ஜெயமோகனின் காடு நாவலும் ஏழாவது உலகமும் மிக பெரிய உள் விரிவுகளை அடக்கிய நாவல்கள் அல்ல, ஆனால் விஷ்ணுபுரம் அப்படி அல்ல. மதுரை இலக்கியப்பண்ணையில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தப்பின் வாங்காமல் இருக்க இயலவில்லை. பக்கங்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அப்பா மருத்துவமனையில் இருந்த பொழுது நேரத்தை செலவு செய்வதற்காக படிக்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து, தமிழ் அகராதியைக் கையில் (அல்லது தரையில்) வைத்துக்கொண்டு நான் படித்த முதல் தமிழ்நாவல் இது தான் என்று நினைக்கிறேன். நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.அப்பா ரிடையர்ட் தமிழாசிரியர் என்பதையும் சில கவிதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் என் அண்ணனுக்கும் – வக்கீலாக பணிபுரிகிறார்- அம்மாவுக்கும், நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.
விஷ்ணுபுரம் நாவலை நான் முழுதாக படிக்கவில்லை. 300 பக்கங்கள் வரை கொஞ்சம் பொருமையிருந்தது, அதற்கப்புறம் வாக்கியங்களில் சுற்றி சுற்றி மீள முடியாத மயக்கநிலைக்கே சென்று கொண்டிருந்தேன். ஆதலால் வாசிப்பை துரிதப்படுத்தினேன், skipping pages. ஏனோ நாவலின் முடிவைப் பார்த்துவிட்டால் போதும் என்றிருந்தது. ஆனால் முடிவென்பது இல்லை என்பதே நாவலின் கருப்பொருள். அப்படியிருக்க நாவலுக்கு எப்படி முடிவிருக்கும். தொடங்கிய இடத்திலே முடிகிறது. நாவலில் வரும் விஷ்ணுபுரமும், கோபுரங்களும் மிக மிக அழகு. அதிலும் கோபுரங்களின் கட்டமைப்பு பற்றி மிக விரிவாக விமர்சித்திருப்பது, நம்மை அந்த கோவிலின் அருகிலே கொண்டுசெல்கிறது. மிகத் தேர்ந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியுடன் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. கருடனின் கதையும் புல்லரிக்க செய்கிறது. முழுமையாக வாசிக்காத காரணத்தால் இந்த புத்தகத்தைப் பற்றி விரிவாக பேச இயலாது. ஆனால் விஷ்ணுவின் சிலையும் (அது விஷ்ணுவே இல்லையென்றும் நாவலிலே சொல்லப்படுகிறது) மூன்று வாசல்களும் என் கண் முன்னே இன்னும் நிற்கிறது. மீண்டும் ஒரு முறை – வாய்ப்பும் போதிய நேரமும் கிடைத்தால் – நிச்சயம் மறுபடியும் படிக்க வேண்டும்.
சோம. வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற பங்குச் சந்தையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் சிறிய – comparative to விஷ்ணுபுரம் – புத்தகம் ஒன்றை படித்தேன். மிக மிக நல்ல புத்தகம். பங்குச் சந்தையில் கால் வைக்க விரும்பும் புதியவர்களை ஊக்கப்படுத்துவதோடு; மிக அழகாக சறுக்கி விழக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறார் ஆசிரியர். நாணயம் விகடனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வாங்குங்கள். படியுங்கள். களத்தில் இறங்குங்கள். ஆனால் சொல்லித்தெரிவதில்லை “பங்குச்சந்தை” கலை! பட்டுத்தான் தெரியவேணும். என்னுடைய பாஸ் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிச்சென்றுவிட்டார். ரஜினி பாடலில் வரும் : “அஞ்சுக்குள்ள நாலவை. ஆழம் பார்த்து காலவை” என்ற வாக்கியத்தை மட்டும் ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் போதுமானது.
எங்கள் ஆபீஸ் டவரில் இருக்கும் Private Lending Library யில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, Life Of Pi என்ற நாவலைப் பார்த்தேன். Man Booker Prize வாங்கிய நாவல் இது. முன்பே பலமுறை பலர் சொல்ல கேள்விப்பட்ட நாவல் தான் இது. எப்பொழுதும் ஒரு மாதம் கால அவகாசம் தரும் Library, இந்த புத்தகத்தை சீரியஸ் ரீடிங் என்று கணக்கில் கொண்டு இரண்டு மாத காலம் அவகாசம் தந்தது. ஆனால் உண்மையைச் சொன்னால் : சீரியஸாக படித்தால், ஆறு மணி நேரத்தில் படித்து விடலாம். ஒரு சனிக்கிழமை இரவு. அவ்வளவே.
நீங்கள் ஆரம்பித்தால் மட்டுமே போதுமானது, நாவல் உங்களை பக்கங்கள் தோறும் கடத்திச் செல்லும், அமைதியாக ஓடும் நதியில் மிதக்கும் மரம் போல நீங்கள் உணர்வீர்கள். இதுவரை நான் படித்திராத கதைக் களம். புதிய உத்தி. அதிரடி க்ளைமாக்ஸ். நான் கொஞ்சம் தத்தி, அதனால் க்ளைமாக்ஸ் அதிரடியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு எப்படியோ! யான் மார்ட்டல் எழுதிய இந்நாவல் பாண்டிச்சேரியில் தொடங்கி கனடாவில் முடிகிறது. ஆசிரியரும் கனடாவைச் சேர்ந்தவரே. கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.
ஹீரோ பை (Pi) யின் அப்பா ஒரு மிருகக்காட்சி சாலை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், zoo வை விற்று விட்டு தன் குடும்பத்தாருடன் கனடாவை நோக்கி கப்பலில் பயணிக்கிறார். கப்பல் கவிழ்ந்து விடுகிறது. பை மட்டும் ஒரு Life Boat ல் தப்பிக்கிறான். ஆனால் அந்தோ பரிதாபம், அந்த லைப் போட்டில் ஒரு ஓநாயும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓரங்குட்டானும், ஒரு 140 பவுண்ட் புலியும் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்களுடைய மிருகக்காட்சி சாலையில் இருந்தவை. முதலில் புலி அமைதியாக இருக்கிறது. ஓநாய் வரிக்குதிரையை உயிருடன் கடித்து திண்ண ஆரம்பிக்கிறது. பிறகு ஓரங்குட்டானை கொல்கிறது. பை தொடர்ந்து கொல்லப்படாமல் தப்பிக்கிறான். பிறகு புலி விழித்துக் கொள்கிறது. ஒரே அடியில் ஓநாயை வீழ்த்துகிறது. பிறகு ஓநாயையும், எஞ்சிய வரிக்குதிரையின் பாகங்களையும், ஓரங்குட்டானையும் திண்கிறது. அடுத்தது பை தான்.
பை இருநூறுக்கும் மேற்பட்ட நாட்கள் எப்படி கடலில் அந்த மிருகத்திடமிருந்து தப்பித்து கரைசேருகிறான் என்பதே கதை. அதற்குப்பிற்கு ஒரே ஒரு சஸ்பென்ஸ் மட்டுமே இருக்கிறது. கடவுள் நம்பிக்கையையும், தன் நம்பிக்கையையும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதையும் அறிவுறுத்தும் நாவல் இது. மெல்லிய நகைச்சுவை நாவல் தோறும் பரவிக்கிடக்கிறது, பீச்சிலிருக்கும் மணல் போல. எடுத்துக்காட்டாக அவனுக்கு எப்படி Pi என்ற பெயர் வந்தது என்பது. நான் நாவலை வாங்கும் பொழுது, பை யின் அப்பா ஒரு மிகச்சிறந்த கணித மேதையாக – Pi=3.14 -இருக்கக்கூடும் என்று தான் நினைத்திருந்தேன். படியுங்கள் : A laugh guaranteed.
அப்புறம் நீண்ட நாட்களாக நூறு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு வைத்த The Glass Palace என்ற அற்புதமான நாவலை மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன். அடுத்த பதிவில் Amitav Gosh ஐ சந்திக்கலாம்.
//கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.//மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவு ஏனைய நாட்டு இலக்கியங்கள் பற்றித் தெரியாது.ஆனால், கனேடிய இலக்கியம் சுவாரசியமாகவே இருக்கிறது!http://en.wikipedia.org/wiki/Canadian_literaturehttp://en.wikipedia.org/wiki/Literature_of_Quebecஏராளமான விருதுகள் வழங்கப்படுகின்றன.அவற்றில் இரண்டுhttp://en.wikipedia.org/wiki/Governor_General%27s_Awardshttp://en.wikipedia.org/wiki/Giller_Prizeபல எழுத்தாளர்களை இன்னும் படிக்கவேயில்லை என்றாலும் இப்போதைக்குப் பிடித்தவர் மோர்டகாய் ரிஷ்லர். மொன்ரியல்காரர் என்பதும் ஒரு காரணம். huh?! :)Rawi Hage என்பவர் எழுதிய நாவலைப் படிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. படித்ததும் சொல்கிறேன்.மற்றபடிக்கு: தீராநதி, காலச்சுவடு பத்திரிகைகளில் அ.முத்துலிங்கம் சில கட்டுரைகளை/பத்திகளை எழுதிவருகிறார். கனேடிய எழுத்தாளர்களைப்பற்றி எழுதினாலும், அவர்களுடைய எழுத்தை முன்வைத்து எழுதாமல், அவர்களுடனான தன்னுடைய தொடர்புகளை, தொடர்புகொள்ள முயற்சித்ததை வைட்த்ஹு சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருக்கிறார். ஆனாலும், எப்போதாவது நல்ல கட்டுரைகள் வந்து விழுகின்றன.Life of Pi – எனக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்று. இரண்டு தளங்களில் அந்தப் புத்தகம் இயங்குகிறது என்பது என்னுடைஅ எண்ணம். இந்தப் கதையைப் படமாக்குவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். தெரியுந்தானே?
LikeLike
அருமையான பகிர்வு. நன்றி.
LikeLike
நல்ல பதிவு முத்து தொடருங்கள்
LikeLike
மதி,வருகைக்கு நன்றி. ஏராளமான தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். இப்பொழுது வெளிஉலக இலக்கியங்களை அறிந்து கொள்வதற்கு, அ. முத்துலிங்கம் எழுதும் தொடர் மிகவும் உதவியாகயிருக்கிறதில்லையா. உயிர்மையிலும் கூட இது போன்ற கட்டுரை நிறையவரும். அ.முத்துலிங்கம் பேட்டி எடுத்தாலும் கட்டுரை ஆக்குவேன் பேட்டு எடுக்காவிட்டாலும் கட்டுரை ஆக்குவேன் என்று சொல்லியிருந்தார். உண்மைதான். இவரது கட்டுரைகளின் மூலம் தான் கனடாவின் இலக்கியத்தை பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதற்காக கனேடிய எழுத்தாளர்களை தேடிப்பிடித்து படிப்பதில்லை, கிடைத்தால் கண்டிப்பாக படித்துவிடுவேன். அப்படி படித்தது தான் Mary Lawson. அவரது Crow Lake பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்கவேண்டும். The Other Side Of The Bridge இல் கூட க்ரோ லேக் வருகிறது. மற்றபடி வேறு எழுத்தாளர்கள் பற்றி தெரியாது. அலீஸ் முன்றோவைப் பற்றி சில கட்டுரைகளில் படித்திருக்கிறேன். சில கட்டுரைகளைப் படித்தாலும் எழுத்தாளர்களின் பெயர்கள் மறந்துபோகின்றன.ம்ம் கஷ்டம்.ஆமாம். லைப் ஆப் பை இரு தளங்களில் இயங்குகிறது. ஆனால் அது முடிவில் தான் தெரியவரும் இல்லியா?. ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. Pi யின் அந்த விசித்திர தீவு, அதிலிருக்கும் விசித்திரமான Algae, meerkats கற்பனை (கற்பணையாக இருக்கும் பட்சத்தில்) எதற்காக? யோசித்து பார்த்தும் முடிவுக்கு வர இயலவில்லை. சாதரணமாக வாசித்துக்கொண்டிருந்த என்னை, Life Boat இல் வரும் இன்னொரு ப்ரெஞ்ச் நபருடனான உரையாடலும், ரிச்சர்ட் பார்க்கருடனான (புலி) மயக்க நிலை உரையாடலுமே, இது உண்மையிலே சீரியஸ் ரீட்ங் தான் என்று எண்ன வைத்தது. படமாக்கும் முயற்சியை IMDB யில் பார்த்தேன். உண்மைதானா? கொஞ்சம் ரிஸ்க் தான். அப்படியே எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே.
LikeLike
நிர்மல், சிறில் அலெக்ஸ்: வருகைக்கு நன்றி. சிறில் அலெக்ஸ்: பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். பார்ட்டி இல்லியா?
LikeLike
பார்ட்டிதானே.. தந்தா போச்சு எங்க இருக்கீங்அ நீங்க?
LikeLike
சிங்கப்பூரில் இருக்கிறேன். நீங்கள்?
LikeLike