புத்தகப்புழு

இப்பொழுதெல்லாம் சில நிமிடங்கள் இடைவெளி கிடைத்தால் கூட படித்துக்கொண்டிருக்கும் நாவலில் ஒரு சில பக்கங்களையாவது படித்துவிடத் துடிக்கிறேன். சிறிது சிறிதாக ஒரு புத்தகப்புழுவாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ‘புத்தகப்புழு’ என்ற வார்த்தை புத்தகப்பிரியர்களுக்கு தவறான சொல் என்பது என் எண்ணம். புத்தகம் என்ற பறந்து விரிந்த அனு அண்டமெல்லாம் சிதறிக்கெடக்கும் ஒரு உலகில் அலைந்து திரிந்து மூழ்கித் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புழு என்ற சொல் பொருத்தமானதாகத்தெரியவில்லை. மேலும் வாசித்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல, சன் டீவியில் கோலங்கள் பார்ப்பதைப் போல. எத்தனை நபர்கள் புத்தகத்தைக்கண்டால் ஜிஞ்சர் திண்ண மங்கி மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் குமுதம் ஆனந்த விகடன் கூட படிக்க மாட்டான். குமுதத்தை வாங்கையவுடன் வேகவேகமாக படங்களை மட்டுமே பார்ப்பான். அப்புறம் இது தேறாது என்று மார்க்போடுவான். மற்றபடி ஒரு எழுத்து ஒரு வரி கூட படிக்க மாட்டான். இவனுக்கு படிப்பறிவு இருக்கிறதா இல்லையா என்று கூட சமயத்தில் நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நம் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு கிரிக்கெட் மறந்துபோனது மாதிரி அவனுக்கு வாசிக்க மறந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறதில்லியா?

புத்தகப்புழுவாக இருப்பதில் சில தீமைகளும் பல நன்மைகளும் இருக்கின்றன. தீமைகள் என்றால் முக்கியமாக நண்பர்களை இழத்தல். ஆனால் முற்றிலுமாக அல்ல. புத்தகங்களை விடவா நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்? என்னதான் சொல்லுங்கள் புத்தகத்திடம் ஒரு ஐம்பது ரூபாய் கடன் வாங்க முடியுமா என்ன? பிறகு சில பல முக்கியமான காரியங்களை மறத்தல், உதாரணமாக : ஆபீஸ் செல்வது.

நன்மைகள் என்றால் ஏராளம். ஏராளம். உலகத்தில் உள்ள நன்மைதீமைகளையும், மனிதர்களையும், அறிவையும், அனுபவத்தையும் ஒரு மனிதன் பெற வேண்டுமென்றால் ஒரு ஜென்மம் போதாது. இவை அனைத்தையும் பெற வேண்டுமெனில் புத்தகம் மட்டுமே உதவும். ஏன் டிஸ்கவரிச் சேனலும் நேசனல் ஜியோகிராபி சேனலும் இருக்கிறதே? என்று கேட்டால், நம் சுதந்திரம் கெட்டுப்போகிறதே. நம் இஷ்டத்திற்கு நாடுகளை பற்றித்தெரிந்து கொள்ள இயலாதே? அந்த சேனலில் வரும் தகவல்களை மட்டுமே நாம் பெற முடியும். தாய்பேய்க்கு பதில் தாய்லாந்து பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் என்ன செய்வது? இப்படி புத்தகத்தின் அருமை பெருமைகளை ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த பொழுது கடுப்பான என் நண்பன் ஒருவன் (மேற்குறிப்பிட்ட நபர் தான்) மிகுந்த கோபமுடன், புத்தகத்தில ஜிலேபின்னு எழுது வாசிச்சா, ருசி கிடைக்குமாடா என்றான். என்னைக்கேட்டால் சில சமையம் கிடைக்கும் என்று தான் சொல்வேன். நாவல் படித்துக்கொண்டிருக்கும் போது சிரிக்கிறோமே அல்லது சில சமயம் புல்லரிக்கிறதே (இன்று கூட ஜெயமோகனின் கொற்றவையைப் படித்துக்கொண்டிருக்கும் போது முதல் “பழம் பாடல் சொன்னது” என்னை புல்லரிக்க வைத்தது, தொடர்ந்து இரண்டாவதும்) அந்த சுவையை நாம் உணரும் போது ஜிலேபியின் சுவையையும் உணர வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே.

மேலும் இந்த டீவியின் தொல்லையிலிருந்து தப்பிக்க முடிகிறதே அதுவே பெரிய விசயம். இல்லையேல் விஜய் டீவியில் வரும் “குட்டி தங்கக்கட்டி” என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தையே தான் பத்து நிமிடத்திற்கொருமுறை பார்க்க நேரிடும். போதாக்குறைக்கு “வாடிப்பட்டிக்கு பக்கத்தில” என்ற காத்து கருப்பின் விளம்பரம். என்ன கொடும சரவணா இது?

இந்தியா சென்று திரும்பியதும் home sick லிருந்து தப்பிக்க நிறைய படங்களும் சில புத்தகங்களும் படித்தேன்.

கொஞ்சமாவது நன்றாக இருந்த படம் என்றால் அது : “Texas Chain Saw Massacre : The beginning” மட்டுமே. த்ரில் மற்றும் போன பாகத்தில் வந்தவர்களைப் பற்றிய கதைகள் நன்றாக இருந்தன. சுத்தியலால் அந்த டாக்டரின் முகத்தில் ஓஓஒங்ங்கி அடித்துக் கொல்லும் முதல் காட்சி மனதை உறையச்செய்யும் காட்சி. முகத்திற்கு பக்கத்தில் சுத்தியல் வரும் போது காமிராவை நகர்த்திவிடுவார்கள் என்று நினைத்தது தவறாகிவிட்டது. மேலும் THX ஒலியில் பார்த்ததால் கூட படம் நன்றாக இருந்திருக்கலாம். இந்தியாவில் திரையிடப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.

மற்றபடி ‘crank’, ‘covenant‘ ‘grudge2’ போன்றவை பரவாயில்லை ரகம். “Grudge 2” படம் பார்த்தவர்கள் காயோகாவை மறந்திருக்க முடியாது.
இந்த படத்தை மிக அருமையான திரில் படம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னைப்பொருத்தவரை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருந்தது. காயோகாவின் ப்ளாஷ்பேக் காட்டப்படுகிறது. சில காட்சிகள் பயமாக இருந்தது. சிறிது நாட்களுக்கு முன் ‘Grudge 1′ படத்தை டீவிடியில் பார்த்தோம். அந்தப் படம் பார்த்தவர்களுக்கு பேய் வரும்பொழுது கூடவே வரும் சத்தம் ஞாபகம் இருக்கும். இந்த சத்தத்தைக்கேட்டு என் நண்பர் வட்டாரம் : என்னடா பேய் ஏப்பம் ஏப்பமா விடுது? என்றனர். பிறகு ஒவ்வொரு முறை ஏப்பம் விடும் பேய் வரும் பொழுதெல்லாம் காமெடி ஸ்டோரிதான்.

crank” ஒரு வித்தியாசமான (by the standards of hollywood) கதை தான். அதாவது விஷம் செலுத்தப்பட்ட ஒரு நபர், சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இதயத்தை துடித்துக்கொண்டேயிருக்க செய்ய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதெல்லாம் படத்தில் உண்டு. கொஞ்சம் ஓவராக.

“covenant” போகட்டும் விட்டுவிடுங்கள்.

அப்புறம் புது ஜேம்ஸ்பாண்ட் படம். ‘the casino royale’. நிறைய விமர்சனங்கள் Daniel Craig பற்றி. ஏன் நானே சொல்லியிருக்கிறேன். Brossnan இருந்த இடத்தில் இவரா என்று. ‘Munich‘ பார்க்கும் போது கூட : கருமம் கருமம் கிழிஞ்ச பேண்ட் மாதிரி இருக்கான் இவனெல்லாம் ஜேம்ஸ்பாண்டா? என்று கமெண்ட் அடித்திருக்கிறோம்.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார், Daniel Craig. என்ன கம்பீரம், என்ன மிடுக்கு? என்ன நடை? என்ன உடை? ஆனால் உதட்டை எப்பொழுதும் கிஸ்ஸ¤க்கு ரெடி என்பது போலவே வைத்திருப்பது சற்று எரிச்சலைத் தருகிறது. Ask the girls!

படத்தில் வரும் Title Graphics க்கும், அந்த ‘You know my name’ பாடலுக்கும், முதல் chase சண்டைக்காட்சிக்கும், படிக்கட்டில் வரும் சண்டைக்காட்சிக்குமே கொடுத்த காசு சரியாகப்போகிறது. Bond girl? ம்ம்..Bonus. நாங்கள் இந்தப் படத்தி ஏசியாவிலே மிகப்பெரிய திரையில் GV MAX (24.2 M wide) பார்த்தோம். அனுபவம் புதுமை.

பெரிய திரைதான், ஆனால் கோலாலம்பூரில் இருக்கும் iMax திரை போல வராது. அது திரை மட்டுமே ஐந்து மாடிக்கு இருக்கும். இங்கு தான் ‘The Polar Express’ பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு. இந்தியாவில் iMax ஹைதராபாத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். தெரியவில்லை.

புத்தகங்கள்?? அடுத்த பதிவில். ப்ளீஸ்.

காமோ சோமோ

இந்த பதிவை எழுதவேண்டிய நிலை வந்துவிட்டதை நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. மனிதர்களும் காலத்திற்கேற்றார்போல் தம்மை மாற்றியமைத்துக்கொள்கின்றனர். நடை, உடை, பேச்சு, கலாச்சாரம் என்று காலப்பெருஞ்சுழலில் இவையாவும் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. குகைகளில் வாழ்ந்து திரிந்து தன் மனம்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் பிற்பாடு என்ன நினைத்தானோ தெரியவில்லை தன்னை நெறிப்படுத்தத் தொடங்கினான். விதிகள் வகுக்க ஆரம்பித்தான். ஒருவனுக்கு ஒருத்தி என்றான். தீங்கு செய்யலாகாது என்றான். பிறன்மனை நோக்காமை என்றான். அடுத்தவரை துன்புறுத்தினால் தண்டனை என்றான். விலங்குகள் போல இருந்த மனிதன் எதற்காக பிற்பாடு தனக்கு தானே விதிகளை வகுத்துக்கொண்டான்? அவன் என்ன கேனையனா?

கலாச்சாரம் என்ற ஒன்று எவ்வாறு பிறந்தது? எதற்காக உருவாகிறது? எவ்வாறு மாற்றம் அடைகிறது? நாம் உடுக்கும் உடை, பேசும் பேச்சு, பயிலும் பொழி, உண்ணும் சாப்பாடு, வணங்கும் தெய்வம் என்று எத்தனையோ விசயங்களில் கலாச்சாரம் மாறுபட்டிருக்கிறது. தமிழ் வெண்பா இயற்றிக்கொண்டிருந்த நாம் இன்று ஆங்கிலம், ஜெர்மனி, ஜாப்பனீஷ் என்று வகைக்கு ஒன்றாக படிக்கிறோம். பள்ளியில் கூட தமிழுக்கு பதிலாக சான்ஸ்க்ரீட் எடுத்து படிப்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு. இது சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட். இது மனிதன் தன்னை இந்த உலகத்தில் இருத்திக்கொள்ள செய்யவேண்டியது. வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறன விசயங்களில் மாற்றம் தேவை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரிலே மாற்றம் தேவையா? ஒருவனுக்கும் ஒருத்தி என்பது போய், இப்பொழுது ஒருவனுக்கு ஒருவன் என்றும், ஒருத்திக்கு ஒருத்தி என்று ஆகும் நிலை அவசியம் தானா? அதை ஆதரிக்க சட்டம் தேவையா?

ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கக்கூடாது என்பது தான் அனைவரது நோக்கமாகவும் இருக்கும். ஆனால் ஒரினச்சேர்க்கையை ஆதரிப்பது போல சட்டம் இயற்றினால் அது ஊக்குவிப்பது இல்லாமல் வேறு என்ன? பாசிவிப்பதா? என்னங்கைய்யா இது? ஷியாம் பெனேகல், அருந்ததிராய், விக்ரம் சேத் பரிந்துரைசெய்திருக்கிறார்கள். நிறைய ஆங்கில நாவல்கள் வாசிப்பார்கள் போலும். வாசித்துவிட்டு போகட்டும். தவறில்லை. அதற்காக நாவலில் படித்த கதைகளை எல்லாம் பரிந்துரை செய்ய வேண்டுமா என்ன? சரி அப்படியே பரிந்துரை செய்தாலும் நாம் யோசிக்கவேண்டுமா இல்லையா? மேற்கத்திய எக்கனாமியை பின்பற்றுவது தவறில்லை. அவர்களைப் போல ஓட்ஸ் சாப்பிடுவதில் பிழையில்லை. அவர்களைப்பார்த்து, கொழுத்தும் மெட்ராஸ் வெயிலில் கோட்சூட் அணிந்து கொண்டால்கூட பரவாயில்லை. வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டாலும் தப்பில்லை. ஆனால் கலாச்சாரத்தையும் வருஙகால சந்ததியினரையும் அடியோடு பாதிக்கும் ஒரு விசயத்தை நாம் விதைக்கலாமா?

சிலர் இந்த சட்டம் ஓரினச்சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும் என்றும் அதன் மூலம் அவர்களை திறுத்தலாம் என்றும் பாஸிட்டிவாக யோசிக்கின்றனர். புல்ஷிட். இந்தியாவிலிருக்கும் மக்கள்தொகைக்கு இவர்கள் எங்கிருந்து திறுத்துவார்கள்? இல்லை இது போன்று திறுத்திய வரலாறு ஏதேனும் இருக்கிறதா? மது அருந்துவதை சட்டபூர்வமாக்கி என்னாவாயிற்று? எத்தனை பேர் மது அருந்துவதை நம்மால் தடுக்கமுடிந்தது? சட்டம் என்ற ஒன்று கொண்டுவந்துவிட்டால் அதை வாபஸ் பெறுவது என்பது இயலாத காரியம். இப்பொழுது யாரும் மது அருந்தக்கூடாது என்றொரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்றால் அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் சட்டபூர்வமாக்கி விட்டால் பரம்பொருள் போல ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. சிகரெட்டை போல. விக்ரம் சேத்துக்கு என்ன கவலை? வழக்கம்போல பக்கம் பக்கமாக எழுதி உலகின் மிகப்பெரிய புத்தகம் எழுதியவர் என்ற லிஸ்டில் மேலும் முன்னேறப்பார்ப்பார்.

இதில் மனித உரிமை பிரச்சனை வேறு. மண்ணாங்கட்டி. ஓரினச்சேர்க்கை மனித உரிமையா? எந்த ஊரில் சொன்னார்கள்? அமெரிக்காவிலா? நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? என்னது அத்திப்பட்டியிலா? பிறகென்ன போய் நாளைய சாப்பாட்டிற்கு என்ன வழி என்று பாரும். இல்லை உங்கள் அத்திப்பட்டி, மேப்பில் இன்னும் இருக்கிறதா என்று மற்றொருமுறை பார்த்து உறுதி படுத்திக்கொள்ளும். நினைப்பதெல்லாம் செய்தால் அதற்குப்பெயர் மனித உரிமையா? அதற்கு டெபனிஷன் வேறு. எந்த உயிரும் மற்றொரு உயிருக்கு தீங்கு ஏற்படுத்தாமல் வாழ உரிமையிருக்கிறது என்று. ஒரு மனிதன் நிர்வானமாய் இருந்தால் அதில் ஏதேனும் மற்றவருக்கு கெடுதி இருக்கிறதா? பிறகு ஏன் அது தடை செய்யப்படுகிறது? இது மனித உரிமையில்லையா? இங்கே மட்டும் கலாச்சாரம் கூரையைப்பொத்துக்கொண்டு டபக் என்று விழுகிறதோ? மது அருந்துவது மனித உரிமையா. மது அருந்திவிட்டு அந்த போதையில் நீ மற்றொரு மனிதனின் உரிமையில் தலையிடவில்லையா? மது அருந்திவிட்டு லாரியை ரோட்டில் ஒட்டாமல் ரோட்டை விட்டு கீழே மணலில் உனக்கு பயந்து கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிவிட்டு நீ ஆலமரத்தின் கிளையில் லாரியை பார்க் செய்ய ட்ரை பண்ணதில்லையா? குடிப்பது உரிமைதான். அதனால் மற்றவர்களுக்கு மறைமுகமாக தீங்கு ஏற்படுகிறதா இல்லையா? அப்பொழுது உங்கள் டெபனிஷன் தவறாகிறதே. மதுவாவது பரவாயில்லை கவர்மெண்ட் பிச்சை எடுக்காமல் காலம் தள்ள உதவுகிறது. மிஞ்சிபோனால் ஒரு தனி மனிதனையோ, அல்லது ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டும் அப்பாவி மனிதனையோ, அல்லது ஒரு குடும்பத்தையோ தான் பாதிக்கும். இந்த ஓரினச்சேர்க்கை நம் சந்ததியினர் அனைவரையுமல்லவா பாதிக்கும். கலாச்சாரத்தை வேரோடு அழிக்குமே.

ஒவ்வொரு மனிதனுக்கு, ஒரு சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், ஏன் விலங்குக்கும் கூட ஒரு தனித்துவம் – ஐடன்டிட்டி – இருக்கிறது. அது தான் நமது அடையாளம். அதை எக்காரணத்தைமுன்னிட்டும் நாம் தொலைத்துவிடக்கூடாது. சிங்கம் என்றால் கர்ஜிக்கத்தான் வேண்டும். பிடரியில் முடி இருக்கத்தான் செய்யும். அது மனிதனைப்பார்த்து கிராப் வெட்டிக்கொண்டு ஹேர் கலரிங்கும் செய்து கொண்டால் நன்றாகவா இருக்கும். மேற்கத்தியனரின் கலாச்சாரமும் வாழ்க்கைமுறையும் வேறு. நீ இதற்கு சட்டம் வைத்திருக்கிறாயா? ஓகே. குட். அவ்வளவுதான். எங்களுக்கு இது சரிப்படாது. நாங்கள் ஓரினச்சேர்க்கையை தடுக்க என்ன செய்யலாம் என்று நாங்களே யோசித்துக்கொள்கிறோம். நமக்கு யோசிக்கத்தெரியாதா? எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிலிருந்து கட், காப்பி, பேஸ்ட் தானா? நாங்கள் – சாப்ட்வேர் மக்கள் – பரவாயில்லை.

இது கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல. இயற்கைக்கே விரோதமானது. தெரியாமலா இயற்கை ஆணையும் பெண்ணையும் படைத்தது. அல்லது கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்களுக்கு. Evolution என்றால், தன் தேவைக்காகத்தானே ஆணாகவும், பெண்ணாகவும் evolve ஆனோம். தேவையில்லையென்றால் ஆண் முட்டும் தானே பரிணாமவளர்ச்சி அடைந்திருப்பான். திருவள்ளுவர் மிகப்பெரிய அறிவாளி என்று உலகமே ஒத்துக்கொள்கிறது. அவர் காமத்துப்பாலைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அங்கே எங்காவது ஓரினச்சேர்க்கை வருகிறதா? இல்லை நமது புராணங்கள் எதிலும் இவ்வாறு வருகிறதா? இப்ப மட்டும் என்ன அவசியம் பொத்துக்கொண்டு வந்தது? இதிலும் குலோபலைஷெசனா? சுதந்திரமா? இப்படி படிப்படியாக கட்டுப்பாடுகளை இழந்து கொண்டுவந்தால் நாம் மறுபடியும் சுதந்திரமான விலங்குகளாகத்தானே ஆவோம்? நமக்கும் ஐந்தறிவு விலங்குக்கும் என்ன வேறுபாடு?

ஓரினச்சேர்க்கையாளர்களை ஒதுக்கிவிட முடியாது. அதற்காக அதை சட்டமாக்கவும் கூடாது. தண்டனையில்லையேல் குற்றம் பல்கிப்பெருகி ஆலவிருட்சமாக வளர்ந்துவிடும். ஏன் கொலையை குற்றம் என்று சொல்கிறோம்? அதற்கு அதிகபட்சத்தண்டனை வழங்குகிறோம்? குற்றம் என்பதால் தான் கொலையை செய்ய மனிதன் தயங்குகிறான். இல்லையென்றால் என்னடா என் மீசையைப்பார்த்தாடா சிரிக்கிற என்று கத்தியை சொருகிவிட்டு சாதாரணமாக செல்வான் மனிதன்.

அடக்குமுறைகளாலும் சட்டத்திட்டங்களாலும் பயத்தினாலும் தான் மனிதன் மனிதனாக இன்று வரை இருந்துவந்திருக்கிறான். அப்படி அவசர அவசரமாக சட்டமாக்க இதென்ன அடிப்படை பிரச்சனையா? இந்தியாவில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், படிக்க கல்வி – கன்னடத்திலோ, தமிழிலோ அல்லது லத்தீனிலோ, அதுவல்ல பிரச்சனை – அனைவருக்கும் கிடைக்கிறதா?பிறகு, இந்த சட்டத்திற்கு என்ன அவசரம்? இல்லை உங்களுக்கு பொழுது போகவில்லையா? பொழுது போகவில்லையென்றால் சாக்பீஸில் கோடு போட்டு தாயம் விளையாடுவது தானே? ஏன் காமோ சோமோ – என்ன அர்த்தம் என்று கேட்காதீர்கள் ப்ளீஸ் – வென்று என்னத்தையாவது செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நன்றி: சிவபாலன்.

கேட்பதற்கு உரிமையில்லை!

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு மந்திரம் தான். சிலர் அவரைப் புகழ்ந்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். சிலர் அவரை விமர்சித்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். விளம்பரம் விளம்பரம் தான்.

ரஜினி வேலு பிரபாகரனுக்கு உதவி செய்திருக்கிறார். அது கடனாகவோ, ரொக்கமாகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை வேலுப்பிரபாகரன் விகடனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருக்கிறார். கவனிக்க, ரஜினியின் சொந்தமோ அல்லது ரஜினியின் ரசிகர் மன்றமோ அல்லது ரஜினியோ இதைச் சொல்லவில்லை. வேலு பிரபாகரனே கூறியிருக்கிறார். ரஜினியின் நிர்பந்தத்தினாலே அவர் சொன்னார் என்று நினைத்து விட வாய்ப்பிருக்கிறது. அது சின்ன புத்தியுள்ளவர்களுக்கே சாத்தியம். ரஜினியை காட்ட சாட்டமாக விமர்சித்தவர் வேலு பிரபாகரன். தனக்கு ஒரு கஷ்டம் என்று வந்தவுடன் ரஜினியிடம் அதை சொல்லியிருக்கிறார். ரஜினி பழயதை நினைத்து உதவியிருக்கலாம். அல்லது நினைக்காமல் உதவியிருக்கலாம். உதவி உதவி தானே ஐயா? வேலுபிரபாகரனின் கஷ்டம் தீர்ந்ததா இல்லையா? உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகிறது? மற்ற எத்தனை தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏன் உதவவில்லை என்று கேட்பது மிக மிக அபத்தமாக இருக்கிறது. ஒருவர் மற்றொருவருக்கு உதவுகிறார் என்றால் அவரிடம் போய்: ஏய் நீ ஏன் அடுத்தவருக்கு உதவவில்லை என்று கேட்பது போல் இருக்கிறது. மேலும் ரஜினி தனது படங்களில் நலிந்த தயாரிப்பாளர்களை இணைத்தயாரிப்பாளர்களாக சேர்த்துக்கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. தற்போதைய சிவாஜியில் கூட எஸ்.பி.முத்துராமனை சேர்த்திருக்கிறார். பண்டரிபாய், வீ.கே.ராமசாமியை தனது முந்தைய படங்களில் சேர்த்திருந்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். குற்றம் பார்ப்பதே குற்றம். அதிலும் நல்லவிசயத்தில் குற்றம் பார்ப்பது என்பது மிக மிக அபத்தம்.

மனோரமா ரஜினியை விமர்சித்தார். அதனால் அவருக்கு படங்கள் குறைந்தது. அதற்கு காரணம் ரஜினியாம். ரஜினி எல்லோரிடமும் சென்று மனோரமாவிற்கு வாய்ப்பு தராதீர்கள் என்று சொன்னாராம். சினிமாவிலிருந்து கொண்டே சினிமாக்காரர்களை விமர்சிப்பது – அதுவும் பெர்சனலாக – சினிமாக்காரர்களையே எரிச்சலடையச் செய்யும்.நாளை நம்மையும் விமர்சிப்பார் என்ற பயம் கூட காரணமாக இருக்கும். மேலும், ஒரு துறையில் பலசாலியாக இருப்பவரை, அந்த துறையில் இருக்கும் ஒருவர் விமர்சித்தால், மற்ற யாரும் விமர்சித்தவருக்கு ஆதரவு தர மாட்டார்கள். தாட் இஸ் நேச்சுரல். ரஜினியே வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்கள் தானாகவே வாய்ப்புத்தருவார்கள் என்பதால் கூட முதலில் ரஜினி அழைத்து வாய்ப்பு தந்திருக்கலாம். ஹீரோக்களை துதி பாடுவது என்பது புதிதல்ல, அதை சகித்துக்கொள்வதும் நமக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் படத்திலிருக்கும் ஈ. எறும்பு முதற்கொண்டு அனைத்தும் அவரைத் துதிபாடும். அப்படியிருக்க மனோரமாவும் அந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரம். ரஜினியே நீங்கள் எனக்கு வில்லியாக நடியுங்கள்; என்னைத் திட்டுங்கள் என்று சொல்லியிருந்தால் கூட அன்றைய சூழ்நிலையில், மனோரமா அதை செய்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. அப்படியிருக்க இதைக்காரணம் காட்டி அவரை சேடிஸ்ட் என்று சொல்வது நியாயமா? நம் சுய விளம்பரத்திற்காக அவரை பிண்டம் என்று சொல்லலாமா?

ரஜினி ஏதாவது சமூகசேவை செய்திருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள் அவர் ஒரு நடிகர். அவர் தொழில் நடிப்பது. சமூக சேவை செய்வது அல்ல [அப்படியும் அவர் நிறைய செய்திருக்கிறார்]. மேலும் அவர் செய்ய வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா என்ன? கடவுள் அவரைப் படைக்கும் போது : சிவாஜிராவ், நீங்கள் தமிழகம் சென்று திருத்தொண்டாற்றக்கடவது என்று சொல்லி அனுப்பினாரா என்ன? நீங்கள் சமூக சேவை செய்வதற்கென்றே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்திருக்கிறீர்களே முதலில் அவர்கள் சமூக சேவை செய்கிறார்களா என்று பாருங்கள். பிறகு நம் ரேஞ்சுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். நீங்களும் சமுதாயத்தில் ஒரு அங்கத்தினர் தானே, ரஜினியைப் போல்.

அவர் கோடி கோடியாக அள்ளுகிறார். பிறகு இமயமலைக்கு போகிறார் என்றொரு பேட்டி வந்திருந்தது. இது என்ன அநியாயம்? அவர் சம்பாதிக்கிறார். அவர் இமயமலைக்கு செல்கிறார், இல்லை எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். உனக்கென்ன? உன் காசையா திருடிவிட்டு செல்கிறார்? படம் பார்த்த தமிழ்மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். என்ன செய்யவேண்டும்? சாம்பார் இட்லி சாப்பிடுகிறோமே சரவணபவனில், சரவணபவன் நமக்கு என்ன செய்தது என்று கேட்க முடியுமா? சாம்பார் இட்லி சாப்பிட்டாச்சா? அப்படியே ஓடிப்போயிடு. அதுதான். படம் பார்த்தீல. உன்ன யாராச்சும் தர தரன்னு புடிச்சு இழுத்துட்டு போனாங்களா? கண்டிப்பா டிக்கெட் வாங்கு இல்லேன்னா குலநாசம்னு யாராச்சும் பயமுறுத்துனாங்களா? அதுவும் முதல் நாளே பாக்கலீன்னா உனக்கு ஆயுள் தண்டனைன்னு சொன்னாங்களா? நீயாத்தான பார்த்த. நீ கொடுத்த காசு படத்துக்கு சரியாப்போச்சு. அவ்வளவுதான். மளிகைக்கடையில கடல உருண்டை வாங்குறமாதிரிதான். வாங்கிட்டியா? சாப்டாச்சா? போயிட்டேயிரு. அண்ணாச்சி உன் கடையில் நான் கடலஉருண்ட சாப்பிட்டிருக்கேன், நீ எனக்கு என்ன செஞ்சன்னு கேக்க முடியுமா? படம் புடிச்சிருந்தா பாரு. இல்லயா பாக்காத. பாத்துப்புட்டு, விசிலடிச்சுப்புட்டு ஐயோ நீ இமயமலைக்கு போனா நான் எங்க போறதுன்னு கேட்டா? சம்பாதிக்கறார் சம்பாதிக்கறார் என்றால்? வரி கட்டுகிறாரா இல்லையா?

ஐயா, நாட்ல எல்லோரும் தான் சம்பதிக்கிறோம். எல்லோரும் தான் செலவழிக்கிறோம். எல்லோருக்கும் செலவு இருக்கு. அவங்க அவங்க சக்திக்கு தகுந்தாமாதிரி. மொதல்ல நாம நம் சக்திக்கு உட்பட்டு என்ன தான தர்மம் பண்றோம். என்ன பொது நலத்தொண்டுகள் கிழிக்கறோம்னு பார்க்கனும். அதவிட்டுப்புட்டு அவன் நொல்ல, இவன் தொல்லன்னு சொல்றது வேறஒன்னுமில்ல பொறாமை அதன் விளைவாக அரசியல். அவர் ஒரு நடிகர். இன்னும் நேரடி அரசியலில் கால் எடுத்து வைக்கவில்லை. அவர் அரசியலுக்கு வரட்டும், பதவியில் அமரட்டும் அப்போது கேட்கலாம் எங்களுக்கு என்ன செய்தாய் என்று? அது வரைக்கும் நமக்கு கேட்பதற்கு உரிமையில்லை.

செய்ய வேண்டும் தான். செய்திருக்கலாம் தான். அவர் வசதிக்கு அவர் இப்பொழுது செய்துகொண்டிருப்பதைக்காட்டிலும் மிக நன்றாக செய்யலாம் தான். எத்தனையோ கிராமங்கள் வறுமையால் உலன்று கொண்டிருக்கின்றன. அதில் ஒரே ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுக்கலாம். அதற்கு வசதிகள், வேலைவாய்ப்பு என்று ஏற்படுத்திக்கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் திறக்கலாம். புதிதுபுதிதாக ரிசெர்ச்சுக்கு உதவலாம். விவசாய ரிசர்ச். உப்புத்தண்ணி ரிசர்ச். முடி கொட்டாமல் தடுப்பது எப்படி. அவருக்காவது உபயோகமாக இருக்குமே. இதை செய்ய முடியாதா அவரால்? பிறகு பணமிருந்து என்ன பயன்? – இத விட்டுபுட்டு எங்க பேச கூப்டாலும் போய் மேடையேறி, பேச கூப்டவரை நல்லவரு வல்லவருன்னு மட்டும் பேசிட்டு ஒரு கத சொல்லிட்டு போனா என்னங்க அர்த்தம்? – ஆனால் இதையெல்லாம் செய்யாதது குற்றமில்லை. இதை அவர் மட்டும் தான் செய்திருக்க வேண்டும் என்றில்லை. செல்வந்தர்களாக இருக்கும் எவரும் செய்திருக்கலாம். யார் செய்தார்கள்? தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டும் தான் பணக்காரராக இருக்கிறாரா? வேறு எவரிடமும் பணமில்லையா?

இது தமிழகத்தின் தலையெழுத்து. என் தெலுங்கு நண்பர் ஒருவர் கேட்டார் : ஏன் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன உங்கள் பத்திரிக்கைகள் என்று. நியாயம் தானே? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் நம்மை சினிமா என்ற போதையில் அமுக்கி வைத்திருக்கவே விரும்புகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கி. நம் ஊரில் பொழுதைப்போக்குவதற்கு வேறு விசயங்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் – தீம் பார்க் – மிக காஸ்ட்லியாக இருக்கின்றன. குடும்பத்துடன் செல்ல வேண்டுமானால் பாதி மாத சம்பளம் – சாப்ட்வேர் மக்களே நான் உங்களைப்பற்றி பேசவில்லை – எடுத்து வைக்கவேண்டும். அதைவிட சினிமா எவ்வளவோ தேவலை. சீப் அன்ட் பெஸ்ட் பொழுதுபோக்கி. 60ரூபா டிக்கெட் எடுத்து மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துவிடலாம். அது கொடுக்கும் தலைவலியில் வீட்டு பிரச்சனைகளை ஈசியாக மறந்துவிடுகிறோம்.

வேண்டுமானால் நாம் சினிமா – தியேட்டருக்கு போய் – பார்ப்பதை நிறுத்தலாம். இதற்குத் தான் நமக்கு உரிமை இருக்கிறது. படம் பார்ப்பதற்கு பதிலாக: அந்த நேரத்தை நம் உடம்பை பேணுவது, வீட்டில் தோட்டம் வளர்ப்பது, குடும்பத்தினருடன் – சண்டைவராமல்- முக்கியமாக தாய் தந்தையருடன் பேசிக்கொண்டிருப்பது, அவர்களது கதைகளை காது கொடுத்து கேட்பது, பிள்ளைகளை பார்க்கு பீச் என்று அழைத்து செல்வது, உறவினர் வீட்டிற்கு விசிட் -டேரா போட்டு அவர்களுக்கு செலவிழுத்து வைக்காமல்-அடிப்பது, எங்கேயாவது டிரிப் அடிப்பது, புத்தகம் படிப்பது -படித்துவிட்டு; ஜெயமோகனை: நான் உன் புத்தகம் படித்தேன் நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்ககூடாது-படிக்கதூண்டுவது, விளையாடுவது, விளையாட இடமில்லையா, எங்கே இடம் அமைக்கலாம் என்று யோசிப்பது என்று எத்தனையோ விசயங்கள் இருக்கிறது.

சினிமா பார்ப்பதை நிறுத்துவோம். அதற்கு செலவழிக்கும் காசையும் நேரத்தையும் – முக்கியமாக நேரம் -ஒருங்கினைப்போம். நல்ல விசயத்திற்கு ஸ்டிரீம் லைன் பண்ணுவோம். அது தான் நம்மால் முடிந்தது. அதை விட்டுட்டு இன்னும் எத்தனை காலம் ரஜினியையே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது? போங்கப்பா. போங்கப்பா. போய் பிள்ளைகளை படிக்க போடுங்கப்பா.

ஓட்டுரிமை

தேன்கூடு போட்டிக்கு மூன்றாவது முறையாக நான் என் சிறுகதையை சமர்பித்திருக்கிறேன். முதல் இரண்டு முறையும் அறிமுக பிளாகரான எனக்கு நானே எதிர்பார்த்திராத அளவிற்கு வாக்குகள் கிடைத்தன. சந்தோஷம். இந்த முறை என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சில நண்பர்கள் – என் பதிவுகளை தவறாமல் வாசித்துவருபவர்கள் – என் சிறுகதைக்கு வாக்களிக்க முயற்சித்து, நான் தோல்வியைத் தழுவும் முன் அவர்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

21 ஆம் தேதி காலையிலே நான் என் அலுவலகத்திற்கு வந்தவுடன் வாக்களித்து விட்டேன். நான் வாக்களித்ததால், என்னைத் தொடர்ந்து வாக்களிக்க முயற்சித்த என் நண்பர்கள் அனைவருக்கும் இதே errror msg -ஐத் தான் பெற்றனர்.

>>Thank you for voting on this poll. The results will be announced shortly! (you already submitted an answer for this survey. If this not the case, please contact us.)

ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே server -க்கு கீழ் இருப்பதாலா? அப்படியென்றால் தேன்கூட்டில் userid, pwd எதற்கு? வெறும் server ip வைத்தே login செய்து கொள்ளலாமே. என்ன logic என்று எனக்கு விளங்கவில்லை.

சரி, அலுவலகத்தில் ஒரே செர்வருக்கு கீழ் இருப்பதால் வாக்களிக்க இயலவில்லை என்று என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று முயற்சித்திருக்கிறார், வீட்டிலும் இதே err msg தான். (இது என்ன கடவுளே, புரியாது கடவுளே!)

அவர் படைப்புகளை தேர்ந்தெடுக்கவேயில்லை. வாக்களிக்கவும் இல்லை. அவருக்கு எப்படி தேன்கூடு நன்றி சொல்கிறது?
>>Thank you for voting on this poll. தேன்கூடுக்கு ரொம்பத்தான் பவ்யம்.

ஒரே நபர் வேறு வேறு userid -க்களை create செய்து தன் கதைக்கு தானே பலமுறை வாக்களிப்பதை தடுப்பதே இதன் நோக்கம் என்பதை நான் அறியாமலில்லை, ஆனால் அதே சமயத்தில் வாக்களிக்க விரும்புபவர்களை – வாக்களிப்பதற்காகவே, userid create செய்தவர்களை – discourage செய்வதாகவே இருக்கிறது.

கள்ளவோட்டுகள் போடக்கூடாதுதான், ஓட்டே போடக்கூடாது என்றால் எப்படி?

சேர்க்கப்பட்டது:
தேன்கூடு நன்றி. இப்பொழுது என் நண்பர்களால் ஓட்டளிக்க முடிகிறது
.

கதம்பம்

சென்ற சில நாட்களாக – வாரங்களாக – நான் இரசித்த கவிதைகள், ஜோக்குகள்,பாடல்கள் போன்றவை. நீங்கள் படித்திருக்கலாம்.

ஒரு காதல் கவிதை :

தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
மதிப்பிடப்படுவதாக
செய்திகள் சொல்கின்றன
ஆனால். இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில் தான்

விகடனில் வந்த ஒரு கேள்வி:

“நாங்கள்லாம் மொத ஷோவே பார்த்துட்டம்ல!” ங்கிறதைக் காட்டுறதுக்காகவே, தியேட்டர்ல முன் ஸீட்ல உட்கார்ந்துக்கிட்டு ‘டக்குன்னு குத்திருவான் பாரேன்’, ‘அடுத்த ஸீன்ல இருக்குடி இவனுக்கு ஆப்பு’ ‘பாட்டு போடப்போறாய்ங்கடா’ன்னு ஸீனுக்கு ஸீன் டிரெய்லர் ஓட்டி டார்ச்சர் பண்றானுங்களே முந்திரி பக்கோடா காதருங்க..இந்த இம்சை ஏன்டா?

மற்றொரு கேள்வி:

லவ்வருக்கு போன் பேசுற பூரா பூனைப் பயலுகளும் ‘அப்புறம் அப்புறம்’ ங்கிறதை மட்டுமே ஆயிரத்தெட்டு தடவை யூஸ் பண்றானுங்களே. வொய்? வொய்? ராத்திரி எட்டு மணிக்கு மேலே பொண்ணுங்க எந்த கால் பேசினாலும் ஹஸ்கி வாய்ஸ்லயே பேசுறாங்களே, வொய்மா வொய்?

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா!

ஒரு கொரளு: ஒரு வெளக்கம்.

கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

யாராச்சும் நீ லவ்ஸ் வுட சொல்லோ நாலு ஜெனம் சத்தய்ச்சினுதான் போவும், அது ரப்ச்சர் கெடியாதும்மே! லவ்ஸ¤க்கே அதாம்மே கிரிகிரி!

மெய்யாலுமா?

மற்றொரு குபீர் சிரிப்பு செய்தி : தினமலரில் வந்தது!! ஆனாலும் தினமலருக்கு நக்கல் ஜாஸ்திபா!

மற்றொரு யோசிக்கவைத்த கவிதை:

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை

சிந்தனை புதிது. என் தோழி ஒருத்தி இதெல்லாம் கவிதையாடா? என்றாள். அழகாக இருந்தால் எல்லாமே கவிதைதான், இல்லையா?

சமீபத்தில் கேட்ட சினிமா பாடலொன்று என் மனதை மிகவும் பாதித்தது. மிகுந்த சமூக பொறுப்புணர்வோடு பாடிக்கொண்டுவந்த கவிஞர், திடீரென்று இவ்வாறு சொல்லுகிறார்.

பாடல் : என்னம்மா தேவி ஜக்கம்மா
படம் : தம்பி

யார் எழுதியது என்று தெரியவில்லை.

விவசாயம் செய்யுன்னா
வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயித்தான்
ஒட்டகம் மேய்க்கிறான்

என்ன வார்த்தைகள் இவை? இதற்குப்பெயர் சமூகப்பொறுப்புணர்வா? நக்கலும் நையாண்டியும் அல்லவா மேலோங்கி நிற்கிறது? விவாசாயம் நல்ல வருமானம் தருகின்ற தொழிலாக இருந்தால் யார் அதை விட்டுவிட்டு ஒட்டகம் மேய்க்கப்போகப்போகிறார்கள்? விவாசயம் முக்கியமானது, நான் கடைசி வரை விவாசயம் மட்டுமே செய்துகொண்டிருப்பேன் என்று சொல்லிக்கொண்டு கூல் சட்டியை ஏந்திக்கொண்டிருக்கலாம் தான். நீங்கள் (சினமாக்காரர்கள்) என்ன செய்வீர்கள்? நெய்வேலியில் கருப்புசட்டை அணிந்து கொண்டு ஊர்வலம் போவீர்கள், பிறகு, அப்புறம்? உலக சினிமாவில் முதல் முறையாக என்று துபாய் பாலைவனத்தில் அதே ஒட்டகங்களோடு – கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பைஜாமா குர்தா சகிதம் – டூயட் பாட போய்விடுவீர்கள். பிறகு கூல் சட்டியை யார் நிறப்புவது? நீங்கள் சினிமாக்காரர்கள். காதல் கத்தரிக்காய் வெண்டைகாய் என்று அரைத்த மாவையே அரைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருங்கள். வெளிநாட்டில் உட்கார்ந்து, சொந்த பந்தம் மனைவி மக்கள் என்று அத்தனையும் விட்டு தம்முடைய அடுத்த சந்ததியினராவது நன்றாக இருக்கவேண்டும் என்று உழைத்து – கவனிக்க, உழைத்து – கொண்டிருக்கும் மக்களின் புண்பட்ட மனதை மேலும் மேலும் ரணமாக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும்.

மற்றுமொரு பாடல், சித்ரா மிக அருமையாக பாடியிருக்கிறார்.
படம்: பொய்.

என்ன தொலைத்தாய்
எதனைத் தொலைத்தாய்

தமிழைத் தொலைத்த
தலைமுறை போலே
தண்ணீர் தொலைத்த
தமிழகம் போலே
வருடம் தொலைத்த
வாலிபன் போலே
கருணையைத் தொலைத்த
கடவுளைப் போலே

வீரம் தொலைத்த
வாளைப்போலே
ஈரம் தொலைத்த
நிலத்தைப் போலே
கிழக்கு தொலைத்த
சூரியன் போலே
எல்லை தொலைத்த
தேசம் போலே

என்ன தொலைத்தாய்
நீ
எதனைத் தொலைத்தாய்?

இங்கே பாடலைக்கேளுங்கள்.

என்னுடைய ரோடங்கும் நயாகராக்கள் என்ற பதிவின் கருத்தை(!) ஒட்டிய
கவிதை ஒன்றை இந்த வார தீராநதியில் படிக்க நேர்ந்தது.

ஒரு மின்னல்

சமதரையிலிருந்து
மூன்றடி உயர்த்தித்தான் கட்டினேன்

சுவர்களில்
இட்டு வைக்கும் எச்சங்களைத்
தினமும் துடைத்து அள்ளுகிறேன்

சிறுமழை பெய்யினும்
தேங்கும் நீரில் வீடு தெப்பம்

எல்லாப் புறமும்
பசும்பாசிக் கொடிகள் ஏறுகின்றன
கிறுக்கல் வடிவ நீர்ப்பூச்சிகள்
எப்போதும் வீட்டையே சுற்றுகின்றன

இரவெல்லாம்
தவளைகள் கத்தித் தொலைக்கின்றன

இன்று அதிகாலை
கதவைத் திறந்தபோது
வாசலில் தலைவைத்துச்
சுகமாய்த் தூங்கி கொண்டிருந்தது
அந்த பாம்பு

சலனத்தில்
அது ஒரு மின்னலெனச்
சற்றே புரண்டு படுக்கையில்
என்க்கு புரிந்தது

அதன் வீட்டுக்குள் எனதுவீடு

.

-பெருமாள்முருகன்

கன்ட்ரோல்-ஆல்ட்டர்-டெலீட்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் பின்னனியில் புனையப்பட்ட நாவலில் – பொன்னியின் செல்வனாகட்டும் அல்லது உடையார் ஆகட்டும் – சோழப்பேரரசின் வலிமையும், பெருமையும், சிறுமை – இருக்குங்கால் – யும் அறியப்படும். குடும்ப வியாபரம் சம்பந்தமான நாவல்களில் வியாபாரமும், குடும்பத்தால் ஏற்படும் சிக்கல்களும், குடும்பத்தால் சிக்கல்கள் தீர்வதையும் காணலாம். துறவியர் சம்பந்தமான நாவல்களில் அவர்களது தன்னைப் புறக்கனித்தலை -self denial – அறிந்துகொள்ளலாம். துப்பறியும் நாவல்களில் சகட்டுமேனிக்கு திருப்பங்கள் – யூகிக்க முடிந்ததோ, யூகிக்க முடியாததோ – இருக்கலாம். மென்பொருள் சார்ந்த நாவல்களில் என்ன இருக்கலாம்? லன்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தாய்லாந்து, மசாஜ்பார்லர்கள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட காதல்கள்??!!!

மூன்றுவிரல் நாவலைப் பற்றி நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழில் மென்பொருள் துறையை பின்புலமாக கொண்ட முதல் புனைவு நாவல் என்றும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிட்டியது. ஒரே மூச்சில் வாசித்துவிடும் நாவல் அல்ல இது. விடாமல் நம்மை படிக்கச்சொல்லும் மர்மங்கள் நிறைந்ததல்ல. முடிச்சுகள் இல்லை. ஆனால் கதாசிரியரின் பறந்து விரிந்த நகைச்சுவை திறன் இருக்கிறது. பல வாக்கியங்கள் பல அர்த்தங்கள் தொனிந்தவை : டபுள் மீனிங்?! – புதுமைப்பித்தன் இயல்பு நிலையைச் சொல்வதில் தவறில்லை என்றிருக்கிறார் – அவை சட்டென்று நம்மை மெல்லிய புன்னகை சிந்த வைப்பவை. ஒரு யூத் ·புல்லான நடை. சுஜாதாத்தனம். அது தான் நம்மை படிக்கத்தூண்டுகிறது. அதே சமயம், மென்பொருளை நிறைய சேர்க்காமல், அனைவரும் படிக்கவேண்டும் என்று நினைத்து எழுதியிருக்கிறார். ஹீரோ மென்பொருள் வல்லுநர். அவ்வளவே. கதையில் டெக்னிக்கல் சமாசாரம் ரொம்ப குறைவு. சிங்கில்டன் கிளாஸ் – singleton class – கிளையன்ட் சைன் ஆப், யூ.எம்.எல், புரபோசல் என்று ஆங்காங்கே நம்ப மேட்டர்.

என்னை மறந்து சிரித்த இடம் :
நம்ப ஹீரோ லண்டன் வந்து ஒருவாரம் ஆகிவிட்டது:

வந்த ஒரு வாரத்தில் தெருவோர முத்தம், ரயிலுக்குக் காத்துக் கொண்டிருக்கும்போது முத்தம், ரயில்பெட்டி முத்தம், டாக்சிக்குள் முத்தம், டெலிபோன் கூண்டுக்குள் முத்தம், கே.எப்.சி. யில் கோழிக்கறி சேர்த்த பர்கருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு குறுந்தாடி முதலாளி சிலையின் மேல் சாய்ந்தபடிக்கு அவசர முத்தம் என்று சகலமான உதட்டு ஒத்தடங்களையும் பார்த்து இச்சென்று சத்தம் எங்கேயாவது கேட்டால் போய்யா புண்ணாக்கு என்று வேலையைத் தொடரப்பழகிபோயிருந்த சுதர்சனுக்கு…..

நீங்கள் சிரிக்கவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்?. பெரும்பாலும், வெளிநாட்டுக்கு செல்லும் எல்லா இளைஞர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மற்றொரு இயல்பான நகைச்சுவை,

கண்ணாத்தா சுதர்சனின் டீம் மெம்பர்.
கண்ணாத்தா அவனுக்கு முன்னால் ஒரு கத்தைக் காகிதத்தை பரப்பிக்கொண்டு உட்கார்ந்தாள்.

‘சுதர்சன் உனக்கு கல்யாணமா? எப்போ?’

‘நீ ஒரு தப்பும் இல்லாம கோட் எப்ப எழுதறியோ அதுக்கு அடுத்த நாள்’

‘இந்த ஜென்மம் முழுக்க நீ பிரம்மச்சாரியா இருக்க வேண்டியதுதான்’

எச்சரிக்கை : கதை மற்றும் முடிவும் சொல்லியிருக்கிறேன்.

லண்டன் செல்லும் -மென் பொருளை கொடுத்துவிட்டு, க்ளையன்டிடம் கையழுத்து வாங்கி வரவேண்டும் -நம்மூர் மென்பொருள் வல்லுநர், சுதர்சன், அங்கே ஒரு பெண்ணை -சந்தியா -பார்த்து, பார்த்தவுடன் லவ்வத்தொடங்குகிறார். அவளும் லண்டனின் செயர்கைத்தனம் மற்றும் அம்மா, வளர்ப்பு அப்பாவின் நிராகரிப்பால், இவனைக்கண்டவுடன் ஒட்டிக்கொள்கிறார். அவள் இந்தியா வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.அவளும் நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையிலிருப்பவள் தான்.

தற்செயலாக விமானத்தில் உடன்பயனிக்கும் நண்பர் ஒருவர், தான் ஆரம்பிக்கபோகும் புது மென்பொருள் அலுவலகத்திற்கு சுதர்சனை அழைக்க, சுதர்சனும் ஒத்துக்கொள்கிறார். சந்தியாவுக்கும் அதே அலுவலகத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. சுதர்சன் இந்தியா திரும்பியிருக்கையில், அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு சொந்தத்திலே ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளும் வீட்டில் வளைய வருகிறாள். சுதர்சனை அவளுக்கு நிறைய -லிப் கிஸ் அடிக்கும் அளவிற்கு – பிடிக்கிறது. சுதர்சனுக்கும் தான். ஆனால் சந்தியா வேறு மனசாட்சியாய் பயமுறுத்துகிறாள். தலைக்கு மேல் முட்டை பல்பாயிருந்து மிரட்டுகிறாள். சுதர்சன் சந்தியாவைப்பற்றி சொல்லாமலே தாய்லாந்து கிளம்புகிறான். சந்தியாவும் தாய்லாந்து வரவேண்டும் என்பது ஏற்பாடு.

தாய்லாந்தில் புராஜெக்ட் மென்னியைப்பிடிக்கிறது. வீட்டில் பார்த்தபெண்ணிற்கு இவன் சரியாக பதில் சொல்லாமல் நழுவுவதை அறிந்து; அவள் தீர்மானமாய் கேட்கிறாள். அவளிடம் சந்தியாவைப்பற்றி சொல்லிவிடுகிறான். அவள் அழுகிறாள். பிறகு இன்னொரு மென்பொருள் வல்லுநருக்கு மணமுடிக்கப்பட்டு அமெரிக்கா செல்கிறாள்.

சுதர்ஷன் டீம் லீடராக இருக்கிறான். சுதர்சனின் டீமில் கண்ணாத்தா என்றொரு பெண் இருக்கிறாள். இருவரும் நண்பர்களாகப் பழகுகின்றனர். கண்ணாத்தா அறிமுகம் செய்யப்படும் பொழுதே நமக்கு -எனக்கு- சுதர்சன் இவளைத்தான் மணமுடிக்கப் போகிறான் என்று தெரிந்துவிடுகிறது. தாய்லாந்து வருவதற்கு முன் சந்தியா வேலை நிமித்தமாக அமெரிக்கா போக வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அங்கே world trade center தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலியாகிறாள். இந்த ஒரு இடம் மட்டுமே யாரும் எதிர்பாறாதது. மிக மெல்லிய ஆனால் அதிர்வைத்தரும் ஷாக். நன்றாக இணைத்திருக்கிறார்.

சில நாட்கள் பித்து பிடித்தார்போல் திரியும் சுதர்ஷன், பிறகு வீட்டிற்கு சொல்லாமல் கண்ணாத்தாவைக் கரம் பிடிக்கிறான்.

அமெரிக்காவுக்கு செல்கிறான். மறுபடியும் புரோகிராமராக. முடிவு தான் எனக்கு பிடிக்கவில்லை.

புரோகிராமராக சென்றவன் சிறிது நாட்களில் வேலை இழக்கிறான். மேலும் பல நாட்கள் வேலைக்கு மனு போடுகிறான். வேலை கிடைத்தபாடில்லை. பிறகு ஒரு நாள் தனக்கு வீட்டில் பார்த்த பெண்ணை பார்க்கிறான். அவள் ரெஸ்டாரெண்ட் ஒன்று வைத்திருக்கிறாள். அவளுடைய ரெஸ்டாரெண்டில் சாம்பார் ஊற்றிக்கொண்டு காலத்தை கழிக்கிறான்.
கன்ட்ரோல் – ஆல்ட் – டெலீட் போட்டு வாழ்க்கையை முதலிலிருந்து தொடங்கலாம் என்ற கனவோடு.

ctrl-alt-del : மூன்று விரல்.

கரு: [இதுவாகத்தான் இருக்கவேண்டும்]
வாழ்க்கை நிற்காது. அவ்வப்போது சண்டித்தனம் செய்யும்.
கன்ட்ரோல்-ஆல்ட்டர்-டெலீட்.
திரும்ப இயக்கம்.
ஏதேதோ இழந்து போயிருக்கலாம். ஆனால் என்ன? முதலில் இருந்து தொடங்கவேண்டியது தான்.

ஜாலியாக படிக்கலாம். இளமையாக இருக்கிறது.

புத்தக விபரம்:
பெயர் : மூன்று விரல்
ஆசிரியர் : இரா. முருகன்
வெளியீடு : சபரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 145

குப்பையைக் கிளறுவது கோழியல்ல

திருப்பூர் நண்பர் ஒருவர் சொன்ன தகவல் ஒன்று அதிர்ச்சியாக இருந்தது. “கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மூடப்பட்ட பல ஆலைகள் திறக்கப்பட்டு, இப்போது ஜரூராக நடந்துகொண்டு இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான சிறுமிகளைக் கொண்டுவந்து பணியில் அமர்த்தியுள்ளார்கள். மூன்று வருட ஒப்பந்தம். மிகவும் மோசமான உணவோடு, அடிப்படை வசதிகூட இல்லாத இடங்களில் அந்தக் குழந்தைகள் தங்கவைக்கப்படுகிறார்கள். தவிர, அந்த மூன்று வருடமும் அந்தச் சிறுமிகள், ஆலைக்கு வெளியே எங்கும் செல்ல முடியாது. இந்த மூன்று வருடச் சிறை வாழ்க்கை முடிந்து, அவர்கள் வீட்டுக்குப் போகும்போது, கையில் 30,000 ரூபாயும், திருமணம் செய்துகொள்ளத் தாலியும் கொடுக்கிறார்கள். இந்த நவீன குழந்தைக் கொத்தடிமைத் தொழிலுக்கு ‘சுமங்கலி’ என்று பெயரும் வைத்துள்ளார்கள் ” என்று வேதனையோடு குறிப்பிட்டார் அந்த நண்பர்.

“தல வாரிப் பொட்டுவெச்சு பள்ளிக்கூடம் போக நின்னேன்
மல போல தட வந்தது. ஏ…அம்மாவே தட மேல தட சொன்னது…”
பள்ளிக்கூடம் செல்ல முடியாத ஒரு குழந்தையின் ஏக்கம் தொக்கி நிற்கிற இந்தப் பாடல் வரிகள் மனதைப் பிசைகின்றன.

சாலைகளின் ஓரத்தில் நடந்து செல்லும்போதோ, ஓட்டலில் சாப்பிடும் போதோ, உறவினரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகும்போதோ, சிக்னலுக்காக வாகனத்தில் காத்திருக்கும்போதோ நீங்கள் கவனித்திருக்கலாம்..கலையாத கனவுகளோடும், தீராத ஏக்கங்களோடும், இளம் வயதுக்கே உரிய சந்தோஷத்தைத் தொலைத்துவிட்ட விழிகளோடும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புச் சுமையோடும் ஜீவனற்று நடமாடிக்கொண்டு இருக்கும் பலப் பல குழந்தைகளை.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், வேலைக்கு அமர்த்தப்படுகிற 14 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைத் தொழிலாளர்கள்தான். பஞ்சு ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் என்று அந்த எந்த ஒரு அபாயகரமான தொழில்கள் எவை எவை என்பதை இன்னும் நம்முடைய சட்டங்கள் வரையறுத்துச் சொல்லவில்லை. அதனால் விதவிதமாக அரசாங்கத்தை ஏமாற்றிக் குழந்தைகளைத் தொழிலில் அமர்த்தும் கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது.

விடுதிகள், உணவகங்களில் மட்டுமல்ல வீட்டு வேலைக்குக்கூடச் சிறுவர்களை அமர்த்துவது குற்றம்தான்.

இந்தியாவில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.சி.மேத்தா ஒரு தீர்ப்பில் ‘குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது தெரிந்தால், அமர்த்தியவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 20,000 ரூபாய் அபராதம் வாங்கி, அரசாங்கமும் இன்னொரு 20,000 ரூபாய் போட்டு, அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்படி வேலை கொடுக்க முடியாவிட்டால், இன்னும் 5,000 ரூபாய் போட்டு, 18-வயது வரை அந்தக் குழந்தைக்கு உதவ வேண்டும்’ என்று ஒரு டிரஸ்ட் துவங்கச் சொன்னார். அது என்ன ஆயிற்று என இன்று வரை யாருக்கும் தெரியாது.

20.8.06 விகடன் இதழிலிருந்து.

சுஜாதா குறிப்பிட்ட கவிதை ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது,

குப்பையைக்
கிளறுவது கோழியல்ல
கோணிப்பையுடன் சிறுவன்.

தீர்வு?

நான் சென்னையில் இருக்கும் பொழுது நான் மற்றும் எனது நண்பர்கள் அசோக், நவநீதன், சிவா, கெம்பு மற்றும் எனது அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து ஸ்பீட் என்ற ஒரு அமைப்பு தொடங்கினோம்.
SPEED – Society for Poverty Eradication and Educational Development. நாங்கள் ரெஜிஸ்டர் செய்யவில்லை. ஆனால் மாதா மாதம் உறுப்பினர்கள் அனைவரும் கொஞ்சம் பணம் போடுவோம். மே மாத இறுதியில் அந்த பணத்தை மொத்தமாக திரட்டி படிப்பதற்கு பணமில்லாத குழந்தைகளுக்கு உதவியிருக்கிறோம்.

இரண்டு வருடம் மட்டுமே ஒழுங்காக செயல்படுத்தினோம். அடுத்து அவரவருக்கு அவர் அவர் கஷ்டங்கள், வேலைகள் மற்றும் டி.வி.டி கள்.

நான் இதை செய்து கொண்டிருப்பதை அறிந்து (நான் சொல்லாமலே) எனது CTO என்னை அவர் அறைக்கு அழைத்து, உடனடியாக ரூ.1000 கொடுத்தார். எனது சக அலுவலர் நான் இந்த திட்டத்தை விளக்கிக்கொண்டிருக்கையில், சட்டென்று நல்ல திட்டம் முத்து, இந்தா என்னுடைய இந்த மாத கட்டணம் என்று ரூ. 100 எடுத்துக்கொடுத்தார்.

மக்கள் என்றைக்குமே உதவுவதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள். தங்களால் முடிந்தவரை உடவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கினைத்து – தண்ணீருக்கு அணை போல – செயல்படுத்தத் தான் முடியவில்லை. [இதுவும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை]

சரி. குழந்தை படிப்பதற்கு பணம் கட்டியாகிவிட்டது. அவர்களின் தலையில் இருக்கும் குடும்ப பாரத்தை எப்படி இறக்கிவைப்பது? அடுத்தகட்ட பிரச்சனையும் இருக்கிறது.

அரசாங்கத்திற்கு மட்டும் தான் அக்கறை வேண்டுமா? குழந்தைகளின் மீதான நமது அக்கறை அவ்வளவுதானா?

ரோடெங்கும் நயாகராக்கள்

எண்ணம் எனது : ஆகாசம் பதிவை படித்தேன். அதன் தொடர்ச்சியாக!!

(ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் கவிதைதானே? பார்த்திபன் கூட ஒரு படத்திலே சொல்லுவார். )

ரோடெங்கும் நயாகராக்கள்:

பெய்யென பெய்யுமா
மழை?
திறந்திடு என்றால்
திறக்குமா அணை?

மழை பொய்க்கும்
ஆச்சரியமில்லை.
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு பெய்யும்
மழை
நல்லார் : மரம்?

சென்னை முழுதும்
நல்லார்கள் – சில
நாட்களுக்கு மட்டும்!
நல்லார் பலர் உளரேல்
வேண்டாமெனினும்
வற்றாமல் தேங்கும்
மழை

மழையின் வீடுகளை
ஆக்கிரமித்தோம்.
நம் வீடுகளை
மழை ஆக்கிரமித்தது.
இலாபமில்லை
இருவருக்கும்!

ஏரி தெருக்கள்
எருமை கார்கள்
முதலை மனிதர்கள்

ரோடெங்கும் நயாகராக்கள்!

மழை. தெருவிலே கிடக்கிறது.
அதற்கு அப்பார்ட்மெண்ட்
பழக்கமில்லை.
லிப்ட் ஏறத்தெரியாது.

**

த்ராயிருப்பில்
வருடந்தோரும்
வெள்ளம்.
தே. கள்ளுப்பட்டியில்
வருடந்தோரும்
வரட்சி.

நீர் சேகரிப்பா?
கலர் டீவியா?
ஏரியில் ‘செல்வி’
தெரியுமா?
எட்டிப்பார். தெரியும்.

நதி நீர் இணைப்பு?
(உண்ணாவிரதமா?
இந்தமுறையும்
கூட்டம் வருமா?)
கனவு இன்·பினிடி.
1 கோடி / 0.

மின்சாரம் தருகிறோம்.
அனு சக்தி தயாரிக்கிறோம்.
விளைவுகள் எங்களுக்கு.
பயன் எல்லோருக்கும்.
மந்திரிகளும் தருகிறோம்.
கண்ணீரும் தருகிறோம்
பண்டமாற்று முறையில்
தண்ணீர் தாருங்கள்.

**

ஞ்சி நிற்பது
கூல் சட்டிகளும்
விவசாயிகளின்
கண்ணீரும் தான்.
கண்ணீர் சேமிப்புத்திட்டம்
ஒன்றை அறிவியுங்கள்.
சேமிக்காதவர்களுக்கு
அபராதம் நிச்சயம்.
சேமித்தவர்களுக்கு?
கண்ணீரில்
பயிர் விளையுமா?
நெல் உப்புகரிக்குமா?

கையேந்துகிறார்கள்.
கண்ணீர் சிந்துகிறார்கள்.
போராட்டம் நடத்துகிறார்கள்.
உண்ணாவிரதம் ஷ்பெசல்.
நேரடி ஒளிபரப்பு.
விவசாயிகளின் துயரம்?
யாருக்குவேணும்.
ப்ரைம்டைமில் இடமில்லை.
(பிறகு கோழி வெடக்கோழி
எப்போ போடுவதாம்?)

**

ணை திறக்குமா?
தன்னலம் அனைவருக்கும்
பொது.

நாம்
குழாயடி சண்டைகளை
நிறுத்தியிருக்கிறோமா?

**

யாரும் யாருடனும் இல்லை

நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக்கொள்கிறோம். ஒன்றாக அமர்ந்து உணவு உண்கிறோம். ஒன்றாக சிரிக்கிறோம். ஒன்றாக சிரிக்கிறோமா என்பது தெரியாது, ஆனால் குறைந்தபட்சம் வெளியுலகத்திற்காகவோ, நண்பர்களுக்காகவோ, குடும்பத்தினருக்காகவோ கடமைக்கேனும் சிரித்து வைக்கிறோம். உண்மையிலே மனம் விட்டு சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒன்றாக அழுகிறோமா?. சிரிப்பை நாம் பெரும்பாலான நேரங்களில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் துக்கத்தை நமக்குள் பூட்டி – ஒரு பூதத்தைப் போல – அடைத்துவைத்திருக்கிறோம். அசோகமித்திரன் சொன்னதைப் போல நாம் துக்கத்தை யாரிடமும் – யாரிடமும் – பங்கிட்டுக் கொள்ளை இயலாது. ஆனாலும் சில நேரங்களில் நாம் துக்கத்தை வெளிப்படுத்தவே செய்கிறோம், நம்மையுமறியாமல். அல்லது சுயஇரக்கத்தால், சில நேரங்களில் அறிந்தே. ஒன்றாக சினிமாவுக்கு செல்கிறோம். ஒன்றாக பீச்சில் உட்கார்ந்து கடல் அலையின் சத்தம் ஓயும் வரையில் அரட்டை அடிக்கிறோம். பிறகு மணலைத் துடைத்துக்கொண்டு எழுந்து வருகிறோம். மணல் கரையிலே விழுந்துகிடக்கிறது, அடுத்த நபரை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. உண்மையில் நமக்கும், உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் உடனான உறவு, அந்த மணலுக்கும் நமக்கும் இருக்கும் உறவு போன்றது தான் என்கிறார் உமாமகேஸ்வரி.


யாரும் யாருடனும் இல்லை என்ற நாவலை நான் தற்செயலாகத்தான் நூலகத்திலிருந்து எடுத்தேன். முதல் சில அத்தியாயங்கள் தொடர்ச்சியின்றி – முன் அத்தியாயங்களுடன் – சற்றும் சம்பந்தமில்லாமல் நகர்ந்தன. என் நண்பர் ஒருவர் நாவலை என்னிடமிருந்து வாங்கி ஏழு அத்தியாயங்கள் மட்டும் படித்துவிட்டு கொடுத்துவிட்டார். ஏனென்று கேட்டதிற்கு, பொறுமையில்லை என்றார். உண்மைதான், முதல் பதினைந்து அத்தியாயங்களை மட்டும் தாண்டி விட்டால் அப்புறம் தென்றலும், புயலும், மழையும், சுடு சூரியனும், குளிர் நிலவும், பனியும் மாறி மாறி தாக்குகின்றன. ஒரு புவிஈர்ப்பு விசை போல் ஓயாமல் நம்மை ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது நாவல், முடியும்வரை.

எச்சரிக்கை : கதை சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவங்களும் தான்.

போடியில் ஏலக்காய் தொழில் செய்யும் ஒரு பெரிய குடும்பத்தைப் பற்றியது கதை. அந்தப் பெரிய குடும்பத்திற்கு, பலசரக்கு, பாத்திரக்கடை, எஸ்டேட் போன்ற இன்ன பிற தொழில்களும் உண்டு. நான்கு மகன்கள், மற்றும் மூன்று பெண்கள் அந்த வீட்டின் வாரிசுகள். பெண்கள் அனைவரும் திருமணம் ஆகி சென்று விட, மற்ற மூன்று மகன்கள் தத்தம் மனைவியருடனும், கடைக்குட்டி திருமணம் ஆகாமலும், தாய் தந்தையருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கடைசி மகன் பெயர் குணா. அவன் பெயரில் குழந்தைகள் எல்லாம் மிகவும் பிரியமாகஇருக்கின்றனர். அவனை வளர்த்த அண்ணியரும் தான். வீட்டின் தந்தை தான் இந்த பெரிய தொழில் சாம்ராஜியத்தை உருவாக்கினார். அவருக்கு பேத்திகள் இருந்தும் பல பெண்களிடம் தொடர்புடையவராக இருக்கிறார். அவருடைய மனைவியும், மகன்களும், மருமகள்களும் இதை பற்றி தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர். மனைவி தனிமையில் புழுங்கிச் சாகிறார். ஒரு நாள் செத்தும் போகிறார்.

அந்த விட்டில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. பிரச்சனைகளை ஒரு குழந்தையின் – குழந்தைகளின் -பார்வையில் ஆசிரியர் கூறியிருப்பதுதான் சிறப்பு. த காட் ஆப் சுமால் திங்ஸ் படித்தவர்கள் இந்த கதையியல்பை முன்பே அறிந்திருக்கலாம். சொல்லப்போனால், குழந்தைகள் தான் கதையின் உயிர்நாடி. நம்மை கதையுடன் கட்டிப் போடுபவை. நாம் வேறு எங்கு சென்றாலும் நம்மை பிடித்து இழுத்து வருபவை. குழந்தைகளின் வேடிக்கைகளும் விளையாட்டுகளும் கேள்விகளும் என்றைக்கும் விநோதமானவை. ரசிக்கத்தகுந்தவை இல்லையா?. குழந்தைகளின் எண்ணிலடங்கா கேள்விகளும் புதிய சிந்தனைகளும் நாவல் தோறும் உலாவுகின்றன. ஆசிரியரைப் போலவே நமக்கும் பல இடங்களில் பதில் தெரியவில்லை.

குணா சித்தப்பா மீது குழந்தைகள் அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றனர். குணா சித்தப்பா குழந்தைகளுடன் ஒரு நாளும் விளையாடாமல் இருந்ததில்லை. அவர் வீட்டை விட்டு பழி சுமத்தப்பட்டு வெளியேறிய பின்னர், குழந்தைகள் சில நாட்கள் அவரை கானாமல் தேடிவிட்டு, பின் சுத்தமாக மறந்து போகின்றனர். யாரும் யாருடனும் இல்லை.

தாய் சாகும் வரை, தந்தை எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். தாய் இறந்தபிறகு, அவர் வீட்டிற்கே வருவதில்லை. தீபாவளி பொங்கல் தவிற. அதுவும் சம்பிரதாயமே. அவ்வளவு பேர் வீட்டில் இருந்தும், தனிமையில் சாகிறார், ஒரு தீபாவளியன்று. அவர் இறுதி காலங்களில் உருகி உருகி காதலித்த, மலையாள பெண் ஒருவர் அவர் இறந்தபிறகு அவர் முகத்தை கூட பார்க்கைஇயலாமல் அழுதுகொண்டே திரும்பிப்போகிறார். யாரும் யாருடனும் இல்லை.

சுப்பக்கா கால் இல்லாத பெண். பெரிய வீட்டில், அவர்களுடன் ஒட்டாமல் வாழ்ந்துவருகிறார். அந்த பெரிய வீட்டின் அம்மா சுப்பக்காவை அவளுடைய அம்மா இறந்தபிறகு தன் வீட்டிற்கு கூட்டிகொண்டு வந்துவிடுகிறார். சுப்பக்கா தன் ஊனத்தை மறைக்க, மறக்க வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாள். குழந்தைகளுக்கு தினமும் கதை சொல்கிறாள். குழந்தைகள் அவளை மிகவும் நேசிக்கின்றனர். அவள் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பிறகு, சில நாட்கள் குழந்தைகள அழுது கொண்டிருந்து விட்டு பின் சுத்தமாக மறந்துபோகின்றனர். அபூர்வ அபூர்வமான கதைகள் சொல்லும் மூட்டையாக பிள்ளைகளால் கருதப்பட்ட சுப்பக்கா, பனித்துளி போல் சட்டென அனைவரது கவனத்திலிருந்தும் மறைந்து போகிறார். அவரவற்கு அவரவர் வேலைகள். விளையாட்டுக்கள். பிரச்சனைகள். சண்டைகள். காதல்கள். யாரும் யாருடனும் இல்லை.

குணாவும் வினோவும் சிறுபிள்ளை முதல் ஒன்றாக விளையாடியவர்கள். இருவருக்கும் பரஸ்பரம் சொல்லத்தெரியாத காதல் ஒரு காற்றைப் போல மறைந்திருக்கிறது, இருவருக்குமிடையே. ஆனால் வினோதினி குணாவின் அண்ணணைக் கைப்பிடிக்கிறாள். அவன் ஒரு குடிகாரன். குணாவிற்கு இன்னமும் வினோவின் மேல் காதல் இருக்கிறது. இருவரும் இணைகின்றனர்.வினோதினி கருவைக் கலைத்துக்கொள்கிறாள். பிறகு இந்த விசயம் அனைவருக்கும் தெரியவரும் பொழுது வினோதினி குணாவின் மேல் பழி சுமத்துகிறாள், வேறுவழியில்லாமல். குணாவிடம் தனிமையில் அழுகிறாள். குணா வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அவன் போன சில தினங்கள் வினோ அவன் நினைப்பாகவே இருக்கிறாள். தற்கொலைக்கு முயல்கிறாள். காப்பாற்றப்படுகிறாள். வினோவின் கணவன் இறக்கிறான். பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த வினோ நாளடைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறாள். சொத்து பிரிக்கப்படும் பொழுது தனக்கும் பங்கு வேண்டும் என்று அடம் பண்ணுகிறாள். குணாவை முற்றும் மறந்து போகிறாள். அனைவரும் தான். யாரும் யாருடனும் இல்லை.

வாணி மூத்த பேத்தி. குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தவள், வயதுக்கு வந்ததும் படிப்பு தடைசெய்யப்படுகிறது. விளையாட்டு தடைசெய்யப்படுகிறது. ஏன் வீட்டை விட்டே வெளியே செல்லவே தடைசெய்யப் படுகிறது. பெட்டிக்குள் ஒளிவிடும் ஒரு நகையைப் போல வாழ்க்கை முழுவதும் பூட்டிவைக்கப்படுகிறாள். வினோவும் வாணியும் நெருக்கமாகிறார்கள். பிறகு ஒரு நாள் திடீரென்று அவளுக்கு திருமணம் நடக்கிறது. வாணி பெருங்குரலெடுத்து ஓவென்று அலறுகிறாள். அவளைத் தேற்ற யாருமில்லை. குழந்தைகள் காரணம் புரியாமல் விழிக்கின்றன. வினோவும் ஆறுதல் சொல்லத்தெரியாமல் திகைக்கிறாள். தான் நின்ற அதே இடத்தில், அதே சூழலில் வாணி நிற்பதாக நினைக்கிறாள். அவளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பிறகு வாணி திருமணம் முடித்து வீட்டை விட்டு சென்று விடுகிறாள். ஒன்றாக விளையாடிய குழந்தைகள், வாணியின் இழப்பை உணர்கின்றன. ஆனால் பெரிதும் அலடிக்கொள்ளவில்லை. வாணியின் தலைமையிடத்தை – விளையாட்டில்- அவளது அடுத்த சகோதரி பிடித்துக்கொள்கிறாள். அவர்களுக்கு விளையாட்டு வழக்கம்போல் நடக்கிறது; ஆலமரத்தடியிலும், குணா சித்தப்பாவின் ஆளில்லாத அறையிலும். யாரும் யாருடனும் இல்லை.

தந்தை இறந்த பிறகு சொத்து பிரிக்கப் படுக்கிறது. அவர் உயிரோடு இருக்கும் வரை முழுமையாக இருந்த சொத்து, அவர் சென்றதும் கொத்துக்கறியாக்கப்படுகிறது. அனைவரும் சொத்திற்கு சண்டையிடுகின்றனர். மகள்களும் தான். குழந்தைகள் திகிலோடு வேடிக்கைபார்க்கின்றனர். எப்பொழுது சண்டை ஓயுமென்று வீடு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. வீட்டிற்கு குறுக்கே சுவர் எழுப்பப் படுகிறது. ஒன்றாக பள்ளி சென்ற குழந்தைகள், பிரிந்து தனித் தனியாகச் செல்கின்றனர். குழந்தைகள் அழுகின்றனர். ஒன்றாகத்தான் செல்வோம் என்று அடம் பண்ணுகின்றனர். அடி வாங்குகின்றனர்.பின்னர் யாருக்கும் தெரியாமல் பள்ளியில் மட்டும் சந்தித்து பேசிக்கொள்கின்றனர். சின்ன அண்ணன் வீட்டிற்கு வெளியே இருக்கும் முல்லைக் கொடியை வெட்டி எறிகின்றான். கேட்டால், “இந்த முல்லைக்கொடி என் இடத்தில் வேர் வீட்டு, மாடியில் அண்ணனின் இடத்தில் பூ பூக்கின்றது.” என்கிறான் கடுங்கோபத்தோடு. யாரும் யாருடனும் இல்லை.

கதையை விட உமாமகேஸ்வரியின் வரிகளும் உவமைகளும் நன்றாக இருக்கின்றன. ஆனால் சில இடங்களில் உவமைகள் தேவையற்ற அலங்காரமான நகைகளாக உருப்பெற்று கூர்மையாக குத்துகின்றன. பலுவாக இருக்குகின்றன. குழந்தைகள் ச்சோ சுவீட். அதிலும் அனுவும், வாணியும் ரொம்ப அழகு. முதல் பத்து அத்தியாயங்களை நன்றாகச் செய்திருந்தால், இன்னும் அழகாக இருந்திருக்கும். நிதானமாக, இலக்கு இல்லாமல் பயனிக்கும் கதையை பொறுமையுடன் படிக்க இங்கு வெகு சிலருக்கே வாய்க்கிறது.

திருத்தம்: 17-08-2006
இந்த பதிவில் நான் கொடுத்திருக்கும் லின்க் (link) வேலை செய்யாததற்கு வருந்துகிறேன்.புத்தகத்தின் விபரங்கள் இங்கே:

Book Title : யாரும் யாருடனும் இல்லை ( YARUM YARUDANUM ILLAI )
Author : உமா மகேஸ்வரி (UMA MAGESHWARI)
Publisher : TAMILINI Price : Rs. 130/-

அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை உப்யோகித்து அந்த வலை பக்கத்திற்கு சென்ற பிறகு, YARUM YARUDANUM ILLAI என்ற வார்த்தையை தேடுங்கள்.

சிற்பிகளும் சிலைகளும்

நேற்று இரவு சன் டீவியில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பைரேட்ஸ் ஆப் த கரீபியன் பார்க்கப் போய் இந்த நிகழ்ச்சியை முதலில் இருந்து பார்க்க குடுத்துவைக்கவில்லை எனக்கு. பல நடிகர்களின் பொன்னான பேச்சுகளைக் கேட்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் தான். எத்தனை நடிகர்கள், அப்பப்பா. அனைவரையும் ஒரு சேரப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது. மேலும், வலைபதிவுகளில் பலர் சிவாஜி சிலையைப் பற்றி விவாதித்தும் வந்திருக்கின்றனர். வைக்கவேண்டும். வைக்கக்கூடாது. வைத்தால் பராவாயில்லை. வைத்து விட்டுத்தான் போகட்டுமே, நமது ஹாலிலா வைக்கிறார்கள். என்பதைப் போன்று பல விவாதங்கள். நம்மிடம் விவாதங்களுக்கு பஞ்சமா என்ன? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மனம் இருக்கிறதா இல்லையா என்று அரசனே விவாதத்தை தொடங்கிய நாடல்லவா இது. அதற்கு ஒரு நீதி வழங்க அல்லது ஒரு முடிவு ஏற்படுத்த உலககைக் காக்கும் கடவுளே இறங்கி வந்த விவாதம் அல்லவா இது. சும்மா சொல்லக்கூடாது. சிவாஜி கணேஷன் சார் நன்றாக நடித்திருப்பார். அல்லது சிம்மக்குரலில் கர்ஜித்திருப்பார். படமாகப் பார்க்காமலே சும்மா கதை வசனம் மட்டும் கேட்டாலே போதும் படம் கண்ணில் விரியும். அப்படி யார் நடித்தார்கள். நடிக்கிறார்கள். அல்லது நடிப்பார்கள். ஏன்னா கலையை ரசிப்பதற்கும் ஒரு மனது வேனும் பாருங்க. அது தமிழனுக்கு அதிகம் இருக்குதுங்கிறேன்.

சும்மாவா. எத்தனை நடிகர்களை முதல்வர் ஆக்கியிருக்கிறோம். ஆனா உண்மையிலே நமக்கு ரசிப்புத்தன்மை அதிகமுங்க. ரசிப்புத்தன்மைனுதானுங்க சொன்னேன். சகிப்புத்தன்மைன்னும் சொல்லலீங்க. எனக்கு சிவாஜி சாரை நிறைய புடிக்குமுங்க. அவரோட கடைசி காலத்து, ‘ஜாதீய முற்போக்கு’ படங்களை தவிர்த்துட்டா, பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள் தானுங்க. உத்தமபுத்திரன், மனோகரா, பராசக்தி, அந்த நாள், பாசமலர், பாவமன்னிப்பு, தெய்வமகன், புதியபறவை, முதல்மரியாதை, வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படீன்னு அடிக்கிகிட்டே போகலாம். உத்தமபுத்திரனின் இளவரசர் (இப்போ புலிகேசி, புலிகேசி!) போல இதுவரைக்கும் யாரும் ஸ்டைல் பண்ணதில்லை என்பது உண்மை. அதுவும், புதிய பறவையில ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலில் அப்படியே ஸ்டைலாக புகை விடுவாரே பார்க்கலாம். அமர்களமுங்க. நல்லவேளை ‘தமிழ் குடிதாங்கி’ அப்ப இல்லீங்க.ஆனா அப்பவெல்லாம் சுற்றுச் சூழல் இந்த அளவுக்கு மாசு படவில்லை பாருங்க. அதுவும், அப்ப இருந்த இளைஞர்கள் ரொம்ப நல்லவங்க பாருங்க. இப்பத்தான் நாம கெட்டு குட்டியசுவரா போயிட்டம். சினிமா பாத்து பாத்து கெட்டுப் போயிட்டம். அப்புறம் பாசமலரில் பல கெட்டப்புங்க. ஏழை வெகுளியாக, பின்னர் ஸ்டைலான பணக்காரனாக. என்ன வித்தியாசம் காட்டினார். அட அடா. நம்ப ரஜினி அங்க புடிச்சாருங்க. அப்புறம் அண்ணாமலை, படையப்பா சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க. நல்லவனுக்கு நல்லவனையும் சேத்துக்கோங்க. அட அது அப்பங்க. இப்ப தலைவரு, எல்லாருக்கும் நல்லவருங்க. ரொம்ம்ப நல்லவருங்க. வேற வழி?. எப்படி இருந்த அவரு இப்படி ஆகிட்டாரு.ஹ¤ம்.அப்புறம், தெய்வமகனுங்க. ‘டாட்’ ‘டாடி’ ன்னு ஒரு நிமிஷம் கூட நிக்காம, ஸ்டைலா, நகம் கடிச்சுக்கிட்டு ஒரு மேல்தட்டு பையனா நடிச்சிருப்பாரு பாருங்க. தூள் டக்கருங்க. அந்த படத்திலே, வயதான தந்தையாகவும், இளவயது முகத்தில் கறை படிந்த, இன்பீரியார்டி காம்ப்ளக்ஸ் இருக்கிற ஆளா நடிச்சிருபாருங்க. யாருங்க இப்ப அப்படிப் பண்ணுவா? மனசைத் தொட்டு சொல்லுங்க. வீரபாண்டிய கட்டபொம்மனுங்க. நம்ப யாராச்சும் வீர பாண்டிய கட்டபொம்மன பார்த்திருக்கோங்களா? ஆனா, பாடபுத்தகத்தில கூட சிவாஜிசாரு தானுங்க வீர பாண்டிய கட்டபொம்மனா, சும்மா அப்படியே, ஜோரா, கெத்தா, கம்பீரமா இருக்காரு பாருங்க. கட்டபொம்மன் இப்படித்தான் இருந்திருப்பாரோ? நமக்கு தெரியாததும் வசதிதானுங்க. என்ன சொல்றீங்க? இல்லீனா, யாராச்சும், கட்டபொம்மனுக்கு மீசை 7 செ.மீ தான், ஆனால் படத்தில் சிவாஜி 12 செ.மீ மீசை வெச்சிருக்காருன்னு கேஸ் போட்டாலும் போட்றுவாங்க. கேஸ¤க்கா பஞ்சம்? குஷ்பு மேல 27 கேஸ் போட்டம்ல. போட்டம்ல. என்ன நான் சொல்றது?

அட. அவரு தொழில அவரு நல்ல செஞ்சாரா இல்லியா? அதச் சொல்லுங்க. நாளைக்கு, நல்ல பல் குத்துன பல் டாக்டருக்கும், நல்ல இருதய ஆப்பரேசன் செஞ்ச ‘பைபாஸ்’ டாக்டருக்கும், நல்ல ஸ்பெஷல் டீயூசன் வெச்சு, சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கும், வாத்தியாரம்மாவுக்கும், நல்லா விழாம கட்டடம் கட்டின இஞ்சினீயருக்கும், நல்ல குப்பை அள்ளுன துப்புறவாளர்களுக்கும், எங்கையும் மோதாம பஸ், ‘இப்பிடிக்கா’ கவுத்தாத லாரி ஓட்டுனருக்கும், ஒழுங்கா சில்லரை மீதம் கொடுத்த கண்டக்டருக்கும், நல்ல விவசாயம் செஞ்ச அல்லது கடனை ஒழுங்கா கட்டின விவசாயிக்கும், கட்-காபி-பேஸ்ட் செய்யாத புரோகிரமருக்கும், excel sheet அ வெச்சுக்கிட்டு ஓபி அடிக்காத புராஜக்ட் மேனேஜருக்கும், சிலை வெச்சா முதல்வருக்கு புண்ணியமாப் போகுமுங்க.

ஆனா நாமெல்லாம் டீவியில் பேட்டி கொடுத்தா யாராவது பாப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? அதுவுமில்லாம, சிவாசி சார் முதல்வருக்கு நண்பருங்க.

சரி. நமக்கெதுக்குங்க, இதில முக்கியமா, நடிக-நடிகயைரை பேட்டி எடுக்கும் போது, மொதல்ல சினேகாவையும், அதுக்கப்புறம் உடனே நம்ப சிரிகாந்தும் (அதாங்க. கொழுந்தானாருங்க. அட அது பெரிய கொடுமைங்க) வந்தாருங்களே கவனிச்சீங்களா? என்ன நினைக்கிறீங்க?ம்…ம்….ம்… அட! நமக்கு எது முக்கியமோ அதத்தானே பாக்கனும். என்ன நான் சொல்றது?