எனக்கு எப்படா ஹோட்டல் போவோம் என்றிருந்தது. அடித்துப்பிடித்து கீழே வந்து லக்கேஜ் இருக்கும் செக்சனுக்கு வந்து லக்கேஜ்ஜை கலெக்ட் செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறுகையில், அந்த ப்ரெஞ்சு ஜோடி எங்களுக்காக காத்திருந்தது. வாவ். குட். எங்களை டாக்ஸி ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரே ஒரு டாக்ஸியைப் பிடித்து எங்களை வழியனுப்பிவைத்தார். வெளியே டாக்ஸி பிடிக்கையில் என் ஹோட்டல் ரிசர்வேஷன் ஸ்லிப்பைக் காட்டி எங்கே போகவேண்டும் என்று சொல்லும் போது, குளிர் சின்ன சின்னதாக என் பின் கழுத்திலும் கன்னத்திலும் துளையிட ஆரம்பித்திருந்தது.

வேன் மெதுவாகச் செல்வது போல இருந்தது. அந்த் அதிகாலையில் ப்ரான்ஸ் மிக அழகாகவே இருந்தது. பெரிய பெரிய அகலமான சாலைகள். சப்வேஸ். நான் வழிநெடுகிலும் இருக்கும் போர்ட்களில் என்ன பெயர் போட்டிருக்கிறார்கள்; செங்க்குவெந்த்தானுக்கு சரியாக போகிறோமா என்று ஒரு வகையான திகிலுடன் கவனித்துக்கொண்டே வந்தேன். எந்த போர்டிலும் செங்க்குவெந்தான் என்கிற பெயர் வரவில்லை. நேரம் செல்லச்செல்ல பயம் அதிகரித்தது. சிறிது தூரத்தில் ரோட்டின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக் ஏதோ தெரிந்தது. அருகில் வர வரத்தான் தெரிந்தது, ஸ்னோ. வாவ். அங்கிருந்து ஆரம்பித்து செங்க்குவெந்தான் வருகிற வரையிலும் வழி நெடுகிலும் பனி தான். பட்டுப்போன மரங்கள். மரங்களின் கிளைகள் முழுவதும் அப்பிக்கொண்டிருக்கும் பனி. மணல் சரிவில் பனி. பாலத்தின் ஓரத்தில் பனி. நின்று கொண்டிருக்கும் கார்களின் மேலே பனி. நாங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக பனியைப் நேரடியாகப் பார்க்கிறோம். இந்த சிலிர்ப்பில் செங்குவெந்தான் வருகிறதா இல்லையா என்பதை நாங்கள் கவனிக்கத் தவறியிருந்த தருணத்தில் செங்க்குவெந்தான் வந்துவிட்டிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.

பார்த்து இறங்குங்கள். தரை முழுதும் பனி; வழுக்கும் என்று சொல்லிவிட்டு, சொன்னதோடு நில்லாமல், எனக்கு முன்னர் இறங்கி வந்து என் கதவுக்கு அருகில் நின்று கொண்டு நான் கவனமாக இறங்குகிறேனா என்று கவனித்த அந்த டிரைவர் வாழ்க. நான் முன்னால் சென்று ஹோட்டலின் ரிஷப்சனில் என் ரிசர்வேஷனை சரிபார்த்துக்கொண்டு மீண்டும் காருக்கு வந்தேன். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லக்கேஜை இறக்கு ஹோட்டலுக்கு முன்னால் வைத்துவிட்டு; என் மனைவியையும் குழந்தையையும் கவனமாக கீழிறக்கி உள்ளே அனுப்பிவிட்டு, அந்த ட்ரைவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டு வரும் பொழுது நிம்மதியாக இருந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சுன்னு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பனியை ரசித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் வருகையில் “ஏங்க strollerஅ ஏர்போர்ட்டிலே விட்டுட்டு வந்துட்டோம்ங்க” என்றார் என் மனைவி.

ஏன் இந்த அவசரம்?

ஹோட்டல்கலில் இட்லி தோசை மற்றும் புரோட்டா ஐட்டங்களை பார்சல் செய்பவர்களைப் பார்த்ததுண்டா? பார்சல் டோக்கன் வாங்கிக்கொண்டு தனியாக, அருகில் இருக்கும் டேபிளிலோ அல்லது சுவற்றில் சாய்ந்துகொண்டோ பலமுறை நான் அவர்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஏனோ அவர்கள் பறபறவென்றே வேலை செய்வார்கள். சட்னி கட்டிக்கொடுப்பவர்கள் ஆகட்டும், சாம்பார் கட்டுபவர்கள் ஆகட்டும், இட்லி தோசை கட்டுபவர்களாகட்டும், ஒவ்வொருவரிடமும் அதே அவசரம் தெரியும். ஏதோ இந்த நிமிடத்தில் இத்தனை இட்லிகள் பார்சல் செய்யாவிட்டால் தட்டிலிருக்கும் இட்லிகள் அத்தனையையும் கடோத்கஜன் வந்து தின்று தீர்த்துவிடுவான் என்பது போல அவர்களது அவசரம் இருக்கும்.

இன்றும் முஸ்தபாவுக்கு எதிரே இருக்கும் ஆனந்தபவனில் நான்கு இட்லி மற்றும் இரண்டு தோசைகள் பார்சல் சொல்லிவிட்டு என்னுடைய டோக்கன் நம்பர் ஸ்கிரீனில் தெரியும் வரை, அவர்களை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லோரிடமும் அதே அவசரம். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. பிறகும் ஏன் இந்த அவசரம்? பெரும்பாலும் சட்னி கட்டுபவர்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கிறது. அது ஒரே பார்சலா அல்லது எத்தனை பார்சல்கள் என்பதே.

இதே போல ஒரு அவசரத்தை நான் காலேஜில் கம்ப்யூட்டர் லேப் அசிஸ்டென்ட்களிடம் தான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கமாண்ட்லைனில் அவர்கள் ஏதோ ஒரு கமாண்ட் டைப் செய்யும் போதும், ஏதோ நியூக்ளியர் பாம் ஒன்றை டிஸ்அஸம்பிள் செய்வது போல அவ்வளவு அவரமாக டைப் செய்வார்கள். சிலர் எக்கோ கமாண்ட் போட்டுவிட்டு, டைப் செய்வது திரையில் தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று நாம் உணர்ந்துகொள்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்கும். எல்லாம் சரியாகிவிட்டது என்பது போல பெருமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவார் லேப் அஸிஸ்டண்ட்.

டெவலப்பர்ஸ் கூட தங்களுக்கு தெரிந்த queryக்களை டைப் செய்யும் பொழுது அதி வேகமாக டைப் செய்வதை பார்த்திருக்கிறேன். I think people do things faster, to proove their mastery. சரியா?

Depressing news is epidemic.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கிட்டத்தட்ட என்னத்த கண்ணய்யா ரகம். எல்லாவற்றிலும் ஒரு தவறைக் கண்டுபிடித்து வாழ்க்கை நாசமா போயிட்டிருக்குன்னு சொல்லுவார். பேசாம எல்லாரும் மாடு மேய்க்கப் போகனும்னு சொல்லுவார். அப்பமட்டும் வாழ்க்கை சுபிக்சமா இருக்குமா என்ன? ஏதாவது ஒரு மெயில ·பார்வேர்ட் பண்ணிக்கிட்டேயிருப்பார். அவருக்கு மட்டும் எப்படித்தான் இந்த மெயில் எல்லாம் கிடைக்குதோ தெரியல. பெட் பாட்டில்னால இன்னும் கொஞ்ச நாள்ல உலகமே அழியப்போறது. பெப்ஸி குடிக்கிறதால தொண்டைப்புண் வந்து குடல் பூராம் வெந்துபோறது. லாப்டாப் அதிகநேரம் யூஸ் பண்ணினா விரல்கள் எல்லாம் சூம்பிப்போறது. செல்போன்ல நிறைய நேரம் பேசினா மூளையில கண்ணுக்குத்தெரியாத புழுக்கள் உருவாவறதுன்னும் சகட்டுமேனிக்கு டெய்லி ஒரு மெயில் அனுப்பிச்சுட்டேயிருப்பார்.

இப்போ ஜாப் லாஸ். அங்க பத்தாயிரம் பேருக்கு வேலை போச்சு. இங்க ஆயிரம் பேர தூக்கிட்டாங்க. இங்க முன்னூறு பேருக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்தாச்சுன்னு ஒரே depressing மெயில்ஸ். அதத்தான் நாங்களும் பாக்கறோமில்ல. வேறு மெயில் அனுப்பிச்சுட்டு அதுக்கு நடுவுல இது போல ஒரு மெயில் அனுப்பிச்சா கூட பரவாயில்லீங்க. டெய்லி retrenchment மெயில் தான்.

இன்னிக்கு அவரு ஆபீஸ¤க்கு வந்திருக்காரு, இன்டர்நெட் பூராம் துலாவியிருக்கிறாரு; ஒரு ஜாப் லாஸ் மெயில் கூட கண்ணில படல. என்ன செய்றதுன்னு புரியாம யோசிச்சார் மாப்ள. அப்போத்தான் அவரோட ·ப்ரண்ட் “நோ ஜாப்..” ன்னு இவருக்கு ஒரு மெயில் அனுப்பிச்சிருக்கார். நம்ப மாப்ள அப்பாடா இன்றைய பொழுது இனிதே கழிந்ததுன்னு அந்த மெயில டப்புன்னு ·பார்வேர்ட் பண்ணிட்டார். அப்புறம் நிதானமா படிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, அது நிஜமான job இல்லையாம், எப்பவும் schedule பண்ணிவெச்சிருக்கிற Batch Jobs தானாம். ஏதோ data problemனால இன்னிக்கு ஓடலையாம். அதத்தான் அவரோட நண்பர் : “No jobs run today”ன்னு மெயில் அனுப்பிச்சிருக்கார்.

Friend, please dont spread depressing news. Depressing news makes a depressing environment. And that is not good for anyone. Take it easy. Every one is in the same boat. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்.

கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்?

கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய் என்றொரு 50% மொக்க 50% interesting கேள்வியை என் நண்பர் ஒருவர் என்னிடம் இன்று மதிய சாப்பாட்டின் போது கேட்டார். அவர் கேட்டதற்கும் இப்போ ஆங்காங்கே கமுக்கமாக வாரி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் pink slipகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! சும்மா just like that கேட்டார்.

நான் கம்ப்யூட்டர் பார்த்த பொழுது பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.(ஐயையோ ஸ்கூல் ஸ்டோரியா?!) நான் மேத்ஸ் பயாலஜி மேஜர் என்பதால் கம்ப்யூட்டர் எனக்கு பாடம் இல்லை. மேலும் மேத்ஸில் வரும் ஒரு சாப்ட்டர் கம்ப்யூட்டருக்கே என் தலை சுற்றும். என்னங்கடா ஒரே ஒன்னு ஜீரோவ வெச்சு ஏதேதோ வித்த காட்டுறாய்ங்கன்னு நினைப்பேன். அப்பொழுதெல்லாம் பின்நாட்களின் இந்த கம்ப்யூட்டர்களை கட்டிக்கொண்டுதான் அழப்போகிறேன் என்று என் மரமண்டைக்கு தெரிந்திருக்கவில்லை. டாக்டர் ஆகப்போகிறேன் என்று தான் சத்தியமாக நினைத்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் ஒருவனை டாக்டர் என்று தான் என் பள்ளி நண்பர்கள் சிலர் அழைப்பார்கள். அப்படி அழைத்த சிலர் டாக்டர் ஆகிவிட்டார்கள் என்பது வேறு விசயம்! அவன் பிற்காலத்தில் அண்ணாயுனிவர்சிட்டியில் எலக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு இப்பொழுது அதற்கும் சம்பந்தமில்லாத மானேஜ்மெண்ட் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது வேறு ஒரு விசயம்.

பதினோறாம் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் ஐந்து நிமிஷம். அதுவும் ப்ரிண்ஸ் ஆப் பெர்சியா தாஸ் கேம் விளையாடினோம். விளையாடினேன். அதற்கப்புறம் எனக்கும் கணினிக்குமான உறவு நயந்தாரா சிம்புவின் உறவைப்போல ஆகிவிட்டது; ஓப்பன் விண்டோ சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை நான் தேர்ந்தெடுக்கும் வரை.

இப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. கம்ப்யூட்டரை விட்டுத்தள்ளுங்கள் இன்டர்நெட் இல்லையென்றால்?

ஒரு வேளை கம்ப்யூட்டர் என்கிற ஒன்றே இல்லாமல் இருந்திருந்தால்?

1. பல்டாக்டர்: டாக்டர் கனவுகளோடு இருந்தாலும் எனக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை, மயிரிலையில் டாக்டர் ·ப்ர·பஷன் என்னிடமிருந்து தப்பியது. இன்று உயிரோடிருக்கும் பல பேஷண்டுகளும் தான். ஆனால் எனக்கு பிடிஎஸ் கிடைத்தது. பல் டாக்டர். ஹோமியோபதி கிடைத்தது. அப்பாவுக்கு ஒரே குழப்பம். எனக்கு குழப்பமில்லை. பல் டாக்டர் படிக்கவும் ஹோமியோபதி படிக்கவும் எனக்கு விருப்பமில்லை. அப்பா அருகிலிருந்த ஒரு டாக்டரிடம் ஆலோசனை கேட்டார். எங்க அப்பா கேட்ட கேள்வி: பல் டாக்டருக்கு படித்துவிட்டு, மாஸ்டர் டிகிரி படிப்பதற்கு இருதய ஸ்பெஷலிஸ்ட் தேர்வு செய்ய முடியுமா என்பதே? Apparantly, முடியாது என்பது பின் நாளில் தெரிந்தது. ஏனென்றால் பல் என்பது வேறு; இருதயம் என்பது வேறு இல்லியா? பல் பிடுங்கும் பொழுது பிரச்சனை ஆகிவிட்டால் பல்லோடு போச்சு! ஒருவேளை நான் கம்ப்யூட்டர் படிக்கவில்லை என்றால், பல் டாக்டராக ஆகியிருந்திருப்பேன். ஹொமியோபதி மருத்துவராக ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஹோமியோபதி மருத்துவ ரீடர்ஸ் மன்னிக்கவும். Somehow it didnt look interesting.

2. வாத்தியார்: எனக்கு வாத்தியாராக வேண்டும் என்கிற ஆசையும் நிறைய உண்டு. இப்பொழுது கூட. I think the reason is my father, oppurtunity to interact with kids and you’ll get a lot of free time. புத்தகங்கள் படிப்பதற்கு உபயோகிக்கலாம். மற்றொரு காரணம் : You can be a hero among your students. காமெடியனாகத்தான் நிறைய வாத்தியார்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றாலும், வெகு சில வாத்தியார்களை தங்கள் மானசீக mentorஆக வைத்திருக்கும் மாணவர்கள் நிறைய பேர் உண்டு. என் அப்பாவை அவரது மாணவர்கள் வைத்திருந்ததை போல. ஏன் எனக்கே அவ்வாறான mentors உண்டு! அதனால் வாத்தியாரக ஆகி இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியே ஒரு கவர்மெண்ட் வாத்தியாராக ஆகியிருந்தால், பொங்கலுக்கு பம்ப்பர் பரிசாவது கிடைத்திருக்கும். இன்கிரிமெண்டல் எல்லாம் ஜெட் வேகத்திற்கு உயர்ந்திருக்கிறதாமே?

3. அரசியல்வாதி: நான் ஸ்கூல் படிக்கும் பொழுது என்னுடைய ஹிஸ்டரி மேடம் என்னை பிற்காலத்தில் நீ ஒரு அரசியல்வாதியாகத்தான் வருவாய் என்பார். நிறையதடவை அவ்வாறு கூறியிருக்கிறார். சீரியஸாக. நான் மேடை நாடகங்கள் நடித்ததற்காக இருக்கலாம். இயற்கையாகவே இருக்கும அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கலாம். இல்லை ஓவர் வாயாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் அப்படி தான் சொன்னார். எனக்கு அரசியல் மீது நாட்டம் இருக்கிறதா? கொஞ்சம் இருக்கிறது என்பது உண்மைதான்; அனால் கிடைக்கக்கூடிய அடி உதை குத்துகளை நினைத்தால்; எஸ்கேப். ஒருவேளை கம்ப்யூட்டர் படிக்கவில்லையென்றால், ஊரிலே வாத்தியாராக ஆகி, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அரசியல்வாதியாக ஆகியிருக்கக்கூடும். யார் கண்டார்கள்? எங்க ஊர் பெரிய அண்ணனிடம் தர்ம அடிகள் கூட வாங்கியிருக்க வாய்ப்புண்டு.

4. எழுத்து: நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது எனது எட்டாம் வகுப்பில் என் அப்பா எழுதிக்கொடுத்த ஒரு நாடகத்திற்கு க்ளைமேக்ஸ் மாற்றி அமைத்தது தான் எனது முதல் எழுத்துப் பணி. அதற்கப்புறம் ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். என அப்பாவின் நாடகத்தை தழுவி. சில பல கவிதைகள் எழுதி பலரை படுத்தியிருக்கிறேன். பிறகு என்ஜினியரிங் காலேஜ் வந்த பிறகு இவற்றையெல்லாம் சில வருடங்கள் மறந்தே போனேன். பிறகு சென்னைக்கு வேளைக்கு வந்த பிறகு மீண்டும் தற்செயலாக நடந்த ஒரு சம்பவத்தை வைத்து “அறை நண்பன்” என்கிற கதை ஒன்றை எழுதினேன். த்ரில்லர். என் நண்பர்கள் அனைவருக்கும் அது பிடித்திருந்தது. பாராட்டினர். ஆனால் அதுதான் அவர்களுக்கு வினையாகிவிட்டது. ஆடினவன் காலும் எழுதினவன் பேனாவும் (கீ போர்டும்) சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க, அது உண்மைதான். கூட சேர்த்து எழுதினவன பாராட்டின நண்பனும் சும்மா இருக்கமுடியாதுன்னு சேத்துக்கோங்க. அடுத்தடுத்து எழுதி காமிச்சு அவன வாசிக்கவெச்சு, அவன ஊர விட்டே ஒட வெப்போமில்ல. நல்லாயிருக்குடா மச்சான் எனக்கு வயிறு கலக்குற மாதிரி இருக்கு, கொஞ்சம் போயிட்டுவரவான்னு அவன் எஸ்கேப் ஆக பாத்தாக்கூட விட மாட்டோமில்ல, என்ன பிடிச்சது? எந்த இடத்தில பிடிச்சதுனு கேள்விகள் கேப்போமில்ல. பிறகு சென்னையில் இருக்கும் போதே: நிறைய சிறுகதைகள், ஒரு நாவல் (நசீர்), காந்தம் என்று நிறைய எழுதிவிட்டேன். ஒரு வேளை முழுநேர பாக்கெட் நாவல் எழுத்தாளனாக இருந்திருக்கக்கூடும். யார் கண்டா தாடி கீடியெல்லாம் வெச்சுக்கிட்டு “எழுத்து பித்தர் முத்து” ன்னு கூட ஆகியிருந்திருப்பேன்.

நீங்கள் கம்ப்யூட்டர் இல்லாவிடில் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?

இதை தொட‌ர‌வேண்டும் என்றும் இதுக்கெல்லாம் ச‌ரியான‌ ஆள் அவ‌ர் தான் என்றும் என‌க்கு ந‌ம்ப‌த்த‌குந்த‌ வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவித்த‌தாலும் நான் ப்ர‌காஷை அழைக்கிறேன்.

மேலும்:

பாஸ்ட‌ன் பாலா
பொன்ஸ்
ல‌க்ஷ்ம‌ண்
பினாத்தல்கள் (I loved Thirumangalam Millionaire)
siva

புது வலைப‌திவ‌ர்:
செந்தில் (சூர்யா ப‌திவுக‌ள்)
Bala

எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!!

“பேனா எங்கேயடா? அடே ராசா நீ எடுத்தாயா? குரங்குகளா, ஒன்றை மேஜைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது? இருந்தாலும் இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டைக் கிராமபோனை வைத்துக்கொண்டு காதை துளைத்துக்கொள்ளலாம்.”

குழந்தைகளால் என்ன பிரயோஜனம்? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா? இன்னும் அழாமல் இருக்கத்தெரியுமா?

எங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு, பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது? அவனுக்கு இருக்கிம் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது? என்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரையாம். குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும்? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா. காராக மாறுகிறது. மோட்டார் சைக்கிள் இரட்டை மாட்டுவண்டி இன்னும் என்ன வேண்டும்?

அதுதான் கிடக்கிறது தமிழை தமிழாகப் பேசத் தெரிகிறதா? இலக்கணம் தெரியுமா? தொல்காப்பியம் படித்திருக்கிறதா? இந்த குழந்தைகளினால் என்ன பிரயோஜனம்? உங்களுக்கு தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம்?

மணிக்கொடியில் 15.7.1934 அன்று புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய கவிதை என்ற தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து

மேலும் யூடியூபிலிருந்து ஒரு வீடியோ:
http://www.youtube.com/watch?v=cXXm696UbKY

PS:
எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!!