ஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை

சாய்ராட் என்கிற மிகப்பிரபலமான மராத்தி மொழி திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பார்த்துவிடவும். நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தத் திரைப்படம் சாதிய அடுக்குகளையும், சாதி பொதுமக்களுக்குத் தரும் போதையையும், அந்த போதையினால் அவர்கள் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் அழகாக ஒரு கத்தியை எடுத்து மெதுவாக உங்கள் நெஞ்சில் பொறுமையாக இறக்குவதைப் போல இறக்கும். பாடல்கள் எல்லாம் இளையராஜா ரகம். இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் நாங்கள் இளையராஜாவின் ரசிகர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ராட்டுக்கு முந்திய படம் தான் ஃபன்றி (Fandry). ஃபன்றி என்று உச்சரிப்பு ஆனால் உண்மையில் பன்றி என்று தான் அர்த்தம். உண்மையில் மராத்திக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மராத்தி திராவிட மொழி என்று ஒரு தியரி இருக்கிறது. ஆனால் தமிழுக்குத்தான் மராத்தி நெருக்கம். சிவாஜியின் (நடிகர் சிவாஜி இல்லை. சிவாஜி படத்தில் நடித்த சிவாஜி ராவ் ரஜினியும் இல்லை. சத்ரபதி சிவாஜி) தம்பி வெங்கோஜி தஞ்சாவூரில் அமைத்த ராஜ்ஜியத்தால் தஞ்சாவூர் மராத்தியார்கள் என்கிற பிரிவு உண்டானது. அப்போ நடந்த மொழிப்பரிமாற்றத்தில் பன்றி இடமாறியிருக்கக்கூடும். பன்றிக்கு தமிழ் ஆதிச் சொல் ஒன்று இருக்கிறது. வராகம். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

ஜப்யா என்கிற தீண்டத்தகாத டீன் ஏஜ் சிறுவன் ஒரு தலையாக தன்னுடன் படிக்கும் ஷாலு என்கிற மேல் சாதி டீன் ஏஜ் சிறுமியைக் காதலிக்கிறான். அவனுடைய அப்பா அந்த ஊரில் மற்றவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டு சொற்ப வருமானத்தில் வாழ்கிறார். ஜப்யாவுக்கு இரண்டு அக்காக்கள். முதல் அக்காவுக்கு திருமணம் முடிந்து வீட்டோடு வந்துவிடுகிறார். இரண்டாவது அக்காவிற்கு திருமண ஏற்பாடாகிறது. ஜப்யாவின் காதல் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே போகிறது.

அதே ஊரில் சைக்கிள் கடை வைத்திருக்கும் நாகராஜ் மஞ்சுளே (டைரக்டர்) ஜப்யாவுக்கு ஆதரவாக இருக்கிறார். அந்தப் பெண் ஜப்யாவை லவ் பண்ண வேண்டுமென்றால்: கருப்பாக இருக்கும் ரெட்டைவால் குருவியைப் பிடித்து, அதை எரித்து அந்த சாம்பலாக்கி அதை ஷாலுவின் மேல் தூவினால் மட்டுமே நடக்கும் என்று கூறுகிறார். ரெட்டைவால் குருவியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது பையனுக்குத் தெரியவில்லை.

ரெட்டைவால் குருவியை ஜப்யா தேடி அலைகிறான். ஜப்யாவுக்கு ஜீன்சும் டீ சர்ட்டும் போட வேண்டும் என்று ஆசை ஆனால் காசில்லை. குச்சி ஐஸ் செய்து நாகராஜின் சைக்கிள் கடையில் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு டவுனுக்குப் போய் அதை விற்று, ஜீன்ஸ் வாங்க பணம் சேர்க்கிறான். ஒரு முறை அப்படிச் செல்லும் போது, ஒரு பறவை விற்கும் கடையைப் பார்க்கிறான். உள்ளே ரெட்டைவால் குருவி இருக்கும் என்று நினைத்து, அவசரமாக சைக்கிளை அருகே நிற்கும் வேனில் சாய்த்து நிறுத்தி விட்டு, உள்ளே ஓடோடுகிறான். வேன் ரிவெர்ஸ் எடுத்து, சைக்கிளை நசுக்கி விடுகிறது. ஜீன்ஸ் கனவு டமால்.

அந்த கிராமத்தில் திருவிழா வருகிறது. அந்தக் கிராமம் பன்றியைத் தீட்டாகக் கருதுகிறது. ஒரு முறை பள்ளியில் ஷாலுவின் அக்காவை பன்றி தீண்டிவிடுகிறது. ஷாலு, உடனே அக்காவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறாள். அக்கா தீட்டு நீங்க, குளிக்கிறாள். அம்மா தீட்டு நீங்க கோமியம் தெளிக்கிறாள். ஷாலுவும் வாலண்டியராக தனக்கும் தெளிக்கும் படி கேட்டு வாங்கிக்கொள்கிறாள்.

அந்த திருவிழாவில் தேர் தூக்கும் பொழுது, ஒரு பன்றி தேர் தூக்குபவரைத் தீண்டி விடுகிறது. தேர் தூக்குபவர் பதறிப் போய் தேரை விட்டுவிடுகிறார். அபசகுனம் ஆகி விடுகிறது. ஊர் தலைவர் ஜப்யாவின் அப்பாவை அழைத்து அந்தப் பன்றியைப் பிடிக்கச் சொல்கிறார். ஜப்யாவின் அப்பா இன்னும் ரெண்டு நாளில் திருமணம் இருக்கிறது என்றும் பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார். ஊர் தலைவர் வேணுமின்னா பணம் தருகிறேன் என்று சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்ட ஜப்யா,தான் மட்டும் எப்படிப் பிடிப்பது என்று கேட்க, உன் குடும்பத்தை அழைத்துக்கொள் என்று சொல்கிறார் தலைவர்.

காலை மொத்த குடும்பமும், மணப்பெண் உட்பட பன்றி பிடிக்கக் கிளம்புகிறது. ஜப்யா ஷாலுவின் கண்களில் பட்டுவிடாமல் ஒளிந்து கொள்கிறான். அனைவரும் பள்ளிக்கூடத்திற்குள் சென்றபிறகு, நிம்ம்திப் பெருமூச்சு விட்டு வெளியே வருகிறான். ஒரு கும்பல், பன்றி பிடிக்க பன்றிக் குடும்பம் என்று கேலி செய்கிறது. ஒரு கிரிக்கெட் மேட்சை ரசிப்பது போல அவர்கள் இந்தக் குடும்பம் பன்றி பிடிப்பதை ரசிக்கிறார்கள். ஒருவன் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டோ கூடப் போடுகிறான்.

ஒரு வழியாக பன்றியை கார்னர் செய்து விடுகிறார்கள், கயிற்றை பன்றியின் கழுத்தில் போட ரெடியாகும் பொழுது, தேசிய கீதம் ஒலிக்கிறது. அப்படியே நின்று விடுகின்றனர். பன்றிக்குத் தெரியுமா அது தேசிய கீதம் என்று? பன்றி ஓடி விடுகிறது.

பன்றியைப் பிடிக்கவைத்து, தங்களைப் பன்றியைப் போல நடத்தும் இந்த தேசத்தின் தேசிய கீதம் அவர்களுக்குமானதா?

ஓடிய பன்றியைத் தேடி குடும்பமே நாயாய் பேயாய் ஓடுகிறது. பள்ளி மதியச் சாப்பாட்டுக்கு மணியடித்து விடுகிறது. ஷாலு வந்து விடுவாளே என்று பயந்து ஓடி ஒழிந்து கொள்கிறான். பன்றியைக் காணாது செம கடுப்பில் இருக்கும் ஜப்யாவின் அப்பா ஜப்யாவை வெறி கொண்டு தேடத் தொடங்குகிறார். ஒழிந்துகொண்டிருக்கும் ஜப்யா கருப்பான ரெட்டைவால் குருவியைக் காண்கிறான். மெதுவாக ஓசையெழாமல் அமர்ந்து குருவியை அடிக்க, குருவியின் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே, ஒரு சிறு கல்லை எடுக்கக் குனிகிறான். ஜப்யாவின் அப்பா அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுகிறார். கடுங்கோபத்தில் வந்தவர், அவனை வெளியே இழுத்துவந்து ஊர் முன்னிலையில், ஷாலு முன்னிலையில் அடித்துத் துவைக்கிறார். ஷாலு எள்ளி நகையாடுகிறாள். ஜப்யா கூனிக்குறுகிப்போகிறான்.  நீண்ட கஷ்டத்திற்குப் பிறகு குடும்பம் பன்றியைப் பிடிக்கிறது. ஷாலு இதை அனைத்தையும் தன்னுடன் இருப்பவளுடன் கேலி பேசி ஹைஃபை செய்து ஒரு விளையாட்டு போல ரசிக்கிறாள்.

மணப்பெண்ணும் ஜப்யாவும் ஒரு கட்டையில் பன்றியைத் தொங்கப்போட்டுக்கொண்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஊர் நின்று வேடிக்கை பார்க்கிறது. ஷாலுவும் தான். ஒரு கும்பல் அவர்களை கேலி பேசிக்கொண்டு கூடவே வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜப்யா, கடும் சினம் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்குகிறான். பிறகு கடைசியாக ஒரு கல்லை எடுத்து அவர்களின் மீது எறிகிறான். அந்தக் கல் வேகமாக காற்றில் பயணித்து காமெராவின் லென்சை உடைக்க வருகிறது. அதோடு படம் முடிகிறது.

ஜப்யா கல் எறிந்தது உங்கள் மீதும் என் மீதும் தான். ஒரு நிமிடம் ஆச்சா?

மகனின் காதுகுத்தை நடத்தலாமா எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசர்?

மகனின் காதுகுத்தை நடத்தலாமா என்று கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ கேட்பது வழக்கம், ஆனால் எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசரிடம் கேட்பது?

கர்நாடகாவில் இந்த தேர்தல் நேரத்தில், என்ன்வெல்லாம் செய்யலாம் என்ன செய்யக்கூடாது, என்கிற தெளிவில்லாததால், பொதுமக்கள் எலெக்‌ஷன் கமிஷனரை சாதாரண விசயத்துக்குக் கூட அனுகுகின்றனர். கல்யாண ஏற்பாடு செய்யலாமா, காது குத்தலாமா, தங்கம் வாங்கலாமா, பேர்வைப்பு வைபவம் செய்யலாமா, பிறந்தநாள் கொண்டாடலாமா என்பன போன்ற கேள்விகள் எலெக்‌ஷன் கமிஷனுக்கு வருகிறதாம்.

இவ்வாறான விழாக்களுக்காக வாங்கப்படும் பரிசுகள், நகைகள், பொருட்கள் பொதுவாக கட்சிகள் மக்களுக்கு ஓட்டுப்போடக் கொடுப்பதால், இவ்வாறான குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.

சீஃப் எலெக்‌ஷன் ஆபிசர் சஞ்சீவ் குமார் குடும்ப விழாக்களை நடத்த அனுமதி வாங்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

IRNSS-1I – ISROவின் புதிய சாட்டிலைட் நாளை வின்னில் பறக்கிறது

ஸ்ரீஹரிகோட்டோ நாளை வியாழக்கிழமையன்று புதிய வழிசொல்லி (Navigation) செயற்கைக்கோளை வின்னில் ஏவத்தயாராகி வருகிறது. இந்த மாதத்தில் வின்னில் ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் இது.

சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவிலிருக்கும் சதிஷ் தாவன் வானாராய்ச்சி மைய்யத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும். 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.

US GPSக்கு இணையாக வழிசொல்லி செயற்கோள்களை இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. இது பொதுமக்களுக்கும் மிலிட்டரிக்கும் இருக்கும் இடத்தைப் பற்றிய டேட்டாவைக் கொடுக்கும்.


  • ஒரு நபரின் (அல்லது பொருளின்) இடத்தையும், நேரத்தையும், பயனிக்கும் வழியையும் கண்டுபிடிக்க உதவும் சிக்னல்களை அனுப்பும். இப்பொழுது நாம் உபயொகப்படுத்தும் ஜிபிஎஸ் அமெரிக்காவினுடைய செயற்கொள்களால் நமக்குக் கிடைக்கிறது.
  • 1,425 எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.
  • NavICயின் எட்டாவது செயற்கைக்கொளான இது, PSLV ராக்கட்டில் அனுப்பப்படும்.

மார்ச் 29 அன்றுதான் தொடர்புக்கான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இது அனுப்பிய மூன்றாம் நாள் தன்னுடைய சுற்றுக்கு சென்றுவிட்டது, ஆனால் எந்த சிக்னல் அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.

இந்த செயற்கைக்கோள்கள் பத்துவருடம் வேலை செய்யும் என்று நம்பப்பட்டது ஆனால் IRNSS-1A வின் ருபீடியம் அடாமிக் கடிகாரம் அனுப்பிய இரண்டாவது ஆண்டே வேலை செய்யாமல் போய்விட்டது.

ஒரு நபரின் தற்போதைய இடத்தையோ அல்லது நேரத்தையோ சரியாக 24 மணி நேரமும் கணக்கிட இந்த ஏழு செயற்கைக்கோள்களும் சரியாக வேலைசெய்ய வேண்டும்.

ட்விட்டர் உலா: மகேஷ் மூர்த்தி, த்ரிஷா, பா.ரஞ்சித், நீல் டைசன்..

முதலீட்டாளர் மகேஷ் மூர்த்தி, ஃபேஸ்புக்கின் மாதாந்திர மக்கள் வரத்து (!) குறைந்திருக்கிறது என்று சொல்கிறார். #சோனமுத்தாபோச்சா?


பிரபல விஞ்ஞானி (கார்ல் சாகனின் காஸ்மோஸ் சீரிஸின் ரீமேக்கின் ப்ரசண்டர்) நீயூட்டனின் மூன்றாம் விதியை கவித்துமாக்கியிருக்கிறார். #ரொமாண்டிக்


ட்ரம்ப் தொடர்ந்து மொக்கவாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய கட்டிடத்தில் தீ பிடித்த செய்தியைப் பகிர்கையில், தீயணைப்பு வீரர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையாம். #மனமில்லியோ?


சிரியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் போரைப் பற்றிய ட்வீட்டை பா.ரஞ்சித் ரீ ட்வீட்டியிருக்கிறார்.#முடிவே இல்லியா?


ஸ்டார்டப்களுக்கும் மாணவர்களுக்கும் குருவாக இருக்கும் தொரை தோட்லா ஃப்ரான்சின் ஆர்ட்டிஃபீசியல் இண்டெலிஜென்சில் கடுமையாக முதலீடு செய்து வருவதை ட்வீட்டிருக்கிறார். #நீங்களும்செய்யவேண்டும்


வெளிச்சத்தைப் பார்த்து நில்லுங்கள், நிழல் உங்கள் பின்னால் விழும் என்று கருத்திட்டிருக்கிறார் த்ரிஷா #செம


பூனம் யாதவ் : ஏழ்மைப் பலுவை தூக்கியெறிய பலு தூக்குவதே வழி!

தொடர்புடைய செய்தி:

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்


நேற்று பூனம் யாதவ், இங்கிலாந்தின் சாரா டேவிஸை வென்று பலுதூக்கும் போட்டியில் இரண்டாவது பதக்கத்தை வென்றார். 2014 க்ளாஸ்கோ போட்டிகளில் இவர் வெண்கலம் வென்றார்.

22 வயதான பூனம் யாதவுக்கு ஏழ்மையை விட்டு வெளியேற பலு தூக்குவது ஒன்றே வழியாகயிருந்திருக்கிறது. வாரனாசிக்கு அருகிலிருக்கும் சண்டமாரியிலிருக்கும் இவருடைய குடும்பத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர். மூன்று பெண்கள். ஒரு பையன். சிறிய விவசாயியான இவரது தந்தை விவசாயத்திலிருந்து வரும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும்.

வாரனாசியிலிருக்கும் STC (சாய் ட்ரெயினிங் செண்டர்) யில் தான் முதலில் இவரது அக்கா சஷி பலுதூக்குவதற்கு பயிற்சி எடுத்துகொண்டிருந்தார். அரசாங்க வேலை வாங்கிவிட வேண்டும் என்பது அவரது பெருங்கனவாக இருந்தது. பூனம் ஒரு வருடம் கழித்து அந்த செண்டரில் சேர்ந்தார். பிறகு அவரது தங்கையும் – பூஜா – சேர்ந்துகொண்டார். இந்த மூன்று வீராங்கனைகளுக்கும் சரியான சாப்பாட்டை சத்தான உணவை, அவரது தந்தையால் தனது சொற்ப வருமானத்தை வைத்து கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களுள் மிக்ச்சிறந்தவரான பூனத்தை மட்டும் அவர்கள் தயார்படுத்த ஏகமனதாக முடிவுசெய்தனர்.

“அவருக்கு திறமை இருக்கிறது என்று நாங்கள் அறிந்து கொண்டபிறகு அவருக்கு முடிந்தவரை நாங்கள் சப்போர்ட் செய்ய முடிவெடித்தோம். விட்டிலிருக்கும் எருமை மாட்டின் பாலை கொஞ்சம் பணம் கிடைக்குமே என்று விற்போம், பூனத்துக்காக நான் கொஞ்சம் பாலை மறைத்து வைத்து அவருக்கு கொடுப்பேன். என் சாப்பாட்டை கொஞ்சம் எடுத்து வைத்து அவருக்கு அதிகமான உணவு தேவைப்படுவதால் அவருக்கு கொடுத்திருக்கிறேன்” என்கிறார் பூனத்தின் அக்கா சாஷி. குடும்பத்தினரின் தியாகம் வீண் போக வில்லை. 2014ஆம் ஆண்டு பூனம் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். தொடர்ந்து காமல்வெல்த்திலும் வெண்கலம் வென்றார்.

பூனத்திற்கு வெற்றிகள் குவிந்தன. 2015இல் காமல்வெல்த் சாம்பியன்சிப்ஸை வென்றார். 69கிலோ பிரிவுக்கு முன்னேறி 2017 காமன்வெல்த்தில் மொத்தம் 217கிலோ தூக்கி வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளே அவருடைய குறிக்கோளாய் இருந்தது. போட்டிகளுக்காக கிளம்பும் சில நாட்களுக்கு முன், “என் குடும்பத்திற்கு நான் நிறைய செய்யவேண்டும். நிறைய வெற்றிகளைப் பெற்று அவர்களைப் பெருமை அடையச் செய்யவேண்டும்” என்று பூனம் சொன்னார்.

மேலும் பல வெற்றிகள் பெற தங்க மங்கை பூனம் யாதவை குரல்வலை வாழ்த்துகிறது.

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்

XXI காமன்வத் போட்டிகளில், நேற்று இந்தியாவுக்கு தங்கநாள், இந்தியா வீராங்கனைகள் மூன்று தங்கங்களை அள்ளினர்.

  • இந்த அதிரடியால் இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியா மொத்தம் 7 தங்கமும், 2 வெள்ளியும், 3 வென்கல பதக்கங்களை இன்றுவரை அள்ளியிருக்கிறது.
  • பூனம் யாதவ், பெண்கள் பிரிவின் 69 கிலோ பலுதூக்கும் போட்டியில், தங்கம் வாங்கினார். பலுதூக்கும் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கங்களை வென்றது. விகாஸ் தாகூர் ஆண்கள் பிரிவின் 94 கிலோ போட்டியில் வென்கலம் வென்றார்.
  • 16வயது மனு பகேர் பத்து மீட்டர் சூட்டிங்கில் தங்கம் வென்றார். ஹீனா சிது வெள்ளி வென்றார். ரவிக்குமார் வெண்கலம் வென்றார்.
  • பெண்கள் டேபில் டென்னிஸ் அணியான மனிகா பத்ரா, மதூரிகா பட்கர் மற்றும் மௌமா தாஸ், நடப்பு சாம்பியனான சிங்கப்பூரை வென்று முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தனர்.

மேலும்:

  • ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வேல்ஸ் அணியை 4-3 என்கிற செட் கணக்கில் வென்றது. பெண்கள் பிரிவு இங்கிலாந்தை 2-1 என்கிற செட் கணக்கில் வென்றனர். இருவரும் செமி ஃபைனல் போகிறார்கள்.
  • பாக்சர் மேரி கோம் செமி ஃபைனல் செல்கிறார். அவருக்கான பதக்கம் உறுதியாயிற்று.

பூனம் யாதவ்

ஹீனா சிது, மனு பக்கேர்


காவிரி – பிரச்சனையின் நதிமூலம்

காவிரிப் பிரச்சனை 1892ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்ஸிக்கும் மைசூர் மாகானத்துக்கும் இடையே ஆற்றின் தண்ணீரைப் பிரித்துக்கொள்வதில் ஆரம்பித்தது. அந்த நாளிலிருந்து இன்று வரை அப்பம் யாருக்குச் சொந்தம் என்கிற விடை கிடைத்தபாடில்லை.

Plate-51552568429

1910 ஆம் ஆண்டு இரண்டு மாநிலங்களும் ஆற்றில் அணைக்கட்ட முற்பட்டன. இந்த பிரச்சனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கையிலெடுத்து யாருக்கு எவ்வளவு பங்கு என்று பிரித்துக்கொடுத்தது. 1924இல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தில் இப்பொழுது இருக்கும் பாசன வசிதிகளை புதிதாக கட்டப்படும் எந்த அனைக்கட்டும் சேதப்படுத்தக்க்கூடாது என்றும், அப்படி புதிதாகக் கட்டப்படும் எந்த அனையும் தமிழ்நாட்டின் ஒப்புதலோடுதான் கட்டப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சரியாகச் சொன்னால், மைசூர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லவே முடியாது.

ஆனால் கர்நாடகா மேற்குறிப்பிட்ட எதையுமே செய்யவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசின் அனுமதி பெறாமல் புதிதாக நான்கு (ஹரங்கி, கபினி, ஹேமாவதி, சுவர்னாவதி) கட்டுமானப் பணிகளைத் துவக்கியது.

1910இல் மைசூரு அரசாங்கம் கண்ணம்பாடியில் ஒரு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு மெட்ராஸ் அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. மெட்ராஸ் அரசாங்கம் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் சொன்ன தீர்ப்பை மெட்ராஸ் ஏற்றுக்கொள்ளவில்லை, மேல் முறையீடு செய்தது. இந்திய அரசாங்கம் இந்த விசயத்தில் தலையீடு செய்யவில்லை, காரியங்கள் நடந்தேரின, 1924 ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீங்கள் இந்திய வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும்:

765 கிமீ நீளம் உள்ள காவிரி ஆறு இரண்டு மாநிலங்களை கடந்து ஓடுகிறது: கர்நாடகா, தமிழ்நாடு.

கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் இருக்கும் தலைக்காவிரியில் தொடங்குகிறது. கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலுமே பெரும்பாலும் ஓடினாலும் இதன் ஆற்றுப்படுகை கேரளாவிலும் புதுச்சேரியிலும் இருக்கிறது.

Irrigation map.jpg

1892 மற்றும் 1924இல் போடப்பட்ட ஒப்பந்தம்: மொத்த தண்ணீரில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும், 23 சதவிகிதம் கர்நாடகாவிற்கும், எஞ்சியிருக்கும் தண்ணீரை கேரளாவிற்குக் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களைப் பிரிக்கும் பொழுது தான் பிரச்சனை ஆரம்பித்தது. அதற்கு முன்பு பிரச்சனைகள் பேசியே தீர்த்துக்கொள்ளப்பட்டன. பிறகு தமிழ்நாடு ஆற்றின் குறுக்கே அனைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதே சமயத்தில் கர்நாடகா கொடுக்கும் தண்ணீரை நிறுத்திவிடத் துடித்தது. 1924இல் போடப்பட்ட ஐம்பது வருடத்துக்கான ஒபந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, காவிரி கர்நாடகாவில் தொடங்குவதால் எங்களுக்கே காவிரியில் உரிமை அதிகம் என்று வாதிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மைசூர் மகாராஜாவுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது செல்லாது என்று விஜயகுமாராய் திமிர் காட்டியது.

1974க்கு அப்புறம் கர்நாடகா காவிரியை மேற்குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களுக்கு திருப்பிவிட்டது. இதற்கு தமிழ்நாட்டின் ஒப்பந்தத்தைப் பெறவில்லை.

விவசாய நிலங்கள் பெருகிவிட்ட காரணத்தால் தமிழ்நாடும் காவிரியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தண்ணீர் பிரிப்பதில் சிக்கல் ஆனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கபடும் என்று வாதிட்டது தமிழ்நாடு. 1972இல் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்கள் – தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி – எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகின்றனர் என்கிற கணக்கு எடுப்பதற்கு ஒரு கமிட்டியை நியபித்தது. அந்தக் கமிட்டி தமிழ்நாடு 566 tmcf பயப்படுத்துகிறது என்றும் கர்நாடகா 177 tmcf பயன்படுத்துகிறது என்றும் கண்டறிந்தது. முன்பு பயன்படுத்தியதைப் போலவே இப்பொழுதும் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்று அந்தக் கமிட்டி பரிந்துரைத்தது .

Cauvry basin

சர்வதேச முறைப்படிதான் – அதாவது இருவருக்கும் சரி சமமாக – தண்ணீரைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது. 94 சதவிகிதத்தை கர்நாடகாவும் தமிழ்நாடும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் மீதமிருப்பதை புதுச்சேரிக்கும் கேரளாவிற்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படியே இப்பொழுதும் தொடரவேண்டும் என்று தமிழ்நாடு சொன்னது.

1986இல் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு விவசாயிகள் குழுமம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு ட்ரிபியூனல் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொன்னது. 1990இல் இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் இருவரும் பேசித்தீர்த்துக்கொள்ள கால அவகாசம் கொடுத்தது. ஆனால் இருவரும் ஒத்துவராத காரணத்தால் காவிரி ட்ரிப்யூனல் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

1980 இல் இருந்து 1990 வரையிலான நீர் உபயோகத்தை ஆராய்ந்து, காவிரி ட்ரிப்யூனல், 1991இல் கர்நாடகா தமிழகத்துக்கு வருடந்தோரும் ஜூன் முதல் மே மாததிற்குள், மேட்டூர் அணைக்கு 205 tmcf அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் கர்நாடகா விவசாய நிலங்களை அதிகப்படுத்தக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

எதிர்பார்த்தபடியே இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஏற்றுக்கொள்ளாமல் அதை செல்லாது என்று அறிவிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இது தான் தீர்ப்பு மாற்றமுடியாது, டாட் என்று சொல்லிவிட்டது. கர்நாடகா அடிபணியவில்லை. இந்திய அரசாங்க கெசட்டில் இந்த இடைக்காலத் தீர்ப்பு பதிவுசெய்யப்பட்டது.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இரு மாநிலத்திலும் நல்ல மழை இருந்ததால் பெரிய போராட்டங்கள் இல்லாமல் இரு மாநிலங்களும் அமைதியாக இருந்தன. 1995இல் கர்நாடகாவில் மழை சரிவர இல்லாத காரணத்தால், இடைக்காலத்தடையை அது மதிக்கவில்லை. தமிழ்நாடு, சுப்ரீம் கோர்ட்டை நாடி 30 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தது. சுப்ரீம் கோர்ட்டும் கர்நாடகாவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகு நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் அன்றைய பிரதம மந்திரி பி வி நரசிம்மராவ் தலைமையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராவ் இரண்டு மாநில முதலமைச்சர்களையும் கலந்து ஒரு வழி சொல்லி இருவரையும் சம்மதிக்கவைத்தார்.

1998இல் காவிரி அதிகார மைய்யம் அமைக்கப்பட்டது. பிரதமந்திரி அந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். மற்ற மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

பதினாறு வருடங்கள் கழித்து 2007இல் காவிரி ட்ரிபியூனல் (CWDT) இறுதித் தீர்பை வழங்கியது. 1892, 1924 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தம் இன்றும் செல்லும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு 410 டி எம் சியும், கர்நாடகாவிற்கு 270 டி எம் சியும், கேரளாவிற்கு 30 டி எம் சியும் புதுச்சேரிக்கு 7 டி எம் சியும் அறிவித்தது. கர்நாடகா இதை எதிர்த்து மாநிலம் தழுவிய பந்த அறிவித்தது.

2013இல் பிப்ரவரி 19 அன்று மத்திய அரசு CWDTஇன் இறுதித் தீர்ப்பை உறுதிசெய்து கெஜட்டில் பதிவு செய்தது , காவிரி மேலான்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவேயில்லை.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் வரவில்லையெனில் சம்பா பயிர்கள் வாடிவிடுமே என்ற கவலை விவசாயிகளிடம் தொற்றிக்கொள்ளும். ஏப்ரல் மேயிலே பிரச்சனை ஆரம்பமாகிவிடும். மேமாதத்திலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டுமே? கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாது. தமிழ்நாடு கையேந்தி நிற்கும். சுப்ரீம் கோர்ட் படியேறும். கடைசியில் செப்டம்பருக்கு கொஞ்சம் முன்பு சுப்ரீம் கோர்ட் 15000 குசக்ஸ் (கிட்டத்தட்ட ஒரு டி எம் சி) அளவு மட்டுமாவது திறந்துவிடுங்கள் என்று கேட்கும். அதை மறுத்து கர்நாடகாவில் பந்த் வெடிக்கும். போராட்டம் நடக்கும். தமிழ் கடைகள் உடைக்கப்படும்.

தண்னீர் வந்து சேரும் வரை, விவசாயி வயிற்றில் புளியைக் கரைத்துக் இலவு காத்த கிளியாகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

சவரக்கத்தி – ஒரு நிமிட பார்வை

மிஷ்கினின் லேட்டஸ்ட் படம். ஆனால் இதில் டைரக்டரில்லை. நடிகன்.அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்த அவரது தம்பி ஆதித்யா படத்தை இயக்கியிருக்கிறார். மிஷ்கின் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார். ஆனந்த யாழை மீட்டிய ராம் மீண்டும் நடிகராகியிருக்கிறார். காணாமல் போன பூர்ணா ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அஜல் குஜால் சாரி அரோல் கொரலி இசை அமைத்திருக்கிறார்.

ஓகே. மங்காவுக்கு இன்றோடு – மாலை ஆறு மணியோடு – பரோல் முடிகிறது. மீண்டும் ஜெயிலுக்குப் போக வேண்டும். டென்சனாக இருக்கிறான். மறுபடியும் அந்த நரகத்திற்குள் போக வேண்டுமே என்கிற ஆத்திரம் இருக்கிறது அவனுக்கு. பொதுவாகவே மங்கா ஆத்திரக்காரன். தாய் இறந்துவிட்ட பிறகு தாய்மாமனே மங்காவை வளர்க்கிறார். தாய்மாமன் கூடவே இருந்து மங்கா பைத்தியக்காரன், ஏதாவது செஞ்சு ஜெயில் தண்டனையை கூட்டிக்கப்போறான் என்று அவனைப் பாதுகாத்து எப்படியாவது எந்த வித அசம்பாவிதமும் சண்டையும் இல்லாமல், மாலை ஆறு மணிக்கு ஜெயிலில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மங்காவோ நிஜ பைத்தியக்காரன். தாய்மாமனிடம் நீ கக்கூஸ் போறத இன்னொருத்தன் பாத்திருக்கானா, ஜெயில்ல பாப்பான்னு சொல்றான். சூப்பர் டயலாக். அதனால் ஐயோ மீண்டும் போய் அடைபடப் போகிறோமே என்கிற வெறி வேறு. மாமா என்ன கெஞ்சினாலும் காதில் விழமாட்டேனென்கிறது. வெளில போகலாம் என்று காரில் கிளம்புகின்றனர். பிச்சை ஒரு பார்பர். இரண்டு பிள்ளைகள், மனைவியின் வயிற்றில் இன்னொன்று. நிறை மாதம். மனைவியின் தம்பி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப்போகிறான், கையெழுத்து போட்டுட்டு வாழ்த்திட்டு வருவோம் வாங்க என்று மனைவி அழைத்ததும், தன் ஓட்டை ராஜ்தூத்தில் கம்பீரமாக இரண்டு பிள்ளைகளுடனும் நிறைமாத மனைவியுடனும் ஒரே பைக்கில் செல்கிறார். இவர் டீ நகர் ட்ராபிஃக் போலீஸ்கிட்ட மாட்டிக்கொடுத்திருக்கனும், இவரு கைய முறிச்சு, மனைவியை கீழ தள்ளி ரோட்லயே பிள்ள பெற வெச்சு, ரெண்டு பிள்ளைகளோட கால உடச்சு, கடைசில இவரையே ஜெயில்ல போட்ருப்பாங்க. மங்காவும் பிச்சையும் ஒரே ஜெயில்ல இருந்திருப்பாங்க. ஹூம். ஆனா பிச்சையின் ராஜ்தூத்தில் மங்காவோட கார் மோதிவிடுகிறது. பிச்சை கண்டபடி எல்லோரையும் திட்டிவிடுகிறார். ஓங்கி அடித்தும் விடுகிறார். அடித்தாரா இல்லியா என்பது லெஜண்ட். மங்காவின் முகத்தில் ரத்தம் வர, உடன் இருப்பவர்கள, அடிவாங்குனவனுக்கே இவ்ளோ ரத்தம் வருதே, அடி கொடுத்த கைப்பிள்ளையை சும்மா விடலாமா என்று ஏற்றிவிட, தாய்மாமா டேய் மங்கா அவன் அடிக்கலடா என்று வாதிட, மங்கா அடித்தவனின் கையை வெட்டாமல் மாலை ஜெயிலுக்குள் போகமாட்டேன் என்று சபதமெடுக்கிறார். பிச்சையின் கதியும் அவரது குடும்பத்தின் கதியும் என்னானது? மங்கா மாலை பரோலை முடித்து ஜெயிலுக்கு போனானா? பிச்சையின் மச்சானின் கல்யாணம் நடந்ததா? படம் முடியும் போது உங்களுக்கு தலைவலி வந்ததா? மீதியை படம் பார்த்து கதை தெரிஞ்சுக்கவும்.

ராமும் மிஷ்கினும் பொருத்தமாகவே இருந்தனர். பூர்ணா கொஞ்சம் ஓவர் ஆக்ட் ஆனால் படத்தின் காமெடி மூடுக்கு செட்டானார். படத்தை ப்ளாக் காமெடின்னு சொல்றாங்க. மிஷ்கின் கொஞ்சம் கறுப்பா இருக்கறதனாலேயும் கொஞ்சம் காமெடி இருக்கிறதாலேயும் அப்படி சொல்லிருப்பாங்களோ. டீக்கடையில் ராஜ்தூத் மாடல் நம்பர் கேக்கும் இடம் மட்டுமே குபீர். மற்றபடி கபீர். (ஒரு ஃப்லோல வந்திருச்சு)

ஆனால் கடைசிக்காட்சியில் குழந்தை அழும் சத்தம் கேட்ட உடன் பழைய பாரதிராஜா படத்தில ஹீரோயின் அப்படியே ஸ்டில்லக்கொடுத்து நிக்கிற மாதிரி ரெண்டு பேரும் அப்படியே கெடப்பதெல்லாம் ரணகளம். நான் என்னவோ ப்லிம் சிக்கிக்கிருச்சோன்னு நெனச்சேன். அரோல் கொரலியின் இசையில் மிஷ்கினே பாடியிருக்கும் தங்ககத்திபாட்டு செம என்று சொல்ல ஆசைதான். தம்பி படம்ங்கறதால ஓவர் அட்ராசிட்டியா இருக்கு. ஸ்மியூல்ல பாடி பழகியிருப்பாரோ? ஒய் பாஸ்?

படத்திலேயே எனக்கு பிடிச்ச கதாப்பாத்திரம் தாய்மாமாதான். சூப்பர் காஸ்டிங்.

இன்னும் பாக்கலீன்னா, பாருங்க. மெர்சல்லாம் பாத்தீங்கல்ல? அப்ப இதப் பாக்கலாம்.

நாச்சியார் – ஒரு நிமிட பார்வை

நாச்சியார்

பாலாவின் படம். அப்படியா என்ன? இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஜோவுக்காகவா, ஜீவிக்காகவா அல்லது நமக்காகவா? ஒரு சீன் கூட சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

பொருளாதாரத்தின் அடிதட்டில் தினக்கூலி வேலை செய்யும் ஒரு இளைஞன். அதே போன்றொதொரு நிலையில் ஒரு சிறிய பெண். மைனர் பெண். இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒரு எதிர்பாராத சந்திப்பில் அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வீட்டில் வைத்து இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அந்தப் பெண் கருவுருகிறாள். மைனர் பெண்ணைக் கெடுத்த குற்றத்திற்கு பையனை போலீஸ் கைது செய்கிறது. ஜோ கேஸுக்குள் எண்ட்ரி. டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்ததில் அந்தப் பையனுக்கும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. பிறகு யார் காரணம்? அந்தப் பெண்ணிற்கும் அந்தப் பையனுக்கும் இந்த விஷயம் தெரிந்ததா? அந்தப் பையன் ஏற்றுக் கொண்டாரா? போன்ற அதிபயங்கர அதிநவீன முடிச்சுகளை பால அவிழ்த்தாரா?இல்லை ஜோ கண்டுபிடித்தாரா என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

கெட்ட வார்த்தை பேசும், யாரையும் மதிக்காத எல்லோரையும் தூக்கிப் போட்டு மிதிக்கும் போலீஸாக ஜோ. போலீஸே சட்டத்தை மதிக்கலேன்னா பொது ஜனம் எப்படி மதிக்கும்? மேகம் கருக்குது பாடல் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அந்த ஜோவா இது என எனக்கும் கேட்க ஆசை தான். ஆனால் அதே ஜோ தான். ஜீவி? அனுராக் காஷ்யப் கூப்பிட்டிருக்கிறாராமே? ஆனால் பரவாயில்லை கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துபவர் அந்தச் சிறிய பெண் இவானா தான். துப்பறியும் கதையில் படம் பார்ப்பவர்களை குழப்புகிறேன் என்று அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டின் ஓனர் போலிஸையும் இழுத்து விட்டிருப்பது காமடி. ப்ரீ க்ளைமேக்ஸில் ஜோ வழங்கும் தண்டனை திகில் என்று சொல்ல ஆசைதான். க்ளைமேக்ஸ் அர்ஜுன் ரெட்டி க்ளைமேக்ஸை விட பெரிய காமெடி.

வேறு வேலை இல்லையெனில் இன்னும் பார்க்காதவர்கள் பார்க்கலாம்.

ஆமாம் படத்திற்கு ஏன் நாச்சியார் என்று பெயர்?

அலெக்சா, நீ என்ன ஒட்டுக் கேட்கிறாய்?

அமேசான் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அலெக்சா – டிஜிட்டல் உதவியாளர் – பற்றிய விளம்பரம் அது. அலெக்சாவுக்கு குரல் போய்விட்டது. தற்காலிகமாகப் பேச முடியவில்லை என்பது போன்ற சித்தரிப்பு. நிறைய பிரபலங்கள் இந்த விளம்பரத்தில் நடித்திருந்தனர் – அமெசானின் சீ ஈ ஓ ஜெஃப் பெஸோஸ் உட்பட.

அந்த விளம்பரம் அலெக்சா என்ன பேச முடியும் என்பதைப் பற்றியதாக இருந்தாலும் – நிறைய டிஜிட்டல் உதவியாளர்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் நம் வீட்டிற்குள் வந்துவிட்ட இந்தக் கால கட்டத்தில், முக்கியமான கேள்வி, அலெக்சாவால் நாம் பேசுவதிலிருந்து என்னவெல்லாம் ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்பதே.

அமெசானும் கூகுளுமே இன்றைய நிலையில் இது போன்ற சாதனங்கள் விற்பனையில் முன்னோடியாக இருக்கின்றன. அவர்கள் சொல்வது என்னவென்றால்: நீங்கள் “ஹே அலெக்சா” என்றோ “ஓகே கூகுள்” என்றோ சொன்ன பிறகே, நீங்கள் பேசுவதைக் கேட்டுப் பதிந்து கொள்ள ஆரம்பிக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் விண்ணப்பித்துள்ள – பெரும்பாலும் நிலுவையிலுள்ள – காப்புரிமைகள் (patent) இந்த மாதிரியான சாதனங்கள் நம் பேசும் பேச்சுக்களையும் செய்யும் செயல்களையும் கண்காணிக்கவும் கேட்கவும் முடியும் என்று அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவ்வாறு சேகரிக்கபடும் விசயங்களால், அந்த நபர்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் கண்டுபிடித்து, பிறகு அதை விளம்பரங்களுக்கும், அந்த நபர்கள் வாங்குவதற்கு பொருட்களைப் பரிந்துரை செய்யவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு காப்புரிமை விண்ணப்பத்தில் அமெசான், தனது குரல் தெரிவு அல்காரிதத்தை எப்படி டேப்லட், ஈ புக் ரீடர்ஸ் (கிண்டில்?) போன்றவற்றில் பயன்படுத்தி, அதை பயன்படுத்துபவர்கள் பேசுவதை லைவ்வாக கண்காணித்து, அவர்கள் love, bought, like போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் பொழுது பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை எப்படி ஆய்வு செய்து அந்த டேட்டாவைப் பயன்படுத்தும் என்று விவரித்திருக்கிறது. அந்த விண்ணப்பத்தோடு இணைக்கப்பட்ட ஒரு வரைபடத்தில் எப்படி இரு நண்பர்களுக்குள்ளான தொலைபேசி உரையாடலின் முடிவில் ஒருவர் சான் டியாகோ ஜூவுக்கு டிக்கெட்டுக்கான அஃபரையும் மற்றொருவர் மதாந்திர வைன் க்ளப் மெமர்ஷிப்பிற்கான விளம்பரத்தையும் காண்பார்கள் என்று விவரித்திருக்கிறது.

கூகுளின் (ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் தயாரிக்கும் நெஸ்ட் லேப்ஸின் உரிமையாளர்) சில காப்புரிமை விண்ணப்பங்களில் இவ்வாறு சொல்கிறது: ஒலிகளை மானிட்டர் செய்வதன் மூலம் ஒரு குழந்தையை அது செய்யும் சேட்டைகளைக் கண்கானிக்க முடியும் என்கிறது. பேச்சை வைத்து முதலில் குழந்தை இருக்கிறது என்று கண்டுபிடித்து பிறகு பேசுகிற தொனியை வைத்து எச்சரிக்கை கூட செய்யமுடியும் என்கிறது.

வேறு ஒரு விண்ணப்பத்தில் தனி நபர்களுக்கு தகுந்தார்போல தகவல்கள் தரும் நோக்கில் பேசுபவரின் மனநிலையை “அவருடைய பேச்சின் சத்தத்தை வைத்தும், அவர் சுவாசத்தை வைத்தும், அழுகையை, இன்னும் பிறவற்றை வைத்தும்” பேசுபவரின் உடல் நலத்தை “அவர் இறுமுகிறாரா தும்முகிறாரா போன்றவற்றை வைத்து” கண்டுபிடிக்க முடியும் என்கிறது.

அதே விண்ணப்பத்தில், ஒரு நபரின் வீட்டில் கீழே கிடக்கும் டீ சர்ட்டில் இருக்கும் வில் ஸ்மித்தின் படத்தை கண்டுகொண்டு அந்த நபர் வில் ஸ்மித்தை இணையத்தில் தேடிய வரலாறை வைத்து, “இந்தாப்பா தம்பி, உனக்கு வில் ஸ்மிதைப் பிடிக்கும் போலத் தெரியுது, உங்க பக்கத்து தேட்டர்ல புதுசா வில் ஸ்மித் படம் ஓடிட்டிருக்கு, ஓடிப் போய் பாரு” என்று சொல்ல முடியும் என்கிறார்கள்.

அமசானும் கூகுளும் எங்களுக்கு வாடிக்கையாளர்களின் ப்ரைவசி முக்கியம், அவர்களின் ப்ரைவசியே முக்கியம் என்று சொல்லி வருகின்றன.

ஆப்பில் தன் பங்குக்கு ஹோம் பாட் என்கிற வஸ்துவை அறிமுகம் செய்திருக்கிறது. ஃபேஸ்புக் இந்த மே மாதத்தில் இது போன்ற ஒரு வஸ்துவை அறிமுகம் செய்யலாம் என்று ப்ளூம்பர்க் சொல்லுகிறது.

கூகுளும் அமசானும் இந்த சாதனங்களைப் பயன் படுத்துவோரின் அனுமதியின்றி (அவர்கள் கூப்பிட்டோ அல்லது பட்டனை அமுக்கியோ) எதையும் பதிவு செய்ய மட்டோம் என்கிறது. மேலும் பதிவு செய்ததை இணையத்துக்கு அனுப்பும் பொழுது (streaming) லைட் எரிந்து கொண்டிருக்கும் அதனைப் பார்த்து நீங்கள் உஷாராகிக்கொள்ளலாம் என்கிறது. மேலும் இணையத்தில் இருக்கும் பதிவுசெய்யப்பட்ட குரல்களை நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் டெலீட் செய்யலாம் என்றும் கூறுகிறது.

அமசான் நாங்கள் ஒரு போதும் பதிவுப் செய்த பேச்சுகளை வேறு கம்பெனிகளுக்கு கொடுக்க மாட்டோம் என்கிறது. கூகுள் பொதுவாக உங்கள் பேச்சுகளை நாங்கள் வேறு கம்பெனிகளுக்கு கொடுக்க மாட்டோம் ஆனால் எழுத்து வடிவத்தில் கொடுப்போம் என்கிறது.

The Electronic Privacy Information Center, இணையத்தில் இணைந்திருக்கும் சாதனங்களுக்கு இன்னும் கடினமான விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்கிறது. தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன, சேகரிக்கப்பட்ட தகவல்களை எப்படி ஆய்வு செய்கின்றனர் என்பதையும் ஆய்வின் முடிவை எப்படி எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தெளிவாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறது.