சவரக்கத்தி – ஒரு நிமிட பார்வை

மிஷ்கினின் லேட்டஸ்ட் படம். ஆனால் இதில் டைரக்டரில்லை. நடிகன்.அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்த அவரது தம்பி ஆதித்யா படத்தை இயக்கியிருக்கிறார். மிஷ்கின் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார். ஆனந்த யாழை மீட்டிய ராம் மீண்டும் நடிகராகியிருக்கிறார். காணாமல் போன பூர்ணா ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அஜல் குஜால் சாரி அரோல் கொரலி இசை அமைத்திருக்கிறார்.

ஓகே. மங்காவுக்கு இன்றோடு – மாலை ஆறு மணியோடு – பரோல் முடிகிறது. மீண்டும் ஜெயிலுக்குப் போக வேண்டும். டென்சனாக இருக்கிறான். மறுபடியும் அந்த நரகத்திற்குள் போக வேண்டுமே என்கிற ஆத்திரம் இருக்கிறது அவனுக்கு. பொதுவாகவே மங்கா ஆத்திரக்காரன். தாய் இறந்துவிட்ட பிறகு தாய்மாமனே மங்காவை வளர்க்கிறார். தாய்மாமன் கூடவே இருந்து மங்கா பைத்தியக்காரன், ஏதாவது செஞ்சு ஜெயில் தண்டனையை கூட்டிக்கப்போறான் என்று அவனைப் பாதுகாத்து எப்படியாவது எந்த வித அசம்பாவிதமும் சண்டையும் இல்லாமல், மாலை ஆறு மணிக்கு ஜெயிலில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மங்காவோ நிஜ பைத்தியக்காரன். தாய்மாமனிடம் நீ கக்கூஸ் போறத இன்னொருத்தன் பாத்திருக்கானா, ஜெயில்ல பாப்பான்னு சொல்றான். சூப்பர் டயலாக். அதனால் ஐயோ மீண்டும் போய் அடைபடப் போகிறோமே என்கிற வெறி வேறு. மாமா என்ன கெஞ்சினாலும் காதில் விழமாட்டேனென்கிறது. வெளில போகலாம் என்று காரில் கிளம்புகின்றனர். பிச்சை ஒரு பார்பர். இரண்டு பிள்ளைகள், மனைவியின் வயிற்றில் இன்னொன்று. நிறை மாதம். மனைவியின் தம்பி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப்போகிறான், கையெழுத்து போட்டுட்டு வாழ்த்திட்டு வருவோம் வாங்க என்று மனைவி அழைத்ததும், தன் ஓட்டை ராஜ்தூத்தில் கம்பீரமாக இரண்டு பிள்ளைகளுடனும் நிறைமாத மனைவியுடனும் ஒரே பைக்கில் செல்கிறார். இவர் டீ நகர் ட்ராபிஃக் போலீஸ்கிட்ட மாட்டிக்கொடுத்திருக்கனும், இவரு கைய முறிச்சு, மனைவியை கீழ தள்ளி ரோட்லயே பிள்ள பெற வெச்சு, ரெண்டு பிள்ளைகளோட கால உடச்சு, கடைசில இவரையே ஜெயில்ல போட்ருப்பாங்க. மங்காவும் பிச்சையும் ஒரே ஜெயில்ல இருந்திருப்பாங்க. ஹூம். ஆனா பிச்சையின் ராஜ்தூத்தில் மங்காவோட கார் மோதிவிடுகிறது. பிச்சை கண்டபடி எல்லோரையும் திட்டிவிடுகிறார். ஓங்கி அடித்தும் விடுகிறார். அடித்தாரா இல்லியா என்பது லெஜண்ட். மங்காவின் முகத்தில் ரத்தம் வர, உடன் இருப்பவர்கள, அடிவாங்குனவனுக்கே இவ்ளோ ரத்தம் வருதே, அடி கொடுத்த கைப்பிள்ளையை சும்மா விடலாமா என்று ஏற்றிவிட, தாய்மாமா டேய் மங்கா அவன் அடிக்கலடா என்று வாதிட, மங்கா அடித்தவனின் கையை வெட்டாமல் மாலை ஜெயிலுக்குள் போகமாட்டேன் என்று சபதமெடுக்கிறார். பிச்சையின் கதியும் அவரது குடும்பத்தின் கதியும் என்னானது? மங்கா மாலை பரோலை முடித்து ஜெயிலுக்கு போனானா? பிச்சையின் மச்சானின் கல்யாணம் நடந்ததா? படம் முடியும் போது உங்களுக்கு தலைவலி வந்ததா? மீதியை படம் பார்த்து கதை தெரிஞ்சுக்கவும்.

ராமும் மிஷ்கினும் பொருத்தமாகவே இருந்தனர். பூர்ணா கொஞ்சம் ஓவர் ஆக்ட் ஆனால் படத்தின் காமெடி மூடுக்கு செட்டானார். படத்தை ப்ளாக் காமெடின்னு சொல்றாங்க. மிஷ்கின் கொஞ்சம் கறுப்பா இருக்கறதனாலேயும் கொஞ்சம் காமெடி இருக்கிறதாலேயும் அப்படி சொல்லிருப்பாங்களோ. டீக்கடையில் ராஜ்தூத் மாடல் நம்பர் கேக்கும் இடம் மட்டுமே குபீர். மற்றபடி கபீர். (ஒரு ஃப்லோல வந்திருச்சு)

ஆனால் கடைசிக்காட்சியில் குழந்தை அழும் சத்தம் கேட்ட உடன் பழைய பாரதிராஜா படத்தில ஹீரோயின் அப்படியே ஸ்டில்லக்கொடுத்து நிக்கிற மாதிரி ரெண்டு பேரும் அப்படியே கெடப்பதெல்லாம் ரணகளம். நான் என்னவோ ப்லிம் சிக்கிக்கிருச்சோன்னு நெனச்சேன். அரோல் கொரலியின் இசையில் மிஷ்கினே பாடியிருக்கும் தங்ககத்திபாட்டு செம என்று சொல்ல ஆசைதான். தம்பி படம்ங்கறதால ஓவர் அட்ராசிட்டியா இருக்கு. ஸ்மியூல்ல பாடி பழகியிருப்பாரோ? ஒய் பாஸ்?

படத்திலேயே எனக்கு பிடிச்ச கதாப்பாத்திரம் தாய்மாமாதான். சூப்பர் காஸ்டிங்.

இன்னும் பாக்கலீன்னா, பாருங்க. மெர்சல்லாம் பாத்தீங்கல்ல? அப்ப இதப் பாக்கலாம்.

நாச்சியார் – ஒரு நிமிட பார்வை

நாச்சியார்

பாலாவின் படம். அப்படியா என்ன? இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஜோவுக்காகவா, ஜீவிக்காகவா அல்லது நமக்காகவா? ஒரு சீன் கூட சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

பொருளாதாரத்தின் அடிதட்டில் தினக்கூலி வேலை செய்யும் ஒரு இளைஞன். அதே போன்றொதொரு நிலையில் ஒரு சிறிய பெண். மைனர் பெண். இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒரு எதிர்பாராத சந்திப்பில் அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வீட்டில் வைத்து இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அந்தப் பெண் கருவுருகிறாள். மைனர் பெண்ணைக் கெடுத்த குற்றத்திற்கு பையனை போலீஸ் கைது செய்கிறது. ஜோ கேஸுக்குள் எண்ட்ரி. டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்ததில் அந்தப் பையனுக்கும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. பிறகு யார் காரணம்? அந்தப் பெண்ணிற்கும் அந்தப் பையனுக்கும் இந்த விஷயம் தெரிந்ததா? அந்தப் பையன் ஏற்றுக் கொண்டாரா? போன்ற அதிபயங்கர அதிநவீன முடிச்சுகளை பால அவிழ்த்தாரா?இல்லை ஜோ கண்டுபிடித்தாரா என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

கெட்ட வார்த்தை பேசும், யாரையும் மதிக்காத எல்லோரையும் தூக்கிப் போட்டு மிதிக்கும் போலீஸாக ஜோ. போலீஸே சட்டத்தை மதிக்கலேன்னா பொது ஜனம் எப்படி மதிக்கும்? மேகம் கருக்குது பாடல் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அந்த ஜோவா இது என எனக்கும் கேட்க ஆசை தான். ஆனால் அதே ஜோ தான். ஜீவி? அனுராக் காஷ்யப் கூப்பிட்டிருக்கிறாராமே? ஆனால் பரவாயில்லை கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துபவர் அந்தச் சிறிய பெண் இவானா தான். துப்பறியும் கதையில் படம் பார்ப்பவர்களை குழப்புகிறேன் என்று அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டின் ஓனர் போலிஸையும் இழுத்து விட்டிருப்பது காமடி. ப்ரீ க்ளைமேக்ஸில் ஜோ வழங்கும் தண்டனை திகில் என்று சொல்ல ஆசைதான். க்ளைமேக்ஸ் அர்ஜுன் ரெட்டி க்ளைமேக்ஸை விட பெரிய காமெடி.

வேறு வேலை இல்லையெனில் இன்னும் பார்க்காதவர்கள் பார்க்கலாம்.

ஆமாம் படத்திற்கு ஏன் நாச்சியார் என்று பெயர்?

அலெக்சா, நீ என்ன ஒட்டுக் கேட்கிறாய்?

அமேசான் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அலெக்சா – டிஜிட்டல் உதவியாளர் – பற்றிய விளம்பரம் அது. அலெக்சாவுக்கு குரல் போய்விட்டது. தற்காலிகமாகப் பேச முடியவில்லை என்பது போன்ற சித்தரிப்பு. நிறைய பிரபலங்கள் இந்த விளம்பரத்தில் நடித்திருந்தனர் – அமெசானின் சீ ஈ ஓ ஜெஃப் பெஸோஸ் உட்பட.

அந்த விளம்பரம் அலெக்சா என்ன பேச முடியும் என்பதைப் பற்றியதாக இருந்தாலும் – நிறைய டிஜிட்டல் உதவியாளர்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் நம் வீட்டிற்குள் வந்துவிட்ட இந்தக் கால கட்டத்தில், முக்கியமான கேள்வி, அலெக்சாவால் நாம் பேசுவதிலிருந்து என்னவெல்லாம் ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்பதே.

அமெசானும் கூகுளுமே இன்றைய நிலையில் இது போன்ற சாதனங்கள் விற்பனையில் முன்னோடியாக இருக்கின்றன. அவர்கள் சொல்வது என்னவென்றால்: நீங்கள் “ஹே அலெக்சா” என்றோ “ஓகே கூகுள்” என்றோ சொன்ன பிறகே, நீங்கள் பேசுவதைக் கேட்டுப் பதிந்து கொள்ள ஆரம்பிக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் விண்ணப்பித்துள்ள – பெரும்பாலும் நிலுவையிலுள்ள – காப்புரிமைகள் (patent) இந்த மாதிரியான சாதனங்கள் நம் பேசும் பேச்சுக்களையும் செய்யும் செயல்களையும் கண்காணிக்கவும் கேட்கவும் முடியும் என்று அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவ்வாறு சேகரிக்கபடும் விசயங்களால், அந்த நபர்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் கண்டுபிடித்து, பிறகு அதை விளம்பரங்களுக்கும், அந்த நபர்கள் வாங்குவதற்கு பொருட்களைப் பரிந்துரை செய்யவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு காப்புரிமை விண்ணப்பத்தில் அமெசான், தனது குரல் தெரிவு அல்காரிதத்தை எப்படி டேப்லட், ஈ புக் ரீடர்ஸ் (கிண்டில்?) போன்றவற்றில் பயன்படுத்தி, அதை பயன்படுத்துபவர்கள் பேசுவதை லைவ்வாக கண்காணித்து, அவர்கள் love, bought, like போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் பொழுது பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை எப்படி ஆய்வு செய்து அந்த டேட்டாவைப் பயன்படுத்தும் என்று விவரித்திருக்கிறது. அந்த விண்ணப்பத்தோடு இணைக்கப்பட்ட ஒரு வரைபடத்தில் எப்படி இரு நண்பர்களுக்குள்ளான தொலைபேசி உரையாடலின் முடிவில் ஒருவர் சான் டியாகோ ஜூவுக்கு டிக்கெட்டுக்கான அஃபரையும் மற்றொருவர் மதாந்திர வைன் க்ளப் மெமர்ஷிப்பிற்கான விளம்பரத்தையும் காண்பார்கள் என்று விவரித்திருக்கிறது.

கூகுளின் (ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் தயாரிக்கும் நெஸ்ட் லேப்ஸின் உரிமையாளர்) சில காப்புரிமை விண்ணப்பங்களில் இவ்வாறு சொல்கிறது: ஒலிகளை மானிட்டர் செய்வதன் மூலம் ஒரு குழந்தையை அது செய்யும் சேட்டைகளைக் கண்கானிக்க முடியும் என்கிறது. பேச்சை வைத்து முதலில் குழந்தை இருக்கிறது என்று கண்டுபிடித்து பிறகு பேசுகிற தொனியை வைத்து எச்சரிக்கை கூட செய்யமுடியும் என்கிறது.

வேறு ஒரு விண்ணப்பத்தில் தனி நபர்களுக்கு தகுந்தார்போல தகவல்கள் தரும் நோக்கில் பேசுபவரின் மனநிலையை “அவருடைய பேச்சின் சத்தத்தை வைத்தும், அவர் சுவாசத்தை வைத்தும், அழுகையை, இன்னும் பிறவற்றை வைத்தும்” பேசுபவரின் உடல் நலத்தை “அவர் இறுமுகிறாரா தும்முகிறாரா போன்றவற்றை வைத்து” கண்டுபிடிக்க முடியும் என்கிறது.

அதே விண்ணப்பத்தில், ஒரு நபரின் வீட்டில் கீழே கிடக்கும் டீ சர்ட்டில் இருக்கும் வில் ஸ்மித்தின் படத்தை கண்டுகொண்டு அந்த நபர் வில் ஸ்மித்தை இணையத்தில் தேடிய வரலாறை வைத்து, “இந்தாப்பா தம்பி, உனக்கு வில் ஸ்மிதைப் பிடிக்கும் போலத் தெரியுது, உங்க பக்கத்து தேட்டர்ல புதுசா வில் ஸ்மித் படம் ஓடிட்டிருக்கு, ஓடிப் போய் பாரு” என்று சொல்ல முடியும் என்கிறார்கள்.

அமசானும் கூகுளும் எங்களுக்கு வாடிக்கையாளர்களின் ப்ரைவசி முக்கியம், அவர்களின் ப்ரைவசியே முக்கியம் என்று சொல்லி வருகின்றன.

ஆப்பில் தன் பங்குக்கு ஹோம் பாட் என்கிற வஸ்துவை அறிமுகம் செய்திருக்கிறது. ஃபேஸ்புக் இந்த மே மாதத்தில் இது போன்ற ஒரு வஸ்துவை அறிமுகம் செய்யலாம் என்று ப்ளூம்பர்க் சொல்லுகிறது.

கூகுளும் அமசானும் இந்த சாதனங்களைப் பயன் படுத்துவோரின் அனுமதியின்றி (அவர்கள் கூப்பிட்டோ அல்லது பட்டனை அமுக்கியோ) எதையும் பதிவு செய்ய மட்டோம் என்கிறது. மேலும் பதிவு செய்ததை இணையத்துக்கு அனுப்பும் பொழுது (streaming) லைட் எரிந்து கொண்டிருக்கும் அதனைப் பார்த்து நீங்கள் உஷாராகிக்கொள்ளலாம் என்கிறது. மேலும் இணையத்தில் இருக்கும் பதிவுசெய்யப்பட்ட குரல்களை நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் டெலீட் செய்யலாம் என்றும் கூறுகிறது.

அமசான் நாங்கள் ஒரு போதும் பதிவுப் செய்த பேச்சுகளை வேறு கம்பெனிகளுக்கு கொடுக்க மாட்டோம் என்கிறது. கூகுள் பொதுவாக உங்கள் பேச்சுகளை நாங்கள் வேறு கம்பெனிகளுக்கு கொடுக்க மாட்டோம் ஆனால் எழுத்து வடிவத்தில் கொடுப்போம் என்கிறது.

The Electronic Privacy Information Center, இணையத்தில் இணைந்திருக்கும் சாதனங்களுக்கு இன்னும் கடினமான விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்கிறது. தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன, சேகரிக்கப்பட்ட தகவல்களை எப்படி ஆய்வு செய்கின்றனர் என்பதையும் ஆய்வின் முடிவை எப்படி எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தெளிவாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறது.

ரப்பர் பொம்மைகளில் சேரும் தண்ணீரில் நுண்ணுயிர்கள்

உங்கள் குழந்தைகளின் குளியல் நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமான அந்த அழகிய வாத்து பொம்மைக்குப் பின்னால் ஒரு அசிங்கமான உண்மையிருக்கிறது. குழந்தைகள் இந்த பொம்மையை வாயில் வைத்து விளையாடுவார்கள். உள்ளே தேங்கியிருக்கும் தண்ணீரை மற்ற குழந்தைகளின் மீது பீய்ச்சி அடித்தும் விளையாடுவதுண்டு.

ஆனால் உள்ளே யக்கியாக ஏதோ ஒன்று இருக்கிறது – அது பெரும்பாலும் கண், காது மற்றும் வயிற்றுக் கோளாறு ஏற்படுத்தும் பாதோஜெனிக் பாக்டீரியாவாக இருக்கும்.

அமெரிக்க மற்றும் சுவிஸ் விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் இந்த மாதிரியான ரப்பர் பொம்மைகள் நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கும் என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.

ஐந்தில் நான்கு பொம்மைகளிலிருந்து வெளியேறும் தண்ணீரைச் சோதித்துப் பார்த்தபொழுது Legionella பாக்ட்டீரியா அதிலிருந்தது. ஆராய்ச்சியாளர்கள் 19 விதமான பொம்மைகளைச் சோதித்துப் பார்த்ததில் வாத்து பொம்மையில் ஒரு செமீ ஸ்கொயர் பரப்பளவில் 75 மில்லியன் பாக்ட்டீரியாக்கள் இருந்தன. இது மிக மிக அதிகமான எண்ணிக்கை. ரப்பர் பொம்மையிலிருக்கும் பாலிமர் வெளியேற்றும் கார்பன், பாக்ட்டீரியாவுக்கு சத்துணவு.

ரப்பர் வாத்துகளை தயாரிப்பதற்கு விலை உயர்ந்த நல்ல தரமான பாலிமர்களைப் பயன் படுத்தினால் பாக்ட்டீரியா மற்றும் பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர்.

ரப்பர் பொம்மைகள் மட்டுமே வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் இல்லை. கடந்த வருடம் ஜெர்மனியில் நடந்த ஆராய்ச்சியில் கிச்சனில் பாத்திரம் கழுவ உபயோகப்படும் ஸ்பாஞ் கூட கிருமிகளின் கூடாரம் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட 14 அழுக்கான ஸ்பாஞ்களில் 350 வகையான பாக்ட்டீரியா இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதே அளவு அடர்த்தியுடன் பாக்ட்டீரியாக்களை மனிதக் கழிவுகளில் பார்க்கலாம். இந்த உலகில் வேறு எந்த இடத்திலும் இவ்வளவு அடர்த்தியாக பாக்ட்டீரியாக்களைப் பார்க்க முடியாது என்று மார்க்கஸ் ஈகர்ட் (Markus Egert) என்ற ஜெர்மானிய நுண்ணுயிரியல் விஞ்ஞானி கூறுகிறார்.

நமக்கும் நெருக்கமான இன்னொரு பொருள் இதே போல பாக்ட்டீரியாக்களைக் கொண்டிருக்கிறது: செல் ஃபோன்.

சராசரியாக ஒரு செல் ஃபோனில் எவ்வளவு பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்பது ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சி வெறுபட்டாலும், சராசரி செல் ஃபோனில் டாய்லட் சீட்டைவிட பத்து மடங்கு பாக்ட்டீரியாக்கள் இருக்கின்றன என்று 2012இல் அரிசோன பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிரியல் விஞ்ஞானி சார்லஸ் கெர்பா கூறுகிறார். மேலும் அவர் டாய்லட் சீட்டை விட அழுக்கான இடங்கள் வீட்டில் நிறைய இருக்கின்றன என்று கூறுகிறார்.

கொஞ்சமாவது சுத்தமான இடம் வீட்டில் டாய்லட் சீட்டாகத் தான் இருக்கும். பொதுவாக டாய்லட் சீட்டை விட 200 மடங்கு அதிகமான பாக்ட்டீரியாக்களை கட்டிங் போர்டில் பார்க்கலாம் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.

ரோபோட் மீன்

மீன் தான். ஆனால் உடம்பில் பேட்டரி இருக்கிறது. புளுக்கள் பிடிக்காது. 🙂

என்னை SoFiஐ அறிமுகம் செய்ய அனுமதியுங்கள். சோஃபி (Sophie) போல ஆனால் Soft Robotic Fish என்பதன் சுருக்கம். SoFi MIT விஞ்ஞானிகளால் அறிமுகம் செய்யப்பட்டது.

SoFi போன்ற ரோபோடிக் மீன்கள் கடல் வாழ் உயிரினங்களை மனிதன் ஏற்படுத்தும் அழிவிலிருந்தும் தட்ப வெட்ப மாற்றங்களினால் அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்களையும் பாதுகாக்க உதவும். ஒன்றரை அடி நீளம் உள்ள இந்த ரோபோட் மீன் ஒரு நொடிக்கு முக்கால் அடி நீளம் நீந்தக் கூடியது. மேலும் அறுபது அடி ஆழம் வரையும் நீந்தும். இது பயாலஜிஸ்ட்களுக்கு ஒரு மீனின் பார்வையில் மாறிக் கொண்டிருக்கும் கடல் வாழ் உயிரினங்களை லைவ்வாகக் காட்டும்.

எம் ஐ டி விஞ்ஞானிகள் டைவிங் மீதான காதலையும் ரோபோட்டிக்ஸ் மீதான காதலையும் ஒன்றிணைத்து இந்த ரோபோவை உருவாக்கியிருக்கின்றனர். தொடர்பு சாதனங்களை உருவாக்குவதுதான் கடினமான வேலையாக இருந்தது என்று குழுவின் தலைவர் ராபர்த் ஹட்ஸ்மேன் கூறுகிறார். தொடர்புக்கு பொதுவாக கேபில் வேண்டும், ஏனென்றால் ட்ரோனில் (பறக்கும் ரோபோட்டுகள்) பயன்படுத்தப்படும் ரிமோட் சிக்னல் தண்ணீரில் வேலை செய்யாது. ஆனால் ஒலி அலைகள் வேலை செய்யும்!

ஆராய்ச்சிக் குழுவினர் டைவருக்கும் (நீந்துபவர்) ரோபோட் மீனுக்கும் இடையே உயர் சுருதியில் ஒலி அலைகளை அனுப்பினர். ஒரு சிஸ்டம் அதை டீகோட் செய்து நீந்துபவருக்கு தகவல் அனுப்பும். SoFi இப்பொழுது நீந்திக் கொண்டிருக்கிறது என்று. அல்லது இருபது டிகிரி திரும்பவும் என்று SoFiக்கோ நீந்துபவரிடமிருந்து உத்தரவு கொடுக்க முடியும்.

வீடியோ பார்க்க இங்கே க்ளிக்கவும்.

மூன்றாம் பாலினரின் உரிமைகள்

மூன்றாம் பாலினரை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லும் சூழலை – பாடசாலைகள் ஆகட்டும் அல்லது அலுவலகங்கள் ஆகட்டும் – நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஏர் இந்தியாவின் பரிட்சையில் பாஸாகியும் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தன்னை ஏர் இந்தியா நிராகரித்து விட்டதாக தமிழ்நாட்டிலிருந்து திருநங்கை ஷானவி பொன்னுச்சாமி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஒரு மாதம் கழித்து சமூக நீதி அமைச்சகம் காபினட்டுக்கு திருத்தப்பட்ட மசோதாவை அனுப்பியது. அதில் பொதுத்துறையையும் பகுதி ஐந்தில் இணைத்தது. இந்த திருத்தம் வேலை வாய்ப்பு சம்பந்தமான எந்த விஷயத்திலும் – புதிய ஆள் சேர்க்கை, பதவி உயர்வு போன்றவை -பாகுபாடு கூடாது என்று சொல்லியிருக்கிறது.

Shanavi_Ponnusamy

ஷானவி பொன்னுச்சாமிக்கு நேர்ந்தது ஒன்றும் புதிதல்ல. திருநங்கைகளின் ஒவ்வொரு சின்ன வெற்றிக்குப்பின் ஒரு பெரிய நீண்ட வரலாறு இருக்கிறது.

இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு (ப்ரித்திகா யாசினி) நேர்ந்ததும் இதுதான். தமிழ்நாடு போலீஸ் ஆள்சேர்க்கைக் குழுவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த ஆர்டருக்கு அப்புறமே விஷயம் தீவிரமடைந்தது.

562088-yashini-k-prithika-040317

2016இல் நிறவேற்றப்பட்ட மூன்றாம்பாலினரின் உரிமை பாதுகாப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் பிறகே நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் மூன்றாம் பாலினருக்கான அலுவலகங்களுக்கான விதிகளையும், பல நல திட்டங்களையும் அறிமுகபடுத்தியது. மேலும் மூன்றாம் பாலின ஊழியர்களை மற்ற உழியர்கள் / முதலாளிகள் கேலி பேசியும் பிற வழிகளில் துன்புறுத்துவதையும் தடுத்து, அவ்வாறு செய்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அறிவுறுத்தியிருக்கிறது.

manabi

மனாபி பண்டோபதியே என்கிற திருநங்கை இந்தியாவின் முதல் கல்லூரி தலைமை ஆசிரியராக 2015இல் நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் அந்தப் பதவியிலிருந்து 2016ஆம் ஆண்டு தாங்கமுடியாத மன உளைச்சல் என்று காரணம் காட்டி ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு அவ்வாறான மன உளைச்சல் கொடுத்தது யார்? உடன் வேலை செய்யும் ஆசிரியர்களும் மாணவர்களும் தான். என்றாலும் அவருடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை. அவர் தலைமை ஆசிரியராகத் தொடர்கிறார்.

மூன்றாம் பாலினரை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லும் சூழலை – பாடசாலைகள் ஆகட்டும் அல்லது அலுவலகங்கள் ஆகட்டும் – நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இது அவர்களது உரிமைகளையும் மரியாதையையும் சட்டம் கொண்டு பாதுகாப்பதன் மூலமே நடைபெறும். சட்டம் இயற்றுவது முதல் படி என்றாலும் அதை செயல்முறைப்படுத்தவேண்டும். இந்த மசோதா தேசிய கவுன்சில் அமைத்து மூன்றாம் பாலினருக்காக உருவாக்கப்படும் கொள்கைகளை கண்கானிக்கவும் மதிப்பீடு செய்யவும் தேசிய கவுன்சில் ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியிறுத்தியது. ராஜ்ய சபாவில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்கிற அவர்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் நடைபெறலாம்.

டாலர் தேசம்

 

 சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் படித்ததிலிருந்து வரலாற்றின் மேல் ஒரு காதல் வந்துவிட்டது. காவல் கோட்டம் பற்றி வேறொரு சமயத்தில் எழுதலாம் – இன்னும் படித்து முடிக்கவில்லை. அதற்குள் டாலர் தேசத்துக்கு தாவினேன். இரண்டு அத்தியாயங்கள் படித்த நிலையில், இந்தியா சென்றிருந்த பொழுது, அமெரிக்க வரலாற்றை ஏன் படிக்கவேண்டும் – இந்திய வரலாறே நமக்குச் சரிவரத் தெரியாதே – என்கிற எண்ணம் தோன்றியது.

ஏர்போர்ட்டில் John Keay எழுதிய India: A History வாங்கினேன். 200 பக்கங்கள் படித்த நிலையில், என்ன படித்தோம் என்று ரீவைண்ட் செய்து பார்த்த பொழுது, ஒன்றும் நினைவில் இல்லை. வரலாறு கதை அல்ல. அதை சுவராஸ்யமாக எழுதுவது எளிதல்ல. சுவராஸ்யமாக இல்லையெனில் – படிப்பது எளிதல்ல. மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தொடங்கினேன். அந்த சமயத்தில் தான் என்னிடம் டாலர் தேசம் வாங்கிச்சென்ற என் நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார். (புத்தகத்தை திருப்பிக்கொடுக்கும் சிலர் இந்த உலகத்தில் இன்னும் இருப்பதாலேயே, உலகம் உய்த்திருக்கிறது. 🙂 ) திருப்பிக்கொடுத்ததோடில்லாமல், அபாரம் என்று சொன்னார்.

டாலர் தேசம்

பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்

ஆசிரியர்: பா.ராகவன்

dollardesam

இந்த நூலின் நோக்கம், அமெரிக்க வரலாறு அல்ல.  அமெரிக்காவைப் புரிந்துகொள்ளுதல்.

 

நமக்குத் தெரிந்த அமெரிக்கா நிஜமான அமெரிக்க அல்ல. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜன்நாயகத்துக்குப் பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஸ்லம், அதன் பணபலத்துக்குப் பின்னாலிருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்குப் பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள் – இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா.

 

இந்த நூலைப் படித்தால் அமெரிக்க வரலாற்றைக் கரைத்துக்குடித்துவிடலாம் என்றில்லை. இந்த நூலை வரலாற்றுப் பாடமாக்கலாமா என்றால் – முடியாது. பிறகு எதற்குத்தானய்யா இந்த நூல்? அமெரிக்காவைப் புரிந்துகொள்வதற்கு! அமெரிக்காவை எதற்காகய்யா புரிந்துகொள்ளவேண்டும்? அமெரிக்கா என்ன என் மாமியாரா? காரணம் இருக்கிறது. அமெரிக்க வரலாற்றை நீங்கள் புரட்டிப்பார்த்து புரிந்துகொண்டால், நீங்கள் தற்பொழுது பார்க்கும் இந்த உலகம் – நீங்கள் கேட்கும் செய்திகள் – ஏன் இப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள்.

 

வியட்நாம் யுத்தம் ஏன்? ஈராக்கில் என்ன நடந்தது? சதாம் உசேன் என்னதான்யா தப்பு செஞ்சார்? எகிப்து ஏன் நொண்டுகிறது? முதல் உலக யுத்தத்தில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? என்ன காரணம்? இரண்டாம் உலக யுத்தத்திலும் ஏன் நுழைந்தது? பேர்ல் ஹார்பர் மட்டும் தான் காரணமா? ஜப்பான் மீது ஏன் குண்டு போட்டது? ஜப்பான் ஏன் பேர்ல் ஹார்பரை தாக்கியது? அமெரிக்கா சும்மா தானய்யா இருந்தது – பின்ன ஜப்பான் ஏன் தாக்கியது? திமிர் தான? இல்ல கடுப்பில தாக்கியதா? என்ன காரணம்? க்யூபாவில் என்ன நடந்தது? கௌடமாலாவில் என்ன பிரச்சனை? சுடானில் என்ன பிரச்சனை? அல்-கைதாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன வாய்க்கா சண்டை? ஆஃகானிஸ்தானில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் என்னப்பா பிரச்சனை? கொரியாவில் என்ன நடந்தது? பாலஸ்தீனப்போரில் அண்ணனின் பங்கு என்ன? பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது சரி – எதுக்குய்யா கட்டினாங்க? பாக்கிஸ்தான் ஆஃப்கானிஸ்தானைத்தான ஆதரித்திருக்கவேண்டும்? எதுக்கு அமெரிக்காவுக்கு சலாம் போடுகிறது? இப்படி நிறைய கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். அதற்கான அத்தனை விடைகளும் உங்களுக்கு இந்த ஒரு புத்தகத்தில் கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த விடைகளுக்கான தேடலின் தொடக்கமாக இந்த புத்தகம் இருக்கக்கூடும்.

 

1500 இல் ஆரம்பித்து இன்றுவரையிலான அமெரிக்க சரித்திரத்தை அலசுகிறது இந்த புத்தகம். வரலாற்று நூலை இவ்வளவு சுவராஸ்யமாக எழுதமுடியும் என்று நான் நினைத்ததில்லை. பா.ராகவன் செய்திருக்கிறார். மூன்று நாட்கள் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன்.

 

அமெரிக்காவுக்கு போக வேண்டும் என்று நான் நினைத்ததில்லை – கட்டாயத்திலும் இல்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் என்னுள் இருந்தது. அது ஏன் அமெரிக்கா மட்டும் ஜொலிக்கிறது என்கிற கேள்வி. இதற்கும் அமெரிக்காவின் சரித்திரம் வெறும் ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. ஐநூறு ஆண்டுகளுக்குள் ஒரு நாடு எப்படி வல்லரசாக முடியும்? கல்தோன்றி முன்தோன்றா டாஸ்மாக்குடி காலத்தைச் சேர்ந்த நம்மால் ஏன் முடியவில்லை? ஒவ்வொரு இந்தியனிடமும் பெருமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் எப்படி இருந்த நாம், இப்படி ஆகிட்டோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்பொழுதே சாக்கடை கட்டியிருக்கிறோம். அப்போதே பொது தண்ணீர் சேமிப்பு – விநியோக திட்டம் இருந்திருக்கிறது. தெற்கே முத்து வியாபாரம் கண ஜோராக நடந்திருக்கிறது. வடக்கே சந்தைகள் கொழித்திருக்கின்றன. நமது மொழி ஆயிரக்கணக்கான வருஷத்து பழமையானது. பாரதியார் கனவு கண்டார். காசியில் பேசினால் காஞ்சியில் கேட்கவேண்டும் என்றார். ஆனால் ரேடியோ கண்டுபிடித்தோமா நாம்? ராவணன் சீதையை ஆகாய விமானத்தில் வைத்து தூக்கிச்சென்றான் (கதை தான் என்றாலும்) என்று படித்து உருகுகிறோம். விமானம் கண்டுபிடித்தோமா?

 

ஏன் முடியவில்லை? அமெரிக்காவால் ஏன் முடிந்தது?

 

சிம்பிளா சொன்னா: நம்ம கிட்ட இல்லாதது அப்படி என்ன இருக்கு அவங்ககிட்ட?

 

இந்த கேள்வி உங்களுக்கு இருக்குமேயானால் இந்த புத்தகத்தைப் படிப்பது அவசியம். பணக்காரர்களை நாம் எட்ட இருந்து பார்க்கும் வரை அவர்களது ஜொலிப்பு அட்டகாசமாய் இருக்கும். அவர்களுடன் பழகிப்பார்த்தால் தான், அவர்களது உண்மை நிலவரம் புரியும். பணக்காரர்களாக இருப்பதற்கு, பணத்தை சம்பாதித்துக்கொண்டேயிருப்பதற்கு, அவர்கள் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்யவேண்டியிருக்கிறது என்பது புரியவரும். பணக்காரர்களாகவே இருப்பது எளிதல்ல. பணக்காரர்களுக்குக் கூட பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு என்ன செய்தால் பணம் காய்த்துக்கொண்டேயிருக்கும்?

 

எங்கேயும் எதிலும் பிஸினஸ். மனிதநேயத்தையும் பிஸினஸையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒழுக்கவிதிகளையும் பிஸினஸையும் மிக்ஸ் செய்யக்கூடாது. இது சரியா? மக்கள் பாவமில்லையா? உன் பாவத்தை சம்பாதித்த பணத்தில் கழுவு.

 

அயல்நாடுகளுடன் உறுதியான, வளமான வர்த்தகத் தொடர்புகள் இருந்தாலொழிய அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்தி உட்காரவைக்க முடியாது என்பது ரூஸ்வெல்டுக்குத் தெரிந்தது.

 

ஆனால் முதல் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய தேசங்களுக்குள்ளேயே பல அமெரிக்காவுடன் நட்பு-பகை என்று மாறிமாறி உறவாடிக்கொண்டிருந்தன. பிஸினஸ் தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டால் இந்த உறவு சமாச்சாரமெல்லாம் சரிப்படாது என்று அப்போதைய அமெரிக்க அரசு கருதியது.

 

இப்படி சர்வாதிகார தேசங்களையெல்லாம் கம்யூனிஸ்டு சோவியத்துக்கு எதிரானா மனோபாவத்தை வளர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அத்தகைய தேசங்களைத் தேடிப் பொறுக்கி எடுத்து தனது வர்த்தக ஒத்துழைப்பு மூலம் சோவியத்துக்கு எதிரான அத்தேசங்களின் கோபங்களைக் கொம்பு சீவிவிடலாம் என்று கணக்குப் போட்டது அமெரிக்கா.

 

இது ஒரே கல்லில் ரெண்டு தேங்காய் சமாச்சாரம். பிஸினஸுக்கு பிசினஸும் ஆச்சு. சோவியத்தையும் கொஞ்சம் அடக்கிவைக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் நெடுநாளைய ஆசைக்கும் வடிகால். அதுவும் தாம் நேரடியாகச் சம்பந்தப்படாமல் ஜெர்மனியையும் ஜப்பானையும் தூண்டிவிட்டுச் செயல்படுவதால் தனக்கு நேரடியாக வில்லன் இமேஜ் வந்து சேராது.

 

சரிந்து கிடந்த அமெரிக்கப் பொருளாதாரம் சீர்படத் தொடங்கியது இப்போதுதான். கொஞ்ச நஞ்சமல்ல. பல லட்சக்கணக்கான ராணுவத்தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மூலப்பொருட்களோ கப்பல் கப்பலாக அனுப்பிவைக்கப்பட்டன.

 

கிட்டத்தட்ட அமெரிக்காவே ஒரு கொல்லன் பட்டறை மாதிரித்தான் இருந்தது. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் பில்லியன் கணக்கிலான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

 

ஆனால் அவரே [ஹிட்லர்] கூட நினைத்துப் பார்த்திராத விசயம், அமெரிக்கா மீதான ஜப்பானின் அந்த திடீர் தாக்குதல. பேர்ல துறைமுகத் தாக்குதல். . எப்படிப் பார்த்தாலும் ஜப்பானின் எழுச்சியில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு உண்டு. ராணுவ ரீதியில் அந்த தேசம் பெரிய அளவில் வளர்ந்து நிற்க மறைமுகமாக நிறைய பொருளுதவியும் ஆயுத உதவியும் செய்திருந்தது….

 

ஆனால் இப்படி க்ளோசப்பின் நேசப்பிணைப்பாக இருந்த இரு நாடுகள் ஏன் தாக்கிக்கொண்டன? எப்படியிருந்தாலும் இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லர். அணுகுண்டு போடுவதென்றால் ஜெர்மனி மீது தான் அமெரிக்கா போட்டிருக்கவேண்டும் – ஆனால் ஏன் துக்கனூண்டு ஜப்பான் மீது போட்டது? பொதுநலமா? “குண்டு போட்டது பெருமையா கடமை ப்ரோ”ன்னு உலகநியாயம் பேசினாலும், குண்டுக்குப்பின் இருந்தது, வர்த்தக போட்டி. பொறாமை. ஆற்றாமை. ஏன்? என்ன ஆற்றாமை? ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் அப்படியென்ன உள்குத்து?

 

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்தது என்று நினைக்கிறேன். வாரா வாரம் படிக்க நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் புத்தகமாக மொத்தமாக படிக்கும்பொழுது, அதுவும் வரலாறு, நன்றாகவா இருக்கும்? நன்றாகத்தான் இருந்தது. மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அதற்குக் காரணம் பா.ராகவனின் இயல்பான நகைச்சுவை கலந்த நடை.

 

உதாரணமாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போரைப்பற்றிப் பேசும்போது:

 

இந்தப் பனிப்போரைப் பற்றி நமது பாடப்புஸ்தகங்கள் சொல்லுகிற விவரங்கள் எல்லாமே மிகவும் தமாஷானவை. கம்யூனிசத்தின் வளர்ச்சியைப் பார்த்து அமெரிக்கா கவலைப்பட்டது; அமெரிக்காவின் ஆயுத பொருளாதாரப் பெருக்கத்தைப் பார்த்து ரஷ்யா வெறுப்படைந்தது; அதனால் பனிப்போர் ஏற்பட்டது என்று ஒரு வாயில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

 

உண்மையில் புரோட்டா மாதிரி லேயர் லேயராக நிறைய சங்கதிகளும் , காரணத்துக்குள் காரணம், அதற்குள் இன்னொரு காரணம் என்று பூரணக்கொழுக்கட்டைகளாக உள்ளே பொதிந்து வைத்த மேட்டர்கள் மிக அதிகம்!

 

அடிமைகளின் வாழ்க்கை பெரும்பாலும் அடிகளாலானது. கசையடி. நிற்க வைத்து நூறு, நூற்றைம்பது என்று எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட கசையடிகள். கசையடிக்கு அப்புறம் உழௌப்பி. ஒரு தினத்தில் குறைந்தபட்சம் பதினெட்டு மணிநேரம் அவர்கள் உழைத்தாக வேண்டும். உழைக்கும் நேரமெல்லாம் அவர்களின் வெற்றுடம்பிலிருந்து சொட்டிக்கொணே இருப்பது வியர்வை மட்டுமல்ல; காயங்களிலிருந்து ரத்தமும் கூட.

 

இப்புத்தகத்தின் மிக முக்கியமான அத்தியாயம் பிரடரிக் டக்ளஸின் அத்தியாயம் தான்.

 

டக்ளஸின் கலிவித்தாகம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அவரது சுயசரிதத்தில் டக்ளஸ் கையாண்டிருக்கும் மொழி, வாசிக்கும் போது பிரமிப்பூட்டக்கூடியது. வாழ்நாளில் ஒருநாள் கூட பள்ளிக்குப் போகாதவர், சேர்ந்தாற்போல் பத்துநிமிடம் உட்கார்ந்து பாடம் என்று எதையுமே படிக்காதவர், வெறும் கேள்வி ஞானமும் சுயமுயற்சியும் மட்டுமே கொண்டு எழுதப்படிக்கக் (அதுவும் பயந்து பயந்து, ரகசியமாக!) கற்றுக்கொண்டவர் அவர்.

 

வரலாற்றில் ஆர்வமிருக்கும் எவரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.

 

 

 

 

 

 

 

 

ஒழிவு தெவசத்தே களி

சினிமா விமர்சனம்

Off-day-1140x687

சாதியை சொல்லாதே/சாதியை கேட்காதே/ஆனால் ஏதும் செய்யாதே/சாதியை மறப்பதற்கு என்று ஐயப்ப பனிக்கர் எழுதினார். ஆர் உன்னி எழுதிய ஒழிவு தெவசத்தே களி என்கிற சிறுகதையை வைத்து சனல் குமார் சசிதரன் டைரக்ட் செய்த படம் இது. ஒழிவு தெவசத்தே களி என்றால் ஓய்வு நாளில் விளையாட்டு என்று பொருள். கேரளாவில் சாதி மக்களின் வாழ்க்கையில், அதிகார அடுக்கில், அரசியல் மட்டத்தில் எப்படி ஊடுறுவியிருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம்.

ஆயிர வருட பழமையை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.அதை மாற்ற முயற்சிக்கும் பொழுது பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். அது தான் எனக்கு நடந்தது. ஆனால் இந்த போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களிடம் உரையாட விவாதம் செய்ய இது தான் சந்தர்ப்பம். இல்லாவிட்டல் இந்த சமூகம் இருக்கிற இடத்திலே தேங்கிவிடும்.

என்று செக்ஸி துர்கா படத்தினால் தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் சனல் குமார் சசிதரன்.

Director_Sanal_Kumar_Sasidharan

சனல் குமார் சசிதரன் ஒரு வழக்கறிஞர். மாணவ காலத்தில் அவர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியின் மாணவ கிளை. பிறகு கருத்து வேறுபாட்டால் பாஜாகாவிலிருந்து வெளியேறி பாஜாகாவை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார். க்ரௌட் ஃபண்ட் மூலம் மலையாளத்தின் முதல் க்ரௌட் ஃபண்டட் சினிமாவை இயக்கினார்.

*

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்றைய கடைசி சில மணி நேரங்களில் ஒழிவு தெவசத்தே களி படம் தொடங்குகிறது. அந்தப் பெருங்கூச்சலிலிருந்து விலகி ஐந்து நண்பர்கள் ஓடைப் பக்கம் ஒதுங்குகின்றனர். ஓடையின் ஓரம் அமர்ந்து அவர்கள் பல கதைகள் பேசுகின்றனர். நடக்கவிருக்கும் தேர்தல் பற்றியும் அரசியல் பற்றியும் வேறு சில ஜோக்குகள் அடித்துக்கொண்டும் பொழுதைப் போக்குகிறார்கள். நாளை தேர்தல் தினம். மேலும் குடிப்பதற்கு சரக்கு எங்கும் கிடைக்கவும் செய்யாது. நாளைய ஓய்வு தினத்தை எப்படிக் கொண்டாடுவது கழிப்பது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

அவர்கள் காட்டுக்குள் இருக்கும் தனிமையான பழைய பெரிய வீட்டில் எப்படி ஓய்வு தினத்தைக் கழித்தார்கள் என்பது மீதிப் படம். அவர்களுடைய ஆழ்மனதையும் உள்ளுணர்வுகளையும் அது வெளிக் கொண்டுவரும் கொடூர குணங்களையும் இப்படம் காட்டுகிறது. அந்த வீட்டில் அவர்களுக்கு குடி ஒன்றே பிரதானம். சமைப்பதற்கு ஒரு பெண் இருக்கிறார். குடியினூடே அவர்களது விவாதம் எமர்ஜென்சி பற்றியும் துபாய் குடிபெயற்சி பற்றியும் அரசியல், ஜனநாயகம் என்று முடிவில் சாதியை முன்னிலைப்படுத்தி நடக்கவிருக்கும் ஒரு சோக நிகழ்ச்சிக்கு அச்சாரமாக அமைகிறது. ஒரு சின்ன சச்சரவு சண்டையாக முடியும் பொழுது அவர்களுள் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஐந்து நண்பர்களுள் தர்மன் பணக்காரன் திமிர்ப்பிடித்தவன். நண்பரளுக்குள்ளே மதிப்பையும் மரியாதையையும் பணத்தாலும் பேச்சுத்திரணாலும் பெருகிறான். ஆனல் திருமேனி ஒரு ஐயர். அவனுக்கு இயல்காகவே மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. வினயன் ஜனநாயக நெறிமுறைகளைப் பேசுகிறான், தர்மனின் திமிரை எதிர்த்து சண்டையிடுகிறான். தாசனிடம் பாட்டாளி வர்க்க மனப்பாண்மை இருக்கிறது. அசோகன் பாசாங்குக்காரன்.

மரமேறி பலாப்பலம் பறிப்பதாகட்டும் கறிக்குழம்பிற்காக கோழியை பிடித்து அடிப்பதாகட்டும் இப்படி எந்த எடுபிடி வேலையாகட்டும் அவர்களுள் கருப்பு நிறத்தவனான தாசன் (வேலைக்காரன் என்று பொருள்) என்பவனே முடிவில் செய்ய வேண்டியிருக்கிறது. ஏன் அவர்களுடைய சண்டைகளைக்கும் அவனே சமாதானம் போகவேண்டியிருக்கிறது. எதிர்ப்பார்த்தபடி அவன் ஒருவனே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான்.

பேச்சினூடே தாசனின் கருப்பு நிறம் கேலிக்குட்படுத்தப்படுகிறது. அவனது நணபர்களே அவனை கருப்பு என்று கேலி செய்து அதை விளையாட்டு என்கின்றனர். அவர்கள் கேலி செய்வது அவனது நிறத்தை அல்ல – அவனது சாதியை. பொறுமையிழந்த தாசன் எழுந்து “நான் பிறக்கும் பொழுது கருப்பு. வளரும் பொழுது நான் கருப்பு. சூரிய வெளிச்சத்தில் நான் விளையாடும் பொழுது நான் கருப்பு. நோய்வாய்ப்படும் பொழுது நான் கருப்பு. சாகும் பொழுது நான் கருப்பு. நீ.. நீ பிறக்கும் பொழுது..” என்கிற பாடலை அவன் பாடுகிறான். அனைவரும் எழுந்து வெளியேறி விடுகின்றனர். பால்கனியில் சென்று நின்றுகொள்கின்றனர். அதாவது அவர்கள் எவ்வளவு பகடி செய்தாலும், தாசன் பொறுமையாக இருக்கவேண்டும். விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அவன் சிறு எதிர்ப்பு காட்டிவிட்டாலும் மற்றவர்களுக்கு அது பிடிப்பதில்லை.

ozhivudivasathe-kali-380

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்றொருவர் அவர்களுக்கு சமைத்துக்கொடுக்கும் பெண் கீதா – படத்திலிருக்கும் ஒரே பெண். வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் – தாசனைத் தவிர – அவள் மீது ஒரு கண் இருக்கிறது. அனைவரும் அவளை அவர்களுடைய வழிகளில் அடைய முயற்சிசெய்கின்றனர். சின்னச் சின்ன சமிஞ்சைகளின் மூலம், மறைமுகமான பேச்சின் மூலம், ஆனால் கட்டாயப்படுத்தாமல் அவளை அவர்களின் ஆசைக்கு இழுக்கப்பார்க்கிறார்கள். அவர்களுள் பெரியவன் போல இருக்கும் ஒருவன், தருமன், அவளைக் கைபிடித்து இழுக்க, அவள் ஓங்கி ஒரு அறை விடுகிறாள். தரையில் அரிவாளால் ஓங்கி வெட்டி ஆண்வர்க்கதினரின் மேலிருக்கும் பெண்களின் கோபத்தைக் காட்டுகிறாள்.

“என்ன அரசியல், அது ஆண்களின் விளையாட்டு” என்று அவள் சொல்லும் பொழுது இந்த நாட்டில் பெண்களின்  உலகமும் பெண்களுடைய மொத்த பிரச்சனைகளும் ஒட்டு மொத்தமாக ஆளும் ஆண் வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகிறதென்பதை தெளிவாகச் சொல்லுகிறாள். உதாரணம்: தெருத் தெருவுக்கு கோயில் இருக்கும் இந்நாட்டில் பெண்கள் அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க இடம் வேண்டும் என்பதை ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் எப்படி புரிந்துகொள்ளும்? இந்நாட்டில் ஆளும் மந்திரிகூட அவசரத்துக்கு காரைவிட்டிறங்கி நின்றவாறு சிறுநீர் கழித்து எளிதாக சென்றுவிடுவார் – அவர் எப்படி பெண்களுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ள இயலும்?

இத்தனைக்கும் சமையற்காரி போல தாசன் வெளியாள் இல்லை. மாறாக அவன் அந்த நெடுநாளைய நட்பு வட்டத்தில் ஒரு ஆள். அந்த நட்புவட்டம் அவனை உள்ளுக்குள் ஏற்றுக்கொண்டது போலத் தெரிந்தாலும், அவனை வெளியிலேயும் அவர்களுக்கு கீழேயுமே வைத்திருக்கிறது.

நேரம் ஆக ஆக வெறுமனே நண்பர்களுக்குள்ளேயான தண்ணிப் பார்ட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விளையாட்டாக உருமாறுகிறது . அதிகாரமும் வன்மமும் வெறியும் கொண்ட விளையாட்டு. அவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது அவர்கள் விளையாடிய விளையாட்டு. சீட்டுப் போட்டு அவர்களுள் யார் அரசனாவது, யார் மந்திரியாவது, யார் போலீஸாவது, யார் திருடனாவது, யார் நீதிபதியாவது என்று அவர்களுக்குள்ளே முடிவு செய்துகொள்கிறார்கள். சீட்டுப் போடுகிறார்களே தவிர அந்த அந்தச் சாதியினார் அந்த விளையாட்டில் தங்களுக்கென்ன பங்கு என்று அவர்களாவே முடிவு செய்கின்றனர். வெள்ளையாக இருப்பவன் அவனாகவே நீதிபதியாகிக் கொள்கிறான். கடைசியில் கருப்பாக இருப்பவனுக்கே திருடன் ரோல் கிடைக்கிறது. அவன் மறுத்துப் பார்க்கிறான் – ஆனால் விளையாட்டு தானே என்று அவனைச் சமாதானப்படுத்துகின்றனர். இந்த விளையாட்டும் விளையாடும் நபர்களும் நமது ஜனநாயகத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வர்னாசிரம அடுக்குகளையே பிரதிபலிக்கின்றனர்.

friends

விளையாட்டில் நீதிபதி தவறு செய்யும் பொழுது அவர்களுக்குள் பேசி நீதிபதிக்கு எந்த தண்டனையும் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். நீதிபதியை எப்படி தண்டிப்பது? நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது? அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ? அதே போல ராஜா தவறு செய்து பிடிபடும் பொழுது ராஜாவுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யலாகாது என்று அனைவரும் எடுத்துச் சொல்கின்றனர். மந்திரி தவறு செய்து பிடிபடும் பொழுது மாறாக அவனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அந்த தண்டனையிலிருந்து வெளிவர சொற்ப அபராதம் மட்டுமே வழங்கப்படுகிறது. போலீஸ் தவறு செய்து பிடிபடும்பொழுது அவனுக்கு மிகச்சிறிய தண்டனையும் பிறகு அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் மந்திரியும் நீதிபதியுமே சொல்கின்றனர். ராஜா கண்டுகொள்வதில்லை. ஆனால் திருடன் – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் – தவறு செய்து பிடிபடும்பொழுது அவனைக் காப்பாற்ற யாரும் இல்லை. அவனுக்கு இருப்பதிலே கொடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறது. அதிலிருந்த அவன் மீள வாய்ப்பேயில்லை. அவனை அதிலிருந்து வெளியேற்றிவிட யாரும் முன்வருவதில்லை. இந்த விளையாட்டிலும் அப்படியே. யாரும் அவனைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. முடிவில் அந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.

இந்தப் படத்தின் கடைசிக் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்துவிடும். சாதீயம் மீதும் சாதி சார்ந்த சமூக படிநிலைகள் மீதும் அனல்கக்கும் கேள்விகளை அவர்களைக் கேட்கத் தூண்டும். அந்த கடைசிக் காட்சியில் பார்ப்பவர்கள் ஒன்று தண்டனை பெறுபவராகவோ அல்லது தண்டனை கொடுப்பவர்களுல் ஒருவராகவோத்தான் இருக்க முடியும்.

 

பாருக்குப்போன குதிரை

புத்தக விமர்சனம் :

A horse walks in to a bar- ஒரு ஸ்டேண்டப் காமெடியனின் வலி.

இந்த ஜோக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இதோ:

ஒரு குதிரை பாருக்குப் போனது. என்னடா குதிரை பாருக்கு வந்திருக்கிறதே என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சிலர் கேலி பேசினர். ஆனால் குதிரை யாரையும் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக நேரே பார்மேனிடம் (ஊத்திக்கொடுப்பவர்) சென்றது. பார்மேன் என்ன வேண்டும் என்பது போல பார்த்தான். ஒரு டக்கீலா என்றது குதிரை. பேசிய குதிரையைக் கண்டு அதிர்ந்த பார்மேன், அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் ஒரு டக்கீலா கொடுத்தான். மடக்கென்று குடித்த குதிரை கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தது. பிறகு என்ன விலை என்று கேட்டது. ஓ காசு வேற வெச்சிருக்கா என்று மேலும் அதிர்ந்த பார்மேன் 2000 ரூபாய் என்று சொன்னான். ஒன்றும் பேசாமல் அவன் கையில் புதிய 2000 ரூபாய் நோட்டை திணித்துவிட்டு நடையைக் கட்டியது குதிரை. பார்மேனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை – பேசும் குதிரை அதுவும் கேட்ட காசைக் கொடுக்கும் குதிரை. பார்மேன் ஓடிப்போய் வெளியே போய்க்கொண்டிருந்த குதிரையை மடக்கிக் கேட்டான்: ஆச்சரியமாக இருக்கிறது. பேசும் குதிரையை இதுவரை நான் பார்த்ததில்லை என்றான். ஹ்ம்ம் உங்க டகீலா விலை அதிகம். இனிமே பாக்கமாட்டீங்க என்று சொல்லிவிட்டு குதிரை வெளியேறியது.

*

பாருக்குப் போன குதிரை (A horse walks in to a bar) நாவலை எழுதியவர் டேவிட் க்ராஸ்மேன் என்கிற இஸ்ரேலிய எழுத்தாளர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆங்கிலத்தில் ஜெசிக்கா கொஹென்னால் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசு வாங்கியது. 194 பக்கங்களே கொண்ட சிறிய நாவல். இரண்டு மூன்று நாட்களில் படித்து முடித்து விடலாம் – ஆனால் இந்த புத்தகத்தின் தாக்கம் சிறிது நாட்களுக்கு நம்முடன் இருக்கும்.

*

இஸ்ரேலின் நெட்டன்யா நகரில் ஒரு காமெடிக் க்ளபின் மேடையில் ஒரு சாயங்காலம் டோவேலோ ஜி என்கிற கமெடியன், காமெடியன்களின் வழக்கமான பாணியில் ஸ்டேண்டப் ஷோ செய்ய ஆரம்பிக்கிறார். டோவேலோ ஜி ஒரு ஐம்பது வயதான ஜி. சில நாட்களுக்கு முன் அவருடைய பழைய நண்பரான அவிஷாயை (சமீபத்தில் மனைவியை இழந்த ஒரு ரிடையர்ட் ஜட்ஜ்) தொலைபேசியில் அழைத்து தன்னுடைய ஷோவுக்கு வரும்மாரு அழைக்கிறார். இருவருக்குமான நட்பு நாற்பது வருடங்களுக்கு முந்தியது – கடைசியாக ஒரு சம்மர் கேம்பில் பார்த்தது. அவிஷாய்க்கு முதலில் டோவேலோ ஜி யார் என்பதே ஞாபகம் இல்லை.

அன்றைக்கு ஸ்டேஜில் எப்பொழுதும் போலவே ஜோக்குகளுடன் ஆர்ம்பிக்கிறார். சில மொக்கை ஜோக்குகள், செக்ஸ் ஜொக்குகள், ஊரைப்பற்றி, இஸ்ரேலைப்பற்றி, பார்க்க வந்திருப்பவர்களைப் பற்றி கேலி பேசி ஜோக்குகள் என்று ஆரம்பிக்கிறது ஷோ. அவிஷாய் உங்களுக்கு எல்லாமே காமெடிதான். உங்கள் அம்மா கூட உங்களுக்கு காமெடி தான் என்பார். ஆனால் போகக் போக டோவேலா தனது சிறுவயதில் நடந்த ஒரு அதிர்ச்சியான துயரச் சம்பவத்தை விவரிக்கும் பொழுது பார்வையாளர்கள் இன்னும் அந்தத் துயரச் சம்பவத்திலிருந்து மீளாத உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் காண்கின்றனர்.

க்ராஸ்மேன் ஒரு ஜியானிஸ்ட் (யூதர்களுடைய பூர்வீக நிலத்தை மீட்டு அவர்களை அங்கே குடியேற்றவேண்டும் என்கிற கொள்கை) ஆனால் மிதவாதி.மேலும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமிடையே அமைதியாக சுமூகமாகவே நல்லிணக்கம் வேண்டும் என்று விரும்புபவர். அப்படியானல் இந்த டோவேலோ ஜி அடிபட்ட ஒரு தேசத்தின் குறியீடா? இல்லை வெளி உலகத்துக்கு கொடுமைக்காரனாகவும் சுயநலவாதியாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் 1973ஆம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தால் வஞ்சிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத ஒரு குழந்தையாகவே இருக்கும் ஒரு மனிதனின் கதையா?

அன்றைய மாலையின் முழு ஷோவும் – ஒவ்வொரு ஜோக்கும், டோவேலாவின் ஒவ்வொரு கையசைவும், பார்வையாளர்களின் ஒவ்வொரு எதிர்ப்பும், சிரிப்பும், ஆர்ப்பரிப்பும் தெளிவாக எழுத்தாளர் க்ராஸ்மேனால் – அல்லது அவிஷாயால் – விவரிக்கப்படுகிறது. க்ராஸ்மேனின் தெளிவான ஆனால் பிடித்திழுக்கும் நடை நம்மை அந்த ஷோ நடக்கும் அந்த க்ளப்பின் பாதாள அறைக்கே இழுத்துச் செல்கிறது.

முதலில் கொஞ்சம் ஆசுவாசமாக ஆரம்பித்தாலும், போகக் போக ஒரு கழுகு எப்படி தன் இரையை நோக்கி பாயுமோ, அதே அளவு வீரியத்துடன் டோவேலா பார்வையாளர்களை தன் வாழ்க்கையையே மாற்றிய அந்த தருணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

எப்படிச் செய்தார்? எனக்குப் புரியவில்லை. எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை -என்னையும் சேர்த்து – அவரது ஆன்மாவின் குடும்ப உறுப்பினராக ஆக்கினார்? எப்படி எங்களையெல்லாம் பினைக்கைதிகளாக ஆக்கினார்?

என்று இந்தக் கதையை சொல்லும் பார்வையாளர்களுள் ஒருவரான அவிஷாய் கேட்கிறார்.

பார்வையாளர்களில் மேலும் ஒருவர் டோவேலோவைத் தெரிந்தவராக இருக்கிறார். அவரது வீட்டுக்குப் பக்கத்திலே இருந்தவர் – ஒரு சிறிய குட்டையான பெண்.

எனக்கு உன்னைத் தெரியும். நீ தானே கைகளால் தலைகீழாக நடப்பவன்?

என்று தனது முதல் அறிமுகத்திலே எல்லோர் முன்னிலையிலும் சொல்லுகிறார். டோவேலோ கைகளால் தலைகீழாக நடப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அப்பாவிடம் கடுமையான பெல்ட் அடி வாங்கினாலும் கைகளால் நடக்கும் பழக்கத்தை கைவிட இயலாதவர். தலைகீழாக நடக்கும் பொழுது ரத்தம் தலைக்கு ஏறி காதுகளை அடைத்துக்கொண்டு உலகத்தின் சத்தங்களையெல்லாம் வடிகட்டி அமைதியை கொடுக்கிறது என்கிறார்.

டோவேலோவின் கடுமையான கேலிப்பேச்சுகளைப் பார்த்து” நீ அப்பெல்லாம் இப்படி இல்லை நீ ரொம்ப நல்லவன்” என்கிறார் அந்தப் பெண்.

க்ராஸமேனின் டோவேலாவின் கதாப்பாத்திரத்துக்கும் டோவேலாவின் நாடான இஸ்ரேலுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. டோவேலாவின் துயரம் என்னவென்றால்: அவர் தன் இயல்பிலிருந்து மாறி, ஏன் தன்னையே வஞ்சித்துக்கொண்டு, தன் சுயத்தை இழந்தவர். ஒரு காலத்தில் உற்சாகமான – அந்தப் பெண்ணைப் பொருத்தவரை நல்ல – சிறுவனாக இருந்த டோலேவா அவமானத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகி கொடுமைக்காரனாகவும், அடுத்தவர்களிடம் குறைகளை மட்டுமே காணுபவனாகவும் காலப்போக்கில் மாறிப்போனான். அவனுடைய வாழாத வேறுவிதமான தனக்கு உண்மையான வாழ்க்கையின் ஒரு மிகச் சிறிய பகுதியைத்தான் எஞ்சியிருந்த பார்வையாளர்கள் அன்றைய மாலையில் பார்த்தனர்.

க்ராஸ்மேன் ஒரு பேட்டியில் சொன்னார்: இதை ஒரு இணையாக எடுத்துக்கொண்டு நான் நினைத்ததுண்டு, இஸ்ரேலியர்களாக நாம் வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். 1967ஆம் ஆண்டு நடந்த போர் தான் திருப்புமுனை. 1967இல் தான் இஸ்ரேல் தான் அதுவரை பிடித்துவைத்திருந்த பகுதிகளை தனது அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், சிரியா போரிட்டு தக்கவைத்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையையும், எகிப்திடமிருந்து சினாய் மற்றும் காசாவையும், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்சையும் போரிட்டு வென்று அந்தப் பகுதியின் அசைக்கமுடியாத ராணுவமாக உருமாறியது இஸ்ரேல். க்ராஸ்மேனைப் பொருத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை. புவியியல் பிழையும் கூட. அந்தப்பிழை திருத்தப்பட்டால் அல்லது திருத்தப்படும் பொழுது நாம் நம்முடைய அண்டை நாட்டவருடன் சுமூகமாக சண்டையின்றி வாழலாம். நம் வாழ்க்கை இவ்வளவு இருட்டாக நித்தமும் பயமாக இருந்திருக்காது என்று கூறுகிறார்.

மேலும்,

1967க்கு முன்பிருந்த இஸ்ரேலைக் கொண்டாடவில்லை, 1948இல் நடந்ததைப் போன்ற கொடுமைகள் நடந்திருக்கின்றன தான். ஆனால் 1967க்கு முன்பு வரை அடுத்த 50 ஆண்டுகளுக்கு நமது அண்டை நாடுகளுடன் போரிட்டுக்கொண்டிருக்காமல் ஓரளவுக்கு இனக்கமான சூழ்நிலையில் வாழ்வதற்கான வாய்ப்பிருந்தது. வாளால் வாழ்ந்து, வாளால் மடிவது. இன்றைக்கிருக்கும் இஸ்ரேலியர்களுக்கு வேறு வழியில்லை இது தான் ஒரே வழி, இப்படித்தான் வாழ்ந்திருக்க முடியும் என்கிற மனப்போக்கிருக்கிறது. 1967க்கு முன் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த மன்நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறான கருத்துகளால் க்ராஸ்மேன் ஒரு தேசதுரோகி என்று சிலர் கருதுகின்றனர். நம்ம ஊர்காரர்கள் ஆண்டி-இண்டியன்ஸ், பாக்கிஸ்தானுக்குப்போ என்று சொல்வது போல. 2016இல் இஸ்ரேலிய கலாச்சார மந்திரி பழைய ப்ரிகேடியர் ஜெனரல் மிரி ரெகவ், இடதுசாரி எழுத்தாளர்கள் என்று சிலரைப் பட்டியலிட்டு அவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை இல்லை என்று அறிவித்தார். க்ராஸ்மேனும் அந்தப் பட்டியலில் இருந்தார். உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு க்ராஸ்மேன் இல்லை பெருமைப் படுகிறேன் என்றார்.

பார்வையாளர்கள், மேடையில் இருப்பவனின் கதையைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அந்தக் காமெடியன் சொல்லும் ஜோக்குகள் மட்டுமே அவர்களுக்குத் தேவை. காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை.

டோவேலா தனது கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சிலர் போதும் நிறுத்து, ஜோக் சொல்லு என்று கதறுகிறார்கள். சிலர் கிளம்பி விடுகிறார்கள். டோவேலா ஒரு சில ஜோக் அவ்வப்போது சொல்லத்தான் செய்கிறார்.

உதாரணத்துக்கு:

ஒருத்தர் ஒரு கிளி வளர்க்கிறார். அந்தக்கிளி அவரைக் கண்டபடி திட்டுகிறது. கெட்ட கெட்ட வார்த்தையாலேயே திட்டுகிறது. காது கூசும் அளவுக்கு கழுவி கழுவி ஊற்றுகிறது. யார் இருக்கிறார்கள் இல்லை என்று பார்ப்பதில்லை. வளர்ப்பவர் சொல்லிப் பார்த்தார். கெஞ்சிப்பார்த்தார். எல்லார் முன்னிலையில் திட்டு வாங்கும் பொழுது என்னைத் திட்டவில்லை, என் அட்மினைத்தான் திட்டுகிறது என்று சொல்லி சமாளித்தார். யாரும் நம்பவில்லை என்பது வேறு விசயம். பொறுக்கமுடியாமல் உனக்கு சாப்பாடே கிடையாது என்று பட்டினியும் போட்டுப் பார்த்தார். கிளி அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பாகி கிளியை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைத்து அடைத்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து கிளியை வெளியே எடுத்தார். கிளி மிகவும் பவ்யமாய் ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தவறிழைத்து விட்டேன். இனி ஒருபோதும் இது போல செய்யமாட்டேன். உங்களிடம் மரியாதையாகவே உரையாடுவேன். ஆனால் இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்: உள்ளேயிருக்கும் கோழி என்ன தவறிழைத்தது என்று சொன்னது.

மேலும் ஒரு ஜோக், கொஞ்சம் அசைவம்:

நடுக்கடலில் ஒரு சிறிய கப்பல் ஒன்று கவிழ்ந்து விடுகிறது. அதிலிருந்து ஒரு மனிதன் தப்பித்து நீந்தி கஷ்டப்பட்டுக் கரையேறுகிறான். கரையில் அதுபோலவே ஒரு நாயும் ஒரு ஆடும் தப்பித்து கரையேறியிருந்தன. அது ஒரு தீவு. ஒரு மனிதன். ஒரு நாய். ஒரு ஆடு. அவ்வளவே. நாட்கள் ஓடின.வாரங்கள் ஆயின. மாதங்கள் ஆயின. மனிதன் செக்ஸுக்கு காய்ந்துபோய் விட்டான். என்ன செய்வது. யாருடன் செய்வது. ஆடு ஒன்றுதான் வழி என்று முடிவுசெய்து ஆட்டை நெருங்கினான். ரெடியாகும் பொழுது ஒரு உறுமல் சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். நாய் பற்களைக் கடித்துக்கொண்டு உறுமிக்கொண்டிருந்தது. மனிதன் இது என்னடா வம்பாப் போச்சு என்று வாலைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டான். பிறகு நாய் தூங்கும் வரை பொறுமையாகக் காத்திருந்து தூங்கியபின் மெதுவாக தவழ்ந்து தவழ்ந்து ஆட்டின் அருகில் சென்று ரெடியானான். மறுபடியும் உறுமல் சத்தம். வெறுத்துப் போன மனிதன் அடப்போங்கப்பா என்று போய்விட்டான். வாரம் மாதம் ஓடியது நாய் ஒரு நாளும் மனிதனை ஆட்டிடம் நெருங்கவிடவில்லை. வேறெந்தக் கப்பலும் வரவும் இல்லை. வெறுப்பின் உச்சத்தில் இருந்த மனிதன் மற்றுமொரு கப்பல் தூரத்தில் கவிழ்வதைக் கண்டான். அதிலிருந்து ஒரு பெண் கடலுக்குள் குதிப்பதைக் கண்டான். குஷியான மனிதன் நீந்திச் சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றி கரை சேர்த்தான். அந்தப் பெண் மிக அழகாக இருந்தாள். சற்று நேரம் கழித்து கண் முழித்த அந்தப்பெண் ஆகா என் ரட்சகரே. என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவரே என்னையே உங்களுக்குத் தருகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். எமை ஆளுங்கள் என்றாள். அதற்கு அந்த மனிதன் எனக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அந்த நாயை மட்டும் கொஞ்ச நேரம் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.

டோவேலோ தன் கதைக்கு நடுவே சில ஜோக்குகள் இது போலச் சொன்னாலும் அவனது கதையிலே அவன் கவனமாக இருக்கிறான். பார்வையாளர்கள் அவனுடைய ஜோக்கிலே கவனமாக இருக்கிறார்கள்.காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை. இதேபோன்றதொரு மனநிலையைத் தான் நாம் (இஸ்ரேலியர்கள்) அகதிகளிடம் காட்டுகிறோம் என்கிறார் க்ராஸ்மேன். நாம் அகதிகளின் கேட்பாரற்ற நிலையைப் பார்க்கிறோம். அவர்களை ஒரு அழுக்கு போல கருதுகிறோம். அவர்களுக்கு நம்மை போல துணிமணிகளை அணிவித்து, அவர்களை நம்மை போன்றதொரு அப்பார்ட்மெண்ட்டில் வைத்து, அவர்களுக்கு நம்மைப் போன்றதொரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்து ஒரு முப்பது விநாடி கற்பனை கூட நாம் செய்ய விரும்புவதில்லை. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, அவர்களை அவர்களுடைய வாழ்க்கையில், ஒரு புதிய இடத்தில், இணைத்துவிட அவர்கள் மீதான நம்முடைய பார்வையை நாம் மாற்றவேண்டும். அவர்கள் இழந்த மதிப்பையும் பெருமையையும் அவர்கள் மீட்டெடுக்க அதுதான் ஒரே வழி என்கிறார் க்ராஸ்மேன்.

எந்த அளவுக்கு இந்த நாவல் – முக்கியமாக டோவேலாவின் கதாப்பாத்திரம் – இஸ்ரேலின் குறியீடு என்று தெரியவில்லை.

இந்த நாவலின் முக்கிய கதாப்பாத்திரம் டோவேலாவா, ஓய்வுபெற்ற நீதிபதி அவிஷாயா அல்லது வாசகர்களாகிய நாமா?

இறுதியில் டோவேலா தன் கதையைச் சொல்லி முடிக்கும் பொழுது எஞ்சியிருப்பது நான்கே பேர் தான். அதில் இருவர் டோவேலாவை முன்பே அறிந்தவர்கள். இதை வைத்து க்ராஸ்மேனிடம் : உங்களுக்கான வாசகர்கள் உங்களுடைய கருத்துக்களால் இது போல குறைந்து வருகிறார்களா என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் நான் எனது கலைக்கு உண்மையாக இருக்கிறேன் என்றார்

போய் வாருங்கள் Stephen Hawking

Obituary:
Stephen Hawking அறிவியலின் மிகச்சிறந்த தூதுவர்

Stephen Hawking இறப்பினால் அறிவியல் உலகம் ஒரு விஞ்ஞானியை மட்டும் இழக்கவில்லை, அது பொதுமக்களுக்கான தனது மிகச் சிறந்த தூதுவரை இழந்து விட்டது.

அவருடைய அறிவும், கவர்ச்சியும் – ஏன் அவரது ஊனமும் கூட – அவரை இவ்வுலகத்தின் சமகாலத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானியாக்கியது. அவரும் அவருக்குக் கிடைத்த இடத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அறிவியலின் தேவையையும் அன்றாட வாழ்வில் அறிவியலுக்கு இருக்கும் முக்கியமான பங்கையும் பொதுமக்களிடம் கொண்டு சென்றார். அதை விட அறிவியலுக்கு அரணாக இருந்தார் என்பதே மிகச் சரி.

எளிதில் புரிந்து கொள்ள இயலாத அண்டவியலைச் சாதாரணப் பொதுமக்களுக்குப் புரியும் படியும், அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு ஆர்வத்தை தூண்டும் விதமாக ஏழுதியதே அவரது சிறப்பு. உதாரணத்திற்கு 1988இல் அவர் எழுதிய A Brief History Of Time.

ஓரளவிற்கு ஆர்வமிருந்தால் போதும் ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தைப் படித்து விடலாம். படித்து முடிக்கும் பொழுது நீங்கள் விஞ்ஞானியாகியிருக்க மாட்டீர்கள்தான், ஆனால் விஞ்ஞானியாவதற்கு மிக முக்கியத் தேவையான அந்த பேரார்வம் உங்களிடம் வந்திருக்கும். அவருடைய இந்தப் புத்தகத்தை இளவயதில் படித்து அகத்தூண்டுதல் அடைந்து வானியற்பியல் படித்து முழுநேர விஞ்ஞானியானவர்கள் பலர். நானும் நினைத்திருக்கிறேன்: இந்தப் புத்தகத்தை என் பதின் பருவத்தில் படித்திருக்க வேண்டும் என்று. Better late than never தான் இல்லையா? 😉

எயின்ஸ்டினைப் போல் அவர் ஒரு ஜீனியஸ் இல்லை என்று சிலர் சொல்லுவார்கள். Leonard Susskind எழுதிய Blackhole War என்கிற புத்தகம் Hawkins உடன் நடந்த அறிவியல் வாக்குவாதம் பற்றியதே.

Hawking கருந்துளையில் எந்த ஒரு விஷயமும் கரைந்து போகும் என்று சொன்னார். Susskind இது அறிவியலின் அடிப்படையே மாற்றிவிடும் என்றார். எந்த ஒரு விஷயமும் மற்றொரு விஷயமாக மாற்றம் பேருமே தவிர என்றைக்கும் கரைந்து காணாமல் போகாது என்றார். இறுதியில் Susskind வென்றார். இப்போதைக்கு. அறிவியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை. இப்போதைக்கு இவ்வளவு தான் தெரியும். இன்னும் பத்து வருடங்களில் ஹாக்க்கின்சின் புத்தகத்தை படித்து யாராவது இன்ஸ்பையர் ஆகி விஞ்ஞானியாக வளர்ந்து கரிந்துளையை ஆராய்ச்சி செய்து Hawking தான் சரி என்று சொல்லலாம்.

அண்டத்தின் மீது தீராத காதல் கொண்ட Hawking ஒரு முறை ஜீரோ புவி ஈர்ப்பு விசையில் பயணம் செய்தார். அண்டத்தில் மனித இனம் பயணம் செய்து வேறு கிரகங்களை கண்டுபிடிக்கவில்லை என்றால் மனித இனம் அழிவது உறுதி என்றார் அவர். அவருடைய நாடி நரம்பு இரத்தம் புத்தி அனைத்தும் அண்டமே நிரம்பியிருந்தது.

அவர் ஜீனியஸ் இல்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஜீனியஸ் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அவர் மிகச் சிறந்த விஞ்ஞானி இல்லை. ஆனால் இப்படிஸ் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விடுவார்கள் – அது Hawking அறிவியலுக்கு செய்த மகத்தான தொண்டு – அறிவியலை மக்களுக்கு கொண்டு சென்றது. இதுவே அவரது மகத்தான பணி. விலை மதிப்பில்லாத ஒன்று. வெகுசிலரே இதை செய்திருக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகள் பின் நோக்கி போய்க்கொண்டிருக்கும் இந்த உலகத்துக்கு இவரைப்போல இன்னும் நிறைய அறிவியல் தூதுவர்கள் தேவை. ஆனால் இவரது இடத்தை இன்று நிரப்புவதற்கு யாரும் இல்லை என்பதே உண்மை.

போய் வாருங்கள் Stephen Hawking. We’ll miss you.