புத்தகப்புழு

இப்பொழுதெல்லாம் சில நிமிடங்கள் இடைவெளி கிடைத்தால் கூட படித்துக்கொண்டிருக்கும் நாவலில் ஒரு சில பக்கங்களையாவது படித்துவிடத் துடிக்கிறேன். சிறிது சிறிதாக ஒரு புத்தகப்புழுவாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ‘புத்தகப்புழு’ என்ற வார்த்தை புத்தகப்பிரியர்களுக்கு தவறான சொல் என்பது என் எண்ணம். புத்தகம் என்ற பறந்து விரிந்த அனு அண்டமெல்லாம் சிதறிக்கெடக்கும் ஒரு உலகில் அலைந்து திரிந்து மூழ்கித் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புழு என்ற சொல் பொருத்தமானதாகத்தெரியவில்லை. மேலும் வாசித்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல, சன் டீவியில் கோலங்கள் பார்ப்பதைப் போல. எத்தனை நபர்கள் புத்தகத்தைக்கண்டால் ஜிஞ்சர் திண்ண மங்கி மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் குமுதம் ஆனந்த விகடன் கூட படிக்க மாட்டான். குமுதத்தை வாங்கையவுடன் வேகவேகமாக படங்களை மட்டுமே பார்ப்பான். அப்புறம் இது தேறாது என்று மார்க்போடுவான். மற்றபடி ஒரு எழுத்து ஒரு வரி கூட படிக்க மாட்டான். இவனுக்கு படிப்பறிவு இருக்கிறதா இல்லையா என்று கூட சமயத்தில் நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நம் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு கிரிக்கெட் மறந்துபோனது மாதிரி அவனுக்கு வாசிக்க மறந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறதில்லியா?

புத்தகப்புழுவாக இருப்பதில் சில தீமைகளும் பல நன்மைகளும் இருக்கின்றன. தீமைகள் என்றால் முக்கியமாக நண்பர்களை இழத்தல். ஆனால் முற்றிலுமாக அல்ல. புத்தகங்களை விடவா நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்? என்னதான் சொல்லுங்கள் புத்தகத்திடம் ஒரு ஐம்பது ரூபாய் கடன் வாங்க முடியுமா என்ன? பிறகு சில பல முக்கியமான காரியங்களை மறத்தல், உதாரணமாக : ஆபீஸ் செல்வது.

நன்மைகள் என்றால் ஏராளம். ஏராளம். உலகத்தில் உள்ள நன்மைதீமைகளையும், மனிதர்களையும், அறிவையும், அனுபவத்தையும் ஒரு மனிதன் பெற வேண்டுமென்றால் ஒரு ஜென்மம் போதாது. இவை அனைத்தையும் பெற வேண்டுமெனில் புத்தகம் மட்டுமே உதவும். ஏன் டிஸ்கவரிச் சேனலும் நேசனல் ஜியோகிராபி சேனலும் இருக்கிறதே? என்று கேட்டால், நம் சுதந்திரம் கெட்டுப்போகிறதே. நம் இஷ்டத்திற்கு நாடுகளை பற்றித்தெரிந்து கொள்ள இயலாதே? அந்த சேனலில் வரும் தகவல்களை மட்டுமே நாம் பெற முடியும். தாய்பேய்க்கு பதில் தாய்லாந்து பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் என்ன செய்வது? இப்படி புத்தகத்தின் அருமை பெருமைகளை ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த பொழுது கடுப்பான என் நண்பன் ஒருவன் (மேற்குறிப்பிட்ட நபர் தான்) மிகுந்த கோபமுடன், புத்தகத்தில ஜிலேபின்னு எழுது வாசிச்சா, ருசி கிடைக்குமாடா என்றான். என்னைக்கேட்டால் சில சமையம் கிடைக்கும் என்று தான் சொல்வேன். நாவல் படித்துக்கொண்டிருக்கும் போது சிரிக்கிறோமே அல்லது சில சமயம் புல்லரிக்கிறதே (இன்று கூட ஜெயமோகனின் கொற்றவையைப் படித்துக்கொண்டிருக்கும் போது முதல் “பழம் பாடல் சொன்னது” என்னை புல்லரிக்க வைத்தது, தொடர்ந்து இரண்டாவதும்) அந்த சுவையை நாம் உணரும் போது ஜிலேபியின் சுவையையும் உணர வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே.

மேலும் இந்த டீவியின் தொல்லையிலிருந்து தப்பிக்க முடிகிறதே அதுவே பெரிய விசயம். இல்லையேல் விஜய் டீவியில் வரும் “குட்டி தங்கக்கட்டி” என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தையே தான் பத்து நிமிடத்திற்கொருமுறை பார்க்க நேரிடும். போதாக்குறைக்கு “வாடிப்பட்டிக்கு பக்கத்தில” என்ற காத்து கருப்பின் விளம்பரம். என்ன கொடும சரவணா இது?

இந்தியா சென்று திரும்பியதும் home sick லிருந்து தப்பிக்க நிறைய படங்களும் சில புத்தகங்களும் படித்தேன்.

கொஞ்சமாவது நன்றாக இருந்த படம் என்றால் அது : “Texas Chain Saw Massacre : The beginning” மட்டுமே. த்ரில் மற்றும் போன பாகத்தில் வந்தவர்களைப் பற்றிய கதைகள் நன்றாக இருந்தன. சுத்தியலால் அந்த டாக்டரின் முகத்தில் ஓஓஒங்ங்கி அடித்துக் கொல்லும் முதல் காட்சி மனதை உறையச்செய்யும் காட்சி. முகத்திற்கு பக்கத்தில் சுத்தியல் வரும் போது காமிராவை நகர்த்திவிடுவார்கள் என்று நினைத்தது தவறாகிவிட்டது. மேலும் THX ஒலியில் பார்த்ததால் கூட படம் நன்றாக இருந்திருக்கலாம். இந்தியாவில் திரையிடப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.

மற்றபடி ‘crank’, ‘covenant‘ ‘grudge2’ போன்றவை பரவாயில்லை ரகம். “Grudge 2” படம் பார்த்தவர்கள் காயோகாவை மறந்திருக்க முடியாது.
இந்த படத்தை மிக அருமையான திரில் படம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னைப்பொருத்தவரை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருந்தது. காயோகாவின் ப்ளாஷ்பேக் காட்டப்படுகிறது. சில காட்சிகள் பயமாக இருந்தது. சிறிது நாட்களுக்கு முன் ‘Grudge 1′ படத்தை டீவிடியில் பார்த்தோம். அந்தப் படம் பார்த்தவர்களுக்கு பேய் வரும்பொழுது கூடவே வரும் சத்தம் ஞாபகம் இருக்கும். இந்த சத்தத்தைக்கேட்டு என் நண்பர் வட்டாரம் : என்னடா பேய் ஏப்பம் ஏப்பமா விடுது? என்றனர். பிறகு ஒவ்வொரு முறை ஏப்பம் விடும் பேய் வரும் பொழுதெல்லாம் காமெடி ஸ்டோரிதான்.

crank” ஒரு வித்தியாசமான (by the standards of hollywood) கதை தான். அதாவது விஷம் செலுத்தப்பட்ட ஒரு நபர், சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இதயத்தை துடித்துக்கொண்டேயிருக்க செய்ய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதெல்லாம் படத்தில் உண்டு. கொஞ்சம் ஓவராக.

“covenant” போகட்டும் விட்டுவிடுங்கள்.

அப்புறம் புது ஜேம்ஸ்பாண்ட் படம். ‘the casino royale’. நிறைய விமர்சனங்கள் Daniel Craig பற்றி. ஏன் நானே சொல்லியிருக்கிறேன். Brossnan இருந்த இடத்தில் இவரா என்று. ‘Munich‘ பார்க்கும் போது கூட : கருமம் கருமம் கிழிஞ்ச பேண்ட் மாதிரி இருக்கான் இவனெல்லாம் ஜேம்ஸ்பாண்டா? என்று கமெண்ட் அடித்திருக்கிறோம்.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார், Daniel Craig. என்ன கம்பீரம், என்ன மிடுக்கு? என்ன நடை? என்ன உடை? ஆனால் உதட்டை எப்பொழுதும் கிஸ்ஸ¤க்கு ரெடி என்பது போலவே வைத்திருப்பது சற்று எரிச்சலைத் தருகிறது. Ask the girls!

படத்தில் வரும் Title Graphics க்கும், அந்த ‘You know my name’ பாடலுக்கும், முதல் chase சண்டைக்காட்சிக்கும், படிக்கட்டில் வரும் சண்டைக்காட்சிக்குமே கொடுத்த காசு சரியாகப்போகிறது. Bond girl? ம்ம்..Bonus. நாங்கள் இந்தப் படத்தி ஏசியாவிலே மிகப்பெரிய திரையில் GV MAX (24.2 M wide) பார்த்தோம். அனுபவம் புதுமை.

பெரிய திரைதான், ஆனால் கோலாலம்பூரில் இருக்கும் iMax திரை போல வராது. அது திரை மட்டுமே ஐந்து மாடிக்கு இருக்கும். இங்கு தான் ‘The Polar Express’ பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு. இந்தியாவில் iMax ஹைதராபாத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். தெரியவில்லை.

புத்தகங்கள்?? அடுத்த பதிவில். ப்ளீஸ்.

கன்ட்ரோல்-ஆல்ட்டர்-டெலீட்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் பின்னனியில் புனையப்பட்ட நாவலில் – பொன்னியின் செல்வனாகட்டும் அல்லது உடையார் ஆகட்டும் – சோழப்பேரரசின் வலிமையும், பெருமையும், சிறுமை – இருக்குங்கால் – யும் அறியப்படும். குடும்ப வியாபரம் சம்பந்தமான நாவல்களில் வியாபாரமும், குடும்பத்தால் ஏற்படும் சிக்கல்களும், குடும்பத்தால் சிக்கல்கள் தீர்வதையும் காணலாம். துறவியர் சம்பந்தமான நாவல்களில் அவர்களது தன்னைப் புறக்கனித்தலை -self denial – அறிந்துகொள்ளலாம். துப்பறியும் நாவல்களில் சகட்டுமேனிக்கு திருப்பங்கள் – யூகிக்க முடிந்ததோ, யூகிக்க முடியாததோ – இருக்கலாம். மென்பொருள் சார்ந்த நாவல்களில் என்ன இருக்கலாம்? லன்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தாய்லாந்து, மசாஜ்பார்லர்கள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட காதல்கள்??!!!

மூன்றுவிரல் நாவலைப் பற்றி நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழில் மென்பொருள் துறையை பின்புலமாக கொண்ட முதல் புனைவு நாவல் என்றும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிட்டியது. ஒரே மூச்சில் வாசித்துவிடும் நாவல் அல்ல இது. விடாமல் நம்மை படிக்கச்சொல்லும் மர்மங்கள் நிறைந்ததல்ல. முடிச்சுகள் இல்லை. ஆனால் கதாசிரியரின் பறந்து விரிந்த நகைச்சுவை திறன் இருக்கிறது. பல வாக்கியங்கள் பல அர்த்தங்கள் தொனிந்தவை : டபுள் மீனிங்?! – புதுமைப்பித்தன் இயல்பு நிலையைச் சொல்வதில் தவறில்லை என்றிருக்கிறார் – அவை சட்டென்று நம்மை மெல்லிய புன்னகை சிந்த வைப்பவை. ஒரு யூத் ·புல்லான நடை. சுஜாதாத்தனம். அது தான் நம்மை படிக்கத்தூண்டுகிறது. அதே சமயம், மென்பொருளை நிறைய சேர்க்காமல், அனைவரும் படிக்கவேண்டும் என்று நினைத்து எழுதியிருக்கிறார். ஹீரோ மென்பொருள் வல்லுநர். அவ்வளவே. கதையில் டெக்னிக்கல் சமாசாரம் ரொம்ப குறைவு. சிங்கில்டன் கிளாஸ் – singleton class – கிளையன்ட் சைன் ஆப், யூ.எம்.எல், புரபோசல் என்று ஆங்காங்கே நம்ப மேட்டர்.

என்னை மறந்து சிரித்த இடம் :
நம்ப ஹீரோ லண்டன் வந்து ஒருவாரம் ஆகிவிட்டது:

வந்த ஒரு வாரத்தில் தெருவோர முத்தம், ரயிலுக்குக் காத்துக் கொண்டிருக்கும்போது முத்தம், ரயில்பெட்டி முத்தம், டாக்சிக்குள் முத்தம், டெலிபோன் கூண்டுக்குள் முத்தம், கே.எப்.சி. யில் கோழிக்கறி சேர்த்த பர்கருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு குறுந்தாடி முதலாளி சிலையின் மேல் சாய்ந்தபடிக்கு அவசர முத்தம் என்று சகலமான உதட்டு ஒத்தடங்களையும் பார்த்து இச்சென்று சத்தம் எங்கேயாவது கேட்டால் போய்யா புண்ணாக்கு என்று வேலையைத் தொடரப்பழகிபோயிருந்த சுதர்சனுக்கு…..

நீங்கள் சிரிக்கவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்?. பெரும்பாலும், வெளிநாட்டுக்கு செல்லும் எல்லா இளைஞர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மற்றொரு இயல்பான நகைச்சுவை,

கண்ணாத்தா சுதர்சனின் டீம் மெம்பர்.
கண்ணாத்தா அவனுக்கு முன்னால் ஒரு கத்தைக் காகிதத்தை பரப்பிக்கொண்டு உட்கார்ந்தாள்.

‘சுதர்சன் உனக்கு கல்யாணமா? எப்போ?’

‘நீ ஒரு தப்பும் இல்லாம கோட் எப்ப எழுதறியோ அதுக்கு அடுத்த நாள்’

‘இந்த ஜென்மம் முழுக்க நீ பிரம்மச்சாரியா இருக்க வேண்டியதுதான்’

எச்சரிக்கை : கதை மற்றும் முடிவும் சொல்லியிருக்கிறேன்.

லண்டன் செல்லும் -மென் பொருளை கொடுத்துவிட்டு, க்ளையன்டிடம் கையழுத்து வாங்கி வரவேண்டும் -நம்மூர் மென்பொருள் வல்லுநர், சுதர்சன், அங்கே ஒரு பெண்ணை -சந்தியா -பார்த்து, பார்த்தவுடன் லவ்வத்தொடங்குகிறார். அவளும் லண்டனின் செயர்கைத்தனம் மற்றும் அம்மா, வளர்ப்பு அப்பாவின் நிராகரிப்பால், இவனைக்கண்டவுடன் ஒட்டிக்கொள்கிறார். அவள் இந்தியா வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.அவளும் நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையிலிருப்பவள் தான்.

தற்செயலாக விமானத்தில் உடன்பயனிக்கும் நண்பர் ஒருவர், தான் ஆரம்பிக்கபோகும் புது மென்பொருள் அலுவலகத்திற்கு சுதர்சனை அழைக்க, சுதர்சனும் ஒத்துக்கொள்கிறார். சந்தியாவுக்கும் அதே அலுவலகத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. சுதர்சன் இந்தியா திரும்பியிருக்கையில், அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு சொந்தத்திலே ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளும் வீட்டில் வளைய வருகிறாள். சுதர்சனை அவளுக்கு நிறைய -லிப் கிஸ் அடிக்கும் அளவிற்கு – பிடிக்கிறது. சுதர்சனுக்கும் தான். ஆனால் சந்தியா வேறு மனசாட்சியாய் பயமுறுத்துகிறாள். தலைக்கு மேல் முட்டை பல்பாயிருந்து மிரட்டுகிறாள். சுதர்சன் சந்தியாவைப்பற்றி சொல்லாமலே தாய்லாந்து கிளம்புகிறான். சந்தியாவும் தாய்லாந்து வரவேண்டும் என்பது ஏற்பாடு.

தாய்லாந்தில் புராஜெக்ட் மென்னியைப்பிடிக்கிறது. வீட்டில் பார்த்தபெண்ணிற்கு இவன் சரியாக பதில் சொல்லாமல் நழுவுவதை அறிந்து; அவள் தீர்மானமாய் கேட்கிறாள். அவளிடம் சந்தியாவைப்பற்றி சொல்லிவிடுகிறான். அவள் அழுகிறாள். பிறகு இன்னொரு மென்பொருள் வல்லுநருக்கு மணமுடிக்கப்பட்டு அமெரிக்கா செல்கிறாள்.

சுதர்ஷன் டீம் லீடராக இருக்கிறான். சுதர்சனின் டீமில் கண்ணாத்தா என்றொரு பெண் இருக்கிறாள். இருவரும் நண்பர்களாகப் பழகுகின்றனர். கண்ணாத்தா அறிமுகம் செய்யப்படும் பொழுதே நமக்கு -எனக்கு- சுதர்சன் இவளைத்தான் மணமுடிக்கப் போகிறான் என்று தெரிந்துவிடுகிறது. தாய்லாந்து வருவதற்கு முன் சந்தியா வேலை நிமித்தமாக அமெரிக்கா போக வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அங்கே world trade center தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலியாகிறாள். இந்த ஒரு இடம் மட்டுமே யாரும் எதிர்பாறாதது. மிக மெல்லிய ஆனால் அதிர்வைத்தரும் ஷாக். நன்றாக இணைத்திருக்கிறார்.

சில நாட்கள் பித்து பிடித்தார்போல் திரியும் சுதர்ஷன், பிறகு வீட்டிற்கு சொல்லாமல் கண்ணாத்தாவைக் கரம் பிடிக்கிறான்.

அமெரிக்காவுக்கு செல்கிறான். மறுபடியும் புரோகிராமராக. முடிவு தான் எனக்கு பிடிக்கவில்லை.

புரோகிராமராக சென்றவன் சிறிது நாட்களில் வேலை இழக்கிறான். மேலும் பல நாட்கள் வேலைக்கு மனு போடுகிறான். வேலை கிடைத்தபாடில்லை. பிறகு ஒரு நாள் தனக்கு வீட்டில் பார்த்த பெண்ணை பார்க்கிறான். அவள் ரெஸ்டாரெண்ட் ஒன்று வைத்திருக்கிறாள். அவளுடைய ரெஸ்டாரெண்டில் சாம்பார் ஊற்றிக்கொண்டு காலத்தை கழிக்கிறான்.
கன்ட்ரோல் – ஆல்ட் – டெலீட் போட்டு வாழ்க்கையை முதலிலிருந்து தொடங்கலாம் என்ற கனவோடு.

ctrl-alt-del : மூன்று விரல்.

கரு: [இதுவாகத்தான் இருக்கவேண்டும்]
வாழ்க்கை நிற்காது. அவ்வப்போது சண்டித்தனம் செய்யும்.
கன்ட்ரோல்-ஆல்ட்டர்-டெலீட்.
திரும்ப இயக்கம்.
ஏதேதோ இழந்து போயிருக்கலாம். ஆனால் என்ன? முதலில் இருந்து தொடங்கவேண்டியது தான்.

ஜாலியாக படிக்கலாம். இளமையாக இருக்கிறது.

புத்தக விபரம்:
பெயர் : மூன்று விரல்
ஆசிரியர் : இரா. முருகன்
வெளியீடு : சபரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 145

யாரும் யாருடனும் இல்லை

நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக்கொள்கிறோம். ஒன்றாக அமர்ந்து உணவு உண்கிறோம். ஒன்றாக சிரிக்கிறோம். ஒன்றாக சிரிக்கிறோமா என்பது தெரியாது, ஆனால் குறைந்தபட்சம் வெளியுலகத்திற்காகவோ, நண்பர்களுக்காகவோ, குடும்பத்தினருக்காகவோ கடமைக்கேனும் சிரித்து வைக்கிறோம். உண்மையிலே மனம் விட்டு சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒன்றாக அழுகிறோமா?. சிரிப்பை நாம் பெரும்பாலான நேரங்களில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் துக்கத்தை நமக்குள் பூட்டி – ஒரு பூதத்தைப் போல – அடைத்துவைத்திருக்கிறோம். அசோகமித்திரன் சொன்னதைப் போல நாம் துக்கத்தை யாரிடமும் – யாரிடமும் – பங்கிட்டுக் கொள்ளை இயலாது. ஆனாலும் சில நேரங்களில் நாம் துக்கத்தை வெளிப்படுத்தவே செய்கிறோம், நம்மையுமறியாமல். அல்லது சுயஇரக்கத்தால், சில நேரங்களில் அறிந்தே. ஒன்றாக சினிமாவுக்கு செல்கிறோம். ஒன்றாக பீச்சில் உட்கார்ந்து கடல் அலையின் சத்தம் ஓயும் வரையில் அரட்டை அடிக்கிறோம். பிறகு மணலைத் துடைத்துக்கொண்டு எழுந்து வருகிறோம். மணல் கரையிலே விழுந்துகிடக்கிறது, அடுத்த நபரை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. உண்மையில் நமக்கும், உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் உடனான உறவு, அந்த மணலுக்கும் நமக்கும் இருக்கும் உறவு போன்றது தான் என்கிறார் உமாமகேஸ்வரி.


யாரும் யாருடனும் இல்லை என்ற நாவலை நான் தற்செயலாகத்தான் நூலகத்திலிருந்து எடுத்தேன். முதல் சில அத்தியாயங்கள் தொடர்ச்சியின்றி – முன் அத்தியாயங்களுடன் – சற்றும் சம்பந்தமில்லாமல் நகர்ந்தன. என் நண்பர் ஒருவர் நாவலை என்னிடமிருந்து வாங்கி ஏழு அத்தியாயங்கள் மட்டும் படித்துவிட்டு கொடுத்துவிட்டார். ஏனென்று கேட்டதிற்கு, பொறுமையில்லை என்றார். உண்மைதான், முதல் பதினைந்து அத்தியாயங்களை மட்டும் தாண்டி விட்டால் அப்புறம் தென்றலும், புயலும், மழையும், சுடு சூரியனும், குளிர் நிலவும், பனியும் மாறி மாறி தாக்குகின்றன. ஒரு புவிஈர்ப்பு விசை போல் ஓயாமல் நம்மை ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது நாவல், முடியும்வரை.

எச்சரிக்கை : கதை சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவங்களும் தான்.

போடியில் ஏலக்காய் தொழில் செய்யும் ஒரு பெரிய குடும்பத்தைப் பற்றியது கதை. அந்தப் பெரிய குடும்பத்திற்கு, பலசரக்கு, பாத்திரக்கடை, எஸ்டேட் போன்ற இன்ன பிற தொழில்களும் உண்டு. நான்கு மகன்கள், மற்றும் மூன்று பெண்கள் அந்த வீட்டின் வாரிசுகள். பெண்கள் அனைவரும் திருமணம் ஆகி சென்று விட, மற்ற மூன்று மகன்கள் தத்தம் மனைவியருடனும், கடைக்குட்டி திருமணம் ஆகாமலும், தாய் தந்தையருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கடைசி மகன் பெயர் குணா. அவன் பெயரில் குழந்தைகள் எல்லாம் மிகவும் பிரியமாகஇருக்கின்றனர். அவனை வளர்த்த அண்ணியரும் தான். வீட்டின் தந்தை தான் இந்த பெரிய தொழில் சாம்ராஜியத்தை உருவாக்கினார். அவருக்கு பேத்திகள் இருந்தும் பல பெண்களிடம் தொடர்புடையவராக இருக்கிறார். அவருடைய மனைவியும், மகன்களும், மருமகள்களும் இதை பற்றி தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர். மனைவி தனிமையில் புழுங்கிச் சாகிறார். ஒரு நாள் செத்தும் போகிறார்.

அந்த விட்டில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. பிரச்சனைகளை ஒரு குழந்தையின் – குழந்தைகளின் -பார்வையில் ஆசிரியர் கூறியிருப்பதுதான் சிறப்பு. த காட் ஆப் சுமால் திங்ஸ் படித்தவர்கள் இந்த கதையியல்பை முன்பே அறிந்திருக்கலாம். சொல்லப்போனால், குழந்தைகள் தான் கதையின் உயிர்நாடி. நம்மை கதையுடன் கட்டிப் போடுபவை. நாம் வேறு எங்கு சென்றாலும் நம்மை பிடித்து இழுத்து வருபவை. குழந்தைகளின் வேடிக்கைகளும் விளையாட்டுகளும் கேள்விகளும் என்றைக்கும் விநோதமானவை. ரசிக்கத்தகுந்தவை இல்லையா?. குழந்தைகளின் எண்ணிலடங்கா கேள்விகளும் புதிய சிந்தனைகளும் நாவல் தோறும் உலாவுகின்றன. ஆசிரியரைப் போலவே நமக்கும் பல இடங்களில் பதில் தெரியவில்லை.

குணா சித்தப்பா மீது குழந்தைகள் அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றனர். குணா சித்தப்பா குழந்தைகளுடன் ஒரு நாளும் விளையாடாமல் இருந்ததில்லை. அவர் வீட்டை விட்டு பழி சுமத்தப்பட்டு வெளியேறிய பின்னர், குழந்தைகள் சில நாட்கள் அவரை கானாமல் தேடிவிட்டு, பின் சுத்தமாக மறந்து போகின்றனர். யாரும் யாருடனும் இல்லை.

தாய் சாகும் வரை, தந்தை எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். தாய் இறந்தபிறகு, அவர் வீட்டிற்கே வருவதில்லை. தீபாவளி பொங்கல் தவிற. அதுவும் சம்பிரதாயமே. அவ்வளவு பேர் வீட்டில் இருந்தும், தனிமையில் சாகிறார், ஒரு தீபாவளியன்று. அவர் இறுதி காலங்களில் உருகி உருகி காதலித்த, மலையாள பெண் ஒருவர் அவர் இறந்தபிறகு அவர் முகத்தை கூட பார்க்கைஇயலாமல் அழுதுகொண்டே திரும்பிப்போகிறார். யாரும் யாருடனும் இல்லை.

சுப்பக்கா கால் இல்லாத பெண். பெரிய வீட்டில், அவர்களுடன் ஒட்டாமல் வாழ்ந்துவருகிறார். அந்த பெரிய வீட்டின் அம்மா சுப்பக்காவை அவளுடைய அம்மா இறந்தபிறகு தன் வீட்டிற்கு கூட்டிகொண்டு வந்துவிடுகிறார். சுப்பக்கா தன் ஊனத்தை மறைக்க, மறக்க வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாள். குழந்தைகளுக்கு தினமும் கதை சொல்கிறாள். குழந்தைகள் அவளை மிகவும் நேசிக்கின்றனர். அவள் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பிறகு, சில நாட்கள் குழந்தைகள அழுது கொண்டிருந்து விட்டு பின் சுத்தமாக மறந்துபோகின்றனர். அபூர்வ அபூர்வமான கதைகள் சொல்லும் மூட்டையாக பிள்ளைகளால் கருதப்பட்ட சுப்பக்கா, பனித்துளி போல் சட்டென அனைவரது கவனத்திலிருந்தும் மறைந்து போகிறார். அவரவற்கு அவரவர் வேலைகள். விளையாட்டுக்கள். பிரச்சனைகள். சண்டைகள். காதல்கள். யாரும் யாருடனும் இல்லை.

குணாவும் வினோவும் சிறுபிள்ளை முதல் ஒன்றாக விளையாடியவர்கள். இருவருக்கும் பரஸ்பரம் சொல்லத்தெரியாத காதல் ஒரு காற்றைப் போல மறைந்திருக்கிறது, இருவருக்குமிடையே. ஆனால் வினோதினி குணாவின் அண்ணணைக் கைப்பிடிக்கிறாள். அவன் ஒரு குடிகாரன். குணாவிற்கு இன்னமும் வினோவின் மேல் காதல் இருக்கிறது. இருவரும் இணைகின்றனர்.வினோதினி கருவைக் கலைத்துக்கொள்கிறாள். பிறகு இந்த விசயம் அனைவருக்கும் தெரியவரும் பொழுது வினோதினி குணாவின் மேல் பழி சுமத்துகிறாள், வேறுவழியில்லாமல். குணாவிடம் தனிமையில் அழுகிறாள். குணா வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அவன் போன சில தினங்கள் வினோ அவன் நினைப்பாகவே இருக்கிறாள். தற்கொலைக்கு முயல்கிறாள். காப்பாற்றப்படுகிறாள். வினோவின் கணவன் இறக்கிறான். பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த வினோ நாளடைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறாள். சொத்து பிரிக்கப்படும் பொழுது தனக்கும் பங்கு வேண்டும் என்று அடம் பண்ணுகிறாள். குணாவை முற்றும் மறந்து போகிறாள். அனைவரும் தான். யாரும் யாருடனும் இல்லை.

வாணி மூத்த பேத்தி. குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தவள், வயதுக்கு வந்ததும் படிப்பு தடைசெய்யப்படுகிறது. விளையாட்டு தடைசெய்யப்படுகிறது. ஏன் வீட்டை விட்டே வெளியே செல்லவே தடைசெய்யப் படுகிறது. பெட்டிக்குள் ஒளிவிடும் ஒரு நகையைப் போல வாழ்க்கை முழுவதும் பூட்டிவைக்கப்படுகிறாள். வினோவும் வாணியும் நெருக்கமாகிறார்கள். பிறகு ஒரு நாள் திடீரென்று அவளுக்கு திருமணம் நடக்கிறது. வாணி பெருங்குரலெடுத்து ஓவென்று அலறுகிறாள். அவளைத் தேற்ற யாருமில்லை. குழந்தைகள் காரணம் புரியாமல் விழிக்கின்றன. வினோவும் ஆறுதல் சொல்லத்தெரியாமல் திகைக்கிறாள். தான் நின்ற அதே இடத்தில், அதே சூழலில் வாணி நிற்பதாக நினைக்கிறாள். அவளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பிறகு வாணி திருமணம் முடித்து வீட்டை விட்டு சென்று விடுகிறாள். ஒன்றாக விளையாடிய குழந்தைகள், வாணியின் இழப்பை உணர்கின்றன. ஆனால் பெரிதும் அலடிக்கொள்ளவில்லை. வாணியின் தலைமையிடத்தை – விளையாட்டில்- அவளது அடுத்த சகோதரி பிடித்துக்கொள்கிறாள். அவர்களுக்கு விளையாட்டு வழக்கம்போல் நடக்கிறது; ஆலமரத்தடியிலும், குணா சித்தப்பாவின் ஆளில்லாத அறையிலும். யாரும் யாருடனும் இல்லை.

தந்தை இறந்த பிறகு சொத்து பிரிக்கப் படுக்கிறது. அவர் உயிரோடு இருக்கும் வரை முழுமையாக இருந்த சொத்து, அவர் சென்றதும் கொத்துக்கறியாக்கப்படுகிறது. அனைவரும் சொத்திற்கு சண்டையிடுகின்றனர். மகள்களும் தான். குழந்தைகள் திகிலோடு வேடிக்கைபார்க்கின்றனர். எப்பொழுது சண்டை ஓயுமென்று வீடு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. வீட்டிற்கு குறுக்கே சுவர் எழுப்பப் படுகிறது. ஒன்றாக பள்ளி சென்ற குழந்தைகள், பிரிந்து தனித் தனியாகச் செல்கின்றனர். குழந்தைகள் அழுகின்றனர். ஒன்றாகத்தான் செல்வோம் என்று அடம் பண்ணுகின்றனர். அடி வாங்குகின்றனர்.பின்னர் யாருக்கும் தெரியாமல் பள்ளியில் மட்டும் சந்தித்து பேசிக்கொள்கின்றனர். சின்ன அண்ணன் வீட்டிற்கு வெளியே இருக்கும் முல்லைக் கொடியை வெட்டி எறிகின்றான். கேட்டால், “இந்த முல்லைக்கொடி என் இடத்தில் வேர் வீட்டு, மாடியில் அண்ணனின் இடத்தில் பூ பூக்கின்றது.” என்கிறான் கடுங்கோபத்தோடு. யாரும் யாருடனும் இல்லை.

கதையை விட உமாமகேஸ்வரியின் வரிகளும் உவமைகளும் நன்றாக இருக்கின்றன. ஆனால் சில இடங்களில் உவமைகள் தேவையற்ற அலங்காரமான நகைகளாக உருப்பெற்று கூர்மையாக குத்துகின்றன. பலுவாக இருக்குகின்றன. குழந்தைகள் ச்சோ சுவீட். அதிலும் அனுவும், வாணியும் ரொம்ப அழகு. முதல் பத்து அத்தியாயங்களை நன்றாகச் செய்திருந்தால், இன்னும் அழகாக இருந்திருக்கும். நிதானமாக, இலக்கு இல்லாமல் பயனிக்கும் கதையை பொறுமையுடன் படிக்க இங்கு வெகு சிலருக்கே வாய்க்கிறது.

திருத்தம்: 17-08-2006
இந்த பதிவில் நான் கொடுத்திருக்கும் லின்க் (link) வேலை செய்யாததற்கு வருந்துகிறேன்.புத்தகத்தின் விபரங்கள் இங்கே:

Book Title : யாரும் யாருடனும் இல்லை ( YARUM YARUDANUM ILLAI )
Author : உமா மகேஸ்வரி (UMA MAGESHWARI)
Publisher : TAMILINI Price : Rs. 130/-

அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை உப்யோகித்து அந்த வலை பக்கத்திற்கு சென்ற பிறகு, YARUM YARUDANUM ILLAI என்ற வார்த்தையை தேடுங்கள்.

செல்லம்மாள்

புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ கதையை இன்று மறுபடியும் படித்தேன். புதுமைப்பித்தன் கதைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விசயம், ஆனால் புதுமைபித்தனின் கதைகளை சிலாகிக்கும் உரிமை எனக்கு உண்டு.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை இதுதான். புதுமைப்பித்தன் மிகப் பெரிய கதை சொல்லி இல்லை என்று சிலபேர் வாதிடலாம். ஆனால் அவர் மிகச்சிறந்த எழுத்தாளர். அவரைப் போல் நாட்டு நடப்புகளை கதையோடு இணைத்து சொன்னவர்கள் இல்லை என்றே சொல்லலாம். நாட்டு நடப்புகளை நையாண்டியோடும் மனவருத்தத்தோடும் மிக எளிதாகச் சொல்லிவிடுவார். சாதாரண வாசிப்பாளர் அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

செல்லம்மாள் கதை மிக ஆழமான ஒரு காதல்கதை. ஒரு மிகச்சிறிய துணிக்கடையில் வேலை செய்யும் ஒருவருக்கும்நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கும் அவருடைய மனைவிக்கும் இடையேயானகாதலைச் சொல்லும் கதை இது. காதலைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது பிற விசயங்களையும்புதுமைப்பித்தன் கதை போகும் போக்கிலே நம் மனதில் விதைக்கிறார்.

கதையின் நாயகனின் வேலையைப் பற்றிச் சொல்லும் போது, வேலையை, வயிற்றுப் பிழைப்பின் நிலைகளம் என்று கூறுகிறார். வயிற்றுப் பிழைப்பின் நிலைகளம், உண்மைதான் அல்லவா?

கதையின் நாயகன் சந்தித்த வாழ்க்கையை சொல்லும் போது, ‘அவர் ஏறிய சிறுசிறு மேடுகள்யாவும் படிப்படியாக இறங்கி கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும்’, என்று அருமையாக கூறிவிடுகிறார்.

மேலும் ‘ஒரு கஜம், அரக்கஜம், பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளே காலம், பாப்லின், டுவில்-என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்சார்ச்சனை செய்து கொண்டிருந்தார்’ என்று சொல்கிறார்.

மனைவியின் நோய்க்கு டாக்டரைக் கூப்பிடப் போன நாயகன் டாக்டர் கிடைக்காமல், டாக்டரின் வீட்டின் முன் விலாசம் எழுதி வைத்து வருகிறார். இவர் வீட்டுக்கு வந்த சில நேரத்திற்கெல்லாம் டாக்டர், நாயகனின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்துவிடுகிறார். அதை, ‘ அதே சமயம் ஒரு ரிக்ஸா வந்து நின்றது. ‘ஸார், உள்ளே யார் இருக்கிறது?’என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்’ என்கிறார்.

வைத்தியம் முடித்து டாட்டர் புறப்படும்பொழுது, ‘ இந்த ரிக்சாகாரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டேவண்டியில் ஏறிக் கொண்டார். மடியில் இருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது’ என்கிறார்.

கதையைப் படித்து விட்டு சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன், அவருக்குப் பெயர் பொருத்த மாகத்தான் இருக்கிறது.