நையாண்டித் திலகங்கள்

இன்று நூலகத்தின் குறிப்பு (Reference Section) பகுதியில் புத்தகங்களை, எந்தவித நோக்கமும் இல்லாமல், பார்த்துக்கொண்டிருந்த பொழுது, புதுமைப்பித்தனின், ஆ.இரா.வெங்கடாசலபதி, தொகுத்த கட்டுரைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அவரே தொகுத்த புதுமைப்பித்தனின் கதை தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது. சமீபகாலமாக நான் புதுமைப்பித்தனிடம் ஈர்க்கப்பட்டு அல்லது கவரப்பட்டு, வருவதற்கு இது தான் காரணம். புதுமைப்பித்தனைப் படித்தப் பிறகு, இன்று வரை நான் படித்து புகழ்ந்துவந்த தமிழ் எழுத்தாளர்களை கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுதியைப் புறட்டும் பொழுது, குலோப்ஜாமுனுடன் காதல் / பாரதியும் போலீசும் என்ற கட்டுரைகளை வாசித்தேன். மிகுந்த நையாண்டியும் அதே சமயத்தில் உண்மை நிலவரத்தையும் ஒருசேர கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். 1933இல் வெளிவந்த இந்த கட்டுரைகள் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவே உள்ளது. காலம் மாறவில்லையா?’தெரியாததைப் பற்றி சொல்வதுதான் அறிவுடைமை’ என்று தற்காப்பிற்காக சொல்லிவிட்டு கட்டுரையை ஆரம்பிக்கிறார். காதல் அவருக்கு தெரியாதா? தெரியவில்லை. 1940களில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஸ்டாலினைப் பற்றி கட்டுரை எழுதியவருக்கு, ‘காதல்’ பற்றி தெரியாதென்பது, கிட்டத்தட்ட, முட்டாள்தனம் தான். காதலை மிகவும் அனுபவித்தவர் என்பதை அவருடைய ‘செல்லாம்மாள்’ கதையைப் படித்தவர்கள் உணரலாம்.

வெகுஜனங்களுக்கு புரிய வேண்டும் என்றால் அவர்களுக்கு தெரிந்த விசயத்தைக் கொண்டு விளக்க வேண்டும் என்று காதலை விளக்க குலாப்ஜாமுனை தேர்வு செய்திருக்கிறார். காதலிப்பவனுக்கு உலகில் எல்லாமும், எல்லாப் பொருளும் தன் காதலியாகவே தெரியுமாம். கம்பன் இராமன் மேல் கொண்ட தீராத காதலினால் தான் இராமனை கல்லும், மண்ணும், மண்ணாங்கட்டியும் காதலித்ததாக எழுதியிருக்கிறார் என்றும் கம்பன் மீது பாய்கிறார். தீராநதியில் சிறிது நாளைக்கு முன்னர் இராமனையும் சீதையையும் வைத்து, பின் நவீநத்துவத்தால் பாதிக்கப்பட்ட, திடுக்கிடும் கதை ஒன்று படித்தேன். இராமனையும் சர்சைகளையும் பிரிக்கமுடியாது.

‘காதல் செய்யும் பொழுது, நாம் காதலிக்கும் பொருளும் நம்மை பதிலுக்கு காதலிக்க வேண்டும்’ என்ற உண்மை விதியை முன்வைக்கும் புதுமைப்பித்தன், பிறகு, ‘இது குலாப்ஜாமுன் விசயத்தில் சாத்தியமில்லை’ என்று சொல்கிறார். உண்மைதான்.

பாரதியும் போலீசும் [வேறு தலைப்பினல் கூட இருக்கலாம்] என்ற கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்த பொழுது என்னையும் அறியாமல் சிரித்துவிட்டேன். அருகே அமர்ந்து ‘தமிழ் இலக்கிய வரலாறு’ படித்துக் கொண்டிருந்த ஒருவர் என்னை விசித்திரமாகப் பார்த்தது வேறு கதை. உண்மையில் பாரதியார் போலீசுக்கு நண்பரா? அதில்லை விசயம். புதுமைப்பித்தனின் நையாண்டியின் உச்சக்கட்டம் இந்தக் கட்டுரையைக் கூறலாம். பாரதியை கரைத்துக் குடித்தவர் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

பாரதியின் சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை அன்றைய போலீசுடன் [ஏன் இன்றைய போலீசுடன்] ஒப்பிட்டுள்ளார். ‘கோல் கொண்டு வாழ்’ என்ற பாரதியின் வரிகளை போலீசின் கைத்தடியுடன் ஒப்பிடுகிறார். மேலும் ‘ரௌத்திரம் பழகு’ ‘(பிறர்) துன்பத்தை மற’ இதில் பிறர் என்பது அவரே இணைத்துக் கொண்டது போன்ற ஆதாரங்களை காட்டுகிறார். இவ்வாறு போலீசை ஆதரித்தே கவிதையினை எழுதியிருக்கிறார் என்கிறார். சரி, நான் எதற்கு சிரித்தேன், ‘நையப் புடை’ என்ற பாரதியின் வரிகளை படித்தபொழுது. நையாண்டித் திலகம் தான் நமது புதுமைப்பித்தன்.

**

சன் டீவியில், செவ்வாய் தோறும் ஒளிபரப்பாகும் ‘டாப் டென்’ நிகழ்சியின் மறு ஒளிபரப்பில், சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை தழுவி நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர். சேரன் எத்தனை தவமிருந்து படத்தில் வரும் ‘அப்பா’ கதாப்பத்திரத்தை படைத்திருப்பார் என்று தெரியவில்லை, ஆனால் இந்த நிகழ்ச்சியில் வந்த ‘அப்பா’வை குடிகாரனாகவும், பல பெண்களிடம் தொடர்பு வைத்திருப்பவனாகவும் காட்டியிருக்கிறார்கள். சிரிப்பிற்காகத் தான். நகைச்சுவை மட்டும் தான்.

சேரன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து சிரிப்பாரா என்று தெரியவில்லை, ஆனால் இந்தப் படத்தை மிகவும் ரசிக்கும் என் நண்பன் ஒருவன், மிகுந்த சோகத்தோடு அல்லது கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். சத்தியராஜ் ஒரு படத்தில், விஜய்யின், ‘எங்கம்மா உங்கம்மா நம்ம சேர்த்துவப்பாளா?’ (கண்றாவி!) என்ற பாடலை கேலி செய்திருப்பார், அதற்கப்புறம் விஜய்யின் அந்தப் பாடலைப் பார்க்கும் பொழுதெல்லாம் சத்தியராஜ் ஆட்டம் தான் நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து சிரிப்பும் வருகிறது. பின் தொடரும் சிரிப்பின் குரல்?

‘தவமாய்த் தவமிருந்து’ படம் எனக்கும் பிடித்த படம்தான். ஆனால் நான் மட்டும் தான் நிகழ்ச்சி முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மறுபடி பார்க்கும் பொழுது, டாப் டென் நிகழ்ச்சி ஞாபகம் வருமா என்று தெரியவில்லை.

ஒரு கதையை எழுதி அதில் மக்கள் மனதில் என்றென்றும் நிற்கும் கதாப்பாத்திரங்களை படைத்து தெளிந்த திரைக்கதையையும் இனிய இசையும் சேர்த்து அதை வெற்றிப்படமாக கொடுப்பதென்பது மிகக் கடினமான விசயம். அதை சேரன் செய்துகாட்டியிருந்தார். ம்ம்..ஏனோ சிலருக்கு வாழ்க்கை மிகக் கடினமாகவும், சிலருக்கு மிக எளிதாகவும் இருக்கிறது.

**


சிங்கப்பூர்-லிட்டில் இந்தியா

இன்று மதியம் சரவணபவனில் சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது, ஆனால் சர்வீஸ் தான் கொஞ்சம் மோசம். அதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். கூட்டம் அதிகம் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று. சாப்பிட்ட பிறகு கை அலம்பிவிட்டு, குப்பைத்தொட்டி நிரம்பிவழிவதைக் கவணித்தோம். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட், ‘சிங்கப்பூரில் தெருக்கள்தான் சுத்தமாக இருக்க வேண்டுமோ!’

காபியும், டம்பளரும், பிறகு ஒரு சந்தேகமும்

ன்று காபி இடைவேளையில்,( சரி, காபி என்பதற்கு தமிழில் என்ன? கொட்டை வடி நீர் என்பதுதான் சரியா? அதுவே சரி என்றாலும் அது வாக்கியம் மாதிரியல்லவா இருக்கிறது?) என் நண்பர் ஒருவர், இரண்டு காபிகள் வாங்கி மூன்று பேர் பகிர்ந்து கொள்ளும் யோசனையில், கஞ்சத்தனம் இல்லை, அந்தக் காபியை ஒருவர் குடிக்க முடியாது,ஒரு காலி டம்பளர் கேட்டார், அப்பொழுதுதான் எனக்கு டம்பளருக்கு தமிழில் என்ன பெயர் என்ற விபரித எண்ணம் தோன்றியது.

காபி வாங்கிக்கொண்டு நாற்காலியில் (தமிழ் பற்றி என்பதால் முடிந்தவரை தமிழில் எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்) வந்து அமர்ந்ததும், என் நண்பர்களிடம் நான் கேட்ட கேள்வி ‘டம்பளருக்கு தமிழில் என்ன?’ என்பது தான். என்னை விசித்திரமாகப் பார்த்த நண்பர், சற்றும் யோசிக்காமல், கிளாஸ் என்றார். கிளாஸ் என்பது ஆங்கில வார்த்தை என்பது அவருக்கு புரியாமல் போனது. எனக்கு லியோனியின் பேருந்து நிலைய நகைச்சுவை (பஸ் ஸ்டாண்ட் ஜோக்) தான் நினைவுக்கு வந்தது. அவர் பல நேரங்களில் உண்மை நிலையையே கூறியிருக்கிறார்.

என் மற்றொரு நண்பர் கிண்ணம் என்றார். கிண்ணம் என்றால் சற்று அகலமான, ஹெமிஸ்பியர் (இதற்கு தமிழில் என்ன என்று என்னுடன் தங்கியிருக்கும் மற்ற ஐந்து நபர்களிடம் கேட்டு, நிறைய யோசித்தலுக்குப் பிறகு, அரைக் கோலம் என்று கண்டுபிடித்தார், என் நண்பர் ஒருவர். மற்ற ஒரு தமிழ் வழிக் கல்வி பயின்ற நண்பருக்கு இறுது வரைப் புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!) வடிவிலான ஒன்று தானே. டம்பளர் அப்படி அல்லவே. சற்றே சிலிண்டரிக்கல் வடிவமாயிற்றே. மற்றொரு நண்பர் கோப்பை என்றார். ஒரு வகையில் கோப்பையும் கிண்ணமும் ஒன்று தான். மலேசியாவில் உலகக் கோப்பையை உலகக் கிண்ணம் என்றே சொல்லுவார்கள். எங்களுக்கு ஏனோ அது சிரிப்பையே வரவலைக்கும்.

மற்றொரு நண்பர், நிறைய யோசித்து விட்டு, ஏதோ கமலஹாசன் படத்தில் வரும், அவரை எடுத்து வரச்சொல்லுவார்கள், என்னவென்று தான் வரமாட்டேன் என்கிறது, என்றவர், தீவிர சிந்தனைக்குப் பிறகு, உதட்டைப் பிதுக்கினார்.

பிறகு போனி என்று வைத்துக்கொள்ளலாம் என்றார். போனி சிலிண்டிரிக்கல் வடிவில் அல்லவா இருக்கும்? டம்பளரின் கீழ்வட்டம் மேல் வட்டத்தை விட குறுகியிருக்குமே?.

இப்படியாக எங்களது அன்றைய விவாதம், சட்டமன்றக் கூட்டத்தொடர் போன்று முடிவுக்கு வராமல் அல்லது பயன் பெறாமல் நிறுத்தப்பட்டது.இன்று வரை தடையங்கள் ஏதும் இல்லாத கொலைக்கேஸ் போலவே மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தெரிந்தவர்கள் துப்புக் கொடுக்கவும்.

இந்த விவாதத்தில் சற்றும் பங்கெடுக்காத, என் தோழி ஒருத்தி, அல்மாரிக்கு தமிழில் என்னவென்று கேட்டுத் தொலைத்தாள்.எத்துனை முயன்றும் என் சிற்றறிவுக்கு எட்டாமல் போகவே, என் தந்தையாரின் உதவியை நாடினேன். அவர் யோசித்துச் சொல்கிறேன் என்று கூறிவிட்டு, நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, ‘பொருள் காப்பகம்’ என்று கூறினார். இதுவும் வாக்கியம் போலவே உள்ளது, இது பெயர்ச் சொல் அல்லவே?

சற்று யோசித்துப் பார்த்தோமேயானால், தமிழில் பல சொற்கள், வழக்கிழந்து அல்லது சேர்க்கப்படாமல் உள்ளது புரியும். இலக்கியங்களை தமிழ் பொதுஜனம் கிட்டத்தட்ட மறந்தே போய் விட்டது எனலாம். தமிழ் நாட்டின் மிகப் பெரிய பொழுதுபோக்கான அல்லது முதலமைச்சர்களின் கல்லூரிகளான, சினிமாவில், இலக்கியம் என்பது உப்புப் பெறாத செயல் ஆகிவிட்டது உண்மை. நீண்ட நாட்களுக்குப் பின் நிறைய தெளிவான தமிழ் சொற்களைப் பயன்படுத்திய சினிமா ‘தம்பி’ மட்டுமே என்று நினக்கிறேன்.
இதை அச்சுப் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, (புரியாதவர்களுக்கு, டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது) என் நண்பன் ஸ்பூன் என்பதற்கு தமிழில் என்ன என்றான். தொடர்ந்து போர்க் என்பதற்கு தமிழில் என்ன என்றான். பட்டியல் நீள்கிறது.

இந்த் எண்ணங்களுக்கும் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும்.

‘இட’ ஒதுக்கீடு உண்டா எங்களுக்கு?


எங்களுக்கும் உண்டா ‘இட’ ஒதுக்கீடு? நாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் இருக்கிறோம்.

அவர்கள் எல்லோருக்கும் சேர்த்துத்தான் போராட்டம் செய்கிறார்களாம். எங்களுக்கும்சேர்த்துத் தானே?

சுஜாதாவும் என் கல்லூரித் தோழியும்

விகடனில் சுஜாதா எ.பி.க பகுதியில் குறிப்பிட்ட கவிதை,

குப்பையை
கிளறுவது கோழியல்ல
கோனிப்பையுடன்
சிறுவன்

இதை படித்தவுடன் எனக்கு என் கல்லூரித் தோழி எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது,

பூக்காரி
பூ
விக்கிறாள்
பரட்டைத் தலையுடன்

நாங்கள் அன்று அவளின் கவிதையை படித்து நன்றாகச் சிரித்தோம்.
ம்ம்ம்ம்…? தலைப்புக்கு மன்னிக்கவும்!!!!

கலக்கறே சந்துரு

புது சட்டை…
புது பேண்ட்டூ…….
புது வாட்ச்சூ……
புது மொபைலூ…..
புது ஷீ….
இரவல் வாங்கினா
திருப்பி கொடுத்துடனும்டா
சந்துரு…..

– ‘அன்புடன்’ இணைய குழுமத்தில் படித்தது

புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா கலை இரவு


புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா சென்றமாதம் திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது.

புதுமைப்பித்தன்சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு 1938-39 காலகட்டத்தில் இரண்டாம் உலகயுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே ஹிட்லர், முசோலினி பற்றி ‘கப்சிப் தர்பார்’, ‘பாசிஸ்ட் ஜடாமுனி’ ஆகிய நூல்களை எழுதினார். அது மட்டுமின்றி சோவியத் யூனியன் பற்றிய செய்திகளை அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பிய செய்தித்தாள்கள் மூலம் படித்தறிந்து ‘ஸ்டாலினுக்கு தெரியும்’ என்ற நூலையும் எழுதினார். தகவல் தொடர்பு சாதனங்கள் குறைவாக இருந்த அக்காலத்தில், மிகத்துல்லியமாக ஏகாதிபத்தியத்தின் தன்மைகளை புரிந்து கொண்டு மிகச்சரியாக வெளிப்படுத்தினார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் வாழ்ந்த காலம் 1902-1948.

ஏன்?

எனது எண்ணங்களை,எழுத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு வெளி தேவைப்பட்டதால் இந்த’குரல்வலை’யை தேர்ந்தெடுத்தேன்.உங்கள் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.
msvmuthu@yahoo.com க்கு கடிதங்கள் அனுப்பவும்.