முன்னும் பின்னும்.
4
இரவு வெக்கையாக இருந்தது. காற்று கொஞ்சம் கூட இல்லை. அந்த மொட்டைமலையில் இருந்த ஒற்றை ஆலமரம் என்ன செய்வதென்று தெரியாமல், தனக்கு கீழே குழுமியிருந்த சிறுவர்களை எரிச்சலோடு பார்த்தது. இன்றைக்கும் தூக்கம் போச்சா என்று அது நினைத்துக்கொண்டது போல.சிறுவர்கள் பல வயதில் இருந்தனர். ஒரு சில பெரிய பையன்கள் கூட அந்த கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் எல்லோரும் எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர். அவர்கள் குழுமியிருந்த இடத்தில் நடுநாயகமாக சுள்ளிகளால் தீ மூட்டப்பட்டிருந்தது. அந்த தீ மிக மெதுவாக எரிந்துகொண்டிருந்தது. சிலர் கொண்டுவந்திருந்த சாக்கு பைகளை விரித்து படுத்து வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தனர். அவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த சிலர் பாதியிலே எண்களை மறந்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் நேற்று பார்த்த நட்சத்திரம் இன்றும் அதே இடத்தில் இருக்கிறதா என்று தேடத்துடங்கினர். கூட்டத்திலிருந்து காளி எழுந்தான்.
படுத்துக்கொண்டிருந்தவர்கள் எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள். எல்லோரும் காளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். “என்ன படம்டா காளி? மகிழன் நடிச்ச படமா?” “இல்லை” “பின்ன?” “கணேசனா?” “ம்ம்” “பொறு பொறு நாஞ்சொல்றேன்” “ம்ம்” “மனோகரா.சரியா?” “இல்ல” “பின்ன?” “நடிக்கறத பார். பிறகு சொல்லு”
காளி குரலை கணைத்துக்கொண்டான். ஏதோ சண்டைக்கு தயாராக நிற்பவன் போல விரைத்து நின்றான். அவன் முகம் பரவசம் அடைந்தது போல இருந்தது.
“சிங்கத்திருநாடே நீ சிலந்திக்காடாய் மாறியது எப்போது?” “பராசக்தி டா. எனக்கு தெரியும். எனக்கு தெரியும்.” என்று கத்தினான் ஒருவன். கொஞ்சம் வளர்ந்திருந்த சிறுவர்கள் அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தனர், “சும்மா பாருடா அவசரக்குடுக்க” அவன் தலையைத் தடவிக்கொண்டே உட்கார்ந்தான். அவன் குட்டியவனை இரண்டுமுறை திரும்பி முறைத்தான்.
“சிங்கத்திருநாடே நீ சிலந்திக்காடாய் மாறியது எப்போது?
வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே..நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக?
வீரப்பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே நீ வீதிகளிலே விபச்சாரிகளைத் திரியவிட்டு உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன்? ஏன்?
வானத்தை முட்டும் மாளிகைகள்! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள்! தாழ்ந்த உள்ளங்கள்!”
காளி கைகளை அசைத்து வீராவேசமாக பேச கூட்டம் ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருந்தது. சில சிறுவர்கள் கைத்தட்டிக்கொண்டனர்.
“நான் கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக.
பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல்வேஷமாகி விட்டதை கண்டிப்பதற்காக.”
காளி தலையை தாழ்த்தி எறிந்து கொண்டிருந்த நெருப்பையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அனைவரும் அமைதியாய் இருந்தனர்.
“பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பகதி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள்..ஓடினாள்..வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்”
கைதட்டல் காதைப்பிளந்தது. அருகிலிருந்த மரத்திலிருந்த சிறுசிறு பறவைகள் முழித்துக்கொண்டன. இந்த வசனத்தை காளி நூறாவது முறையாக சொல்வதைக் கேட்ட ஆலமரம் தலையைச் சிலுப்பி தன் கொந்தளிப்பைக் காட்டியது. காற்று மெதுவாக வீசியது. சுள்ளிகள் தீர்ந்துபோய் விட்டமையால் நெருப்பு அணைந்து கரிய புகை மட்டும் மேலெழும்பிக்கொண்டிருந்தது.
தூரத்தில் இருட்டில் முடங்கிக்கிடந்த ஒரு தேசாந்திரி கண்கொட்டாமல் காளியையே பார்த்துக்கொண்டிருந்தார்.
***
“ஆல் இந்தியா ரேடியோ. அகில இந்திய வானொலி நிலையம். செய்தி அறிக்கை தொடர்கிறது. காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட திருமதி.இந்திராகாந்தி, இன்று, இந்திரா காங்கிரஸ் என்ற புதிய தேசியக்கட்சியைத் தொடங்கினார். விவசாயத்துறை அமைச்சராக பதவிவகித்த திரு.ஜக்ஜீவன் ராம் இந்திராக காங்கிரஸ¤க்கு தலைவராக நியமிக்கப்பட்டார். நாளை மறுநாள் நடக்கவிருக்கும்..“
“ம்ம்..அந்தம்மா தெகிரியமான பொம்பளையப்பா..யாரும் ஒன்னும் —-முடியாது” தனது வேட்டியின் மடிப்பில் ஒளிந்துகொண்டிருந்த பொடிட்டப்பாவை எடுத்து டப் டப் என்று அதன் தலையில் தட்டினார், வேலுச்சாமி. வேலுச்சாமியின் கைகள் மிகவும் மெலிந்திருந்தன. புறங்கையின் நரம்புகள் மிகத்தடிமனான சரடு போல ஓடிக்கொண்டிருந்தன. கைகளில் அடர்த்தியான சுருள்சுருளாக வெள்ளைமுடிகள். கண்கள் மிகவும் சிறுத்து ஒருவிதமான தளர்வோடு இருந்தன. சட்டையணியாத மார்பில் வெள்ளையும் கருப்புமாக முடிகள் மண்டிக்கிடந்தன. தலையில் முடி அடர்த்தியாக, சிறிதளவு கூட எண்ணெய் பார்க்காமல், சிக்காக இருந்தது. குடிக்கத்தண்ணீருக்கே பத்துமைல் தூரம் நடக்கும் போது, தலைக்கு எண்ணெய் முக்கியமா என்ன?
“யேவ், யாரது போறவ? அம்முத்தாயா?” “ம்ம்..ஆமாங் மாமோய். என்ன மாமனுக்கு இப்போத்தான் பொழுது விடிஞ்சுச்சாக்கும்?” “ஏபுள்ள. ….கழுவ தண்ணியில்லீன்னாலும் எகத்தாளத்துக்கு ஒன்னும் கொரச்சல் இருக்காது..எங்க போறவ விடுக்கு விடுக்குன்னு?” “ம்ம்ம்..கலெக்டராபீஸ¤க்கு கையெழுத்துப்போட போறேன் மாமா..வாறியளா?” “அடி……. எங்கடி போறவன்னா எகத்தாளம் கேக்குதா?” “மாமரத்துப்பட்டியில கல்லொடைக்க ஆள் தேடுறாகளாம் மாமோய்..அதான் போறேன்..பிள்ளைங்க வயிறு நிறையனும்ல..இன்னியும் மழைய நம்பி உக்காந்திருக்கமுடியாது மாமோய்..” “ம்ம்..மானம்பாத்து வாயப்பொளந்து கெடக்குற காடுக என்னக்கி மழதண்ணியப்பாக்கப் போதுகளோ தெரியல..போதாயி..போ..பொழப்பபாக்கனும்ல..அதுயாரு கூட ராக்கம்மாவா?” “ஆமா மாமோய்..அவுகளும் கல்லொடைக்கத்தாம் போயிருக்காக..என்னிய வரப்பெடாதுன்னுதான் சொன்னாக..ஹ்ம்..போனா கத்துவாக..நான் போறேன் மாமா” “அதுயாரு காளியா?” “ஆமா மாமா..டேய் காளி தாத்தா கூப்படறாக பாரு போய் என்னான்டு கேளு” “சரி மாமா நாங்க வாறோம். செத்த இந்த பயல பாத்துக்கோங்க..வெயில அலையவிடாதீக..”
காளி வேண்டாவெறுப்பாக நடந்து வந்து, வேலுச்சாமியின் அருகில் நின்றான். ஒன்றும் பேசாமல், என்ன என்பது போல பார்த்தான்.வேலுச்சாமி ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் பார்த்தவர், “மூக்கையன் கடையில போயி கொஞ்சம் பொடி நான் கேட்டேன்னு வாங்கியா..” என்றார். காளி, வேலுச்சாமியில் கையில் இருந்த காலி பொடிட்டப்பாவை வாங்கிக்கொண்டு ஓட்டம்பிடித்தான்.
***
“ம்ம்..மூக்கையன் கடையில இல்ல..அந்த அக்காதான் இருந்தாங்க..இந்தாங்க..” வேலுச்சாமி பொடி டப்பாவை வாங்கிக்கொண்டு, மீண்டும் இரண்டு மூன்றுமுறை அதன் தலையில் தட்டினார், பிறகு நிதானமாக, மூடியைத் திறந்து, பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து லாவகமாக அதிலிருந்து பொடியை இரண்டு விரல்களாலும் எடுத்தார், இரண்டு முறை கையை உதறினார். பிறகு இன்னொரு கையால், பொடி அடைத்து பொடி அடைத்தே பெரிதாகிப்போயிருந்த மூக்கின் வலது புறத்தை அடைத்துக்கொண்டு, இடது புறத்தில் பொடியைத் திணித்து, இரண்டு மூன்று முறை உறிஞ்சினார். காளி அந்த உறிஞ்சலில் தான் ஈர்க்கப்படுவதைப் போல உணர்ந்தான். எதற்கும் பக்கதிலிருந்த தூணைப் பிடித்துக்கொள்வது நல்லது என்று தோன்றியது அவனுக்கு. பிறகு இடதுபுறத்தை அடைத்துக்கொண்டு, வலது புறத்தில், அதே போல, மீதமிருந்த பொடியைத் திணித்து, உறிஞ்சிக்கொண்டார். கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த, காளியை பார்த்து, “என்னடா பாக்குற?” என்றார் சிரித்துக்கொண்டே, இப்பொழுது அவரது குரல் கணமாக இருந்தது போல தோன்றியது காளிக்கு. மீண்டும் வலது புறத்தையும் இடது புறத்தையும் ஒரு தடவை விரல்களால் அடைத்து, விடுவித்தார். பிறகு காளியிடம், “எங்க கைய காட்டு” என்றார். காளி முடியாது என்று மறுத்து ஓடப்பார்த்தான். வேலுச்சாமி லாவகமாக அவனைப் பிடித்து நிறுத்தினார், வலது கையை மடக்கி, அவனை இறுக்கமாக, ஓட விடாமல், பிடித்துக்கொண்டு, நன்றாக இறுக்கமாக மூடியிருந்த இடது கையை விடுவித்தார். உள்ளே கொஞ்சம் மூக்குப் பொடி இருந்தது. அதை தட்டிவிட்டார் வேலுச்சாமி. மூக்குப்பொடி மண்ணோடு கலந்தது. இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த பொடியை தனது அழுக்கான வேட்டியில் துடைத்துக்கொண்டார். “இந்த வயசில உனக்கு பொடி கேக்குதா?” “இல்ல தாத்தா, சும்மா எப்படி இருக்குன்னு..” “…பயலே..அதுக்கெல்லாம் இன்னும் வயசிருக்குடா..இப்படி உக்கார்”
காளி அங்கிருந்த திண்டில் ஏறி உட்கார்ந்து கொண்டான். சூரியன் உச்சத்திற்கு வந்திருந்தது. வெயில் பளபளத்தது. வெக்கை அந்த மடத்தை வெகுவாக ஆக்கிரமித்திருந்தது. ஆங்காங்கே காக்கைகள் கத்திக்கொண்டிருந்தன. எங்கும் தண்ணீர் வற்றிவிட்ட இந்த ஊரில் ஏன் காக்கைகள் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்று காளிக்கு புரியவேயில்லை. அந்த சமயம் பார்த்து “நச்” என்று ஒரு தும்மல் வந்தது அவனுக்கு. தும்மல், அந்த மடத்தின் தூண்களில் மோதி, விட்டத்தை அடைந்து, சுவற்றில் அறைந்து, உள்ளே சாந்தமாக, தூசியும் நூலாம்படையும் மண்டிக்கிடந்தும், எழுந்து ஓடாமல், இன்னும் அப்படியே எனக்கென்ன வந்தது என்று, உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரின் துதிக்கையில் பட்டு, வெளியே விழுந்தடித்துக்கொண்டு ஓடியது. தும்மலின் சத்தத்தால், சிறிதும் பாதிக்கப்படாமல், அங்கே உறங்கிக்கொண்டிருந்தனர், சில கடின உழைப்பாளிகள். வெகு சிலர், திரும்பிப்படுத்து, சிறு சலசலப்பை ஏற்படுத்தினர். மற்றபடி எப்பழுதும் போலவே அன்றும், அந்த ஊர் மிகவும் அமைதியாகவே இருந்தது.
காளி சிறுது தூரத்தில், நிலத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஒற்றை மாட்டுவண்டியயே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். மாடு எங்கே சென்றிருக்கும்? அருகில் தேடினான். எங்கும் காணவில்லை. “நல்லா வசனம் பேசுவியாமே?” “ம்ம்..என்ன தாத்தா?” “நல்லா, சத்தமா, கணேசன் மாதிரி அழுத்தமா வசனம் பேசுவியாமே?” “ம்ம்ம்..பேசுவேன்..ஏன் தாத்தா,அந்த ஊர்ல, நாம தண்ணியெடுக்கப்போவமில்ல அந்த ஊர்ல மட்டும் எப்படி தண்ணியிருக்கு?” “ம்ம்” வேலுச்சாமி மடியிலிருந்து பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். வெளியேறிய பீடிப்புகையை அழுத்தமாக சுவாசித்தான் காளி. ஓசி பீடிப்புகை. “எங்க, மனோகரா கணேசன் மாதிரி பேசு பாப்போம்” “ஏன் நாமா நெதமும் அம்புட்டு தூரம் நடக்கனும்? அங்க இருக்குற தண்ணிய வாக்கா போட்டு இங்க கொண்டுவர முடியாதா?” வேலுச்சாமி மெலிதாக இருமினார். வெளியேறிய பீடிப்புகையை, மீண்டும் அழுத்தமாக உறிஞ்சிக்கொண்டான் காளி. “ஏந்தாத்தா முடியாதா?” வேலுச்சாமி கைகளால் காளியின் தலையை வருடினார். “ரொம்ப செலவாகும்டா..ரொம்ப செலவாகும்” “உங்களுக்கு ஒரு கால் எப்படி ஒடஞ்சது? சண்டையிலயா?” “ம்ம்” “வெட்டிட்டாங்களா?” “ம்ம்” “ஐயோ..எப்படி? கத்திய வெச்சா?” “ம்ம்” “எந்த சண்டையில?” “ம்ம்” “ம்ம் எந்த சண்டையில தாத்தா?” “ம்ம்” “துப்பாக்கி வெச்சிருந்திருப்பீங்கல்ல?” “ம்ம்” “பின்ன எப்படி அவங்கள் வெட்டவிட்டீங்க? துப்பாக்கிய வெச்சு சுட்டிருக்கலாம்ல?” “ம்ம்” வேலுச்சாமி மீண்டும் இருமுறை இருமினார். ஒன்றும் பேசாமல் கீழே கிடந்த சற்றே பெரிய கணமான கல்லையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். “குமார் சொல்றான்..ம்ம்..குமார் சொல்றான்.. உங்க வீட்ல பட்டாளத்துல கொடுத்த துப்பாக்கி வெச்சிருக்கீங்களாம்” “ம்ம்ம்” “நெஜமா வெச்சிருக்கீங்களா?” “ம்ம்” மீண்டும் இருமினார். நெஞ்சை நீவி விட்டுக்கொண்டார். “எனக்கு காட்டுவீங்களா?” “ம்ம்” “போலாமா? இப்பவே?” இறுமினார். “போலாமா?” அமைதி. “தாத்தா கொஞ்ச நேரம் இங்கன உக்காந்திட்டிருக்கேன். நீ போய் வெளையாடு..போ..அப்புறமா போலாம்” “எனக்கு துப்பாக்கி அப்புறமா காட்டுவீங்களா?” “ம்ம்” “சத்தியமா?” “ம்ம்”
காளி எழுந்து, இடது காலை முன் வைத்து, பிறகு வலது காலை மெதுவாக எடுத்துவைத்து, நாட்டியமாடியபடி அழகாக ஓடுவதையே, வேலுச்சாமி பார்த்துக்கொண்டிருந்தார். மிகவும் சோர்வாக இருந்த அவரது கண்கள், மிகமெதுவாக, மிகமிக மெதுவாக, மீதமிருந்த தன் பாதி வலதுகாலைப் பார்த்தன. தளர்வாக அருகிலிருந்த தூணில் சாய்ந்துகொண்டார். பீடியின் நெருப்பு வெறுமனே எறிந்துகொண்டிருந்தது, அங்கே படர்ந்திருந்த வெயிலைப்போல. வெறும் வெயிலைப் போல.
தூரத்தில், பாறையைத் தகர்க்கும் வெடியின் ஒலி நான்கு திசைகளிலும் பரவி, மிகச் சன்னமாக ஒலித்து அடங்கியது. எங்கோ பெயர் தெரியாத ஒரு பறவை புழுக்கம் தாங்க மாட்டாமல் மெதுவாக ஏதோ சொல்லியது. வேலுச்சாமியின் கண்கள் மூடிக்கொண்டன.
***
காளி யாருமில்லாத ஒரு சந்தில் நுழைந்தான். கூடவே குமார். பூட்டியிருந்த அந்த வீட்டின் வாசலில் அவனும் குமாரும் உட்கார்ந்துகொண்டனர். காளி டவுசர் பையில் கைவிட்டு, ஒரு சிறிய மடிக்கப்பட்டிருந்த தாளை எடுத்தான். உள்ளே அடர் அரக்கு நிரத்தில் கொஞ்சம் மூக்குபொடி. “கையிலயும் கொஞ்சம் வெச்சிருந்தேன், பட்டாளத்துத்தாத்தா பாத்திருச்சு. பட்டாளத்துல இருந்ததில்ல.சும்மாவா” என்று சிரித்துக்கொண்டான் காளி. “கொஞ்சம் போடுடா.தும்மவரும்டா” என்றான் குமார். காளி அவனைக் கண்டுகொள்ளாமல், பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து, இலாவகமாக மூக்குப்பொடியை எடுத்து, மூக்கில் வைத்துக்கொண்டான். அவ்வளவுதான். “ஐயோ அம்மா. எறியுதே.” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்”
இரண்டு காக்கைகள் காளி தும்முவதையே, அருகிலிருந்த மரத்திலிருந்து வெறித்துக்கொண்டிருந்தன. ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டன.
***
ஓவியம்: ramki
(தொடரும்)