புத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்?

என்னென்ன புத்தகங்கள் படிக்கக் கூடாது என்று பல நாடுகள் தங்கள் மக்களுக்கு லிஸ்ட் கொடுக்கின்றன. வாசிக்கக்கூடாத புத்தகங்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வாசிக்கத்தேவையில்லாத புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. தவிர்க்கவேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்று ஒரு பதிவு பார்த்தேன்.
கார்ல்சாகன் புத்தகம் வாசிப்பதைப் பற்றி காஸ்மோஸ் புத்தகத்தில் எழுதியது ஞாபகம் வரவே,அதன் தோராயமான சாரம்சம் கீழே:

புத்தகங்கள் விதைகளைப் போல. ஒரு நல்ல புத்தகம் அவ்விதைகளை உங்கள் மனதில் விதைத்துவிடவேண்டும். அந்த விதை விருட்சமாக வளரும். எழுத்து வடிவுமும், அதைப் பதிவு செய்து வைக்கும் முறையும் தான் மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு, இன்றுவரையிலும்.

யோசித்துப் பாருங்கள் புத்தகங்கள் இல்லையென்றால் மனிதனின் முன்னேற்றம் எவ்வளவு பாதித்திருக்கும்? ஒரு எ.கா: எகிப்த்தின் அலெக்சாண்ட்ரியா நூலகம் (கிமு 300-கிபி 300 காலகட்டம்) சூரையாடப் பட்டு புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அந்த நூலகத்தில் அரிஸ்ட்டார்கஸ் எனபவர் எழுதிய ஒரு புத்தகம் இருந்தது. அவர் அப்பொழுதே பூமி சூரியனைச் சுற்றித்தான் வருகிறது என்றும், சூரியன் மிக மிக அதிகமான தூரத்தில் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். நூலகம் சூரையாடப்பட்டபொழுது அந்தப் புத்தகம் போயே போச்சு. போயிந்தே. பிறகு மீண்டும் பூமி சூரியனைச் சுற்றித்தான் வந்து கொண்டிருக்கிறது என்று கண்டறிய நம் முன்னோர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனது. 

நூலகங்களும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. அசுர்பனிபாலின் அசிரியன் நூலகத்தில் ஆயிரக்கணக்கான களிமன் புத்தகங்கள் இருந்திருக்கின்றன. மேலே குறிப்பிட் எகிப்தின் அலெக்சான்ட்ரியா நூலகத்தில் லட்சக்கணக்கில் பாப்பிரஸ் சுருள்கள் (ஓலைச்சுவடிகள் போல) இருந்திருக்கின்றன. இன்று நியூயார்க் பொது நூலகத்தில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. இதை பிட்ஸ் கணக்கில் பார்த்தால் எத்தனையோ லட்சம் கோடிக்கும் மேல போகும். (இதெல்லாம் எனய்யா பிஸ்கோத்து.. இருபது லட்சம் கோடியவே அசால்ட்டா பாத்தவிங்க நாங்க..) இது நமது ஜீனில் இருக்கும் தகவல்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகம். நம் மூளை சேகரிக்கக்கூடிய தகவல்களை விட பல நூறு மடங்குகள் அதிகம்.

சரிப்பா.. இதெல்லாம் எப்படி வாசிப்பது? படிப்பது? (ஏன் படிக்கனும்னெல்லாம் கேக்கப்பிடாது) 

நாம சிட்டி ரோபோ இல்லியே புத்தகத்த அப்படி இப்படின்னு விசுக்கு விசுக்குன்னு திருப்பிப் பார்த்து வாசிச்சு முடிக்க? வாரத்துக்கு ஒரு புத்தகம் என்கிற கணக்கில் வாசித்தால் கூட (வாய்ப்பேயில்லை ராசா!) வாழ்நாளில் சில ஆயிரம் புத்தங்களே நம்மால் வாசிக்க முடியும். சில ஆயிரம் புத்தங்கள் என்பது உலகத்தில் இருக்கும் புத்தகங்களை கணக்கிலெடுத்தால் தக்கணூண்டு. ஒரு விழுக்காட்டில் இருமா அளவுக்கும் கம்மி. (இருபது லட்சம் கோடில உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? அதைப் போல, மொதல்ல கிடைக்குமா?!)

அப்ப எப்படி? ட்ரிக் என்னன்னா: எந்த புத்தகங்களைப் வாசிக் வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொள்வது! (நம்ப மார்க்கு மாதிரி: உங்களுக்கு எந்த பதிவு பிடிக்கவில்லை என்கிற விசயத்தை வைத்து அவன் பெரிதாக சம்பாதிக்க முடியாது. உங்களுக்கு என்ன பிடிக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிறதில தான் அவன் பிஸினஸ் இருக்கு!) வாசிப்போம். புத்தகங்களை தேடித்தேடி வாசிப்போம்.

பிகு: உலகில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இருக்கும்? சிங்கப்பூரில் 26 பொது நூலகங்கள் இருக்கின்றன – மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் இருக்கின்றன இந்த நூலகங்களில்..

பிபிகு: இண்டர்நெட்டில் எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன? ஒரு எக்ஸாபைட் என்பது ஒரு பில்லியன் பில்லியன் பைட்ஸ். இப்போதைக்கு தோராயமாக ஆயிரம் எக்ஸாபைட்ஸ் அளவு தகவல்கள் இருக்கலாமாம்..

பிபிபிகு: என் ஐபேடில் ஐநூறுக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கி..!!

பிபிபிபிகு: இப்ப படிச்சிட்டிருக்கும் புத்தகம்: The Sleuth Investor

Leave a comment