மீள் பதிவு – புல் தரையில் ரத்தம்

(சிறுகதை)

ராஜூ அப்பொழுதுதான் பார்த்தான் அந்தக்காட்சியை. அந்த கிழவர் அந்த குழியை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார். மரத்தினடியில் ஏகாந்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருந்தவன் இந்த செயலைக்கண்டதும் துணுக்குற்றான். அந்த குழி பெரிய குழியாயிற்றே. விழுந்தவர்கள் எழ முடியாதே. இந்த கிழம் எதற்கு அங்கே செல்கிறது. அட என்ன இது புல் தரையில் இரத்தம். இரத்தத்தைப் பார்த்த ராமன் ஐயோ இங்கே எப்படி ரத்தம் வந்தது என்று யோசித்தான். ஐயோ.. அப்பா அல்லவா இங்கே எப்பொழுதும் படுத்துக்கொண்டிருப்பார். இங்கு பெரிய குழியில் என்ன சிவப்பாய்? ராஜூ எழுந்து உட்கார்ந்தான். ஏன் இப்படி அந்தி சாயும் ஏகாந்தத்தை குலைப்பது போல இந்த கிழவர் நடந்து கொள்கிறார்? ராஜூ எழுந்து அந்த கிழவரை நோக்கி கத்தினான். ராமன் ஐயோ ரத்தம் ரத்தம் என்று உரக்க கத்தினான். யார் காதிலும் விழுந்திருக்குமா என்று யோசிக்க நேரமில்லை. அப்பாவுக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமா? அப்பாவை யாரது கொலை செய்திருப்பார்களா? ராமனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனது மூக்கிலிருந்து ரத்தம் கசியத்தொடங்கியது.

ஓட முயன்ற ராஜூவின் காலில் பெரிய கல் ஒன்று இடித்தது. நகம் பெயர்ந்து கொண்டு வந்தது. ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் கசிந்து வெளியேறியது. யோவ் கிழவா ராஜூவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உன் தலையில் கல்லை போட்டு உடைக்க. ராஜூ மிக வேகமாக ஓடினான். நகம் பிய்த்துக்கொண்டு வந்த இடத்தில் மண் படர்ந்தது. வலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்தது. ராமன் ஓடினான். அப்பா. அப்பா. ரத்தம் மட்டுமே இருக்கிறது ஆனால் உடல் எங்கே? யாரும் ஏன் இதை பார்க்கவில்லை? ஓடினான். ஓடினான். ஓடினான். டேய் ராமா எதுக்கு தலைதெறிக்க ஓடியாற? டேய் ராமா நில்லுடா. யாரையும் ராமன் கண்டுகொள்ளவில்லை. கிழவர் ராஜுவின் கத்தல்களை கண்டுகொள்ளவில்லை. ஏதோ குழிக்குள் தான் இது வரை சேர்த்து வைத்த தங்க கட்டிகள் எல்லாம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு அவர் நடந்துகொண்டிருந்தார். ராஜூ மிக வேகமாக அந்த கிழவரை நோக்கி ஓடுவதை அந்த ஜெயிலின் வார்டன் பார்த்துக்கொண்டேயிருந்தார். வார்டனும் ஓடி வரத்தொடங்கினார். யோவ் யோவ். டேய். டேய். ராமா. நில்லுடா. ம்ம்ஹ¥ம். ஓடினான் ராமன். அதோ அங்கே காவல் நிலையம். ஐயா ஐயா. ஐயா. என் அப்பாவை யாரோ கொன்று விட்டார்கள். நான் பார்த்தேன். ரத்தத்தை பார்த்தேன். சிவப்பாய். உறைந்திருந்தது. குழிக்குள். புல் தரையில். எல்லா இடத்திலும். அவரை யாரோ கத்தியால் குத்தியிருக்கிறார்கள். என்னது இங்கே கொலையா? என்னடா சொல்கிறாய்?

ஹாங்? யாருப்பா? ஏன் கத்தற? யோவ் கிழவா குழியிருக்கு. விழுந்த அப்படியே போய்கினுருப்ப. ஓ. என்ன ஓ? ஓங்கி ஒன்னு விட்டன்னா ஓன்னு வாயப்பொளப்ப. எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குதுப்பா. மன்னிச்சுக்க. சரி சரி வா இந்தப்பக்கம். வா இந்தப்பக்கம். அது என்ன உன் கையில் ரத்தம்? உறைந்து இருக்கிறது? யார் நீ? உன் பெயர் என்ன? ராமன் பதில் சொல்லவில்லை. உன் வீடு எங்கிருக்கிறது. ஏன் உன் மூக்கில் ரத்தம் வருகிறது? டேய் ராமா போ. போ இளநி காய்களை பெறக்கிட்டு வா. உங்கய்யன் வந்துடபோறான். அப்புறம் உனக்கு அடிதான். அப்பத்தா. அம்மா எங்க? எவடா உனக்கு அம்மா? அந்த ஓடுகாளிசிறுக்கியா? —முண்டையா? என் குடும்ப கவுரவத்தையே சிதச்சுட்டு போயிட்டா. அம்மாவாம் அம்மா. போடா வெளங்காதவனே. போ. பொறக்கிட்டுவா. உங்கப்பன் கிட்ட அவளப்பத்தி கேட்டு அடிவாங்கி சாகாத. ராமன் ஓடுகிறான். அப்பத்தா ஏன் இப்படி திட்டுகிறது என்று தெரியாமல் ஓடுகிறான். அதோ அங்கே இருக்கிறது இளநி ஒன்று. எடுத்துக்கொள்கிறான். மேலும் மேலும் மேலும். ஒரு மரத்தினடியில் வந்து குவித்துவைக்கிறான்.

ஒரு மரத்தினடியில் வந்து ராஜூ அந்த கிழவரை உட்கார வைக்கிறான். டேய். என்னாச்சு? வார்டன் சார்.ஒன்னுமில்ல சார். இந்த கிழம் குழிக்குள்ள விழப்பாத்துச்சு சார். நான் தான் காப்பாத்தினேன். ஆமா பெரிய ரசினிகாந்து. இவருக்கு என்னாச்சு? கண்ணு தெரியலையாம். யோவ். ஹாங். யோவ். யாரு. பெரிய இந்தியன் தாத்தா. யாருன்னு கேக்கறாரு. உம் பேரு என்னய்யா? ராமன் எல்லா இளநி காய்களையும் பெறக்கிக்கொண்டுவிட்டான். தென்னைமரத்தின் நிழல் குளுகுளுவென்றிருந்தது. குளிர்ந்த காற்று ஓடியாடி காய் பெறக்கியதற்கு இதமாக இருந்தது. ஓடையில் தண்ணீர் குடிக்கலாம் என்று கீழே குனிந்தான். தண்ணீரில் தன் முகம் கலங்கலாய் தெரிந்தது. கிழத்துக்கு வார்டனின் முகம் அவ்வளவாக தெரியவில்லை. கலங்கலாக மங்கலாக இருந்தது. தலை சுற்றுவது போல இருந்தது. யோவ் உன் பேரு என்னன்னு கேக்கறின்னுல்ல? ஏன் உன் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது? டேய் ஓடி போய் தண்ணி கொண்டுவா. ராஜூ ஓடுகிறான். வார்டன் கிழத்தின் முகத்தினருகே குணிந்து பார்க்கிறார்.

கீழே குணிந்து ராமன் தண்ணீரில் தெரியும் தன் முகத்தை கொஞ்சம் அள்ளி பருகிக்கொள்கிறான். எப்படியோ மீண்டும் அங்கே முகம் வந்துவிடுகிறது. ராமன் எவ்வளவு எடுத்து குடித்தும் அவன் முகம் தீரவேயில்லை. நச் என்று தலையில் ஏதோ விழுந்ததை போல இருந்தது. தண்ணீரில் தொப்பென்று ஒரு இளநி காய் விழுந்து தண்ணீர் இவன் முகத்தில் அடிக்கிறது. ராமன் நிமிர்ந்து மேலே பார்க்கிறான். தலை வலிப்பது போல இருக்கிறது. தலை சுற்றுகிறது. கிழத்துக்கு தலை சுற்றுகிறது. டப்பென்று அப்படியே கீழே சாய்கிறது. வார்டன் தாங்கி பிடிக்கிறார். தலையை பின்னால் பிடித்தவாறு தான் பெறக்கி சேமித்து வைத்த இளநி காய் குவியலுக்கு அருகே ராமன் உட்காருகிறான். தூரத்தில் ஒரு மரம் குட்டையாகவும். பின் நெளிந்துகொண்டும். வளைந்துகொண்டும். பின் ஏன் திடீரென்று வளர்ந்து பெரிதாகிறது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறான் ராமன். கால்களுக்கு இடையிலே பெரிய பெரிய பாம்புகள் ஊறுகின்றன. தண்ணீரில் தவளைகள் பெரிது பெரிதாக இருக்கின்றன. அந்த தவளைகள் இவனது முகத்தை அள்ளி அள்ளி குடிக்கின்றன. இவனுடைய அம்மா வருகிறாள். உடன் யாரோ வருகிறான். அவன் இவனிடம் வந்து வாடா ராமா. ஹா ஹா ஹா ஹா என்று சிரிக்கிறான். வாடா ராமா. ஹா ஹா ஹா. வாடா ராமா. ஹா ஹா ஹா. அம்மா அப்படியே அவனை விழுங்குகிறாள். அப்பத்தா ஓடி வருகிறாள். கையில் துடைப்பம் இருக்கிறது. அப்பத்தா பாம்பாய் மாறிவிடுகிறாள். ராமா என்னடா ஆச்சு? என்ன ஆச்சு?

என்ன ஆச்சு வார்டன்? தெரியலை. இவர் யார் என்று பாருங்கள். சுத்தமாக கண் தெரியவில்லை. எப்படி இந்த ஜெயிலில் காலம் தள்ளுகிறார். நான் பார்த்ததில்லையே இவரை. இவரை யாருக்காவது தெரியுமா? ராமா என்னடா ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? அப்பத்தா தலையில் கொம்பொன்று முளைக்கிறது. ராமன் சிரிக்கிறான். அப்பத்தாவின் நாக்கு பாம்பு போல நெளிகிறது. ராமன் பயப்படுகிறான். பக்கத்தில் வராதே. பக்கத்தில் வராதே. ராமன் மூக்கை தொட்டுப்பார்க்கிறான். மூக்கில் ரத்தம். செக்கச்செவப்பாய் ரத்தம். ரத்தம் வழிந்துகொண்டேயிருக்கிறது. ராசா. ராமா. என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி இருக்க? தலையை ஏன் பிடிச்சிட்டு இருக்க? ஏன்டா உனக்கு மூக்கில் ரத்தம் வருகிறது?

ஏன் உன் கையில் ரத்தம் இருக்கிறது? உன் அப்பாவை யார் கொன்றார்கள்? சார். இன்ஸ்பெக்டர் சார். என்னய்யா ஏட்டையா? எனக்கு இவனைத் தெரியும் சார். இவன் எனக்கு பக்கத்து வீட்டு பையன் தான். கொஞ்சம் ஒரு மாதிரி. இல்ல. நான் அப்படி இல்ல. ராமன் கத்தினான். இல்ல வார்டன் சார். யாருக்குமே தெரியல. இவர் யாருன்னு. எல்லோரும் எப்பவோ ஒரு வாட்டி பாத்திருக்காங்க ஆனா யாரு? பேரென்னன்னு தெரியல. எங்களுக்கும் தெரியல. அவரோட நம்பர் வெச்சு தான் பாக்கனும். வெக்கமாயில்லையாயா உங்களுக்கு. என்ன தான் கிழிக்கிறீங்க? போங்க போய் இவரு யாரு என்னன்னு பாருங்க. ஏட்டைய்யா பையனை கூப்பிட்டுட்டு போய் என்னன்னு பாருங்க. கொலை அது இதுன்னு உளறுறான். கையில வேற ரத்தமா இருக்கு. வேணும்னா கூட 206ஐயும் கூப்பிட்டுக்கோங்க. ராமசாமி ஐயாவோட ஆதரவாளர்கள் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் பண்றாங்களாம். நான் அங்க போகணும். நீங்க கிளம்புங்க. டேய் பையா உம் பேரென்ன சொன்ன? ராமன் ஆங்.. போ ஏட்டைய்யா கூட போய் எங்க ரத்தம் பாத்தன்னு சொல்லு.

என்னய்யா ரெக்கார்ட்ஸ்ல பாத்தீங்க சொல்லுங்க. கிழம் எங்க வார்டன் சார்? அவரை இப்பத்தான் டாக்டர்ஸ் செக்கப்புக்கு கொண்டுபோய் இருக்காங்க. சார் ரெக்கார்ட்ஸ் பார்த்ததுல இவரு இங்க இருபது வருஷத்துக்கும் மேலா இருக்கார் போல தெரியுது சார். என்னது இருபது வருஷத்துக்கும் மேலையா? என்னய்யா சொல்றீங்க? ஏன் இவரை விடுதலை செய்யல? என்ன தப்பு செஞ்சிருக்கார்? கொலை சார். கொலையா? இவரா? அப்படீன்னு தான் சார் போட்டிருக்கு. ஆறடி இரண்டு அங்குலம் உயரம் இருக்கும் ராமச்சந்திரன்…ம்ம்ம்…1957இல்..என்னது? 1957லா? டேய் எங்கடா ரத்தம்? இதோ இங்கதான் சார். இங்கயா? எங்கடா இருக்கு? இதோ இங்க சார். யோவ் 206 இங்கவாய்யா. எங்க இருக்கு ரத்தம்? இல்ல ஏட்டைய்யா. இவன் ஏதோ உளறுறான். குழிக்குள்ள இருக்கு சார். குழிக்குள்ளயா? பாருங்க சார்..ரத்தம் இருக்கு. 206 இவனுக்கு பைத்தியம் முத்திப்போச்சு. எங்கையுமே ரத்தம் இல்லையே, டேய் போ போய் ஒழுங்கா வேலைய பாரு. பக்கத்து வீட்டுக்காரன்ங்கிறதால விடறேன். போ. இல்ல ரத்தம் பாத்தேன். நான் பாத்தேன். ஏட்டைய்யா இவன் சொல்றமாதிரி புல் தரையில ரத்தம் இல்ல. ஆனா இவன் கையில ரத்தம் இருக்கே கவனிச்சீங்களா? ஹா..ஆமா 206..டேய் உங்கப்பா எங்க? அதான் சொல்றேனில்ல. யாரோ கொன்னிருக்காங்க. டேய் லூசு.. வாடா உங்க வீட்டுக்கு போகலாம். 206 இவன் வீடு வரைக்கும் போயிட்டு வரலாமா?

ஆமா சார். 1957ல்ல தான்..ம்ம்ம்ம்…ரங்கசாமி என்பவரை கத்தியால் குத்தி…இவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர்…தில்லையிலிருக்கும் மனநலகாப்பகத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டார்…அங்கு சிகிச்சை முடிந்து குணமானதும்…1957ல்ல கொலை செஞ்சிருக்காரா? என்னய்யா இது? இன்னி வரைக்கும் ஜெயில்ல என்ன செய்யறார்? கிட்டத்தட்ட 50 வருஷம் ஆச்சே? எனக்கு ·புல் ஹிஸ்டரி கிடைக்குமா? எடுத்திட்டு வர முயற்சி பண்ணுங்க. யார் இவர்? எதற்காக இவ்வளவு வருஷம் சிறையில் இருக்கிறார். ஏன் இவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. உறவினர்கள்? அப்பா? அம்மா? அவ்வளவு வேண்டாதவர்களாக போய்விட்டாரா? ஹலோ வார்டன். டாக்டர் என்னாச்சு டாக்டர்? வழக்கமா வயசானா வருகிற வியாதிதான். கண்ணுக்கு ஆபரேஷன் தான் செய்யனும். ஆபரேஷன் செஞ்சாலும் அத தாங்குவாரான்னு தெரியல. இங்க விட்டுட்டு போறீங்களா இல்ல.. தெரியல டாக்டர்..இவருடைய கேஸ் புதிராக இருக்கிறது..இன்னும் நிறைய விசாரிக்கனும்..நாங்க வர்றோம்….யோவ்..கிழத்த பிடிச்சுக்கோங்க..

206 இவன பிடிச்சுக்கோ..ஓடிட போறான்..என்னது யாருமே இல்லயா வீட்ல..ரங்கசாமி..ரங்கசாமி..டேய் உங்க அப்பா எங்கடா போயிட்டார்..கொன்னுட்டாங்க சார்..போட்டன்னா..ரங்கசாமி..என்னது பிசுபிசுப்பா இருக்கு..206 தீப்பெட்டி வெச்சிருக்கீங்களா? 206 தீப்பெட்டி இல்ல ஏட்டைய்யா..ஒன்னு தான் இருக்கு..யோவ்?! இருங்க ஏட்டைய்யா கொளுத்தறேன்..ரங்கசாமி..ரங்கசாமி..ஏட்டையா..இங்க பாருங்க..அடப்பாவி..கத்தியால குத்தப்பட்டிருக்கிறார்..யாரோ நிறைய தடவை குத்திருக்காங்க..ஐயோ..ரங்கசாமி..மூச்சு இல்லய்யா..அடப்பாவி அப்பாவையே கொன்னுட்டியே..பிடிங்க அவனை..என்னடா ஆச்சு? ஏன் இப்படி பண்ணின? ஏன் உங்கப்பாவை குத்தின? ஏட்டையா இங்க இருக்கு கத்தி..

எத்தன வாட்டி கத்தி கத்தி கேக்குறது, கிழத்துக்கு காதுலையே விழல..அடச்சே..தாத்தா..உங்க பேர் என்ன? ஹாங்..ராமன்..ராமன் என்கிற இந்த சிறுவன் தன் தந்தையை நான்குமுறை நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த காரணத்துக்காக, சிறுவன் என்பதை மனதில் கொண்டு இந்த நீதிமன்றம் அவனை மனநலக்காப்பகத்தில் சேர்க்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. மேலும் தண்டனை காலத்துக்கு முன் மனநலம் தேறிவிட்டால்ராமனுக்கு மூக்கில் ரத்தம் வழிய ஆரம்பித்தது..ஜட்ஜின் வெள்ளை முடியில் புழுக்கள் நெளிய ஆரம்பித்தன..மூக்கிலிருந்து ஒரு வண்டு வெளியேறி வாயினுள் நுழைந்தது..அவனை பாம்புகள் கொத்த ஆரம்பித்தன..ராமன் ஐயோ ஐயோ என்று கத்த ஆரம்பித்தான் ராமன்.. இந்த சிறுவனை யாரேனும் பார்க்க வருவதென்றால்…ஏன் தாத்தா உன்ன யாருமே பாக்கவரலை? 50 வருஷமாச்சு…உனக்கு தண்டனை கொடுத்து..ஏன் நீ வெளியிலே வருவதற்கு முயற்சி செய்யல? இப்படி ஒன்னுமே பேசாம இருந்தா எப்படி? நீங்களும் நானும் ஒரே ஊர் தான் தெரியுமா? வார்டன் சார். என்னய்யா..அந்த மனநலகாப்பக ரெஜிஸ்டர் பாத்தோம்..யாரோ காசின்னு ஒருத்தர்..இவருக்கு மாமா முறை வேணுமாம்..அவருதான் ரெகுலரா கொஞ்ச நாளைக்கு வந்து பாத்திருக்கிறார்..யாரு காசியா?

என் பெயர் காசி..இங்க காப்பகத்துல இருக்கிற ராமனுக்கு நான் மாமா…என்ன கொண்டுவந்திருக்க அந்த லூசு பையலுக்கு..போ..அந்த கடைசில இருப்பான்..என்ன தான் பெறக்குவானோ..கீழ இருந்து கல்லு கல்லா பெறக்குதான்..திடீர்ன்னு மேலே நிமிந்து பாக்கான்..பின் ஐயோ ஐயோன்னு கத்..டேய் ராமா.. நான் காசி வந்திருக்கன்..டேய் ராமா..கல்லு பெறக்குனது போதும் இப்படி வந்து உக்கார்..கல்லா? நான் இளநி பெறக்குறேன்..அங்க உக்காராத மாமா..பாம்பு நெறைய இருக்கு..ம்ம்ம்..இந்தா தயிர்சாதம்….உனக்கு பிடிக்குமே..உனக்கு ஒன்னு தெரியுமா? சொன்னா உனக்கு புரியுமா? தடாலென்று அன்னாந்து வானத்தை பார்க்கிறான் ராமன்..உங்கப்பா ரங்கசாமி சாகலை தெரியுமா? ஹா ஹா ஹா ஹா..காசியா? அவரோட ஊரு பேரு? எதுனாலும் கெடச்சதா? இல்ல சார்.. தேடிட்டிருக்கோம்..நான் சொல்றேன்..அப்பாடா கிழம் பேசிருச்சு…காசி எனக்கு மாமா முறை வேணும்…என் மேல ரொம்ப பாசமா இருப்பார்..அவர் மட்டும் தான்..அவர் மட்டும் தான்..என்னை எப்படியும் வெளில கூட்டிட்டு போயிருவேன்னு சொல்லிட்டேயிருப்பார்.

தாத்தா…தாத்தா..காசி.. காசி இப்ப இருக்காரா? கிழம் சிரித்தது…காசியும் நடயனேரியில தான் இருந்தாரா? ஆமா எங்க வீட்டுக்கு பக்கம் தான்…அடுத்த தெரு.. அவர் தெக்குவீட்டுக்கு பக்கத்தில இருந்தார்..தெக்குவீடா? வார்டன் அவசர அவசரமாக தன் பர்ஸைத் திறந்து அதிலிருக்கும் போட்டோ ஒன்றை எடுத்து காட்டுகிறார்..இவரா..இ..இவரா..காசி.. ஆ..ஆமா..நான் தான் நீங்க சொல்ற காசி வடிவேல் முருகனுடைய பேரன்..காசி வடிவேல் முருகன் இந்த ஜெயிலுக்கு வார்டனா ரெண்டு மாசத்துக்கு முந்திதான் வந்தேன்… ராமன் சிரிக்கிறார். தாத்தா..எனக்கு உங்களை பாத்ததுமே ஏதோ ஒன்னு பிடிபட ஆரம்பிச்சது..ஏதோ ஒன்னு..ஏதோ ஒன்னு..

ஆ..ஆமா நானும் அப்பலேருந்து கேட்டுட்டே இருக்கேன்ல.. ஏன் நீங்க 50 வருஷமா இப்படியே இங்கேயே இருந்திட்டீங்க? வெளில வர முயற்சி செய்யலையா? சிரிக்கிறார் ராமன். சிரிக்கிறார். நான் லூசுப்பா..லூசு….இந்த லூச யாருமே கவனிக்கல..யாருமே..நான் இன்னும் அதிகமா முயற்சி செஞ்சிருக்கனும்னு இப்போ தோணுது..இப்போ தோணுது..

சிம்புதேவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?

இப்பொழுது சா·ப்ட்வேர் துறையில் வேலை செய்பவர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் மற்றவர்களுக்கு அவ்வாறான சம்பளம் கிடைப்பதில்லை, அதனால் சா·ப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்பது போன்ற காட்சிகள் வைப்பது தமிழ் சினிமாவுக்கு வழக்கமாகப்போய்விட்டது என்று நினைக்கிறேன். இவ்வாறான காட்சிகள் வைத்தால் வரி விலக்கு உண்டு என்று அரசு அறிவித்திருக்கிறதா என்ன?

அறை எண் 305இல் கடவுள் படத்தை இன்று வசந்தம் சேனலில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜாவா சுந்தரேசன் என்கிற சாப்ட்வேர் துறையைச் சார்ந்த நபரைப் பற்றிய காட்சிகள் அதிகம். நேரடியாகவே அவர் வாங்கும் மொத்த சம்பளம் அந்த மேன்சனில் குடியிருப்பவர்களது மொத்த சம்பளத்தை விட அதிகம் என்று அந்தப் படத்தில் வரும் ராஜேஷ் குறிப்பிடுகிறார். BSc Computer Science படித்த அவர் 85000 ரூபாய் சம்பளம் வாங்கும் பொழுது, BBA படித்த படத்தின் ஹீரோ 4000 ரூபாய் சம்பளத்துக்கு இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறார் என்றோரு வசனமும் வருகிறது. இதில் செம கடுப்பான நம்ப ஹீரோ ஜாவா சுந்தரேசனின் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருக்கும் மேலாளரிடம் இதே கேள்விகளை கேட்டு, இனி எப்படி நீங்கள் சம்பாதிப்பீர்கள் பார்ப்போம் என்று, கேலக்ஸி பாக்ஸின் துணையுடன், அனைவரது விரல்களையும் இல்லாமல் செய்துவிடுகிறார். விரல்கள் இல்லையென்றால் எப்படி கம்ப்யூட்டரை ஆபரேட் செய்வீர்கள், எப்படி இவ்ளோ பணம் சம்பாதிப்பீர்கள்?

அந்த சா·ப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து மக்களின் விரல்களும் குட்டியாகப் போகும் அந்த காட்சியையும் அவர் சா·ப்ட்வேர் துறையில் பணிபுரியும் மக்களை பயன்படுத்தியே செய்திருக்கிறார், என்கிற விசயத்தை படத்தின் டைரக்டர் சிம்புதேவன் மறந்துவிட்டார். அது கிடக்கட்டும். சிம்புதேவன் இந்த படத்தை இயக்குவதற்கு எத்தனை சம்பளம் வாங்கினார்?

சிம்புதேவனுக்கு இது எத்தனையாவது படம்? அவர் பெரிய கார்ட்டூனிஸ்ட் என்பதெல்லாம் இருக்கட்டும். இது இவருக்கு ரெண்டாவது படம் தானே? எத்தனை மாதங்கள் உழைத்து இந்த படத்தை எடுத்திருப்பார்? 6 மாதங்கள்? குத்துமதிப்பாக ஒரு 25 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பார் என்று வைத்துக்கொள்வோம். ஷங்கர் இதற்கும் குறைவானதொரு தொகை கொடுத்திருக்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். ஆறு மாதங்களுக்கு 25 லட்ச ரூபாய். மாதத்திற்கு எத்தனை லட்சங்கள் வருகிறது? நான்கு லட்சம்! இது சா·ப்ட்வேர் துறையினர் வாங்கும் பணத்தை விட மிகவும் அதிகம்.

இவ்வளவு சம்பளம் வாங்குவதற்கு அவர் என்ன படித்திருக்கிறார். எனக்கு தெரியாது. என்னமோ படித்திருக்கிறார். அவர் படித்த அந்த படிப்பை படித்த அத்தனை பேரும் தமிழ் நாட்டில் அவர் வாங்குகிற சம்பளமா வாங்குகிறார்கள்? பிறகு ஏன் இவர் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? கேட்டால், அவர் மூளையை (creativity) காரணம் காட்டக்கூடும்.

சிம்புதேவன் கார் வைத்திருக்கிறாரா? படத்தில் வரும் ஜாவா சுந்தரேசனைப் போல அவரும் இன்னும் ரெண்டு படங்கள் கழித்து ஹெலிகாப்டர் வாங்கக்கூடும்.

உறங்கும் பெண்

(சிறுகதை)

சுவாத் தலை குணிந்தாள், “என்னை கூறுபோட்டு என் மீது படிந்த கறையை வேகமாகத் துடையுங்கள்” என்று தன் தாயிடமும் தந்தையிடமும் தன் மூன்று சகோதரர்களிடமும் அவள் விழுந்து மன்றாடினாள். அவளுடைய தந்தை அமைதியாகவும் அழுத்தமாகவும் கேட்டார்” அப்படி என்னதான் நடந்தது. விளக்கமாகச் சொல்”. சுவாத்தினுடைய குரல் தளுதளுத்தது. “எனக்கு நடந்ததை நீங்கள் யாரும் நம்பப்போவதில்லை. நீங்கள் நம்பாமலிருந்தாலும் எனக்கு நடந்தது நடந்ததுதான்”

தந்தை மிகவும் கடினமான குரலில் “என்ன நடந்தது என்பதை எங்களுக்கு தெளிவாக எதையும் மறைக்காமல் சொல்” என்றார். சுவாத் தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கமாக சொல்லத்தொடங்கினாள்.

சென்ற இரவில் எப்பொழுதும்போல அவள் தன் அறையை பூட்டிவிட்டு தூங்கப்போனாள். அவள் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, வேறு உயிரனங்கள் ஏதும் இல்லாத ஏதோ ஒரு பூங்காவில் தான் நடந்துகொண்டிருப்பதைக் கண்டாள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு இளைஞன் அவளை தாக்கினான். அவளுக்கு அவன் யாரென தெரியவில்லை. அவன் இதுவரையில் எங்கே பதுங்கியிருந்தான் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை. அவன் அவளை கீழே விழ்த்தினான். அவள் மீது படர்ந்து அவளது ஆடைகளை கிழித்தெரிந்தான். அவளுடைய இறைஞ்சல்களையும்; அபய குரல்களையும்; அவர்கள் இருவரின் முகங்களையும் நனைத்துவிட்ட அவளுடைய கண்ணீரையும் அவன் கண்டுகொள்ளவும் இல்லை செவிமெடுக்கவும் இல்லை. அவனுக்கு தேவையானவற்றை அவளிடமிருந்து அவன் எடுத்துக்கொண்டான்.

அப்புறம் அவளுக்கு இரண்டாவது கனவு வந்தது. ஜனசந்தடி நிறைந்த தெரு ஒன்றில் அவள் நடந்துகொண்டிருந்தாள். அப்பொழுது முன்பு கனவில் வந்த அதே இளைஞன் அவள் முன் திடீரென குதித்து அங்கிருந்த எல்லோர் முன்னிலையிலும் அவளை பலாத்காரம் செய்தான். அரங்கேறிய பலாத்காரத்தை பார்ப்பதை அங்கிருந்த ஒருவரும் நிறுத்தவில்லை. அப்புறம் அவளுக்கு மூன்றாவது கனவு வந்தது. அவள் அவளுடைய தாத்தாவின் கல்லறைக்கு அன்று சென்றிருந்தாள். சூரத்-அல்-·பாத்திகாவை வாசித்து தாத்தாவின் ஆன்மாவை நினைத்து பிரார்த்தித்துக்கொண்டிருக்கும் பொழுது, அதே வாலிபன் அவள் முன் மீண்டும் தோன்றி அவளை மூன்று முறை பலாத்காரம் செய்ததைக் கண்டு அவள் அதிர்ச்சியுற்றாள். அவன் சிரித்துக்கொண்டே சொன்னான், சுற்றுப்புறச்சூழலின் அழகியல் தான் எனக்கு இவ்வாறான சக்தி தருகிறது.

அவளுடைய தந்தை அவளிடம் “அவன் யார் என்று உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். “அவன் யார் என்று எனக்கு தெரியாது. இதற்கு முன் என் வாழ்க்கையில் அவனை நான் பார்த்ததேயில்லை. அவனை கனவில் மட்டுமே பார்த்திருக்கும் பொழுது எப்படி நான் அவனை அறிந்திருக்கமுடியும்? ஆனால் இன்னொருமுறை அவனை நான் நேரில் பார்த்தால் கண்டிப்பாக அடையாளம் கண்டுகொள்வேன். ஏனென்றால் அவனுடைய முகத்தை என்னால் மறக்கமுடியாது” என்றாள் அவள்.

“சரி. நீ கனவு முடிந்து எழுந்திருக்கும் பொழுது என்ன நடந்தது?” என்றார் அவளுடைய தந்தை.
அவள் சொன்னாள் : “நான் என்னுடைய படுக்கையில் படுத்திருந்தேன். நான் அணிந்திருந்த உடை கிழிந்திருந்தது. என்னுடைய உடல் முழுவது ரத்தம் படர்ந்திருந்தது. ஆங்காங்கே நகக்கீறல்களும் பற்களை உபயோகித்து கடித்த தடங்களும் இருந்தன.”

அவளுடைய அன்னை சொன்னாள் “இவள் என்னுடைய மகள். இவளை நான் நன்றாக அறிவேன். இவள் ஆழமாக தூங்குகிறவள். பீரங்கி குண்டுகளின் சத்தங்கள் கூட இவளை எழுப்பிவிட முடியாது. நடந்து முடிந்த அனைத்திற்கும் தூக்கத்துக்கும் கனவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவள் தூங்கிவிட்ட பிறகு யாரோ ஒரு வாலிபன் அறைக்குள் ரகசியமாக நுழைந்து இவளை நாசம் பண்ணியிருக்கவேண்டும். ஆம் அதுதான் நடந்திருக்கும்”.

“நான்கு ஆண்கள் இருக்கும் இந்த வீட்டினுள் அப்படி நுழைய இந்த பகுதியில் இருக்கும் எந்த ஆணுக்கு துணிச்சல் இருக்கிறது?” என்று சுவாத்தின் தந்தை கர்ஜித்தார்.

சுவாத்தின் மூன்று சகோதரர்கள் கடும் கோபம் அடைந்து கத்தத்தொடங்கினார்கள். “அந்த இளைஞன் மட்டும் எங்கள் கையில் கிடைத்தால் அவனை துண்டுதுண்டாக வெட்டுவோம். வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டும் உலர்ந்த திராட்சை பழங்களை விட மிகச்சிறியதாக இருக்கும்” என்று சூளுரைத்தனர்.

சுவாத் தன் அன்னையை பார்த்து “நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த ளிளைஞனை எனக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால் இந்த பகுதியிலிருக்கும் அனைத்து இளைஞர்களையும் நான் அறிவேன்” என்றாள் சந்தேகமாக.

சுவாத்தினுடைய தந்தை கேட்டார் “அது இருக்கட்டும். அவன் உன்னை பலாத்காரம் செய்யும் பொழுது ஒரு மானமுள்ள பெண் செய்வது போல நீ அவனை தடுத்து நிறுத்தினாயா? கத்தி கூப்பாடு போட்டாயா?”

“நான் தடுத்தேன். என்னால் முடிந்தமட்டும் சத்தமாக கத்தினேன். கதறினேன். கெஞ்சினேன். ஆனால் அவன் சிரித்தான். சிரித்துக்கொண்டே அவன் என்னிடம் நாம் கனவுலகில் இருக்கிறோம். உறக்கத்திலிருப்பவர்களின் உலகத்தை விழித்திருப்பவர்கள் அறியமாட்டார்கள் என்றானப்பா” என்றாள்.

நீண்ட யோசனைக்குப்பிறகு சுவாத்தின் தந்தை உடைந்த குரலில் நடந்ததை பற்றி அவள் யாரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று சுவாத்தை எச்சரித்தார்.

ஆனால் சுவாத்துக்கு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியிலிருக்கும் வேறு பெண்களுக்கும் நடக்கும்; ஆண்கள் சிறுமைப்படுத்தப்படுவர்; அவர்களை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க இயலாத ஒரு கையறுநிலைக்கு அந்த ஆண்கள் தள்ளப்படுவார்கள்; எனவே இதற்கு தீர்வாக அவர்கள் தங்களது பெண்டு பிள்ளைகளை தூங்கவிடாமல் தடுப்பார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோற்றுத்தான் போகும். ஏனென்றால் பெண்கள் தூங்குவதற்கு கடமைப்பட்டவர்கள். தூக்கத்தில் அவர்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள். கிழிந்த உடையுடன் தூக்கத்திலிருந்து அவர்கள் விழித்தெழுவார்கள்.

*

-எஸ்.ராமகிருஷ்ணன் தனது வலைபக்கத்தில் இந்த Zakaria Tamer எழுதிய The Sleeping Woman என்கிற இந்த கதயை குறிப்பிடிருந்தார். அதை யாரெனும் பொழுபெயர்த்துத் தருமாறும் கேட்டிருந்தார். என்னால் முடிந்தவரையில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

கயர்லாஞ்சி தீர்ப்பு: நீதிபதியின் கண்ணீர்

க.ம. தியாகராஜ்

மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் ஆதிக்கச் சாதியினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஆறு தலித்துகளுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. ‘கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கு’ என அழைக்கப்பட்ட இவ்வழக்கின் முடிவை அறிந்துகொள்ள மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயகவாதிகளும் இரண்டாண்டுகளாகக் காத்திருந்தனர்.

கடந்த 17 மாதங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கொலை செய்தது, விதிகளுக்கு மாறாகக் கூட்டமாகக் கூடியது, வன்செயலில் ஈடுபட்டது, சாட்சியங்களை அழித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட எட்டுப் பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனையும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுவதாக பண்டாரா மாவட்டச் சிறப்பு நீதிபதி

எஸ்.எஸ். தாஸ் 24.9.2008இல் அளித்த தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தீர்ப்பை வாசிக்கும்போது அவரது கண்கள் கலங்கிக் கன்னங்களில் நீர் வழிந்தோடியதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

நீதிபதி யாருக்காக, எதற்காக அழுதார்? ஒரு நீதிபதி தான் விசாரித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கும் போது அழுத நிகழ்வு இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை. இதைத் தவிர வேறு சில சிறப்புகளும் இத்தீர்ப்புக்கு உண்டு. குற்றம் நிகழ்ந்த இரண்டாண்டுகளுக்குள் தண்டனை வழங்கப்பட்டதும் தலித் மக்களைப் படுகொலை செய்ததற்காக ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுங்கூட இதுவே முதல்முறை. இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் 1997ஆம் ஆண்டு யுவாட்மாலில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். மராத்வாடா பல்கலைக்கழகப் பெயர் மாற்றம் குறித்த போராட்டத்தின்போது ஒரு தலித் பலர் முன்னிலையில் உயிருடன் கொளுத்தப்பட்டார். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மிகக் குறைந்தபட்சத் தண்டனைகள் மட்டும் பெயரளவில் வழங்கப்பட்டன. இவற்றை ஒப்பிடும்போது கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானதே எனக் கருதத் தோன்றும். உண்மை அதுவல்ல.

தீர்ப்பின் சுயரூபத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் சற்றுப் பின்னோக்கிப் போக வேண்டும்.

உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகள் நமக்குச் சில உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், பண்டார மாவட்டம், மொகாலி தாலுகாவில் அமைந்துள்ள சிறுகிராமம்தான் ‘கயர்லாஞ்சி’. இதில் மொத்தம் 181 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 700. புத்த மதத்தைச் சேர்ந்த மகர் பிரிவுத் தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் மூன்று . கோண்டு இனப் பழங்குடியினர் குடும்பங்கள் 14. குன்பி மற்றும் களர் ஆகிய இதர பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்கள் 164.

கயர்லாஞ்சியின் மகர் பிரிவுத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கேவுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. இவர் கிராமத்தின் ஒரு கோடியில் ஒதுக்குப்புறமாக மண் குடிசை அமைத்துத் தன் மனைவி சுரேகா (44 வயது), மகன்கள் சுதிர் (21), ரோஷன் (19), மகள் பிரியங்கா (17) ஆகியோருடன் வசித்துவந்தார். தமது நிலத்தில் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்துவந்த இவரது நிலத்திற்கு அடுத்துள்ள நிலம் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிராமத் தலைவருடையது. அந்நிலத்திற்கு டிராக்டர்கள், வண்டிகள் சென்றுவருவதற்கான பாதையாகக் கிராமத் தலைவருக்குப் பையாலாலின் நிலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சாகுபடிசெய்யப்பட்ட காலங்களில் வளர்ந்து நிற்கும் பயிர்களின் மேல் ஏறி நசுக்கிக்கொண்டு கிராமத் தலைவரின் டிராக்டரும் வண்டிகளும் சென்று வருவது வழக்கம். இதனால் பையாலாலின் இரண்டு ஏக்கர் நிலம் பறிபோனதாகவே கருதப்பட்டது. இது குறித்து நியாயம் வேண்டிப் பையாலாலின் மனைவி சுரேகா குரல் எழுப்பினார். அக்கிராமத்தின் மற்ற இரண்டு தலித் குடும்பங்கள் ஆதிக்கச் சாதியினரின் அச்சுறுத்தல் காரணமாக இவர்களுக்கு ஆதரவு தராமல் ஒதுங்கியிருந்தன.

பக்கத்துக் கிராமமாகிய ‘டுசாலா’வில் வசிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் சித்தார்த், ராஜேந்திரா ஆகியோரிடம் தங்களது நிலத்தை மீட்டுத்தர உதவும்படி வேண்டியுள்ளார் சுரேகா. சித்தார்த் ‘கயர்லாஞ்சி’ கிராம உயர் ஜாதி மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டார். கோபம்கொண்ட ஆதிக்கச் சாதியினர் பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில் தன் சொந்த நிலத்துக்கு ‘உரிமை’ கொண்டாடிய சுரேகாவுக்கும் அவளுக்காகப் பரிந்துபேசிய சித்தார்த்துக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் சுரேகா கள்ளச் சாராய வியாபாரம் செய்துவருகிறார் எனவும் கதைகட்டினர்.

03.09.2006அன்று நியாயம் கேட்டுவந்த சித்தார்த்தை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் துரத்திவந்த கயர்லாஞ்சி கிராம ஆதிக்கச் சாதி இந்துக்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். சுரேகா, மகள் பிரியங்கா, மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோர் இதை நேரில் கண்ட சாட்சிகளாவர். அவர்கள் சித்தார்த் தாக்கப்பட்ட செய்தியை ராஜேந்திராவுக்குத் தெரிவித்தனர். அவர் சித்தார்த்தை ‘காம்ப்பீ’ நகர் ‘ராய் மருத்துவமனையில்’ சிகிச்சைக்காகச் சேர்த்தார். இது காவல் துறை தொடர்பான வழக்கு என்பதால் ராய் மருத்துவமனை சார்பில் காவல் துறையினரிடம் புகார்செய்யப்பட்டது.

சம்பவம் நடந்த இடம் கயர்லாஞ்சி என்பதால் வழக்கு அண்டால்கவான் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 29.09.2006இல் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். மகாதி தாலுகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அன்றே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 12 பேரும் தம் உறவினர்கள் சுமார் 40 பேருடன் ‘டுசாலா’வுக்குச் சென்றனர். இவர்கள் வரும் செய்தியைக் கேட்ட சித்தார்த்தும் ராஜேந்திராவும் ஓடி ஒளிந்துகொண்டனர். அவர்கள் இருவரையும் காணாத கூட்டம் அடுத்து ‘கயர்லாஞ்சி’ நோக்கிக் கடும் கோபத்துடன் சென்றது. அக்கூட்டத்துடன் உள்ளூர் உயர் ஜாதி இந்துக்களும் சேர்ந்துகொண்டு பையாலாலின் குடிசையை நோக்கிப் பயங்கர ஆயுதங்களுடன் புறப்பட்டனர். குடிசைக்குள் பையாலாலின் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்.

குடிசைக்குள் புகுந்த உயர் ஜாதி இந்துக்கள், (பெண்கள் பலரும் அக்கூட்டத்துடன் வந்தனர்.) அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்திக் கையோடு கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து பையாலாலின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்துநின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த உயர் ஜாதி இந்துப் பெண்கள் யாரும் தம் ஆண்களின் வெறிபிடித்த இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை. பிறகு ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண் உறுப்புகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு ரத்தம் தெறிக்கும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை நான் முந்தி நீ முந்தி எனப் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர்.

குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர். பிரியங்காவின் பிரேதத்தையும்கூடப் பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு போலீஸ்காரர் கூறியுள்ளார். தன் குடும்பத்தினர்மீது தொடுக்கப்பட்ட மனிதத்தன்மையற்ற இத்தாக்குதல்களை ஒரு மறைவிடத்திலிருந்து ஆற்றாமையுடன் பார்க்க நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார் பையாலால்.

பாதுகாப்பற்ற அப்பாவித் தலித் மக்களின் மீது தம் மிருகவெறியைப் பிரயோகித்து அவர்களை முற்றாக அழித்த ஆதிக்கச் சாதியினர் பிறகு ஒன்றுகூடி அன்று கயர்லாஞ்சியில் நடந்தவற்றை யாரும் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அவ்வாறு சொன்னால் சொன்னவர்களுக்கும் இதேவிதமான தண்டனைகள் காத்திருக்கின்றன எனவும் அச்சுறுத்திவிட்டுக் கலைந்து சென்றனர். சிதைக்கப்பட்ட அச்சடலங்கள் நாலாபுறங்களிலும் வீசி எறியப்பட்டன.

அன்று இரவு 7:45 மணிக்கு பையாலால் சித்தார்த்தை அழைத்துக்கொண்டு போய் அண்டால்கவான் காவல் நிலையத்தில் புகார்செய்தார். காவலர்கள் இரவு 11:00 மணிக்கு ‘கயர்லாஞ்சி’ கிராமத்திற்குச் சென்று விசாரித்தனர். அத்தகைய சம்பவம் எதுவும் அங்கே நிகழவில்லை என விசாரிக்கப்பட்ட அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர். காவல் துறை பையாலாலின் குடிசைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

மறுநாள் 30.09.2006 காலை 8:00 மணிக்கு பையாலால் அண்டால்கவான் காவல் நிலையத்தில் எழுத்து மூலம் தன் புகாரைப் பதிவுசெய்தார். அதன்பின் ‘சிவ்லால் கராடே மஹராஜ்’ என்பவர் பிரியங்காவின் உடல் தன் நிலத்துக்கு அருகில் ஓடும் ‘வடேகவான்’ கால்வாயில் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் சொன்னார். சடலத்தின் பெண் குறிக்குள் கூரிய கம்பு சொருகப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மஹராஜ். பிறகு கயர்லாஞ்சியைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் சிதறிக்கிடந்த நால்வரின் சடலங்களையும் கைப் பற்றியது காவல்துறை. அவசர அவசர மாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அந்த நான்கு சடலங்களும் புதைக்கப்பட்டன.

சடலங்கள் உருக்குலைந்துபோயிருந்தமையால் ‘உரிய விதி’களின்படி பிரேதப் பரிசோதனைசெய்ய இயலவில்லை என மருத்துவர் குழு அறிவித்தது. கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் யோனிக் குழாய்களையும் கருப்பைகளையும் சோதித்ததில் பெண்கள் இருவரும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது.

பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் தன்னார்வக் குழுக்களும் கயர்லாஞ்சிக்கு வந்து முகாமிட்டன. நடந்தவற்றை அறிய அப்படுகொலைகளை நேரில் பார்த்த மக்களுடன் பேசினர். கடும் முயற்சிக்குப் பின்னர் உண்மை கண்டறியப்பட்டது. பையாலால் குடும்பத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறித்த உண்மையைப் பகிர்ந்துகொள்ள மிகப் பயந்துபோயிருந்த கிராம மக்கள் முதலில் தயங்கினர். பிறகு பெயர்களை வெளியிடக் கூடாது என்னும் நிபந்தனையுடன் பேசத்தொடங்கினர்.

தேசிய மனித உரிமை ஆணையமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் கொடுத்த தொடர் நெருக்கடிகளின் காரணமாக நான்கு பிணங்களையும் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது. ஆனால் ‘காலம் கடந்துவிட்ட’தால் அந்தச் சோதனையால் புதிதாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை என அரசு அறிவித்தது.

காவல் துறையினர் தம் ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினரா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் இதனை “ஓர் இரக்கமற்ற வெறிபிடித்த அதிகபட்ச மிருகச் செயல்” எனக் கண்டித்துள்ளார். இதற்குப் பொறுப்பான காவல் துறை அலுவலர்களும் மருத்துவ அதிகாரிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகளின்படி இந்தப் படுகொலைகள் வெறும் நிலத்துக்காக நடத்தப்பட்டவையல்ல என்பது தெளிவாகிறது. தம் சாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த மேலாதிக்கத்தை ஒப்புக்கொள்ள மறுத்துத் தம் நிலத்துக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் சட்டத்தின் வழியில் போராடிய, தலித் குடும்பம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் இது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது. இந்தக் கோணத்தில் இந்த வழக்கை ஆராய நீதிபதிக்கு எது தடையாக இருந்தது? காவல் துறை தொடக்க நிலையிலிருந்தே ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமாக மிகக் கவனமுடன் இந்த வழக்கைக் கையாண்டு வந்துள்ளது என்பது தெளிவு.

பையாலால் ஒரு தலித் என்பதாலேயே அவரது வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த அவருடைய நிலம் அவருடைய விருப்பத்திற்கு மாறாக உயர் ஜாதியினரால் பறிக்கப்பட்டு அவர்களது டிராக்டர்களும் கால்நடைகளும் செல்வதற்கான பாதையாக மாற்றப்பட்டது. அது குறித்து நியாயம் கேட்கவந்த சித்தார்த்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணமும் அவர் ஒரு தலித் என்பதுதான்.

அவரால் கொடுக்கப்பட்ட புகார் 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (ஷிசி & ஷிஜி றிக்ஷீமீஸ்மீஸீtவீஷீஸீ ஷீயீ கிtக்ஷீஷீநீவீtவீமீs கிநீt 1989) பதிவுசெய்யப்படாமல் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 147, 148, 149 & 324 ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு எனப் புகழ்ந்து கூறி வரவேற்கப்படும் இத்தீர்ப்பு உண்மையில் ‘ஜாதிய ஒடுக்குமுறைக்கு’ எதிரானதா? இப்படியரு தீர்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் ‘சமூக நீதி’ நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக் கொண்டாட முடியுமா? தனிப்பட்ட இரண்டு விவசாயிகளுக்கிடையே ஏற்பட்ட நிலத் தகராறு காரணமாக நடத்தப்பட்ட கொலைகள் எனப் பதிவுசெய்ததற்கும் அந்த நோக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டதற்கும் அதனடிப்படையில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனைகள் வழங்கப்பட்டதற்கும் பின்னால் இயங்குவது உயர் சாதி மனோபாவத்தைத் தவிர வேறென்ன? அதிகபட்சத் தண்டனை என்பது இந்த மனோபாவத்தை மறைக்கும் ஒரு முகமூடியாகவே இந்தத் தீர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவகையில் இது உண்மைக்கு எதிரான ஒரு தீர்ப்பு.

2008 செப்டம்பர் 15இல் நீதிபதி எஸ். எஸ். தாஸ் அவர்களால் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட எட்டு நபர்களைத் தவிர மற்ற அனைவரும் குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டுள்ளனர். தன் தீர்ப்பில் இந்தக் கொலைகளுக்கு முன்விரோதமும் பழிவாங்கும் உணர்வுமே காரணம். வேறு எந்தக் கோணத்திலும் இந்த வழக்கை அணுகுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் ‘தெளிவு’படுத்தியுள்ளார். தலித்துகளுக்கெதிரான வன்முறையின் இருப்பை ஒப்புக்கொள்வதிலும் தலித்துகளுக்கெதிராக நடைபெற்றுவரும் குற்றங்களைத் தடுப்பதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதிலும் நமது காவல் துறையும் நீதித் துறையும் கொண்டுள்ள அக்கறையின்மையின் வெளிப்படையான நிரூபணமாக விளங்குவது இத்தீர்ப்பு.

பையாலாலின் புகார் பெறப்பட்டவுடன் கயர்லாஞ்சிக்குச் சென்று விசாரித்த போலீசார் அது போன்ற சம்பவம் ஏதும் இந்த ஊரில் நடக்கவில்லை எனக் கிராமத்து ஆதிக்கச் சாதியினர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு குறைந்தபட்சம் பையாலாலின் குடிசையைக்கூட எட்டிப்பார்க்காமல் திரும்பிச் செல்லுமளவுக்கு ‘அப்பாவி’களாய் இருந்துள்ளனர். மறுநாள் 30.09.2006 காலை 8:00 மணிக்கு பையாலால் எழுத்து மூலம் தமது புகாரைப் பதிவுசெய்த பின்னர், சிவலால் கராடே மஹராஜ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சடலம் கைப்பற்றப்பட்ட பிறகுதான், காவல் துறைக்கு பையாலால் தன் புகாரில் சொன்னதுபோல் ஏதாவது நடந்திருக்குமோ என்னும் சந்தேகம் வருகிறது.

17 வயதுள்ள ஒரு இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாகவும் பெண் குறியில் கூரிய மரக்கட்டை அடித்துச் சொருகப்பட்ட நிலையிலும் கைப்பற்றப்பட்டுள்ளபோது அவர் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கலாமோ என்னும் மிக எளிமையான சந்தேகம்கூடக் காவல் துறையினருக்கு எழவில்லை. பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களுக்கும்கூட அப்படி யரு கேள்வி எழவில்லை. விசாரணை செய்த நீதிபதிக்கும் அந்தச் சந்தேகம் எழவில்லை. எல்லோரும் அவ்வளவு அப்பாவிகளாய் இருந்திருக்கிறார்கள். ஆக, திட்டமிட்டுத் திசைதிருப்பப்பட்டுள்ள ஒரு வழக்கு இது என்பதை தலித்துகள் உணர வேண்டும்.

2006 அக்டோபர் முதல் நவம்பர்வரை பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் கயர்லாஞ்சியில் முகாமிட்டு நேரில் கண்டறிந்து வெளியிட்டுள்ள அறிக்கைகளை நீதிமன்றம் பொருட்படுத்தாததற்குக் காரணம் என்ன?

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் காணப்படும் தவறான தகவல்களுக்காகவும் வழக்கைச் சரியாகப் பதிவுசெய்யாமல் கடமை தவறிய குற்றத்திற்காகவும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களும் காவல் துறை அதிகாரிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்தத் தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கடமை தவறிய காவல் துறை அதிகாரிகளால் தவறாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும்தான் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றினடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி கண்ணீருடன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். யாருக்காக, எதற்காக வடிக்கப்பட்ட கண்ணீர் அது?

மரண தண்டனைக்கெதிரான குரல்கள் வலுப்பெற்றுவரும் ஒரு தருணத்தில் இவ்வழக்கில் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமைப் போராட்டம் என்பது அடிப்படையில் தலித் விடுதலைக்கான போராட்டம்தான் என்னும் அடிப்படையில் தலித் அமைப்புகள் கயர்லாஞ்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்த வேண்டும்.

இந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒவ்வொரு தலித்தும் ‘மனித உரிமையைக் காக்கப் போராடும், ஒரு போராளியே’ என்பதை நிரூபிக்கும் வகையில் வருணாசிரம தர்மத்தாலும் சாதியமைப்பாலும் மன நோயாளிகளாக மாற்றப்பட்ட கயர்லாஞ்சிக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனை ரத்துசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துவதை தலித்துகள் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

நன்றி காலச்சுவடு

வெட்கிக் கூசச்செய்யும்..

கீழே இருக்கும் இந்த யூடியூப் வீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பார்த்து மனம் வேதனைப் பட்டிருக்கக்கூடும். வெட்கிக் கூசியிருக்கக்கூடும். தமிழனாக இருப்பதற்கு வெட்கிக் கூசியிருக்கக்கூடும்.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் “இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாமென்று” சொல்லுகிறார்கள்..நான் சொல்லுவது : “என்னைப்போல emotional guys கூட பார்க்கக்கூடாது. you are warned!”

மாணவர்களுக்குள் சண்டைகள் நடக்கும். இந்த சண்டை மாணவர்களுக்குள் நடக்கும் சாதரண சண்டை போல தெரியவில்லை. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. சண்டைகள் நடக்கும் பொழுது மாட்டிக்கொண்ட ஒருவர் இப்படி அடிவாங்குவது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால் போலீஸ் என்கின்ற ஒன்று அங்கே நின்று கொண்டிருந்ததே. அவர்கள் என்னத்தை செய்து கொண்டு இருந்தார்கள்? ஒருவரை பத்து பதினைந்து பேர் சேர்ந்து அடிக்கும் பொழுது அங்கேயிருக்கும் போலீஸ் அந்த சண்டையை தடுக்காமல், அடிவாங்குபவன் சாகும் வரை வேடிக்கை பார்க்கும் எனில்.. கேட்டால் permission கிடைக்கவில்லையாம்..அட போங்கப்பா.

அசிஸ்டென்ட் கமிஷ்னரை டிரான்ஸ்·பர் செய்தாகிவிட்டது. ஏழு மாணவர்களை அரெஸ்ட் செய்தாகிவிட்டது. Everything is ok now. ****. இன்னும் இது ஒரு மிகப்பெரிய கலவரமாக உருவாகக்கூடும் என்று சொல்லுவது ஒரு மிகப்பெரிய கலவரம் உருவாக வேண்டும் என்று நினைப்பதைப் போன்றது. எவ்வளவு பெரிய கலவரம் உருவானாலும், இந்த சம்பவத்தை, அடி தாங்காமல் மயக்கமுற்று ஒன்றும் செய்யமுடியாமல் கீழே சாய்ந்து விட்ட ஒரு மனிதனை, பெரிய பெரிய கம்புகளை வைத்து விடாமல் அடித்து, கடைசி எழும்புகள் நொறுங்கும் வரை அடித்து நொறுக்கும் காட்டுமிராண்டிக் காட்சியை போலீஸ் கண்டு களித்ததை இன்னும் கொஞ்சநாளில் நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் கூட மறந்துவிடும்.

எத்தனையோ விசயங்களை மறந்திருக்கிறோம்..இதை மறக்கமாடோமா என்ன?

http://in.youtube.com/watch?v=d5AsWevkj1A

எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!!

“பேனா எங்கேயடா? அடே ராசா நீ எடுத்தாயா? குரங்குகளா, ஒன்றை மேஜைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது? இருந்தாலும் இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டைக் கிராமபோனை வைத்துக்கொண்டு காதை துளைத்துக்கொள்ளலாம்.”

குழந்தைகளால் என்ன பிரயோஜனம்? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா? இன்னும் அழாமல் இருக்கத்தெரியுமா?

எங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு, பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது? அவனுக்கு இருக்கிம் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது? என்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரையாம். குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும்? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா. காராக மாறுகிறது. மோட்டார் சைக்கிள் இரட்டை மாட்டுவண்டி இன்னும் என்ன வேண்டும்?

அதுதான் கிடக்கிறது தமிழை தமிழாகப் பேசத் தெரிகிறதா? இலக்கணம் தெரியுமா? தொல்காப்பியம் படித்திருக்கிறதா? இந்த குழந்தைகளினால் என்ன பிரயோஜனம்? உங்களுக்கு தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம்?

மணிக்கொடியில் 15.7.1934 அன்று புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய கவிதை என்ற தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து

மேலும் யூடியூபிலிருந்து ஒரு வீடியோ:
http://www.youtube.com/watch?v=cXXm696UbKY

PS:
எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!!

முடியாமல் நீளும் நாட்கள்

(சிறுகதை)

திடுக்கிட்டு விழித்தேன் நான். கழுத்தில் வியர்வை. முகத்தை துடைத்துக்கொண்டேன். திரும்பி படுத்தேன். கைவிரல்கள் நடுங்குவதைப் போல இருந்தது. அந்த நிசப்த இரவில் மின்விசிறியின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. அந்த மின்விசிறி சுழலும் போது ஏற்படும் டக் என்ற ஓசை கேட்கும் ஒவ்வொரு முறையும் எனக்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டது. கதவு எனக்கு பின்னால் இருக்கிறது. நான் ஜன்னலைப் பார்த்து படுத்திருக்கிறேன். ஜன்னலின் திரைச்சீலை மின்விசிறியின் காற்றுக்கு அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பயமாக இருந்தது. டேபிள் லேம்ப்பை போட்டேன். அருகிலிருந்த கடிகாரம் மணி மூன்று என்று காட்டியது. மூன்று தானா? இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கிறது? திரும்பிப் படுத்தேன். போர்வையை முழுவதுமாக போர்த்திக்கொண்டேன். போர்வைக்குள் இருந்து கொண்டு அது என்ன நிறம் என்பதை கண்டுபிடிக்க முயன்றேன். இருட்டு என்பதால் போர்வையின் நிறம் என் கண்களுக்கு சரியாக தெரியவில்லை. என் போர்வையின் நிறம் எனக்கு தெரியாதா என்ன? பச்சை. பச்சை எனக்கு மிகவும் பிடித்த நிறம் கூட.

போர்வையை முகத்திலிருந்து விலக்கினேன். இனி தூக்கம் வராதோ? கதவு சாத்தியிருந்தது. அதோ அந்த கதவுகளுக்கு அருகில் யாராவது நிற்கிறார்களா என்ன? எனக்கு திக் என்றது. இல்லை. யாரும் இல்லை. யாரோ அருகில் உட்கார்ந்திருப்பதை போல தோன்றவே டக் என்று திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை. மீண்டும் வியர்வைத் துளிகள். எழுந்தேன்.

சன் டீவியில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. “எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே”. அப்படியே உட்கார்ந்திருந்தேன். பரவாயில்லை நல்ல பாடல்களாத்தான் போடுகிறார்கள். வேறு வேறு பாடல்கள். வேறு வேறு முகங்கள். வேறு வேறு குரல்கள். வேறு வேறு சானல்கள். டீவிக்கு அருகிலிருந்த அந்த சின்ன கடிகாரத்தில் மணி காலை 6 ஆகிக்கொண்டிருந்தது.

***

என்னடா சரியா தூங்கலையா? இல்ல. கண்ணெல்லாம் சிவந்திருக்கு. ம்ம்..இஸ் இட்? நேத்து உனக்கு கல்யாணமா இல்ல சங்கீதாக்கு கல்யாணமா? அவளுக்கில்ல கண் சிவந்திருக்கணும். உனக்கு ஏன் சிவந்திருக்கு? இருவர் சிரித்தனர். நாட் சோ ·பன்னி. அவன் தோள்களை குலுக்கிக்கொண்டான். ரிலீஸ் டேட் எப்பன்னு சொன்னாரா சரா? நோப். ஐ டோன்ட் நோ. ம்ம்..ஓகே தென். லெட்ஸ் கோ ·பார் கா·பி. ஸ்ஸ¤யர்.

சங்கீதா என்னைக்கு ஆபீஸ¤க்கு வர்றா? நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். டேய் உன்னத்தான்டா. எனக்கு சுரீர் என்றது. ஹவ் ஆம் ஐ சப்போஸ்ட் டு நோ? ஏன்டா இவ்வளவு கோபப்படுற? ஏய் கீதா..சங்கி எப்படி வர்றா? ஐ கெஸ் நெக்ஸ்ட் மன்டே. நாட் ஸ¤யர். ஓவ் ஓக்கே. காப்பி சூடாக இருந்தது. காப்பியின் வாசனை மூக்கை வந்தடைந்தது. நான் ஒரு சிப் குடித்தேன். டேய். சுகர் போடல. இட்ஸ் ஓக்கே. ஐ வில் டேக் இட் ப்ளாக். அவன் என்னை விசித்திரமாக பார்த்ததை கீதா கவனித்தாள். நான் எழுந்தேன். ஓக்கே நான் என் சீட்டுக்கு போறேன். சீ யூ ஆல் அட் லஞ்ச். சீயூ. என் காலடி சத்தம் எனக்கு தெளிவாக கேட்டது. பின்னால் கீதாவின் குரல் ஒலித்தது. நானும் போறேன். டேய் கண்ணா. நில்லு நானும் வர்றேன்.

கீதா என் கைகளை பிடித்தாள். ஆர் யூ ஒக்கே கண்ணா? ய்யா..ஐயாம் ஆல்ரைட்.

***

தூங்கினேனா? இல்லையா? எழுந்து உட்கார்ந்தேன். டேபிள் லேம்ப்பை போட்டேன். மணி என்ன? ஒன்று. ஷிட். அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சுத்தமாக குடித்து முடித்தேன். பாத்ரூம் வருவதைப் போன்று இருந்தது. போகணுமா? படுத்துக்கொண்டேன். பாத்ரூம் போகணுமா?

வெளியில் வந்து ·ப்ரிட்ஜை திறந்து தண்ணீர் எடுக்கும் பொழுது டாய்லட்டின் ·ப்ளஷ் நிரம்பியிருந்திருக்க வேண்டும். ப்ரிட்ஜ் கொஞ்சம் ஜில்லென்று இருந்தது. டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டேன். ப்ரிட்ஜை மீண்டும் திறந்து ஒரு ஆப்பில் எடுத்தேன்.

“தாமரைக் கண்ணங்கள்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சானலை மாற்றினேன். குங்·பூ பற்றிய டாக்குமென்டரி ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த சானல். மெகா ஸ்ட்ரக்சர்ஸ். எழுந்து போய் காப்பி போட்டுக்கொண்டு வந்தேன். மணி காலை ஐந்து. சோப்பாவிலே உட்கார்ந்து கொண்டேன்.

டொக் டொக் டொக். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங். ஷிட். திடுக்கிட்டு எழுந்தேன். நல்ல வெளிச்சமாக இருந்தது. கண்களை திறக்க முடியவில்லை. மணி எத்தனை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.காலிங் பெல்லா? லாக்கை திறந்து, கதவைத் திறந்தேன். சார். ஆப் ஹிந்தி மாலும் ஹை? தோடா தோடா..ஏ சாப்..குட் குவாலிட்டி பேண்ட் பிட்ஸ் சார்..இல்லப்பா வேண்டாம்..சார் ஒரிஜினல் சார்..வேண்டாம்ப்பா…கதவைச் சாத்தினேன்…சாப்…சாப்..ஏதோ புரியாத படிக்கு முனகினான்..

மணி 11. குட். வெரி குட். என் செல் போனைத் தேடினேன். தலையணைக்கு கீழே இருந்தது. டூ மிஸ்ட் கால்ஸ். முதல் கால் யாரிடமிருந்து என்று தெரியவில்லை. இரண்டாவது கீதாவிடமிருந்து. பிறகு ஒரு மெஸேஜ்: இடியட் கால் மீ.

நான் கால் பண்னவில்லை. சராவுக்கு மட்டும் நாட் ·பீலிங் வெல் என்று மெஸேஜ் அனுப்பினேன். அருகிலிருந்த ஆந்த்ரா மெஸ்ஸில் நல்ல சாப்பாடு. பிறகு மதியம் நல்ல தூக்கம்.

***

கண்களை மெதுவாக திறந்து பார்த்தேன். எனக்கு எரிச்சலாக இருந்தது. அகெய்ன். ****. வாட்ஸ் த டைம் நௌ? மணி ஒன்று. ****. வாட் த ஹெல்! திரும்பிப் படுத்தேன். முருகா முருகா முருகா முருகா…ஒன் டூ த்ரீ ·போர்..ஒன் ஹன்ட்ரட் செவண்ட்டி ஒன்..ஓ மை காட்..

ஹால். டீவி. இடைவிடாது ஒளிபரப்பப்படும் கலர்·புல் சாங்க்ஸ். த ஸ்டுபிட் லவ் சாங்க்ஸ். ப்ளடி ஸ்டுபிட் அண்ட் இடியாடிக்..

என் ·போனை எடுத்தேன்..வாய்ஸ் மெயிலுக்கு மெசேஜ் செட் பண்ணவேண்டும்.. எனிவே இன்னைக்கு தூக்கம் வரப்போறது இல்ல..ஐ வில் டூ திஸ்..
ஹாய் திஸ் இஸ் கண்ணன் சுப்ரமணியன்.ஐ யாம் பிஸி.. நல்லாயில்ல..
ஹலோ திஸ் இஸ் கண்ணன் ஹியர்..ஐ யாம் பிஸி அட் திஸ் மொமன்ட் கேன் யூ கால் மி பேக்..சோ ஸ்டுபிட்.. ஹா ஹா ஹா..ப்ரட்டி வியர்ட் டு ஹியர் மை ஓன் வாய்ஸ்..நாட் ஸோ பேட்..பட் டெரிபிள்..
யூ ஹேவ் ரீச்ட் கண்ணன் சுப்ரமணியன்..ஐ யாம் நாட்..

இன·ப்.

வைகாசி நிலவே..வைகாசி நிலவே..ஐ லைக் திஸ் ஸாங்.என்னோட ·போனின் ரிங் டோனும் இந்த பாடல் தான்.. இன்·பாக்ட் ஐ லைக் திஸ் கேர்ள்….வாட்ஸ் ஹெர் நேம்..சாந்தி..நோ..ஜெயம் படத்தில நடிச்சாளே..ஜெயம் ரவி ஓகே..ஹீரோயின்..ஜெயம்..ஜெயம்..ஜெயம்…இங்க நிக்குது ஆனா வரமாட்டேங்குது..அந்நியன்ல கூட நடிச்சாளே..விக்ரம் அன்ட்..வாட் த ****…ஜெயா? நோ..ஐ ஆம் ஹேவிங்..ஷார்ட் டேம் மெமரி லாஸ்..மை செர்ச் இஸ் நாட் ·பங்க்சனிங் ப்ராப்பர்லி..

ஹ¥ எவர் ஷீ இஸ்..லீவ் ஹெர் அலோன்..

என்னுடைய புக் ஷெல்·பில் தேடி Norwegian Wood எடுத்தேன். பெட்டுக்கு வந்து டேபில் லாம்ப் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தேன்.

அலாரம் அடித்தது. மணி காலை ஏழு. புத்தகத்தை மூடி வைத்தேன்.

காலை வரைக்கும் வைகாசி நிலவே பாடலுக்கு நடித்த அந்த நடிகையின் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. வரவேயில்லை.

***

மேன் யூ லுக் டெரிபில். கெட் சம் ஸ்லீப். நான் ஒன்றும் சொல்லவில்லை. என் இடத்தில் போய் உட்கார்ந்தேன். டெஸ்க் ·போன் அடித்தது. யெஸ். ஹாய் கண்ணா என்னடா ஆச்சு? ஒன்னும் ஆகல. ஆர் யூ ஸ¤யர்? அ·ப் கோர்ஸ். என்னாச்சு நேத்து? உடம்புக்கு முடியல. அதான் என்னாச்சுன்னு கேக்கறேன். ஜஸ்ட் நாட் இன் எ மூட். உடம்புக்கு சரியில்லன்னு சொன்ன? நான் ஒன்றும் சொல்லவில்லை. நேத்து சங்கீதா எனக்கு கால் பண்..டொக்.

என் விரல்கள் கொஞ்சம் நடுங்கின. திரை கொஞ்சம் மங்கலாக தெரிந்தது. கண்ணாடியை துடைத்துக்கொண்டேன். மீண்டும் டெலிபோன் மணி அடித்தது. நான் எழுந்து சென்று விட்டேன்.

ஆ·பீஸ் கா·பி மெசினில் டபுள் ஷாட் கப்புசினோ போட்டுக்கொண்டு வந்தேன். என்னுடைய டெஸ்க்டாப்பில் மணி பார்த்தேன்..4:40…தூக்கம் தூக்கமா வருது..இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறது..இந்த நாள் முடிவதற்கு..பிறகு இரவு…எனக்கு இரவு என்பது மற்றும் ஒரு பகல் தான்..மீண்டும் பகல்..அதை தொடர்ந்து மீண்டும் பகல்..நாட்கள் முடிவதே இல்லை…

***

என் மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து, யேசுதாஸின் இனிய குரலில் ஓம் ஒலிக்கவிட்டேன். ஓம் ஓம் ஓம் ஓம்..சோ..கம்·பர்டிங்..ஐ ·பீல் லைக் ·ப்ளையிங்..ஐ லாஸ்ட் மை கான்ஸியஸ்னஸ்..

வைகாசி நிலவே வைகாசி நிலவே..என்னோட ·பேவரிட் சாங்..மை பூசி வைத்திருக்கும் கண்ணில்..வைகாசி நிலவே வைகாசி நிலவே..ம்ம்..வைகாசி நிலவே வைகாசி நிலவே…ஹாங்.. என் குல்ட்க்குள்ளிருந்து கையை மட்டும் நீட்டி டேபிள் லேம்ப்பை ஆன் செய்தேன்..தடவி என் செல்போனை எடுத்தேன்.என் கண்ணாடி கீழே விழுந்தது..உடைந்ததா இல்லையா தெரியவில்லை…வைகாசி நிலவு நின்றது..ஹலோ..யெஸ்..ஷிட்..**** யூ..ப்ளடி **..ராங் நம்பர்..எனக்கு போனை தூக்கி போட்டு உடைக்கவேண்டும் போல இருந்தது..காஸ்ட்லியான ·போன்..மணி பார்த்தேன்..பதினொன்றே கால்..இன்னைக்குதான் தூங்கினேன்..

மறுபடியும் ஓம். ஓம். ஓம்..
ஓம் முடிந்தது. ரீஸ்டார்ட். ஓம் ஓம் ஓம்.
ரீஸ்டார்ட்.ரீஸ்டார்ட்..

டிட் ஐ ஸ்லீப் பிகாஸ் ஆ·ப் ஓம்? ஐ கெஸ் நாட். யெப்.

***

டேய் மணி என்னடா ஆச்சு உனக்கு? இந்நேரம் கால் பண்ற? டேய் தம்பி நல்லாயிருக்கியாடா? நாங்க நல்லாயிருக்கோம்பா..ம்ம்..அப்பா நல்லாயிருக்குறார்டா..கூப்பிடட்டா..ம்ம்..சொல்லுடா..சாப்டோம்டா..நீ இன்னும் ஏன் தூங்காம இருக்க..வேலை அதிகமா? தூங்குடா தம்பி..ம்ம்..சரி..வெச்சுடவா?

***

ஓகே..ஐ வில் கிவ் மெடிசின்ஸ் ·பார் யுவர் ஸ்லீப்லெஸ்னெஸ்..யூ கேன் வெயிட் அவுட்சைட்….டாக்டர் ஐ நீட் எம்சி….வாட்? ஐ கேன்ட் கிவ் யூ எம்சி ·பார் இன்சோம்னியா..த கம்பெனி வில் க்வஸ்டீன் மீ..எனிதிங் எல்ஸ் இஸ் ஓகே..டயரியா..டிசன்ட்ரி..பட் நாட் இன்சோம்னியா..ப்ளீஸ் வெயிட் அவுட்சைட் டு கெட் த மெடிசின்ஸ்..கெட் சம் ஸ்லீப் டியர்..
டேக் கேர்..

யூ **** ரியலி கேர்..

***

முழித்துப்பார்த்தேன். எங்கும் இருட்டு. என் அறைக்குள் கதவிடுக்கின் வழியாக மஞ்சள் ஒளிக்கீற்று. மஞ்சள் என் ஹால் பல்பிலிருந்து வெளிவரும் அபூர்வ வெளிச்சம். ஏன் லைட் எரிகிறது? நான் ஆ·ப் செய்யவில்லையா? கதவின் கீழ் நிழல். நிழல் இங்கும் அங்கும் நடக்கிறது. என்னை அழைக்கிறது. என் கதவை தட்டுகிறதா? யார் இந்நேரத்தில் நடக்கிறார்கள்? யாரும் இந்த வீட்டில் இல்லையே? மிக மெதுவாக எழுந்தேன். தலை சுற்றுவது போல இருந்தது. பூமி நிலையாக இல்லை. தரை சில்லிட்டிருந்தது. என் பாதங்கள் சூடாக இருக்கின்றனவா? நான் எழுந்து நிற்கவும் கதவு தாழ் விடுவிக்கப்படும் கிளிக் ஓசையும் ஒன்றாக நடந்தது என்று நினைக்கிறேன். படுக்கை அறை முழுவதும் மஞ்சள் ஒளி வெள்ளம். யாரோ நிற்கிறார்கள். வாசலில் நிழல் தெரிகிறது. ஒல்லியான தேகம். தலை பரட்டையாக இருக்கிறதோ? யாரிவர்? யார் நீங்க? ராஜா நான் தான்டா.. இங்க வா..அவர் வேகமாக வெளியேறினார். நான் பின் தொடர்ந்தேன்..என் மாமா..ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன என்னுடைய மாமா..கோல்ட் மெடலிஸ்ட்..பிஎஸ்ஸி மேத்ஸ்..பெரிய ப்ளாஸ்டிக் கம்பெனியில் வேலை..கை நிறைய சம்பளம்..காதல் திருமணம்..ஆசையாய் காதலித்த மனைவி சரியில்லை..குடி..மேலும் குடி..மேலும் குடி..நிராகரிப்பு..குடி..மேலும் குடி..டேய் ராஜா..குரல் ஒலித்தது..இங்கவா..நான் என் அறையிலிருந்து வெளியேறவும் அவர் பக்கதிலிருந்த அறைக்கு சென்றுவிட்டார்..மஞ்சள் ஒளி வெள்ளம் மறைந்தது..இருள்..கடும் இருள்..பிட்ச் டார்க்..எனக்கு விக்கியது..இப்பொழுது என் மாமா நுழைந்த அறைக்குள்ளிருந்து மஞ்சள் ஒளி வெள்ளம்..காட் டாமிட்..

டீவியை ஆன் செய்தேன்..பிரவுதேவா ஆடிக்கொண்டிருந்தார்..இவருக்கெல்லாம் தூக்கம் நன்றாக வருமோ என்கிற எண்ணம் என்னுள் எழுந்தது..இந்நேரம் மணி தூங்கிருப்பானோ? மெக்கெயின் ஏன் தோற்றார்? ரஜினி எந்திரனா தந்திரனா? பார்….க்க்க்க்..ல்ல்ல்ல்லேஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…பாங்க்ரப்ட்ஸி…மெரில்லிஞ்ச்..த பபிள் மஸ்ட் பர்ஸ்ட்..ஹக்…எம்பிஏ..புல் ஷிட்..எம்பிஏ தூங்கிருப்பானா? எனக்கு மெடிக்கல் சர்டிபிக்கேட் கொடுத்தானே..ச்சீ..கொடுக்க மாட்டேன்னு சொன்னானே அந்த சொட்டத்தலை டாக்டர் அவன் தூங்கிருப்பானோ..ஹவ் நைஸ்..அவனுக்கு எம்சி யார் கொடுப்பா? எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..நதி போல தூங்கிக்கொண்டிரு..விச் ஒன் இஸ் பெட்டர்.. டைப்ட் டேட்டா செட் ஆர்..யூ ஹேவ் டு கோ டு ஹெல்..கெட் சம் ஸ்லீப்..கெட் சம் பிரிட்டானியா மில்க் பிக்கீஸ்..ஓ மை காட்..ஓ மை காட்

***

ஐயோ என் கால்கள்..ஐ கேன்னாட் **** மூவ் மை லெக்ஸ்..மை லெக்ஸ் ஹேவ் கான் நம்ப்..ஐ காட் பாராலிஸிஸ்..ஒ மை காட்..என்னால் கைகளை அசைக்க முடிகிறது..மிகுந்த சிரமப்பட்டு..எழுந்து நின்றேன்..தலை தெறிக்க ஓடினேன்..கதவை திறக்க முடியவில்லை..ஓ **** ஸம் ஒன் ஹேஸ் லாக்ட் மை டோர்..**** ஸ்டுபிட்..தட தட தடவென்று தட்டினேன்..ஸம் ஒன் ப்ளீஸ் லெட் மீ அவுட்..கதவு திறந்துகொண்டது…ஸம் ஒன் ஹேஸ் அன்லாக்ட் த டோர்…ஹ¥ த ஹெல்..ஐயோ..சட்டென்று நின்றேன்..மை லெக்ஸ் ஆர் ஓகே..தேர் இஸ் நோ ஒன் எல்ஸ் இன் திஸ் ஹவுஸ்..எனக்கு வியர்த்து வழிந்தது..யாருடனாவது பேசவேண்டும் போல இருந்தது..வீட்டுக்கு கால் செய்தால்..எல்லோரும் ஏன் இன்னும் தூங்கலன்னு கேள்வி மேல கேள்வி கேட்ப்பாங்க..தண்ணீர் குடித்தேன்..நிறைய..என் உடம்பு முழுவதும் நனைந்துவிட்டது..தண்ணீராலா? வியர்வையாலா? வாட் டு டு நௌ?

யூ நோ? மை பெஸ்ட் ·ப்ரண்ட் இஸ் மை இடியட் பாக்ஸ்..!

“உனக்காத்தானே இந்த உயிர் உள்ளது..உன் துயரம் சாய என் தோள் உள்ளது..” சேனல் ச்சேஞ்..

***

கயிறு நீண்டு கொண்டே போகிறது..சில இடங்களில் வழுக்குகிறது..ஐ ஆம் நாட் ஏபில் டு ஹோல்ட் த ரோப்..பட் ஐ ஹேவ் டு..மேலே நிமிர்ந்து பார்த்தேன்..வட்டமாக வெளிச்சம்..கீழே வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டு வருகிறது..காற்றில் ஈரப்பசை அதிகரித்துக்கொண்டே வருகிறது..ஸ்டில் ஐ ஹாவின்ட் ரீச்ட் த க்ரவுண்ட்..எனக்கு வியர்க்கிறது..தட் என்று திடமான மணல் மீது என் கால்கள் மோதுகின்றன..குட்..அட் லாஸ்ட் சம் ஸ்டேபிள் க்ரவுண்ட்..கயிற்றை விட்டுவிடலாமா? யாராவது மேலேயிருந்து உருவிக்கொண்டால்? அப்படி யாராவது செய்வார்களா என்ன? மேலே பார்த்தேன்..வட்டமான வெளிச்சம்..வட்டம் சுற்றளவில் குறைந்திருந்தது..நிறைய..

உடார்ந்து கொண்டேன்..அமைதி..பேரமைதி.. ஐயோ யாரோ கிணற்றை மூடுகிறார்கள்..ஹலோ நான் உள்ளே இருக்கிறேன்..டோன்ட் க்ளோஸ் த ஸ்டுபிட் வெல்..ஹலோ..கிணறு மூடப்பட்டது..டப் என்று என் மீது ஏதோ விழுந்தது..பாம்பு போல இருந்தது..ஐயோ..நோ திஸ் இஸ் நாட் ஸ்னேக்.. இது கயிறு..கயிறு அறுபட்டுவிட்டது..சுத்தமாக..மேலே போவது மிகவும் கடினம்..கடினமா? டோட்டலி இம்பாஸிபிள்..நான் தவறு செய்துவிட்டேன்..ஐ வில் வெயிட்..யாராவது கிணறை திறக்கும் வரையில் நான் காத்திருப்பேன்..ஸம் ஒன் ப்ளீஸ் ஓப்பன் த டோர்..நோ..ஓப்பன் த வெல்..போர்ன்விட்டாவா? கிணறில் தண்ணீருக்கு பதில் போர்ன்விட்டா இருக்கிறதா..ஐ லவ் போர்ன்விட்டா..அம்மா கொடுப்பார்கள்..எனக்கு ரொம்பவும் பிடிக்கும்…இன்னொரு மாத்திரை ப்ளீஸ்..பென்ஜோடயாஜிப்பைன்..ஒன் மோர் ப்ளீஸ்.. உனக்காகக்தானே இந்த உயிர் உள்ளது..உன் துயரம் சாய என் தோள் உள்ளது..முடியாமல் நீளும் நாட்கள்… என்றும் இல்லை..

***

வைகாசி நிலவே..வைகசி நிலவே..மை பூசி வைத்திருக்கும் கன்ணில் பொய் பூசி வைத்திருப்பதென்ன..வெட்கத்தை உடைத்தாய் கைக்..
வைகாசி நிலவே..வைகசி நிலவே..மை பூசி வைத்திருக்கும் கன்ணில் பொய் பூசி வைத்திருப்பதென்ன..வெட்கத்தை உடைத்தாய் கைக்..
வைகாசி நிலவே..வைகசி நிலவே..மை பூசி வைத்திருக்கும் கன்ணில் பொய் பூசி வைத்திருப்பதென்ன..வெட்கத்தை உடைத்தாய் கைக்..

யூ ஹேவ் ரீச்ட் கண்ணன் சுபரமணியன்..ஐ யாம் நாட் அவைலபிள் அட் திஸ் மொமன்ட்..ப்ளீஸ் லீவ் யுவர் நேம் அன்ட் நம்பர்..ஐ வில் கால் யூ பேக் அஸ் ஸ¥ன் அஸ் பாசிபிள்..தேங்க்யூ..

***