(சிறுகதை)
“நானும் கேள்விப்பட்டிருக்கேன்யா. எங்க ஊர்ல கூட பேசிப்பாய்ங்க. நான் ஒரு தடவ நேர்லயே பாத்திருக்கேன்.” என்றார் இன்ஸ்பெக்டர். “நீங்க நேர்ல பாத்திருக்கீங்களா? நான் ஆவிகளோட பேசவேசெஞ்சிருக்கேன்” என்றார் ஏட்டையா பெருமையாக. “அப்படியா? சும்மா ரீல் சுத்தாதயா” “இல்ல இன்ஸ்பெக்டர் சார். உண்மை நான் பேசிருக்கேன். சில ஆவிங்க என் கூட பேசும். இப்ப வேணும்னா செஞ்சு பாக்கலாமா?” இன்ஸ்பெக்டர் ஆழ்ந்து யோசித்தார். பிறகு “ம்ம்..செஞ்சு பாக்கலாம்”
டேபிளில் இருந்த பொருட்கள் யாவும் தங்கள் இருப்பிடத்தை தற்காலிகமாக இழந்தன. பூமிபந்து உட்பட. ஏட்டையா ஒரு சாக்பீஸை எடுத்துவந்து டேபிளில் கோடுகள் போட்டார். பிறகு அழகாக A B C என்று Z வரைப் போட்டார். பிறகு 1 2 3 என்று ஒன்பது வரை எண்கள் எழுதினார். லைட்கள் ஆப் செய்யப்பட்டன. இரண்டு மெழுகுவர்த்திகள் மட்டும் ஏற்றப்பட்டன. இன்ஸ்பெக்டருக்கு வேர்த்து விட்டது.
ஒரு தடித்த இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஒரு கட்டத்தில் வைத்தார் ஏட்டையா. ஒரு முனையை அவர் பிடித்துக்கொள்ள மறுமுனையை இன்ஸ்பெக்டர் பிடித்துக்கொண்டார். இருவரும் மவுனமாக அமர்ந்திருந்தனர்.
திடீரென்று நாணயம் HA HA HA HA என்று நகர்ந்த்து. “பாத்தீங்களா சார், எப்படி சிரிக்குதுன்னு” என்றார் ஏட்டையா.”யாருய்யா சிரிக்கிறா?” என்றார் இன்ஸ்பெக்டர் அப்பாவியாய். முறைத்த ஏட்டைய்யா, பின்னர் சற்று பவ்யமாக “காட்டேரி சார்” என்றார். “என்னது” என்று கிட்டத்தட்ட விழுந்தேவிட்டார் இன்ஸ்பெக்டர்.ஏட்டையா யார் நீ என்று கேட்டதற்கு நாணயம் K A T E R I என்று நகர்ந்தது. அதிர்ந்து போன ஏட்டையா “சாரி நாங்க உன்ன கூப்பிடல. நீ போயிடு” என்றார். நாணயம் N O என்று நகர்ந்தது. ஏட்டையா “தயவுசெஞ்சு போயிடு” என்றார்.
டேபிளுக்கு மேலிருந்த குண்டு பல்ப் சட்டென்று உடைந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் கீழே விழுந்து சுக்கல் சுக்கலாக உடைந்தது. இன்ஸ்பெக்டர் அரண்டு போய்விட்டார். ஒரே ஒட்டமாக ஓடி வெளியே சென்று நின்று கொண்டார். ஏட்டையாவும் பிற காண்ஸ்டபிள்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் ஓடினர். பிறகு சுதாரித்து லைட்களைப் போட்டனர். ஸ்டேசனுக்கு உயிர் வந்தது.
வெளியே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் இறங்கினார். நேரே, வெளியே விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரிடம் வந்து “சார்” என்றார். இன்ஸ்பெக்டர் திரும்பி தன் பயத்தை மறைக்கும் பொருட்டு எரிச்சலாக : யாருய்யா நீ என்றார். “சார் என் பேரு மாணிக்கம் சார்” என்றார் வந்தவர்.
***
“உங்களுக்கு எத்தனவாட்டிடா சொல்றது? வேலைசெய்யுற பொண்ணுங்க மேல கையவெக்காதீங்கன்னு? அப்படியா கொழுத்து போய் அலயறீங்க? இந்ததடவ உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. யார் சொன்னாலும் நான் கேட்கப்போவது இல்ல. உங்க மூனு பேரையும் நான் டிஸ்மிஸ் செய்யறேன். உங்க சம்பளபாக்கிய அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல போய் வாங்கிக்கோங்க. இப்ப நீங்க போகலாம்.”
“இல்ல சார். இந்த தடவ..”
“என்னால ஒன்னும் செய்ய முடியாது சுந்தர். கெட் அவுட் நௌவ்”
மானேஜர் மாணிக்கத்தின் அறைக்கதவு படீரென்று சாத்தப்பட்டது. சுவர் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது போல இருந்தது. நெற்றியில் தோன்றிய வியர்வையை கர்சீப்பை எடுத்து துடைத்துக்கொண்டார். வெள்ளை வெளேர் என்ற கர்சீப். முனையில் அழகாக G என்று எம்ப்ராய்ட் செய்யப்பட்டிருந்தது. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
“ஹலோ சார். ம்ம். சொல்லுங்க சார்” “ம்ம் அனுப்சுட்டேன் சார்” “இது நல்ல சந்தர்ப்பம். அவிங்களா வந்து மாட்னாய்ங்க. ஒன்னும் பிரச்சனை இருக்காது சார்.” “பொண்ணுங்க விசயம்ங்கறதனால யூனியனும் ஒன்னும் கண்டுக்காது.” “பாத்துக்கலாம் சார்” “ஓகே சார்” டொக். நீல நிற ரிசீவர் பத்திரமாக தன் இருக்கையில் சென்று சமர்த்தாக அமர்ந்துகொண்டது.
மாணிக்கம் சேரில் சாய்ந்து விட்டத்தை பார்த்தான். பேன் மிக மெதுவாக சுழன்றுகொண்டிருந்தது. எழுந்து சென்று பேனின் வேகத்தை அதிகப்படுத்தினான். மேஜையிலிருந்த ஓரிரு பேப்பர்கள் பறந்தன. AAA மோட்டார்ஸின் வவுச்சர் இவன் காலடிக்கு வந்தது.
சில நம்பர்கள் டயல் செய்து ரிசீவரை காதுக்கு கொடுத்தான். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிசீவரை படீரென்று சாத்தினான். அறையின் மூலையில் இருந்த மண்பானையில் கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டான். குளிர்ச்சியாகவே இல்லை. மண்பானையில் கூட டூப்ளிகேட் செய்வாய்ங்களோ என்று நினைத்துக்கொண்டான். மீண்டும் வந்து டயல் செய்தான். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். “எங்கடி போன?” “அடுப்பில வேலையா இருந்தேங்க” “ம்ம்..ஏன் இப்படி மூச்சு வாங்குது உனக்கு..ஓடி வந்தியா?” “ஆமாங்க. நீங்க கிளம்பிட்டீங்களா?” “இல்லடி. இன்னும் நேரமாகும். இன்னைக்கு கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். நீ சாப்பிட்டு படு. எனக்கு எடுத்துவெக்க வேணாம்” “ம்ம்..சரிங்க. நான் பக்கத்து கோயிலுக்கு போயிட்டு வாரேன்” “ம்ம்.”
***
குளிர்ந்த காற்று முகத்தை இதமாக வருடிக்கொண்டிருந்தது. பின்னிரவில் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிச்செல்வது என்பது மிகவும் ரசிக்கத்தகுந்த ஒன்று. யாரைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை. தெருவிலும் ரோட்டிலும் ஈ காக்கா இருக்காது. அதுவும் டிசம்பர் மாசத்து இரவு என்றால் பனிக்காற்று மேலும் அழகு சேர்க்கிறது. தனது வீடு இருக்கும் தெருவுக்கு திரும்பினான். தங்கம் பலசரக்கு கடைக்கு அருகிலே இருக்கும் பெட்டிக்கடை திறந்திருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஒரு டீ சொல்லிவிட்டு காலியாக இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். தெருவில் இரண்டொரு குடிமகன்களைத்தவிர யாரும் இல்லை. ஆங்காங்கே தெருநாய்கள். இந்த தெருநாய்களுக்கு விவஸ்தையே கிடையாது என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே டீயை வாங்கிக்கொண்டான். டீயின் இளஞ்சூடு உள்ளங்கையில் மிகவும் இதமாக படிந்தது. டீ மாஸ்டர் தன்னை கூர்ந்து பார்ப்பதைப் போல உணர்ந்தான்.
—
ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு. பின்னால் வைத்திருந்த கவரை எடுத்து முழுதுமாக ஸ்கூட்டரை மூடினான்.. கேட்டின் கொண்டியை விடுவித்துக்கொண்டு உள்ளே சென்றான். இரும்பு கேட் மிகுந்த அபஸ்வரமாய் ஒலி எழுப்பியது. குளிருக்கு கேட்டுக்கு அருகே முடங்கிக்கிடந்த பூனை எழுந்து சலிப்பாக நெட்டிமுறித்துக்கொண்டது. பிறகு இவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.
கங்கா இந்நேரம் எழுந்து லைட்டப்போட்டிருப்பாளே? கதவைத்தட்டினான்.
—
இனி தட்டி பிரயோஜனம் இல்லை என்று பையில் வைத்திருந்த மாற்றுச்சாவியை சிகரெட் லைட்டரை வைத்து தேடி எடுத்து திறக்கமுயன்றான். பூனை இவனையே முறைத்துக்கொண்டிருந்தது.
—
வீடு இருட்டாக இருந்தது. சுவற்றைத்தடவி சுவிட்சை ஆன் செய்தான். இரண்டு சினுங்களுக்குப் பிறகு டியூப் லைட் உயிர் பெற்றது. கங்கா என்றழைத்தான். பதிலில்லை. செருப்பைக் கழற்றாமலே படுக்கையறைக்குச் சென்றான். அங்கு யாரும் இல்லை. சமயலறை. சமைத்து வைத்தவை வைத்தபடி அப்படியே இருந்தன. கங்கா என்று மிகச் சன்னமாக முனங்கினான்.
வெளியே வந்து படியில் உட்கார்ந்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வியர்வை அரும்பியது. கைகள் நடுங்கியபடியே இருந்தன. மணி இரவு ரெண்டு. எங்கே போயிருப்பாள்? அவளது பழைய செருப்புக்கள் ஒரு மூலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடந்தன, கவனிக்கப்படாமல், தூசி படிந்து.
***
“யாருய்யா நீ” என்றார் இன்ஸ்பெக்டர் தனது பயத்தை மறைக்கும் பொருட்டு எரிச்சலாக. “சார் என் பேரு மாணிக்கம் ” என்றார் வந்தவர்.
—
“என்ன பேரு சொன்ன? கங்காவா? ஒரு கம்ப்ளயண்ட் எழுதிக்கொடுத்திட்டு போ. நாளைக்கு காலையில பாக்கலாம்.” என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் ஏட்டையாவைக் கைகாட்டினார். ஏட்டையா கொடுத்த பேப்பரில், எழுதமுடியாமல் மாணிக்கத்தின் கைகள் உதறல் எடுத்துக்கொண்டேயிருந்தன. மாணிக்கம் டேபிளில் உடைந்து கிடக்கும் பல்பையும், கிழே சுக்கலாக கிடக்கும் கெடிகாரத்தையும் வினோதமாக பார்த்துக்கொண்டேயிருந்தான்.
***
கங்கா ஓடாத. நில். இங்க வா. எங்க போற. போகாதடி. ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங். டக்கென்று முழித்தான் மாணிக்கம். ஓ எல்லாம் கனவா? என்று நினைத்தான்.கங்கா போன் அடிக்குது பார். வந்து எடுடி. ட்ரிங். ட்ரிங். பாதித்தூக்கத்தில் சென்று போனை எடுத்தான். ஹலோ. ட்ரிங். ட்ரிங்.ட்ரிங். ஹலோ.ஹலோ. அது தான் எடுத்தட்டன்ல. ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங். ஓ. காலிங்பெல்லா. சட்டென்று முழு நினைவுக்கு வந்தான். ஹாலைத்திரும்பிப் பார்த்தான். சுத்தம். கங்கா. ஓட்டமும் நடையுமாக போய் கதவைத்திறந்தான்.
ஏட்டையாவும். கான்ஸ்டபிளும் நின்றிருந்தார்கள். “சட்டைய போட்டுட்டு என் கூட வா” என்றார் ஏட்டையா. மாணிக்கம் அதிர்ந்தான். “எ..எ…எ..என்ன” “போய்..சட்டைய போட்டுட்டு வா.. சொல்றேன்”
—
“கோயிலுக்கு பின்னால இருக்கிற ஆத்துப்பாலத்தில உன் பொண்டாட்டி செத்துக்கிடக்குறா” என்றார் ஏட்டையா. சுசுகி இன்னும் வேகமெடுத்தது. மாணிக்கத்தின் உலகம் தலைகீழாக சுழன்றது. காண்ஸ்டபிளின் தோள்களை இறுக்கமாக பற்றிக்கொண்டான். ரோட்டில் வாகனங்கள் அனைத்தும் சத்தமின்றி நிசப்தமாக சென்றுகொண்டிருந்தன.
***
இரவு மணி ஏழு இருக்கும். சுசுகி மெதுவாக வந்து டீக்கடையின் முன்னால் நின்றது. இன்ஸ்பெக்டர் சுசுகியிலிருந்து இறங்கி ஸ்டாண்டிட்டு அதில் சாய்ந்து நின்றுகொண்டு ஸ்டைலாக ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்துக்கொண்டார். ஏட்டையா டீக்கடைக்குள் சென்று எதையோ வாங்கி பையில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
இண்ஸ்பெக்டர் தங்கம் பலசரக்குக் கடையை நோட்டம் விட்டார். கங்கா ஏதோ வாங்கிக்கொண்டிருந்தாள். கடைக்காரர் கொடுத்த ஏதோ ஒன்றை சட்டென்று அவசரமாக வாங்கி பையில் போட்டுக்கொண்டாள். கொடுக்கும்போது கடைக்காரர் கங்காவின் கைகளில் கிள்ளியதை இண்ஸ்பெக்டர் கவனிக்காமல் இல்லை.
கங்கா கடையை விட்டு இறங்கி வேகவேகமாக பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றாள். இன்ஸ்பெக்டர் மெதுவாக நடந்து பலசரக்குக் கடையில் ஏறினார். இன்ஸ்பெக்டரை பார்த்த பலசரக்கு கடைக்காரர் அதிர்ந்தார். இன்ஸ்பெக்டர் சிரிக்கவே. பலசரக்கு கடைக்காரரும் சிரித்தார். இன்ஸ்பெக்டர் என்ன என்றார் சிரித்துக்கொண்டே. “என்ன நடக்குது”. “ஒன்னும் இல்லீங் சார்” என்றார் கடைக்காரர் இன்னும் சிரிப்பை நிறுத்தாமல். உள்ளே திரும்பி “டேய் பையா சாருக்கு ஒரு சேர் போடுடா” என்றார்.
இன்ஸ்பெக்டர் உட்கார ஏட்டையா வந்து நின்றார். ஏட்டையா கடைக்காரரிடம் கையை நீட்ட. கடைக்காரர் “நேத்துதானே சார் கொடுத்தேன்” என்றார். “நேத்து கொடுத்தா இன்னைக்கு நீ சீடி கொடுக்கலையா” என்றார் இன்ஸ்பெக்டர் சற்று கடுமையாக. “எங்க சார்.. முன்ன மாதிரி இல்ல சார். காலெஜ் கேர்ல்ஸ் தான் கொஞ்சம் வருதுங்க. அப்புறம் இந்த மாதிரி சில பேமிலி பொண்ணுங்க” என்று கங்கா சென்ற திசையை நோக்கி கையைக் காட்டினார்.
“சரி நாளைக்கு சேர்த்து வித்துக்கோ இன்னைக்கு பணத்த குடு” என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கி சுசுகிக்கு வந்து டீக்கடைக்காரன் கொடுத்த டீயை வாங்கி சுவராஸ்யமாய் உறிஞ்சிக்கொண்டே கங்கா சென்ற திசையை நோக்கி பார்த்துக்கொண்டேயிருந்தார்.
***
காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கங்கா முதலில் பயந்தாள். பிறகு பார்த்துக்கொண்டிருந்த சீடியை நிறுத்திவிட்டு சீடியை எடுத்து கீழே இருந்த புத்தகத்துக்குள்ளே மறைத்து வைத்தாள். டீவியை ஆப் செய்து விட்டு, மெதுவாக சென்று கதவைத்திறந்தாள். இன்ஸ்பெக்டர்.
எதிர்பாராத சமயத்தில் இன்ஸ்பெக்டர் அவளை உள்ளே தள்ளிக்கொண்டு நுழைந்தார். இங்க அந்த மாதிரி சீடி நிறைய இருக்காமே என்று சொல்லிக்கொண்டே வீட்டை தேடுவது போல பாவனை செய்தார். பிறகு கதவைப் பூட்டி தாழ் போட்டார்.
“இல்ல சார் வந்து சார்..” என்று கங்கா முனகியதை அவர் கேட்கவேயில்லை.
***
காலிங்பெல் சத்தம் கேட்டு கங்கா திடுக்கிடவே செய்தாள். இன்ஸ்பெக்டர் அவசர அவசரமாக பேண்டை மாட்டிக்கொண்டார். கங்கா சேலையை சரிசெய்து கொண்டு வேறு வழியில்லாமல் கதவைத்திறக்க போனாள். இன்ஸ்பெக்டர் ஒளிவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார்.
கதவைத் திறந்தாள் கங்கா. நின்று கொண்டிருந்தது ஏட்டையா. “அம்மா. இன்ஸ்பெக்டர் இருக்காராமா? கொஞ்சம் வரச்சொல்லுங்கம்மா. அவசர கேஸ் ஒன்னு” என்றார் ஏட்டையா.
***
“ஏன்யா ஏட்டையா இவ்வளவு நாளாச்சு இந்த கேசில ஒன்னுமே பிடிபட மாட்டீங்குதே. கங்கா செத்து ஒரு மாசமாகுது. இன்னும் ஒரு லீட் கூட கிடைக்கலியேயா. எந்தப்பக்கம் போனாலும் ஒரே முட்டுச்சந்தா இருக்கே. நமக்கு வேண்டப்பட்ட பொண்ணு வேற” என்று சொல்லி இன்ஸ்பெக்டர் சற்று சீரியஸானார். ‘ஒருவேளை விசயம் தெரிஞ்சு கங்காவோட வீட்டுக்காரன் போட்ருப்பானோ” என்றார். ஏட்டையா “இருக்கலாம் சார். ஆனா தெரியறதுக்கு வாய்ப்பில்லையே. தெரிஞ்சாமாதிரியும் தெரியலையே. தெரிஞ்சிருந்தா அவன் எதுக்கு ராத்திரியோட ராத்திரியா கம்ப்ளயின்ட் பண்ண வரான்? அதுவும் உங்ககிட்ட” என்றார். முறைத்த இன்ஸ்பெக்டர் “அதுவும் சரிதான். எனக்கு மண்டைய குழப்புதுய்யா. ஒரு பீடி இருந்தா குடு” என்றார்.
ஏட்டையா “ஆவி ஜோதிடம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா சார்” என்றார். கொஞ்சம் அதிர்ந்த இன்ஸ்பெக்டர் “என்னது ஆவி ஜோதிடமா. அன்னிக்கு பட்டதே போதும்யா இனிமே ஆவிகளோட சங்காத்தமே வேணாம்” என்றாஎ இன்ஸ்பெக்டர். “ஆவி ஜோசியம் பாக்கலாம் சார் எங்கேயாவது லீட் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றார் ஏட்டையா.
***
மீடியம் அமைதியாக இருந்தார். ஏதும் வந்ததற்கான அறிகுறிகள் அவ்வளவாக இல்லை. இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. திடிரென்று ஏதோ தெலுங்கில் ஏதோ பேசினார் மீடியம். வேங்கஒலிபேசுரா கொடுக்கா என்றார். பிறகு அமைதியானார். பிறகு ஏதோ சட்சட்சட்சட்சட்சட்சட்சட் என்றார். உண்மையிலே அது ஏதோ மொழி தான் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் பரிதாபமாக ஏட்டையாவைப் பார்த்தார். ஏட்டையாவுக்கும் ஏதும் புரிந்திருக்கவில்லை என்று அவரது குழம்பிய முகம் காட்டியது.
நீண்ட அமைதிக்குப் பிறகு மீடியம் சாந்தமானார். பிறகு இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் ஒன்றும் தேராது என்று நினைத்து எழுந்திருக்கையில் “இன்ஸ்பெக்டர்” என்ற பெண்குரல் அமைதியாக ஒலித்தது. இன்ஸ்பெக்டருக்கு புல்லரித்து விட்டது. திரும்பிப் பார்த்தார். “நான் தான் கங்கா வந்திருக்கிறேன்” என்றார் மீடியம்.
***
“என் புருஷனுக்கு என் மேல சந்தேகம் எப்பவுமே. உங்க கூட இருந்தப்பவும். இல்லாதப்பவும். நீங்க வந்து போக ஆரம்பிச்ச பிறகு இன்னும் அதிகமாகிருச்சு. எப்பப்பாத்தாலும் என் மேல சந்தேகம் சந்தேகம். நிறைய தடவ போட்டு அடிஅடின்னு அடிச்சிருக்கார். அழுது அழுது என் கண்ணீரே வத்திப்போச்சு. அன்னைக்கு கோயிலுக்கு போறேன்னு சொன்னப்ப சரின்னு சொன்னவர். நான் கோவிலுக்கு போனப்பிறகு என்னை கண்காணிக்க வந்தார். நான் கோவிலைச்சுற்றி விட்டு நீண்ட நேரமாக பாலத்தில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாலத்திலிருந்து குதித்து விடலாம் என்று கூட யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் பாலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருந்த -இல்லை இல்லை நகர்ந்து கொண்டிருந்த- ஆற்றின் தாங்கமுடியாத துர்நாற்றத்தால் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்து வைத்திருந்த போதுதான், அவர் வந்தார். யார எதிர்பார்த்து இங்க உட்கார்ந்திருக்க என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை சும்மாதான் உட்கார்ந்திருக்கேன்னு சொல்லியும் அவர் கேட்கவில்லை. என் மீது அபாண்டமாக வார்த்தைகள் அள்ளி வீசினார். என் குடும்பத்தை கேவலமாக பேசினார். என் குடும்பத்தை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது..ஹக்..ஹக்..ஹக்..ஹக்..”
டஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சோடா உடைக்கப்பட்டது. மீடியம் சோடாவைக் குடித்தார். “டொரினோ இல்லையா?” என்றார். இன்ஸ்பெக்டர் வெளியில் நின்று கொண்டிருந்த காண்ஸ்டபிளை கூப்பிட்டு வாங்கிவரச்சொன்னார். நீண்ட நேரம் மவுனமாக உட்கார்ந்திருந்தார் மீடியம். இன்ஸ்பெக்டர் அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மீடியத்தின் கைகள் இழுத்துக்கொண்டன. விரல்கள் பிணைந்துகொண்டன. அவர் உடல் விரைத்தது. நாடி கட்டிக்கொண்டது. வார்த்தை வருவதற்கு மிகவும் கடினப்பட்டது. டஸ். டஸ். மஸ். கஸ். மஸ். கஸ். புர்..சர்..மங்.சங்.டஸ் டஸ் டஸ் புங்.. என்று வினோதமான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தவர் சட்டென்று மென்மையான பெண் குரலுக்கு மாறினார்.
“என் குடும்பத்தை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால் தான் அவர் எனக்கு உறவினர் யாரும் இல்லாத இந்த ஊருக்கு அழைத்து வந்தார். எங்களுக்கு இங்கே யாரையும் தெரியாது. அது ஒரு வகையில் வசதியும் கூட. என் குடும்பத்தை தரக்குறைவாக பேசிய பொழுது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவரை விலக்கி நடக்க முற்பட்டேன். அவர் என்னைப்பிடித்து இழுக்கவே நான் திமிறினேன். என்னை இறுக்கமாக பிடித்துக்கொண்ட அவர் என்னை மிகுந்த கோபத்தோடு கீழே தள்ளி விட்டார். எதிர்பாராமல் கீழே விழுந்த நான் அருகில் இருந்த கல்லில் மோதி பாதி நினைவை இழந்தேன். அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவர்..அவர் அவர்..ஹக் ஹக் ஹக் ஹக் ஹக்”
டஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். டொரினோ உடைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் எழுந்திருத்தார். “ஏட்டையா வண்டியஎடு.”
***
மாணிக்கம் கைது செய்யப்பட்டான். “நான் கொல்லவில்லை நான் கொல்லவில்லை” என்று அவன் கோர்ட்டில் கதறிக்கொண்டேயிருந்தான். சாட்சியங்கள் அவனுக்கு எதிராகவே இருந்தது.
***
epilogue.
———–
அந்த தெரு மிகவும் அமைதியாக இருந்தது. மிகவும் குறுகலாகவும் இருந்தது. நாய்கள் வழியிலே படுத்துக்கொண்டிருந்தன. கவனிக்காமல் விட்டால் மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. மிதித்தால் அவைகளுக்கு கோபம் தலைக்குமேல் ஏன் காதுக்கு மேலேயே வரும். ஏட்டையா மிகவும் கவனமாக கடந்து சென்றார். ஒரு வீட்டின் முன் சென்று நின்றார். அந்த வீட்டின் சுவரில் காவி பூசப்பட்டிருந்தது. பிறகு மெதுவாக தட்டினார். சரியாக மூன்று தட்டுகளுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. மீடியம். சபாஷ் என்று சொல்லிவிட்டு கைகளில் ரூபாய் நோட்டுக் கத்தை ஒன்றைத் திணித்தார். மீடியம் வாங்கிக்கொண்டு மிக மெதுவாக சிரித்தார். பிறகு ஹக் ஹக் ஹக் ஹக் என்றார்
—
கங்கா கோயிலைச் சுற்றி வந்தாள். மனதுக்கு ஏதோ போல இருந்தது. ஒரு புறம் நீண்ட துக்கமாக இருந்தது. ஏன் இந்த தவறை செய்ய ஆரம்பித்தோம் என்று வருந்தினாள். ஆற்றுப்பாலத்துக்கு அருகே சென்று அமர்ந்தாள். ஆற்றின் துர்நாற்றம் அவளது நிலையை மிஞ்சிவிட்டிருந்தது. ஏதும் பேசாமல் பாலத்திலே உட்கார்ந்திருந்தாள். ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாதது கொஞ்சம் வசதியாக இருந்தது. நீண்ட நேரம் தனிமையில் உட்காந்திருக்கவே விரும்பினாள். தன்னை முழுதாக அழித்துவிட விரும்பினாள். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தன்னை கண்டதுண்டமாக வெட்டிப்போட்டுவிட மாணிக்கத்திடம் சொல்லவேண்டும். மாணிக்கம் மிகவும் நல்லவன். மாணிக்கம் என்னை மன்னிப்பியா? என்றாள் மனசுக்குள். தோளில் கைவிழ திரும்பிப்பார்த்தாள். ஏட்டையா. சிரித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார். வாயில் சாராய நெடி.
***
கதை நல்லா இருக்கு. ஆனா ஆவிகள் இல்லாமயே கதையை முடிச்சிட்டீங்க!:((
LikeLike
நல்ல திகில் கதை படிக்கனுங்கறது ரொம்ப நாள் ஆசை. முத்து எழுதியிருக்காறேனு ஆவலா வந்தா ராஜேஷ்குமார் கதை மாதிரில ஆயிடுச்சு.
LikeLike
ஆவி அம்மணி: வாங்க. ஆவி விஜயம் நல் விஜயமாகட்டும். நான் எப்படி குழப்பியடிச்சு எழுதினாலும் பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி. ஆமா நீங்க ஜோசியம் எல்லாம் சொல்றது உண்டா?நிர்மல்: திகில் கதையா? எழுதிட்டா போச்சு. 🙂 ஆனா இது கண்டிப்பா திகில் கதைன்னு நினைச்சு நான் எழுதல. தலைப்பும் “ஆவி” என்று வரவேண்டாம்னு நினைச்சேன் ஆனா வேற தலைப்பு யோசிக்க முடியல அதுதான் அப்படியே விட்டுட்டேன். இதில் ரெண்டு விசயங்கள் உண்மையிலே நடந்தவை. சீடி மேட்டர் மற்றும் ஆவி ஜோதிடம். நீங்க முடிவ யூகிச்சீங்களா? யார் கொலை செய்திருப்பா என்று யாரையும் யூகிக்க விடக்கூடாதுங்கறது மட்டும் தான் கதையின் நோக்கம்.
LikeLike
Kathai romba nalla irunthathu. Starting koncham kulappama irunthaalum appuram poga poga nalla flow. Vaalthukkal
LikeLike
கதை நல்ல இருக்குது. ம்… ஏட்டையா “ஆவி ஜோதிடம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா சார்” அப்படி கேகும் போதே guess பண்ண முடிந்தது. முதல் பகுதியில் ஏட்டையா டீ கடைக்கு வருவதை கையான்டா விதம் நன்றுNavaneeth
LikeLike
திணேஷ்: கதையைப் பொறுமையாக படித்ததற்கு நன்றி. மீண்டும் வருக! உங்க profile ஐ நான் தான் முதல்ல பார்த்தேன்னு நினைக்கிறேன்! No Of Views : 1 ன்னு காட்டிச்சு!நவனீதா: ம்ம்..ஏட்டையா டீ கடைக்கு வருவது எதேச்சையாக எழுதின ஒன்று. நான் மீண்டும் கதையை முதலிலிருந்து படிச்சப்போதான் நல்லாயிருக்கேன்னு நினைச்சேன்.
LikeLike
MSV Muthu,The BOSS – Bachelor of Super Stories !!!
LikeLike