பாத்ததும் படித்ததும்

(அரவிந்த அடிகா, விகாஷ் ஸவரூப், ஸ்லம்டாக், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் படங்கள்)

அரவிந்த் அடிகா வைட் டைகருக்கு அப்புறம் Between The Assasinations என்றொரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பாப்புலரில் இன்று பார்த்தேன். தொகுப்பு பாப்புலராகிவிட்டதா என்று தெரியவில்லை. தற்பொழுது படிப்பதற்கு நிறைய இருப்பதால் இப்போதைக்கு வாங்கவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். சல்மான்ருஷ்டிக்கு பிறகு இந்திய ஆங்கில எழுத்து மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கிரண் தேசாய், அருந்ததி ராய், விக்ரம் செத், அரவிந்த் அடிகா, அமிதவ் கோஷ் போல நிறைய பேர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர். புக்கர் பரிசை வரிசையாக தட்டிச்செல்கிறார்கள். இந்த வரிசையில் மேலும் ஒருவர்: ஸ்லம் டாக் மில்லியனரை எழுதிய விகாஷ் ஸ்வரூப். இன்று கூட சிங்கப்பூரிலிருந்த வெளிவரும் இந்திய வாரப்பத்திரிக்கையான Tablaவில் கூட இவர்களைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. பிரிட்டிஷ் எப்படி வளைச்சு வளைச்சு அட்டாக் பண்ணி காலணிய ஆதிக்கம் பண்ணாங்களோ அதே போல இந்தியர்கள் சகட்டுமேனிக்கு எல்லாத் துறைகளிலும் புகுந்து வெளுத்துக் கட்டுறாங்க. அதுவும் எழுத்துத் துறையில் முக்கிய இடம் பிடிப்பது என்பது மிக நன்று.

தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் Three Cups Of Teaக்கு அப்புறம் Tagging என்றொரு புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன். Fiction படிப்பதை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன், Michio Kaku எழுதிய புத்தகங்களின் மேல் ஒரு கண் இருக்கிறது. மேலும் அயன் ரான்ட்-இன் Atlas Shrugged படிக்கவேண்டும் என்றும் நினைத்திருக்க்றேன். பார்ப்போம்.

*

என் அண்ணன் நெடுங்குருதி ஒரு வழியாக படித்துமுடித்து விட்டேன் என்று சொன்னார். நெடுங்குருதி பற்றி ஒரு நெடும் பதிவு தான் போடவேண்டும்,. சிங்கப்பூருக்கு வந்த பொழுது இங்கே நூலகத்தில் மெம்பராக சேர்ந்த பொழுது முதன் முதலாக இரண்டு புத்தங்கள் எடுத்தேன். Code To Zero மற்றும் நெடுங்குருதி. கடைசி அறுபது எழுபது பக்கங்கள் கொஞ்சம் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டால் நெடுங்குருதி தமிழில் ஒரு மிக முக்கியமான நாவல். ராமகிருஷ்ணனின் அழுங்காத அலட்டல் இல்லாத எழுத்து நடை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய சிந்தனையும் உவமைகளும் மிகவும் புதிதாக இருந்தது. ராமகிருஷ்ணன் மிக நுனுக்கமான பார்வை கொண்டவர். வெயிலையும் எறுப்புகளையும் அவர் பின் தொடர்ந்து செல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நெடுங்குருதியில் வரும் அந்த சிறு பையன் கண்டிப்பாக அவராகத்தான் இருக்கவேண்டும். அனுபவிக்காத ஒருத்தரால் எழுதப்பட்ட நாவல் இல்லை இது. அந்த நாவலின் நான் வாங்கிய மறுபதிப்பில் ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதியிருப்பார் அது கூட அவ்வளவு அழகாக இருக்கும். மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும்.

ஆனால் அவரது யாமம் படித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்? ஏன் ராமகிருஷ்ணன் இது போன்றதொரு நாவல் எழுதினார் என்று நான் நிறைய நாட்கள் எனக்குள்ளும் என் நண்பர் ராஜாராமிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ராமகிருஷ்ணனை சிங்கப்பூரில் சந்தித்தபொழுது அந்தக் கேள்வியை நான் கேட்டேவிட்டேன். நீங்கள் இந்த நாவல் எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்று. சிரித்த ராமகிருஷ்ணன் சொன்ன பதில் எனக்கு ஞாபகம் இல்லை. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு கண்டிப்பாக எட்டு மாதங்கள் இருக்கும். யாமம் படித்து ஒரு வருடம் இருக்கும். கண்டிப்பாக மீண்டும் யாமம் படிக்கும் எண்ணமில்லை. adultryஐ ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எழுதினால் எனக்கு பிடிப்பதில்லை. பாலகுமாரன் எனக்கு பிடிக்காமல் போனதற்கு அது தான் காரணம்.

*

ஸ்லம்டாக் மில்லியனர் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் பார்த்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் பிறகு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஹாலிவுட்ல இருந்து வந்து படம் எடுத்தாலும் பாலிவுட் படத்துக்கு கண்டிப்பா லவ் இருக்கனும்ங்கற விதியை கடைப்பிடித்திருக்கிறார் டேனி போயல். நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. சேரியில் வளர்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இங்கிலீஷ் பேச வருகிறது. அது தான் மிக முக்கியமான கேள்வி. ஆஸ்கார் வாங்கியிருக்கிறதில்லியா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள கோனார் நோட்ஸைப் புரட்டிப்பார்ப்பது போல விகாஸ் ஸ்வருப்பின் ஒரிஜினல் நாவலை (Q&A) எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்?

நான் நாவல் படிக்கவில்லை. படிக்கவும் விருப்பம் இல்லை. நாவல் படித்துவிட்டு படம் பார்க்கலாம். நன்றாக இருக்கும். ஹாரி பாட்டர் ஒரு உதாரணம். படித்து அனுபவித்த சாகச காட்சிகளை நேரில் படமாகப் பார்ப்பது என்பது தனி ஆனந்தம் தான். ஆனால் படம் பார்த்து விட்டு நாவல் படிக்க முடியுமா? இந்தமாதிரி விடை தெரியா கேள்விகள் இருக்கிற படங்களுக்கு நாவல் படித்து முழுவதும் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Telluride Film Festivalஇன் போது டேனி போயலிடம் “நீங்கள் எப்பொழுதும் எடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு ஏன் இந்தியாவை சப்ஜக்ட்டாகக் கொண்ட படத்தை இயக்குகிறீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதில் சொன்னாராம்: “எனக்கு இந்தியாவைப் பற்றி ஏதும் தெரியாது, நான் இந்தியாவுக்கு போனதே இல்லை. அதானால் இதை ஒரு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டேன்” என்றாராம். இதேபோல “எனக்கு நீயுயார்க் நகர கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை தெரியாது, நான் நியூயார்க்குக்குப் போனதேயில்லை, அதனால் தெரிந்துகொள்வதற்காக நான் படத்தை இயக்குகிறேன்” என்று சொன்னால் என்ன நடக்கும் என்கிற கேள்வியைக் கேட்டிருந்தார் சல்மான்ருஷ்டி. கிழிச்சிருக்கமாட்டாய்ங்க.

சரி. படத்துக்கும் நாவலுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறதென்று பார்ப்போம். படத்தின் ஹீரோ ஜமால் மாலிக் படத்தில் காட்டுவதைப் போன்ற கலவரத்தால் அனாதையாக்கப்பட்டவர் அல்ல. பிறந்த உடன் கைவிடப்பட்டு ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் எட்டு வயது வரை டெல்லியில் வளர்க்கப்பட்டவர். பாதிரியாரும் கதோலிக்க சர்ச்சும் டெல்லியும் படத்தில் வரவேயில்லை. ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் வளர்க்கப்பட்டதால் தான் ஜமால் ஆங்கிலம் பேசுகிறான். ஜமால் சரி, கோனார் நோட்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டாயிற்று மற்றவர்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள்? கதோலிக்க சர்ச் வரவில்லை சரி, இந்து முஸ்லீம் கலவரம் ஏன் படத்தில் திணிக்கப்பட்டது? வளர்த்த பாதிரியார் பிறகு மற்றொரு பாதிரியாரால் கொலை செய்யப்படுகிறார். இதுவும் படத்தில் வரவில்லை. மேலும் பல வித்தியாசங்களுக்கு இங்கே பார்க்கவும்.

இந்தப் படத்துக்கு ஆஸ்கார் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா? இதற்கு முன்னர் ஆஸ்கார் வாங்கிய No Country For Old Men, Crash போன்ற படங்களுக்கு பக்கத்திலாவது இது வரமுடியுமா? கண்டிப்பாக கிடையாது. தாரே ஜமீன் பர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு பகுதியைக் கூட இது ஏற்படுத்தவில்லை. ரஹ்மான் அப்படி என்ன படத்துக்கு இசையமைத்துவிட்டார்? ஜெய் ஹோ பாடல் ரஹ்மானின் தரத்துக்கு மிக மிக சாதாரணம் தான். படத்தில் ஜெய் ஹோ என்று கடைசியில் பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் வேறு. அது சாதாரண டான்ஸை விட மிகவும் கேவலமாக இருந்தது. அப்படி இருக்க ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது படத்தில்?

படத்தில் ஒன்றும் இல்லை. படத்துக்கு வெளியே நாம் இருக்கிறோம். இந்தியர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் No country for old men படம் ஆஸ்கார் வாங்கியது என்று எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? அதை எத்தனை பேர் லைவ்வாக Oscar Show பார்த்திருப்பார்கள்? What was the viewership rating? இந்திய மொழி படம் ஒன்று ஆஸ்காருக்குள் நுழைந்தஉடன் எத்தனை பேர் ஆஸ்கார் ஷோவைப் பார்த்திருப்பார்கள்? Thats the trick. ஆசியாவிலும் ஆஸ்கார் மிகவும் பிரபலமடைந்துவிடும். This film was at the right time. Thats it.

இனி வருடம் தோறும் ஒரு ஆசிய மொழி படத்துக்கு எதோ ஒரு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான் சொல்வதை நம்பவில்லையென்றால் இதைப் பாருங்கள்:
போனவருடம் எப்படி இருந்தது?
இந்த வருடம் எப்படி இருந்தது? 13% viewership கூடியிருக்கிறது.

கமல் படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து மூன்னூறு மணி நேரம் மேக்கப் போடாமல் அழகாக இயல்பாக மனதை தொடுகிற சப்ஜெக்ட்டோடு நடித்தார் என்றால் சீக்கிரமே ஆஸ்கார் நாயகன் ஆகிற வாய்ப்பிருக்கிறது. ஜெய் ஹோ.

*

Gran Torino பார்த்தேன். எனக்கு ஏதோ ரஜினி படம் பார்த்ததைப் போல இருந்தது. கறுப்பர்களிடம் வெறும் விரல்களைக் காட்டி மிரட்டும் போது ஆகட்டும், அவருடைய புல் தரையில் சண்டைப் போடும் சீன குண்டர்களைப் பார்த்து துப்பாக்கியைக் காட்டி “If you ever step in to my lawn..” என்று கர்ஜிக்கும் பொழுதாகட்டும், Client Eastwood is still a lion. க்ளைமாக்ஸ் தான் ஒட்டவில்லை. வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.

மற்றொரு படம் The Lost (2009). மற்றொரு மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கதை. நம்ப விடாது கருப்பு தொடர் மாதிரி. I doubted the end. But I didnt doubt. Mummy : The Tomb of the dragon empire. கன்றாவி. விஜயகாந்த் எவ்வளவோ தேவலாம். Fraserக்கு வயசாகி விட்டது.

அபியும் நானும். ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். மற்றபடி நெஞ்சைத் தொடும் விதமாக ஏதும் இல்லையென்றே எனக்குத் தோன்றியது. பிச்சக்காரரைப் பார்த்த உடன் ப்ரகாஷ்ராஜ் டக்கென்று ஐஸ்வர்யாவிடம் “உன்னொட சொந்தக்காரரா?”ன்னு கேக்குற இடம் நச். மற்றபடி த்ரிஷா தனது லவ்வருடன் சேர்ந்து நடப்பதைப் பார்க்கும் போது ப்ரகாஷ்ராஜ் கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது நமக்கு கடுப்பு தான் வருகிறது. என் அனுமதி இல்லாமல் பாய் ·ப்ரண்ட் வெச்சிருக்கியேன்னு கோபப்படுறது ஒரு ரகம். ஒத்துக்கொள்ளலாம். இதெல்லாம் கொஞ்சம் டூமச் தான். ஆனால் மகள் மீது possesiveஆக இருக்கும் அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். I know what I am doing டயலாக் ·பேஷனாகியிருக்குமே?

சொல்லமறந்துவிட்டேன், ஒரு அற்புதமான படம் பார்த்தேன், பெயர்: அருந்ததி. அப்பப்பா என்ன படம். என்ன நடிப்பு. என்ன வேகம். சான்சே இல்ல. இது போன்ற ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. ஹைலி எமோஷனல் மூவி. மூன்று மணி நேரம் நம்மை இழுத்துப் பிடித்து உட்காரவெச்சிருந்தார் டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா. அம்மன் படம் பாத்தப்பவே நான் அவரது ரசிகன். இப்போ பரம் விசிரி ஆகிவிட்டேன். அனுஷ்கா அருமையான செலக்ஷன். எப்படி ரம்யாகிருஷ்ணனை கரெக்ட்டாக அம்மனுக்கு பிடிச்சாரோ அதே போல. மண்டையில் தேங்காய் உடைத்து உயிர் தியாகம் செய்யும் போதாகட்டும், இந்த ஜென்மத்தில் முன் ஜென்மத்தில் தானே வரைந்த படத்தில் இருக்கும் செய்தியை decode செய்யும் பொழுதாகட்டும், சயாஜி ஷிண்டே தூக்கியெறியும் வாளை பிடிப்பதாகட்டும் தூள். வாளை லாவகமாக பிடிக்கும் பொழுது இன்னொரு பாட்ஷா போல இருந்தது.

*

சன் டீவி குங்குமம் தொல்லை தாங்கமுடியல. ஒரு அட்டு படத்தை எடுத்துற வேண்டியது. அப்புறம் படத்தில் நடிச்சவங்கள ஊர் ஊரா கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவெச்சு அமர்க்களம் பண்ணவிடுறது. பாக்க வந்த மக்கள கை ஆட்ட வெச்சு படம் பிடிக்கிறது. குங்குமத்தில் ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுத வேண்டியது. அப்படித்தான் நான் ஒரு படத்துக்கு ஏமாந்தேன். படிக்காதவன். பொதுவா நான் குங்குமம் விமர்சனம் எல்லாம் படிக்கிறதில்ல. ஆனா விதி வலியது இல்லியா, அன்னிக்கின்னு பார்த்து என் கண்ணில பட்டுத் தொலைஞ்சது. அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு ஒரே அலம்பல். எனக்கு இவிங்க படம்ங்கிறது தெரியாது. தெரிஞ்சிருந்தா தப்பிச்சிருப்பேன். தனுஷ் நடிச்ச முந்தைய படங்கள் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருந்துச்சா, அதானால் நல்லா இருக்கும் போலருக்குன்னு நாலு டாலர் கொடுத்து வாடகைக்கு எடுத்துவந்தேன். தனுஷ் சார் சந்தானம் கருணாஸ் இந்த படத்துல இல்லியா சார்? மயில்சாமி, சன் டீவில வர்ற காமெடியன்கள்ன்னு ஒரே அப்பா வயசு ப்ரண்ட்ஸ் உங்களுக்கு! சகிக்கல. நானும் படத்தில இப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும் அப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும்னு உக்காந்து உக்காந்து ஏமாந்துட்டேன். விவேக் காமெடியும் சகிக்கல. எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம படத்த ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுதமுடியுதோ தெரியல.

விகடனும் இதுக்கு விதிவிலக்கல்ல. SMS படத்துக்கு மார்க் மழை பொழிந்திருந்ததைப் பார்த்தேன். அவ்ளோ நல்லாவாயிருக்கு படம்? நான் பாக்கல.

*

நான் கடவுள் நான் பார்க்கவேயில்லை. பார்க்கவேண்டும் என்றும் தோன்றவும் இல்லை. ஜெமோவின் ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன். அது ஏற்படுத்திய பாதிப்பு குறையவே நீண்ட நாட்கள் ஆனது. படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை.

*

வாரணம் ஆயிரம் இப்போத்தான் பார்த்தேன். சூர்யா அழகாக இருக்கிறார். இப்ப அவர் தான் மீடியாக்களுக்கு சுல்த்தான் போல? விஜன் அவார்ட்ஸ்ல பார்த்தீங்களா? சூர்யா ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை? பாவம் விஜய் இருக்காறா இல்லியாங்கிற அளவுக்கு உக்காந்திருந்தார். யாரும் கண்டுக்கிடல. இப்ப வருகிற படங்கள கவனிச்சீங்களா? சூரியாவின் உடைகளுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை. அயனையும் ஆறுவையும் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

அயன் மற்றொரு படம். நன்றாக இருந்தது. சண்டை பாட்டு காதல் காமெடி சென்ட்டிமெண்ட் என்று கலந்து அடித்து விளையாடியிருந்தார் இயக்குனர் KV ஆனந்த். ஜெகன் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அவரை விஜய் டீவியில இப்ப பாக்க முடியிறதில்லையே? அந்த ஆப்பிரிக்க சண்டைக்காட்சி சேசிங் அற்புதம். ஆனால் குவாண்டம் ஆ·ப் சோலேஸை நினைப்படுத்தியது. இதே போல ஒரு சண்டைக் காட்சி The Bourne Ultimatumவிலும் உண்டு. ஞாபகம் இருக்கிறதா? ஹனி ஹனி பாடல் என்னுடைய ·பேவரிட்டாக ரொம்ப நாள் இருந்தது. இப்பொழுது “காற்றுக்குள்ளே” பாடல் சர்வம் படத்திலிருந்து தான் என்னுடைய ·பேவரிட்.

அடுத்து சர்வம். விஷ்ணுவர்த்தன் அடுத்த மணிரத்னம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு நாளும் மணி இது போன்ற ஒரு படம் கொடுக்கமாட்டார். படம்மாய்யா இது? சும்மா காமிரா மட்டு அழகாக இருந்தால் போதுமா? Trailer பாத்து ஏமாந்தேன்யா. அவ்ளோ அழகா இருந்தது Trailer. நல்ல கதையும் கூட. ஆர்யா த்ரிஷா யுவன் நீரவ்ஷாவை வைத்துக்கொண்டு இதற்குமேலும் வீணடிக்க முடியாது. படத்தில் சொல்கிறார் போல மனதில் நிற்கிறார் போல ஒரு காட்சி கூட இல்லை. சர்வ நாசம்.

யாவரும் நலம் நல்ல முயற்சி. அழகாக நேர்த்தியாக எடுத்திருந்தார்கள். முடிவு கச்சிதம். ஆனால் எனக்கு Amityville Horror படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை.

*

ஐ லவ் இளையராஜா -1

ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பதற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும். ஏதோ ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது பொறுக்காமல் தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல! 🙂

என்னுடைய அண்ணன் எங்கள் வீட்டில் இருக்கிற எல்லோரது விருப்பப் பாடலையும் கேட்டு அதை ஒரு சீடியில் பதிந்து என் கல்யாணநாள் அன்று ஒலிபரப்பவேண்டும் என்கிற திட்டம் ஒன்றை வைத்திருந்தார். Just for fun. He is a fun packed but a very serious guy. என் கல்யாணம் முடிந்து அவரவர் வீட்டுக்கு அவரக்கா சோத்துக்கு என்று கிளம்பும் முன், ஏர் போர்ட்டில், என் சகலை என் அண்ணனிடம் மொத்தம் எத்தனை luggageங்கன்னு சும்மா செக்பண்றதுக்காக கேட்டார். 1,2,3,4,5,6,7, (அண்ணி) 8, (முதல் குழந்தை) 9, (இரண்டாம் குழந்தை)10 என்று எண்ணி முடித்து மொத்தம் 10 லக்கேஜ்ங்கன்னு அப்பாவியாய் சொன்னார். That was a great timing and that relaxed the situation. எல்லாவற்றையும் PLAN செய்வதில் அவருக்கு இணை அவர் தான். அதையும் வடிவேலு போல “எதையும் plan பண்ணாம பண்ணக்கூடாது!” ன்னு காமெடியாகத்தான் செய்வார். அவர் தான் எனக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தார். கி.ராஜநாராயணன், புதுமைப்பித்தன், லாசரா, தி.ஜா என்கிற வேறுவிதமான நூல்களை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது அவர் தான். அவர் தான் எனக்கு AynRandஇன் எழுத்துக்களை அறிமுகம் செய்துவைத்தார். இன்றைக்குக்கும் zachman frameworkஐ எனக்கு அறிமுகம் செய்துவைப்பதும் அவர்தான். He is a mentor to me. அவரே தான் எனக்கு இளையராஜாவையும் அறிமுகம் செய்து வைத்தது.

என்னிடம் உனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்றார் என் அண்ணன். நான் சட்டென்று “ஊரு சனம் தூங்கிருச்சு”ன்னு சொன்னேன். இது அவ்வளவு cheerfullஆ இருக்காது. Anything else?ன்னு கேட்டார். இதை எதிர்பார்த்தவன் போல சட்டென நான் “கண்ணே பட்டுக்கவா” பாடலை சொன்னேன். இது போல ஒரு ரொமாண்டிக் பாடல் இனியும் வருமா என்பது சந்தேகமே. என் மனைவி (fiance)யிடம் கேட்டபொழுது அவர் “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலை சொல்லியிருக்கிறார். மேலும் என் கஸினிடம் கேட்டபொழுது அவன் நந்தாவிலிருந்து “முன் பனியா முதல் மழையா” சொல்லியிருக்கிறான். என் கஸினின் மனைவி (fiance)யிடம் கேட்டபொழுது அவர் “முன்பே வா அன்பே வா” சொல்லியிருக்கிறார். so என் வயசுள்ள பாப்போ நானும் யூத்துதான்!) அனைவரும் ரஹ்மான் அல்லது யுவன் பாடல்களையே கேட்டிருக்கின்றனர். நான் மட்டுமே இளையராஜா பாடலை கேட்டிருந்தேன்.

நான் ஏழாவது படிக்கும் பொழுது ரோஜா வந்தது என்று நினைக்கிறேன். பாடல்கள் எல்லாம் smash ஹிட். ஹிட்டுன்னா அதுதான் ஹிட். பட்டி தொட்டியெல்லாம் சின்ன சின்ன ஆசை தான். சோட்டி சோட்டி ஆஷாதான். wow புதுவெள்ளை மழையில் அந்த intro எப்படியிருக்கும்! I became an instant fan of Rahman. அப்புறம் வரிசையா ரஹ்மான் sixer தான். காதலன் ஜென்டில் மேன் திருடா திருடா புதிய முகம். I grew up hearing Rahman அண்ட் I was a great fan of Rahman.

அப்பொழுது என் அண்ணன் Swedenஇல் இருந்து வந்து சென்னையில் கொஞ்ச நாள் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். நான் பணிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு லீவில் இருந்தேன். அண்ணனுடன் சென்னையில் கொஞ்ச நாள் தங்கியிருந்தேன். ஊர் சுற்றுவதுதான் வேலை. ஊர் சுற்றிவிட்டு ஏதாவது நல்ல ஹோட்டலில் சாப்பிடுவோம். பாலாஜி பவன் இட்லி, மௌன்ட் ரோட் அரசப்பர் பிரியாணி, சரவணபவன் கதம்ப சாம்பார், வடபழனியில் கையேந்திபவன் சுடச்சுட இட்லி; தக்காளி சட்னி; ஹா·ப்பாயில், உதயம் தியேட்டர் முன் சிக்கன் சிக்ஸ்டி பைவ்; சிக்கன் ப்ரைட் ரைஸ், சரவணபவன் ·பாஸ்ட் புட் சாம்பார் இட்லி, பிட்சா, அஞ்சப்பர் மேலும் சில ·பைவ் ஸ்டார் ஹோட்டல் என்று பல அறிமுகங்கள் எனக்கு அப்பொழுதுதான் கிடைத்தது. பிறகு புக்ஸ். லேண்ட்மார்க்கையும் அப்பொழுதுதான் முதன் முதலாக பார்த்தேன்.

சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு இரவில் இளையராஜா தான். Absorbing and mesmerizing. ரேடியோக்களில் ஒலிபரப்பப்படும் இளையராஜா பாடல்களை அவ்வப்போது கேட்டு வந்த நான், அன்று தான் த ரியல் கலெக்ஷனைக் கேட்டேன். மறுநாள் அவரது கேசட் கலெக்ஷனை தோண்டிப்பார்த்ததில் 99% இளையராஜா கலைக்ஷன்ஸ். டிக் டிக் டிக் படத்திலிருந்து இது ஒரு நிலா காலம் பாடலும் பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலேவும் என்னை ஆச்சரியப்படுத்தின.

அண்ணன் அமெரிக்காவுக்கு போனதுக்கப்புறம் அவரது கலெக்ஷன்ஸ் அனைத்தும் வீட்டுக்கு வந்தது. அப்பொழுது நான் காலேஜ் ஆரம்பித்திருந்தேன். அந்த கலெக்ஷனில் சிந்து பைரவியும், வைதேகி காத்திருந்தாளும் என் ·பேவரிட். நிறைய நாள் எங்களுடைய ஆட்டோ ரீவைண்டிங் ஐய்வா ப்ளேயரில் அந்த கேசேட் காலைவரை மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் என்றைக்கு முதல்மரியாதை படம் பார்த்தேனோ அன்றிலிருந்து இளையராஜாவின் தீவிர ரசிகனாகிவிட்டேன். முதல்மரியாதை இளையராஜாவின் மகுடம். பாடல்கள் மட்டுமில்லை அதில் அவரது ரீரெக்காரிங்கும் மிக மிக அருமையாக இருக்கும். பாரதிராஜா நிறைய இடங்களில் வசனத்தை நிறுத்திவிட்டு இசையை உரையாடவைத்திருப்பார். நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் மோக முள், சிந்துபைரவி, சலங்கை ஒலி, சிறைச்சாலை…

என் அண்ணன் இப்பொழுது பேசிக்கொண்டிருந்தபொழுது ஏ ஆர் ரஹ்மான் இஸ் எக்ஸலண்ட். ஹி டிசர்வ்ஸ் ஆஸ்கார் என்றார். இது உண்மைதான். பிறகு முன்பேவா என் அன்பேவா பாடலைக் குறிப்பிட்டு அதில் வரும் ஹம்மிங் போல இளையராஜா கூட போட்டதில்லை என்றார். இது ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதால் அவர் மீது படிந்திருக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் அதீத வெளிப்பாடு. முன்பே வா என் அன்பே வா மிக அற்புதமான பாடல் தான் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இதைவிட அருமையான பாடல்கள் இளையராஜாவிடம் உண்டு. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ஒரு எடுத்துக்காட்டு. அதில் வரும் நன்னன்னனனா நன்னன்னனனா என்கிற ஜானகியின் குரலும் கூடவே ஒட்டிக்கொண்டுவரும் இளையராஜாவின் இசையும் மற்றுமொருமுறை கேட்டுப்பாருங்கள்.

இந்த தொடரில் நான் எனக்கு பிடித்த இளையராஜா பாடல்களைப் பற்றி குறிப்பிடப்போகிறேன். பாடல்களை குறிப்பிடுவது மட்டுமில்லாது பாடல்களில் எந்த இடம் பிடித்திருந்தது என்பதையும் குறிப்பிடப்போகிறேன். MP3 cutters நிறைய கிடைக்கிறது. அழகாக கட் செய்து அதை அப்லோட் செய்து அந்த லிங்கை இங்கே கொடுக்கவேண்டும் என்பது ப்ளான்.

இதை ஒரு தொடர் பதிவாகவும் எடுத்துக்கொண்டு நீங்கள் உங்களுக்கு பிடித்தமான இளையராஜா பாடல்களைப் பற்றி பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

update after மாயாவி comment:
தயவு செய்து இந்த பதிவில் ஏ ஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் கம்ப்பேர் செய்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். அவ்வாறு உங்களுக்கு தோன்றினால் நான் எழுதியதில் ஏதோ தவறிருக்கிறது என்று தான் அர்த்தம். ஒப்பிடும் நோக்கோடு நான் இதை எழுதவரவில்லை. ரஹ்மான் இஸ் எ ஜீனியஸ். அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னிடம் ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் உண்டு including Delhi-6. Gajinயில் பேக்கா பாடலின் நடுவே திடீரென்று வரும் அந்த ட்ரம்ஸை சிலாகித்து நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போ கொஞ்ச நாட்களாக இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறேன். கேட்கும் பொழுது மனது குதூகலிக்கிறது. I feel happy. சில இடங்களில் இளையராஜாவே எவ்வளவு பெரிய ரசிகர் என்பது புரிகிறது. He loves music just like us. இதைப் பகிர்ந்துகொள்ளும் நோக்குடனே இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

பாலய்யா

இன்னிக்கு மதிய சாப்பாட்டப்ப ஒரு தெலுங்கு பையனும் சாப்பிட வந்திருந்தான். கூட அவனோட ப்ரண்ட் ஒருத்தன். அவனும் தெலுங்கு தான். அதெப்படியோ காது காதுன்னு பேசிட்டே காதும் காதும் வெச்ச மாதிரி தெலுங்கு பசங்க எல்லாம் ஒன்னுமன்னா ஆயிரானுங்க. மதிய சாப்பாடு முடிச்சிட்டு கீழே இறங்கி வந்தோம்னா, ஒரு கும்பலா உக்காந்து பேசிட்டு இருப்பாய்ங்க. பூராம் தெலுங்கு பசங்க. கிட்டத்தட்ட அந்த ஏரியால இருக்குற எல்லா தெலுங்கு பசங்களும் உக்காந்து விஜயசாந்தி கட்சி லேதய்யா..சிரஞ்சீவி காதுய்யான்னு அரசியல பிரிச்சு மேஞ்சுட்டிருப்பாய்ங்க. நீங்க பக்கத்துல போய் நின்னிங்கனாக்க: அரே யார்..லஞ்ச் ·பினிஸ்ட்ன்னு கேப்பாய்ங்க. இந்த “யார்”-அ ஏன் கட்டிட்டு அழறாய்ங்கன்னு தெரியமாட்டேங்குது. நமக்கு “யார்”-அ கேட்டாலே கிர்ருன்னு ஏறுது.

அப்படி அவன் கூட பேசிட்டிருக்கும் போதுதான், நம்ப பாலய்யா பத்தின டாபிப் வந்தது. எனக்கு பாலய்யாவ ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர மாதிரி ஒரு ஆக்ஷன் ஹீரோ இனி பிறந்துதான் வரனும். நம்ப விஜயகாந்தே அட இப்படி செஞ்சிருக்கலோமோன்னு யோசிக்க வெக்கற அளவுக்கு அவரோட படங்களில innovation, creativity போன்றவைகளை அள்ளி தினிச்சு பாக்கறவங்களை திக்குமுக்காட வெச்சிருவார்.

எடுத்துக்காட்டுக்கு இந்த வீடியோ பாருங்க:

மேலும் அவர் சம்பந்தமான எல்லா வீடியோக்களையும் நீங்க பாக்கலாம். Time back guarantee!

இப்போ இந்த செய்தி ஏன் தேவையில்லாம வந்ததுன்னா: அவரு எலெக்ஷன் campaign ஆரம்பிக்கிறாராம்.

எனக்கு ஒரு ஆசை: அவரு ஒரு நேரடி தமிழ் படத்துல நடிக்கனும். அப்பத்தான் நம்ப ஹீரோக்கள் அடங்குவாங்க. காளை படத்துல சிம்புவோட அந்த intro scene இருக்கெ அப்பப்பா. அதப்பாத்துட்டு பாலைய்யாவே ஆடிப்போயிட்டாராம். அதெப்படிங்க, verticalஆ குளத்து தண்ணீலருந்து ரௌடிகளை பொரட்டிப்போட்டு வெளியில வந்து கொஞ்ச நேரம் அப்படியே காத்துல நின்னு, 360 டிகிரில காமெராவ சுத்தவிட்டு, பிறகு அப்படியே horizontalஆ குளத்து படிக்கு வந்து ஸ்லோ மோஷனில நடக்கமுடியும்னு பாலய்யா பாக்குறவங்களையெல்லாம் நோண்டி நோண்டி கேட்டிட்டிருந்தாராம்.(அதென்னங்க சார் பெரிசு, அவங்க அப்பா இந்த வயசிலயும் என்னம்மா டான்ஸ் ஆடுவார் தெரியுமா? சும்மா சொடக்கு போட்டுக்கிட்டே ·போன எடுத்து ஹலோ யார் பேசறதுன்னு கேப்பார், தெரியுமா ? அவர் பேசினா பரபரப்புக்கும் தெரியுமா? நீங்க கத்துக்கனும் சார்!) காளைல, சிம்பு முடி கிடியெல்லாம் ஒரு ரேஞ்சா predator alien மாதிரி வெச்சிருந்தாரா, காளையும் ஏதோ super powered alien படந்தான்னு நெனச்சுட்டேன்.

லென்ஸ்

(காளை, சட்டங்கள்,சிவாஜி,ஷங்கர்,கமல்)

காளை என்றொரு படம் வண்ணத்திரையில் காட்டப்பட்டது. ஐயோ அப்படி ஒரு நாராச ஹீரோயிஸம். பஞ்ச் பாடல் வேறு. வந்துட்டான்டா வந்துட்டான்டா காளை..வேண்டாம், இத்தோட நிப்பாட்டிக்குவோம்.

சோ·பாவையும் டீவியையும் வேறு இடத்திற்கு மாற்றியாச்சு. வாஸ்து மாற்றினாலாவது வண்ணத்திரையில் அட்லீஸ்ட் ஒரு பத்து நிமிஷம் பாக்கக்கூடிய படம் போடுவார்களா? இதுக்கு இது பே சானல் வேறு.

***

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் எனது நண்பன் ராஜேஷ¤ம் சும்மா நாட்டு நடப்பை (பொழுது போகலைன்னா வேறு என்ன பண்ண முடியும்?) விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் ஏன் இந்த அரசு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறது? அபார்ஷன் யார் பண்ணா என்ன பண்ணாட்டினா இவங்களுக்கு என்ன? என்றான். எனக்கு இது என்ன கேள்வி, இவ்வாறான சட்டங்களை அரசு இயற்றாமல் வேறு யார் இயற்றுவார்கள்? என்கிற மிக முக்கியமான சந்தேகம் வந்தது. ஹோமோக்களை யார் தடைசெய்வது? அல்லது தடைசெய்வதை யார் தடைசெய்வது? தடைசெய்யத்தான் வேண்டுமா? வால்-மார்ட் இங்கே கடை திறப்பதற்கு யார் எதிர்ப்பு தெரிவிப்பது? ரிலையன்ஸ் ·ப்ரஷ் வடக்கன்பட்டியில் கடை திறப்பதை யார் எதிர்ப்பது? திறக்கவேண்டாமா வேண்டுமா என்று யார் முடிவு செய்வது?

ஒரு பகுதியினர் இவ்வாறு வாதாடுகின்றனர். அதாவது, அபார்ஷனை தடுப்பதற்கோ அல்லது ஹோமோக்களை தடுப்பதற்கோ ஏன் சட்டங்களை உபயோகிக்கிறீர்கள்? உங்கள் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவருவதினால் எவ்வளவு பண விரயம் ஏற்படுகிறது? அதற்கு எங்களது வரிப்பணத்தையல்லவா உபயோகிக்கிறீர்கள்? மேலும் ஒரு சாரரை திருப்திப்படுத்துவதற்காக ஏன் இவ்வளவு பண நாசம் செய்யவேண்டும்?

சரி. அபார்ஷனையே எடுத்துக்கொள்வோம். அபார்ஷனை தடுப்பதா வேண்டாமா என்கிற முடிவுக்கு அரசு எப்படி வர முடியும்? என் நண்பனைப் போல ஒரு சாரர் அபார்ஷனை தடுக்கக் கூடாது என்கின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், எனது இன்னொரு நண்பன் அபார்ஷன் செய்வதை தடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை என்னவாகும்? அவன் மட்டும் வரிப்பணம் கட்டவில்லையா என்ன? அப்படீன்னா அரசு என்ன செய்ய வேண்டும்? எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை எக்கேடோ கெட்டுப்போங்கன்னு அரசு சும்மா இருக்க முடியாது, அப்படி இருந்தாலும், அபார்ஷனை தடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் போகிறது.

***

அபார்ஷனை தடுக்கக்கூடாது என்றால், போதைப்பொருள் கடத்துவதையும் தடுக்காமல் விட்டுவிடலாமா? சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும். போதைப்பொருள் புழக்கம், மற்றும் பழக்கம், இந்த தண்டனையால் வெகுவாக குறைந்திருக்கிறதாம். சட்டத்தினால் தானே இது சாத்தியப்பட்டது?

***

இந்த காளை, குசேலன், வில்லு அப்படியே இந்த டைரக்டர் பேரரசுக்கும் ஒரு தடையை விதித்தால் நான் (மற்றும் ரொம்ப பேர்) ரொம்ப சந்தோஷமா இருப்பேன்! படத்துல “வெட்டி கூறுபோடுங்கடா, சாரு எடுங்கடா” அப்படின்னு சும்மா கத்திக்கினே கெடக்கானுங்க. ஊறுகா கம்பெனி வெச்சிருந்திருப்பாய்ங்கன்னு நினைக்கிறேன். கஷ்டம்.

***
இந்த குசேலன் மசேலன் தசாவதாரம் கொசாவதராம் எடுக்கறவங்க எல்லாம் No Country For Old Men படம் பாருங்கப்பா. கண்டிப்பா பாத்திருப்பீங்க தெரியும், பாத்துட்டு இதெல்லாம் இந்த ஜனங்களுக்கு புரியாதுப்பான்னு எங்கள முட்டாள்களா நெனச்சிருப்பீங்கன்னும் தெரியும். மிக குறுகிய அளவில் கேரக்டர்களை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு த்ரில்லர் படம் கொடுக்கமுடியுமா?

ஏன் நம்ப உலக நாயகர்களுக்கு தாரே ஜமீன் பர் போன்ற படங்களை எடுக்க தோன்றவில்லை?

***
சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா என்கிற படத்தை சமீபத்தில் கொஞ்சம் பார்த்தேன். அதில் சிவாஜியே பாதிரியாராகவும் பின்னர் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருப்பார். அவ்வாறு நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இரண்டு கேரக்டர்களையும் (பாதிரியார் சாது, இன்ஸ்பெக்டர் tough) ஆக்கிட் கொடுத்து பிச்சு உதருகிறேனா பார் என்று சொல்வதற்கா? யாருக்கு சொல்லவேண்டும்? மேலும் சில புராண படங்களில் அவரே துணி துவைப்பவராகவும் பின்னர் அவரே கடவுளாகவும் வருவார். ஆண்டாளை வளர்த்தவராகவும் பின்னர் கிருஷ்ணராகவும். கடவுள் மனித ரூபத்தில் வந்தால் கூட பரவாயில்லை, அந்த கேரக்டருக்கும் இந்த கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது, ஆனால் அவரே நடிப்பார். ஏன்? அதேதான் கமலும் செய்தார். இனியும் செய்வார். இவ்வளவு பொருட்செலவில், ஏன் இத்தனை மேக் அப் மெனக்கெட்டு நடிக்கவேண்டும். அதான் ஜாக்கிசான் கேட்டாராம்: உங்க ஊர்ல நடிகர்களுக்கு பஞ்சமா? இந்த படத்தின் திரைக்கதைக்கு விகடன் அவார்ட் வேற. ஆர்ட்டுக்கு கொடுத்தார்கள், ஓகே. திரைக்கதைக்கா?

***
இந்த ஷங்கர் இன்னொருத்தர். மிகப் பிரமாண்டமா அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் படம் எடுப்பார். ஆனால் உண்மையில், அவரது பாடலில் தான் சயின்ஸ் பிக்ஷன் இருக்கும். பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னித்தி ஒன்பது ரோபோக்களுக்கு ஒவ்வொரு பார்ட்ஸ¤க்கும் ஒரு பெயிண்ட் அடித்து background-ல பாரீஸ் சாய்ந்த கோபுரத்தை கண்ணாடியில் செய்து, அதில் ரஜினியையும் ஐஸ்வர்யாவையும் நடனமாட விடுவார். சாரி:ரஜினியை வேகவேகமாக நடக்கவைப்பார்.

சயிண்டிஸ்ட் ஏனய்யா ஆயிரம் ரோபோக்களோடு நடனமாட வேண்டும்?

***

சிம்புதேவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?

இப்பொழுது சா·ப்ட்வேர் துறையில் வேலை செய்பவர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் மற்றவர்களுக்கு அவ்வாறான சம்பளம் கிடைப்பதில்லை, அதனால் சா·ப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்பது போன்ற காட்சிகள் வைப்பது தமிழ் சினிமாவுக்கு வழக்கமாகப்போய்விட்டது என்று நினைக்கிறேன். இவ்வாறான காட்சிகள் வைத்தால் வரி விலக்கு உண்டு என்று அரசு அறிவித்திருக்கிறதா என்ன?

அறை எண் 305இல் கடவுள் படத்தை இன்று வசந்தம் சேனலில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜாவா சுந்தரேசன் என்கிற சாப்ட்வேர் துறையைச் சார்ந்த நபரைப் பற்றிய காட்சிகள் அதிகம். நேரடியாகவே அவர் வாங்கும் மொத்த சம்பளம் அந்த மேன்சனில் குடியிருப்பவர்களது மொத்த சம்பளத்தை விட அதிகம் என்று அந்தப் படத்தில் வரும் ராஜேஷ் குறிப்பிடுகிறார். BSc Computer Science படித்த அவர் 85000 ரூபாய் சம்பளம் வாங்கும் பொழுது, BBA படித்த படத்தின் ஹீரோ 4000 ரூபாய் சம்பளத்துக்கு இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறார் என்றோரு வசனமும் வருகிறது. இதில் செம கடுப்பான நம்ப ஹீரோ ஜாவா சுந்தரேசனின் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருக்கும் மேலாளரிடம் இதே கேள்விகளை கேட்டு, இனி எப்படி நீங்கள் சம்பாதிப்பீர்கள் பார்ப்போம் என்று, கேலக்ஸி பாக்ஸின் துணையுடன், அனைவரது விரல்களையும் இல்லாமல் செய்துவிடுகிறார். விரல்கள் இல்லையென்றால் எப்படி கம்ப்யூட்டரை ஆபரேட் செய்வீர்கள், எப்படி இவ்ளோ பணம் சம்பாதிப்பீர்கள்?

அந்த சா·ப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து மக்களின் விரல்களும் குட்டியாகப் போகும் அந்த காட்சியையும் அவர் சா·ப்ட்வேர் துறையில் பணிபுரியும் மக்களை பயன்படுத்தியே செய்திருக்கிறார், என்கிற விசயத்தை படத்தின் டைரக்டர் சிம்புதேவன் மறந்துவிட்டார். அது கிடக்கட்டும். சிம்புதேவன் இந்த படத்தை இயக்குவதற்கு எத்தனை சம்பளம் வாங்கினார்?

சிம்புதேவனுக்கு இது எத்தனையாவது படம்? அவர் பெரிய கார்ட்டூனிஸ்ட் என்பதெல்லாம் இருக்கட்டும். இது இவருக்கு ரெண்டாவது படம் தானே? எத்தனை மாதங்கள் உழைத்து இந்த படத்தை எடுத்திருப்பார்? 6 மாதங்கள்? குத்துமதிப்பாக ஒரு 25 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பார் என்று வைத்துக்கொள்வோம். ஷங்கர் இதற்கும் குறைவானதொரு தொகை கொடுத்திருக்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். ஆறு மாதங்களுக்கு 25 லட்ச ரூபாய். மாதத்திற்கு எத்தனை லட்சங்கள் வருகிறது? நான்கு லட்சம்! இது சா·ப்ட்வேர் துறையினர் வாங்கும் பணத்தை விட மிகவும் அதிகம்.

இவ்வளவு சம்பளம் வாங்குவதற்கு அவர் என்ன படித்திருக்கிறார். எனக்கு தெரியாது. என்னமோ படித்திருக்கிறார். அவர் படித்த அந்த படிப்பை படித்த அத்தனை பேரும் தமிழ் நாட்டில் அவர் வாங்குகிற சம்பளமா வாங்குகிறார்கள்? பிறகு ஏன் இவர் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? கேட்டால், அவர் மூளையை (creativity) காரணம் காட்டக்கூடும்.

சிம்புதேவன் கார் வைத்திருக்கிறாரா? படத்தில் வரும் ஜாவா சுந்தரேசனைப் போல அவரும் இன்னும் ரெண்டு படங்கள் கழித்து ஹெலிகாப்டர் வாங்கக்கூடும்.

தமிழ் சினிமா : என் பரிந்துரை

சாம்பார் வடையின் இந்தப் பதிவைப் பார்த்ததும், நாமும் எழுதினால் என்ன என்று நினைத்தேன். எவ்ளோ படம் வாழ்க்கையில் பார்த்திருப்போம்? அதற்கு எவ்ளோ நேரம் செலவழித்திருப்போம்? மொத்தம்?

ஒரு மூன்றாவது வகுப்பு படிக்கும்போதிருந்து படம் பார்க்கத் தொடங்கியிருப்பேன் என்று வைத்துக்கொள்வோம், இப்போ எத்தனை வருடங்கள் ஆச்சு? கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு. (முத்து வயசாயிடுச்சுடா உனக்கு!) ஒரு வருசத்துக்கு averageஆ 52 வாரங்கள்ன்னு வெச்சுக்கோங்க..மொத்தம் எத்தனை வாரங்கள் ஆச்சு? 20*52 = 1040 வாரங்கள் ஆச்சு. ஒரு வாரத்துக்கு ஒரு படம்ன்னு வெச்சுக்கிட்டாக்க மொத்தம் 1040 படங்கள் ஆச்சு. ஒரு படம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஓடுதுன்னு வெச்சுக்கோங்க, மொத்தம் 2080 மணி நேரம் படத்துக்காக செலவழிச்சிருக்கேன். மொத்தம் 87 நாட்கள். இது minimum amount of time. அடேங்கப்பா!

இவ்ளோ நேரம் படம் பார்க்க செலவழிச்சுட்டு, வருங்கால மக்களுக்கு படம் சிபாரிசு பண்ணலைன்னா என்ன அர்த்தம், நீங்களே சொல்லுங்க? சினிமாவும் இசையும் (முக்கியமா குத்துப்பாட்டு!) இந்தியர்களின் இதயத்தில் இருக்கிறது. சினிமா நடிகர்கள்? அரியணையிலிருக்கிறார்கள்.

ஆனால் பிடித்த படங்கள் என்பது வேறு, வருங்கால சந்ததியனருக்கு சிபாரிசு செய்வது என்பது முற்றிலும் வேறு. எடுத்துக்காட்டாக, 7G ரெயின்போ காலனி எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஆனால் அதை என் சந்ததியினருக்கு நான் சிபாரிசு செய்வேனா என்பது சந்தேகம் தான். செய்யமாட்டேன் என்றே நினைக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் படங்கள் இவைதான்:

எம்ஜிஆர்
நாடோடி மன்னன்
ஆயிரத்தில் ஒருவன்
மலைக்கள்ளன்
எங்க வீட்டுப் பிள்ளை
உலகம் சுற்றும் வாலிபன்

சிவாஜி
உத்தம புத்திரன்
மனோகரா
பராசக்தி
அந்த நாள்
புதிய பறவை
பாச மலர்
பாவமன்னிப்பு
பலே பாண்டியா
ஆலயமணி
பாரதவிலாஸ்
வீரபாண்டியகட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன்

முட்டக்கண் ராமச்சந்திரன்
சாரங்கதாரா
சபாபதி
அடுத்த வீட்டு பெண்

ஸ்ரீதர்
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சில் ஓரு ஆலயம்
தேனிலவு
காதலிக்க நேரமில்லை

ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்
அதே கண்கள்
மூன்றெழுத்து
வல்லவன் ஒருவன்

பாலச்சந்தர்
நினைத்தாலே இனிக்கும்
எதிர் நீச்சல்
சர்வர் சுந்தரம்
சாது மிரண்டால்
மேஜர் சந்திரகாந்த்
அவர்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
மனதில் உறுதி வேண்டும்
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி.

ரஜினி

முல்லும் மலரும்
பில்லா
ஜானி
தில்லு முல்லு
படிக்காதவன்
குரு சிஷ்யன்
தம்பிக்கு எந்த ஊரு
மன்னன்
தளபதி
அண்ணாமலை
பாட்ஷா
சந்திரமுகி

பாரதிராஜா
பதினாறு வயதினிலே
நிழல்கள்
ஒரு கைதியின் டைரி
முதல் மரியாதை
சிகப்பு ரோஜாக்கள்
டிக் டிக் டிக்

மோகன்
விதி
நூறாவது நாள்

கமல்
விக்ரம்
வாழ்வேமாயம்
மூன்றாம்பிறை
சலங்கை ஒலி
சத்யா
அபூர்வ சகோதரர்கள்
சாணக்யன்
வெற்றிவிழா
நாயகன்
மைக்கேல் மதன காமராஜன்
குணா
சதிலீலாவதி
குருதிப்புனல்
காதலா காதலா
பஞ்சதந்திரம்
வசூல்ராஜா
விருமாண்டி
அன்பே சிவம்
வேட்டையாடு விளையாடு

மணிரத்னம்
மௌனராகம்
அஞ்சலி
இருவர்
அலைபாயுதே

பாக்யராஜ்
அந்த 7 நாட்கள்
இன்று போய் நாளை வா
தூரல் நின்னு போச்சு
இது நம்ம ஆளு

விசு
சம்சாரம் அது மின்சாரம்

விஜயகாந்த்
ஊமை விழிகள்
அம்மன் கோவில் கிழக்காலே
வைதேகி காத்திருந்தாள்
கேப்டன் பிரபாகரன்
புலன்விசாரனை

பிறபடங்கள்
ஓர் இரவு
பஞ்சவர்ணக்கிளி
பாமா விஜயம்
சாந்தி நிலையம்

வருஷம் 16
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பூவிழி வாசலிலே
பூவே பூச்சூடவா
அக்னி நட்சத்திரம்
அரங்கேற்றவேளை
ஆண்பாவம்

கரும்புள்ளி (“என் உயிர் தோழன்” பாபு)
பாரதி
உதயம் (நாகார்ஜூன், அமலா, ரகுவரன்)

சூரியன்
நாட்டாமை

ஜென்டில் மேன்
இந்தியன்
ஜீன்ஸ்
முதல்வன்

அழகி
புதியபாதை
ஹவுஸ்புல்

காக்க காக்க
மௌனம் பேசியதே
நந்தா
கஜினி
கில்லி
காதல் மன்னன் (அஜீத்)
ஆசை
சேது
தில்
மொழி
காதல்
பருத்தி வீரன்
ராம்
காதலுக்கு மரியாதை

கனா கண்டேன்
கண்ட நாள் முதல்

ஜீவா (சத்யராஜ், அமலா)
நடிகன்

பாதாள உலகம்
மாயாபஜார்

மைடியர் குட்டிச்சாத்தான்
ஜெகன்மோகினி
பதிமூனாம் நம்பர் வீடு
உருவம்
48 மணி நேரம் (ரேவதி)
ஷாக்

இன்னும் நிறைய படங்கள் இருக்கு லிஸ்ட்ல, இன்னொரு தடவை சொல்றேன்.

கற்றது தமிழ்.

முதலில் ஜீவாவுக்கு பாராட்டுக்கள். கொடுத்த கதாப்பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். பின் சீட்டிலிருந்து அடுத்த கமலஹாசன் கிடச்சுட்டான் என்ற கமென்ட் கேட்க முடிந்தது. (ஆனால் ஆவாரம்பூ படத்தில் அரைலூசாக நடித்த வினீத்தைப் பார்த்துக்கூட இப்படித்தான் சொன்னோம்ங்கறது வேற விசயம்!). நன்றாக நடித்திருக்கிறார். அமைதியாக ஆக்ரோஷமாக அன்பாக ஏமாற்றமாக வெறுப்பாக கடைசியில் சைக்கோவாக அருமையாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் ஷார்ப்பாகவே நடித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழய்யா. எங்கோ பாத்திருக்கிறோம் என்ற feeling கடைசிவரையில் எனக்கிருந்தது. புதுப்பேட்டையில் அமைச்சராக வருகிறவர் தானே இவர்? புதுப்பேட்டை எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. செல்வராகவனின் டைரக்சனும், யுவனின் பின்னனி இசையும் (GodFatherஐ அவ்வப்போது நினைவுபடுத்தினாலும்!), தனுசின் நடிப்பும் நன்றாக இருந்தது.

சரி. கற்றது தமிழைப் பார்ப்போம். ப்ளஸ் டூவில் ஆயிரத்து நூறு மதிப்பெண்கள் பெற்ற ஜீவாவுக்கு, உண்மையில் என்ன தான் பிரச்சனை என்பதில் தான் இயக்குனர் கொஞ்சம் (நிறையவே!) தடுமாறியிருக்கிறார். காதலா? பணமா? சமகாலத்தில் தன்னை விட அதிக சம்பளம் வாங்கும் மற்றவர்களைப் பார்த்து பொறாமையா? இல்லை விதியா? படத்தில் வரும் எக்கச்சக்க எதிர்பாராத மரணங்களால் தான் நான் விதியை இழுக்கவேண்டியதாகிவிட்டது. இல்லீன்னா just coincidence? “எனக்கு பணம் பிரச்சனை இல்லை” என்று அவரே மருத்துவரிடம் சொல்கிறார். பிறகு? அவரது வாழ்க்கையில் ஆனந்தி மட்டுமே பிரச்சனை. ஏனென்றால் ஆனந்தியைப் பார்த்தவுடன் (the same old mahanadhi style. ஆனந்தி பாம்பேவுக்கு போகிறார் என்று தெரிந்தவுடனே அவர் என்ன ஆவார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது. எத்தனை படங்கள் பார்த்திருக்கிறோம்!?) மீண்டும் அந்த பத்து வயது சிறுவன் அவனுள் தோன்றிவிடுகிறான். எனக்கு இனிமேல் பிரச்சனை இல்லை என்று கூறிவிடுகிறான். மனப்பிறழ்வு நிலையிலிருந்து வெளிவருகிறான்.

மனப்பிறழ்வு? ஆம். சும்மா இருக்கும் போது அவனது கைகள் தாமாகவே ஆட்டம் காண்கின்றன. ஏன்? கொலைசெய்ய வேண்டுமாம். ஏன்? தெரியவில்லை. போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், போதையூட்டும் பொருட்கள் கிடைக்காமல் போனால், என்னமாதிரியான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்களோ, அதே போலாகிறான் அவன். இதற்கு சமுதாயத்தின் மீது கோபப்பார்வை வேறு. அந்த டாக்டரை ஏன் கொலை செய்கிறான் என்று எனக்கு புரியவேயில்லை. பீச்சில் உட்கார்ந்திருக்கும் ஜோடிகளை இவன் ஏன் கொல்ல வேண்டும்? சமுதாயப்பார்வையா? இதில் என்ன சமுதாயப்பார்வை வேண்டிக்கிடக்கிறது. தனக்கு ஜோடியாக ஆனந்தி கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கமும் மனப்புழுக்கத்தினாலும் தான் அவன் அவ்வாறான கொலைகளை செய்கிறான். இதில் சமுதாயப்பார்வையே இல்லையே.

ஆனந்தியின் மேல் இவன் வைத்திருக்கும் காதல் அழகானது என்பதை மறுப்பதற்கில்லை, அதற்காக பீச்சில் உட்கார்ந்திருக்கும் ஜோடிகளை, அவர்கள் அறியாமலே, பின்னால் கூலாக உட்கார்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யச்சொன்னார்களா? என்னங்கடா இது?! உனக்கு வெயிலாக இருந்தால் வீட்டுக்குள் சென்று முடங்கிக்கொள், உன்னையார் பீச்சுக்கு வரச்சொன்னார்கள்? சரி, முதலில் பட்டப்பகலில் கொளுத்தும் வெயிலில், நீ எதற்காக பீச்சுக்கு வந்தாய்? சுண்டல் வாங்கி சாப்பிடுவதற்கா? மதிய வெயிலில் பீச் சூடாக இருக்கும் என்று தெரியாதா என்ன? இங்கிலாந்திலிருந்து இப்போத்தான் இறங்கி வந்திருக்கியா என்ன? அவர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறதப்பா, உட்கார்ந்திருக்கிறார்கள். உன்னை குடை பிடிக்கச் சொன்னார்களா? வடிவேலு பாஷையில் சொல்வதானால், சுத்த அயோக்கியத்தனமாவுல்ல இருக்கு?

அப்புறம் உட்லாண்ட்ஸ் ஷ¥ போட்டிருக்கிறவன துரத்தி துரத்தி ஷ¥ கேட்பது. செறுப்பையும் ஷ¥வையும் exchange செய்துப்போமா என்று கேட்பது. நான் பிஞ்ச செருப்ப போட்டிருக்கும் போது நீ costlyயான உட்லாண்ட்ஸ் ஷ¥ போடுவியா? நாங்க பாத்திட்டே இருப்பமா? என்று அவனை துவம்சம் செய்கிறார் (செய்வது போல தானே நினைத்துக்கொள்கிறார் என்பது போலவும் பிறகு reverseஇல் காட்டப்படுகிறது. இங்கே தான் இயக்குனர் நம்மை confuse செய்கிறார். ஒரு இடத்தில் இவன் எந்த கொலையும் செய்யவில்லையோ என்று நினைக்கத்தோன்றுகிறது.). கொலை செய்யப்பார்க்கிறார்.அவன் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறான். இது என்ன அயோக்கியத்தனம்? நீ ஏன் cigarate குடிக்கிற? வாத்தியார் வேலை செய்து குறைந்த சம்பளம் நான் வாங்குகிறேன்னு நினைக்கிறல்ல? அப்படீன்னா பீடி குடிக்கவேண்டியது தான? எத்தன பேர் பீடி குடிக்கிறவங்க இருக்காங்க? அவங்களைப் போல நீயும் பீடி குடிக்க வேண்டியது தான? எதுக்கு cigarate? உன் girl-friendக்கு ஏன் ஆயிரத்து நானூறு ரூபாய்க்கு சுடி வாங்கற? because you want the best. (atlease the best you can afford!) அதுதான் எல்லாரும் செய்யறது. செய்யறாங்க. அவங்க அவங்களால என்ன என்ன best வாங்க முடியுமோ அத வாங்கறாங்க. உனக்கென்ன வந்தது? அப்படீன்னா எல்லாரும் பிஞ்ச ரப்பர் செறுப்பு போடனும்ங்கறதுதான் உன் கொள்கையா? every one should be poor. அப்படீங்கற மனப்பான்மை. every one has to be rich அப்படீங்கற கொள்கைக்கு எதிர்மறையான negative வாதம். அவம் உட்லான்ட்ஸ் ஷ¥ போட்டிருக்கிறான், அதனால அவன தொரத்தறேன். அவன் கிட்டருந்து பிடுங்கறேங்கறதெல்லாம், டூ மச். என்ன மாதிரியான கொள்கை இது?

சரி. சாப்ட்வேர் மக்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று இவருக்கு தெரியாதா என்ன? தெரியாமல் 1100 மார்க் வாங்கி என்ன பயன்? ஆனந்தி என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்தால் அப்படித்தான் இருக்கும். ஆனந்திய விட்டுட்டு கொஞ்சம் வெளில வாங்க சார். உலகத்துல என்ன நடக்குதுன்னு கொஞ்சம் உத்து கவனிங்க சார். survival of the fittest பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லீன்ன இப்படி படம் எடுத்து பொலம்ப வேண்டியதுதான். சாப்ட்வேர் இன்ஜினியருக்கு ரெண்டு லட்ச ரூபாய் சம்பளம் என்பதும், ஆபீஸ¤க்கு வா என்று சொன்னதும் வந்துட்டானே என்று அவன் நினைப்பது போல காட்டுவதும், சாப்ட்வேர் மக்களின் மீதான துவேஷம் மட்டுமே, வேறொன்றும் இல்லை. எத்தனை பேர் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்? எவ்வளவு வரி கட்டுகிறார்கள்? 30% வரி என்பது இருக்கிறதுதானே?

விலைவாசி ஏறியதற்கு யார் காரணம்?இன்று வேளச்சேரியில் ஒரு டபுள் பெட்ரூம் ப்ளாட் என்ன வாடகை? 14ஆயிரம் ரூபாய் ஆனதற்கு சாப்ட்வேர் மக்களா காரணம்? வீட்டு ஓனர் என்னமோ இரண்டாயிரம் ரூபாய் வாடகை கேட்ட மாதிரியும், சாப்ட் வேர் மக்கள், நீங்க ஒன்னும் காமடி கீமடி பண்ணலையே, சும்மா இருங்கசார், இந்தாங்க பிடிங்க பத்தாயிரம்னு சொன்னமாதிரில்லா சொல்றீங்க? யாருக்கு உண்மையில் பேராசை? அவன் வாங்குறான், கொடுக்கட்டும் என்ற எண்ணம் தானே இருக்கு, எல்லார்கிட்டயும்.

ஆனால் படத்தின் கருவே இது இல்லை. தமிழ் இல்லை. தமிழ் படித்ததால் அவன் கஷ்டப்படவில்லை. அதிக சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் மக்களாலும் இவன் கஷ்டப்படவில்லை. இதற்கு திருக்குறள் வேறு “மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்”. Just Ego. தமிழ் படித்த நம்ப ஹீரோவுக்கு இப்படி யெல்லாம் ஆனதற்கு யார் காரணம்? அந்த போலீஸ் அதிகாரி? நம்ப தமிழ் ஐயா ஏன் தம் அடிக்கனும்? தமிழ் படிச்சா தம் அடின்னு சொன்னாங்களா? மேலும் அந்த போலீஸ் அதிகாரி, அந்த இடத்தில் (சேச்சிக்கு பக்கத்தில்) வேறு யார் இருந்தாலும், அவ்வாறே கைது செய்திருப்பார் என்பதுதான் உண்மை. போலீஸ்அதிகாரி நம்ப ஹீரோவை அரஸ்ட் செய்யும் போது, இவர் தமிழ் படித்திருக்கிறார் என்பது அவருக்கு எப்படி தெரியும்? நெத்தில எழுதி ஒட்டிருக்கிறாரா என்ன? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு கடைசில செஞ்சத நியாயப்படுத்தறதுக்கு, என்ன என்னம்மோ தத்துபித்துன்னு பேசறது. இப்படி போறபோக்குல சாப்ட்வேர் மக்கள் மேலயும், (கிடச்ச எல்லார் மேலையும்!) கொஞ்சம் சேத்த வாரி தெளிச்சிட்டு போயிருக்கார் நம்ப டைரக்டர் ராம்.

“If you dare touch me here” என்ற வாக்கியத்தை கரெக்டாக நெஞ்சில் எழுதப்பட்ட டீசர்ட்டை அணிந்த பெண்ணின் மீது நம்ப ஹீரோ கை வைத்தது, என்னைப் பொறுத்தவரையில், not bad, but not good either. Its a challenge, between that girl and any other person she comes in contact with, either a boy or a girl. She is challenging. And he is doing. Thats it baby. அந்த டீசர்ட்டில் எழுதியிருக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியாமலா அந்த பெண் அதை வாங்கியிருப்பாள்? எங்கள் சுதந்திரமும்,மண்ணாங்கட்டியும் எங்கே போனது என்று கேட்கும் அரைவேக்காட்டு பெண்ணியப் பிரஜைகளுக்கு, enjoy your freedom without provoking others. எல்லாரும் முத்து மாதிரியே அமைதியா இருப்பாய்ங்களா என்ன? அனால் surprisingly இதற்கு எதிர்மறையான கருத்தையே என் நண்பர்கள் சொன்னார்கள். Just girls sympathy.

நல்ல வேலை ரமணா மாதிரி அதிக சம்பளம் வாங்குற முதல் பத்து பேரை கடத்தி வந்து, அதில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நபரை கொலை செய்வது போல காட்டவில்லை. அப்படி படம் வந்தாலும் வரும்.

மேலும் பாரதியின் அன்னை அன்னை பாடலை ஜீவா பாடுவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாமே தவிர, அந்த call centre பையனிடம் பேசுவதெல்லான், ரொம்ப டூ மச். நாற்பதாயிரம் ரூபாய்க்கு உன் பெயரை மாத்திக்கிட்டியே, அப்படீன்னா நிறைய காசு கொடுத்தா, அப்பா அம்மாவை மாத்திக்குவியான்னு கேக்கறதெல்லாம் திமிர் தனம். உனக்கு அவன் ஏதோ கொஞ்சம் காசு சம்பாதிச்சு, குடும்பத்த காப்பாத்தறது பிடிக்கலையா? உன்ன மாதிரி நடுரோட்ல கல்ல தூக்கிட்டு ஓடினா, வாடா மாப்ள வா, ன்னு சொல்லி, அன்னை அன்னை பாட்ட மொத்தமா உக்காந்து பாடி பஜன பண்ணுவீங்களா என்ன?

உண்மையில கால் சென்ட்டர்ல வேலை பாக்குற எத்தன மக்கள் car வச்சிட்டு இருக்காங்கப்பா? நிறைய நபர்களின் சம்பளம் வெறும் ஆறாயிரம் ரூபாய் தான் என்பது நம்ப டைரக்டரின் கவனத்தில் விழவில்லை போலும். யாரவது சொல்லுங்கப்பா அவர்கிட்ட.

மொத்தத்தில் படம் தெளிவற்ற அசட்டுத்தனமான complaint. Except that childhood nostalgia மற்றும் தமிழ் ஐயா. I really loved him. க்ளைமாக்ஸில், குகைக்குள் இருந்து ஹீரோவும் ஹீரோயினும், கூடவே அவர்கள் சிறு பிள்ளையாக இருந்த பொழுது, அவர்களுடன் விளையாடிய அந்த நாயும் வெளியேறுவது, அற்புதமான அழகான கவிதை.

நான் அஜீத்துக்கு எழுதிய கதையில், சாப்ட்வேர் மக்களுக்கும், மற்ற இன்ன பிற வேலை செய்பவர்களுக்கும் இடையே இருக்கும் economical gap பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அந்த economic gapஐ சரிப்படுத்த, கொலை solution அல்ல. அன்றைக்கும் (முன்பு) central govtஇல் வேலையில் இருப்பவர்கள் மற்ற எல்லாரையும் விட அதிக சம்பளம் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். பாங்க் ஆபீஸர் வீட்டு பையன்கள் , நாம் summer leaveஇல், தெருவில் திருடன் போலீஸ் விளையாட, அவர்கள் இந்தியா முழுதும் ஓசில டூர் போகத்தான் செய்தார்கள். மற்றவர்கள் அவர்களை கொலையா செய்து கொண்டிந்தார்கள்? economic gap is always there. இப்போ கொஞ்சம் அதிகமா இருக்கு.

இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு.

கிரீடம்

வரிசையாக சில ப்ளாப்புக்கு அப்புறம் அஜித்துக்கு கை கொடுக்க வந்திருக்கும் sweet hit இந்தப் படம். புது இயக்குனர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை. Thats why he is known as the man of confidence. டைரக்டர் விஜய் தன் பணியை கரெக்டாக செய்திருக்கிறார். (அஜீத்தை டைரக்ட் செய்யும் விஜய்?!)

(மலையாள எழுத்தாளர் மற்றும் பிரபல இயக்குனரான லோகிததாஸ் தன் கிராமத்தில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை வைத்து பிண்ணிய கதையை சிபி மலையாளி 1989இல் கிரிடம் என்ற படமாக டைரக்ட் செய்தார். இதில் மோகன்லாலும் திலகனும் நடித்திருந்தனர். 1990இல் இந்திய அரசின் விருதை பெற்றது இந்தப்படம். 1993இல் இதனுடைய அடுத்த பார்ட்டாக செங்கோல் வெளிவந்தது. மேலும் இதே கிரீடத்தை ஹிந்தியில் ப்ரியதர்சன் ஜாக்கிஷராப்பை வைத்து கர்தீஷ் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.என் மலையாள நண்பர் ஒருவர் கொடுத்த தகவல் : இது தான் மலையாளத்தில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய திரைப்படமாம்!)
Thanks :துளசி கோபால்

“யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” படத்தின் முடிவில் வரும் இந்த வரிகள் தான் படத்தின் கரு. ஏற்கனவே நிறையமுறை பார்த்த கதைதான். ஆனால் புதிதாக சொல்லியிருக்கிறார்கள். எங்கேயும் யாருக்காகவும் இயக்குனர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. முதல் பாதி திரைப்படம் அசத்தல். காமெடி கதம்பம். விவேக், சந்தானம், சத்யன் என்று காமெடிக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் இயக்குனர் டாமினேட் செய்யவிடவில்லை. எந்த காமெடியும் தனி ட்ராக்காக இல்லை. கதையினோடே வருகிறது. விவேக் வழக்கம்போல ஆங்காங்கே நடப்பு செய்திகளை தூவி சிரிக்கவைக்கிறார். “இது ஏட்டையா வீடா?” என்று கேட்டுவரும் போன் காலுக்கு, “இல்ல வேட்டையாடு விளையாடு ராகவன் வீடு” என்று கண்களை விரல்களை வைத்து விழித்து -கமலஹாசன் மாதிரி – செய்து காட்டுவது அமர்க்களம்.

அஜித் அழகாக இருக்கிறார். அமைதியாக இருக்கிறார். க்ளைமேக்ஸில் அழகாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக க்ளைமேக்ஸ் பெரிதாக பேசப்படும். (ஒரு நல்ல நடிகரை இன்னும் சரியாக யாரும் use பண்ணவில்ல என்று தோன்றுகிறது) பாந்தமாக வசனம் பேசுகிறார். No punch dialogues. பாத்தீங்களா, பஞ்ச டயலாக்ஸ் இல்லீன்னாலே நல்ல படமோன்னு நினைக்கவேண்டியிருக்கு! முதல் பாதியில் அஜீத்துக்கு நிறைய வேலை இல்லை. அஜீத் த்ரிஷா காதல் அழகாக மலர்கிறது. (ஆனால் அவ்ளோ ஈசியா? யாரவது லவ் பண்ணவங்க சொல்லுங்கப்பா! என்னோட மரமண்டைக்கு ஏறவேமாட்டேங்குது!) த்ரிஷா செம அழகு. உதட்டுக்கு கீழே இருக்கும் மச்சம் செம க்யூட். (ஷ்ரேயா இல்லீனா பானு!!! ரசிகர் மன்றத்துக்கு மாறிடலாமான்னு நினெச்சிட்டிருந்தேன், கிரிடம் த்ரிஷாவைப் பார்த்த பிறகு இப்போதைக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை. அடுத்து பீமா வேற வருது. பார்ட்டி நாளுக்கு நாள் அழகாகிட்டே வருது!!) த்ரிஷா ஒரு சீன்ல ரொம்ப கொஞ்சராங்க! அடாஅடா!!!! (ம்ம்ம்..மாஸ்டர் ஆம்லேட்!) தண்ணீர் தொட்டிக்குள் அஜீத்துடன் உட்கார்ந்து கொண்டு த்ரீஷா அஜீத்தின் வீட்டு நபர்களைப் பற்றி அடிக்கும் கமெண்ட்கள் ஜோர். த்ரிஷா, அஜீத் வீட்டுக்கு வந்து, அவர் வரும் வரை பார்க்கமுடியாமல் தவித்து, அவர் வந்தவுடன் கண்டுகொள்ளாமல் ஆக்ட் கொடுப்பது க்யூட். (ஓவர் ஜொல்லுடா!) “அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்” பாடலில் த்ரிஷா அவ்ளோ அழகு!

“கனவெல்லாம்” பாடலின் வரிகள் அருமை. ராஜ்கிரணுக்கு இந்த படம் மேலும் ஒரு மைல்கல். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார். தவறாக காரைப் பார்க் செய்துவிட்டு, போலீஸ்காரரை அடிக்கும் MLA மகனை, பளார் என்று அறைவதும், வில்லனின் ஆட்களிடம் தனியாளாக சண்டையிடுவதும் கம்பீரம். அந்த fight-sequence நன்றாக இருந்தது. (பிரசாந்த் நடித்த தமிழ் படத்தை நினைவூட்டினாலும் நன்றாக இருந்தது) அப்பா வில்லன்களிடம் அடிவாங்குவதை பார்த்து, அஜீத் பதறி ஓடிவந்து, வில்லனை நன்றாக இரும்புக்கம்பியால் அடித்து துவைத்துவிட்டு, அவன் மூச்சுப்பேச்சில்லாமல் கீழே விழுந்தபிறகு, நடந்துவிட்டதை நினைத்து கையில் வைத்திருக்கும் இரும்புக்கம்பியை பதறி தூக்கியெறிவது அருமை. அஜித் நிறைய இடங்களில் நிறைவாக செய்திருக்கிறார். லவ்விலும் சரி. சண்டையிலும் சரி. குடும்ப பாசத்திலும் சரி. ஓவர் ஆக்ட் இல்லாமல் அளவாக அழகாக செய்திருக்கிறார். costumes, வழக்கம்போல அவருடைய semi-formal ஸ்பெஷல். SI interviewவில் அஜித் செம க்யூட். அந்த shirt. பளிச்சின்னு ஷேவ் செய்யப்பட்ட அந்த முகம். அழகான டை. மறுபடியும் காதல் கோட்டை அஜீத். சொல்லப்போனால் அதைவிட அழகான அஜீத். ஒரு நடுத்தர வர்க்க குடும்பமும், குடும்பத்தின் பாசமும் ஓவர் sentimentஆக இல்லாமல் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. “

சில காட்சிகள் வழக்கம்போல் இருக்கும் என்று நினைக்கையில் ஆங்காங்கே சில திருப்பங்கள் நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. ஆனால் அவ்ளோ பெரிய வில்லன் தனியாகவே எப்பொழுதும் அடிவாங்குவது கொஞ்சம் நெருடல். க்ளைமாக்ஸ் எதிர்பாறாத ஒன்று. வழக்கம்போல எந்த compromiseஉம் டைரக்டர் செய்துகொள்ளவில்லை. அப்படின்னா அப்படித்தான். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் இல்லை. ஓரு இடத்தை தவிற வேறு (அதுவும் இங்கே mute செய்யப்பட்டுவிட்டது) எங்கும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. ஹீரோவின் துதி இல்லை. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை. மற்றபடி படம் good. GV.Prakashஇன் பின்னனி இசை படம் நெடுகிலும் பாந்தமாக இருக்கிறது, காதுகளை உறுத்தாமல்.

ஒரு தந்தையின் கனவு நிறைவேறாமலே போனது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் கிரிமினல்கள் லிஸ்டில், வரதனின் (வில்லன்) போட்டோ கிழிக்கப்பட்டு அதே இடத்தில் சக்தியின் (அஜீத்) போட்டோ ஒட்டப்படுகிறது. “யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” என்ற வரிகள் விஜய் ஏசுதாஸின் கனீர் குரலில் ஒலிக்கிறது. வரதனும் இப்படித்தான் குற்றவாளி ஆகியிருப்பாரோ என்று ஒரு நிமிடம் யோசிக்கவைக்கிறது. அது சரி. பிறக்கும்போதே எல்லோரும் குற்றவாளிகளாகப் பிறக்கிறார்களா என்ன?

எப்போதுமே மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்களைப் பார்த்துவிட்டு, மலையாள ஒரிஜனலைப் பார்க்கும் போது, மலையாள ஒரிஜினல் பெட்டர் என்றுதான் எனக்கு தோன்றும். உதாரணத்திற்கு, அண்ணா நகர் முதல் தெரு. இதன் ஒரிஜினலான “காந்திநகர் பர்ஸ்ட் ஸ்ட்ரீட்” எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சத்யராஜ்-ஜனகராஜ் (மாதவா எங்கேயோ போய்ட்டடா!) காமெடியும் நன்றாகத்தான் இருந்தது இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மோகன்லால்-சீனிவாசன் காம்பினேஷன் அவர்களை விட நன்றாக இருந்ததாகவே தோன்றியது. எனக்கு சீனிவாசனை ரொம்பவும் பிடிக்கும். அதற்கப்புறம், சந்திரமுகி. (நான் சொல்லத் தேவையில்லை!) இப்பொழுது கிரீடம். கிரீடத்தைப் பற்றி என் மலையாள நண்பர் சஜீத்திடம் சொன்னபோது சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். மலையாள கிரீடம் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

sivaji – a flash review

எனக்கு ரெண்டு சந்தேகங்கள் இருக்கு. ஒன்னு இந்தப் படத்தோட டைரக்டர் உண்மையிலேயே ஷங்கர் தானா? இந்தப் படத்தில நடிச்சிருக்கிறது உண்மையிலே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானா? ரஜினியை இவ்வளவு இளமையாக, யூத் புல்லாக இது வரை பார்த்ததில்லை. அவ்வளவு ஸ்டைலாக இருக்கிறார். அழகாக இருக்கிறார். படத்தில் இருப்பது ரஜினி மட்டுமே. ஷங்கர் எங்கே இருக்கிறார் என்று எவ்வளவு தேடியும் கடைசிவரைக்கும் கிடைக்கவேயில்லை.

க்ளைமாக்ஸ் காட்சியில் பணத்தைப் பறக்கவிட்டு பைட் எடுத்திருக்கிறார்கள். அதைத்தான் உண்மையிலே செய்திருக்கிறார்கள். பணத்தைப் பறக்கவிட்டு படம் எடுத்திருக்கிறார்கள். மொட்டை ரஜினி சிம்ப்ளி சூப்பர்ப். நான் சிவாஜி இல்ல எம்ஜிஆர் என்று சொல்வது அதிரடி. ஏதோ ஒரு கிராமத்தை முன்னேற்றம் செய்யுமாறு காண்பித்திருக்காலம், அது என்ன தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் கிராமம்? தருமபுரி மட்டும் தான் இன்னும் முனேறாமல் இருக்குதா என்ன? இதெல்லாம் குசும்பு. ஆமாம் தருமபுரி யாரோட தொகுதிப்பா? எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லிருக்கன்ல. இப்பவாவது உண்மைன்னு நம்பறீங்களா?

அப்புறம் ஸ்டைல் பாடல் அட்டகாசம். ரஜினியா இது என்று ஆச்சரியப்படவைக்கும் ஸ்டைல். அதிரடிக்காரனில் நெற்றிப்பொட்டில் குண்டை நிப்பாட்டுவது கொஞ்சம் ஓவர். “என்ன கொடுமை சரவணா?” ரிப்பீட் ஆக வாய்ப்பிருக்கிறது. என்ன கொடுமை சரவணா என்று சொல்வதற்கு படத்தில் நிறைய இருக்கிறது. அந்த ட்ரைவ் இன் தியேட்டர் பைட் மட்டுமே போதும். அப்புறம் “பன்னிதான் கூட்டம் கூட்டமா வரும், சிங்கம் எப்பவும் சிங்கிளாதான் வரும்” பைட்டும் அடக்கடவுளே!

ஸ்டார்டிங்ல ரஜினியை முகமூடி மாட்டி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரும் போது “ஆகா என்னமோ பண்ணிருக்காய்ங்கய்யா”ன்னு நெனச்சேன். ஆனா படம் முடியும் போது, வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருது “உங்க ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ப்னிசிங் சரியில்லையேப்பா”.

பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பேசும் ஸீன் நன்றாக இருந்தது. ரஜினி கெட்ட அலம்பல் பண்ணிருக்காரு. நிறைய இடத்தில. ஆனா ப்ளாக்மணிய பத்தி வற்ரதெல்லாம் காமெடியோ காமெடி! தாங்கல ராசா. பாடல்கள் பிரமாதம். செட்டிங்கஸ் கலக்கல். “பல்லேலக்கா பல்லேலக்கா” வை மட்டும் கெட்ட வேஸ்ட் செஞ்சிருக்காங்க. ரஜினி ரொம்ப மெனக்கெட்டிருக்கார். க்ரேட் சேஞ்.

சாலமன்பாப்பையா தன் இரண்டு பெண்களைப் பற்றி கமெண்ட் அடிப்பது ப்ரச்சனைக்குள்ளாகலாம். லேப்டாப்பில் வாய்ஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேர ப்ரேக் பண்ணமுடியாமல் திண்டாடுவதும், அப்புறம் மிமிக்ரி ஆர்டிஸ்டக்கூட்டிட்டு வந்து பேசவெக்கிறதெல்லாம், உண்மையிலே காமெடிதானா? அட போங்கப்பா.

ரஜினி தண்டவாளத்தில் தற்கொலை முயற்சி செய்வதும் ரயில் வரவர பின்னால தாவி தாவி போவதும் அமர்க்களம். “என்ன வெச்சு ஒன்னும் காமெடி கீமடி பண்ணலையே” என்று கேட்பது அழகாக இருக்கிறது.

இதுக்குமேல ஒன்னும் சொல்றதுக்கில்ல. சொன்னா அப்புறம் படத்தில இருக்குற கொஞ்சம் நஞ்சம் சுவராஸ்யமும் போய்டும். படம் பாத்திட்டு வாங்க. அப்புறமா நிறைய பேசலாம்.

“அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான் டேய்” உண்மைதான். ரஜினிக்கு பொருந்தும்.

ஷங்கர் சார் ரொம்ப பிஸியோ, அசிஸ்டெண்ட வெச்சு டைரக்ட் செஞ்சிருக்கீங்க? எவ்வளவு பெரிய சான்ஸ்? எப்படி அசால்டா மிஸ் பண்ணிருக்கீங்க? கதை கிடைக்கலையா என்ன? பசங்க மாஞ்சு மாஞ்சு நெட்ல நெறைய கதை சொன்னாய்ங்கல்ல? அத ஒன்ன சுட்டாவது ஒழுங்கா எடுத்திருக்கலாம்ல?