Gathering The Water

ராபர்ட் எட்ரிக் எழுதிய “கேதரிங் த வாட்டர்” என்ற புத்தகத்தைப் படித்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்த பொழுதும் அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் இருந்து கொண்டேயிருந்தது. போன வருடம் புக்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. பரிந்துரைப் பட்டியலைப் பார்த்தபொழுதிலிருந்து தண்ணீரை சேமித்தல் என்கிற வித்தியாசமான தலைப்பு என்னுள் ஒருவித ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருந்தது.

பைபிளின் ஆங்கிலம் போல இந்தப்புத்தகத்தின் ஆங்கிலம் இருக்கிறது என்றது ஒரு blurb. நான் பைபிள் படித்ததில்லை. ஆங்கிலம் எனக்கு வித்தியாசமாகவும் படவில்லை.

1847 இல் வட இங்கிலாந்தில் போர்ட் பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட ஒரு அணையினால் ஏற்படவிருக்கும் வெள்ளத்தால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை (வெள்ளத்தையும், மக்கள் வெளியேறுவதையும்) மேற்பார்வையிட “சார்லஸ் வெயிட்மேன்” என்பவர் அணை கட்டும் நிறுவனத்தால் நியமிக்கப்படுகிறார். அவருக்கு அந்த பகுதியிலே ஒரு பழையவீடு ஒதுக்கப்படுகிறது.

சார்லஸ் தன் மனைவி (fiancee) ஹெலனை சமீபத்தில் தான் இழந்திருக்கிறார். கொடுங்காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார்.

இந்த வேலையில் பெரிதும் நாட்டமில்லாமல் போர்ட் பள்ளத்தாக்கிற்கு வரும் சார்லஸ் அங்கு இன்னும் அனேக மக்கள் காலி செய்யாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

ஒரு நாள் மீன் போன்று விரல்கள் இணைந்த (webbed) காலையும் கையையும் கொண்ட ஒரு மனிதன் இவரது வீட்டுக்கு வெளியே நிற்கிறான். வீட்டுக்குள் வர மறுக்கிறான். மிகுந்த கோபமாக இருக்கிறான். இந்த இடம் வெள்ளத்தால் முழுதும் அழிந்தால் கூட நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்கிறான். தனது வீட்டை ரெயில்வே கம்பெணி மிகக்குறைந்த விலைக்கு எடுத்துக்கொண்டார்கள் என்றும், அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து நியாயம் கிடைக்கும் வரையில் போராடுவேன் என்றும் கூறுகிறான்.மனநிலை சரியில்லாதவன் போல இருக்கிறான்.

சார்லஸ் தன் வீட்டிற்கு முன்னால் இருக்கும் சிறு மலையில் இரு பெண்கள் தன்னைத் தொடர்ந்து கவனிப்பதைப் பார்த்து, கை அசைக்கிறார். அவர்கள் பதிலுக்கு கை அசைக்காமல் திரும்பி சென்றுவிடுகின்றனர்.

இவ்வாறாக, அவரது வருகை அங்கிருக்கும் மக்களுக்கு ஆர்வத்தைத்தூண்டுவதாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காமல் இருக்கிறது.

பிறகு ஒரு நாள், முன்பு மலையில் பார்த்த இரு பெண்களில் ஒருவர், அவராகவே வந்து சார்லஸிடம் தன்னை மேரி என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மேரிக்கு ஒரு மனநிலை சரியில்லாத தங்கை இருக்கிறார். அவர் பெயர் மார்த்தா. மார்த்தா இருபத்து ஏழு வருடங்களுக்கு முன் ஒரு காப்பகத்தில் இருந்தார். மேரி தனது லண்டன் வாழ்க்கை கசப்பாக போனபிறகு மார்த்தாவை காப்பகத்திலிருந்து அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டார். இரு சகோதிரிகளும் ஊர் மக்களிடமிருந்து விலகியே இருக்கின்றனர்.

இவ்வாறான தங்களது சொந்த சோகங்களால் மேரியும், சார்லஸ¤ம் ஈர்க்கப்படுகின்றனர்.சார்லஸ் தனது மனைவியின் நினைவுகளை மேரியிடம் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு முறை ஏரியைச் சுற்றி தனது மனைவியுடன் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பறவையை (வாத்து) ஒரு மீன் (spike) கவ்விப்பிடித்து திண்பதை சார்லஸ் பார்க்கிறார். அந்த சமயம் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவி ஹெலன் இந்த காட்சியைக் காணத்தவறுகிறார். ஹெலன் பார்க்கும்பொழுது ஏரியில் – சார்லஸ் காட்டிய இடத்தில் – சிறிய அலைகளே சுழல்கின்றன. சார்லஸ், பறவையை மீன் பிடித்தது என்று எத்தனையோ முறை சத்தியம் பண்ணாத குறையாக திரும்பத்திரும்ப சொல்லிப்பார்க்கிறார். எனினும் என்ன காரணத்தாலோ அவரது மனைவி அவரை நம்பவேயில்லை. தண்ணீரில் ஏதாவது கல் விழுந்திருக்கலாம் என்கிறார். ஏன் அவள் நம்பவில்லை என்று தனக்கு இன்னும் புரியவில்லை என்று மேரியிடம் கூறுகிறார் சார்லஸ். ஏன் ஹெலன் சார்லசை நம்பவில்லை என்று எனக்கும் புரியவில்லை என்று நான் உங்களிடம் கூறுகிறேன். எல்லா மனைவிகளும் கணவர்களை நம்பிவிடுவதில்லை. சிலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்!

மேரியும், தான் இந்த ஊரில் வாழ்ந்த சின்ன வயது நினைவுகளை சார்லஸிடம் பகிர்ந்து கொள்கிறார். ஒரு நடத்தைதவறிய மனைவியை அவளுடைய கணவன் கொன்று, அவளை பாலத்தின் அடியில் தெளிவற்று ஓடிக்கொண்டிருக்கும் ஓடையின் கற்களுக்கு கீழே புதைத்துவிட்டதாக, தான் சிறு வயது முதல் கேட்டுவந்த நம்பிக்கையை (அல்லது கதையை) சார்லஸிடம் பகிர்ந்துகொள்கிறார் மேரி.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றனர். மேரி, மார்த்தாவுக்கு போதுமான வசதிகள் காப்பகத்தில் கிடைக்கவில்லையென்றும், அதனால் தான் தன்னுடனே தங்குவதற்கு அழைத்துவந்துவிட்டதாகவும் சொல்கிறார். ஆனால், அணை கட்டுமான கம்பெனி, தான் நிறைய இழப்பீடு பெறுவதற்கே மார்த்தாவை அழைத்துவந்தாக நினைக்கிறது என்றும், தனது இழப்பீடு மார்த்தாவை மீண்டும் காப்பகத்தில் கொண்டு விடுவதைச் சார்ந்தே இருக்கிறது என்கிறார். தற்போது தனது வீட்டுக்கு இழப்பீடாக கட்டுமான கம்பெனி வழங்கிய தொகை எந்தவகையிலும் ஏற்புடையதாக இல்லை என்று கூறி கமிட்டியிடமிருந்து வந்த கடிதத்தை கிழித்தெரிகிறார்.

காலியான வீடுகளை சிதைக்க வந்திருப்பவர்கள் வெள்ளம் வருவதற்கு முன்பே வேலையை ஆரம்பிக்கின்றனர். சிலர் சமாதிகளைக் கூட தோண்டுகின்றனர்.

மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளைக் காலி செய்ய தொடங்குகின்றனர். ஒரு குடும்பம் தன் பொருட்களை முழுவதும் எரிப்பதைப் பார்க்கிறார் சார்லஸ். ஒரு நாள் தண்ணீரில் சுழல் ஏற்பட்டுவிட்டதென்று சார்லஸ் அழைக்கப்படுகிறார். பெரும் கூட்டம் அங்கே கூடியிருக்கிறது. அங்கிருந்த ஒரு பெண் தனது ஆடு அந்த இடத்தில் மூழ்கத்தெரிந்தது என்கிறார். சார்லஸ் தண்ணீருக்குள் இறங்கி பார்வையிட்டுத் திரும்புகிறார்.கூட்டம் கலைகிறது.

அம்மை நோய் பரவிக்கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது. நோயை விட வதந்தி வேகமாக பரவுகிறது. மறுபடியும் அந்த இணைந்த விரல்கள் மனிதன் வருகிறான். இம்முறை ஏனோ அவன் வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருக்கிறான். இப்பொழுதுதான் முதன் முறையாக சார்லசைப் பார்ப்பது போல பேசுகிறான். மேரி குடும்பத்துக்கு தான் மிகவும் அறிமுகமானவன் என்றும், மார்த்தாவைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறுகிறான். ஆனால் மேரி தன்னை மிகவும் வெறுக்கிறாள் என்கிறான்.

சார்லஸ் தான் தண்ணீர் அடர்ந்த சதுப்பு நிலத்தில் வழுக்கிவிடாமல் லாவகமாக நடப்பதை கனவில் காண்கிறான். உள்ளூர் மக்கள் அவனை கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர். சார்லஸ் சிரிக்கிறான்.

மேரி, மார்த்தாவை திரும்பவும் காப்பகத்திலே சென்று விட்டுவிடத் தீர்மானிக்கிறாள். சார்லஸிடம் இதைக்கூறுகிறாள். மேலும் அணைக்குப் பக்கத்திலே இருக்கும் ஒரு வீட்டில் குழந்தை ஒன்று இறந்துவிட்டது என்றும் கூறுகிறாள்.

சார்லஸ் காக்கை இறகுகள் தரையில் கிடப்பதைப்பார்த்து, அவற்றைச் சேமிக்கிறான். தனது மனைவி ஹெலன் காக்கை இறகுகளை சிறு நினைவு பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தியதை நினைத்துப்பார்க்கிறான். அவற்றை தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில், அந்த ஊர்க்காரன் ஒருவன் காக்கை இறகுகள் உனக்கு கெட்ட விசயங்களை (துர் அதிர்ஷ்டங்கள்) கொண்டுவரும் என்கிறான்.

மார்த்தாவைக் காப்பகத்தில் கொண்டு போய் விடும் நாளன்று சார்லஸ், மேரியை தேடி அவள் வீட்டுக்கு செல்கிறான். வீட்டுக்குப் போகாமல் வெளியிலே, வரும் வழியிலே நிற்கிறான். நேரம் பறந்து கொண்டிருந்தும் மேரி வரவில்லை. மார்த்தாவை கவனித்துக்கொள்ளும் பணிப்பெண் சார்லஸைப் பார்த்து என்ன இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்கிறாள். சார்லஸ் விசயத்தை சொன்னவுடன், மேரி நேற்றே மார்த்தாவை காப்பகத்தில் சென்று விட்டுவிட்டாளே என்கிறாள். மேலும் மேரி நேற்று இரவு வந்த பொழுது மிகவும் சோர்வாகவும், சோகமாகவும் இருந்ததாகக் கூறுகிறாள்.

இருவரும் மேரியின் வீட்டிற்கு செல்கின்றனர். வீடு திறந்து கிடக்கிறது. பொருட்கள் கலைந்து, சிதறிக் கிடக்கிறது. யாரும் இல்லை. சார்லஸ் அலைந்து திரிந்து தேடுகிறான். உள்ளூர்காரர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொள்கிறான். எவ்வளவு தேடியும், எங்கு தேடியும், மேரி கிடைக்கவில்லை.

கமிட்டி சார்லஸை சந்திக்க வருகிறது. கமிட்டியைப் பார்த்ததும் ஊர் மக்கள் கூடிவிடுகிறார்கள். கமிட்டி இன்னும் காலி செய்யாதவர்களுக்கு, இழப்பீடு அதிகரிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்று சார்லஸிடம் தனிமையில் சொல்கிறார்கள். மேலும் அவர்கள் தண்ணீரின் அளவு கனிசமாக அதிகரித்துவிட்டது என்றும் நீங்கள் ஏன் இங்கேயே இன்னும் இருக்கிறீர்கள், வேறு ப்ராஜெக்ட்டுக்கு மாறவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

மேரியின் உடல் அணைக்கு அருகே தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை மக்கள் காண்கிறார்கள். அவரது ஆடை பெரிதும் கிழிந்திருக்கிறது. சார்லஸ் அவரது உடலை, அணையின் ஆழத்திலிருந்து மீட்கும் கடினமான வேலையைச் செய்கிறார்.மேரி தான் ஆடை கிழிந்து உடல் தெரிய தண்ணீரில் மிதப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பாள் என்று நினைக்கிறார்.

புது வருடம் வரையில் அவர் அங்கேயே இருக்கிறார். அடிக்கடி மேரி அவரது கனவில் தோன்றி நீங்கள் தான் என் பாதுகாவலர் என்கிறார். பயத்துடனும் குழப்பத்துடனும் சார்லஸ் தனது கனவுகளைக் கழிக்கிறார்.

திரில்லோ, சஸ்பென்ஸோ, திருப்பங்களோ இல்லாத நாவல். ஆனால் அருமையான அமைதியான அழகான எழுத்து நடை. அலைகள் அதிகம் இல்லாத அமைதியான நீர்மட்டம், இந்த நாவல்.

Gathering the water : Robert Edric

குமுதம் : ஜாங்கிரியா? வீங்கிரியா?

சமீபத்தில் குமுதம் செய்த போக்கிரி திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க நேர்ந்தது, குமுதத்தின் ரசனை ஏன் இப்படி மாறிக்கொண்டே வருகிறது?

வடிவேலுவின் நகைச்சுவைப் பற்றிக்கூறும் போது.

“வழக்கம்போல அடி வாங்கும் பாத்திரத்தில் வடிவேலு. அண்ணே, மாத்துங்கண்ணே உங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்கறாங்கண்ணே. தண்ணீர் குழாய் சமாச்சாரம் மட்டும் கலகல”

எதிர்மாறான விமர்சனம் இது. தண்ணீர் குழாய் சமாச்சாரம் மட்டும் தான் கலகல இல்லை. அது தான் கொஞ்சம் நெளிய வைத்த காமெடி. “தண்ணீர் எங்கிருந்து வந்தாலும் பிடிப்பீங்களா” என்று வடிவேலு கேட்கும் போது “கலகல” சிரிப்பு வருவதைவிட எரிச்சலே வருகிறது. அதை எப்படி குமுதம் கலகல என்று சொல்கிறது? மேலும் படம் பார்த்த அனைவரும் சொல்லும் வடிவேலு ஆடும் சுட்டும் விழி சுடரே பாடல் பற்றி ஒரு கமெண்ட்டும் இல்லை. அவரது கெட்டப் பற்றியும் பேச்சில்லை. சன் டீவியில் காட்டப்பட்ட கிளிப்பிங்சைப் பார்த்து விமர்சனம் செய்கிறார்களோ?

அப்புறம் பிரகாஷ்ராஜ் பற்றியது:

“பிரகாஷ்ராஜுக்கு நடிக்க ஸ்கோப் இல்லை.”

அவர் என்ன படத்தோட ஹீரோவா? பாசமலரில் சிவாஜி சார் நடித்த கேரக்டர் போன்றா இதற்கு முன்னர் நடித்துக்கொண்டிருந்தார்? அவர் வேலையை அவர் கரெக்ட்டாக செய்திருக்கிறார். ஜெயிலில் அவர் அடிக்கும் லூட்டி ஒன்றே போதுமானது. அதைப்பற்றியும் குறிப்பிடவில்லை.

கடைசியாக:
சண்டைப்பிரியர்களுக்கு போக்கிரி ஜாங்கிரி மற்றவர்களுக்கு வீங்கிரி.

ஜாங்கிரி ஓகே அதென்ன வீங்கிரி? டீராஜேந்தர் மாதிரி வசனம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா குமுதம் சார்?

குமுதம் அண்ணே கொஞ்சம் ஒழுங்கா விமர்சனம் பண்ணுங்கண்ணே, உங்கள நம்பி நெறைய பேரு படத்துக்குப் போறாங்கண்ணே.

பிறகு அட்டையில் “ரஜினி வாய்ஸ் ரகசியம்” என்று போட்டிருந்தார்கள். உண்மையச்சொல்லுங்க சார், ரஜினி வாய்ஸ் ன்னா நமக்கு என்ன தோணும்? உள்ளே ஒண்ணுமே இல்லை. ரஜினிக்கு இருக்கும் பேஸ் வாய்ஸ் எப்படி வந்தது என்று சொல்கிறார்கள். காலையில் எழுந்து சீரகத்தண்ணீரில் வாய் கொப்பளிக்கவேண்டுமாம், அப்படி செய்தால் ரஜினியின் வாய்ஸ் நமக்கு வந்துவிடுமாம்.

ரஜினியின் வாய்ஸ் என்றால் எல்லோருக்கும் ரஜினி அரசியலில் கொடுக்கும் வாய்ஸ் என்று தான் சட்டென்று எண்ணத்தோன்றும். அவருடைய குரல் வளம் பற்றியா யோசிப்போம்? ஏதோ அரசியல் விசயம் போல என்று நினைத்து சிலர் குமுதம் வாங்கலாம் இல்லியா? அதுதான் ட்ரிக்.

வியாபாரம் செய்வதற்கு என்னென்ன தந்திரங்கள் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள்.

இன்சிடென்ட்ஸ் – 6

து ஒரு குளிர்ந்த டிசம்பர் மாதத்து இரவு. தலையில் டைட்டாக அம்மா கட்டிவிட்டிருந்த மப்ளருக்குளிருந்து என் அண்ணனுக்கு நான் டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன். காலை மூன்று மணிக்கு முன் சக்கரத்தில் எழுமிச்சை நசுக்கி பஸ் புரப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு என சுற்றுலாவுக்கு வந்திருந்த மாணவ மாணவிகள் எல்லாம் குதூகலமாக இருந்தனர். நானும் தான். எனக்கு இது தான் முதல் தொலைதூர சுற்றுப்பயணம். அதுவும் முதல் முறையாக வீட்டை விட்டு ஐந்து நாட்கள் பிரிந்திருக்கப்போகிறேன்.கொஞ்சம் சந்தோஷமாகவும் ரொம்ப வருத்தமாகவும் இருந்தது.

என்னதான் சொல்லுங்கள்,அதிகாலை நேரப் பஸ் பயணம் போல சுகமான பயணம் வேறு இருக்கிறதா? மன்னிக்கவும், ஒரு கவிதை ஞாபகம் வருகிறது.

அதி காலை நேரம்
ஜன்னலோரப் பயணம்
தலைக்கோதிச் செல்லும் காற்றில்
உன் கைவிரல்கள்
சிலிர்த்தது காது மடல்

நான் மற்றும் எனது உயிர் நண்பன் சூரியமோகன் (தற்போது டொரொன்டோவில் MBA படித்துக்கொண்டிருக்கிறான்) மற்றும் பிற பணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் கடைசி இருக்கையில் உட்கார்ந்திருந்தோம். எனக்கு படிக்கட்டுக்கு பக்கத்திலிருக்கும் சீட். எனக்கு பக்கத்தில் சூர்யா. காற்று மிகவும் குளிராக இருந்தது. காது மடல்கள் ஜில்லிட்டிருந்தது. கண்ணாடியில்(நான் அப்போது கண்ணாடி அணிந்திருப்பேன். இப்போ லென்ஸ்) பனி மூட்டம். ச்சே. இனிமேல் கண்ணாடி வாங்கும் போது வைப்பர் வைத்து வாங்கச்சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.படிக்கட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சீட்டில் உட்கார்வதில் நன்மை என்னவென்றால்: காற்று அதிகமாக வீசும். தீமை? காற்று மிக அதிகமாக வீசும்.

ஏதோ சாமி பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு வீரா படப்பாடல்கள். கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட என்று எஸ்.பி.பி கொஞ்சிக்கொண்டிருந்தார். நான் கேர்ல்ஸ் ஏரியா பக்கம் அத்துமீறி நுழைந்து, சில நொறுக்குத்தீனிகள் கைப்பற்றிக்கொண்டு வந்தேன். முருகு, இதென்ன ரஜினி பாட்டு மாதிரியே இல்ல என்றாள். கொஞ்சம் டீசிங், கொஞ்சம் கத்தல், கொஞ்சம் பாடல், கொஞ்சம் சண்டை என்று ஆரம்ப உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து அனைவரும் சாந்தி நிலையை அடைந்துவிட்டிருந்தனர். என்ஜினின் ஓசையும், அவ்வப்போது க்ராஸ் செய்யும் பேருந்துகளின் வெளிச்சத்தையும், ஹிஸ்டரி மேடத்தின் குரட்டை ரீங்காரத்தையும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை.

கண்விழித்துப் பார்த்த போது சூர்யா படிக்கட்டு கதவில் உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் விடிந்திருந்தது. சுப்பிரமணியசுவாமி திரைப்படத்திலிருந்து பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவியரிடம் அசைவு தெரிந்தது. பிரின்ஸி நல்ல உறக்கத்திலிருந்தார். இதை உறுதி செய்தாயிற்று என்று சூர்யா கண் ஜாடை காட்டினான். நானும் சென்று அவனுடன் படிக்கட்டு கதவில் உட்கார்ந்து கொண்டேன். தென்காசிக்கு சிறிது தூரமே என்று மைல்கல் சொன்னது.

ஏதேதோ எங்களைத் தெரியாத கிராமங்கள் எங்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றன. சில கிராமங்களின் பெயர்கள் விசித்திரமாக இருந்தன. ஊர்களில் அந்த அதிகாலையிலும் விழித்து ஏதோ வேலையாக ரோட்டில் நடந்து கொண்டிருந்த மக்கள் எங்கள் டாட்டாவை வெறித்து பார்த்தபடியே மேலும் தங்கள் நடையை துரிதப்படுத்தினர். டாட்டா காட்டேன்டா சொட்டத்தலையா என்றான் சூர்யா. இது காதில் விழுந்ததாலோ என்னவோ சிலர் போனால் போகிறது என்று பதில் டாட்டா காட்டினர். இது அனைத்தையும் வைத்தகண் வாங்காமல் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் ஆயா. நான் கே.ஜி. படித்ததிலிருந்து அவர் தான் ஆயா. நல்ல பாசமானவர். ஆனால் மோசமானவர் (சாரிடா சிவா, உன் டயலாக்கை கடன் வாங்கிக்கிட்டேன்) கேஜியிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்தேன். நான் பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்கும் வரையிலும் என் பள்ளி என் மீது அதீத பாசம் வைத்திருந்ததாய் தான் உணர்ந்தேன். அதற்கப்புறம் இரண்டு ஆண்டுகள் கழித்து என் பள்ளிக்கு ஏதோ வேலையாக சென்றிருந்த போது, புது பிரின்ஸி இருந்தார், அவர் என்னைப்பார்த்து ஹ¥ ஆர் யு? என்று கேட்டபோது தான் காலம் எப்படிப்பட்ட கோட்டைகளையும் மண் மேடாக்கிவிடும் என்பதை நம்பத்தொடங்கினேன்.

“சாமின்னா சுப்பிரமணிய சாமிதான் நம்ம சாமிதான்..சாமி இங்க கட்டிக்கிட்ட மாமி தான் ரெண்டு மாமி தான்” பாடல் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது.நான் சூர்யமோகனிடம் ஏதோ கேட்க நினைத்து அவனை அழைத்தேன். ஆயா ஒழுங்கா ரெண்டு பேரும் சீட்ல உட்காருங்கடா என்றார். நாங்கள் முடியாது முடியாது என்று சொல்லிக்கொண்டே வந்தோம். சட்டென்று அவர் பிரின்சியை கூப்பிட்டுவிட்டார். பிரின்சி திரும்பி முறைத்து தன் பெரிய கண்களை உருட்டி கெட் டவுன் பாய்ஸ் என்று சொல்ல, நாங்கள் வேறு வழியின்றி சீட்டில் வந்து உட்கார்ந்தோம், ஆயாவை முறைத்துக்கொண்டே. பஸ் ஒரு ரைட் டர்ன் எடுத்தது.

அவ்வளவுதான். ஏதோ ஒரு கனமான பொருள் மீது பஸ் மோதியது போன்ற ஒரு சத்தம். ரோட்டில் பெரிய பாறை ஏதும் கிடந்ததா என்ன? ஒரே கூக்குரல்கள். முன்னால் அமர்ந்திருந்த ஹிஸ்டரி மேடம் ஜீஸஸ் ஓ ஜீஸஸ் என்று கத்துவதும், இன்னும் பிறர் ஐயோ அம்மா என்று அலறும் சத்தம் காதுகளில் விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. பஸ் குடிபோதையில் திளைத்துக்கொண்டிருக்கும் குடிமகன் போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது.நாங்கள் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால் முன்னால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கூச்சலும் குழப்பமும் கொடைக்கானலின் கடும் பனிமூட்டம் போல எங்களைச் சூழ்ந்திருந்தது. திடீரென்று பஸ் படிக்கட்டு இருந்த பக்கம் டபக்கென்று சாய்ந்தது. பிடிமானம் ஏது இல்லாமல் குழப்பத்திலும், பயத்திலும் நின்றிருந்த நான் பக்கத்திலிருந்த கம்பியில் மோதினேன். சக்கரம் ஏதோ சகதியில் அமிழ்ந்தது போல இருந்தது.
கூக்குரல்கள் மேலும் அதிகரித்தது. நாங்கள் எங்கள் வகுப்பு நண்பர்களைத் தேடினோம். அனைவரும் எழுந்து நின்றிருந்ததால் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அப்பொழுதுதான் பின்னால் திரும்பிப்பார்த்தோம். கொஞ்ச தூரத்தில் ஒரு சிட்டிபஸ் பாதிமட்டுமே நின்று கொண்டிருந்தது.

எங்கள் பஸ் ரைட் டர்ன் எடுத்தப்பொது அங்கு நேர் ரோடு ஒன்றும், உடனடியாக ஒரு லெப்ட் டர்ன் ஒன்றும் இருந்திருக்கிறது. லெப்ட் டர்னில் முக்கால் வாசி உள்ளேயும் கால் வாசி பாகம் நேர் ரோட்டிலுமாக காலை நேரத்து பாதி தூக்கத்தில் இருந்திருக்கிறது சிட்டிபஸ். காலை நேரமானதால் பஸ்ஸில் நிறைய கூட்டம் இல்லை. ஒரே ஒரு துரதிர்ஷ்டவசமான ஆள் தவிர.

பள்ளத்தில் இறங்கிய பஸ் அப்படியே நின்று கொண்டிருந்தது. அது ஒன்றும் பெரிய பள்ளம் இல்லை தான். ஆனால் மேலும் கீழிறங்கினால் பஸ் கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. ஹிஸ்டரி மேடம் முன்னால் எங்கள் மாணவ மாணவிகளுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்றார். ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும் சற்று அடி. டிரைவருக்கு பலத்த அடி. ஸ்டியரிங் வீலில் மாட்டிக்கொண்டார் அவர். டிரைவர் அன்று மிக அழகாக எங்களைக் காப்பாற்றியிருக்கிறார். பஸ்ஸில் மோதிய எங்கள் பஸ் நிதானம் இழந்து ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய புளியமரத்தை குறி வைத்து சென்றிருக்கிறது. இலாவகமாக டிரைவர் எங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

இப்பொதைக்கு ஒன்றும் பயமில்லை என்றதும் நாங்கள் தேடியது எங்கள் உயிர் நண்பர்களையும் நண்பிகளையும் 🙂 தான். அவர்கள் பத்திரமாக இருந்தனர், கண்கள் நிறைய பயத்தோடு. கதவைத்திறக்க முயற்சித்தோம். முடியவில்லை. மணலில் புதைந்திருக்கிறது.

பி.கு: பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

ஆயிரம்கால் இலக்கியம் – 6

புதுமைப்பித்தன் தன் சிறுகதைகளில் என்றைக்குமே எந்த இலக்கணங்களையும் கடைப்பிடித்ததில்லை. சொல்லப்போனால் இலக்கணங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்த முதல் எழுத்தாளர் அவர் எனலாம். இதைத்தான் எழுத வேண்டும் இதை எழுதக்கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? அனைத்துமே எதார்த்தம் தான். ஆனால் எல்லா எதார்த்தங்களையும் சொல்லமுடியுமா? பிரபல இயக்குனர் மகேந்திரன் கூட காட்டக்கூடாத சில எதார்த்தங்களைத் தான் காட்டித் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு லிமிட், பிரேக்கிங் பாய்ன்ட் இருக்கிறது. அந்த வட்டத்துக்குள்ளே (சிலருக்கு சதுரம்!) தான் அனைவரும் இருப்போம். சிலருக்கு டயாமீட்டர் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வட்டத்தின் மையப்புள்ளியும் வட்டமும் ஒரே அளவாக இருக்கிறது. குளோபலைசேஷனால் விரிந்து வரும் இந்த உலகத்தில் எதுவும் தவறில்லை. எதுவும் சரியில்லை. ஒரு நாடு தனது நாட்டில் தூக்குத்தண்டனையை ரத்து செய்கிறது. தூக்குதண்டனை தவறு என்கிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் (அல்லது மேற்பார்வையின் கீழ்) இருக்கும் மற்றொரு நாட்டில் தான் சிறைப்பிடித்த கைதிக்கு தூக்குத்தண்டனை வழங்குகிறது. அந்த வீடியோ அனைவரது கைகளிலும் கிடைக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறது. எது சரி? எது தவறு? ஓரினச்சேர்க்கை தவறு என்று சிலர் நினைக்கலாம். வாதாடலாம். ஏன் நானும் அப்படித்தான். ஆனால் சிவபாலனின் பதிவில் ஒருவர் இட்ட பின்னூட்டம் என்னை யோசிக்க வைத்தது. “ஒரு வேளை நமது மகனோ மகளோ இந்தத் தவறை செய்தார்கள் என்றால், இந்த ஒரு தவறுக்காக அவர்களை நாம் வெறுத்து ஒதுக்குவோமா?” அவரவருக்கு அவரவர் நியாயங்கள். நம் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், சாதி சனங்கள் என்று வரும்போது நியாயங்கள் ஊமையாகின்றன. சுயநலமே விஞ்சி நிற்கிறது.

புதிமைப்பித்தன் இவ்வாறு கூறுகிறார்:

“….இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”

– புதுமைப்பித்தன் கட்டுரைகள், 1954

இதில் எனக்கு ஒன்றோடு உடன்பாடு இல்லை – அது இராவணனை குரூரமே அவதாரமானவன் என்றது. இராவணன் குருரமே அவதாரமானவனா?

புதுமைப்பித்தனின் கதைகளில் எனக்கு ரொம்பப்பிடித்தமான கதை இது. அவரது கதைகள் பெரும்பாலும் படித்த பிறகு சிறிது நேரம் யோசிக்க வைக்கும். அவரது கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான அம்சம் அவரது கதைகூறும் விதம். நரேடிவ் ஸ்டைல். கதையை கதையாக சொல்ல மாட்டார். கதைகளைவிட நம்மைச் சுற்றிப் பினைந்திருக்கும் சமூக அவலங்களே கதைகள் தோறும் நிறைந்திருக்கும். சமூக அவலங்களை கிண்டல் கலந்து சொல்லுவதால் அவர் நிறைய நபர்களின் விமர்சனங்களைப் பெற்றார். இன்றைக்கும் தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் புதுமைப்பித்தனே. பதிலுக்கும் இவரும் சலைத்தவரில்லை. எல்லோரையும் போட்டுத்தாக்குவார். நமது வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல. அனைவராலும் – இன்றைக்கும்- மிகச்சிறந்த நாவலாசிரியராக மதிக்கப்பட்ட கல்கி அவர்களைக்கூட இவர் விட்டுவைக்கவில்லை. தவறு (?!) எங்கிருந்தால் என்ன?

எதிலும் ஒரு நையாண்டியை எளிதாக புகுத்திவிடக்கூடியவர் அவர். பல சமயங்களில் ஐந்து பக்க கதையில் மூன்று பக்கம் தாண்டிய பிறகும் கூட கதைக்கு வந்திருக்கமாட்டார். இந்தக்கதையிலும் அப்படியே. பொன்னகரத்தைப்பற்றியே இரண்டு பக்கங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். பிறகு சட்டென்று கதைக்கு தாவுகிறார். அவரைப்பொருத்தமட்டில் சுகம் துக்கம் இரண்டிலும் ஒரு விரக்தியான ஹாஸ்யம் கலந்திருக்கும். இந்தக் கதையில் அவர் சொல்ல எடுத்துக்கொண்டிருக்கும் கருத்து கற்பு. கதையின் பெயர்: பொன்னகரம்.

முருகேசன் ஜட்கா வண்டி (அந்தக்காலத்து குதிரை வண்டி) ஓட்டுபவன். அவன் மனைவி அம்மாளு, அவன் தம்பி, அவன் தாயார் அனைவரும் உயிர்வாழ்வது முகேசன் ஜட்கா வண்டி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் தான். அம்மாளுவும் ஏதோ கூலி வேலைக்கு போகிறாள். அவர்கள் வசிப்பது பொன்னகரம் எனப்படும் ஒரு சேரி. அந்த சேரியை புதுமைப்பித்தன் வர்ணிப்பதே (!) மிக அழகு.

ஒரு நாள் முருகேசன் குடித்துவிட்டு ஜட்கா ஓட்டியதில் ஜட்கா கவிழ்ந்து முருகேசனுக்கும் குதிரைக்கும் பயங்கர அடி. முருகேசனுக்கு உள் காயம். அவன் குடித்திருந்ததால் காயம் அவனுக்கு வலிக்கவில்லை. அம்மாளு ஏதோ அரைத்து வீகக்த்திற்குப் பூசியபின்னர் தான் முருகேசன் கொஞ்சமாவது பேசினான். அவனுக்கு பால் கஞ்சி வேண்டுமாம். அம்மாளுவுக்கு கூலி போட இன்னும் நாட்கள் இருக்க பால் கஞ்சிக்கு ஏது பணம்?

இனி புதுமைப்பித்தனின் வரிகள்:

அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.
‘கும்’மிருட்டு. பஞ்சாங்கத்தின் படி இன்றைக்கு சந்திரன் வர வேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்துகொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?
எப்பொழுதும் போல் இரைச்சல் தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாகிவிட்டது. திரும்பி வருகிறாள்.
சந்தின் பக்கத்தில் ஒருவன். அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் கண் வைத்திருந்தவன்.
இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம். புருஷனுக்கு பால் கஞ்சி வார்க்கத்தான்.
என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீரக்ளே! இது தான், ஐயா, பொன்னகரம்!

நல்ல வேளையாக தமிழ் குடிகளைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கதையினைப் படிக்கவில்லை. இல்லையேல் புதுமைப்பித்தனுக்கு சொர்க்கத்திற்கு சம்மன் அனுப்பியிருப்பார்கள்.

நிர்மல் ஒருமுறை எனக்கு பின்னூட்டம் அளிக்கும் போது “ஜெயமோகனின் கதைகளை சுருக்கமாகக் கூறமுடியாது” என்றார். உண்மைதான். ஜெயமோகனின் கதைகளையே சுருக்கமாக கூறமுடியாது என்றால், புதுமைப்பித்தனின் கதைகளை, கண்டிப்பாக முடியவே முடியாது.

அவரது நக்கலையும், நையாண்டியையும் ரசிப்பதற்கே, கதையைப் படிக்கலாம். இந்தக் கதையில் சில:

அவர் பொன்னகரத்தை விவரிக்கும் போது:

-வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக ‘முனிசிபல் கங்கை’ -அல்ல, யமுனை தானே கறுப்பாக இருக்கும்?

-பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு மீன் பிடித்து விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில் மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம்,ஊசிய வடை; இத்யாதி உருண்டு வரும்.

-ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது.போகக்கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்கு தெரியுமா? “போனால்” தான் பெற்றோருக்குத் தான் பாரம் கொஞ்சம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, ‘கிளாக்ஸோ’ ‘மெல்லின்ஸ் பூட்’ குழ்ந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமல் இருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று “குட்மார்னி’ சார்!” என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அது தான் அவர்களுக்கு கிடைக்கும் ஆரம்பக்கல்வி.

-எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். ‘டல் ஸீஸ’னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! ‘பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்’ என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உனக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!

மற்றொரு கதை : ஒரு கொலை அனுபவம்.

புதுமைப்பித்தன் கொலைக் கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறாரா என்று படிக்கத்தொடங்கிய எனக்கு ஏமாற்றம். புதுமைப்பித்தனின் திரில்லர் முயற்சி. பல புதுமைப்பித்தன்கள் கதையில் அருகிறார்கள். குத்திக்கொல்கிறார்கள். புதுமைப்பித்தன் கனவிலிருந்து முழிக்கிறார். பக்கத்தில் எழுதுகோல், காகிதம். துப்பறியும் நாவல் எழுத முயற்சிசெய்து தூங்கியிருக்கிறார். பிறகு சலிப்போடு சொல்கிறார்.

-துப்பறியும் நாவல் எழுதுவது என்றால் லேசா? தூக்குதண்டனை இல்லாமல் ஆடக்ளைக் கொல்ல வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்ப? அந்த தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக்கொண்டு நாயுடன் துரத்த என்னால் முடியாது!!

இரத்த வைரம்

இரத்தவைரம், போர்வைரம், சர்ச்சைக்குரிய வைரம் – blood diamond. போர் (புரட்சி) பிரதேசங்களில் இருக்கும் சுரங்கங்களில் எடுக்கப்படும் வைரங்கள் அங்கே நடைபெறும் போருக்கு பண உதவி பெறுவதற்கோ அல்லது ஆயுத உதவி பெறுவதற்கோ வெளிநாட்டினருக்கு இரகசியமான முறையில் தவறான வழியில் விற்கப்படுகின்றன. இவ்வாறான வைரங்கள் பிளட் டைமன்ட் என்றழைக்கப்படுகின்றன. இவ்வாறான சர்ச்சைக்குரிய வைரங்களை நாம் வாங்கும்போது, நம்மையும் அறியாமல் உலகத்தில் எங்கோ, எந்த மூலையிலோ போரையோ, புரட்சியையோ, அதரிக்கிறோம் என்பது உண்மை. நாம் வாங்கிய வைரத்தில் விலையில் அங்கே குடும்பங்கள் பிரிக்கப்படுகின்றன. குழந்தைகள் துப்பாக்கிகளைப் பிடிக்கின்றன. படுகொலைகள் நடக்கின்றன. ஒரு சந்ததியே அழிந்து கொண்டிருக்கிறது.

லியார்னோடோ டீ கேப்ரியோ மற்றும் ஜெனிபர் கனோலி நடித்து தற்போது வெளிவந்திருக்கும் பிளட் டைமண்ட் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது. சியாரா லியோனில் 1990 இல் நடந்த புரட்சியில் தொடங்குகிறது படம். Revolutionary United Front (RUF), அங்கே ஆண்டு கொண்டிருக்கும் அரசை தூக்கியெறிய போர் செய்கிறது. போருக்கு பணம், ஆயுதம் பெற பிளட் டைமன்டை உபயோகிக்கிறது.

ஆரமத்தில் சாலமனின் குடும்பம் பிரிகிறது. மீன் தொழில் செய்யும் சாலமனுக்கு தன் மகனை படிக்கவைத்து மிகப்பெரிய டாக்டராக்க வேண்டும் என்ற ஆசை. கனவு இருக்கிறது. RUF கையில் கிடைத்தவர்களை சுரங்கத்தில் வேலை செய்ய பிடித்துக்கொண்டு செல்கிறது. சாலமன் குடும்பத்தைப் பிரிகிறான். ஆற்றுப் படுகையில் மணலோடு மணலாக சேர்ந்திருக்கும் வைரங்களைத் தனித்தனியே பிரித்து எடுக்கவேண்டும். அது தான் வேலை. வைரம் கிடைத்தால் அங்கே காத்துக்கொண்டிருக்கும் சிறுவனின் கையில் கொடுக்க வேண்டும் அவன் ஓடிச் சென்று அங்கே அமர்ந்திருக்கும் தளபதியிடம் கொடுப்பான். வைரத்தை ஒழித்துவைக்க முயன்றால் கும்பிபோஜனம் தான். சாலமன் மிகப் பெரிய பிங்க் கலரில் இருக்கும் வைரம் ஒன்றைப் பார்க்கின்றான். காலுக்கடியில் மறைத்து வைத்துக்கொண்டு பாத்ரூம் செல்வதாக கூறி தனியாக வந்து குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் போது தளபதி வந்து விடுகிறான். வைரத்தைக்கொடுக்கச் சொல்லி அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போது இராணுவம் வந்து விடுகிறது. தளபதி குண்டடி படுகிறான். சாலமன் வைரத்தை வேறு இடத்தில் ஒழித்து வைக்கிறான். இராணுவம் எல்லோரையும் பிடித்துக்கொண்டு போகிறது.

ஜெயிலில் டீகேப்ரியோ (ஆர்ச்சர்) வைரக்கடத்தலில் பிடிபட்டு இருக்கிறான். குண்டடிபட்ட தளபதி ஜெயிலில் எல்லோர் முன்னிலையிலும் சாலமனைப் பார்த்து உன்னிடம் தானே வைரம் இருக்கிறது. எங்கே ஒழித்து வைத்திருக்கிறாய் என்று கேட்கிறான். சாலமன் இல்லை என்று சாதித்து எங்கே வைத்திருக்கிறேன் காட்டு என்று ஆடை முழுவதையும் அவிழ்த்துக்காட்டுகிறான். ஆர்ச்சர் சாலமனிடம் வைரம் இருக்கவேண்டும் என்று திடமாக நம்புகிறான்.

ஆர்ச்சர் ஜெயிலை விட்டு வெளியேறி தனக்கிருக்கும் கான்ட்டாக்ட்ஸ் மூலம் சாலமனை வெளியேகொண்டுவருகிறார். ஜெனிபர் கனோலி (மேடி) பத்திரிக்கை ஆசிரியர். மேடி, ஆர்ச்சரிடம் எப்படி வைரங்களை விற்பாய், யாருக்கு கொடுப்பாய், யாருக்கெல்லாம் இதில் பங்கிருக்கிறது என்ற விபரங்களை கேட்டபடி இருக்கிறார். ஆர்ச்சர் ஏதோ கதைகளைக்கூற, மேடி தனக்கு ஆதரங்கள் வேண்டும், பேங்க் அக்கவுண்ட்ஸ் வேண்டும் என்கிறார்.

மேடிக்கு ஆதாரங்கள் வேண்டும். ஆர்ச்சருக்கு வைரம் வேண்டும். சாலமனுக்கு குடும்பம் வேண்டும். முக்கியமாக டாக்டராகப்போகும் (இன்னும் பள்ளி சென்று கொண்டிருக்கும்) மகன் வேண்டும்.

சாலமனின் மகன் அவனது (எஞ்சிய) குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுகிறான். குண்டடிபட்ட தளபதி அவனை அழைத்து அவனிடம் துப்பாக்கியை குடுத்து, சுடுவதற்கு பழகிக்கொடுக்கிறான். ஏராளமான சிறுவர் ஆர்மியுடன் அந்த சிறுவன் சேர்க்கப்படுகிறான். அவனுக்கு கஞ்சா போன்ற பழக்கங்களைக் கத்துக்கொடுக்கிறான். சிறுவன் படிப்பையே மறக்கிறான். யாரைப்பார்த்தாலும் சுட்டுக்கொல்கிறான்.

ஆர்ச்சர் சாலமனிடம் அவனது குடும்பத்தை கண்டுபிடித்து கொடுப்பதாகவும் அதற்கு கைமாறாக தனக்கு வைரம் இருக்கும் இடத்தைக் காட்ட சொல்கிறான். மேடியிடம் வைர வியாபாரத்தின் தலைகளையும், அவர்களது பேங்க் அக்கவுன்ட் நம்பர்களையும் ஆதாரத்துடன் கொடுக்கிறான். மேலும் அவர்களது வைரங்களை வாங்கும் மிகப்பெரிய இங்கிலாந்து வைரக்கம்பெனியின் பெயரையும் கொடுக்கிறான்.

தவறான பிளட் டைமன்ட்கள் கடத்தப்பட்டு – மலைகளில் உயிருள்ள செம்மறியாடுகளின் தோல்களில் வைரங்கள் பதுக்கப்பட்டு கடத்தப்படுகின்றன – இந்தியாவில் பாம்பேயில் சுத்தீகரிக்கப்பட்டு நல்லவைரங்களோடு சேர்க்கப்படுகின்றன. பின்னர் இங்கிலாந்தின் வைரக்கம்பெனியின் சுரங்க அறைகளில் பதுக்கப்படுகின்றன. பதுக்கப்படுவதன் மூலம் வைரப்பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டு, விலை குறையவே குறைவதில்லை.

ஆர்ச்சர் மேடியின் உதவியுடன் சாலமனின் குடும்பத்தைக்கண்டுபிடிக்கிறான். எங்கோ கேம்பில் இருக்கிறார்கள். குடும்பத்தைப்பார்த்து சந்தோஷப்பட்ட சால்மன் மகனைக்காணாமல் வேதனை அடைகிறான். போர் ஓயும் வரை குடும்பத்தை கொடுப்பதில்லை என்று இராணுவம் திட்டவட்டமாக கூறிவிடுகிறது.

இவர்கள் திரும்பும் வழியில் வேறொரு காட்டுவாசி(அல்லது புரட்சி) கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர். மேடி சமயோஜிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கச்சொல்லி தப்பிப்பது அழகு. அந்த கும்பல் இவர்களை தங்கள் தலைவரிடம் அழைத்துச் செல்கிறது. அங்கே தலைவர் reformation செய்துகொண்டிருக்கிறார். அதாவது போரில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, அவர்களை அரவணைத்துச் செல்கிறார். சாலமன் தன் மகனை ஆவலோடு தேடுகிறான். இல்லை.

அவர்களை எல்லைக்கப்பால் கொண்டுபோய் விட தலைவர் மறுநாள் காரில் கூட்டிச்செல்கிறார். எதிரே சிறுவர் கூட்டம் ஒன்று துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு இவர்களை வழிமறித்துக்கொண்டு நிற்கிறது. ஆர்ச்சர் துப்பாக்கி எடுக்கவும் தலைவர் இல்லை இல்லை துப்பாக்கி வேண்டாம் இவர்கள் சிறுவர்கள் என்கிறார். அவர்களிடம் அன்பாக பேசுகிறார். சாலமன் சிறுவர்களின் பால்வடியும் முகங்களை பாசமாகப் பார்க்கிறான். தனது மகனை நினைத்துக்கொள்கிறான். பேசிக்கொண்டிருந்த சிறுவர்கள் சடசடவென்று திடீரென சுட ஆரம்பிக்கின்றனர். தலைவர் சுடப்படுகிறார். ஆர்ச்சர் சட்டென் வண்டியைக்கிளப்பி தப்பிக்கிறான்.

ஆர்ச்சரும் சாலமனும் வைரத்தைத்தேடி பயணம் புறப்படுகின்றனர். வழியில் சாலமன் போர் படைகளையும் அதில் இருக்கும் தன் மகனையும் பார்க்கிறான். தன்னையும் அறியாமல் கத்திவிடுகிறான். புரட்சிப்படை பார்த்துவிட ஓடி மயரிலையில் உயிர் தப்பிக்கின்றனர். மறுநாள் ஆர்ச்சர் இவ்வாறு இன்னொரு முறை செய்தால் நானே உன்னை கொன்றுவிடுவேன் என்கிறான்.

மறுநாள் சாலமன் ஆர்ச்சர் சொன்ன பாதையில் செல்லாமல் நேற்று இரவு புரட்சிப்படை சென்ற பாதையில் செல்கிறான். ஆர்ச்சர் எத்துனை சமாதனப்படுத்தியும் கேட்காமல் அவன் செல்கிறான். போரில் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றை அவர்கள் கடந்து செல்கையில் ஒரு பெரியவர் சாலமனை அனுகி, டீ கேப்ரியோவைக் காட்டி – வெள்ளைக்காரன் என்று நினைத்துக்கொண்டு – சொல்கிறார், “இங்கே, இந்த கிராமத்திலே எண்ணெய் வளமும், வைரங்களும் இல்லை என்று சொல்லு. இல்லையென்றால் இந்த இடத்தையே சுடுகாடு ஆக்கி விடுவார்கள்”

அங்கே மகன் இல்லை. சில நாட்கள் பயணத்திற்குப்பின் சாலமன் வைரத்தை தான் ஒழித்து வைத்த இடத்தை அடைகிறான். அங்கு வழக்கம்போல வைரம் தோண்டப்படுகிறது. இரவு சாலமன் தன் மகனை அங்கு பார்க்கிறான். மகனோ சாலமனை அடையாளம் தெரியாமல் குழம்புகிறான். கத்துகிறான். வர மறுக்கிறான்.

பின்னால் சாலமன் வைரத்தை எடுத்தபிறகு நடக்கும் சண்டையில் சாலமனின் மகனின் கையில் துப்பாக்கி கிடைக்கிறது. அவன் தன் தந்தையையே குறிவைக்கிறான். சாலமன் தன் மகனிடம் உன் தந்தை தான் நான். உனக்கு அன்பான அம்மா இருக்கிறார். அழகான தங்கை இருக்கிறாள். நீ படித்து டாக்டராகப்போகிறாய். நான் உன் அப்பா என்று அழுதுகொண்டே அந்த சிறுவனுக்கு புரியவைக்கிறார்.

இந்த இடம் தான் படத்தின் கரு. அமைதியான அழகான கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களை இந்த ப்ளட் டைமன்ட்ஸ் எப்படி சிதைக்கிறது பாருங்கள். ப்ளட் டைமன்ட்ஸ் இல்லையென்றால், அவர்களால் கடத்த இயலவில்லை என்றால், எங்கிருந்து ஆயுதம் வாங்குவது? எங்கிருந்து போரைத் தொடர்வது? தொடர்ந்து போர் செய்வதால் இலட்சியங்கள் நிறைவடையலாம். ஆனால் இலட்சியங்கள் யாருக்காக? சில தனிப்பட்ட நபர்களின் இலட்சியங்களுக்காக மொத்த மக்களின் இலட்சியங்களை அழிக்கலாமா?

வைரங்கள் வாங்கும் போது கவனம் தேவை. ப்ளட்டைமன்ட்களை தடுப்பதற்காக கிம்பர்லி ப்ராஸஸ் ஏற்படுத்தப்பட்டது. இப்பொழுது 99 விழுக்காடு வைரங்கள் நல்ல வைரங்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மீதமிருக்கும் ஒரு விழுக்காடும் மிக அதிகமே.

எனவே நம்மால் முடிந்த வரை வைரங்கள் வாங்கும் போது அவை ப்ளட்டைமன்டாக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சிலரது கனவுகளைக் காப்பாற்றலாம்.

ஏற்கனவே ஆஸ்கார் தவறவிட்ட டிகேப்ரியோ இந்த முறை வாங்குவாரா?

ஆழ்வார்

அட போங்கப்பா. போக்கிரி எவ்வளவோ பெட்டர். அஜித் ராமராக, கிருஷ்ணராக, நரசிம்மராக வேடம் போட்டு தீயவர்களை (அவருக்கு தீங்கு செய்தவர்களை!) அழிக்கிறார். கண்றாவி. போய் கொன்னுட்டு வரவேண்டியது தானே, அது என்ன வேஷம் போட்டுக்கொண்டு கொல்வது? நல்லா புல்லாங்குழல் கையில் வைத்துக்கொண்டு ஆளுயர மாலை போட்டுகொண்டு, உடம்பு முழுக்க நீலக்கலர் பூசிக்கொண்டு, அஜித் வில்லன்களைப் பந்தாடுவது காமெடியாக இருக்கிறது. அஜித் பிணவரையில் வேலை பார்ப்பவர். ஏன் பிணவரையில் வேலை பார்க்கிறார்? அதற்கு கோனார் நோட்ஸ் பாணியில் விளக்கம் அழிக்கப்படுகிறது. அதாவது பழிவாங்கும் மூடில் இருக்கும் அஜித் மனிதர்களைக் கொல்லும் போது பச்சாதாபம் ஏற்படக்கூடாதல்லவா அதனால் தான் பிணவரையில் வேலை பார்க்கிறாராம். பிணங்களைப் பார்த்துப் பார்த்து கொல்லும் போது இரக்க உணர்வு மேலிடாதாம். உக்காந்து யோசிப்பாய்ங்களோ?

எடுத்தவுடன் ராமர் வேடமிட்டு கொல்கிறார். முதல் இரண்டு கொலைகளுக்கு வசனமே கிடையாது. மூன்றாவது கொலை பண்ணும்போது கொலை செய்யப்படவேண்டியவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அவர் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்கிறார், ராமர். அவர் தூக்கத்திலிருந்து விழிக்கிறார். வேஷம் போட்டு வந்திருப்பவரைப் வினோதமாக பார்க்கிறார். யார் நீ என்று கேட்கிறார். ராமர் (அஜித்): “கடவுள். நான் கடவுள்” என்கிறார். தியேட்டரில் கைதட்டல் காதைப் பிளக்கிறது. முதல் முறை மட்டுமே. அடுத்த முறை அவர் இதே டயலாக் சொல்லும் போது அடப்போப்பா. பாலாவுக்கே போன் போட்டு சொல்லிடு என்ற நினைப்பே வருகிறது.

அதே அஜித், பிணவரையில் சேர்ந்ததற்கு காரணம் சொல்லிவிட்டு “இங்கே வருபவர்கள் எல்லாம் சுடுகாட்டுக்கு செல்கிறார்கள். நான் மட்டும் இங்கேயே இருக்கிறேன்” என்றவுடன் முன்னால் நான் கடவுள் என்று சொன்னபோது தியேட்டரில் கைதட்டிய அதே நபர், சத்தமாக, “நீ எப்போ போவ?” என்கிறார். தியேட்டரே சிரிக்கிறது.

பல காட்சிகளில் கண்டினியூட்டியே இல்லை. அசின் வேறு பிளவுசில் வீட்டுக்குள் இருக்கிறார். அஜித்துடன் வெளியே வரும் போது வேறு டாப்ஸில் இருக்கிறார். அஜித் வில்லனை -தங்கையைக்கொன்றவனை- தான் வேலை செய்யும் GH ல் பார்க்கிறார். எவ்வளவு கோபம் வரும்? அதும் அவனைக்கொல்ல தேடிக்கொண்டிருப்பவனுக்கு எவ்வளவு கோபம் வரும்? காக்கியூனிபார்மில் இருப்பவர் அவனைப்பார்த்ததும் அவனை விரட்டிக்கொண்டு வெளியே வருகிறார். வரும் போது அழகாக வெள்ளைப் பேண்ட்டும் கலர் சட்டையும் போட்டிருக்கிறார். நீண்ட நாள் தேடிய வில்லனைப் பார்த்தவுடன் யாராவது போய் டிரஸ் சேஞ்ச் செய்து கொண்டு வருவார்களா? அதுக்கும் காரணம் இருக்கிறது. ஏனென்றால் அடுத்து அஜித் வில்லனைத் தவர விடுகிறார். வில்லன் காரில் தப்பிக்கிறார். சிக்னலில் நிற்கிறார். அஜித் துப்பாக்கியை வைத்து சுடுகிறார். குண்டு தவறி அந்தப்பக்கம் வந்த போலீஸ் வேனில் பட்டுவிடுகிறது. போலீஸ் ஏற்கனவே வேஷம் போட்டு கொலை செய்து கொண்டிருக்கும் நபரை தேடிக்கொண்டிருக்கிறார். அஜித்தைப் பார்த்ததும் விரட்டுகிறார். பின்னர் சண்டையில் அஜித் விசிட்டிங் கார்ட் மட்டும் குப்பைத்தொட்டியில் விழுந்து விடுகிறது. உடனே அதில் ஆசிட் விழுந்து போட்டோ மட்டும் தீய்ந்து விடுகிறது. ஆனால் GH என்பது தெளிவாக தெரிகிறது. உடனே போலீஸ் GHக்கு சென்று எல்லோரையும் சோதனை போடுகிறார். போலீஸ் கும்பல் கும்பலாக ஹாஸ்பிடலுக்கு உள்ளே ஓடிக்கொண்டேயிருக்கின்றனர் சில நிமிடங்களுக்கு. அப்புறம் அஜித் காக்கி சட்டையில் வருகிறார். அப்போ காக்கி சட்டையில் சண்டை போட்டால் போலீஸ் கண்டுபிடித்துவிடுமாம். அதனால் கலர் சட்டையில் ஓட விட்டிருக்கிறார். இவ்வளவு தூரம் யோசித்த டைரக்டர் கதையை கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

யாருப்பா அவரு, போலீஸ் இன்ஸ்பெக்டர்? சொடக்கு போடவே நேரம் பத்தல அவருக்கு. எதுக்கெடுத்தாலும் அவனைப் புடிக்காம விடமாட்டேன் என்று சபதம் போடுகிறார். வேஷம் போட்டு கொலைகாரன் கொன்றான் என்று தெரிந்தவுடன், அவர், இந்த சிட்டில யாரெல்லாம் வேஷம் போட்டிருக்கிறார்களோ அவர்களை எல்லாம் பிடித்துவாருங்கள் என்கிறார். வெஷம் போட்டவன், அப்படியே வேஷத்தோடா இருப்பான்? ஜென்டில்மேனின் சரண்ராஜை இமிடேட் செய்ய முயற்சித்திருக்கிறார். பாவம்.

அசின். அழகாக இருக்கிறார். திரிஷா ரசிகர் மன்றத்திலிருந்து அசினுக்கு மாறிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்ன வேலை அவருக்கு? பாடல் பாடவேண்டுமே.அப்புறம் ஹீரோவைத் துரத்தித்துரத்தி காதலிக்கிறார்.ஹைதரபாத்திலிருந்து வரும் அவர் ஏன் பிணவரையில் வேலை செய்யும் அஜித்தை தொரத்தி தொரத்தி காதலிக்க வேண்டும்? ஒரு மண்ணும் புரியல. பாடலுக்கு முன்னால் வருகிறார். அவ்வளவே. அவர் வந்தவுடன் தியேட்டரி அடுத்த பாடலா என்ற கமென்ட் எழுகிறது.

அப்புறம் ஒரு மிக பழைய பிளாஷ்பேக். அஜித்தின் அம்மாவும், தங்கையும் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்கிறார்கள். கதாகாலாட்சேபம் போல இருக்கிறது. பெருமாள் எங்களை தண்டிப்பார் என்று யாராவது ஒருவர் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். பக்தி சொற்பொழிவு ஆற்றுபவர் எல்லோரையும் கடவுள் என்கிறார். அஜித்தைப் பார்த்தும் கடவுள் என்கிறார். கடவுளே. அன்பே சிவம் நாங்க பாத்தாச்சுப்பா. அப்புறம் அவர் அம்மாவிடம் (கீதா) சென்று தன்னைகடவுள் என்று சொன்னதாக கூறியவுடன், அவர் நீ எங்களுக்கு கடவுள் தந்த பிள்ளை தானப்பா என்று கூறுகிறார். மேலும் போட்டோ அல்பம் ஒன்றை எடுத்துக் காட்டுகிறார். அதில் சிறுவனாக பல கெட்டப்புகளில் – ராமர், கிருஷ்ணர் – காட்சி தருகிறார். அதனால தான் வேஷம் போட்டு கொன்றாராம், ஆழ்வார். கீதா அந்த ஆல்பத்தை அவரிடம் காட்டாமலே இருந்திருக்கலாம். பிளாஷ்பேக் முடிந்தவுடன், பின்னாலிருந்து ஒரு கமெண்ட் சத்தமாக “அப்பாடா ஒரு கண்டத்தை தாண்டியது போல இருக்கு”

ஒரே சத்தம். ஜூம் ஜூம் என்று காமெரா focus-unfocus ஆகிக்கொண்டேயிருக்கிறது. அஜித் பல ஆங்கிளில் காட்டப்படுகிறார். அடித்து நொறுக்கிறார். ஒரே குத்து ஆள் பல அடி உயரத்திற்கு பறந்து சென்று பல பல்டி அடித்து விழுகிறார். கண்ணாடிகள் சில்லு சில்லுகாக உடைகிறது. நமது காது கிழிகிறது. கடைசியில் நரசிம்ம வேடம் போட்டு மெயின் வில்லனை அழிக்கிறார். வயிற்றைக் கிழிக்கிறார். ஏன் டைம் வேஷ்ட் பண்ணி வேடம் போடுகிறார்? டிரஸ் செட், மாலை, சிங்க முகமூடி எல்லாம் கையிலே வைத்திருப்பாரோ? மாலை எங்க போய் வாங்குவார்?

விவேக் இருக்கிறார். ஐயோ பாவம். வடிவேல் ஓவர் டேக் செய்கிறார் சார், கொஞ்சம் சிரிக்க வைங்க. ஒரே ஒரு இடம் தான் நன்றாக இருந்தது. அதாவது மைல்சாமி சிறு தொழில் லோன் வாங்கி ஐந்தாயிரம் ரூபாய்க்கு அனுமார் வேஷம் போட்டு, பிச்சை எடுத்து, மாருதி கார் வாங்கினாராம். அதற்கு விவேக் கேட்கிறார் : என்னடா லோன் வாங்கி கார் வாங்கிட்ட எப்போ லோன் கட்டுவ? அதற்கு மைல்சாமி சொல்கிறார்: அடுத்த ஆட்சி வரும் போது அதான் லோன கேன்சல் பண்ணிருவாங்கல்ல பிறகு எதற்கு கட்டனும்.

மனோரமா இருக்கிறார். பிராந்திக்கும் மூட்டு வலி தைலத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாட்டி பாவம். முதல் முறை அடித்தவுடன் சடார் சடார் என்று திரும்பி, அருணாச்சலம் அருணாச்சலம் என்கிறார்.

இன்னொரு விசயம். ஐடி கார்ட் போலிஸில் கிடைக்கிறது. அதில் ஆசிட் விழுந்து முகம் தெரியாமல் போகிறது. உடனே போலீஸ் ஐடி கார்டை எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் ஸ்பெசலிஸ்ட் கிட்ட எடுத்திட்டு போய் அதற்கு பொருத்தமான உருவங்களை இணைத்துத் தரச் சொல்கிறார். முடியுமாங்க? தெரியல. ஆனால் அந்த மனிதர் பயங்கரமான அதி மேதாவியாக இருப்பார் போல அஜித்தின் போட்டாவை கனகச்சிதமாக வரைந்து கொடுக்கிறார். கச்சிதமாக. முல் முல்லாக மீசையுடன். உதட்டுக்குக்கீழ் இருக்கும் தாடி முதற்கொண்டு. சார். தொழில்நுட்பத்தை வெளியிடுங்கள் சார். பில் கேட்சை மிஞ்சி விடலாம்.

பாடல்கள். சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா. பரவாயில்லை. முகமத் சலாமத்தும், சாதனா சர்க்கமும் டமிலை கொலை செய்திருக்கிறார்கள் (சொல்லப்போனால் கற்பழித்திருக்கிறார்கள்!). “செலா செலா செலா நித்தானே ஷெப்பு செலா மலா மலா மலா நீ தானே கொல்லி மலா” என்கிறார். சுஜாதாவின் இடது கை விருதான நன்றாக தமிழ் பேசுவது எப்படி என்ற புத்தகத்தை இவருக்கு வழங்கலாம். உன்னிக்கிருஷ்ணன் பாடிய பல்லாண்டு பல்லாண்டு பாடல் நன்றாக இருந்தது. கேட்பதற்கு மட்டும்.ரிரெக்கார்டிங்: ஸ்ரீகாந்த் சார் காதிலிருக்கும் ear bud ஐ எடுத்துவிட்டு மியுசிக் போடுங்க. எங்க காது கிழியுது. இதுல matrix revolution music வேறு.

ஆனால் ராமர் வேடம் அஜித்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. ராமாயணம், மகாபாரதம் சினிமாவாக எடுப்பவர்கள் அஜித்தை தாரளமாக அப்ரோச் செய்யலாம்.

கம்ப்பாரேட்டிவ்லி போக்கிரி பல மடங்கு பெட்டர். ஆழ்வார் சார், முழிச்சுக்கோங்க சார்.

போக்கிரி

ந்திரா (காரம் குறைந்த) மசாலா. தெலுங்கு போக்கிரி நான் பார்க்கவில்லை (என்னிடம் படம் இருக்கிறது), ஆனால் கண்டிப்பாக தமிழ் போக்கிரியைவிட பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன். கதை? ஏற்கனவே நிறையமுறை பார்த்த கதைதான். சாமியில் வரும் முதல் 10 நிமிஷம் தான் படத்தின் கதை. பாண்டியனையும் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள், அப்புறம் இனிப்புக்கு இருக்கவே இருக்கிறார் அசின், ஏலக்காய் முந்திரிப்பருப்பாக வடிவேலு மற்றும் பிரகாஷ்ராஜ். பொங்கல் வைக்கத்தெரியாத புது மனைவி முதல் முறை பொங்கல் வைத்து அதிசயமாக அது சுமாராவாவது இருக்கும் பட்சத்தில் ஒரு ஆச்சரியம் வருமே, அது போல கொஞ்சம் டிவிஸ்டுகள் (எனினும் எதிர்பார்க்கக்கூடியதே!) மொத்தத்தில் மசாலா பொங்கல். பொங்கல் கொஞ்சம் சுமாரா இருந்தாலும், இன்னும் நல்லா வெச்சிருக்கலாம்.

விஜய் அழகாக இருக்கிறார். ஸ்லிம்மாக. ட்ரிம்மாக. (நான் அஜித் ரசிகன் என்பதை நினைவில் கொள்க!) படு யூத்தாக இருக்கிறார். காஸ்டியூம்ஸ் கலக்கல். அதுவும் “நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்” பாடலில் படு ஸ்டைலாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார் என்று நான் சொல்லத்தேவையில்லை. ஆடுங்கடா என்ன சுத்தி பாடலில் பிரபு தேவாவும், விஜயும் ஒரே காஸ்டியூமில் ஆடுகிறார்கள். (படையப்பா ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் போல.) கருத்துப்!! பாடலும் நன்றாக இருக்கிறது. ரசிகர்களுக்கு செம தீனி.இந்த முறை ஓபனிங் பைட். ரஜினி எவ்வழியோ நானும் அவ்வழி என்கிறார் விஜய். ரஜினி பெயர் ஒரு முறையும் சந்திரமுகி பாடல் ஒரு முறையும் காட்டப்படுகிறது.தியேட்டர் கிழிகிறது.

ரசிகர்களை என்னவென்று சொல்ல? விஜய் வரும்போது விசில். பயங்கர சத்தம். சரி. அசின் வந்தார் அதற்கும் விசில், சத்தம்.அப்புறம் வடிவேலு வந்தார் அவருக்கு படு பயங்கர சத்தம். விஜய்க்கு கிடைத்ததைக் காட்டிலும் அதிகம். அதற்கப்புறம் பிரகாஷ்ராஜ் வரும் பொழுது அவருக்கு இன்னும் அதிகமான விசில் சத்தம். இதில் எல்லா முறையும் நானும் ஜோதியில் ஐக்கியமாகிக்கொண்டேன்.


எனது விசில் பயிற்சி தோல்வியைக் கண்டது. ஆனால் படத்தில் ஒரு காட்சி : விஜய் அசினை ஆட்டோவில் ஏற்றி விடுவதற்கு விசில் அடித்து ஆட்டோவைக் கூப்பிடுகிறார். அசின் விசிலடிப்பதை ரசித்து எனக்கும் சொல்லிக்கொடுங்க என்கிறார். விஜய் அவருக்கு பாடம் நடத்துகிறார். கொழுத்துங்க விஜய். இதுக்காகவாது விசிலடிக்க கத்துக்கணும், என்ன சொல்றீங்க?

படம் சூட்டிங் ஆரம்பித்த பொழுதிலிருந்து பிரபுதேவா எப்போ இன்டர்வியு கொடுத்தாலும் படத்தில் ஒரு லிப்ட் சீன் இருக்கிறது கவித்துவமாக வந்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். கவிதை (அசின்) இருந்ததே லிப்டுக்குள், அதனால் சொல்லியிருப்பாரோ? கவிதைதான். கத்துக்குட்டி கவிஞரின் முதல் கவிதை.

அசின் அழகாக இருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் வருகிறார். பிற்பாதியில் பாடலுக்கு முன்னால் மட்டுமே வருகிறார். விஜய் படத்தில் அவர் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

வடிவேலு அமர்க்களம். சிரிப்புக்கு கியாரண்டி. விஜயை வேவு பார்க்க பல கெட்டப்புகளில் (சிம்புவைப் போல கண்ணாடி அணிந்து கொண்டு இறங்கு மீசையும், உதட்டுக்கு கீழ் தாடியுமாக வருவது சூப்பர்) வரும்பொழுதெல்லாம் விஜயின் நண்பர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள கடுப்பான வடிவேலு, ஏண்டா இவ்வளவு கஷ்டப்பட்டு கெட்டப் சேஞ்ச பண்ணிட்டு வந்திருக்கிறேன் இவ்வளவு ஈசியா புடிக்கிறீங்களே, கெட்டப்புக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கடா என்று புலம்புவது சிரிக்கவைக்கிறது.

சுட்டும் விழிச் சுடரே பாடலுக்கு வடிவேலுவும், அசினும் ஆடுவது சூப்பரோ சூப்பர். வடிவேலுவில் எக்ஸ்பிரசன் மற்றும் பாடி லாங்வேஜ் கேட்கவே வேண்டாம்.

பிரகாஷ்ராஜ் எப்பொழுதும் போல. அவர் வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார். நெப்போலியன் அவரை கைது செய்து செல்லில் அடைத்து, சுற்றி நிற்கும் போலீஸ்காரர்களிடம், இவன் தூங்கினால் அடிங்க என்று சொல்லிவிட்டு சென்று விட, பிரகாஷ்ராஜ் தூக்கம் தள்ளத் தள்ள தூங்காமல் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பது சிரிக்கவைக்கிறது.

ஒரு கவர்ச்சி பாடல் வேறு. என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கு யாரோ நடனம் ஆடினார். யாரென்று தெரியவில்லை.(தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்). பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பர் : ஆப்பிளா? தர்பூசணி மாதிரி இருக்கா! என்றார்.

சில ரசிக்கத்தகுந்த சமாச்சாரங்கள் இருந்தாலும் படத்தில் தொய்வு இருந்து கொண்டேயிருக்கிறது. இன்டர்வெல் விட்ட பொழுது இப்பொழுதுதான் இன்டர்வெல்லா என்று கேட்கும் அளவுக்கு. கடைசியில் படம் முடிந்த பொழுது ஆடுங்கடா என்ன சுத்தி பாடல் எப்பொழுதோ ரொம்ப நேரத்துக்கு முன்னால் கேட்ட மாதிரி இருந்தது.

ஆனந்த விகடனில் வந்த ஜோக்:
“சுவீட் கடைக்காரர் விஜயை வைத்து படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?”
“பேக்கரி”

பிரபுதேவாவின் டச் அங்காங்கே தெரிந்தாலும் இது முழுக்க முழுக்க விஜய் படமே!

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 2

தொழிற்சாலைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தொகை அடர்ந்த பகுதியில், மக்கள் வீட்டுக்குள்ளே தான் இருந்தனர், நல்ல உறக்கத்தில். தூரத்து இடியின் ஓசை போல ஒரு சத்தம் அவர்களை தூக்கத்திலிருந்து விடுவித்தது, மற்றொரு தூக்கத்தை நோக்கி அழைத்தது. அவர்கள் மெதுவாக வீடுகளை விட்டு வெளியேறியபோது பயம் கலந்த அலறல் சத்தத்தையே கேட்டனர். சிறிது தூரத்தில் தொழிற்சாலைக்கு மேல் வெண் மேகங்களைக் கண்டனர். எங்கோ தீ பிடித்திருக்கிறது என்று தவறாக எண்ணிக்கொண்டனர். கூர்ந்து கவனித்தவர்கள் மட்டுமே தொழிற்சாலைக்கு வெளியே பைப்பின் வழியே நச்சுப்புகை வெளியேறிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர்.

பிளாட்பாரத்தில் பாதுகாப்பின்றி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் முதலில் உயிரிழந்தனர். அதில் ஏனையோர் குழந்தைகள். மறுநாள் காலை அவர்களது உடல்கள் போர்வைகளால் மூடப்பட்டிருந்தது. ஊயிரிழந்தப்பின் பாதுகாப்பு. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றோர்கள் – ஓடி தப்பிக்க முடியாதவர்கள்- பெரிய எண்ணிக்கையின் மாண்டனர்.

முடிந்தவர்கள், ஓடினர். கூக்குரலிட்டு, தட்டுத்தடுமாறி, அருகில் இருந்தவர்களை இழுத்துக்கொண்டு அவர்கள் எந்த திசைகளிலெல்லாம் ஓடமுடியுமோ, அந்த திசைகள் எங்கும் ஓடினர். குழப்பத்தில் சிலர் தொழிற்சாலையை நோக்கி ஓடினர் – நச்சுபுகையின் பிறப்பிடத்தை நோக்கி.

அதற்கப்புறம் அந்த நகரம் தான் இது வரை சந்தித்திராத மிகப்பெரிய குழப்பத்தை சந்தித்தது. குடும்பங்கள் பிரிந்தன. மிக வேகமாக ஓட முடியாதவர்கள் எஞ்சி நின்றனர். பெண்கள் சாலைகளில் விழுந்து கிடந்தனர். பீதியில் கண்மூடித்தனமாக ஓடியதில் குழந்தைகள் நசுக்கப்பட்டனர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு எதிர்திசையில் வந்தவர்களை முட்டித்தள்ளினர். சிலர் லாரிகளிலும், டெம்போக்களிலும், ஆட்டோவிலும், ரிக்ஷாவிலும் ஏறினர். வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஏறிக்கொண்டனர். அவர்களது கார்கள் வழியெங்கும் பீதியடைந்த கும்பல்களால் வழி மறிக்கப்பட்டன. அவர்கள் கார்களின் மேல் ஏற முற்பட்டனர். அதற்கப்புறம் சில நேரத்தில் இராணுவம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது.

இராணுவம் தங்களால் முடிந்தவரை மக்களை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். வாகனங்கள் ஏற்படுத்திக்கொடுத்தனர். முதல் இரண்டு நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊரை விட்டு வெளியேறினர்.

போபாலின் வெளிபுறத்தில் பலர் உடல் பாதிக்கப்பட்டு பயத்துடன் உரைந்து கிடந்தனர்.தனிமையில் கைவிடப்பட்ட அவர்கள் தங்களது உறவுகளைத்தேடி அலைந்தனர். கோபமடைந்த சில மக்கள் மருத்துவமனை நோக்கி நடந்தனர். ஹமீதியா மருத்துவமனை (Hamidia Hospital) முதல் நாளிலே 25000 பாதிக்கப்பட்ட மக்களை சிகிச்சைக்குள்ளாக்க முயன்றது. அது எந்த வகையிலும் அந்த மருத்துவமனையால் சமாளிக்க முடியாத எண்ணிக்கை. தொடர்ந்து வேலை செய்த கலைப்படைந்த மருத்துவர்கள் தங்களால் முயன்றதை இயன்றதை செய்தனர். அருகிலிருந்த காந்தி மருத்துவ கல்லூரியில் (Gandhi Medical College) உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் எழுப்பி உதவிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழப்பத்தில் மருத்துவர்கள் பலருக்கு இறப்பு சான்றிதழ் (Death Certificate) வழங்க மறந்தனர். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னர் மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இரவு முழுதும் நகர்ந்த புகை ஏரியை நோக்கி சென்றது. ஏரி தனது ஈரப்பதத்தால் புகையின் நச்சுத்தன்மையை தளர்வடையச் செய்தது. சொல்லப்போனால் எஞ்சியிருந்த மக்களை காப்பாற்றியது அந்த ஏரி தான்.

இந்த பேரிடர் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது காலை ஒரு மணிக்குப் பின்னர் தான். ரோந்துப் பணியிலிருந்த காவலர் ஒருவர் தனது கன்ட்ரோல் ரூமிற்கு வயர் லெஸ் செய்தி அனுப்பினார். கன்ட்ரோல் ரூமிலிருந்து எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. எஸ்.பி சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தார்.

அதிர்ச்சியும் குழப்பமும் எங்கும் நிறைந்திருந்தது. யாருக்கும் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. புகையின் இயல்பினை யாரும் அறிந்திருக்கவில்லை.தீயணைப்பு படையினரும், டாக்டர்களும், ஆம்புலன்ஸ்களும் துரிதமாக செயல்பட்டும், மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களது சேவைகள் பல முறை துண்டிக்கப்பட்டன. மாணவர்களிடமும், இராணுவத்திடமும், காவல்துறையினரும், இன்னபிற மக்களின் சேவைகள் ஒருங்கிணைப்பின்றி சிதறிக்கிடந்தன. இணைக்க யாரும் இல்லை. ஆனால் அவர்களது சேவைகளில் துணிச்சலும், தீர்க்கமும், சோர்வின்மையும் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் எவரிடத்திலிருந்து உதவி உடனடியாக கிடைத்திருக்க வேண்டுமோ அவர்கள் மிகுந்த அமைதியைக்கடைப்பிடித்தனர். UCIL ஐ தொடர்பு கொள்ள முயன்ற டாக்டர்களும், காவல்துறையினரும் தொடந்து தொடர்பு கொள்ள முடியாமல் திண்டாடினர். அவர்களிடமிருந்து பதிலே இல்லை. சொல்லப்போனால் யாரைத்தொடர்பு கொள்வது, அங்கே தான் யாருமே இல்லையே. பெரும்பாலான தொழிலாளர்கள் இடத்தை காலி செய்திருந்தனர். அடுத்த சில நாட்களுக்கு UCIL தனது மௌன பாதையைத் தொடர்ந்தது.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் மத்தியபிரதேச அரசே குழப்பமடைந்தது போலிருந்தது. முதலில் மக்கள் பயப்படத்தேவையில்லை என்று பொது அறிவிப்பு வெளியானது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பிறகு காலை இரண்டு மணியளவில், காவலர்கள் மக்களை உடனே ஊரைக் காலிசெய்யுமாறு கூறினர். அதற்குப்பிறகு நடந்த குழப்பத்தில் போலீசார் இரண்டு விசயத்தை மக்களுக்கு அறிவுறுத்தத்தவறினர். அது, முதலில், மூக்கைச் சுற்றியும், வாயைச் சுற்றியும் ஒரு ஈரத்துண்டைக் கட்டிக்கொள்வது. மற்றொன்று, காற்று வீசும் திசைக்கு எதிரே ஓடுவது.

இந்த நாளில் பிறந்த ஒரு பெண் குழந்தை – படத்தில் இருப்பவர்- “கேஸ் தேவி” என்றழைக்கப்படுகிறார். இவருக்கு தற்போது 21 வயதாகிறது.

எத்தனை மக்கள் அந்த இரவில் மாண்டனர்? திட்டவட்டமாக எதுவும் கூற இயலாது. UCIL ஐ சுற்றியிருந்த பகுதிகளில் – ஜெயபிரகாஷ் நகர், சோலா கேச்சி, காஜி கெம்ப் மற்றும் நிஷாத் பூர் – தான் இழப்பு அதிகமாக இருந்தது. இவர்கள் தொழிற்சாலையிலிருந்து 200-300 மீட்டர் தொலைவிலேதான் இருந்தனர். அரசு காட்டிய எண்ணிக்கை 2000. புதைப்பதற்கு பயன்படுத்தப் பட்ட துணிகளின் எண்ணிக்கை, 8000 மக்கள் இறந்திருக்ககூடும் என்று சொல்கிறது. அதற்கப்புறம் வாரம், மாதம், வருடக்கணக்காக இறந்த பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டியது.

உண்மையாக, அன்றைய பெரிய பிரச்சனை இறந்தவர்கள் அல்ல. பின்னாட்களில் அவர்கள் அடையாளம் காணப்படாமல். யாரும் சொந்தம் கொண்டாடாமல், மொத்தமாக புதைக்கப்பட்டனர். எரிப்பதற்கு மரம் இல்லாமல் போகவே மண்ணென்னெய் ஊற்றி இறந்தவர்களை எரித்தனர். இடம் பத்தாமல் ஏற்கனவே, எப்போதோ புதைத்த இடங்களைத் தோண்டினர்.

ஆனால் தொடர்ந்து உயிரோடிருந்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மூச்சுதிணறல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, சில சமயம் கண் பார்வையைப் பறிகொடுத்து, அவர்கள் ஒரு முடிவேயில்லாத ஒரு கொடிய கனவை கடந்து கொண்டிருந்தனர்.

அடுத்த சில நாளில் அரசு மறுபடியும் மறுபடியும் உணவு, காற்று மற்றும் தண்ணீர் சுத்தமாகி விட்டது என்று அறிவித்துக்கொண்டேயிருந்தது. ஆனால் உண்மையாக இவை சோதனைகு உட்படுத்தப்படவில்லை. 1600 க்கும் மேற்பட்ட விலங்குகள் -நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள்- இறந்தன. விலங்குகளின் அழுகிக்கொண்டிருக்கும் உடல்கள் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயத்துடன் இருந்தன. முடிவாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பத்து புல்டோசரின் துணையுடன் அவை புதைக்கப்பட்டன. பிளீச்சிங் பவுடரும், காஸ்டிக் சோடாவும் காற்றின் நச்சுத்தண்மையை நீக்க தூவப்பட்டன.

ஆல்-இண்டியா-ரேடியோ இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு போப்பாலில் நிலமை கட்டுக்குள் வந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் போப்பால் மக்கள் குடித்த தண்ணீர் தூய்மையாக இருந்ததா? மற்றொரு கசிவு ஏற்படுமா? உடம்பில் MIC இனால் ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமா அல்லது தற்காலிகமாகத்தான் இருக்குமா? உண்மையான பதில்கள் மக்களுக்கு கிடைக்க வில்லை. யாருக்கும் தெரியவில்லை.

பீதியடைந்திருந்த மக்கள் யார் என்ன சொன்னாலும் உடனே நம்பினர். சின்னச்சின்ன வதந்திகள் கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் மறுபடியும் இலக்கில்லாமல் ஓடத்தொடங்கினர். மக்கள் உஜைனுக்கும், சேகோருக்கும், இந்தோருக்கும் ஓடினர். அங்கே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். போப்பால் வெறுமை அதிகரித்தது. அது பேய் நகரமாக மாறியது.

 

ஆயிரம்கால் இலக்கியம் – 5

ன்னுடைய அப்பத்தாவுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று மூக்கு பொடி. கடைசி வரைக்கும் அவர் அவராகவே பொடி வாங்கிக்கொள்ளும் தெம்புடன் தான் இருந்தார். சில நேரங்களில் எங்களை வாங்கி வரச் சொல்லுவார். அவர் பட்டணம் பொடி மட்டுமே போடுவார், வேறு எந்த பொடியையும் தொடக்கூட மாட்டார். பட்டணம் பொடி வாங்குவதற்கு ஆனந்தா தியேட்டர் வரைக்கும் போக வேண்டும். அதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும். நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு வீட்டிற்கு அருகிலே இருக்கும் பலசரக்கு கடையில் ஏதோ ஒரு பொடியை வாங்கிக்கொடுத்து ஏமாற்றி விட முயற்சித்திருக்கிறேன். ஆனால் டப்பியைத் திறந்தவுடன் அவர் கண்டுபிடித்து விடுவார். எனக்கு எரிச்சலாக வரும், முக்கு கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன, ஐயர் கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன (குமுதம், உங்களுக்கு நியூஸ் கிடைத்து விட்டது. ஐயர் கடையை இழிவாக பேசினாரா முத்து? என்று செய்தி போட்டுக்கொள்ளுங்கள்!), வடை வடை தானே? பொடி பொடி தானே? சிலருக்கு ஆமாம். சிலருக்கு இல்லவே இல்லை. சில விசயங்கள் சிலருக்கு எப்போதும் போலவே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பிடிக்காது.

சமீபத்தில் வார பத்திரிக்கை ஒன்றில் படித்த சிறுகதை இது. எழுதியவர் யார் என்று வழக்கம் போல் மறந்து விட்டது. நானும் கதை படித்தவுடன் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைக்கிறேன். எழுதி வைப்பதற்கும் மறந்து விடுகிறது. மேலும், சில கதைகளைப் படித்து விட்டு, ஆயிரம் கால் இலக்கியம் எழுதவேண்டும், என்ன கதை சொல்லலாம் என்று யோசிக்கிற பொழுது, மனதிற்கு சட்டென கிடைக்கும் கதைதானே நல்ல கதை. அது தானே மனதில் நின்ற கதை!

கதையில் வருவதைப் போல பழைய காலத்து கிராமபோன் ரெக்கார்ட் உபயோகித்து பாடல்கள் ஒலிபரப்பும் டீ கடைகளுக்கு (அல்லது ஹொட்டல். ஆனால் அங்கு டீ மட்டுமே கொடுப்பார்கள்!) நான் போனதில்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஐடியா நன்றாக இருக்கிறது. அதுவும் டீ அருந்த வருபவர்களுக்கு, மணக்க மணக்க ஏலக்காய் டீயுடன் அவர்கள் விரும்பிய பாட்டை ஒலிபரப்பினால் நன்றாகத்தானே இருக்கும். யாருக்குத்தான் விருப்பமான பாடலைக் கேட்டுக்கொண்டே தேனீர் அருந்த பிடிக்காது?

(இங்கே கூட கோமலவிலாசில் தானியங்கி பாடல் ஒலிபரப்பி இருக்கிறது. சில சீடிக்களின் பாடல்களின் வரிசைகள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலுக்கு அருகிலும் ஒரு நம்பர் இருக்கும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுத்து அந்த நம்பரை அழுத்த வேண்டும். பிறகு முக்கியமான விசயம் – ஒரு டாலர்- போட வேண்டும். இரண்டு பாடல்களுக்கு ஒரு டாலர். கொஞ்சம் காஸ்ட்லி தான். நான் எப்பொழுதும் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சத்யாவிலிருந்து “வளையோசை” யும், நிழல்களிலிருந்து “பூங்கதவே தாழ் திறவாய்” பாடலும் தான். பாடலை ஒலிக்க செய்து விட்டு, ஒரு மூலையில் காபியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து மக்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பூரிக்களும், மசால் தோசைகளும் ரசிக்கப் படும் அளவுக்கு பூங்கதவே தாழ் திறவாய் ரசிக்கப் படுவதில்லை என்பது தான் உண்மை. மேலும் சாப்பிட்டுக் கொண்டே பாடலை ரசிக்க முடியாது. ஆனால் டீ குடித்து கொண்டு கண்டிப்பாக ரசிக்க முடியும். சில சமயங்களில் சீடிக்களை மாற்றி விடுவார்கள். நாம் விரும்பும் பாடல் கிடைக்காது. ஆனால் எப்பொழுதும் பூரி கிடைக்கும்.)

அவ்வாறான ஒரு கடைக்கு தினமும் சரியாக மதியம் மூன்று மணிக்கு ஒரு நபர் வருவகிறார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழுக்கு பிடித்தவராக, சிக்கு பிடித்த தலையுமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே காட்சியளிக்கிறார்.அவருக்கு பிடித்தமான பாடல் புதிய பறவை திரைப்படத்தில் வரும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் தான். இந்தக் கதையை சொல்பவர் பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அந்த கடையில் ஆபரேட் செய்பவர். அதாவது கிராமபோன் ஜாக்கி.

அவர் (டீ அருந்த வருபவர்) ஒரு நாளும் ஜாக்கியுடன் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எப்பொழுதும் சரியாக மூன்று மணிக்கு வந்தவுடன் ஜாக்கியைப் பார்ப்பார். ஜாக்கி தயாராக எடுத்து வைத்திருக்கும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலை ஒலிபரப்புவார். புதிய பறவையின் பழைய கிராம போன் ரெக்கார்ட் சுழல ஆரம்பிக்கும். பாடல் முடியும் வரை மிக ஆழ்ந்த மவுனத்தில் இருப்பார் அவர். அவர் கண்கள் எதையோ வெறித்துக்கொண்டேயிருக்கும். பாடலில் இருக்கும் சோகம் அவர் கண்களில் வழிந்தோடுவதைப்போல இருக்கும். பாடல் முடிகிற வரை டீ குடித்துக்கொண்டிருப்பார். பாடல் முடிந்ததும் எழுந்து சென்று விடுவார். ஒரு முறை கூட மறுமுறை ஒலிபரப்பசொல்லி கேட்டதில்லை. ஒரு நாளும் கடைக்கு வரத் தவறியதுமில்லை. ஒரு நாளும் பாதி பாடலில் எழுந்து சென்றதில்லை. ஜாக்கியைப் பொருத்தவரை அவர் மிகவும் வினோதமானவர்.

ஒரு நாள், அந்த நபர் அதே போல் கடைக்கு வந்து பாடலைக் கேட்டுவிட்டு வெளியேறிசென்றவுடன், ஜாக்கி தவறுதலாக ரெக்கார்டை கீழே போட்டு உடைத்துவிடுகிறார். உடைத்ததும் அவருக்கு அந்த நபரின் ஞாபகம் வந்து விடுகிறது. ஐயோ நாளைக்கு மறுபடியும் வருவாரே, ரெக்கார்டுக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்கிறார். புதிய பறவையின் பழைய ரெக்கார்டை எங்கே தேடுவது என்று அவர் மனம் அலைகிறது. தவிக்கிறது.

தனக்கு தெரிந்த நபர்களிடமெல்லாம் விசாரிக்கிறார். பழைய கடைகளிலெல்லாம் கேட்டு அலைகிறார். ஸ்டாக் இல்லையென்றோ, சீடி இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள் என்றோ தான் சொல்கிறார்கள் எல்லோரும். இவருக்கு தேவை கிராமபோன் ரெக்கார்ட். ஒரு வழியாக, பழைய கிராமபோன் ரெக்கார்டு இங்கே கிடைக்கும், என்ற அன்றைய பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, ஒரு மணி நேரம் பிரயாணம் மேற்கொண்டு அந்த வீட்டை சிரமப்பட்டு கண்டுபிடித்து விடுகிறார் ஜாக்கி.

அங்கே வீட்டில், முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், ஜாக்கியை உள்ளே அழைத்து ஒரு சிறிய கிராமபோன் கலைக்ஷனைக் காட்டுகிறார். அந்த கலெக்ஷன் அவருடைய தந்தையினுடையது என்றும், வேண்டுமானால் நீங்கள் இலவசமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாக்கியிடம் சொல்கிறார். மேலும் ஜாக்கியின் கிராமபோன் டீ கடையைப் பற்றி அவருக்கு தெரியும் என்றும், தந்தையும் அவரும் ஒரு முறை வந்திருப்பதாகவும் கூறுகிறார். மகிழ்ச்சியடைந்த ஜாக்கி அந்த கலெக்ஷனில் புதியபறவையைத் தேடுகிறார். இருக்கிறது.

மிகுந்த சந்தோஷத்துடன் அந்த நபரின் வருகைக்காக அன்றைய தினம் காத்துக்கொண்டிருக்கிறார். சரியாக மூன்று மணிக்கு அந்த நபர் எப்போதும் போலவே சிக்கு மிடித்த தலையுடனும், அழுக்கு பிடித்த உடையுடனும் வந்தமர்கிறார். டீ சொல்லிவிட்டு ஜாக்கியைப் பார்க்கிறார். ஜாக்கி பாடலை ஒலிபரப்புகிறார்.

பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென்று பாதி பாடலிலே எழுந்து வெளியே செல்கிறார். இது நாள் வரையில் பாடல் முடிகிற வரையில் எழுந்து செல்லாதவர், இப்பொழுது ஏன் போகிறார் என்று புரியாத ஜாக்கி ஓடிச்சென்று அவரிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அவர் ஜாக்கியை சற்று நேரம் பார்த்து விட்டு, பழைய ரெக்கார்ட் என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஜாக்கி பழைய ரெக்கார்ட் உடைந்து விட்டது என்றும், அதற்கு பதில் தான் பல இடங்களில் அழைந்து திரிந்து இந்த ரெக்கார்டை வாங்கி வந்ததாகவும் சொல்கிறார். ஏதும் பேசாமல் நின்ற அந்த நபர், பழைய ரெக்கார்ட் “அந்த நிலவைக்கேள் அது சொல்லும்” என்ற வரி வரும் இடத்தில் ஒரு முறை திக்கும், ஒரு மைக்ரோ செக்கண்ட் நிற்கும், இப்பொழுது இந்த புதிய ரெக்கார்டில் அது இல்லை என்று சொல்லிவிட்டு, சென்று விடுகிறார்.

அதற்கப்புறம் அந்த நபர் அந்த கடைக்கு வரவேயில்லை.

அந்த நபருக்கும் அந்த ரெக்கார்டிலிருக்கும் – பிறருக்கு தெரியாத, ஏன் அந்த ஜாக்கிக்கே தெரியாத- கீரலுக்கும் அப்படி என்ன உறவு? சில விசயங்களுக்கு, வாழ்க்கையில் மாற்று (replacement) என்பதே இல்லை, இல்லையா?

(தொடரும்)

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். மாட்டுப் பொங்கல் கொண்டாடுறவங்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த greetings copy rights reserved. :)))))))

greetings ல ஹேப்பி பொங்கலே தெரியலங்கறவங்க, pls click பண்ணி பாத்துக்கோங்கப்பா, அவ்ளோ தான் இடம் இருந்தது. 😦

அது சரி, திரிஷாவுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டீங்கன்னா, ஆச தோச அப்பளம் வடை நான் பதில் சொல்ல மாட்டென்! 😦 ஆனாலும் உங்களுக்கு விக்கிரமாதித்தன் போல பதில் தெரியாட்டி மண்டை வெடித்து விடுமாயின் சன் டீவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் திரிஷா (அல்லது பாவனா அல்லது வேறு எந்த நடிகையின்) பேட்டி வந்தால் சன் டீவியைக் கேளுங்கள், அவர்களுக்காவது தெரிகிறதா பார்ப்போம்!