உங்களுக்கு ஒரு விளையாட்டு : Observation

உங்களுக்கு ஒரு பரிட்சை வைக்கிறேன். கிழே ஒரு வீடியோவுக்கான லிங்க் இருக்கிறது. அந்த வீடியோவில் நிறையப் பேர் பாஸ்கெட் பால் வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். சரியாகச் சொல்லப்போனால் பாஸ்கட் பாலை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்து கொண்டிருப்பார்கள். இந்த வீடியோ மொத்தம் 25 வினாடிகள் தான் ஓடும். அதற்குள்ளாக நீங்கள் ஒரு விசயத்தைக் கவனித்து கணக்கிட வேண்டும். என்னவென்றால் எத்தனைமுறை பந்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்யப்பட்டது என்பது தான் அது. Just count howmany times the ball is passed. ரெடியா?இது உங்கள் கவனத்தைச் சோதிக்கும் வீடியோ. வீடியோ இங்கே இருக்கிறது.
1.2.3……25..26..27
பார்க்காமல் கீழே இருப்பதைப் படிக்காதீர்கள். ஒரு 25 வினாடி செலவிட்டால் தான் என்ன? பிஸியா? ஓகே. பிறகு எதற்கு பதிவு படிக்க வந்தீர்கள்? போங்க சார் போய் பாத்துட்டு வாங்க!
பாத்தாச்சா?

இப்பொழுது பதில் சொல்லுங்கள்:
1. மொத்தம் எத்தனை முறை பந்து பாஸ் செய்யப்பட்டது?
2. ஓகே. வீடியோவின் நடுவில் ஒரு கொரில்லா வந்ததே பார்த்தீர்களா?

பார்த்தவர்கள் நாம நெக்ஸ்ட் மீட் பண்ணலாம். பாக்காதவர்கள் மட்டும் நியாயமாக பின்னூட்டம் இடுங்கள் ப்ளீஸ்.

ஓகே இப்பொழுது விசயத்துக்கு வருவோம். illinoisஇல் வேளை பார்த்துவரும் புரபொஸர் Daniel J Simons என்பவர் கண்களின் சாட்சியை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக உபயோகித்த எடுத்துக்காட்டு தான் இது. இந்த விளையாட்டில் எத்தனை முறை பந்துகள் பாஸ் செய்யப்பட்டது என்பதைக் கணக்கிட வந்தவர்கள் பெரும்பாலோனோர் இளம் வயதினர் தான். அவர்கள் எல்லோரும் விளையாட்டைப் 25 வினாடிகள் பார்த்து முடித்தவுடன் அவர்களிடம் “நீங்கள் எத்தனை பேர் கொரில்லாவைப் பார்த்தீர்கள்?” என்று கேட்கப்பட்டதாம். நிறையப் பேர் கொரில்லா வந்ததை கவனித்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இத்தனைக்கும் இந்த 25 வினாடி விளையாட்டில் கிட்டத்தட்ட 9 வினாடிகள் (நிகிழ்ச்சி நடந்த நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல்!) கொரில்லா சூட்டில் ஒருவர் வந்து நின்று என்னைப்பார் என்னைப்பார் என்று கை காட்டியும் நிறையப்பேர் பார்த்திருக்கவில்லையாம்!

இப்பொழுது வீடியோவில் பார்க்கும் பொழுது அப்பட்டமாக கொரில்லா வருவது தெரிகிறது. ஆனால் கொரில்லா வரும் என்பது எனக்கு முன்னமே தெரியும். (Richard Dawkins எழுதிய The Greatest Show On Earthஇல் இதைப் படித்துவிட்டுத் தான் இந்த வீடியோவைத் தேடிக்கண்டுபிடித்தேன்). உங்களுக்கு முன்னமே தெரியாதல்லவா?

இந்த லட்சனத்தில் இருக்கிறது கண்களின் சாட்சி. அதற்காக கண்கள் காண்பது எதையும் நம்பக்கூடாது என்பதல்ல கருத்து. வித்தியாசம் இருக்கிறது. இவன் தான் கொலை செய்தான் நான் பார்த்தேன் என்பதற்கும் ஒரு எக்ஸ் ரே ரிப்போர்டைப் பார்த்தோ அல்லது Large Hadron Colliderலிருந்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டைப் பார்த்தோ புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன தானே?

Symphony Of Science

இன்று யூடியூபில் அருமையான ஒரு வீடியோ பார்த்தேன். டைசன்,சாகன்,·பெயின்மேன் போன்ற விஞ்ஞானிகள் கொடுத்த பேட்டிகளிலிருந்து உருவப்பட்ட சில வாக்கியங்களை அப்படியே அருமையான பாடலாக மாற்றியிருந்தார் ஒருவர். வீடியோவை இங்கே பாருங்கள்.

டைசனின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

என் உடம்பில் இருக்கின்ற
அணுக்களை
அண்டம் வரையிலும்
தொடர்புபடுத்த முடியும்

தெருவில் நடந்துசெல்லும்
மனிதர்களைப் பிடித்து
தோளைக் குலுக்கி
உங்களுக்கு இது தெரியுமா
என்று கேட்கவேண்டும் போல்
இருக்கிறது

உண்மைதான்;சில விசயங்களைப் பற்றி படிக்கும் பொழுது அப்படித்தான் இருக்கும்.

**

[டைசன்]
நம் எல்லோருக்கும் தொடர்பு உண்டு
ஒருவரோடு ஒருவர் :உயிரியல் ரீதியாக
பூமியோடு : வேதியல் ரீதியாக
மீதமிருக்கும் அண்டம் முழுதுடனும் : அணுக்கள் வழியாக

[·பெயின்மேன்]
இயற்கையின் கற்பனைவளம்
மனிதனை விட பல மடங்கு பெரியது
அவள் நம்மை ஓய்வாக இருக்கவிடமாட்டாள்

[சாகன்]
நடுவிலிருக்கு அண்டத்தில்
நாம் வாழ்கிறோம்
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
சரிதான்
ஆனால் எல்லா மாற்றங்களும் விதிகளுக்குட்பட்டது
அதற்கு ஒரு மாதிரி இருக்கிறது
அதைத்தான் நாம்
இயற்கையின் விதிகள் என்கிறோம்.

[நேய்]
இந்த கிரகத்தின்
மேல் நான் நிற்கிறேன்
நான் ஒரு துகள் தான்
நட்சத்திரத்துடன் ஒப்பிடும் போது
இந்த கிரகம் ஒரு துகள் தான்
இதையெல்லாம் யோசிக்க..
பரந்து விரிந்து கிடக்கும்
வெறுமையான் அண்டத்தைப் பற்றி
யோசிக்க..
பில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன
பில்லியன் பில்லியன் துகள்கள் இருக்கின்றன..

[சாகன்]
உயிரினங்களின் அழகு
அதனுள்ளே இருக்கும் அணுக்கள் இல்லை
அந்த அணுக்கள் எல்லாம் எப்படி ஒன்றாக இருக்கின்றன
என்பதில் தான் இருக்கிறது.
அண்டம் நம்முள்ளும் இருக்கிறது
நாம் நட்சத்திரத்தால் செய்யப்படிருக்கிறோம்
அண்டத்தை அறிந்துகொள்ள
நாம் தான் வழி

எல்லையற்ற அண்டத்தில்
நட்சத்திரங்கள் சூரியன்கள்
இதுபோல நாம் பயனித்திருக்கிறோம்
இன்னும் நிறைய படிக்கவேண்டியதிருக்கிறது.

அணுக்களின் பரிணாம வளர்ச்சியை
அனுமதிக்கிற ஒரு அண்டத்தில்
வாழ்கிறேன் என்கிற சிந்தனை
எனக்கு பேரானந்தத்தைக்
கொடுக்கிறது.

[டைசன்]
என் உடம்பில் இருக்கின்ற
அணுக்களை
அண்டம் வரையிலும்
தொடர்புபடுத்த முடியும்

தெருவில் நடந்துசெல்லும்
மனிதர்களைப் பிடித்து
தோளைக் குலுக்கி
உங்களுக்கு இது தெரியுமா
என்று கேட்கவேண்டும் போல்
இருக்கிறது

[·பெயின்மேன்]
அண்டம் முழுவதும்
கணக்கிலடங்கா
எண்ணற்ற
குழப்பமான அலைகள்
இருக்கின்றன
ஒளி நம் அறையில்
இங்கும் அங்கும் பட்டுத்
தெரிக்கிறது
ஒரு பொருளில் இருந்து
மற்றொரு பொருளுக்கு
தாவுகிறது

அவை எல்லாமே இங்கு இருக்கிறது
நீங்கள் இதைப் பற்றி யோசிக்கவேண்டும்
இந்த சிக்கலைப் பற்றி யோசிக்க வேண்டும்
இது உங்களுக்கு ஆனந்தத்தைத் தரும்

அவை எல்லாமே இங்கு இருக்கிறது
புரிந்துகொள்ள முடியாத இயற்கையின் இயற்கை.

*

அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள்!

ஒரு குழ‌ந்தை அப்பாவிட‌ம் வ‌ந்த‌து. அப்பா அன்று மிகுந்த‌ க‌ளைப்புட‌ன் இருந்தார்.
“அப்பா அப்பா அண்ட‌ம் எவ்வாறு உருவான‌து?”
ஒரு நிமிட‌ம் யோசித்த‌ அப்பா, கேள்வி காதில் விழாத‌து போல‌, “ம்ம்ம் என்னடா செல்ல‌ம்” என்கிறார்.
“ம்ம்..அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள் அப்பா?”
“அண்ட‌த்தை க‌ட‌வுள் உருவாக்கினார்டா செல்ல‌ம். ம்ம்..எங்க‌ ஹோல்ட் யுவ‌ர் ஹேன்ட்ஸ் டுகெத‌ர்..ப்ரே நௌ..”
குழ‌ந்தை சொன்ன‌து போல‌ ப்ரே செய்கிற‌து.
அப்பா டீவியைப் போடுகிறார். அன்றைய‌ தின‌த்தில் இருநூறாவ‌து முறையாக‌ ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌டும் அந்த‌க்கால‌ம் இந்த‌க்கால‌ம் நிக‌ழ்ச்சியின் ட்ரெய்ல‌ரைப் பார்த்து அப்பா ல‌யித்துக்கொண்டிருந்த‌ பொழுது, மீண்டும் அந்த‌க் குழ‌ந்தை கேட்கிற‌து, “அப்பா..க‌ட‌வுளை யார் உருவாக்கினார்க‌ள்?”
அப்பா சொல்கிறார் “க‌ட‌வுள் எப்பொழுதுமே இருக்கிறார்!”

ச‌த்திய‌மாக‌ நான் சிறுவ‌னாக‌ இருந்த‌ பொழுது இந்த‌க் கேள்விக‌ளை நான் கேட்ட‌தில்லை. ந‌ம்மில் பல‌ரும் இந்த‌க் கேள்விக‌ளைக் கேட்டிருக்க‌மாட்டோம். முத‌ல் கேள்வியைக் கேட்டிருந்தாலும் இர‌ண்டாவ‌து கேள்வியை கேட்டிருப்போமா என்ப‌து ச‌ந்தேக‌மே. ஏன் நாம் இவ்வாறான‌ கேள்விக‌ளைக் கேட்க‌வில்லை என்ப‌து என‌க்குப் புரிய‌வில்லை.

நாம் ந‌ம‌க்கு புல‌ப்ப‌டாத‌ அல்ல‌து அறிவுக்கு எட்டாத‌ விச‌ய‌ங்களை க‌ட‌வுளிட‌ம் விட்டுவிடுகிறோம். ஆனால் அது மாபெரும் த‌வ‌று இல்லியா? தி மார்ச் ஆஃப் த‌ பென்குயின்ஸ் என்றொரு திரைப்ப‌ட‌ம் இருக்கிற‌து. உல‌க‌த்தில் உள்ள‌ எல்லா பென்குயின்க‌ளும் இன‌ப்பெருக்க‌ம் செய்து கொள்ள‌ ஒரே ஒரு இட‌த்துக்குத் தான் போகுமாம். போகும் பாதையில் ந‌ம‌க்கு இருப்ப‌து போல‌ வ‌ச‌தியாக‌ மைல்க‌ல்க‌ள் அவைக‌ளுக்கு இருக்காது. மேலும் இன்று எங்கு ப‌னி விழும் நாளை எங்கு ப‌னி விழும் என்று ஆண்ட‌வனுக்கே தெரியாம‌ல் இருக்கும் பொழுது பென்குயின்க‌ளுக்கு தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை. அந்த‌ ப‌னிக்காட்டில் அவை மிக‌ நுண்ணிய‌மாக‌ க‌ண‌க்கிட்டு த‌ங்க‌ள‌து இன‌ப்பெருக்க‌ இட‌த்தை அடைகின்ற‌ன‌. இது எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து? இன்ஸ்டிங்க்ட் என்கிற‌து அறிவிய‌ல்.

ஆனால் ஒரு ஆர்தோடாக்ஸிட‌ம் கேட்டால் க‌ட‌வுள் அழைத்துச்செல்கிறார் என்று பெருமையாக‌ அவ‌ர் சொல்ல‌க்கூடும். இந்த‌ ஒரு பொதுவான‌ ப‌திலால் அன்றைய‌ தின‌ம் நாம் த‌ப்பித்துக்கொள்ள‌லாம்; ஆனால் கேள்வி கேட்ப்பவ‌ரின் இன்ன‌ பிற‌ தொட‌ர்ச்சியான‌ கேள்விக‌ளை இந்த‌ ப‌தில் முட‌க்கிப்போடுகிற‌து. அல்ல‌து கேள்வி கேட்ட‌வ‌ர் மீண்டும் அதே கேள்விக்கு வ‌ந்து நிற்க‌லாம்:க‌ட‌வுளுக்கு எப்ப‌டி வ‌ழி தெரியும்? அப்பொழுது அந்த‌ ஆர்தோடாக்ஸ் அப்பா என்ன‌ சொல்வார்: க‌ட‌வுளுக்கு எல்லாம் தெரியும்!

இவ்வாறான‌ பொதுவான‌ ப‌தில்க‌ளால் கேட்‌ப்ப‌வ‌ரை ம‌ட்டும் நாம் முட‌க்கிப்போடுவ‌தில்லை; அறிவிய‌லையே முட‌க்கிப்போடுகிறோம். எப்ப‌டி பென்குயின் த‌ன‌து இன‌ப்பெருக்க‌ இட‌த்தை க‌ண்ட‌டைகிற‌து என்ப‌த‌ற்கான‌ தேட‌ல் வேறு ஏதாவ‌தொரு புதிய‌ க‌ண்டுபிடிப்புக்கு வ‌ழிவ‌குக்க‌க் கூடும் இல்லியா?

என‌வே அப்பாக்க‌ளே அம்மாக்க‌ளே உங்க‌ளுக்கு ப‌தில்க‌ள் தெரியாவிடிலும் ப‌ர‌வாயில்லை; குழ‌ந்தைக‌ளை த‌வ‌றாக‌ வ‌ழிந‌ட‌த்தாதீர்க‌ள், ப்ளீஸ். தெரியாவிடில் என‌க்கு தெரியாத‌ப்பா, ப‌டித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லுங்க‌ள். பிற‌கு க‌ண்டிப்பாக‌ ப‌டித்துவிட்டு அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கிச் சொல்லுங்க‌ள்.

அடுத்த‌முறை அப்பா இந்த‌ அப்ரோச் ட்ரை ப‌ண்ண‌லாம் (ச‌ரியான‌ ப‌தில் தெரியாவிடில்)
“அப்பா அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள் அப்பா?”
“அண்ட‌ம் எப்பொழுதுமே இருக்கிற‌துடா செல்ல‌ம்”

அட்லீஸ்ட் ந‌டுவில் இருக்கும் அந்த‌ ஒரு கேள்வியை அப்பா மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம் இல்லியா?