ஆயிரம்கால் இலக்கியம் – 5

ன்னுடைய அப்பத்தாவுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று மூக்கு பொடி. கடைசி வரைக்கும் அவர் அவராகவே பொடி வாங்கிக்கொள்ளும் தெம்புடன் தான் இருந்தார். சில நேரங்களில் எங்களை வாங்கி வரச் சொல்லுவார். அவர் பட்டணம் பொடி மட்டுமே போடுவார், வேறு எந்த பொடியையும் தொடக்கூட மாட்டார். பட்டணம் பொடி வாங்குவதற்கு ஆனந்தா தியேட்டர் வரைக்கும் போக வேண்டும். அதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும். நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு வீட்டிற்கு அருகிலே இருக்கும் பலசரக்கு கடையில் ஏதோ ஒரு பொடியை வாங்கிக்கொடுத்து ஏமாற்றி விட முயற்சித்திருக்கிறேன். ஆனால் டப்பியைத் திறந்தவுடன் அவர் கண்டுபிடித்து விடுவார். எனக்கு எரிச்சலாக வரும், முக்கு கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன, ஐயர் கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன (குமுதம், உங்களுக்கு நியூஸ் கிடைத்து விட்டது. ஐயர் கடையை இழிவாக பேசினாரா முத்து? என்று செய்தி போட்டுக்கொள்ளுங்கள்!), வடை வடை தானே? பொடி பொடி தானே? சிலருக்கு ஆமாம். சிலருக்கு இல்லவே இல்லை. சில விசயங்கள் சிலருக்கு எப்போதும் போலவே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பிடிக்காது.

சமீபத்தில் வார பத்திரிக்கை ஒன்றில் படித்த சிறுகதை இது. எழுதியவர் யார் என்று வழக்கம் போல் மறந்து விட்டது. நானும் கதை படித்தவுடன் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைக்கிறேன். எழுதி வைப்பதற்கும் மறந்து விடுகிறது. மேலும், சில கதைகளைப் படித்து விட்டு, ஆயிரம் கால் இலக்கியம் எழுதவேண்டும், என்ன கதை சொல்லலாம் என்று யோசிக்கிற பொழுது, மனதிற்கு சட்டென கிடைக்கும் கதைதானே நல்ல கதை. அது தானே மனதில் நின்ற கதை!

கதையில் வருவதைப் போல பழைய காலத்து கிராமபோன் ரெக்கார்ட் உபயோகித்து பாடல்கள் ஒலிபரப்பும் டீ கடைகளுக்கு (அல்லது ஹொட்டல். ஆனால் அங்கு டீ மட்டுமே கொடுப்பார்கள்!) நான் போனதில்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஐடியா நன்றாக இருக்கிறது. அதுவும் டீ அருந்த வருபவர்களுக்கு, மணக்க மணக்க ஏலக்காய் டீயுடன் அவர்கள் விரும்பிய பாட்டை ஒலிபரப்பினால் நன்றாகத்தானே இருக்கும். யாருக்குத்தான் விருப்பமான பாடலைக் கேட்டுக்கொண்டே தேனீர் அருந்த பிடிக்காது?

(இங்கே கூட கோமலவிலாசில் தானியங்கி பாடல் ஒலிபரப்பி இருக்கிறது. சில சீடிக்களின் பாடல்களின் வரிசைகள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலுக்கு அருகிலும் ஒரு நம்பர் இருக்கும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுத்து அந்த நம்பரை அழுத்த வேண்டும். பிறகு முக்கியமான விசயம் – ஒரு டாலர்- போட வேண்டும். இரண்டு பாடல்களுக்கு ஒரு டாலர். கொஞ்சம் காஸ்ட்லி தான். நான் எப்பொழுதும் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சத்யாவிலிருந்து “வளையோசை” யும், நிழல்களிலிருந்து “பூங்கதவே தாழ் திறவாய்” பாடலும் தான். பாடலை ஒலிக்க செய்து விட்டு, ஒரு மூலையில் காபியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து மக்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பூரிக்களும், மசால் தோசைகளும் ரசிக்கப் படும் அளவுக்கு பூங்கதவே தாழ் திறவாய் ரசிக்கப் படுவதில்லை என்பது தான் உண்மை. மேலும் சாப்பிட்டுக் கொண்டே பாடலை ரசிக்க முடியாது. ஆனால் டீ குடித்து கொண்டு கண்டிப்பாக ரசிக்க முடியும். சில சமயங்களில் சீடிக்களை மாற்றி விடுவார்கள். நாம் விரும்பும் பாடல் கிடைக்காது. ஆனால் எப்பொழுதும் பூரி கிடைக்கும்.)

அவ்வாறான ஒரு கடைக்கு தினமும் சரியாக மதியம் மூன்று மணிக்கு ஒரு நபர் வருவகிறார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழுக்கு பிடித்தவராக, சிக்கு பிடித்த தலையுமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே காட்சியளிக்கிறார்.அவருக்கு பிடித்தமான பாடல் புதிய பறவை திரைப்படத்தில் வரும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் தான். இந்தக் கதையை சொல்பவர் பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அந்த கடையில் ஆபரேட் செய்பவர். அதாவது கிராமபோன் ஜாக்கி.

அவர் (டீ அருந்த வருபவர்) ஒரு நாளும் ஜாக்கியுடன் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எப்பொழுதும் சரியாக மூன்று மணிக்கு வந்தவுடன் ஜாக்கியைப் பார்ப்பார். ஜாக்கி தயாராக எடுத்து வைத்திருக்கும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலை ஒலிபரப்புவார். புதிய பறவையின் பழைய கிராம போன் ரெக்கார்ட் சுழல ஆரம்பிக்கும். பாடல் முடியும் வரை மிக ஆழ்ந்த மவுனத்தில் இருப்பார் அவர். அவர் கண்கள் எதையோ வெறித்துக்கொண்டேயிருக்கும். பாடலில் இருக்கும் சோகம் அவர் கண்களில் வழிந்தோடுவதைப்போல இருக்கும். பாடல் முடிகிற வரை டீ குடித்துக்கொண்டிருப்பார். பாடல் முடிந்ததும் எழுந்து சென்று விடுவார். ஒரு முறை கூட மறுமுறை ஒலிபரப்பசொல்லி கேட்டதில்லை. ஒரு நாளும் கடைக்கு வரத் தவறியதுமில்லை. ஒரு நாளும் பாதி பாடலில் எழுந்து சென்றதில்லை. ஜாக்கியைப் பொருத்தவரை அவர் மிகவும் வினோதமானவர்.

ஒரு நாள், அந்த நபர் அதே போல் கடைக்கு வந்து பாடலைக் கேட்டுவிட்டு வெளியேறிசென்றவுடன், ஜாக்கி தவறுதலாக ரெக்கார்டை கீழே போட்டு உடைத்துவிடுகிறார். உடைத்ததும் அவருக்கு அந்த நபரின் ஞாபகம் வந்து விடுகிறது. ஐயோ நாளைக்கு மறுபடியும் வருவாரே, ரெக்கார்டுக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்கிறார். புதிய பறவையின் பழைய ரெக்கார்டை எங்கே தேடுவது என்று அவர் மனம் அலைகிறது. தவிக்கிறது.

தனக்கு தெரிந்த நபர்களிடமெல்லாம் விசாரிக்கிறார். பழைய கடைகளிலெல்லாம் கேட்டு அலைகிறார். ஸ்டாக் இல்லையென்றோ, சீடி இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள் என்றோ தான் சொல்கிறார்கள் எல்லோரும். இவருக்கு தேவை கிராமபோன் ரெக்கார்ட். ஒரு வழியாக, பழைய கிராமபோன் ரெக்கார்டு இங்கே கிடைக்கும், என்ற அன்றைய பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, ஒரு மணி நேரம் பிரயாணம் மேற்கொண்டு அந்த வீட்டை சிரமப்பட்டு கண்டுபிடித்து விடுகிறார் ஜாக்கி.

அங்கே வீட்டில், முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், ஜாக்கியை உள்ளே அழைத்து ஒரு சிறிய கிராமபோன் கலைக்ஷனைக் காட்டுகிறார். அந்த கலெக்ஷன் அவருடைய தந்தையினுடையது என்றும், வேண்டுமானால் நீங்கள் இலவசமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாக்கியிடம் சொல்கிறார். மேலும் ஜாக்கியின் கிராமபோன் டீ கடையைப் பற்றி அவருக்கு தெரியும் என்றும், தந்தையும் அவரும் ஒரு முறை வந்திருப்பதாகவும் கூறுகிறார். மகிழ்ச்சியடைந்த ஜாக்கி அந்த கலெக்ஷனில் புதியபறவையைத் தேடுகிறார். இருக்கிறது.

மிகுந்த சந்தோஷத்துடன் அந்த நபரின் வருகைக்காக அன்றைய தினம் காத்துக்கொண்டிருக்கிறார். சரியாக மூன்று மணிக்கு அந்த நபர் எப்போதும் போலவே சிக்கு மிடித்த தலையுடனும், அழுக்கு பிடித்த உடையுடனும் வந்தமர்கிறார். டீ சொல்லிவிட்டு ஜாக்கியைப் பார்க்கிறார். ஜாக்கி பாடலை ஒலிபரப்புகிறார்.

பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென்று பாதி பாடலிலே எழுந்து வெளியே செல்கிறார். இது நாள் வரையில் பாடல் முடிகிற வரையில் எழுந்து செல்லாதவர், இப்பொழுது ஏன் போகிறார் என்று புரியாத ஜாக்கி ஓடிச்சென்று அவரிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அவர் ஜாக்கியை சற்று நேரம் பார்த்து விட்டு, பழைய ரெக்கார்ட் என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஜாக்கி பழைய ரெக்கார்ட் உடைந்து விட்டது என்றும், அதற்கு பதில் தான் பல இடங்களில் அழைந்து திரிந்து இந்த ரெக்கார்டை வாங்கி வந்ததாகவும் சொல்கிறார். ஏதும் பேசாமல் நின்ற அந்த நபர், பழைய ரெக்கார்ட் “அந்த நிலவைக்கேள் அது சொல்லும்” என்ற வரி வரும் இடத்தில் ஒரு முறை திக்கும், ஒரு மைக்ரோ செக்கண்ட் நிற்கும், இப்பொழுது இந்த புதிய ரெக்கார்டில் அது இல்லை என்று சொல்லிவிட்டு, சென்று விடுகிறார்.

அதற்கப்புறம் அந்த நபர் அந்த கடைக்கு வரவேயில்லை.

அந்த நபருக்கும் அந்த ரெக்கார்டிலிருக்கும் – பிறருக்கு தெரியாத, ஏன் அந்த ஜாக்கிக்கே தெரியாத- கீரலுக்கும் அப்படி என்ன உறவு? சில விசயங்களுக்கு, வாழ்க்கையில் மாற்று (replacement) என்பதே இல்லை, இல்லையா?

(தொடரும்)

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். மாட்டுப் பொங்கல் கொண்டாடுறவங்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த greetings copy rights reserved. :)))))))

greetings ல ஹேப்பி பொங்கலே தெரியலங்கறவங்க, pls click பண்ணி பாத்துக்கோங்கப்பா, அவ்ளோ தான் இடம் இருந்தது. 😦

அது சரி, திரிஷாவுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டீங்கன்னா, ஆச தோச அப்பளம் வடை நான் பதில் சொல்ல மாட்டென்! 😦 ஆனாலும் உங்களுக்கு விக்கிரமாதித்தன் போல பதில் தெரியாட்டி மண்டை வெடித்து விடுமாயின் சன் டீவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் திரிஷா (அல்லது பாவனா அல்லது வேறு எந்த நடிகையின்) பேட்டி வந்தால் சன் டீவியைக் கேளுங்கள், அவர்களுக்காவது தெரிகிறதா பார்ப்போம்!

இன்சிடென்ட்ஸ் – 5

லாலிபாப்:

அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரைப்பரிட்சை லீவு. அரைப்பரிட்சை என்று சொல்ல முடியாது. அது முழுப் பரிட்சை தான். என்னென்றால் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் முழுவதையும் பாதி வருடத்திலே முடித்துவிட்டு, பிற்பகுதியில் – ஜனவரி முதல் ஏப்ரல் வரை – பத்தாம் வகுப்பு பாடங்கள் படிக்க திட்டம். லீவில் டூர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமங்கலத்தில் ஆரம்பித்து குற்றாலம் சென்றுவிட்டு அப்புறம் தென்காசி வழியாக நாகர்கோவில், கண்ணியாகுமரி சென்று, பின்னர் மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் செல்வதாக ப்ளான்.

எங்க ஸ்கூல்ல அப்பப்ப டூர் போவோம். அதாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக டூர் நிச்சயம். ஒரு நாள் டூர். பக்கத்துல எங்கனாச்சும் கூட்டிட்டு போவாங்க. மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் கோவில், பழமுதிற்சோலை, வைகை டேம், வெராகனூர் டேம் எல்லாம் போயிருக்கோம். முக்கால் வாசி தடவ வைகைடேம் தான் கிடைக்கும். அதனால என்னென்ன இடம் அங்க இருக்குங்கறது அத்துப்படி. ஆனா கடைசி முறை காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ போனோம். கொஞ்சம் மாற்றம் இருந்தது. ஆனா முதல் தடவ போன போது நடந்த சம்பவங்களும், கடைசி தடவ போனபோது நடந்த சம்பவங்களும் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.

முதல் முறை நான் வைகை டேம் போனபோது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போவே கேங்கிஸம் எங்க கிளாஸில இருந்தது. என்னுடைய கேங் ரொம்ப பெரியது. எதிரணியில் இருந்த சொர்ப்ப எண்ணிக்கையான ஐந்து நபர்களைத்தவிரவும், எப்பவுமே ஒரு குரூப் சமநிலையா இருக்கும்ல அவைங்களையும் விட்டுட்டு பாத்தா, அத்தன பேரும் நம்ப குரூப் தான்.

எங்க குரூப்பில் நானும், கவின் தீபக் (இப்பொழுது எம்.பி.ஏ முடித்துவிட்டு மிக பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்) லீடர்ஸ். கவினும் நானும் நல்ல நண்பர்கள். சேர்ந்து படித்த ஏழு வருடங்களும் பிரிந்ததேயில்லை. அப்புறம் அவன் பாய்ஸ் ஹையர்செகண்ட்ரி போயிட்டான். நான் எங்க ஸ்கூல்லயே இருந்திட்டேன். அப்புறம் எங்களுக்கு அடுத்தபடியாக பக்ருதீன் அலி அகமத், காளி ராஜேஸ் மற்றும் மணிகண்டன். இதில் காளி ராஜேஸ¤ம் மணிகண்டனும் இப்பொழுது திருமங்கலத்தில் பலசரக்கு கடை வைத்திருக்கிறார்கள். பக்ருதீன் பி.எஸ்.சி படித்துவிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறான்.

எதிரணியில் முக்கியஸ்தர்கள் மணிக்குமார் (இப்ப டாக்டர்), கணேஷ் (இவன் என்னுடன் காலேஜிலும் படித்தான். இப்ப பெரிய MNC ல வொர்க் பண்றான்) மற்றும் செண்பக குமார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மணிக்குமாரும், கணேசும் அமைதியானவர்கள். என்ன திட்டினாலும் பேசாம இருப்பாய்ங்க. “மேடம் கிட்ட சொல்லி கொடுத்திருவேன் பாய் (BOY)” அப்படீன்னு சொல்றத தவிர வேற ஒன்னும் சொல்லபாட்டாய்ங்க. அதுலயும் மணிக்குமாரும், கணேசும் எனக்கும் கவின் தீபக்கும் தான் படிப்பில் போட்டி இருக்கும். கவினும் நானும் மணிக்குமாரும் நண்பர்கள் தான். கணேஷ¤டன் தான் எப்பொழுதும் சண்டை நடக்கும். கணேசும் மணிக்குமாரும் நண்பர்கள் என்பதால் மணிக்குமார் கணேசுக்கு சப்போர்ட். அதனால் எங்களுடன் பேச மாட்டான். சென்பககுமார் அடியாள்.

செண்பககுமாருடன் நீங்க பேச முடியாது. சட்டுன்னு அடிச்சுபுடுவான். நிறைய தப்பு பண்ணி மாட்டிக்குவான். ஒன்னு நல்லா படிக்கணும் இல்லைன்னா எல்லாருக்கும் தெரியறமாதிரி தப்பு பண்ணக்கூடாது. இது ரெண்டும் அவன் பண்ண மாட்டான். மேடம் கிட்ட அவன் வாங்குற அடி கொஞ்சம். அதும் ஹிஸ்டரி மேடம் இருக்காங்களே, கைய திருப்பி வெச்சு, ஸ்கேல வெர்டிக்கலா வெச்சுக்கிட்டு போடுவாங்க பாருங்க அடி. நான் வாங்குனதேயில்ல. அடி வாங்குறவைங்கல பாத்தாலே போதுமே. ஆனா அது எதயும் பாத்து நம்பக் கூடாது. சில பேரு ஓவர் ஆக்டிங் கொடுப்பாய்ங்க. அது எனக்கு பிற்காலத்துல டியூசன் எடுக்கும் போது தான் தெரிஞ்சது. அவன செம்மரியாடுன்னு தான் கூப்புடுவோம். பேரு ஏன் அப்படி வந்ததுன்னு தெரியாது. ஆனா அவன் செம்மாறியாடு தான். சும்மா அவன் இங்கிட்டு அங்கிட்டு போகும் போது செம்மரியாடு மாதிரி கத்தி கடுப்பேத்துவாய்ங்க நம்ம ஆளுக. அவனுக்கு தான் கை கொஞ்சம் நீளமாச்சே. உடனே அடிக்க கை ஓங்குவான். அவ்வளவு தான் மேடம் என்ன செண்பக குமாரு அடிச்சுட்டான்னு ஆரம்பிச்சுடுவாய்ங்க. அன்னிக்கு அவன் மேடம்கிட்ட வாங்குற அடியெல்லாம் கொஞ்சம்.

மறுநாள் அவனோட அம்மாச்சி ஸ்கூலுக்கு வந்து தொரத்தி தொரத்தி கம்பு ஒன்னு வெச்சுக்கிட்டு அடிக்கும் பாருங்க. கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (அப்பங்க!) ஆனா அவனோட அம்மாச்சி ஸ்கூல இருக்குறவரைக்கும் தான் அழுகாச்சியெல்லாம். அவங்க அந்தப்பக்கம் போன உடனே அடி வாங்குனதயே மறந்துடுவான். அது வைரம் பாஞ்ச கட்டை.

ஒரு லாலிப்பாப்புக்காக சண்டை போட்டோம் நானும் மணிக்குமாரும். மணிக்குமார் மேல எனக்கு கொஞ்சம் கோபமாவேயிருக்கும். எனக்கு போட்டி அவன் தான். ஆனா எட்டாத தூரத்தில இருப்பான். பிடிக்கவே முடியாது. இப்ப இங்கிலீஸ்ல ஒரு போயம்(poem) இன்னக்கி நடத்துறாங்கன்னு வெச்சுக்குங்க, நடத்தி முடிச்ச அடுத்த நிமிசமே கடகடன்னும் சொல்லுவான் அந்த போயத்த. நமக்கு இருளடச்ச மாதிரி ஆயிடும். என்னடா நமக்கு இன்னும் வாசிக்கவே தெரியல அதுக்குள்ள இவன் கடகடன்னு ஒப்பிக்காரானேன்னு. வைகை டேமுக்கு டூர் போறதுன்னு முடிவாச்சு. டூர் போகும் போது ஸ்கூல் வேன்ல மணிக்குமாருக்கு ஒரு லாலிப்பாப் கொடுத்தேன்.

டேம்ல ஏதோ சண்டையில செண்பககுமாரா நொக்கி எடுத்துட்டாய்ங்க பக்ருவும் காளியும். இதனால மணிக்குமார் என்கூட பேச மாட்டேன்னுட்டான். எனக்கு கோபம் கோபமா வந்திடுச்சு. அப்படீன்னா என்கிட்ட வாங்குன லாலிப்பாப்ப கொடுடான்னு கேட்டேன். எப்படி கொடுப்பான். அததான் சாப்பிட்டுட்டானே. வைகை டேம்ல அந்த காலத்துல – நான் அஞ்சாவது படிக்கும் போது- கண்டிப்பா லாலிபாப் கிடைக்காது.

அன்னைக்கு சீசா விளையாடும் போது செண்பககுமார வலுகட்டாயமா கூப்பிட்டு அந்தப்பக்கம் உக்காரவெச்சாய்ங்க. அவனுக்காவது புத்தி வேணாம். நம்பல எதுக்குடா கூப்பிடுராய்ங்கன்னு? டக் ஆப் வார் மாதிரி இந்தப்பக்கம் நாங்க அந்தப்பக்கம் அவிங்க. நல்ல விளையாடிட்டு இருந்தப்ப, டக்குன்னு எங்க பக்கம் நாங்க இறங்கிட்டோம். மேல இருந்த அவிங்க டமால்ன்னு (சில பேரு சத்தம் கேட்டுச்சான்னு கேப்பீங்க, ஆமா கேட்டுச்சு) விழுந்தாய்ங்க. அதுல செண்பககுமாரு கால் உடஞ்சு இரத்தம் வந்திடுச்சு. டூர் பேக்கப்.

ஸ்கூலுக்கு வந்தப்பிறகு முதல் வேலையா மணிக்குமார் எனக்கு லாலிப்பாப் வாங்கிக்கொடுத்தான். அதற்கப்புறம் அவனுடன் நான் பேசவேயில்லை. அதெப்படி லாலிப்பாப்ப திரும்பக் குடுக்கலாம்? அவன் ஆறாவது வகுப்புக்கு வேற ஸ்கூல் போய்ட்டான்.

ரொம்ப நாளைக்கு அப்புறம், நான் பண்ணிரெண்டாவது பரிட்சை முடித்து, excel entrance coaching கிளாஸ் (இப்பத்தான் நுழைவுத்தேர்வு கிடையாதே, அவங்க பிசினெஸ் என்ன ஆகும்?) சேர்ந்தப்போ (அரசரடி, செவன்த் டே அட்வெண்டிஸ்ட்), என்னுடைய கிளாஸ்ல எனக்கு முன்னால இருந்த ரோவில் மணிக்குமார் உட்கார்ந்திருந்தான். சிரித்துக்கொண்டோம். அவன் சென்னையில் எம்.ஜி.ஆர் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ். படித்தான்.

கடைசியாக என்னுடைய BE மூன்றாவது வருடத்தில், கொடைக்கானலில் இருந்து வரும் வழியில் வைகை டேம் சென்றோம். ஸ்கூல் படிக்கும் போது நிறைய தடவை சென்றிருந்தாலும் ஒரு சுதந்திரம் இருக்காது. கூடவே மேடம் இருப்பாங்க. எங்க போனாலும் க்யூவில தான் போகனும். காலேஜில ஒரு சுதந்திரம் இருந்தது. டேம் மேலே ஏறினோம். படிகள் அழகாக இருந்தது. மேலே ஏறி அலை அடிக்கும் ஒரு சரிவில் கல்லின் மீது உட்கார்ந்து அந்த சின்ன அலைகளையே வெறித்துக்கொண்டிருந்தேன் ரொம்ப நேரம். என்னுடைய ப்ரண்டுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லாத நேரம். கொடைக்கானலிலே சண்டை வந்து விட்டது. ஈகோ. படிகளில் இறங்கிக்கொண்டிருந்தோம். என்னுடைய நண்பர் வட்டாரம் என்னுடன். அவளுடைய தோழிகள் அவளுடன், எனக்கு பின்னே. சட்டென மழை சடசடவென பிடித்துக்கொண்டது. எல்லோரும் பஸ்ஸை நோக்கி ஓடினர். நான் ஓடவில்லை. என் நண்பர் வட்டாரம் ஓடி விட்டது. அவள் ஓட வில்லை. அவளுடைய நண்பர் வட்டாரம் ஓடிவிட்டது. இருவரும் வழி நெடுக நனைந்து கொண்டே நடந்து வந்தோம், பஸ் ஏரும் வரை. ஈகோ சட்டென் கரைந்தது, செக்கச்செவப்பாய் தரையில் கரைந்து ஓடிக்கொண்டிருந்த மணலைப் போல.

எனக்கு இப்பவும் வைகை டேம்னா சட்டுன்னு நினைவுக்கு வருவது : அந்த twisted circular stairs. முதன் முதலாக சின்ன வயதில் பார்த்து மனதில் படிந்த அந்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கிறது.

காளி ராஜேஸ் (ஸ்கூல்) பாக்கத்தான் அடாவடியான ஆளு. ஆனா பயங்கர ரொமான்டிக் பேர்வழி. எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இருந்தது. அவ ரொம்ப அழகு. என்னுடைய பார்ட்னர் அவ. பார்ட்னர்னா அவகிட்டத்தான் ஒப்பிக்கனும், எழுதிக்காட்டனும். ஒரு நாள் இந்த காளி ராஜேஸ் என்ன பண்ணான் தெரியுமா? அவகிட்ட போய் லவ் லெட்டர் கொடுத்துட்டான்! என்ன கிளாஸ் படிச்சிட்டு இருந்தோம்னு நினைக்கிறீங்க? நாலு.

அந்தப்பொண்ணு அழ ஆரம்பிச்சுடுச்சு. அவங்க அப்பா கிரிமினல் லாயர் வேற. எங்களுக்கு செம கோபம் அது எப்படி அவன் கொடுக்கலாம்? அவன் மேல அவங்க அப்பா கேஸ் போட்டாலும் போடுவாருன்னு நாங்க சொன்னதுல பய பயந்துட்டான். ஒரு வாரம் கிளாஸ¤க்கே வரல.

கடைசியில கேரளா டூர் பத்தி ஒன்னுமே சொல்லலியே? அடுத்த இன்ஸ்டால்மென்ட் ப்ளீஸ். கை வலிக்குது, டைப் பண்ணி.

பின்குறிப்பு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

 

யார் முழித்திருக்கப் போகிறார்கள் -1

டிசம்பர் 3 1984

அது ஒரு குளிர்ந்த இரவு. போபால் நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. பலர் குளிருக்கு இதமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். அந்த இரவில் யார் முழித்திருக்கப்போகிறார்கள்? அந்த இரவுக்கு அப்புறம் யார் முழித்திருக்கப்போகிறார்கள்? 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை யூனியன் கார்பைடு இந்தியாவில் என்றைக்கும் போல இரவு பணி துரிதமாக நடந்துகொண்டிருந்தது.

நடுஇரவுக்கு மேல் திடீரென்று பெரும் குழப்பம் ஏற்படப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது.மெத்தில் ஐசோ செனேட் (MIC) யூனிட்டில் வேலை பார்க்கும் ஒரு நபர் என்றைக்கும் இல்லாத ஒரு அமானுஷ்ய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை அறிகிறார்.. E610 என்றழைக்கப்பட்ட டேங்கில் அழுத்தம் மிக வேகமாக உயர்ந்து கொண்டே சென்றது. E610 இல் தான் கொலைகார திரவம் : MIC இருந்தது. அவன் பார்த்துக்கொண்டேயிருக்கும் போது, அழுத்தம் சட சட வென்று உயர்ந்து அபாய எல்லையைத் தாண்டியது.

ஆபரேட்டருக்கு செய்தி போனது. அதிக வெப்பத்திலும், அழுத்தத்திலும் MIC திரவ நிலையிலிருந்து ஆவியாகி டேங்கை விட்டு வெளியேறிவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் அவருடைய மேலதிகாரிக்கு உடனே தகவல் அனுப்பினார். தொலிற்சாலைக்குள் அபாய எச்சரிக்கை ஒலித்தது. ஊழியர்கள் E610 க்கு விரைந்தனர். ஆனால் நிலமை கைமீறி விட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். டேங்கின் அருகேகூட யாரும் செல்ல முடியாதபடி டேங்கின் வெப்பநிலை அதிகரித்திருந்தது. தண்ணீர் தெளித்து வெப்பத்தை தனிக்க முயன்றனர், ஆனால் ஒன்றும் உபயோகமில்லை.

நாற்பது அடிக்கு எட்டடி இருந்த அந்த மிகப்பெரிய டேங்கின் சில பகுதி பூமிக்கு அடியே இருந்தது. மேலே சிமென்ட் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. நாற்பது டன் MIC அதில் அடைக்கப்பட்டிருந்தது – அலாவுதீனின் பூதம் போல – அது வெளியே வர துடித்துக்கொண்டிருந்தது. 0 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைக்கப்பட வேண்டிய திரவம் 250 டிகிரியை செல்சியஸை தொட்டுவிட்டது. டேங்க் மிகப் பயங்கரமாக அதிர ஆரம்பித்தது. கான்கிரீட் உடைய ஆரம்பித்தது. ஊழியர்கள் இடத்தை விட்டு தப்பியோடினர்.

ஆனால் அதற்குள்ளாக சேப்டி வால்வ் உடைந்து, விஷவாயு 70 அடி பைப்பில் வெளியேறியது. அது பிறகு Gas Scrubber க்கு செல்லும். பொதுவாக இது அவ்வளவு பயங்கரமாக, அபத்து விளைவிக்கக்கூடியதாக இருந்திருக்காது. ஏனென்றால் ஸ்க்ரப்பரில் வெளியிடப்படும் காஸ்டிக் சோடா (Caustic) குழம்பு MIC இன் விசத்தன்மையை நீக்கியிருக்க வேண்டும்.ஆனால் துரதிர்ஷ்டமான அந்த இரவில் ஸ்க்ரப்பர் வேலை செய்ய வில்லை. பராமரிப்புக்காக (maintainance) அது நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும் விஷத்தன்மையும், நச்சுத்தன்மையும் கொண்ட வாயுக்களைத் தயாரிக்கும் இவ்வாறான தொழிற்சாலைகளில் பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வகுக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும், ஆபத்தை எதிர்பார்த்து. ஆனால் UCIL லில் இருந்த ஐந்து வகையான பாதுகாப்பு வழிகள் அனைத்தும், அந்த இரவு வேலை செய்யவில்லை.

நன்றாக உறக்கத்திலிருந்த போபால் மக்களுக்கு தெரியாமல், அடர்த்தியான வெள்ளை விஷ வாயு காற்றில் அமைதியாக பரவிக்கொண்டிருந்தது. திங்கட்கிழமை, அதிகாலை 12:20 மணியிலிருந்து காலை இரண்டு மணி வரை, டேங்க் E610 தொடர்ச்சியாக நச்சுத்தன்மை கொண்ட வாயுவை சந்தோஷமாக வெளியேற்றிக்கொண்டிருந்தது.

ஊழியர்களுக்கு இந்த மாதிரி ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று முன் கூட்டியே சொல்லித்தரப்பட்டிருந்தது. அவர்களுக்கு விஷ வாயு மேகங்களுக்கு எதிர் திசையில் ஓட வேண்டும் என்று நன்றாகத்தெரியும். எனினும் போப்பால் மக்களுக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் தெரியாது, ஏனென்றால பொது அபாய எச்சரிக்கை காலை ஒரு மணிக்கு அப்புறம் தான் – அதுவும் சில வினாடிகள் மட்டுமே – ஒலித்தது. கடைசியாக இரண்டு மணிக்கு மேல் தான் அபாய மணி முழு வீச்சில் ஒலித்தது. ஆனால் அதற்குள்ளாக பாதி போப்பால் மக்கள் ஓட ஆரம்பித்திருந்தனர்.

பைப்பிலிருந்து வாயு மிக அதிகமான வேகத்தில் வெளியேறிக்கொண்டிருந்தது. முதலில் இரவு மிகுந்த அமைதியாக, காற்று இல்லாமல் தான் இருந்தது. ஆனால் விதி வலியது. சீக்கிரமே ஒரு மெல்லிய காற்று 12 கி.மீ வேகத்தில் வடகிழக்காக வீசத் தொடங்கியது. அது விஷவாயுவை தொழிற்சாலைக்கு அருகே மிக நெருக்கமாக குடியிருந்த மக்களை நோக்கி நகர்த்தியது, மேலும் அதற்குப் பிறகு ரெயில்வே லைனை ஒட்டியும், பழைய போபாலை நோக்கியும் கொண்டு சென்றது.

போப்பாலுக்கு வரும் முக்கிய பிரமுகரின் வருகைக்காக ரெயிவேஸ்டேசனில் காத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்டேசன் மாஸ்டர். அவர் அபாயத்தை உணர்ந்து போப்பாலை நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில்களை நிறுத்துவதற்கு விரைந்தார். ஆனால் லக்னௌவ்-பாம்பே விரைவு ரெயில் போப்பாலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதிகாலை 1:10 மணிக்கு, அந்த ரயில் போப்பாலை வந்தடைந்தது. ரயில் பயணிகள் ரெயில்வே ஸ்டேசனில் நிரம்பியிருந்த விஷ வாயு புகை மண்டலத்தில் காலடி எடுத்துவைத்தனர்.

என்றைக்குமில்லாமல் அன்றைக்கு மிகவும் குளிராக இருந்தது. வெப்பநிலை 12 டிகிரி செல்சியசுக்கும் 15 டிகிரி செல்சியசுக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே புகைபடிந்திருந்த காற்று மண்டலம், விஷ வாயு ஆவியாகமல் தடுத்துக்கொண்டிருந்தது. மேலும் விஷவாயு காற்றை விட இரண்டரை மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்தது. அதனால் அது சற்று தாழ்வாகவே பரவிக்கொண்டிருந்தது. தரைக்கு மிக பக்கத்தில் தவழ்ந்து கொண்டு சத்தமின்று குடிசைகளுக்குள் நுழைந்துகொண்டிருந்தது.

நன்றி: Suroopa Mukherjee

(தொடரும்)

ஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா?

கடந்த வெள்ளியன்று தினமலரில் நான் பார்த்து ரசித்து சிரித்த இரண்டு படங்கள். முடிஞ்சா சிரிச்சுக்கோங்க.

ஆவி ஜோதிடம்:

சூப்பரப்பு. ஆகா.ஆகா. ஆவி கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வருமா? சொல்றதுக்கில்ல, ஜட்ஜ் மேலேயே வந்தாலும் வரும். இனிமேல் லாயருங்கோ கேஸ் கட்டு எடுத்தார தேவையில்ல, எழும்புக்கூடு, மண்டையோடு, குடுகுடுப்பை பழைய சுவடிக்கட்டு தான் எடுத்துவரனும். லா படிக்கத்தேவையில்ல, BO (Bachelor of Ouija) தான் படிக்கனும். என்ஜினியரிங் ஸ்டூடென்ட்ஸ் மாதிரி பிராக்டிக்கல்ஸ் லேப் எல்லாம் கூட உண்டு. ப்ரட் போர்ட் மாதிரி ouija போர்ட். சர்க்யூட் மாத்தி கொடுத்தா, மவனே தொலஞ்ச! ஆவி ரத்தமெல்லாம் குடிக்குமாமே? இதெல்லாம் படிக்கம்போதே பன்னனும், பின்ன ஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா? போலீஸ்க்கு கவர்மெண்ட் புது கார் எல்லாம் வாங்கி கொடுக்கத்தேவையில்ல, மையும் (மை எழுதறதுக்குன்னு நெனச்சீங்கன்னா, ஐயோ பாவம்!), எழுமிச்சையும் மட்டும் போதும். உட்கார்ந்த எடத்திலேருந்து புடிப்பம்ல.

கலி காலம்னு சும்மாவா சொன்னாய்ங்க. விஜயகாந்த் கவனிப்பாராக. அவரு தொகுதிங்க!

ஆனா ஒன்னு : நமக்கு அடுத்த கதைக்கு “கரு” கிடைச்சாச்சு.

அப்புறம், இந்தப் படம்.

நிறைய பேரு பாத்திருக்கலாம். ஆனா எனக்கு சுரீர்ன்னுச்சு. போட்டோ எடுத்து போட்டாங்க. லஞ்ச வாங்குனவரு மொகத்த எங்க கொண்டு போய் வச்சுக்குவாரு? தெரியல. பாவம்ல. தப்புத்தேன். லஞ்சம் வாங்குனது தப்புத்தேன். ஆனா கொடுக்கறதும் தப்புத்தான? போகக்கூடாத வழியில போகறதலாத்தான அவரு வழி மறைக்குறாரு. காசு கேக்குறாரு. தப்பு செஞ்சுட்டு மறைக்குறதுக்குத்தான நீ லஞ்சம் கொடுக்கற? அப்புறம் தினமலர் ஏன் ஒரு பக்கமா சார்ந்து செய்தி போடுது? தன்னை கவனித்த வாகனத்துக்கு வாஞ்சையுடன் வழி காட்டுகிறார் என்ற நக்கல் டயலாக் எதுக்கு? லஞ்சம் கொடுத்தவன பத்தி ஒன்னும் காணோம்? அவரு மட்டும் நல்லவரா? மக்களும் திருந்தனும்ங்க. அதிகாரத்துல இருக்குறவங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்குனுங்கறது வாஸ்தவம் தான், அதுக்காக மத்தவங்களுக்கு பொறுப்பே இருக்கத் தேவையில்லியா?

ஊசியை வைத்துக் கிணறு தோண்டு

எழுதுவது, என்று சொன்னவுடன், என் நினைவுக்கு வருவது, நாவலோ, கதையோ, கவிதையோ அல்லது இலக்கியமோ அல்ல. அது ஒரு மனிதனைப்பற்றியது. ஒரு அறைக்குள், தன்னந்தனியே, அந்த அறையின் நிசப்தத்தில் தன்னைத்தானே அடைத்துக்கொண்டு, தன்னையும், தன்னுள் ஏற்படும் நிழல்களையும் வைத்து ஒரு உலகத்தை – வார்த்தைகளால் ஆன உலகத்தை, தன் உலகத்தை- உருவாக்குகிறவனைப் பற்றியது. எழுத்தாளன் என்பன் வருடக்கணக்கில் பொறுமையாக, மிகப் பொறுமையாக காத்திருந்து, தன்னுள் இருக்கும் இன்னொருவனை – இன்னொரு உலகத்தை – அறிந்து கொள்ள முயல்பவன். அந்த உலகமே அவனை எழுத்தாளனாக்கும். அவன் அவனாக மட்டுமே இருக்கும் உலகம் அது. அந்த எழுத்தாளன் – அல்லது பெண் எழுத்தாளர் – டைப்ரைட்டரையோ, அல்லது கம்ப்யூட்டரையோ அல்லது பேனாவை உபயோகப்படுத்தியோ – நான் கடந்த 30 வருடங்களாக செய்துகொண்டிருப்பதைப்போல- எழுதலாம். அவன் எழுதும்போது காபியோ, டீயோ குடிக்கலாம் அல்லது சிகரெட் புகைக்கலாம். சில சமயங்களில் எழுந்து ஜன்னல் வழியாக தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்க்கலாம். இல்லை இன்னும் அதிர்ஷ்டக்காரன் என்றால் மரங்களையோ, இயற்கைக்காட்சியையோ ரசிக்கலாம். இல்லை வெறுமனே சுவற்றை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவன் கவிதையோ, நாவலோ, நாடகங்களோ எழுதலாம் – என்னைப்போல.மிதைத்தவிர மற்ற பிற வித்தியாசங்கள் அவன் தனிமையில் உட்கார்ந்து, தன்னைத்தானே நோக்கும், அந்த சிரமமான; மிக முக்கியமான நிகழ்ச்சிக்குப் பின்னே தான் நடக்கும். எழுதுவது என்பது தன்னைத்தானே பார்க்கும் அந்த பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது. அவன் அவனுள்ளே சென்ற பிறகு பிறக்கும் அந்த புதிய உலகத்தை ஆழ்ந்து படிப்பது : நிதானமாக, பொறுமையாக, மனநிறைவுடன் சந்தோஷமாக.

பல நாட்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக, என் மேஜையில் உட்கார்ந்து, காலியாக கிடக்கும் என் எழுதப்படாத பக்கங்களில் சிறிது சிறிதாக – ஒரு பாலத்தையோ அல்லது கோவிலையோ, செங்கல் செங்கலாக ரசித்து செதுக்குபவர்களைப் போல -வார்த்தைகளைக் கோர்க்கும் போது, நான் என்னுள் இருக்கும் இன்னொருவனை உணர்ந்துகொண்டதாக உணர்வேன். எழுத்தாளர்களான எங்களுக்கு வார்த்தைகளே செங்கற்கள். நாங்கள் அவற்றை எங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, அவைகளுக்குள்ளான உறவுகளை உணர்ந்து, தொலைதூரத்திலிருந்து பார்த்து, மிக அருகில்; எங்கள் விரல்களைக்கொண்டோ, பேனா முனைகளைக்கொண்டோ வருடிக்கொடுத்து, சரசமாடி, எடையிட்டு, இங்கும் அங்கும் மாற்றியிட்டு அழகுபார்த்து, வருடக்கணக்கில், பொறுமையாக, நம்பிக்கையுடன், எங்கள் உலகத்தை சிருஷ்டிக்கிறோம்.

எழுத்தாளனுடைய ரகசியம் மனவெழுச்சி – அது எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்தாலும்- அல்ல, அது அவனுடைய பொறுமை மற்றும் பிடிவாத குணம். அந்த அழகிய துருக்கிய பழமொழி – ஊசியை வைத்துக் கிணறு தோண்டு – எழுத்தாளர்களை மனதில் வைத்து சொல்லப்பட்டது என்றே நினைக்கிறேன்.

– சமீபத்தில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் நோபல் பரிசு பெற்றபிறகு பேசியது. என்னால் முடிந்தவரைக்கும் தமிழ் படுத்தியிருக்கிறேன்.

முழுமையான உரையை இங்கே காணலாம்.

டன் டன் டன் டகா

(சிறுகதை) தேன் கூடு போட்டிக்கு

ந்த குசும்பு தான வேணாங்கறது. என்னப் பாத்தா எப்படித் தெரியுது? வாடக வீடு தேடும்போதே இந்த நக்கலா?” என்றார் புரோக்கர்.

கேட்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு உதவியா இருக்கும்னு நினைக்கறப்போ, கேக்கறதுல்ல தப்பில்ல இல்லையா? அப்புறம் கேட்டிருக்கலாமேன்னு மனசு கிடந்து அலையக்கூடாது பாருங்க.

புரோக்கர் இன்னும் என்னையே வெறித்துக்கொண்டிருந்தார்.

***

டீவியில் அக்னிநட்சத்திரம் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல படம் தான். எத்தன வாட்டி பாக்குறது? தரையில் உட்கார்ந்து நல்லா கால் நீட்டி, சோபாவுல சாஞ்சுகிட்டு, கையில குமுதத்த வெச்சுக்கிட்டு, சும்மா படம் பாத்திட்டிருந்தேன். அசின் அழகு தான் இல்லியா? அதுவும் போக்கிரில கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. மேக்கம் ஓவரா போட்டிருப்பாய்ங்களோ? வெளியே மழை நன்றாகப் பெய்து கொண்டிருக்கிறது. தம் அடித்தால் தேவலை ஆனால் இந்த ராட்சஸி…..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ என்று கத்திக்கொண்டு தெருவில் ஓடிக்கொண்டிருந்தார் ஜனகராஜ். அட ஆமால்ல! தனமும் இல்லியே. ஊருக்கு போயிட்டால்ல..ஹா…ஹா…ஹா…ஹா…என்று சத்தமாக சிரித்தேன். இந்தக் காட்சியை நான் நிறைய தடவை பார்த்திருந்தாலும் இன்றைக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.குமுதத்தை தூக்கி கடாசினேன். அது ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. ஆவேசமாக எழுந்தேன். வேட்டிய மடிச்சு கட்டினேன். ..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ வேகமாக மாடியிலிருக்கும் என் ரூமுக்கு ஓடி என் பையில் ( என்னுடைய ஷோல்டர் பேக்கின் பின் பகுதியில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிப் வைத்த எக்ஸ்ட்ரா இடம் இருக்கிறது. பொண்டாட்டிக்கு தெரியாமல் தம் அடிக்கும் எங்களுக்காகவே ஆண்டவன் அருளிச்செய்தத பேக் இது) இருந்த கோல்ட் பிளேக் சிகரெட்டையும், ஒழித்து வைத்திருந்த லைட்டரையும் எடுத்தேன். இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வந்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது. பூங்காற்று திரும்பியது. வாழ்க ஜனகராஜ். ச்..சே..இவ்வளவு சுதந்திரமா? கண்ணாடியில் பார்த்தேன். டேய் சுந்தரம்..எப்படிடா இவ்வளவு ஸ்மார்டா இருக்க? பின்ன சும்மாவா கவிதா, சார் மெமரி லீக் இருக்கு சார், கோர் டம்ப் ஆகுது சார்ன்னு சும்மா சும்மா நம்பமேல டம்ப் ஆகுறா? கவிதா? கவிதையே தெரியுமா? கவிதையே தெரியுமா…என் கனவு நீ தானடி…சிகரெட் என் உதடுகளில் சதாவாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

எம் டீவியில் ஷகீரா ஹம்ம்ம்…ஆடிக்கொண்டிருந்தாள். சிகரெட் பாக்கெட் தீர்ந்து போய்விட்டது. சோபாவுக்கு கீழே ஒரே சிகரெட் குப்பை. தனம் பாத்தான்னா பேயாட்டம் ஆடுவா. பிசாசு. மணி எட்டு தான ஆகுது. சுந்தரம்..ம்ம்…ம்ம்…இன்னும் காலைலைக்கு நிறைய நேரம் இருக்கேடா.

கைலியக் கழட்டி ஷோபாவில கடாசி விட்டு, பேண்டை மாட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினேன்.

கையில் பிளாக் லேபிலும், நான்கு பாக்கெட் கோல்ட் பிளேக்கும், ஒரு குங்குமமும், ஒரு டஜன் வாழைப்பழமும், புரோட்டா சிக்கன் ஆம்லேட் பொட்டனமும்..ம்ம்ம்…அடப்பாவி ஆப்பாயில் வாங்கலியே டா..பரவாயில்ல வீட்ல போட்டுக்கலாம்..ஒரு லிட்டர் கோக் பாட்டிலும் வெச்சுக்கிட்டு கதவ எப்படித்தான் திறக்குறது?

தனியா எப்படி அடிக்குறதுன்னு சிவாவக் கூப்பிட்டா, முடியாது வேல இருக்குன்னுட்டான். பராவியில்ல தனிமையிலே இனிமை காண முடியுமே! நடு இரவினிலும் சூரியனும் தெரியுமே..தனிமையிலே….கதவை கிச்சின்னு பூட்டினேன். சிகரெட் புகை இன்னும் காற்றை நிரப்பிக்கொண்டிருந்தது.

டீபாயில் வரிசையாக பிளாக் லேபிளையும், கோக் பாட்டிலையும், புரோட்டா பொட்டனத்தையும், வாழைப்பழத்தையும் அடுக்கி வைத்து அழகு பார்த்தேன். கிச்சனுக்கு போய் ஆப்பாயில் போட்டுக்கொண்டு வந்தேன். கைலிக்கு மாறிடலாமா? அது தான் வசதி. சோபாலதான போட்டேன்? எங்க காணோம்? கீழ விழுந்திருச்சா? இல்லையே!

ஹாங்…அந்தா கொடியிலே கிடக்கு! சுந்தரம் நீ வர வர பொறுப்பாகிட்டே இருக்கியேடா. அழகா மடிச்சு கொடியில போட்ருக்க.


‘தீபாவளி தீபாவளி தீபாவளி நீ தான்டா..சூராவளி சூராவளி சூராவளி சுந்தரம் தான்டா’ பாதி பாட்டில் காலி. ஹக். ஹக். ப்ரியா பிக்கில்ஸ். சுவையும் அலாதி. நாக்கு சத்தமாக சப்பு கொட்டியது. என்னமா டான்ஸ் ஆடறா அசின்? அடா அடா..குமுதத்திலிருந்த அசின் படம் ஞாபகத்திற்கு வந்தது. டேய் சுந்தரம் குமுதத்த எடுத்து அசின க்ளோசப்ல பாருடா. அசின் நீ ஒரு பிசின்..ஹா..கவிதை கவிதை..சுந்தரம்… பொண்டாட்டி ஊருக்கு போனதுக்கப்புறம் கவிதை கூட சொல்றியா நீ?

டீபாயில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிப் போட்டு அசின் இருந்த குமுதத்தை தேடினேன். தனம் எடுத்தா எடுத்த எடத்தில வைன்னாடி சொல்வ, இப்பபாருடி, விகடனையும் குமுதத்தையும் மூலைக்கு ஒன்றாக வீசினேன். விகடன் ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. முதல் பக்கத்திலே போக்கிரி அசின் அழகாக சிரித்துக்கொண்டிருந்தார். “போக்கிரி” என்று செல்லமாக அசினின் கண்ணத்தை பிடித்து கிள்ளினேன்.

நேத்து ராத்திரி ஆடிச்சது கின்னுன்னு இருக்கு. ஏற்கனவே லேட். அடித்து பிடித்து ஆபிசுக்கு கிளம்பினேன். ராத்திரி அடிச்ச கூத்துல வீடே ரணகளமாகியிருந்தது. சோபாவுக்கு கீழே ஒரே சிகரெட் துண்டுகள். வாழைப்பழத்தோல்கள்..காய்ந்து போன ஆப்பாயில் பிளேட்..தீர்ந்து போன பிளாக் லேபில்.

ஷ¥ ரேக்கிலிருந்து ஷ¥வைத்தேடி பிடித்து எடுத்தேன், விகடன் கீழே விழுந்தது.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நிழைந்தேன். படுத்து எடுத்துட்டாயங்க. தனம் செல்லம் இருந்தான்னா சூடா காப்பி போட்டுக் கொடுப்பா. சேரில் உட்கார்ந்து ஷ¥ வைக்கழட்டி கடாசி விட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். செல்லம் எப்படா வருவ?

ஹ¤ம்..ம்ம்.. சோபாவில் வந்தமர்ந்தேன். குமுதம், விகடன், குங்கும எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு சுரீர் என்றது. ஷ¥ ரேக்கைப் பார்த்தேன்..நான் சமீபத்தில் கடாசிய ஷ¥வைத்தவிர சுத்தமாக இருந்தது. குனிந்து கீழே பார்த்தேன். சிகரெட் துண்டுகளைக்காணவில்லை. சுத்தம். ஆப்பாயில் பிளேட்டைக்காணோம். பிளாக் லேபில் காலி பாட்டில் இல்லை. மெதுவாக திரும்பி வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். அட்சர சுத்தம். யார் கிளீன் பண்ணது.

வேகமாக எழுந்து கிச்சனிலிருக்கும் குப்பைத்தொட்டியைப் பார்த்தென். சிகரெட் துண்டுகளும், பிளாக் லேபிள் பாட்டிலும், வாழைப்பழத்தோல்களும் கிடந்தன. யார் கிளீன் பண்ணது?

ஒன்றும் புரியவில்லை. சாவி என்கிட்ட மட்டும் தான இருக்கு. தனம் வந்துட்டாளா?ஐயையோ.மாடிக்கு இரண்டு இரண்டு படிகளாக ஏறிச்சென்று பார்த்தேன். தனம் இல்லை. என் ரூமில் நான் காலையில் கழட்டிப் போட்ட கைலி அழகாக மடித்து ஹேங்கரில் மாட்டப்பட்டிருந்தது.

தனம் நமக்கு தெரியாமல் வேலைக்காரி செட்டப் பண்ணிருப்பாளோ? இல்லியே. என் கிட்ட மட்டும் தான சாவி இருக்கு!

மணி பார்த்தேன். ஒரு மணி என்று தவறாகக் காட்டிக்கொண்டிருந்தது.

என்ன எழவெடுத்த கடிகாரம் டா, ஒன்னுலே நிக்குது. என் வாட்சைப் பார்த்தேன் மணி 9:40 காலை. நேற்று கடாசிய ஷ¥ வைத்தேடினேன். அழகாக ஹ¥ ரேக்கில் இருந்தது.

ஷ¥ மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் போது, ஒரு யோசனை தோன்றியது. புத்தகங்களையும் பேப்பரையும் எடுத்து ஹால் பூராவும் விசிறினேன். ஷ¥ ரேக்கை ஒரே எத்து. கலைந்து கீழே விழுந்தது. கொடியில் கிடந்த துணிகளை எடுத்து கடாசினேன். ஏன்னா, நேத்து ராத்திரி தனத்துக்கு போன் பண்ணி, எனக்கு வேலைக்காரி எதுவும் செட்அப் பண்ணிருக்கியாடா செல்லம்னு கேட்டேன். உனக்கு அந்த நெனப்பு வேற இருக்காடா, செருப்பால அடிப்பேன்னா. இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கதவை இழுத்து கிச்சுன்னு பூட்டினேன்.

வேலையே ஓடல. பயங்கர ஆன்டிசிபேஷன். கதவைத் திறந்தேன். கிட்டத்தட்ட நான் மயங்கி விழாத குறை. இன்றைக்கும் அட்சர சுத்தம்.

வீட்டுக்குள்ளே போறதா? வேணாமான்னு ஒரு சந்தேகம்! ‘ஹலோ எனிபடி ஹோம்?’ ன்னு கத்த நினைச்சேன், ஆனா ஈனசுரத்தில தான் முனங்க முடிஞ்சது.

வீட்டில் என்னைத்தவிர யாரும் இல்லை.

மணி அதே ஒன்றைக்காட்டிக்கொண்டிருந்தது. வாங்கி வந்திருந்த புது பேட்டரியை மாற்றினேன். 7:10 என்று திருப்பி வைத்தேன். ஏனோ சாமி பாட்டு கேட்கலாம் போல தோன்றவே. மஹாநதி ஷோபனா பாடிய முருகன் என்றால் அழகு பாடலில் ப்ளேயரில் போட்டேன்.

பயங்கர குளிர். தூங்கிவிட்டேன் போல.ப்ளேயர் சில இடங்களில் திக்கித்திணறிக்கொண்டிருந்தது. விரல்கள் ஜில்லென்றிருந்தது. ஜில்லென்று பத்து விரல்கள். சிடி தேய்ந்து விட்டதோன்னு நினைக்கிற அளவுக்கு மஹாநதி ஷோபனா திக்கினார். பாட்டை நிறுத்தி விட்டு, டீவியை ஆன் செய்தேன். படம் சரியாகத்தெரியவில்லை. சில சமயம் நன்றாகத்தெரிந்தது. பல சமயம் இருட்டாகியது. சை..மணி என்னான்னு பார்த்தேன். 7:15 என்று காட்டியது. அடப்பாவி பேட்டரி ஒர்க ஆகலையா? புது பேட்டரி ஆச்சே. என் வாட்சை எடுத்து பார்த்தேன். அதுவும் ஓடவில்லை. ஏன் இப்படி குளிர்கிறது? டீவியில் செல்வி நாடகம் முடிந்தது.

அப்பொழுதுதான் யாரோ படியிலிருந்து இறங்கி கிச்சனுக்குள் செல்வது போல இருந்தது. குட்டையாக. பெண். தலையை விரித்துக் கொண்டு. எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. தடால் புடால் என்று அடித்துக் கொண்டு எழுந்தேன். கிச்சன் காலியாக இருந்தது. பைப்பில் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்புறம் பழகி விட்டது. பெயரி ஆனந்தியாம். இந்த வீட்டில் வேலைக்காரியாக இருந்திருக்கிறது. அந்த ஐயா ஏமாற்றி விடவே, இதோ நான் உட்கார்ந்திருக்கும் ஷோபாவுக்கு மேலே ரொம்ப வீக்காக சுற்றிக்கொண்டிருக்கும் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. ஆனந்தி கொஞ்சம் கனம் தான். பேன் எப்படி தாங்கியது என்று தெரியவில்லை.

நான் எவ்வளவு தூரம் கலைத்துப் போட்டாலும் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறது. சம்பளம் கொடுக்கத்தேவையில்லை. ஓசியில் ஏசி குளிர்.ஆனால் கடிகாரத்திற்கும் என் வாட்சுக்கும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பேட்டரி மாற்றித்தான் மாளவில்லை. கடைக்காரார், “என்னடா புரோட்டா கிரோட்டா வாங்கித் திங்கப்படாது, பேட்டரிய ஏன் திங்கற” ங்கறமாதிரி பார்க்கிறார். செல்போனை ஒழித்து வைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாள் அலுப்புடனும் தலைவலியுடனும் வந்து,”ஆனந்தி கொஞ்சம்” காப்பி என்றேன், கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்து விட்டு மறைந்துவிட்டது. இரண்டு நாள் லீவு போட்டு விட்டது. வீடெங்கும் ஒரே குப்பை. அப்புறம் நான் காப்பி கேட்க மாட்டேன் நான் காப்பி கேட்க மாட்டேன் என்று என்பது பக்க நோட்டில் எழுதியப் பிறகு வந்து வேலையில் ஜாயின் செய்து கொண்டது. நான் கிரிகெட் மேட்ச் பார்க்கும் பொழுதும், செல்வி தொடர் பார்க்கும் பொழுது மட்டும், இந்தப் பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். இருந்தாலும் அப்பப்ப வந்து தொந்தரவு செய்யும். மேட்ச் மங்கலாக தெரியும்.

ஒரு வழியா அட்ஜெஸ்ட் ஆகியிருந்தப்பத்தான், வீட்டு ஓனரு தன்னுடைய மகன் (வெளிநாட்டில் வேலை பார்த்தவர்) வந்து இந்த வீட்டில் தங்கப்போவதாகவும், அதனால் வீட்டை காலி செய்யுமாறு சொன்னார். எவ்வளோ மன்றாடியும் கேட்கவில்லை. உங்கள் மகனை நிறைய பேட்டரிகள் அமெரிக்காவிலிருந்து வாங்கி வரச்சொல்லுங்கள், தேவைப்படும் என்று சொன்னேன். புரியாமல் முழித்தார். போகப் போகப் புரியும் அந்த பேயின் வாசம் தெரியும்.

***

கேட்க வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனா நமக்கு உபயோகமா இருக்கும்கிறப்போ கேட்கறது தான முறை. அப்புறம் கேட்டிருக்கலாமோன்னு மனசு கிடந்து அலையக்கூடாது பாருங்க.

‘சார் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க’ என்றேன்.

காபி குடித்துக்கொண்டிருந்த வீட்டு புரோக்கர் நிமிர்ந்து பார்த்து, ‘என்ன சொல்லுங்க’ என்றார்.
நான் தயக்கத்துடன்,’உங்களுக்கு தெரியாதது இல்ல. வீட்டப்பத்தின எல்லா விசயங்களும் உங்களுக்கு தெரியும். வீடு எப்படி. யாராரு இருந்தாங்க.ம்..ம்…ம்…ம்ம்…யாராரு தற்கொலை செஞ்சிருக்காங்கன்னு…’

நான் முடிப்பதற்குள்ள, ‘சரிப்பா. அப்படி எதுவும் இல்லாத வீடாபார்த்து தாரேன்’ என்றார்.
‘இல்ல இல்ல..யாராவது தற்கொலை செஞ்சுக்கிட்ட வீடாப்பாருங்களேன். அதுவும் வேலைக்காரி தற்கொலை செஞ்சுக்கிட்ட வீடாப்பாருங்களேன்’ ன்னு சொன்னேன்.

சற்று நேரம் முறைத்து பார்த்த புரோக்கர், ‘இந்த குசும்பு தான வேணாங்கிறது…’ என்று கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார்.

***

மனைவியின் துணையில்லாமலே ஒண்டி ஆளாய் வீட்டை ஷிப்ட் செய்து விட்டேன். புது வீடுதான். சுவற்றி வாட்ச் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. ஆபீஸ் கிளம்புன் முன் – ஒரு நப்பாசையில் – ஷ¥ ரேக்கை கலைத்துப் போட்டேன். பேப்பரையும், துணிகளையும் கடாசினேன். வீடு குப்பையாக இருந்தது.

கதவைத்திறந்தேன். குப்பென்று சிகரெட் வாடை அடித்தது. காலையில் அடித்த சிகரெட் புகை இன்னுமா சுற்றிக்கொண்டிருக்கிறது. கலைத்தது கலைத்து போட்ட மாதிரியே இருந்தது. சுந்தரம் உனக்கு லக் இல்லடான்னு நினைச்சுக்கிட்டே சிகரெட் பாக்கெட்ட எடுத்தேன். பாக்கெட் காலி. டீவி பக்கத்தில் வெச்சிருந்த புது சிகரெட் பாக்கெட்ட எடுக்க போனேன். பாக்கெட் பிரிக்கப் பட்டிருந்தது. இரண்டு சிகரெட்களே மீதமிருந்தது. சோபாவுக்கு அடியிலெங்கும் சிகரெட் துண்டுகள்.

வாட்ச் ஓடவில்லை. மிகவும் குளிராக இருந்தது. யாரோ லுங்கி பனியனுடன் நிற்பது போலிருந்தது. இனி கோல்ட் பிளேக்கும், பிளாக் லேபிலும் இரண்டு மடங்காக வாங்கவேண்டும். ‘ஹாய்’ என்றேன் புதிய கம்பெனி கிடைத்து விட்ட சந்தோஷத்துடன்.

***