லவ்ஸ் – 1

(கற்பனைக்காதலி : புஷ்பா)

கார்ரெட் கம்ப்யூட்டர் சிஸ்டெம்ஸ். காபிட்டேரியா.

ஸ்ட்ரா பாக்கெட்டுகள்
கூட்டம் கூட்டமாக
தற்கொலை செய்து கொண்டன.

புஷ்பா இன்று ஜூஸ்
சாப்பிட வரவில்லை.

***

பிரம்மா. படைப்புலகம்.

வாருங்கள்.
நீங்கள் போன பிறவியில்
நிறைய நன்மைகள்
செய்திருப்பதால், இந்தமுறை
நீங்கள் எது நினைக்கிறீரோ
அதுவாகவே பிறக்கலாம்.

உலகத்தின் மிகப்பெரிய
செல்வந்தராக போகிறீரா?

வேண்டாம்.

உலகத்தின் ஆன்மீகத்
தலைவராக?

வேண்டாம்.

உலகத்தையே உங்கள்
கையில் வைத்துக்கொள்ளும்
அதிகாரம் கொண்டவராக?

வேண்டாம்.

அழகான கிளியோபாத்ராவாக?

வேண்டாம்.

பெண்கள் மயங்கும் மன்மதனாக?

வேண்டாம்.

யூ.எஸ். ப்ரசிடென்ட்டாக?

வேண்டாம்.

கொஞ்சும் கிளியாக?

வேண்டாம்.

அழகான முயலாக?

வேண்டாம்.

பிறகு என்னவாகத்தான் பிறக்கவேண்டும்
என்று நினைக்கிறீர்கள்?

புஷ்பாவின் போனிடெயிலுக்கு
ஹேர்பேண்டாக. ப்ளீஸ்.

***

அடர்ந்த காடு.
கடும் குளிர்.
விடாமல் தவம் புரியும்
விசுவாமித்திரர்.

வேட்டையாடவந்த
அழகான மன்மதன்
ஒருவன்
அவரின்
தவத்தைக் களைத்தான்.

விசுவாமித்திரர்
கொடுத்தார் சாபம்
என் கூஜாவிலிருக்கும்
தண்ணீராக மாறிவிடு.

அவன் மன்றாடினான்.
கூத்தாடினான்.

மனம் இளகிய
விசுவாமித்திரர்
சொன்னார்.
மனிதன் அல்லாத
வேறு
உருவம் உனக்கு
கொடுக்கிறேன்.
கேள் என்றார்.

சற்றும் தாமதிக்காமல்
அவன் சொன்னான்:

புஷ்பாவின் டெஸ்கிலிருக்கும்
மானிட்டராகப் போகிறேன்.
தினமும் அவள் என்னைப்
பார்த்துக்கொண்டேயிருப்பாள்.

***

புஷ்பாவுக்கு
ரொம்பத்தான் திமிர்
என்றது தலையணை.

நான் தான் அவளுடைய
தலைக்கு இதமாக இருக்கிறேன்.
ஆனால் என்றுமே
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்.

ஆமாம் ஆமாம்
உண்மைதான்.
நான் தான் அவள்
போர்த்திக்கொள்ள
உதவுகிறேன்.
ஆனாலும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்.
என்றது போர்வை.

ஆமாம்.ஆமாம்.
நான் தான் அவள்
படுப்பதற்கு
இதமாக இருந்து
அவளுக்கு நல்ல
தூக்கத்தைத் தருகிறேன்
ஆனாலும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்
என்றது மெத்தை.

ஆமாம். ஆமாம்.
நான் தான் அவளுக்கு
குளிர்ந்த காற்றைத்
தருகிறேன்
இருந்தும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்
என்றது மின்விசிறி.

இவை எதுவுமே
செய்யாமல் சும்மா
இருக்கும்
அந்த டெடி பியருக்குத்தான்
எப்பொழுதுமே
கிடைக்கின்றன முத்தங்கள்
என்றன எல்லாமுமாய்
சேர்ந்து.

டெடி பியர்
சொல்லியது:
உங்கள் எல்லாரையுமே
அவளாக வாங்கிக்கொண்டாள்.

என்னை
அவன் அல்லவா
வாங்கிக்கொடுத்தான்.

நீங்கள்
அவனிடம் சென்று
மன்றாடுங்கள்.

***

கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது புத்தகங்கள்.








Thanks: August.

இந்த பட்டியல் “ஆகஸ்ட்” என்கிற மாத இதழ் வெளியிட்டிருந்தது. இவைதான் வேறு புத்தகங்கள் இல்லை என்பது இல்லை. ஆனால் இந்த இருபது புத்தகங்களும் நல்ல புத்தகங்கள் என்பது தான் உண்மை.

இவற்றில் நான் மூன்று மட்டுமே படித்திருக்கிறேன். Catcher In The Rye, Midnights Chidren and Fountain Head. இவை மூன்றுமே மிக அருமையான Novels.

பின் குறிப்பு:அனானியின் பின்னூட்டம் மிகச்சரி. “கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது ஆங்கில புனைவுகள்” என்று இந்த இடுகைக்கு தலைப்பு கொடுத்திருந்தேன். பல மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருப்பதால் அவற்றை ஆங்கில புனைவுகள் என்று சொல்வது சரியில்லை (அபத்தம்!). எனவே தலைப்பை மாற்றிவிட்டேன்.

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!

There are annoying misprints in history, but the truth will prevail!
—Nikolai Ivanovich Bukharin (1937)

“மிஞ்சும் சொற்கள்” என்ற கடைசி அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கிறார் அருணாச்சலம்:

ஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். ‘பின் தொடரும் நிழலின் குரல்’- புகாரினை, வீரபத்ரபிள்ளையை, என்னைப் பின் தொடர்ந்தது எங்கள் நிழல்கள் தாம். நிழலை ஒருவன் ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அது மறுபாதி. அது நம்முடன் இடைவிடாது உரையாடுகிறது. ஒளியைத் தன்முன் கண்டு நடக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் நிழல் தொடருகிறது. நிழலின் குரலை ஒரு போதும் நாம் புறக்கணித்துவிடக்கூடாது.

***

ஜெயமோகன் என்ற எழுத்தாளரை யார் எனக்கு அறிமுகம் செய்தது என்று எனக்கு நினைவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு விகடன் மூலம் அறிமுகமானார். ஆனால் ஜெயமோகன் எனக்கு எதேச்சையாக நூலகத்தில் சும்மா படிப்பதற்கு தமிழ் நூல் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமாகியிருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக ‘காடு’ நாவல். அதற்கப்புறம் ஜெயமொகனின் சிறுகதைத் தொகுப்பு. காடு நாவலில் தான் பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இந்த நாவலைப் படித்துவிடவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தேன். ஏன் என்று எனக்கு தெரியாது. அதற்கப்புறம் மதுரை இலக்கியபண்ணையில் இந்தமுறை ஜெயமோகன் நாவல்கலைத் தேடியபோது எனக்கு கிடைத்தது ஒன்றே ஒன்று தான்: விஷ்ணுபுரம். ஏன் என்று யோசித்தேன். ஒருவேளை நிறைய மக்கள் ஜெயமோகனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் விஷ்ணுபுரத்தை வீட்டில் கொடுத்த போது, யாவரும் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து சற்று மிரளவே செய்தனர். அப்புறமும் தைரியமாக எடுத்து படித்தவர்களில் என் அப்பாவும் என் அண்ணனும். அதில் நூறு பக்கத்தைத் தாண்டியவர் என் அண்ணன் ஒருவரே. (என் அப்பாவும் அண்ணனும் நிறைய நாவல்கள் படிப்பவர்கள். என் அப்பா தமிழாசிரியர். என் அண்ணன் வழக்கறிஞர்). நான் இதற்கு முன்பு எழுதிய ஆயிரம் கால் இலக்கியம்-7 -ல் அசோகமித்திரன் அவர்களின் நேர்காணலில் அவர் ஒரு கேள்விக்கு அளித்த ஒரு பதிலில் : ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நிறைய எழுதுகின்றனர். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். மிகச்சரியான கேள்வி. நியாயமான கேள்வி. இல்லையா?

இன்றைய பாம்ப்லட்(pamplet) உலகில் யார் எழுநூறு பக்க நாவல்களை படிக்க தயாரக இருக்கின்றனர்? அப்படியும் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த -படிக்கின்ற! என் நண்பர் ஒருவர் சாப்ட்வேர் துறையில் இருப்பவர் தான்; பொன்னியின் செல்வனை, அதுவும் ஈ-புக், விடாமல் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டே; படுக்கும் போது, உட்காரும் போது பாத்ரூமுக்கு தவிர; என்று எல்லாஇடங்களிலும் தூக்கிசென்று படித்து முடித்தார் – மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் வேறு மாதிரி. பின் தொடரும் நிழலின் குரல் (பி.நி.கு) வேறு மாதிரி. இரு நாவலையும் ஒப்பிடுதென்பதே அபத்தம். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமே ஒப்பிடலாம். பொன்னியின் செல்வனில் ஒரு முடிச்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பிறகு காதல், நகைச்சுவை, வீரம் என்று சரியான அளவில் கலந்திருக்கும். ஆனால் பி.நி.கு தத்துவம் சார்ந்தது. தருக்கம் செய்வது. வாதடுவது. உண்மைகளை பொய்களை எடுத்து ஆராய்வது. அல்லது சிலர் சொல்லுவது போல ஒரு சார்பாக நின்று – அப்பொழுது வாதாடுவது. அலசுவது. இது சரி என்று சொல்வது. பிறகு இது சரியில்லை என்று சொல்லிவிடுவது. பிறகு அதுதான் சரி என்று சொல்வது. கடைசியில் அதுவும் சரியில்லை இதுவும் சரியில்லை இது தான் சரி என்று முடிவு சொல்லாமல் சொல்வது. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல அல்ல.

வாதங்கள். வாதங்கள். பின்னர் மேலும் வாதங்கள். பின்னர் மேலும் மேலும் வாதங்கள். நம்மை குழப்பும் வாதங்கள். (பிறர் சொல்வது போல: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வாதங்கள்.!) சில இடங்களில் ஏன் இப்படி-போதுமைய்யா போதும் என்று மூடிவைத்துவிட தூண்டும் வாதங்கள். பிறகு நாமே யோசித்துப் பார்த்து வேறு என்ன வாதங்கள் இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில் அதே பக்கத்துக்குப் போகவைக்கும் வாதங்கள். தெளிந்த வாசகன் மட்டுமே கடைசிவரை செல்ல முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவனை மட்டுமே கடைசி வரை கூட்டிச்செல்லும். படிக்க முடியவில்லையா? பிடிக்கவில்லையா? குழப்பமாக இருக்கிறதா? தயவு செய்து விலகிக்கொள். என்னுடைய ஆள் இல்லை நீ. உன்னை கண்டிப்பாக படிக்கவைக்கவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏதும் இல்லை. அதற்காக அத்தியாயங்கள் தோறும் முடிச்சுகள் வைக்க என்னால் முடியாது. முடிந்தால் படித்துக்கொள் என்று சவால் விடும் வாதங்கள்.

நான் நாவலை நூலகத்திலிருந்து எடுத்து ஒரு வாரம் வரையில் முன்னுரையிலேதான் இருந்தேன். நாவலின் முதல் அட்டையுடன் சேர்த்த பக்கத்தில் (வேறு பதிப்புகளில் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நான் படித்தது தமிழினி வெளியீடு!) பிட்ஸ்பர்க்கின் புகைப்படம் இருந்தது. எனக்கு அது பிட்ஸ்பர்க் தான் என்று என்னுடைய மேலாளர் சொல்லும்வரை தெரியாது. அப்படித்தான் இருக்கிறது எனது கம்யூனிச அறிவு. எனது பள்ளி நாட்களில் கொஞ்ச நாட்கள் (மாதம்!) நான் த.மு.எ.ச வின் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர்களது நூலகத்தில் (அவர்களது நூலகங்கள் அழகாக இருக்கும். அங்கு தான் எனக்கு முதன் முதலில் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல கம்யூனிச புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒன்றைக்கூட படித்ததில்லை என்பது வேறு விசயம். அனால் எனக்கு குமுதம் ஆனந்த விகடன் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்!) இரண்டு திருக்குறள்கலோடு ஆரம்பிக்கிறது நாவல். அருமையான குறள்கள்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

***

தை வீரபத்ரபிள்ளை என்பவரைச்சுற்றியே சுழல்கிறது. வீரபத்ரபிள்ளை மிகப்பெரிய படிப்பாளி. உலக இலக்கியங்களைப் படித்தவர். டிபிஎல்யு என்ற தொழிற்சங்கத்தில் உறுபினராக இருக்கிறார். அதை நிறுவிய கே.கே.எம் என்றவருடைய வலதுகரமாக இருக்கிறார். தொழிற்சங்கம் ஸ்டாலினை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது. ஸ்டாலினால்காந்த இயக்கம் கம்யூனிசத்தை சார்ந்திருக்கிறது. வீரபத்ரபிள்ளைக்கு இருக்கும் வெளி உலகத்தொடர்பால் (குறிப்பாக ரஷ்யா) அவருக்கு புகாரின் என்பவரைப் பற்றிய உண்மைகள் கிடைக்கிறது. கார்பச்சேவ் காலத்தில்.

புகாரின் ஸ்டாலிக்கு வலதுகரமாக இருந்தவர். ஸ்டாலினின், குளக்குகள் என்ற ரஷ்ய விவசாய பெருங்குடிகளுக்கு, எதிரான நிலைப்பாடு புகாரினை கிளர்த் தெழச்செய்கிறது. ஸ்டாலினுடன் மாறுபட்ட கருத்து கொண்டவராகிறார். ஸ்டாலின் புகாரினை தேசத்துரோகி என்று பழி சுமத்துகிறார். புகாரின் தனது இளம் மனைவியான அன்னாவை விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஸ்டாலின் புகாரினுக்கு மரண தண்டனை விதிக்கிறார். புகாரினின் மனைவி சைபீரியாவின் வதைமுகாம்களில் சிறைப்படுத்தப்படுகிறாள். அவள் ஐம்பது வருடங்கள் கழித்து புகாரின் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கார்ப்பச்சேவ் விசாரணையில் கூறி கதறுகிறாள். புகாரின் நிரபராதி என்று தீர்ப்புவழங்கப்படுகிறது.

இதை அறிந்துகொள்ளும் வீரபத்ரபிள்ளைக்கு ஸ்டாலின் மேல் மிகுந்த கோபம் உண்டாகிறது. ஸ்டாலிக்கு எதிராக குரல் கொடுக்க முயல்கிறார். கட்சி மறுக்கிறது. அவரிடம் உண்மைகளை மறைக்கும் படி மன்றாடுகிறது. பலனில்லை. வீரபத்ரப்பிள்ளையின் படித்த அகங்காரம் முந்திக்கொண்டுவிட்டது. புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் அல்ல. பணியாத வீரபத்ரப்பிள்ளை கட்சியை விட்டு துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிறார். வீரபத்ரபிள்ளை தனிமரமாகிறார். மொத்த கட்சியும் அவர் மீது புழுதி வாரியிரைக்கிறது. வீரபத்ரபிள்ளை குடிக்க ஆரம்பிக்கிறார். மனம் தடுமாறுகிறார். கடைசியில் அனாதையாக உயிர்விடுகிறார்.

கேகேஎம் என்பவர் கட்சியின் நிறுவனர். அவர் தான் கட்சியை வளர்த்தவர். பின்னர் சமீபகாலத்தில் பழைய கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் -விட்டுக்கொடுக்கமுடியாமல்- ஒட்டாத தண்ணீராக கட்சியென்ற தாமரை இலையில் இருக்கிறார். அவரை தூக்கியெறிய விரும்பிய கட்சி மேலிடம், அவருடைய வலது கரமாக அருணாசலம் என்பவரை பயன்படுத்திக்கொள்கிறது. அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட, கேகேஎம் வெளியேறுகிறார். பிறகு அவரும் கட்சியால் தூற்றப்படுகிறார்.

அருணாசலத்துக்கு மன இறுக்கம். ஆனால் வேறு வழியில்லை. இந்த சமயத்தில் தான் வீரபத்ரபிள்ளையின் மகனைச் சந்திக்கிறார் அருணாசலம். வீரபத்ரபிள்ளை எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பு அவருக்கு கிடைக்கிறது. அதற்குப்பிறகு அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது கட்சியில் வீரபத்ரபிள்ளை என்ற ஒருவர் இருந்ததற்கான அத்தாட்சியே இல்லாமல் இருக்கிறது. கேகேஎம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறார் (கேகேஎம் க்கு வலது கரமாக இருந்தவர் வீரபத்ரபிள்ளை). பிறகு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதைக்கு முன்னுரை எழுதிய ஒருவரை பிடித்து அவருடைய தொடர்பு என்று கோர்த்து வீரபத்ரபிள்ளை என்பவரது உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்.

வீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தை தொடருகிறது. அருணாச்சலம் கட்சி சவனியரில் வீரபத்ரபிள்ளை பற்றி எழுத மிகுந்த முனைப்போடு இருக்கிறார். கட்சி மோப்பம் பிடிக்கிறது. அருணாச்சலத்தை எச்சரிக்கிறது. அருணாச்சலம் மனம் பிறழ்கிறார். பைத்தியமாகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தையின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் மீண்டு வருகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மனைவி நாகம்மையின் மீது அவர் கொண்ட காதல் தான் அவரை மீட்டுகொண்டுவந்தது என்று எண்ணிக்கொள்ளலாம். (நான் எண்ணிக்கொண்டது!). இந்த பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ராமசாமி என்பவர். ராமசாமி என்பவர் தான் அருணாச்சலத்திற்கு வீரபத்ரப்பிள்ளை பற்றி சொன்னவர். வீரபத்ரபிள்ளையின் தீவிர அனுதாபி அவர். ராமசாமியின் வீட்டில் ஜெயமோகன் இருக்கும் போது அருணாச்சலம் முதன் முறையாக ராமசாமியை சந்திக்கிறார். முழுகதையையும் கேட்ட ஜெயமோகன் இதை நாவலாக தொகுத்து நமக்கு அருளியிருக்கிறார்.

இது தான் நாவலின் சாரம்சம். அடிச்சரடு. மல்லிகை இல்லாத நார். இதை சுற்றிலும் மல்லிகையாக ஜெயமோகனின் தத்துவம் மற்றும் தருக்கம். இங்கியல் மற்றும் மார்க்ஸிசம். ஸ்டாலின் மற்றும் லெனின். ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின். நான் மற்றும் எனது நிழல்.

***

னால் நிழல் என்று ஏன் பெயரிட்டார் என்று தான் எனக்கு விளங்கவில்லை. நிழல் நம்மை எதிர்த்து குரல் கொடுக்காது. நிழல் நம்மை கேள்வியும் கேட்காது. நிழல் நாம் செய்வதை மட்டுமே செய்யும். மிகுந்த இருட்டான இடங்களுக்கு சென்று விட்டால் நம்மை விட்டு அகன்று விடும். ஜெயமோகன் சொல்வதைப் போல “தன் முன் வெளிச்சத்தைக் கண்டு நடப்பவர்களை எப்பொழுதுமே நிழல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்பது மட்டும் முற்றிலும் உண்மை. ஆனால் எப்போதும் நம்மை விட்டு அகலாத ஒன்று மனசாட்சி மட்டும் தான். மனசாட்சி தான் எப்பொழுதும் நம்மை கேள்வி கேட்டுகொண்டேயிருக்கும். நிழல் என்பது வேறொன்றும் இல்லை மனசாட்சியே என்று வைத்துக்கொள்ளலாமா? இல்லை நிழல் என்பது வரலாறா? நாம் ஒவ்வொருவரின் பின்னேயும் வரலாறு பாலைவன மணல் போல காற்றால் மாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த வரலாறு கூறும் உண்மைகளை உணர வேண்டுமா?

***

நாவல் எழுதப்பட்ட விதமே அற்புதம். எனக்கு இந்த முறை புதிது. அதாவது நாவல் முழுதையும் ஒரே கதையாகக் கூறாமல். கதையாக, கட்டுரையாக, கடிதமாக, கவிதையாக, நாடகமாக கூறியிருப்பதுதான் சிறப்பு. வீரபத்ரபிள்ளையின் ஆளுமைகள் அனைத்தும் நாவலில் அப்படியே இடம்பெறுகின்றன. வீரபத்ரபிள்ளை கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதுகிறார். கட்சித்தலைமை அவருக்கு பதில் கடிதம் எழுதுகிறது. இந்த இரு கடிதங்களிலும் ஸ்டாலினின் சிறப்பு மற்றும் வெறுப்பு அலசப்படுகிறது. வீரபத்ரப்பிள்ளையின் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள் கதைக்கு மேலும் பலம் சேர்க்கின்றன. வாதத்தை பலப்படுத்துகின்றன. கதையினூடாக ஜெயமோகன் வருவது யதார்த்தத்தை கொண்டுவருகிறது. நாவலின் பின் புலத்தைக் காட்டுகிறது.

***

ம்யூனிசம் தோன்றி இத்தனையாண்டுகள் ஆகிவிட்டிருந்தும் அவர்களது கனவான பொன்னுலகம் அவர்களுக்கு கிடைத்ததா? ஸ்டாலின் என்னதான் சாதித்தார்?

ஸ்டாலினால கம்யூனிசத்துக்க அடிப்படையான நிலச் சீர்திருத்தத்தையே நடைமுறைப் படுத்த முடியல. ஒன்றரைக் கோடி விவசாயிகளைக் கொண்ணுபோட்டு விவசாய அமைப்பையே நாசம் பண்ணினது தான் பலன். அவர் காலத்தில தான் உலகத்திலேயே பெரிய தானியக் களஞ்சியங்களில ஒண்ணான உக்ரேய்னில பஞ்சம் வந்து பல லட்சம் பேர் இறந்தாங்க. இன்னைக்கும் உக்ரேன் மீளலை.

இன்றைக்கிருக்கின்ற கம்யூனிசத்தின் மீது பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. பழைய கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் கேகேஎம் பேசுகிறார். அவரை இன்றைய கம்யூனிசத் தொண்டர்கள் பழமைவாதி என்று முத்திரைக் குத்தி வெளியே அனுப்புகின்றனர். நிறுவனருக்கே இந்த நிலைமை. கட்சியும், தலைவர்களும் தங்களை மாறும் சமுதாயத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லியா? தலைவர்கள் படிப்படியாக தரகு வேலை செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.

நம்ப சங்கத்தில இன்னிக்கு எந்த கிளைலடே தத்துவமும் வரலாறும் அரசியலும்
சொல்லித்தாறம்? இங்க கூடியிருக்குத கிளைச் செயலாளர்களில் எவனாவது ஒருத்தன் எந்திருச்சு இங்கியல்னா என்னன்னு ஒரு பத்து நிமிஷம் பேச முடியுமாடே? என்னடே எவனாவது இருக்கியளா?

சரித்திரம் முழுக்க மக்கள் முட்டாக் கும்பலாகத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்கு தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்கு தெரியாமலும் இல்லை. ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமானவனாத்தான் இருப்பான். கூட்டாச்சேர்ந்தா அறிவு கெட்ட மந்தயா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்கு போற மந்தை. ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியந்தான் அவங்களை வழி நடத்தனும். கட்சியைத் தலைமை வழி நடத்தனும். தலைமையை தத்துவம் வழி நடத்தனும். அது ப்ளேட்டோ கண்ட கனவு. அதை நடைமுறைப் படுத்தியது கம்யூனிசம் மட்டும் தான்.

சிலவங்க கேட்கிறாங்க, முதலாளிகிட்டயிருந்து நம்ம சொத்த நாம எடுத்துக்கிட்டா
என்ன தப்பு எண்ணு. அத நாம போராடி எடுப்போம். அது நம்ம உரிமை. திருடினோம்னா அது முதலாளிக்க சொத்து, அவனுக்க உரிமை எண்ணு நாமளே சம்மதிக்கற மாதிரியாக்கும். பிறவு வர்க்கப் போராட்டம் இல்லை. திருட்டு போட்டிதான். அவன் நம்மைத் திருடுவான். நாம் அவனைத் திருடுவோம். யாரு சாமர்த்தியமா திருடுறானோ அவனுக்கு அதிகாரம். கடைசில தொழிலாளி ஜெயிச்சிட்டான்னு வச்சுக்க இன்னொரு திருடனுக்க ஆட்சிதானே வரும்? இன்னும்
பெரிய திருடனுக்க ஆட்சி. அதுதான் கம்யூனிசமா? சித்தாந்தம் படிச்சவன் தானேடே நீ? சொல்லு?

நாம் இப்ப எதுக்கு சங்கம் வெச்சிருக்கோம்? மனதைத் தொட்டுச் சொல்லு.
நாம தொழிலாளிக்கு உரிமைகளையா கத்துக் கொடுக்கறோம்? வர்க்கப் போராட்டத்துக்காவா அணி திரட்டறோம்? பாதிநாள் திருட்டுத் தொழிலாளிக்காக முதலாளி கிட்ட வக்காலத்து வாங்கிட்டிருக்கோம். இல்லன்னு சொல்லு பாக்கலாம்?

நீ தொழிலாளிக்க சம்பளம் வாங்கிட்டு சேவகம் செய்றவன் மாதிரி பேசுறே. நான் தொழிலாளியை வழிநடத்திட்டுப் போறவன் மாதிரி பேசுறேன்

நெஞ்சில தீ வெணும்டே அருணாச்சலம். அதை அணைய விட்டிரப்பிடாது. நீ இப்பம் செய்யிற ஆள் பிடிக்குத வேலைய எல்.ஐ.சி க்கு செய்தா இன்னைக்கு உனக்கு எத்தனை லட்சம் தேறியிருக்கும், சொல்லுடே. தீ வேணும்டே. பேச்சில
அதுக்கச் சூடு வேணும். அந்த சூடுதான் தொழிலாளிக்கு நம்மமேல நம்பிக்கையும்
மரியாதையும் உண்டாக்குது. அது நம்ம ஆசான்கள்கிட்டேயிருந்து நாம எடுத்துக்கிட்ட தீ. அறுபத்து மூணில இந்த சங்கில உள்ள தீயை நம்பித்தான் எனக்க பின்னால அறுபதினாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தாங்க. பதினெட்டு பேர் குண்டடிபட்டு செத்தாங்க. பதினேழு மாசம் பட்டினி கிடந்தாங்க. தீ வேணும்டே. அதை அணைய விட்டுடாதே.

கதிர் என்ற இன்றைய கம்யூனிசத்தின் இளைஞர் சமுதாயத்தில் ஒருத்தர் இவ்வாறு வினா எழுப்புகிறார்:

மார்க்ஸியம் மதம் இல்லை. அருளுரையும் இல்லை. நாம் அதை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்ஸியம் வந்து இப்ப நூறு வருஷம் ஆயாச்சு. அதோட பரிசோதனைக் காலம் முடிஞ்சாச்சு. இன்னமும் அது பூமிமேல அற்புதங்களை நடத்தும்னு நம்பிட்டிருக்கிறது மூடத்தனம். அதனால என்ன செய்யமுடியும் என்ன செய்யமுடியாதுன்னு இந்த நூறு வருஷ வரலாற்றிலிருந்து நாம படிக்கணும். மார்க்ஸியம் உருவாக்கின அரசாங்கங்களெல்லாம் பழைய சக்கரவர்த்திகளோட
அரசாங்கங்களைவிட மோசமானவைன்னு அப்பட்டமா தெளிவாயாச்சு. மார்க்ஸியத்தால ஒரு புதிய சமூக அமைப்பையோ, பொருளாதார அமைப்பையோ, கலாச்சார அமைப்பையோ உருவாக்க முடியாது. அப்படி அது உண்டு பண்ணிக் காட்டிய அமைப்புகளெல்லாம் ஏற்கனவே இருந்த அமைப்புகளை விட
மோசமானவை மட்டுமல்ல, அவை மோசமான பழைய அமைப்புகளோட நகல்கள். இனிமே இம்மாதிரிக் கனவுகளை ஒருத்தன் வெச்சிட்டிருந்தானா அவன் தொண்டனா கொடிபிடிகக்த்தான் லாயக்கு. ஆனா மார்க்ஸியம் உலகம் முழுக்க பல வெற்றிகரமான மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கு. ஒரு ஜனநாயக அமைப்பில, சுதந்திரப் பொருளாதார அமைப்பில, முக்கியமான ஒரு சக்தியா அது செயல்பட முடியும். முழுமையான மாற்று சமூகத்தை அது உருவாக்க முயலறப்பதான் பிரச்சனை
வருது. ஏன்னா மார்க்ஸியத்துக்கு அதுக்கான சக்தி இல்லை. எந்த சித்தாந்தத்துக்கும்
அந்த சக்தி கிடையாது. தெரிஞ்சும் தெரியாமலும் இயங்கக்கூடிய பல்லாயிரம், ஏன் பல கொடி சக்திகள் இணைஞ்சு சமூகமும் கலாச்சாரமும் பொருளாதார அமைப்பும் உருவாகுது. அதை எந்த சித்தாந்தமும் முழுமையா அணுகிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும் தான் ஒரு சித்தாந்தம் தொட முடியும். அப்படி ஆய்வு செய்து அது முழுமையா நிரூபிச்ச உண்மைகளை முழு அபத்தமா ஆக்கக்கூடிய பல நூறு தளங்கள் மீதி இருக்கும். மார்க்ஸியம் தான் மானுடம் உண்டாக்கின சித்தாங்களிலேயே உபயோகமான சித்தாந்தமும் அதுதான். ஒரு பேச்சு வார்த்தை மேஜையில மார்க்ஸியம் ஏழைகளோட பிரதினிதியா உக்காந்து பேச முடியும்.
இன்னைக்கு தொழிலாளி வர்க்கம் அடைஞ்சிருக்கிற எல்லா லாபங்களும் மார்க்ஸியம் வழியா கிடச்சதுதான். மார்க்ஸியம் இல்லீன்னா உலகத்தில இருக்கிற எந்த வெல்பேர் ஸ்டேட்டும் கருணையோட இருக்க முடியாது. சமூக அமைப்பில சுரண்டப்பட்ட வர்க்கம் மார்க்ஸியக் கருத்தியலின் அடிப்படையில்தான் ஒன்று சேர்ந்து போராட முடியும். மார்க்ஸியத்தோட பணி இங்க தான். ஒன்று சேர்ந்து போராடரதுக்குத் தவிர்க்க முடியாத பெரும் கனவை அது உண்டு பண்ணித்தருது. அந்த கனவை தருக்கபூர்வமானதா மாத்தற தத்துவ அடிபப்டைகளை உருவாக்கிக்
காட்டுது. அந்த தருக்கம் தான் பேச்சு வார்த்தையில் தொழிலாளி வர்க்கத்தின்
மிகப்பெரிய துருப்புசீட்டு. எந்த தொழிலாளியும் பேச்சுவார்த்தைக்காக சாக மாட்டான். பெரிய கனவுகளுக்காத்தான் சாவான். தொழிலாளி சாகத்தயாரா இருந்தாதான் பேச்சுவார்த்தையில் ஏதாவது சாதிக்க முடியும். மார்க்ஸியத்தோட இடம் இதுதான்.

கொள்கை வேறு நடைமுறை வேறு. மேலே மத்தியில ஜகஜித்சிங் வருஷா வருஷம் அதை நடத்திக் காட்டுறாரே!

முற்றிலும் உண்மை. கட்சிகள் கொள்கை என்ற ஒன்றை எப்பொழுதோ உதறிவிட்டனர். இப்பொழுது இருப்பது survival of the fittest. அரசியல் பெரும் வியாபாரம். அதனால் தான் ஒரே கட்சி மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறு வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மக்களைச் சந்திப்பதில் கூச்சம் ஏதும் இருப்பதில்லை. ஏனெனில் மக்களும் அப்படித்தானே? மக்கள் தானே கட்சி!

அருணாச்சலம் ஜெயமோகனை சந்திக்கும் போது நடைபெறும் உரையாடலில் ராமசாமி ஜெயமோகனை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:

இவரு முக்கியமான தமிழ் எழுத்தாளர். சமீபமா இவர்தான் ஸ்டார். பேரு ஜெயமோகன் தருமபுரியில் டெலிபோன்ல வேலை பார்க்கிறார்.ரப்பர்னு ஒரு நாவலும் திசைகளின் நடுவேன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கு. புதிசா பெரிசா ஒரு நாவல் எழுதிட்டிருக்கார் விஷ்ணுபுரம்னு பேரு

அப்படியா?! நிறைய நபர்களுக்கு ஜெயமோகன் யார் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை. பாலாவின் நான் கடவும் என்ற படத்துக்கு வசனம் எழுதுவதனால் அவர் இனி பிரபலமாகக்கூடும். இந்த நாவல் வெளிவந்தது 99 என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எவ்வளவு பேருக்கு ஜெயமோகன் தெரிந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மேலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை: இவ்வளவு அழகாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஏன் பிரபலமாகவில்லை? ஏன் ஜெயமோகனோ ராமகிருஷ்ணனோ சாமன்ய இலக்கியத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை? கல்கியைப் போல. பிரபஞ்சனைப் போல. ஜானகிராமனைப் போல. பார்த்தசாரதியைப் போல. இனிமேல் கிடைக்குமோ?

ஜெயமோகனைப் பற்றி அருணாச்சலம் கொண்டிருக்கும் கணிப்பு:

பிறரை எடுத்த எடுப்பிலே குறைத்து மதிப்பிடும் அந்த அகங்காரம் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று பட்டது. இந்த இளைஞன் தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய சுயமதிப்பு கொண்டவனாக இருக்ககூடும்.

நான் ஜெயமோகனை ஒரு முறை சந்திருக்கிறேன். அப்பொழுது அவர் நாங்கள் வைத்திருக்கும் கேமரா போனைப் பற்றி கேட்பதில் ஆர்வமாக இருந்தார். என் நண்பர் ஒருவர் மிகவும் கூச்சப்பட்டார்: இவ்வளவு புத்தகங்கள் எழுதிய இவரை விட நம்மிடம் நிறைய வசதிகள் இருக்கிறதே. ஜெயமோகனை படத்திலோ அல்லது நேரிலோ பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர் தான் கொற்றவையை எழுதினார் என்றால் தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் அவரிடம் சித்தர் வேஷம் கிடையாது!

அருணாச்சலத்திடம் தோழர் தீர்த்தமலை கட்சியின் விதிகளைப் பற்றி வாதாடும் போது:

அம்பதுகளில் ரணதிவேதீஸிஸ் வந்தப்ப குமரி மாவட்டத்தில மட்டும் ஆயிரம் பேர் கட்சியை விட்டுப் போயிருக்காங்க. பயங்கரமான அடக்குமுறைகளில் கூட கட்சிக்காக ரத்தம் சிந்தின முன்னூறு பேர் நம்ம கட்சி ஜனநாயகத்தை ஏத்துக்கிட்டப்ப விட்டுட்டு போனாங்க. கட்சியைவிட்டுப் போனவங்களில சிலர்தான் தேறினாங்க. மீதியெல்லாம் ஆளுமை கெட்டு, குடிகாரர்களாகி உதவாக்கரைகளாகி, சீரழிஞ்சு போனாங்க. சிலர் பூர்ஷ¤வாக்களாகக்கூட ஆனாங்க. ஏன், இப்ப நக்சலைட் இயக்கம் வெடிச்சப்ப கட்சிய விட்டு எண்ணூறு பேர் விலகிப் போகலையா? அதில வேணுகோபாலனை எனக்கு நல்லாத் தெரியும். நாலு வருஷம் நானும் அவனும் ஒரே
ரூம்ல தங்கியிருக்கோம். என் நிழலா இருந்தான். அவன் படிச்ச புஸ்தகங்களுக்க பின்
அட்டை படிச்சவங்களே நம்ம கட்சியில குறைவு. பெரிய அளவில தேசிய அளவில போகப் போறான்னு நம்பினோம். இப்ப பேச்சிப்பாறை டாம் பக்கமா பிச்சை எடுக்கறான். என்னைப் போன வருஷம் செமினார் சமயத்தில் வழி மறிச்சு, ‘குட்மாரிங் தோழர், புரட்சி ஓங்குக. ஒரு அம்பது ரூபா கொடுங்க’ ன்னு கேட்டான். மனசுக்குள்ள நொறுங்கிப் போயிட்டேன். ஆனா என்ன செய்யமுடியும் சொல்லுங்க?

கட்சி முன்னகருறப்ப சிலர் உதிர்ந்தே ஆகணும். திரிபுவாதிகள், கோழைகள், சுயநலவாதிகள் உதிருவாங்க. சில சமயம் கட்சியைவிடப் பெரிசா தங்களோட ஈகோவை வைச்சிருக்கிற படிப்பாளிகளும், திறமைசாலிகளும் உதிர்ந்திடலாம். ஆனா
யாரா இருந்தாலும் உதிர்ந்தா உதிர்ந்தது தான். ஏன்னா கட்சிங்கறது புராணங்களில
சொல்றது போல ஒரு விராட புருஷன். நாமெல்லாம் அதன் உறுப்புகள். நாம அதை விட்டுப் பிரிஞ்சுட்டோம்னா அழுகி மட்கி இல்லாமப் போக வேண்டியதுதான்.

தருக்கம் தார்மீகத்தின் முன்பு மட்டுமே தோற்கும்.

வீரபத்ரபிள்ளை எழுதிய ஏகப்பட்ட கடிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கடிதம் இது தான்:

ஜன்னலைத்திறந்து, பாதையில் போகும் பொறுக்கியை வேடிக்கை பார்க்கும் வீட்டு மனிதா, இது உனக்கு. வீடு உனக்கு பாதுகாப்பல்ல. ஏனெனில் உன்னிடம் என்ன உள்ளது? அர்த்தமற்ற பயங்களும், அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும், மலச்சிக்களும் தவிர? தெரு மனிதர்களை இகழாதே. உன்னால ஒரு போதும் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. எல்லை வகுக்கப்படாத எதையும் பார்க்கவோ உணரவோ உனக்கு அனுமதி இல்லை.
உனக்கு அத்தனையும் ரேசனில் வழங்கப்படுகின்றன. காலம், வெளி, ஒளி, நீர் எல்லாமெ. குடும்ப அட்டையை கையில் வைத்தபடி -குடும்பத்தலைவன் என்று குறிப்பிட்டிருப்பதன் அபத்தமான பெருமிதத்துடன் -மகிழ்ந்துபோன அத்மாவாக உன் வீட்டுக்குள் வாழ்கிறாய். கதவிடுக்கில் பீரிடுகிறது தெருவின் திறந்த காற்று. உன் ஆஸ்துமாவிற்கு அது எமன். மூடுடா கதவை.

என்னை மிகவும் பாதித்த கவிதை:

இன்னும் வாழ்பவன் அல்ல, ஆவியும் அல்ல,
இழிந்த விலங்கும் அல்ல, மனிதனும் அல்ல
இனம்காண முடியாத ஏதோ ஒன்றாய்…

-புஷ்கின் என்ற ரஷ்ய கவிஞர் எழுதிய கவிதை

புகாரின் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் ஆகிய மூவரைப் பற்றிய செய்திகள். புகாரின் சதியால் கொல்லப்பட்டார் என்று கேள்விப்பட்டுதான் வீரபத்ரபிள்ளையின் நிழல் கேள்வி கேட்க ஆரம்பித்தது என்றால், புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் இல்லையே! புகாரின் லெனினுக்குப் பிறகு ட்ராட்ஸ்கி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஸ்டாலினை ஆதரித்தார். பிறகு பல கொலைகளை அவரும் ஸ்டாலினோடு சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார். மிகில்னாய் ரயில் நிலயத்தில் சைபீரியாவின் கட்டாய வதை முகாம்களுக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்க்கும் வரை அவரது நிழல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. பிறகு ஸ்டாலினோடு எதிர்ப்பு வலுத்தபின்னர் அவரது ஈகோ முந்திக்கொண்டது. நிழல் விழித்துக்கொண்டது. அவரால் பின்வாங்க இயலவில்லை.

அதே நிலைதான் வீரபத்ரபிள்ளைக்கும். வீரபத்ரபிள்ளைக்கு தெரியும் புகாரின் ஒன்றும் மிக நல்லவர் இல்லை என்பது. ஸ்டாலினும் புகாரினும் சேர்ந்து நடத்திய அரசியல் படுகொலைகளை அவரும் அறிந்தவர் தான். எனினும் ஏதோ ஒன்று அவரது மனதுக்குள் புகுந்து கொண்டுள்ளது. அது ஈகோ மட்டுமே. வேற எதுவாகவும் இருக்க வாய்ப்பு இல்லை.

கீழே ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின் செய்த சதிகள் கூறப்படுகின்றன:

பிலிப்குஸ்மிச் மிரானோவ் செம்படையின் மகத்தான தளபதிகளில் ஒருவர். எட்டு வருடம் ட்ராட்ஸ்கியின் உயிர் நண்பராக இருந்தார். மிக எளிய கசாக்கு குடும்பத்தில் பிறந்து, ஜாரின் ராணுவத்தில் படைவீரராக இருந்தவர். ட்ராட்ஸ்கியால் செம்படையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் புரட்சியில் கிரெம்ளினில் நுழைந்த முதல் படைப்பிரிவை நடத்தினார். 1921-ல் கசாக்குகளின் கிளர்ச்சியை அடக்கும்படி தென்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு எளிய கசாக்கு குலப் பொதுமக்களை செம்படை சூறையாடியதைக் கண்டு மனம் பொறாது ட்ராட்ஸ்கியிடம் வாதாடினார். செம்படையின் தளபதிகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் கசாக்குகளை மொத்தமாக வெண்படை ஆதரவாளர்களாக மாற்றிவிடவே இம்மாதிரி நடவடிக்கைகள் உதவும் என்று முறையிட்டார். ட்ராட்ஸ்கி அதை ஏற்கவில்லை.
மிரானோவ் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சாரணைக்குட்படுத்தப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு உத்தரவிட்டது ட்ராட்ஸ்கிதான். இன்று ட்ராட்ஸ்கியின் இடத்தில் ஸ்டாலின். மிரானோவின் இடத்தில் புகாரின்.

ஏப்ரலில் மிகில்னாய் ரயில் நிலயத்தில் புகைவண்டி சிறிது நேரம் நின்றது. வெளியே
எட்டிப்பார்த்தேன். திறந்த வெளியில் கிழிசல் உடைகள் அணிந்த பல்லாயிரம் விவசாயிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களைச் சுற்றி கவச வண்டிகளினாலான வேலி. துப்பாக்கி ஏந்திய காவலர்கள். பனி அவர்கள்மீது திரையிட்டிருந்தது. காற்றில் அது விலகும் போது ஒட்டி உலர்ந்த உடல்கள் தெரிந்தன. மூட்டை முடிச்சுகள். ஊடாக…குழந்தைகள்; குளிரில் விறைத்து, நீலம் பாரித்த குழந்தைகள்! அவர்கள் சைபீரியாவிற்குப் போகும் குளக்குகள். பெரும்பாலானவர்கள் அங்கு திரட்டப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டிருப்பார்கள்.
ரயிலுக்காக வெட்டவெளியில் காத்திருக்கையில் மீதிப்பேர் சாவார்கள். சைபீரியாவுக்கு எத்தனை பேர் போய்ச்சேர்வார்கள் என்று கூற முடியாது. இதுவரை ஒன்றரை கோடி விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஒன்றரைக்கோடி உடல்களை குவித்துப் போட்டால் பீட்டர்ஸ்பர்க்கிலும் மாஸ்கோவிலும் உள்ள அனைத்து கட்டிடங்களையும்விட பெரிய பிணமலைகளாக இருக்கும்.

வீரபத்ரபிள்ளை எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்.

கடிதங்கள்

தபால் வசதி அனுமதிக்கப்படாத ஊர்களில்
பலநூறு கடிதங்கள் தினம்
எழுதப்படுகின்றன.
அவை காற்றில் குளிர்போல
கனத்து தொங்குகின்றன.
சிறு
காற்றில் வருடலில்
மழையாகி அவர்கள் மீதே விழுகின்றன.
குளிர்ந்து அவர்களைச்
சுற்றி இறுகிவிடுகின்றன.
கடிதங்களின் கடுங்குளிரில் அவர்கள் தூங்குகிறார்கள்.
அப்போது வெப்பமான காற்றை
அவர்கள் கனவு காண்கிறார்கள்
வானில் ஒளியாக
சொற்கள் பரவ
ஆத்மாக்கள் அவற்றை உண்ணும்
ஒரு மகத்தான தினத்தைக்
காண்கிறார்கள்
பின்பு விழித்தெழுந்து கண்ணீர் விடுகிறார்கள்
மறுநாள்
மீண்டும்
இறுகும் பனியை உடைத்தெழுந்து
கடிதங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.

இந்த கவிதை கண்டிப்பாக சைபீரிய வதைமுகாம்களில் பழி சுமத்தப்பட்டு தண்டனைகளை (பெரும்பாலும் மரண தண்டனை!) எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களை நினைத்து எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். கடிதங்கள் என்பவை அவர்களது தாகங்கள். விடுதலைத் தாகங்கள். ஆனால் யாரிடமிருந்து விடுதலை? விடுதலை வேண்டு புரட்சி செய்தவர்கள், புரட்சிக்கு தலைமைதாங்கியவர்கள் தான் விடுதலையை எண்ணி கனவு காண்கின்றனர். வெப்பமான காற்று சர்வாதிகாரம் இல்லாத பொன்னுலகம். ஆம் பொன்னுலகம். கம்யூனிசம் தோன்றி நூற்றாண்டாகிவிட்டபோதும் இன்னும் எங்கும் காணக்கிடைக்காத பொன்னுலகம். மகத்தான் தினமும் பொன்னுலகைக் காணும் தினமே! இங்கு அவர்களை மூடிக்கொள்ளும் பனி என்பது சர்வாதிகாரம். மீண்டும் மீண்டும் அடக்குமுறைகளை அவர்கள் உடைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அடக்குமுறைகளை கட்டுகளை அவிழ்த்தெரிந்துகொண்டேயிருக்கிறார்கள், மீண்டும் வேறு புதிய கயிறால் கட்டப்படும் வரை.

யாருக்காக

யாருக்காக எழுதப்படுகின்றன கவிதைகள்?
இன்னும் சூரியன்
உதிக்கிறது
ஒளிபட்ட பனிப்பாறை போல
அவ்வளவு கடும் குளிருடன்.
எலும்பைத்
துளைக்கும் அதன் புன்னகை
மலர்கள் மலர்கின்றன.
தொடும்போதே உதிர்கின்றன.
இன்னும் மிச்சமிருக்கின்றன என நான்
அள்ளியள்ளித் திரட்டும் நம்பிக்கைகளை
உடைக்கிறது தூரத்து ஓலம்.
கையேந்தி நின்று ரொட்டிக்காக மன்றாடும்
இந்தச் சிறுகுழந்தை கேட்கவில்லை
யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்
இக்
கவிதைகளை என்று.

கேரள தலித் தலைவர் ஐயன்காளியும் காந்தியும் சந்தித்திக்கொண்டதாக சொல்லப்படுகிற கதை ஒன்றும் இடம்பெறுகிறது. காந்தியின் அகிம்சை நன்றாக அலசப்படுகிறது.

ஸ்டாலின் செய்தது தவறு என்றால் எங்கே தவறு நடந்தது?

மார்க்ஸின் தத்துவப்படி பொருளாதாரக் காரணிகளால இயல்பா புரட்சி வரணும். லெனின் அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டுவந்தார். லெனின் ரஷ்யாவில நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமா புரட்சியைக் கொண்டுவந்து, பொதுவுடைமை சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. இது வால் நாயை ஆட்டிவைக்கிற மாதிரி. ரஷ்யாவில நடந்த சகல குளறுபடிகளுக்கும் காரணம் தடியால அடிச்சு பழுக்கவைக்க லெனின் செஞ்ச முயற்சிதான்.

இன்னைக்கு சுரண்டல் பிரம்மாண்ட வல்லமையா மாறியிருக்கு. அதுகிட்ட சாட்டையும் துப்பாக்கியும் இல்ல. அணுகுண்டும் கம்ப்யூட்டரும் இருக்கு. நம்மை ஏகாதிபத்தியம் அழிச்சிட்டிருக்கு. நம்ம வளங்கள் அழியுது. நம்ம உடல்கள் கெடுது. நம்ம கலாச்சாரம் சீரழியுது. ஏகாதிபத்தியம் இன்னைக்கு நம்மை பயமுறுத்தல. நம்மை அது மனோவசியம் பண்ணுது. நாம அதை விரும்பி வரவேற்றுத்
தலைமேலே தூக்கி வெச்சிட்டிருக்கோம். நீங்களும் நானும் சிந்திக்கிறதில கூட
ஏகாதிபத்திய விஷம் கலந்திருக்கு.

மார்க்ஸிசத்தில குறைகள் இருக்கலாம். அந்த குறைகளுக்காக நாம அதை நிராகரிச்சா பிறகு என்ன மிஞ்சும்? போராடத் தெரியாத மக்களா, அடிமைச் சவங்களா மண்மேல வாழறதா? மார்க்ஸிசத்தவிட தீவிரமான ஒரு போராட்ட ஆயுதம்
கிடைக்கிற வரை மார்க்ஸிசத்தை உலகம் கைவிட முடியாது. ஏன்னா மார்க்ஸிசம் ஒரு
எதிர்ப்பு சக்தி.

ஓநாயும் மனிதனும் சேர்ந்து வாழ்வது எப்படி? என்ற நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. மொத்த நாவலையுன் ஒரு நாடகத்தில் அடக்கி parody செய்தது போல இருந்தது. மகாபாரதம், வேதங்கள், கிறிஸ்தவம் என்று அனைத்தையும் ஜெயமோகன் ரஷ்ய கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார். நான் சிரித்ததைப் பார்த்து என் நண்பர் ஒருவர் எனக்கு வாசித்துக்காட்டு என்று சொல்லிவிட்டார். நாவல் படிக்க நேரமில்லை என்றால் கண்டிப்பாக இந்த ஒரு நாடகத்தை மட்டுமாவது படியுங்கள்! நாடகத்தில் வரும் கோழி கூட “ரிபப்ளிக்கோ! ரிபப்ளிக்கோ!” என்று கூவுகிறது.

***

னக்கு கம்யூனிசம் தெரியாது. நான் கட்சி சார்ந்தவனும் அல்ல. ஆனால் இந்த நாவல் எனக்கு கம்யூனிசத்தின் வேர்களை அறிய உதவியிருக்கிறது. கம்யூனிசத்தைப் பற்றிய நன்மைதீமைகளை அறிந்து கொள்ள உதவியிருக்கிறது. என் மனமும் புத்தியும் திறந்தேயிருக்கிறது. நான் கம்யூனிசத்தை சார்ந்தவனும் அல்லன். முதலாளித்துவத்தை சார்ந்தவனும் அல்லன். நான் கிடைக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் எந்த நிலைப்பாடுக்கும் வரமுடியவில்லை. இந்த நாவலைப் படித்த கம்யூனிஸ்ட் எவரும் கண்டிப்பாக கடும் கோபம் கொள்வார்கள். இல்லையேல் கோபம் கொள்வதைப் போன்று நடிக்கவாவது செய்வார்கள். வேறு என்ன செய்ய முடியும்? கம்யூனிசமும் கட்சிதானே? அதை நம்பியும் மக்கள் இருக்கிறார்களே? அரசியல் தொழிலாக ஆகிவிட்டது இல்லையா? கொள்கை என்ற ஒன்றை அனைத்து கட்சிகளும் தார்மீக உரிமையுடன் உடைத்து எறிந்து விட்டனரே! இந்த ஒரு விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. இதில் கம்யூனிசம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? கட்சியை விட்டுத்தள்ளுங்கள். அது ஒரு பெரிய இயக்கம். நம்மிடம் கொள்கைகள் இருக்கிறதா? கொள்கைகளுக்காக நாம் நமக்கு மிகவும் தேவையான ஒன்றை இலக்கத் தயராக இருக்கிறோமா? அப்படி இழக்கத்தான் வேண்டுமா? இழந்தால் மட்டும் நாம் என்ன சாதித்து விட முடியும்? இழக்காமல் என்ன சாதிக்கிறோம்? வரலாறு நாம் இழந்தாலும் இழக்காவிட்டாலும் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. எண்ணற்ற உயிர்களை தனி மனித கொள்கைகளுக்காக பலிவாங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

சைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட குளக்குகள் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் சொல்லும் போது: “அவர்களை கட்டாய உழைப்புக்கு அனுப்பி வைத்தோம். உழைக்கச்சொன்னால் யாவருக்கும் கஷ்டம் தான்” என்று வாதிடுகிறார். ஒரு விஷயத்தில் இரு வேறு விதமான பார்வைகள் எப்பொழுதுமே இருக்கின்றன. ஒருமுகமாக அல்லது ஒருசார்பாக ஒரு விஷயத்தை அனுகினால் அதன் உண்மையை நாம் அறியமுடியாமல் போய் விடும். Have an un-biased-view!

***

மேலும் படிப்பதற்கு வேறு சுட்டிகள்:

புகாரின்:
http://en.wikipedia.org/wiki/Nikolai_Bukharin
http://art-bin.com/art/obukharin.html
http://www.marxists.org/archive/bukharin/works/1938/trial/index.htm
http://www.fee.org/publications/the-freeman/article.asp?aid=545

புகாரினின் மனைவி:
http://en.wikipedia.org/wiki/Anna_Larina

ஸ்டாலின்:
http://en.wikipedia.org/wiki/Stalin

குளக்குகளும் சைபீரியா வதைமுகாம்களும்:
http://en.wikipedia.org/wiki/Kulak
http://www.economicexpert.com/a/Kulak.htm

கேரளாவின் அய்யன்காளி:
http://en.wikipedia.org/wiki/Ayyankali

ரணதிவே:
http://www.citu.org.in/btr%20.htm

கவிஞர் புஷ்கின்:
http://en.wikipedia.org/wiki/Aleksandr_Pushkin

எழுத்தாளர் குப்ரின்:
http://en.wikipedia.org/wiki/Alexander_Kuprin

தச்ஸ்தோய்:
http://en.wikipedia.org/wiki/Tolstoy

Nypei, Lie Groups and OBA

ந்தோனேசியாவின் பாலி தீவில் ஒரு நாள் நிசப்தத்தை வருடந்தோரும் அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாள் பாலியின் லூனார் புதிய வருடப்பிறப்பன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மார்ச் பத்தொன்பதாம் தேதி. இதை சுய பரிசோதனை நாள் என்று எண்ணுகிறார்கள். அதனால் அதற்கு தடையாக வரும் வெளி சமாச்சாரங்கள் அனைத்தும் மறுக்கப்படுகிறது.

இந்த நாளில் – பொதுவாக இரைச்சல் மிகுந்து காணப்படும் – பாலி வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வெளிநாட்டினர் -ஆஸ்திரேலியா பாலிக்கு சென்றிருந்த தனது சுற்றுலா மக்களுக்கு “தடையை சீரியசாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை அளித்திருக்கிறது – கூட வெளிவருவதில்லை. (பத்து வருடங்களுக்கு முன்னர் டூரிஸ்டுகளுக்கு இந்த தடையில்லை, அவர்கள் அன்றைக்கு வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகளை சுற்றிப்பார்க்களாம்) எந்த கடைகளும் – மிகச்சிறிய தெருவோரக் கடைகள் கூட- திறந்திருப்பதில்லை. எல்லோரும் வீட்டுக்குள்ளே இருக்கின்றனர். இரவு முழுதும் விளக்குகள் அனைந்தேயிருக்கின்றன. ரோந்து பணியாளர்களான Pecalangs மட்டுமே தெருக்களில் சுற்றித்திரிவார்கள். இந்த தினத்தை Nyepi என்று அழைக்கிறார்கள். பாலியின் பெரும்பான்மையான ஹிந்து மக்கள் இந்த நாளை புதுவருடப்பிறப்பாக அனுஷ்டிக்கிறார்கள்.

இவ்வாறு அமைதியாக இருக்கும் இந்த நாளுக்கு முந்தைய நாள் மிகுந்த இரைச்சல் மிகுந்ததாக இருக்கிறது. மக்கள் கெட்ட ஆவிகளை விரட்ட வீட்டில் தயாரித்த மூங்கிலிலான பீரங்கிகளை உபயோகித்து சுடுகின்றனர். ஒகோ-ஒகோ (ogoh-ogoh) என்று அழைக்கப்படும் இந்த கெட்ட ஆவிகள் தெருவெங்கும் இழுத்துவரப்பட்டு பிறகு கொழுத்தப்படுகின்றன.

பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியா இந்த நாளுக்கு பொதுவிடுமுறை அளித்துள்ளது. அன்று மசூதிகளில் தொழுகைக்கு ஸ்பீக்கரில் அழைக்கும் குரல்கள் கூட நிறுத்தப்படுகின்றன.

மிக முக்கியமான விசயம்: இந்த Nypei நாளுக்கு மறுநாள் முத்த தினம் (kissing ritual) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் ப்யூரிட்டன்களிடமிருந்து பாலியின் இளசுகள் வெற்றிகரமாக இன்று வரை இந்த தினத்தை காப்பாற்றி வந்திருக்கின்றனர். பாலிக்கு டூர் போகனும் என்று நினைப்பவர்கள் இந்த நாளை அனுசரித்து போங்கப்பா!

***

Lie Groups என்ற ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? நான் கேள்விப்பட்டதில்லை. கேள்விப்பட்டிருந்தாலும் மறந்திருக்கக்கூடும்! (Dint ring any bell!). சோபஸ் லை (Sophus Lie) என்ற நார்வேஜியன் கணிதமேதையின் நினைவாக இது பெயரிடப்பட்டது. Lie Groups இல் மிக எளிய உறுப்பினர் : வட்டம் மற்றும் கோலம்(இரண்டாவது எளிது!) . எப்படித் திருப்பினாலும் (சுழற்றினாலும்) ஒரே மாதிரியாக இருப்பது.

இந்த வாரம் E8 என்ற மிகக் குழப்பமானதும், மிகப் பெரியதுமான ஒரு வடிவத்தை வரைந்திருக்கின்றனர். It takes 57 co-ordinates to define a point on its surface and has 248 axes of symmetry. (இப்பவே கண்ணக்கட்டுதே!)

இந்த வடிவத்தை வரைவதற்கு கனித மேதைகளுக்கு 453,060 புள்ளிகள் தேவைப்பட்டதாம். மேலும் இந்த புள்ளிகளுக்கிடையே இருக்கும் உறவுகளையும் வகுத்தாகவேண்டும். எனவே அவர்கள் ஒரு அணியை வகுக்கவேண்டும். அதில் 453,060 நிறைகளும் (Rows) 453,060 நிரைகளும் (columns) இருக்கவேண்டும். மொத்ததில் 205 பில்லியன் புள்ளிகள் தேவைப்படுமாம். இதில் பல புள்ளிகள் வெறும் எண்கள் அல்லவாம் – polynomials (x,x2,x3..xn).

E8 வடிவம் பெற்றது String Theroy ஐ எளிதாக (Cost saving!) அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும்.

***


கம்போடியாவின் காந்தி என்றழைக்கப்படும் Preah Maha Ghosananda தனது 78ஆவது வயதில் மார்ச் 12ஆம் தேதி காலமானார். நிறையமுறை nobel peace prize க்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.இவர் ஒரு பௌத்த துறவி. கம்போடியாவின் அரசியலில் என்பதுகளில் இருந்தவருக்கு, ஆசை என்னவோ மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு அன்பின் வலிமை வரலாற்று சக்திகளைவிட உயர்ந்தது என்று போதிப்பதிலேதான் இருந்தது.

1992 இல் கம்போடியா முழுதும் மக்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்த Dhamma Yatra சென்றார். போல் பாட் கொன்றுகுவித்த புத்த பிட்சுக்களில் எஞ்சிய மூவாயிரம் பேரில் இவரும் ஒருவர்.

For the pure hearted one
Having clarity of vision,
Being freed from all sense desires
Is not born again into this world.

என்பதே அவரது slogan.
***

இந்த முறை MSDN Connection event க்குப் போயிருந்தேன். One Marina Boulevard இல் உள்ள Microsoft auditorium ல நடந்தது. செமினாருக்கு முந்தய free டின்னர் அருமை! செமினார் முடிந்ததற்கு அப்புறமும் சிலர் “hey still can eat!” என்று சொல்லி சாப்பிட்டதைப் பார்க்க முடிந்தது. என் நண்பன் ஒருவன் “நான் இந்த செமிஅனருக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று: free dinner” என்றான். உண்மைதான். எனக்கு ரொம்ப பக்கம்: from my office. அப்படியே நடந்து பக்கத்து லிப்ட் எடுத்துப் போக வேண்டும் அவ்வளவுதான்!

SOA and OBA (Office Business Application) என்ற தலைப்பில் முதல் செமினார். நமக்கு பலருக்கு SOA என்றால் நன்றாகத் தெரியும் – நம்முடைய மேனேஜர்கள் எல்லாம் வாய்கிழிய பேசும் ஒரு டாபிக். சிலருக்கு web service இன் உண்மையான பயன் கூட தெரியாது என்பது வேறு விசயம். அது சரி, மேனேஜர்களுக்கு அதெல்லாம் தெரியவேண்டுமா என்ன?.(மேனேஜர்கள் மன்னிக்கவும்). OBA என்பது எனக்கும் புதிய டாபிக் தான். (ஆனால் ஏற்கனவே word document கூட நெறைய சண்டை போட்டிருக்கேன். Designing a template and merging the bookmarks with values from database. இது dyanamic என்பதால் கொஞ்சம் கஷ்டம். ஆனால் WML helps a lot. word document ஐ XML வடிவத்தில் save செய்து. பிறகு XML file ஐ parse செய்து நமது bookmarks ஐ கண்டுபிடித்து database values அ அதில் இணைக்கவேண்டும். கொஞ்சம் கஷ்டம் தான். )

ஆனால் OpenXML வந்தபிறகு வேலை சுலபமாகி விட்டது. .Net Framework 3.0 வில் windowsbase.dll என்றொரு dll வருகிறது. அதை வைத்து எளிதாக word document ஐ parse செய்ய முடிகிறது. ஆனால் ஒரு glitch இருக்கனுமே! ஆம். இந்த dll VS2003 யோடு வேலை செய்யாது. அதாவது அட்லீஸ்ட் Framework2.0 வேணும்.

Office 2007 (Visual Studio Tools for Office 2007) இல் நிறைய புதிய templates வருகிறது. அவைகளை பயன்படுத்தி ஒரு word docuementஐயே web form போல treat செய்யலாம். so that end users can just open the word document and do whatever they wish (we can embed combobox or other controls even datagrid) and just save the document. document oriented projects (like insurance etc) க்கு helpfull ஆ இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மேலும் Windows Home Servers பற்றிய அறிமுகமும் கிடைத்தது. backups and retrieving is made easy, that even Mums can do that – he said. Demo பார்ப்பதற்கும் எளிதாக இருப்பது போன்று தான் இருந்தது. ஆனால் demo எப்பொழுதும் அற்புதமாக இருக்கும் என்பது நமக்கு தெரியாதா என்ன?! ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், backup retrieval, Ghost பயன்படுத்தியவர்களுக்கு retrieval லில் இருக்கும் சிரமம் தெரியும். you cannot retrieve a specific file. ஆனால் இங்கே backup file ஐ unzip (அப்படிதான் தெரிகிறது!) செய்தவுடன் folder structure கிடைத்துவிடுகிறது. பிறகு just select your file!

அடுத்தது, virtual application. Looks good. ஒரு இடத்தில் application (windows based) வைத்துக்கொண்டு வெறு எந்த configured PC யிலிருந்தும் உபயோகித்துக்கொள்ளலாம். No maintanence hazards. No used reports : it was ok untill you installed the new patch! அவங்களுக்கு தெரியாமலே நாம upgrade பண்ணிடலாம். அது மட்டுமில்லாமல் இரண்டு version வைத்துக்கொள்ளலாம். அதை செர்வரிலிருந்து control செய்யலாம். cool huh? But beware Micro$oft.

***

seafood பிரியர்களுக்கு: என் நண்பன் ஒருவன் இருக்கிறான், chinese கடைக்குப் போனால் போதும், வாந்தி எடுக்காத குறைதான். ஏதோ smell அடிக்குதுடா என்று சொல்லியே நமக்கு வாந்தி வர வெச்சுடுவான். ஒரு முறை நாங்கள் order பண்ண சிக்கன் fried rice இல் (அவன் எவ்வளவோ படிச்சு படிச்சு only chicken only chicken என்று சொல்லியும்) octopus ஒன்று இருந்தது. அதை spoonஇல் எடுத்தவன் எதிரே அமர்ந்திருந்த என்மீது வாமிட் எடுக்காத குறை! மற்றொரு நண்பர் இருக்கிறார்: ப்ரைட் ரைசில் யானையே படுத்துக்கிடந்தாலும் எடுத்து தனியே போட்டுவிட்டு அவர் பாட்டுக்கு கூலாக சாப்பிடுவார்.

நான் எத்தனை முறை மீன் சாப்பிட்டாலும் சாப்பிடுவது என்னவகை மீன் என்று எனக்குத் தெரியாது. சமயத்தில் விரால் மீனுக்கும் வஞ்சிர மீனுக்கும் கூட வித்தியாசம் தெரியாது. முன்னால் சொன்ன octopus நண்பன் (நம்ப கோனபாட்டில் தான்!) இரண்டையும் சரியாக கண்டுபிடிப்பான். அவர் விரால் மீனை ஒரு வெட்டு வெட்டுவார், வஞ்சிர மீன் என்றால் தொடக்கூட மாட்டார். ஏனென்று அவனுக்கே தெரியாது!

மீனின் வகைகள் தெரிந்து சாப்பிடுபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்கிறது நேஷனல் ஜியோகரபிக். மீனில் இருக்கும் omega 3 fatty acids எவ்வளவு நல்லதோ அதை விட கெட்டது மீனில் இருக்கும் mercury. அதனால் கவனமாக இருங்கள்.

High-Mercury Fish.
Tilefish
King Mackerel
Shark
Swordfish
Freshwater sport fish caught in contaminated waters.

***

ஏப்ரல் 22 2007 அன்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது (Earth Day). ஏற்கனவே Green Cities பல நாடுகளிடையே பிரபலமாகிக்கொண்டு வருகிறது. நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு நவீன பசுமை நகர்களை உருவாக்கிக்கொண்டு வருகின்றன.

அன்று நாம் என்னவெல்லாம் செய்யலாம்:

முடிந்தல் ஆபிசுக்கு நடந்து செல்வது (மோட்டார் பைக், கார் என்று உபயோகிக்கக் கூடாது)
அல்லது Public Transport ஐ பயன்படுத்துவது.
வீட்டில் AC போட்டுக்கொள்ளாமல் படுத்துத் தூங்குவது.
Refrigirator ஐ ஆப் செய்வது.

மேலும் பல Tips க்கு
http://events.yahoo.com/earthday06/
http://www.epa.gov/water/citizen/thingstodo.html

நான் ஒரு பூந்தொட்டி வாங்கலாம் என்றிருக்கிறேன். (மொதல்ல வீட்டுக்கு முன்னுக்க இருக்கற பூச்செடிக்கு தண்ணி ஊத்துடா மடையா என்கிறது மனசாட்சி!)

***

Thanks : Economist, NGC

Vision For Collective Failure!

“I will be very disappointed [if their contracts are not renewed]. I know Rahul and Greg, and both of them worked very hard for the team. They had a vision for the team and for winning matches. The biggest failure in the World Cup was our batting, so you can’t blame the coach and the captain for it. It’s a total collective failure,” More told rediff.com.

“I will be very disappointed if Rahul is not continued with as captain. If you are talking about the future of the Indian team, Rahul is the best person. And Chappell should also continue, because you can’t work miracles in 18 months. If any coach comes and tells me or any other country that I can make a champion team in 18 months, I will not agree at all. He will probably be lying or hiding something from you,” added More.

வில் பி வெரி டிஸப்பாய்ன்டட். சரி, ஆயிட்டுப்போ! மொரே சார், உங்கள தான் வீட்டுக்கு அனுப்சாச்சுல்ல அப்புறம் ஏன் சும்மா எதுனாச்சும் பெனாத்திட்டு இருக்கீங்க? என்னது பதினெட்டு மாசத்துல எந்த கோச்சாலயும் சாம்பியன் டீம் உருவாக்க முடியாதா? சாப்பல் வந்தப்ப ஏற்கனவே இந்தியா சாம்பியன் டீம் தான் சார். என்னவோ இந்தியா பெர்முடா மாதிரி இருந்தது போலவும் சாப்பல் வந்துதான் அட்லீஸ்ட் இந்தளவுக்காவது (பெர்முடாவ வின் பன்றளவுக்கு!) கொண்டுவந்திருக்கார்ங்கற மாதிரில்ல பேசுறீங்க! ரெக்கார்ட்ஸ் எடுத்துபாருங்க சார். சேப்பல் வர்றதுக்கு முன்ன இந்தியா எத்தன ஓவர் சீஸ் மேட்ச் ஜெயிச்சது, அவர் கோச்சா வந்ததுக்கப்புறம் எத்தன ஓவர் சீஸ் மேட்ச் ஜெயிச்சிருக்குன்னு! சேப்பலும் நீங்களும் சேர்ந்து என்ன செஞ்சீங்க? ஒழுங்கா இருந்த டீம்ல பாலிடிக்ஸ் உண்டு பண்ணீங்க. பாவம் கங்கூலி யார் யாருக்கெல்லாம் ஜால்ரா போடவேண்டியிருந்தது?!

சச்சின், கங்கூலி, டிராவிட், சேவாக், யுவராஜ், உத்தப்பா, படான், ஸ்ரீ சாந்த் போல நல்ல ப்ளயர்ஸ வெச்சுக்கிட்டு முதல் சுத்துலயே வெளியே வந்தா என்ன நியாயம்? அந்த டீமுக்கு கோச்சிங் பண்ணவருக்கு கண்டிப்பா சப்போர்ட் பண்ணித்தான் ஆகனுமா? அவர் இன்னும் கோச்சா இருந்து என்னத்த சாதிக்கப் போறார்? இல்ல இந்த ப்ளேயர்ஸ் இன்னும் விளயாடி என்னத்த கிழிக்க போறாங்க?! போதும் போதும் நீங்க விளயாடினது ஏதாவது பொளப்ப பாத்து பொளச்சுக்கோங்க (யாராருக்கு என்னென்ன வேலைங்கறது கூட எங்ககிட்ட மெயில் இருக்கு fwd பண்றோம். எங்களுக்கு வேற என்னத்துக்கு ஆபீஸ்ல சம்பளம் கொடுக்கறாங்க!). நாங்க வேற டீம் உருவாக்கிக்கறோம். இதுல ஆயிரத்தெட்டு விளம்பரம். ஐயோ..ஐய்யோ..(வடிவேலு போல சொல்லவும்!)

டீம் ஒழுங்கா பேட் செய்யல அதுனால தான் வின் பண்ண முடியலங்கறது எங்களுக்கு தெரியாதா? அதுதானே ஏன்னு கேக்கறோம். விஷனா? என்ன விஷன்? இப்பவும் ஒரு விஷன் இருக்குமே?! விஷன் 2011 தான! எங்களுக்கு தான் தெரியுமே?! அதுல யார் கூட தோப்பீங்க? பெர்முடா! ட்ரை பண்ணுங்க. முயற்சி செஞ்சா எதையுமே செய்யலாம். “கலெக்டிவ் பெயிலியர்!” அதனாலதான் சொல்றாம் ஒரே கலெக்டிவ்வா எல்லோரும் வீட்டுக்கு போங்கன்னு.

கலெக்டிவ்னா எல்லோரும்: ப்ளேயர்ஸ், கோச், டீம் செலக்டர்ஸ் including Powar!

இவிங்க ரொம்ப நல்லவய்ங்கடா!

டிராவிட் அந்த நான்கு போர்கள் அடிக்கும் போதுகூட எனக்கு நிறைய நம்பிக்கையிருந்தது. ஆஸ்திரேலியாவின் பெவன் போல தனியாளாக நின்று போராடி ஜெயித்துக்கொடுப்பார் என்று தான் நம்பினேன். பெவன் இது போல எத்தனை முறை செய்திருக்கிறார்? வெறும் எழுபது ரன்கள் தானே? காலீஸ் எத்தனை முறை செய்திருக்கிறார்? யுவராஜ் எத்தனை முறை செய்திருக்கிறார்? வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஆனால் எப்படி தோற்கிறோம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அப்படியே நெடுஞ்சான்கடையாக போய் காலிலே விழுவதா? நான் டிராவிட்டை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அவர் மட்டும் என்ன செய்வார் பாவம்? அவர் மட்டும் தனியாக என்ன செய்திருக்கிறார் இது வரை? ஒன்று கங்கூலி அடிப்பார், டிராவில் துணை நிற்பார். இல்லையேல் சச்சின் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் யுவராஜ் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் கைப் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அவர் தனியாக நின்று ஜெயித்துக்கொடுத்த மேட்ச் ஏதாவது இருக்கிறதா? கங்கூலி செய்திருக்கிறார். சச்சினும் செய்திருக்கிறார்.

ஒரு ஓவரில் நான்கு determined ஷாட்ஸ் அடித்து விட்டு அடுத்த ஓவரில் பரிதாபமாக விக்கெட்டைக் குடுப்பானேன்?! ஏன் கடைசிவரை நிற்பதுதானே? நின்று என்னத்த சாதிக்கபோறோம் என்ற நினைப்பா? அவர் சேவாக் போல அவுட் ஆகியிருந்தால் பரவாயில்லை, சேவாக்கின் அவுட் முரளியின் மாயாஜாலம். ஆனால் டிராவிட் தனது விக்கெட்டை தானே தூக்கிக் கொடுத்த மாதிரியல்லவா இருந்தது? அவர் நின்றிருந்தால் ஜெயித்திருப்போம் என்று நான் சொல்லவில்லை. பின்னால் அகார்கர் இருக்கிறார். ஹர்பஜன் இருக்கிறார். ஜாகீர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஓரளவுக்கு பேட்டிங் பிடிப்பவர்கள் தான். கொஞ்சம் நம்பிக்கை வைத்து இறுதி வரை போராடியிருக்கலாமே? அதுவும் இது என்னமாதிரியான ஒரு மேட்ச். தோற்றால் முதல் சுற்றிலே வெளியேற வேண்டும். சச்சின், டிராவிட், கங்கூலி என்ற மூன்று legends ஒன்றாக இருந்த டீம் முதல் சுற்றிலே வெளியே வருகிறது என்றால், 50 செஞ்சுரி,400 அம்பது, 12312 மூன்று என்று சும்மா கணக்கு மட்டும் வைத்து என்ன பிரயோஜனம்? கணக்கு எதற்கு? யாருக்கு வேண்டும் சொந்த கணக்கு?

சச்சின் டக் அவுட் ஆன பிறகு ஒரு விளம்பரம் -National Egg Corporation -வந்தது. ஒரு சின்ன பையன் முட்டை சாப்பிட்டுவிட்டு சச்சினுடன் கை குழுக்குவான், சச்சினுக்கு எழும்பு முறிவது போல வலிக்கும். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட்- நல்லா முட்டைய சாப்பிட்டு வந்துட்டு முட்டை போட்டுட்டு போயிட்டார். சச்சின் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன். மறுப்பதற்கில்லை. ஆனால் முக்கியமான -மிக முக்கியமான- சந்தர்ப்பத்தில் ஆடாமல் விட்டால் மாஸ்டராவது, டோஸ்டராவது.

நான் போன பதிவிலே சொன்னது போலதான் இருந்தது கங்கூலியின் ஆட்டம். அவர் தூக்கி தூக்கி அடிக்க பார்க்கிறார். அவரால் strike rotate செய்ய முடியவில்லை. சுற்றி நிற்கும் fielders க்கு fielding practice கொடுத்தப்புறம் ரன் ரேட்டை (தனது strike rate) உயர்த்த தூக்கி அடிக்கிறார். சில சமயம் மாட்டுகிறது பல சமயம் முரளியின் கைகளில் மாட்டுகிறது. அவர் என்ன செய்வதென்று தெரியாமல இங்கும் அங்கும் ஓடுகிறார். (மலர் ஸ்டேடியத்தில் இருந்ததால் முரளி கொஞ்சம் ஓவர் enthu வா இருந்தாரோ?!)

மற்றொரு ஸ்வீட் சர்ப்ரைஸ் (ஸ்ரீலங்காவுக்கு!) யுவராஜ் அவுட். “இவிங்க ரொம்ப நல்லவய்ங்களா இருக்காய்ங்கடா, நமக்கு ரொம்ப தொல்ல தராம அவிங்களே அவுட் ஆகிட்டு போறாய்ங்க” என்று ஸ்ரீலங்காவின் கேப்டன் சொன்னதாக சிரிக் இன்போ செய்தி வெளியிட்டிருந்தது!

அப்புறம் நம்ப பிஞ்ச் ஹிட்டர். அகார்க்கர். என்னவாம் அப்படியொரு ராக்கெட் ஷாட் அடிச்சிட்டு அவ்ளோ அவசரமா ஓடினார்? அங்க பெவிலியன்ல யார் இருந்தாவாம்? பிஞ்ச் ஹிட்டர். நெக்ஸ்ட் கபில் தேவுக்கு என்ன ஆச்சு? இதெல்லாம் டூ மச்.

இதுக்கெல்லாம் மேல, ஏதோ டெஸ்ட் மேட்ச் ஆடிட்டு இருக்கற மாதிரி, டிராவிட் மட்டைய போட்டதுதான். என் நண்பர் : “மொல்லப்பா.. மொல்ல.. மொல்ல.. பந்துக்கு வலிக்கப்போகுது.” என்று மிக மிக எரிச்சலாக கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள், மற்றவர்கள் ஆடும் மேட்சுகளைப் பார்க்கிறார்களா இல்லியா? அவனவன் எப்படி அடிக்குறான்? சும்மா அந்த ப்ளாஷ் கேம்ல அடிச்சமாதிரி பொலந்து கட்றானுங்க. இவிங்க என்னன்னா! சும்மா பெர்முடா மாதிரி ஏதாவது கிடச்சா போதும் சுத்தி நின்னு கும்மி அடிக்கறது, அடப்போங்கப்பா.

பாப் உல்மர், பாகிஸ்தான்-அயர்லாந்து மேட்சுக்கு முன்னர் ஒரு பேட்டியில்: ICC wants, minnows to give an upset. Lets just not hope thats us! என்றார். Chappell என்ன சொன்னார் என்று தெரியவில்லை. vision 2011 பத்தி யோசிச்சிட்டு இருந்திருப்பார். Chappell சொன்ன பதில் : We just didnt play enough cricket. ம்ம்..அதுதான் எங்களுக்கு தெரியுமே! நீங்க என்ன சொல்றீங்க? வேற சொல்லுங்க! இப்படி தோக்கறதுக்கு எத்தன build-up? விஷன் 2007, we are in process of strategic planning towards world cup!! எத்தன? வில்லன் படத்துல கருணாஸ் “இதுதானா உங்க டக்கு” ன்னு சொலறமாதிரி, “இதுதானாய்யா உங்க ப்ராஸஸ்”!

பவுலிங். அவனவன் 140,150ன்னு பொட்டுட்டிருக்கான், நம்பாளுங்க 90க்கு முக்கறாங்க. பின்ன எங்கிட்டு விக்கெட் விழும்? அப்புறம் நம்ப பேட்ஸ் மேன், சும்மா சொல்லக்கூடாது பவுன்ஸர் போட்டா சொல்லிவெச்சமாதிரி டக்குன்னு குனியிறாங்க. இந்த ஹ¥க்குன்னு ஒரு ஷாட் இருக்குமே அதெல்லாம் மறந்து போச்சா சார்? இல்ல பெர்முடாகூட மட்டும் தான் அடிப்பீங்களா? இல்லியே நாங்க மத்த நாடுகள் கூடவும் அடிப்பமே. ஆனா அவங்க இந்தியாவுக்கு வரனும். அப்பத்தான் அடிப்போம்!

வாஸ்க்கே டான்ஸ் ஆடின நம்ப ஆளுங்க ஜெயிச்சு சூப்பர்8க்கு போனா மட்டும் என்ன பண்ணப்போறாங்க? அங்க மெக்ராத், போலாக், பாண்ட் ஓடி வர ஆரம்பிச்ச உடனே ஒன்னுக்கு அடிச்சுறுவாங்க. மொத ரவுண்ட்லயே வெளியே வந்தது நல்லதுதான். இல்ல இன்னும் சிரியா சிரிச்சுறுப்பாய்ங்க. கங்கூலி ஆடுற ஆட்டத்துக்கெல்லாம், இவருக்கெல்லாம் கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாதான்னு கேப்பாய்ங்க! ஏனய்யா சும்மா அவங்களையே பிடிச்சுக்கிட்டு தொங்கறீங்க? இவ்ளோ பேர் இருக்கற தேசத்துல ஆளே இல்லியா? சரி படான், ஸ்ரீசாந்த் எங்க போனாங்க? அகார்கருக்கு இவங்க ரெண்டு பேரும் கொறஞ்சு போயிட்டாங்களா? அட்லீஸ்ட் படான் பேட்டிங்காவது பண்ணுவார், அகார்கர் மாதிரி ராக்கெட் ஷாட் அடிக்க மாட்டார்! ஐயோ கடவுளே, இந்த அகார்கர் கிட்டயிருந்து இந்திய டீம காப்பாத்த யாருமே இல்லியா?! இந்த சுரேஷ் ரெய்னான்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்க போனார்? ஒன்னுமே புரியல! என்ன செலக்ஷனோ? என்னா கமிட்டியோ!

எங்க அண்ணன் கவலைப்படுவார், இந்த ஜெனரேஷனுக்கு அப்புறம் அடுத்த ஜெனரேஷன் ப்ளேயர்ஸ் யாரும் சரியில்ல என்பார். இப்போ பாக்கும் போது இந்த ஜெனரேஷனே சரியில்ல, பின்ன என்ன அடுத்த ஜெனரேஷன்?

அடப்போங்கப்பா, காலையில அஞ்சு மணி வரை கண்ணு முழிச்சு பாத்ததுக்கு ஒரே ஒரு பலன். இந்திய கிரிக்கெட் தெகட்டிப் போச்சு. புட்பாலுக்கு மாறலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். அமேரிக்கவாசிகள் பேஸ்கட் பால் பார்ப்பீர்கள்! பெட்டர். இல்லியா? இந்த நேரத்தில வேற ஏதாவது கேம் (ஹாக்கி!) இந்தியாவில் பிரபலமாவதற்கு முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்! கிரிக்கெட்டர்ஸ்க்கு மட்டும் என்ன கொம்பா இருக்குங்கற இமேஜ உடைக்கலாம்! ஹாக்கி கப் வேற வருது! (ஆனா அவிங்களும் அப்படித்தான் முக்கியமான நேரத்தில சொதப்புவாங்க!) Best Wishes Hockey Team!

Cricket Team, Please Learn the basics! And learn from Bangladesh, what the word “team” stands for!

என்னோட ஜட்ஜ்மென்ட் (யார் கேட்டா?!) : Dissolve the team! Send every one to play Ranji or whatever local match (And dont recruit them how-so-ever they play, like you did for Jadeja!). Build a new young team – and a sub-team with a whole bunch of 11 members always ready – with Yuvraj as captain. Let them fight and let them win or loose! Yes. Winning or Loosing doesnt matter at all. We want a fight. A real fight! Fight and Die, Yeah, thats better!

விளம்பர செஞ்சுரியும் சிவாஜிக்கு இலவச டோக்கனும்.

*(ஹலோ, விளம்பரத்துக்காக ஒன்னும் நான் இந்த தலைப்பு வெக்கல, சும்மா தோணுச்சு வெச்சென். :)) )

விளம்பரம். விளம்பரம். விளம்பரம். இதைத்தான் கண்டோம் கிரிக்கெட்டில். எங்களுக்கு இத்தனைக்கும் பே சானல். நூறு டாலர் கட்டியிருக்கிறோம். ஒவ்வொரு ஓவருக்கு இடையிலும் விளம்பரம் போடுகிறார்கள் சரி. அதுக்காக விக்கட் கீப்பர் ஸ்டம்ப்பை சும்மாகாச்சிக்கும் தட்டிவிட்டாக்கூட விளம்பரம் போட்டுடுறாய்ங்கப்பா. சேவாக் என்னைக்காவது, அல்லது ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி தான் செஞ்சுரி போடுறாரு, அப்பக்கூட அவர் முகத்தில வர்ற சிரிப்ப பாக்கவிடாம விளம்பரம் போட்டுட்டாய்ங்க. அந்தப்பக்கம் கும்பளே கேமராவ தூக்கிட்டு நின்னாரு, சேவாக் செஞ்சுரி அடிக்கறத போட்டோ பிடிக்க, பாவம் அவராவது சேவாக்கத்தான் எடுத்தாரா இல்ல விளம்பரத்த எடுத்தாரான்னு தெரியல்ல.

ஆறாவது பால்ல சேவாக் ஒரு ரன் அடிச்சாரோ இல்லியோ, ஓவர் முடிஞ்சதோ இல்லியோ, உடனே அடுத்த மைக்ரோ செகண்ட் – அவர் இன்னும் அந்தப்பக்கட்டு ஓடவே இல்லீங்க.- விளம்பரம் -நோக்கியா, அந்த ஹோலி விளம்பரம். அந்த செல்போன நான் வாங்கவே மாட்டேன்னு என் நண்பர் சபதம் போட்டுவிட்டார்- போட்டுட்டாயங்க. அப்புறம் ரீப்ளேலதான் அவர் சிரிச்சாமானிக்கு பேட்ட தூக்கிகாட்றத பாக்கமுடிஞ்சது. இதுக்கு எதுக்கு நான் லைவ் -ராத்திரி கண்ணு முழிச்சு -பாக்கணும்? மறுநாள் ஹைலைட்ஸே பாக்கலாம்ல? தெரியுதுல பின்ன எதுக்கு முழிக்கிறன்னு கேட்டா என்ன சொல்றது?! நீங்க வெளம்பரம் போடுங்கப்பு வேணாங்கல, அதுக்கு ஒரு வகை தொகையில்லாம, அம்பையர் பவர்பிளேன்னு கைய சுத்திசுத்தி காட்ற கேப்ல கூட விளம்பரம் போட்டா எப்படி? அதுவும் அந்த உருப்படாத (ஆதித்யா பிர்லா) விளம்பரம். அதுக்கு டயாக்கின், ஏர் செல் விளம்பரம் சிம்பிள் பட் எபக்டிவ் இல்லீங்கலா?

சேவாக் செஞ்சுரி அடிக்கறதுக்குள்ள இவிங்க விளம்பரத்தில செஞ்சுரி போட்டுடறாய்ங்க. Mr. Starhub, since we have subscribed to the channel, we are not supposed to see any advertisements! Can you please look in to this!

***

துசரி, இந்தியா சூப்பர் 8க்கு போகுமா? அவன் அந்த மேட்ச்சில தோத்தா, இவன் இவ்ளோ ரன் வித்தியாசத்தில தோத்தா, நாம இவ்ளோ ரன் எடுத்து ஜெயிச்சான்னு நம்பள கணக்கு போட வெச்சே காலத்த ஓட்டுறாய்ங்க. கடைசி வரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வெக்கிறாய்ங்க இல்ல? அதுல ஒரு சந்தோஷம் ஹ¤ம். (ஆனா சும்மா சொல்லக்கூடாது பங்களாதேஷ் ஆட்டத்துல ஒரு discipline இருந்துச்சு!) இப்ப இதுக்கு போடற கணக்க இஞ்சினியரிங் படிக்கறப்பவே போட்டிருந்தா ஒழுங்கா நல்ல கம்பெனியில வேல பாத்திருக்கலாம். ஹ¤ம்.

பாப் உல்மர் இறந்துவிட்டார். பாகிஸ்தான் வெளியேறியதானல் ஏற்பட்ட ஸ்ட்ரஸ் காரணமா? என் நண்பன் ஒருவன்: அவர் மானஸ்தர்டா என்றான். நம்ப நாட்டாம சரத்குமார் மாதிரி. My deep condolences.

***

பாகிஸ்தான் வேளியேறியதைப் பற்றி ஒரு கமெண்ட்ஸ¤ம் இப்போ கொடுக்க முடியாது, வெள்ளிக்கிழமை போகட்டும், இந்தியா அப்புறமும் உள்ள இருந்தா பாக்கலாம். உத்தப்பா வைட் பால் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா கொஞ்சம் நேரம் பேட்டுக்கு வற்ர பந்த மட்டும் ஆடினார்னா நல்லா இருக்கும். அப்புறம் செட்டில் ஆன பிறகு சாத்திக்க வேண்டியது தான? கங்கூலியின் பெர்முடாவுடனான ஆட்டம் கவலை அளிப்பதாக இருந்தது. He always tries to loft the ball. And these days he is quite unsuccessfull. முன்பு ஆடியது போலத்தான் ஆடுகிறார். முன்பும் என்பது பாலுக்குதான் half-century போடுவார். ஆனா அதுக்கப்புறம் அவர் 80-90 க்கு ஒரே ஜம்ப் பண்ணி போயிடுவார். He is not able to convert his half-centuries to centuries, can you guys see that? இப்போ கொஞ்சம் frustrationa வெளியே போயிருக்கிறார், அடுத்த ஆட்டம் பாக்கலாம். எனக்கென்னமோ ஒன்னும் சரியா தோணல. யுவராஜ் simply superb. வீட்டை கபளீகரம் செய்ததாலோ என்னவோ டோனி தனது வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை.

அது சரி, வீட்ட ஏன்ப்பா உடைக்கிறீங்க? உருவ பொம்மை கொழுத்தறீங்க சரி, கொழுத்திட்டுப் போங்க, வீட்ட போய் கபளீகரம் பண்ணனுமா? என்னக்கேட்டா அனைத்து வீரர்களும் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அனைவரும். ஒருவர் பாக்கியில்லாமல். அப்ப என்ன செய்வீங்க? இனி விட்டாக்க வீட்ல இருக்கறவங்கள கடத்திட்டு போய் வெச்சுக்கிட்டு ஒழுங்கா விளையாடு இல்லீன்னா உன் மகன் க்ளோஸ்ன்னு சொல்லுவாய்ங்க போல இருக்கே? அயிரம் ஊழல் பண்ணிட்டு நம்பளோட அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்யாமல் இருக்கற அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் லஞ்சம் கேட்கிற அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் இதை செய்தால் கொஞ்சம் புண்ணியமுண்டு. எங்கே அவர்கள் வீட்டை உடைக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்!

நாம எழுதற கோட்ல (code) பக்ஸ் வாரதுக்காக சம்பளத்த குறச்சு கொடுத்தா ஏத்துப்போமா? cricinfo ல சொன்னமாதிரி Cricket is just a game. A game between leather and willow.

***

பின்தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்ப புரியுதா நான் ஏன் கொஞ்ச நாளா இந்தப்பக்கம் வரலுன்னு? கொஞ்சம் பயம் வந்துடுச்சு. நாவல் படிச்சப்புறம் நம்பல ஏதும் நிழல் பின் தொடரும்மான்னு. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு படிக்கறதுக்கு. ஏற்கனவே கொற்றவையை ஆரம்பித்து கைவிட்டுவிட்டேன். ulysses போல கொற்றவையைப் படித்து முடிப்பதும் வாழ்க்கையின் லட்சியங்களில் ஒன்றாகிவிட்டது. கம்யூனிசத்தின் pros and cons விவரிக்கப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது. balanced view தானே? இப்பொழுதுதான் வீரபத்ரபிள்ளை எழுதிய கடிதங்களுக்கு வந்திருக்கிறேன். திருப்பி திருப்பி சொன்னதையே சொல்வது போல இருக்கிறது. அது கொஞ்சம் tired ஆக்குகிறது.

tired ஆகிற பொழுது புத்தகத்தை மூடி வைத்துவிடுகிறேன். வீரபத்ரபிள்ளையும் அருணாச்சலமும் பின் தொடர ஆரம்பித்துவிடுகின்றனர். பேசாம harry potter and half blood price க்கு தாவிவிடலாமா என்று சீரியஸாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

***

மீண்டும் ஒரு முறை Forrest Gump பார்த்தேன். what an inspirational movie it is! (But really are we getting inspired? அப்படி inspire ஆகியிருந்தால் நான் எதுக்கு இந்தப் படத்த இன்னொரு தடவ பாக்குறேன்!) Always do your best என்கிறது படம், செய்கிறோமா?

Apocalypto என்றொரு படம் பார்த்தோம். GVMax என்ற பெரிய திரையரங்கில். வழக்கம்போல MilGibson அதிக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தார். தலையைத் துண்டமாக வெட்டி, நெஞ்சாங்கூட்டில் கைவிட்டு இதயத்தை எடுத்து இரத்தம் குடிப்பது போன்ற சிலருக்கு தலைசுற்ற வைக்கும் காட்சிகள். அதில் ஹீரோவினுடைய பெயர் jacuar paw. சொல்ல மறந்துவிட்டேன் படத்தில் மொழியே கிடையாது. மிருகங்களுக்கு மொழியேது?

இப்படி நெஞ்சாங்கூட்டை இவர்கள் திறந்து மூடிக்கொண்டிருக்க என் நண்பன் ஒருவன் தலைசுற்றல் வந்து பாதியிலே எழுந்து போய்விட்டான். அன்றிலிருந்து அவனுக்கு ஜாக்குவார் தங்கம் என்ற திருப்பெயர் நிலவிவருகிறது. ஆனால் அவன் எழுந்து போன பிறகு படம் நன்றாகவே இருந்தது. குறிப்பாக அந்த கடைசி chase. very much impressive. நம்ப ஜாக்குவார் மிஸ் பண்ணிட்டார்.

இப்ப அவனுக்கு கோனபாட்டில் கோவிந்தன் என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. அது என்ன கோனபாட்டில் கோவிந்தன் என்று கேட்பவர்களுக்கு: அவன் தண்ணீர் பிடித்து குடிக்கும் பெட் பாட்டில், ஒரு நாள் இவன் சூடான தண்ணீர் ஊற்றியதால், சற்று நெளிந்து விட்டது. அப்படியும் விடாமல் அந்த பாட்டிலில் தான் தண்ணீர் குடிப்பேன் என்று குடித்துக்கொண்டிருக்கிறான். அதனால் தான் அவனுக்கு அந்த பெயர்.

***

ன் நண்பருக்கு வேறு ஒரு கவலை, செல்விய நிப்பாட்டிட்டு அரசின்னு புது சீரியல் ஆரம்பிச்சாங்க, இப்பப் பாத்தாக்க அரசில அதே செல்வி கத தான் தொடருது. என்னத்த சொல்றதுன்னு அவர் சலிச்சுக்கறார். ரொம்ப முக்கியம்!

அதே நபர் என்னிடம் முன்பு ஒரு நாள், செல்வில நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா, நானும் என் வைப்பும் நேத்து வெளில போய்ட்டம் பாக்கமுடியல- இல்லீன்னா அவ வீட்ல இருந்தா அவ, நான் வீட்ல இருந்தா நான் யாரவது பாத்துட்டு இன்னொருத்தருக்கு கத சொல்லுவோம்- நீங்க பாத்தீங்களா, பாத்தீங்கன்னா என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் என்றார். நான் சீரியலெல்லாம் பாக்குறதில்லீங்ண்ணான்னு எஸ்கேப் ஆயிட்டேன். எப்படித்தான் இந்த சீரியல கட்டிட்டு அழறாங்களோ தெரியல. எல்லாம் வீட்டம்மாக்கள் பண்றது. சும்மாவா சொன்னாரு கவிஞர்: (சீரியல் பாக்காத) மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு. Bachelors வேண்டிக்கோங்கப்பா.

கல்யாணம் ஆனவங்களுக்கு, ஒன்னும் பண்ணமுடியாது. தலையில எழுதினத மாத்த முடியுமா என்ன? My deep regrets! நீங்களும் கூட உட்கார்ந்து பாத்து enjoy பண்ணுங்க. வேற என்ன பண்றது?!

***

சிவாஜி படத்த முதல் நாள் பாக்குறதுக்கு சென்னையில டோக்கன் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு என் நண்பன் ஒருவன் சொன்னான். ஒரு டோக்கன் விலை ஆயிரத்து நூறு ரூபாயாம். ரொம்ப கம்மியா இருக்கே!

ஏதாவது election வந்தாலாவது பரவாயில்ல, சிவாஜிக்கு இலவச டிக்கெட் தாரோம்னு யாராவது வாக்குறுதி கொடுப்பாங்க, அவங்களுக்கு ஓட்டப்போட்டுட்டு டிக்கெட்ட வாங்கிக்கலாம், இப்போதைக்கு election கூட இல்லியே, என்ன பண்றது?

***

சிங்கப்பூரில் நில நடுக்கம்

சுமாத்ராவின் மேற்கு கடற்கரையில் செவ்வாய் காலை 6.3 ரிக்டர் புள்ளியளவு பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின் மையப்புள்ளி (epicenter) சிங்கப்பூரிலிருந்து 420கிமீ தொலைவில் அமைந்திருந்தது. எனினும் சில அதிர்வுகளை இங்கு பலர் உணர்ந்திருக்கின்றனர். நான், மற்றும் எனது boss இருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நான் உணரவில்லை (Yeah, I am unshakable!). நான் வெளியே சென்றுவிட்டு வரும் போது எனது அலுவலகத்திலிருந்து மக்கள் வெளியேறி கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். ஒன்றும் புரியாமல் என்னவென்று விசாரித்த பொழுது, நிலநடுக்கம் என்று சொல்லிவிட்டு கிடைத்த லிப்டில் தொற்றிக்கொண்டனர். மேலே போகிறதா கீழே போகிறதா என்று கூட பார்க்காமல். நானும் ஓடோடி சென்று எனது cellphone ஐ எடுத்துக்கொண்டு -ரொம்ப முக்கியம் என்று என் நண்பர் கத்திக்கொண்டிருந்தார்!- கூட்டத்தில் ஐக்கியமானேன். சிலர் படிகள் இறங்கி தப்பித்தனர். நானும் வேறு சில நண்பர்களும் லிப்டில் தான் சென்றோம். (அப்பக்கூட சோம்பேறி!)

வெளியே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஏதேதோ கதைகளை சொல்லிக்கொண்டு. என்னுடைய boss பையுடன் escape ஆகி எனக்கு முன்னாள் நின்று கொண்டிருந்தார். சிலர் நடுக்கம் தெரிந்தது என்றும் தலை சுற்றல் இருந்தது என்றும் சொன்னார்கள். எனக்கு தெரியவில்லை. இது மூன்றாவது நிலநடுக்கம் எனக்கு. ஒன்று சென்னையில் (நான் லேசான நடுக்கத்தை உணர்ந்தேன்). இரண்டாவது கோலாலம்பூரில் (நல்ல உறக்கத்தில் இருந்தேன்!). இப்பொழுது சிங்கப்பூரில் (discussion லில் இருந்தேன்!).

நாங்கள் lunch க்கு அமிர்தாவுக்கு சென்றுவிட்டோம். Earthquake வந்திருக்கிறதே, கொஞ்சம் கூட அதற்கு மரியாதை கொடுக்காமல் மக்கள் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எப்பொழுதும் இருப்பதை விட கூட்டம் அதிகம் வேறு. இன்றைக்கு special ஆக கேசரி. நாங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்த போது என்னுடைய boss தோளில் பையுடன் வெளியேவே நின்று கொண்டிருந்தார்.

suntech city யில் அதிவுகள் நிறைய இருந்தன என்றும் இரண்டொரு HDB யில் crack விழுந்தது என்றும் கேள்விப்பட்டேன். suntech க்கிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் நாங்கள் Raffels வந்தோம்!

என்னுடைய இன்னொரு பாஸ் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “ஆமாம் நான் கூட முத்துவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நடுக்கத்தை (அதிர்வை) உணர்ந்தேன்!”

அப்புறம் முத்துவ பாத்து நடுங்காதவங்க யாரு இருக்கா?! எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கு முத்துகிட்ட, ம்ம்ம்ம்..இருக்கட்டும் இருக்கட்டும்!

இரண்டாவது தடவையாக மதியம் இரண்டு மணியளவில் மற்றொரு நடுக்கத்தை நான் உணர்ந்தேன்! நன்றாக ஒரு shake இருந்தது, for 2 secs.

சுடர் : தனித்தீவு

சுடர் இளவஞ்சிகிட்ட இருந்து ரொம்ப பிரகாசமா என்கிட்ட வந்திருக்கு. அதை அணைச்சுடாம நிர்மல் கிட்ட கொடுத்திடனும்ங்கிறது தான் நேத்திலிருந்து எனக்கு ஒரே சிந்தனை. அதுவும் இளா வேற ஒரு தினுசா கேள்வி கேட்டிருக்கார். அஜீத்துக்கு கதை, ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மட்டுமே மனிதனின் குணாதிசயங்களை கண்டுகொள்ளலாம், அப்புறம் ஆறுதலுக்கு ஒரே ஒரு ஈசியான கேள்வி : நல்ல தமிழில் எழுதாதவர்களைப் (இளாவை ப் போலவாம்! இவர் நல்ல தமிழில் எழுத மாட்டாராம்! ஹம்.. நான் நல்ல தமிழில் எழுதுகிறேனாம். ஐயகோ!) படிக்கும் போது நான் என்ன நினைக்கிறேன் என்று நான்கு கேள்விகள்.

ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள்

கேள்விகளைப் படித்தவுடன் BE ஏழாவது செமஸ்டரில் LIC பரிட்சை question paper ஐ பார்த்து முழித்த முத்து, போல முழித்தேன். நாலு கேள்கிகளில் ஒரே ஒரு கேள்விக்கு தான் திட்டவட்டமாக answer தெரிகிறது. மத்த கேள்விகள் எல்லாம் abstract class போல, என்னவென்று தெரியும், எப்படியென்று தெரியாது! தீவுக்கு போவதா? தனியா ஒரு மாசமா? ஐந்து பொருட்கள் எடுத்துப் போக வேண்டுமா? பதில் தெரியாம சட்டுன்னு கூகிள் கிட்ட கேக்காலாமான்னு கூட யோசிச்சேன். என்ன பண்றது எதுக்கெடுத்தாலும் கூகிள்ட்ட கேட்டு கேட்டே பழக்கமாகிடுச்சு.

என்னுடைய கலீக் ஒருத்தர் சொன்னார் : உனக்கு, ஒரு செல் போன், நிறைய காபி , அப்புறம் லேப்டாப் இருந்தா போதாதா முத்து, ஒரு மாசம் ஓட்டிடுவேயில்ல என்றார். உண்மைதான். ஆனா செல்போனுக்கு பேட்டரி சார்ஜ் போயிடுச்சுன்னா எங்க போய் சார்ஜ் பண்றதாம்? என்னோட லேப்டாப் கூட இரண்டு மணி நேரத்துக்கு மேலே சார்ஜ் தங்காது என்றேன். அப்படீன்னா ஒன்னு செய் முத்து, பேசாம நிறைய பேட்டரி எடுத்துட்டு போயிடு என்றார். இளவஞ்சி ஒத்துக்குவாரான்னு தெரியலயே?

அப்புறம் ஒரு ப்ரண்ட் கிட்ட கேட்டப்போ, அவர் சட்டுன்னு, முத்து ஆர் யூ ஓகே. உடம்புக்கு ஒன்னும் இல்லியேன்னு என்னைய ஒரு விசித்திரமான லுக்விட்டுட்டே கேட்டார். பிறகு நான் நம்ப சுடரைப் பத்தி விளக்கி சொன்னவுடன், சீரியசாக யோசிக்க ஆரம்பித்தார். திடீர்னு, அங்கே சாப்பாடெல்லாம் கிடைக்குமா? என்றார். ம்ம்..நாயர் டீஸ்டால் கூட ஒன்னு இருக்காம்ன்னு சொன்னேன். அப்படியா என்றார் அப்பாவியாய். (அவரிடம் கேள்விகளுக்கு பஞ்சம் இருக்காது. கேள்விமேல கேள்வி கேட்டுகிட்டேயிருப்பார்.அதனாலேயே அவருக்கு கேள்வியின் நாயகன் என்றொரு பெயர் உண்டு) யோவ் உன்னைய தனியா தான இருக்க சொல்லியிருக்காய்ங்க இதுல சாப்பாடு கிடைக்குமா மசாலா டீ கிடைக்குமான்னு என்யா டுபாகூர் மாதிரி கேக்குறன்ன, பிறகு அமைதியாய் ரொம்ப நேரம் யோசிச்ச அவர், திடீர்னு :

கண்டிப்பா தீக்குச்சி எடுத்திட்டு போக மாட்டேன்னார். ஆதி காலம் மாதிரி அவரே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுப்பாராம். அப்புறம், கண்டிப்பா கம்பளி எடுத்துட்டு போவேன், எனக்கு குளிர் தாங்காது என்றார். நான் தண்ணி வேணாமான்னு கேட்டேன். தீவுல கடல் இருக்குமான்னு கேட்டார். (அடப்பாவி!) நான் சிரிக்காம கண்டிப்பா இருக்கும்னு சொன்னேன். அப்படீன்னா கடல் தண்ணிய குடிச்சுக்கவேண்டிது தானே என்றார்.நான் ஒன்னும் சொல்லல. பிறகு கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு : முக்கியமா கொசு வத்தி சுருள் எடுத்திட்டு போவேன்னார். என்னது கொசு வத்தி சுருளா? செம்பு ரொம்ப (சிக்கன்குனியாவால) அடிவாங்கியிருக்கும் போல! அவருக்கு நாலு பொருள் தான் தெரிஞ்சது. அஞ்சாவது? பராவாயில்ல நான் எடுத்துட்டு போகல்லன்னார்! எவ்ளோ சிக்கனம்!

அவர் சொன்ன இன்னொரு பொருள்: அந்த தீவில இருக்குற மரங்கள்ல இருக்கிற பழங்களைப் பறிச்சு சாப்பிடறதுக்கு ஒரு நீண்ட குச்சி (முனையில கொக்கியோடு!) எடுத்திட்டுப் போவாராம். நீங்களே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுக்கிறீங்களே, மரத்த உடச்சு நீங்களே கொக்கியும் செஞ்சுக்க வேண்டியது தானேன்னு சொன்னேன், அடஆமால்ல, அதானே! என்றார்.

என்னோட ப்ரண்ட் ஒருத்தி, நடு ராத்திரியில எழுப்பி, முத்து, நீ உன்னோட சோடபுட்டிய மறந்திடாம எடுத்திட்டு போயிடு, என்னா உனக்கு கண்ணு தெரியாதில்லன்னு சொன்னா. நான் தான் லென்ஸ் போட்டுக்குவேனே அப்படீன்னு சிரிச்சேன். அதுக்கு அவ, லென்ஸ்ன்னா, லென்ஸ் வெக்கிற கேஸ், கிளீனிங் liquid எடுத்திட்டு போகணும், அதுவே ரெண்டு பொருள் count ஆகிடுச்சு, சோடாபுட்டின்னா கணக்கில வராது, நீ பாட்டுக்கு போட்டுட்டு ஜாலியா போயிடலாம். அதுக்கப்புறமும், தீவில போய் நீ தனியாதான் இருக்கபோற, அங்க girls யாரும் இருக்கப்போறதில்ல, அதனால லென்ஸ் போட்டுட்டு நீ ஒன்னும் சீன் போட தேவையில்லன்னா. கரெக்ட் தான்!

cast away ன்னு ஒரு படம் பார்த்திருப்பீங்க, இளவஞ்சியோட கேள்வியப் படிச்சதும் எனக்கு அந்தப் படம் தான் ஞாபகம் வந்தது. அதிலும் Tom Hanks நீண்ட நாள் கடின முயற்சிக்குப் பிறகு தீ பற்றவைத்து விட்டு, கத்தி கூப்பாடு போட்டு டான்ஸ் ஆடுவது. ரொம்ப அழகாக செய்திருப்பார் அவர்.

நானே முயற்சி செஞ்சு தீ பற்றவைப்பதுக்குள் இளா வந்து, முத்து ஒரு மாசம் முடிஞ்சிடுச்சு, வாங்க போகலாம்ன்னு சொல்லிடுவார். அதனால நான் அவ்வளவெல்லாம் கஷ்டப்படப்போவதில்லை. ஒரு லைட்டர் : தேடிக்கண்டுபிடித்து இருக்கறதிலியே பெரிய லைட்டர் ஒன்னு கண்டிப்பாக எடுத்துப்பேன். அது வொர்க் ஆகலைன்னா? இல்ல, மழையில நனைஞ்சு struk ஆகிடுச்சுன்னா? அடபோங்கப்பா, நான் தீ கண்டுபிடிச்சுக்கறேன்.

முனையில் வளைந்த கூர்மையான ஒரு ஆயுதம். கண்டிப்பாக தேவைன்னு நினைக்கிறேன். ஏதாவது திறக்கனும்னா? (suppose இளநிர். நினைப்பு தான்டா உனக்கு. விட்டா, இளனிக்கு straw கேப்பபோல. இளா, தென்னை மரமெல்லாம் இருக்கா அங்க?) மேலும் தற்காப்புக்கு கூட பயன் படுத்திக்கலாம் இல்லியா? ஒரு சிங்கம் (தீவில ஏதுடா சிங்கம்? அதுவும், ஒரு உரையில ஒரு கத்தி தான் இருக்கும்கிறமாதிரி, ஒரு தீவில ஒரு சிங்கம் தான் இருக்கும்னு விஜய.டி.ஆர் கூட சொல்லியிருக்கார். அதனால நீ இருக்கறதால, இன்னொரு சிங்கம் அங்க இருக்க சான்ஸே இல்லடா முத்து! 🙂 ) கிங்கம் வந்தா அது கூட சண்டை போடுறதுக்கு உதவியா இருக்கும்ல. அப்புறம் சுராமீன் (!?) ஏதும் கரை ஒதுங்கிச்சுன்னா அதை கிழிக்கறதுக்கு உதவியா இருக்கும். சுராமீன் ஒதுங்கிச்சுன்னா ஒரு மாசதுக்கு கவலையே இல்ல. இளா அஞ்சு பொருள் restriction கொடுக்கலைன்னா, ஆச்சி மசாலாதூள் பாக்கெட் கூட எடுத்திட்டு போகலாம். 🙂

கவட்டை போன்ற ஒன்று. துப்பாக்கி வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா very simple, எனக்கு சுடத்தெரியாது. மேலும் துப்பாக்கியால் சுட்டு, கடல்ல கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருக்கும், Pirates (of the caribean) இன் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. வேலியில போற ஓணான எட்த்து வேட்டியில விட்டுக்கினு, அப்பால, வானா வானான்னா விட்டுடுமா? துப்பாக்கியைப் பயன் படுத்தினால் அங்கே இருக்கிற உயிரினங்கள் (wild) உசாராவதுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் கவட்டைய பயன் படுத்தி சில பறவைகளை – காட கவுதாரி கொக்கு -(கொஞ்சம் கஷ்டப்பட்டு தான்! சின்ன வயதில் பயன்படுத்தியிருக்கிறேன்) வீழ்த்தலாம். அப்புறம் சுட்டு சாப்பிடலாம். வாவ். intersting இல்ல? (interetinga? அங்க போனப்புறம் தெரியும்டி!)

நீண்ட ஸ்ட்ராங்கான கயிறு. சுனாமியோ, இல்ல global warming (இதுக்கு தான் ஓவரா இங்கிலீஸ் படம் பாக்காதன்னு சொல்றது!) ன்னாலயோ கடல் தண்ணீர் தீவுக்குள்ள வந்திடுச்சுன்னு வெச்சுக்குங்க ஒரு பெரிய மரத்தைப் பார்த்து அதுல கயிறு போட்டு ஏறி உச்சியில் உக்காந்துகிடலாம்ல. மேலும், இளா இந்த பதிவை படிச்சுட்டு, அடப் பாவி, இவ்ளோ மொக்க போடுற, உன்னல்லாம் அந்த தீவிலயே விட்டுட்டு வந்திடனும்டான்னு, அங்கேயே விட்டுட்டாருன்னு வெச்சுக்கோங்க, நான் மரம் வெட்டி (தற்செயலாக வந்த வார்த்தைதான்!) இந்த கயிற use பண்ணி படகு போல ஏதோ செஞ்சு தப்பிசுடலாம் பாருங்க. cast away ல Tom Hanks இப்படி தப்பிக்கிற போது அவர் மறுபடி மறுபடி அலைகளால் கரைக்கே இழுத்து வரப்படுகிற காட்சி மனதில் தோன்றி சற்று கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. இளா, ஒரு மாசம் கழிச்சு வந்து என்ன கூப்பிட்டுப்பீங்கள்ல?

என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்: நான் ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டு போயிடுவேன். சாம்பார் ரசம் (ரொம்ப முக்கியம்!) எல்லாம் சேர்த்து ஒரே பாக்கெட்டா எடுத்துப்பாராம். ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டுப் போனா அது கெட்டுப் போயிடாதா? புளிச்சாதம் கூட ஐந்து நாட்களுக்கு தான் வரும். (நாங்க கோவிலுக்கு போகும் போது எடுத்துட்டு போவோம். மூனாவது நாளே சாப்பிட முடியாது. அந்த smell வந்தாலே வயித்த புரட்டிட்டு வரும்) மேலும் தீவில் அதிகம் வேலை இருக்காது so hopefully அதிகம் பசி இருக்காது. பழங்கள் if lucky ஏதோ மீன், பறவை கிடைத்தால் போதும். சமாளிச்சுகிடலாம்.

என்னுடைய இன்னொரு நண்பரிடம் கேட்டதற்கு அவர் உடனே லேப்டாப் எடுத்துட்டு போவேன்னார். லேப்டாப் வெச்சு என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, ம்..ம்..பாட்டு கேப்பேன், படம் பாப்பேன் என்னமோ செய்வேன்னார். சார்ஜ் போயிடுச்சுன்னா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்ப, ஓ அப்படி ஒரு விசயம் இருக்கான்னு முழிச்சார். ஒன்று மட்டும் தெரிகிறது. நமது வாழ்க்கையில் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன.

அப்புறம் அவர் நிதானமாக யோசித்து சொன்ன ஐந்து பொருட்கள்: ஒரு பெரிய சாக்லேட் பாக்கெட் (எனர்ஜிக்கு), சீட்டு கட்டு (solitaire விளையாட. பொழுது போய்விடும்), கூர்மையான ஒரு ஆயுதம், கம்பளி (குளிருக்கு. மழை பெய்தா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, அட போடாங்கற மாதிரி பார்த்தார்!) , பேப்பர் பேனா (எழுதுவதற்கு. இப்பொழுது அவர் ஆங்கிலத்தில் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார். கேட்டு வாங்கி publish செய்கிறேன்!)

ஓகே சாய்ஸ் தான், இல்லயா?

தண்ணீருக்கு என்ன பண்ணுவது என்ற சீரியசான யோசனை எனக்கு வந்தது. கடல் தண்ணீரை குடிக்க முடியாதே. கேள்வியின் நாயகன் கடல் தண்ணீரை குடித்து சமாளித்து விடுவேன் என்றார். (அவர் wife கிட்ட சொல்லி சாப்பாட்ல உப்பு கம்மியா போடச் சொல்லனும். மனுசன் ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கிறேன்.) என்னால முடியாது. ரொம்ப உப்பா இருக்கும், அவர் தெரியாம சொல்லுறார். ஆனா எனக்கிருக்கிற ஒரே நம்பிக்கை, தீவில் கண்டிப்பாக back waters இருக்கும். அல்லது fresh water சுணை கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் இருக்கும். (Idea: Life Of Pie) எனவே அதை குடித்து சமாளித்துக்கொள்ளலாம். மேலும் மழை வந்தால் பிடித்து வைத்துக்கொள்ளலாம். ஆமாம், பிடித்து வைக்கப் பாத்திரம்? இதுக்கு தான் கேள்வியின் நாயகன் கொள்றதுக்கு பாத்திரம் எடுத்துப்போவேன் என்றார். (முதலில் “ல்” பிரச்சனையால், பாத்திரத்த வெச்சு கொல்லுவாரா? தலையில கவுத்திவிட்டு மூச்சு திணற வெச்சு கொல்லுவாரோ? புதுமையான டெக்னிக்கா இருக்கேன்னு நான் சீரியசா யோசிச்சேன்) ஆனால் பாத்திரம் எடுத்துப்போகும் அளவுக்கு இளா வாய்ப்பளிக்கவில்லை. ரொம்ப stingy அவர்.

so தண்ணீர் பிரச்சனை solved. டென்ட் அடிக்கும் அளவுக்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் ஷீட். அதை (மழை மற்றும் கடுமையான வெயிலில்) டென்ட்டாகவும் use பண்ணலாம், குளிருக்கு போர்வையாகவும் பயன்படுத்திக்கலாம்.

கவட்டைக்கு பதில் நான் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டு, சாக்லேட் பாக்கெட் அல்லது சீட்டு கட்டு எடுத்துட்டு போகலாம்.

ஆனால் நான் கண்டிப்பாக ஒரு மாதம் தனிமையில் – அதுவும் செல் போன் இல்லாம – இருக்க வாய்ப்பே இல்லை. கண்டிப்பா லூசாயிடுவேன். (இப்ப மட்டும் எப்படியிருக்கியாம்? ன்னு நீங்க கேக்குறது என் காதுல விழல!)

அஜீத்துக்கு கதை

இது ரொம்ப கஷ்டமான வேலை. எனக்கு மேஜிக் தெரியாது. என்ன முழிக்கிறீங்க? கதைதான எழுதச் சொன்னோம், இவன் என்ன மேஜிக் கீஜிக்குன்னு பீலா விடறான்னு பாக்குறீங்க தான?. அஜீத் படத்தில் (அல்லது சமீபத்திய தமிழ் ஹீரோக்கள் படங்களில் ) கதை என்பது பறம்பொருள் போல. இருக்கும் ஆனால் இருக்காது. தேடுங்க தேடுங்க தேடிட்டேயிருங்க.

ஆனாலும் நான் நம்ப “தலை”க்கு ஒரு கதை யோசிச்சு வெச்சிருக்கேன். அதுல அவர் மட்டும் தான் நடிக்க(?!) முடியும். வேற யாரும் பக்கத்துல கூட வரமுடியாது. அவருக்கே அவருக்கான கதை இது. புது இயக்குனர்களை – கதாசிரியர்களை- அவரைப் போல ஆதரிப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

படம் ஆரம்பிக்கிறது. ஒரு கழுதை சாந்தமாக நிற்கிறது. காமிரா top angle ல இருக்கு. காமிரா அப்படியே மெதுவா கீழே இறங்கி வருகிறது, அப்போது தான் தெரிகிறது அது உண்மையிலே கழுதை இல்லை, கழுதை வேசத்தில் இருக்கும் அஜித். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. திடீரென்று வெளிச்சம் அவர் மீது விழுகிறது. கேமிரா பல ஆங்கிளில் சுழல்கிறது. ரீரெக்கார்டிங் காதைப் பிளக்கிறது. (நான், உஷாராக கொண்டுபோயிருந்த பஞ்சை காதில் வைத்துக்கொண்டேன். ஐ, நான் தான் ஆழ்வார் பாத்திருக்கேனே!) கேமிரா focus-outoffocus ஆகிக் கொண்டேயிருக்கிறது. (நான் ஏற்கனவே சோடாபுட்டி, எனக்கு தலை சுற்றவே நான் பயத்தில் கண்களை கையைவைத்து இறுக்கமாக மூடிக்கொண்டேன்.) சட்டுன்னு அஜித் கண்களை திறக்கிறார். வித்தியாசாகரிடம் சொல்லி இந்த பிரேமில் matrix revolutions music க்கையும் கழுதை கத்தும் சத்தத்தையும் mix செஞ்சுறலாம். செமத்தியான introduction.

அஜித் அப்படியே slow motion இல் நடந்து வந்து கட்டிலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தனை உதைத்தே கொல்கிறார். நடு நடுவே கழுதை கத்திக்கொள்கிறது.

அடுத்த பிரேம். ஹீரோயின் introduction. அவர் IIM இல் படித்தவர். அஜித் தங்கியிருக்கும் flat க்கு பக்கத்தில் குடிவருகிறார். வந்த அன்றே பக்கத்து flatல் (அஜித் தங்கியிருக்கும் flat) கழுதை குதிரை கனைப்பது போன்ற சத்தம் கேட்டு மிரண்டு போகிறார். மறுநாள் அஜித்தைப் பார்க்கிறார். இவர் தான் இப்படி mimicry செய்தார் என்று யூகித்தவுடன் (atleast நான் ஒரு காரணமாவது சொல்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்) அவருக்கு உடனே காதல் வந்து விடுகிறது. உடனே டூயட். யாரும் எடுத்திறாத அன்டார்டிக்கா பனிசருக்குகளில் அஜித் மற்றும் IIM ஹீரோயின் கழுதைகளுடன் நடனமாடுகின்றனர். அவ்வளவு பனியிலும் நமது ஹீரோ full suit இல் இருக்க, ஹீரோயினும் அவர் LKG யில் போட்ட frock மட்டுமே கொடுக்கப்படும்.

அடுத்த பிரேம். அஜித் ஒட்டகத்தைப் போன்று வேடம் போட்டிருக்கிறார். இந்த முறை ஒரு புதுமையான டெக்னிக்கை கையாள்கிறார். ஒட்டகம், கட்டிலில் விட்டத்தைப் பார்த்து படுத்துக்கொண்டிருப்பவனின் முகத்துக்கு அருகே சென்று வாயைத் திறந்து மூச்சு விடுகிறது. அவன் அங்கேயே பரலோகம் செல்கிறான். மறுபடியும் தீம் மியூசிக் + கழுதை கத்தும் சத்தம்.

அடுத்த பிரேம். ஹீரோயின் அஜித் எங்கே வேலை செய்கிறார் என்று கண்டுபிடிக்க follow செய்கிறார். அவர் zoo வில் கிளீன் செய்யும் வேலை செய்வது தெரிகிறது. அவர் வேலை செய்யும் நேரம் போக ஒரு காலியான கூண்டிலேயே உட்கார்ந்திருப்பது தெரிகிறது. கூண்டுக்கு வெளியே. The Donkey – 1999-2007 என்று போட்டிருக்கிறது.

ஹீரோயின் அஜித்திடம் காதலைச் சொல்லுகிறார். அஜித் முதலில் பிகு பண்ணாலும் டூயட் மட்டும் பாடிக்கொண்டிருக்கிறார். பிறகு ஒரு நாள் ஹீரோயின் அஜீத்திடம் கழுதை போல கத்திக் காண்பிக்கச்சொல்ல அஜித் டென்சனாகிறார். உனக்கு தெர்யுமா. நான் தனியாளில்ல. நான் பேஸ்மாட்டேன். கத்துவேன். என்று காச்மூச்சென்று கத்துகிறார். பிறகு flashback சொல்கிறார். ஹீரோயின் (ரசிகர்களும்) நான் கேக்கவேயில்லையேன்னு சொல்றத அவர் கண்டுக்கல.

அஜித் zooவில் வேலை பார்க்கிறார். அங்கே சிறுத்தை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் இருக்கின்றன. அஜித்துக்கு கிளீன் செய்யும் வேலை. அந்த zoo வில் ஒரு கழுதை இருக்கிறது. அதுவும் பார்வைக்கு வைக்கப்பட்டது தான். வேலையெல்லாம் முடித்து விட்டு அஜித் அங்கு தான் வந்து உட்கார்ந்து கொள்வார். (கழுதை ஒன்றும் செய்யாது அது பாட்டுக்கு இருக்கும். மேலும் கழுதையை யாரும் பார்க்கவரமாட்டார்கள் -visitors- நன்றாக தூங்கலாம் என்பது எண்ணம்) கழுதை ஏதோ தன் மீதான பாசம் என்று நினைத்துக்கொள்கிறது. ஒரு நாள், கழுதை அஜீத்திடம் ஏன் என்னை உனக்கு பிடிக்கிறது என்று கேட்கிறது. அஜித் மற்றொரு flashback சொல்ல ஆரம்பிக்கிறார். கழுதை நான் கேட்கல கேட்கலன்னு கத்திக்கொண்டே கூண்டுக்குள்ளே அழுது புலம்புவதை அஜீத் கவனிக்கவில்லை.

அஜித்தின் அப்பா அந்த கிராமத்தில் துணி துவைத்துக் கொடுப்பவர். அவருக்கு ஒரு கழுதை இருக்கிறது. ஒரு நாள் கழுதைக்கு உடம்பு சரியில்லாமல் போக அஜித் மூட்டையைத் தூக்கிகொண்டு செல்கிறார். அப்போது தான் அவருக்கு கழுதைகளின் வலி புரிகிறது. கண்களில் நீர் வழிந்தோடுகிறது. கழுதைகளின் நலனுக்காக போராடுவேன் என்று அழுக்கு துணிகளின் முன்னால் சபதம் எடுத்துக்கொள்கிறார். க.மு.க என்று ஒரு கட்சியும் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். கமுக என்வென்று தெரியாத மக்களுக்கு : கழுதைகள் முன்னேற்றக் கழகம்.

கழுதை மொக்க தாங்க மாட்டாமல் அழுகிறது. அஜீத் எப்பவும் போல தன்னுடைய flashback கேட்டு அழுகிறது என்று நினைத்துக் கொள்கிறார்.

கழுதைக்கு கடுமையான நோயினால் பாதிக்கப்படுகிறது. டாக்டர்கள் கழுதை அதிர்ச்சியான ஜீரனிக்க முடியாத செய்தியைக் கேட்டதால் (should be ajith’s flashback) இப்படி ஆகிவிட்டதென்று சொல்கிறார்கள். மாட்டு டாக்டர் -அப்பரண்டீஸ்- ஒருவர் தவறான மருந்து கொடுத்துவிடுகிறார். கழுதை செத்துவிடுகிறது. ஆனாலும் அஜித்திடமிருந்து தப்பித்துவிட்ட சந்தோசம் அதில் கண்ணில் தெரிகிறது.

அஜித் கோபமாகிறார். கொந்தளிக்கிறார். (ஏன்னா, கழுதை செத்தபிறகு அந்த zoo வேற கழுதை வாங்கல, அந்த கூண்டுக்கு ஒரு காண்டாமிருகத்த கொண்டுவந்திடுச்சு. மக்கள் நிறைய பேரு வாரதால அஜித்தால நிம்மதியா தூங்கமுடியல)
கழுதையின் சாவுக்கு காரணமாயிருந்த அந்த அப்பரண்டீஸ் டாக்டர், அவரோட வந்த கம்பவுண்டர்ஸ் அப்படீன்னு எல்லாத்தையும் கழுதை family (கழுதை, குதிரை. ஒட்டகம், வரிக்குதிரை, ஒட்டசிவிங்கி. இதில் ஒட்டகசிவிங்கி மேக்கப் போடுவதற்கு அமேசான் காடுகளிலிருந்து ஆதி வாசிகளை கூப்பிட்டு வரலாம் என்ற யோசனை இருக்கிறது!) வேசம் போட்டு பழிவாங்குகிறார்.

பிறகு கமுக கட்சி ஆரம்பிக்கிறார். தேர்தலில் நின்று வெற்றியும் பெறுகிறார்.

(இவை அனைத்தும் ஒரே தீம் சாங்.

வெற்றிக் கொடி கட்டு
கழுத முதுகில துணி கட்டு” ன்னு ஏதாவது தத்து-பித்துன்னு வைரமுத்துவிடம் கேட்டு வாங்கிவிடலாம்.)

ஹீரோயின் என்ன ஆனார்? மூனு பாட்டுக்கு ஆடினாங்கல்ல அது போதும். ஒரு பாட்டுக்கு யாராவது லத்தீன பாடகரைக் கூப்பிட்டு “கழா கழா கழா நீ தானே கோவேரி கழா” ன்னு பாடச்சொல்லலாம்.
அகராதி: கழா – கழுதை செல்ல பெயர்.

யாராவது கால்ஷீட் வாங்கிக்கொடுங்கப்பா!

மனிதர்களின் உண்மையான குணாதிசயங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தான் உணர்ந்து கொள்ள முடியும்

உண்மை. முற்றிலும் உண்மை. என்னுடைய physics வாத்தியார் சொல்லுவார் : ஒரு மாணவனின் உண்மையான குணங்களை அறிய வேண்டுமென்றால் அவனை அவனது நெருங்கிய தோழர் வட்டாரத்தில் விட்டுப்பார்க்கவேண்டும் என்பார். மிகவும் அமைதியான மாணவன் கூட சந்தர்ப்பம் கிடைக்கும் போது குணங்களை மாற்றிக்கொள்கிறான். liberalize ஆகிறான். liberation : break all rules.

நான் பெரும்பாலும் நெகடிவ் சமாச்சாரங்களை மனதிலே வைத்து, அந்த நெருப்புக்கு நெய் ஊற்றுபவன் அல்ல (போதும்டா உன் புகழபுராணம்!) ஆனால் இளாவின் இந்த கேள்வி எனது மனதின் ஆழத்தில் புதைந்திருந்த ஒரு சம்பவத்தை மேலெழுப்பி விட்டது. நண்பர்களின் உண்மை குணங்களை நான் அறிந்து கொண்டது அப்போதுதான். உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை என்ற வரியை ஞாபகப்படுத்துவது. நாம் அனைவரும் தனித்தனியே தான். யாரும் யாரையும் சார்ந்தவர்கள் அல்ல. சந்தர்ப்பம் கிடைத்தால் உறவுகளை (நட்பையும்) முறித்துக்கொள்ள சிறிதும் சஞ்சலப்படாதவர்கள். எனினும் நான் அந்த சம்பவத்தை சொல்ல விரும்பவில்லை.

இன்னொரு சம்பவத்தை சொல்கிறேன். நான் கல்லூரி படிக்கும் போது எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சொல்லப்போனால் அவன் தான் கல்லூரியில் எனக்கு முதல் நண்பன். கல்லூரியை விட்டு வரும் வரையில் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள். முந்தாநாள் அவனது பிறந்த நாள். நான் வாழ்த்து கூட சொல்லவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை.

கல்லூரி காலங்களில் paper presentation என்றொரு நிகழ்வு பல வெளி கல்லூரிகளில் நடக்கும். அந்த விழாவிற்கு நாங்கள் apply பண்ணுவோம். எங்களிடம் virtual reality and education என்றொரு அருமையான article இருந்தது. எந்த கல்லூரி paper presentation க்கு அனுப்பினாலும் கண்டிப்பாக தேர்வாகிவிடும். அப்படியிருக்க, என்னுடைய நண்பன் (ராஜன்: பெயரை மாற்றியிருக்கிறேன்) திருச்சிக்கே அனுப்புமாறு சொல்லிக்கொண்டேயிருப்பான். இரு முறை நாங்கள் presentation க்கு திருச்சி சென்று வந்தோம். இதைப் பற்றி வேறு எண்ணங்கள் எனக்கு இருந்ததில்லை. நான் யோசிக்கவும் இல்லை.

அப்புறம் தான் தெரிந்தது அவனுக்கு திருச்சியில் ஒரு காதலி இருந்தாள். அவள் அவனுக்கு அத்தை பெண் தான். நம்மூரில் தான் யாருடனும் அனுசரித்துப் போவோம், இரத்த பந்தகள் சொந்தகளுடன் கண்டிப்பாக அனுசரித்துப் போக மாட்டோமே, வழக்கம் போல அவனுடைய வீட்டுக்கும் அவளுடைய வீட்டுக்கும் சண்டை. ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் கடல் போல கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. நான் அவளுக்கு அண்ணனானேன்.

இருவரும் திருச்சியில் எல்லா இடமும் சுற்றியிருக்கிறார்கள். முக்கியமாக they loved each other and infact he knows about his mother. அவனுடைய அம்மா அவனது காதலுக்கு கண்டிப்பாக ஓகே சொல்ல போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இவன் காலேஜ் முடித்தான். அவளும் காலேஜ் முடித்தாள். அவள் வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். அவள் இவனை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினாள். இவன் அவளை பொறுத்திருக்குமாறு கூறினான். அவள் எவ்வளவு காலம் பொறுத்திருப்பாள்? நம் நாட்டில் பெண்ணிற்கு என்ன உரிமை -பல சமயங்களில் ஆணுக்கே இருப்பதில்லை என்பது வேறு விசயம்- இருக்கிறது? அவள் இவனை வற்புறுத்த வற்புறுத்த இவன் மறுக்க ஆரம்பித்தான். அவள் போன் கால்களை அட்டென்ட் செய்யாமல் அவளை மனதளவில் சாகடித்தான். அவள் என்னைத் தொடர்பு கொண்டாள். அண்ணா, அவனிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றாள். நான் அவனிடம் கேட்டதற்கு அவன் சொன்ன பதில்: வீட்ல ஒத்துக்க மாட்டாங்கடா.

புல்ஷிட். வீட்ல ஒத்துக்காதது முன்னமே தெரியாதா? அவளோடு கை கோர்த்து நகர் வலம் வரும்போது இது தெரியாதா? காதலித்தாயா இல்லையா? காதலிக்கும் வரை காதலித்து விட்டு கடைசியில் நெருக்கடி வரும் போது, இனி வேறு வழியில்லை என்று வரும் போது, வீட்ல ஒத்துக்கமாட்டாங்கன்னு காரணம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

பெற்றோருக்காக தூக்கியெறியப்பட்ட காதல்கள் கணக்கிலடங்காமல் காற்றில் சுற்றித் திரிகின்றன. பெற்றோர் தூக்கியெறிந்த காதல்களும் அந்தரத்தில் மோட்சமற்று பிசாசாய் திரிகின்றன. பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட பெற்றோர்களின் மீதான காதல்களும் போவதற்கு வழி தெரியாமல் ஒரு செக்கு மாட்டைப் போல பிள்ளைகளையே சுற்றி சுற்றி வருகின்றன. ஏன் இத்தனை கஷ்டங்கள்? நமக்கு நாமே பூட்டிக்கொண்ட அர்த்தமற்ற தேவையில்லாத விலங்குகளை என்று அவிழ்த்தெரியப் போகிறோம்? எப்போது நமக்கு விடுதலை?

பெற்றோரின் மீது நாம் வைத்திருக்கும் பாசமும் மரியாதையையும் போன்று, நம்மிடம் பெற்றோருக்கு பாசமும் அன்பும் இருக்கிறதா இல்லையா? நாம் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் போது, அவர்கள் நமது உணர்வுகளை மதிக்கமாட்டார்களா என்ன? மதிக்கவில்லை என்றால் பிறகு அன்பென்ன பாசமென்ன? வரட்டு பிடிவாதம் தானே இருக்கிறது.

இதை தவறு என்றும் சரி என்றும் நான் சொல்லவில்லை. சொல்வதற்கு நான் யார்? ஆனால் மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி என்பது மட்டும் உண்மை.

பேச்சுத்தமிழில் எழுதும் பதிவர்களைப் பற்றி:

பொறாமை. பேச்சுதமிழில் எழுதுவது என்பது மிகவும் கஷ்டம். அனால் successfull ஆக எழுதினால் எளிதாக ரீச் ஆகும். முக்கியமாக நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும். ஆனால் நான் அருமையான தமிழில் பதிவிடுகிறேன் என்பது, வேறொன்றுமில்லை, கண்டிப்பாக உள்குத்து தான். எனக்கு சில சமயங்களில் பேச்சுத்தமிழில் எழுதியதைப் படிப்பது எரிச்சலாக இருக்கும். குறிப்பாக ஜெயமோகனின் காடு நாவல் மற்றும் அவரது சில சிறுகதைகள். நெல்லை தமிழில் கேரள வாடை அடித்து மம்முட்டி படம் பார்த்த அனுபவமே மேலிடுகிறது.

ஜெகத் எழுதிய நடை பற்றிய பதிவு நான் சமீபத்தில் ரசித்துப் படித்தேன். நன்றாக சிரித்தேன். கோணங்கி பற்றிய இதே போன்றதொரு விமர்சனத்தை சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்களிலும் படிக்க நேர்ந்தது. மேலும் பயங்கர ஹிட் ஆன வீராசாமி பற்றிய விமர்சனமும் வயிறு வலிக்க வைத்தது.

இனி நிர்மலுக்கான கேள்விகள்:

1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை?

2. புரியவே புரியாத கவிதைகளை கண்டிப்பாக எழுதித் தானாக வேண்டுமா? இப்பொழுது கதைகள் கூட புரியாத அளவுக்கு எழுதுகிறார்களே, இது தேவைதானா? மேலும் பெண்ணியம் என்ற பெயரிலும் எதார்த்தம் என்ற பெயரிலும் சொல்லவே நா கூசும் அளவுக்கான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவது அவசியம் தானா?

3. உண்மையைச் சொல்லுங்கள் திரிஷா அழகு தானே?

4. காவிரிப் பிரச்சனைக்கு என்னதான் வழி? நதிகளை நாட்டுடைமை ஆக்கலாமா?

5. உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினால் -of course you can act independently!- என்ன செய்வீர்கள்?

வாய்ப்பளித்த இளாவுக்கு நன்றிகள் பல!
Pass to நிர்மல்.

இளாவின் சுடர் :http://ilavanji.blogspot.com/2007/02/blog-post.html

மறு-காலனியசம்

“மும்பை நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 35,000 ஏக்கர் நிலத்தை ரிலயன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அங்கே அவர்கள் ‘மகா மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்தை’ (Special Economic Zone-SEZ) தொடங்க உள்ளனர். அந்த நிலப்பரப்பில் உள்ள 43 கிராமங்கள் பெயர்த்தெறியப்பட உள்ளன. நவீன மும்பையைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. நல்ல பருவ மழையும், தடையற்ற விவசாயமும் அவர்களின் வாழ்வைக் காத்து வருகிறது. சந்தை விலை ஏக்கருக்கு 25-30 லட்சம் வரை இருக்க, வெறும் 3-4 லட்சம் ரூபாய் கூட அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. அந்த கிராமத்தினர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மகாராஸ்டிரா அரசு வாலை ஆட்டிக்கொண்டு அம்பானி சகோதரர்களின் காலடியில் கிடக்கிறது. பல மாநில முதல்வர்கள் அம்பானி சகோதரர்களின் கண்ணில் படும் படியாக வாலை ஆட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். நிலத்திற்குப் பதிலாக ரொக்கப்பணம் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருந்தாலும், அவைகளை மீறுவதில் பல மானில அரசுகளுக்கு தனிப்பட்ட ஆர்வம் தான். இந்த பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு நில பேரத் தரகர் வேலை பார்ப்பது (Real Estate Broker) பல மாநில அரசுகளுக்கு விருப்பப் பணியாக மாறி விட்டது.”

அ. முத்துகிருஷ்ணன், “குருவும் இசைவான முதலீட்டுச் சூழலும்” என்ற கட்டுரையிலிருந்து.

சரி,SEZ என்றால் என்ன? அவரது எழுத்துக்களிலே:

நம் நாட்டு எல்லைக்குள் சில பகுதிகளைக் கையகப்படுத்தி அதன் எல்லைகளை வரையறுக்கிறார்கள். அங்கே பெரும் நிறுவனங்கள் எந்த துறை சார்ந்தும் தொழில் தொடங்கலாம். மென்பொருள் நிறுவனங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கேளிக்கைப் பூங்காக்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், அங்காடிகள் என தன்னிறைவு பெற்ற பகுதியாக அது திகழும். அந்த துணை நகரம் ஐரோப்பா, அமெரிக்க சாயலோடிருக்கும். அந்த எல்லைக்குள் இந்திய அரசாங்கத்தின் எந்த சட்டமும் செயல்படாது. தொழில் துறைச் சட்டங்கள், சுங்க வரி, விற்பனை வரி, மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் என இது போன்ற ஆயிரக்கணக்கான விதிமுறைகள் நடைமுறைகள் எல்லாம் அங்கே எட்டிக்கூட பார்க்க முடியாது. SEZகளின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படவிருக்கும் வரி இழப்பு சுமார் 90,000 கோடி. இதை அரசாங்கம் Tax Holiday என்று செல்லமாக அழைக்கிறது.

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல்:
இந்த நிலப்பரப்பு வெளிநாட்டுத் தூதரகம் போலத்தான் கருதப்படுமாம். வருங்காலத்தில் SEZகளுக்குள் நுழைய விசா, பாஸ்போர்ட் தேவைப் படலாம். Like East India Company’s Private Cities? அதனால் தான் இப்பொழுது பல developing countriesக்கு வந்து இறங்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை, மறுகாலனியிசம் என்று கொஞ்சம் பயத்தோடு அழைக்கிறார்கள். இது ஒரு புதுவகையான சுரண்டல். புதுவிதமான அடிமைத்தனம். Dependency. கொஞ்சம் கொஞ்சமாக நாம் அவர்களது எக்கானமியைச் சார்ந்து வருகிறோம். இந்த சுரண்டலிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நாம் -Indian Based Companies, software,hardware,bio-technology or anything- சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, தொலைநொக்குப் பார்வையோடு பல புதிய பயனுள்ள products கண்டுபிடிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் மற்றநாட்டினருக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருப்பது? இன்போசிஸ், விப்ரோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக கனிசமான தொகையை செலவு செய்யவேண்டும்.

SEZஇன் disadvantages:
1. மிகச்குறைந்த -அடிமாட்டு- விலையில் நிலங்களைக் கையகப்படுத்துதல்
2. வரிவிலக்கு தவறாக பயன்படுத்தப்படுதல்
3. யாரோ வெகு சிலரின் கொள்ளை லாபத்துக்காக, வேறு யாரோ வரி கட்டுவது.

இந்த முயற்சி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் சிறு ஐயப்பாடும் இல்லை. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த பணம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கே போதாது என்கிறது ஒரு கட்டுரை. அப்படித்தானே இருக்கிறது. இன்று மதுரையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு குழந்தையைப் படிக்க வைக்க ஒரு quarterக்கு இருபதினாயிரம் ரூபாய் கேட்கிறது ஒரு பள்ளி. என் நண்பர் ஒருவர் சொன்னார்: நானெல்லாம் எனது மொத்த படிப்புக்கே (MCA வரையில்) அவ்வளவு தான் செலவழித்திருக்கிறேன்.

மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு விசயம் : வரி விலக்கு. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பெரிய ஐந்து மென்பொருள் நிறுவனங்கள் ஆயிரம் கோடி வரிவிலக்கு பெறுகின்றன. இவை கடந்த பத்து வருடங்களாக வரிவிலக்கு பெறுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும் இந்த நிறுவனங்கள் தங்கள் வரி விலக்கை நீட்டித்துக்கொள்ள SEZக்குப் படையெடுக்கின்றன.

இவ்வாறான சலுகைகள் ஒட்டுமொத்த எக்கனாமிக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை. ஒரு சிலரின் கைகளிலே தான் பணம் மேலும் மேலும் குவிய வாய்ப்பாக இருக்கும் (பிறகு அவர்கள்,நமது அரசாங்கத்திற்கே சட்டங்கள் இயற்றுவார்கள் இல்லியா?) என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதற்கு அமெரிக்காவே சிறந்த எடுத்துக்காட்டு!

கஷ்டப்பட்டு அன்றாடத் தேவைகளுக்காக உழைக்கும் மிகச்சாதரண – இன்னும் அடித்தட்டிலே இருக்கும் -மக்களே வரி கட்டிக்கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கோடிகளில் புரளும் இவர்களுக்கு ஏன் வரிவிலக்கு? இவர்கள் (பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்) சம்பாதித்து அருகில் இருக்கும் கிராமங்களையாவது முன்னேற்றினார்களா? பெங்களூருக்கு அருகிலிருக்கும் – IT revolution ஆல் எந்த பாதிப்பையும் காணாமல், இன்னும் அப்படியே எவ்வித வளர்ச்சியும் இல்லாத – கிராமங்களைப் பற்றிய documentary ஒன்றை BBC ஒளிபரப்பினார்கள்.

ஒரு infra-structure development ஏற்படும் போது அந்த பகுதியிலிருக்கும் நிலங்களைக் கையக்கப்படுத்துவது வழக்கம் தான். அதை எதிர்ப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதும் உண்மையே. உதாரணத்துக்கு நேஷனல் ஹைவேய்ஸ் (Nationa Highways) அகலப்படுத்தும் போது ரோட்டின் மிக அருகில் இருக்கும் வீடுகளும், தொழிற்சாலைகளும், பல கட்டிடங்களும் இடிக்கப்படுவதும், கையகப்படுத்தப்படுவதும் இயல்பே, அதற்கு அரசு கொடுக்கும் சொற்ப பணத்துக்குக்கூட ஏதோ நியாயம் கற்பிக்களாம், ஆனால் கோடிகளில் புரளப்போகும் (ரிலயன்ஸ் போன்று ஏற்கனவே கோடிகளில் புரளும்) மக்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் போது நிலத்துக்காக ஏன் நியாயமான (மார்கெட் நிலவரப்படி) தொகை கொடுக்கக்கூடாது?

மென்பொருள் நிறுவனங்களால் தான் பல இளைஞர்கள் தங்களது குடும்பத்தை ஒரே ஜெனரேஷனில் முன்னேற்றியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டுதானாக வேண்டிய சூழ்நிலையில், அந்த வள்ர்ர்சி மற்றவர்களின் தலையில் இடியாக இறங்கக்கூடாது அல்லவா? ஒரு நாடு வாழ ஒரு கிராமத்தை அழிக்கலாம் என்று டுபாகூர் வசனம் பேசினால், ஒரு கிராமம் இல்லையப்பா, நாற்பத்திமூன்று கிராமங்கள்! நாற்பத்திமூன்று.

links:

http://sezindia.nic.in/
http://en.wikipedia.org/wiki/Special_Economic_Zone
http://www.hindu.com/2006/09/28/stories/2006092808341200.htm
http://www.indiantaxsolutions.com/main.php?t=28011984&d=1152598537

Thanks : உயிர்மை