இன்னும் அதிர்கிறது என் இதயம் ..

உலகில் உள்ள அனைத்து காதல் தேவதைகளும் தபூ சங்கரிடம் தான் குடி கொண்டிருக்கின்றன போலும் அதனால் தான் அவர் தும்மினால் கூட காதல் கிருமிகள் தான் காற்றை நிறப்புகின்றன. இதோ என்னை அட்டாக் செய்தகிருமிகள் சில. முகமூடி அணிந்துகொண்டு வாருங்கள், இவை அந்தராக்ஸ் கிருமியை விட பயங்கரமானவை.

—————————————-
சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.

——————————

சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி
——————————-

இந்த மலையைக் குடைந்து
ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது
———————————

உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்துப் பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.
————————————————

நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.

சூரியனோ
உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறது.
——————————————————–

சிறுமியைப்போல்
கடல் அலையில் கால் நனைத்து
விளையாடிக்கொண்டிருந்தாய்
கடலோ
கொந்தளித்துக்கொண்டிருந்தது
———————————————-

உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காயவைத்திருக்கிறாயே
இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்.
——————————————–

எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இலலையே
———————————–

ஞாபகம் இருக்குமா ?

கவிஞர் அறிவுமத்தியின் ‘நட்புக்காலங்கள்’ கவிதையை எத்தனை முறை படித்தாலும் அத்தனை முறையும்புத்தம் புதிதாகவே இருக்கும்.
என் மனதை தொட்ட சில கனங்கள்,

உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்லவாசகம்
தேடித் தேடி
உண்டான சலிப்பில்
உண்டானது
உனக்கான
என்
கவிதை
——————-
புரிந்து கொள்ளப்படாத

நாள்களின்
வெறுமையான நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குபிடித்தமான
உன்புன்னகை
——————–
நேரமாகிவிட்டது

எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரீகமானதுதான்
—————————
கடற்கரையின்

முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம் எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும்
—————————
பார்வையாளர் நாள்.

குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்கு துணையாய் இருந்த
உன் விடுதிஅணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை.
—————————

திங்கட்கிழமை தோறும் உபவாசம் இருங்கள்

திண்ணையில் திரு.செல்வன் ‘இந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்’ என்றகட்டுரை எழுதியிருந்தார், தலைப்பைப் பார்த்ததும் எதோ வீண் பழி கட்டுரை என்றே நினைத்து,படிக்கத் துவங்கிய எனக்கு, சில பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்திய அரசியல் தெரியாதஎனக்கு, இவை ஆச்சரியங்கள் தாம். இதோ ஆச்சரியங்கள் சில,

1. 1960-1992 வரை ஒரே வடிவமைப்பில் வந்த அம்பாசிடர் கார். 32 ஆண்டுகள், பல நாடுகள் ஆட்டோமொபைல் துறையில் அசுர வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில், நாம் ஒரே மாடல் கார்களையே செய்து கொண்டிருந்திருக்கிறோம்.
2. உணவுப் பஞ்சத்தை தீர்க்க உணவு இறக்குமதி செய்வதை விட்டு, மக்களை திங்கட்கிழமை தோறும் உபவாசம் இருக்கச்சொன்ன, பிரதம மந்திரி, மொரார்ஜி தேசாய்.
3. ஆசிய விளையாட்டு போட்டியை இந்தியா நடத்த வாய்ப்பு வந்த பொழுது அதை ஆடம்பரம் என்று மறுத்த, மொரார்ஜி தேசாய்.
4. கம்ப்யூட்டர் இறக்குமதி, தொலைதொடர்பு துறையில் முன்னேற்றம் என்று ராஜீவ் அரசு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, 1985 மே தினத்தை கம்ப்யூட்டர் எதிர்ப்பு தினமாக அறிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
5. பெட்ரோல் இறக்குமதி செய்ய காசில்லாமல், உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்த பின், ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங்க் ஆப் இங்கிலாந்திடம் அடகு வைத்து கடன் பெற்ற சந்திரசேகர் அரசு.

தங்கம் மீட்கப்பட்டதா என்று தெறியவில்லை.
சரி, இதில் இந்து வளர்ச்சி விகிதத்தை எவ்வாறு மன்மோகன் சிங் அழித்தார்?கட்டுரை பேசுகிறது,

“இந்து வளர்ச்சி விகிதம்” என குறிப்பிட காரணம் அப்போதைய கிழக்காசிய டைகர் எகானமி நாடுகளின் வளர்ச்சி விகிதம் தான்.தென்கிழக்கு ஆசிய நாடுகள்(பவுத்தம்) அசுர வேகத்தில் பாய்ந்து முன்னேறின.மேற்கத்திய நாடுகள்(கிறிஸ்துவம்) பெரும் வளர்ச்சி அடைந்தன.பெட்ரோல் காசு இஸ்லாமிய நாடுகளை பெரும் செல்வந்தர்களின் நாடாக்கியது.இப்படி அனைத்து மத நாடுகளும் அசுர வேகத்தில் முன்னேற, இந்தியா தேவ வேகத்தில்(இந்து வளர்ச்சி விகிதத்தில்) முன்னேறியதால் இவ்வளர்ச்சி விகிதத்தை “இந்து வளர்ச்சி விகிதம்” என கிண்டலாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர்.சோஷலிச செக்யூலரிஸ்டுகள் கொண்டு வந்த வளர்ச்சி விகிதம் அப்படி(##)….

1991ல் நரசிம்மராவ் ஆட்சிக்கட்டிலை ஏறினார்.மன்மோகன் சிங் நிதி அமைச்சரானார்.1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.சிங் பட்ஜெட்டை படிக்க படிக்க பங்கு சந்தை குறியிட்டு எண் விஷம் போல் ஏறியது.இடதுசாரிகளின் ரத்த அழுத்தம் அதை விட அதிக வேகத்தில் ஏறியது.சிங் பட்ஜெட்டை படித்து முடித்ததும் பொருளாதார நிபுணர்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.புதிய இந்தியா 1992ல் பிறந்தது.

வளர்ச்சி அடைந்த புதிய வல்லரசின்,மக்கள் நலன் பேணும் நல்லரசின் விதைகள் அன்று மன்மோகனாலும்,நரசிம்மராவாலும் விதைக்கப்பட்டன.நாரயணமூர்த்தி,ஆசிம் பிரேம்ஜி போன்றவர்களை உருவாக்கி,பல கோடி இளைஞர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார் மன்மோகன்.மன்மோகன் ஏற்றிய ஒளிவிளக்கை சிதம்பரமும்,ஜஸ்வந்த் சிங்கும்,யஷ்வந் சின்காவும் அதன் பின் மீண்டும் சிதம்பரமும் அணையாமல் கொண்டு சென்றனர்.

1992 பட்ஜட்டை படைத்ததற்காக மன்மோகனை இடதுசாரிகள் இன்னும் மன்னிக்கவில்லை.”வேலை செய்தால் தான் சம்பளம்” என்று சொல்லிவிட்டாரே என்று கோபம் அவர்களுக்கு.”உழைப்பவனுக்கு தான் உயர்வு,சுறுசுறுப்பானவனுக்கு தான் முன்னேற்றம்,சோம்பேறிக்கு ஆப்பு” போன்ற கொள்கைகளை கொண்டு வந்ததால் புதிய பொருளாதார கொள்கையே பிடிக்காமல் போய்விட்டது காம்ரேடுகளுக்கு.
‘இந்து வளர்ச்சி விகிதத்தை’ ஒழித்துக்கட்டி, நவீன இந்தியாவை படைத்த பாரதத்தின் புதிய கடவுளான மன்மோகனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினாலும் நாம் அவருக்கு பட்ட நன்றிக்கடன் தீராது.”

சுஜாதாவும் என் கல்லூரித் தோழியும்

விகடனில் சுஜாதா எ.பி.க பகுதியில் குறிப்பிட்ட கவிதை,

குப்பையை
கிளறுவது கோழியல்ல
கோனிப்பையுடன்
சிறுவன்

இதை படித்தவுடன் எனக்கு என் கல்லூரித் தோழி எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது,

பூக்காரி
பூ
விக்கிறாள்
பரட்டைத் தலையுடன்

நாங்கள் அன்று அவளின் கவிதையை படித்து நன்றாகச் சிரித்தோம்.
ம்ம்ம்ம்…? தலைப்புக்கு மன்னிக்கவும்!!!!

கலக்கறே சந்துரு

புது சட்டை…
புது பேண்ட்டூ…….
புது வாட்ச்சூ……
புது மொபைலூ…..
புது ஷீ….
இரவல் வாங்கினா
திருப்பி கொடுத்துடனும்டா
சந்துரு…..

– ‘அன்புடன்’ இணைய குழுமத்தில் படித்தது

ஒரு பிளாஸ்டிக் டம்ளர்

அந்த பிளாஸ்டிக் டம்ளர்
விருந்தொன்றில் நீர் பருக
உபயோகிக்கப்பட்டது.
பிறகு கொஞ்சம் தேநீர்.
மறைவிடத்தில் கழுவப்பட்டு
மறுபடியும் நீர், தேநீர், பாயசமென
சுழன்ற அது எச்சிலைகளோடு எறியப்பட்டது.
விளையாட்டு சிறுவர்கள்
தன் சிறுநீர் துளிகளை
அதில் வழியச் செய்தனர்.
காற்றின் கருணையால்
பெருநகர வீதிகளை கடந்து
காடு மலையென அலைந்து திரிந்தது
கொடும் பசிகொண்ட நாயொன்று
அதை முகர்ந்து பார்த்துவிட்டுப் போனது.
மரணமிலா இழிவாழ்வால்
துவண்டிருந்த அதை,
அதை போலவே காடுகளில்
அலைந்து திரியும்
சற்றேறக் குறைய பைத்தியம் எனப்பட்ட
ஒருவன் தொட்டு தூக்கினான்
சுனைநீரால் நீராட்டினான்.
அவனால் கொஞ்சம்
மதுரசம் ஊற்றப்பெற்ற அது
சாபம் நீங்கி
பொற்கலயமானது.

இசை, கணையாழியில் இருந்து.

ராம ராஜ்ஜியம் ராவண ராஜ்ஜியம்

திசைகள் இணைய தளத்தில் திரு. சொக்கனின் ‘ராம ராஜ்ஜியம் ராவண ராஜ்ஜியம்’ கட்டுரையை படிக்க நேர்ந்தது. அவர் சொன்ன கருத்துக்கள் மிகவும் ஏற்புடையதாக இருந்தது. அதிலும்,

‘இன்றைய சூழலில், நடுத்தரப் பொருளாதாரநிலையில் இருக்கும் ஓர் இளைஞனோ, குடும்பமோ அரசியலை, அரசியல்வாதிகளைக் கொஞ்சமும் நம்பாமல், எதிர்பார்க்காமல் தங்களின் வாழ்வைச் சுலபமாக அமைத்துக்கொண்டுவிடலாம்.

தனியார் நிறுவனங்கள் பெருகிவிட்டன, அரசு வேலைக்கு அவசியம் இல்லை, தேவையும் இல்லை, படிப்பதற்கோ, கல்யாணம் செய்வதற்கோ, வீடு கட்டுவதற்கோ கடன் தேவைப்பட்டால், (அநியாய வட்டியானாலும்) அதைத் தருவதற்குப் பன்னாட்டு வங்கிகள் வரிசையில் காத்திருக்கின்றன, மின்சாரத்தில் தொடங்கி, அடிப்படை விஷயங்கள் எல்லாவற்றையும் ஆனை விலை, குதிரை விலை கொடுத்தாவது வாங்கப் பழகிவிட்டோம், ஒருவேளை பிற உள்கட்டுமான வசதிகளில் குறை இருந்தாலும், ‘நம்ம ஊர்ல எல்லாமே இப்படித்தான்’ என்று சலித்துக்கொண்டு, அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்தப் போய்விடுகிறோம்.இப்படிப்பட்ட நவீன வாழ்க்கையில், ஆட்சியாளர்கள் என்பவர்கள் யார்? எதற்கு?’

மிக மிகச் சரியான கருத்து. மக்கள் கவனிப்பது இருக்கட்டும், முதலில் எதிர்கட்சிகள் கவனித்தார்களா?கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை முறை எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின? போராட்டங்கள் இல்லையென்றால், கடந்த ஆட்சியில் தவறுகளே இல்லையா?