தேன்கூடு போட்டி : காடனேரி விளக்கு (சிறுகதை)

காடனேரி விளக்கு (சிறுகதை)

நின்று கொண்டிருந்த பஸ்ஸின் இரைச்சல் அந்த இரவின் நிசப்தத்தை ஒரு ஈட்டி போல் குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. நாய்கள் எழுந்து நின்று வேடிக்கை பார்த்து விட்டு மறுபடியும் படுத்துக்கொண்டன. சில நாய்கள் எங்கள் தூக்கத்தை ஏன் கெடுத்துத்தொலைக்கிறீர்கள் என்று பதிலுக்கு ஊளையிடத்தொடங்கின. நாளை விடிகாலை ஆண்டாளை தரிசிக்க அந்த பேருந்தில் சென்று கொண்டிருக்கும் சில பக்தர்கள் தூக்கத்திலிருந்து விழித்து பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்க இயலாமல் பெரிய கொட்டாவிகளை விட்டுக்கொண்டிருந்தனர்.’அமைதிக்கு பெயர் தான் சாந்தி’ என்ற பாடல் சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தது, சன்னமாக. டிரைவர் ரோட்டை விட்டு சற்று தொலைவில் இருந்த கிணற்றில் கண்டக்டர் நீர் இறைப்பதையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

குடத்துடன் கண்டக்டர் ஓட்டமும் நடையுமாக வந்து, டிரைவரிடம் கீழே இருந்தபடி கொடுத்துவிட்டு, பின் வாசல் வழியாக பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பஸ் புறப்பட்டது.

கம்பியில் சாய்ந்த கொண்டே கையிலிருந்த இன்வாய்ஸ் பேப்பரை நிரப்பிக்கொண்டு வந்தவர், ஆட்களை எண்ணத்தொடங்கினார்.

இன்வாய்ஸ் பேப்பரை மடித்து கைப்பையில் வைத்து விட்டு, பின்னால் வந்தவர் அங்கே உட்கார்ந்திருந்த சிவப்பு சட்டை நபரிடம், ‘நீங்க எங்க ஏறுநீங்க’ என்றார். அவர் ‘T.கல்லுப்பட்டி’ என்றார். கண்டக்டர் சந்தேகமாக பார்த்துக்கொண்டே ‘எங்கே இறங்கனும்?’ என்றார். ‘காடனேரி விளக்கு’ என்றார் சிவப்பு சட்டை நபர். ‘டிக்கெட் வாங்கிட்டீங்களா?’ ‘ம்ம்.ம்ம்.’ என்று பையில் கை விட்டவரை ‘அடுத்த ஸ்டாப் தானே, எழுந்து நில்லுங்க விசில் கொடுக்கறேன்’ என்று சொல்லிவிட்டு முன்னால் நகர்ந்து சென்று காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

டிரைவரின் தலைக்கு மேல் பயணிகளைப் பார்த்துக்கொண்டிருந்த கடிகாரம் 11:30 என்றது. பயணிகள் ‘தேவதை இளம் தேவி’ என்ற பாடலைக்கூட இரசிக்காமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

***

காடனேரி விளக்கு. பஸ் மிகுந்த இரைச்சலுடன் புறப்பட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கிய செந்தில் அங்கேயே நின்று தனக்கு முன்னால் ஒரு பாம்பைப் போல நீண்டு வளைந்து கிடக்கும் தார் ரோட்டையே பார்த்துக்கொண்டு நின்றான். காடனேரி விளக்கிலிருந்து தன் கிராமமான காடனேரிக்கு செல்ல மூன்று கிலோமீட்டர் நடக்கவேண்டும். வாட்சைப்பார்த்துக் கொண்டான். மணி 11:45. ரோட்டில் ஆள் அரவம் சுத்தமாக இல்லை. இருட்டு கடுமையாக படர்ந்திருந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

செந்தில் காடனேரியில் தான் பிறந்தான். பண்ணிரண்டு வயது வரை காடனேரியிலே வளர்ந்தான். பிறகு குடும்பம் மதுரைக்கு மாறியவுடன் இந்த பத்து வருடங்களில் காடனேரியை மறந்தே போனான். ஆனால் காடனேரி விளக்கிலிருந்து காடனேரிக்கு செல்லும் ரோட்டில் இருந்த அந்த மிகப்பெரிய ஆலமரமும், அதற்கு பின்னாலிருந்த சுடுகாடும், அப்பத்தாவின் பேய்க் கதைகளும் மனதில் அப்படியே பதிந்துவிட்டன. சரியான நேரத்தில் வெளிவரத்துடிக்கின்றன.

அவனையுமறியாமல் ‘ராஜ ராஜ சோழன் நான்’ பாடல் வாயிலிருந்து வெளிப்பட்டது. ஓணான் ஒன்று காலுக்கடியில் புகுந்து ஓடியது. செந்திலை சிலீர் என்ற பயம் கலந்த உணர்ச்சி தாக்கி உடம்பெல்லாம் புல்லரிக்க செய்தது. நடப்பதை நிறுத்தி விட்டு பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை. தெளிவான நிசப்தம்.

யாராவது வந்தால் தேவலாம் போல இருந்தது. பால் வண்டி, மணல் லாரி அல்லது சிப்ட் முடிந்து திரும்புகிறவர்கள் என யாராவது உடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பயமாவது விலகும்.

காற்று கூட நின்று விட்டிருந்தது. ஏதேதோ சம்பந்தாசம்பந்தமில்லாத பாடலை வாய் முனுமுனுத்துக் கொண்டே வந்தது. கல்லுப்பட்டி லட்சுமி டாக்கீஸில் இரண்டாம் ஆட்டம் பார்த்திருக்க கூடாதோ? நேரத்தோடு வந்திருந்தால் ஒழுங்காக இந்நேரம் வீடு போய் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். சிவப்பு கலர் பேய்க்கு விருப்பமான கலரா? நான் சிவப்பு சட்டை வேறு போட்டிருக்கிறேனே. இவ்வளவு கருமையான இருட்டில் வெள்ளை வெளேர் என்று பேயொன்று வந்தால் தூரத்திலே தெரிந்துவிடாதா என்ன? பின்னால் வந்துவிட்டால். பேய் முதுகில் தானே அடிக்குமென்பார்கள்? சட்டென்று திரும்பிப்பார்த்தான். யாருமில்லை. எங்குமிருக்கும் காற்றைத்தவிர. தூரத்தில் சைக்கிளில் யாரோ வருவதைப்போல இருந்தது. உண்மைதானா? கண்களை நம்ப முடியாமல் பார்த்தான். உண்மைதான். சைக்கிளில் யாரோ வந்து கொண்டிருந்தார்கள். அருகில் வரட்டும் லிப்ட் கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

சைக்கிளில் வந்தவர் இவனைப்பார்த்ததும் நிறுத்தினார். அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். செந்தில் அவரிடம் ‘அண்ணே நான் காடனேரி வரைக்கும் போகனும், கொஞ்சம் செக்கிளிலே கொண்டுபோய் இறக்கிவிட்டுடறீங்களா? இருட்டில நடக்க பயமாயிருக்கு’ என்றான். அவர் ‘காடனேரியா? காடனேரியில எந்த வீட்டுக்குப்போகனும்?’ என்றார். ‘ஆசாரி வீட்டுக்கு’ என்றான் செந்தில். அவர் சிறிது நேரம் அமைதியாய் அவனைப்பார்த்துவிட்டு. பிறகு ‘சரி முன்னால் ஏறிக்க’ என்றார். பின்னால் ஏதோ மூட்டையிருந்தது. செந்தில் ஏறப்போகும் பொழுது, ‘கொஞ்சம் பொறு’ என்றவர், ஹேண்ட்பாரைப்பிடித்து முன் டயரை அமுக்கிப்பார்த்தார். பின ‘தம்பி, முன் டயரில காத்து இருக்கான்னு பாரு’ என்றார். டயர் பங்சர்.

‘அண்ணே. நீங்களும் காடனேரி தானா?’ என்றான் செந்தில் நடந்து கொண்டே. ‘இல்லப்பா. நான் கீழக்காடனேரி. ம். ஆசாரி வீட்டுக்கு என்ன விசயமா வந்திருக்க?’ என்றார் சைக்கிளைத் தள்ளிக்கோண்டே. மூட்டை பத்திரமாக் பின் கேரியரில் உட்கார்ந்திருந்தது. ‘அக்கா கல்யாணத்திற்கு தாலி செய்யக்கொடுத்திருந்தோம். அவங்கதான் காலம்காலமா எங்க குடும்பத்திற்கு தாலி செஞ்சு கொடுப்பாங்கலாம். நாளைக்கு வாங்கிட்டு மத்தியான பஸ்ஸிலே போய்டுவேன்’ என்றான். கொஞ்ச நேரம் அமைதி. இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

‘அண்ணே உங்க பேரு என்னண்ணே?’ என்று செந்தில் படர்ந்திருந்த அமைதிக்கு முற்றுப்புள்ளி வைக்கபார்த்தான். அவர் எதையோ தேடும் பாவணையில் இருந்தவர், திடீரென செந்தில் பக்கம் திரும்பி, ‘என்னப்பா? பேரா? ஆறுமுகம்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் தேடத்தொடங்கினார். ஆந்தை ஒன்று கருவேல மரத்தில் உட்கார்ந்து கொண்டு இவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. மறுபடியும் அமைதி. சைக்கிள் டயர்கள் கல்லில் ஏறி இறங்கும் சத்தத்தை தவிர வேறு சத்தங்கள் இல்லை.

‘அண்ணே, என்னண்ணே தேடுறீங்க?’ என்றான் செந்தில். ‘ம்..ம்.. ஒன்னுமில்லப்பா.’ என்றவர், மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்தார்.

கொஞ்ச தூரத்தில் ஆலமரம் தெரிந்தது. மேகச்சிறையில் விடுபட்ட நிலவு கொஞ்சம் வெளிச்சத்தைக் கொடுத்தது. உடன் ஒருவர் வந்து கொண்டிருந்தாலும் ஆலமரம் திகிலூட்டவே செய்தது.

திடீரென்று, ‘டேய். நீ அங்க தான் இருக்கியா? உன்னக் கொல்லாம விடமாட்டேன்டா’ என்று சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு மூட்டைக்குள் கைவிட்டு அறிவாளை எடுத்துக்கொண்டு ரோட்டைவிட்டு கீழிறங்கி ஓடினார் ஆறுமுகம். ரோட்டின் ஓரத்தில் பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் தண்ணீரில் அவர் கால் மிதித்து ஓடும் சத்தம் பயங்கரமாக கேட்டது. செந்தில் ஒன்றும் புரியாமல் விழித்தான். போய்விடலாம் என்று நினைத்தவனின் கால்கள் தூரத்தில் தெரியும் ஆலமரத்தைப் பார்த்தவுடன் நடக்க மறுத்தன.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு ஆறுமுகம், அவர் ஓடிச்சென்ற பாதையிலிருந்து வேகவேகமாக வெளிப்பட்டார். கையில் அறுவாள் இல்லை. வாய்க்காலில் இறங்கி வேகவேகமாக தண்ணீரை அள்ளி அள்ளி குடித்தார். செந்தில் அருகில் சென்று அவரை ‘அண்ணே’ என்று அழைத்தான். நிமிர்ந்த அவர் இவனைப்பார்த்துக்கொண்டே தொப்பென்று வாய்க்காலில் நிலைகுப்புற விழுந்தார். விக்கித்து நின்ற செந்தில் மறுபடியும் ‘அண்ணே’ என்றான். பதிலில்லை. மெதுவாக வாய்க்காலில் இறங்கினான். அவர் சலனமில்லாமல் படுத்துக்கிடந்தார். மூச்சிருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. பகீரென்றது. தூக்க முயற்சித்தான். முடியவில்லை. வேக வேகமாக ரோட்டில் ஏறி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவன் வேகமாக நடந்ததில் ஆலமரத்தை தாண்டியதைக்கூட அவன் கவனிக்கவில்லை. யாராவது தெனபடுகிறார்களா என்று அவன் கண்கன் தேடிக்கொண்டிருந்தன.

சிறிய பாலம் போன்று இருந்த திண்டில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அருகில் சென்று ‘ஐயா’ என்று அழைத்தான். கம்பளிப்போர்வைக்குள் உடலை மறைத்துக்கொண்டிருந்தவர் சிறிது நேரம் கழித்து திரும்பினார். அவர் வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது.’ஐயா ஒருத்தர் ஆலமரத்திற்கு பக்கத்தில வாய்க்கால்ல மூச்சு பேச்சில்லாம விழுந்து கிடக்கிறார். கொஞ்சம் உதவி செஞ்சீங்கன்னா தூக்கிரலாம்’ என்றான். அவன் இவனை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்து விட்டு, கம்பளியை விலக்கினார். ஒரு கை இல்லை. கம்பளியை மூடிக்கொண்டு மறுபடியும் திரும்பிக்கொண்டார். பீடிப்புகை மட்டும் வானத்தை நோக்கி மேலெழும்பிக்கொண்டிருந்தது.

செந்தில் மீண்டும் நடக்க ஆரம்பித்தான். கீழக்காடனேரியை கொஞ்ச நேரத்தில் தொட்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒத்தையாக நின்ற பொட்டிக்கடையின் கீழே ஒருவன் குத்தவவைத்து உட்கார்ந்திருந்தான்.

‘ஐயா ஒருத்தர் வாய்க்காலில்….’ என்று செந்தில் சொல்வதற்குள் அவன், ‘ அவன்கிட்டயிருந்துதான் நான் தப்பிச்சு ஓடியாறேன். என்ன பார்த்தானா கொன்னுபோடுவான்’ என்று சொல்லிவிட்டு தலையைப்பிடித்துகொண்டு கீழே பார்த்தான். அப்பொழுதுதான் செந்தில் கவனித்தான் கீழே குளமாக வாந்தி. செந்தில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அவன் மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.

தூரத்தில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகள் மட்டும் நடந்து வந்து கொண்டிருந்தனர். குழந்தைகளின் உடம்பில் பொட்டுத்துணியில்லை. இந்த பெண்ணிடம் உதவி கேட்கலாமா என்று தயங்கிய செந்திலிடம், அந்த பெண், ‘தம்பி, வழியில யாரையாவது சைக்கிள்ல பார்த்தியாப்பா?’ என்றாள். ‘ம்ம்..ஆறுமுகன்னு ஒருத்தர் வந்தார். இப்போ பேச்சு மூச்சில்லாம வாய்க்கல்ல விழுந்துகிடக்கிறார். அனேகமா..’ என்று முடிப்பதற்குள் ‘ஐயோ என்னங்க..எத்தன தடவ சொன்னேன்…’ என்று சொல்லிக்கொண்டே ஓடினாள். குழந்தைகளும் பின்னாலேயே ஓடின. ஒரு குழந்தை செந்திலை திரும்பிப்பார்த்தது.

முதலில் ஓடாமல் நின்று கொண்டிருந்த செந்தில், பிறகு என்ன நினைத்தானோ அவர்கள் பின்னால் ஓட ஆரம்பித்தான்.

***

காடனேரி விளக்கு. தன்னை இறக்கிவிட்ட பஸ் செல்வதையே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. யாராவது கண்டிப்பாக சைக்கிளில் வருவார்கள், தொத்திக்கொண்டு போய்விடலாம் என்று நினைத்து அங்கிருந்த பஸ்ஸ்டாண்ட் திண்டிலே உட்கார்ந்து விட்டான்.

சைக்கிளில் ஒருவர் வரவும், கை நீட்டினான். அவர் நிறுத்தவே, ‘அண்ணே காடனேரியில இறக்கி விட்டுடறீங்களா?” ‘பின்னால மூட்டையிருக்கு முன்னால ஏறிக்கோ’ என்றார் அவர். பாண்டி ஏறி உட்கார்ந்துகொண்டான்.

சைக்கிள் நபரிடமிருந்து சாரய நெடி தூக்கலாக அடித்தது. பாண்டி நாவில் எச்சில் ஊரியது. ‘அன்ணே, ஆலமரத்து சுடுகாட்ட தாண்டி இருக்கில கிணறு. அதுக்கு பின்னால இப்ப சாரயம் விக்கிறாய்ங்க பாத்தீங்களா?” என்றான். ‘அப்படியா? போனதில்லையேப்பா” என்றார் சைக்கிள் நபர். ‘அண்ணே இப்ப போவோமா. ஒரே ஒரு ரவுண்டு மட்டும் குடிச்சிட்டு உடனே போயிடலாம்” என்றான் பாண்டி. “இல்லப்பா, ஏற்கனவே நிறைய குடிச்சிட்டேன். வீட்ல கடங்காரி திட்டுவா” என்றார். “அக்காவ பத்தி பின்னாடி கவலப்படலாம். நீ மொதோ சைக்கிள அங்க விடுண்ணே” என்றான் தூரத்தில் தெரிந்த ஆலமரத்தைப் பார்த்துக்கோண்டே.

பாண்டியும், சைக்கிள் நபருக்கும் போதை தலைக்கேறியிருந்தது. இருவரும் ஏதேதோ உளரிக்கொண்டிருந்தனர். சைக்கிள் நபர் தன் பெயர் ஆறுமுகம் என்றும், தன் மனைவி தன்னை குடிக்ககூடாது என்று நச்சரிப்பதாகவும் கொல்லிக்கொண்டிருந்தவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபரிடம் சத்தமாக, “கொஞ்சம் ஊறுகா இருந்தா கொடுடா” என்றார். அந்த நபர் முறைத்துப் பார்த்துக்கொண்டே, மீதமிருந்த ஊறுகாயை இடது கையால் எடுத்துக்கொடுத்தார். ‘என்னா நொட்டாங்கையில் தார? இன்னொரு கை என்ன கள புடுங்குதா?” என்று சொல்லிக்கொண்டே ஊறுகாயை வாங்கினார் ஆறுமுகம். பாண்டி “அவன் ஒத்தக்கையண்ணே. சோத்தாங்கை அவனுக்கில்ல” என்று சொல்லி பயங்கரமாக சிரித்தான். ஒத்த கையன் முறைத்துக்கொண்டே பாட்டிலை முழுவதுமாக் குடித்து முடித்தான். “ஐயோ அம்மா” என்று அங்கே குடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வயிற்றைப்பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். அவன் துடிதுடித்து அழுவதைக்கண்டு கிணற்றுத் தவளைகளெல்லாம் பதுங்கிக்கொண்டன. அனைவரும் பீதியில் உரைந்தனர். அடித்த போதை இறங்குவதை போல இருந்தது. தொடர்ந்து நிறைய பேர் வயித்தை பிடித்துக்கொண்டு விழுந்தனர்.ஒத்தக்கையன் வயிற்றைப் பிடித்தவாறு எழுந்து சென்றான்

ஆறுமுகம் தான் குடித்துப்போட்ட மூன்று பாட்டில்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஆறுமுகத்திற்கு வயிற்றைப்புரட்டிக்கொண்டு வந்தது. பிறகு பயங்கரமாக வலித்தது. பாண்டி’ அண்ணே சாரயத்தில விஷம் கலந்திருச்சு போல இருக்குண்ணே” என்றவன் “ஐயோ அம்மா” என்று வயிற்றைப்பிடித்துக்கொண்டான்.

ஆறுமுகம் “ஐயோ. இப்போ என்ன செய்வேன்?” என்றவர், ” நான் வரமாட்டேன்னு சொல்லியும் நீ தாண்டா வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்த?” என்று பாண்டியை ஓங்கி ஒரு மிதி விட்டார். பாண்டி எழுந்து வயிற்றைப்பிடித்துக்கொண்டே ஓடினான்.

ஆறுமுகம் “ஐயோ, பிள்ள குட்டிகள யாரு காப்பாத்துவா? உன்னக்கொல்லாமா விடமாட்டேன்டா” என்று அவனை விரட்டிக்கொண்டு வந்தவர், வாய்க்காலில் தண்ணீரைப்பார்த்ததும், வேக வேகமாக அள்ளி அள்ளிக்குடித்தார். பிறகு பொத்தென்று வாய்க்காலில் விழுந்தார்.

பாண்டி வயிற்றைப்பிடித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். ஒத்தகையன் பாலத்தின் திண்டில் சாய்ந்து கிடந்தான். உயிர் போகும் அளவுக்கு கத்திக்கொண்டிருந்தான். பாண்டியால் வெகுதூரம் ஓட முடியவில்லை. வயிற்று வலி மிகப்பயங்கரமாக இருந்தது. பொட்டிக்கடையருகே நின்று சோடா வாங்கி குடித்தவன், குத்த வைத்து உட்கார்ந்து வாந்தியெடுக்க ஆரம்பித்தான். கை கால்களை உதைத்துக்கொண்டு கத்தினான். பிறகு மரத்தில் இவனுக்கு போட்டியாக கரைந்து கொண்டிருந்த காகத்தை இமைக்காமல் வெறிக்கத்தொடங்கினான்.

‘ஐயோ.. என்னங்க..எத்தனை தடவ சொன்னேன். குடிக்காதீங்க குடிக்காதீங்கன்னு” என்று கத்திக்கொண்டே ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் பின்னாலேயே இரண்டு குழந்தைகள் பொட்டுத்துணியில்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு குழந்தை திரும்பி பாண்டியைப் பார்த்தது.

***

“ஐயோ எத்தனை தடவை சொன்னேன்..” என்று சொல்லிக்கொண்டே ஓடினாள் அந்தப் பெண். குழந்தைகளும் கூட ஓடினர். முதலில் ஓடாமல் இருந்த செந்தில் ஓட ஆரம்பித்தான்.

அந்த பெண் வாய்க்காலில் விழுந்துகிடந்த ஆறுமுகத்தை நெருங்கினாள். “ஐயோ எங்கள விட்டுட்டு போய்டீங்களா? இந்த பிள்ளைகளை வெச்சு நான் எப்படி காப்பாத்துவேன்” என்று கதறிக்கொண்டே தூரத்தில் தெரிந்த கிணற்றைப் பார்த்தாள்.

செந்தில் செய்வதறியாமல் திகைத்து நின்றான். அந்த பெண் கிணற்றை நோக்கி ஓட அரம்பித்தது. குழந்தைகளும் பின்னாலேயே ஒடினர். செந்தில் “ஐயோ வேணாம். தற்கொலை செய்துக்காதீங்க” என்று அவர்களை தடுத்து விடும் நோக்கத்தோடு ஓடினான்.

திடீரென்று அந்த பெண், மற்றும் குழந்தைகளைக் காணவில்லை. ஓடிய சுவடே தெரியவில்லை. எங்கும் நிசப்தம். செந்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். ‘ஷ்..ஷ்’ என்ற சத்தம் கேட்கவே, கீழே பார்த்தான். ஒரு கரு நாகப்பாம்பு படமெடுத்து நின்று கொண்டிருந்தது.

***

கண்டக்டரின் விசில் சத்தம் கேட்டு பஸ் நின்றது. ‘ராஜா மகள் புது ரோஜா மலர்’ பாடல் சத்தமாக கேட்டது. கண்டக்டர் எழுந்து, ‘ஏய் யாருப்பா காடனேரி விளக்கு கேட்டது. சட்டுன்னு இறங்குப்பா’ என்றார். யாரும் எழுந்திருக்கவில்லை. இறங்கவில்லை.

எரிச்சலடைந்த கண்டக்டர் ‘அதுக்குள்ள தூங்கிட்டானா?’ என்று எழுந்து பின்னால் வந்தார், ‘ஏம்பா இங்க ஒரு சிவப்பு சட்டை உட்கார்ந்திருந்தானே. காடனேரி விளக்கு இறங்கனும்னு சொன்னானே. எங்க காணோம்?” என்றார்.

‘பஸ் வேற எங்கவும் நிக்கவேயில்ல. அவன் எங்க இறங்கினான்? எப்படி மாயமானான்?’ என்று யோசித்துக்கொண்டே, இன்வாய்சை எடுத்துப் பார்த்துவிட்டு பயணிகளை எண்ணினார். சரியாக இருந்தது. கண்டக்டர் குழம்பியவாறு டபுள் விசில் கொடுத்தார்.

***

15-09-2006 அன்று கடைசிப்பகுதிக்கு முந்தைய பகுதி சேர்க்கப்பட்டது.

15 thoughts on “தேன்கூடு போட்டி : காடனேரி விளக்கு (சிறுகதை)

 1. கதையும் நடையும் நல்லாருந்துச்சு. ஆனா எல்லாரும் ஏன் திடீர் திடீர்னு காணாம போய்ட்டாங்க?

  Like

 2. கார்மேகராஜா: மொட்டை மலை வேறு கதையில் வந்திருக்கிறது. மழையும் கொலையும் என்ற கதையைப் படியுங்கள். http://kuralvalai.blogspot.com/2006/08/blog-post.htmlஅமுதன்: //ஏன் எல்லாரும் திடீர்னு காணாமப்போய்ட்டாங்கமிகவும் கடினமான வேலை, தான் எழுதிய கதையில் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்வது தான். முடிவு உங்கள் கையில். புரிந்தவரை அவரவர் முடிவு அவரவர்களுக்கு. என்னளவில் அவர்களெல்லாம் இறந்தவர்களின் நினைவுகள். அல்லது பேய்கள்.

  Like

 3. 15th portion இல்லாம கதை கோர்வையா இல்லை.நல்ல திகில் கதை முத்து. கண்டக்டர் இந்த மாதிரி தினமும் ரெட் கலர் சர்ட் பாத்தாருனா கொஞ்சநாள கழிச்சி அவரும் காணாமல்(!) போகலாம்

  Like

 4. நிர்மல் : வருகைக்கு நன்றி.>>15th portion இல்லாம கதை கோர்வையா இல்லைஉண்மைதான். அதனால் தான் மறுபடியும் அந்த பகுதியைச் சேர்த்தேன். >>கண்டக்டர் இந்த மாதிரி தினமும் ரெட் கலர் சர்ட் பாத்தாருனா கொஞ்சநாள கழிச்சி அவரும் காணாமல்(!) போகலாம் பராவியில்லையே பார்ட்-2 எழுதலாம் போல. ஐயையோ நான் இல்லை என்று நீங்கள் தலைதெறிக்க ஓடுவதை என்னால் பார்க்கமுடிகிறது :)))

  Like

 5. உங்கள் கதைகளில் கதை சொல்ல நீங்கள் பயன் படுத்தும் உத்தி மிக அருமை.கனவின் கனவுஅப்புறம் நகரும் நாட்கள்இந்த கதையில மேலும் கீழுமாய் நகரும் நிகழ்வுகள்நல்லா இருக்கு முத்து.

  Like

 6. பாலா: வருகைக்கு நன்றி. கோர்வையான கதை என்று கூறியதற்கு மிக்க நன்றி.நிர்மல்: வாங்க சார். >>உங்கள் கதைகளில் கதை சொல்ல நீங்கள் பயன் படுத்தும் உத்தி மிக அருமைரொம்ப தாங்ஸ்.

  Like

 7. நாந்தானுங்க காடனேரி விளக்கு கேட்டது. இனிமே கேட்கவே மாட்டேனுங்க.. :-)படிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்திச்சு உங்க கதை. ஒரு வரியில சொல்லணும்னா … இங்கே பாருங்க.

  Like

 8. முரட்டுக்காளை: வருகைக்கு நன்றி. //காடனேரி விளக்கே கேட்கமாட்டேனுங்கlol. உங்க விமர்சனம் அருமை. உங்களுக்கெல்லாம் எங்கிருந்து நேரம் கிடைக்கிறது?

  Like

 9. //உங்க விமர்சனம் அருமை. உங்களுக்கெல்லாம் எங்கிருந்து நேரம் கிடைக்கிறது? //நன்றிங்க முத்து..நம்ம கதை, விமர்சனமெல்லாம் நள்ளிரவுல எழுதினதுங்கோவ்… (பேய்க்கதையெல்லாம் படித்த பிறகு தூக்கம் வருமா என்ன?)

  Like

 10. என்னாது.. எல்லாமே பேயா….
  நல்லவேளை நா அந்தூருல்ல…

  நல்ல கத… அவ்வ்வ்….

  Like

Leave a Reply to Yuva Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s