பாத்துகங்கப்பா நானும் பொலிடிக்கல் அனலிஸ்ட் தான்!

முன்னமே சொல்லிருக்கன்ல என்கூட ஒரு தெலுங்குக்காரர் ஒர்க் பண்றாருன்னு, இன்னக்கி அவரு கூட உக்காந்து சாப்பிட்டேன். விளைவு பல அரசியல்:தெலுங்கு சட்டமன்ற நிலவரங்களை தெரிந்து கொண்டு என் ஜெலரல் நாலட்ஜை வளர்த்துக்கொள்ள உதவியாக இருந்தது. அவரும் மற்றொரு தெலுங்குக்காரரும் சாப்பிடும்பொழுதெல்லாம் அரசியல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்றும் சாப்பிடும்பொழுது சிரஞ்சீவி, தெலுங்குதேசம் போன்ற பெயர்கள் கூட்டுபொறியல்களாக ருசிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, தெரியாத்தனமா சிரஞ்சீவி எப்படி? என்கிற ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டேன். அவ்வளவுதான். என்னால் முடிந்த அளவுக்கு (ஞாபகம் இருக்கிற அளவுக்கு) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

சிரிஞ்சீவிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. ஆனா அவர் தான் ஆட்சியில் யார் அமர்வார் என்பதை முடிவுசெய்வார். (எங்கபாத்தாலும் கிங் மேக்கரா இருக்காய்ங்கப்பா. எல்லாரும் கிங்மேக்கர் ஆயிட்டா அப்புறம் யார் கிங் ஆகுறது?) விஜயசாந்தி விஜயசாந்தின்னு ஒரு லேடி சூப்பர்ஸ்டார் இருந்தாங்களே அவங்களோட கட்சி என்ன ஆச்சு? ஓ இருக்காங்க. அவங்க ரோஜா எல்லாரும் தெலுங்கு தேசம் கட்சியில சேர்ந்திட்டாங்க. என்னது விஜயசாந்தி கட்சியை கலைச்சிட்டாங்களா? (என்னை அரசியல் ஞானசூன்யம் போல நண்பர் பாக்கறார். நண்பர் ஒரு முறை தினமலர் படித்துக்கொண்டிருந்தைப் பார்த்ததாக ஆங்காங்கே வதந்தி நிலவி வருகிறது. அவர் தமிழ் நன்றாகப் பேசுவார். கிட்டத்தட்ட நம்ப தசாவதாரம் சிபிஐ கமல் போல! ஒரு நாள் தெரியாத்தனமா நான் அவரிடம்: உங்களுக்கு தமிழ் வாசிக்கத்தெரியுமான்னு கேட்டுத் தொலைச்சிட்டேன். என்னை விசித்திரமாக பார்த்த அவர், தமிழ் என்ன இசை வாத்தியமா வாசிக்கிறதுக்கு, படிக்கத்தெரியுமான்னு கேளுங்கய்யான்னார்.) ஆமா. கலைச்சிட்டாங்க. அப்புறம் அவங்களோட தனித்தெலுங்கானாங்கற கொள்கை என்னவாச்சு? சிரிக்கறார். பிறகு மீண்டும் ரோஜாவைப் பற்றிய செய்திகள். ரோஜா ரசிகராக இருந்திருக்க வேண்டும். இப்போ ரோஜா நம்ப கம்ப்யூட்டர் தாத்தா சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்துகொண்டு சிரஞ்சீவியை கண்டபடிக்கு பேசுகிறார்கள். சிரஞ்சீவி ஒரு நடிகர். நடிகர்கள் எல்லாம் நடிகைகளை கேவலமாக நடத்துவார்கள் என்று ஒட்டுமொத்த நடிகர்களையும் குறைகூறுவதோடு சிரஞ்சீவியையும் வாரியிருக்கிறார் தெரியுமா? ரோஜா அரசியல் பிரச்சாரம் செய்யும் பொழுது சில இடங்களில் மக்கள் ஆடச்சொல்வார்களாம். (நம்பாளுகளுக்குத்தான் தெரியுமே: இதுதான்டா சந்தர்ப்பம். இப்ப என்னகேட்டாலும் செய்வாய்ங்கன்னு நல்லா ராகிங் செஞ்சிருக்காய்ங்க போல.) ரோஜாவும் ஏதோ மக்கள் கலா ஆர்வத்தில் தான் நடனமாடச்சொல்கிறார்கள் என்று எப்பொழுதும்போல மக்களை புரிந்துகொள்ளாமல் நடனமாடியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை பிரச்சார பீரங்கி பதவியிலிருந்து இறக்கி, நடனசிகாமனி ஆக்கியிருக்கிறார்கள் தெலுங்கு மக்கள். (நக்கல் பிடிச்சவைங்கப்பா) ஆனா நடிகைகளின் கேள்விக்கு பதிலாக சிரஞ்சீவி: இப்போத்தான் தெரியுதா நான் (ஹீரோ) ரொம்ப கெட்டவன்னு? போன வருஷம் என்னோட ப்ளட் பாங்க் மற்றும் ஹாஸ்பிட்டல்ல நடந்த விழாவுக்கு வந்து என்னைப் பாராட்டி இவர்தான் வர வேண்டும் என்று பேசியது நினைவில்லையா என்று கேட்டிருக்கிறார் (அது போன வருஷம் இது இந்த வருஷம்ப்பா. ஆமா ஏன் சிரஞ்சீவி ரோஜா விஜயசாந்தியெல்லாம் பிடிச்சு போடல. பேமெண்ட் அதிகமாகியிருக்குமோ?) ஆனாலு ஒரு கட்சியின் தலைவர் பதவியிலிருந்துகொண்டு நடிகைகளைப் போல பேசமுடியாதல்லவா, அதனால் தனது மகளிர் அணியினரை வைத்து பேசவைத்திருக்கிறார் (இல்லை அவர்களே சிரஞ்சீவியின் மீது கொண்ட அன்பினால் பேசியிருக்கிறார்கள். ஆஹா இப்பத்தான்யா புரியுது ஏன் இவங்க எல்லா மகளிர் அணி வெச்சுக்கிறாங்கன்னு.) (இப்படியாக நடிகர் நடிகைகளிடையே அரசியில் அரைகுறை ஆடையோடு நடுத்தெருவில் நடனமாடிக்கொண்டிருக்கிறது.)

நீங்க சிரஞ்சீவி ரசிகரா? கேள்வியை எதிர்பாக்காத அந்த நபர், சுதாரித்து, தன் டிபன்பாக்ஸில் மீதமிருந்த தயிர் சாதத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து டபக் டபக் என்று வாயில் போட்டுக்கொள்கிறார். அருகிலிருந்த பாவக்கா பொறியலையும் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். பிறகு: அரேயார் (யாரது அரே?) வேறு என்ன சாய்ஸ் இருக்கிறது. ஒன்னு பாலகிருஷ்ணா. இல்லீன்னா சிரஞ்சீவி. பாலகிருஷ்ணாக்கு சிரஞ்சீவி எவ்வளவோ மேல். ஆமா. அது என்னவோ வாஸ்தவம் தான். யூடியூபில பாலய்யான்னு தேடுங்க போதும். அவ்ளோ க்ளிப்ஸ். எல்லாம் பாலய்யாவோட ஒரிஜினல் திங்கிங் அன்ட் கிரியேட்டிவிட்டி. ஒரு காட்சியிலெல்லாம் ரயில் பெட்டியை வெறும் கையை வைத்தே நகர்ந்து போக வைப்பார். இத்தனைக்கு கைக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே ரொம்ப தூரம் இருக்கும். நீங்க நம்பலைல? எனக்கு தெரியும். வேணுமினா நீங்களே செர்ச் பண்ணி பாத்துக்கங்க.

அப்புறம் தெலுங்குதேசம். இன்னும் எலெக்ஷன் முடிவடையவில்லை சந்திரபாபு நாயுடுக்கு இப்பொழுதே தான் ஜெயித்து முதல் மந்திரியாகிவிட்டதாக நினைப்பு. மக்களிடம் படிவங்கள் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து தருமாறு நச்சரிக்கறாராம். என்ன படிவங்கள்ன்னு நான் கேட்டாத்தான் நண்பர் சொல்வாரா? அவரே சொல்ல ஆரம்பித்தார். சந்திரபாபு அறிவித்திருக்கிற திட்டத்தைப் பார்த்தால், பேசாம இந்தியா போயிட்டு (ஆந்தரா) வீட்ல இருந்துட்டு தூங்கி தூங்கி எந்திருச்சா போதும். வேலைக்கே போகவேண்டாம். அப்படி என்ன திட்டம்? ஏழை மக்களுக்கு இலவச வீடு. இலவசமாக கரண்டு. இலவசமாக கலர் டீவி (ஒருத்தர ஒருத்தர் பாத்து படிச்சுக்கிறதுதான். இதுலயாச்சும் தமிழ்நாடு முன்னோடியா இருக்கம்னு ஒரு பெருமை!) இருபது கிலோவோ நாற்பது கிலோவோ அரிசி. மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம். உங்கள் கண்கள் சரியாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றன. யெஸ். மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் இலவசம். அப்புறம் எதற்கு வேலைக்கு போகவேண்டும்? (தமிழ்நாட்டில் வீடுதோறும் இலவசமாக் மாதத்துக்கு பத்து திருட்டு டீவிடிக்கள் கொடுப்பதாகவும் அந்தந்த கட்சி சேனல்களில் மக்கள் பங்குபெரும் இன்னும் பல நடனநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் வாக்குறுதிகள் அளித்திருப்பதாக கேள்வி!) ஆஹா இந்த திட்டம் நல்லாயிருக்கே. யாராவது நம்ப அரசு பொங்கலுக்கு வழங்கிய பம்ப்பர் பரிசை ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்துங்கப்பா. அதுசரி, யார் ஏழை யார் பணக்காரர் என்பதை யார் முடிவு செய்வது? எப்படி முடிவு செய்வார்கள்? என்னை விசித்திரமாக பார்த்த அவர்: வேறயார் அரசியல்வாதிகள் தான் முடிவு செய்வார்கள். ரேஷன் கார்டை வைத்துத்தான். எல்லோரிடமும் வெள்ளை அல்லது பிங்க் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பார்கள். வெள்ளை ரேஷன் கார்டு ஏழை மக்களுக்காம். (நம் ஊரில் பிங்க் ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் எல்லோருரிடமும் வெள்ளை ரேஷன் கார்டும் இருப்பது விந்தையிலும் விந்தை) இந்த வெள்ளை ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை மக்கள் கண்டுபிடிக்கப்படுவார்களாம். மொத்தம் ஒரு கோடியே என்பது லட்சம் ஏழை மக்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு இவ்வளவு இலவசங்களை அள்ளிக்கொடுக்க முப்பதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். (பின்னர் அவரே திருத்திக்கொள்கிறார்: முப்பதாயிரம் கோடி கோடி ரூபாய்) எனது கணிதமூளை இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் ஷட்டவுன் ஆகிவிடுவது வழக்கம். இன்றும் அவ்வாறே செய்தது. காங்கிரஸ்காரர்கள் இத்தனையையும் எப்படி செய்யப்போகிறார் என்பதை சொல்லவேண்டும் என்று கேட்கிறார்களாம் (ஐ! ஆச தோச. நீங்க காப்பிஅடிக்கவா? தவிரவும், எங்களுக்கே இன்னும் புரியாமல் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி விளக்கமுடியும்?)

பாலகிருஷ்ணா. த ஒன் மேன் ஆர்மி. த பாலய்யா. த பால்ட்ரிக்ஸ் (லைக் மேட்ரிக்ஸ்) அவரும் சந்திரபாபு நாயுடுவும் பிரதர் இன் லாவாம். இப்பொழுது பாலய்யாவின் மகளை சந்திரபாபுநாயுடுவின் மகன் கல்யாணம் செய்திருக்கிறாராம். (குட்!) அதனால், பாலய்யா காட் நோ சாய்ஸ். எனக்கு The White Tigerஇல் அரவிந்த அடிகா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது:

My cousin-sister Reena got hitched off to a boy in the next village. Because we were the girl’s family, we were screwed. We had to give the boy a new bicycle, and cash, and a silver bracelet, and arrange for a big wedding—which we did. Mr. Premier, you probably know how we Indians enjoy our weddings—I gather that these days people come from other countries to get married Indian-style. Oh, we could have taught those foreigners a thing or two, I tell you! Film songs blasting out from a black tape recorder, and drinking and dancing all night! I got smashed, and so did Kishan, and so did everyone in the family, and for all I know, they probably poured hooch into the water buffalo’s trough.

பாலய்யாவும் பெண்ண பெத்தவர் தான? பிரச்சாரம் பண்ணுன்னா பண்ணத்தான வேணும்?! பாலய்யாவிடம் மீடியா ஒரு முறை காங்கிரஸை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொல்லியிருக்கிறார்: என் பவர் தெரியாம என்னோட மோதறாங்க. நான் ஒரு முறை முறைத்தேன் என்றால் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் (அடங்கப்பா!) இதை மீடியாக்காரர்கள் காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டிருக்கிறார்கள்: அவர்கள் அவர் ஒரு சூப்பர்மேன். அவர் நினைத்தால் என்னவேண்டும் என்றாலும் செய்வார். ப்ளீஸ் எங்கள மாட்டிவிட்டுடாதீங்கன்னு நக்கல் அடித்திருக்கிறார்கள்.

பாலய்யா போகிற இடமெல்லாம், தொடையில தட்டி தட்டி பிரச்சாரம் செய்கிறாராம். (தொடயில் தட்றது அவரோட ஸ்டைல் அப்படீன்னு அவரே நினைச்சுக்கறார்!) போகிற இடத்தில் எல்லாம் மக்கள் அவரை அதே ஸ்டைல் பண்ணச்சொல்லி கேட்கிறார்களாம். நம்மை ஓட்டுகிறார்கள் என்று புரியாமல் இதுவும் மாங்குமாங்கென்று ஸ்டைல் பண்ணி காட்டியிருக்கிறது. (எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது: நான் காலேஜ் படிக்கும் பொழுது மெக்கானிக்கல் வாத்தியார் இருந்தார். அவரோட ஒவ்வொரு க்ளாஸ்லையும் மாரல் ஸ்டோரி சொல்லுவார். செம மொக்கையா இருக்கும். கிட்டத்தட்ட இந்த பதிவு போலன்னு வெச்சுக்கங்களேன். ஆனா கேர்ள்ஸ் எல்லாம் ரொம்ப ரசிக்கிற மாதிரி ஆக்ட்கொடுக்குங்க. அவர் க்ளாஸ¤க்கு வந்ததுதான் தாமதம். கேர்ள்ஸ் சார் மாரல் ஸ்டோரி சார். மாரல் ஸ்டோரி சார்ன்னு கேக்க ஆரம்பிச்சிடுங்க. அவருக்கு முகத்தில் பெருமையைப் பாக்கனுமே. அப்பப்பா தாங்காது. மனுஷனுக்கு பொண்ணுங்க எல்லாம் நம்மள ஓட்டுதுகன்னு கடைசிவரைக்கும் தெரியாது!)

பாலய்யா இப்படி தொடையில் கைய வெச்சு தட்டி தட்டி ஸ்டைல் பண்ணி பண்ணி, காங்கிரஸோட சின்னம் (ஐந்து விரல்கள்) பாலய்யாவின் தொடையில் பதிந்தேபோய்விட்டதாம். இந்த ரகசியத்தை எப்படியோ மர்மமான முறையில் துப்புதுலக்கி தெரிந்துகொண்ட காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் சின்னத்தை தனது தொடையிலே பதித்துவைத்துக்கொண்டிருக்கும் தெலுங்குதேச கட்சிக்காரரான பாலய்யாவே உண்மையில் காங்கிரஸ்காரர் தான் என்று அவரை வைத்தே எதிர் பிரச்சாரம் செய்கிறார்களாம். (இது எப்படி இருக்கு!)

Blog.Magazines.WhiteTiger.WolfTotem.

இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக எதைக்கூறுவீர்கள் என்று என்னிடம் கேட்டால் நான் சொல்வது: Blog. Blog வருவதற்கு முன்னரும் Personal பக்கங்கள் இருக்கத்தான் செய்தன என்றாலும், அவ்வாறான பக்கங்களை உருவாக்குவது தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது. Learning HTML was a very big hurdle. இப்பொழுது அந்த தடை நீங்கிவிட்டதால் சொந்த பக்கங்களை வைத்துக்கொள்வது மிக மிக எளிதாகிவிட்டது. தமிழ்வாத்தியார்கள் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் blog வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒரு நாள் என் அண்ணியிடமிருந்து ஒரு மெயில். என்னுடைய அண்ணன் மகள்களுக்கு புதிய ப்ளாக் ஆரம்பித்திருப்பதாக. அவர்கள் வரையும் படங்களை பகிர்ந்துகொள்வதற்கு blog உதவியாக இருக்கிறது. இந்த ப்ளாக் என்கிற கான்சப்ட் வராமல் இருந்திருந்தால், அவர்கள் உலகத்துடன் படங்களை பகிர்ந்துகொள்வது கண்டிப்பாக சாத்தியப்பட்டிருக்காது. Moreover, when someone is listening, when you know there is an audience, your creativity increases exponentially.

*

சில வருடங்களுக்கு முன்னர் வரை நிறைய software magazines ப்ரிண்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று அவையெல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக இந்த Programmer’s Magazine culture அழிந்துகொண்டுவருகிறது. Software Magazine was absorbed by Dr.Dobb’s Portal. ASP.NETPro இப்பொழுது இலவசமாக PDF உருவில் கிடைக்கிறது. I am going to unsubscribe CODE magazine. இருக்கிற blogகளை follow ( ?! 😦 ) செய்வதே மிகக்கடினமாக இருக்கிறது.

*

இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அரவிந்த் அடிகா எழுதிய The White Tiger மற்றும் Jiang Rong எழுதிய Wolf Totem. The White Tigerஐ ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். I cannot put it down. மேலும் அவர் நடையில் இருந்த நக்கலை மிகவும் ரசித்துப்படித்தேன். சல்மான் ருஷ்டியிடம் தான் இந்த எழுத்து நடையை நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு பிறகு இந்தியர்களையும் அவர்களது வாழ்க்கையையும் இவ்வளவு நுனுக்கமாக யாரும் நக்கலடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். I liked “the minister’s sidekick” என்கிற கதாப்பாத்திரம். ஒரு சாப்டரில் சைட்கிக் (அல்லக்கை) என்று சொல்லிவிட்டால், அவர் அடுத்து வரும் அனைத்து சாப்டர்களிலும் சைட்கிக் தான். முதல் சாப்டரில் சொல்லிவிட்டு பத்தொன்பதாவது சாப்டரில் அவரை பற்றிக்கூறும் பொழுதும் சைட்கிக் தான். மேலும் Rooster Camp மிக அற்புதமான ஒரு உதாரணம். நன் ஹிந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? 30,000,000 கடவுள்களா? இருக்கும்ல. காட்பாடில ஆரம்பிச்சு கட்பாடிவரை எண்ணுனோமினா கூடவே வரும். தமிழர்களை நீக்ரோக்கள் என்று சொன்னது வேண்டுமானால் தமிழன் என்கிற முறையில் வருத்தமாக இருந்தது. ஆனால் உக்காந்து யோசிக்கும் பொழுது, நீக்ரோக்கள் சொந்தமண்ணைச்சேர்ந்த மக்கள் என்கிற பொருள் தருவதாயின், தமிழர்கள் நீக்ரோக்கள் என்பது சந்தோஷமே. என் நண்பர் ஒருவருக்கு (இந்தியர்களையும் இந்தியர்களின் அட்ஜஸ்ட் கரோ யார் என்கிற கொள்கையும் வெகுவாக நக்கலடிப்பவர்) forward செய்து வைத்தேன். நாவல்களை படித்திராத அவர், இந்த நாவலை இரண்டே நாட்களில் படித்து முடித்தார். அவ்வளவு உண்மை. இந்த புத்தகத்தை கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும். பிறிதொரு நாள் இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு தனிபதிவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.

*

Wolf Totem. Totem என்கிற வார்த்தையை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டதில்லை. Totem என்பது என்னவென்று தெரியாமலே தான் இந்தப் புத்தகத்தை நான் வாங்கினேன். பிறகு encyclopediaவில் தேடியபொழுது காவல் தெய்வங்கள் என்கிற தோராயமான பொருள் வருவது தெரிந்தது. நம்ம ஊர்ல கருப்பசாமி தூண் இருப்பது போல.

முதல் அறுபது பக்கங்கள் படித்துமுடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட நேஷனல் ஜியோகராபியில் ஒரு த்ரில்லான டாக்குமென்டரி பார்த்தது போல ஒரு உணர்வு. ஓநாய்களின் வேட்டைத்திறனை அற்புதமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.

*

மங்கோலியாவின் ஒரு பகுதியில் பனி படர்ந்து வருகிறது. அந்த மலையின் ஒரு புறம் காற்று எப்பொழுதும் அழுத்தமாக வீசிக்கொண்டிருக்கும். அதனால் பனி படர்ந்து தங்குவதில்லை. அங்கிருக்கும் புல்வெளி எப்பொழுதும் பனியிலிருந்து தப்பித்துவிடும். ஆனால் மலையின் மறுபுறம் காற்று அவ்வளவாக வீசாத காரணத்தால் பனி ஒரு ஆள் உயரத்துக்கு கூட சேர்ந்துவிடும். பனியினால் மலையில் புல்வெளி மீதம் இருக்கும் இந்தப்பகுதியில் மான்கள் இரைதேட வந்துவிடும். நீண்டநாட்கள் புற்களைப் பார்க்காமல் பயணம் செய்த இந்த மான்கள் ஒரே சமயத்தில் பச்சைப் பசுமையாக இவ்வளவு புற்களைப் பார்த்தபிறகு வாய் ஓயாமல் சாப்பிட ஆரம்பிக்கும். ஒநாய்கள் மான்களை மோப்பம் பிடித்துவிடும். ஆனால் உடனடியாக வேட்டையாடிவிடாது. காத்திருக்கும். மான்கள் புற்களைத் தின்று வயிற்றை நிறப்பும் வரையிலும் காத்திருக்கும். இரை கிடைத்த சந்தோஷத்தில் மான்களும் புற்களை வயிறு வெடிக்கும் அளவிற்கு தின்னும். ஓநாய்கள் மிகத்தந்திரமானவை. நரிகள் தான் தந்திரமானவை என்று பாடங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அது மிகப்பெரிய பொய். தந்திரம் என்பதை விட ஓநாய்களைப் போல திட்டமிட வேறு எந்த உயிரினத்துக்கும் தெரியாது. மனிதனே மிக தந்திரமான போர் தந்திரங்களை ஓநாய்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறான். மான்களை வேட்டையாட ஓநாய்கள் அதிகாலை நேரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும். இரவுமுழுவதும் தூங்கிவிட்டு சிறுநீர்கழிக்காமல் படுத்திருக்கும் மான்கள். அந்த நேரத்தில் ஓநாய்களை அவற்றை வேட்டையாடும் பொழுது அவற்றால் நீன்ட தூரம் ஓட இயலாது. உண்மைதான். வெகுசில கிழமான்கள் மட்டுமே தூக்கத்தின் நடுவே எழுந்து சிறுநீர்கழித்துக்கொள்ளும். மேலும் அதே ஒரு சில கிழமான்கள் மட்டுமே, புற்களை வயிறு முட்ட தின்னாது. அல்·பா மேல்(Alpha Male) எனப்படும் ஓநாய்களின் தலைவன் உண்டுவிட்டு கலைத்திருக்கும் மான்களை வேட்டையாட பாதி வட்டமாய் தன் சகாக்களை நிறுத்திக்கொண்டு அந்த சரியான தருணத்திற்காக காத்திருப்பான். தருணம் எட்டியவுடன் வேட்டை துவங்கும் பொழுது மான்களுக்கு தாங்கள் செய்துவிட்ட தவறு புரிந்திருக்கும். ஆனால் இந்தப்பாடம் அவைகளுக்கு மிக மிக காஸ்ட்லி.

wolf totemஇல் கொடுக்கப்பட்டிருக்கும் ஓநாய்களின் வேட்டைத்திறனின் ஒரு சாராம்சம் இது. படித்துக்கொண்டிருக்கிறேன்.

*

நேஷனல் ஜியோகர·பியில் சிறுத்தை மான்களை வேட்டையாடுவதை வழக்கம்போல காட்டிக்கொண்டிருந்தார்கள். எத்தனை முறை இதைப் பார்த்தாலும் நமக்கு இது போர் அடிப்பதே இல்லை. அதே ஆச்சரியமான அகல விரித்த கண்களுடனே தான் நாம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மான்களுக்காக நான் கவலையெல்லாம் படப்போவதில்லை. இந்தமுறை நான் பார்த்தபொழுது ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தேன். சிறுத்தை தான் அதிவேகமாக ஓடும் சக்திபடைத்தது. ஆனால் பார்த்திருக்கிறீர்களா, அவை வேட்டையாடும் பொழுது, டப்பென்று எகிறிகுதித்து ஓடுவதில்லை. அதிவேகமாக ஓடும் சிறுத்தை கூட பம்மி பம்மி தான் தனது வேட்டையை துவக்குகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? (நீ வேலைவெட்டி இல்லாம சும்மா உக்காந்து டீவி பார்த்துகிட்டிருக்குறன்னு தெரியுது) சும்மாவா திருவள்ளுவர் சொல்லியிருக்கார்:
(அறத்துப்பாலில் பம்மல் அதிகாரத்தில் ஒன்பதாவது குறள்)
பம்முவார் பம்மாதார் பம்மாவிடில் சட்டென
பம்மி பயன்பெ றுவார்.

சிறுத்தைகிட்டருந்து கத்துக்கோங்கப்பா.

*