சமீபத்தில் கணையாழியில் இந்தக் கவிதையினை படிக்க நேர்ந்தது.

பூமிக்கு அந்தப்பக்கம்
போயஸ் விமானம் ஏறிப்
போயிருக்கும் துணைவருக்கு
என் உள்ளூர்ச் செய்தி மடல்
மின்னஞ்சலில்
இறகுத் தொடல் விரல் நோகாமல்
பறக்கும் ஒளியிழைப்பதிவுகளில்.

அங்கு குளிர் மழையா
இங்கு ஏறுவெயில்.
காவிரியில் கன்னடமும் இல்லை
கன்னித்தமிழும் இல்லை
சாயச்சாக்கடைக் கழிவு மட்டும்.
ஆலையிலும் அரிசிவிலை எற்றம் தான்.
பருப்பு விலை குறையவில்லை.
அம்மாவுக்குக் கண்புரையாம்
சர்க்கரை அதிகம் இரத்தத்தில்
சில ஆயிரம் போதுமாம் சிகிச்சைக்கு.
நாங்கள் வழக்கம்போல் இருக்கிறோம்.
வரும்போது வாருங்கள்
அன்புக் காதலரே
கவிதை வார்க்க
மனசுக்குள் ஊற்றில்லை
இறக்கைகளைத் தொலைத்துவிட்டேன்.
வந்தென்னைப் பறக்கவிடுங்கள்
எதிர்நோக்கி நோன்பிருக்கும் உங்கள்
கோதை நாச்சியார்.

-இரா. மீனாட்சி

கவிதைகள் பிழைத்துப் போகட்டும்

துவும் எழுதக்கிடைக்காவிட்டால் நான் கவிதை எழுதலாம் என்று நினைப்பதுண்டு. அதனாலேயே நான் இன்று வரை கவிதை எழுதத் தலைப்படவில்லை. ஆனால் கவிதைகள் நிறையப் படிப்பதுண்டு. படித்துவிட்டு புரியாமல் விழிப்பதும் உண்டு. பெரும்பாலும் கணையாழி, தீராநதி போன்ற இதழ்களில் வரும் கவிதைகள் என்றைக்குமே எனக்குப் புரிவதில்லை, அன்றும் சரி, இன்றும் சரி. சில சமையம் நமக்கேன் வீண் வம்பு என்று நான் விலகிச்செல்வதும் உண்டு. ஆனால் இன்று பல புதிய கவிஞர்கள் எழுதும் கவிதைகளே சில சமையங்களில் புரிவதில்லை. சில சமையம் படித்துவிட்டு நான் மிகுந்த எரிச்சல் பட்டதும் உண்டு.

அவ்வாறான வேளைகளில் ஆபத்பாந்தவனாக வருபவன் என் அறை நண்பன் மட்டுமே. அவனுக்கு புரிகிறதோ இலலையோ, சரியோ தவறோ, கவிதை சொன்ன அடுத்த நொடி எதேனும் ஒரு விளக்கம் கண்டிப்பாகத் தருவான். விளைவுகளைப் பற்றி அவன் யோசிப்பதேயில்லை, தற்கால கவிஞர்களைப் போல.

சில சமையம் அவனுக்கும் புரியாமல் போவதுண்டு. அப்பொழுதெல்லாம் கவிஞர்கள் என் நண்பனின் கடுங்கோபத்திற்கு ஆளாவார்கள். சில சமையம் மிகுந்த எரிச்சலாகி, அவன், இது என்னடா கவிதை, நான் சொல்கிறேன் பார், என்று உடனே எடுத்துவிடுவதுண்டு. பல சமையம் எனக்கு தவறு செய்து விட்டோமோ என்று தோனுவதுமுண்டு. சில சமையங்களில் சில் நல்ல சிரிக்கத்தக்க கவிதைகளை அவன் சொல்வதுமுண்டு.

ஒரு நாள் நான் எங்கோ படித்த கவிதை எத்தனை முயன்றும் அவனுக்கு புரியாமல் போகவே, கடுங்கோபத்துக்குள்ளாகி, நானும் எழுதுகிறேன் பார் என்று சபதம் போட்டு, மறுநாள் அலுவலகம் சென்று, கவனிக்க, அலுவலகம் சென்று, முதல் வேளையாக ஒரு கவிதை(??) எழுதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினான். அந்த கவிதை உங்கள் பார்வைக்கு,

அரும்பு மீசை

காலைக் கதிரவன் ஜன்னல் வழியே சீண்டினான்,
அவன் எழுந்து அன்ன நடை போட்டான்,
கண்ணாடி முன் சென்று அவன் முகத்தைப் பார்த்தான்,
ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது,
பூமியில் இருக்கும் சிற்றெறும்பை
வானத்தில் இருந்து பார்த்ததைப் போல்
சிறியதாய் ஏதோ சில அவன் மூக்கின் கீழே
மற்றும் உதட்டின் மேலே
தெரிந்தது ஒன்று
அவன் அதைக் கண்டதும்
நீண்ட நாள் மழைக்காக காத்திருந்த விவசாயி
பெய்த சிறு மழை துளிகளை
கண்டதை போல களிப்புற்றான்

இந்த வரியை டைப் செய்து முடிக்கும் பொழுது, ‘இது என்ன, கடவுளே! புரியாது கடவுளே!’ என்ற புதுப்பேட்டையில் வரும் பாடல் எனது மடிக் கணினியில் ஒலித்துக்கொண்டிருந்தது, முற்றும் எதிற்பாராத ஒன்று, அதற்கு நான் பொறுப்பும் அல்ல. அன்று முதல் அவனது பெயரின் முன் கவிஞர் என்ற அடை மொழியை இனைத்தே அழைக்கிறோம்.

மற்றொரு நாள் நானும், எனது நண்பர்களும் இந்தக் கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது, கவிஞர், கடுங்கோபத்துக்குள்ளாகி, இன்னொரு கவிதை சொன்னார். அது,

கடலில் எழுவது கடலலை
ஆனால் அங்குள்ள
இளைஞர்கள் போடுவதோ கடலை

சபை மரியாதை கருதி இந்தக் கவிதை? சிறிது மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் கவிஞர், அவருடைய கவிதைகளுக்கு, தனி ப்ளாக் ஆரம்பிக்கப்போவதாக,கூறியிருக்கிறார்.

மற்றொருநாள், என் இன்னொரு நண்பர் ஒருவர், எங்கள் இருவரையும், எதிரும் புதிரும், என்று குறிப்பிட, அடுத்த மைக்ரோ செக்கண்ட், ‘ஏன் எதிரும் பொதரும்னு சொல்லவேண்டியதுதானே?’ என்றான். நான் கொஞ்சம் நீண்ட தலைமுடி தற்பொழுது வைத்திருக்கிறேன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கவிதைகள் பிழைத்துப் போகட்டும், விட்டு விடுங்கள் கவிஞரே!

குழந்தை






சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே!

– நா.விச்வநாதன்

இன்னும் அதிர்கிறது என் இதயம் ..

உலகில் உள்ள அனைத்து காதல் தேவதைகளும் தபூ சங்கரிடம் தான் குடி கொண்டிருக்கின்றன போலும் அதனால் தான் அவர் தும்மினால் கூட காதல் கிருமிகள் தான் காற்றை நிறப்புகின்றன. இதோ என்னை அட்டாக் செய்தகிருமிகள் சில. முகமூடி அணிந்துகொண்டு வாருங்கள், இவை அந்தராக்ஸ் கிருமியை விட பயங்கரமானவை.

—————————————-
சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.

——————————

சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி
——————————-

இந்த மலையைக் குடைந்து
ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது
———————————

உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்துப் பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.
————————————————

நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.

சூரியனோ
உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறது.
——————————————————–

சிறுமியைப்போல்
கடல் அலையில் கால் நனைத்து
விளையாடிக்கொண்டிருந்தாய்
கடலோ
கொந்தளித்துக்கொண்டிருந்தது
———————————————-

உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காயவைத்திருக்கிறாயே
இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்.
——————————————–

எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இலலையே
———————————–

ஞாபகம் இருக்குமா ?

கவிஞர் அறிவுமத்தியின் ‘நட்புக்காலங்கள்’ கவிதையை எத்தனை முறை படித்தாலும் அத்தனை முறையும்புத்தம் புதிதாகவே இருக்கும்.
என் மனதை தொட்ட சில கனங்கள்,

உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்லவாசகம்
தேடித் தேடி
உண்டான சலிப்பில்
உண்டானது
உனக்கான
என்
கவிதை
——————-
புரிந்து கொள்ளப்படாத

நாள்களின்
வெறுமையான நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குபிடித்தமான
உன்புன்னகை
——————–
நேரமாகிவிட்டது

எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரீகமானதுதான்
—————————
கடற்கரையின்

முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம் எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும்
—————————
பார்வையாளர் நாள்.

குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்கு துணையாய் இருந்த
உன் விடுதிஅணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை.
—————————

ஒரு பிளாஸ்டிக் டம்ளர்

அந்த பிளாஸ்டிக் டம்ளர்
விருந்தொன்றில் நீர் பருக
உபயோகிக்கப்பட்டது.
பிறகு கொஞ்சம் தேநீர்.
மறைவிடத்தில் கழுவப்பட்டு
மறுபடியும் நீர், தேநீர், பாயசமென
சுழன்ற அது எச்சிலைகளோடு எறியப்பட்டது.
விளையாட்டு சிறுவர்கள்
தன் சிறுநீர் துளிகளை
அதில் வழியச் செய்தனர்.
காற்றின் கருணையால்
பெருநகர வீதிகளை கடந்து
காடு மலையென அலைந்து திரிந்தது
கொடும் பசிகொண்ட நாயொன்று
அதை முகர்ந்து பார்த்துவிட்டுப் போனது.
மரணமிலா இழிவாழ்வால்
துவண்டிருந்த அதை,
அதை போலவே காடுகளில்
அலைந்து திரியும்
சற்றேறக் குறைய பைத்தியம் எனப்பட்ட
ஒருவன் தொட்டு தூக்கினான்
சுனைநீரால் நீராட்டினான்.
அவனால் கொஞ்சம்
மதுரசம் ஊற்றப்பெற்ற அது
சாபம் நீங்கி
பொற்கலயமானது.

இசை, கணையாழியில் இருந்து.

விடாமல் சிணுங்குகின்றன செல்பேசிகள்

ரயில்வே நிலையத்தில்
விசும்பல்கள்
மறைந்து விட்டன.

போனவுடன் கடிதம்
போடென்று
இப்போதெல்லாம்
பேசிக்கொள்வதில்லை யாரும்.

சிரித்துக் கொண்டே
விடைபெறுபவர்களின்
பாக்கெட்களில்
விடாமல் சிணுங்குகின்றன
செல்பேசிகள்

-சேவியர்

கவிதைக்கு வாய் உண்டா?

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் குறும்பா, துளிப்பா, ஹைக்கூ,புதுக்கவிதை எல்லாம் வராத காலத்தில் கணையாழியில் ஒரு கவிதை.
நீ
பூ
வா
தா
சீ
போ
கணையாழியில் சுஜாதவும் இதை சிலாகித்துஇருகிறார்.
இதற்கு எதிர் கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது.

ஏய்
போய்
தேய்
காய்
மாய்
சாய்
ஆய்
நோய்
நாய்
பேய்
வாய்
சீய்

???அட கடவுளே !!

ஞானத்தங்கமே

கவிஞர் புகாரி

இறுதியாய்ப்
பிச்சை கேட்ட பாத்திரத்திலும்
புளிச்சென்று எச்சில்
மிச்ச மீதி நம்பிக்கையும்
மரணப்பசிப் பெருங்குடலில்
இறுதி ஊர்வலம்
ஆயிரங்காலப்பயிர்
செழித்துக்கிடந்த
உள் முற்றத்திலிருந்து
ஓடிவந்த நாக்கு நாய்
துரத்திக் கடிக்க
இரத்தக் கசிவுகளோடு
தனிமை மண்டிக்கிடக்கும்
புதரில் விழுந்து
புதிராகிப் போனது இதயம்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
புதுத்தோல் போர்த்திக்கொண்டு
தனக்குள் செத்து பின்
தானே உயிர்த்து
மீண்டும்
மனிதர்களைக் காணும் பீதி
உயிரை மிதித்தாலும்
இம்முறை
அர்த்தம் புரிந்த
முதல் அழுகையோடுதான்
வெளிக்காற்றுக்குள்
வீசியெறியப்பட்டது
இதயம் தன் துடிப்புகளோடு
நிரந்தரம் அற்றதென்றாலும்
வயிறும் மனமும்
வீதிகளில் நிறைகிறது
இப்போது
நிச்சயமாகிப்போன
பிச்சையுமில்லாப் பிழைப்பில்
நிரந்தரமாகிப்போன நிரந்தரமற்ற
அன்னதானங்கள் என்ன
குறைந்தா போயிற்று
சொந்தக் கதவானாலும்
பத்துகோடிப் பூட்டுகள்
இரக்கமற்று
இறுக்கமாகத் தொங்கினால்
மனம்மாறி ஓர் நாள்
திறந்து வரக்கூட
இந்த ஜென்மம் போதுமா?
காத்திருக்காக்
கட்டற்ற உணர்வுகளுக்குள்
கைதாகிக் கிடக்கும் வாழ்க்கை
என்றும் விடுதலையாகப் போவதில்லை
என்பதே படைப்பிலக்கணம்
என்பதனாலேயே…
மறுக்கும் இடத்தில்
மன்றாடுவதல்ல வாழ்க்கை
கொடுக்கும் இடத்தில்
கொண்டாடுவதுதான்

buhari@gmail.com
Thanks – www.thinnai.com