லவ்ஸ் – 1

(கற்பனைக்காதலி : புஷ்பா)

கார்ரெட் கம்ப்யூட்டர் சிஸ்டெம்ஸ். காபிட்டேரியா.

ஸ்ட்ரா பாக்கெட்டுகள்
கூட்டம் கூட்டமாக
தற்கொலை செய்து கொண்டன.

புஷ்பா இன்று ஜூஸ்
சாப்பிட வரவில்லை.

***

பிரம்மா. படைப்புலகம்.

வாருங்கள்.
நீங்கள் போன பிறவியில்
நிறைய நன்மைகள்
செய்திருப்பதால், இந்தமுறை
நீங்கள் எது நினைக்கிறீரோ
அதுவாகவே பிறக்கலாம்.

உலகத்தின் மிகப்பெரிய
செல்வந்தராக போகிறீரா?

வேண்டாம்.

உலகத்தின் ஆன்மீகத்
தலைவராக?

வேண்டாம்.

உலகத்தையே உங்கள்
கையில் வைத்துக்கொள்ளும்
அதிகாரம் கொண்டவராக?

வேண்டாம்.

அழகான கிளியோபாத்ராவாக?

வேண்டாம்.

பெண்கள் மயங்கும் மன்மதனாக?

வேண்டாம்.

யூ.எஸ். ப்ரசிடென்ட்டாக?

வேண்டாம்.

கொஞ்சும் கிளியாக?

வேண்டாம்.

அழகான முயலாக?

வேண்டாம்.

பிறகு என்னவாகத்தான் பிறக்கவேண்டும்
என்று நினைக்கிறீர்கள்?

புஷ்பாவின் போனிடெயிலுக்கு
ஹேர்பேண்டாக. ப்ளீஸ்.

***

அடர்ந்த காடு.
கடும் குளிர்.
விடாமல் தவம் புரியும்
விசுவாமித்திரர்.

வேட்டையாடவந்த
அழகான மன்மதன்
ஒருவன்
அவரின்
தவத்தைக் களைத்தான்.

விசுவாமித்திரர்
கொடுத்தார் சாபம்
என் கூஜாவிலிருக்கும்
தண்ணீராக மாறிவிடு.

அவன் மன்றாடினான்.
கூத்தாடினான்.

மனம் இளகிய
விசுவாமித்திரர்
சொன்னார்.
மனிதன் அல்லாத
வேறு
உருவம் உனக்கு
கொடுக்கிறேன்.
கேள் என்றார்.

சற்றும் தாமதிக்காமல்
அவன் சொன்னான்:

புஷ்பாவின் டெஸ்கிலிருக்கும்
மானிட்டராகப் போகிறேன்.
தினமும் அவள் என்னைப்
பார்த்துக்கொண்டேயிருப்பாள்.

***

புஷ்பாவுக்கு
ரொம்பத்தான் திமிர்
என்றது தலையணை.

நான் தான் அவளுடைய
தலைக்கு இதமாக இருக்கிறேன்.
ஆனால் என்றுமே
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்.

ஆமாம் ஆமாம்
உண்மைதான்.
நான் தான் அவள்
போர்த்திக்கொள்ள
உதவுகிறேன்.
ஆனாலும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்.
என்றது போர்வை.

ஆமாம்.ஆமாம்.
நான் தான் அவள்
படுப்பதற்கு
இதமாக இருந்து
அவளுக்கு நல்ல
தூக்கத்தைத் தருகிறேன்
ஆனாலும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்
என்றது மெத்தை.

ஆமாம். ஆமாம்.
நான் தான் அவளுக்கு
குளிர்ந்த காற்றைத்
தருகிறேன்
இருந்தும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்
என்றது மின்விசிறி.

இவை எதுவுமே
செய்யாமல் சும்மா
இருக்கும்
அந்த டெடி பியருக்குத்தான்
எப்பொழுதுமே
கிடைக்கின்றன முத்தங்கள்
என்றன எல்லாமுமாய்
சேர்ந்து.

டெடி பியர்
சொல்லியது:
உங்கள் எல்லாரையுமே
அவளாக வாங்கிக்கொண்டாள்.

என்னை
அவன் அல்லவா
வாங்கிக்கொடுத்தான்.

நீங்கள்
அவனிடம் சென்று
மன்றாடுங்கள்.

***

Leave a comment